HOME      Khutba      அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 7/9) | Tamil Bayan - 343   
 

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 7/9) | Tamil Bayan - 343

           

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 7/9) | Tamil Bayan - 343


அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (பகுதி - 7)

ஜுமுஆ குத்பா தலைப்பு : அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (பகுதி - 7)

வரிசை : 343

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 09-01-2015 | 18-03-1436

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு பயந்து வாழுமாறு தனிமையிலும் சபைகளிலும், குடும்ப வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், வணக்க வழிபாட்டிலும், வியாபாரங்களிலும், தொழில் துறைகளிலும், எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை பயந்து அல்லாஹ்வின் அச்சத்தின் அடிப்படையில் வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக தொடங்குகிறேன்.

அல்லாஹ்வுடைய தூதர் தங்களுடைய ஹஜ்ஜத்துல் விதாஃ என்ற இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையிலிருந்து படிப்பினைக்குரிய பல விஷயங்களை நாம் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

இன்ஷா அல்லாஹ் இன்றும் அதிலிருந்து முக்கியமான மூன்று விஷயங்களை நாம் தெரிய இருக்கிறோம்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா, அவனுடைய வேதத்தின் படியும், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவின் படியும் நாம் வாழ்வதற்கும், அவர்களுடைய உபதேசத்தை முழுமையாக பின்பற்றி நடப்பதற்கும் எனக்கும் உங்களுக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும் நல்லருள் புரிவானாக! ஆமீன்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய இறுதி ஹஜ்ஜினுடைய அரஃபா மைதானத்தின் பேருரையில் ஆற்றிய முக்கியமான விஷயங்களில் ஒன்று தான் 'அல் மஸீஹுத் தஜ்ஜால்' -ஏமாற்றுக்காரனாகிய மஸீஹுத் தஜ்ஜாலை பற்றிய எச்சரிக்கை.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த ஹதீஸை இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்;

كُنَّا نَتَحَدَّثُ بِحَجَّةِ الْوَدَاعِ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا وَلَا نَدْرِي مَا حَجَّةُ الْوَدَاعِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ ذَكَرَ الْمَسِيحَ الدَّجَّالَ فَأَطْنَبَ فِي ذِكْرِهِ وَقَالَ مَا بَعَثَ اللَّهُ مِنْ نَبِيٍّ إِلَّا أَنْذَرَ أُمَّتَهُ أَنْذَرَهُ نُوحٌ وَالنَّبِيُّونَ مِنْ بَعْدِهِ وَإِنَّهُ يَخْرُجُ فِيكُمْ فَمَا خَفِيَ عَلَيْكُمْ مِنْ شَأْنِهِ فَلَيْسَ يَخْفَى عَلَيْكُمْ أَنَّ رَبَّكُمْ لَيْسَ عَلَى مَا يَخْفَى عَلَيْكُمْ ثَلَاثًا إِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ وَإِنَّهُ أَعْوَرُ عَيْنِ الْيُمْنَى كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ

அந்த இறுதி ஹஜ்ஜினுடைய பேருரையில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்த பின் பல விஷயங்களை எங்களுக்கு குறிப்பிட்டார்கள்.

அதில் ஒன்று தான், மஸீஹுத் தஜ்ஜாலை பற்றி அவர்கள் நினைவு கூர்ந்தது. மஸீஹுத் தஜ்ஜாலை பற்றிய ஒரு விரிவான விளக்கத்தை, விரிவான எச்சரிக்கையை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்கு கொடுத்தார்கள்.

அப்பொழுது கூறினார்கள், அல்லாஹ் அனுப்பிய எல்லா தூதர்களும் மஸீஹுத் தஜ்ஜாலை பற்றி தன்னுடைய உம்மத்திற்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

நூஹ் அலைஹிஸ்ஸலாம்அவர்களும் அவர்களுக்கு பின்னால் வந்த நபிமார்களும் அந்த மஸீஹுத் தஜ்ஜாலை பற்றி எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். கண்டிப்பாக அவன் உங்களில் தோன்றுவான். அவனுடைய பண்புகளை பற்றி, அவனுடைய அடையாளங்களை பற்றி உங்களுக்கு பல விஷயங்கள் மறைந்திருந்தாலும் உங்களது இறைவனை பற்றி அல்லாஹ்வை பற்றிய விஷயங்கள் உங்களுக்கு மறைந்ததாக இல்லை.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஒற்றைக் கண் உடையவன் அல்ல. ஆனால், தஜ்ஜாலோ அவனுடைய வலது கண் குறுடானவனாக ஒற்றைக்கண் உடையவனாக இருப்பான். அவனுடைய குறுடாக இருக்கின்ற அந்த வலது கண் ஒரு காய்ந்த திராட்சையை போன்று குழி விழுந்ததாக இருக்கும். அந்த கண் பார்வையற்றதாக இருக்கும் என்ற எச்சரிக்கையை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கொடுத்திருக்கிறார்கள்.(1)

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4402, 4051.

இந்த தஜ்ஜாலை பற்றிய பயம் எல்லா நபிமார்களும் தங்களுடைய உம்மத்துக்கு கூறிய ஒன்று. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இது குறித்து பயந்திருக்கிறார்கள், எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்,

مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْف عُصِمَ مِنْ الدَّجَّالِ

சூரத்துல் கஹ்ஃபுடைய முதல் பத்து வசனங்களை யார் மனப்பாடம் செய்வார்களோ அவர்கள் தஜ்ஜாலுடைய குழப்பத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.(2)

அறிவிப்பாளர் : அபுத் தர்தா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 809, 1342.

அது போன்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு தொழுகையின் இறுதி அமர்விலும் ஸலவாத் ஓதியதற்கு பிறகு இந்த நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு தேடுவார்கள்.அதற்கு பிறகு தான் மற்ற துஆக்களை ஓதுவார்கள்.

கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடுவார்கள், இம்மை வாழ்க்கை, மரணத்தின் ஃபித்னாவிலிருந்து பாதுகாப்பு தேடுவார்கள், அது போன்று மஸீஹுத் தஜ்ஜாலுடைய ஃபித்னாவிலிருந்து, குழப்பத்திலிருந்து பாதுகாப்பு தேடுவார்கள்.(3)

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 789,

இங்கே ஒரு விஷயத்தை நாம் விளங்க வேண்டும். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த மஸீஹுத் தஜ்ஜாலின் மூலமாக நமக்கு என்ன படிப்பினையை, பாடத்தை வைத்திருக்கிறான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வளவு ஒரு அச்சத்தை பயத்தை எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார்கள் என்றால், ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுடைய அறிவிப்பின் படி, ஒவ்வொரு தொழுகையின் இறுதி அமர்விலும் இந்த நான்கு விஷயங்களை விட்டும், அதில் இந்த தஜ்ஜாலுடைய குழப்பத்திலிருந்து பாதுகாப்பு தேடாமல் இறுதி அமர்வை அவர்கள் முடிக்கமாட்டார்கள்.

இன்று நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய ஈமானிய உணர்வுகள், நம்முடைய இறை நம்பிக்கைகள், நம்முடைய தக்வா என்ற இறையச்சத்தின் வெளிப்பாடு இதில் ஏற்படக் கூடிய பலவீனம், இதில் ஏற்படக் கூடிய சோர்வு, இதில் ஏற்படக் கூடிய அலட்சியம்.

இதனுடைய காரணங்களை நாம் பார்க்கும் பொழுது நமக்கு மிகத் தெளிவாக பல விஷயங்கள் தெரிய வருகின்றன. அதில் ஒன்று தான், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் எந்த விஷயங்களை குறித்து எச்சரிக்கை செய்தார்களோ, அச்சமூட்டினார்களோ அந்த விஷயங்களை குறித்து எச்சரிக்கையில்லாமல், அதை குறித்த அச்ச உணர்வு இல்லாமல், பயம் இல்லாமல் இருப்பது.

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் ஷைத்தானை பற்றி நமக்கு எச்சரிக்கை செய்தார்கள், ஷைத்தானுடைய ஊசலாட்டங்களை பற்றி நமக்கு எச்சரிக்கை செய்தார்கள்.

إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 35:6)

எவ்வளவு கடுமையான எச்சரிக்கை! தனது நபியை பார்த்து அல்லாஹ் கூறுகிறான்,

وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ

ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 7:200)

மேலும் அல்லாஹ் துஆவுடைய வார்த்தைகளை சொல்லித் தருகிறான்.

وَقُلْ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ (97) وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُونِ

இன்னும்: நீர் கூறுவீராக! “என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” (என்றும்), “இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்” (என்று கூறுவீராக)! (அல்குர்ஆன் 23:97,98)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்;

فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக. (அல்குர்ஆன் 16:98)

இந்த அளவிற்கு அல்லாஹ்வுடைய எச்சரிக்கை அல்குர்ஆனில் இருக்கிறதென்றால் நம்மில் ஷைத்தானை குறித்து அச்ச உணர்வுள்ளவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்?!

ஷைத்தானுடைய ஊசலாட்டங்கள், குழப்பங்கள், ஷைத்தான் செய்யக் கூடிய அந்த தீய செயல்கள், தீய மன எண்ணங்கள் இது குறித்து அச்ச உணர்வு, இது குறித்த பயம், இது குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தான் இன்று நம்மில் பலர் அந்த ஷைத்தானுடைய ஆபாசங்களுக்கு, ஷைத்தானுடைய ஊசலாட்டங்களுக்கு, வழிகேடல்களுக்கு மிக இலகுவாக இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

நபிமார்கள் பயந்தார்கள், ஸஹாபாக்கள் பயந்தார்கள், இறையச்சம் உள்ளவர்கள் பயந்தார்கள் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய கண்ணியத்திற்குரிய குர்ஆனில் குறிப்பிட்டு கூறுகிறான் என்றால் எவ்வளவு பயப்பட வேண்டும்.

எனக்கு ஷைத்தானுடைய ஊசலாட்டங்கள் வந்துவிடக் கூடாது, ஷைத்தானுடைய வழிகேடு என்னிடத்தில் வந்து விடக் கூடாது என்று.

அல்லாஹ்வுடைய தூதரின் தனிப்பட்ட பிரார்த்தனையை பாருங்கள்.

وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ

யா அல்லாஹ்! மரண நேரத்தில் ஷைத்தான் என்னை குழப்பி விடுவதிலிருந்து நான் பாதுகாப்பு தேடுகிறேன். (4)

அறிவிப்பாளர் : அபுல் யசர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 1328, 1552.

وَأَعُوذُ بِكَ وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ

யா அல்லாஹ்! ஷைத்தானை விட்டும் அவன் தூண்டக் கூடிய  இணை வைத்தலை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.(5)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 4405.

அல்லாஹ்விற்கு வெறுப்பான, அல்லாஹ்விற்கு பிடிக்காத தீய குணங்களை, தீய செயல்களை, அசிங்கங்களை, ஆபாசங்களை தூண்டுவதுதான் ஷைத்தானின் வேலை

ஆகவே தான், அவனைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், பயத்தோடு இருங்கள். அல்லாஹ்விடத்தில் நடுங்கி பிரார்த்தனை செய்து அவனிடத்திலிருந்து பாதுகாப்பு தேடிக் கொண்டே இருங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஆனால், நம்மில் பலருடைய நிலை என்னவென்றால் ஷைத்தானை பற்றிய எந்த அச்ச உணர்வும் இல்லாமல் முழுமையாக ஈமானை அடைந்தவர்களாக, ஷைத்தானின் அனைத்து விதமான ஊசலாட்டங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டவனை போன்று என்னிடத்தில் ஷைத்தானே வரமாட்டான், என்னிடத்தில் ஷைத்தானின் தீய எண்ணங்களே வராது என்ற அளவிற்கு அவனை பற்றிய அச்ச உணர்வு இல்லாமல் , பயம் இல்லாமல், விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்ற நிலையில் தான் நமது பெரும்பாலான முஸ்லிம்களின் நிலை இருக்கிறது.

