HOME      Khutba      "இஸ்திகாமா" நிலைத்தன்மை | Tamil Bayan - 348   
 

"இஸ்திகாமா" நிலைத்தன்மை | Tamil Bayan - 348

           

"இஸ்திகாமா" நிலைத்தன்மை | Tamil Bayan - 348


இஸ்திகாமா -நிலைத்தன்மை

ஜுமுஆ குத்பா தலைப்பு : இஸ்திகாமா -நிலைத்தன்மை

வரிசை : 348

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 20-03-2015 | 29-05-1436

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய! அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை போற்றிப்புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார்தோழர்கள் மீதும் ஸலவாத்தும்ஸலாமும் கூறியவனாக, எனக்கும்உங்களுக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாக, அல்லாஹ்வை பயந்து வாழுமாறு அல்லாஹ்வின் பயத்தைக்கொண்டு உபதேசித்தவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தில் பேண வேண்டிய எத்தனையோ அம்சங்கள், எத்தனையோ நற்பண்புகள், கடமைகள் இருக்கின்றன.

அந்த நற்பண்புகள் அந்த அம்சங்கள் ஒவ்வொன்றும் ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கையில் அன்றாடம் அவன் அதை பற்றி சிந்திப்பதும், அதுகுறித்து தன்னை சுயபரிசோதனை செய்து கொண்டிருப்பதும் இன்றியமையாத ஒன்றாகும்.

அப்படிப்பட்ட பண்புகளில் ஒன்றாகத்தான் நம்முடைய மார்க்க அறிஞர்கள் இஸ்திகாமா என்ற ஒரு பண்பை எண்ணுகிறார்கள்.

இந்த இஸ்திகாமா என்றால் என்ன? இந்த பண்பை குறித்து அல்குர்ஆன் எப்படி கட்டளையிடுகிறது? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த இஸ்திகாமா என்ற இந்த குணத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்?என்பதை நாம் சற்று விரிவாக தெரிந்துகொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.

பெரும்பாலான மக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு அம்சம் இஸ்திகாமா என்ற ஒரு அம்சம், ஒரு தன்மை நம்முடைய மார்க்கத்தில் இருக்கிறதா? என்றே அறியாத மக்களாக தான் இருப்பார்கள். எத்தனையோ முறை பண்புகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள்.

ஆனால், இந்த இஸ்திகாமா என்ற பண்பைப் பற்றி மிக குறைவாகதான் கேள்விப் பட்டிருப்பார்கள்.

குர்ஆனில் அல்லாஹ் இந்த இஸ்திகாமத்தினுடைய தன்மை பெற்றவர்கள், இன்னும் அவர்களுடைய சிறப்பை பற்றி சொல்லுகிறான்;

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ

எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து இருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக வானவர்கள் வந்து (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைக் கொண்டு சந்தோஷமடையுங்கள்'' என்றும் கூறுவார்கள்.(அல்குர்ஆன் 41:30)

இதுபோன்று குர்ஆனில் இன்னொரு வசனம், அல்லாஹ் கூறுகிறான்;

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி (அவன் அருள்புரிந்த இவ்வேதத்தை நம்பிக்கை கொண்டு,) அதில் உறுதியாகவும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.(அல்குர்ஆன் 46:13)

இதை விட ஒரு நற்செய்தி இருக்குமா?!

மறுமை நாளை குறித்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பயந்து கொள்ளுங்கள்! பயந்து கொள்ளுங்கள்! அது திடுக்கம் நிறைந்த நாள் என்று சொல்கிறான். (அல்குர்ஆன் 21:103)

மிகப் பெரிய திடுக்கங்கள் நிறைந்த நாள். இறைதூதர்கள் எல்லாம் பயந்து அல்லாஹ்வுக்கு முன்னால் பேச துணிவில்லாமல் பயந்தவர்களாக, பணிந்தவர்களாக தங்களது நஃப்ஸை பற்றி அல்லாஹ்விடத்தில் அதற்கு ஈடேற்றம் தேடியவர்களாக நிற்கின்ற அந்த நாள்.

அத்தகைய நாளில் யார், அல்லாஹ் ஒருவன் என்று கூறி,அல்லாஹ்வுடைய தீனில் இஸ்திகாமத்தோடு, அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் பிடிப்போடு பலவீனப்பட்டு விடாமல் கொண்ட கொள்கையில் உறுதி உடையவனாக இருந்தால், அவர்கள் மீது எவ்வகையான பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள், துக்கப்படவும் மாட்டார்கள்.

