HOME      Khutba      சோதனைகளுக்கு மத்தியில் (அமர்வு 1/2) | Tamil Bayan - 346   
 

சோதனைகளுக்கு மத்தியில் (அமர்வு 1/2) | Tamil Bayan - 346

           

சோதனைகளுக்கு மத்தியில் (அமர்வு 1/2) | Tamil Bayan - 346


சோதனைகளுக்கு மத்தியில்

ஜுமுஆ குத்பா தலைப்பு : சோதனைகளுக்கு மத்தியில் (அமர்வு 1)

வரிசை : 346

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 06-02-2015 | 17-04-1436

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்த பின் அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறிய பிறகு, அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு உங்களுக்கும் எனக்கும் உபதேசம் செய்து கொண்டுஇந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கின்றேன்.

அல்லாஹ்வுடைய அச்சம் எல்லா நன்மைகளுக்கும் அடிப்படையாகும். ஒரு அடியான் அல்லாஹ்வை எந்த அளவு பயந்து கொள்கிறானோ,அந்த அளவு அல்லாஹ்வுடைய நெருக்கத்தை பெறுகின்றான்.

அவனுடைய ஈமான் வலுப்பெறுகின்றது. அவனுடைய பதவி அல்லாஹ்விடத்தில் கூடிக்கொண்டே போகின்றது.

அடியான், அல்லாஹ்வின் பயத்திலிருந்து தூரமாகும் போது ஷைத்தான் அந்த அடியான் மீது சவாரி செய்ய ஆரம்பித்து விடுகின்றான்.

பாவங்களில் பக்கம் அவனை அழைக்கின்றான். இச்சைகளை அவனுக்கு தூண்டுகின்றான். நரகப் படுகுழியில் அவனை தள்ளுவதற்கு உண்டான ஏற்பாடுகளை முழுவதுமாக செய்து முடித்து விடுகின்றான்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கு கொடுத்திருக்கக்கூடிய இந்த உலக வாழ்க்கையில் சோதனைகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

அல்லாஹ்வால் சோதிக்கப்படாமல் இந்த உலகத்தில் யாருமே இல்லை. அல்லாஹ் படைத்த எல்லா மனிதர்களும் அந்த சோதனைகளுக்கு ஆளாகியிருக்கின்றார்கள்.

கண்ணியத்திற்குரிய இறைத்தூதர்கள், அந்த இறைத்தூதர்களின் தோழர்கள், பிறகு அவர்களை பின்பற்றி வந்த எல்லா முஃமின்கள் மற்றும் பொதுவான எல்லா மக்களும் அல்லாஹ்வுடைய சோதனைக்கு உட்பட்டவர்களே.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முஃமின்களை சுத்தம் செய்வதற்காக, அவர்களுடைய அந்த ஈமானிய உணர்வுகளை முழுமைப் படுத்துவதற்காக, அவர்களை தன் பக்கம் பரிசுத்தப்படுத்தியவர்களாக கைப்பற்றுவதற்காக அந்த முஃமின்களுக்கு அதிகமாக சோதனைகளை தருகின்றான்.

அந்த சோதனைகளுக்குரிய நன்மைகளையும் அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.

இந்த சோதனை குறித்து அல்லாஹ்வுடைய மார்க்கம் நமக்கு எப்படி வலியுறுத்துகின்றது? நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பதை பற்றி இன்ஷா அல்லாஹ்! இந்த ஜும்ஆவில் பார்ப்போம்.

சூரத்துல் முல்க் உடைய இரண்டாவது வசனத்தில் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த துன்யா வாழ்க்கையைப் பற்றி சொல்கிறான்:

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ

உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன் ஆவான்.(அல்குர்ஆன் 67 : 2)

உங்களுக்கு வாழ்க்கையை படைத்து கொடுத்தவனும் அவன்தான். உங்களுக்கு மரணத்தை அமைத்தவனும் அவன் தான்.

நமக்கு யார் வாழ்க்கையை கொடுத்தானோ, அந்த அல்லாஹ் நமக்கு மரணத்தையும் படைத்து வைத்துள்ளான்.

கண்டிப்பாக நம்முடைய பிறப்பு என்னும் தொடக்கத்திலிருந்து, மரணம் என்னும் அந்த முடிவை கொண்டு நம்முடைய வாழ்க்கை முடியப் போகின்றது.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா இந்த இடத்தில் வாழ்க்கையை முதலாவதாக சொல்லாமல் மவுத்தை முதலில் கூறுகிறான்.