இதன் காரணமாக தான் சர்வ சாதாரணமாக சிறுவர்களின் விளையாட்டு பொருள்களை போன்று ஷைத்தான் நம்மில் பலரை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறான்.

கொள்கையில் வழிகெடுக்கிறான், செயல்களில் வழிகெடுக்கிறான், குணங்களில் வழிகெடுக்கிறான், பொருளாதாரத்தில் வழிகெடுக்கிறான், இப்படி பல விதமான வழிகேடு.

ஒட்டு மொத்தமாக அவனுடைய நோக்கம் என்ன? எப்படியாவது வழிகெடுப்பது. ஷிர்க்கிலோ, குஃப்ரிலோ, பெரும் பாவத்திலோ, பித்அத்திலோ வழிகெடுத்து நரகத்தில் கொண்டு போய் தள்ள வேண்டும். இது தான் அவனுடைய குறிக்கோள்.

அல்லாஹ் கூறுகிறான்,

إِنَّ الشَّيْطَانَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوهُ عَدُوًّا إِنَّمَا يَدْعُو حِزْبَهُ لِيَكُونُوا مِنْ أَصْحَابِ السَّعِيرِ

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாக இருக்கிறான். ஆகவே, அவனை நீங்களும் எதிரியாகவே கருதுங்கள். அவன் (தன்னைப் பின் பற்றிய) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் நரகவாசிகளாகி விடுவதற்காகவே. (அல்குர்ஆன் 35 : 6)

ஷைத்தானுடைய ஊசலாட்டங்களில் ஒன்று தான், நஃப்ஸுடைய ஊசலாட்டங்கள். அதையும் அல்லாஹ் பயப்படும்படி கூறுகிறான்.

அதில் ஒன்று தான், இந்த தஜ்ஜாலுடைய குழப்பம். இந்த தஜ்ஜாலுடைய குழப்பம் இது ஒரு சாதாரணமான குழப்பம் அல்ல. நேரடியாக ஒரு முஸ்லிமை அவனுடைய ஈமானில் சோதிக்கக் கூடிய ஒரு குழப்பம்.

அந்த காலத்தில் வாழ்கின்ற ஒரு முஃமின் மிகப் பெரிய சோதனைக்கு அவன் ஆளாகிறான். நேரடியாக தன்னை ரப்பு என்று கூறுகிறான். ரப்புடைய செயல்களில் சில செயல்களை அவன் செய்து காட்டுகிறான்.

இதை பார்க்கக் கூடிய மக்களெல்லாம் அவனை ரப்பு என்று கூட்டம் கூட்டமாக பின்பற்றி செல்லும் பொழுது ஒரு முஃமின் -இறை நம்பிக்கை உள்ளவன் அவனுடைய ஈமானை பாதுகாத்துக் கொள்வதற்கு உண்டான வழியை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தருகிறார்கள்.

அல்லாஹ்வுடைய அடையாளங்களை சொல்லித் தருகிறார்கள். நீங்கள் வணங்கக் கூடிய இறைவன் அவன் ஒற்றைக்கண் உடையவன் அல்ல. ஆனால், தஜ்ஜாலுடைய கண்ணோ ஒற்றைக் கண்ணாக இருக்கும். இதை வைத்து நீங்கள் அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதருடைய கருணையை பாருங்கள். இந்த மார்க்கத்தில் வழிகெடுக்கக் கூடிய ஒவ்வொரு வழிகேடர்களை பற்றியும் நமக்கு தெளிவான எச்சரிக்கையை அவர்கள் கூறாமல் இருக்கவில்லை.

ஷைத்தானை குறித்த  =எச்சரிக்கை, நஃப்ஸை குறித்த எச்சரிக்கை, வழிகேடர்களை குறித்த எச்சரிக்கை, வழிகேடர்களிலேயே குழப்பவாதிகளிலேயே மிகப் பெரிய குழப்பவாதியான தஜ்ஜாலை பற்றிய எச்சரிக்கையையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய அந்த இறுதி பேருரையில் எவ்வளவு அழகாக மிகத் தெளிவாக நமக்கு நினைவு கூறுகிறார்கள்.

இது குறித்து நாமும் அந்த அச்சத்தோடு இருக்க வேண்டும், நமது பிள்ளைகளுக்கும் அந்த அச்ச உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

மறுமையின் அடையாளங்களில் ஒன்று, தஜ்ஜாலை பற்றிய நினைவு மக்களுக்கு மத்தியில் மறக்கப்பட்டு விடும். தஜ்ஜாலை பற்றிய பேச்சை மக்கள் விட்டு விடுவார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 16667.

இன்றைய சூழலில். மக்கள் எந்தெந்த பயத்தை பற்றியெல்லாம் பேசுகிறார்கள், யோசிக்கிறார்கள், அதை பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஆனால், எதை பற்றி அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் எவ்வளவு ஆழமாக, அழுத்தமாக எச்சரிக்கை செய்தார்களோ அந்த தஜ்ஜாலுடைய ஃபித்னாவை பற்றிய பேச்சு நமக்கு மத்தியில் இல்லாமல் போனதை பார்க்கிறோம்.

ஆகவே, அல்லாஹ்வும் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் இந்த தஜ்ஜாலுடைய ஃபித்னாவிலிருந்து எப்படி நாம் பாதுகாப்பு தேட வேண்டும் என்று சொன்னார்களோ அந்த முறையில் நாம் பாதுகாப்பு தேட கடமைப் பட்டிருக்கிறோம்.

அதில் குறிப்பாக நாமும் நமது பிள்ளைகளும் சூரத்துல் கஹ்ஃப் உடைய அந்த முதல் பத்து வசனங்களை மனப்பாடம் செய்வதோடு ஒவ்வொரு தொழுகையிலும் மன ஓர்மையோடு, அர்த்தத்தை புரிந்து பயத்தோடு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட சுன்னாவுடைய துஆவை தொழுகையின் இறுதி அமர்வில் நாம் கேட்டு பழக வேண்டும்.

