தஸ்கியத்துன் நஃப்ஸ் - மனத்தூய்மை (அமர்வு - 2/4) | Tamil Bayan - 367
தஸ்கியத்துன் நஃப்ஸ் - மனத்தூய்மை
ஜுமுஆ குத்பா தலைப்பு : தஸ்கியத்துன் நஃப்ஸ் - மனத்தூய்மை (அமர்வு 2-4)
வரிசை : 367
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 22-11-2013 | 19-01-1435
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை முழுமையாக பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தை உள்ளத்தில் எந்நேரமும் நிலைத்திருக்க செய்யுமாறு எனக்கும்உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவுபடுத்தியவனாக ஆரம்பம் செய்கிறேன்.
உள்ளத்தை பற்றியும், உள்ளத்தில் ஏற்படக்கூடிய ஊசலாட்டங்கள், அந்த உள்ளத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை பற்றியும் சென்ற ஜும்ஆவில் சிறிது பார்த்தோம்.
இந்த உள்ளத்தை நாம் சுத்தப்படுத்தியே ஆகவேண்டும். இந்த உள்ளத்தை சுத்தப்படுத்தாமல் நமது ஈமானோ, நமது அமல்களோ, அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப் படாது.
தஸ்கியா என்று ரப்புல் ஆலமீன் அவனுடைய கண்ணியத்திற்குரிய புத்தகம் அல்குர்ஆனில் உளத்தூய்மையை பற்றி குறிப்பிடுகின்றான்.
இந்த தஸ்கியா அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த அடிப்படையில் தனது தோழர்களை பரிசுத்தப் படுத்தினார்களோ அந்த அடிப்படையில் பரிசுத்த படுத்தினால் தான் உள்ளம் சுத்தமடையும்.
அப்படிப்பட்ட தஸ்கியா தான் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படும். தஸ்கியா பரிசுத்த படுத்துதல் என்றால், சிலர் சூஃபிஸத்தையோ, அல்லது தர்காவில் செல்வதையோமக்கள் எண்ணத்தில் கொண்டு வருவார்கள்.
ஆனால், பெயர்கள் எதுவாக இருந்தாலும், சரி, அதற்கு அல்லாஹ்விடமிருந்தும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்ல’ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்தும் தெளிவான வழிகாட்டுதல் இல்லையென்றால் அவை அனைத்தும் மறுக்கப்பட வேண்டிய, அங்கீகரிக்கப்பட முடியாத செயல்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ
யார் நமது மார்க்கத்தில் நாம் கட்டளையிடாததை, நாம் சொல்லாததை புதிதாக கொண்டு வருவார்களோ, அவையெல்லாம் மறுக்கப்பட வேண்டியவை என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 2499.
ஆகவே, தஸ்கியாவில் சிறந்த தஸ்கியா முறை,எதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடைப்பிடித்தார்களோ,எதைக் கொண்டு தங்களது தோழர்களுக்கு அந்தத் தஸ்கியாவை, தர்பியாவை கொடுத்தார்களோ அதுதான்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் அனுப்பியதே அதற்காகத்தான்.
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில் உள்ள ஒருவரை அவன் (தன்) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தபோதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். (அல்குர்ஆன் 62 : 2)
கண்ணியத்திற்குரியவர்களே! நாம் நமது உள்ளத்தை தஸ்கியா –பரிசுத்தப் படுத்த வேண்டும் என்றால், இந்த உள்ளத்தின் தன்மைகளை புரிய வேண்டும். இந்த உள்ளத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை புரிய வேண்டும். இந்த உள்ளத்தை அல்லாஹ் எந்த இயற்கையின் மீது அமைத்து இருக்கிறான் என்பதை புரிய வேண்டும்.
பொதுவாக நமது நஃப்ஸ், மனிதனுக்கு தீமையை ஏவக் கூடியது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இப்படித்தான் இந்த நஃப்ஸை அறிமுகப்படுத்துகின்றான்.
وَمَا أُبَرِّئُ نَفْسِي إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوءِ إِلَّا مَا رَحِمَ رَبِّي إِنَّ رَبِّي غَفُورٌ رَحِيمٌ
‘‘நான் (தவறுகளிலிருந்து) தூய்மையானவன்'' என்று என்னை பரிசுத்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், என் இறைவன் அருள் புரிந்தாலன்றி மனிதனின் சரீர இச்சை, பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கிறது. நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவன் மகா கருணையாளன் ஆவான்'' (என்றார்.) (அல்குர்ஆன் 12 : 53)
யாரும் தனக்குத் தானே உறுதியிட்டு சொல்ல முடியாது, எனது நஃப்ஸ் எனக்கு கட்டுப்படும் என்று.நான் எனது நஃப்ஸை எனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறேன் என்று யாரும் பெருமை கொள்ள முடியாது. அது மனிதனுக்கு தீமையை தூண்டிக்கொண்டே இருக்கும். அதனுடைய வலையில் மனிதர்கள் சிக்கி கொண்டே இருப்பார்கள்.
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹு அவர்கள், ஒரு அழகான தலைப்பை வைக்கிறார்கள்.