அதாவது, முதல் மவுத். இந்த துன்யாவிற்கு நாம் வருவதற்கு முன்னால் நமக்கு இருந்த மவுத். அதுபற்றி அல்லாஹ் கூறுகிறான் :

هَلْ أَتَى عَلَى الْإِنْسَانِ حِينٌ مِنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْئًا مَذْكُورًا

ஒவ்வொரு மனிதனுக்கும் (உலகில் அவன் வெளிவருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன், இன்ன பொருள் என்றும் கூறுவதற்கில்லாத நிலைமையில் இருந்தான். (அல்குர்ஆன் 76:1)

வசனத்தின் கருத்து : அல்லாஹ் கேட்கின்ற அந்த தொணியை பாருங்கள். மக்களால் அறியப்படுகின்ற, கூறப்படுகின்ற ஒரு பொருளாக அவன் இல்லையே! அப்படிப்பட்ட ஒரு காலத்தைக் கடந்து தானே அவன் வந்து இருக்கின்றான். அந்த காலம் மீண்டும் அவனுக்கு வராதா?

ஏன் இந்த உலக வாழ்க்கையில் இப்படி ஒரு மமதை, மறதி, மயக்கம்,இப்படி உலக மோகம்?அல்லாஹ் எச்சரிக்கையோடு கேட்கின்றான்.

இந்த துன்யாவுடைய வாழ்க்கையில் இரண்டாவது மரணம் நமது பிறப்புக்குள்ள மரணம். இந்த முதல் மரணத்திற்கும் இரண்டாவது மரணத்திற்கும் இடையே உண்டான இந்த வாழ்க்கையை அல்லாஹ் உங்களுக்கு படைத்துக் கொடுத்திருக்கின்றானே அது எதற்காக?

உங்களின் அமல் எப்படி இருக்கின்றது? அமலால் உங்களில் சிறந்தவர் யார்?இதற்காகத்தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை படைத்திருக்கின்றான்.

யாரை அல்லாஹ் ஏழையாக எழுதி விட்டானோ அவன் ஏழை. யாரை அல்லாஹ் செல்வந்தனாக எழுதி விட்டானோ அவன் செல்வந்தன். யாரை அல்லாஹ் அறிஞரானாக எழுதி விட்டானோ அவன் அறிஞன். யாரை அல்லாஹ் கல்வியறிவு அற்றவனாக எழுதி விட்டானோ அவன் கல்வி அறிவு அற்றவன்.

மனிதனுடைய முயற்சிகள் ஒரு காரணம். அல்லாஹ் எழுதியதை மீறி எதுவும் நடக்காது.

கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள் சொன்னார்கள்.விதியை எப்படி நம்ப வேண்டும் என்று சொன்னால்,

«كُلُّ شَيْءٍ بِقَدَرٍ، حَتَّى الْعَجْزِ وَالْكَيْسِ»

ஒரு மனிதனுடைய பலவீனமும், ஒரு மனிதனுடைய புத்திக்கூர்மையும் அல்லாஹ்வுடைய விதியின் படிதான் கொடுக்கப்படுகின்றது என்ற ஈமான் ஒவ்வொரு முஃமின்களுக்கும் வேண்டும்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2655.

செல்வத்தைக் கொடுப்பவன் அவன் தான். ஏழையாக ஆக்குபவனும் அவன் தான்.

أَوَلَمْ يَعْلَمُوا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ

அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா? அல்லாஹ்தான், தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். (தான் நாடியவர்களுக்குச்) சுருக்கி விடுகிறான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 39:52)

அல்லாஹ் சுப்ஹாஹு வதஆலா நல்லமல் அடிப்படையில் தான் நம்மை சோதிக்கின்றான்.

இமாம் இப்னுல் கைய்யிம் ரஹுமஹுல்லாஹ் சொல்கின்றார்கள். அடியானுக்கு வரக்கூடிய சோதனைகள் தன்னுடைய நுண்ணறிவால், தன்னுடைய புத்திக் கூர்மையால், தன்னுடைய அனுபவத்தால், தன்னுடைய படையால், தன்னுடைய உறவுகளால் ஒரு அடியான் தடுத்துக் கொள்ள முடியாது.

நம்முடைய அறிவு, ஆற்றல், திறமை, அனுபவம், புத்தி கூர்மை இவற்றையெல்லாம் மிஞ்சி வரக்கூடியதுதான் அல்லாஹ்வுடைய சோதனை. ‘

இந்த சோதனையின்போது மனிதனுடைய நிலை எப்படி இருக்கும்?