அது போன்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இறுதிப் பேருரையில் இரண்டாவது ஒரு முக்கிய விஷயத்தை குறிப்பிட்டார்கள்.

அம்ரு இப்னு அல்அஹ்வஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். இமாம் திர்மிதி பதிவு செய்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இஸ்லாமிய மார்க்கத்தின் குற்றவியலை பற்றிய ஒரு தெளிவான சட்டத்தை, ஒரு அடிப்படையை இங்கே நமக்கு விளக்கித் தருகிறார்கள்.

ஏனென்றால், முந்திய காலத்தில் இஸ்லாமை தவிர்த்துள்ள ஏனைய சமுதாய மக்களில் குற்றவியல் சட்டமென்பது நாட்டை ஆளுகின்ற அரசன் எதை முடிவு செய்கிறானோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட நீதிபதி எதை முடிவு செய்கிறார்களோ அவர்களுடைய மன இச்சைகளின் படி தான் அந்த குற்றவியல் சட்டங்கள் அமைந்திருக்கும்.

அவற்றில் பெரும்பாலான சட்டங்கள் ஏழைக்கு ஒரு சட்டம், செல்வந்தர்களுக்கு ஒரு சட்டம். வசதி படைத்தவர்களுக்கு ஒரு சட்டம், உயர்ந்த பரம்பரையை சேர்ந்தவர்களுக்கு ஒரு சட்டம், தாழ்ந்தவர்களுக்கு ஒரு சட்டம் என்பதாக இனத்தால், பிறப்பால், மொழியால் பாகுபாடுபட்டவையாக இருக்கும்.

ஆனால், அல்லாஹ்வுடைய சட்டம், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஷரீஅத் சட்டம் முற்றிலும் நேர்மையின் மீது, நீதத்தின் மீது, சரியான அடிப்படையின் மீது அமைக்கப்பட்ட சட்டம்.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

لَا يَجْنِي جَانٍ إِلَّا عَلَى نَفْسِهِ لَا يَجْنِي وَالِدٌ عَلَى وَلَدِهِ وَلَا مَوْلُودٌ عَلَى وَالِدِهِ

ஒருவன் ஏதாவது தவறை செய்தால் அதனுடைய தண்டனை அவனுக்கு தான் கொடுக்கப்படும். ஒருவனுடைய குற்றம், ஒருவனுடைய தவறு அவனுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்துமே தவிர, அவனுடைய உறவினருக்கு அல்ல.

ஒரு மனிதன் கொலை செய்துவிட்டான் என்றால் அந்த கொலை செய்த மனிதனை தான் பழிக்கு பழியாக கொல்லப்படுமே தவிர, அவன் கிடைக்கவில்லை என்ற காரணத்தாலோ அல்லது அவன் செல்வந்தனாக, உயர்ந்த குலத்தை சேர்ந்தவனாக இருக்கிறான் என்ற காரணத்தினாலோ அவனுக்கு பகரமாக அவனுடைய அடிமையையோ அல்லது வேறு ஒருவனையோ கொல்லப்படாது.

தந்தை கொலை செய்தால் அதற்கு பகரமாக தந்தையிடம் தான் பழிவாங்கப்படும் மகனிடம் பழிவாங்கப்படாது. மகன் கொலை செய்தால் மகனிடம் தான் பழிவாங்கப்படுமே தவிர தந்தையிடம் பழிவாங்கப்படாது. யார் ஒருவன் குற்றத்தை செய்கிறானோ அந்த குற்றத்திற்குரிய தண்டனை அவனுக்கு தான் கொடுக்கப்படுமே தவிர அவனை சார்ந்தவர்களுக்கு அல்ல.

அறிவிப்பாளர் : அம்ரு இப்னு அல்அஹ்வஸ்ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3087, தரம் : ஹசன் (அல்பானி)

எவ்வளவு தெளிவான உபதேசம் பாருங்கள். முந்திய சமுதாயத்தில் எஜமானன் ஏதாவது குற்றத்தை செய்துவிட்டால் அந்த குற்றத்திற்கு பகரமாக அடிமையை கொடுத்து அவன் தப்பித்துக் கொள்வான்.

உயர்ந்த குலத்தை சேர்ந்தவர்கள், பெரும் வசதியுள்ளவர்கள் ஏதாவது குற்றம் செய்துவிட்டால் அது ஏழைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக இருக்குமேயானால் வெரும் பணத்தை கொடுத்து அவர்கள் சமாளித்துக் கொள்வார்கள்.

பழிதீர்க்க முடியாத ஒரு நிர்பந்தத்தில் சமுதாயம் இருந்தது. இதன் காரணமாக வசதிபடைத்தவர்களும், மேல்தட்டு மக்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்களும் பலவீனர்களின் மீது சமுதாயத்தில் அந்தஸ்துகள் இல்லாதவர்கள் மீது அநியாயங்கள், அக்கிரமங்களை அளவில்லாமல் செய்து கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,இனி யாராக இருந்தாலும் சரி. ரோமராக இருந்தாலும், பாரசீகராக இருந்தாலும், குரைஷியராக இருந்தாலும், அவன் அரபியாக இருந்தாலும் சரி, அஜமியாக இருந்தாலும் சரி, இஸ்லாம் ஆளக்கூடிய ஆட்சிப் பிரதேசங்களில் சட்டம் ஒரே சட்டம் தான்.

யார் குற்றம் செய்கிறாரோ அந்த குற்றவாளி கண்டுபிடிக்கப்படுவார். அவன் சிறைபிடிக்கப்படுவான். அதற்குரிய பழி அவனிடமிருந்து தான் வாங்கப்படுமே தவிர, தந்தை செய்த குற்றத்திற்காக மகன் பழிவாங்கப் படமாட்டான். மகன் செய்த குற்றத்திற்காக தந்தையிடம் பழிவாங்கப் படாது. எவன் குற்றம் செய்கிறானோ அதற்குரிய தண்டனை அவனுக்கு தான் கொடுக்கப்படும்.

மேலும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாமிய உறவுமுறையை பற்றி கூறினார்கள்.

