HOME      Khutba      தஸ்கியத்துன் நஃப்ஸ் - மனத்தூய்மை (அமர்வு - 1/4) | Tamil Bayan - 367   
 

தஸ்கியத்துன் நஃப்ஸ் - மனத்தூய்மை (அமர்வு - 1/4) | Tamil Bayan - 367

           

தஸ்கியத்துன் நஃப்ஸ் - மனத்தூய்மை (அமர்வு - 1/4) | Tamil Bayan - 367


தஸ்கியத்துன் நஃப்ஸ் - மனத்தூய்மை

ஜுமுஆ குத்பா தலைப்பு : தஸ்கியத்துன் நஃப்ஸ் - மனத்தூய்மை (அமர்வு 1)

வரிசை : 367

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 15-11-2013| 11-01-1435

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை நினைவுபடுத்தியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ்வை பயந்து கொண்டவர்கள் இம்மையிலும் வெற்றி அடைவார்கள், மறுமையிலும் நிச்சயம் வெற்றி அடைவார்கள். அல்லாஹ் தபாரக வதஆலா இந்த துன்யாவை நமக்கு ஒரு சோதனைக் கூடமாக ஆக்கியிருக்கிறான்.

இந்த துன்யாவின் சோதனையில் ஈமான் விஷயத்திலும், அமல்களின் விஷயத்திலும் அல்லாஹ் பொருந்திக் கொள்ளக்கூடிய ஒவ்வொரு விஷயத்திலும் நாம் வெற்றி அடைய வேண்டும் என்றால் அதற்கு மிக முக்கியமான ஒரு பயிற்சி தேவை.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அந்த பயிற்சியை தான் அவனுடைய அல்குர்ஆனில், கூறுகிறான் :

وَنَفْسٍ وَمَا سَوَّاهَا (7) فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا (8) قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا (9) وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا

ஆத்மாவின் மீதும், அதை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும், அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக! எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார். எவன் அதைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். (அல்குர்ஆன் 91 : 7-10)

ஆகவே, அல்லாஹ்வின் இந்த வசனம் நமக்கு மிகப் பெரிய ஒரு அச்சத்தை கொடுக்கிறது. என்ன அச்சம்?

நாம் நமது நஃப்ஸுடைய குறைகளை புரிந்துக் கொண்டோமா? ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கூறிய விஷயங்களில் என்னென்ன மாதிரியான நன்மைகளை உள்ளத்தில் கொண்டிருக்கிறோம்?

அல்லது அதற்கு மாற்றமாக என்னென்ன தீமைகள், கெட்ட குணங்கள், அசுத்தங்கள் நமது உள்ளத்தில் இருக்கின்றன என்று நாம் நம்மை பரிசோதித்திருக்கிறோமா? கண்ணியத்திற்குரியவர்களே! ஏனைய ட்ரீட்மென்ட்களுக்கு துன்யாவின் மருத்துவர்களை நாடலாம். ஆனால், இந்த நஃப்ஸுடைய மருத்துவத்திற்கு அல்லாஹ்வின் வேதத்தையும் தூதருடைய சுன்னாவையும் தவிர, நாம் அணுகுவதற்கு வேறு ஒரு வழியில்லை.

அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டுதான், நபியின் சுன்னாவை கொண்டுதான், இந்த உள்ளங்கள் பரிசுத்தப்பட வேண்டும். நாம் பெரும்பாலும் என்ன செய்கிறோம் ?

உமர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறியதை போன்று தான் நம்முடைய நிலைமை இருக்கிறது.

உமர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறுகிறார்கள்,

قال عمر بن الخطاب رضي الله عنه: كفى بالمرء عيبا أن يستبين له من الناس ما يخفى عليه من نفسه، ويمقت الناس فيما يأتي

மனிதன் அவனுடைய குறைக்கு அவனிடம் இருக்கின்ற தீமைக்கு மிக போதுமான ஆதாரம் என்ன தெரியுமா ?

தனது நஃப்ஸில் உள்ள குறைகளை எல்லாம் அவன் மறந்துவிடுகிறான். பிறருடைய குறைகளெல்லாம் அவனுக்கு தெரிகிறது. பிறரிடத்தில் எதை குறையாக பார்க்கிறானோ, பிறரிடத்தில் எதை தீமையாக பார்க்கிறானோ அவையெல்லாம் அவனுடைய உள்ளத்திற்குள் இருக்கின்றன. ஆனால், தன்னிடம் உள்ள குறைகளை எல்லாம் அவன் மறந்து விடுகிறான்.

பிறரிடம் அதே செயல்களை பார்க்கும் பொழுது குறையாக, கேவலமாக பார்க்கிறான். மக்கள் மீது அவன் கோபப்படுகிறான், வெறுப்படைகிறான், அவர்கள் செய்கின்ற காரியங்களுக்காக.

ஆனால், அதே காரியத்தைதான் அவனும் செய்து கொண்டிருக்கிறான். தான் எந்த செயலை செய்கிறோமோ, தன்னை அவன் மறந்து விடுகிறான்.

