தஸ்கியத்துன் நஃப்ஸ் - மனத்தூய்மை (அமர்வு - 3/4) | Tamil Bayan - 367
தஸ்கியத்துன் நஃப்ஸ் -மனத்தூய்மை
ஜுமுஆ குத்பா தலைப்பு : தஸ்கியத்துன் நஃப்ஸ் -மனத்தூய்மை (அமர்வு 3-4)
வரிசை : 367
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 29-11-2013 | 26-01-1435
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுமாறு அல்லாஹ்வின் பயத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வின் அருளால் மனத்தூய்மையை பற்றி உள்ளங்களை எப்படி சுத்தப்படுத்துவது என்பதை குறித்து தொடர்ந்து சில ஜும்ஆவில் கேட்டு வருகிறோம்.
இந்த உள்ளங்களை சுத்தப்படுத்த வேண்டுமென்றால் குறைகளை விட்டு, பாவ அழுக்குகளை விட்டு அதற்காக ஒரு தனி கவனம், தனி முயற்சி தேவை. அப்படியில்லாமல் என்னுடைய உள்ளம் சுத்தமாக வேண்டுமென்று வெறும் கற்பனையில் இருந்தால் எந்த உள்ளமும் சுத்தமடையாது.
அதற்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டார்கள், முயற்சி செய்தார்கள் என்பதையெல்லாம் பார்த்தோம்.
யார் ஒருவர் தன்னுடைய உள்ளத்தை சுத்தப்படுத்துவதற்கு நினைக்கிறாரோ, முதலில் தன்னிடம் இருக்கின்ற குறைகளை, தன்னிடம் இருக்கின்ற அழுக்குகளை, தன்னிடம் இருக்கின்ற பாவக்கறைகளை அவர் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
நம்மிடத்தில் அந்த அழுக்குகள், பாவங்கள் இருக்கிறனவா? என்று தெரியவே இல்லை என்றால் நாம் எப்படி சுத்தப்படுத்த முடியும்?
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்,உலக மக்களின் உள்ளங்களை சுத்தப்படுத்துவதற்காகவே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய கண்ணியத்திற்குரிய வேதம் அல்குர்ஆனை இறக்கியிருக்கிறான்.
அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒவ்வொரு ஹதீஸும், அவர்களுடைய ஒவ்வொரு சுன்னாவும் உள்ளங்களை சுத்தப்படுத்தக் கூடியது, உள்ளத்தின் அழுக்குகளை சுத்தப்படுத்தக் கூடியது.
ஆகவே, அதிகமதிகம் குர்ஆனை வாசிக்கக் கூடிய மக்களாக, சுன்னாவை வாசிக்கக் கூடிய மக்களாக அதில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்னென்ன கெட்ட குணங்களை பற்றி எச்சரித்திருக்கிறான்?அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னென்ன தீய குணங்களைப் பற்றி எச்சரித்திருக்கிறார்கள்?
என்பதையெல்லாம் ஆராய்ந்து,அது நம்மிடத்தில் இருக்கின்றனவா? என்பதை பரிசோதித்து, அந்த குணங்களை தன்னிடமிருந்து நீக்குவதற்காக முயற்சி செய்வதோடு அல்லாஹ்விடத்தில் அதற்காக பிரார்த்தனையும் செய்ய வேண்டும்.
கண்ணியத்திற்குரிய மார்க்க அறிஞர் இமாம் ஸமீத் இப்னு அஜ்ரான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
ஒவ்வொரு மனிதனும் காலையில் எழுந்தவுடன் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்னால் கண்ணாடியில் முகத்தை பார்க்கிறான். தன் உடையை பார்க்கிறான், அழுக்கு இருக்கிறதா? முகத்தில் கறை இருக்கிறதா? என்று. பிறகு அதற்கேற்ப தன்னை சுத்தப்படுத்துகிறான், அழகுபடுத்துகிறான்.
ஒரு முஃமின் அல்லாஹ்வின் வேதத்தை கண்ணாடியாக எடுத்துக் கொள்வான். முஃமினுக்கு அல்லாஹ் என்னென்ன வர்ணிப்புகளை கூறுகிறானோ, அந்த வர்ணிப்புகளை கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்வான்.
பாவிகளுக்கு என்னென்ன தீய குணங்களை அல்லாஹ் கூறியிருக்கிறானோ அந்த குணங்களை தன்னிடத்தில் கண்டு அதிலிருந்து தன்னை பரிசுத்தப்படுத்திக் கொள்வான்.
ஒரு முஃமினுக்கு அல்லாஹ்வின் வேதம் கண்ணாடி என்று குறிப்பிடுகிறார்கள்.
அடுத்து, எப்போதும் நமக்கு நன்மையை நாடக்கூடிய, நமது குறைகளை சுட்டிக் காட்டி நம்மை திருத்தக்கூடிய, நம்மிடத்தில் சோம்பல், அலட்சியம் இருக்குமேயானால் நம்மை இறைவழிபாட்டில், தீனில் உற்சாகப்படுத்தக் கூடிய நம்மிடத்தில் கவனக்குறைவு இருக்குமேயானால், இறையச்சத்தைக் கொண்டு நமக்கு அறிவுரை சொல்லக் கூடிய, நமக்கு அல்லாஹ்வை நினைவூட்டக்கூடிய, மறுமையை நினைவூட்டக் கூடிய ஒரு நல்ல நண்பரோடு நல்ல தோழமையோடு நாம் இருக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
الدِّينُ النَّصِيحَةُ
மார்க்கம் என்பதே நன்மையை நாடுவது தான். (1)
அறிவிப்பாளர் : தமீமுத்தாரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 82.