ஒரு மனிதன் வெள்ளையனாக, கருப்பனாக, எந்த மொழி, எந்த நிறம், எந்த நாட்டை சேர்ந்தவனாக இருக்கட்டும். இஸ்லாம் என்ற மார்க்கத்தில் தன்னை ஒருவன் இனைத்துக் கொண்டால் அவன் இன்னொரு முஸ்லிமிற்கு சகோதரனாக ஆகி விடுகிறான். அவன் உலகத்தில் எந்த பகுதியில் வசித்தாலும் சரி, வாழ்ந்தாலும் சரி.

ألا إن المسلم أخو المسلم فليس يحل لمسلم من أخيه شيء إلا ما أحل من نفسه

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமிற்கு சகோதரனாக ஆகி விடுகிறான். இன்னொரு முஸ்லிமுடைய ஒரு பொருள் தனக்கு ஹலாலாக -ஆகுமானதாக ஆக வேண்டுமென்றால் அந்த முஸ்லிம் எதை மனவிருப்பத்தோடு அனுமதி கொடுத்தாரோ அதை தான் இவன் அனுபவிக்க முடியுமே தவிர, இன்னொரு முஸ்லிமுடைய எந்த ஒரு சிறிய பொருளையோ, அற்பமான பொருளையும் கூட அவனுடைய மன விருப்பம் இல்லாமல் எடுத்துக் கொள்ள முடியாது.

அறிவிப்பாளர் : அம்ரு இப்னு அல்அஹ்வஸ்ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3087, தரம் : ஹசன் (அல்பானி)

இதிலும் மிக தெளிவான ஒரு வழிகாட்டுதலை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்.

சமுதாய மக்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் சண்டை சச்சரவுகள் எங்கு ஏற்படுகிறதென்றால், எங்கே பொருளாதாரத்தில் அநீதம் தலை தூக்குமோ அந்த இடத்தில் ஒரு சமுதாயம் நிம்மதியாக வாழ முடியாது.

பொய் பேசி வியாபாரம் செய்தால், மோசடி செய்து வியாபாரம் செய்தால், பதுக்கல் செய்து வியாபாரம் செய்தால், அரசாங்கத்தில் இலஞ்சம் வந்துவிடுமேயானால், கையாடல் வந்துவிடுமேயானால், மோசடி வந்துவிடுமேயானால், இப்படி பொருளாதாரத்தை சேர்த்த குற்றம் அது வியாபாரத்தில் என்றாலும் சரி, நிர்வாகத்தில் இருந்தாலும் சரி, அரசாங்கத்தில் இருந்தாலும் சரி, அரசியலில் இருந்தாலும் சரி.

அப்படிப்பட்ட குற்றங்கள் மலிந்துவிட்ட ஒரு சமுதாயம் உலகத்தில் ஏனைய மக்களுக்கு மத்தியில் ஒரு தலை சிறந்த சமுதாயமாகவோ, ஒரு வலிமிக்க சமுதாயமாகவோ, ஒரு பலமிக்க முன்னோடி சமுதாயமாகவோ ஆகவே முடியாது.

இஸ்லாமிய மக்களுடைய பலவீனத்தில் உள்ள காரணங்களில் ஒரு முக்கியமான காரணம். இஸ்லாமிய மக்களுக்கு மத்தியில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நேர்மையின்மை. பொருளாதாரத்தில் ஏற்பட்ட அவர்களுடைய வழிகேடுகள்.

எங்கே வைத்தாலும் சரி, எங்கே கொண்டு போய் அவருக்கு பதவி கொடுத்தாலும் சரி, பொறுப்பு கொடுத்தாலும் சரி, அவனுக்கும் ஒரு முஸ்லிமிற்கும் இடையில் எந்த விதமான வித்தியாசம் இல்லாத அளவில் அவனும் கையாடல் செய்கிறான், இவனும் கையாடல் செய்கிறான். அவனும் இரண்டு கணக்குகளை எழுதுகிறான், இவனும் இரண்டு கணக்குகளை எழுதுகிறான்.

அவனும் பொய் பேசுகிறான், இவனும் பொய் பேசுகிறான். அவனும் இலஞ்சம் வாங்குகிறான், இவனும் இலஞ்சம் வாங்குகிறான். அவனும் ஏமாற்றுகிறான், இவனும் ஏமாற்றுகிறான். இவனும் மோசடி செய்கிறான், அவனும் மோசடி செய்கிறான். இவனும் பதுக்குகிறான், அவனும் பதுக்குகிறான்.

இப்படி இருவருக்கும் இடையில் எந்த விதமான வித்தியாசம் இல்லாத அளவிற்கு குஃப்ரில் இருக்கக் கூடிய, ஷிர்க்கில் இருக்கக் கூடிய ஒருவனை போன்று நேர்வழி கொடுக்கப்பட்ட, குர்ஆன், சுன்னா, வேதங்கள் கொடுக்கப்பட்ட முஸ்லிம் மாறியிருப்பது இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தை தலை குனிய செய்திருக்கிறது. அவர்களை பலவீனப்படுத்தி இருக்கிறது.

நீங்கள் நினைக்காதீர்கள்; நாம் எங்கோ ஒரு மூலையில் தவறு செய்கிறோம். இதனால் சமுதாயத்திற்கே பாதிப்பு ஏற்படுமா? என்று.

நான் ஒரு கடையில் திருடுகிறேன், ஏமாற்றுகிறேன், நான் ஒரு நிறுவனத்தில் மோசடி செய்கிறேன், நான் ஒரு நிறுவனத்தில் பதுக்குகிறேன். இதனால் சமுதாயத்திற்கு என்ன தீங்கு ஏற்படும் என்று நினைக்காதீர்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், முஸ்லிம்கள் ஒரு கட்டிடத்தை போல. அதிலுள்ள ஒரு செங்கல்லுக்கு பிரச்சனை என்றால் எல்லா கட்டிடங்களுடைய எல்லா பாகங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்.

இஸ்லாமிய சமுதாயத்தில் இந்த பொருளாதாரத்தை குறித்த தெளிவான வழிகாட்டுதலை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு தெளிவுபடுத்தினார்கள்.

