HOME      Khutba      அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 9/9) | Tamil Bayan - 343   
 

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 9/9) | Tamil Bayan - 343

           

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 9/9) | Tamil Bayan - 343


அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை  (பகுதி - 9)

ஜுமுஆ குத்பா தலைப்பு : அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை  (பகுதி - 9)

வரிசை : 343

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 30-01-2015 | 10-03-1436

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை போற்றி புகழ்ந்த பின் அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார், தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறிய பின் உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை, அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ்வை பயந்து கொண்டவர்கள் நிச்சயமாக இம்மையிலும் வெற்றி அடைவார்கள்,மறுமையிலும் வெற்றி அடைவார்கள். அல்லாஹ் அவர்களை தன் பக்கம் நெருக்கமாக்கி கொள்கிறான். அல்லாஹ் தஆலா அவர்களோடு எப்போதும் இருக்கிறான்.

إِنَّ اللَّهَ مَعَ الَّذِينَ اتَّقَوْا وَالَّذِينَ هُمْ مُحْسِنُونَ

நிச்சயமாக எவர்கள் மெய்யாகவே இறையச்சமுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுடனும், எவர்கள் நன்மை செய்கிறார்களோ அவர்களுடனும் தான் அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் 16 : 128)

வசனத்தின் கருத்து : நிச்சயமாக யார் அல்லாஹ்வை முழுமையாக பயந்து கொள்கிறார்களோ, அல்லாஹ்வுடைய கடமைகளை நிறைவேற்றுகிறார்களோ, அல்லாஹ் தடுத்த பாவங்களை விட்டு விலகி கொள்கிறார்களோ அவர்கள் தான் தக்வா உடையவர்கள்.

அல்லாஹ் தன் மீது கடமையாக்கியதை செய்து, அல்லாஹ் தடுத்தவற்றை விட்டு யார் விலகிக் கொள்கிறார்களோ அத்தகைய அச்சமுடையவர்கள், அல்லாஹ்வுடைய பயமுடையவர்கள் அவர்களோடு தான் அல்லாஹ் இருக்கிறான்.

யார் தங்களுடைய அனைத்து விதமான செயல்களையும் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு ஏற்ப சரி செய்து கொள்கிறார்களோ, அழகு படுத்திக் கொள்கிறார்களோ, அமல்களை சுத்தம் செய்து கொள்கிறார்களோ ஷிர்க்கிலிருந்து, நயவஞ்சகத்திலிருந்து, முஹஸ்துதியிலிருந்து இப்படி அல்லாஹ்விற்கு பிடிக்காத அனைத்து விதமான காரியங்களிலிருந்தும், பண்புகளிலிருந்தும் யார் தங்களை சுத்தப்படுத்திக் கொள்கிறார்களோ அவர்களோடு தான் அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன் 16 : 128)

இந்த வசனம் நம்மை மிகப் பெரிய அளவில் சிந்திக்கத் தூண்டக் கூடிய வசனம். அல்லாஹ்வுடைய அச்சம் யாருக்கு இருக்குமோ அவர்களோடு தான் அல்லாஹ் இருக்கிறான். அல்லாஹ் அவர்களுக்கு துணை நிற்கிறான். அவர்களுடைய உள்ளங்களுக்கு ஆறுதல் தருகிறான், அவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டுகிறான்.

அல்லாஹ்வுடைய தக்வா இல்லாமல் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வழிகாட்டுதலை நாம் அடைய முடியாது. அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு எந்த ஒரு நேர்வழியை அல்லாஹ் வாக்களித்திருக்கிறானோ அந்த நேர்வழியை தக்வா இல்லாமல் அடைய முடியாது.

இந்த தக்வாவின் விஷயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவுபடுத்தியவனாக தொடர்ந்து நாம் பார்த்து வருகின்ற, கேட்டு வருகின்ற ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இறுதி பேருரையின் இறுதி பகுதிக்கு நாம் செல்வோமாக!

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய இறுதிப் பேருரையில் இருபத்தி மூன்று ஆண்டு கால ஏகத்துவ பிரச்சார பணி, சுமுதாய சீர்திருத்தப் பணி அவற்றின் சுறுக்கத்தை தங்களுடைய இறுதிப் பேருரையில் மிக அழகாக ரத்தின சுருக்கமாக சொல்லிக் கொடுத்தார்கள், மக்களுக்கு போதித்தார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கப்பட்ட இருபத்தி மூன்று ஆண்டுகால குர்ஆனுடைய வசனங்களுக்கு, சுறுக்கமாக இருபத்தி மூன்று ஆண்டு காலமாக அவர்கள் கூறிய பேசிய நபிமொழிகளின் சுருக்கமாக தான் அந்த இறுதிப் பேருரை அமைந்திருப்பதை பார்க்கிறோம்.

ஒரு முஃமினுக்கு இம்மையில் தேவைப்படுகின்ற அவன் பின்பற்ற வேண்டிய தனிப்பட்ட விஷயங்கள், குடும்ப விஷயங்கள், பொருளாதார விஷயங்கள், சமூக அரசியல் சம்மந்தப்பட்ட விஷயங்கள்.

இப்படி அனைத்தையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்புகளாக, முத்துக்களாக அந்த இறுதிப் பேருரையில் கூறினார்கள்.

அதில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியது தான் நாம் நம்முடைய அமீருக்கு கட்டுப்படுவது.

கண்ணியத்திற்குரியவர்களே! முஸ்லிம்கள் தலைமை இல்லாமல் இருக்கமாட்டார்கள். இஸ்லாம் இது ஒரு ஜமாஆ -ஒட்டுமொத்தமான அமைப்பு.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது உம்மத் எழுபத்தி மூன்று கூட்டங்களாக பிரியும். அந்த கூட்டங்களில் எழுபத்தி இரண்டு கூட்டங்கள் நரக நெருப்பில் செல்வார்கள் ஒரு கூட்டத்தை தவிர என்று கூறிய பொழுது கண்ணியத்திற்குரிய தோழர்கள் கேட்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! அந்த ஒரு கூட்டம் யார்? அந்த நரகத்திற்கு செல்லக் கூடிய எழுபத்தி இரண்டு கூட்டங்களை பற்றி கண்ணியத்திற்குரிய தோழர்கள் விசாரிக்க வில்லை. அவர்கள் விசாரித்தது என்ன? வெற்றிக்கு எது தேவை? எந்த ஒரு கூட்டம் சொர்க்கம் செல்லுமோ அந்த கூட்டத்தை நபியே! எங்களுக்கு அறிவித்து தாருங்கள், அவர்களோடு நாங்கள் சேர்ந்து கொள்கிறோம்.

இப்படி தோழர்கள் கேட்ட பொழுது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அந்த பதில் மூன்று விதமாக அறிவிக்கப்படுகிறது.