المعصوم من عصمه الله
பாதுகாக்கப்பட்டவர் யார் என்றால்,யாரை அல்லாஹ் பாதுகாத்தானோ அவர்கள் தான் பாதுகாப்பு பெற்றவர்.
மனிதன் தனது எண்ணத்தால், நான் தூய்மையாகி விட்டேன், நான் பாதுகாப்பு பெற்று விட்டேன் என்று சொல்வதால் அவர் பாதுகாப்பு பெற்றவராக ஆக முடியாது. அல்லாஹ் அவனை பாதுகாத்தால் தவிர.
எனவே, இந்த நஃப்ஸ் மனிதனுக்கு தீமையை தூண்டிக் கொண்டே இருக்கும். கெட்ட விஷயங்களின் பக்கம் அவனை அழைத்துக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட ஒரு நஃப்ஸை அல்லாஹ் வைத்திருக்கின்றான்.
நஃப்ஸுடைய இரண்டாவது நிலை இருக்கிறது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த இரண்டாவது நிலையை பற்றி சொல்லும் பொழுது, அதை النفس اللوامة-நஃப்ஸ்ல்லாமா என்று குறிப்பிடுகிறான்.
இது என்ன நஃப்ஸ்? இது மனிதனுக்கு அவன் தீமை செய்தால் அவனை பழிக்கும். நீ செய்தது தவறு என்று அவனுக்கு உணர்த்தும். அவனுடைய கெட்ட காரியங்களை கூறி அவனை வருத்தமடையச் செய்யும். அவன் செய்த தீமைகளை அவனுக்கு நினைவூட்டி அவனுக்கு அவனுடைய உள்ளத்தில் வருத்தத்தை ஏற்படுத்தும்.
இந்த நஃப்ஸ் ஒரு முஃமினுடைய நஃஸாக இருக்கும். ஒரு முஃமினுடைய ஆரம்பக்கட்ட நிலையில் இருக்கின்ற நஃப்ஸாக இருக்கும்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த நஃப்ஸை கண்ணியப்படுத்துகின்றான். காரணம் என்ன தெரியுமா? இந்த நஃப்ஸ் தான் அடுத்து ஈமானில் அவன் உயர்வதற்கு அல்லாஹ் விரும்பக்கூடிய நஃப்ஸாக நஃப்ஸே முத்மயின்னாவாக மாறுவதற்கு வழி வகுக்கும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ (1) وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ
மறுமை நாளின் மீது நான் சத்தியம் செய்கிறேன். மனிதனை பழிக்கின்ற ஆத்மாவின் மீது நான் சத்தியம் செய்கிறேன். (அல்குர்ஆன் 75 : 1,2)
பழிக்கின்ற ஆத்மாவை அல்லாஹ் உயர்வாக சொல்கின்றான். காரணம்,பழிக்கின்ற இந்த நஃப்ஸ்,மனிதன் தீமையை செய்துவிட்டால் அவன் கடந்த காலத்தில் ஏதாவது பாவம் செய்திருந்தால்,அவனுக்கு அந்தப் பாவங்களை நினைவூட்டி அவனை வருத்தம் அடையச் செய்யும்.
ஆனால்,இந்த நஃப்ஸ் ஒரு பலவீனமான நஃப்ஸ் தான்.
சில நேரங்களில்,இறை வழிபாட்டில் சென்றால்,சில நேரங்களில் அந்த நஃப்ஸ் பலவீனமடைந்து மன இச்சைகளில் ஆசைகளில் சென்றுவிடும்.சில நேரங்களில் கடமைகளை சரியாக செய்யும் என்றால்,சில நேரங்களில் கடமைகளை பாழாக்கிவிடும். இப்படி தடுமாறிக் கொண்டே இருக்கும்.
இமாம் முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கம் சொல்லும் போது.
இந்த நஃப்ஸ்க்கு விளக்கம் என்னவென்றால்,தாம் செய்யாத நல்ல காரியங்களை நினைத்து இந்த நஃப்ஸ் வருத்தப்பட்டு கொண்டே இருக்கும். தான் செய்த தீமைகளை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட நஃப்ஸை தான் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்.
இது ஒரு முஃமினுடைய நஃப்ஸ்.ஒரு முஃமின் எதை செய்தாலும் சரி,நான் ஏன் இதைச் செய்தேன்? நான் இதை செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லவா? நான் ஏன் இப்படி பேசினேன்? நான் ஏன் இந்த இடத்திற்கு சென்றேன்? என்று, தன்னைத்தானே விசாரித்துக் கொண்டு இருப்பான். தனது ஒவ்வொரு செயலை குறித்தும் அவன் விசாரித்து கொண்டே இருப்பான்.
இந்த செயலை நான் எந்த எண்ணத்தில் செய்தேன்? அல்லாஹ்விற்காக செய்தேனா? மறுமைக்காக செய்தேனா? பேருக்காக செய்தேனா? புகழுக்காக செய்தேனா? என்று ஆகுமாக்கப்பட்ட காரியங்களாக இருந்தாலும் கூட தன்னை விசாரித்துக் கொண்டே இருப்பான்.
ஒரு காஃபிர் -மறுமையை நம்பாதவன், ஆஹிரத்தை நம்பாதவன், அல்லாஹ்வை நம்பாதவன், ஈமானை அறியாதவன், அவன் தனது நஃப்ஸை எப்போதுமே விசாரிக்கவே மாட்டான்.