பெற்றோர்களை போல, தவறுகளை அவர்கள் செய்கிறார்கள். ஆனால், பிள்ளைகள் மட்டும் அந்த தவறுகளை செய்தால் கோபப்படுகிறார்கள். சகோதரர்களை போல, ஒரு நிறுவனத்தில் இருக்கக் கூடிய மக்களை போல.

கண்ணியத்திற்குரியவர்களே! உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கூற்று இன்று நாம் எந்தளவு நம்முடைய உள்ளங்களை, நம்முடைய நஃப்ஸின் தீமைகளை மறந்திருக்கிறோம் என்பதற்கு இதுவே மிகப் பெரிய அத்தாட்சி.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இதை தெளிவாக முடிவு செய்து விட்டான். யார் உள்ளங்களின் குறைகளை அறிந்து, தனது குறைகளை அறிந்து அவற்றிலிருந்து தனது உள்ளத்தை சுத்தப்படித்திக் கொள்ளவில்லையோ அவர்களுக்கு வெற்றி என்பதே கிடையாது. ஈமானில் வெற்றி பெறமுடியாது, அமல்களில் வெற்றி பெறமுடியாது, அல்லாஹ்வின் தீனில் எந்த காரியத்திலும் அவர்கள் நிறைவை அடைய முடியாது,  தாழ்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் :

قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ

தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான். (அல்குர்ஆன் 87:14)

யாருடைய நஃப்ஸில் தூய்மை இல்லையோ, யாருடைய நஃப்ஸ் பன்படவில்லையோ, யாருடைய உள்ளத்தின் குறைகளை ஆராய்ந்து சீர்திருத்திக் கொள்ளவில்லையோ அவர்களுக்கு வெற்றி கிடையாது.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நபிமார்களை ஆதம் அலைஹிஸ்ஸலாம்அவர்களிலிருந்து இறுதி வரை வந்த அத்தனை நபிமார்களையும் முதலாவதாக மக்களின் உள்ளங்களை சுத்தப்படுத்துங்கள், அவர்களின் உள்ளங்களை நீங்கள் தூய்மைபடுத்துங்கள் என்ற பெரும் பொறுப்பை கொடுத்து தான் அனுப்பியிருக்கிறான்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஃபிர்அவ்னிடத்தில் வருகிறார்கள். முதல் சந்திப்பு, அந்த முதல் சந்திப்பில் ஃபிர்அவ்னை பார்த்து கேட்பதை அல்லாஹ் கூறுகிறான் பாருங்கள்.

فَقُلْ هَلْ لَكَ إِلَى أَنْ تَزَكَّى (18) وَأَهْدِيَكَ إِلَى رَبِّكَ فَتَخْشَى

இன்னும் (ஃபிர்அவ்னிடம்: “பாவங்களை விட்டும்) பரிசுத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?” என்று கேளும்.“அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்” (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்). (அல்குர்ஆன் 79:18,19)

ரப்பின் பக்கம் சென்றால்தான் நம்முடைய உள்ளம் சுத்தம் அடையும். ஷைத்தானின் பக்கம் சென்றால், துன்யாவின் ஆசைகளின் பக்கம் சென்றால் நமது உள்ளம் அசுத்தமடையும்.

அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதை கொண்டு மட்டும் தான் உள்ளங்கள் சுத்தமடைய முடியும். அரசனாக இருந்தாலும்,சாதாரண மனிதனாக இருந்தாலும்,எல்லோருக்கும் ஒரே விதியை தான் அல்லாஹ் வைத்திருக்கிறான்.

உள்ளம் சுத்தமடைய வேண்டுமென்றால் ரப்பின் பக்கம், படைத்த இறைவனின் பக்கம் திரும்புங்கள். உமது இறைவனின் பக்கம் நான் உனக்கு வழிகாட்டுகிறேன்.

உள்ளங்கள் சுத்தம் அடைந்தால் தான் உனக்கு அல்லாஹ்வின் பயம் வரும், இறையச்சம் வரும், தக்வா வரும் என்பதை சொல்லிக்காட்டுகிறார்கள்.

உள்ளம் சுத்தம் அடையாத வரை உள்ளங்கள் அழுக்குகளாலும் அசுத்தங்களாலும் நிறைந்து கொண்டிருக்கும் பொழுது இந்த உள்ளத்தில் தக்வா என்பது ஏற்படாது.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா இப்படி தான் தனது தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மிகப் பெரிய ஒரு பொறுப்பை சுமத்துகிறான்.

هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ

அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (அல்குர்ஆன் 62:2)

இந்த வசனத்தில் மிகத் தெளிவான ஒரு விஷயத்தை அல்லாஹ் குறிப்பிடுகிறான். குர்ஆனை ஓத வேண்டும், உள்ளங்களை தூய்மைப்படுத்த வேண்டும், பிறகு மார்க்க சட்டங்களை பயில வேண்டும், பிறகு இல்மை தேட வேண்டும்.

உள்ளம் சுத்தம் அடையாமல், உள்ளத்தில் தக்வா பரிசுத்தம் என்ற தன்மை ஏற்படாமல் இல்ம் இருக்குமேயானால் அந்த இல்ம் நேர்வழிக்கு வழிகாட்டாது. உள்ளம் சுத்தமாக இருக்க வேண்டும்.

