HOME      Khutba      தஸ்கியத்துன் நஃப்ஸ் - மனத்தூய்மை (அமர்வு - 4/4) | Tamil Bayan - 367   
 

தஸ்கியத்துன் நஃப்ஸ் - மனத்தூய்மை (அமர்வு - 4/4) | Tamil Bayan - 367

           

தஸ்கியத்துன் நஃப்ஸ் - மனத்தூய்மை (அமர்வு - 4/4) | Tamil Bayan - 367


தஸ்கியத்துன் நஃப்ஸ் - மனத்தூய்மை

ஜுமுஆ குத்பா தலைப்பு : தஸ்கியத்துன் நஃப்ஸ் - மனத்தூய்மை (அமர்வு4- 4 )

வரிசை : 367

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 06-12-2013 | 03-02-1435

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா பரிசுத்தமான உள்ளம் உள்ளவர்களை விரும்புகிறான்.

பரிசுத்தமான உள்ளம் உள்ளவர்கள், தக்வா உடையவர்கள், பரிசுத்தவான்கள் அவர்களிடமிருந்து தான் அல்லாஹ் அமல்களை ஏற்றுக் கொள்கிறான்.

யார் தக்வா இல்லாமல், உள்ளம் பரிசுத்தமாகாமல் செய்தார்களோ அவர்களுடைய அமலை விட தக்வா உடையவர்களின் அமலுக்கு அல்லாஹ்விடத்தில் அதிகமான மதிப்பும், கண்ணியமும் இருக்கிறது.

அந்த உள்ளத்தை சுத்தப்படுத்துவதை குறித்து நாம் தெரிந்து கொண்டு வரும் பொழுது அதனுடைய சில முக்கியமான விஷயங்களை மேலும் நாம் தெரிந்து கொள்ள கடமைப் பட்டிருக்கிறோம்.

உள்ளத்தை சுத்தப்படுத்துவதின் இந்த முக்கியமான கட்டத்திற்கு المحاسبة'முஹாஸபா' என்று கூறுவார்கள்.

அதாவது,எது எனக்கு இந்த உலகிலும் மறுமையிலும் நன்மையாக அமையும், எது எனக்கு இந்த உலகிலும் மறுமையிலும் தீமையாக அமையும் என்பதை தெளிவாக தெரிந்து நன்மையானவற்றை மட்டும் செய்வது,தீமையிலிருந்து விலகுவது. இதை தான் 'முஹாஸபா' என்று கூறுவார்கள். (தன்னை தானே விசாரித்துக் கொள்வது.)

ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பாக,நீ ஏன் இதை செய்கிறாய்? எதற்காக செய்கிறாய்? எதை அடைய விரும்பி நீ இதை செய்கிறாய் ? என்பதாக தன்னை தானே கேட்டுக் கொள்வது. அல்லது ஒரு காரியத்தை நம்மை அறியாமல் செய்து முடித்திருந்தால் இந்த காரியத்தை நீ ஏன் செய்தாய்? இது நன்மையான காரியத்தில் உள்ளதா? தீமையான காரியத்தில் உள்ளதா?

தீமையாக இருந்தால் கண்டிப்பாக அதற்காக அல்லாஹ்விடத்தில் வருந்தி பாவ மன்னிப்பு தேட வேண்டும். நன்மையாக இருக்குமேயானால் அந்த நன்மையை நீ எதற்காக செய்தாய்? அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி செய்தாயா? மறுமைக்காக செய்தாயா? அப்படி இருக்குமேயானால், அல்ஹம்துலில்லாஹ்.

இல்லை, மக்கள் தன்னை புகழ வேண்டும் என்பதற்காக அல்லது உலக ஆதாயத்தை கருதி அப்படி ஒரு நல்ல காரியத்தை செய்திருந்தால் அதற்காகவும் அல்லாஹ்விடத்தில் வருந்தி மன்னிப்பு தேட வேண்டும்.

யா அல்லாஹ்! முகஸ்துதியில் இருந்து என்னை காப்பாற்று. யா அல்லாஹ்! பெயர், புகழ் விரும்புவதிலிருந்து என்னை காப்பாற்று என்று அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேட வேண்டும்.

யா அல்லாஹ்! நான் செய்யக்கூடிய அமல்களை எல்லாம் உனது திருமுகத்தை நாடி செய்யப்பட்ட பரிசுத்தமான அமலாக ஆக்கு என்று அல்லாஹ்விடத்தில் வேண்ட வேண்டும். அதை தான், முஹாஸபா என்று கூறுவார்கள்.

ஒரு செயலை செய்வதற்கு முன்பாகவும், அந்த செயலை செய்து கொண்டிருக்கும் பொழுதும், அந்த செயலை செய்து முடித்த பின்பும் அந்த செயலை பற்றிய சரியான அறிவு, ஞானம் இருக்க வேண்டும்.

அந்த செயல் யாருக்காக செய்யப்படுகிறது? அந்த செயலைக் கொண்டு நமது நோக்கம் என்ன? என்று நம்மை நாமே பரிசோதித்து அல்லாஹ் விரும்புகின்ற விதத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்வழிகாட்டுகின்ற விதத்தில் நம்மை அமைத்துக் கொள்வதற்கு தான் முஹாஸபா என்று கூறுவார்கள்.

இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ்கூறுகிறார்கள் :

قال الحسن البصري رحمه الله تعالى: " رحم الله عبدا وقف عند همه, فإن كان لله أمضاه, وإن كان لغيره تأخر"

ஒரு அடியான் மீது அல்லாஹ் கருணை காட்டட்டும். அவன் வெற்றிக்குரிய அடியான், அவன் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு அடியான் என்பதற்கு ஒரு அடையாளத்தை கூறுகிறார்கள்.

எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அந்த காரியம் அல்லாஹ்விற்காக மட்டுமே கலப்பற்ற முறையில் செய்யப்படுகிறதா? என்று அந்த செயலை செய்வதற்கு முன்பு யோசிப்பான். தனது உள்ளத்தில் அல்லாஹ்வின் பொருத்தத்தை தவிர வேறு நோக்கம் இல்லை என்றால் அந்த செயலை செய்ய துணிவான், அந்த செயலில் ஈடுபடுவான்.

இல்லை, இந்த செயல் அல்லாஹ்விற்காக செய்யப்படவில்லை. தனது நஃப்ஸிற்காக மட்டும் செய்யப்படுகிறது, தனது விருப்பத்திற்காக மட்டும் செய்யப்படுகிறது அல்லது வேறு உலக லாபத்திற்காக செய்யப்படுகிறது என்றால் அப்பொழுது அந்த காரியத்தை விட்டு அவன் விலகிக் கொள்வான்.

கண்ணியத்திற்குரியவர்களே! இது மிக முக்கியமான ஒரு தன்மை. அல்லாஹ்வுடைய விருப்பம், அல்லாஹ்விற்காக என்று வாழ்வது.

இது தான் உயர்ந்தவர்களுடைய குணம் நபிமார்களுடைய குணம், அந்த நபிமார்களை பின்பற்றிய சித்தீக்குகளுடைய குணம். தன்மை முழுமையாக அல்லாஹ்விற்கு கலப்பற்ற முறையில் ஆக்குவது.

இதை தான் நாமும் நமது வாயால் ஒவ்வொரு தொழுகைக்கு முன்பும் சொல்கிறோம். ஆனால், அதற்குரிய பயிற்சியை நாம் அடையவில்லை.

قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (162) لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ

நீங்கள் கூறுங்கள்: ‘‘நிச்சயமாக என் தொழுகையும், என் (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. அவனுக்கு ஒரு இணையுமில்லை; (துணையுமில்லை.) இவ்வாறே, நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே, அவனுக்கு பணிந்து வழிப்பட்டவர்களில் நான் முதன்மையானவன்'' (என்றும் கூறுவீராக.) (அல்குர்ஆன் 6 : 162,163)

இந்த சொல்லுக்கு ஏற்ப தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு தன்னை தானே பரிசோதிப்பது. இது தான் தஸ்கியாவுடைய மிக முக்கியமான கட்டம்.

மேலும், இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :

ஒரு முஃமின் தன்னை தானே அவன் கண்கானித்து கொண்டிருப்பான், தன்னை விசாரித்துக் கொண்டிருப்பான்.தன் மீது அவன் நிர்வாகம் செலுத்துவான். அல்லாஹ்விற்காக அந்த நஃப்ஸை அவன் கண்டித்துக் கொண்டே இருப்பான்.

இன்று நம்முடைய பிரச்சனை என்ன? நாம் பிறரை கண்டிப்போம். மனைவியை கண்டிப்போம், பிள்ளைகளை கண்டிப்போம், சகோதரர்களை கண்டிப்போம், நண்பர்களை கண்டிப்போம், பணியாட்களை கண்டிப்போம்.

இப்படி நமது கண்டிப்பெல்லாம் பிறருடைய நஃப்ஸின் மீது இருக்கும். ஆனால், நாம் நம்மை கண்டிக்கிறோமா? நமது செயல்களை நாம் கண்காணிக்கிறோமா? பிறர் செயல்களை கண்காணிக்கின்ற அளவிற்கு நமது செயல்களை நாம் கண்காணிக்கிறோமா? நாம் நமது செயல்களை கண்காணிக்க வேண்டும்.

மறுமையில் அல்லாஹ் சொல்கிறான் அல்லவா? யாருடைய புத்தகம் வலது கையில் கொடுக்கப்படுகிறதோ அவரிடத்தில் மிக இலகுவாக, மிக எளிதாக விசாரணை செய்யப்படும் என்று. (அல்குர்ஆன் 84 : 8)

யார் அவர்கள்? யார் தன்னை துன்யாவில் விசாரித்துக் கொண்டார்களோ, தனது எண்ணங்களை குறித்து, செயல்களை குறித்து, தன்னுடைய வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும்குறித்து யார் தன்னை விசாரித்துக் கொண்டே இருந்தார்களோ, கண்காணித்து கண்டித்துக் கொண்டே இருந்தார்களோ அவர்களுக்கு நாளை மறுமையில் மறுமையின் விசாரணை இலகுலாக இருக்கும்.

நாளை மறுமையில் சில மக்களுக்கு கேள்வி கணக்கு கடுமையாக ஆகும் என்றால்,அது ஏன்? அவர்கள் இந்த துன்யாவில் கணக்கு வழக்கு இல்லாமல் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் இருந்தவர்கள். நாம் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது என்பதை பற்றி சுயபரிசோதனை இல்லாமல், சுய கட்டுப்பாடு இல்லாமல்,

எதை விரும்பினார்களோ சாப்பிட்டார்கள். எதை விரும்பினார்களோ செய்தார்கள். எதை அவர்கள் லாபமாக கருதினார்களோ அதை தொழிலாக செய்தார்கள்.

