HOME      Khutba      அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 8/9) | Tamil Bayan - 343   
 

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 8/9) | Tamil Bayan - 343

           

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 8/9) | Tamil Bayan - 343


அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப் பேருரை (பகுதி - 8)

ஜுமுஆ குத்பா தலைப்பு : அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப் பேருரை (பகுதி - 8)

வரிசை : 343

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 18-01-2015 | 20-8-1442

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தையும் பயத்தையும் உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வை பயந்து வாழக்கூடிய முஃமின்களாக நாம் அனைவரும் ஆக வேண்டும் என்று அல்லாஹ்வுடைய வஸிய்யத்தை-அறிவுரையை உங்களுக்கும் எனக்கும் செய்தவனாக தொடங்குகிறேன்.

அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய இறுதிப் பேருரையில் இருந்து நாம் பெற வேண்டிய நேர்வழியின் பேரொளிகளை நாம் கேட்டு வருகிறோம்.

அதனுடைய தொடரில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது 'ஹஜ்ஜதுல் விதாஃ' - இறுதி ஹஜ்ஜில் அரஃபா மைதானத்திலும் மினா பள்ளத்தாக்கிலும் அவர்கள் செய்த பேருரையில் முக்கியமான பகுதியாக அமீருக்கு கட்டுப்படுவது என்ற ஒரு இஸ்லாமிய அடிப்படை இருந்ததை நாம் பார்க்கிறோம்.

பொதுவாக இன்றைய முஸ்லிம்கள் அமீர் என்ற விஷயத்தை தங்களுக்கு ஒரு பொது தலைவர் இருக்க வேண்டும். அந்த தலைவருக்கு நாம் கட்டுப்பட வேண்டும், கீழ்படிய வேண்டும். அது நமது இறை நம்பிக்கையை சார்ந்தது, அது நம்முடைய ஈமானை சார்ந்தது.

ஒரு முஃமினின் ஈமானுடைய அம்சங்களில் ஒன்று அவன் ஒரு அமீருக்கு கீழாக, அந்த அமீருக்கு கட்டுப்பட்டவனாக இருப்பது என்பதை அறியாதவர்களாக இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் பலர் இருப்பதை பார்க்கிறோம்.

பெரும்பாலானவர்கள் இருப்பதை பார்க்கிறோம். அல்லாஹ்வுடைய இந்த தீன், இஸ்லாம் அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் இதை பின்பற்றக் கூடியவர்களுக்கு இம்மையின் வெற்றிக்கும் மறுமையின் வெற்றிக்கும், இவ்வுலகத்தின் உயர்வுக்கும் மறுமையின் உயர்வுக்கும், இவ்வுலகத்தின் மேன்மைக்கும் மறுமையின் மேன்மைக்கும், இவ்வுலகத்தின் கண்ணியத்திற்கும் மறுமை வாழ்க்கையின் கண்ணியத்திற்கும் உறுதி தருகிறது,

அதற்குரிய பொருப்பேற்கிறது. அல்லாஹ்வுடைய இந்த தீன் உயரக்கூடியது, ஓங்கக் கூடியது, வெற்றி பெறக் கூடியது.

அப்படி தான் அல்லாஹ்வுடைய இந்த தீனை பின்பற்றக் கூடியவர்களும் உயரக்கூடியவர்கள், மேன்மையடையக் கூடியவர்கள், வெற்றி பெறக் கூடியவர்கள்.

இவர்கள் அடிவாங்கிக் கொண்டே, நலிந்தவர்களாகவே, மிதிப்பட்டவர்களாகவே இருக்க மாட்டார்கள்.

அல்லாஹ் சத்தியமிட்டு கூறுகிறான் :

وَلَنْ يَجْعَلَ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا

மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான். (அல்குர்ஆன் 4:141)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள். (அல்குர்ஆன் 3:139)

அல்லாஹ்வுடைய வசனத்தை ஓதி பாருங்கள். திரும்ப திரும்ப தங்களது உள்ளத்தில் அந்த வசனத்தை கொண்டு வந்து நிறுத்தி சிந்தனையில் சிந்தித்துப் பாருங்கள்.

அல்லாஹ்வுடைய இந்த வாக்கு யாருக்காக கொடுக்கப்பட்டது? உலக முஃமின்கள் எல்லோருக்குமா? அல்லது நபியோடு வாழ்ந்த அந்த சத்திய ஸஹாபாக்களுக்கு மட்டுமா?

இல்லை, எல்லா முஃமின்களுக்கும், எல்லா காலத்திற்கும் உள்ள வாக்குறுதியை தான் குவாலிட்டி என்ற நிபந்தனையின் அடிப்படையில் அல்லாஹ் நம்மிடத்தில் எதிர்பார்க்கக் கூடிய ஈமான், அமல், உள்ளத்தில் ஆழமான இறை நம்பிக்கை, அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரஸூலும் விரும்பக்கூடிய செயல்கள், அதற்கேற்ப நம்முடைய பண்பாடுகள்.