மலக்குகளுடைய உள்ளங்களை அல்லாஹ் சுத்தமாக வைத்திருந்தான். எனவே, அவர்களுடைய இல்ம் அவர்களுக்கு அல்லாஹ்வின் பக்கம் அடிபணிவதற்கு வழிகாட்டியது.

ஷைத்தானின் நஃப்ஸில் பெருமை இருந்தது, ஆணவம் இருந்தது, தற்பெருமை இருந்தது. அது அவனுடைய இல்மை அவன் வழிகெடுவதற்கு வழிகாட்டியது. அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா மிகத் தெளிவாக இந்த இடத்தில் சொல்லிக் காட்டுகிறான். குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள், பிறகு உங்களை சுத்தப்படுத்துவார்கள்.

உங்களை தூய்மைப்படுத்துவார்கள், உங்களை தர்பியத் செய்வார்கள். பிறகு சட்டங்களை உங்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள்.

இன்று நம்மில் பலருக்கு, ஹராமுடைய விளக்கம் இல்லை என்று சொல்ல முடியுமா? தடுக்கப்பட்ட காரியத்தை பற்றிய இல்ம் இல்லை என்று சொல்ல முடியுமா? நிறைய பேருக்கு கண்டிப்பாக ஹராம் எது? என்று தெரியும்.

ஃபர்ளான காரியங்களை அறியாமல் இன்றைய முஸ்லிம்களில் பலர் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? பலருக்கு கண்டிப்பாக ஃபர்ளுகள் தெரியும். ஆனால், ஃபர்ளுகளை நிறைவேற்ற முடியவில்லை. ஹராமை விட்டு அவர்களால் தவிர்ந்து கொள்ள முடியவில்லை.

காரணம், அங்கே அவர்களுடைய உள்ளத்தில் சுத்தம் இல்லை, அவர்களது உள்ளத்தில் தக்வா இல்லை.

அந்த தக்வாவை ஏற்படுத்தாத வரை, அந்த தக்வாவை கொண்டு உள்ளங்களை பரிசுத்தப்படுத்தாத வரை, எந்த ஒரு முஸ்லிமும் ஃபர்ளை செய்ய முடியாது. தொழுகையை பற்றி கூறும் பொழுது அல்லாஹ் அப்படி தானே கூறுகிறான்,

وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ

இந்த தொழுகை மிக கஷ்டமாக சுமையாக இருக்கும், யார் அல்லாஹ்வை பயப்படுகிறார்களோ, மறுமையில் அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வேண்டுமென்று எண்ணியிருக்கிறார்களோ அவர்களை தவிர, மற்ற எல்லோருக்கும் இந்த தொழுகை சுமையாக தான் இருக்கும். (அல்குர்ஆன் 2 : 46)

இந்த 'தஸ்கியத்துன் நுஃபூஸ்' -உள்ளங்களை பரிசுத்தப்படுத்துவதென்பது,இதை கொண்டு தான் மறுமையில் தரஜாத்துகள் முடிவு செய்யப்படுகின்றன.

இன்று நம்மில் அமல் செய்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அமல்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.

தொழுகையின் எண்ணிக்கை அதிகமாகிறது, ஃபர்ளுகளின் எண்ணிக்கை, சுன்னத்துகளின் எண்ணிக்கை, நஃபில்களின் எண்ணிக்கை,பிறகு தானம் தர்மம், ஜகாத், ஹஜ், உம்ரா என்று இபாதத்துகளின் எண்ணிக்கைகள் கூடிக் கொண்டு செல்கின்றன.

ஆனால், அந்த இபாதத்துகளெல்லாம் பரிசுத்தமான, பண்பட்ட நல்ல உள்ளமுடையவரிடத்திலிருந்து வந்தால் அந்த இபாதத்துகளுடைய நன்மைகள் அல்லாஹ்விடத்தில் அதிகமாக இருக்கும்.

இபாதத்துகளுடைய எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது,ஆனால், உள்ளம் பண்படவில்லையென்றால் அதனுடைய நன்மையும் அல்லாஹ்விடத்தில் குறைந்து விடுகிறது.

ஸஹாபாக்களை பாருங்கள், பார்க்கப் போனால் அவர்களில் எத்தனையோ பேர் அவர்களுடைய கடைசி காலத்தில்தான் இஸ்லாமை ஏற்றார்கள். சில வருடங்களில், சில நாட்களில் அவர்கள் மரணித்து விடுகிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படிப்பட்ட ஒரு உயர்வை கூறினார்கள். அவர்களில் ஒருவர் தனது கைப்பிடி அளவு தர்மம் செய்தால் அந்த தர்மம் நீங்கள் ஒரு உஹது மலை அளவு தங்கத்தை தர்மம் செய்தாலும் கூட அந்த தர்மத்திற்கு சமமாகாது என்று கூறினார்களே அதற்கு என்ன காரணம்? அவர்களது உள்ளத்தில் இருந்த ஈமான், அவர்களது உள்ளத்தில் இருந்த தக்வா.