நீங்கள் யாரை விரும்புகிறீர்களோ, நீங்கள் யாரை நேசிக்கிறீர்களோ, அவர்களை நீங்கள் விரும்புவது அல்லாஹ்விற்காக இருக்குமேயானால், அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக இருக்குமேயானால் அவர்களிடம் இருக்கின்ற தவறுகளை, குறைகளை அழகிய முறையில் அவர்களிடத்தில் தனிமையில் கூறி அவர்களை சீர் திருத்த முயற்சி செய்ய வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நல்ல நண்பர் நமக்கு கண்டிப்பாக தேவை.
இமாம் மைமுன் இப்னு மெஹ்ரான் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்,
எனக்கு முன்னால் நான் எதை வெறுக்கிறேனோ அதை எனக்கு சொல். என்னிடத்தில் இருக்கின்ற குறைகளை எனக்கு நேராக சொல். நான் அதை வெறுத்தாலும் சரியே. ஏனென்றால், மார்க்கம் என்பது நன்மையை நாடுவது என்றால், ஒரு மனிதருக்கு நீ அறிவுரையை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும், உபதேசத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
சில நேரங்களில் இப்படியும் வரலாம், உபதேசம் செய்யும் பொழுது, அறிவுரை கூறும் பொழுது, நன்மையை நாடும் பொழுது சில நேரங்களில் அவருக்கு பிடிக்காததையும் அவரிடம் குறை இருக்குமேயானால் அதையும் அவரிடத்தில் கூற வேண்டிய, தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வருவான். அப்பொழுது தான் அவன் தன் சகோதரருக்கு நன்மையை நாடினான் என்று பொருள்.
இன்று நமது நிலை, அல்லாஹ்விற்காக ஒரு கனம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்மில் யார் நமக்கு நம்முடைய நல்ல பண்புகளை கூறுகிறார்களோ அவர்களை நேசிக்கிறோம். நமது குறைகளை கூறும் பொழுது நம்மை திருத்த நினைக்கும் பொழுது அவர்களிடமிருந்து முகத்தை திருப்பிக் கொள்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஆகவே, நாம் தர்பியத் செய்ய வேண்டும். நமது உள்ளங்களைசுத்தப்படுத்த வேண்டுமென்றால் அதற்காக மார்க்கத்தை, மார்க்கத்தின் நன்மையை இறையச்சத்தை நாடக்கூடிய நல்ல நண்பரின் தோழமையை நாம் நாட வேண்டும்.
இமாம் முஹம்மது இப்னு வாஸிஃ கூறுகிறார்கள்.
எனக்கு இந்த துன்யாவில் தவறிவிடக் கூடிய எதைப் பற்றியும் எந்த கவலையும் இல்லை. ஆனால், மூன்று விஷயங்களை குறித்து தான் நான் கவலைப் படுகிறேன்.
என்னிடத்தில் ஏதாவது தவறு ஏற்படும் பொழுது, கவனக் குறைவு ஏற்படும் பொழுது, பிழை ஏற்படும் பொழுது என்னை சீர்திருத்தக் கூடிய, என்னை சரி செய்யக் கூடிய, என்னை நேர்படுத்தக் கூடிய ஒரு நண்பன் எனக்கு தவறிவிட்டால் அந்த நண்பனின் இழப்பிற்காக நான் கவலைப்படுவேன்.
ஜமாஅத் தொழுகை எனக்கு தவறிவிட்டால் அதற்காக நான் கவலைப்படுவேன். காரணம், நான் அதை மறந்துவிட்டாலும் கூட, மன்னிக்கப்பட்டு அந்த தொழுகை என்னிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
அந்த தொழுகையை உள்ளச்சமுடைய இமாமிற்கு பின்னால், ஜமாஅத்திற்கு பின்னால் அந்த தொழுகை நிறைவேற்றப்படுமேயானால் அதனுடைய சிறப்புகளை எல்லாம் நான் அடைந்துக் கொள்கிறேன்.
இப்படி ஒரு ஜமாஅத்துடைய தொழுகை எனக்கு தவறிவிட்டால் அந்த இழப்பிற்காக நான் வருத்தப்படுவேன்.
அல்லாஹ்வுடைய ரிஜ்க் எனக்கு கிடைக்கிறது. வேறு யாருக்கும் அந்த ரிஜ்க் எனக்கு கிடைப்பதில் எந்த விதமான உதவி, ஒத்தாசை, உபகாரமும் இல்லை. அது போன்று அந்த ரிஜ்க் ஹலாலான வழியில் கிடைக்கிறது. அல்லாஹ்வும் அது குறித்து என்னை குற்றம் பிடிக்கமாட்டான்.
இப்படிப்பட்ட ஒரு வாழ்வாதாரம் எனக்கு தவறினால் அதற்காக நான் கவலைப்படுவேன். இந்த மூன்று இழப்பிற்காகதான் நான் கவலைப்படுவேன். இதை தவிர வேறு எந்த இழப்பையும் நான் இழப்பாக கருதவில்லை.
இப்படி, தன்னைக் குறித்து எப்படி அவர்கள் பரிசோதித்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.
ஒரு நல்ல நண்பன், தன்னை திருத்தக் கூடிய நண்பனின் நட்பு இழந்துவிட்டால் அதற்காக வருத்தப்பட்டிருக்கிறார்கள். ஜமாஅத் தொழுகை தவறிவிட்டால் அதற்காக வருத்தப்பட்டிருக்கிறார்கள். ஹலாலான ரிஜ்க் அதன் இழப்பு ஏற்பட்டால் அதற்காக வருத்தப்பட்டிருக்கிறார்கள்.
இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் நாம் கண்கானிக்கும் பொழுது தான் நமது உள்ளத்தின் குறைகளை அறிந்து அதை நாம் சுத்தப்படுத்த முடியும்.
இமாம் சுஃப்யான் சவ்ரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.