இவற்றை அமைத்துக் கொள்வதின் மீது தான் அல்லாஹ் நமக்கு வாக்குறுதி அளிக்கிறான். அல்லாஹ்வுடைய வேத வசனத்தை பாருங்கள்; அல்லாஹ் பேசக்கூடிய கலாமை கேட்டுப் பாருங்கள்.

وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ

மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும். (அல்குர்ஆன் 30:47)

இறை நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது, முஃமின்களுக்கு உதவி செய்வது என் மீது கட்டாயக் கடமையாக இருக்கிறது.

இது அல்லாஹ்வுடைய கூற்று. சாதாரண கடமை என்று அல்லாஹ் கூறவில்லை. கட்டாயக் கடமையாக என் மீது இருக்கிறது. அல்லாஹ் அவனுடைய அருளால் அவனே விதித்துக் கொண்டால் அல்லாஹ்வின் மீது இன்னொருவர் விதிக்க முடியாது.

அன்பிற்குரியவர்களே! அந்த முஃமின்களாக நாம் இருக்கிறோமா? என்று யோசிக்க வேண்டாமா?நம் வாழ்க்கையை சுய பரிசோதனை செய்து கொள்ளக் கூடாதா?

அல்லாஹ்வுடைய இந்த தீன், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொண்டு வந்த இந்த மார்க்கம் ஏதோ பசி பட்டினியில் இருந்த, பஞ்சத்தில் இருந்த, வாழத் தெரியாத நாடோடிகளாக வாழ்ந்தவர்களை அவர்களுக்கு நாகரிகத்தை கற்றுக் கொடுப்பதற்கோ,அவர்களது உலக வாழ்க்கையை மேம்படுத்துவதற்கோ, அவர்களது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கோ என்று மட்டும் தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோமா?

ஆளவும் தெரியாது, ஆளவும்பட முடியாது என்று இருந்த அந்த அரேபிய சமுதாயத்தை ஸஹாபாக்களாக மாற்றிஇபாதுர் ரஹ்மான்-ரஹ்மானுடைய அடியார்களாக மாற்றி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருந்த ரோமப் பேரரசை, கிஸ்ரா பாரசீக பேரரசை வீழ்த்தி அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து உலகத்தில் இப்படி ஒரு தலைமைத்துவம் இருக்க முடியாது.

இப்படி ஒரு ஆட்சியை ஏற்படுத்த முடியாது. நீதத்தில், ஒழுக்கத்தில், சட்டத்தில், பொது நன்மையில், வணக்க வழிபாட்டில், பொது பாதுகாப்பில் என்ற அனைத்திலும் ஒரு சிறந்த அரசாங்கத்தையும் உருவாக்கி விட்டு அல்லவா அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த உலகத்தை விட்டு பிரிந்தார்கள்.

தவ்ஹீதை ஷரீஅத்தை முழுமைப் படுத்திய அதே நேரத்தில், கலாச்சாரத்தை சீர் செய்த அதே நேரத்தில், சீர்கெட்டு கிடந்த மக்களை சீர்படுத்திய அதே நேரத்தில் இந்த உலகத்தில் சீர்பெற்றவர்கள், தவ்ஹீதுடையவர்கள் ஒழுக்க சீலர்களுடைய ஆட்சி தான் நடக்க வேண்டும்.

அப்போது தான் எல்லோருக்கும் எல்லா வகையான நிம்மதியும் பாதுகாப்பும் கிடைக்கும் என்பதிற்குரிய ஏற்பாட்டையும் செய்துவிட்டல்லவா அல்லாஹ் தஆலா அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கைப்பற்றினான்.

அந்த தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது இறுதிப் பேருரையில் அமீருக்கு கட்டுப்படுவதை இவ்வளவு வலியுறுத்தினார்கள் என்றால், அதை மார்க்கத்தின் அடிப்படை அம்சங்களில், அடிப்படை சட்ட நுனுக்கங்களில் ஒன்றாக அமைத்தார்கள் என்றால் இன்று நாம் அதை பற்றி சிந்தித்திருக்கிறோமா?

நாம் ஒரு அமீருக்கு கட்டுப்பட வேண்டும். யா அல்லாஹ்! எங்களுக்கு ஒரு பொது அமீரை கொடு என்று அல்லாஹ்விடத்தில் கேட்கும் துஆ நம்மிடத்தில் இருக்கிறதா?