அவர்களது உள்ளத்தில் இருந்த அல்லாஹ்வுடைய நேசம், அல்லாஹ்வின் ரஸூலுடைய நேசம். தனக்கு இல்லை என்றாலும்,அல்லாஹ்வுடைய தீனிற்கு கொடுக்க வேண்டும், அல்லாஹ்வுடைய தீனிற்கு தான் அற்பனமாக வேண்டும்.

மறுமையை நேசித்தார்கள், துன்யாவை வெறுத்தார்கள். அது தான் அவர்களுடைய அமல்களின் எடையை அல்லாஹ்விடத்தில் மிக அதிகமாக கூட்டியது.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா கூறுகிறான் :

وَمَنْ يَأْتِهِ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصَّالِحَاتِ فَأُولَئِكَ لَهُمُ الدَّرَجَاتُ الْعُلَى (75) جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ جَزَاءُ مَنْ تَزَكَّى

ஆனால், எவர்கள் முஃமினாக, ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்தவர்களாக அவனிடம் வருகிறார்களோ, அவர்களுக்கு மேலான பதவிகள் உண்டு.(அத்தகையவர்க்கு) என்றென்றும் நிலைத்திருக்கும் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் அவர் என்றென்றும் வசிப்பர்; இதுவே (பாவங்கள் நீங்கித்) தூய்மையானவர்களின் (நற்) கூலியாகும்.(அல்குர்ஆன் 20 : 75, 76)

வசனத்தின் கருத்து : அல்லாஹ் கூறுகிறான், யார் என்னிடத்தில் ஈமான் கொண்டவராக, முஃமினாக வருகிறாரோ, செல்வந்தராக, ஆலிமாக, படித்த பட்டதாரியாக என்று அல்லாஹ் கூறவில்லை.

யாராக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் வெற்றியை அடைய வேண்டுமென்றால் அவர் முஃமினாக மறுமையில் வர வேண்டும். நாம் படித்த எந்த பட்டமாக இருந்தாலும் சரி, அது மார்க்க கல்வி ரீதியான பட்டமாக இருந்தாலும் சரி, அல்லது பொருளாதார கல்வி ரீதியான பட்டமாக இருந்தாலும் சரி, இந்த உலகத்தோடு அந்த பட்டங்களெல்லாம் முடிந்து விடும்.

அல்லாஹ் நாளை அழைக்கும் பொழுது, அல்லாஹ் நாளை மறுமையில் பிரிக்கும் பொழுது இரண்டு கூட்டமாகத் தான் பிரிப்பான். முனாஃபிக்குகளா? முஃமின்களா?காஃபிர்களா? அவ்வளவு தான்.

ஈமான் என்றால்,மக்கள் எண்ணியிருப்பதை போன்று அல்ல. ஒரு முறை லாயிலாஹ இல்லல்லாஹ் கூறினால் போதும் அல்லது சிறு பிராயத்தில், அறியாத பிராயத்தில் மக்தபில் சென்று ஆமன்து பில்லாஹ் ஓதினால் போதுமென்று கூறுகிறார்கள் அல்லவா, அந்த ஈமானை அல்லாஹ் கூறவில்லை.

ஈமான் கொண்டு எந்த அமல்களை அல்லாஹ் ஃபர்ளாக்கினானோ அந்த அமல்களை அவர் கண்டிப்பாக செய்திருக்க வேண்டும். ஜாய்ஸ் அல்ல, நீங்கள் விரும்பினால் அமல்கள் செய்யலாம் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு விருப்பத்தின் அளவில் விட்டுவிட வில்லை. கண்டிப்பாக ஸாலிஹான அமல்களை அவர்கள் செய்திருக்க வேண்டும்.

ஆகவேதான், திரும்ப திரும்ப நமது மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்வின் வேத வசனங்களின் வெளிச்சத்தில், சுன்னாவின் வெளிச்சத்தில், அமல்கள் ஈமானுடைய பகுதி என்று, யாருக்கு தொழுகை இல்லையோ அவர்களுக்கு இஸ்லாத்தில் பங்கு இல்லை.

இன்று பலர், ஜவேளைத் தொழுகையை விட்டு விடுகிறார்கள். ஜும்ஆ தொழுதால் போதுமென்று நினைக்கிறார்கள். ஜும்ஆ தொழுகை என்று ஒரு தனி கடமையில்லை. யார் ஐந்து நேரத் தொழுகைகளை தொழுகிறார்களோ அந்த முஸ்லிமின் மீது ஜும்ஆ கடமை.

ஒருவன் சுப்ஹ் தொழுகவில்லை, அடுத்து அஸரே தொழ மாட்டேன் என்ற முடிவில் இருக்கிறான். அவன் மீது எப்படி ஜும்ஆ கடமையாகும்? நமது குடும்பத்தில் எந்தளவு மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றி விட்டால் இஸ்லாமோடு நமது இணைப்பு ஒட்டிக் கொள்ளும் என்று நினைக்கிறார்கள். இது மிகப் பெரிய ஏமாற்றம். புரிய வைக்க வேண்டும்.