அந்த நஃப்ஸ் எப்படி சரிகிறதோ, அந்த வழியில் அவன் சென்று கொண்டே இருப்பான். தான் செய்த தீமையை நினைத்து அவன் வருத்தப்படவும் மாட்டான். தனக்கு தவறிவிட்ட நன்மைகளை நினைத்தும் வருத்தப்படவும் மாட்டான்.
ஆனால், ஒரு முஃமின் அப்படி அல்ல. இமாம் கஸாலி ரஹிமஹுல்லாஹு கூறுகின்றார்கள்.
எப்போதும் நாம் அந்த நஃப்ஸுடைய குறைகளை கூறி அந்த நஃப்ஸை பழித்துக் கொண்டு இருக்கும்போது, ஒவ்வொருவரும் என் உள்ளத்தில் இந்த குறை இருக்கிறது. உன்னிடத்தில் இந்த தவறு இருக்கிறது. உன்னிடத்தில் இந்தப் பாவம் இருக்கிறது. உன்னிடத்தில் இப்படிப்பட்ட கெட்ட குணம் இருக்கிறது என்று நாம் நம்மை பழித்துக்கொண்டு இருக்கும்போது, அப்போதுதான் அந்த நஃப்ஸ் நஃப்ஸே முத்மயின்னா -அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்லாஹ்வின் இபாதத்தில் நிம்மதி அடைந்த நஃப்ஸாக மாறிவிடும்.
இமாம் சொல்கிறார்கள் :
உனது உள்ளத்திற்கு அறிவுரை கூறுவதை விட்டும், உனது நஃப்ஸை, உனது உள்ளத்தை, கண்டிப்பதை விட்டும்ஒரு நிமிடம் கூட நீ கவனக்குறைவாக இருந்து விடாதே.
பிறருக்கு நீ நஸீகத் –அறிவுரை சொல்வதற்கு முன்னால், உனக்கு நீ நஸீஹத் செய்து கொள். நீ பிறருக்கு நஸீஹத் செய்கிறாய், உபதேசம் செய்கிறாய், ஆனால் உன்னை மறந்து விடுகிறாய். இந்த நிலை மிக மோசமான நிலை.
கண்ணியத்திற்குரியவர்களே! இதுதான் நஃப்ஸே லவ்வாமா. நாம் செய்த தீமைகளை நினைத்து நம்மை பழிப்பது, அதற்காக அல்லாஹ்விடத்தில் வருந்தி தவ்பா செய்ய தூண்டுவது.
அதுபோன்று நமக்கு தவறிவிட்ட நன்மைகளை நினைத்து அல்லாஹ்விடத்தில் வருந்துவது. இவ்வளவு நாட்களில் இவ்வளவு தான் நான் நன்மை செய்து இருக்கிறேனா? இவ்வளவு தான் குர்ஆன் மனப்பாடம் செய்து இருக்கிறேனா? இத்தனை ஹதீஸ்களைதான் அறிந்து இருக்கிறேனா? இன்ன இன்ன தொழுகைகளை விட்டு விட்டேனே! என்று நம்மை நாமே குறைப்பட்டுக் கொள்வது. இது நஃப்ஸே லவ்வாமா.
அடுத்து மூன்றாவது நிலை, النفس المطمئنة-அந்நஃப்ஸுல் முத்தமயிம்மா. இந்த நஃப்ஸ் எப்படிப்பட்டது? இது அல்லாஹ்வைக் கொண்டு அமைதி அடைந்த நஃப்ஸ். அல்லாஹ்வின் நினைவில் அமைதி பெற்ற நஃப்ஸ். எப்போதும் அல்லாஹ்வின் பக்கமே திரும்பி இருக்கக்கூடிய நஃப்ஸ்.
அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு கட்டுப்படக்கூடிய நஃப்ஸ். இந்த உலகத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இந்த நஃப்ஸுக்கு விருப்பம் உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.
அல்லாஹ்வின் சந்திப்பை எதிர்பார்த்து இருக்க கூடிய நஃப்ஸ்.? எது அல்லாஹ்விற்கு பிடிக்குமோ அதுதான்இந்த நஃப்ஸுக்கு பிடிக்கும். அல்லாஹ் எதை வெறுத்தானோ, அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதை வெறுத்தார்களோ, அது இந்த நஃப்ஸிற்கு பிடிக்காது.
இந்த நஃப்ஸ் குறித்து அல்லாஹ் கூறுகிறான் :
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ (27) ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً (28) فَادْخُلِي فِي عِبَادِي (29) وَادْخُلِي جَنَّتِي
(எனினும், அந்நாளில் நல்ல மனிதனை நோக்கி) “நிம்மதிபெற்ற ஆத்மாவே! நீ (இறைவனைக் கொண்டு) திருப்தியடைந்ததாக! (இறைவனால் நீ) திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பச் செல்!'' (என்றும்) ‘‘நீ என் நல்லடியார்களில் சேர்ந்து, என் சொர்க்கத்திலும் நீ நுழைந்துவிடு'' (என்றும் கூறுவான்). (அல்குர்ஆன் 89 : 27-30)
வசனத்தின் கருத்து : யாருக்கு இத்தகைய உயர்ந்த ஒரு நஃப்ஸ் கிடைத்ததோ, நஃப்ஸை தர்பியத் செய்து தஸ்கியா செய்து நஃப்ஸுடைய இந்த உயர்ந்த நிலையை அடைந்தார்களோ அவர்களது மரணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
அவர்களைப் பொறுத்தவரை மக்கள் எல்லாம் அவர்களுடைய பிரிவால் கவலையோடு இருந்தால், அவர்களோ அல்லாஹ்வை சந்திக்கின்ற அந்த சந்திப்பின் ஆசையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவர்களுக்கு அழைப்பு வரும்.