காஃபிர் நாட்டில் வாழ்வதால் தலைமைத்துவம் இல்லாத தருதலைகளாக வாழவேண்டுமென்ற அவசியமா? இவர்களுடைய அரசாங்கம் நம்மை எந்த வகையில் நமது மார்க்கத்தை பின்பற்றுவதிலிருந்து நம்மை தடுக்க முடியும் யோசித்துப் பாருங்கள்.

உள்ளத்தால் பலவீனமானவர்களாக, சிந்தனையில் கோழைகளாக, இவர்களுடைய இந்த செகுலர் தன்மைகளையும், இவர்களுடைய கமினியூச பண்பாட்டையும், இவர்களுடைய முதலாளித்துவ கொள்கைகளையும் உள்வாங்கிய மக்களாக தான் இன்று நம்மில் பெரும்பாலான முஸ்லிம்கள் சிந்தனை அளவில், மன அளவில், அறிவின் அளவில் மாறியிருப்பதை பார்க்கிறோம்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கூற்றை கவனித்துக் கொண்டு செல்வோம்.

யஹ்யா இப்னு ஹுசைன் தன்னுடைய பாட்டியின் மூலமாக அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரோடு அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாஃ வில் கலந்து கொண்டார்கள். ஸஹீஹ் முஸ்லிமில் இமாம் முஸ்லிம் பதிவு செய்கிறார்கள்.

ஒரு இஸ்லாமிய பெண்மனி, ஸஹாபிய பெண்மனி இந்த தலைமைத்துவத்தை (இமாரத்) குறித்த, ஹதீஸை நபியின் இறுதிப் பேருரையில் இருந்து மனப்பாடம் செய்து நமக்கு அறிவிப்பதை பாருங்கள்.

(எந்த அளவு பெண்கள் சமுதாயத்தில் அக்கறை கொண்டவர்களாக இருந்தார்கள். நமது பெண்களோ சட்டிப்பானைகளை உருட்டுவதை தவிர, அவர்களுக்கு அலங்காரம் செய்து கொள்வதை தவிர, கடையில் உள்ள பொருள்களை எல்லாம் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பதை தவிர, உலகத்தில் உள்ள பலாய் முஸீபத்துகளை பேசிநேரங்களை கழிப்பதை தவிர மார்க்க உணர்வுள்ள பெண்களாக இருக்கிறார்களா?அப்படிப்பட்ட பெண் குழந்தைகளாக நமது பெண் பிள்ளைகளை மாற்றி இருக்கிறோமா? கேவலமாக இல்லையா? யோசித்துப் பாருங்கள்.

மண்ணிற்கு போகக் கூடிய இந்த உடலை, உணவைக் கொண்டு தினிப்பதிலும், ஆடைகளை கொண்டு அலங்கரிப்பதிலும், 24மணி நேரமும் இதை பற்றிய கவலையாகவே நம்முடைய வாழ்க்கை இருக்கிறதே, கண்ணியத்திற்குரிய ஸஹாபியப் பெண்மனியின் கூற்றைப் பாருங்கள்.)

இந்த ஹதீஸை அறிவிக்கக் கூடியயஹ்யா இப்னு ஹுசைன் உடைய பாட்டி. அவர்கள் கூறுகிறார்கள், பேரனே! நான் நபியிடமிருந்து ஹதீஸை கேட்டேன்.

நபியின் இறுதிப் பேருரையில், அந்த இறுதி ஹஜ்ஜில் அவர்கள் குத்பா கொடுத்த பொழுது அவர்கள் கூறினார்கள்.

يَخْطُبُ فِي حَجَّةِ الْوَدَاعِ وَهُوَ يَقُولُ وَلَوْ اسْتُعْمِلَ عَلَيْكُمْ عَبْدٌ يَقُودُكُمْ بِكِتَابِ اللَّهِ فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا

முஃமின்களே! உங்களுக்கு ஒரு அடிமை அமீராக ஆக்கப்பட்டால், (நீங்கள் யாரை பொருளாதாரத்தில், அந்தஸ்தில், தகுதியில் சாதாரணமானவராக பார்க்கிறீர்களோ அப்படிப்பட்ட அடிமை கூட உங்களுக்கு அமீராக ஆக்கப்பட்டு விட்டால்) அந்த அடிமையை நீங்கள் எதிர்க்கக் கூடாது. அவருடைய தலைமைத்துவத்திலிருந்து நீங்கள் விலகக் கூடாது.

அல்லாஹ்வுடைய வேதத்தின் படி அவர் உங்களை வழி நடத்துகின்ற பொழுது, அப்படிப்பட்ட ஒரு அடிமை உங்களுக்கு அமீராக ஆக்கப்படும் பொழுது அவருடைய பேச்சை கேளுங்கள், அவருக்கு கட்டுப்பட்டு இருங்கள்.

நூல் : முஸ்லிம், எண் : 1838, 3421.