لَعْنَةُ اللَّهِ عَلَى الرَّاشِي وَالْمُرْتَشِي

இலஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! இலஞ்சம் கொடுப்பவனையும் அல்லாஹ் சபிப்பானாக!

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 2313, 2304.

மேலும் கூறினார்கள்:

وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا

யார் நம்மை ஏமாற்றுவார்களோ அவர்கள் நமது சமுதாயத்தையே சேர்ந்தவர்கள் அல்ல.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 146, 164.

திருடுவதை, அநியாயம் செய்வதை, பதுக்குவதை, பொய் கணக்கு எழுதுவதை எல்லாவற்றையும் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் கடுமையாக தடுத்திருக்கிறார்கள்.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய இந்த நம்பிக்கையின்மை, அமானிதமின்மை, அவர்களுக்கு மத்தியில் இருக்கக் கூடிய நேர்மையின்மை.

கடன் வாங்கினால் கொடுக்கமாட்டார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள். எப்படிப்பட்ட ஒரு கேவலமான பேச்சு நமது சமுதாயத்தைப் பற்றி பேசப்படுகிறதென்றால் எவ்வளவு வேதனையான விஷயம்!

இதனால் அல்லாஹ்வுடைய சோதனை வானத்திலிருந்து இறங்கி கொண்டிருப்பதை, நாட்டு மக்களுடைய ஆதிக்கம் நம்மீது ஏற்பட்டுக் கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிகத் தெளிவாக கூறினார்கள்; ஒரு முஸ்லிமிடமிருந்து உனக்கு ஏதாவது ஹலாலாக வேண்டுமென்றால் அவன் எதை மனப்பூர்வமாக உனக்கு கொடுத்தானோ அது தான் உனக்கு ஹலால்.

இன்று நம்மில் சிலர்,தனி மனிதரிடமிருந்து திருடினால் தான் தவறு என்று நினைக்கிறார்கள். ஒரு நிறுவனத்திலிருந்து எடுத்தாலோ அல்லது அரசாங்கத்திலிருந்து எடுத்தாலோ அல்லது பொது மக்களின் பைத்துல் மாலிலிருந்து எடுத்தாலோ அதை பற்றி பிரச்சனை இல்லை. அதனால் தனிப்பட்ட மனிதனுக்கு பாதிப்பு இல்லையே என்பதாக எண்ணுகிறார்கள்.

ஒரு சம்பவத்தை பாருங்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு மனிதரை ஜகாத் வசூல் செய்வதற்காக அனுப்புகிறார்கள். வசூல் செய்துவிட்டு வந்த மனிதர் ஜகாத்துடைய செல்வங்களெல்லாம் இது என்பதாக பல செல்வங்களை கொடுத்து விட்டு சில செல்வத்தை குறித்து கூறினார்கள், இது எனக்காக அன்பளிப்பு செய்யப்பட்டது என்று.

அந்த மனிதன் மறைத்தாரா? பொய் பேசினாரா? நபியிடம் வந்து தான் வசூலித்த அத்தனை செல்வங்களையும் சமர்பித்துவிட்டு இது ஜகாத்துக்காக கொடுக்கப்பட்டது, இது எனக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது என்பதாக வைக்கிறார்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடனடியாக தோழர்களை ஒன்று கூட்டுகிறார்கள். அத்தனை தோழர்களையும் மஸ்ஜிதிற்கு வரவைக்கிறார்கள்.

மிம்பரில் ஏறுகிறார்கள், சிலரை நம்பிக்கையோடு அல்லாஹ்வின் ஹக்காகிய ஜகாத்தை வசூலிக்க நான் அனுப்புகிறேன். வசூலித்து விட்டு வந்ததற்கு பிறகு இது ஜகாத்தாக கொடுக்கப்பட்டது, இது எனக்காக அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது என்பதாக கூறுகிறார்களே. அவன் தன்னுடைய தந்தையின் வீட்டில் உட்கார்ந்து கொள்ளட்டும்.

பிறகு அவனுக்கு அன்பளிப்பு வருகிறதா? இல்லையா? என்று பார்க்கட்டும். (6)

அறிவிப்பாளர் : அபூ ஹுமைத் அஸ்ஸாஇதி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2407.

ஒரு அதிகாரியாக இருக்கக்கூடிய நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் செல்லும் பொழுது உங்களுக்கு கொடுக்கப்படக் கூடிய அனைத்தும் அரசாங்கத்தை சேர்ந்தது.

அது போன்று அதிகாரியாக இருக்கக்கூடியவர்கள் அன்பளிப்பை வாங்குவது இலஞ்சத்தை சேர்ந்தது என்ற சட்டத்தையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முடிவு செய்தார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு போரில் கலந்து கொண்ட அவர்களின் அடிமைகளில் ஒருவர் போரில் கொல்லப்பட்டு விடுகிறார். தோழர்களெல்லாம் மிக மகிழ்ச்சியோடு, நற்செய்தியோடு கூறுகிறார்கள், ரஸூலுல்லாஹ்வுடைய அடிமை கொல்லப்பட்டுவிட்டார், ஷஹீதாகி விட்டார், சொர்க்கத்திற்கு சென்று விட்டார் என்ற சுபச் செய்தியை பேசும்பொழுது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முகம் அங்கே மலரவில்லை.

கடுகடுத்தவராக, கோபித்தவராக கூறினார்கள், அவர் நரகத்தில் இருக்கிறார். ஒரு போர்வை அவன் மீது நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது என்று.

தோழர்கள் பயந்துவிட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே! ஆம் கனிமத்துடைய செல்வம் முஸ்லிமிற்கு மத்தியில் பங்கு வைக்கப்படுவதற்கு முன்னால் அதை அவர் எடுத்து விட்டார்.

நூல் : புகாரி, எண் : 4234

போர் செய்தவர்கள் தான், எல்லோரும் முஜாஹிர்கள் தான். அல்லாஹ்விற்காக தன்னுடைய உயிரை கொடுத்து கொல்லப்பட்டாலும் பரவாயில்லை என்று உயிரை துச்சமாக மதித்தவர்கள் தான்.