சிலருக்கு, அவர் விரும்பக் கூடியவர் மரணித்து விடுகின்றார். சிலருடைய செல்வம் திருட்டுப் போய் விடுகின்றது. சிலர் நோய்வாய்ப்பட்டு விடுகின்றார். இப்படி மனிதன் சோதிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றான்.

இந்த சோதனைகளில் மனிதனுடைய நிலைகளை பார்க்கும் போது கண்டிப்பாக நான்கில் ஒரு நிலையில் இருக்கின்றான்.

இந்த நான்கு நிலைகளில் எந்த நிலை சரியான நிலை? இந்த நான்கு நிலைகளில் எதை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அல்லாஹ்வும், ரசூலும் நமக்கு சொல்லித் தருகின்றனர்.

முதலாவது,சோதனை ஏற்படும் பொழுது அடியான் சடைந்து கொள்கின்றான். வெறுப்படைகின்றான். அவன் அல்லாஹ்வின் மீது கோபப்படுகிறான். அல்லாஹ்வை ஏசிக்கின்றான். தன்னை நொந்து கொள்கின்றான் அல்லது அல்லாஹ் உடைய படைப்புகளை நொந்து கொள்கின்றான். காரணங்களை ஏசுகின்றான். இப்படி மனிதனுடைய முதல் நிலை பதட்டமான நிலையாக இருக்கின்றது.

சோதனைகளை கொடுத்து அல்லாஹ் என்னை நெருக்கடிக்கு ஆளாக்கி விட்டான். என்னை அநியாயம் செய்து விட்டான். நான் என்ன அல்லாஹ்விற்கு குறை செய்து விட்டேன் என்று நாவால் ஏசுகின்றான்.

அல்லது இந்த சோதனையில் இப்படி சிக்கி விட்டேனே! எனக்கு நாசம் ஏற்படட்டும், நான் அழிந்து போகட்டும், நான் செத்து விடட்டும் என்று சொல்கிறான்.

அல்லது காலத்தை ஏசுகின்றான்; எனக்கு நேரம் சரியில்லை. எனக்கு ஒரு கெட்ட காலம் இருக்கின்றது, எது செய்தாலும் தவறாகவே முரணாகவே நடந்து கொண்டிருக்கின்றது, என்று காலத்தை ஏசுகின்றான்.

தன்னுடைய அந்த பதட்ட நிலையை செயல் மூலமாகவும் செய்து காட்டுகின்றான். கன்னத்தில் அறைந்து கொண்டு, தலை முடிகளை விரித்துக் கொண்டு, சட்டைகளை கிழித்துக் கொண்டு, ஒப்பாரி வைக்கின்ற நிலைக்குக் கூட ஒரு சிலர் ஆகிவிடுகின்றனர்.

இந்த நிலை மிக மோசமான நிலை. இந்த நிலை ஒரு மனிதனை நிராகரிப்பில் கொண்டு தள்ளி விடக் கூடிய நிலை. இந்த நிலை ஒரு மனிதனுடைய ஈமானை அழித்துவிடக் கூடிய நிலை.

இந்த நிலையால் அந்த மனிதனுக்கு ஆகப்போவது ஒன்றும் கிடையாது. அவனுடைய துக்கத்திற்கும்துயரத்திற்கும் மேல் துக்கத்தையும்துயரத்தையும் தான் அதிகப்படுத்தும்.

இதனால் அவனுடைய பிரச்சனைகளை சரிசெய்து கொள்ள முடியுமா என்றால் சரி செய்து கொள்ள முடியாது.

அடுத்து, ஒரு மனிதனுடைய சோதனை நிலையின் போது, அவன் அந்த சோதனைகளை பொறுத்துக் கொள்கின்றான். அதில் தன்னை கட்டுப்படுத்திக் கொள்கின்றான். சோதனை பிடிக்கவில்லை தான், அதை நாடவில்லை விரும்பவில்லை தான்.

இருந்தாலும், அல்லாஹ் கொடுத்துவிட்டான்; நாம் இதில் பொறுமையாக இருப்போம். அல்லாஹ்விற்கு அதிருப்தி தரக்கூடிய அல்லாஹ்வை கோபப்படுத்தக் கூடிய எந்த வார்த்தைகளையும் அவன் பேசியது கிடையாது.