அதில் ஒன்று தான், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், அந்த சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய ஒரு கூட்டம் யாரென்றால் ஒருங்கினைந்து சமூகமாக இருக்கக் கூடியவர்கள், ஜமாஅத்தோடு இருக்கக் கூடியவர்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 12479

அன்பிற்குரியவர்களே! இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அப்படியென்றால் யார் வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமானாலும் இருந்து கொண்டு அவர்கள் கூட்டாக இருந்தால் அவர்கள் இந்த ஹதீஸில் வருவார்களா என்றால், அப்படி கிடையாது.

காரணம் என்ன?அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த இடத்தில் ஜமாஅத்துன் என்று கூறவில்லை 'அல் ஜமாஆ' என்று கூறினார்கள்.

ஒரு குறிப்பிட்ட ஒரு கூட்டத்தை பற்றி. அதாவது, யார் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழியில் அவர்களுக்கு பின்னால் வந்த அந்த கண்ணியத்திற்குரிய கலீஃபாக்களுடைய வழியில் ஸஹாபாக்களின் வழியில் இந்த முஸ்லிம் ஜமாஅத்தை இயக்கங்களாளோ கொள்கைகளாளோ வேறு அரசியல் காரணங்களாலோ பிரிக்காமல் ஒருங்கினைந்து அதே நபியின் வழியில், அதே ஸஹாபாக்களின் வழியில் இருக்கிறார்களோ அவர்களை தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல் ஜமாஆ என்று கூறினார்கள்.

ஏனென்றால், அல் ஜமாஆ என்று சொல்லப்பட்ட இந்த ஹதீஸ், இதே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பதில் நமக்கு அதற்குரிய விளக்கத்தை தருகிறது.

கண்ணியத்திற்குரிய தோழர்களுடைய அந்த கேள்விக்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பதில்களில் இரண்டாவது ஒரு அறிவிப்பாக வருவது,

நானும் எனது தோழர்களும் எந்த மார்க்கத்தில் எந்த ஒரு கொள்கையில் எந்த ஒரு அமைப்பில் இருக்கிறோமோ அதன் அடிப்படையில் இருப்பவர்கள் தான் சொர்க்கம் செல்லக்கூடிய கூட்டம் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தெளிவு கொடுத்தார்கள்.

இந்த ஹதீஸிலிருந்து நாம் என்ன தெரிய வருகிறோம்? ஒரு முஸ்லிம் சமுதாயம் என்பது இது ஒரு ஜமாஅத்தாக இருக்கக் கூடிய சமுதாயம். அரசியல் இதை பிரிக்கக் கூடாது, இயக்கங்கள் இதை பிரிக்கக் கூடாது, மொழி இதை பிரிக்கக் கூடாது, இனம் இதை பிரிக்கக் கூடாது. எந்த வகையிலும் பாகுபாடு காட்டப்படாத, பிரிவினைவாதம் அறவே இல்லாத ஒரு சமுதாயம் தான் ஜமாஆ என்று சொல்லப்படும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த ஸஹாபாக்களுடைய ஜமாஅத்தை உருவாக்கினார்களோ அதில் குரைஷிகள் இருந்தார்கள், மக்காவாசிகள் இருந்தார்கள், மதினாவை சேர்ந்தவர்கள் இருந்தார்கள். அரபுகளிலேயே உயர்ந்த குலத்தை உடையவர்களும், அரபுகளில் சாதாரண ஒரு குலத்தை சேர்ந்தவர்களும், அரபியர்களும் இருந்தார்கள், அஜமிகளும் இருந்தார்கள்.

வியாபாரிகள், தொழிளாலிகள், அரபு பிரதேசத்தை சேர்ந்தவர்கள், அதற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் என்று அனைத்து விதமான சமுதாய மக்களையும் நிறத்தால் பிரிவினை காட்டாமல், மொழியால் பிரிவினை காட்டாமல், இனத்தால் பிரிவினை காட்டாமல், இடத்தால் பிரிவினை காட்டாமல் அனைவர்களையும் ஒன்று சேர்ந்த, ஒருங்கிணைந்த ஒரு சமுதாயமாக தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களை ஒன்று சேர்த்தார்கள்.

சூரத்துல் ஹுஜுராத்தின் விளக்கத்தை நீங்கள் படிக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான் :

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (அல்குர்ஆன் 49:10)

முஃமின்களெல்லாம் சகோதரர்களாக தான் இருக்க வேண்டும். ஒரு தாய் மக்கள் இருப்பதை போன்று எந்த விதமான பாகுபாடு இல்லாமல் நிறத்தாலோ, மொழியாலோ, படிப்பாலோ, தேசத்தாலோ எந்த வகையிலும் பாகுபாடு காட்டப்படாத ஒரு தாய் மக்களை போன்று சகோதரர்களாக தான் இறை நம்பிக்கை உடையவர்கள் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறான் என்றால் அவனுடைய நம்பிக்கை மறுமையின் மீது, சொர்க்கத்தின் மீது உறுதியாக இருக்கிறது என்றால் அவன் தன் சகோதரனை தன்னை விட தாழ்ந்தவனாக, தன்னை விட தகுதி குறைவானவனாக எப்பொழுதும் கருதக் கூடாது; பார்க்கக் கூடாது.

ஏன்? தனக்கு இருப்பதையும் தனது சகோதரனுக்கு விட்டுக் கொடுக்கக் கூடிய உணர்வு இல்லாத வரை ஒருவன் முஃமினாக ஆக முடியாது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஈமானிய அடிப்படையில் மிகத் தெளிவாக, கல்லில் எழுதப்படக்கூடிய எழுத்தைப் போன்று எழுதினார்கள்.

لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ

தனக்கு விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாத வரை உங்களில் யாரும் முஃமினாக-இறை நம்பிக்கையாளனாக, அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவனாக ஆக முடியாது.

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 12.

இதை விட ஒரு அழுத்தமான வார்த்தை இருக்க முடியுமா?

ஒரு மனிதனின் இறை நம்பிக்கையை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீக்கி விடுகிறார்கள்.

எப்போது அவன் தன் சகோதரனை பகைத்துக் கொள்வானோ, தனது சகோதரனை விட்டு விலகுவானோ, தன் சகோதரனை அந்நியராக பார்ப்பானோ, தனது சகோதரனுக்கு கேடை நினைப்பானோ, தனது சகோதரனுக்கு நாசத்தை விரும்புவானோ, தனக்கு விரும்புவதை தன் சகோதரனுக்கு விரும்பாத வரை உங்களில் யாரும் முஃமின்களாக ஆக முடியாது.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த கூற்று சகோதரத்துவத்தின் உச்சத்திற்கு நம்மை கொண்டு செல்கிறது. இதை தான் கண்ணியத்திற்குரிய ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களுக்கு மத்தியில் நடைமுறை சாத்தியமாக செய்து காட்டினார்கள். இது செய்து காட்ட முடியாத ஒரு பண்பு அல்ல , நிகழ்த்த முடியாத ஒரு சாதணை அல்ல.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்த பொழுது, (ஹிஜ்ரத் என்றால் என்ன? ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டிற்கு அல்லாஹ்விற்காக அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக துறந்து செல்வது.