(இமாம் சுப்யான் சவ்ரி ஹதீஸிலும் ஃபிக்ஹிலும் மிகப் பிரசித்திப் பெற்ற மார்க்க அறிஞர்)
《أدركنا الناس وهم يحبون من قال لأحدهم : أتق الله تعالى وقد صاروا اليوم يتكدرون من ذلك 》
எங்கள் காலங்களில் நாங்கள் எப்படி இருந்தோம் என்றால், எங்களுக்கு மத்தியில் ஒருவர் நேருக்கு நேராக சகோதரரே! அல்லாஹ்விற்கு பயந்துக் கொள்ளுங்கள், இறையச்சத்தை கடைபிடியுங்கள் என்று கூறினால், அந்த மனிதரை தான் நாங்கள் அதிகம் நேசிப்போம்.
ஆனால், இன்றோ ஒரு மனிதரைப் பார்த்து அல்லாஹ்வை பயந்துக் கொள் என்று கூறினால் அதற்காக அவன் வருத்தப்படுகிறான்.
அல்லாஹ்வை பயந்து கொள் என்ற வார்த்தையை கேட்டால் மக்கள் முகம் சுளிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு காலமாக மாறிவிட்டது என்று கூறுகிறார்கள். இதை எதற்காக வேண்டி கூறுகிறார்கள்? யார் நம்மை திருத்துவார்களோ அவர்களோடு இருக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இது குறித்து மிகத் தெளிவாக கூறுகிறார்கள்.
நல்ல நட்பிற்கு உதாரணம் ஒரு கஸ்தூரியை விற்பவர் போன்று. அவரோடு தோழமை கொண்டு அவரிடத்தில் இருப்பதை போன்று. நீ அவரிடத்திலிருந்து அந்த நறுமணத்தை வாங்கலாம் அல்லது அவர் உனக்கு அன்பளிப்பாக அதை தரலாம், இல்லையென்றால் அந்த நறுமணத்தையாவது நுகர்ந்து கொண்டு இருக்கலாம்.
கெட்ட நண்பனுக்கு உதாரணம்,ஒரு இரும்பு வேலை செய்யக் கூடிய கொல்லனை போல. அங்கே அமர்வதே உனக்கு அங்கே அறுவறுப்பான வாடை. அதனுடைய தூசி, அதனுடைய புகை இதனால் உனக்கு கெடுதி தான்.
الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ
எனவே, தான் யாரோடு நட்பு வைக்கிறோம் என்று ஒவ்வொருவரும் பார்த்துக் கொள்ளட்டும். மனிதன் தனது நண்பன் எந்த ஒரு மார்க்கப்பற்றில் இருக்கிறானோ அதில் தான் அவனும் இருப்பான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 4193.
ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே! நமது உள்ளங்களை சுத்தப்படுத்த வேண்டுமென்றால் அதற்காக நல்ல நண்பர்களில் இறையச்சத்தைக் கொண்டு நம்மை நினைவுபடுத்தக் கூடிய நல்ல தோழர்களின் தோழமை நமக்கு தேவை.
அது போன்று தான் நம்மை விரும்பாதவர்கள், அவர்கள் நம்மை பற்றி நமது குறைகளை அறிந்து வைத்திருப்பார்கள்.
நமது நண்பர்கள் சில நேரங்களில் நமது குறைகளை கூறாமல் இருக்கலாம். ஆனால், நம்மை விரும்பாதவர்கள் கண்டிப்பாக நமது நிறைகளை பார்க்காமல் நமது குறைகளை தான் பார்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களையும் நாம் நேசிக்க வேண்டும்.
காரணம்,அவர்களுக்கு நமது குறை தெரியும், அந்த குறைகளை பற்றி அவர்கள் பேசும் பொழுது அன்போடு என்னிடத்தில் இந்த குறை இருக்கிறது, ஜஸாகுமுல்லாஹ் கைரா -அல்லாஹ் அவருக்கு நற்கூலி கொடுக்கட்டும். அவர் என் குறையை அவர் கூறினார்.
என்னை திருத்துவதற்கு அல்லாஹ் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தினான் என்று தனக்கு விரும்பாத, தனக்கு பகைமை காட்டக்கூடியவர்கள், தன்னை பற்றி பேசக்கூடிய தன்னிடத்தில் உள்ள அந்த குறைகளை தெரிந்து அதிலிருந்து தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
கண்ணியத்திற்குரியவர்களே! எந்நெந்த விஷயங்களில் நாம் ஈடுபட்டால் நமது நஃப்ஸை அழுக்குபடுத்தி விடுமோ, நமது உள்ளத்தை அசிங்கப்படுத்தி விடுமோ அந்த தவறான விஷயங்களை எல்லாம் தெரிந்து அதிலிருந்து நாம் விலிகியிருப்பது.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த நஃப்ஸில் இயற்கையாகவே சில விதமான குறைகளை ஏற்படுத்தியிருக்கிறான்.
காரணம், மனிதன் முயற்சி செய்து முயற்சி செய்து அந்த தீமையிலிருந்து அவன் விடுபடும் பொழுது அவனுக்கு இரண்டு விதமான கூலி.
1. தன்னிடத்தில் இருக்கக் கூடிய அந்த குறைகளை அறிந்தான், அதை திருத்துவதற்காக முயற்சி செய்தான் அதற்கு அவனுக்கு கூலி.
2. அதற்கு பதிலாக அவனுடைய உள்ளத்தில் நல்ல குணங்களை கொண்டு வந்ததற்காகவும் அவனுக்கு கூலி கொடுக்கப்படுகிறது.
ஒவ்வொருவரிடத்திலும் ஏதாவது சில தீய குணங்கள் இருக்கும். சிலரிடத்தில் அந்த தீய குணங்கள் மிகைத்திருக்கும், சிலரிடத்தில் குறைவாக இருக்கும்.