அமைதியடைந்த ஆத்மாவே! (திருப்தி கொண்ட ஆத்மாவே) என்று.
உலகத்தை கொண்டு நம்மில் அதிகமானவர்கள் திருப்தி அடைகிறார்கள். உலக செல்வங்களைக் கொண்டு திருப்தி அடைகிறார்கள். வசதிகளை கொண்டு திருப்தி அடைகிறார்கள். தான் நினைத்தது கிடைத்தால் திருப்தி அடைகிறார்கள். இல்லையென்றால் அதிருப்தி அடைகிறார்கள்.
எந்த திருப்தியை அல்லாஹ் சொல்கிறான்? அல்லாஹ்வை கொண்டு திருப்தி அடைந்த ஆத்மா, அல்லாஹ் விதித்ததை கொண்டு திருப்தி அடைந்த ஆத்மா, ஹலாலை கொண்டு திருப்தி அடைந்த ஆத்மா, அல்லாஹ்வின் சட்டத்தை கொண்டு திருப்தியடைந்த ஆத்மா, அல்லாஹ்வின் மார்க்கத்தைக் கொண்டு திருப்தி அடைந்த ஆத்மா.
திருப்தியடைந்த ஆத்மாவே! என் பக்கம் வா என்று சொல்லாமல், உனது எஜமானின் பக்கம் வா, உனது ரப்பின் பக்கம் வாஎன்று அழைக்கிறான். அவ்வளவு கண்ணியப்படுத்தி அழைக்கிறான்.
அந்த எஜமானன் உன்னை கொண்டு திருப்தி அடைந்து இருக்கின்றான். நீயும் அவனை கொண்டு திருப்தி அடைவாய். (அல்குர்ஆன் 89 : 27-30)
எப்படிப்பட்ட நற்செய்தி பாருங்கள்! இந்த உலகத்தில் ஒரு மனிதன் எத்தனையோ கோடி செல்வங்களைக் கொண்டு சேர்த்தான். ஆனால் அல்லாஹ்வின் நற்செய்தியை அவன் பெறாமல் அவன் இறந்து விட்டால், அவன் இந்த உலகத்தில் இருந்து அவன் சேர்த்து வைத்த செல்வங்கள் மறுமையில் அவனுக்குப் பலன் தருமா?
இந்த உலகத்தில் எதையும் சேர்க்கவில்லை. ஆனால், இந்த உலகத்தை விட்டு பிரியும் போது, அல்லாஹ்வின் இந்த அழைப்போடு சென்றால், அவனுக்கு வேறு என்ன தேவை இருக்கப் போகிறது?
பிறகு, அல்லாஹ் ரப்புல் ஆலமீன், எனது அடியார்களில் நீயும் சேர்ந்து கொள். எனது சொர்க்கத்திற்குள் நீ வா என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 89 : 27-30)
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ் கூறுவதாக.சொல்கிறார்கள்.
أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ
}فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ{
சாலிஹான என் அடியார்களுக்காக நான் தயார் செய்து வைத்திருக்கிறேன். எந்தக் கண்களும் பார்த்திராத, எந்த காதுகளுக்கும் கேட்காத, எந்த மனிதனின் உள்ளத்திலும் உதித்திராத, அருட்கொடைகளை.
பிறகு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள். நீங்கள் விரும்பினால் சூரா ஸஜ்தாவுடைய வசனங்களை ஒதிப்பாருங்கள் :
நல்லவர்களுக்காக அல்லாஹ் என்னென்ன அருட்கொடைகளை கண் குளிர்ச்சியாக மறைத்து வைத்திருக்கிறானோ அதை யாரும் அறிய மாட்டார்கள். இந்த உலகத்தில் அவர்கள் செய்த செயல்களுக்கு கூலியாக அவை கொடுக்கப்படும் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்குர்ஆன் 32 : 17)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3005.
கண்ணியத்திற்குரியவர்களே! நஃப்ஸில் இத்தனை மாற்றங்கள் இருக்கின்றன. அந்த நஃப்ஸ் தீமையை ஏவுகிறது. பாவத்திற்கு தூண்டுகிறது. நன்மைகளில் இருந்து தடுக்கிறது. அதில் வெற்றி பெற்று, அதிலிருந்து நமது நஃப்ஸை மாற்றும்போது, நஃப்ஸே லவ்வாமாவாக மாறுகிறது. செய்த பாவங்களை நினைத்து வருந்துகிறது. செய்யாத நன்மைகளை நினைத்து வருந்துகிறது.
