HOME      Khutba      அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 6/9) | Tamil Bayan - 343   
 

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 6/9) | Tamil Bayan - 343

           

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 6/9) | Tamil Bayan - 343


அரஃபா பெருவெளியில் இறுதித்தூதரின் இறுதிப்பேருரை

ஜுமுஆ குத்பா தலைப்பு : அரஃபா பெருவெளியில் இறுதித்தூதரின் இறுதிப்பேருரை (பகுதி 6-9)

வரிசை : 343

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 05-12-2014 | 13-02-1436

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீதும் அந்த தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார், தோழர்கள் மீதும் மற்றும் நேர்வழியில் அவர்களை பின்பற்றியவர்களின் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக,

அல்லாஹ்வின் அச்சத்தை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும், வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் கடைபிடிக்குமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் தங்களது இறுதி ஹஜ்ஜில் அரஃபா மைதானத்திலும்,மற்றும் அய்யாமுல் தஷ்ரீக்குடைய காலங்களில் மினா மைதானத்திலும் தங்களது கண்ணியத்திற்குரிய தோழர்களை பார்த்து செய்த பேருரையின் நேர்வழிகளை தொடர்ந்து நாம் கேட்டு வருகிறோம். அதன் மூலம் பயன் பெற்று வருகிறோம்.

இன்றும் இன் ஷா அல்லாஹ், அல்லாஹ்வுடைய தூதர் அவர்களுடைய இறுதிப் பேருரையிலிருந்து நமக்கு பயன் தரக்கூடிய நல்ல அறிவுரைகளை கேட்டு பயன் பெறுவோமாக!

அல்லாஹ்வுடைய தூதர் உலக மக்களையெல்லாம் முன் வைத்தவர்களாக, தங்களது தோழர்கள் மட்டும் அங்கே இருந்தாலும்,மறுமை நாள் வரை வரக்கூடிய அந்த மக்களை தங்களது சிந்தனையில் வைத்தவர்களாக இந்த தூதுச் செய்தியை, இந்த அறிவுரையை கேட்கக் கூடிய மக்கள் இதன் படி வாழ்வதோடு இதை இவர்கள் அடுத்துள்ள சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

உலக மக்களுக்கெல்லாம் இவர்கள் ஒரு முன் உதாரணமாக திகழ வேண்டும் என்பதற்காக மிக ஆழமான, அழுத்தமான, அவசியமான அறிவுரைகளை சுருக்கமாக அல்லாஹ்வின் தூதர் தங்களது தோழர்களுக்கு முன் அங்கே வைக்கிறார்கள்.

தங்களது தோழர்களைப் பார்த்து يا أصحابىஎன்று ரஸூலுல்லாஹி அவர்கள் கூறி முடிக்கவில்லை. தங்களது அந்த உரையை சுருக்கமாக்கவில்லை. அதன் எல்லையை விரிவாக்கினார்கள். கிழக்கிலிருந்து மேற்கு வரை, வடக்கிலிருந்து தெற்கு வரை வாழக்கூடிய அத்தனை மக்களையும் முன்னோக்கி பேசுகின்ற ஒரு உலகளாவிய தூதர்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஒரு சமுதாயத்திற்கு மட்டும், ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டும், ஒரு குறிப்பிட்ட எல்லையில் வசிக்கக் கூடியவர்களுக்கு மட்டும் அவர்களை அனுப்பவில்லை.

يَاأَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا

மக்களே! நான் உங்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறும்படி கட்டளையிடுகின்றான். (அல்குர்ஆன் 7 : 158)

குறிப்பாக இந்த இறுதிப் பேருரையில், ஓ மக்களே! அறிந்து கொள்ளுங்கள், உங்களது இறைவன் ஒருவன் தான் என்று ஒரு பெரிய முன்னுரையை இங்கே கூறுகிறார்கள்.

அடுத்து வரக்கூடிய சமுதாயத்தின் ஒற்றுமை, சமுதாயத்தின் சீர்திருத்தம், சமுதாயத்தின் பரஸ்பர அன்பு, சமுதாயத்தின் ஒருங்கிணைந்த இனக்கம் இவை அனைத்திற்கும் ஒரு முன்னுரையாக அல்லாஹ்வுடைய தூதர் இரண்டு வாசகங்களை கூறுகிறார்கள்.

அதில் முதலாவது, நம்முடைய இறை நம்பிக்கையை முன் வைக்கிறார்கள். ஏனென்றால், எங்கே ஒழுக்கம் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு கொள்கையின் அடிப்படையில் உருவாகாதோ அங்கு அந்த ஒழுக்கம் நிலைத்து நிற்காது.