தன்னுடைய உள்ளத்திலும் அல்லாஹ்வையோ அல்லாஹ்வுடைய விதியையோ வெறுக்கவில்லை. அதுபோல தன்னுடைய செயல்களாலும் அல்லாஹ்வை கோபப்படுத்த கூடிய செயல்களை செய்வதில்லை.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

«لَيْسَ مِنَّا مَنْ لَطَمَ الخُدُودَ، وَشَقَّ الجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الجَاهِلِيَّةِ»

யார் தன்னுடைய கன்னங்களில் அறைந்து கொள்கின்றாரோ,யார் தங்களுடைய சட்டைகளை கிழித்து கொண்டார்களோ, தங்களுடைய தலை முடிகளை சிரைத்துக் கொண்டார்களோ, இன்னும் யார் அறியாமைக்கால வார்த்தைகளை கூறுகிறார்களோ அவர்கள் நமது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அல்லர்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 1294.

குஃப்ருடைய பாவங்களில் ஒரு பாவமாக இந்த செயல்களை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கருதுகின்றார்கள்.

ஒரு முஃமின் சோதனைகளின் போது அவனுடைய இரண்டாவது நிலை எப்படி இருக்கின்றது என்றால்,அவனுடைய உள்ளத்திலும் அவன் ஒரு கட்டுப்பாடாக இருக்கின்றான். அவனுடைய நாவையும் அவன் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றான். அதுபோன்று அவனுடைய உடல் உறுப்புகளையும் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றான்.

உள்ளத்தை எப்படி கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றான்? நமக்கு இந்த சோதனை விருப்பம் இல்லை என்றாலும், இந்த சோதனைகளை கொண்டு ஒரு வெறுப்பு இருந்தாலும், அல்லாஹ் இந்த சோதனைகளை கொண்டு என்னை சோதிக்கின்றான். நான் பொறுமையாக இருப்பேன். தனது நாவை கொண்டு அல்லாஹ் விரும்பாததை நான் சொல்ல மாட்டேன்.

எனது உடல் உறுப்புகளைக் கொண்டு அல்லாஹ்வை கோபடுத்துகின்ற காயப்படுத்துகின்ற வேலைகளை நான் செய்ய மாட்டேன் என்று அவன் அமைதியாக இருக்கிறான். இது இரண்டாவது நிலை.

மூன்றாவது ஒரு நிலை இருக்கின்றது.இதற்கும் உயர்ந்த ஒரு நிலை. الرضى-அர்ரிழா என்று சொல்லப்படும். அல்லாஹ் தனக்கு எந்த ஒரு சோதனையை கொடுத்தாலும் அதை கண்டு திருப்தி அடைவது.

உங்களை அல்லாஹ் ஏழையாக ஆக்கினானா? அல்ஹம்துலில்லாஹ்! நான் ஏழையாக இருப்பது அல்லாஹ்விற்கு பிரியம் என்றால் நான் ஏழையாக இருக்கின்றேன்.

என்னுடைய நோய் என்னுடைய சொத்தில் குடும்பத்தில் எனக்கு ஏற்பட்டஇழப்பு அல்ஹம்துலில்லாஹ்! இதைக் கொடுத்து என்னுடைய ஈமானில் அல்லாஹ்வுடைய விருப்பம் இருக்கிறது என்றால் இது அல்லாஹ்வின் நாட்டம் என்றால் இதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

பொறுமை காப்பது மட்டுமல்ல, அடக்கி கொள்வது மட்டுமல்ல, இதுதான் இந்த அடியானுக்கு விருப்பமாக மாறிவிடுகின்றது.

அவன் அங்கீகரித்து கொள்கின்றான். அல்லாஹ்வுடைய இந்த சோதனையை ஏற்றுக் கொள்கின்றான்.

கண்ணியத்திற்குரிய இறைத்தூதர்களில் பலர், இந்த நிலையில் உள்ளவர்கள் தான். நம்மைப் போன்ற சாதாரண மக்கள் ஸப்ரில் இருக்கின்றோம்.

ஆனால், இறைத்தூதர்களுடைய பண்புகளில் ஒன்றானாது, அவர்கள் இதற்கும் மேலாக அந்த சோதனையை பொருந்திக்கொண்டார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆக்களில் ஒன்றாக வருகிறது.