ஸுரா ஹாக்காவுடைய வசனங்களை படித்துப் பாருங்கள்;

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ (19) إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ (20) فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ (21) فِي جَنَّةٍ عَالِيَةٍ (22) قُطُوفُهَا دَانِيَةٌ (23) كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ

எவருடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவருடைய வலது கையில் கொடுக்கப்படுகிறாரோ அவர் (மற்றவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்)கூறுவார்: ‘‘இதோ! என் ஏடு; இதை நீங்கள் படித்துப் பாருங்கள், நிச்சயமாக நான் என் கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன்.'' ஆகவே, அவர் திருப்தியான (சுகபோக) வாழ்க்கையில், மேலான சொர்க்கத்தில் இருப்பார். அதன் கனிகள் (இவர்கள், படுத்திருந்தாலும் உட்கார்ந்திருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும், எந்நிலைமையிலும் கைக்கு எட்டக்கூடியதாக இவர்களை) நெருங்கி இருக்கும். (இவர்களை நோக்கி) ‘‘சென்ற நாள்களில் நீங்கள் சேகரித்து வைத்திருந்த (நன்மையான)வற்றின் காரணமாக, மிக்க தாராளமாக இவற்றைப் புசியுங்கள்! அருந்துங்கள்'' (என்று கூறப்படும்).(அல்குர்ஆன் 69:19-24)

அல்லாஹு அக்பர்!எப்படிப்பட்ட நற்செய்தியை அல்லாஹ் சொல்கின்றான்.

இன்று, இந்த உலகத்தின் பரீட்சையில் தேறி விடக் கூடிய ஒரு மாணவன் ஒரு உயர்ந்த தரத்தில் தேரிவிட்டால், அவன் தன்னுடைய மகிழ்ச்சியை தனது நண்பர்களோடு, குடும்பத்தோடு இனிப்புகள் வழங்கி அந்த பகிர்ந்து கொள்கிறான்.

எந்த வெற்றிக்குப் பின் ஒரு வெற்றி இல்லையோ, எந்த தோல்விக்குப் பிறகு அடுத்து ஒரு வெற்றிக்காண சந்தர்ப்பம் இல்லையோ, அந்த பரிச்சையில் ஒரு மனிதன் வெற்றி அடையும் போது, அது தானே உண்மையான வெற்றி.

அல்லாஹ் சொல்கிறான்:

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3:185)

கண்டிப்பாக வழி இல்லை. நீங்கள் உலகத்திலுள்ள செல்வங்களை எல்லாம் செலவழித்து,உலக மருத்துவர்களை எல்லாம் ஒன்று திரட்டி,மரணம் இல்லாத ஒரு வாழ்க்கையை நீங்கள் பெறுவதற்காக என்ன முயற்சித்தாலும் சரி, அல்லாஹ் நாடிய அந்த மரணம் கண்டிப்பாக வந்தே தீரும்.

أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ

நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும்; மிகப் பலமான உயர்ந்த (கோட்டை) கொத்தளத்தின் மீது நீங்கள் இருந்தபோதிலும் சரியே! (அல்குர்ஆன் 4:78)

போட்டி போட்ட மன்னர்கள் எங்கே? நாடுகளை ராணுவங்களை, மக்களை கட்டி ஆண்ட அரசர்கள் எங்கே?

அவர்கள் கட்டிய கோட்டைகள் இருக்கின்றன. அவர்கள் இல்லையே! அவர்களுடைய மாட மாளிகைகள் இருக்கின்றன. அவர்கள் எங்கே? கப்ருகளுக்கு சென்று விட்டார்களே!

புழுக்களுக்கும், பூச்சிகளுக்கும் இரையாகி விட்டார்களே! அவர்களுடைய சேனைகள் எங்கே? அவர்களது படைகள் எங்கே? அவர்கள் சேகரித்த தங்கம், வெள்ளி, மாணிக்கம், மரகதம், வைரம், வைடூரியம் இந்த நகைகள் எல்லாம் எங்கே சென்றன? அவர்கள் அதை விட்டு சென்று விட்டார்களே! பங்குபோடப்பட்டு விட்டனவே!

மேல்குறிப்பிட்ட வசனத்தின் (அல்குர்ஆன் 46:13) விளக்கம்;

இந்த தீனுக்குள் நுழைந்ததற்கு பிறகு அவர்களுக்கு இந்த தீனில் சந்தேகம் வரக்கூடாது. தடுமாற்றம் வரக்கூடாது. பலவீனம் வரக்கூடாது.

அல்லாஹ்வை ரப்பாக ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு, அவனை வணங்க வேண்டும். அவனுடைய கட்டளைகளை ஏற்று நடக்க வேண்டும். அவன் தடுத்த பாவங்களை விட்டு விலக வேண்டும்.

அதுதான் அல்லாஹ்வை ரப் என்று ஏற்றுக் கொண்டதற்கு பொருள். ஒருவன் அல்லாஹ்வை ரப் என்று சொல்கிறான். ஆனால் அவனை வணங்குவதில்லை, அவனுடைய கட்டளைகளை பின்பற்றுவதில்லை, அவன் தடுத்த பாவங்களை விட்டு விலகவில்லை என்றால் அவன் அல்லாஹ்வை ரப்பு என்று சொல்வதில் பொய்யனாக இருக்கிறான். போலியாக இருக்கிறான். முனாஃபிக்காக இருக்கிறான்.

இந்த இஸ்திகாமத் உடையவர்கள் தான் சொர்க்கத்திற்கு உரியவர்கள். சொர்க்கம் இவர்களுக்கே. சொர்க்கம் இவர்களுக்காக படைக்கப்பட்டது, இவர்கள் சுவர்கத்திற்காக படைக்கப்பட்டார்கள்.