அந்த ஒழுக்கம், அந்த சீர்திருத்தம் எப்படியென்றால், மக்களுடைய பார்வையில் அவர்கள் பார்க்கும் பொழுது அங்கே காட்சி தரும். திரைக்கு பின்னால் சென்று விட்டால், அவர்கள் தனித்து விட்டால் அந்த ஒழுக்கங்களை எல்லாம் அவர்கள் காற்றில் பறக்கவிட்டு விடுவார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் நமக்கு, நமது சமுதாயத்திற்கு, கண்ணியத்திற்குரிய தோழர்களுக்கு கொடுத்த தர்பியா கொள்கையின் அடிப்படையில், ஈமானின் அடிப்படையில், அகீதாவின் அடிப்படையில், ஆழமாக உள்ளத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களின் அடிப்படையில் தர்பியா, தஸ்கியாவை கொடுத்தார்கள்.

ரஸூலுல்லாஹ் கூறுகிறார்கள் ;

إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ

உங்களை படைத்து, வளர்த்து, பரிபாலிக்கக் கூடிய, உங்களை கண்கானித்துக் கொண்டிருக்கக் கூடிய,உங்களின் அதிபதி, உங்களின் சொந்தக்காரன், உங்களின் உரிமையாளன், நீங்கள் வணங்க தகுதியானவன் அவன் ஒருவன் தான்.

இது, கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள் இருபத்தி மூன்று ஆண்டு காலமாக ரஸூலுல்லாஹ் அவர்களுடைய பேச்சிலிருந்து, குர்ஆனுடைய வசனங்களிலிருந்து கேட்ட ஒன்று.

இது தான் நம்பிக்கையின் அடிப்படை, ஈமானின் அஸ்திவாரம். அல்லாஹ்வுடைய தூதர் அடுத்து சொல்லக்கூடிய அந்த ஈமானிய சீர்திருத்தத்திற்கு, கூடிய ஒழுக்க மேன்பாட்டிற்கு இதை அடித்தளமாக கூறுகிறார்கள்.

ஏன்? ஒரு மனிதன் அடுத்து பின் வரக்கூடிய ஒழுக்கத்தில் குறை செய்கிறான். அதில் அந்த மனிதன் சறுகி விடுகிறான் என்றால் அவனுடைய இறை நம்பிக்கையில், அவனுடைய அகீதாவில் பாதிப்பு இருக்கிறது. ஒழுக்கம் குறைந்தவன் ஈமானில் மேம்பட்டவனாக ஆக முடியாது.

அல்லாஹ்வுடைய தூதர் இதை தான் மிகத் தெளிவாக அழுத்தமாக நமக்கு கூறுகிறார்கள்.

«أَكْمَلُ المُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا، وَخَيْرُكُمْ خَيْرُكُمْ لِنِسَائِهِمْ»

ஈமானில் முழு பெற்றவர் யார் என்றால், யார் அழகிய குணத்தை உடையவராக இருக்கிறாரோ, அவருடைய பேச்சில் அழகு, அவருடைய பார்வையில் அழகு, அவர் பழகுவதில் அழகு என்று எந்த ஒரு மனிதர் சிறந்த குணமுடையவராக இருக்கிறாரோ அவர் தான் ஈமானில் சிறந்தவராக ஆக முடியும்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1162.

வெறும் வணக்க வழிபாடுகளை கொண்டு,அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடிப்பதைக் கொண்டு மட்டும் ஈமான் உயர்ந்து விடாது, ஈமான் நிறைவடைந்து விடாது.

கண்டிப்பாக நற்குணங்கள் ஈமானோடு பின்னிப் பினைந்தவை. பிரிக்க முடியாமல் ஈமானோடு ஒன்றி விட்ட ஒன்று.

அதை தான் அல்லாஹ்வுடைய தூதர் அகீதாவின் அடிப்படையில் கூறகிறார்கள். அடுத்து கூறுகிறார்கள்,

وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ

உங்களின் தந்தையும் ஒருவர் தான். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா ஆதம் அலைஹிஸ்ஸலாம்அவர்களில் இருந்து தான் மனித சமுதாயத்தை முழுமையாக அல்லாஹ் படைத்திருக்கிறான். வேறு ஒரு தந்தை இல்லை, வேறு ஒருவரிலிருந்து உருவான சமுதாயம் அல்ல மனிதர்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் அகீதாவின் இந்த அடிப்படையை கூறி, வரலாற்றின் இந்த தொடக்கத்தை கூறி பிறகு சொல்லக் கூடிய சமுதாய ஒழுக்கத்தை கேளுங்கள்.

أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ

அறிந்து கொள்ளுங்கள்! (இந்த வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.)

ஒரு அரபி,அரபு இனத்தில் அரபி மொழி பேசக்கூடிய அந்த மக்களில் பிறந்துவிட்டார் என்ற காரணத்தால் அவருக்கு ஒரு அஜமியை விட -அரபி மொழி பேசாதவரை விட, அரபி மொழி அல்லாத வேறு ஒரு மொழியை கொண்ட ஒரு சமுதாயத்தவரை காட்டிலும் இந்த அரபியருக்கு ஒரு மேன்மை கிடையாது.

தனது பிறப்பை கொண்டு மட்டும், தன்னுடைய இனத்தை கொண்டு மட்டும் ஒருவன் பெருமையடிக்க முடியுமா?ஏற்றத்தாழ்வு காட்ட முடியுமா? என்றால் அறவே அப்படி ஏற்றத்தாழ்வு காட்டப்படாது. அதற்குரிய சாத்தியமே இந்த மார்க்கத்தில் இல்லை.

அப்படி காட்டினால் அவருடைய இறை நம்பிக்கையில் அங்கே பாதிக்கும், அவருடைய அகீதாவில் பாதிக்கும். காரணம்,உங்களுடைய இறைவன் ஒருவன் என்ற வார்த்தையிலிருந்து ரஸூலுல்லாஹ் .இந்த அறிவுரையை தொடங்குகிறார்கள்.

பிறகு கூறுகிறார்கள்,

وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ

ஒரு அஜமி-அரபியல்லாத ஒருவர் ஒரு அரபியை காட்டிலும் பெருமை அடிக்க முடியாது. தன்னை மேன்மையாக கருத முடியாது.

وَلَا أَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ

ஒரு சிவந்த மனிதர்கருப்பரின் மீது ஏற்றத்தாழ்வு காட்ட முடியாது.அதுபோன்று ஒரு கருப்பர் ஒரு செந்நிறமுடையவர் மீது ஏற்றத் தாழ்வு காட்ட முடியாது.

இஸ்லாமிய மார்க்கத்தில் பிறப்பால் எது அல்லாஹ்வின் விதிப்படி நடக்கிறதோ, உதாரணம், தாய் தந்தையை தேர்ந்தெடுப்பது, ஒரு மனிதனுடைய சுய விருப்பத்தில் இருக்கிறதா? அல்லாஹ்வின் விதியின் படி இருக்கிறதா? விதியில் இரண்டு விதமான விதியை அல்லாஹ் வைத்திருக்கிறான்.அதில் ஒன்று, தக்தீர் இஜ்பாரி.

அந்த தக்தீர் இஜ்பாரியில் மனிதன் தனது அறிவை, தனது சுய விருப்பத்தை செலுத்த முடியாது. எந்த இடத்தில் பிறப்பது? எந்த குடும்பத்தில் பிறப்பது? யார் வயிற்றில் தரிப்பது? என்ன மொழி பேசுபவர்களுக்கு மத்தியில் தரிப்பது? நம்முடைய கண், கை, கால், காது, உடல், உறுப்பு, மொழி, நம்முடைய நாடு இவையெல்லாம் அல்லாஹ் தேர்ந்தெடுக்கக் கூடியது.

இதில் மனிதனுக்கு என்று எந்த சுய விருப்பமும் இருக்காது. அந்த ஒரு தக்தீரை கொண்டு, மற்றவர்களின் மீது நீங்கள் பெருமை காட்டாதீர்கள். வெள்ளை நிறத்தால் பெருமை கிடையாது, மொழியால் பெருமை கிடையாது, இனத்தால் பெருமை கிடையாது.

அல்லாஹ்விடத்தில் உங்களுக்கு பெருமை,கண்ணியம்,சிறப்பு வேண்டும் என்றால், நீங்கள் உங்களுக்கு மத்தியிலும் சிறப்புள்ளவராக மதிக்கப்பட வேண்டும் என்றால் நபியவர்கள் கூறுகிறார்கள்;

إِلَّا بِالتَّقْوَى

அல்லாஹ்வுடைய பயம், அல்லாஹ்வை அஞ்சுவது, அல்லாஹ்வுடைய கடமைகளை செய்வது. (1)

அறிவிப்பாளர் : அபூ நள்ரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 23489.

தஃப்ஸீர்களின் தாய் என்று போற்றப்படக் கூடிய மூத்த மார்க்க அறிஞர் இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ்அவருடைய தஃப்ஸீரில் கூறுகிறார்கள் ;

தக்வா என்பதற்கு அவர்கள்விளக்கம் எழுதுகிறார்கள்;

தக்வா என்பது அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை நிறைவேற்றுவது. அல்லாஹ் தடுத்த ஹராமான விஷயங்களை விட்டு விலகிக் கொள்வது.