பொறாமை, கஞ்சத்தனம், பெருமை கொள்வது, மக்களை மதிக்காமல் இருப்பது அல்லது பொய் பேசுவது இப்படி என்னென்ன தீய குணங்கள் தன்னிடத்தில் இருக்கின்றன என்பதை ஆராய்ந்து அந்த குணங்களிலிருந்து தன்னை சுத்தப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
இதற்காக நாம் நமது வாழ்க்கையில் நேரத்தை ஒதுக்க வேண்டும். நம்மை கண்காணிக்க வேண்டும். எந்த நேரத்தில் நாம் என்ன தவறு செய்கிறோம்? பேச்சில் என்ன தவறு செய்கிறோம், பார்வையில் நாம் என்ன தவறு செய்கிறோம், சிந்தனையில் என்ன தவறு செய்கிறோம், செயல்களில் என்ன தவறு செய்கிறோம் என்று நம்மை நாமே கண்கானித்து அவற்றைக் குறித்து அதிலிருந்து நம்மை சுத்தப்படுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்,
فكذلك النفس والأعمال لا تزكوا حتى يزال عنها ما يناقضها ولا يكون الرجل متزكيًا إلا مع ترك الشر، فإنه يدنس النفس ويدسيها
இப்படித் தான் நஃப்ஸ் மற்றும்அமல்கள். இந்த நல்ல அமல்களின் மூலமாக நஃப்ஸ் சுத்தமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த நல்ல அமல்களுக்கு மாற்றமான தீய குணங்களை விட்டு நஃப்ஸ் தூரமாகும் பொழுது நஃப்ஸ் சுத்தமாகிக் கொண்டே இருக்கிறது. தீமையை விடாமல், நன்மைகளை செய்யாமல் எந்த நஃப்ஸும் சுத்தமாக முடியாது.
இதற்கு சாதாரணமாக ஒரு நாளிலோ, இரண்டு நாள்களிலோ அல்லது படுத்துக் கொண்டு யோசிப்பதால் வந்து விடாது.
இமாம் முஹம்மது இப்னு முன்கதிர் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :
محمد بن المنكدر يقول: "كابدت نفسي أربعين سنة حتى استقامت على طاعة الله"
எனது நஃப்ஸை தர்பியத்து செய்வதற்காக நாற்பது ஆண்டுகள் எனது நஃப்ஸோடு நான் போராடினேன். அப்பொழுது தான் அது ஓரளவுக்கு சரியானது என்பதாக.
நாற்பது ஆண்டுகள் எனது நஃப்ஸோடு போராடினேன். அதனுடைய விருப்பங்களை அடக்குவதில், அதனுடைய இச்சையை அடக்குவதில் தவறான கெட்ட குணங்களிலிருந்து அதை பரிசுத்தப்படுத்துவதில், இப்பொழுது தான் அது ஓரளவிற்கு வந்திருக்கிறது என்று கூறுகிறார்கள்.
மற்றும் ஒரு அறிஞர் கூறுகிறார்கள் :
இந்த நஃப்ஸிற்கு நான் எப்படி தர்பியத்து செய்தேன் என்றால், இந்த நஃப்ஸை வழுக்கட்டாயப்படுத்தி, இந்த நஃப்ஸை பலவந்தப்படுத்தி அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொண்டே இருந்தேன். இபாதத்தில், வணக்க வழிபாட்டில் நான் அதை ஈடுபடுத்தும் பொழுதெல்லாம் அந்த நஃப்ஸ் ஆரம்பத்தில் விரும்பாமல் இருந்தது.
அழுது கொண்டு ஈடுபட்டது. அல்ஹம்துலில்லாஹ், ஒரு நேரம் வந்தது, வணக்க வழிபாட்டில் ஈடுபடும் பொழுது அந்த நஃப்ஸ் சிரித்த முகத்தோடு, மகிழ்ச்சியோடு ஈடுபட ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் ஜமாஅத் தொழுகைக்கு வருவதென்றால், குர்ஆன் ஓதுவதென்றால், தர்மம் கொடுப்பதென்றால், உறவுகளை சேர்ப்பதென்றால், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதென்றால் நஃப்ஸிற்கு பிடிக்காது.
நஃப்ஸிற்கு அது சுமையாக தெரியும், தூரமாக பார்க்கும். இதெல்லாம் என்ன வேலை? இதெல்லாம் உனக்கு தேவையா? என்று கூறும். பொது சேவைகளில் ஈடுபடும் பொழுது, நன்மையான காரியங்களில் ஈடுபடும் பொழுது, இரவு வணக்கத்தில் ஈடுபடும் பொழுது, குர்ஆனை ஓதும் பொழுது அப்பொழுது தான் உடல் வலி வரும், அப்பொழுது தான் தூக்கம் வரும், அப்பொழுது தான் வேலைகளெல்லாம் நினைவுக்கு வரும்.
இப்படி நான் போராடி போராடி, நஃப்ஸை வழுக்கட்டாயப்படுத்தி, உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் சரி, நான் இதில் ஈடுபடுவேன் என்று ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நேரம் வரும்.
இந்த இபாதத்தை விட, அல்லாஹ்வின் இந்த மார்க்கத்தில் ஈடுபடுவதை விட, இந்த நஃப்ஸிற்கு பிடித்தமான ஒன்று துன்யாவில் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு நிலையை அடைய வேண்டும் சகோதரர்களே!
இமாம் இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :
المؤمن العاقل لا يترك لجامها ، ولا يهمل مقودها ، بل يُرخي لها في وقت والطول بيده
ஒரு முஃமின் தனது நஃப்ஸை எப்படி கட்டுப்பாட்டில் வைத்திருப்பான் என்றால் குதிரை ஓட்டக் கூடியவன் அந்த குதிரையின் கடிவாளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை போன்று.
நேரான பாதையில் சரியாக சென்று கொண்டிருக்கும் பொழுது கடிவாளத்தை சற்று இடைவெளி விட்டு நெருக்காமல் வைத்திருப்பான். அது எங்கு நேரான பாதையிலிருந்து சற்று விலகுகிறது என்று தெரிய வருகிறதோ இலேசாக இழுப்பான். அப்படி இலேசாக இழுக்கும் பொழுதே திரும்பி விட்டால் அப்படியே அதை விட்டு விடுவான்.