அந்த சுவர்கத்தில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

வாழ்க்கை,மரணம் இல்லை.

நிரந்தரம்,அழிவுகிடையாது.

ஆரோக்கியம்,நோய் கிடையாது.

இன்பம்,கவலை கிடையாது.

இந்த இஸ்திகமா என்ற இந்த தன்மையை குறித்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இப்படி நமக்கு ஆர்வமூட்டியவன், அதை தனது நபிக்கும் கட்டளையாக சொல்கிறான்.

அந்த நபியோடு ஈமான் கொண்ட மக்களுக்கும் கட்டளையிட்டு சொல்கிறான்.

فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

ஆகவே, (நபியே!) உமக்கு ஏவப்பட்டது போன்றே, நீரும் இணை வைத்து வணங்குவதிலிருந்து விலகி உம்முடன் இருப்பவரும் (நேரான வழியில்) உறுதியாக இருங்கள். (இதில்) சிறிதும் தவறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் செயலை உற்று நோக்குபவன் ஆவான். (அல்குர்ஆன் 11:112)

இன்று, பெரும்பாலோர், தனது உலக விருப்பங்களில், அதை அடைவதில் நம்மில் உறுதியாக இருக்கிறார்கள். தளர்ந்து விடுவதில்லை.

ஆனால், மார்க்கம் என்று வந்து விட்டால் மட்டும் இது போதும், எனக்கு இது முடியாது. என்பதாக தனக்கே ஒரு எல்லையை இவர்கள் வகுத்துக் கொள்கிறார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! கவலையான ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன். இன்று, இந்த கலப்பு சமுதாய காலத்தில் படிப்பினால், தொழிலினால், வியாபாரத்தினால், பழக்கவழக்கத்தால் காஃபிர்களோடு அதிகமாக பழகக் கூடிய இந்த காலகட்டத்தில். இன்றைய முஸ்லிம்களுடைய நிலை இந்த மார்க்கத்தில் மிகவும் பலவீனப்பட்டு இருக்கின்றது.

முஸ்லிம் ஆண்கள் காஃபிர் பெண்களை தங்களுக்கு மனைவிகளாக தேர்ந்தெடுக்கிறார்கள். தங்களது மஸ்ஜிதுகளில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக, முஹல்லாவில் தங்களுடைய அங்கீகாரம் தவறி விடக்கூடாது என்பதற்காக மட்டும் அவர்களின் பெயர்களை அந்த நேரத்தில் மட்டும் மாற்றிக் கொண்டு அதன் பிறகு அவன் அவனாக, அவள் அவளாக வாழுகிறார்கள்.

குஃப்ரிலிருந்து வரவில்லை. அவர்களுடைய பெயர்தான் மாறி வந்ததே தவிர, அவர்களுடைய வாழ்க்கை மாறவில்லை. தொழுகை வரவில்லை, நோன்பு வரவில்லை, ஜக்காத் வரவில்லை. இன்னும் சொல்லப் போனால் அப்படி திருமணம் முடித்துக் கொள்ளக் கூடிய ஆண்களில் பலருடைய நிலைமையும் அப்படிதான் இருக்கிறது.

அவர்களும் ஈமானில் பலவீனமானவர்களாக, தொழுகை, நோன்பு, ஜக்காத் வணக்க வழிபாடுகள் இல்லாதவர்களாக, இன்னொருபக்கம், பல முஸ்லிமான பெண்கள் தங்கள் கல்லூரிகளில் படிக்க கூடிய தங்களுடைய சக மாணவர்களை தங்களுக்கு கணவர்களாக கருத்தில் எடுத்துக் கொண்டு ஒன்று இவர்கள் குஃப்ரில் சென்றுவிடுகிறார்கள்.

இல்லை என்றால், வெறும் தந்தையின் திருப்திக்காக அவன் மாறி விட்டான் என்று கூறி திருமணத்தை முடித்துக்கொண்டு இருவரும் குஃப்ரோடு வாழ்வதை பார்க்கின்றோம். அதற்கு தயாராகிவிட்ட ஒரு மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

குஃப்ரை தேர்ந்தெடுக்கக் கூடிய ஒரு மனநிலை. ஷிர்க்கை தேர்ந்தெடுக்கக் கூடிய ஒரு மனநிலை. அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருந்து விலகக்கூடிய ஒரு மனநிலை.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ

நெருப்பில் போடப்பட்டு தான் எரிக்கப்படுவதை ஒரு மனிதன் வெறுப்பது போன்று குஃப்ரை -இறைநிராகரிப்பை வெறுக்க வேண்டும். (1)

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் :16

ஒரு முஸ்லிமான வாலிபன் தனக்கு வரக்கூடிய மனைவி காஃபிராக இருந்தாலும் பரவாயில்லை,பெயரை மாற்றி கொண்டால் போதும்,என்று அவளை ஏற்று கொள்கிறான் என்றால், இவன் குஃப்ரில் சென்று விட்டான்.

