HOME      Khutba      கல்வியும் முஸ்லிம்களும் | Tamil Bayan - 368   
 

கல்வியும் முஸ்லிம்களும் | Tamil Bayan - 368

           

கல்வியும் முஸ்லிம்களும் | Tamil Bayan - 368


கல்வியும் முஸ்லிம்களும்!

ஜுமுஆ குத்பா தலைப்பு : கல்வியும் முஸ்லிம்களும்!

வரிசை : 368

இடம் : எஸ். எம். ஜெ பிளாஸா மஸ்ஜித், மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் அச்சத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டிய வனாக ஆரம்பம் செய்கிறேன்.

இன்றைய உலக வாழ்க்கையில் நம்முடைய நிலைமையை சற்றுப் பார்த்தால் நம்மில் பலர் வாழ்க்கையில் நோக்கத்தை அறியாதவர்களாக இந்த உலக வாழ்க்கையில் அல்லாஹ் ஏன் நம்மை படைத்தான்? எதற்காக நமக்கு இந்த செல்வத்தை கொடுத்தான்? எதற்காக அறிவைக் கொடுத்தான்? எதற்காக இந்த உடல் வலிமையை கொடுத்திருக்கின்றான்? இந்த உலக வாழ்க்கை ஏன் கொடுக்கப்பட்டது? என்ற ஞானம் இல்லாமல் கால்நடைகளைப் போன்று வாழ்வதைப் பார்க்கிறோம்.

செல்வத்தை சேகரிப்பது,பொருளாதாரத்தில் போட்டி போடுவது,பிறகு அவர்கள் அனுபவித்தது, பிறகு இந்த உலகத்தில் விட்டுவிட்டு எல்லாவற்றையும் விட்டு அவர்கள் பிரிந்து சென்று விடுவது.

இப்படித்தான் ஒரு பரவலான சூழ்நிலையை பார்க்கிறோம். இதில் முஸ்லிம்கள் என்று விதிவிலக்கு கூற முடியாத அளவுக்கு முஸ்லிம்களில் பலருடைய நிலை பலவீனமடைந்து இருப்பதும் மறுக்கக் கூடிய ஒரு விஷயம் அல்ல.

பொதுவாக காஃபிர்களை பற்றித்தான் மறுமையை மறந்து உலக வாழ்க்கையில் மூழ்கியவர்கள், அதையே குறிக்கோளாக வைத்து வாழ்பவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

மறுமையை நம்பாதவர்களை அதை ஏற்றுக் கொள்ளாதவர்களை பற்றி சொல்லப்பட்ட பல தன்மைகள் முஸ்லிம்களாகிய நம்மில் பல பேருக்கு பொருந்தக் கூடியதாக இருப்பதை பார்க்கிறோம்.

சூரா யூனுஸ் உடைய வசனங்களில் அல்லாஹ் சொல்கின்றான் :

إِنَّ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا وَرَضُوا بِالْحَيَاةِ الدُّنْيَا وَاطْمَأَنُّوا بِهَا وَالَّذِينَ هُمْ عَنْ آيَاتِنَا غَافِلُونَ (7) أُولَئِكَ مَأْوَاهُمُ النَّارُ بِمَا كَانُوا يَكْسِبُونَ

நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை (ஒரு சிறிதும்) நம்பாது இவ்வுலக வாழ்க்கையை விரும்பி, அதைக் கொண்டு திருப்தியடைந்து (அதிலேயே மூழ்கி) விட்டார்களோ அவர்களும், இன்னும் எவர்கள் நம் வசனங்களை (புறக்கணித்து) விட்டுப் பராமுகமாக இருக்கின்றனரோ அவர்களும், (ஆகிய) இவர்கள், இவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வற்றின் காரணமாக இவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். (அல்குர்ஆன் 10 : 7,8)

இந்த நான்கு தன்மைகளை அல்லாஹு தஆலா இறைமறுப்பாளர்களாகிய மறுமையை அறியாத காஃபிர்களை பற்றி சொல்கின்றான்.

இந்த நான்கு தன்மைகள் நம் காலத்தில் நம்மோடு வாழக்கூடிய சக முஸ்லிம் சகோதரர்களிடத்தில் பெற்றுக் கொள்ளப்படுகிறதா? இல்லையா?

மறுமையை அவர்கள் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளை செய்து இருப்பார்களா? இல்லையா?

குர்ஆனை அவர்கள் நம்பி இருந்தால் குர்ஆனுடைய சட்டங்களை அவர்கள் கற்று இருந்தால் அதை மதித்து இருப்பார்களா? இல்லையா?

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :

فَأَعْرِضْ عَنْ مَنْ تَوَلَّى عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا (29) ذَلِكَ مَبْلَغُهُمْ مِنَ الْعِلْمِ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِمَنِ اهْتَدَى

(நபியே!) எவன் என்னைத் தியானிக்காது விலகி, இவ்வுலக வாழ்க்கையைத் தவிர, (மறுமையை) விரும்பாதிருக்கிறானோ, அவனை நீர் புறக்கணித்து விடுவீராக.

இவர்களுடைய கல்வி ஞானம் இவ்வளவு தூரம்தான் செல்கிறது (இதற்கு மேல் செல்வதில்லை.) நிச்சயமாக உமது இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யாரென்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவன் யாரென்பதையும் அவன் நன்கறிவான். (அல்குர்ஆன் 53 : 29,30)

இரண்டு பண்புகளை அல்லாஹ் சொல்கின்றான் :

ஒன்று, அல்லாஹ்வுடைய உபதேசங்கள். அல்லாஹ்வுடைய உபதேசம் குர்ஆனில் இருக்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸில் இருக்கிறது.