பிறகு அந்த நஃப்ஸ் ஒரு நிலைமைக்கு வந்து, அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் திளைக்கும் போது, பாவத்தை விட்டு விலகும் போது, அல்லாஹ்வின் மார்க்கம் தான், அல்லாஹ்வின் கட்டளை தான், என்று நிலைபெறும் போது,
அல்லாஹ்வுடைய தூதர் துஆ செய்தார்களே, உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே, எனது உள்ளத்தை உனக்கு கீழ் படிவதில், உனக்கு கட்டுப்படுவதில் நிலைபெற செய் என்று.
அந்த நிலையை அடையும்போது,நஃப்ஸ் முத்மயின்னாவாக ஆகிறது.
சாதாரணமான விஷயம் அல்ல. நமது கண்ணியத்திற்குரிய முன்னோர்கள் நஃப்ஸை எப்படி எல்லாம் தர்பியத் செய்தார்கள்!
அல்லாஹ்வுடைய அச்சத்தைக் கொண்டுதான், அல்லாஹ்வை பயப்படுவதை கொண்டுதான் நமது நஃப்ஸை தர்பியத் செய்ய முடியும். அதை ஒழுக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். தக்வாவை தவிர வேறு ஒரு சிறந்த சிகிச்சை இல்லை.
நாம் பேசுவது வெள்ளியாக இருக்குமானால், அதைவிட வாய்மூடி இருப்பது தங்கமாக இருக்கும். அந்த அளவிற்கு நஃப்ஸை பற்றிய தர்பியத்தில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள்.
கண்ணியத்திற்குரியவர்களே! ஒவ்வொரு கட்டமாக இந்த நஃப்ஸுடைய தர்பியத்தில் நாம் முன்னேற வேண்டும்.
முதலாவதாக,தன்னிடத்தில் இருக்கின்ற குறைகளை அறிய வேண்டும். அதற்காக ஒரு நேரத்தை ஒதுக்கி நாம் ஒரு பட்டியல் போட வேண்டும்.
என்னிடத்தில் என்ன குறை இருக்கிறது? அதுபோன்று நமது குறைகளை சுட்டிக் காட்டினால், யாராவது நமது குறைகளை காண்பித்து திருத்தினால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் வரவேண்டும். அதை அன்பாக காது கொடுத்து கேட்க கூடிய மனபக்குவம் நமக்கு வரவேண்டும்.
தனது குறைகள் தனக்கு சுட்டிக்காட்டப்பட்டால், அது எந்த விஷயத்தில் இருந்தாலும் சரி, மார்க்க விஷயத்தில் இருந்தாலும் சரி, உலக விஷயத்தில் இருந்தாலும் சரி, தனது குணத்தில் இருந்தாலும் சரி, செயல்பாடுகளில் இருந்தாலும் சரி, அந்தக் குறைகள் தனக்கு சுட்டிக் காட்டப்படும் போது, பணிவோடு, அடக்கத்தோடு அதை உணர்ந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவத்தை நமக்கு கொண்டு வர வேண்டும்.
உமர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! எப்படிப்பட்ட ஒரு நபித்தோழர். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் பயிற்சி பெற்ற தோழர்.
எப்போதும் தன்னை பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களது கூற்றுக்களை நீங்கள் படித்தால் தெரியும். தன்னை தர்பியத் செய்வதில் எந்த அளவு அவர்கள் தன்னை வருந்தி இருக்கிறார்கள் என்று.
அவர்களது கூற்றை பாருங்கள். சொர்க்கத்தை கொண்டு சுபச்செய்தி சொல்லப்பட்டவர். குர்ஆன் இவரது நாவில் பேசியது என்று சுப செய்தி சொல்லப்பட்டவர். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிரியத்திற்குரிய அந்தத் தோழர் சொல்கிறார்கள் :
رَحِمَ الله امرَأً أهدى إلي عيوبي
அல்லாஹ் அந்த மனிதனுக்கு கருணை காட்டட்டும். அந்த மனிதனுக்கு அல்லாஹ் இரக்கம்.செய்யட்டும். யார் எனது குறைகளை எனக்கு சுட்டிக் காண்பித்தாரோ அவருக்கு.
அதுவும் எப்படி சொல்கிறார்கள் என்றால், என் குறைகளை எனக்கு சுட்டிக் காண்பித்தான். என்ற வாசகத்தை சொல்லும்பொழுது,
எப்படி ஒரு அன்பளிப்பு செய்யப்படுமோ? ஒரு அன்பளிப்பு செய்யப்பட்டால், அதை எப்படி விருப்பத்தோடு நாம் ஏற்றுக் கொள்வோமோ அந்த வார்த்தையை சொல்கிறார்கள்.
யார் என் குறைகளை எனக்கு சுட்டிக் காண்பித்தார்களோ, (அவர்கள் எனக்கு அன்பளிப்பு செய்தவரைப் போல)
உமர் ரழியல்லாஹு அன்ஹு அன்ஹு அவர்கள் அவர்களுடைய நெருங்கிய தோழர்கள் யாராக இருப்பார்கள் என்றால் அவர்களை தட்டிக் கேட்பவர்கள்தான்.