இப்படி யார் தனது முஹாஸபா இல்லாமல் இந்த துன்யாவில் மேய்ந்தார்களோ அவர்களுக்கு தான் நாளை மறுமையில் விசாரனை மிகக் கடுமையாக இருக்கும்.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த நிலையை குறித்து ரப்புல் ஆலமீன் கூறுகிறான் :

கண்ணியத்திற்குரிய மார்க்க அறிஞர்கள் முஹாஸபா என்று கூறினார்கள். அது என்று இந்த வசனத்திலிருந்து தான் எடுக்கப்படுகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை என்னும்) நாளைய தினத்திற்காக, தான் எதைத் தயார்படுத்தி வைக்கிறான் என்பதைக் கவனித்து கொள்ளட்டும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 59 : 18)

கண்ணியத்திற்குரியவர்களே! இந்த நஃப்ஸானது அப்படி தான். இதை கண்காணித்தால் இது நமது கட்டுப்பாட்டில் இருக்கும். இதை நாம் அடக்கி வைத்திருந்தால் இது நமது கட்டுப்பாட்டில் இருக்கும். இதை நாம் கண்காணிக்கவில்லை என்றால், இதை நாம் அடக்கவில்லை என்றால் அது தனது விருப்பத்திற்கு ஏற்ப மேய ஆரம்பித்து விடும். கட்டுப்பாடற்ற, கடிவாளமற்ற ஒரு குதிரையை போன்று இந்த நஃப்ஸ் உலகத்தில் செல்ல ஆரம்பித்து விடும்.

ஒரு பக்கம் நம்முடைய முஹாஸபா, இன்னொரு பக்கம் அல்லாஹ்விடத்தில் இது குறித்து நாம் துஆ செய்வது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனது நஃப்ஸை சுத்தப்படுத்துவதற்கு எந்த அளவு செயல் ரீதியாக அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுத்து கண்காணித்து சமய சந்தர்பங்களில் நஃப்ஸ் அந்த பக்கம் இந்த பக்கம் திரும்பும் பொழுது அந்த நஃப்ஸை கடிவாளத்தைக் கொண்டு திருப்பி எடுத்தார்களோ அது போன்று தான் தனது நஃப்ஸை குறித்து அல்லாஹ்விடத்தில் முறையிட்டார்கள்.

அல்லாஹ்விடத்தில் தனது நஃப்ஸிற்காக வேண்டி துஆ செய்தார்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்பொழுது பிரச்சாரம் ஆரம்பித்தாலும், குத்பாவை, பயானை, நஸீகத்தை ஆரம்பித்தாலும் அவர்கள் சொல்லக்கூடிய வார்த்தையில் அல்லாஹ்விடத்தில் கேட்பார்கள் :

مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا

யா அல்லாஹ்! எங்களுடைய நஃப்ஸின் தீங்கிலிருந்து எங்களை பாதுகாத்துக் கொள். எங்களது செயல்களால் ஏற்படும் தீமையிலிருந்து எங்களை பாதுகாத்துக் கொள் என்று. (1)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 1883.

இப்படி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்போதும் இதை சொல்லி பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்கள். அந்தளவு பயந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களுடைய காலை, மாலை உடைய பிரார்த்தனைகளில் பார்க்கிறோம். அல்லாஹ்வை அவனுடைய கண்ணியத்திற்கு ஏற்ப புகழ்வதை பாருங்கள்.

பிறகு தனது நஃப்ஸ் குறித்து கவலையோடு அவர்கள் கேட்கக் கூடிய துஆவை கேளுங்கள்.

اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ

அல்லாஹ்வே! வானங்களை பூமியை படைத்தவனே! மறைவானவற்றை எல்லாம் அறியக்கூடியவனே! வெளிப்படையானதையும் அறியக்கூடியவனே!

(ஹதீஸின் தொடர் பின்னால் வரும்)

இந்த உள்ளத்தில் உள்ள எண்ணங்கள், இந்த உள்ளத்தில் உள்ள ஊசலாட்டங்கள் அல்லாஹ் அவற்றை மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறான்.

நாம் அறியாத எத்தனையோ விஷயங்கள் நமது உள்ளத்தில் இருக்கும். அல்லாஹ் அவற்றை மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறான். நமக்கு அருகில் உள்ள மக்கள் அறியாத எத்தனையோ விஷயங்கள் நமது உள்ளத்தில் இருக்கும். நாம் நல்லவர்களாக காட்சியளிப்போம். ஆனால், உள்ளத்திலோ உள்ளத்தில் இருக்கின்ற செயல்களால் அங்கே அசுத்தங்கள் நிரம்பி இருக்கும்.

பார்ப்பதற்கு வெளித்தோற்றத்தில் அழகிய ஆடையை உடுத்தி கண்ணியமான தோற்றத்தில் இருப்பார்கள். ஆனால், அவர்களுடைய உள்ளங்களோ மிகக் கேவலமானதாக இருக்கும். ஆனால், சிலரோ அவர்களுடைய ஆடைகள், அவர்களுடைய தோற்றங்கள் மிகவும் ஒரு பரிதாபத்திற்குரிய மக்கள் பார்த்தால் முகம் திருப்பக்கூடிய அளவில் இருக்கலாம்.

ஆனால், அவர்களது உள்ளங்களோ மிக சுத்தமாக இருக்கும், மிக பரிசுத்தமாக இருக்கும்.

ஸஹீஹுல் புகாரியில் பதிவான ஒரு நிகழ்வை பாருங்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு நாள் மஸ்ஜிதுன் நபவியில் அமர்ந்திருக்கிறார்கள்.

அப்பொழுது அந்த வழியாக ஒருவர் செல்கிறார். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திரும்பி பார்க்க சொல்கிறார்கள். இதோ செல்கிறாரே இவரை பற்றி உங்களுக்கு தெரியுமா?இவர் யார் என்று தெரியுமா? இவரை பற்றி நீங்கள் என்ன மதிப்பீடு செய்கிறீர்கள்.

இங்கே ஒன்றை நாம் தெளிவாக புரிய வேண்டும். நமது மதிப்பீடு அல்லாஹ்வின் மதிப்பீடாக ஆகாது. அல்லாஹ்வின் மதிப்பீட்டை நாம் அறிய முடியாது. வெளித்தோற்றத்தை வைத்து நாம் மதிப்பீடு செய்கிறோம்.

