உயர்ந்தோன் நினைவால் உள்ளங்கள் நடுங்கட்டும்! | Tamil Bayan - 347
உயர்ந்தோன் நினைவால் உள்ளங்கள் நடுங்கட்டும்
ஜுமுஆ குத்பா தலைப்பு : உயர்ந்தோன் நினைவால் உள்ளங்கள் நடுங்கட்டும்
வரிசை : 347
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 13-03-2015 | 22-05-1436
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வின் அச்சத்தை எனக்கும் உங்களுக்கும்நினைவூட்டியவனாக, அல்லாஹ்வின் பயத்தை முன்வைத்து வாழும்படி எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக, வாழ்க்கையின் எல்லா இடங்களிலும், எல்லாத் தொழில்களிலும், எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வின் அச்சத்தை முன்வைத்து வாழும்படி எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ்வுடைய நினைவை பற்றிய சில விஷயங்களை இன்ஷா அல்லாஹ் இந்த ஜும்ஆவில் பார்ப்போம்.
நம்மை படைத்து பரிபாலிக்கக்கூடிய அந்த இறைவனுடைய நினைவு இல்லாமல் எந்த ஒரு உள்ளமும் இருக்கக்கூடாது.
உலகத்தில் உள்ள எல்லா படைப்புகளும் தன்னை படைத்த இறைவனை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றன.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான்:
وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ
ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்க வில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. (அல்குர்ஆன் 17:44)
இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு படைப்பும் அல்லாஹ்வை நினைவு கூறாமல் இல்லை. அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து துதிக்காமல் இல்லை. கடலில் உள்ள மீன்கள், ஆகாயத்தில் பறக்கக் கூடிய பறவைகள், செடிகொடிகள், நட்சத்திரம், சூரியன், சந்திரன், வானவர்கள் என்று எல்லா படைப்புகளும் துதித்துக் கொண்டிருக்கின்றன.
இப்படி ஏராளமான படைப்புகள் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருந்தாலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன், தான் படைத்த படைப்புகளில் சிறந்த படைப்பான மனிதன் தன்னை நினைவு கொள்வதை அல்லாஹ் விரும்புகிறான்.
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ
என்னை நினைவுக் கூறுங்கள்.நான் உங்களை நினைவுகூறுகிறேன். (அல்குர்ஆன் 2 : 152)
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் சொல்வதாக ஹதீஸ் குதூஸில் நமக்கு சொல்கிறார்கள்.
وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ
அடியான் என்னை தன் மனதில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் மனதில் நினைவு கூறுகிறேன். அடியான் என்னை ஒரு சபையில் நினைவுகூர்ந்தால் அதைவிட சிறந்த சபையில் நான் அந்த அடியானை நினைவு கூறுகிறேன் என்று. (1)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரிஎண் : 7405.
இந்த ஹதீஸிலிருந்து இந்த வசனத்திலிருந்து நமக்கு என்ன விளங்குகிறது?அல்லாஹு தஆலா அவன் விரும்புகிறான்;நாம் அவனை நினைவு கூறவேண்டும்,அவனை போற்றிப் புகழவேண்டும்,அவனுடைய நினைவிலிருந்து நமது உள்ளத்தை கண் சிமிட்டும் நேரம் கூட மறந்து வைத்து இருக்கக் கூடாது.
மறதி ஏற்படும்போதெல்லாம் அல்லாஹ்வுடைய திக்ரைக் கொண்டு அந்த உள்ளத்தை பசுமைப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
கண்ணியத்திற்குரிய தோழர் ஒருவர் வந்து கேட்கிறார். யா ரசூலுல்லாஹ்! எனக்கு நீங்கள் உபதேசம் செய்யுங்கள்!
(தோழர்கள் உடைய பண்பாடு அப்படி தான் இருந்தது. மார்க்கத்தில் அவர்கள் கொண்டிருந்த பற்று ஆர்வம், ஆசை அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைவதில் அவர்களுக்கு இருந்த போட்டி மிகப்பெரிது.
இன்றைய கால மக்களுக்கு எப்படி உலக செல்வங்களில், இந்த பதவிகளில், இந்த ஆடம்பர வாழ்க்கையில் போட்டி, பொறாமை இருக்கிறதோ, ஸஹாபாக்களுக்கு ஆகிறத் விஷயத்தில் அந்தப் போட்டி இருந்தது.
பொறாமை இருக்கவில்லை. முந்திக் கொண்டு இருந்தார்கள். அல்லாஹ்வுடைய தூதர் இடத்தில் வந்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்டார்கள்.
நான் எப்படி அல்லாஹ்வை நெருங்குவது? உங்களோடு நான் மறுமையில் எப்படி இருப்பது? ஜன்னத்துல் பிர்தௌஸ் எப்படி கிடைக்கும்? கேள்வி கணக்கில்லாமல் செல்லக்கூடிய அந்த முதல் மக்களில் நானும் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமே! எனக்கு அப்படிப்பட்ட அமலை சொல்லித் தாருங்கள் என்று கேட்டார்கள்.)
அந்தத் தோழர் இப்படிதான் கேட்கிறார். அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நீங்கள் வசியத்தை செய்யுங்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் சொல்கிறார்கள்; அல்லாஹ்வை பயந்து வாழ்! என்று. மீண்டும் அந்த தோழர் கேட்கிறார். அல்லாஹ்வின் தூதரே! மேலும், எனக்கு நஸீஹத் செய்யுங்கள் என்று.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்;
«لَا يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ»
அல்லாஹ்வுடைய நினைவால் உன்னுடைய நாவு எப்போதும் ஈரமாகவே இருக்கட்டும்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு புஸ்ர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னுமாஜா,எண் : 3793, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
ரசூலுல்லாஹ் உடைய இந்த அறிவுரை ஒவ்வொரு முஸ்லிமும் கடைபிடிக்க வேண்டியது. ஒவ்வொரு முஸ்லிமும் பின்பற்றவேண்டிய அறிவுரை. அல்லாஹ்வுடைய திக்ர் இல்லாமல் வாழமுடியாது.