வாளால் எதிரிகளை வெட்டியவர்கள், எதிரிகளின் வாளுக்கு முன்னால் தங்களுடைய கழுத்தை கொடுத்தவர்கள், ஷஹீதாகி விட்டார்.

ஆனாலும், எந்த நிலையில் இருந்தாலும் சரி, அமீருடைய அனுமதி இல்லாமல், பொறுப்பாளருடைய அனுமதி இல்லாமல் எடுப்பதற்கு ஜிஹாதில் கலந்து கொண்ட ஒரு முஹாஹிருக்கு கூட அனுமதியில்லை என்றால் கொஞ்சம் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

இன்று நமது சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய நம்பிக்கையின்மையை, நேர்மையின்மையை, அவர்களிடத்தில் இருக்கக் கூடிய பயங்கரமான, மோசமான, மிக கேவலமான அந்த பொருளாதார மோசடியை நினைத்துப் பாருங்கள்.

 ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள், பங்கு வைக்கப்படுவதற்கு முன்னால் அவர் ஒரு போர்வையை எடுத்து மறைத்துக் கொண்டார். அந்த போர்வை நெருப்பாக எரிந்துக் கொண்டிருக்கிறது.

கண்ணியத்திற்குரிய தோழர்கள் அவருடைய உடமைகளை தேடிச் செல்கிறார்கள். அந்த உடமையை எடுத்துப் பார்த்தால் ஒரு போர்வை அவருடைய பையில் இருக்கிறது. அவர் கொண்டு வராத கனிமத்தில் கிடைத்த போர்வைகளில் ஒரு போர்வை இருக்கிறது. அந்த போர்வை மூன்று திர்ஹங்களுக்கு கூட சமமானதாக அது இருக்காது.

அல்லாஹ்வின் அடியார்களே! மூன்று திர்ஹமா? முப்பதா? முண்ணூரா? முப்பது இலச்சமா? என்பது கிடையாது. உங்களுக்கு ஹலால் இல்லாததை அது மூன்று கோடியாக இருந்தாலும் சரி, மூன்று பைசாவாக இருந்தாலும் சரி முஸ்லிமிற்கு ஹலால் இல்லை.

எதை அல்லாஹ் நேரான ஹலாலான வழியைக் கொண்டு வியாபாரத்தை கொண்டோ, அன்பளிப்பை கொண்டோ, கொடுக்கல் வாங்கலை கொண்டோ அல்லது தந்தையின் உறவினர்களின் சொத்திலிருந்து வாரிசாக ஆக்குவதின் மூலமாகவோ அல்லாஹ் அவனுடைய ஷரீஅத்தின் ஹலாலாக ஆக்கிய அந்த ஹலாலான வழிகளை தவிர, வேறு எந்த வழியில் வந்தாலும் சரி சிறிய அளவுதானே என்று பார்க்கப்படாது.

அது ஹராம் அவ்வளவு தான். தடுக்கப்பட்டது, பாவமானது, குற்றமானது என்று தான் பார்க்கப்படுமே தவிர, சிறிய அளவு தான் பரவாயில்லை என்பதாக பார்க்கப்படாது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த எச்சரிக்கையை கவனமாக நாம் கையாள வேண்டும்.

அமானிதம் நம்மிடத்தில் ஒப்படைக்கப்படுமேயானால், அது ஒரு நிறுவனத்தினுடைய அமானிதமாக இருக்கட்டும், முஸ்லிம்களுடைய பொது சொத்து சம்மந்தப்பட்ட அமானிதமாக இருக்கட்டும். மிக பயத்தோடு, அச்ச உணர்வோடு அதிலிருந்து நமக்கு எது ஹலாலோ அது தான் ஹலால்.

கண்ணியத்திற்குரிய கலீஃபாக்களுடைய வாழ்க்கையை பாருங்கள். ஏன் அல்லாஹ் அவர்களுக்கு வீரத்தை கொடுத்திருந்தான்? ஏன் அல்லாஹ் அவர்களுக்கு கண்ணியத்தை கொடுத்திருந்தான் ?

மாற்றார்கள் பயந்தார்கள். அவர்களுடைய நேர்மை. நீதம். பொருளாதாரத்தில் நேர்மை, சட்டத்தில் நீதம், தனது சொந்த வாழ்க்கையில் பகட்டில்லாத வாழ்க்கை. அவர்களை மாற்றுமத மக்களுக்கு மத்தியில், ஏனைய சமுதாயத்திற்கு மத்தியில் தலை நிமிர்ந்தவர்களாக செல்ல வைத்தது.

ஆனால், இன்று நமது சமுதாய மக்களுக்கு, நம்முடைய ஆட்சியாளருக்கு, நம்மில் படித்தவர்களுக்கு எல்லாம் பொருளாதாரம் இருக்கிறது, ஆட்சி இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது, கல்வி இருக்கிறது, திறமை இருக்கிறது. இருந்தாலும் மற்றவர்களுக்கு முன்னால் தலை குணிவு, மற்றவர்களுக்கு முன்னால் கேவலம்.

என்ன காரணம்? பொது வாழ்க்கையில், சமுதாயத்தில் நேர்மையின்மை, சமுதாயத்தில் நீதமின்மை, கட்டுப்பாடின்மை.

அல்லாஹ்வுடைய தூதர் இதை எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். ஒரு முஸ்லிமிடமிருந்து உனக்கு ஏதாவது ஒன்று கிடைக்க வேண்டுமென்றால் எதை அவன் தனது விருப்பத்தோடு உனக்கு ஹலால் ஆக்கினானோ எடுத்துக் கொள். அதை தவிர எதுவும் உனக்கு ஹலால் இல்லை.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள், நாளை மறுமை நாளில் ஒரு மனிதன் கணக்கு வழக்குகளை எல்லாம் கொடுத்து விட்டு வேகமாக சென்று கொண்டிருப்பான் ஸிராத் பாலத்தை கடப்பதற்காக. ஆனால், அங்கு செல்லும் பொழுது அவன் தடுக்கப்படுவான்.