குஃப்ரை திருப்தி கொள்வது குஃப்ர். இறை நிராகரிப்பை ஏற்றுக் கொள்வதும் குஃப்ர்.

அதுபோன்றுதான், ஒரு முஸ்லிமான பெண்ணாக இருப்பவள், தன்னுடைய வாழ்க்கை துணையை காஃபிராக இருந்தாலும் பரவாயில்லை என்று தேர்ந்தெடுக்கும் பொழுது அவளும் குஃப்ரில் சொல்கிறாள்.

எவ்வளவு எச்சரிக்கையோடு அல்லாஹ் நமக்கு சொல்கிறான்:

وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ

(நம்பிக்கையாளர்களே!) இணைவைத்து வணங்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் மணந்து கொள்ளாதீர்கள். (ஏனென்றால்,) இணைவைத்து வணங்கும் ஒரு பெண் உங்களைக் கவரக்கூடியவளாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண் அவளைவிட நிச்சயமாக மேலானவள். (அவ்வாறே) இணை வைத்து வணங்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும்வரை அவர்களுக்கு (நம்பிக்கையாளர்களான பெண்களை) நீங்கள் மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைத்து வணங்கும் ஓர் ஆண் உங்களைக் கவரக்கூடியவனாக இருப்பினும், நம்பிக்கை கொண்ட ஓர் அடிமை அவனைவிட நிச்சயமாக மேலானவன். (இணைவைக்கும்) இவர்கள் எல்லாம் நரகத்திற்கு அழைப்பார்கள். ஆனால், அல்லாஹ்வோ தன் அருளால் சொர்க்கத்திற்கும் (தன்) மன்னிப்புக்கும் (உங்களை) அழைக்கிறான். மனிதர்கள் கவனித்து உபதேசம் பெறுவதற்காக தன் வசனங்களை (மேலும்) விவரிக்கிறான். (அல்குர்ஆன் 2:221)

ஒரு தகப்பனுக்கு நன்றாக தெரிகிறது; எனது மகள் யாரை இப்போது திருமணம் முடிப்பேன் என்று கொண்டு வந்திருக்கிறாளோ, அவன் வெறும் பெயருக்கு தான் மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறானே தவிர,மனதால் அவன் இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லைஎன்ற நிலையை தெரிந்தவனாக தனது மகளையோதனது சகோதரியையோ தனது பொறுப்பில் இருக்கக்கூடிய யாரையோ அவன் திருமணம் முடித்துக் கொடுத்தால், ஒரு காஃபிருக்கு அவனும் காஃபிராகி விடுவான். இது அல்லாஹ்வின் கட்டளை.

எவ்வளவு சமுதாயம் சீர்கெட்டு சீரழிந்து இருக்கிறது என்பதை பாருங்கள். ஒரு முஸ்லிமான பெண் ஒரு அந்நிய ஆண்களிடம், அவன் முஸ்லிமாக இருந்தாலும் கூட, தனித்து இருக்க முடியாது, பேசமுடியாது, சிரிக்க முடியாது, பழக முடியாது என்று இருக்கும்போது, ஒரு காஃபிரோடு அவனோடு சுற்ற செல்கிறாள். தனிமையில் இருக்கிறாள். அவனை தான் என்னுடைய வாழ்க்கை துணை என்று நம்புகிறாள்என்றால் அவளுடைய பெற்றோர்களின் மார்க்கப்பற்று அங்கே கேள்விக்குறியாக இருக்கிறது.

அந்த பெற்றோர் அந்த பிள்ளைகளை எப்படி வளர்த்தார்கள்? என்ன செய்தார்கள்? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!

இந்த இஸ்திகமா குறித்து மேலும் அல்லாஹ் கூறுகிறான்:

فَلِذَلِكَ فَادْعُ وَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ

ஆகவே, (நபியே!) அ(ந்)த (உண்மையான மார்க்கத்தி)னளவில் (அவர்களை) நீர் அழைப்பீராக, உமக்கு ஏவப்பட்டபடி நீர் உறுதியாக இருப்பீராக, அவர்களுடைய விருப்பங்களை நீர் பின்பற்றாதீர்.(அல்குர்ஆன் 42:15)

கண்ணியத்திற்குரியவர்களே! இந்த இஸ்திகமா என்பது சாதாரணமான ஒரு விஷயம் அல்ல.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஸுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு கேட்கிறார்கள்;

يَا رَسُولَ اللهِ، قُلْ لِي فِي الْإِسْلَامِ قَوْلًا لَا أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ

அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு சொல்லை சொல்லுங்கள். இனி நான் வேறு ஒருவரிடத்தில் சென்று உங்களுக்கு பின்னால் அது குறித்து கேட்க மாட்டேன். அப்படிப்பட்ட ஒரு பதிலை எனக்கு சொல்லுங்கள்.

நபியவர்கள் அந்த தோழருக்கு சொன்ன வார்த்தையைப் பாருங்கள்.