தொழுகை அல்லாஹ்வுடைய திக்ர். அல்லாஹ் கூறுகிறான் :
وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي
என்னை தியானித்துக்கொண்டே இருக்கும்பொருட்டு தொழுகையைக் கடைப்பிடிப்பீராக. (அல்குர்ஆன் 20:14)
மூசா நபிக்கு அல்லாஹ் சொல்லுகிறான்;மூசாவே! என்னுடைய நினைவு உம்முடைய உள்ளத்தில் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக நீர் தொழுகையை நிலை நிறுத்து என்பதாக.
وَلَا تَنِيَا فِي ذِكْرِي
என்னை நினைவு கூறுவதில் நீங்கள் சோர்ந்து விடாதீர்கள். (அல்குர்ஆன் 20:42)
மூஸா நபியவர்கள் அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறார்கள்;
وَأَشْرِكْهُ فِي أَمْرِي (32) كَيْ نُسَبِّحَكَ كَثِيرًا (33) وَنَذْكُرَكَ كَثِيرًا
என் காரியங்களில் அவரையும் கூட்டா(ளியா)க்கி வை. நாங்கள் (இருவரும்) உன்னை அதிகமதிகம் துதித்து புகழ்வதற்காக, மேலும் உன்னை அதிகமாகவே நினைவு கூர்வதற்காக. (என்று மூஸா பிரார்த்தனை செய்தார்). (அல்குர்ஆன் 20:32-34)
ஒரு நபி தனது சகோதரனுக்கு அல்லாஹ்விடத்தில் நுபுவ்வத்தை கேட்கிறார்கள். அதற்கு அவர் சொல்லக்கூடிய காரணம், யா அல்லாஹ்! என்னோடு இன்னொருவர் உன்னை தஸ்பீஹ் செய்யவேண்டும். என்னோடு இன்னொருவர் உன்னை திக்ரு செய்ய வேண்டும்.
அதற்கு எனக்கு அவரை துணையாக, எனக்கு ஒரு ஆதரவாக நீ அவரையும் நபியாக ஆக்கி கொடு.
திக்ர் என்பது அவ்வளவு முக்கியமான ஒன்று. இந்த திக்ர் அல்லாஹ்வுடைய வல்லமையை நினைக்கும். அல்லாஹ்வுடைய அந்த "ருபூபிய்யத்" -படைத்து பரிபாலிக்கின்ற அவனுடைய அந்த வல்லமை, "உலூஹிய்யத்" -வணங்குவதற்கு தகுதியான ஒரே இறைவன், ஆட்சி அதிகாரங்களில் அவனுக்கு இணையில்லை, துணை இல்லை, சமமில்லை. அவனுடைய அழகிய பண்புகளில் அவனுக்கு இணையில்லை, துணையில்லை, சமமில்லை.
இப்படிப்பட்ட ஒரு இரட்சகனை, இப்படிப்பட்ட ஒரு இறைவனை இந்த உள்ளம் நினைக்கும்போது அப்போதுதான் அந்த உள்ளத்தில் நல்ல எண்ணங்கள் பிறக்கின்றன.
அந்த உள்ளம் ஷைத்தானிடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. கெட்ட ஆசைகள், மனோ இச்சையின் தீமைகள் அந்த உள்ளத்தில் குடிகொண்டு அந்த மனிதனை பாவத்திலும், படுகுழியில் தள்ளுவதிலிருந்து அந்த உள்ளம் பாதுகாக்கப்படுகிறது, எப்போது அல்லாஹ்வின் நினைவால் அந்த உள்ளம் நடுங்கிக் கொண்டிருக்குமோ.
அல்லாஹு தஆலா ஸூரத்துல் அன்ஃபாலில் இறை நம்பிக்கையாளர்களை அவன் வர்ணிக்கின்ற அந்த வர்ணனையை பாருங்கள்.
நாம் நமக்கு சில அடையாளங்களை வரையறைகளை வைத்து இருக்கின்றோம். அல்லாஹு தஆலா நமக்கென்று சில வரையறைகளை இலக்கணங்களை சொல்லுகிறான். இந்த இரண்டும் பொருந்துகிறதா? என்று நாம் பார்க்கவேண்டும்.
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ (2) الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ (3) أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும்; அல்லாஹ்வுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய நம்பிக்கை (மென்மேலும்,) அதிகரிக்கும். அவர்கள் தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பார்கள். அவர்கள் தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள். இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் பல உயர் பதவிகளும் மன்னிப்பும் உண்டு; இன்னும், கண்ணியமான உணவும் உண்டு. (அல்குர்ஆன் 8 : 2-4)
அல்லாஹு தஆலா, தன்னுடைய அடியார்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற பண்புகளை நமக்கு வர்ணிக்கின்றான்.
அந்த பண்புகளை தேடி, படித்து, அறிந்து கொண்டு அந்த பண்புகளின் படி நாம் வாழ வேண்டும். அல்லாஹ் நம்மை பொருந்திக்கொள்ள வேண்டும்.
இன்று, உடல் சுகம் இல்லை என்றால் மருத்துவரிடத்தில் செல்வதற்கு நேரம் இருக்கிறது. சிலரை நீங்கள் பார்த்திருக்கலாம்; கன்னத்திலோ, கையிலோ எங்கோ ஒரு பருவு இருக்கும் அல்லது ஒரு புள்ளி இருக்கும். அதை நீக்குவதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள். எவ்வளவு லட்சங்களை கோடிகளை செலவு செய்கிறார்கள்.