இரண்டாவது தன்மை, இந்த உலக வாழ்க்கை தான் நோக்கம். வேறு எதுவும் அவர்களுக்கு இருக்காது.

வேறு எதைப் பற்றியும் அவர்கள் கவலைப்படுவதில்லை. தொழுகை தவறி விட்டது. அதை பற்றி பொருட்படுத்த மாட்டார்கள். ஏதாவது பொய் பேசி விட்டோம். ஆஹா! பொய் சொல்லி விட்டேனே! ஒரு தவறு செய்து விட்டேனே! அல்லது ஒரு முஸ்லிமை ஏசி இருந்தால், அல்லது யாருக்காவது ஏதாவது ஒரு வகையில் அநியாயம் செய்து இருந்தால் ஆஹா! அவருக்கு இப்படி செய்துவிட்டேனே! அல்லாஹ் தடுத்த ஒரு காரியத்தை செய்து விட்டேனே! ஒரு பாவத்தை செய்துவிட்டேனே! ஒரு குற்றத்தை செய்து விட்டேனே! என்ற மறுமையைப் பற்றிய பயம்.

அல்லாஹ்வுடைய அறிவுரையை பற்றிய பயம், நரக தண்டனைகள் பற்றி உள்ள பயம் எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டல்ல.

அல்லாஹு தஆலா இந்த இரண்டு பண்புகளை குறித்து சொல்கின்றான்.

நபியே! இந்த இரண்டு பண்புகள் இருப்பவர்களிடத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.

ஏன்?அவர்களுக்கு நீங்கள் எவ்வளவுதான் அறிவுரை செய்தாலும் பலன் தராது. யார் மறுமையை குறிக்கோளாக வைக்கவில்லையோ அவர்களால் மார்க்கத்தை பின்பற்ற முடியாது.

யார் மறுமையை உலக வாழ்க்கையின் குறிக்கோளாக மாற்றிக் கொள்ள வில்லையோ அவருக்கு எத்தனை குர்ஆன் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டாலும் .நபியின் எத்தனை ஹதீஸ்களை அவருக்கு முன்னால் எடுத்துரைக்கப்பட்டாலும் எந்த பலனும் இல்லை.

எனவே நபியே! நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.

சமூக மக்கள் இந்த பொருளாதார கல்விக்கு கொடுக்கிற முக்கியத்துவம், இந்த உலக வாழ்க்கையில் பொருள் சம்பாதிப்பதற்கு கொடுக்கிற முக்கியத்துவம் மறுமையின் கல்விக்கு கொடுக்கிறார்களா?

எவ்வளவு செலவு செய்கிறார்கள்? எத்தனை கல்லூரிகள் எத்தனை பள்ளிக்கூடங்கள் இன்று இயங்குகின்றன; இயக்கப்படுகின்றன.

இவற்றினுடைய நோக்கம் என்ன?

முஸ்லிம்களுடைய பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும், இந்த உலக வாழ்க்கை முஸ்லிம்களுக்கு செழிப்பாக அவர்களுக்கு கிடைக்க வேண்டும், பொருள் நல்ல முறையில் ஈட்ட வேண்டும், அதிகமான லாபம் தரக்கூடிய அதிகமான மாத வருமானம் தரக்கூடிய கல்வியை முஸ்லிம்கள் அடையவேண்டும்.

அல்லாஹ் இந்த உலகத்தில் சம்பாதிப்பதை ஹராம் ஆக்கவில்லை. இந்த உலகத்தில் நீங்கள் பணக்காரர்களாக இருப்பதை அல்லாஹ் தடுக்கவில்லை. ஒரு முஸ்லிம் பெரிய மாடி வீட்டில் வாழ்வதை அல்லாஹ் தடுக்கவில்லை.

அல்லாஹ் சொல்வது என்ன? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வது என்ன? மார்க்கம் நமக்கு என்ன அறிவுரை சொல்கிறது?

இந்த உலகத்தின் செல்வத்தை குறிக்கோளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! இந்த உலகத்திற்காக மார்க்கத்தை விலை பேசாதீர்கள்! இந்த உலக லாபங்களுக்காக மார்க்கத்தை புறக்கணித்து விடாதீர்கள்! அல்லாஹ்வுடைய கட்டளைகளை பாழாக்கி விடாதீர்கள்! மறுமையை மறந்து விடாதீர்கள்!

நீங்கள் நிலையான இன்பத்தை அடைய வேண்டிய இடம் சொர்க்கத்தில் இருக்கிறது. அந்த சொர்க்க தயாரிப்பை மறந்துவிடாதீர்கள்.

அந்த சொர்க்கத்திற்கான அமல்களை நீங்கள் விட்டு விடாதீர்கள்.

அல்லாஹ் சொல்கின்றான் :

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ

நம்பிக்கையாளர்களே! உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் அல்லாஹ்வுடைய ஞாபகத்தை உங்களுக்கு மறக்கடித்துவிட வேண்டாம். எவரேனும், இவ்வாறு செய்தால் அத்தகையவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்தான். (அல்குர் ஆன் 63 : 9)

செல்வம் வேண்டாம் என்று அல்லாஹ் சொல்லவில்லை; பிள்ளைகள், குடும்ப வாழ்க்கை வேண்டாம் என்று சொல்லவில்லை.

உங்கள் செல்வம் உங்களுடைய குடும்பம் நீங்கள் அல்லாஹ்வை மறக்கும்படி செய்துவிட வேண்டாம்.

அல்லாஹு தஆலா முஃமின்களைப் பற்றி சொல்கின்றான் :

رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ

பல ஆண்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பிவிடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறிவிடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள். {அல்குர்ஆன் 24 : 37)

கொடுத்தாலும் வியாபாரம் செய்தாலும் எவ்வளவு தொழிலை உலக நாடுகளில் வளர்த்துக் கொண்டு சென்றாலும் அல்லாஹ்வை மறக்க மாட்டார்கள். அல்லாஹ் எனக்கு கொடுத்தான் என்று சொல்வார்கள்.

