HOME      Khutba      சோதனைகளுக்கு மத்தியில் (அமர்வு 2/2) | Tamil Bayan - 346   
 

சோதனைகளுக்கு மத்தியில் (அமர்வு 2/2) | Tamil Bayan - 346

           

சோதனைகளுக்கு மத்தியில் (அமர்வு 2/2) | Tamil Bayan - 346


சோதனைகளுக்கு மத்தியில்

ஜுமுஆ குத்பா தலைப்பு : சோதனைகளுக்கு மத்தியில் (அமர்வு 2-2)

வரிசை : 346

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 06-03-2015 | 15-05-1436

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக,பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வின் பயத்தை முன்னிறுத்தி தனது காரியங்களை அமைத்துக் கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக என்னுடைய உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலாஅவனுடைய அடியார்களை இந்த உலக வாழ்க்கையில் சோதிக்கின்றான்.

அவர்களுடைய இறை நம்பிக்கையை தரம் பிரிப்பதற்காக, அவர்களுடைய இஸ்லாமிய மார்க்கப் பற்றை உறுதிப்படுத்துவதற்காக, தீயவர்களை நல்லவர்களில் இருந்து பிரித்து எடுப்பதற்காக, உண்மையாளர்கள் யார் பொய்யர்கள் யார் என்பதை தெளிவாக தனிமையாக்கி விடுவதற்காக இப்படிப்பட்ட சோதனைகளை அல்லாஹு தஆலா இந்த உலகத்தில் கொடுக்கின்றான்.

ஒரு இறை நம்பிக்கையாளர் தனக்கு சோதனை ஏற்படும் போது அந்த சோதனை எந்த வகையான சோதனையாக இருந்தாலும் சரி,அந்த சோதனை நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைத்தான் பார்த்து வருகின்றோம்.

முதலாவதாக,அவரிடத்தில் ஸப்ரு -தன்னை அடக்கக் கூடிய, சகித்துக் கொள்ள கூடிய, இந்த சோதனைகளால் அல்லாஹ்வுடைய சட்டங்களை மீறாமல்,தனக்கு அல்லாஹ்வுடைய கட்டளை என்ன என்பதை அறிந்து அதன்படி நடக்கக் கூடிய மனப்பக்குவத்தை அவர் கொண்டு வர வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைத்தான் முதல் கட்டத்தில் ஸப்ரு என்று சொல்கிறார்கள்.

சோதனை ஏற்பட்ட அந்த நேரத்திலேயே அமைதி காப்பது. அல்லாஹ்விற்கு பிரியமில்லாத வார்த்தையை தன்னுடைய நாவிலிருந்து வெளிப்படுத்தாமல் இருப்பது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு நிகழ்வினை அனஸ் இப்னு மாலிக் அறிவிக்கின்றார்கள்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கப்ருக்கு அருகில் அழுதுகொண்டிருந்த ஒரு பெண்மணியை கடந்து செல்லும்போது அந்தப் பெண்மணியை பார்த்து சொன்னார்கள்:

«اتَّقِي اللَّهَ وَاصْبِرِي»

அல்லாஹ்வை பயந்து கொள். இன்னும் பொறுமையாக இரு என்று.

அந்தப் பெண்மணி நபியைப் பார்த்து தூர விலகிச் செல்லுங்கள். எனக்கு ஏற்பட்ட சோதனை உங்களுக்கு ஏற்படவில்லை.நான் இருக்கின்ற கஷ்டம் உங்களுக்கு தெரியாது என்பதாக சொல்லி விடுகின்றார்கள்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அந்த பெண் யாரென்று அறியவில்லை.

நபியவர்கள் அந்த இடத்தில் இருந்து சென்ற பிறகு, அந்தப் பெண்ணிடத்தில் சொல்லப்பட்டது;உங்களுக்கு இப்போது அறிவுரை செய்தவர்கள் அல்லாஹ்வுடைய நபி என்பதாக.

உடனே அந்தப் பெண் பயந்தவர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வீட்டிற்கு வருகிறார்கள். சொல்கிறார்கள்;அங்கே நான் எந்த காவலாளியும் பார்க்கவில்லை என்று.

பிறகு, அந்த பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் சொல்கின்றார்கள்; அல்லாஹ்வுடைய தூதரே!நான் தெரியாமல் பேசிவிட்டேன். நீங்கள் யார் என்று தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் அந்த பெண்மணிக்கு அறிவுரை கூறினார்கள்.

«إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى»

உனக்கு அந்த முதல் திடுக்கம் ஏற்படும்போது, முதல் தாக்கம் ஏற்படும்போது, அந்த நேரத்தில் நீ அமைதியாக இருக்க வேண்டும். அது தான் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொறுமை.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 1283.

இன்று மக்கள் என்ன செய்கின்றார்கள்? சோதனை நேரத்தில் யார் யாரை எல்லாம் ஏச வேண்டுமோ எல்லோரையும் ஏசி விடுவார்கள். அல்லாஹ்விலிருந்து, விதியிலிருந்து, வானவர்களிலிருந்து சுற்றியுள்ளவர்களிலிருந்து எல்லோரையும் ஏசி முடித்த பிறகு, சரி விடு, விதிப்படி நடக்கட்டும் என்று சொல்வார்கள்.

இப்படி ஒரு வார்த்தை ஒரு முஃமினை அவனுடைய கண்ணியத்திலிருந்து வெளிப்படுத்தி விடுகின்றது.

ஒரு முஃமினுடைய இறை நம்பிக்கையை பாழாக்கிவிடுகின்றது. முதல் கட்டத்திலேயே அவர் பொறுமை காக்க வேண்டும். தன்னை அடக்கி பழக வேண்டும். இதைத்தான் ஸப்ரு என்று சொல்வார்கள்.

ஸப்ரு என்று சொன்னால் தன்னை அடக்குவது, தன் நாவை, நப்ஸை அடக்குவது, தன்னை கட்டுப்படுத்துவது.

இது, முதலாவதாக பேண வேண்டிய ஒன்று. யாருக்கு இந்த சோதனை ஏற்பட்டதோ முதலாவதாக அவர் தன்னை அடக்கி கொள்ள வேண்டும்.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா இப்படிப்பட்டவர்களுக்கு தான் நற்செய்தி கூறுகின்றான்.