ஆனால் அல்லாஹ் அந்த வெளிரங்க அழகை பார்ப்பதில்லை. மாறாக, நம்முடைய ஆன்மா நம்முடைய கல்ப் உடைய அழகை பார்க்கிறான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
«إِنَّ اللهَ لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ»
அல்லாஹ் உங்களுடைய உருவங்களையோ உங்களுடைய செல்வங்களையோ அல்லாஹ் பார்ப்பதில்லை. மாறாக, அல்லாஹ் உங்களுடைய கல்புகளை அல்லாஹ் பார்க்கிறான். உங்களுடைய செயல்களை அல்லாஹ் பார்க்கிறான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 2564.
நம்முடைய கல்பில் என்ன இருக்கிறது? ஹராம் என்பது ஒரு நஜிஸ். மலம் ஜலம் மட்டுமல்ல நஜீஸ். ஹராம் -அல்லாஹ் தடுத்த இச்சைகள், அல்லாஹ் தடுத்த பாவங்கள், அல்லாஹ் தடுத்த ஹராமான வழியில் செல்வத்தை சேர்ப்பது, இதுவும் நஜீஸ் -அசுத்தமான ஒன்று.
இந்த உள்ளத்தில் என்ன இருக்கின்றது? அல்லாஹ்வை மறக்கக்கூடிய துன்யா இருக்கிறதா?
முஃமின்களிடத்தில் துன்யா இருக்கும். ஆனால், அந்த துன்யா முஃமினை அவனுடைய ரப்பை நினைவு கூறுவதிலிருந்து தடுக்காது, தடுக்கக் கூடாது.
அப்படி என்றால் அந்த துன்யா அவனுக்கு ஆகிரத்துடைய துணைச் சாதனம். அந்த துன்யாவை அல்லாஹ் பழிக்கவில்லை.
எந்த துன்யாவால் அல்லாஹ்வை மறக்கிறீர்களோ, மறுக்கிறீர்களோ, அவனுடைய சட்டங்களை மீறுகிறீர்களோ, ஹராமை செய்வதற்கு இந்த துன்யா உங்களை தூன்டுகிறதோ, அல்லாஹ்வின் மார்க்க வரம்புகளை மீறுவதற்கு எந்த துன்யா உங்களை அழைக்கின்றதோ, அந்த துன்யாவை அல்லாஹ் சொல்லுகிறான்.
رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ
பல ஆண்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பிவிடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறிவிடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள்.(அல்குர்ஆன் 24 : 37)
வசனத்தின் கருத்து : முஃமின்கள் எப்படிப்பட்ட வியாபாரம் செய்தாலும் சரி, எப்படிப்பட்ட கொடுக்கல்-வாங்கல் செய்தாலும் சரி, அவர்களை அவர்களுடைய அந்த கொடுக்கல் வாங்கல் வியாபாரம் அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதிலிருந்தும், ஜகாத்தை கொடுப்பதிலிருந்தும் அவர்களை மறக்கடிக்காது.
இன்று பல முஸ்லிம்களை நீங்கள் பார்க்கலாம்; கொடுக்கின்ற செல்வத்தைக் கொண்டு தங்களது வசதிகளைப் பெருக்கிக் கொண்டே இருப்பார்கள். அல்லாஹ்வுடைய ஹக்கை அதிலிருந்து எடுத்து வைத்தார்களா? ரப்புடைய ஹக்கை எடுத்ததற்கு பிறகு தான் மற்றவை.
ஒரு இருபது லட்சம் கிடைத்தால் இன்னொரு 20லட்சத்தை கடன் வாங்கி எப்படி ஒரு வியாபாரத்தை பெருக்கலாம்? என்றெல்லாம் கணக்கிட்டு கொண்டிருக்கக்கூடிய எத்தனை கோடீஸ்வரர்கள் அல்லாஹ்வுடைய விஷயத்தில் செத்த உள்ளம் உடையவர்களாக, உணர்வில்லாதவர்களாக இருக்கிறார்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்கிறான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ
நம்பிக்கையாளர்களே! உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் அல்லாஹ்வுடைய ஞாபகத்தை உங்களுக்கு மறக்கடித்துவிட வேண்டாம். எவரேனும், இவ்வாறு செய்தால் அத்தகையவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்தான். (அல்குர்ஆன் 63:9)
வசனத்தின் கருத்து : முஃமின்களே! செல்வத்தை தேட வேண்டாம் என்று நான் உங்களை சொல்லவில்லையே! நீங்கள் கோடீஸ்வரர்களாக இருக்க வேண்டாம் என்று நான் தடுக்கவில்லையே!
ரப்புல் ஆலமீன் என்ன சொல்கிறான்? உங்களுக்கு செல்வத்தை கொடுக்கக்கூடிய, வழங்கக்கூடியஅந்த ரப்பை மறக்க வைத்து விடவேண்டாம். அதை தானே அல்லாஹ் சொல்கின்றான்.
மனிதன் என்ன நினைக்கிறான்? என் செல்வம், நான் சம்பாதித்தது என்று.
அல்லாஹ் சொல்கிறான்:
يَاأَيُّهَا النَّاسُ أَنْتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ
மனிதர்களே! நீங்கள் அனைவரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ்வுடைய உதவி தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ முற்றிலும் தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான். (அல்குர்ஆன் 35:15)
பிறந்ததில் இருந்து இறப்பு வரை நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்களாக இருக்கின்றீர்கள்.
وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا
ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருந்த நிலைமையில், உங்கள் தாய்மார்களின் வயிற்றிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். (அல்குர்ஆன் 16 : 78)
உனது தாயின் வயிற்றிலிருந்து நீ வெளியே வரும்போது உனக்கு ஏதாவது தெரியுமா? அறிவில் جاهلசெல்வத்தில் فقير. உடல் வலிமையில் ஒரு பலவீனமான படைப்பு.