என் திறமை என் படிப்பு என் கல்வி என் அனுபவம் என்னுடைய முயற்சி என்று சொல்லமாட்டார்கள்.

காரூனைப் போன்று இருக்க மாட்டார்கள். காரூனுக்கு அல்லாஹ் செல்வத்தை கொடுத்தான். ஆனால் அல்லாஹ்வை மறந்து விட்டுக் கூறினான்.

قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ عِنْدِي

அதற்கவன் ‘‘ (என்னிடம் இருக்கும்) பொருள்களை எல்லாம் என் சொந்த அறிவி(ன் திறமையி)னால்தான் நான் அடைந்தேன். (இதில் அல்லாஹ்வின் அருள் ஒன்றுமில்லை)'' என்று (பதில்) கூறினான். (அல்குர்ஆன் 28 : 78)

அல்லாஹ்வை மறந்து பேசினான். ஆனால் முஃமின்கள் அல்லாஹ்வை மறக்கமாட்டார்கள். நன்றி செலுத்துவார்கள்.

அல்லாஹ்வை நினைப்பது என்றால் என்ன?அல்லாஹ் கொடுத்த இந்த செல்வத்திற்காக படிப்பிற்காக இந்த கல்விக்காக அல்லாஹ்வை நினைப்பார்கள்.

ஒருவன் தன் செல்வத்தில் தன்னுடைய பொருளாதாரத்தில் மேல்மட்டத்தில் இருந்துகொண்டு அல்லாஹ்வை நினைக்கிறான் என்றால் அந்த செல்வத்தை அவன் ஹராமில் பயன்படுத்துவானா?

அந்த செல்வத்தை அவன் ஆடம்பரத்தில் பயன்படுத்துவானா? அந்த செல்வத்தை அவன் அனாச்சாரத்தில் பயன்படுத்துவானா? அந்த செல்வத்தை அவன் அராஜகத்தில் பயன்படுத்துவானா? அந்த செல்வத்தை அவன் உறவுகளை துண்டிப்பதற்க்குப் பயன்படுத்துவானா?

அந்த செல்வத்தைக் கொண்டு ஏழை மக்களுக்கு பெருமை அடிப்பதற்காக பயன்படுத்துவானா? தன்னுடைய கருவத்தையோ தன்னுடைய மமதையையோ இந்த செல்வத்தில் அவன் உணர்வானா?

தன் கையில் இருக்கிற கோடிகள், அந்த கோடிகளுக்கு கோடிகள் இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது இதை அல்லாஹ் கொடுத்த செல்வம் என்று நினைப்பவன், இது அல்லாஹ் எனக்கு கொடுத்த செல்வம் என்று நினைப்பவன் ஒரு காலும் அந்த செல்வத்தைக் கொண்டு பெருமை அடிக்க மாட்டான்.

அந்த செல்வத்தை ஹராமான வழியில் பயன்படுத்த மாட்டான். அந்த செல்வத்தை கொண்டு சினிமா தியேட்டர்களை வாங்குவதற்கும், மது தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் அல்லது ஹராமான வட்டி தொடர்பான வியாபாரங்களை பெருக்குவதற்கும் அவன் சம்பந்தப் படுத்த மாட்டான். முதலீட்ட மாட்டான்.

ஏன்? இது அல்லாஹ் கொடுத்த செல்வம் என்று அவன் நினைத்து இருக்கிறான். அல்லாஹ் இந்த செல்வத்தின் முதலாளி. அல்லாஹ் தான் இந்த செல்வத்தின் சொந்தக்காரன் என்று நினைப்பவன் எப்படி அல்லாஹ் விரும்பாத வழியில் அந்த செல்வத்தை செலவு செய்வான்!?

உங்கள் முதலாளி உங்களுக்கு ஒரு நூறு ரூபாயை தருகிறார், அதை நீங்கள் வாங்கிக் கொள்கிறீர்கள். இந்த முதலாளி எனக்கு நூறு ரூபாயை கொடுத்து இருக்கிறார். இவருக்கு விருப்பமற்ற காரியத்தை இந்த நூறு ரூபாயைக் கொண்டு நான் செய்தால் அவர் கண்டிப்பாகஎன் மீது கோபம் கொள்வார், அதிருப்தி படுவார்.

மேலும் கொடுத்த செல்வத்தை என்னிடம் இருந்து பிடுங்கிக் கொள்வார் என்று தெரிந்தால் அந்த தொழிலாளி அந்த நூறு ரூபாயை தன்னுடைய முதலாளிக்கு பிடிக்காத காரியத்தில் செலவு செய்வானா? நிச்சயம் செலவு செய்ய மாட்டான்.

கண்ணியத்திற்குரியவர்களே! உண்மையான முதலாளி யார்?உண்மையான சொந்தக்காரன் யார்?என்றுமே உயிரோடு இருப்பவன், எதையும் நமக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுத்தவன் அல்லாஹ்.

அந்த அல்லாஹ் கொடுத்த நிஃமத்தை இது அல்லாஹ்வுடைய அருள் என்று உணர்ந்தவன் நிச்சயமாக ஹராமான வழியில் செலவு செய்ய மாட்டான்.

பயப்படுவான், நான் ஒரு பைசாவை செலவு செய்தாலும் இதற்கு அல்லாஹ்விடத்தில் கேள்வி உண்டு என்று.