இல்லை, மீண்டும் மீண்டும் அது ஒரு தவறான பாதையில் அல்லது கோணலான பாதையில் அல்லது பாதையின் ஓரத்திற்கு செல்கிறது என்றால், அதை வழுக்காட்டாயப்படுத்தி அதை இறுக்கி அழுத்தமாக இழுப்பான்.
அப்படிதான் நஃப்ஸோடு நாமும் நடந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் இதை திளைத்திருக்கச் செய்ய வேண்டும்.
அந்த வணக்க வழிபாட்டில் திளைத்திருக்கச் செய்யும் பொழுது அந்த நஃப்ஸை அதற்குரிய உரிமைகளோடு நடந்து கொள்வது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :
وَإِنَّ لِنَفْسِكَ عَلَيْكَ حَقًّا
உனது நஃப்ஸிற்கு உன் மீது கடமை இருக்கிறது, உனது கண்ணிற்கு உன் மீது கடமை இருக்கிறது, உன் விருந்தாளிக்கு உன் மீது கடமை இருக்கிறது. உன் குடும்பத்தாருக்கு உன் மீது கடமை இருக்கிறது. (2)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5669.
இந்த கடமைகளெல்லாம் பேணி அந்த நஃப்ஸை வணக்க வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். எங்கே வணக்க வழிபாட்டில் கொஞ்சம் சோம்பேறித் தனம் காட்டுகிறதோ அங்கே கொஞ்சம் சுண்டி இழுப்பது.
சில நேரங்களில் நஃப்ஸ் பிடிவாதமாக அங்கே போகலாம், இங்கே போகலாம், அதை பார்க்கலாம், இதை பார்க்கலாம், அதை பேசலாம், இதை பேசலாம் என்று பாவத்தின் பக்கம் பிடிவாதம் காட்டும் பொழுது, அந்த நஃப்ஸை கடுமைகாட்டி நேர்வழியின் பக்கம் வழுக்கட்டாயமாக இழுக்க வேண்டும்.
ஏனென்றால், நஃப்ஸ் நம்முடையது. வேறு யாரின் மீது நாம் வழுக்கட்டாயம் காட்டவில்லை. இந்த நஃப்ஸிற்கு இப்பொழுது பாவத்தில் நாம் அடிபணிந்தோம் என்றால் இந்த நஃப்ஸ் நாளை நம்மை நரக நெருப்பில் தள்ளி விடும், நம்மை அல்லாஹ்வின் தண்டனையில் தள்ளி விடும். ஆகவே, கடுமையாக இந்த நஃப்ஸோடு நடந்துக் கொள்வது.
இமாம் இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :
கண்ணியத்திற்குரியவர்களே! அவருடைய இந்த கூற்றைப் பாருங்கள். தனது நஃப்ஸோடு இரண்டாமவரிடத்தில் பேசுவதை போன்று பேசி தனது நஃப்ஸை எப்படி தர்பியத் செய்கிறார்கள்.
நான் நஃப்ஸை தர்பியத் செய்ய நினைத்த பொழுது சில நேரங்களில் நான் வெற்றி பெற்று விடுகிறேன். ஆனால், சில நேரங்களில் நஃப்ஸ் என்னை மிகைத்து விடுகிறது.
என்னை நஃப்ஸ் மிகைக்கும் பொழுதெல்லாம் அந்த நஃப்ஸிடத்தில் நான் கூறுகிறேன், என் நஃப்ஸே! உனக்கு என்ன கேடு ஏற்பட்டது! கொஞ்சம் நான் சொல்வதை புரிந்து பார், உனக்கு ஒன்று விருப்பமாக இருக்கிறது. ஆனால், அது சந்தேகத்திற்குரியது. ஒரு செல்வத்தை நீ அடைய நினைக்கிறாய், ஆனால், அந்த செல்வத்தின் வழியோ ஹராமா? ஹலாலா? என்று சந்தேகத்திற்குரியது.
அப்படி சந்தேகத்திற்குரிய வழியில் அந்த செல்வத்தை அடைந்து விட்டாய் என்று வைத்துக் கொள். அதை நன்மையான வழியில் தான் நீ செலவு செய்வாய், அல்லாஹ்விற்காக அதை தர்மம் செய்துவிடுவாய் என்றாவது உன்னிடத்தில் உறுதி இருக்கிறதா? என்றால் இல்லை.
செல்வம் சேர்க்கின்ற வரை என்னென்னவோ நல்ல எண்ணங்களை பலர் வைப்பார்கள். ஆனால், சேர்ந்ததற்கு பிறகு தான் எத்தனை நல்லெண்ணங்களை வைத்தார்களோ அத்தனையும் மறந்துவிடுவார்கள்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இப்படிப்பட்டவர்களை குறித்து முனாஃபிக்குகள் என்று அல்குர்ஆனில் கூறுகிறான்.
وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ (75) فَلَمَّا آتَاهُمْ مِنْ فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ
அவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள், ‘‘அல்லாஹ் தன் அருளைக் கொண்டு நமக்கு ஏதும் கொடுத்தால் நிச்சயமாக நாம் (அதை) நல்வழியில் (தாராளமாக) தானம் செய்து, நிச்சயமாக நாம் நல்லவர்களாகவும் ஆகிவிடுவோம்'' என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தனர். அவன் (அவ்வாறு) அவர்களுக்குத் தன் அருட்கொடையை அளித்த பொழுது, அவர்கள் கஞ்சத்தனம் செய்து (தங்கள் வாக்குறுதியிலிருந்து) திரும்பி விட்டனர். அவ்வாறு புறக்கணிப்பது அவர்கள் வழக்கமாகவும் இருந்து வருகிறது. (அல்குர்ஆன் 9 : 75,76)
அப்படியென்றால் உண்மையாளர்கள் யார்? நல்லவர்கள் யார்? தக்வாவுடையவர்கள் யார்? யார், அல்லாஹ் தனக்கு கொடுத்திருப்பதிலிருந்து தன்னால் முடிந்ததை கொடுக்கிறார்களோ, அவர்கள் தான் உண்மையாக நல்லவர்கள். அவர்கள் தான் உண்மையில் நல்லெண்ணம் கொண்டவர்கள். அவர்கள் தான் உண்மையில் ஸதகா கொடுப்பவர்கள்.