وَبَشِّرِ الصَّابِرِينَ

பொறுமை காக்கக் கூடியவர்களுக்கு, தன்னை அடக்க கூடியவர்களுக்கு நபியே! நீங்கள் நற்செய்தி கூறுங்கள். (அல்குர்ஆன் 2 : 155)

அல்லாஹ்விடத்தில் இருந்து சோதனைகள் ஏற்படும் போது அந்த நேரத்தில் தன்னை அடக்குவது,தன்னை கட்டுப்படுத்துவது.

அல்லாஹ் என்ன சொல்லி இருக்கின்றான்? இது யாரிடத்தில் இருந்து வந்தது? எதன் காரணமாக வந்த சோதனை? நாம் அல்லாஹ்விற்காக பொறுமையாக இருப்போம் என்று தன்னை நிலைப்படுத்துவது.

இரண்டாவதாக,அதைத் தொடர்ந்து அல்லாஹ்வுடைய விதியை ஏற்றுக் கொள்வது, அல்லாஹ்வுடைய விதியை பொருந்திக் கொள்வது.

அல்லாஹ் எனக்கு எதை விதித்தாலும் அல்ஹம்துலில்லாஹ். தான் ஒரு பாவமான காரியங்களை செய்திருந்தால் உடனடியாக அதிலிருந்து மீளுவதற்கு, அதிலிருந்து அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்ய வேண்டும்.

அதைத்தவிர எத்தகைய செய்தியாக இருந்தாலும், உலக சம்பந்தப்பட்ட சோதனை துன்பம், துயரம், கஷ்டம், பிரச்சனைகள் எது ஏற்பட்டாலும் சரி,உடனடியாக அல்லாஹ்வின் விதிப்படி நடந்தது. அல்லாஹ்வுடைய நாட்டப்படி நடந்தது என்று அல்லாஹ்விற்கு முன்னால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அல்லாஹ்வுடைய விதியைப் பொருந்தி கொள்ளக்கூடிய நிலைக்கு இரண்டாவதாக ஒரு முஃமின் வந்தாக வேண்டும்.

இது மிக முக்கியமான ஒன்று. ஒரு சோதனை ஏற்படும் போது, ஒரு மன நெருக்கடி ஏற்படும்போது, நம்முடைய உள்ளமானது அப்படியே இறுகிவிடுகின்றது. அப்படியே நெருக்கடிக்கு ஆளாகி விடுகின்றது.

மூச்சு கூட விட முடியுமா? என்ற அளவிற்கு உள்ளத்தில் பெரிய நெருக்கடி.நாம் பார்ப்பது நமக்கு தெரியாது. நாம் கேட்பது நம் காதில் விழாது. பசி எடுக்கும்.ஆனால்,சாப்பிட முடியாது.

எல்லாம் இருக்கும், ஆனால் எதையும் அனுபவிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு நம்முடைய மனம் ஆளாகிவிடுகின்றது.

ஒரு குறிப்பிட்ட ஒரு போரில் ஸஹாபாக்களுக்கு ஏற்பட்ட ஒரு துன்பத்தை அல்லாஹ் சொல்கின்றான்.

وَضَاقَتْ عَلَيْهِمْ أَنْفُسُهُمْ

அவர்களுடைய ஆன்மாக்களே அவர்களுடைய உள்ளத்தில் நெருக்கடிகளை உண்டாக்கிவிட்டது என்று. (அல்குர்ஆன் 9:118)

இதுதான் சோதனைகளில் சிக்குண்டவர்களின் நிலை பொதுவாக.

யா அல்லாஹ்! நீ விதித்தை நான் ஏற்றுக்கொண்டேன். நான் அதை ஒப்புக் கொண்டேன் என்ற ஒரு வார்த்தையை மனிதன் சொல்லும்போது, என்ற ஒரு கொள்கையில் உறுதியாய் மனதில் கொண்டு வரும் போது, நெருக்கடிக்கு ஆளான அவனுடைய உள்ளம், மூச்சைக் கூட வாங்க முடியாத அளவுக்கு நெருக்கடியில் இருந்த அவனுடைய உள்ளம்,வானம் பூமி அளவிற்கு, கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள அளவிற்கு அவனுடைய உள்ளம் அப்படியே விசாலமாகிவிடுகின்றது.

இதைத்தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையில் பார்க்கின்றோம்.

لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا

கவலைப் படாதே! அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான். (அல்குர்ஆன் 09:40)

இந்த சூழ்நிலையில் நம்மை வைத்தவன் அல்லாஹ். இந்த சூழ்நிலையில் இருந்து நம்மை பாதுகாப்பவனும் அல்லாஹ் தான். அல்லாஹ்வை தவிர இந்த சூழ்நிலையில் இருந்து நம்மை பாதுகாப்பதில் யாரும் இல்லை.

இப்படிப்பட்ட விசாலமான அல்லாஹ்வுடைய விதியைப் பொருந்தி அதற்கு அப்படியே சிரம் தாழ்த்தி விடுவது.

இந்த மனிதர்களுடைய உள்ளத்தை அல்லாஹ் விசாலமாக்கி விடுகின்றான். இவருடைய உள்ள ஒரு மலையைப் போல என்று மக்கள் சொல்வார்கள். எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் உடையது என்று.

அப்படிப்பட்ட ஒரு தன்மை எப்படி ஏற்படும்?ஸப்ராக இருப்பதோடு ஸப்ருக்கு அடுத்த கட்டம், அல்ஹம்துலில்லாஹ் -அல்லாஹ் எனக்கு விதித்ததை நான் ஏற்றுக்கொண்டேன். அல்லாஹ்வுடைய கட்டளைக்கு முன்னால் அல்லாஹ்வுடைய வீதிக்கு முன்னால் நான் தலை சாய்த்து விட்டேன்.

இதிலிருந்து அல்லாஹ்விடம் நான் நன்மையை கேட்கின்றேன் என்ற நிலைக்கு அடுத்த கட்ட நிலையில் அடியான் வரவேண்டும்.

இதுதான் ஈமானுடைய அம்சம். உமர் ஃபாரூக் ரழியல்லாஹுஅன்ஹுஅறிவிக்கக் கூடிய ஹதீஸ்.