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹாப் ரஹிமஹுல்லாஹ்எழுதுகிறார்கள். அல் மஸாயில் ஜாஹிலியா என்ற நூலில், (படிக்க வேண்டிய நூல்)

அறியாமை கால காஃபிர்களிடத்தில் இருந்த ஒரு குணம் தான் இன்றைய முஸ்லிம் மக்களிடத்தில் இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அறியாமை கால குஃப்ருடைய ஜாஹிலியத்துடைய காஃபிர்கள் தங்களுக்கு ஒரு அமீரை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தான்தோன்றித் தனமாக திரிவதையும், சண்டை செய்வதையும், வம்பு செய்வதையும் தன்னை யாரும் கட்டுப்படுத்தாமல் தரிகெட்டு அழைவதையும் தான் அவர்கள் விரும்பினார்கள்.

இது குஃப்ர், இது இறை நிராகரிப்பில் சேரக்கூடியது. ஒரு முஸ்லிம் அல்லாஹ்விற்கு கட்டுப்படுவதை விரும்புவான், ரஸூலுக்கு கட்டுப்படுவதை விரும்புவான். பிறகு தன்னுடைய அமீருக்கு கட்டுப்பட்டு கட்டுக் கோப்பான வாழ்க்கையை விரும்புவான்.

தன்னுடைய அமீருக்கு ஒருவன் கட்டுப்படவில்லை என்றால் அவன் மன இச்சைக்கு தான் கட்டுப்படுவான், ஷைத்தானிற்கு தான் அவன் அடுத்து கட்டுப்படுவான். இப்லீஸுடைய அடிமையாக, இப்லீஸுடைய வஹீக்கு ஏற்ப அவன் தன்னை மாற்றிக் கொள்பவனாக மாறிவிடுவான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள், அமீருக்கு கட்டுப்படுங்கள், அவருடைய பேச்சை கேளுங்கள்.

நூல் : முஸ்லிம், எண் : 1838, 3421.

மேற்கொண்டு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த அமீருக்கு கட்டுப்படுவதை குறித்து ஏன் இந்த இறுதிப் பேருரையில் நினைவு படுத்தினார்கள்? அமீர் இல்லாமல், அமீருக்கு கட்டுப்படாமல் இந்த தீனை நீங்கள் ஓங்க வைக்க முடியாது. இந்த தீனை நீங்கள் பாதுகாக்க முடியாது.

அல்லாஹ்வுடைய இந்த தீன் ஓங்க வேண்டும், முஸ்லிம்கள் ஓங்க வேண்டும், நன்மைகள் பரவ வேண்டுமென்றால் கண்டிப்பாக முஸ்லிம்களுடைய மார்க்கம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இதே ஹதீஸை இன்னொரு வகையாக அதே பெண்மனி உம்முல் ஹுசைன் அல் அஹ்மஸி அறிவிக்கிறார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஜ்ஜத்துல் விதாஃவில் இந்த விஷயத்தை கூறிய பொழுது எப்படி கவனமாக பார்த்திருக்கிறார்கள், கேட்டிருக்கிறார்கள்.!

நபியின் மீது போர்வை இருந்தது,அதை தன்னுடைய கம்கட்டை ஒட்டி அனைத்துக் கொண்டிருந்தார்கள். நபியினுடைய புஜத்தை நான் பார்த்தேன். அவர்களுடைய பிரசங்கத்தில் அவர்களுடைய புஜம் குழுங்கிக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.

மற்ற விஷயங்கள் சொல்லும் பொழுது நபியவர்கள் உணர்ச்சிவசப்பட்டதை விட முஸ்லிம்களுக்கு அமீர் இருக்க வேண்டும்,அந்த அமீருக்கு கட்டுப்பட வேண்டும் என்ற அறிவுரையை கூறும் பொழுது உம்முல் ஹுஸைன் கூறுகிறார்கள்,

يا أيها الناس اتقوا الله وإن أمر عليكم عبد حبشي مجدع فاسمعوا له وأطيعوا ما أقام لكم كتاب الله

நபியின் புஜம் குழுங்கியதை நான் பார்த்தேன். மக்களே! அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள். மூக்கு துண்டிக்கப்பட்ட ஒரு கருப்பு நிற ஹபஷி அடிமை உங்களுக்கு அமீராக ஆக்கப்பட்டாலும் அவருக்கு நீங்கள் செவிமடுங்கள், அவருக்கு நீங்கள் கட்டுப்படுங்கள். அல்லாஹ்வுடைய வேதத்தை அவர் உங்களுக்கு நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்ற வரை.