மனிதருடைய செல்வத்தை வைத்து, அவனுடைய அழகை வைத்து, சுத்தமான, கவர்சியான அவனுடைய ஆடையை வைத்து நாம் மதிப்பீடு செய்கிறோம்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா உள்ளங்களை வைத்து தான் மதிப்பிடுகிறான். அல்லாஹ் கூறுகிறான் :

لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَاوَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ

நீங்கள் அறுக்கின்ற குர்பானி பிராணி உடைய மாமிசங்கள் என்னை வந்து அடையாது, அதனுடைய இரத்தங்கள் என்னை வந்து அடையாது. உங்களது உள்ளத்தில் உள்ள தக்வா தான் என்னை வந்து அடையும். (அல்குர்ஆன் 22 : 37)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்,

إِنَّ اللَّهَ لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ

அல்லாஹ் உங்களது தோற்றங்களை பார்க்கமாட்டான், உங்களது உடலை பார்க்கமாட்டான். அல்லாஹ் உங்களுடைய உள்ளங்களை பார்க்கிறான், உங்களுடைய அமல்களை பார்க்கிறான்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 4651.

ஹதீஸின் தொடர்ச்சி : அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பொழுது தங்களது தோழர்களை பார்த்து கேட்டார்கள்.

இந்த மனிதரை நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று. அப்பொழுது அந்த மக்கள் கூறினார்கள், யா ரஸூலுல்லாஹ்! இவர் ஒரு பரிதாபத்திற்குரியவர். இவர் பெண் கேட்டால் கொடுக்கமாட்டார்கள். இவர் சிபாரிசு செய்தால் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இவர் ஏதாவது தேவையை கேட்டால் நிறைவேற்றமாட்டார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அமைதியாகிவிட்டார்கள்.

அடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு கேட்டார்கள், இன்னொரு மனிதர் அந்த பக்கம் சென்ற பொழுது, தோழர்களே! இப்பொழுது செல்கின்ற இந்த மனிதரை பாருங்கள். இவரை பற்றி உங்களுடைய கருத்து என்ன?

தோழர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே! இவர் பெண் கேட்டால் கொடுத்து விடுவார்கள். இவர் சிபாரிசு செய்தால் அதை ஏற்றுக் கொள்வார்கள். இவர் ஏதாவது ஒரு தேவையை கேட்டால் உடனே நிறைவேற்றிவிடுவார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், இரண்டாவது சென்றாரே, யாரை பார்த்து நீங்கள் இவ்வளவு உயர்வாக மதிப்பிட்டீர்களோ அவரை போன்ற மக்கள் உலகமெல்லாம் நிரம்பி இருந்தாலும் முன்னால் சென்றாரே ஒரு மனிதர், அந்த ஒரு மனிதருக்கு இவர் சமமாகமாட்டார்.

அல்லாஹ்விடத்தில் அவர் தான் கண்ணியத்திற்குரியவர். அவர் தான் அல்லாஹ்விடத்தில் மதிப்பிற்குரியவர் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதிப்பீட்டின் அளவை நமக்கு கற்றுத் தருகிறார்கள். (2)

அறிவிப்பாளர் : சஹ்ல் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4701.

இன்று, முஸ்லிம்களும் காஃபிர்களை போன்று மாறிக் கொண்டேயிருக்கிறார்கள்.

மறுமையின் அடையாளங்களில் ஒன்று, தெரிந்தவருக்கு மட்டும் தான் ஸலாம் கூறுவார்கள். அந்த நிலையில் தான் நாம் இருக்கிறோம்.

நமக்கு அறிமுகமானவர்களாக இருந்தால் ஸலாம் கூறுகிறோம். அந்நியர்களை பார்த்தால் முகம் திருப்பிக் கொள்கிறோம்.

இன்று, எந்தளவு முஸ்லிம்களுடைய மனநிலை மாறியிருக்கிறது என்றால், தெரியாதவர்கள் ஸலாம் கூறினால் ஏதோ ஒரு தேவைக்கு தான் ஸலாம் கூறுகிறார்கள் போல என்று முகம் திருப்பக் கூடிய ஒரு நிலையில் முஸ்லிம்களின் நிலை இருக்கிறது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

ஹதீஸின் தொடர் : அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்தில் முன் வைக்கிறார்கள்.

اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ

மறைவானவற்றை அறிந்தவனே! வெளிப்படையானவற்றை அறிந்தவனே! எல்லா பொருள்களுக்கும் பொருள்களுக்கும் எஜமானனே! அதற்குரிய அரசனே!  உன்னை தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்.

இப்படி அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு, அல்லாஹ்விற்கு முன்னால் பணிந்து விட்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கக் கூடிய வார்த்தையை பாருங்கள்.

யா அல்லாஹ்! எனது நஃப்ஸுடைய தீங்கிலிருந்து நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனது நஃப்ஸுக் குறித்து நிம்மதியாக இல்லை என்றால், பயமற்றவர்களாக இல்லை என்றால் அற்ப மக்களாகிய நாம் எப்படி இருக்க முடியும்?!

நம்மை பற்றி நாம் எப்படி திருப்தியடைய முடியும். நான் தவறு செய்யமாட்டேன் எனது உள்ளம் சுத்தமாக இருக்கிறது என்று நாம் நம்மை பீற்ற முடியுமா?