இது தான் தக்வா.தக்வாவை ஒரு குறிப்பிட்ட ஆடையில் கொண்டு வர முடியாது. தக்வாவை ஒரு குறிப்பிட்ட செயலில் கொண்டு வந்து நிறுத்தி விட முடியாது.தக்வாவை ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளில் கொண்டு வந்து நிறுத்தி விட முடியாது.

உமர் அல் பாரூக் ரழியல்லாஹுஅன்ஹுகஅப் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களிடத்தில் தக்வா என்றால் என்ன? இறையச்சம் என்றால் என்ன? என்று கேட்கிறார்கள்.

(இது தான் நபித் தோழர்களுடைய போக்கு. உமருடைய கண்ணியத்தை நினைத்து பாருங்கள், அவருடைய உயர்வை நினைத்து பாருங்கள். ஆனால், மார்க்க விஷயத்தில் தன்னை விட ஒருவரிடத்தில் அறிவு, ஞானம் இருக்கிறதென்றால் அவரிடத்தில் கேட்பதில் உமரின் கண்ணியமோ, உமரின் கிலாஃப்த் என்ற தகுதியோ உமரை தடுக்கவில்லை.

இன்று நம்மை போன்ற சாதாரணமான மக்கள் ஒரு தகுதிக்கு வந்து விட்டால், ஒரு பதவிக்கு வந்துவிட்டால் அவர்கள் மார்க்க விஷயங்களிலும் தங்களை நிறைவானவர்களாக கருதுகின்ற நிலையை பார்க்கிறோம். ஆலிம்களை சந்திக்கமாட்டார்கள், மார்க்க அறிஞரிடத்தில் கேட்கமாட்டார்கள்.

அவர்களுடைய அத்தனை காரியங்களுக்கும் அவர்களே தலைவர்களாக, அவர்களே முஃப்தியாக, அவர்களே காழியாக ஆகி விடுவார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!)

கஅப் ரழியல்லாஹுஅன்ஹுகூறுகிறார்கள், உமரே! முட்கள் நிறைந்த ஒரு பாதையில் நீங்கள் சென்றிருக்கிறீர்களா? ஆம் சென்றிருக்கிறேன். எப்படி செல்வீர்? ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து வைத்து எனது ஆடைகளெல்லாம் என்னோடு அப்படியே இறுக்கிக் கொண்டு, சுறுக்கிக் கொண்டு, அணைத்துக் கொண்டு நான் ஒவ்வொரு எட்டாக பார்த்து பார்த்து நடப்பேன்.

கஅப் கூறுகிறார்கள்;உமரே! இது தான் தக்வா. மார்க்கத்தில் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அல்லாஹ்வின் அனுமதி இருக்கிறதா? அல்லாஹ் கட்டளை இட்டிருக்கிறானா? அல்லாஹ் தடுத்திருந்தால் அதை விட்டு தூரம் விலகிவிடுங்கள். அல்லாஹ் தடை செய்திருக்கக் கூடிய, அல்லாஹ் பாவமாக்கி இருக்கக் கூடிய ஒரு காரியத்தில் அல்லாஹ் உங்களை பார்த்து விட வேண்டாம்.

அது இரவாக இருக்கட்டும், பகலாக இருக்கட்டும், தனிமையாக இருக்கட்டும், சபையாக இருக்கட்டும். அல்லாஹ் தடுத்த காரியத்தில் அல்லாஹ் உங்களை பார்த்து விட வேண்டாம்.

நூல் : தஃப்சீர் குர்துபி.

இதுதான் தக்வா.இந்த தக்வாவை கொண்டு தான் நமது இஸ்லாமிய சமுதாயம் கட்டமைக்கப்பட வேண்டும்.

இந்த தக்வாதான் ஏற்றத் தாழ்வினுடைய அடிப்படை. யாரிடத்தில் தக்வா அதிகமாக இருக்கிறதோ அவர்கள் தான் மக்களிலும் கண்ணியமானவர்கள், அல்லாஹ்விடத்திலும் கண்ணியமானவர்கள்.

தக்வா இல்லாமல் நிறத்தை கொண்டோ, மொழியைக் கொண்டோ அல்லது பொருளாதாரத்தைக் கொண்டோ அல்லது வெரும் பதிவியை கொண்டோ ஏற்றத் தாழ்வு காட்டப்படுமேயானால் அது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக்கு முரண்பட்டது. அல்லாஹ்வை ஒருவனாக ஏற்றுக் கொண்ட அந்த ஈமானுக்கு முரண்பட்டது.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்களுடைய ஆழமான எச்சரிக்கையை கேளுங்கள்.

«بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ»

தனது ஒரு முஸ்லிமான சகோதரனை மட்டமாக ஒருவன் பார்ப்பதே, பார்க்கின்ற அந்த மனிதனின் கெடுதிக்கு, தீமைக்கு போதுமானது. வேறொன்றும் தேவையில்லை ஒரு மனிதன் அழிந்து நாசமாவதற்கு, தீமையில் விழுவதற்கு.(2)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 32, 2564.

இன்னொரு சகோதரனை அவன் பார்க்கும் பொழுது,அவனுடைய படிப்பினால் அவனை மட்டமாக கருதினால் அல்லது அவருடைய அறியாமையினால் அல்லது அவருடைய தொழிலால் அல்லது அவனுடைய நிறத்தால் அல்லது அவர் பிறந்த ஊர், குலத்தால் அந்த மனிதனை ஒருவன் கேவலமாக, ஒரு மட்டமான பார்வையால் பார்த்தால் நபியவர்கள் கூறுகிறார்கள், இதுவே போதுமானது. இந்த மனிதனுடைய தீமைக்கு.

கண்ணியத்திற்குரியவர்களே! தக்வா இல்லாமல் மேன்மை கிடையாது. தக்வா இல்லாமல் ஏற்றத் தாழ்வு கிடையாது என்ற அடிப்படையை முன் வைத்த ரஸூலுல்லாஹி அவர்கள் இந்த விஷயத்தை இங்கு வந்தவர் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லட்டும் என்று கூறுகிறார்கள். (1)

அறிவிப்பாளர் : அபூ நள்ரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 23489.

இஸ்லாமிய சமுதாயம் உலக மக்களுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமான சமுதாயம், ஒரு வழிகாட்டியான சமுதாயம். இந்த சமுதாயம் ஏனைய மக்களுக்கு நேர்வழிகாட்டக் கூடிய அல்லாஹ்வுடைய குர்ஆனின் ஒளிச்சுடர் மிகுந்த சமுதாயம்.

மற்ற மதங்களில் அவர்கள் மக்களை மதிப்பதற்கு ஒரு அளவுகோல் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மக்களை உயர்வாக மதிப்பிடுவதற்கு அல்லது தரம் தாழ்த்துவதற்கு ஒரு மதிப்பீடு வைத்திருக்கிறார்கள்.

ஆனால், இஸ்லாமிய மார்க்கம் பிறப்பால், இனத்தால், மொழியால் அல்லது மக்கள் எதன் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு செய்கிறார்களோ அதற்கெல்லாம் அப்பாற்பட்டு, அதையெல்லாம் அடியோடு தகர்த்து இறைநம்பிக்கை, தக்வா, இறையச்சம் இந்த ஒன்று மட்டும் தான் மேன்மையை நிர்ணயிக்கக் கூடியது என்பதை போதிக்கிறது.

இதை மனிதன் தனது விருப்பத்தால், தனது சுய அதிகாரத்தால் தேர்ந்தெடுக்கக் கூடியது‍. இதை தான் ரஸூலுல்லாஹி முன் வைத்தார்களே தவிர,அல்லாஹ்வின் விதியின் படி எது நடக்கிறதோ, நிறமோ , மொழியோ, நாடோ, குலமோ அதை அல்லாஹ்வுடைய தூதர் ஏற்றத்தாழ்விற்கு அடிப்படையாக வைக்கவில்லை.

அதை அடிப்படையாக ஒரு சமுதாயம் ஏற்றத்தாழ்விற்கு அடிப்படையாக வைக்குமேயானால் அந்த சமுதாயத்தை விட கேடு கெட்ட சமுதாயம். அந்த சமுதாயத்தை விட ஒரு இழிவான சமுதாயம் வேறொன்றும் இருக்க முடியாது.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்களுடைய கூற்றை சூரத்துல் ஹுஜுராத்துடைய பதிமூன்றாவது வசனத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உறுதிப்படுத்துகிறான்;

يَاأَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.(அல்குர்ஆன் 49 : 13)

மதினாவில் இறக்கப்பட்ட சூராக்களில் ஒன்றுதான் சூரத்துல் ஹுஜுராத். பொதுவாக மதினாவில் இறக்கப்பட்ட சூராக்களை பார்த்தீர்கள் என்றால் يَاأَيُّهَا الَّذِينَ آمَنُواநம்பிக்கையாளர்களே! விசுவாசிகளே! என்று அழைக்கப்பட்டிருக்கும். ஆனால், அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அந்த சூராவிலும் இப்படி ஒரு வசனத்தை வைத்திருக்கிறான்.