أَشْبَعُ يَوْمًا وَأَجُوعُ يَوْمًا

யா அல்லாஹ்! எனக்கு ஒருநாள் உணவளி. நான் சாப்பிட்டுவிட்டு உனக்கு நன்றி செலுத்துகின்றேன். ஒரு நாள் நான் பசியோடு இருக்கின்றேன். உன்னிடத்திலேயே கையேந்தி மன்றாடிக் கேட்கின்றேன். (1)

அறிவிப்பாளர் : அபூ உமாமா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 22190.

சோதனைகள் ஏற்படும் போது அவனது உள்ளத்தில் பொறுமை மட்டுமல்ல, அதற்கும் மேலாக அல்ஹம்துலில்லாஹ்.

நான்காவது ஒரு நிலை இருக்கின்றது. இந்த சோதனைகளை பொருந்திக் கொள்வது மட்டுமல்ல, இப்படிப்பட்ட ஒரு சோதனையைக் கொடுத்து என்னுடைய ஈமானை ரப்புல் ஆலமீன் உயர்த்துகின்றானே! என்னுடைய அமல்களை அல்லாஹ் உயர்த்துகின்றானே! என்னுடைய மார்க்கத்தின் முன்னேற்றத்திற்கு இந்த சோதனை ஒரு காரணமாக அமைகிறது என்று இந்த சோதனைக்காக அல்லாஹ்விடத்தில் நன்றி செலுத்துவது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு அமலை இமாம் இப்னுமாஜா பதிவு செய்கின்றார்கள்.

وَإِذَا رَأَى مَا يَكْرَهُ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ»

இந்த துன்யா உடைய வாழ்க்கையில் தனக்கு சிரமம் தரக் கூடியஒன்றை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பார்த்தால் அந்த நேரத்தில் அவர்களுடைய நாவிலிருந்து வரக்கூடிய வார்த்தை, «الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ»-"எல்லா நிலைமைகளிலும் அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்."

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : இப்னு மாஜா, எண் : 3803, தரம் : ஹசன் (அல்பானி)

வேலை இருந்தாலும் அல்ஹம்துலில்லாஹ். வேலை இல்லை என்றாலும் அல்ஹம்துலில்லாஹ்.

உண்ணுவதற்கு இருந்தாலும் அல்ஹம்துலில்லாஹ்.இல்லை என்றாலும் அல்ஹம்துலில்லாஹ்.

ஒரு முஃமினை தவிர, வேறு யாருக்கும் இது கிடைக்கப்பெறாது.

ஈமானை கொண்டு நாம் பெறக்கூடிய பாக்கியங்களில் மிக மிகப்பெரியது, இந்த அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வை அறியாத காஃபிரால் இந்த வார்த்தை வெளி வரவே செய்யாது.

அவர்களிடத்தில் எவ்வளவுதான் இருந்தாலும், சுக போகத்தில் வாழ்ந்தாலும் கூட, நீ எப்படி இருக்கின்றாய்? என்று கேட்டால் ஏதாவது ஒரு பிரச்சினையை தான் நினைவுக்கு வரும்.

ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளன்  மலை போன்ற பிரச்சினைகளுக்கு இடையிலும் அல்ஹம்துலில்லாஹ் என்று அல்லாஹ் கொடுத்ததை நினைத்து பார்ப்பான்.

அல்லாஹ் எடுத்ததை நினைத்து பார்க்க மாட்டான். அல்லாஹ் அருள் புரிந்ததை நினைத்துப் பார்ப்பான். அல்லாஹ் கொடுத்த சோதனையை அவன் பார்க்க மாட்டான்.

ஒரு கண்ணில்லாத முஸ்லிமிடத்தில் கேட்டுப்பாருங்கள். எப்படி இருக்கின்றீர்? என்று கேட்டால், அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லுவான். ஒரு காஃபிரால் சொல்ல முடியாது.

ஒரு கை இல்லாத, ஒரு கால் இல்லாத ஒரு முஸ்லிமிடத்தில் கேட்டுப் பாருங்கள். எப்படி இருக்கின்றாய்? என்று. அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லுவான். ஆனால் ஒரு காஃபிரால் அதை சொல்ல முடியாது.

நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையில் உள்ள ஒரு முஸ்லிமிடத்தில் கேட்டுப் பாருங்கள். எப்படி இருக்கின்றாய்? என்று. அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லுவான். ஒரு காஃபிரால் சொல்ல முடியாது.

ஒரு விபத்தில் சிக்கி கடுமையாக அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கும்போது கூட, அவர்கள் தன்னை விட அதிகமாக காயமுற்று இருப்பவனை பார்த்து அல்ஹம்துலில்லாஹ், எனக்கு அவனை விட இவ்வளவுதான் என்று சொல்லுவார்கள்.