முஹாஜிர் என்பதற்கு நேரடி பொருள் என்னவென்றால் நாடோடிகள். நாட்டை துறந்தவர்கள் அவர்களுக்கு நாடு என்று, வீடு என்று, உடமை என்று எதுவும் கிடையாது. எங்கே அவர்கள் ஹிஜ்ரத் செய்கிறார்களோ, அகதிகளாக செல்கிறார்களோ அவர்கள் ஆதரித்தால் தவிர. அங்கே அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டாலே தவிர. இந்த முஹாஜிர் தோழர்கள் அல்லாஹ்வும் அவர்களை அப்படி தான் கூறுகிறான்.

நாடு துறந்து வந்த ஃபக்கீர்களுக்காக, ஏழைகளுக்காக. (அல்குர்ஆன் 59 : 8)

யாரை கூறுகிறான்? இதில் அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் இருக்கிறார், கோடிக்கணக்கான செல்வங்களுக்கு மக்காவில் அதிபதியாக இருந்த அப்துர் ரஹ்மான் இருக்கிறார். கோடிக்கணக்கான செல்வங்களுக்கு அதிபதியாக இருந்த உஸ்மான் அதில் இருக்கிறார். இவர்களையெல்லாம் அல்லாஹ் என்ன கூறுகிறான்.

ஃபக்கீரகள், பரம ஏழைகளாக, நாடு துறந்து வந்த இந்த பக்கீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இதில் யார் அடங்குவார்கள்? முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,அபூபக்ர் மிகப் பெரிய வியாபாரியாக இருந்தார்கள். உஸ்மான், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் போன்ற பெரும் பெரும் செல்வமுள்ள ஸஹாபாக்களை எல்லாம் ஃபக்கீர்களின் பட்டியலில் அல்லாஹ் கொண்டு வருகிறான். அப்படி தான் அவர்கள் வந்தார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்போது மீண்டும் மக்காவை கைப்பற்றினார்களோ, அல்லாஹ் அவர்களுக்கு மக்காவை கொடுத்தானோ, அல்லாஹ்வுடைய இந்த சட்ட விதியின் படி அந்த ஸஹாபாக்களில் யாரும் தாங்கள் விட்டு வந்த செல்வத்திலிருந்தும் அல்லது தாங்கள் வசித்திருந்த நிலத்தையோ, இடத்தையோ, தங்களுடைய எந்த விதமான உடமைகளையும் சொந்தம் கொண்டாடவில்லை.

எதை நாங்கள் அல்லாஹ்விற்காக விட்டோமோ அதை விட்டு விட்டோம். அதிலிருந்து எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. மதினாவிற்கு வந்ததற்கு பிறகு எது அவர்களுக்கு கிடைத்ததோ அது தான் அவர்களுடைய செல்வம்.

எந்த செல்வத்திலிருந்து அல்லாஹ்விற்காக மக்காவை விட்டு அவர்கள் ஹிஜ்ரத் செய்து விட்டார்களோ அந்த செல்வத்தை அவர்கள் திரும்ப பெறவில்லை, திரும்ப கேட்கவில்லை.

கேட்டால் கொடுத்திருப்பார்கள். கேட்காமலேயே கொடுப்பதற்கு முன் வந்தார்கள்.  ஆனால், அல்லாஹ்விற்காக எதை விட்டார்களோ அதை விட்டு விட்டார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! இந்த முஹாஜிர்களுக்கு அந்த அன்ஸாரிகள் என்ன செய்தார்கள்? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு அன்ஸாரியை அழைத்தார்கள் .

உனக்கு இனி சகோதரன் இந்த முஹாஹிர் தான். ஏற்றுக் கொண்டேன் அல்லாஹ்வின் தூதரே! என்ன செய்ய வேண்டும்? உனது செல்வத்தை சம பகுதியாக இவருக்கு கொடுக்க வேண்டும். இனி உன்னுடைய அண்ணன், தம்பி, உனது சகோதரன், உனக்கு இரத்த சகோதரனாக இருப்பவர் இரத்த சகோதரனாக பங்கு கொள்ள கூடாது. இந்த முஹாஜிர் சகோதரன் தான் பங்கு கொண்டாடுவார்.

இப்படி ஒவ்வொருவரையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஹாஜிர் ஏழைகளை பங்கு வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். மிக மகிழ்ச்சியாக அந்த அன்ஸாரிகள் வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.

உலகத்தின் கோடிக் கணக்கான செல்வங்களை, இந்த உலகத்தின் ஆட்சியை வாங்குவதை விட ஒரு முஹாஜிர், ஃபக்கீரை தனது வீட்டிற்கு விருந்தாளியாக அல்ல. தனது பங்காளியாக அழைத்து செல்வதை அன்ஸாரிகள் விரும்பினார்கள்.

அப்படிப்பட்ட ஒரு சமூகத்தை, ஜமாஅத்தை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உருவாக்கினார்கள்.

யோசித்துப் பாருங்கள், இஸ்லாம் ஏன் பரவியது? இஸ்லாம் ஏன் பலமுற்றது? இஸ்லாம் ஏன் வீரமாக ஓங்கியது என்றால் அந்த அன்ஸாரிகளின் அரவனைப்பு.

அவர்களை பற்றி அல்லாஹ் கூறுகிறான் :

وَالَّذِينَ تَبَوَّءُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் . (அல்குர்ஆன் 59:9)

இவர்களை விடவா ஒரு உதாரணத்தை வரலாறுகளில் கொண்டு வர முடியும்?! தனது மனைவிகளில் ஒரு மனைவியை அதுவும் உனக்கு யாரை பிடிக்குமோ அவளை நான் தலாக் சொல்லி விடுகிறேன். இத்தா முடிந்ததற்கு பிறகு நீ அவளை விருப்பத்தோடு மணமுடித்துக் கொள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர்களுடைய ஈமானிய உணர்வு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தர்பியா இருந்தது என்றால், யோசித்துப் பாருங்கள்!

இந்த சமூகத்தில் எப்படி ஒரு ஜமாஅத்தை உருவாக்கினார்கள்! ரஸூலுல்லாஹ் உடைய வஃபாத்திற்கு பிறகு அந்த ஸஹாபாக்கள் செய்தது என்ன தெரியுமா? ரஸூலுல்லாஹ் இறந்து விட்டார்கள் அடக்கம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது.