காரணம் என்ன? அடுத்து சொல்லப்படக் கூடிய இந்த சட்டமென்பது ஈமான் கொண்டவர்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கெல்லாம் பொதுவான சட்டம்.

இஸ்லாம் இதை தான் போதிக்கிறது என்பதை உலக மக்களெல்லாம் செவிமடுக்க வேண்டும். இதை தான் அவர்களும் கொள்கையாக, நெறியாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக அல்லாஹ் அழைக்கின்ற அறிமுகம் தான் சகோதரர்களே! يَاأَيُّهَا النَّاسُமக்களே! நாம் தான் உங்களை படைத்திருக்கிறோம்.

இந்த இடத்தில் ஒரு ஆழமான, தெளிவான ஒன்றை விளங்க வேண்டும்.அல்லாஹ்வின் தூதர் அவர்களுடைய ஸஹீஹான ஹதீஸ்களில் எந்த ஒரு விஷயம் வந்திருக்கிறதோ, அது கண்டிப்பாக குர்ஆனில் நேரடியாக சொல்லப்பட்டிருக்கும் அல்லது குர்ஆனுடைய கருத்துகளில் கண்டிப்பாக அது புரியப்படக் கூடிய ஒன்றாக இருக்கும். அறிந்துக் கொள்ளக்கூடிய அறிஞர்களும் அதை அறிந்து கொள்வார்கள்.

யார் இந்த உண்மையை விளங்கவில்லையோ அவர்கள் தான் ரஸூலுல்லாஹி அவர்களுடைய ஹதீஸ்கள் ஸஹீஹானதாக இருந்தாலும் குர்ஆனுக்கு முரண்படும். குர்ஆனுக்கு எதிராகவும் இருக்கலாம் என்ற ஒரு நிலைபாட்டுக்கு வருவார்கள்.

ஆனால், ஒருகாலும் குர்ஆனுடைய வசனங்கள் எந்த ஒரு வசனத்திற்கும் முரண்பட்டதாகவோ, எதிரானதாகவோ, குர்ஆனின் வசனங்களை பொய்பிக்கக் கூடியதாகவோ, கண்டிப்பாக இருக்காது.

அல்லாஹ்வுடைய கூற்றைப் பாருங்கள்.

நாம் தான் உங்களை படைத்தோம். வேறு ஒரு இறைவன், வேறு ஒரு கடவுள், வேறு ஒரு தெய்வம் உங்களை சொந்தம் கொண்டாட முடியாது. அப்படி யாரை மக்கள் கடவுள்களாக அழைக்கிறார்களோஇது அவர்களுடைய வீணான கற்பனை.

إِنْ هِيَ إِلَّا أَسْمَاءٌ سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنْزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ

இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை.(அல்குர்ஆன் 53:23)

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலாவுடைய இந்த அற்புதமான படைப்பாகிய மனிதர்களை பற்றி, இப்படி முகத்தால், நிறத்தால், மொழியால், இடத்தால் வித்தியாசப்படுத்தி படைத்திருப்பதே இது இந்த உலகத்துடைய மிகப் பெரிய அல்லாஹ்வுடைய குத்ரத்துகளில் ஒன்று.

ஒரு தோட்டத்திற்குள் நீங்கள் செல்கிறீர்கள். அங்கே எல்லா மலர்களும் ஒரே மலராக இருக்குமேயானால் பார்ப்பதற்கு இன்பமாக இருக்குமா? அங்கே பல வித நிறங்களை உடைய, பல வித நறுமணங்களை உடைய பல பூக்கள் இருக்கும் பொழுது தான் அது பார்ப்பதற்கு, ரசிப்பதற்கு இன்பமான ஒரு தோட்டமாக மாறுகிறது.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அடையாளம் கண்டு கொள்வதற்கு தான் இந்த அடையாளங்கள். இந்த அடையாளத்தை பார்த்தால் இவர் ஒரு ஐரோப்பியர் அல்லது அரபியர் என்ற அடையாளத்திற்கு தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குலங்களை, சமூகத்தை, தேசங்களை பிரித்தானே தவிர ஏற்றத் தாழ்விற்காக அல்ல.

அல்லாஹ் கூறுகிறான் ;

إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ

(ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்.(அல்குர்ஆன் 49:13)

தக்வா என்றால் என்ன? அல்லாஹ்வுடைய கடமைகளை செய்வது, அல்லாஹ் தடுத்த பாவங்களிலிருந்து விலகிக் கொள்வது.