சாதாரண ஒரு கோழிக்குஞ்சு கூட அதனுடைய முட்டையில் இருந்து வெளியேறியதற்கு பிறகு துள்ளிக்குதித்து ஓடுகிறது. அதுபோன்று ஒரு கன்று, ஒரு மீன்குஞ்சு.
ஆனால், இந்த மனிதன் நடப்பதற்கே பல மாதங்கள். சுயமாக பிடித்து குடிப்பதற்கு பல மாதங்கள். கண்ணில் பார்வை வருவதற்கு பல மாதங்கள். சத்தங்களை புரிந்து கொள்வதற்கு பல மாதங்கள். தன் சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பல மாதங்கள்.
இப்படிப்பட்ட பலவீனமான அடியான், அல்லாஹ் அவனுக்கு செல்வத்தை கொடுத்தபோது,
قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ عِنْدِي أَوَلَمْ يَعْلَمْ أَنَّ اللَّهَ قَدْ أَهْلَكَ مِنْ قَبْلِهِ مِنَ الْقُرُونِ مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةً وَأَكْثَرُ جَمْعًا وَلَا يُسْأَلُ عَنْ ذُنُوبِهِمُ الْمُجْرِمُونَ
அதற்கவன் ‘‘ (என்னிடம் இருக்கும்) பொருள்களை எல்லாம் என் சொந்த அறிவி(ன் திறமையி)னால்தான் நான் அடைந்தேன். (இதில் அல்லாஹ்வின் அருள் ஒன்றுமில்லை)'' என்று (பதில்) கூறினான். இவனுக்கு முன்னிருந்த கூட்டத்தார்களில் இவனைவிட பலசாலிகளாகவும், இவனைவிட அதிகப் பொருள் உடையவர்களாகவும் இருந்த எத்தனையோ பேர்களை அல்லாஹ் நிச்சயமாக அழித்திருக்கிறான் என்பதை இவன் அறியவில்லையா? குற்றவாளிகளிடம் அவர்களின் பாவங்களைப் பற்றி கேட்கப்பட மாட்டாது. (அதற்குரிய தண்டனையை அவர்கள் அடைந்தே தீருவார்கள்.) (அல்குர்ஆன் 28:78)
மனிதன் எனது திறமையால் எனக்கு கொடுக்கப்பட்டது என்று சொல்கிறானே! அல்லாஹ் கொடுத்த செல்வத்தை எடுப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது?
أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ
உங்களுக்கு கொடுத்த கண்பார்வை, அறிவு இவற்றை எல்லாம் நான் பறித்துவிட்டால் உங்களுக்கு யாராவது கொடுக்க முடியுமா? (அல்குர்ஆன் 10:31)
வேறு ஒரு கடவுள் உங்களுக்கு இருக்கிறாரா? அதைக்கொண்டு வந்து உங்களுக்கு கொடுப்பதற்கு.
எனது திக்ரை மறந்துவிடாதே! பிரச்சினையில் சிக்கி விடுவாய், என்று அல்லாஹ் நம்மை எச்சரிக்கிறான்.
وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنْسَاهُمْ أَنْفُسَهُمْ أُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வை (நிராகரித்து அவனை முற்றிலும்)மறந்து விட்டவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். ஏனென்றால், (அதன் காரணமாக) அவர்கள் தம்மையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்துவிட்டான். இவர்கள்தான் பெரும்பாவிகள் ஆவார். (அல்குர்ஆன் 59:19)
நீ அல்லாஹ்வை மறந்தால் உன்னை உனக்கு அல்லாஹ் மறக்க வைத்து விடுவான். ஆபத்து சாதாரணமான ஆபத்து அல்ல.
இறுதியாக நீ எந்த இடத்தில் வரவேண்டுமோ,யாரிடமிருந்து நீ தப்பிக்க முடியாதோ,அந்த ரப்புக்கு முன்னால் நீ வரும் போது உன்னை யார் காப்பாற்றுவார்கள்?
அல்லாஹ் கேட்கிறான்;
لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ (1) وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ (2) أَيَحْسَبُ الْإِنْسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ (3) بَلَى قَادِرِينَ عَلَى أَنْ نُسَوِّيَ بَنَانَهُ
மறுமை நாளின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.(குற்றம் செய்தவனை) நிந்திக்கும் அவனுடைய மனசாட்சியின் மீதும் நான் சத்தியம் செய்கிறேன். (இறந்து உக்கி மண்ணாய்ப் போன) அவனுடைய எலும்புகளை, நாம் ஒன்று சேர்க்கமாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறானா? அவ்வாறல்ல! அவனுடைய (சரீர) அமைப்பை (இறந்த பின்னரும் முன்னிருந்தபடி) சரிப்படுத்த நாம் ஆற்றலுடையோம். (அல்குர்ஆன் 75:1-4)
மனிதன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான்?தப்பித்து விடுவோம் என்றா? இவனுடைய எலும்புகளை அல்லாஹ் ஒன்று சேர்த்து இவனை எழுப்ப மாட்டோம் என்றா?எங்கே ஓடுவான்?
எங்கும் உனக்கு பாதுகாக்கக்கூடிய பாதுகாக்கும் இடம் இருக்காது. உனது ரப்பிடத்தில் வந்து தான் நீ நிற்க வேண்டும்.
அல்லாஹ் என்ன விரும்புகிறான்? அடியார்களே! என்னை நினைவு கூறுங்கள். உங்களது உள்ளம் பசுமை அடையும்;உங்களது உள்ளம் விசாலம் அடையும்.
உலகத்தில் உள்ள எல்லாப் படைப்பும் மனிதனுக்கு நெருக்கத்தை கொடுக்கும், திடுக்கத்தை கொடுக்கும், சஞ்சலத்தைக் கொடுக்கும்,அவனது நிம்மதியை போக்கிவிடும்.