ஆனால், அதை விட ஒரு பெரிய கடமையை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஸ்லிம்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

எந்த ஒரு கடமையை மறந்தவர்களாக, அப்படி ஒரு அடிப்படையே மார்க்கத்தில் இல்லாததை போன்று, ஒரு தலை இல்லா பிண்டமாக ஒரு அமீர் இல்லாத ஜமாஅத்தாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமே நமக்கு ஸஹாபாக்களுடைய வரலாறு முன் உதாரணமாக இல்லையா?

என்ன செய்தார்கள் சஹாபாக்களின் ஜமாஆ? ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்து விட்டார்கள். முதலாவதாக இனி முஸ்லிம்களை ஒருங்கிணைப்பதற்கு ஒரு அமீர் நமக்கு தேவை.

ஸஹாபாக்கள் எதை செய்தார்களோ, அது தானே மார்க்கம். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வஃபாத் நிகழ்ந்து. ஸஹாபாக்கள் செய்யக் கூடிய முதல் அடிப்படை என்ன? இப்போது அமீரை எப்படி நிர்ணயிப்பது?  அமீராக யார் இருப்பது? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து பெற்ற பாடம்.

அவர்களுடைய வாழ்க்கையில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஸ்லிம்களை ஒரு காலும் ஜமாஅத் இல்லாத, அமீர் இல்லாத ஒரு தனி மனிதனாக பார்க்க வில்லை.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :

من شذ شذ في النار

யார் ஜமாஅத்திலிருந்து வெளியே செல்வாரோ அவன் நரகத்தில் தனித்துவிட்டான் என்று.

நூல் : திர்மிதி, எண் : 2167.

யார் ஜமாஅத்தை விட்டு வெளியே செல்கின்றானோ அவன் கூட்டத்தை விட்டு வெளியே சென்ற ஒரு ஆட்டை போல. ஓநாய் அந்த ஆட்டை கொத்திக் கொல்லும்.

ஸஹாபாக்கள் என்ன செய்தார்கள்? ஒன்று கூட்டினார்கள். யாரை அமீராக ஆக்குவது? அங்கு ஆலோசனை நடக்கிறது. இறுதியாக அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களை கலீஃபாவாக  தேர்ந்தெடுக்கிறார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதலின் படி அங்கே அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹுகலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அதற்கு பிறகு தான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குளிப்பாட்டுவது, அவர்களுக்கு தொழுகை நடத்துவது, அவர்களை அடக்கம் செய்வது போன்ற எல்லா கடமைகளும் அங்கு நிறைவேற்றப் படுகின்றன.

கலீஃபா தேர்ந்தெடுக்கப்படாமல் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஜனாஸா அங்கே குளிப்பாட்டப்படவில்லை. அவர்களுக்கு அங்கே தொழுகை நடத்தப்படவில்லை. அவர்கள் அங்கே அடக்கம் செய்யப்படவில்லை.

காரணம், கலீஃபாவுடைய, அமீருடைய முக்கியத்துவம் இஸ்லாமிய மார்க்கத்தில் அவ்வளவு முக்கியமானது.

யார் முஸ்லிம்களுக்கு அவர்களுடைய ஜமாஅத்திற்கு தொழுகை நடத்துவதற்கு தககுதியானவர் என்றால் முஸ்லிம்களுடைய அமீர் தான் அவர்களுக்கு தொழுகை நடத்துவதற்கு தகுதியானவர்கள்.

இன்று நம்மை பொறுத்தவரை இமாமத்தை இரண்டாக பிரித்தோம். தொழுகை நடத்துவதற்கு ஒரு இமாம். ‍அதை மட்டும் நாம் நிர்ணயித்து விட்டு நம்முடைய பொது இமாமத்தை பற்றி சிந்திக்காத மக்களாக பெரும்பான்மையான முஸ்லிம் சமுதாயம் இருக்கிறது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த வழிகாட்டுதல் நமக்கு எதை குறிக்கிறது ?

அவர்களின் தோழர்களுடைய செயல்பாடுகள் இந்த உம்மத் ஒரு இமாமுக்கு கீழே, ஒரு தலைமைக்கு கீழே வராத வரை இந்த உம்மத்துடைய கண்ணியத்தை மீட்டெடுக்க முடியாது.

ஆகவே தான், அபூபக்ர் கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

முஸ்லிம்களுடைய ஷூராவின் அடிப்படையில், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸின் அடிப்படையில், அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹுஇறக்கும் பொழுது யார் பொது விஷயங்களில் முடிவெடுப்பதற்கு தகுதி உள்ளவர்களாக இருந்தார்களோ அத்தகைய தோழர்களை தனக்கு முன்னால் கொண்டு வந்து ஒரு கடிதத்தில் உமர் அல் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய பெயரை எழுதி நான் இந்த கடிதத்தில் எழுதப்பட்டவருக்கு உங்களுக்கு பைஅத் செய்து கொடுக்கிறேன். அவரை என்னுடைய கலீஃபாவாக ஏற்றுக் கொள்கிறேன் என்று பைஅத் வாங்குகிறார்கள். அதற்கு பிறகு தான் அவர்கள் மரணிக்கிறார்கள்.

உமர் அல் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹுஷூராவை நிர்ணயித்து, அதிலிருந்து ஒருவரை நீங்கள் அமீராக எடுத்துக் கொள்ளுங்கள் என்று அந்த பொறுப்பை கொடுத்துவிட்டு தான் அவர்களும் மரணம் எய்திருக்கிறார்கள்.

ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே! இந்த தலைமைத்துவம் என்பது நமது மார்க்கத்தினுடைய அம்சங்களில் ஒன்று. ஒவ்வொரு முஸ்லிமும் இதற்காக ஆசைப்பட வேண்டும்.

இதற்காக அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும். இந்த இமாரத், கிலாஃபத் எப்பொழுது முஸ்லிம்களிடமிருந்து பரிபோகிறதோ, அப்பொழுது தான் எதிரிகள் முஸ்லிம்களின் மீது அவர்கள் தாக்குதல் நடத்த ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு அமீருடைய, ஒரு கலீஃபாவுடைய கடமை என்ன? முஸ்லிம்களை பாதுகாப்பது, அல்லாஹ்வுடைய சட்டத்தை நிலைநிறுத்துவது, அல்லாஹ்வுடைய தீனை பரப்புவது.

அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாதை உயிர்பிப்பது, அல்லாஹ்வுடைய சட்டங்களை அமல்படுத்துவது. எங்கே முஸ்லிம்கள் அவர்களுக்கு ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்படுமோ அந்த பாதிப்பிற்காக குரல் கொடுப்பது.