யார் இந்த தக்வாவுடைய நிலையில் இருக்கிறார்களோ, அவர்கள் தான் அல்லாஹ்விடத்தில் அதிகம் கண்ணியத்திற்குரியவர்கள்.

அல்லாஹ் கூறுகிறான்,

إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.(அல்குர்ஆன் 49 : 13)

நல்ல நிறமாக இருக்கும், பார்ப்பதற்கு அழகான முகமாக இருக்கும். ஆனால், அவனுடைய உள்ளமோ அசிங்கமாக இருக்கும். ஒரு மனிதனுடைய தோற்றம் பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். ஆனால், அவனுடைய குணமோ மோசமாக இருக்கும்.

ஒரு மனிதனுடைய நிறம் பார்ப்பதற்கு விகாரமாக இருக்கலாம், மக்கள் விரும்பாமல் இருக்கலாம். ஆனால், அவருடைய உள்ளமோ அல்லாஹ்விடத்தில் மிக மிக உயர்ந்ததாக இருக்கும்.

அவனுடைய உள்ளத்தால் அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய கண்ணியத்திற்குரியவனாக இருப்பான். இது தான் இஸ்லாமிய மார்க்கத்தினுடைய அளவுகோல்.

இஸ்லாம் மனிதர்களை நிறுக்கக் கூடிய தராசு, தக்வா தான் சகோதரர்களே!

அல்லாஹ்வுடைய தூதர் ஒரு நாள் மஸ்ஜிதுன் நபவியில் அமர்ந்திருந்தார்கள்.அப்பொழுது அங்கே வெளியே ஒரு மனிதர் சென்றார். அல்லாஹ்வின் தூதர் அவரைப் பார்த்தார்கள். தோழர்களும் அந்த மனிதரை பார்த்தார்கள்.

பிறகு ரஸூலுல்லாஹி தங்களது தோழர்களைப் பார்த்து கேட்டார்கள். இப்பொழுது சென்றாரே இந்த மனிதரைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? இந்த மனிதரைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்களுடைய கேள்விக்கு தோழர்கள் பதில் கூறுகிறார்கள். அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் எங்களிடத்தில் பெண் கேட்டு வந்தால் நாங்கள் இவருக்கு பெண் கொடுத்து விடுவோம். இந்த மனிதர் யாருக்காவது சிபாரிசு செய்து வந்தால் கண்டிப்பாக சிபாரிசை ஏற்றுக் கொள்வோம். இந்த மனிதரை நாங்கள் பெரியவராக மதிக்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் அமைதியாகி விட்டார்கள். அடுத்து ஒரு மனிதர் அந்த வழியாக கடந்து செல்கிறார். அல்லாஹ்வின் தூதர் இப்பொழுது கேட்கிறார்கள். இந்த மனிதரைப் பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? அல்லாஹ்வின் தூதரே! இவரைப் பற்றி எங்களுக்கு எந்த விதமான பொருட்டும் இல்லை, கவலையும் இல்லை. இவர் பெண் கேட்டு வந்தால் நாங்கள் பெண் கொடுக்க மாட்டோம். இவர் சிபாரிசு செய்தால் நாங்கள் அந்த சிபாரிசை ஏற்றுக் கொள்ளமாட்டோம். அதாவது, அவர் எங்களிடத்தில் மதிப்பற்ற ஒரு மனிதர்.

(கண்ணியத்திற்குரியவர்களே! வெளிரங்க ஆடை, உடையைக் கொண்டு, மனிதனின் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடக்கூடிய சாதாரணமான ஒரு எதார்த்தமான நிலையை உள்ள படி ஸஹாபாக்கள் அல்லாஹ்வுடைய தூதர் அவர்களிடத்தில் எதையும் மறைக்காமல் கூறிவிட்டார்கள். இது தான் ஒரு பொதுவான நிலை.

அல்லாஹ்வின் தூதர் அவர்களுடைய தர்பியாவிற்கு முன்பு அவர்களுடைய தஸ்கியாவிற்கு முன்பு அவர்களுடைய அறிவுரைக்கு முன்பு இருந்த ஒரு சாதாரண ஒரு மனிதனின் நிலையை ஸஹாபாக்கள் அங்கே பிரதிபளித்தார்கள்.

அடுத்து ரஸூலுல்லாஹி கூறினார்கள்;முன்னால் சென்றாரே ஒரு மனிதர் அந்த மனிதர் அவரை போன்று இந்த உலகமெல்லாம் நிரம்பி இருந்தாலும் இரண்டாவதாக சென்றாரே ஒரு மனிதர் அவரை போன்று இந்த உலகமெல்லாம் நிரம்பி இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் முதலாவது சென்ற நபர் தான் கண்ணியமானவர், அல்லாஹ்விடத்தில் இவர் தான் உயர்ந்தவர்.(3)

அறிவிப்பாளர் : சஹ்ல் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 5091.