இந்த ஒரு பைசாவைக் கொண்டு ஒரு தீனாரைக் கொண்டு அல்லாஹ்வுடைய பொருத்தத்தையும் வாங்கலாம் அல்லது நரக நெருப்பையும் வாங்கலாம்.

ஒரு ரூபாயை நீங்கள் ஏழைக்கு தர்மம் செய்தால் நீங்கள் நரகத்தில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொண்டீர்கள்; சொர்க்கத்தை விலைக்கு வாங்கிக் கொண்டீர்கள். அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அடைந்தீர்கள்!

இதே ரூபாயைக் கொண்டு ஒரு சினிமாவிற்கு டிக்கெட் எடுத்து சென்றால், அல்லது ஒரு பத்து ரூபாயை கொண்டு ஒருவன் மது அருந்தினால் அல்லது ஒரு ஹராமான வழியில் செலவு செய்தால் இவன் நரகத்தை விலைக்கு வாங்கிக் கொண்டான்.

அல்லாஹ்வின் கோபத்தை விலைக்கு வாங்கிக் கொண்டான். சொர்க்கத்தை நரகத்திற்கு பதிலாக விற்றுவிட்டான். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான் : முஃமின்கள் வியாபாரிகள்.

ஒரு ஏழை ஐந்து வக்து தொழுகைகளை மஸ்ஜிதில் வந்து தொழுவதில் ஒரு புரட்சி கிடையாது. அல்ஹம்துலில்லாஹ்!

வரவேற்கத்தக்கது, அவசியமானது, ஒரு முஸ்லீம் பள்ளியில்தான் ஐந்து வேளை தொழுகையை தொழ வேண்டும். அவன் ஏழையாக இருந்தாலும் சரி, செல்வந்தனாக இருந்தாலும் சரி.

ஆனால் அதே சமயத்தில் கோடிகளில் கழிக்கின்ற ஒரு முஸ்லீம் செல்வந்தர் சக முஸ்லிம்களோடு அவர்களில் உள்ள ஏழைகள், அவர்களில் உள்ள தொழிலாளிகள், அவர்களில் உள்ள சாதாரண சாமானியர்கள், அவர்களோடு ஒன்றாக மத்தியில் நின்று அல்லாஹ்விற்கு முன்னால் தலை குனிகின்றான் என்றால் அல்லாஹ்விற்கு முன்னால் அவன் சிறம் பணிக்கிறான் என்றால் உண்மையில் இவன் தான் அல்லாஹ்விடத்தில் அதிகம் போற்றப்படுவதற்கு தகுதியானவன்.

இவர்களைப் பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறுகின்றான்.

முஸ்லிம் செல்வந்தர்கள் முஸ்லிம் வியாபாரிகள் எப்படிப்பட்டவர்கள்? இவர்களுடைய வியாபாரம், கொடுக்கல் வாங்கல், விற்பது வாங்குவது, இவர்களுடைய ஷேர் எதுவும் இவர்களை அல்லாஹ்வை மறக்கும் படி செய்துவிடாது.

ஒன்று விற்றால் உண்மை சொல்லி விற்பார். எடை குறைவு செய்ய மாட்டார்.  நிறுவையில் குறைவு செய்ய மாட்டார். எந்த வகையிலும் அவருக்கு மோசடி செய்ய மாட்டார்.

முதலாவதாக அவர் உண்மை பேசி வியாபாரம் செய்வான். அடுத்து அல்லாஹ் சொல்கின்றான் :

தொழுகையை நிலை நிறுத்துவதில் இருந்தும் இந்த செல்வம் இந்த வியாபாரம் கொடுக்கல் வாங்கல் இவர்களை தடுத்து விடாது.

அடுத்து சொல்கின்றான் : ஜகாத் கொடுப்பதிலிருந்து அவர்களை மறதியில் ஆக்கிவிடாது .

ஒரு முஸ்லிம் வாலிபருக்கு உள்ள மூன்று இலக்கணங்களை அல்லாஹ் சொல்கின்றான் :

ஒன்று, அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அல்லாஹுவின் கட்டளையைப் பேணி அவர் அந்த வியாபாரத்தை செய்ய வேண்டும்.

இரண்டாவது, வியாபாரத்தால் அவர் தொழுகையை மறந்து விடக்கூடாது.

இன்று என்ன நிலைமையில் நம் முஸ்லிம் வியாபாரிகள் இருக்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

ஒரு நேரத் தொழுகை என்ன, ஒரு நாள் தொழுகை என்ன, ஒரு மாதத்தின் தொழுகையைக் கூட பாழ்படுத்துகிற மக்களை இன்று நம் முஸ்லிம் சமூகத்தில் பார்க்கின்றோம்.

இன்னும் எத்தனை பேர் ஜும்ஆவுடைய தொழுகையை தவிர வேறு எந்தத் தொழுகையும் தொழ மாட்டார்கள் .

அல்லது பெருநாட்கள் உடைய தொழுகையைத் தவிர வேறு எந்த தொழுகையையும் அறிய மாட்டார்கள்.

ஆனால் கேவலம் அசிங்கம் என்ன தெரியுமா? இவர்களையெல்லாம் முஸ்லிம் ஜமாத் களில் இவர்களை முத்தவல்லியாகவும் தலைவர்களாகவும் ஜமாத்தின் தஃப்தரில் சேர்த்து வைத்தும் இருக்கிறார்கள்.

இவர்கள் முஸ்லிம்கள் என்ற பெயரில் சந்தா வாங்க செல்கின்றார்கள். இதுவல்லவா மிகப் பெரிய கேவலம்! இதுவல்லவா அசிங்கத்தில் பெரிய அசிங்கம்!