இன்னும் சிலரோ, ஆண்டில் இரண்டு முறை பெருநாள் தொழுதால் போதும், நாம் முஸ்லிம்களாக இருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இல்லை, யார் ஐந்து நேரத் தொழுகைகளை, ஜும்ஆவுடைய தொழுகைகளை பேணுகிறார்களோ அவர்களுக்கு தான் பெருநாள் தொழுகையே தவிர, பெருநாள் தொழுகை என்ற ஒரு தனி தொழுகை இல்லை.

அல்லாஹ் கூறுகிறான், யார் முஃமினாக வருகிறாரோ, அமல்களை செய்து வருகிறார்களோ அவர்களுக்கு தான் அல்லாஹ்விடத்தில் உயர்ந்த கண்ணியங்கள், உயர்ந்த பதவிகள் உண்டு.

இன்று, ஒரு பக்கம், அமல்களில் நமது கவனம் கூடிக் கொண்டுருக்கிறது கண்டிப்பாக கூட வேண்டும். ஆனால், அதே நேரத்தில் அந்த அமல்கள் உள்ளத்தில் இருக்கின்ற நமது கெட்ட குணங்களால், நமது கெட்ட ஆசைகளால், நமது கெட்ட பண்பாடுகளால் அந்த அமல்கள் நாசமாகலாம். அல்லது குறைந்த பட்சம் அந்த அமல்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மையாவது கண்டிப்பாக குறையும்.

அந்த உள்ளத்தை சுத்தப்படுத்தாத வரை அமல்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படாது. ஒருவர் அமல் செய்கிறான், ஆனால், உள்ளத்தில் முகஸ்துதியை நாடுகிறான். அவனுடைய அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா? ஏற்றுக் கொள்ளப்படாது.

ஒருவன் அமல் செய்கிறான். ஆனால், உள்ளத்தில் தற்பெருமை இருக்கிறது. நான் இந்த அமல் செய்கிறேன், மற்றவர்கள் இதை செய்யவில்லை என்ற பெருமை இருக்கிறது. இதன் மூலமாக அவன் உயர்ந்த நன்மைகளை அடைய முடியாது.

இன்னும் எத்தனையோ குணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த குணங்கள் உள்ளத்தில் இருக்குமேயானால், ஒன்று அமல்கள் நாசமாகி விடும். இல்லையென்றால் அமல்களுடைய தரஜா -தகுதிகள் அல்லாஹ்விடத்தில் குறைந்து விடும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அமல்களுக்கு தவ்ஃபீக்கை அல்லாஹ்விடத்தில் எப்படி கேட்டார்களோ, இபாதத்திற்கு எப்படி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்டார்களோ அதே போன்று தனது நஃப்ஸை திருத்தி தரும்படி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கிறார்கள்.

இன்று, நாம் பெரும்பாலும் நம்முடைய துஆக்களை பிரித்தோமென்றால் நாம் விளங்கி கேட்பதெல்லாம் துன்யாவிற்காக இருக்கும். நாம் விளங்கி, புரிந்து, அழுது அல்லாஹ்விடத்தில் வம்படியாக கேட்போமென்றால் அவையெல்லாம் துன்யாவிற்காக இருக்கும்.

விளங்காமல், அலட்சியமாக, கொடுத்தால் உனக்கு நன்மை, கொடுக்காவிட்டால் எனக்கு நன்மை என்ற அடிப்படையில் கேட்பதெல்லாம் தீனுக்காக இருக்கும்.

இது தான் மனிதர்களுடைய நிலையாக இருக்கிறது. யா அல்லாஹ்! என்னை ஒரு பேணுதலான ஒரு தொழுகையாளியாக ஆக்கு! என்று அல்லாஹ்விடத்தில் அழுகிறோமா?

இப்ராஹீம் நபி அவர்கள் அழுதிருக்கிறார்கள்.

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ

யா அல்லாஹ்! ஒரு பேணுதலான தொழுகையை, நீ விரும்பக் கூடிய நிலையில் தொழக்கூடிய ஒரு முஸ்லிமாக என்னை ஆக்கு என்று இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் துஆ செய்கிறார்கள். (அல்குர்ஆன் 14 : 40)

இன்று,நாம் யா அல்லாஹ்! எனக்கு குர்ஆன் ஓத தவ்ஃபீக் கொடு என்று அழுகிறோமா?யா அல்லாஹ்! குர்ஆனை மனப்பாடம் செய்வதற்கு எனக்கு அருள் புரி என்று அழுகிறோமா? யா அல்லாஹ்! இரவில் வணங்குவதற்கு எனக்கு உதவி செய் என்று அல்லாஹ்விடத்தில் அழுகிறோமா?

அதே நேரத்தில் துன்யாவை தேடி அல்லாஹ்விடத்தில் எவ்வளவு கெஞ்சுகிறோம் பாருங்கள். தீனிற்காக அல்லாஹ்விடம் கெஞ்சுவதை விட துன்யாவிற்காக கெஞ்சுவது நம்மில் அதிகமானவர்களிடத்தில் அதிகமாக இருப்பதை பார்க்கிறோம்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துன்யாவிற்காக கேட்டார்கள் என்றால் எந்தளவிற்கு கேட்டார்கள் தெரியுமா ?