قُلْ: آمَنْتُ بِاللهِ، فَاسْتَقِمْ"

சொல்! அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன் என்று. பிறகு,அந்த ஈமானில் நீ உறுதியாக இருக்க வேண்டும். அந்த ஈமானில் நீ நிலையாக இருக்கவேண்டும். நீ நிரந்தரமாக இருக்கவேண்டும். நடுநிலையோடு இருக்கவேண்டும். நீதமாக இருக்க வேண்டும். சருகாமல்,கோணல் வந்துவிடாமல், பலவீனப்பட்டு விடாமல். உறுதியாக, நிலையாக இரு.

அறிவிப்பாளர் : ஸுஃப்யான் இப்னு அப்துல்லாஹ்ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 38.

இந்த இஸ்திகமா என்பது நம்முடைய எண்ணங்களில் இருக்கின்றன. நம்முடைய சொற்களில் இருக்கிறது. நம்முடைய செயல்களில் இருக்கிறது.

நம்முடைய உள்ளம் அல்லாஹ்வின் நம்பிக்கையில், அல்லாஹ்வின் அன்பில், அல்லாஹ்வுடைய தொடர்பில், அல்லாஹ்வை நினைவு கூர்வதில் உறுதியாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும். அவர்களுடைய மார்க்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

இமாம் இப்னு ரஜப் ஹம்பலி ரஹிமஹுல்லாஹ் சொல்கின்றார்கள்;

فأصل الاستقامة استقامة القلب على التوحيد فمتى استقام القلب على معرفة الله وعلى خشيته وإجلاله ومهابته ومحبته وإرادته ورجائه ودعائه والتوكل عليه والإعراض عما سواه استقامت الجوارح كلها على طاعته

அல்லாஹ்வுடைய இந்த தவ்ஹீதில் உள்ளம் உறுதியாக இருப்பது,இஸ்திகாமத்தினுடைய வேறாகும். இஸ்திகாமத்தினுடைய அஸ்திவாரமாகவும். அதுதான் முதல் அடிப்படை ஆகும்.

யாருடைய உள்ளம் அல்லாஹ்வை அறிவதில், அவனை பயப்படுவதில், அவனை கண்ணியப்படுத்துவதில், அவனை அஞ்சுவதில், அவனை நேசிப்பதில், அவனை மட்டுமே நாடுவதில், அவனை மட்டுமே ஆதரவு வைப்பதில், அவனிடம் பிரார்த்தனை செய்வதில், அவனை மட்டும் சார்ந்து இருப்பதில், அவன் அல்லாதவர்களை புறக்கணிப்பதில் யாருடைய உள்ளம் உறுதியாகிவிடுமோ அவனுடைய மற்ற உறுப்புக்கள் எல்லாம் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்து பணிந்து நடப்பதில் நிலைபெற்று விடும், உறுதியாகிவிடும்.

காரணம், உள்ளம்தான் உறுப்புகளின் அரசனாக இருக்கிறது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ

உடலில் ஒரு சதைத்துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றால் முழு உடலும் சீர் பெற்றுவிடும். அது கெட்டு விட்டால் எல்லாம் கெட்டுவிடும். அறிந்து கொள்ளுங்கள்! அது தான் உள்ளம் என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :52.

உள்ளம் அல்லாஹ்வுடைய தவ்ஹீதில் நிலை பெற்றுவிட்டால், உடல் உறுப்புக்கள் எல்லாம் உறுதி பெற்றுவிடும்.

இங்கே மேலும் ஒரு விஷயத்தையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்; இந்த இஸ்திகாமா -அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பது என்பதற்கு மனிதன் மலக்காக மாறி விடுவான் என்ற பொருளும் அல்ல.

சில சூழ்நிலைகளில், சந்தர்ப்பங்களில் நஃப்ஸுக்கு அடிமையாகியோ, ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்கு அடிமையாகியோ தவறுகளும் நிகழ்ந்து விடலாம்.

ஆனால்,இந்த இஸ்திகாமத் உடையவர்களுடைய சிறப்புத்தன்மை என்ன என்றால்,தவறு நடந்துவிட்டால் உடனே தவ்பாவின் பக்கம் விரைந்து விடுவார்கள். இதுதான் இஸ்திகாமத்தினுடைய சிறப்பு.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

«كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الخَطَّائِينَ التَّوَّابُونَ»

மனிதர்கள் எல்லோரும் தவறு செய்பவர்கள் தான். ஆனால்,தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள்,அல்லாஹ்விடம் மீண்டு தவ்பா செய்யக்கூடியவர்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி,எண் : 2499, தரம் : ஹசன் (அல்பானி)

ஆகவேதான், அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா எந்த இடத்தில் இஸ்திகாமத்தை நமக்குக் கட்டளையிடுகின்றானோ அதே இடத்தில் இஸ்திஃபார் என்றும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

இஸ்திகாமத் மார்க்கத்தில் உறுதியாக, பிடிப்பாக, நிலையாக, நேராக இருங்கள், என்ற கட்டளையை அல்லாஹ் சொல்லும் போது இஸ்திஃபாரையும் சேர்த்து சொல்கிறான்.