அல்லாஹ் எந்த ஒன்றை முஸ்லிமுக்கு அடையாளமாக சொல்கின்றானோ அந்த அடையாளத்தை பாழ்படுத்தியவர்கள் எல்லாம் முஸ்லிம்களுடைய ஜமாஅத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

அல்லாஹ் இறைவன் என்று சொல்லி அவனுக்கு இணை வைக்காதவர்களுக்கு தஃப்தர்கள் மறுக்கப்படுகின்றன.

ஆனால் அத்தனை அனாச்சாரங்களையும் அல்லாஹ்வுடைய அத்தனை கடமைகளையும் பால் படுத்திக்கொண்டு தொழுகையே இல்லாதவர்கள் இந்த மஸ்ஜித் முத்தவல்லிகளாக செக்ரெட்ரிகளாக மஸ்ஜிதின் அங்க உறுப்பினர்களாக பார்க்கும்போது எங்கே இந்த முஸ்லிம்களிடத்தில் இஸ்லாமிய உணர்வு இருக்கிறது என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

சகோதரர்களே! واقام الصلاةஎன்று அல்லாஹ் சொல்கிறான்.

அதாவது, தொழுகையை நிலை நிறுத்துவது, அதனுடைய நேரத்தில் அப்படியே சென்றுவிடுவார்கள். எவ்வளவு பெரிய வியாபாரமாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய கொடுக்கல்-வாங்கலாக இருந்தாலும் சரி, அல்லாஹ்வின் மஸ்ஜிதில் அல்லாஹு அக்பர்! என்று அழைப்பு கொடுத்து விட்டால் இதற்குப் பிறகு கொடுக்கல் வாங்கல் எல்லாம் அற்ப காசுகள் அற்பப் பொருட்கள் விட கேவலமானது.

கண்ணியத்திற்குரியவர்களே! எப்போது இந்த துன்யா உடைய செல்வம் பறிக்கப்படுகிறது தெரியுமா?எப்போது இந்த துன்யா உடைய செல்வம் மனிதனுக்கு மறுமையை மறக்க வைக்கிறதோ அப்போது இந்த துன்யா உடைய செல்வம் அல்லாஹ்வால் சபிக்கப்படுகிறது.

இந்தகைய செல்வத்தை அடைந்தவன் அல்லாஹ்வால் சபிக்கப் படுகிறான். கேவலமானவான ஒரு அசுத்தத்தை கையில் எடுத்தவனாக அல்லாஹ்வின் முன்னிலையில் கருதப்படுகிறான்.

ஆனால் இந்த செல்வத்தால் மறுமையை நினைத்தவன், இந்த செல்வதால் மறுமையை வாங்கியவன் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபை போன்று ஜீபைர் இப்னு அவ்வாமை போன்று அந்த நபித்தோழர்களை போன்று அவர்களின் வழியில் வந்த சிறப்பிற்குரிய நல்லவர்களைப் போன்று.

الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

(நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்கள் பொருள்களை (பிறருக்கு உதவிடும் நோக்கில்) இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கிறார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. தவிர, அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 274)

இன்று நீங்கள் சம்பாதிப்பது என்ன? நம் மக்கள் சம்பாதிப்பது என்ன? பொய்கள் எத்தனை, எத்தனை ஹராம், எத்தனை சந்தேகத்திற்குரிய செயல்களெல்லாம் உள்ளன!

அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சம்பாதித்தார்கள். எப்படி சம்பாதித்து இருப்பார்கள். அல்லாஹ்வின் நல்லடியார்களில் ஒருவர்.

ஒரே நாளில் 40ஆயிரம் தீனார்களை சம்பாதித்தார்கள். என்ன செய்தார்கள் தெரியுமா?வீட்டிற்கு எடுத்துச் சென்றார்களா?தங்களுடைய குடும்பத்திற்கு சொத்து வாங்கினார்களா?தங்களுடைய பேரன்களுக்கு பிள்ளைகளுக்காக மதினாவின் சுற்றுப்புறங்களில் ஏதாவது இடங்கள் வாங்கினார்களா?

10,000தீனார்களை எடுத்துச்சென்று கொடுத்தவர் யார் என்று தெரியாமல் கொடுத்துவிட்டு வந்தார்கள்.

பத்தாயிரம் தீனார்களை மதினாவின் தெருக்களில் நின்று கொண்டு வாருங்கள்! யாருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லுங்கள் என்று தர்மம் செய்தார். பத்தாயிரம் தீனார்களை பகலில் கொடுத்தார். 10,000தீனார்களை இரவில் கொடுத்தார்.

இப்படி 40,000தீனார்களையும் அன்றே அவர் செலவழித்து விட்டார்.

இதை அல்லாஹ் குர்ஆனில் புகழ்ந்து சொல்கின்றான். (அல்குர்ஆன் 2 : 274)

அடுத்து அல்லாஹ் கூறுகின்றான் : இந்த முஃமின்களுடைய செல்வம் எப்படி இருக்கும்? ஜக்காத் கொடுப்பதில் இருந்து இவர்களை மறக்க வைக்காது.

எங்களுடைய பிஸினஸ் கணக்கே எங்களுக்கு பாக்க முடியல. இதுல ஜக்காத் எங்க பார்க்கிறது. எங்களுடைய வருமான வரியை இன்னும் தாக்கல் செய்ய முடியவில்லை. நாங்கள் எப்படி ஜக்காத்திற்காக ஒதுக்குவது.

எத்தனை முஸ்லிம் செல்வந்தர்கள் தன்னுடைய செல்வத்தை சரியான முறையில் கணக்கிட்டு துல்லியமாக ஜகாத் கொடுப்பவர்கள் இன்று இருக்கிறார்கள்.