யா அல்லாஹ்! ஒரு நாள் நான் பசித்திருந்தால் உன்னிடத்தில் கெஞ்சி கேட்க வேண்டும். இன்னொரு நாள் நீ எனக்கு பசியார வைத்தால் எனக்கு உணவு கொடுத்தால் உனக்கு நன்றி செலுத்த வேண்டும். அந்த அளவு தான் துன்யாவை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போதுமாக்கிக் கொண்டார்கள்.

துன்யாவை கேட்க வேண்டாம் என்று கூறவில்லை. அதே நேரத்தில் அதற்கும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழகிய ஒரு வழிமுறையை, அழகிய ஒரு பிரார்த்தனையை கற்றுக் கொடுத்தார்கள்.

اللهم إني أعوذ بك من فقر ينسيني، ومن غنى يطغيني

உன்னை நான் மறக்கும் படி செய்கின்ற வறுமையிலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன். இந்தளவு என்னை வறுமையில், கஷ்டத்தில், பிரச்சனையில் தள்ளி விடாதே!நான் அதனால் உன்னை மறக்கும்படியான நிலைக்கு நான் ஆளாகி விடக் கூடாது.

என்னை உனது கட்டளையை மீற வைக்கின்ற செல்வத்திலிருந்து பாதுகாவல் தேடுகிறேன். எனக்கு செல்வ செழிப்பை நீ கொடுத்தாலும் அந்த செல்வத்தின் திமிரால், ஆணவத்தால், அந்த செல்வத்தின் மமதையால் ஷரிஅத்தை மீறக்கூடியவனாக, இஸ்லாமை மீறக்கூடியவனாக , உன்னை எதிர்கக்கூடியவனாக நான் மாறிவிடக் கூடாது.

இன்று,பெரும்பாலான முஸ்லிம்களின் நிலை அது தான். எப்பொழுது செல்வம் கூடிக் கொண்டே போகிறதோ அவர்கள் முஸ்லிம்களை விட்டு தூரமாகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை கலாச்சாரம் மாறிக் கொண்டே செல்கிறது.

அதற்கு பிறகு முஸ்லிம்களை பார்த்தால் வெறுப்படைகிறார்கள். முஸ்லிம்களின் சமுதாயத்தை பார்த்தால் வெறுப்படைகிறார்கள்.

ஏன்? எத்தனையோ செல்வந்தர்கள் முஸ்லிம்களோடு மஸ்ஜிதில் நின்று தொழுவதையே விரும்புவது கிடையாது. ஒன்று,அவர்களுக்கு ஏற்ப ஒரு மஸ்ஜிதை அமைத்துக் கொள்வார்கள்.

அங்கே தான் அவர்கள் தொழுவார்கள். ஏழைகளின் மஸ்ஜிதிற்கு வரமாட்டார்கள்.ஏழைகள் வரக்கூடிய இடத்திற்கு வரமாட்டார்கள். ஏழைகள் அறிவுரைகள் கேட்கக் கூடிய இடத்தில் அவர்களோடு சேர்ந்து அமர மாட்டார்கள்.

காரணம், அவர்களது செல்வம் அவர்களை,தாம் உயர்ந்தவர்கள் என்று நினைக்கும்படி ஆக்கிவிட்டது.அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி அமல்களுக்கு துஆ கேட்டார்களோ, அதுபோன்று உள்ளத்திற்கு அவர்கள் கேட்ட துஆவை பாருங்கள்.

اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا

அல்லாஹ்வே! எனது நஃப்ஸிற்கு அதனுடைய பயத்தைக் கொடு. எனது நஃப்ஸில் தக்வாவை கொடு. எனது உள்ளத்தை சுத்தப்படுத்து. உலக மக்களின் உள்ளங்களை எல்லாம் சுத்தப்படுத்துவதற்காக அல்லாஹ் அனுப்பி வைத்த அந்த நபி யாரிடத்தில் சுத்தத்தை கேட்கிறார்கள்? அல்லாஹ்வே நீ என்னை சுத்தப்படுத்து. (1)

அறிவிப்பாளர் : ஜைத் இப்னு அர்கம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 4899.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த பேச்சை ஆரம்பித்தாலும் சரி, அல்லாஹ்வை புகழ்ந்து அவனிடத்தில் உதவி தேடியதற்கு பிறகு, யா அல்லாஹ்! நஃப்ஸுடைய தீங்குகளிடமிருந்து நீ என்னை பாதுகாத்துக் கொள். கெட்ட செயல்களின் தீங்குகளிலிருந்து கெடுதிகளிலிருந்து என்னை பாதுகாத்துக் கொள் இரட்சகா! என்று துஆ செய்வார்கள்.

அந்த அளவு நஃப்ஸை குறித்து ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பயந்து கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்விடத்தில் கேட்கிறார்கள்,

யா அல்லாஹ்! எனது நஃப்ஸை சுத்தப்படுத்திக் கொடு. நீ தான் நஃப்ஸை சுத்தப்படுத்துபவர்களில் மிக சிறந்தவன். உன்னை தவிர வேறு யாரும் சிறந்த முறையில் நஃப்ஸை சுத்தப்படுத்த முடியாது.