فَاسْتَقِيمُوا إِلَيْهِ وَاسْتَغْفِرُوهُ

நீங்கள் அவன் பக்கம் முன்னோக்கி நிலையாக உறுதியாக இருந்து விடுங்கள்.  அவனிடத்தில் மன்னிப்பும் தேடுங்கள். (அல்குர்ஆன் 41 : 6)

இமாம் இப்னு ரஜப் சொல்கிறார்கள்;இந்த வசனம் நமக்கு எதை உணர்த்துகிறது என்றால், சில நேரங்களில் அடியான் இந்த இஸ்திகாமாவில் அவன் புறத்திலிருந்து குறை ஏற்பட்டு விடலாம்.

ஆனால்,அந்த குறையை அந்த பலவீனத்தை அந்த அடியான் இஸ்திஃபாரை கொண்டு அவன் நிறைவு செய்து விடுவான். பாவமன்னிப்பு தேடுவதை கொண்டு அவன் அதை உயர்த்திவிடுவான்.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் பாவம் செய்தார்கள். ஆனால்,அவர்களுடைய தவ்பா அவர்கள் முந்தி இருந்த நிலையை விட அவர்களை அல்லாஹ்விடத்தில் உயர்த்தி விட்டது.

அது தவ்பாவின் மூலமாக.இதுதான் ஒரு முஃமினான ஒரு அடியானுடைய நிலையாக இருக்க வேண்டும்.

முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்;

«اتَّقِ اللَّهِ حَيْثُمَا كُنْتَ، وَأَتْبِعِ السَّيِّئَةَ الحَسَنَةَ تَمْحُهَا، وَخَالِقِ النَّاسَ بِخُلُقٍ حَسَنٍ»

முஆதே! நீ எங்கிருந்தாலும் சரி,அல்லாஹ்வை பயந்து வாழ். தனிமையில் இருந்தாலும் சரி, தூரமாக இருந்தாலும் சரி, மக்களின் கண் பார்வையில் படாமல் இருந்தாலும் சரி, அல்லாஹ்வை பயந்து வாழ்.

உன் புறத்திலிருந்து ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால். அந்த தவறை தொடர்ந்து உடனே ஒரு நன்மையைச் செய்து அந்த பாவத்தை நீ அளிக்க பார். இன்னும் மக்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்!

அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1987, தரம் : ஹசன் (அல்பானி)

மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;

«اسْتَقِيمُوا، وَلَنْ تُحْصُوا، وَاعْلَمُوا أَنَّ مِنْ أَفْضَلِ أَعْمَالِكُمُ الصَّلَاةَ، وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ»

நான் இந்த மார்க்கத்தில் மிக உறுதியாக இருக்கிறேன் என்று நீங்கள் அப்படி சொல்லிவிட முடியாது.முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

அறிந்து கொள்ளுங்கள்! உங்களது அமல்களில் மிகச்சிறந்தது தொழுகை.

ஒளுவை ஒரு மனிதன் தொடர்ந்து தனது வாழ்க்கையில் பேணி வருகிறான் என்றால், அவன் கண்டிப்பாக முஃமீனாக தான் இருப்பான். ஒளுவுடன் இருப்பது ஈமானின் அடையாளம்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 278, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

سَدِّدُوا وَقَارِبُوا

முடிந்த அளவு நீங்கள் நீதமாகவே, நேராகவே, நேர்மையாகவேஇருங்கள்.அந்த நேரான பாதைக்கு நெருக்கமாக வந்து கொண்டே இருங்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :6463.

கண்ணியத்திற்குரியவர்களே! இந்த ஹதீஸ்கள் எல்லாம் நமக்கு எதை உணர்த்துகிறது? ஒரு முஃமினுடைய வாழ்க்கையில் சில நேரங்களில் பலவீனம் ஏற்படலாம்.

ஆனால், அந்த பலவீனத்தால் இனி நம்மால் இந்த பாதையில் முன்னேற முடியாதோ? இனி நாமெல்லாம் உயர்ந்த முஃமீன்களாக முடியாதோ? என்ற தோல்வி மனப்பான்மை கொடுத்துவிடக் கூடாது.

தவறு செய்தால் அந்த தவறை மன்னிக்கின்ற இறைவன் ரப்பு எனக்கு இருக்கின்றான், நான் மன்னிப்பை கொண்டு அந்த பாவத்தை அழிப்பேன், நான் மன்னிப்பை கொண்டு இறைவனின் திருப்தியைப் தேடிக்கொள்வேன் என்று மீண்டும் மீண்டும் அவன் தனது ரப்பின் பக்கமே அவன் திரும்பிகொண்டே இருக்க வேண்டும்.

இந்த இஸ்திகமா என்பது இது வெறும் பேசினால் வரக்கூடியது அல்ல. இதற்காக கடுமையாக முயற்சிக்க வேண்டும்.

وَمَنْ جَاهَدَ فَإِنَّمَا يُجَاهِدُ لِنَفْسِهِ

யார் அல்லாஹ்வை அடைவதில் அவன் கடுமையான சிரத்தை எடுத்துக் கொள்கிறானோ. அவனுடைய அந்த சிரமம் அவனுக்காக வேண்டி தான். அவனுடைய நன்மைக்காக வேண்டி தான். (அல்குர்ஆன் 29:6)

அல்லாஹ் சொல்வதாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்.