ஒவ்வொரு செல்வந்தரும் முஸ்லிம் ஏழைகளுக்கு கொடுத்திருந்தால் அவர்கள்  மாற்றார்களிடத்தில் சென்று கேட்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

முஸ்லிம்களில் கடன் பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்காது. அவர்கள் இன்சூரன்ஸ் தேடுவதற்கு உண்டான ஒரு நிர்பந்தம் இருந்திருக்காது.

ஆனால் நடப்பது என்ன?எத்தனை முஸ்லிம் ஏழைகள் தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக வட்டிக்கு பணம் கொடுக்கும் பேங்குகுகளை அணுகுகிறார்கள்.

சிறு தொழில் செய்யும் எத்தனை முஸ்லிம்கள் வங்கிகளை அணுகி வட்டிக்கு பணம் வாங்குகிறார்கள். இவர்கள் செய்வது தவறு குற்றம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது.

ஆனால் இவர்கள் இப்படி நிர்பந்திக்கப்படுவதற்கு காரணம் என்ன?முஸ்லிம் செல்வந்தர்கள் தங்களுடைய செல்வத்தை ஜக்காத் கொடுக்காதது ஒருபுறம். தர்மம் செய்யாதது ஒருபுறம். இன்னொரு புறம், தாங்கள் சம்பாதித்த செல்வங்கள் எல்லாம் தாங்கள் சுகபோகமாக அனுபவிப்பதற்கு தான் என்ற நோக்கத்தில் அந்த செல்வங்களை அனாச்சாரத்தில் ஆடம்பரமான வாழ்க்கையில் சுகபோகமான வாழ்க்கையில் கொட்டி கரியாக்குவது தான் காரணம்.

அல்லாஹ் இந்த வியாபாரத்தை பொருளீட்டுவதை தடுக்கவில்லை. அல்லாஹ் இந்த கல்விகளை தடுக்கவில்லை.

ஆனால் நம் சமூகத்தின் நிலைமையை பார்க்கின்றோம். இத்தகைய முஸ்லிம்களுடைய பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் எத்தகைய சைன்டிஸ்ட்டுகளை உருவாக்கியிருக்கின்றன. திறமையான கம்ப்யூட்டர் நிபுணர்களை உருவாக்கி இருக்கின்றன. மருத்துவர்களை உருவாக்கி இருக்கின்றன. இன்னும் பல தொழில்களில் திறமையான முஸ்லிம் வாலிபர்களை உருவாக்கி இருக்கின்றன.

ஆனால் நாம் கேட்பது என்ன? அல்லாஹ்வுடைய கட்டளைகளை பேணக்கூடிய அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேணக்கூடிய ஒரு கல்விமானை ஒரு ஆராய்ச்சியாளனை மார்க்கத்தை குறிக்கோளாக கொண்ட ஒரு மருத்துவரை, ஒரு இன்ஜினியரை, ஒரு அட்வகேட், நான் ஒரு முஸ்லீம், முஸ்லீம் என்றால் இப்படித்தான் இருப்பேன், இது என்னுடைய அடையாளம், இது என்னுடைய ஆடை, இது என்னுடைய முகம், என்னுடைய தொழிலில் இது இஸ்லாத்தின் அடையாளம் என்று காட்டக்கூடிய கல்விமான்கள் எங்கே?

தன்னுடைய உண்மையைக் கொண்டு தன்னுடைய பரிசுத்தத்தைக் கொண்டு தன்னுடைய நேர்மையைக் கொண்டு இஸ்லாத்தை அடையாளப்படுத்தக் கூடிய வாலிபர்கள் இஸ்லாத்தை தொழிலில் கல்வியில் முன்னேற்றியவர்கள் எங்கே?

இதுதான் நம்முடைய கேள்வி. இங்கு என்ன செய்துவிடமுடியும்? இத்தகைய கல்லூரிகள் மூலம்.

அவர்களுக்கு சம்பாதிப்பதற்கு உண்டான வழியை உருவாக்கி விட்டீர்கள். வித்தியாசம் என்ன? இவன் படித்துவிட்டு அரசாங்க வேலைக்கு வந்தால் இவனும் லஞ்சம் வாங்குகிறான். இவனும் ஏமாற்றுகிறான். இவனும் புரட்டு செய்கிறான். ஏமாற்றுகிறான். ஒன்றைச் சொல்லி ஒன்றை செய்கிறான். இவனும் இன்ஜினியர்.

அப்துல்லாஹ் என்ற பெயரிலும் இன்ஜினியர் இருக்கின்றார். ராமசாமி என்கின்ற பெயரிலும் இன்ஜினியர் இருக்கின்றார். இருவருக்கும் இடையே பெயரைத் தவிர வேறு வித்தியாசம் இல்லை.

முஸ்லிம்களுடைய தொழில் நிபுணர்களும் இருக்கின்றார்கள். அந்த முஸ்லிம்களில் பெரிய தொழிலதிபரும் இருக்கின்றார்கள். காபிர்களும் இருக்கிறார்கள். ஆனால் இருவருடைய செயல்பாடுகள் என்ன? இவரும் கலப்படம் செய்கிறார், இவரும் ஏமாற்றம் செய்கிறார். எல்லா விதமான செயல்பாடுகளும் இவரிடத்தில் இருக்கின்றது.

இந்த சாராரிடத்தில் இருப்பதை போன்று என்றால் இவன் செல்வந்தனாக இருப்பதால் இஸ்லாமியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன பலன்?

இவருக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்து இவருக்கு அல்லாஹ் பொருளாதாரத்தைக் கொடுத்து இவருக்கு அல்லாஹ் இந்த கல்வியைக் கொடுத்தால் என்ன பலன்?