உங்களிடத்தில் நூறு ரூபாய் இருக்கிறதா? ஜந்து ரூபாயை செலவழித்துப் பழகுங்கள். உங்களிடத்தில் ஆயிரம் ரூபாய் இருக்கிறதா? ஒரு ஜம்பதை செலவழித்துப் பாருங்கள்.
ஆனால், நாம், அல்லாஹ் எனக்கு லட்சமாக கொடுக்கட்டும். இன்னும் அதிகமாக கொடுக்கட்டும். அப்படி கொடுத்தால் நானும் அதை செலவு செய்கிறேன் என்று சொல்கிறோம்.
கண்ணியத்திற்குரியவர்களே! இது முனாஃபிக்குகள் அல்லாஹ்விடத்தில் கொடுக்கக் கூடிய வாக்குறுதி. முஃமின், கடன்பட்டிருந்தாலும் கூட தன்னிடத்தில் ஒரு யாஸகன் வரும் பொழுது தன்னிடத்தில் தனது தேவைக்கு ஏதாவது இருக்குமேயானால் அதிலிருந்து கொஞ்சமாவது கொடுப்பான்.
செல்வத்தின் தேவை தனக்கு இருந்தும் அதை பிறருக்கு கொடுப்பான். இது ஈமானுடைய நிலை. அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அந்த நிலையை நமக்கு தந்தருள்வானாக!
மேலும் இமாம் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள், அப்படி அந்த நஃப்ஸிடத்தில் கூறிய பொழுது அப்படி முடியாது என்று அது கூறியது.
செலவழிக்காமல் நீ அந்த செல்வத்தை வைத்துக் கொள்கிறாய். என்ன ஆகும்? மரணத்தருவாயில் நீ அந்த செல்வத்தை உன்னோடு கப்ருக்காவது கொண்டு போக முடியுமா? அதுவும் கொண்டு போக முடியாது.
சந்தேகமான வழிகளில், ஹராமான வழிகளில், அல்லாஹ்விற்கு பிடிக்காத வழிகளில் செல்வத்தை சேகரித்தாய், அல்லாஹ்வை நீ அஞ்சவில்லை.
அந்த செல்வத்தை மவ்த்துடைய நேரத்திலாவது உன்னோடு கப்ருக்கு கொண்டு போவதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா? என்றால், அதுவும் கொண்டு போக முடியாது. பிறருக்கு நீ விட்டு விட்டு செல்லப் போகிறாய். அப்படியென்றால் நீ எதை உன்னோடு கொண்டு போக போகிறாய்? பாவத்தை தவிர நீ வேறு எதையும் நீ கொண்டு போக போவதில்லை.
இப்படி அல்லாஹ்வின் அச்சத்தை தடுக்கக் கூடிய, பாவத்தில் உன்னை தள்ளக் கூடிய இந்த செல்வம் உனக்கு தேவையா? இந்த வசதி உனக்கு தேவையா? விட்டு விடு
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நீ கேட்கவில்லைய?
ليس أحد يدع من الدنيا شيئا إلا عوضه الله خيرا من ذلك
நீங்கள் ஒன்றை அல்லாஹ்விற்காக விட்டால், ஏதாவது ஒன்று இழக்கிறது என்றால் உங்களுக்கு கண்டிப்பாக அதை விட சிறந்ததை அல்லாஹ் கொடுப்பான்.
ஒரு செல்வத்தை எந்த ஒரு வசதியையோ இதில் அல்லாஹ்வின் திருப்தியில்லை என்பதற்காக நாம் அதை விட்டால், அதை விட சிறந்ததை அல்லாஹ் கொடுப்பான் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்.
நூல் : பைஹகீ, எண் : 5509.
இப்படி நஃப்ஸோடு பேசி பேசி அந்த நஃப்ஸை அவர்கள் தர்பியத் செய்கிறார்கள்.
இந்த நஃப்ஸிடத்தில் எப்படி கெட்ட குணங்களை பற்றி நாம் ஆராய்ந்தோமோ, அது போன்று நல்ல குணங்கள் என்னென்ன என்பதையும் நாம் ஆராய வேண்டும்.
எந்த குணங்களை அல்லாஹ் விரும்புகிறான்?அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விரும்புகிறார்கள்? என்பதையும் நாம் கற்றுகொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு பொறுமை, சகிப்புத்தன்மை, பிறருக்கு கொடை கொடுப்பது, பணிவாக இருப்பது, தன்னை அடக்கமாக வைத்துக் கொள்வது, மற்றவர்களை மதிப்பது இது போன்ற நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டு அமல் செய்ய வேண்டும்.
இன்று சிலர், புத்தகங்களை படித்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். எவற்றை படிக்கிறோமோ படிக்கின்ற நல்ல விஷயங்களுக்காக தன்னிடத்தில் ஒரு போராட்டத்தை உண்டாக்குவது. தன்னை பயிற்சிக்கு முற்படுத்துவது.