இப்படி அல்லாஹ்வுடைய நிஃமத்துக்ளை நினைத்துப் பார்க்கக் கூடியவன் ஒரு முஸ்லிம்.மலை போன்ற சோதனைகளுக்கு இடையிலும் அவன் முகம் வாடாது.

நிபந்தனை என்ன? அவன் தொழு நோயாளியாக இருக்க வேண்டும்.அவனுடைய ஈமானுடைய உணர்வுகள் அவனிடத்தில் இருக்க வேண்டும்.

அவனுக்கு அல்லாஹ்வுடைய தூதரிடம் ஒரு முன்மாதிரி இருக்கின்றது.

முஹம்மது ரசூலுல்லாஹ் அபூபக்ருடன் அந்த குகையில் இருக்கும் போது, எதிரிகளால் சூழப்பட்டு இருக்கும் அந்த நேரத்தில், அந்த இக்கட்டான நிலையிலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا

‘‘நீர் கவலைப்படாதீர்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்''. (அல்குர்ஆன் 09:40)

எப்படிப்பட்ட வார்த்தை பாருங்கள்!

«مَا ظَنُّكَ يَا أَبَا بَكْرٍ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا»

 

அபூபக்ரே!அந்த இருவரில் மூன்றாமவராக அல்லாஹ் இருக்கின்றான். அப்படிப்பட்டவரை நினைத்து உன்னுடைய எண்ணம் என்ன அபுபக்ரே?

அறிவிப்பாளர் : அபூபக்ர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3653.

கண்ணியத்திற்குரியவர்களே! இது ஒரு முஃமினுடைய உயர்ந்த நிலை. இந்த சோதனைகளைக் கொண்டு அல்லாஹ் எனக்கு சொர்க்கத்தை நாடுகின்றானோ!அவனுடைய பொருத்தத்தை நாடுகின்றானோ!ஈமானிய உணர்வுகளை நாடுகின்றானோ!என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பவதற்காக இந்த சோதனைகளை ஆக்குகின்றானோ!என்று அல்லாஹ்விற்கு இந்த சோதனைக்காகவும் நன்றி செலுத்துவது.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா சூரா பகராவில் முஃமின்களை அழைத்துச் சொல்கின்றான்.

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ

(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும், பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றில் நஷ்டத்தைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. (அல்குர்ஆன் 2:155)

அல்லாஹ்வுடைய இந்த வசனம் ஒருவனை சோதிக்கப்படுவதற்குரிய அத்தனை விசயங்களுக்கும் எடுத்துச் சொல்லப்படுகின்றது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த வார்த்தையில் இப்படியும் ஒரு படிப்பினை இருக்கின்றது. நம்முடைய பலவீனத்தை அவன் அறிந்தவன்‌. நம்முடைய உள்ளத்தையும் அவன் அறிந்தவன்.

ஆனால்,அடியான் என்ன செய்கின்றான்? அந்த கொஞ்சத்தை அவன் பெரியதாக நினைத்து விடுகின்றான்.

வாழ்க்கையில் பாருங்கள்; நாம் மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய காலம் அதிகமா? கவலையாக இருக்க கூடிய காலம் அதிகமா? நாம் சுகமாக இருக்க கூடிய காலங்கள் அதிகமா? அல்லது நோயில் இருக்கக்கூடிய காலங்கள் அதிகமா? என்றால் நாம் மகிழ்ச்சியாக இருக்கக் கூடிய காலங்கள் தான் அதிகம்.

நோய் குறைவான காலங்களில் தான் வருகின்றது. நாம் கவலையாக இருக்கக்கூடிய காலங்களும் குறைவுதான்.

ஆனால், அல்லாஹ்வுடைய நிறையை நினைத்துப் பார்க்காமல் குறைவை மட்டும்தான் நினைத்துப் பார்க்கின்றோம்.

அல்லாஹ் நாடினால் பிறந்ததிலிருந்து இறப்பது வரை நம்மை சோதிப்பதற்கு அவனுக்கு அனுமதி இருக்கின்றது. அவனுக்கு அதிகாரம் இருக்கின்றது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அப்படி செய்வதில்லை.