நீங்கள் எனது நெருக்கத்தை அடைய வேண்டுமென்றால்,நான் உங்கள் மீது கடமையாக்கியதை முதலில் முறையாக செய்யுங்கள்.

நீங்கள் மேலும் மேலும் நெருக்கத்தை அடைய வேண்டுமென்றால்,உபரியான வணக்க வழிபாடுகளை செய்து கொண்டே இருங்கள். அப்படி ஒரு அடியான் செய்தால்,அவன் கேட்கக்கூடிய செவிகளாக, அவன் பார்க்கக்கூடிய பார்வைகளாக, அவன் பிடிக்கக்கூடிய கரமாக, அவன் நடக்கக்கூடிய காலாக நான் மாறி விடுகிறேன்என்று அல்லாஹ் சொன்னதாக அல்லாஹ் தூதர்கள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லுகிறார்கள். (2)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :6502.

அல்லாஹ்வுடைய பாதையில் அல்லாஹ்வின் மார்க்கத்தில் இந்த இஸ்திகாமவிற்கு இல்ம்  அவசியமாக இருக்கும்.

அல்லாஹ்விற்கு என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்வை எப்படி திருப்தி படுத்தவேண்டும்? நபி யார்? நபிக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? என்ற அவர்களிடம் இருக்கின்ற அறியாமை, அவர்களை அல்லாஹ்வை விட்டும் தூரமாக்கி விட்டது. அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்தும் தூரமாக்கி விட்டது.

எனவே தான், இமாம் இப்னுல் கய்யூம் சொல்கின்றார்கள்;

அல்லாஹ்வுடைய மார்க்கத்தைக் கொண்டுதான் அல்லாஹ்வை அறிய முடியும். அதைக் கொண்டுதான் அல்லாஹ்வை வணங்க முடியும்.

அல்லாஹ்வை அந்த இல்மைக் கொண்டுதான் நினைவு கூற முடியும். அல்லாஹ்வுடைய உண்மையான தவ்ஹீதை இல்மைக் கொண்டு தான் அறிய முடியும்.

இந்த மக்கள் கூட்டம் கூட்டமாக ஷிர்கில் விழுகின்றார்கள். ஷிர்க் என்றால் என்னவென்றே தெரியவில்லை. தவ்ஹீதிலிருந்து, ஈமானிலிருந்து, அந்த பரிசுத்த கலிமாவிலிருந்து வெளியேறி கொண்டே இருக்கிறார்களே! தவ்ஹீத் என்றால் ஈமான் என்றால் என்னவென்று தெரியவில்லை.

மேலும் சொல்கிறார்கள்:

இந்த இல்மைக் கொண்டு தான் அல்லாஹ்வை அடைய முடியும். அல்லாஹ்வின் பாதையில் பயணிக்க கூடியவர்கள் அல்லாஹ்வின் பக்கம் நேர்வழி அடைகிறார்கள்.

அல்லாஹ்வுடைய நெருக்கத்தை பெற்றவர்கள் இந்த இல்ம் வழியாகதான் சென்று இருக்கிறார்கள்.

அவர்களில் குறைவு செய்தவர்கள் பாவிகளும் கூட அவர்கள் திருந்தி நேரான பாதையை அடைய வேண்டுமென்றால், அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அவர்கள் கற்றுக் கொண்டு அதன்படி செயல்படுவதன் மூலமாக தான் அவர்கள் அதையும் அடைந்து கொள்வார்கள்.

அதுபோன்று, இக்லாஸ் நம்முடைய இல்மில் நம்முடைய அமலில் ஒவ்வொன்றிலும் நமக்கு அல்லாஹ்வுடைய இக்லாஸ் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வுக்காக என்ற எண்ணம் இருக்க வேண்டும். இந்த எண்ணம் இல்லையென்றால் மக்களின் வாழ்வில் நல்லவராக மக்களை விட்டு தடுத்து விட்டால் அவனை விட மோசமானவனாக யாரும் இருக்க மாட்டார்கள்.

கண்காணிப்பவர் இருந்தால் மிக நல்லவராக இருப்பான். கண்காணிப்பவர் இல்லை என்றால் மோசமானவனாக மாறிவிடுவான்.

இஃக்லாஸ் ஒரு மனிதனை அல்லாஹ்வின் மார்க்கத்தில் நிலையாக,உறுதியாக, தடுமாற விடாமல் அவனை பாதுகாக்கக்கூடிய பிரதியாக இருக்கும்.

அதுபோன்று, அல்லாஹ்விடத்தில் துஆ செய்து கொண்டே இருப்பது.

யா அல்லாஹ்! என்னை உன்னுடைய மார்க்கத்தில் உறுதியாக்கி வை. என்னுடைய உள்ளத்தை உன்னுடைய மார்க்கத்தில் பலப்படுத்தி வை.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடைய ஆச்சரியமான ஒரு துஆவை பாருங்கள்.