உதாரணத்திற்கு,ஒரு பெரிய வீரருடைய புத்தகத்தை படிக்கிறார். அவர் வீரராகி விட முடியுமா?ஒரு துணிவுள்ள ஒருவரை பற்றிய வரலாறை படிக்கிறார். அவர் துணிவுள்ளவராகி விட முடியுமா? ஒரு அறிஞரை பற்றிய வரலாறை படிக்கிறார், அவர் அறிஞராக ஆகிவிட முடியுமா? அதற்காகவும் பயிற்சி தேவை.
இல்மை தேட வேண்டும், அந்த வீரத்தை கற்க வேண்டும். அந்த துணிவை அவர் அடிப்படையாக வாழ்க்கையில் எதார்த்தமாக படிக்க வேண்டும்.
அப்படி தான் அந்த நன்மையான விஷயங்கள். எதை படித்தாரோ அந்தந்த சந்தர்பங்களில் அந்த நல்ல குணங்களை தன்னிடத்தில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்யாமல் அந்த நல்ல குணங்கள் வராது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்,
உங்களுக்கு சகிப்பத்தன்மை வேண்டுமா? அந்த சகிப்புத்தன்மையை நீங்கள் அடைய முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு சகிப்புத்தன்மையை ஏற்படுத்துவான்.
நீங்கள் பொறுமைக்காக வேண்டி ஒரு பயிற்சி எடுத்தால், கஷ்டப்பட்டு பொறுமையை நீங்கள் வரவழைக்க முயற்சி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு பொறுமையை கொடுப்பான்.
நல்லொழுக்கத்தை கஷ்டப்பட்டு சிரமப்பட்டு அதை நீங்கள் எடுக்க முயற்சி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு நல்லொழுக்கத்தை தருவான்.
சில நேரங்களில் மனைவி தவறு செய்கிறாள். அந்த தவறு மார்க்க அறிவில் இல்லாத தவறாக இருக்க வேண்டும். மார்க்க அடிப்படையில் உள்ள தவறாக இருக்குமேயானால் மார்க்க அறிஞர்களின் வழிகாட்டுதலோடு எப்படி சரி செய்ய வேண்டும்? என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.
நம்மில் பலருக்கு மார்க்க ரீதியான தவறுகளை விட்டுவிடுவார்கள். ஆனால், தனது நஃப்ஸ் சார்ந்த தவறுகளாக இருக்கட்டும், அதற்காக ஒரு கியாமத்தையே கொண்டு வந்துவிடுவார்கள்.
தொழுகை இல்லாத மனைவியாக இருப்பாள் அல்லது தொழுகையில் அலட்சியம் செய்வாள். அதை கண்டு கொள்ளமாட்டார்கள்.
ஹிஜாபில் அலட்சியம் செய்வாள், அதை கண்டு கொள்ளமாட்டார்கள். பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கமாட்டாள், பிள்ளைகளோடு பார்க்கக் கூடாத விஷயங்களை பார்ப்பாள். அதையெல்லாம் விட்டுவிடுவார்கள்.
ஆனால், தனது ஹக்கில் அந்த பெண் குறை செய்யும் பொழுது இவருக்கு கோபம் வரும். மார்க்கம் என்ன சொல்கிறது? அல்லாஹ்வுடைய விஷயத்தில் கோபப்படு.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹாஅவர்கள் கூறுகிறார்கள் :
நபியவர்கள் கோபப்பட்டார்கள் என்றால், அல்லாஹ்விற்காக தான் கோபப்படுவார்கள். தனக்காக வேண்டி அவர்கள் ஒருகாலமும் எந்த ஒரு நேரத்திலும் பலி வாங்கியதே கிடையாது.
சில நேரங்களில் தனது பிள்ளைகள், மனைவி, தாய், தந்தை, சகோதரன் என்று உலக விஷயங்களில் தன்னுடைய நஃப்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர்கள் ஒரு தவறை செய்யும் பொழுது, தனக்கு பிடிக்காததை செய்யும் பொழுது கோபம் வரும்.
உடனே, நாம் அதை கட்டுப்படுத்த வேண்டும். பொறுமையாக இரு, என்று அந்த கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
அதை அடக்க வேண்டும், இப்படி ஒவ்வொரு நேரத்தை எந்த நேரத்தில் நாம் தவறு செய்கிறோம் என்பதை கண்கானித்து, உதாரணத்திற்கு வியாபாரம் செய்கிறோம். நிர்பந்தமான ஒரு சூழல் ஏற்படுகிறது. ஒரு சில பொய்களை கலந்தால் அந்த பொருள்களை விட்டு விடலாம். கொஞ்சம் ஏதாவது கூடக் குறைய பேசினால் அந்த பொருளை விற்று விடலாம் என்று.
உடனே நஃப்ஸிற்கு கூற வேண்டும்; அல்லாஹ்வை பயந்து கொள், இப்படி நீ இதை விற்பதை விட அதை விற்காமல் இருப்பது மறுமையில் உனக்கு சிறந்தது. உடனே பொய்யிலிருந்து நாம் பாதுகாக்க வேண்டும்.
இப்படி ஒவ்வொரு நேரத்திலும் நாம் செய்யக் கூடிய தவறு என்ன என்பதை நாம் அலசி ஆராயும் பொழுது, அந்த அல்லாஹ்வுடைய நல்ல குணங்களை கொண்டு வர முடியும்.
இப்படி கண்ணியத்திற்குரியவர்களே! இந்த ஈமானுடைய குணங்கள் அக்லாக் உடைய குணங்களை அறிந்து அவற்றை அடைவதற்காக நாம் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நேரத்திலும் ஏற்படக் கூடிய அந்த நல்ல குணங்களை நம்முடைய வாழ்க்கையில் நமது உள்ளத்தில் கொண்டு வர வேண்டும்.
இமாம் இப்னுல் ஜவ்சி ரஹிமஹுல்லாஹ் மேலும் கூறுகிறார்கள் :
எந்த அளவு ஒரு பொருள் உயர்ந்ததாக இருக்கிறதோ அதை அடைவதற்குரிய காலமும் நீண்ட காலமாக இருக்கும். அதற்கும் ஒரு பெரிய முயற்சி தேவை.