அவர்கள் ஏதாவது மறந்துவிட்டால் உடனே சுட்டிக் காட்டக் கூடியவர்கள். அப்படிப்பட்டவர்களை தான் உமர் ரழியல்லாஹு அன்ஹு அன்ஹு அவர்கள் நெருக்கமாக வைத்திருப்பார்கள்.
எனது நண்பர்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர், என் குறைகளை எனக்கு நேரடியாக சொல்லிக் காட்டுபவர்.
அதனால் தான்,உமருடைய மஜ்லிஸ் எப்போதும் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதில் ஒரு நிறைவான மஜ்லிஸ் ஆக இருக்கும்.
அந்த மஜ்லிஸில் ஒரு சிறு தோழர் கூட உமர் ரழியல்லாஹு அன்ஹு அன்ஹு அவர்களிடத்தில் நேருக்கு நேராக நின்று குர்ஆனுடைய வசனங்களை ஓதிக் காட்டுபவர்களாக இருந்தார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்; அல்லாஹ்வுடைய வசனம் சொல்லப்பட்டு விட்டால் அப்படியே நின்று விடுவார்கள்.
உமர் அவர்கள் அதில் ஒரு அளவும் மீரமாட்டார்கள். அந்த அளவிற்கு தன்னை திருத்துவதில் அல்லாஹ்வின் சட்டத்திற்கு தன்னை பணிய வைப்பதில் அவர்கள் தனது நஃப்ஸ்க்கு தர்பியத் செய்துகொண்டிருந்தார்கள்.
ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் சென்று கேட்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நயவஞ்சகர்களின் பட்டியலில் எனது பெயரை குறிப்பிட்டு இருக்கிறார்களா? என்று பயத்தோடு கேட்பார்கள்.
இது தான் நமது நஃப்ஸுடைய குறைகளை தேடி ஆராய்வது. நமது நஃப்ஸில் என்ன குறைகள் இருக்கிறதோ அந்தக் குறைகளை தேடி ஆராய்ந்து, அதைத் திருத்த முயற்சி செய்வது.
அப்துர்ரஹ்மான் இப்னு அபி முளைகா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மிகப்பெரிய தாஃபியின். 30சஹாபாக்கள் இடத்தில் கல்வி பயின்ற ஒரு தாஃபியீன். அவர்கள் சொல்கிறார்கள். இமாம் புகாரி ரஹீமஹுல்லாஹ் பதிவு செய்த ஒரு சம்பவம்.
وَقَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ أَدْرَكْتُ ثَلَاثِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُمْ يَخَافُ النِّفَاقَ عَلَى نَفْسِهِ
நான் 30சஹாபாக்கள் இடத்தில் தோழமை கொண்டு இருக்கிறேன். அவர்களோடு பழகியிருக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரும் தனது ஈமானை குறித்து பயந்து கொண்டுதான் இருந்தார்கள். தனது இறையச்சத்தை கொண்டு பயந்து கொண்டுதான் இருந்தார்கள். அவர்களில் யாரும் ஒரு நாளும் கூட பெருமையாக தன்னைப்பற்றி உயர்வாக பீற்றிக் பேசியது கிடையாது.
مَا مِنْهُمْ أَحَدٌ يَقُولُ إِنَّهُ عَلَى إِيمَانِ جِبْرِيلَ وَمِيكَائِيلَ
எனது ஈமான், ஜிப்ரீல் உடைய ஈமானை போன்று, எனது ஈமான் மீக்காயில் உடைய ஈமானை போன்று, என்று எந்த ஒரு ஸஹாபியும் பெருமையாக பேசியது கிடையாது. தனது ஈமானில் நயவஞ்சகம் கலந்து விடுவோமோஎன்றுதான் அவர்கள் பயந்து கொண்டு இருந்தார்கள்.
நூல் : புகாரி.
அபூதர்தா ரழியல்லாஹு அன்ஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்.
அல்லாஹ் எனது ஒரு தொழுகையை ஏற்றுக் கொண்டான் என்று எனக்கு ஒரு மனநிலை உறுதி ஏற்படுமேயானால், இந்த உலகத்தில் உள்ள செல்வங்கள் எல்லாம் எனக்கு கிடைப்பதைவிட மிக விருப்பமானது.
தான் செய்கின்ற வணக்கம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமா? என்று அந்தளவு பயந்தார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுக்கொடுத்த தொழுகையை இன்று நம்மில் எத்தனை பேர் அதை அதே நிலையில் பேனுகிறோம்.
கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள், ரசூலுல்லாஹ் உடைய வணக்க வழிபாட்டை பார்த்தவர்கள்எல்லா வணக்கங்களையும் அப்படியே செய்தார்கள்.
நஃபிலான வணக்கங்கள், கடமையான வணக்கங்கள்என்று அவ்வளவு இபாதத்களை செய்தவர்கள், மனத்தூய்மையில் அல்லாஹ் அவர்களுக்கு சான்று அளிக்கிறான். இக்லாஸில்பயத்தில் அல்லாஹ் அவர்களுக்கு சான்று சொல்கிறான்.
அப்படிப்பட்ட ஒரு ஸஹாபி சொல்கிறார்கள்; எனது ஒரு தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்ற எண்ணம் எனக்கு ஏற்படுமேயானால், இந்த உலகத்தை விட அது எனக்கு மிகச் சிறந்தது என்று,
அந்த அளவு தனது இபாதத்தில் பயந்து கொண்டிருந்தார்கள். இந்த இபாதத் ஏற்றுக் கொள்ளப்படுமா? என்று.