அறிவிப்பாளர் : உம்முல் ஹுசைன் அல் அஹ்மஸிரழியல்லாஹு அன்ஹா, நூல் : திர்மிதி எண் : 1706, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

ஒரு அமீர் அழகானவரா? உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவரா? நமக்கு விருப்பமானவரா? என்று பார்க்கப்படுவதல்ல. அல்லாஹ்வுடைய தீனில் அமீருக்கு கட்டுப்படுவது இது என் மீதுள்ள ஃபர்ளுகளில் ஒரு ஃபர்ளு. அவர் ஹபஷியாக இருக்கட்டும், மூக்கு துண்டிக்கப்பட்ட ஒரு விகாரமான நிலையில் உள்ள மனிதராக இருக்கட்டும். அல்லாஹ்வின் கட்டளையை கொண்டு நான் அவருக்கு கட்டுப்படுகிறேன்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வருங்காலங்களில் உள்ள குழப்பங்களை குறித்தும் நமக்கு எச்சரிக்கை செய்தார்கள். அல்லாஹ்வின் மார்க்கம், முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தீர்வு கூறினார்கள்.

சில நேரங்களில் ஷைத்தான் மனிதர்களை வழிகெடுப்பதற்கு அவன் கையாளக்கூடிய தந்திரங்களில் ஒன்று தான், தலைமைத்துவத்திற்கு கீழ்ப்படியாமல் மக்களை திசை திருப்புவது. அதற்கு அவன் என்ன காரணம் கூறுவான்? என்னுடைய அமீரிடத்தில் மார்க்கம் இல்லை, என்னுடைய அமீரிடத்தில் அது சரியில்லை, இது சரியில்லை அமீரை மாற்ற வேண்டும், மன்னரை மாற்ற வேண்டும்.

எங்களது ஆளுனரை மாற்ற வேண்டும். அவரிடத்தில் நீதம் இல்லை, ஒழுக்கம் இல்லை என்று பல குற்றச்சாட்டுகளை ஷைத்தான் சுமத்துவான், இறையச்சம் என்ற போர்வையில், தக்வா என்ற போர்வையில், மார்க்கம் என்ற போர்வையில்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதற்கும் நமக்கு விளக்கம் கூறுகிறார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹுஅறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வுடைய தூதர் எங்களுக்கு கூறினார்கள்,

إِنَّكُمْ سَتَرَوْنَ بَعْدِي أَثَرَةً وَأُمُورًا تُنْكِرُونَهَا

தோழர்களே! எனக்கு பின்னால் வாழக்கூடிய நீங்கள் புறக்கணிப்படுவதை பார்ப்பீர்கள். பின்னால் வரக்கூடிய மக்கள் ஆட்சி அதிகாரத்தை தங்களது கரங்களில் எடுத்துக் கொள்வதை நீங்கள் பார்ப்பீர்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6529.

எந்த தோழர்கள் உயிர் கொடுத்தார்களோ, யாருடைய மனைவிமார்கள் விதவையானார்களோ, குழந்தைகள் ஷஹீதானார்களோ அப்படிப்பட்ட ஸஹாபாக்கள் புறக்கணிக்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம். ஆட்சி அதிகாரத்தில் புதிதாக வருபவர்கள் நுழைவதை நீங்கள் பார்க்கலாம். தாங்கிக் கொள்ள முடியுமா? யோசித்துப் பாருங்கள்.

இஸ்லாம் தாங்கிக் கொள்வதற்குண்டான ஈமானை கொடுக்கிறது. இன்று என்ன சொல்கிறார்கள்? நான் உருவாக்கிய கட்சி, நான் உருவாக்கிய இயக்கம், நான் உருவாக்கிய அமைப்பு என்று நான் நான் நான் என்று வரக்கூடிய பெருமை, அந்த இப்லீஸுடைய வார்த்தை.

நான் என்று சொல்வதற்குரிய ஒரே தகுதியை அல்லாஹ் பெருமைக்குரியவன் அடக்கி ஆளக்கூடிய அரசனான அவன் வைத்திருக்கிறான்.

இப்லீஸ் பேசினான், நான் தான் சிறந்தவன், ஆதமை விட நான் தான் முதலில் படைக்கப்பட்டவன்.என்னை நெருப்பிலிருந்து படைத்தாய். கருத்து –அல்குர்ஆன் : 7:12, 38:76)

தீமையை தேடக்கூடியவர்கள் தன்னில் உள்ள நிறையை பார்ப்பார்கள்.பிறரில் உள்ள குறையை தேடுவார்கள்.

மார்க்கம் என்ன சொல்கிறது? உன்னில் உள்ள குறைகளை தவறுகளை எண்ணிப் பார், பிறரில் உள்ள நன்மைகளை நீ எண்ணிப்பார். உன் சகோதரனை தவறாக, மட்டமாக பார்க்காதே!