ஆனால், அல்லாஹ்வுடைய நினைவால் உள்ளம் விசாலம் அடைகிறது,உள்ளம் நிம்மதி அடைகிறது,உள்ளம் ஒரு பசுமையான பூங்காவை போன்று மாறுகிறது.
துன்யாவை நினைக்க நினைக்க உள்ளம் இருளடித்து கொண்டே செல்கிறது. துன்யாவை பற்றி பயப்பட பயப்பட உள்ளம் நெருக்கடிக்கு ஆளாகி கொண்டே போகிறது.
அரசாங்கத்தை நினைத்தோ அல்லது வேறு எந்த ஒன்றை நினைத்தோ உள்ளம் பயப்பட பயப்பட இந்த உள்ளத்தில் வெறுமை, வெறுட்ச்சி இந்த உள்ளத்தில் இருள் கவ்விக் கொள்கிறது.
அல்லாஹ்வின் நினைவால் இந்த உள்ளம் பயப்பட பயப்பட விசாலம் அடைகிறது, நிம்மதி அடைகிறது. ஒரு பசுமையான பூங்காவை போன்று இந்த உள்ளத்தை அல்லாஹ் மாற்றி விடுகின்றான்.
அல்லாஹ் சொல்கிறான் :
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே!) அறிந்துகொள்வீராக.(அல்குர்ஆன் 13 : 28)
இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ் விளக்கம் சொல்கிறார்;இந்த உள்ளம் எப்படி உங்கள் உற்ற நண்பனை நீங்கள் பார்க்கும்போது,பிரியமான மனைவியை அல்லது பிள்ளைகளை பார்க்கும்போது. உள்ளத்தில் انسة(உன்சத்) -ஒரு இன்பம், ஒரு சுகம்,ஒருவிதமான அந்த இணக்கம் ஏற்படுகிறது.
இதற்கு எதிராக வெருட்சி வரும்.தனிமையில் இருக்கின்றபோது ஏற்படுவதைப் போல ஒரு உணர்வு ஏற்படும்.
இமாம் தபரி விளக்கம் சொல்கிறார்கள்; அல்லாஹ்வை நினைக்கும் போது, அவர்களுடைய உள்ளங்கள் அப்படியே அமைதி பெற்றுவிடும். இன்பம் அடைந்து விடும்.
அல்லாஹ் நமக்கு கட்டளையாக சொல்லுகிறான், நம்முடைய பண்பாக அல்லாஹ் சொல்லுகிறான். அல்லாஹ்வுடைய திக்ரால் உங்களது உள்ளங்கள் நடுங்கட்டும் உள்ளத்தில் பயம் ஏற்படட்டும் என்று.
இன்று,நம்முடைய பல சகோதரர்களின் திக்ருகள் எப்படி இருக்கின்றன? பல மணிகளை வைத்து உருட்டிக் கொண்டே இருப்பார்கள். செய்வதை எல்லாம் செய்து கொண்டேருப்பார்கள்.
ஹாராமையும் பார்ப்பார்கள், வியாபாரத்தில் யோசனையும் செய்வார்கள். இப்படி எந்த ஒரு ஹலால், ஹராம் எந்த ஒரு செயலில் இருந்தாலும் சரி கையில் ஒரு மணி உருண்டு கொண்டே இருக்கும்.
கேட்டால் உள்ளத்தால் நினைவு கூறுகிறோம் என்று சொல்கிறார்கள்.
அல்லாஹ் சொல்கிறான்;
مَا جَعَلَ اللَّهُ لِرَجُلٍ مِنْ قَلْبَيْنِ فِي جَوْفِهِ
எந்த மனிதனுடைய உள்ளத்திலும் அல்லாஹ் இரண்டு உள்ளங்களை வைக்கவில்லை என்று. (அல்குர்ஆன் 33:4)
பேசவும் செய்வார்களாம்,அல்லாஹ்வை நினைவு கூறவும் செய்வார்களாம்.அதுவல்ல திக்ர் என்பது.
அல்லாஹ் என்று சொல்லும்போது அந்த வார்த்தையின் மகிமையை உணருங்கள். அல்லாஹ் என்று சொல்லும்போது இந்த ரப்புடைய மகத்துவம், இந்த ரப்பின் மீது அன்பு, இந்த ரப்பின் மீது ஆசை, அந்த ஒரு உள்ளுணர்வோடு உள்ளத்தில் ஏற்படுவதுதான் திக்ர்.
அல்லாஹ் என்ற பரிசுத்தமான வார்த்தை இருக்கின்றதே, இது சாதாரணமான சொல்லா? ஒரு நாளைக்கு ஒரு முஸ்லிம் எத்தனை முறை இந்த அல்லாஹ் என்ற சொல்லை சொல்கிறான் பாருங்கள்.
ஒரு நாளில் தொழுகையில் எத்தனை முறை இந்த அல்லாஹ் என்ற சொல்லை சொல்கிறான். அவன் அல்லாஹ்வின் வேதத்தை ஓதும் போது ஒரு வரிக்கு பலமுறை, ஒரு பக்கங்களில் பலமுறை அல்லாஹ் என்ற இந்த பெயரை சொல்லிக் கொண்டே இருக்கிறான்.
கண் திறந்ததிலிருந்து கண் மூடும் வரை அல்லாஹ், அல்லாஹ் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறான்.
என்றைக்காவது உலகத்தில் யாருக்காவது சடைவு வந்து இருக்கிறதா? என்று யோசித்துப்பாருங்கள்.