فَلَا تُزَكُّوا أَنْفُسَكُمْ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَى

உங்களை நீங்களே! பீத்திக் கொள்ளாதீர்கள், உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ளாதீர்கள் என்று அல்லாஹ் கண்டிக்கிறான். (அல்குர்ஆன் 53 : 32)

மேலும் அல்லாஹ் கேட்கிறான்,

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يُزَكُّونَ أَنْفُسَهُمْ بَلِ اللَّهُ يُزَكِّي مَنْ يَشَاءُ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا

(நபியே!) பரிசுத்தவான்களென்று எவர்கள் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள் கூறுவது சரியன்று.) அல்லாஹ், தான் விரும்பிய (நல்ல)வர்களைத்தான் பரிசுத்தமாக்கி வைப்பான். (இவ்விஷயத்தில் எவரும்) ஓர் அணுவளவும் அநீதி செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 4 : 49)

பிறகு கேட்கிறார்கள், யா அல்லாஹ்! ஷைத்தானுடைய தீங்கிலிருந்து என்னை பாதுகாத்துக் கொள். அவனுடைய ஷிர்க்கினால் விளையும் தீங்கிலிருந்து என்னை பாதுகாத்துக் கொள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 4405.

கண்ணியத்திற்குரியவர்களே! இப்படி அல்லாஹ்விடத்தில் பணியும் பொழுது,நம்முடைய நஃப்ஸை தூய்மைபடுத்த அல்லாஹ்விடத்தில் கேட்கும் பொழுது,அதற்காக அல்லாஹ்விடத்தில் நம்முடைய உள்ளத்தில் உள்ள குறைகளை எல்லாம் கூறி,யா அல்லாஹ்! என்னிடத்தில் என்ன தவறு இருக்கிறது,அதை நீ நிவர்த்தி செய் என்று அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டும்.

இன்று,நம்மில் உள்ள இன்னொரு பலவீனம்,நம்முடைய குறைகளை அடியார்களிடத்தில் கூறுகிறோம்,அல்லாஹ்விடத்தில் கூறுவதில்லை.

யார் உண்மையான மருத்துவனோ, யார் உண்மையாக உள்ளத்திற்கு சிகிச்சை அளிப்பவனோ அவனிடத்தில் நமது குறைகளை நமது உள்ளத்தில் உள்ள பலவீனத்தை கூறுவதில் வெட்கப்படுகிறோம் அல்லது அதில் கவனமற்றவர்களாக இருக்கிறோம்.

யாருக்கு தனது உள்ளமோ, தனது நஃப்ஸோ கட்டுப்பாட்டில் இல்லையோ அவர்களிடத்தில் சென்று நமது உள்ளக்குமுறல்களை வைக்கிறோம்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அந்த நல்லடியார்கள் அவனிடத்தில் முறையிடும் பொழுது, தனது தேவைகளை கேட்கும் பொழுது, தனது உள்ளத்தில் உள்ள அழுக்குகளை சுத்தப்படுத்த கேட்கும் பொழுது அல்லாஹ் கண்டிப்பாக சுத்தப்படுத்துகிறான்.

நபிமார்களை அல்லாஹ் சுத்தப்படுத்தினான், சித்தீக்குகளை அல்லாஹ் சுத்தப்படுத்துகிறான், ஸாலிஹீன்களை அல்லாஹ் சுத்தப்படுத்துகிறான்.

எதன் மூலமாக? முதலில் ஈமான் என்ற ஸிஃபத்தின் மூலமாக, ஈமானை அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டும். தஸ்கியா என்றால், தர்பியா என்றால், முஹாஸபா என்றால் அங்கே உள்ளத்தில் அந்த உள்ளம் முத்மயின்னாவாக மாறுவதற்கு முதலில் ஈமான் தேவை.

ஈமான் என்றால், இன்று நாமெல்லாம் உடனே என்ன நினைப்போம்? ஈமான் தானே அது நம்மிடத்தில் இருக்கிறது என்று சாதாரணமாக நாம் நினைத்து விடுவோம், கூறிவிடுவோம்.

ஈமான் என்றால் எந்த ஈமானை அல்லாஹ் எதிர்பார்க்கிறானோ, எந்த ஈமானின் பக்கம் அல்லாஹ்வுடைய தூதர் அழைத்தார்களோ அது ஈமான்.

அல்லாஹ் கூறுகிறான் அல்லவா, யா அல்லாஹ்! ஈமானின் பக்கம் அழைக்கக் கூடிய ஒரு அழைப்பாளரை நாங்கள் கேட்டோம். நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (அல்குர்ஆன் 3 : 193)

அந்த ஈமான் வேண்டும்.அல்லாஹ்வின் மீதுள்ள ஈமான்,அவனுடைய உள்ளமையின் மீது ஈமான், அவனுடைய ஸிஃபத்துகளின் மீது ஈமான்,அவனுடைய செயல்களில் உள்ள ஈமான். அந்த ஈமான் சந்தேகம் கலக்காத யகீனோடு இருக்க வேண்டும்.

எந்த ஈமானில் தடுமாற்றம் இருக்காதோ, எந்த ஈமான் உயர்ந்து கொண்டே செல்லுமோ அந்த ஈமான் இருக்க வேண்டும்.

இன்று,நம்முடைய ஈமான் எப்படி இருக்கிறது? ஒரு சில நேரங்களில் உயர்ந்து கொண்டு சென்றால், மற்றொரு நேரங்களில் தாழ்ந்து கொண்டே செல்கிறது. பிறகு அதிலிருந்து உயர்த்துவதற்கு முடியாத அளவிற்கு நாம் மிகப் பெரிய ஒரு சிரமத்தை பார்க்கிறோம்.