காரணம் என்ன? ரப்பு தான் அந்த நஃப்ஸை படைத்தான், அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் தான் அது இருக்கிறது.

அல்லாஹ் கூறுகிறான், யார் எனது பொறுப்பில் இருக்கிறார்களோ, ஷைத்தானே உனக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை.

ஆகவே, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்தில் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். யா அல்லாஹ்! என்னை என் பக்கமே நீ விட்டு விடாதே! உன்னை தவிர வேறு ஒருவரின் பக்கம் விட்டு விடாதே! என் பொறுப்பை நீயே எடுத்துக் கொள்.

என்னை சீர்திருத்துவது, என்னை பரிசுத்தப்படுத்துவது, எனது இபாதத்திற்கு தவ்ஃபீக் கொடுப்பது எல்லா பொறுப்பையும் நீயே எடுத்துக் கொள்.

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்,

நீ தான் அந்த நஃப்ஸுடைய பொறுப்பாளன், நீ தான் அதனுடைய எஜமானன். நீ தான் அதற்கு பொறுப்பாளன், நீ தான் அதை பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்தில் அழுது கேட்கிறார்கள்.

இதிலிருந்து நாம் என்ன தெரிகிறோம்? நஃப்ஸை குறித்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்தளவு பயந்திருக்கிறார்கள். நாம் என்றைக்காவது இப்படி அல்லாஹ்விடத்தில் நமது குறைகளை எல்லாம் ஒரு பட்டியலிட்டு, யா அல்லாஹ்! என்னிடத்தில் கோபம் இருக்கிறது.

யா அல்லாஹ்! என்னிடத்தில் அசிங்கமான ஆசைகள் இருக்கின்றன. யா அல்லாஹ்! என்னிடத்தில் இன்னன்ன தீமைகள் இருக்கின்றன. இவற்றிலிருந்து நீ என்னை குணப்படுத்து. இந்த தீமைகளால் நான் பாதித்கப்பட்டிருக்கிறேன், இந்த தீமைகளால் நான் பலவீனமடைந்திருக்கிறேன். என்னை நீ குணப்படுத்து, பரிசுத்தப்படுத்து என்று அல்லாஹ்விடத்தில் கேட்கிறோமா?

எதுவரை அல்லாஹ்விடத்தில் நமது குறைகளை உணர்ந்து அந்த குறைகளை அல்லாஹ்விற்கு முன்னால் சமர்பித்து அல்லாஹ்விடத்தில் அதற்குண்டான பரிகாரத்தை தேடமாட்டானோ அதுவரை அல்லாஹ் வழிகாட்டமாட்டான்.

யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் தவறு செய்து விட்டார்கள். அல்லாஹ் சோதித்துவிட்டான், என்ன செய்கிறார்கள்?

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

யா அல்லாஹ்! எனது தவறை நான் ஒத்துக் கொள்கிறேன். மிகப் பெரிய அநியாயக்காரர்களில் நான் ஆகிவிட்டேன். உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. (அல்குர்ஆன் 21 : 87)

அவர்கள் செய்தது என்ன? அல்லாஹ்வுடைய அனுமதி அவர்களுக்கு வருவதற்கு முன்னால் புறப்பட்டு சென்றது. ஒரு நபியை பொறுத்த வரை அந்த அளவிற்கு அல்லாஹ் அவர்களுக்கு தர்பியா கொடுத்தான். அல்லாஹ்வுடைய கட்டளைக்கு முன்னால் அவர்கள் ஊரை விட்டு வெளியேறினார்கள்.

அதற்கு அவர்கள் பயன்படுத்துகின்ற வாசகம் என்ன? பொதுவாக நமது பார்வையில் இதை சாதாரண ஒரு தவறாக நினைப்போம். அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் ஊரை விட்டு வெளியேறிய இந்த குற்றத்தை அல்லாஹ்விற்கு முன்னால் எப்படி ஒப்புக் கொள்கிறார்கள்?

யா அல்லாஹ்! மிகப் பெரிய அநியாயக்காரர்களில் நான் ஒருவனாக இருக்கிறேன் என்று அல்லாஹ்விற்கு முன்னால் தன்னை அந்தளவு நொந்துக் கொள்கிறார்கள்.

நமது தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் எப்படி கேட்டார்கள்? ஒரே ஒரு முறை ஒரே ஒரு தடையை அதுவும் நல்லெண்ணத்தில் மீறினார்கள்.

அல்லாஹ்விற்கு மாறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. அல்லாஹ் தங்க வைத்த அந்த சொர்க்கத்தில் நிரந்தரமாக தங்கி அல்லாஹ்வின் அருகாமையில் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தடையை மீறினார்கள்.

அல்லாஹ் தண்டித்ததற்கு பிறகு அவர்கள் அல்லாஹ்விடத்தில் எப்படி கூறுகிறார்கள்?

قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

யா அல்லாஹ்! எங்களுக்கு நாங்களே கெடுதி செய்து கொண்டோம், அநியாயம் செய்து கொண்டோம், அக்கிரமம் செய்து கொண்டோம். நீ எங்களை மன்னிக்கவில்லை என்றால், நீ கருணை காட்டவில்லை என்றால் நாங்கள் மிகப் பெரிய நிரந்தர நஷ்டவாளிகளாக ஆகிவிடுவோம். (அல்குர்ஆன்7 : 23)

எப்படிப்பட்ட பணிவை, பலவீனத்தை, தேவையை அல்லாஹ்விற்கு முன்னால் வைக்கிறார்கள்.

ஆனால், நாம் இன்று என்ன செய்கிறோம்? பாவம் செய்து விட்டு அல்லாஹ்விடத்தில் கேட்கும் பொழுது கூட கண்களில் கண்ணீர் வருவதில்லை. மன்றாடுவது கிடையாது, பலவீனம் வருவது கிடையாது, வெட்கம் வருவது கிடையாது. தான் ஒரு குறை செய்தவன் என்ற உணர்வு ஏற்படுவது கிடையாது.

ஏதோ நீ மன்னித்தால் உனக்கு கருணை என்ற மாதிரி அலட்சியத்தோடு இருக்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்விடத்தில் தவ்பாவை பாவ மன்னிப்பை எதிர்பார்ப்பவன், அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை எதிர்பார்ப்பவன் ஒரு காலும் அப்படி கேட்கமாட்டான். அவனுடைய துஆவில் கண்ணீர் வரும், அவனுடைய உள்ளம் நடுநடுங்கும்.

இதை தான் அல்லாஹ் கூறுகிறான்,

ذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ

அல்லாஹ்வுடைய நினைவு அவர்களுடைய உள்ளத்தில் வரும்பொழுது உள்ளங்கள் நடுங்கும் என்று. (அல்குர்ஆன்8 : 2)

இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ்கூறுகிறார்கள்,

நாம் அல்லாஹ்விடத்தில் உயர்ந்த பதவிகளை, உயர்ந்த கண்ணியங்களை அடைய வேண்டுமென்றால் அதற்காக இந்த நஃப்ஸிடத்தில் போராடுவது அவசியம். நமது எதிரியாக இந்த நஃப்ஸை ஆக்கிக் கொள்ள வேண்டும்.

ஆனால், நாமோ நமது நண்பர்களாக நஃப்ஸை ஆக்கிக் கொண்டிருக்கிறோம். எதுவரை நஃப்ஸை எதிரியாக ஆக்கவில்லையோ அந்த நஃப்ஸுடைய தீமைகளை புரிந்துக் கொள்ள முடியாது.

இமாம் இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹ்கூறுகிறார்கள் :

இந்த நஃப்ஸை நீங்கள் சுத்தப்படுத்த வேண்டுமென்றால் அதற்காக ஒரு போராட்டமே தேவை, அதற்காக ஒரு பெரிய தியாகமே தேவை.

ஏனென்றால், மனிதனின் எதிரிகளெல்லாம் மிகப் பெரிய எதிரி, இந்த நஃப்ஸ் தான். ஷைத்தானை விட நமக்கு பெரிய எதிரி, ஷைத்தான் வெளியிலிருந்து தான் தூண்டுவான். ஆனால், இந்த நஃப்ஸோ உள்ளிருந்து தூண்டிக் கொண்டே இருக்கும். அந்த ஷைத்தானிற்கு துணை புரிந்துக் கொண்டே இருக்கும்.

யார் இந்த நஃப்ஸை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுகிறார்களோ அப்போது அவர்கள் அந்த எதிரிகள் மீது வெற்றியை பெறுகிறார்கள்.

அவர்கள் அல்லாஹ்வுடைய இபாதத்தில் சுகம் காணுகிறார்கள். அல்லாஹ் எதை தடுத்தானோ அந்த தீமைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். அந்த நஃப்ஸுடைய கெடுதிகளிலிருந்து அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

அதற்காக ஒரு முயற்சியோ அல்லது அதற்காக ஒரு சிந்தனையோ இல்லை என்றால் அந்த நஃப்ஸின் மீது அலட்சியம் காட்டினால் கண்டிப்பாக அந்த நஃப்ஸின் தீமைகளுக்கு, கெடுதிகளுக்கு ஆளாகி, பிறகு குர்ஆனாக இருக்கட்டும், சுன்னாவாக இருக்கட்டும், மற்ற அறிவுரைகளாக இருக்கட்டும். அவருக்கு எந்த விதமான நன்மைகளை தராது, பிரயோஜனத்தை தராது.

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! அல்லாஹ் நமது உள்ளங்களை பரிசுத்தமான அல்லாஹ்வுடைய அன்பை கொண்டும், அல்லாஹ்வுடைய அச்சத்தை கொண்டும் பரிசுத்தமான நல்ல உள்ளங்களில் ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ وَاللَّفْظُ لِابْنِ نُمَيْرٍ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا و قَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ عَاصِمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ وَعَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ لَا أَقُولُ لَكُمْ إِلَّا كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كَانَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا (صحيح مسلم 4899 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/