ஈமானை பற்றி ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் நபியிடத்தில் கேட்கின்றார்கள்; ஈமான் என்றால் என்ன? என்று.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;

«أَنْ تُؤْمِنَ بِاللهِ، وَمَلَائِكَتِهِ، وَكُتُبِهِ، وَرُسُلِهِ، وَالْيَوْمِ الْآخِرِ، وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ»

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது, அவனுடைய வேதங்களை அவருடைய தூதர்களை அவனுடைய மலக்குகளை மறுமை நாளை மேலும் விதிக்கப்பட்டதை நீ நம்பிக்கை கொள்ள வேண்டும். அதில் உள்ள நன்மையையும் அதிலுள்ள தீமையையும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 8.

அல்லாஹ்வுடைய விதியில் எது எழுதப்பட்டதோ, அது தனக்கு நன்மையாக ஏற்பட்டாலும் சரி, சுக இன்பமாக ஏற்பட்டாலும் சரி, அது எதுவாக இருந்தாலும் சரி, அது விதிக்கப்பட்டது படிதான் நடந்தது என்று பொருந்திக் கொள்வது, ஏற்றுக்கொள்ளவது. இந்த ஒரு நிலைக்கு அடியான் வர வேண்டும்.

முதலாவது, ஸப்ரு. தன்னை அடக்கிக் கொள்வது, தன்னை ஒரு உறுதியான நிலைக்கு கொண்டு வருவது.

இரண்டாவது, அந்த அடியான் நடந்தைக்கொண்டு, யா அல்லாஹ்! உன்னுடைய விதியை நான் ஏற்றுக் கொண்டேன். உன்னுடைய விதியை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது. நீ எனக்கு விதித்ததை என்னால் மாற்ற முடியாது என்ற மன நிலைக்கு வருவது.

மூன்றாவது, அவருடைய நாவு. இந்த நாவை அல்லாஹ் விரும்பிய வார்த்தைகளில் அல்லாஹ் விரும்பிய கட்டளைகளில் தான் இந்த நாவை பயன்படுத்த வேண்டும். அந்த வார்த்தையைத்தான் நாவின் வழியாக சொல்லவேண்டும்.

உள்ளத்தில் ஈமான் இருக்கும் என்ற நிலைமையிலும்,அல்லாஹ் என்ன சொல்கின்றான்? அதே நேரத்தில் இந்த நாவிலும் அந்த வார்த்தையை வரவேண்டும். அல்லாஹ்வை திருப்திப் படுத்தக் கூடிய வார்த்தையாக அது இருக்க வேண்டும்.

எனவே தான் முஃமின்களுக்கு அல்லாஹ்வுடைய கட்டளை,

الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

(சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்ட போதிலும் ‘‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்'' எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன் 2 : 156)

உலகத்தில் எந்த மதத்தவர்களுக்கும் எந்த சமுதாயத்தவர்களுக்கும் கிடைக்காத மிகப் பெரிய ஒரு நிஃமத் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உண்மையான இறைவனாகிய அல்லாஹ்வுடைய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட நமக்கு கொடுத்திருக்கின்றான்.

மாற்றார்களைப் பொறுத்தவரை, நன்மை ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த நன்மை தன்னால் ஏற்பட்டது என்று அந்த நன்மையை தன்பக்கம் சேர்ப்பார்கள்.

ஆனால், ஒரு தீங்கு ஏற்பட்டால் ஒரு பிரச்சினை ஏற்பட்டால் அவர்களால் அதை தாங்கிக்கொள்ள முடியாது. படைத்த இறைவனை ஏச ஆரம்பித்து விடுவார்கள்.

ஒரு முஃமினால் மட்டும்தான் இந்த வார்த்தையை சொல்ல முடியும். அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்ட மறுமை நம்பிக்கை கொண்ட ஒரு இறை நம்பிக்கையாளராள் தான் இந்த வார்த்தையை சொல்ல முடியும்.

அவர்களுக்கு பொதுவாக எந்த ஒரு சோதனை ஏற்பட்டாலும் சரி, அல்லாஹ் சொல்கின்றான்; நிச்சயமாக நாம் எல்லாம் அல்லாஹ்விற்கு சொந்தமானவர்கள். அல்லாஹ்வுடைய படைப்புகள், அல்லாஹ்வுடைய அடிமைகள், அல்லாஹ்விற்கு முன்னால் அல்லாஹ்வின் விதிக்கு முன்னால் கட்டுப்படக் கூடியவர்கள்.

நம்மால் என்ன செய்ய முடியும்? நாமெல்லாம் அல்லாஹ்விற்கு சொந்தமானவர்கள். நாமெல்லாம் அல்லாஹ்விடம் திரும்பிச் செல்லக் கூடியவர்கள் என்ற ஒரு வார்த்தையை இந்த அடியான் சொல்லும்போது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த அடியானை பொருந்திக் கொள்கின்றான்.

அந்த அடியானுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனை சோதித்ததை விட சிறந்த ஒரு நன்மையை கண்டிப்பாக அல்லாஹ் கொடுப்பான். இம்மையில் விரைவாகவோ அல்லது மறுமையில் இதை விடச் சிறந்ததாகவோ கொடுப்பான்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த துஆவோடு மேலும் ஒரு துஆவைச் சொல்லித் தருகின்றார்கள்.

உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கக்கூடிய இந்த அறிவிப்பை இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கின்றார்கள்.

ஒரு சோதனை ஏற்பட்டால், நாமெல்லாம் என்ன நினைப்போம்? ஒரு வியாபாரத்திலோ ஒரு தொழிலிலோ அல்லது நம் செல்வத்திலோ நம் விவசாயத்திலோ ஏற்பட்டால், பொதுவாக நாம் இழந்ததை தான் அதிகமாக நினைப்போம்.

எது நம்முடைய கையிலிருந்து தவறி விட்டதோ,எதை நாம் இழந்து விட்டமோ,அதை நாம் பெரிதாகக் கருதி, இது தவறிவிட்டதே! இதுபோன்று அடுத்து நமக்கு கிடைக்குமா!என்றெல்லாம் நாம் புலம்புவோம்.