ஈமான் யகீனோடு கலக்க வேண்டும், உறுதியோடு கலக்க வேண்டும், நம்பிக்கையோடு கலக்க வேண்டும். அசாதாரணமாக மிகப் பெரிய பலுவான நம்பிக்கை. எந்த நம்பிக்கையை அஹ்ஸாபுடைய நபித் தோழர்களுக்கு அல்லாஹ் கூறினானோஅந்த நம்பிக்கை நம்மிடம் இருக்க வேண்டும்.

وَلَمَّا رَأَى الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَذَا مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَسُولُهُ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا

நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவங்களைக் கண்ட பொழுது ‘‘(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்'' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் ஏற்று கீழ்ப்படிவதையும் தவிர வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்திவிடவில்லை. (அல்குர்ஆன் 33 : 22)

பத்ரு யுத்தத்தில் பாருங்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களுக்கு அல்லாஹ் கூறுகிறான்,

ثُمَّ أَنْزَلَ عَلَيْكُمْ مِنْ بَعْدِ الْغَمِّ أَمَنَةً نُعَاسًا

அவன் உங்களுக்கு நிம்மதியாக ஒரு தூக்கத்தை கொடுக்கிறான். உங்களை பாதுகாப்பதற்காக, உங்களது மனது நிம்மதிக்காக தூக்கத்தை கொடுத்தான். (அல்குர்ஆன் 3:154)

அவ்வளவு பெரிய இக்கட்டான நிலையில்,போருடைய மைதானத்தில் அந்த தோழர்கள் தூங்குகிறார்கள்.

இன்றைய முஸ்லிம்கள் தொழுகையில் தூங்குவார்கள், தொழுகையில் ஸஹாபாக்கள் அழுதார்கள். துஆ கேட்கும் பொழுது, திக்ரு செய்யும் பொழுது, குர்ஆன் ஓதும்பொழுது அழுதார்கள்.

இது தான் வித்தியாசம். போரில் அவர்களுக்கு தூக்கம் ஏற்பட்டது. அந்த அளவுக்கு மன நிம்மதி, அல்லாஹ் நமக்கு வெற்றியை கொடுப்பான் என்று.

இந்த யகீன் நம்மித்தில் மிக பலவீனமாக இருக்கிறது. அதன் காரணமாகத்தான் அல்லாஹ்வின் விஷயத்தில் நமது உள்ளம் இன்னும் முத்மயின்னாவாக –நிம்மதியாக மாறவில்லை.

என்ன பிரச்சனை? ஏதாவது சின்ன சோதனைகள் வந்தால் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் பதட்டப்பட்டு அல்லாஹ்வை குறை பேசுவது, தக்தீரை குறை பேசுவது, அமல்களில் உடனே அலட்சியம் செய்து விடுவது.

நம்முடைய அன்றாட இபாதத்துகளில் அலட்சியம் செய்வது. இது யகீனில் இருக்கக் கூடிய பலவீனத்தால் ஏற்படுகிறது.

நம்முடைய உள்ளம் சுத்தமடைய வேண்டும் என்றால், உள்ளத்தில் அந்த ஸிஃபத்துகளை கொண்டு வர வேண்டும் என்றால், அந்த முத்மயின்னா உள்ளத்தில் உள்ள பரிசுத்தமான அல்லாஹ்வின் திக்ரால் அமைதி பெற்ற ஆத்மாவாக வர வேண்டும் என்றால் முதலில் ஈமான் இருக்க வேண்டும். யகீன் இருக்க வேண்டும், ஸப்ர் இருக்க வேண்டும், சுக்ர் இருக்க வேண்டும். அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தக் கூடிய உள்ளமாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டார்கள்.

யா அல்லாஹ்! திருப்தியடையாத நஃப்ஸிலிருந்து நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

இன்று, நமது நஃப்ஸ், துன்யாவை வேண்டும் வேண்டும் என்று தேடிக் கொண்டே இருக்கிறது. அல்லாஹ்வை புகழ்வதில் குறைவு செய்து கொண்டிருக்கிறது.

எப்பொழுது பார்த்தாலும் சரி, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய கட்டளைக்கு மாற்றமாக தான் நம்மில் பலர் இருக்கிறார்கள்.

தீனுடைய விஷயத்தில் மேல் உள்ளவர்களை பாருங்கள். துன்யாவுடைய விஷயத்தில் கிழே உள்ளவர்களை பாருங்கள் என்று கூறினார்கள்.

ஆனால், நாமோ துன்யாவின் விஷயத்தில் மேல் உள்ளவர்களை பார்ப்பது, தீனுடைய விஷயத்தில் கீழே உள்ளவர்களை பார்ப்பது.

எனவே, நஃப்ஸில், நன்றிக் கெட்ட தன்மை, அல்லாஹ் கொடுப்பதை கொண்டு திருப்தியடைகின்ற தன்மை கிடையாது. அல்லாஹ்வை குறைபடுகிறோம். அல்லாஹ் மன்னிப்பானாக!

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருப்தியடையாத அல்லாஹ்வுடைய நிஃமத்துகளை கொண்டு, அல்லாஹ் கொடுத்ததை கொண்டு திருப்தியடையாத நஃப்ஸிலிருந்து பாதுகாப்பு தேடினார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! அது போன்று இந்த நஃப்ஸ் முத்மயின்னாவாக மாற வேண்டும் என்றால் நமது உள்ளம் எப்பொழுதும் அல்லாஹ்வை முன்னோக்கி இருக்க வேண்டும்.

தொழுகையில் மட்டுமல்ல, குர்ஆன் ஓதுவதில் மட்டுமல்ல, திக்ரு செய்யும் பொழுது மட்டுமல்ல. எப்பொழுதும் இந்த உள்ளத்துடைய கிப்லா அல்லாஹ்வுடைய பொருத்தமாக அல்லாஹ்விற்காக இருக்க வேண்டும்.