இஸ்லாமிய வரலாற்றில் மன்னர்களாக இருந்த பொழுது கூட உமவிய்யாக்களாகவோ அல்லது அப்பாஸிய மன்னர்களாகவோ முஸ்லிம்களுக்கு மத்தியில் எப்பொழுது ஒரு இமாமத்துக் கீழே ஒற்றுமை இருந்ததோ அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முஸ்லிம்களுடைய உயிர்களை பாதுகாத்தான். அவர்களுடைய உடமைகள் பாதுகாக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு கண்ணியம் இருந்தது.

எப்பொழுது தலைமை இல்லாத, ஒரு அமீர் இல்லாத சமுதாயமாக இந்த சமுதாயம் மாறியதோ, இன்று பார்க்கிறோம் முஸ்லிம்களுடைய எண்ணிக்கை எத்தனை இருக்குமோ அந்தளவுக்கு அவர்களிடத்தில் ஜமாஅத் இருப்பதை பார்க்கிறோம்.

ஒவ்வொருவரும் தனி தனி குழுக்களாக பிரிந்து கொண்டு தங்களுக்கு ஒரு சிறிய தலைமையை ஏற்படுத்திக் கொண்டு இது தான் ஜமாஅத் என்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இல்லை. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதலை பாருங்கள். முஸ்லிம்கள் ஒரு சமூகமாக, ஒரு சமுதாயமாக பெரும் சமுதாயமாக எங்கே ஒன்று சேர்கிறார்களோ அது தான் சமுதாயமே தவிர, அவர்களை பிரித்து தனி தனி குழுக்களாக ஏற்படுத்திக் கொண்டு தான் ஒரு சமுதாயமாக ஜமாஅத்தாக சொல்வது பிரிவினையை உண்டாக்கக் கூடிய காரியம்.

அரசியலின் பெயராகவோ அல்லது அமைப்புகளின் பெயராகவோ எந்த வகையில் பிரிவினை செய்தாலும் சரி, அது கடைசியாக முஸ்லிம்களுடைய இரத்தங்களை சிந்துவதிலும், பகைமைகளை ஏற்படுத்துவதில் தான் கொண்டு போய் விடும்.

இதற்கு எதார்த்தமான உதாரணமாக நமது இஸ்லாமிய வரலாற்றில் இன்றைய காலத்தில் முஸ்லிம்களுடைய நிலமைகளை நாம் பார்க்கிறோம்.

அவர்கள் தங்களுடைய ஆட்சியாளர்கள், அநியாயம் செய்பவர்களாக அல்லது மார்க்கத்தை பேணாதவர்களாக இருக்கிறார்கள் என்று கூறி குழுக்களாக பிரிந்தவர்கள் நிலை கடைசியில் எப்படி மாறியது?

ஒரு குழு இன்னொரு குழுவின் இரத்தத்தை சிந்தக்கூடிய, கொல்லக்கூடிய, அவர்களை அழிக்கக் கூடிய ஒரு குழுவாக, ஒரு சமுதாயமாக மாறுகிறது என்பதை பார்க்கிறோம்.

எந்த ஒரு வகையிலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படி பிரிந்து செல்வதை அவர்கள் விரும்பவே இல்லை, அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கடுமையாக எச்சரிக்கை செய்கிறான்.

நீங்கள் தனி தனி குழுக்களாக பிரிந்து சென்று விடாதீர்கள். (அல்குர்ஆன் 3 : 103)

ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு,ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்டதை எப்படி பகிர்ந்துக் கொள்கிறார்கள் என்று பாருங்கள்.

அபூ இத்ரீஸ் ஹவ்ரானி ரஹிமஹுல்லாஹ் அறிவிக்கிறார்கள். இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.

மக்கள் நபியிடத்தில் நன்மையை பற்றி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.நானோ தீமையை பற்றி கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த தீமை என்னை அடைந்து விடுவதை பயந்து, தீமையில் நான் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக தீமை என்னவென்று தெரிந்து அதிலிருந்து விலகிக் கொள்வதற்காக, தப்பித்துக் கொள்வதற்காக தீமையை பற்றி நான் விசாரித்துக் கொண்டிருந்தேன்.

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஒரு மடமையில், அறியாமையில்,தீமையில் இருந்தோம், பாவத்தில் இருந்தோம்.அல்லாஹ் இந்த நன்மையை எங்களுக்கு கொண்டு வந்து கொடுத்தான். இஸ்லாம் என்ற,ஒற்றுமை என்ற நன்மையை அல்லாஹ் எங்களுக்கு கொண்டு வந்து கொடுத்தான். இந்த நன்மைக்குப் பிறகு தீமை இருக்குமா?

ஆம், கண்டிப்பாக இந்த நன்மைக்கு பிறகு தீமை இருக்கும்.அந்த தீமைக்கு பிறகு நன்மை வருமா? ஆம் என்று கூறினார்கள்.

ஆனால், அதுவும் குழப்பமாக தான் இருக்கும். அல்லாஹ்வின் தூதரே! குழப்பம் என்று நீங்கள் எதை கூறுகிறீர்கள்? நன்மைக்கு பிறகு தீமை, தீமைக்கு பிறகு நன்மை. ஆனால், அந்த தீமையில் ஒரு குழப்பம் இருக்கும். அந்த நன்மையில் ஒரு குழப்பம் இருக்கும், புகை மூட்டத்தை போன்று குழப்பம் இருக்கும்.

ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு கேட்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே! குழப்பம் என்று, புகை என்று நீங்கள் எதை கூறுகிறீர்கள் ?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,

அவர்கள் என்னுடைய வழிமுறைக்கு மாற்றமானதை வழிமுறையாக எடுத்துக் கொள்வார்கள். (1)

அறிவிப்பாளர் : ஹுதைஃபாரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3338, 6557, 7084.

முஸ்லிம்களுடைய சமூகமாக இருக்கட்டும், அரசியலாக இருக்கட்டும், அவர்களுடைய வழிபாடுகளாக இருக்கட்டும்.அவர்களுடைய கலாச்சாரமாக இருக்கட்டும்.

நான் என்ன ஒரு அழகிய வழிமுறையை விட்டுச் செல்கிறேனோ அதற்கு மாற்றமான வழிமுறையில் செல்வார்கள்.

இது எவ்வளவு ஒரு விசாலமான கருத்தைக் கொடுக்கக் கூடிய ஹதீஸ் பாருங்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த ஜமாஆ, ஸஹாபாக்களுடைய அந்த கிலாஃபத் இன்று முஸ்லிம்களுக்கு பிடிக்கவில்லை.