அல்லாஹ்வுடைய தூதர் கூறுகிறார்கள்; நபித்தோழர்களே! நீங்கள் புறக்கணிக்கப்பட்டு இந்த செல்வம், இந்த ஆட்சி அதிகாரம் சிலரிடத்தில் குவிவதை நீங்கள் பார்க்கலாம்.

இன்னும் பல காரியங்களை நீங்கள் பார்ப்பீர்கள். அந்த காரியங்களை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். என்னுடைய வழிமுறையில் நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். அப்படிப்பட்ட காரியங்களை கூட அந்த ஆட்சியாளர்கள் செய்வதையும் நீங்கள் பார்க்கலாம்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6529.

முதலில் என்ன? துன்யாவில் மாற்றம், எந்த தோழர்கள் இந்த தீனிற்காக உயிரை கொடுத்தார்களோ அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆட்சி அதிகாரம் பின்னால் வந்தவர்களுக்கு கிடைக்கிறது.

இரண்டாவது, அல்லாஹ்வுடைய தீனும் குழப்பம் செய்யப்படுவதை நீங்கள் பார்க்கலாம். தலைவர்களிடத்தில் சில நேரங்களில் இப்படிப்பட்ட மாற்றம் இருக்கலாம். அப்பொழுது தோழர்களுடைய அந்த ஏக்கத்தைப் பாருங்கள்.

அல்லாஹ்வுடைய தூதரே! நீங்கள் எங்களுக்கு என்ன கட்டளை கொடுக்கிறீர்கள் ? நாங்கள் அந்த நேரத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?

மார்க்கத்திலும் அவர்கள் புதுமைகளை செய்கிறார்கள். சுன்னாவில் இல்லாத காரியங்களை அவர்கள் நடைமுறை படுத்துகிறார்கள். உலக விஷயங்களில் பார்த்தால் ஹக்குள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு அவர்கள் துன்யாவை தங்களது மன ஆசைகளுக்கு ஏற்ப பயன்படுத்துகிறார்கள். ஆட்சி அதிகாரங்களை முறையாக அவர்கள் பிரிப்பதில்லை, கொடுப்பதில்லை.

இஸ்லாமிய நாடுகளில் ஏற்பட்ட அத்தனை புரட்சிகளையும் குறித்த ஒரு சிறந்த முன்னறிவிப்பாக இந்த ஹதீஸை நாம் பார்க்கிறோம்.

அல்லாஹ்வுடைய தூதரின் வழிகாட்டுதல் புறக்கணிக்கப்பட்டது. ரஸூலுல்லாஹ்வுடைய வஹீயுடைய வார்த்தை, அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டுதலை முஸ்லிம்கள் புறக்கணித்தார்கள். மார்க்கம் என்ற பெயரால், நன்மையின் புரட்சி என்ற பெயரால் ரபீஉல் அரப் என்று பெயர் வைத்தார்கள்.

அரபுகளின் வசந்த காலம் என்று தங்களுடைய ஆட்சியாளருக்கு அதிகாரிகளுக்கு எதிராக, ஆளுநருக்கு எதிராக அவர்களுடைய குற்றங்களை பட்டியல் போட்டு நாங்கள் ஆட்சிகளை பார்க்கப் போகிறோம், அதிகாரிகளை மாற்றப் போகிறோம். அரபுகளுக்கு ஒரு வசந்த காலத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்று நரக நெருப்பில் வாழ்வதை போன்று வாழ்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் நரகத்தின் வாழ்க்கையை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டு மொத்த நாட்டையும் எதிரிகளின் கரத்தில் கொடுத்து விட்டு அவர்களுடைய கட்டளைகளுக்கு ஏற்ப இந்த புரட்சியாளர்கள் சிக்கிக் கொண்டு தவிர்ப்பதை பார்க்கிறோம்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் தோழர்கள் கேட்ட அறிவுரையைப் பாருங்கள்.

அப்பொழுது எங்களுக்கு நீங்கள் என்ன கட்டளை கொடுக்கிறீர்கள்? அப்படிப்பட்ட நேரத்தில், ஆட்சியாளர்களை நாங்கள் மாற்றட்டுமா? புரட்சி ஏற்படுத்தட்டுமா? இன்னொரு ஜனநாயகத்தை கொண்டு வரட்டுமா? ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை நாங்கள் கிழப்பிவிடட்டுமா?

அல்லாஹ்வுடைய தூதர் கூறுகிறார்கள்,

أَدُّوا إِلَيْهِمْ حَقَّهُمْ وَسَلُوا اللَّهَ حَقَّكُمْ

தோழர்களே! அவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய ஹக்குகளை கொடுத்து விடுங்கள். நீங்கள் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யுங்கள். ஆனால், உங்களுடைய ஹக்கை அவர்களிடத்தில் கேட்காதீர்கள் அல்லாஹ்விடத்தில் கேளுங்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6529.