உம்மு சலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் ஷஹ்ர் இப்னு ஹவ்ஷப் என்ற தோழர் வருகிறார். அன்னையே! நபியவர்கள் அதிகமாக செய்த துஆவை எனக்கு சொல்லித் தாருங்கள்என்று கேட்டார்கள்.

உம்மு சலமா ரழியல்லாஹு அன்ஹா சொன்னார்கள்;

يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

அவர்களுடைய துஆக்களில் அதிகமான துஆ,உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் புரட்டி வை. இதுதான் அவர்களின் துஆவில் அதிகமான துஆவாக இருந்தது.

அன்னை உம்மு சலமா ரழியல்லாஹு அன்ஹா சொல்லுகின்றார்கள்;அல்லாஹ்வின் தூதரே! இப்படி ஒரு துஆவை இவ்வளவு அதிகம் செய்கிறீர்களே? என்று கேட்டபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லுகிறார்கள்.

«يَا أُمَّ سَلَمَةَ إِنَّهُ لَيْسَ آدَمِيٌّ إِلَّا وَقَلْبُهُ بَيْنَ أُصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللَّهِ، فَمَنْ شَاءَ أَقَامَ، وَمَنْ شَاءَ أَزَاغَ»

ஆதமுடைய மக்களின் உள்ளங்களெல்லாம் அல்லாஹ்வுடைய விரல்களில் இரண்டு விரல்களுக்கு இடையில் இருக்கின்றன.

யாரை அல்லாஹ் நாடுகின்றானோ,இந்த மார்க்கத்தில் அவரை உறுதிப்படுத்தி விடுகிறான். யாரை அல்லாஹ் நாடுகின்றானோ,அவர்களை இந்த மார்க்கத்தில் இருந்து அல்லாஹ் வெளியேற்றி விடுகின்றான்.

அறிவிப்பாளர் : உம்மு சலமா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : திர்மிதி,எண் : 3522, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் வரக்கூடிய முஆத் என்ற அந்த கண்ணியத்திற்குரிய மார்க்க அறிஞர் சொல்லுகின்றார்கள்.

உங்களுக்கு வேண்டுமானால் குர்ஆனின் வசனத்தை படித்துப்பாருங்கள்.

{رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا}

யா அல்லாஹ்! எங்களுக்கு நீ நேர்வழி காட்டியதற்கு பிறகு,எங்களது உள்ளங்களை அதிலிருந்து கோணலாக்கி வைத்து விடாதே. (அல்குர்ஆன் 3 : 8)

அதுபோன்று, அல்லாஹ்வின் வேதத்தை அதிகமாக ஓதுவது. அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் அல்லாஹ்வின் மார்க்கத்தோடு தொடர்புடைய நல்லவர்களோடு நாம் பழக்கம் வைப்பது.

இதுபோன்ற முயற்சிகள், நம்மை அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருக்க வைக்கும். நம்மை பலமாக இருக்க வைக்கும்.

அதற்கு மாற்றமாக பாவங்களில் நஃப்ஸை கட்டவிழ்த்து விடுவது, பாவிகளோடு நட்பு வைப்பது, பழக்கம் வைப்பது, கெட்டவர்களோடு பழகுவது, மார்க்க விஷயங்களில் அலட்சியமாக இருப்பது, மார்க்க கல்வியை தேடாமல் இருப்பது, அல்லாஹ்வின் வேதத்தோடு தொடர்பு இல்லாமல் இருப்பது, அல்லாஹ்வின் நினைவிலிருந்து மறதியாக இருப்பது, இவைகளெல்லாம் மார்க்கத்தில் ஒரு மனிதனை பலவீனப்படுத்தி. அல்லாஹ்விடமிருந்து அவனை தூரமாக்கிவிடும்.

இதே நிலை நீடிக்குமானால். ஈமானில் அவனுக்கு மரணம் வருமா? என்பது கேள்வி ஆகிவிடும்.

அல்லாஹ் சொல்கின்ற அந்த வசனத்தை பாருங்கள்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3:102)

இமாம் தபரி சொல்லுகின்றார்கள்;நீங்கள் முஸ்லிம்களாகவே வாழுங்கள். அப்போதுதான் நீங்கள் முஸ்லிம்களாக மரணிப்பீர்கள், என்ற விஷயத்தை தான் அல்லாஹ் இப்படி அழுத்தமாக சொல்லுகின்றான்.

ஆகவே, வணக்க வழிபாட்டோடு வாழ்வோமாக! தவ்பாவோடு இஸ்திஃபாரோடு வாழ்வோமாக!

அல்லாஹ்விடத்தில் துஆ செய்தவர்களாக,நன்மைகளை ஏவியவர்களாக, தீமைகளிலிருந்து தாமும் விலகி மக்களையும் விலக்கக் கூடியவர்களாக வாழ்வோமாக! அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா தன்னுடைய வேதத்தில் நமக்கு அருள்புரிவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ: أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ المَرْءَ لاَ يُحِبُّهُ إِلَّا لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ " (صحيح البخاري-16)

குறிப்பு 2)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ اللَّهَ قَالَ: مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالحَرْبِ، وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا، وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي (صحيح البخاري- 6502)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/