கல் இருக்கிறது, அது ஒரு சாதாரண கல். ரோடுகளில் நாம் எடுத்துவிடலாம். ஒரு பெரிய மாணிக்க கல் இருக்கிறது. வைரக்கல் இருக்கிறது. அதை சாதாரணமாக அடைய முடியாது. இப்படி ஒன்று உயர்ந்ததாக இருக்குமேயானால் அதை அடைவதற்கு ஒரு நீண்ட காலம் தேவை, அதை அடைவதற்கு ஒரு முயற்சி தேவை.
அல்லாஹ்விடத்தில் இந்த உயர்ந்த குணங்கள், பரிசுத்தமான நஃப்ஸ் அவ்வளவு உயர்ந்தது. அப்படிப்பட்ட அந்த நஃப்ஸை நாம் அடைய வேண்டுமென்றால் அதற்காக ஒரு நீண்ட முயற்சி செய்ய வேண்டும். அதற்கு ஒரு நீண்ட காலம் தேவை.
யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாறை பாருங்கள்.
சிறு வயதில் கிணற்றிலிருந்து எடுக்கப்படுகிற அவர் கொண்டு செல்லப்பட்டு, மிஸ்ரின் கடைத் தெருவில் அடிமையாக விற்கப்பட்டு,ஒரு அடிமையாக வீ்ட்டின் வேலைக்காரர்களாக வாங்கப்பட்டு, அங்கே பல கஷ்டங்களை அனுபவித்து, செய்யாத ஒரு குற்றத்திற்காக பழி சுமத்தப்பட்டு, சிறைச்சாலையில் சென்று, இவ்வளவு நீண்ட காலத்தில் பொறுமையாக, சகிப்புத் தன்மையுடையவராக, ஒழுக்கம் உள்ளவராக, இறையச்சம் உடையவராக, அல்லாஹ்வை பயந்தவராக இருந்ததற்கு பிறகு அங்கே அவருக்கு அந்த நற்பெயர் சொல்லப்படுகிறது.
يُوسُفُ أَيُّهَا الصِّدِّيقُ أَفْتِنَا
எங்களில் மிகச் சிறந்த உண்மையாளரே! மிகச் சிறந்த வாய்மையாளரே! எங்களுடைய பிரச்சனையில் எங்களுக்கு தீர்ப்பு கூறுங்கள் என்று. (அல்குர்ஆன் 12 : 46)
எவ்வளவு நீண்ட சோதனைகளில் அல்லாஹ்வின் அச்சத்தின் படி அவர்கள் வாழ்ந்ததற்கு பிறகு,இந்த பெயரை அந்த மக்கள் அவர்களுக்கு சொல்கிறார்கள்.
இப்படி தான் கண்ணியத்திற்குரியவர்களே! நஃப்ஸிற்காக வேண்டி,அந்த நஃப்ஸை தர்பியத் செய்வதற்காக வேண்டி,ஒரு தனி நேரத்தை எடுக்க வேண்டும். அதற்காக கவனத்தை செலுத்த வேண்டும், அதற்காக முயற்சி செய்ய வேண்டும்.
அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமது உள்ளங்களை பரிசுத்தமான நல்ல உள்ளங்களாக ஆக்கி அருள்வானாக! அவற்றில் உள்ள குறைகளை, பாவ அழுக்குகளை சுத்தப்படுத்தி,நல்லவர்களை அமைதி பெற்ற நிம்மதி பெற்ற ஆன்மாவை அடைந்தவர்களில் அல்லாஹ் என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ الْمَكِّيُّ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ قُلْتُ لِسُهَيْلٍ إِنَّ عَمْرًا حَدَّثَنَا عَنْ الْقَعْقَاعِ عَنْ أَبِيكَ قَالَ وَرَجَوْتُ أَنْ يُسْقِطَ عَنِّي رَجُلًا قَالَ فَقَالَ سَمِعْتُهُ مِنْ الَّذِي سَمِعَهُ مِنْهُ أَبِي كَانَ صَدِيقًا لَهُ بِالشَّامِ ثُمَّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ سُهَيْلٍ عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ عَنْ تَمِيمٍ الدَّارِيِّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدِّينُ النَّصِيحَةُ قُلْنَا لِمَنْ قَالَ لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ (صحيح مسلم 82 -)
குறிப்பு 2)
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ حَدَّثَنَا حُسَيْنٌ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَقُومُ اللَّيْلَ وَتَصُومُ النَّهَارَ قُلْتُ بَلَى قَالَ فَلَا تَفْعَلْ قُمْ وَنَمْ وَصُمْ وَأَفْطِرْ فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّكَ عَسَى أَنْ يَطُولَ بِكَ عُمُرٌ وَإِنَّ مِنْ حَسْبِكَ أَنْ تَصُومَ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ فَإِنَّ بِكُلِّ حَسَنَةٍ عَشْرَ أَمْثَالِهَا فَذَلِكَ الدَّهْرُ كُلُّهُ قَالَ فَشَدَّدْتُ فَشُدِّدَ عَلَيَّ فَقُلْتُ فَإِنِّي أُطِيقُ غَيْرَ ذَلِكَ قَالَ فَصُمْ مِنْ كُلِّ جُمُعَةٍ ثَلَاثَةَ أَيَّامٍ قَالَ فَشَدَّدْتُ فَشُدِّدَ عَلَيَّ قُلْتُ أُطِيقُ غَيْرَ ذَلِكَ قَالَ فَصُمْ صَوْمَ نَبِيِّ اللَّهِ دَاوُدَ قُلْتُ وَمَا صَوْمُ نَبِيِّ اللَّهِ دَاوُدَ قَالَ نِصْفُ الدَّهْرِ(صحيح البخاري 5669 -)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/