உங்களுடைய படிப்பிற்கு வசதியை ஏற்படுத்தவில்லையா? உங்களுடைய உணவிற்கு வசதியை ஏற்படுத்தவில்லையா? உங்களுடைய வாழ்க்கை வசதிக்கு அவர்கள் ஏற்பாடு செய்யவில்லையா? பொருளாதார விலையேற்றத்தை அவர்கள் கட்டுப்படுத்தவில்லையா? என்ன உங்களுக்கு தேவை ?

உங்களுடைய ஹக் என்னவோ அதை நீங்கள் அவர்களிடத்தில் கேட்காதீர்கள். அல்லாஹ்விடத்தில் கேளுங்கள்.

மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டவர் உங்களுடைய முதுகில் சாட்டையால் அடித்து உங்களுடைய வீட்டிற்குள் வந்து உங்களுடைய செல்வத்தை எடுத்துச் சென்றாலும் அவனுக்கு எதிராக வாள் ஏந்தாதீர்கள்.

நூல் : முஸ்லிம், எண் : 1847.

மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மற்றும் ஒரு கூற்றைப் பார்க்கிறோம்.

مَنْ كَرِهَ مِنْ أَمِيرِهِ شَيْئًا فَلْيَصْبِرْ فَإِنَّهُ مَنْ خَرَجَ مِنْ السُّلْطَانِ شِبْرًا مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً

தன்னுடைய அமீர் தனக்கு பிடிக்காத செயலை செய்வதை யார் பார்க்கிறாரோ, (அது துன்யாவின் விஷயத்தில் இருக்கட்டும் அல்லது மார்க்க விஷயத்தில் இருக்கட்டும்.) அவர் பொறுமையாக இருக்கட்டும். தன்னளவில் மார்க்கத்தை பேணிக் கொண்டு அவர் அமைதியாக இருக்கட்டும்.

தனது அமீருக்கு கட்டுப்படாமல் எவன் வெளியேறுவானோ, அவன் வெளியேறியது ஒரு ஜான் அளவாக இருந்தாலும் சரி. அவன் மரணிப்பது குஃப்ருடைய மரணமாக இருக்கும். மடமைகால காஃபிர்களின் மரணமாக அவனுடைய மரணம் இருக்கும்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6530.

தன்னுடைய அமீரிடமிருந்து தனக்கு பிடிக்காத செயலை ஒருவன் பார்த்தால் அதற்காக வாள் ஏந்தலாமா ?புரட்சி செய்யலாமா? அவரைப் பற்றி ஃபித்னா, ஃபஸாத் செய்யலாமா ? அவரைப் பற்றி புறம் பேசலாமா? அவரை சபிக்கலாமா? அவருக்கு எதிராக கிழற்சி உண்டாக்கலாமா? இன்னொரு இயக்கத்தை ஆரம்பிக்கலாமா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள், அவர் பொறுமையாக இருக்கட்டும், அவர் சகித்துக் கொள்ளட்டும். ஏன் தெரியுமா ?

தனது அமீரமிருந்து ஒருவன் வெளியேறினால், ஒரு ஜான் அளவு வெளியேறினாலும் அவன் மடமைகால மரணத்தில் மரணித்தவனாக ஆகிவிட்டான்.

கண்ணியத்திற்குரியவர்களே! சகிக்கக் கூடிய மனப்பான்மை வர வேண்டும். இன்று முஸ்லிம்களுடைய நிலை கேவலமாக இருப்பதை பார்க்கிறோம்.

எல்லா இயக்கங்களும் என்ன சொல்கிறார்கள்? நன்மைகளுக்காக என்று, முஸ்லிம்களுடைய உயர்வுகளுக்காக என்று. ஒன்றிலிருந்து இரண்டு, இரண்டிலிருந்து நான்கு, நான்கிலிருந்து எட்டு, எட்டிலிருந்து பதினாறு.

இவர்கள் எல்லோரும் என்ன கூறுகிறார்கள்? முஸ்லிம்களை நாங்கள் பாதுகாப்பதற்காக இருக்கிறோம், முஸ்லிம்களுக்கு வெற்றியை தேடித்தருவதற்காக, இவர்களெல்லாம் தங்களுடைய இயக்கங்களை களைத்து விட்டு தங்களது கட்சிகளை களைத்து விட்டு ஒரு தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்தாலே போதும். நம்மை பார்த்தே காஃபிர்கள் செத்துக் கொண்டிருப்பார்கள்.