ஒரு முஸ்லிம் அவன் எப்படி இருந்தாலும் சரி, அவன் ஆலிமாக இருந்தாலும் சரி, இன்ஜினியராக இருந்தாலும் சரி, தொழிலதிபராக இருந்தாலும் சரி, மருத்துவராக இருந்தாலும் சரி, தன் மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு அழைப்பாளராக,அல்லாஹ்வின் பணியாளனாக இருக்க வேண்டும் .

பொருளாதாரத்தை அல்லாஹ் ஹராமாக்கவில்லை, அல்லாஹ் தடுக்கவில்லை. ஹலாலான முறையில் சம்பாதியுங்கள். இந்த பொருளாதாரத்தால் மறுமையை மறந்து விடாதீர்கள். இந்த பொருளாதாரத்தால் உறவை துண்டித்து விடாதீர்கள்.

எத்தனை செல்வந்தர்கள் தங்களுடைய பொருளாதாரத்தால் உறவை துண்டித்து வாழ்கிறார்கள். நான் இப்போதெல்லாம் பெரிய படிப்பு படித்து விட்டேன், மாஸ்டர் டிகிரி, போஸ்ட் கிராஜுவேட்.

இனி இவர் தன்னுடைய ஏழை உறவுகளை சென்று சந்திக்க மாட்டார். அவர்கள்தான் இவர்களை சந்திக்க வரவேண்டும். காரணம் என்ன?

படிப்பு கூடிவிட்டது. பொருளாதாரத்தில் வளர்ந்து விட்டார். இனி இவர் தன்னுடைய குடும்பத்தில் உள்ள ஏழைகளை சந்திப்பதற்காக செல்ல மாட்டார். அவர்களுக்கு கொடுப்பதற்காக அல்லது அவர்களிடத்தில் சென்று சந்தோஷமான முறையில் மகிழ்ச்சியாக நான்கு வார்த்தைகளை பேசுவதற்காக அவர்களுடைய சுக நலன்களை விசாரிப்பதற்காக இவர் செல்ல மாட்டார்.

இனி இவருக்கென்று இந்த பணத்திற்கு ஏற்ப ‘friends' சர்க்கில் இவருடைய பொருளாதாரத்திற்கு இவருடைய படிப்பிற்கு இவருடைய தரத்திற்கேற்ப நண்பர்கள் வந்து விடுவார்கள்.

அவர்களுடைய கார்களில் சுற்றுவது, வீடுகளில் சுற்றுவது, ஹோட்டல்களில் சாப்பிடுவது, இதற்குத்தான் இனி அவருக்கு நேரம் இருக்கும். அவர்களை அல்லாஹ் காஃபிர்கள் என்று சொல்கின்றான்.

الَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ أُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ

அல்லாஹ்விடத்தில் (இவர்கள்) செய்த உடன்படிக்கையை இவர்கள் உறுதிப்படுத்திய பின்னும் அதை முறித்து விடுகின்றனர். எ(ந்த இரத்த சொந்தத்)தைச் சேர்த்து வைக்கும்படி அல்லாஹ் கட்டளையிட்டானோ அதைப் பிரித்தும் விடுகின்றனர். பூமியில் விஷமம் செய்துகொண்டும் இருக்கின்றனர். இவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள். (அல்குர்ஆன் 2 : 27)

அல்லாஹ் இந்த ஆயத்தில் மூன்று பண்புகளை காஃபிர்களின் குணம் என்று சொல்கின்றான்.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ் நமக்கு செல்வத்தை கொடுத்தான் என்றால் இந்த செல்வத்தின் மூலமாக மறுமையை வாங்கக்கூடியவர்களாக அல்லாஹ்வின் பொருத்தத்தை வாங்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

இன்னும் இந்த கல்வி நிறுவனங்கள் இன்னும் இதுபோன்ற நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்கள் நம்முடைய முஸ்லிம்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தேவை அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

ஆனால் அந்த நிறுவனங்கள் வெறும் பொருளாதாரத்தை கொடுப்பதில் அல்லது கல்வியை கொடுப்பதிலேயே மட்டும் நோக்கமாக இருந்தால் அந்த முஸ்லிம் நிறுவனங்களால் இஸ்லாத்திற்கு பலன் கிடையாது.

அல்லாஹ் ஒரு காலத்தில் விட்டுவைப்பான். பிறகு ஒரு காலம் வரும். அல்லாஹு ரப்புல் ஆலமீன் பிடிக்க நினைத்துவிட்டால் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவான்.

وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ

அநியாயம் செய்கின்ற ஊராரை அவர்களின் அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் பிடிக்கக் கருதினால் இவ்வாறே அவன் பிடித்துக் கொள்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவனுடைய பிடி மிக்க கடினமானதும் துன்புறுத்தக் கூடியதும் ஆகும். (அல்குர்ஆன் 11 : 102)

அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய ஆட்சியை கொடுத்தான். ஸ்பெயின் உடைய ஆட்சியை நினைத்துப் பாருங்கள்! இந்தியாவில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கொடுத்த ஆட்சியை நினைத்துப் பாருங்கள்!

ஒரு முஸ்லிம் தன்னுடைய பொருளாதாரத்தைக் கொண்டு இஸ்லாமை தீனை குறிக்கோளாக வைக்கவில்லை என்றால் மறுமையை குறிக்கோளாக வைக்கவில்லை என்றால் அவரிடத்திலிருந்து வெகு விரைவாக அந்த செல்வத்தை அல்லாஹ் பிடுங்கி விடுவான்.

எத்தனை கல்லூரிகளில் ஈமானை, ஒழுக்கத்தை கற்பிப்பதற்காக நாம் என்ன செய்திருக்கின்றோம். நிறுவனங்கள் உடைய பெயர்கள் இஸ்லாமிய அரபி பெயர்களாக இருப்பதைக் கொண்டு நாம் மகிழ்ச்சி அடைந்து விட முடியாது. நாம் திருப்தி கொண்டு விட முடியாது.