ஆனால், நாமோ தொழுகைகளின் ஃபர்ளுகளை வீணடிக்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக! மன்னிப்பானாக! அமல்களில் அலட்சியம், இக்லாஸில் பலவீனம், இவ்வளவு எல்லாம் இருந்தும், ஒவ்வொரு செயலையும், அதையும் அலட்சியத்தோடு, மறதியோடு செய்துவிட்டு நாம் பெரிய காரியத்தைச் செய்து விட்டது போன்று, நாம் செய்துவிட்ட அனைத்தையும் அல்லாஹ் இடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது போன்று, பெருமையாக சொல்கிறோம். அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக.
இப்ராஹீம் தய்யீப் ரஹீமஹுல்லாஹ் சொல்கிறார்கள்;
நாம் எப்போதும் எதைப் பேசினாலும் (எனது சொல்லை எனது செயலோடு சேர்த்து பார்ப்பேன்)
பிறகு வருந்துவேன், நீ இவ்வளவு அழகாக சொல்கிறாய். ஆனால் செயலில் பலவீனமாக இருக்கிறாயே, நீ இவ்வளவு விஷயங்களை மக்களுக்கு சொன்னாய். ஆனால், உன்னில் இந்த விஷயங்கள் இல்லையே!என்று நான் வருந்துவேன். நான் சொல்வதில் நான் பொய்யனாக ஆகி விடுவேனோ என்று நான் பயந்து கொண்டு இருந்தேன் என்று கூறுகிறார்கள்.
இவர்களெல்லாம் சஹாபாக்கள் இடத்தில் உயர்ந்த கல்வி படித்த மார்க்க அறிஞர்கள். அவர்களுடைய வரலாறு நமக்கு சான்றாக இருக்கிறது. இந்த அளவு அல்லாஹ்வை பயந்து கொண்டு இருந்தார்கள்.
முஹம்மது இப்னு கஅப் என்ற தாஃபியீன் சொல்கிறார்கள் :
அல்லாஹ் ஒரு அடியானுக்கு நன்மையை நாடுகிறான் என்றால், இவனுக்கு அல்லாஹ் நன்மையை தர வேண்டும் என்று எண்ணினால், மூன்று குணங்களை அவனிடத்தில் அல்லாஹ் வைக்கிறான்.
ஒன்று, மார்க்க ஞானத்தை அல்லாஹ் கொடுக்கிறான். ஹலால் ஹராம் உடைய விளக்கத்தை அல்லாஹ் கொடுக்கிறான்.
இரண்டாவது, உலக வாழ்க்கையில் குறைந்ததை கொண்டு போதுமாக்கிக் கொள்வது. உலகத்தின் மீது பேராசை கொள்ளாமல் ஒரு பற்றற்ற வாழ்க்கையை வாழ்வது.
மூன்றாவது, தனது குறைகளை, தனது பலவீனத்தைபார்க்கக்கூடிய பார்வையை அல்லாஹ் அவருக்கு தருகிறான்.
இந்த மூன்று குணங்கள், இந்த மூன்று பண்புகள்ஒருவரிடத்தில் கிடைக்கப்பெற்றால், அல்லாஹ் அந்த அடியானுக்கு நன்மையை நாடுகின்றான் என்று பொருள். எவ்வளவு அழகான வாசகம் பாருங்கள்.
கண்ணியத்திற்குரியவர்களே! நாம் எவ்வளவு அலட்சியக்காரர்களாக இருக்கிறோம் பாருங்கள்.
அல்லாஹ்வுடைய குர்ஆன் சட்டங்கள் இன்னும் நம்மில் எத்தனைப்பேர் ஒருமுறைகூட அல்லாஹ்வின் வேதத்தை முழுமையாக வாசிக்காதவர்கள் இருக்கிறார்கள்.
அப்படி ஏதோ வாசித்து இருந்தாலும் கூட, பலர் அந்த வேதத்தில் உள்ள சட்டங்களை, அந்த வேதத்தில் சொல்லப்படும் கருத்துக்களை, மார்க்க அறிஞர்களிடத்தில் சென்று படிக்காமல் இருக்கிறார்கள்.
எத்தனை விஷயங்கள் குர்ஆனில் சொல்லப்பட்டு இருக்கின்றன. நாம் ஒன்றைப் பார்த்து அதிலிருந்து புரிகிறோம்.
ஆனால், அல்லாஹ்வுடைய நோக்கமோ வேறு ஒன்றாக இருக்கிறது. அதுபோன்று இந்த உலக விஷயத்தில் என்றைக்காவது நமது நஃப்ஸை பார்த்து அல்லாஹ் உனக்கு கொடுத்ததை கொண்டு போதுமாக்கிக் கொள், ஏழைகளின் ஹக்குகளை பேணு, தேவை உள்ளவர்களின் ஹக்குகளை பேணு, உறவினர்களின் ஹக்குகளை கொடுஎன்று நமக்கு நாமே அறிவுறுத்தி இருக்கிறோமா? யோசித்துப் பாருங்கள்.