நமது ஒற்றுமையை பார்த்துவிட்டால் போதும். மார்க்கத்தோடு இருக்கக் கூடிய அல்லாஹ்வுடைய தீனை நிலைநாட்டுவதோடு நம்மிடம் இருக்கக் கூடிய ஒற்றுமையை பார்த்தால் போதும். இவர்கள் ஒரு அமீருக்கு கட்டுப்படக் கூடியவர்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டால் போதும். அன்றைய நாளில் அவர்கள் முஸ்லிம்களுடைய தெருக்களில் காலணி அணிந்து செல்லமாட்டார்கள்.

முஸ்லிமிற்கு முன்னால் தலை தூக்கி பேசுவதற்கு பயப்படுவார்கள். ஏன்? இவர்களுக்கு ஒரு அமீர் இருக்கிறார். இவர்களுடைய மார்க்கத்தின் படி இவர்கள் கட்டுப்படக் கூடியவர்கள்.

ஒரு அமீர் எப்படியென்றால் ஒரு உடலுடைய தலையை போல. தலையில்லாத உடலை யாராவது மதிப்பார்களா? பெரிய பயில்வான் கட்டுமஸ்தான பெரிய மல்யுத்த வீரன் தலை அறுபட்டி கிடக்கிறான்.அவனை பார்த்து யாராவது பயப்படுவார்களா?

இன்று முஸ்லிம்களுக்குரிய அமீர் இல்லாத காரணத்தினால் சாதாரண ஒரு சமுதாயத்தில் எல்லா வகையிலும் கீழ்தரத்தில் இருக்கக் கூடிய ஒருவன் கூட, ஒரு முஸ்லிமை பார்த்து நகைக்கிறான்.

ஏன்? இவனை அடித்தால் யாரும் கேட்பதற்கு நாதியில்லை. இவனை சீன்டினால் இவனுக்காக குரல் கொடுப்பதற்கு யாருமில்லை என்பதற்காக சாதாரண ஒருவன் கூட நம்மை சீன்டுகிறான்.

நம்முடைய உடல் உரிமைகளை, பொருள் உரிமைகளை, நம்முடைய உடைமைகளை சீன்டிப் பார்க்கிறான் என்றால் இது எதை காட்டுகிறது?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாக்கை கவனியுங்கள்.

فَإِنَّهُ مَنْ فَارَقَ الْجَمَاعَةَ شِبْرًا فَمَاتَ إِلَّا مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً

முஸ்லிம்களுடைய ஜமாஅத்தை விட்டு ஒருவன் பிரிந்து மரணித்தால், அவனுடைய மரணம் ஜாஹிலியத்துடைய மரணம்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6531.

ஒரு மெஸேஜ் வருகிறது, அல்லாஹ் கூறுகிறான், குர்ஆனுடைய வசனத்தை எழுதி அனுப்புகிறார்கள். தீனை நிலைநாட்டுங்கள் நீங்கள் பிரிந்துவிடாதீர்கள். நாங்கள் உங்களை ஒற்றுமைக்கு அழைக்கிறோம் என்று.சோ அன்ட் சோ ஜமாஅத் என்று மெஸேஜ் வருகிறது.

பிரிந்து சென்றவர்கள்,முஸ்லிம்களை பிரித்து சென்றவர்கள் தங்களது இயக்கங்களுக்கு ஆள் சேர்த்துக் கொண்டு ஒற்றுமையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒற்றுமையாக இருந்த முஸ்லிம்களை இயக்கங்களாக, கட்சிகளாக, அமைப்புகளாக பிரித்துக் கொண்டு ஒவ்வொரு கட்சியும் பிரிவினைக்கு அழைப்பு கொடுக்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குழுக்களாக, அமைப்புகளாக இயக்கங்களாக மாறுவதை நமக்கு மிக ஒரு எச்சரிக்கையோடு கண்டித்திருக்கிறார்கள்.

ஆனால், முஸ்லிம்கள் அதை தான் செய்து கொண்டு வெற்றியை தேடிக் கொண்டிருக்கிறார்கள். எந்த வழியில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செல்ல சொன்னார்களோ அதில் இவர்களுக்கு வெற்றி தெரியவில்லை.இவர்களாக ஒரு வழியை உருவாக்குகிறார்கள்.

இன்னும் இது குறித்து நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அல்லாஹ் நாடினால் அடுத்த ஜும்ஆவில் பார்ப்போம்.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கூற்று,அவர்களுடைய வழிமுறை, அவர்களுடைய வழிகாட்டுதல் தான் எனக்கு வெற்றியை தேடித் தரும். நம் சமுதாயத்திற்கு வெற்றியை தேடித் தரும்.

வரக்கூடிய முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாக்கக் கூடிய உத்திரவாதம், அல்லாஹ்வுடைய வேதத்தை பின்பற்றுவதிலும் நபியின் சுன்னாவை அறிந்து, புரிந்து அதை செயல்படுத்துவதில் தான் இருக்கிறது என்று நாம் உணர வேண்டும். அதன் அடிப்படையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/