எங்கு திரும்பினாலும் சரி, அல்லாஹ்வுடைய பொருத்தம் மட்டுமே நமது நோக்கமாக, அல்லாஹ்வை மட்டுமே முன்னோக்கியவர்களாக இருக்க வேண்டும்.

இதை தான் القلب المينيب-கல்பு முனீப் என்று கூறுவார்கள். நபிமார்களை அல்லாஹ் புகழும் பொழுது இந்த இனாபத் என்ற ஸிஃபத்தை கொண்டு அதிகமாக கூறுகிறான்.

எந்த ஒரு சூழ்நிலையிலும் சரி, அல்லாஹ்விலிருந்து அவர்களது உள்ளங்களை யாராலும் திருப்ப முடியாது. அப்படிப்பட்ட உள்ளங்களை அந்த கண்ணியத்திற்குரிய நபிமார்கள் பெற்றிருந்தார்கள்.

அந்த தர்பியத்தை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களுக்கு கொடுத்தார்கள்.

அடுத்து சகோதரர்களே! திக்ர் அல்லாஹ்வை -நினைவு கூர்வது. ஒவ்வொரு நேரத்திலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன நினைவை நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்களோ அதை செய்வதோடு நாவாலும் உள்ளத்தாலும் அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டே இருப்பது.

இந்த ஸிஃபத்துகள் குறிப்பாக அல்லாஹ்வோடு தொடர்பு கொண்டவை, அல்லாஹ்வோடு நம்மை ஈடுபடுத்தக்கூடியவை, அல்லாஹ்விடத்தில் நம்முடைய கண்ணியத்தை உயர்த்தக் கூடியவை.

இதன் மூலமாக நமது நஃப்ஸ் முத்மயின்னாவாக, அல்லாஹ்வுடைய திக்ரால், நினைவால் திருப்தி பெற்ற ஆத்மாவாக மாறும்.

அடுத்து சில தன்மைகள் இருக்கின்றன. அடியார்களோடு நாம் செய்ய வேண்டிய அடியார்களோடு நாம் பின்பற்ற வேண்டிய கடைபிடிக்க வேண்டிய ஸிஃபத்துகள்.

அதுவும் நம்முடைய உள்ளத்தை முத்மயின்னாவாக, நம்முடைய உள்ளத்தை அல்லாஹ்வின் அன்பால், அல்லாஹ்வின் மார்க்கத்தை கொண்டு நிம்மதி பெற்ற ஒரு உள்ளமாக மாற்றும். அப்படிப்பட்ட உள்ளங்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

அதில் மிக முக்கியமானது,அல்ஹில்ம் (சகிப்புத்தன்மை). பிறர் செய்யக் கூடிய குறைகளை, பிறர் நமக்கு செய்யக் கூடிய அநியாயங்களை, பிறர் நமக்கு செய்யக்கூடிய தவறுகளை எல்லாம் மன்னிப்பது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :

« صل من قطعك ، وأعط من حرمك ، واعف عمن ظلمك »

உனக்கு கெடுதி செய்தவர்களுக்கு நீ நன்மை செய். உனக்கு அநியாயம் செய்தவர்களை மன்னித்து விடு.உனது உறவை யார் துண்டிக்கிறார்களோ அவர்களை நீ சேர்த்துக் கொள்.

அறிவிப்பாளர் : உக்பா இப்னு ஆமிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 16810.

எதற்காக ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்? உள்ளத்தில் அந்த சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். உள்ளத்தில் பிறரை மன்னிக்கக் கூடிய குணம் இருக்க வேண்டும்.

ஒரு நபித்தோழரை பற்றி ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூன்று நாட்களாக கூறுகிறார்கள். இவர் சொர்க்கவாசி என்பதாக.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹாஅவரோடு சென்று மூன்று நாட்கள் தங்குகிறார்கள். இவர் என்ன அமல் செய்கிறார் என்பதாக.

கடைசியில் பார்த்தால் பெரிய அமல் என்பதாக ஒன்றும் இல்லை. அவர் திரும்பி சென்ற பொழுது அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹாஅவர்களை அழைத்து அந்த தோழர் கேட்கிறார்,

மூன்று நாட்கள் என்னுடன் தங்கினீர்களே எந்த பிரச்சனைக்காக வந்தீர்களோ அந்த பிரச்சனை உங்களுக்கு முடிந்து விட்டதா?உங்கள் தேவை நிறைவேறிவிட்டதா? என்று.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூன்று நாட்களாக நீங்கள் மஸ்ஜிதிற்கு வந்த பொழுது நீங்கள் சொர்க்கவாசி சொர்க்கவாசி என்று கூறினார்கள்.

நீங்கள் என்னவோ ஒரு வித்தியாசமான பெரிய அமலை செய்வீர்கள். இதன் காரணமாக தான் இப்படிப்பட்ட நற்செய்தியை அடைந்தீர்கள் என்று அந்த அமலை தெரிந்து கொள்வதற்காக தான் உங்களிடத்தில் வந்தேன்.

வேறு எதற்காகவும் அல்ல, எந்த ஒரு பிரச்சனைக்காகவும் அல்ல. அப்பொழுது அந்த தோழர் கேட்கிறார். அந்த அமலை நீங்கள் தெரிந்து கொண்டீர்களா? என்று.

நான் பார்த்ததில் உங்களிடத்தில் அப்படி எந்த அமலும் இல்லை. அந்த தோழரும் கூறுகிறார், ஆம் சகோதரரே! இது தான் என்னிடத்தில் இருப்பது. இதை தவிர வேறு பெரிய அமல் என்னிடத்தில் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

அந்த அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் திரும்பிச் செல்லும் பொழுது அந்த அன்சாரி தோழர் அழைக்கிறார். அப்துல்லாஹ்! ஒரு வேளை இதை குறித்து ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருப்பார்களோ, என்னிடத்தில் ஒரு குணம் இருக்கிறது, நான் அதை அறிகிறேன்.