இன்று முஸ்லிம்களுக்கு பிடிப்பது என்ன? எதை அல்லாஹ்வுடைய எதிரிகள், எதை ஷைத்தானுடைய நண்பர்கள் ஜனநாயகம் என்ற பெயரிலோ,கம்யூனிஸம் என்ற பெயரிலோ, வாக்கு என்ற பெயரிலோ, அரசியல் என்ற பெயரிலோ எதை உருவாக்கினார்களோ அதை முஸ்லிம்கள் எடுத்துக் கொள்ள, அதை அடைய அதன்படி தங்களை அமைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

எங்கே அல்லாஹ்வுடைய தூதர் விட்டுச் சென்ற இந்த சுன்னாவிற்கு மாற்றமான அரசியல் அமைப்பு இருக்கிறதோ,அது ஜனநாயகம் என்ற பெயரிலோ அல்லது கம்யூனிஸம் என்ற பெயரிலோ அல்லது வேறு எந்த கொள்கையிலோ எங்கிருக்கிறதோ அங்கெல்லாம் மிகப் பெரிய ஒரு புரட்சி என்ற பெயரில் ஒரு கொடூரமான, ஒரு மிருகத்தனமான வாழ்க்கையை அன்றாடம் உயிராக இருப்பதா? சாவதா?என்ற அடிப்படையில் அவர்களுடைய வாழ்க்கை கேள்விக் குறியாகி,வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைக்கக் கூடிய அளவிற்கு காஃபிர்களை போன்று முஸ்லிம்கள் மாறியிருப்பதை பார்க்கிறோம்.

தனது முஸ்லிம்களின் இரத்தத்தை குடிக்கின்ற விஷயத்தில் ஒரு காஃபிரை விட ஒரு முஸ்லிம் பெரும் தாகித்தவனாக இருக்கிறான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இது குறித்த ஃபித்னாவை பற்றி கூறினார்கள்:

فَالْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ

கொன்றவனும் நரகத்தில், கொல்லப்படுபவனும் நரகத்தில். ஸஹாபாக்கள் பயந்து கேட்டார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! கொன்றவன் நரகவாதி என்று கூறுகிறோம். கொல்லப்பட்டவனுடைய நிலை என்ன? ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ

அவனும் தனது சகோதரனை கொல்ல வேண்டும் என்ற ஆசையில் தான் இருந்தான். எனவே, அவனும் நரகத்தில் செல்வான். (2)

அறிவிப்பாளர் : அஹ்னஃப் இப்னு கைஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 30, 6367.

ஹுதைஃபா ஹதீஸின் தொடர் : அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

அவர்கள் எனது வழிமுறையை பின்பற்றமாட்டார்கள். அவர்களில் சில விஷயங்கள் நீங்கள் நல்லதாக கருதுவீர்கள், சில விஷயங்களை நீங்கள் மறுப்பீர்கள்.

சில விஷயங்கள் என்னுடைய சுன்னாவிற்கு உட்பட்டதாக இருக்கும். இன்னும் சில விஷயங்கள் என்னுடைய சுன்னாவிற்கு மாற்றமானதாக இருக்கும்.

அந்த நன்மைக்கு பிறகு தீமை ஏதாவது இருக்கிறதா ?

ஆம், அந்த நன்மைக்கு பிறகு தீமை இருக்கிறது. நரகத்தின் வாயில்களில் நின்று கொண்டு மக்களை நரகத்தின் பக்கம் அழைக்கக் கூடியவர்கள் இருப்பார்கள்.

யார் அவர்களுக்கு பதில் கூறுகிறார்களோ, யார் அவர்களுடைய கொள்கைகளை கோட்பாடுகளை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களை நரகத்தில் எரிந்து விடுவார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! அவர்களை எங்களுக்கு தெளிவாக கூறுங்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், அவர்கள் நம்முடைய இனத்தை சேர்ந்தவர்கள், நமது மொழியை தான் அவர்களும் பேசுவார்கள்.

இப்படிப்பட்டவர்கள் மக்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டு பன்னி தனி குழுக்களாக புறப்பட்டு அவர்கள் மக்களை அழைப்பார்கள், எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள் என்று. யார் அவர்களோடு சேர்கிறார்களோ அவர்களை நரகத்தில் வீசிவிடுவார்கள்.

அப்பொழுது ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு கேட்கிறார்கள், அப்படிப்பட்ட காலம் என்னை அடைந்தால் அல்லாஹ்வின் தூதரே! நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு கட்டளையிடுங்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:

تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَإِمَامَهُمْ

முஸ்லிம்களுடைய ஜமாஅத்தோடு இருங்கள், அவர்களுடைய இமாமோடு இருங்கள். (1)

அறிவிப்பாளர் : ஹுதைஃபாரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3338, 6557, 7084.

(கண்ணியத்திற்குரியவர்களே! இன்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹதீஸில் வரக்கூடிய இந்த வார்த்தையை வைத்துக் கொண்டு அவர்கள் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு அதில் சேரும்படி அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எப்படி பிரிகிறார்கள் பாருங்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒட்டுமொத்த முஸ்லிம்களை பார்த்து கூறினார்கள். அந்த ஒட்டுமொத்த முஸ்லிம்களோடு நீங்கள் இருங்கள் என்று. அவர்களுடைய ஜமாஅத்தோடு நீங்கள் இருங்கள் என்று.

நீங்கள் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று ஒரு பெயரை ரிஜிஸ்டர் செய்து கொண்டு, ஒரு பெயரை உங்களுக்கென்று குறிப்பாக்கி பதிவு செய்து கொண்டு அதில் நீங்கள் வந்து சேர்ந்து விடுங்கள் என்று கூறவில்லை.)

அவர்களுடைய இமாமோடு நீங்கள் இருங்கள். யா ரஸூலுல்லாஹ்! அவர்களுக்கு ஜமாஅத் இல்லையென்றால், அப்படி ஒரு இமாம் இல்லையென்றால் என்ன நிலை?

(எப்படிப்பட்ட அல்லாஹ்வுடைய ஏற்பாடு பாருங்கள். வருங்காலத்தில் நிகழக்கூடிய அத்தனை விஷயங்களையும் அந்த தோழர்களின் வாயிலாக கேள்விகளாக கேட்க வைத்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் பதிலளிக்க வைக்கிறான்.)

فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا وَلَوْ أَنْ تَعَضَّ بِأَصْلِ شَجَرَةٍ حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ وَأَنْتَ عَلَى ذَلِكَ

இப்படி பிரிந்துவிட்ட அத்தனை கூட்டங்களை விட்டும் ஹுதைஃபா,நீ விலகியிருப்பாயாக! கூட்டங்களாக பிரிந்தவர்களிலிருந்து நீ தனித்திருக்கும் பொழுது சாப்பிட உனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்றால் கடைசியாக மரத்தின் வேர்கள் தான் உனக்கு கிடைக்கிறது என்றால் அதையாவது கடித்துக் கொண்டு ஒரு ஓரத்தில் ஒதுங்கி விடு.மௌத் உன்னை அடையும் வரை இதே அடிப்படையில் நீ இருக்க வேண்டும். (1)

அறிவிப்பாளர் : ஹுதைஃபாரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3338, 6557, 7084.

ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த வழிகாட்டுதல் என்பது மிக முக்கியமான ஒன்று. முஸ்லிம் சமுதாயத்துடைய கண்ணியத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஜமாஆவில் வைத்திருக்கிறான், இமாமில் வைத்திருக்கிறான்.

நம்முடைய இமாமின் மீது கோபப்படுவது, அவர்களை சபிப்பது, முஸ்லிம் ஆட்சியாளருக்கு எதிராக கிழற்சிகளை உண்டாக்குவது, அவர்களுக்கு எதிராக வாள் ஏந்துவது என்பது அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மிகப் பெரிய பாவங்களில் ஒரு பாவமாகும்.

எந்த நன்மையை எதிர்பார்க்கிறார்களோ அதை விட தீமை தான் அங்கே அவர்களுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த இந்த மார்க்கத்தில் எப்படி தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், வணக்க வழிபாடு இருக்கின்றனவோ அது போன்று தான் நாம் ஒரு ஜமாஅத்தாக இருப்பது.

நாம் காஃபிர்களுடைய நாட்டில் வாழ்கிறோம் என்ற காரணத்தால் நாம் ஒரு சமூகமாக ஒரு ஜமாஅத்தாக வாழக்கூடாது என்று இல்லை.

எந்த பகுதியில் நாம் இருக்கிறோமோ அங்கே முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டும். அவர்கள் அவர்களுடைய மஸ்ஜிதை சார்ந்தவர்களாக, அவர்களுக்கு மத்தியில் ஒரு பொருப்பாளரை நியமித்தவர்களாக, அவர்களுக்கு மத்தியில் பொது சமுதாயத்துடைய பொது தலைவரை எதிர்பார்த்தவர்களாக அதற்கு தான் அவர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டுமே தவிர,

யாரெல்லாம் குழுக்களாக பிரிந்து, இயக்கங்களாக பிரிந்து பதவிகளை பங்கு வைத்துக் கொடுக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் கூட்டங்களாக நமது வாலிபர்கள், நமது சமுதாய மக்கள் பிரிந்து சென்றால் கடைசியில் இதை விட கேவலம் ஒன்றும் இல்லை.

இன்றைய நம்முடைய நாட்டில் எத்தனை வகையான குழப்பங்களை நாம் பார்க்கிறோம்.

சமுதாயமாக நம்மீது தொடுக்கப்படுகின்ற யுத்தத்தை நாம் பார்க்கிறோம். நம்முடைய மார்க்கத்தை விட்டு நாம் விலக வேண்டுமென்று பொதுப்படையாக பேசக்கூடிய அளவிற்கு உண்டான துணிச்சலை நாம் பார்க்கிறோம்.

இதற்கு என்ன காரணம் ? நமக்கு மத்தியில் இல்லாத ஒற்றுமை.

நமக்கு மத்தியில் தலைமைத்துவத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்த அமைப்பு இல்லாத காரணத்தால் எவ்வளவு கேவலப்படுகிறோம். ஒரே இடத்தில் முஸ்லிம்களுக்கு எதிரியாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.

ஏன்? பிரிந்துவிட்ட காரணத்தால். முஸ்லிம்களுக்கு எதிரியாக முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறார்கள். தலைவர்களுக்கு எதிரியாக மக்கள், மக்களுக்கு எதிரியாக தலைவர்கள்.

என்ன காரணம்? பிரிந்துவிட்ட காரணத்தால். இதனால் என்ன பிரச்சனையை நாம் எதிர் கொள்கிறோம்? யார் நம்மை பார்த்து பயப்பட வேண்டுமோ, நம்முடைய ஒற்றுமையை பார்த்து பயப்பட வேண்டுமோ‌, அவர்கள் நம்முடைய பிரிவினையை பார்த்து சிரிக்கிறார்கள். அவர்கள் நம்மை அழைக்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை போன்று ஒரு காலம் வரும். மக்கள் எல்லாம் உங்களை தங்களுடைய பொய்யின் பக்கம், அசத்தியத்தின் பக்கம் அழைப்பார்கள். எப்படி சாப்பிட உட்கார்ந்தவர்கள் ஒருவர் மற்றவரை உணவு விரிப்பின் பக்கம் அழைப்பார்களோ அது போன்று, ஸஹாபாக்கள் கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அந்த நேரத்தில் குறைந்து விடுவோமா? என்று.

நபியவர்கள் கூறினார்கள், எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால், ஆற்று வெள்ளத்தில் வரக்கூடிய நுரையை போன்று நீங்கள் இருப்பீர்கள் என்று. உங்களுடைய உள்ளத்தில் வஹன் வந்துவிடும். ஸஹாபாக்கள் கேட்டார்கள், வஹன் என்றால் என்ன? என்று.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், உலகத்தின் மீது பேராசை உங்களுக்கு ஏற்படும். மௌத்தை நீங்கள் வெறுப்பீர்கள். (3)

அறிவிப்பாளர் : சவ்பான் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 3745.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்துடைய நிலையை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அங்கு காட்சியாக காண்பித்தார்கள்.

இன்று நம்முடைய பிரச்சனை என்ன? அல்லாஹ்வுடைய தீனிற்கு இன்றைய முஸ்லிம்களுடைய உள்ளத்தில் இடம் இல்லை. முஸ்லிம்களுடைய பொது நன்மையின் மீது முஸ்லிம்களுக்கு உள்ளத்தில் இடம் இல்லை.

ஒவ்வொரு முஸ்லிமும், ஒவ்வொரு மனிதனும் எதை நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறான்? தன்னை நோக்கி, தன்னுடைய குடும்பத்தை நோக்கி.

தனக்கு என்ன கிடைக்கும் ? நான் எப்படி இருப்பேன் ? எனது மனைவி மக்கள், என்னுடைய குடும்பம். எனக்கு என்ன கிடைக்கும்? நான் எப்படி சம்பாதிப்பது? நான் எப்படி முன்னேறுவது? என்று இந்த சுயநலப் போக்கு முஸ்லிம் சமுதாயத்தை அழித்தொழிக்க வைக்கிறது. இந்த சுயநலப் போக்கு முஸ்லிம்களை கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

சமுதாய அக்கறை, ஒட்டுமொத்த சமுதாயத்தை நோக்கிய ஒரு முயற்சி, எந்த ஒன்றை செய்தாலும் இதனால் சமுதாயத்திற்கு என்ன பலன் ? சமுதாயத்தை மேம்படுத்துவதற்கு என்ன செய்வது? எத்தனையோ பேர் சமுதாயத்திற்காக செய்கிறோம் என்ற பெயரில் அவர்கள் தனிப்பட்ட இலாபத்தை அடைந்துக் கொண்டிருக்கக் கூடிய முனாஃபிக்குகளாகவும் இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சமுதாயத்தின் பெயரை கூறி தங்களுடைய சுய லாபத்தை தேடக் கூடிய, சுய விளம்பரத்தை தேடக் கூடிய முனாஃபிக்குகளும் நமக்குள் கலந்திருப்பதை பார்க்கிறோம்.