தனது குறைகளை பார்க்கக்கூடிய கண் என்று இமாம் சொல்கிறார்கள். நமக்கு வேறு ஒருவருடைய குறைகளை பார்க்கக்கூடிய கண் இருக்கிறது. ஆனால், தனது குறைகளை பார்க்கக்கூடிய கண்ணோ நம்மில் இல்லை.
இந்த மூன்று விஷயங்கள் வேண்டும். அப்போதுதான் கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவர்களாக நாம் ஆகமுடியும்.
இந்த நஃப்ஸுடைய குறைகளை, நஃப்ஸுடைய தீமைகளை, அதில் இருக்கக்கூடிய பலவீனங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதலாவதாக இல்மு நமக்கு வேண்டும்.
அல்லாஹ் உடைய வேதத்தை நாம் படிக்க வேண்டும். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை படிக்க வேண்டும். அதில்தான் இந்த நஃப்ஸ் உடைய பலவீனங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
அந்த பலவீனங்களை எப்படி சீர்திருத்தம் செய்வது என்று சிகிச்சையும் அங்கே சொல்லப்பட்டு இருக்கிறது. இந்தக் குர்ஆனை படிப்பது, ஹதீஸ்களை படிப்பது, இதைக் கொண்டு நமது உள்ளங்களை சுத்தப்படுத்த முடியும்.
சிறந்த தாஃபியீன் ஒருவர் கூறுகிறார்கள் :
குர்ஆனைப் படிக்கும் போது அல்லாஹ் முஃமின்களை பற்றி சொல்கிறான். உடனே தன்னை பார்க்கிறார். அந்தக் குணங்கள் தன்னிடத்தில் இருக்கிறதா என்று, குர்ஆனில் படிக்கிறார், அப்போது காஃபிர்களை பற்றி, அல்லாஹ்வின் விஷயத்தில் ஏமாந்தவர்களை பற்றி, முனாஃபிக்குகளை பற்றி படிக்கின்றார்.
அவர்களுடைய குணங்களைப் பற்றி அல்லாஹ் சொல்கின்றான். உடனே அவர் அந்தக் குணங்கள் தன்னிடத்தில் இருக்கின்றதோ என்று பார்க்கிறார்,அந்த குணங்களை தன்னிடமிருந்து சுத்தம் செய்கிறார்.
இப்படி அல்லாஹ் உடைய வேதத்தை தொடர்ந்து படிப்பது, பொருளுணர்ந்து படிப்பது, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சுன்னாவை படிப்பது, அதில் சொல்லப்பட்டு இருக்கின்ற அந்த விஷயங்களை தன்னிடத்தில் இருக்கின்றனவா என்று பார்ப்பது.
அதிலென்ன விஷயங்கள் கண்டிக்கப்பட்டு இருக்கின்றனவோ, அது நம்மிடத்தில் இருக்குமேயானால் உடனே அதிலிருந்து நம்மை சுத்தப்படுத்துவது.
அடுத்து நமக்கு ஒரு நல்ல நண்பரை ஏற்படுத்துவது. யார் நல்ல நண்பர்? யார் நமது குறைகளை நமக்கு சுட்டிக்காட்டி, நமது தீமைகளை நமக்கு சுட்டிக்காட்டி, நம்மை நேர்வழிப்படுத்துவாரோ, அப்படிப்பட்ட ஒரு நல்ல சகோதரரை தேடுவது.
மைமூன் இப்னு பஃதாத் கூறுகிறார்கள் :
எனக்கு விருப்பம் என்ன தெரியுமா?
எனக்கு எது பிடிக்காதோ, அதை எனது முகத்திற்கு நேராக நீ சொல். ஒரு மனிதன் நஸீகத் பிறருக்கு நன்மையை நாடி கொண்டே இருப்பான். தன் சகோதரனுக்கு நன்மை நாடி கொண்டே இருப்பான். எதுவரை தெரியுமா? அந்த சகோதரனுக்கு நேராக, அவனது முகத்துக்கு நேராக, அவன் வெறுப்பதை சொல்வான்.
அதாவது, எந்த தீமை அவரிடத்தில் இருக்கிறதோ, அந்தத் தீமையை அவருக்குச் சொல்லிக் காட்டுவான். அது அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட,
இன்னும் அதிக விஷயங்கள் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்ப்போம். அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா நமது உள்ளங்களை பரிசுத்த படுத்த வேண்டும்.
அதற்காக நமது உள்ளத்தில் ஒரு தேட்டம் ஏற்பட வேண்டும். நமது குறைகளை உணரவேண்டும். அல்லாஹ்விடத்தில் கேட்கவேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துஆ செய்தார்கள்:
اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا
யா அல்லாஹ்! எனது உள்ளத்திற்கு தக்வாவை கொடு. என் உள்ளத்தை நீ சுத்தப்படுத்து. உள்ளத்தை சுத்தப்படுத்துபவர்களில் நீ தான் மிகச் சிறந்தவன் என்று அல்லாஹ்வுடைய தூதர் கேட்பதைப் போன்று, நாமும் அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டும்.
அறிவிப்பாளர் : ஜைத் இப்னு அர்கம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 4899.
அல்லாஹ் நம் உள்ளங்களை பரிசுத்தப்படுதுவனாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/