அந்த ஒரு எண்ணம், அந்த ஒரு நினைப்பு நமக்கு வரக்கூடாது. அதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லித் தருகின்றார்கள்.

உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹு சொல்கின்றார்கள். நான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலிருந்து ஒரு ஹதீஸை கேட்டுள்ளேன்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். உங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டால் அந்த சோதனையில்,

اللهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا

யா அல்லாஹ்! இந்த சோதனையில் எனக்கு நீ நற்கூலி வழங்குவாயாக! நீ என்னை சோதித்தாய்,நான் பொறுமையாக இருக்கின்றேன். இந்த சோதனைக்கு பகரமாக நீ எனக்கு நற்கூலி வழங்குவாயாக!யா அல்லாஹ்! எனக்கு ஏற்பட்ட இந்த சோதனையிலிருந்து எனக்கு நீ சிறந்த இழப்பீட்டை தருவாயாக!

சோதனை அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுகின்றது. அப்படி என்றால் அந்த சோதனையின் கூலி அல்லாஹ்வின் புறத்திலிருந்து எதிர்பார்க்க வேண்டும்.

இன்று, மக்களைப் பொருத்தவரை அரசாங்கம் இழப்பீடு தருகிறது என்றால் அல்லது ஒரு நிறுவனமும் இழப்பீடு தருகிறது என்றால் அதன் மீது நம்பிக்கை உறுதியாக இருக்கின்றது.

அல்லாஹ் இழப்பீடு தருகிறேன் என்று சொல்கின்றான். அல்லாஹ்வுடைய தூதர் சிறந்த இழப்பீட்டை உங்களுடைய ரப்பிடத்தில் கேளுங்கள் என்று சொல்கின்றார்கள்.

தொடர்ந்து ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

எந்த ஒரு அடியானாக இருந்தாலும் சோதனையின் போது, எனக்கு இந்த சோதனையிலிருந்து ஒரு சிறந்த பகரத்தை ஏற்படுத்திக் கொடு! என்று துஆ செய்தால் அவனுடைய சோதனையில் கண்டிப்பாக அல்லாஹ் நற்கூலியை கொடுத்தே தீருவான்.

அந்த சோதனையிலிருந்து அவனுக்குரிய இழப்பீட்டை அல்லாஹ் கொடுப்பான். உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகச்சிறந்த ஒரு அனுபவத்தை சொல்கிறார்கள்.

இவர்களுடைய கணவர் அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பால்குடி சகோதரராக இருந்தார். நபியுடைய உற்ற நண்பராகவும் இருந்தார்.

அபூ ஸலமா உம்மு ஸலமா ஆகிய இருவருக்கும் இடையே இருந்த கணவன் மனைவி என்ற உறவு, அரபு உலகத்தில் பிரபல்யமாக பேசப்பட்ட ஒரு அன்பு.

அபூ ஸலமா இறந்து விடுகின்றார். உம்மு சலமா அவர்கள் நபி இடத்தில் கேட்ட இந்த துஆவை ஓதி விடுகின்றார்கள். ஓதி விட்டு கொஞ்சம் நிற்கின்றார். அடுத்து உள்ள வார்த்தையை கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கின்றார்.

எனக்கு என்னுடைய கணவர் அபூ ஸலமாவை விட சிறந்த ஒருவர் கணவராக அடைய முடியுமா? அமைய முடியாது என்ற ஒரு கணம் திக்கற்று நின்ற அந்த சமயம்.

இருந்தாலும் அல்லாஹ்வுடைய தூதருடைய உபதேசம், அல்லாஹ்வுடைய தூதரின் வழிகாட்டுதல், உங்களுக்கு சோதனை ஏற்பட்டால் இதனை உடனே சொல்லுங்கள் என்று.  உடனே இதனைச் சொல்லி விடுகிறார்கள்.

அந்த துஆவை சொல்லிவிடுகிறார்கள். அவர்கள் இத்தாவை தொடருகின்றார்கள். இத்தா முடிகின்றது. இப்பொழுது உம்மு சலமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஒரு தூதர் வருகின்றார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் உங்களை பெண் கேட்கின்றார்கள். அல்லாஹ்வுடைய தூதர் தனக்காக உங்களை மணம் முடித்துக் கொள்வதற்கு உங்களை பேசுகின்றார்கள். உங்களுடைய விருப்பம் என்ன? என்பதாக. (1)

அறிவிப்பாளர் : உம்மு சலமாரழியல்லாஹுஅன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 918.

யோசித்துப் பாருங்கள். துஆ உடைய பிரதிபலன். அல்லாஹ்வுடைய தூதரின் மீது, அந்த வார்த்தையின் மீது அவர்கள் வைத்திருந்த அந்த நம்பிக்கை, அதற்கு அல்லாஹ் கொடுத்த கை மாற்றைப் பாருங்கள்.

இன்று நம்மை பொருத்தவரை, நமக்கு நம் அஸ்பாவின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை அதிகம். துஆவின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை பலவீனமாக இருக்கின்றது.

கண்ணியத்திற்குரிய சஹாபாக்களிடையே அஸ்பாபு மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை விட அவர்களின் நம்பிக்கை துஆவின் மீது இருந்தது. அஸ்பாபுகள் இருந்தாலும் துஆவின் மீது நம்பிக்கை இருந்தது. அஸ்பாபுகள் இல்லை என்றாலும் துஆவின் மீது நம்பிக்கை இருந்தது.

நம்மை பொருத்தவரை அஸ்பாபுகள் இருந்தால்தான் துஆ பலனளிக்கும் என்பதாக நாம் நம்பி வைத்துக் கொண்டு இருக்கின்றோம். அல்லாஹ் அப்படிப்பட்டவன் அல்ல.

உங்களுடைய துஆக்களைக் கொண்டு அஸ்பாபுகளை உருவாக்கக் கூடியவன் அல்லாஹ். சூழ்நிலைகளை உருவாக்கக்கூடியவன் அல்லாஹ்.

அதனால்தான் முஃமின்களுக்கு துஆவின் மீது ஒரு ஆழமான நம்பிக்கை வரவேண்டும். துஆ என்பது ஈமானுடைய ஒரு பங்கு.