நான் இரவில் தூங்கும் பொழுது என் சகோதரர்களை எல்லாம் மன்னித்து விட்டு நான் தூங்குவேன். இரவில் நான் தூங்குவதற்கு முன்பாக முஸ்லிம்களை குறித்து என் உள்ளத்தை சுத்தமாக்கிக் கொண்டு, என் உள்ளத்தை தூய்மைபடுத்திக் கொண்டு அவர்களை மன்னித்துவிட்டு அவர்களின் விஷயத்தில் எந்த ஒரு அறுவறுப்பையோ, எந்த ஒரு சங்கடத்தையோ, மன சஞ்லத்தையோ வைத்துக் கொள்ளாமல் அவர்களை கொண்டு திருப்தி கொண்டவனாக தூங்குவேன் என்று கூறுகிறார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் கூறுகிறார்கள், ஆம், இது தான், இந்த ஒரு குணத்திற்காக தான் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு நற்செய்தியை கூறியிருக்கலாம்.

அறிவிப்பாளர் :அனஸ் இப்னு மாலிக்  ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 12236.

அதுபோன்று சகோதரர்களே! நம்முடைய உள்ளத்தில் ஏழைகளின் விஷயத்தில் அன்பு இருக்க வேண்டும், எளியவர்களின் விஷயத்தில் அன்பு இருக்க வேண்டும்.

அல்லாஹ் நமக்கு கொடுத்த செல்வத்தை கருமித்தனத்தை கொண்டு நமக்கு மட்டும் என்ற அந்த செல்வத்தை முடக்கிக் கொள்ளாமல்,அதை ஏழை எளியவருக்கு, தேவையுள்ளவர்களுக்கு நாம் கொடுக்கும் பொழுது உள்ளத்தில் ஒரு விசாலமான தன்மை ஏற்படுகிறது. அந்த தன்மை அல்லாஹ்வோடு நம்மை நெருக்கமாக்குகிறது.

இப்படிப்பட்ட உயர்ந்த தன்மைகளை கொண்டு நமது நஃப்ஸிற்கு நாம் தர்பியா கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது,ஒவ்வொரு நாளும் அல்லாஹ் கூறியிருக்கின்ற அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லியிருக்கின்ற உயர்ந்த தன்மைகளில் ஒவ்வொன்றாக பட்டியல் போட்டு,அதிலிருந்து எந்த ஒரு செயலை நாம் கொண்டு வருகிறோம் எந்த ஒரு குணத்தை நாம் கொண்டு வருகிறோம் என்று சோதிக்க வேண்டும்.

அதுபோன்று எந்த தீமைகளை எந்த ஒரு கெட்ட குணங்களை குறித்து அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் எச்சரிக்கை செய்திருக்கிறார்களோ அவற்றை ஒரு பட்டியலிட்டு,அவற்றை நமது உள்ளங்களில், நமது செயல்களில் காணும் பொழுது அதிலிருந்து நம்மை நீக்கிக் கொள்ள வேண்டும் தவ்பா செய்ய வேண்டும்.

அல்லாஹ்விடத்தில் அதற்காக தனிமையில் ஸூஜூதில் கேட்க வேண்டும். யா அல்லாஹ்! இந்த கெட்ட குணம் என்னிடத்தில் இருக்கிறது. நான் என்னை பரிசுத்தப் படுத்த முடியாது.

யா அல்லாஹ்!நான் பலவீனமானவன், நான் எனது நஃப்ஸிற்கு அடிமையாகி விடுகிறேன். என் இச்சைக்கு அடிமையாகி விடுகிறேன். ஷைத்தானுக்கு என் மீது ஆதிக்கம் செலுத்திவிடாதே! எனது நஃப்ஸிற்கு என் மீது ஆதிக்கம் செலுத்தி விடாதே!

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த துஆவை கவனத்தில் வையுங்கள்.

யா அல்லாஹ்! என் காரியம் அனைத்தையும் நீ எனக்கு சீர்படுத்திக் கொடு. ஒரு கண் சிமிட்டும் நேரம் கூட என்னை என் பொருப்பில் விட்டு விடாதே!

இப்படி அல்லாஹ்விடத்தில் மன்றாடும் பொழுது இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக அல்லாஹ் நமது உள்ளங்களை பரிசுத்தப்படுத்துவான். நல்லவர்களின் உள்ளங்களாக நமது உள்ளங்களை மாற்றுவான். நமது உள்ளத்தில் நல்ல குணங்களை, நல்ல தன்மைகளை ஏற்படுத்துவான்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் அந்த பரிசுத்தமான உள்ளத்தை தந்தருள போதுமானவன்.

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ حَدَّثَنِي عَمْرُو بْنُ سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ (سنن ابن ماجه 1883 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِيهِ عَنْ سَهْلٍ قَالَ مَرَّ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا تَقُولُونَ فِي هَذَا قَالُوا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُنْكَحَ وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ وَإِنْ قَالَ أَنْ يُسْتَمَعَ قَالَ ثُمَّ سَكَتَ فَمَرَّ رَجُلٌ مِنْ فُقَرَاءِ الْمُسْلِمِينَ فَقَالَ مَا تَقُولُونَ فِي هَذَا قَالُوا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ لَا يُنْكَحَ وَإِنْ شَفَعَ أَنْ لَا يُشَفَّعَ وَإِنْ قَالَ أَنْ لَا يُسْتَمَعَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا خَيْرٌ مِنْ مِلْءِ الْأَرْضِ مِثْلَ هَذَا (صحيح البخاري 4701 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/