அல்லாஹ்வின் இந்த வார்த்தையின் மகிமையை பாருங்கள். இந்த உலகத்தில் எத்தனையோ புத்தகங்களை நீங்கள் படிக்கலாம். அந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர் தனது பெயரை வரிக்குவரி சொன்னால் என்ன செய்வீர்கள்? பக்கத்துக்கு பக்கம் தனது பெயரை சொன்னால் என்ன செய்வீர்கள்? மூடி வைத்து விடுவீர்கள். தூக்கி எறிந்து விடுவீர்கள்.
உங்களுக்கு பிரியமானவர் இந்த உலகத்தில் யாராக இருந்தாலும் சரி,எத்தனை முறை அவருடைய பெயரை நீங்கள் சொல்வீர்கள்? அப்படியே நீங்கள் சொன்னாலும் கேட்பவர் அதை கேட்பாரா? சலித்துபோய் விடுவார்.
நீங்கள் ஒரு முஸ்லிம் இடத்தில் பேசும் போது எத்தனை முறை "மாஷா அல்லாஹ்" எத்தனை முறை "இன்ஷா அல்லாஹ்" என்று சொல்கிறீர்கள். எத்தனை முறை "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" என்று சொல்கிறீர்கள்.
செல்பவருக்கு சடைவு கிடையாது, கேட்பவருக்கும் சடைவு கிடையாது.
குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள், வாலிபர்கள் முதல் ஒரு முஸ்லிம் தன்னுடைய வாழ்க்கையில் எத்தனை முறை இந்த அல்லாஹ் என்ற சொல்லை அவன் சொல்லுகிறான்.
இந்த முஸ்லிம் அதற்குப் பிறகும் மேலும், தொழுகையில் "அல்லாஹ் அக்பர்" என்ற தக்பீரில் ஆரம்பித்ததிலிருந்து கடைசியில் சலாம் சொல்லி,"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்" என்று முடிக்கின்ற வரை அல்லாஹ்வுடைய பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கின்றான்.
குர்ஆனை ஓதும்போது உச்சரித்து கொண்டே இருக்கின்றான். ஒரு வசனத்திற்கும் ஒரு ஆயத்திற்கும் பலமுறை அல்லாஹ்வின் பெயர்.
நினைத்துப் பார்த்திருக்கிறோமா?என்றைக்காவது சடைவு தட்டி இருக்கிறதா! அப்படி இந்த உண்மைக்கு இயற்கையை அல்லாஹ் அமைத்து வைத்திருக்கிறான்.
அந்த அல்லாஹ் என்ற பெயரை கேட்க, கேட்க இந்த உள்ளம் உயிரோட்டம் பெறுகிறது. ஒவ்வொரு முறையும் இந்த உள்ளத்திற்கு ஒரு புதிய இன்பம், சுகம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. ஈமான் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
அல்லாஹ் சொல்கிறான்:
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ
உண்மையான நம்பிக்கையாளர்கள் யாரென்றால், அல்லாஹ்வை (அவர்கள் முன்) நினைவு கூறப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் பயந்து நடுங்கிவிடும். (அல்குர்ஆன் 8:2)
உள்ளங்கள் நடுங்கும் என்றால் என்ன?
இமாம் தபரி அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்; அவன் அல்லாஹ் என்று கூறி விட்டால், அல்லது அவனுக்கு முன்னால் அல்லாஹ் என்று சொல்லப்பட்டு விட்டால், அவனது உள்ளம் பயந்து விடும். அல்லாஹ்வின் கட்டளைக்கு அவன் படிந்து விடுவான்.
அவனுடைய நினைவு வந்ததற்கு பிறகு அவனுடைய உள்ளம் எல்லாம் ஆட்டம் கண்டுவிடும். பயந்து விடும்.நடுங்கி விடுவான். அல்லாஹ்வை பயந்து அவனுடைய தண்டனையை பயந்து.
ஒரு மனிதன் தனது சிறிய தந்தையின் மகளிடத்தில் தவறாக நடந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே இருந்தான். அதற்கு ஒரு நேரமும் வந்துவிடுகிறது. பலவீனப்பட்ட அவள் தனது நிர்பந்தத்தினால் அதற்கு அவள் தயாராகவும் ஆகி விடுகிறாள்.
அந்த நேரத்தில் அந்தப் பெண்ணிடம் இருந்த ஒரே ஒரு ஆயுதம், தன்னை நெருங்க வந்த தனது தந்தையின் சகோதரனின் மகனிடத்தில் சொல்லுகிறாள். "இத்தக்கில்லாஹ்" அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
தன்னை ஹலாலான உறவு இல்லாமல் தனது நிர்பந்தத்தை, வறுமையை பயன்படுத்தி தனது கற்பை அடைய நினைத்த தனது தந்தையின் சகோதரனின் மகனிடத்தில் அந்தப்பெண் சொல்லுகிறாள். "இத்தகில்லாஹ்" அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் அவன் ஏற்படுத்திய இந்த மஹரை அவனுடைய அனுமதி இல்லாமல் ஹலால் இல்லாமல் பறித்து விடாதே!
யாரும் அவளை அடைய தடுப்பதற்கு இல்லை. அல்லாஹ்வை பயந்து அவளை விட்டு விட்டு ஓடோடி வந்து விடுகிறான். அல்லாஹ்விடத்தில் இதை குறித்து அவன் விடுதலை கேட்கிறான். பாதுகாப்பு கேட்கிறான். அல்லாஹ் அந்த அடியானை மன்னித்தது மட்டுமல்லாமல் அவனுடைய துன்பத்திலிருந்து அல்லாஹ் பாதுகாப்பு கொடுக்கிறான்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் :2215.
இவர்கள் தான் முஃமின்கள்.