நீங்கள் அல்லாஹ்விடத்தில் கேளுங்கள். அல்லாஹ் பதில் அளிப்பான் என்ற உறுதியோடு அல்லாஹ்விடத்தில் கேளுங்கள் என்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்.

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

நீங்கள் என்னிடத்தில் கேளுங்கள்,நான் உங்களுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்கின்றேன் என்று அல்லாஹ் சொல்கின்றான். (அல்குர்ஆன் 40:60)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ

(நபியே!) உம்மிடம் என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீர் கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு சமீபமானவன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்.'' ஆதலால், அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும்; என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேர்வழி அடைவார்கள். (அல்குர்ஆன் 2:186)

ஆகவே,துஆ செய்யும்போது இந்த உறுதியோடு நாம் செய்ய வேண்டும்.

சோதனைகளில் சிக்குண்ட மூன்றாமவர்களின் நிலை என்ன வென்றால், அவர், யா அல்லாஹ்! என்னுடைய இந்த சோதனையிலிருந்து எனக்கு நன்மையை கொடு! அதிலிருந்து ஒரு சிறந்த பகரத்தை நீயே எனக்கு ஏற்படுத்திக் கொடு.

அல்லாஹ் லட்சத்தை எடுத்து கோடியை கொடுக்கப் போதுமானவன். கோடியை எடுத்தவன் அதை விட பன்மடங்காக கொடுக்கப் போதுமானவன். இந்த நம்பிக்கை வரவேண்டும் என்றால் இந்த துஆவின் அம்சம் தெரிய வேண்டும்.

நான்காவது, இந்த உள்ளம் ஒரு தர்பியாவின் அடிப்படையில் இருக்கின்றது. எப்போதும் இதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

எப்படி நாம் நினைவு படுத்துவது? இந்த உலகம் ஒரு சோதனைக் கூடம். அல்லாஹ் யாரையும் இந்த சோதனையிலிருந்து விடமாட்டான். சோதனை என்பது இந்த உலகத்தில் நிகழக்கூடிய ஒன்று. இந்த சோதனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. எத்தனை வசனங்களை அல்லாஹ் நமக்கு நினைவூட்டுகின்றான்.

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ

(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும், பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றில் நஷ்டத்தைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. (அல்குர்ஆன் 2:155)

கண்டிப்பாக சோதனை என்பது இந்த உலகத்தில் உண்டு.மனிதனை நாம் சிரமத்தில் தான் படைத்து இருக்கின்றோம் என்று அல்லாஹ் சொல்கின்றான்.

وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ

நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிப்போம். பின்னர் நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.(அல்குர்ஆன் 21 : 35)

வசனத்தின் கருத்து : சில நேரங்களில் தீமையை கொண்டும் அல்லாஹ் சோதிப்பான். தீமை என்றால் நாம் விரும்பாத ஒன்று.

நன்மையைக் கொண்டும் அல்லாஹ் சோதிப்பான். நன்மை என்றால் செல்வம். அதுவும் ஒரு சோதனை தான், உடல் சுகம் அதுவும் ஒரு சோதனை தான், நம்முடைய வியாபாரம் பெருகுவது, இதுவும் ஒரு சோதனையை தான்.

இந்த துன்யா ஒரு சோதனைக் கூடம். எந்த ஒரு பிரச்சனைக் கூடம். இந்த துன்யாவில் சிரமத்திற்குப் பிறகு சிரமம் வந்துகொண்டேதான் இருக்கும்.

நீங்கள் எப்பொழுதும் இன்பதையும் சுகமான வாழ்க்கையும் எதிர்பார்ப்பு இருக்கும் பொழுது அதற்கு எதிராக ஒரு சோதனை வந்துவிட்டால் பதட்டப்பட்டு விடுவீர்கள்.

என்ன செய்வது? என்று தெரியாமல் மிகப்பெரிய ஒரு மன நெருக்கடிக்கு மன கஷ்டத்திற்கு ஆளாகி விடுவீர்கள்.

அதே நேரத்தில் நமக்கு வறுமையும் ஏற்படலாம். நமக்கு நோயும் ஏற்படலாம். நம்முடைய இந்த வசதியான வாழ்க்கையில் நமக்கு வறுமையும் ஏற்படலாம்.

பொதுவாக மக்களை பொறுத்தவரை நன்மைகளை எதிர்பார்த்து இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டாலும் தாங்க முடியாமல் அல்லல் படுவார்கள். புலம்புவார்கள்.

இங்கும் அங்குமாக அலைந்து தன்னுடைய எல்லா சக்திகளையும் தன்னுடைய நேரங்களை அவர்கள் போக்கி கொண்டே இருப்பார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் போய்விடும்.

அதே நேரத்தில் வாழ்க்கையில் இன்பமும் இருக்கும், துன்பமும் இருக்கும், கஷ்டமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும் என்று எதிர்பார்ப்பில் இருப்பவர்கள் சோதனைகள் ஏற்படும் போது, இது நான் எதிர்பார்த்த ஒன்றுதான், இப்பொழுது நான் என்ன செய்வது என்ற அந்த மன உறுதிக்கு வருவான்.

அடுத்த ஐந்தாவது, இதுவும் ஒரு முக்கியமான ஒன்று. எப்பொழுதும் நம்முடைய மன நிலை எப்படி இருக்க வேண்டும் என்றால்,என்னிடத்தில் என்ன இருக்கின்றது? அது எனது அறிவாக இருக்கட்டும், என்னுடைய செல்வமாக இருக்கட்டும், என்னுடைய குடும்பமாக இருக்கட்டும், நான் சம்பாதித்த செல்வமாக இருக்கட்டும், இதுவெல்லாம் அல்லாஹ்விற்கு சொந்தமானது.

அல்லாஹ் எனக்கு கொடுத்தது. அல்லாஹ் தான் எனக்கு கொடுத்தான். இது என் கையில் இருந்தாலும், அல்லாஹ்விற்கு தான் சொந்தமானது என்ற அந்த மன உறுதி நமக்கு வரவேண்டும்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் அவர்களுடைய மகளார் ஒரு தூதரை அனுப்புகின்றார்கள். இந்த மாதிரி சொல்லுங்கள்; உங்களுடைய பேரனுக்கு இது மரண தருவாய் என்று.