ஒரு அடியானுக்கு சோதனையை கொடுத்தால் அதைவிட நிறைவான ஒன்றை அவனுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கின்றான். இன்னும் ஒரு உதாரணத்தை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். பிறர் நினைக்கலாம்; சிலருடைய வாழ்க்கை பிறந்ததில் இருந்து இறந்தது வரை சோதனையாக இருக்கிறதே என்று.

பிறக்கும்போதே ஊனமுற்று பிறந்தார். பிறக்கும் போதே ஏதாவது பிரச்சனை உடன் பிறந்தான். இதற்காக அவருடைய தாய் தந்தை ஏதாவது செலவு செய்து கொண்டே போகின்றார்கள். இப்படி கடைசியாக செலவு செய்கிறார். சிரமப் படுகிறார் உடலிலும் பிரச்சனை, வருவாயிலும் பிரச்சனை, செல்வத்திலும் பிரச்சனை. இதே நிலைமையில் அவர் மரணித்தும் விடுகின்றார்.

இவரைப் பொறுத்தவரை நாம் என்ன நினைப்போம்? எந்த ஒரு பாக்கியமும் அற்றவர் என்று.

ஆனால், இவர் நம்மை விட பாக்கியம் பெற்றவர். காரணம்,வாழ்க்கையில் இப்படி சோதனைகளுக்கு நடுவே அவர் புரண்டு கொண்டே இருந்த காரணத்தால் இவனிடத்தில் ஈமானும் பொறுமையும் இருந்திருக்குமேயானால் இவருக்கு கண்டிப்பாக நேரடியான சொர்க்கம். அந்த சொர்க்கமோ சாதாரண மக்களுக்கு கொடுக்கக்கூடிய சொர்க்கத்தை விட எத்தனையோ மடங்கு உயர்வான சொர்க்கம்.

இவர் இறுதியாக அடையப் போகின்ற அந்த சொர்க்கத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது, இவர் இந்த உலக வாழ்க்கையில் சோதனையில் பிரச்சனையில் வாழ்ந்து கொண்டிருந்தாரே, அது அந்த சொர்க்கத்திற்கு கொடுக்கக் கூடிய மிக மிக அற்பமான தொகை.

அந்த சொர்க்கத்திற்ல் நிரந்தரமான இன்பமான மகிழ்ச்சியான அல்லாஹ்வைப் பார்க்க கூடிய முடிவில்லாத வாழ்க்கையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவருக்கு கொடுக்கிறான்.

யார் நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டார்களோ,வசதி வாய்ப்புகள் கொடுக்கப்பட்டார்களோ,அவர்கள் கேள்வி கணக்குகள் இல்லாமல் சொர்க்கம் செல்ல முடியாது.

நாளை மறுமை நாளில் பொறுமையாக இருந்தவர்கள் விசாரணை இன்றி சொர்க்கத்திற்குப் போகும் போது வானவர்கள் கேட்பார்கள்; விசாரணை நடைபெறவில்லையே, உங்களை யார் சொர்க்கத்திற்கு அனுப்பியது? என்று.

எங்களது ரப்பு எங்களுக்கு அனுமதித்து விட்டான் என்று சொல்லும் போது மலக்குகள் இந்த வசனத்தை ஓதிக் காண்பிப்பார்கள்.

سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ

(இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் சிரமங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டதன் காரணமாக உங்களுக்கு ஈடேற்றம் (ஸலாம்) உண்டாகட்டும்! (உங்கள் இந்த) இறுதி வீடு மிக்க நல்லதாயிற்று'' (என்று கூறுவார்கள்.) (அல்குர்ஆன் 13 : 24)

ஆகவே, பிறப்பிலிருந்து இறப்புவரை துன்பத்தில் சோதனையில் கழித்து சோதனைகளில் அவன் இறந்து விட்டாலும், அவனுடைய இந்த சோதனை என்பது அவனுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய சொர்க்கத்திற்கு முன்னால் மிக மிக அற்பமான விலை.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பொறுமை நமக்கு எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

பலருடைய நிலை எப்படி இருக்கின்றது? எல்லாவற்றையும் திட்டித் தீர்த்து விடுவார்கள்.  அதற்குப் பிறகு கடைசியாக சரி என்ன செய்வது பொறுமையாக இருப்போமே! என்று இருப்பார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து ஒரு பாடத்தை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள்.