ஏன் தடுக்கப்படுவான்? ஒரு மிஸ்வாக் குச்சியை தனது சகோதரனிடமிருந்து அவனுடைய அனுமதியில்லாமல் எடுத்த காரணத்தால்.

ஒரு மிஸ்வாக் குச்சி இன்றைய காலத்தின் மதிப்பின் படி அதிகப்படியாக பத்து ரூபாய். ஒரு பத்து ரூபாய்க்கு சமமான மிஸ்வாக் -பல் துலக்கக் கூடிய குச்சியை தனது சகோதரனிடமிருந்து அவனுடைய அனுமதியில்லாமல் அவனுக்கு தெரியாமல் எடுத்த காரணத்தால் அவன் ஸிராத் பாலத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவான்.

அதற்குரிய விசாரனை கொடுக்கப்பட்டு, அதற்குரிய நன்மையை அவனிடமிருந்து எடுக்கப்பட்டதற்கு பிறகு தான் அவன் அதை கடப்பதற்கு அனுமதியளிக்கப்படும்.

நூல் : முஸ்லிம் எண் : 137

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கூறியிருக்கக் கூடிய இந்த அறிவுரைகள் நமக்கு கண்ணியத்தை கொடுக்கக் கூடியவை, நமக்கு ஈமானை அதிகப்படுத்தக் கூடியவை.

நமது சமுதாயத்தை மேம்படுத்தக் கூடியவை. அவற்றை நமது வாழ்க்கையில் கடைபிடிப்போமாக! நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும், அல்லாஹ்வுடைய வேதத்தையும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவையும் பின்பற்றி வாழக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ قَالَ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ قَالَ حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدٍ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَكُنَّا نَتَحَدَّثُ بِحَجَّةِ الْوَدَاعِ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا وَلَا نَدْرِي مَا حَجَّةُ الْوَدَاعِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ ذَكَرَ الْمَسِيحَ الدَّجَّالَ فَأَطْنَبَ فِي ذِكْرِهِ وَقَالَ مَا بَعَثَ اللَّهُ مِنْ نَبِيٍّ إِلَّا أَنْذَرَ أُمَّتَهُ أَنْذَرَهُ نُوحٌ وَالنَّبِيُّونَ مِنْ بَعْدِهِ وَإِنَّهُ يَخْرُجُ فِيكُمْ فَمَا خَفِيَ عَلَيْكُمْ مِنْ شَأْنِهِ فَلَيْسَ يَخْفَى عَلَيْكُمْ أَنَّ رَبَّكُمْ لَيْسَ عَلَى مَا يَخْفَى عَلَيْكُمْ ثَلَاثًا إِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ وَإِنَّهُ أَعْوَرُ عَيْنِ الْيُمْنَى كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ أَلَا إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا أَلَا هَلْ بَلَّغْتُ قَالُوا نَعَمْ قَالَ اللَّهُمَّ اشْهَدْ ثَلَاثًا وَيْلَكُمْ أَوْ وَيْحَكُمْ انْظُرُوا لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ (صحيح البخاري 4051 -)

குறிப்பு 2)

و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ حَدَّثَنِي أَبِي عَنْ قَتَادَةَ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ الْغَطَفَانِيِّ عَنْ مَعْدَانَ بْنِ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيِّ عَنْ أَبِي الدَّرْدَاءِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حَفِظَ عَشْرَ آيَاتٍ مِنْ أَوَّلِ سُورَةِ الْكَهْف عُصِمَ مِنْ الدَّجَّالِ و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ ح و حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا هَمَّامٌ جَمِيعًا عَنْ قَتَادَةَ بِهَذَا الْإِسْنَادِ قَالَ شُعْبَةُ مِنْ آخِرِ الْكَهْفِ و قَالَ هَمَّامٌ مِنْ أَوَّلِ الْكَهْف كَمَا قَالَ هِشَامٌ (صحيح مسلم 1342 -)

குறிப்பு 3)

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنَا عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي الصَّلَاةِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنْ الْمَغْرَمِ فَقَالَ إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ وَعَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَعِيذُ فِي صَلَاتِهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ (صحيح البخاري 789 -)

குறிப்பு 4)

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ حَدَّثَنَا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ عَنْ صَيْفِيٍّ مَوْلَى أَفْلَحَ مَوْلَى أَبِي أَيُّوبَ عَنْ أَبِي الْيَسَرِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنْ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنْ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ أَخْبَرَنَا عِيسَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ حَدَّثَنِي مَوْلًى لِأَبِي أَيُّوبَ عَنْ أَبِي الْيَسَرِ زَادَ فِيهِ وَالْغَمِّ (سنن أبي داود 1328 -)

குறிப்பு 5)

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ عَنْ عَمْرِو بْنِ عَاصِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ مُرْنِي بِكَلِمَاتٍ أَقُولُهُنَّ إِذَا أَصْبَحْتُ وَإِذَا أَمْسَيْتُ قَالَ قُلْ اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَشَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ قَالَ قُلْهَا إِذَا أَصْبَحْتَ وَإِذَا أَمْسَيْتَ وَإِذَا أَخَذْتَ مَضْجَعَكَ (سنن أبي داود 4405 -)

குறிப்பு 6)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ اسْتَعْمَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنْ الْأَزْدِ يُقَالُ لَهُ ابْنُ الْأُتْبِيَّةِ عَلَى الصَّدَقَةِ فَلَمَّا قَدِمَ قَالَ هَذَا لَكُمْ وَهَذَا أُهْدِيَ لِي قَالَ فَهَلَّا جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ أَوْ بَيْتِ أُمِّهِ فَيَنْظُرَ يُهْدَى لَهُ أَمْ لَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَأْخُذُ أَحَدٌ مِنْهُ شَيْئًا إِلَّا جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ إِنْ كَانَ بَعِيرًا لَهُ رُغَاءٌ أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ أَوْ شَاةً تَيْعَرُ ثُمَّ رَفَعَ بِيَدِهِ حَتَّى رَأَيْنَا عُفْرَةَ إِبْطَيْهِ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ ثَلَاثًا (صحيح البخاري 2407 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/