நபியவர்கள் ஒரு முக்கியமான பணியில் இருக்கின்றார்கள். வந்த தூதரிடத்தில் சொல்லி அனுப்புகின்றார்கள்; மகளிடத்தில் பொறுமையாக இருக்கும் படி நன்மையை நாடும் படி சொல்லுங்கள்.

அந்த மகள் சொல்கின்றார்கள்; கண்டிப்பாக அல்லாஹ்வுடைய தூதர் வரவேண்டுமென்று. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அந்த தூதர் வருகிறார். உங்களுடைய மகள் உங்களை கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்கின்றார்கள் என்று கூறியவுடன் அல்லாஹ்வுடைய தூதர் அந்த பணியை முடித்துவிட்டு செல்கின்றார்கள்.

அந்த மகளுடைய குழந்தை மரணத்தருவாயில் இருக்கின்றது. அதை எடுத்து தனது மடியில் வைக்கின்றார்கள். அந்த குழந்தை இறுதி மூச்சு விடுகின்றது.

அப்பொழுது தன்னுடைய மகளை பார்த்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தருகின்றார்கள். எப்படிப்பட்ட ஒரு ஆழமான வார்த்தை பாருங்கள்.

«إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ، وَلْتَحْتَسِبْ»

நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தமானது, எதை அவன் எடுத்தானோ! இன்னும் எதை அவன் கொடுத்தானோ அது அவனுக்கே சொந்தமானது. எல்லாம் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையின் படி நடக்கிறது.(2)

அறிவிப்பாளர் : உசாமா இப்னு சைத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 1284,7377.

இந்த ஒரு வார்த்தை முஃமினுக்கு மிகப்பெரிய ஈமானிய பலத்தை கொடுக்கின்றது. பணிவை கொடுக்கின்றது. நம்பிக்கையைக் கொடுக்கிறது. இன்னும் அவன் உள்ளத்தில் உள்ள கர்வம், ஆணவம், கருமி எல்லாத்தையும் கசக்கிப் பிழிந்து வெளியே தள்ளுகின்றது.

பெரிய பெரிய செல்வதை நீங்கள் அடைந்து விடுங்கள். கல்வியின் இறுதி கட்டத்தை அடைந்து விடுங்கள். பட்டங்களை எல்லாம் குவித்துக்கொள்ளுங்கள். பதவிகள் எல்லாம் சேமித்துக் கொள்ளுங்கள்.

இந்த நம்பிக்கைக்கு வந்துவிடுங்கள். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் கொடுத்தது. அல்லாஹு ரப்புல் ஆலமீன் அழகிய தன்னடக்கத்தை நமக்குக் கொடுத்துவிடுவான்.

அது இல்லை என்றாலும் கூட, அந்த பதவியை நீங்கள் தவற விட்டாலும் கூட, அந்த செல்வத்தை நீங்கள் இழந்து விட்டாலும் கூட, அல்லாஹு ரப்புல் ஆலமீன் உங்களை பாதுகாக்க போதுமானவன். உங்களை ரட்சிக்க அல்லாஹ் போதுமானவன்.

செல்வத்தில் இருக்கும் அந்த மகிழ்ச்சியை விட, செல்வத்தில் நீங்கள் அளித்த அந்த உறுதியை விட, வறுமையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். அந்த செல்வத்தை எல்லாம் அல்லாஹ் கொடுத்தது என்று உறுதியோடு நினைக்கும் போது.

இல்லை, எனது செல்வம் எனது திறமை எனது படிப்பால் எனது அனுபவத்தால் கிடைத்தது என்று நினைக்கும் போது தான் அந்த செல்வத்தை நீங்கள் இழக்கும் போது அந்த செல்வத்தில் உங்களுக்கு நஷ்டம் ஏற்படும் போது பதருவீர்கள்; பதட்டப் படுவீர்கள்; புலம்புவீர்கள்.

கோடி வந்தாலும் சரி, கோடி போனாலும் சரி, அல்லாஹ் என்னுடன் இருக்கின்றான்.

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

எனக்கு அல்லாஹ் போதுமானவன். அவன் சிறந்த எஜமானன்.அவன் சிறந்த பொறுப்பாளன்.(அல்குர்ஆன் 3 : 173)

என்று அந்த உள்ளத்தில் நினைக்கும் போது,அந்த அளவில்லா மகிழ்ச்சியை அல்லாஹ் கொடுப்பான். அதுதான் ஈமானிய மகிழ்ச்சி.

அல்லாஹ்தான் எங்கள் ரப்பு என்று சொல்லி அதில் உறுதியாக இருந்தார்களே! அவர்களுடைய நிலை தான் இந்த நிலை.

அடுத்து, ஆறாவது நிலை. அவர் உடனடியாக தனக்கு சோதனை ஏற்படும் பொழுது இரண்டு ரக்அத் அல்லாஹ்விடத்தில் தொழுது கொள்வது. தொழுது அல்லாஹ்விடத்தில் அதற்கான பிரார்த்தனையை செய்வது.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

நம்பிக்கையாளர்களே! (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153,45)

இன்று, நம்மில் மிகக் குறைவானவர்கள் தான் இந்த சுன்னத்தை கடைப்பிடிக்கின்றார்கள். முதலில் அல்லாஹ்விடத்தில் முறையிடுவதற்கு பதிலாக அடியார்களிடத்தில் முறையிட்டு விடுகிறார்கள். நோய் கொடுத்த அல்லாஹ்விடத்தில் ஷிஃபாவை கேட்பதற்கு பதிலாக மருத்துவரிடத்தில் ஓடிவிடுகிறார்கள்.

மருத்துவர் இடத்தில் செல்வது தப்பல்ல. அடியார்களிடத்தில் சொல்வது தப்பல்ல. ஆனால், அல்லாஹ்வை மறந்து விட்டு ரப்பிடத்தில் கேட்காமல் அடியார்களில் இடத்தில் போய் கேட்கிறார்களே, இது தான் தவறு.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவைப் பாருங்கள்.

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حَزَبَهُ أَمْرٌ، صَلَّى»

நபிக்கு எத்தகைய ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே அவர்கள் தொழுது விடுவார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத்,எண் : 1319, தரம் : ஹசன் (அல்பானி)

இந்த சோதனை அல்லாஹ்விடமிருந்து வந்தது. தொழுகை என்பது அல்லாஹ்விடத்தில் பிரார்த்திக்க கூடிய விஷயங்களில் மிகப்பெரிய ஒன்று.