ஒரு கப்ருக்கு அருகே அழுதுகொண்டிருக்கும் பெண்ணை கடந்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செல்லும் போது அந்த பெண்ணிடம் சொன்னார்கள் :

«اتَّقِي اللَّهَ وَاصْبِرِي»

அல்லாஹ்வைப் பயந்து கொள்!நீ பொறுமையாக இரு!என்று சொல்கிறார்கள். அந்தப் பெண் தூர விலகிச் செல்லுங்கள்.எனக்கு ஏற்பட்ட சோதனை உங்களுக்கு ஏற்படவில்லை என்று கூறிவிடுகிறாள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அந்த பெண் அடையாளம் தெரியாமல் இருந்தார். அந்தப் பெண்ணிற்கு தனக்கு அறிவுரை சொல்வது யார் என்று தெரியவில்லை.

பிறகு, அந்தப் பெண்ணிற்கு சொல்லப்பட்டது; உங்களுக்கு அறிவுரை கூறியது நபி என்று’ நபி இடத்தில் அந்த பெண் வருகின்றார்கள். நபியிடத்தில் வந்த அந்தப் பெண்மணி நேராக நபியை சந்திக்கிறார்கள்.

நபியின் வீட்டு வாசலிற்கு முன்னால் எந்த ஒரு காவலாளியும் இல்லை. நேரடியாக அந்த பெண் நபியை சந்தித்து, அல்லாஹ்வின் தூதரே! உங்களை அறிந்து நான் அந்த வார்த்தையை சொல்லவில்லை. நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதைப்பற்றியெல்லாம் பொருட்படுத்தி கொள்ளவில்லை. அந்தப் பெண்ணிற்கு அறிவுரை சொன்னார்கள் :

«إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى»

பொறுமை என்பது சகிப்புத்தன்மை என்பது உனக்கு சோதனை ஏற்படுகின்ற அந்த முதல் திடுக்கத்தில் நீ பொறுமையாக இருப்பதாகும்.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1283.

அந்த நேரத்தில் நீ அமைதியாக இருப்பது, அதுதான் சோதனையே தவிர,அழுது தீர்த்ததற்கு பிறகு, புலம்பியதற்குப் பிறகு, ஏசியதற்குப் பிறகு சரி இப்போது பொறுமையாக இருக்கின்றேன் என்று சொல்வது பொறுமை ஆகாது.

பொறுமை என்பது முதல் அந்த திடுக்கத்தில் இருக்க வேண்டும். செய்தி கேட்ட பிறகு அந்த உள்ளத்தில் இருக்கின்ற முதல் திடுக்கத்தின் போது இருக்க வேண்டும் என்று அந்தப் பெண்மணிக்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! இது போன்று பொறுமையுடைய விஷயத்தைப் பற்றி அறிய வேண்டியது நிறைய இருக்கின்றன. அல்லாஹ் நாடினால் தொடர்ந்து மற்ற வாரங்களில் பார்ப்போம்.

இந்த பொறுமையில் இருந்து நாம் ஒருக்காலும் நீங்கி இருக்க முடியாது. காலத்தின் எல்லா சூழ்நிலைகளிலும் அடியானுக்கு பொறுமை தேவை.

நோயில் பொறுமை தேவை, வறுமையிலும் பொறுமை தேவை, துக்கமான நேரங்களிலும் பொறுமை தேவை.

ஏன் செல்வம் கிடைத்து விட்டாலும் கூட பொறுமை தேவை. அந்த செல்வத்தை அல்லாஹ்வுடைய விருப்பதிலிருந்து தடுத்துக் கொள்வதற்கு உண்டான உறுதி அவனிடத்தில் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த பொறுமையாளர்களுக்காக துஆ செய்து இருக்கின்றார்கள். அல்லாஹ் இந்த பொறுமையாளர்களின் கண்ணியத்தை உயர்வாக சொல்லியிருக்கின்றான்.

அப்படிப்பட்ட நல்ல முஃமின்களில் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ زَحْرٍ، عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: وَحُدِّثْنَا بِهَذَا الْإِسْنَادِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " عَرَضَ عَلَيَّ رَبِّي لِيَجْعَلَ لِي بَطْحَاءَ مَكَّةَ ذَهَبًا. فَقُلْتُ: لَا. يَا رَبِّ وَلَكِنْ أَشْبَعُ يَوْمًا وَأَجُوعُ يَوْمًا، أَوْ نَحْوَ ذَلِكَ، فَإِذَا جُعْتُ تَضَرَّعْتُ إِلَيْكَ وَذَكَرْتُكَ، وَإِذَا شَبِعْتُ حَمِدْتُكَ وَشَكَرْتُكَ " (مسند أحمد- 22190)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/