கடன் வாங்கியோர் இடத்தில், அல்லாஹ்வைப் பயந்து கொள்! கடன் கொடுத்து விடு என்று சொன்னால் பார்த்துக்கொள்ளலாம் என்பான். அநீதி இழைக்கப்பட்டவன் அநீதி இழைத்தவனை பார்த்து, "அல்லாஹ்வை பயந்து கொள்" என்று சொன்னால், இன்னும் அதிகமாக செய்வேன் என்கிறான்.
இன்னும் சிலர், எங்களுக்கு தெரியும் அல்லாஹ்வை பயப்படுகிறதுக்கு, உன் வேலையை பாத்துக்கிட்டு போ என்றும் நாங்க அல்லாஹ் கிட்ட பேசிக்கிறோம் என்றும் சொல்வார்கள்.
இன்றைய முஸ்லிம்களுடைய நிலை, கொடுக்கல்வாங்கலில் அல்லாஹ்வுடைய நினைவு அல்லாஹ்வின் பயம் இல்லை. தொழில் துறைகளில், வியாபாரங்களில், அவர்களது குடும்ப வாழ்க்கையில் என்று எதிலும் இல்லை. இவர்களா முஃமின்கள்?
ஒரு முஃமின் அல்லாஹ்வின் சட்டத்தை பேணக் கூடியவராக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளை பேணக் கூடியவராக இருக்க வேண்டும். அது பயம்
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களை எதிரிகள் எல்லாம் இவர்களுடைய நீதத்தை பற்றி போற்றி புகழ்ந்து கொண்டிருக்க, ஒரு கிராமத்து மனிதர் சபையில் வந்து, உமரைப் பார்த்து, உமர்! நீர் நீதமாக நடப்பதில்லை. எங்களுக்கு வேண்டிய கொடைகளை கொடுப்பதில்லை. என்று சொல்கிறார்.
தானும் தன்னுடைய குடும்பமும் பட்டினியில் வாடிக்கொண்டிருக்க, பைத்துல்மாலில் இருந்து கோதுமைகளயும், கோதுமை மாவையும், தானியங்களையும் தனது முதுகில் சுமந்து கொண்டு வீடு வீடாக தேடிச்சென்று கொடுக்கக்கூடிய அந்த உமரைப் பார்த்து அந்த கிராமத்து மனிதர் இப்படி சொல்லுகிறார். நீ நீதமாக நடப்பதில்லை. மக்களுடைய கொடைகளை அவர்களுக்கு கொடுப்பதில்லை என்று.
எப்படி இருக்கும் அந்த உமருக்கு? கோபத்தால் சாட்டையை எடுக்கிறார்கள். அருகிலிருந்த சஹாபி குர்ஆனின் வசனத்தை ஓதுகிறார்கள். உமரே! அல்லாஹ் தன்னுடைய நபிக்கு ஏவிய கட்டளையை நான் உங்களுக்கு ஓதுகிறேன்.
خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ
மன்னிப்பை பற்றிப் பிடியுங்கள். நன்மையை ஏவுங்கள். அறியாத மக்கள் செய்யும் தவறுகளை நீங்கள் புறக்கணித்து விடுங்கள். (அல்குர்ஆன் 7:199)
உமர் அப்படியே உட்கார்ந்து விடுகிறார்கள். இவர்கள் மூஃமின்கள். அல்லாஹ்வின் நினைவால் உள்ளம் நடுங்க கூடியவர்கள்.
அல்லாஹ்வின் நினைவு என்பது அவர்களுடைய நாவுகளும் அல்லாஹ்வை நினைக்கும், அவர்களது உள்ளங்களும் அல்லாஹ்வை நினைக்கும் போது அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் தெரிய வேண்டும்.
பாவத்திலிருந்து விலகினார்களா? நன்மையின் பக்கம் விரைந்தார்களா? அல்லாஹ் சொல்கிறான்;
أَفَمَنْ شَرَحَ اللَّهُ صَدْرَهُ لِلْإِسْلَامِ فَهُوَ عَلَى نُورٍ مِنْ رَبِّهِ فَوَيْلٌ لِلْقَاسِيَةِ قُلُوبُهُمْ مِنْ ذِكْرِ اللَّهِ أُولَئِكَ فِي ضَلَالٍ مُبِينٍ
எவருடைய உள்ளத்தை இஸ்லாமை ஏற்க அல்லாஹ் விசாலப்படுத்தினானோ அவர், தன் இறைவனின் பிரகாசத்தில் இருக்கிறார். அல்லாஹ்வை ஞாபகம் செய்வதிலிருந்து விலகி, எவர்களுடைய உள்ளங்கள் (இறுகி) கடினமாகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். இவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 39:22)
இந்த இடத்தில் அல்லாஹ் என்ன சொல்கிறான்?. அல்லாஹ்வின் திக்ரை விடுவதால், அல்லாஹ்வின் திக்ரை புறக்கணிப்பதால், அல்லாஹ்வின் திக்ரை விட்டு உள்ளங்கள் தூரமாவதால், உள்ளத்தில் அப்படிப்பட்ட ஒரு நெருக்கடி ஏற்படுகின்றது. உள்ளம் இறுகிவிடுகிறது.
அல்லாஹ்வுடைய மார்க்கம், அல்லாஹ்வுடைய சட்டத்தை பற்றி அவர்களுக்கு நினைவு கூறப்பட்டால்,இவர்களை நேரான பாதையின் பக்கம் அழைக்கப்பட்டால்,ஹலால் ஹராமை இவர்களுக்கு சொல்லப்பட்டால்,அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.
அதன்படி செயல்படக் கூடிய மனப்பக்குவம் இல்லாதவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் துன்யா தான்.