நீங்கள் சுஜூதில் இருக்கும்பொழுது அல்லாஹ்விடத்தில் கேளுங்கள். நீங்கள் அல்லாஹ்விற்கு மிக நெருக்கமாக இருக்கின்றீர்கள். சுஜூதில் நீங்கள் துஆவை அதிகப்படுத்துங்கள். தொழுகை என்பது துஆ உடைய ஒரு ஒட்டுமொத்த அம்சம்தான்.

ஆகவே, ஒரு மனிதனுக்கு சோதனை ஏற்படும் பொழுது இரண்டு ரக்அத் தொழுது கொள்வது. தொழுது அல்லாஹ்விடத்தில் துஆ கேட்பது. அல்லாஹ்விடத்தில் அந்த சோதனையிலிருந்து விடுதலை கேட்பது.

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களைப்பற்றி அறிவிக்கப்படுகின்றது.

அவருடைய நெருக்கமான ஒரு சகோதரர் இறந்துவிட்ட செய்தி அவருக்கு வருகின்றது.

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ-என்று ஓதுகிறார்கள். பிறகு இரண்டு ரக்அத் தொழுகின்றார்கள். அதனுடைய கடைசி இருப்பில் நீண்ட நேரம் துஆ கேட்கின்றார்கள். பிறகு ஸலாம் கொடுத்து விட்டு சொல்கின்றார்கள்;

அல்லாஹ் நமக்கு கொடுத்த கட்டளையை நாம் நிறைவேற்றி விட்டோம். நீங்கள் தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் அல்லாஹ்விடத்தில் உதவி தேடுங்கள் என்று அல்லாஹ் சொன்னான். நாம் அதை செய்து விட்டோம் என்பதாக.

நூல் : ஃபத்ஹுல் பாரி.

இன்று, பெரும்பாலும் மவ்துடைய செய்தி அல்லது வேறு ஏதாவது ஒரு செய்தி கிடைத்து விடுகின்றது என்றால், உடனே சொல்வார்கள்; எப்படி நாம் அங்கு போய் சேர்வது? எந்த ஃப்ளைட்டை பிடிப்பது? எந்த பஸ்சை பிடிப்பது? எந்த ரயிலை பிடிப்பது? யாரை தொடர்பு கொள்வது? இப்படியாக உலக சம்பந்தப்பட்ட விஷயத்தில் செல்கின்றோம்.

ஆனால், உடனடியாக இரண்டு ரக்அத் தொழுது விட்டு, யா அல்லாஹ் இறந்துவிட்ட எனது இந்த உறவினருக்கு பாவமன்னிப்பு செய்வாயாக! யா அல்லாஹ்! என்று இந்த சுன்னத்தை கடைபிடிக்கக் கூடிய மக்கள் எத்தனை பேர்?

பல நேரங்களில் பெற்றோர் குழந்தைகள் கூட இதை தெரியாமல் இருக்கின்றார்கள். தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைக்கின்றது. ஜனாஸாவை எப்படி சென்று பார்ப்பது? என்ற கவலை.

அந்தக் கவலை அவர்களை மறக்கச் செய்கிறது. தன்னுடைய தந்தைக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவின் படி துஆ கேட்பதை மறக்கச் செய்கிறது.

இதற்கு என்ன காரணமென்றால், அல்லாஹ்வுடைய தொடர்பு பலவீனமாக இருக்கின்றது. அல்லாஹ்வுடைய தீனுடைய இல்ம் அவர்களிடத்தில் பலவீனமாக இருக்கின்றது.

அடுத்ததாக, நாம் பொறுமையாக இருந்தால் நாம் அமைதி காத்தால் நமக்கு அல்லாஹ் கொடுக்கக் கூடிய நன்மை என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

பொறுமையாளர்களின் உயர்வைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான் :

سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ

(இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் சிரமங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் (ஸலாம்) உண்டாகட்டும்! (உங்கள் இந்த) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று'' (என்று கூறுவார்கள்.) (அல்குர்ஆன் 13 : 24)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ் சொல்வதாக ஒரு ஹதீஸை நமக்கு அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் சொல்கின்றான்:

" يَقُولُ اللَّهُ تَعَالَى: مَا لِعَبْدِي المُؤْمِنِ عِنْدِي جَزَاءٌ، إِذَا قَبَضْتُ صَفِيَّهُ مِنْ أَهْلِ الدُّنْيَا ثُمَّ احْتَسَبَهُ، إِلَّا الجَنَّةُ "

முஃமினான ஒரு அடியான்,உலக மக்களில் அவருக்கு மிக நெருக்கமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிக் கொள்ளும் போது,அல்லாஹ்விடத்தில் பொறுமையாக இருந்து இதற்கான நற்கூலியை எதிர்பார்க்கின்றேன் என்ற நிலையில் உள்ள முஃமீனான அடியானுக்கு உள்ள கூலி சொர்க்கத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 6424.

எப்படிப்பட்ட ஒரு நற்செய்தி பாருங்கள்.

அதுபோன்று, கூலி என்பது அவனுடைய நன்மைக்கு தகுந்தவாறு கொடுக்கப்படும்.

ஆனால், பொறுமையாளர்களுக்கு உண்டான கூலி மட்டும் கணக்கில்லாமல் கொடுக்கப்படும் என்பதாக அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கின்றான்.

إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ

நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே கொடுக்கப்படும். (அல்குர்ஆன் 39:10)

இமாம் அவ்சாயி ரஹீமஹுல்லாஹ் சொல்கிறார்கள்.

அல்லாஹ் பொறுமையாளர்களின் நன்மையை அளக்க மாட்டான்; அதை நிறுக்க மாட்டான். அள்ளி அள்ளி அவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பான்.

நூல் : தஃப்சீர் இப்னு கஸீர்.

எப்படிப்பட்ட ஒரு வார்த்தை பாருங்கள்!

அதுமட்டுமல்லாமல்ல பொறுமையினுடைய அடுத்த நன்மை என்ன என்றால், அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான். அல்லாஹ் நமக்கு துணை இருக்கின்றான் என்ற ஆறுதலை நமக்கு சொல்கின்றான்.

إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

அல்லாஹ் நிச்சயமாக பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2:153)

அதுபோன்று, அல்லாஹ்வுடைய முஹப்பத் -அன்பு கிடைக்கின்றது.

பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.

அதுபோன்று, இந்த சோதனை ஏற்படும் பொழுது அந்த நேரத்தில் நாம் பொறுமையாக இருப்பது. அந்த சோதனை நேரத்தில் நம்முடைய நப்ஸை அடக்குவது.

அல்லாஹ் நமக்குக் கொடுத்திருக்கின்ற அந்த வாக்குறுதியை எண்ணிப் பார்ப்பது. இப்படிப்பட்ட ஒரு நிலையை அடையும் போது நம்முடைய உள்ளமானது அல்லாஹ்வைக் கொண்டு திருப்தி அடைகிறது.

இந்த சோதனையால் நம்மை இகழ்ந்து கொள்வதோ, அல்லது நம்முடைய உற்றார் உறவினர்களையும் இகழ்ந்து கொள்வதோ, மனைவி மக்களை இகழ்ந்து கொள்வதோ அல்லது இதுபோன்ற காபிர்கள் உடைய துர் சங்கடங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடிகின்றது.

இன்று, சோதனைகள் ஏற்படும் போது அந்த சோதனைகளைக்குரிய காரணங்களை இந்த உலக வஸ்துக்களில் தேடி தன்னை நெருக்கடிக்கு ஆளாகி கொள்வது.

தன்னை சிரமத்திற்கு ஆளாக்கி கொள்வது, தன்னையே தனக்கு பகைவனாக அல்லது தன்னைச் சுற்றியுள்ளவர்களை தனக்கு பகைவனாக ஆக்குவது. இது காஃபிர்களுடைய சிந்தனை.

ஆனால், ஒரு முஃமினுடைய நிலைமை,சோதனை அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருகிறது. என்னுடைய செயல்கள் அதற்கு காரணமாக இருக்கலாமோ! யா அல்லாஹ் என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக! யா அல்லாஹ் இந்த சோதனையிலிருந்து எனக்கு நன்மையைத் தருவாயாக!

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குனூத்தில் ஓதினார்கள்,

وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ

யா அல்லாஹ்!நீ எதை எனக்கு தீர்ப்பளித்து விட்டாயோ,முடிவு செய்து விட்டாயோ அதிலுள்ள தீங்குகளிலிருந்து என்னை பாதுகாப்பாயாக!

அறிவிப்பாளர் : ஹசன் இப்னு அலீ ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா,எண் : 1178, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

தொழுகை முடிந்ததற்கு பிறகு ரசூலுல்லாஹ் அவர்களுடைய துஆ,

اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ

யா அல்லாஹ் நீ கொடுத்தால் யாராலும் தடுக்க முடியாது. நீ தடுத்தால் யாராலும் கொடுக்க முடியாது. உனது முடிவை யாராலும் மாற்ற முடியாது.

அறிவிப்பாளர் : முஆவியா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 844.

எவ்வளவுதான் செல்வம் உடையவராக இருந்தாலும், அதனுடைய பலன் உன்னுடைய நாட்டமின்றி அவருக்கு எந்த பலனையும் கொடுக்க முடியாது. இப்படிப்பட்ட மன நிலைமைக்கு நம்மை பக்குவப்படுத்த வேண்டும்.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா ஈமானுடைய பண்புகளை எனக்கும் உங்களுக்கும் நஸீப் ஆக்குவானாக! குஃப்ருடைய நயவஞ்சகத்தின் உடைய எல்லா நிலைகளிலும் நம்மையும் நம் சமுதாயத்தையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي عُمَرُ بْنُ كَثِيرِ بْنِ أَفْلَحَ، قَالَ: سَمِعْتُ ابْنَ سَفِينَةَ، يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: " مَا مِنْ عَبْدٍ تُصِيبُهُ مُصِيبَةٌ، فَيَقُولُ: {إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ} [البقرة: 156]، اللهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا، إِلَّا أَجَرَهُ اللهُ فِي مُصِيبَتِهِ، وَأَخْلَفَ لَهُ خَيْرًا مِنْهَا "، قَالَتْ: فَلَمَّا تُوُفِّيَ أَبُو سَلَمَةَ، قُلْتُ: كَمَا أَمَرَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْلَفَ اللهُ لِي خَيْرًا مِنْهُ، رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. (صحيح مسلم - 918)

குறிப்பு 2)

حَدَّثَنَا عَبْدَانُ، وَمُحَمَّدٌ، قَالاَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَرْسَلَتِ ابْنَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ إِنَّ ابْنًا لِي قُبِضَ، فَأْتِنَا، فَأَرْسَلَ يُقْرِئُ السَّلاَمَ، وَيَقُولُ: «إِنَّ لِلَّهِ مَا أَخَذَ، وَلَهُ مَا أَعْطَى، وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ، وَلْتَحْتَسِبْ»، فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ لَيَأْتِيَنَّهَا، فَقَامَ وَمَعَهُ سَعْدُ بْنُ عُبَادَةَ، وَمَعَاذُ بْنُ جَبَلٍ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ وَرِجَالٌ، فَرُفِعَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّبِيُّ وَنَفْسُهُ تَتَقَعْقَعُ - قَالَ: حَسِبْتُهُ أَنَّهُ قَالَ كَأَنَّهَا شَنٌّ - فَفَاضَتْ عَيْنَاهُ، فَقَالَ سَعْدٌ: يَا رَسُولَ اللَّهِ، مَا هَذَا؟ فَقَالَ: «هَذِهِ رَحْمَةٌ جَعَلَهَا اللَّهُ فِي قُلُوبِ (صحيح البخاري- 1284)

குறிப்பு 3)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي الْحَوْرَاءِ، عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ، قَالَ: عَلَّمَنِي جَدِّي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي قُنُوتِ الْوِتْرِ: «اللَّهُمَّ عَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَاهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، سُبْحَانَكَ رَبَّنَا تَبَارَكْتَ وَتَعَالَيْتَ» (سنن ابن ماجه 1178)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/