அல்லாஹ் பாதுகாப்பானாக! இக்லாஸுடைய,அல்லாஹ்வின் பரிசுத்தமான முகத்தை நோக்கமாக கொண்டு ஏழைகள், பணக்காரர்கள்,செல்வந்தர்கள் என எல்லா தரப்பு மக்களும் அல்லாஹ்வுடைய இந்த தீனில் நிலைத்திருந்து இம்மை, மறுமையின் கண்ணியத்தை அடைய வேண்டுமென்று பொது சமுதாயத்தின் நோக்கோடு எப்பொழுது இந்த சமுதாயம் ஒன்று சேறுமோ, தங்களுக்கு மத்தியில் இருக்கக் கூடிய சின்ன சின்ன கருத்து வேறுபாடு விஷயங்களை எல்லாம் அப்பாற்படுத்திவிட்டு, அல்லாஹ்வின் தவ்ஹீதின் அடிப்படையில், சுன்னாவின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து, அல்லாஹ்வுடைய தீனிற்காக ஒற்றுமையை கடைப்பிடிப்பார்களோ அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த சமுதாயத்திற்கு கண்ணியத்தை கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறான்.

நம்முடைய கண்ணியம், நம்முடைய தவ்ஹீதில் இருக்கிறது. நம்முடைய கண்ணியம் சுன்னாவில் இருக்கிறது. நம்முடைய கண்ணியம் இந்த தவ்ஹீதின் சுன்னாவின் அடிப்படையில் நாம் ஒன்று சேர்வதில் இருக்கிறது.

கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால், கருத்து வேற்றுமைகளிலும் எத்தனையோ ஒற்றுமைகளை நாம் காணலாம். கருத்து வேற்றுமைகள் இரத்தங்களை ஓட்டுவதற்கு காரணமாகி விடக் கூடாது.

நமக்கு மத்தியில் இருக்கக்கூடிய அபிப்ராய வேதங்கள் நம்முடைய சகோதரத்தை பிரித்து விடக் கூடாது.

இன்று என்ன நடக்கிறது ? நம்முடைய கருத்து வேற்றுமைகள், அபிப்ராய வேதங்கள், ஒரு சகோதரனை பார்த்தால் ஸலாம் சொல்லக்கூடாத அளவிற்கு, ஸலாமிற்கு பதில் சொல்லக் கூடாத அளவிற்கு அவனை திருப்புகிறது என்றால் இவன் தொழுது என்ன பலன்?

இயக்கங்களாக, பிரிவுகளாக ஆகி ஒரு இயக்கத்தை சேர்ந்தவன் இன்னொரு இயக்கத்தை சேர்ந்தவனுக்கு ஸலாம் சொல்வதில்லை என்றால், அவனுக்கு ஸலாம் சொல்வதை ஹராமாக பார்க்கக் கூடிய அளவிற்கு அவன் மாறிவிட்டான் என்றால் இது இஸ்லாம் இயக்கங்களாக இருக்க முடியுமா? இதற்கு இஸ்லாமிய இயக்கங்கள் என்று பெயர் சொல்ல முடியுமா? யோசித்துப் பாருங்கள் .

அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா உடைய வேதத்தின் பக்கம் திரும்புவோமாக! ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவின் பக்கம் திரும்புவோமாக! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நாம் இழந்த கண்ணியத்தை நமக்கு மீட்டுக் கொடுப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا الْوَلِيدُ قَالَ حَدَّثَنِي ابْنُ جَابِرٍ قَالَ حَدَّثَنِي بُسْرُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ قَالَ حَدَّثَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلَانِيُّ أَنَّهُ سَمِعَ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ يَقُولُ كَانَ النَّاسُ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْخَيْرِ وَكُنْتُ أَسْأَلُهُ عَنْ الشَّرِّ مَخَافَةَ أَنْ يُدْرِكَنِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا فِي جَاهِلِيَّةٍ وَشَرٍّ فَجَاءَنَا اللَّهُ بِهَذَا الْخَيْرِ فَهَلْ بَعْدَ هَذَا الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ نَعَمْ قُلْتُ وَهَلْ بَعْدَ ذَلِكَ الشَّرِّ مِنْ خَيْرٍ قَالَ نَعَمْ وَفِيهِ دَخَنٌ قُلْتُ وَمَا دَخَنُهُ قَالَ قَوْمٌ يَهْدُونَ بِغَيْرِ هَدْيِي تَعْرِفُ مِنْهُمْ وَتُنْكِرُ قُلْتُ فَهَلْ بَعْدَ ذَلِكَ الْخَيْرِ مِنْ شَرٍّ قَالَ نَعَمْ دُعَاةٌ إِلَى أَبْوَابِ جَهَنَّمَ مَنْ أَجَابَهُمْ إِلَيْهَا قَذَفُوهُ فِيهَا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا فَقَالَ هُمْ مِنْ جِلْدَتِنَا وَيَتَكَلَّمُونَ بِأَلْسِنَتِنَا قُلْتُ فَمَا تَأْمُرُنِي إِنْ أَدْرَكَنِي ذَلِكَ قَالَ تَلْزَمُ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَإِمَامَهُمْ قُلْتُ فَإِنْ لَمْ يَكُنْ لَهُمْ جَمَاعَةٌ وَلَا إِمَامٌ قَالَ فَاعْتَزِلْ تِلْكَ الْفِرَقَ كُلَّهَا وَلَوْ أَنْ تَعَضَّ بِأَصْلِ شَجَرَةٍ حَتَّى يُدْرِكَكَ الْمَوْتُ وَأَنْتَ عَلَى ذَلِكَ (صحيح البخاري 3338 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا أَيُّوبُ وَيُونُسُ عَنْ الْحَسَنِ عَنْ الْأَحْنَفِ بْنِ قَيْسٍ قَالَ ذَهَبْتُ لِأَنْصُرَ هَذَا الرَّجُلَ فَلَقِيَنِي أَبُو بَكْرَةَ فَقَالَ أَيْنَ تُرِيدُ قُلْتُ أَنْصُرُ هَذَا الرَّجُلَ قَالَ ارْجِعْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الْقَاتِلُ فَمَا بَالُ الْمَقْتُولِ قَالَ إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ (صحيح البخاري 30 -)

குறிப்பு 3)

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا بِشْرُ بْنُ بَكْرٍ حَدَّثَنَا ابْنُ جَابِرٍ حَدَّثَنِي أَبُو عَبْدِ السَّلَامِ عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ قَالَ بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمْ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمْ الْوَهْنَ فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهْنُ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ (سنن أبي داود 3745 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/