فَأَعْرِضْ عَنْ مَنْ تَوَلَّى عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا (29) ذَلِكَ مَبْلَغُهُمْ مِنَ الْعِلْمِ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِمَنِ اهْتَدَى
(நபியே!) எவன் என்னைத் தியானிக்காது விலகி, இவ்வுலக வாழ்க்கையைத் தவிர, (மறுமையை) விரும்பாதிருக்கிறானோ, அவனை நீர் புறக்கணித்து விடுவீராக. இவர்களுடைய கல்வி ஞானம் இவ்வளவு தூரம்தான் செல்கிறது (இதற்கு மேல் செல்வதில்லை.) நிச்சயமாக உமது இறைவன், தன் வழியிலிருந்து தவறியவன் யாரென்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவன் யாரென்பதையும் அவன் நன்கறிவான். (அல்குர்ஆன் 53 : 29,30)
ஒவ்வொருவரும் நம்முடைய நிலைமையை சீர் செய்ய வேண்டும். நாம் நம்முடைய உள்ளங்களை பண்படுத்த கடமைப்பட்டிருக்கிறோம்.
அல்லாஹு தஆலா நம்மை பார்த்து கேட்கிறான்;
أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ وَلَا يَكُونُوا كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ
நம்பிக்கை கொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைத்தும், அவன் இறக்கிவைத்த சத்திய (வசன)ங்களைக் கவனித்தும் பயப்படக்கூடிய நேரம் (இன்னும்) வரவில்லையா? இவர்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல், இவர்களும் ஆகிவிட வேண்டாம். (இவ்வாறே) அவர்கள் மீதும் ஒரு நீண்ட காலம் கடந்து விட்டது. ஆகவே, அவர்களுடைய உள்ளங்கள் கடினமாக இருகிவிட்டன. இன்னும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளாகி விட்டனர். (அல்குர்ஆன் 57 : 16)
சிரிப்பதற்கு அளவு இருக்கிறது. பொழுதுபோக்கு ஹலாலாக இருக்கும்பட்சத்தில் அதற்கும் அளவு இருக்கிறது. ஹராமான பொழுது போக்கின் பக்கம் ஒரு முஸ்லிம் நெருங்கவும் முடியாது.
உங்களுடைய நண்பர்களுடன் உங்களுடைய மகிழ்ச்சி, உங்களுடைய மனைவியுடன் உங்களுடைய மகிழ்ச்சி, உங்களுடைய பிள்ளைகளுடன் உங்களுடைய மகிழ்ச்சி, உங்களுடைய வியாபாரத்தில் உங்களுடைய மகிழ்ச்சி, உங்களுடைய பொழுதுபோக்கில் உங்களுடைய மகிழ்ச்சி, இந்த எல்லாவற்றிற்கும் ஒரு அளவு இருக்கிறது.
அல்லாஹ்வின் நினைவை உங்களுக்கு மறக்க வைக்காமல் இருக்க வேண்டும். அல்லாஹ்வின் அச்சத்தால் உள்ளம் நடுங்குவதிலிருந்து உங்களது உள்ளத்தை கடினமாக்கி விடக்கூடாது.
அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்களே, அந்த ஏழு வகையான கூட்டம் நிழலில் இருப்பார்கள் என்று.
அவர்கள்,அல்லாஹ்வை தனிமையில் நினைவுகூர்ந்து அவர்களுடைய கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
இன்று,குர்ஆன் ஓதுவது வாழ்க்கையிலிருந்து எவ்வளவு தூரம் சென்று விட்டது. அதுவும் குறிப்பாக தவ்ஹீத் என்பதற்கு ஒரு மாற்று அர்த்தம் கொடுக்கப்பட்டு,குர்ஆன் ஹதீஸ் என்பதற்கு ஒரு மாற்று அர்த்தம் கொடுக்கப்பட்டு, இந்த சமுதாயத்தில் எப்பொழுது சீரழிவுகள் தொடங்கினவோ, குர்ஆனை ஒவ்வொரு நாளும் எடுத்து ஓதுவது என்ற செயல் இதை பேசக்கூடிய முஸ்லிம்களின் வாழ்க்கையில் பார்க்கப்படாத ஒரு காரியமாக மாறிக்கொண்டே இருக்கிறது.
உங்களது வாழ்க்கையில் உங்களது நாட்களில் எந்த பகுதியை அல்லாஹ்வின் வேதத்தை ஓதுவதற்கு ஒதுக்குகிறீர்கள்? என்று யோசித்துப் பாருங்கள்.
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வின் இந்த நினைவு ஒன்று தான்,உங்களுடைய உள்ளங்களை பண்படுத்தக்கூடியது. அல்லாஹ்வின் வேதத்தோடு நமக்கு இருக்கக்கூடிய பசுமையான அந்த தொடர்பு,அல்லாஹ்வின் வேதத்தை ஓதுவது.
அதனுடைய பொருளையும் அறிந்து கொள்வது. அதனோடு வாழ்க்கையை எப்போதும் தொடர்புபடுத்தி வைத்திருப்பது. இது அல்லாஹ்வோடு நம்மை நெருக்கமாக்கி வைக்கிறது.
இந்த உள்ளத்தில் ஷைத்தானும், மனோ இச்சைகளும் அவ்வப்போது ஏற்படுத்தக்கூடிய அழுக்குகளை சுத்தப்படுத்துகிறது. தீய மனோஇச்சைகளிலிருந்து நமது உள்ளத்தை பாதுகாக்கிறது. அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் நம்மை நெருக்கமாக்குகிறது.
அல்லாஹு ஸுபுஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அவனது நினைவை பசுமையாக வைத்திருப்பதற்கு, அல்லாஹ்வுடைய திக்ரை உண்மையாக நினைவு கூறிய நன்மக்களில் ஆக்குவதற்கு அருள்புரிவானாக! அவனை மறந்தவர்களிலிருந்தும், அவனை மறப்பதிலிருந்தும் நம்மை தூரம் ஆக்குவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَقُولُ اللَّهُ تَعَالَى: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً " (صحيح البخاري- 7405)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/