அந்த நிறுவனங்கள் முஸ்லிம்களால் நடத்தப் படுவது போன்று அவற்றிற்கு முஸ்லிம்களுடைய பெயர்கள் வைக்கப்படுவது போன்று அங்கு இஸ்லாமும் போதிக்கப்படுகிறதா?

அங்கு மார்க்க ஒழுக்கம் கற்பிக்கப்படுகின்றதா? அங்கு மறுமையைப் பற்றிய நினைவு அச்சம் போதிக்கப்படுகிறதா?

இந்த தக்வாவை பாதிக்கப்படாத நிறுவனங்கள், அது மார்க்கத்தை சொல்கின்ற மதரஸாவாக இருந்தாலும் சரி, அல்லது பொருளாதார கல்வியை சொல்லிக் கொடுக்கின்ற மற்ற கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் சரி, ஒரு மனிதனை உருவாக்க முடியாது.

முதலாவதாக எந்த ஆசிரியர் அல்லாஹ்வின் பயத்தை மறுமையைப் பற்றி உண்டான நினைவை அல்லாஹ்வைப் பற்றி உண்டான அறிவை எங்கே ஒரு மாணவனுக்கு போதிக்கப் படவில்லையோ அது மதரசாக்களாக இருந்தாலும் சரி அல்லது பொதுவான கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அவற்றால் இஸ்லாமிற்கு எந்த நன்மையும் கிடையாது.

எத்தனை ஆண்களை நாம் பார்க்கிறோம். மதரசாக்களில் படித்து வந்தவர்கள் மார்க்கத்தை விற்று பித்அத்களில் ஷிர்க்கான காரியங்களில் மார்க்கத்தை படித்தவன் கல்விமான் என்று சொல்லுகின்ற ஆலிம்கள் எத்தனை பேர் செய்கிறார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! மதரசாக்களோ கல்வி நிறுவனங்களோ என்பதை பார்த்து நாம் எந்த சட்டத்தையும் சொல்ல முடியாது.

நமக்குத் தேவை என்ன?மார்க்கம் போதிக்கப்பட வேண்டும்.

இன்று பொதுவாக முஸ்லிம்களுடைய நிலைமை முஸ்லிம் மாணவர்கள் 10 , 12 ஆம் வகுப்பு முடித்து விட்டார்கள். இப்போது அவர்களை எந்த கல்வியில் சேர்ப்பது? என்ற மிகப்பெரிய ஒரு மனப்போராட்டம்.

எந்த காலேஜில் படித்தால் உடனடியாக வேலை வாய்ப்பு இருக்கும். எங்கே படித்தால் உடனடியாக கேம்பஸ் இன்டர்வியூ உடனடியாக இருக்கும்.

அந்த தொழில் நிறுவனங்களே வந்து இவர்களைப் பார்த்து இவர்களை இன்டர்வியூ செய்து தொழிலுக்கு எடுத்துக்கொள்வார்கள்.

அதற்காக 5லட்சம் கொடுத்தாலும் பரவாயில்லை, பத்து லட்சம் கொடுத்தாலும் பரவாயில்லை. என்ன செய்தாலும் பரவாயில்லை.

ஆனால் அதே சமயத்தில் இந்த கல்லூரியில் சேர்ந்தால் இவனுடைய மறுமை என்னவாகும்? இவனுக்கு அங்கே தொழ முடியுமா? இவனால் அங்கே ஜும்ஆ தொழ முடியுமா? இஸ்லாமிய ஒழுக்கத்தை இவனால் பாதுகாக்க முடியுமா? இவனுடைய கற்ப்பை பாதுகாத்துக் கொள்வானா? கெட்ட பழக்கத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமா?

இன்று நாட்டில் ஒரு பெரிய சர்வேவைப் பார்த்தால் பள்ளிக்கூடத்திலும் சரி அல்லது கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களிலும் சரி எத்தனை மாணவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.

எத்தனை மாணவர்கள் தன்னோடு படிக்கின்ற அல்லது தனக்கு அருகிலேயே படிக்கின்ற பள்ளிக்கூடங்கள் மாணவிகளோடு தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்று சொல்கின்றன.

இதற்கு காரணம் என்ன?பொருளாதாரத்தை கொடுத்தீர்கள் அந்த மகன் படிப்பதற்காக செலவழித்தீர்கள். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் கட்டி காத்த அனைத்தையும் அவனுக்காக நீங்கள் கொடுத்தீர்கள். ஆனால் என்ன பலன்?

டிகிரியை கொடுத்தீர்கள்; படிப்பிற்காக செலவு செய்தீர்கள்; ஆனால் மறுமையில் அவனை ஒரு நரகவாதிகள் ஆக்கி விட்டீர்கள்!

ஒருவனுடைய கற்பு ஒருமுறை பாழாகிவிட்டால் ஒருவனுடைய ஒழுக்கம் ஒருமுறை பாழாகிவிட்டால் கரை படிந்து விட்டால் அவன் வாழ்க்கையை சிந்தித்துப் பாருங்கள்!

குடிப்பவர்களாக விபச்சாரத்திற்கு செல்பவர்களாக இன்னும் எத்தனை பெரும் பாவங்களில் அந்த கல்லூரிகளில் தங்குகின்ற காலத்தில் அவன் தள்ளப்படுகிறான்.

சக நண்பர்களின் மூலமாக மறுமையை பாழ் படுத்திட வேண்டாம். அந்த தேவைக்காக அல்லாஹ்வின் சட்டங்களை மீறி விட வேண்டாம்.

அல்லாஹ் நம்மை பாவங்களை விட்டும் குழப்பங்களை விட்டும் பாதுகாப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/