அல்லாஹ்வுடைய தூதர் தோழர்களுக்கு தெளிவுபடுத்துகிறார்கள்.

«إِنَّ اللهَ لَا يَنْظُرُ إِلَى أَجْسَادِكُمْ، وَلَا إِلَى صُوَرِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ»

அல்லாஹு தஆலா உங்களுடைய முகத்தின் கவர்ச்சியை பார்க்கமாட்டான், உங்களுடைய முகத்தின் தோற்றத்தை அல்லாஹ் பார்க்கமாட்டான். உங்களுடைய செல்வங்களை அல்லாஹ் பார்க்கமாட்டான். மாறாக அல்லாஹ் உங்கள் உள்ளங்களைப் பார்க்கிறான்.(4)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2564.

மனிதன் ஒரு மனிதனை மதிப்பதற்கு அவர்கள் வைத்திருக்கக் கூடிய அளவுகோல், தோற்றம் அழகாக இருக்க வேண்டும், பணம் இருக்க வேண்டும் என்பதை அடியோடு அல்லாஹ்வுடைய தூதர் தகர்த்தெறிந்தார்கள்.

அல்லாஹ் தஆலா உங்களுடைய தோற்றத்தை பார்க்கமாட்டான். இந்த தோற்றம் எதற்கு?குணம் அழகாக இல்லையென்றால் என்ன செய்ய முடியும்? நம்முடைய இந்த அழகு ஈமானில் இல்லை என்றால் என்ன பயன் தரும்?கப்ரு குழியில் வைக்கப்பட்டால் இந்த அழகு ஏதாவது கப்ரின் வேதனையை தடுக்குமா ?

நம்முடைய உடல் ‌கட்டமைப்பு, நம்முடைய மொழி, இனம் இதெல்லாம் கப்ரில் ஒரு மனிதனை பாதுகாக்குமா? இதெல்லாம் நாளை மறுமையில் ஒரு மனிதனுக்கு சிபாரிசு செய்வதற்காக கூட வந்து நிற்குமா? நன்மையின் தட்டை கனமாக்குமா? அறவே கிடையாது.

பிலாலை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அல்லாஹு அக்பர்!எப்படிப்பட்ட கண்ணியத்தை அடைகிறார். இது தான் ஸஹாபாக்களுடைய மதிப்பாக இருந்தது.

ஒரு சமயம் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களுக்கு முன்னால் ஒரு கவிஞர் வருகிறார்.

பிலாலின் மீது இருந்த அந்த பிரியத்தால், ஸஹாபாக்களில் பலர் தங்களுடைய பிள்ளைகளுக்கு பிலால் என்று பெயர் வைத்திருந்தார்கள். அதற்கு முன்னால் அரபு கலாச்சாரத்தில் பிலால் என்ற பெயர் அறியப்பட்ட பெயராக இருக்கவில்லை.

(ஆனால், இன்று நமது சமுதாய முஸ்லிம்களுக்கு பிலால் என்ற பெயர் பலருக்கு இது ஒரு சாதாரண பெயராக, என்ன இது மஸ்ஜிதில் இருக்கக்கூடிய முஅத்தின்களுக்கு சொல்லப்படக் கூடிய பெயராயிற்றே!எங்களுக்கு ஒரு ஃபேன்ஸி பெயராக கொடுங்கள் என்பதாக கேட்கின்ற நிலையை பார்க்கிறோம்.)

அப்துல்லாஹ் இப்னு உமர் தங்களுடைய பிள்ளைக்கு பிலால் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

கவிஞர் ஒருவர் வந்தார், அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்களுடைய தந்தை கலீஃபாவாக இருக்கிறார்கள். இவரை ஏதாவது புகழ்ந்தால் இவருடைய குடும்பத்தை ஏதாவது புகழ்ந்தால் நமக்கு ஏதாவது கிடைக்குமே!சாதாரண கவிஞர்களின் வழமையை போல.

وَبِلَالُ عَبْدُ اللَّهِ خَيْرُ بِلَالِ

இப்னு உமருடைய பிலால் ஒரு சிறந்த பிலால் என்று ஒரு கவிதையின் தொடரில் அப்படியே சொல்லி விடுகிறார்.

«كَذَبْتَ ذَاكَ بِلَالُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு,நீ பொய் சொல்கிறாய்,ரஸூலுல்லாஹ்வுடைய பிலால் தான் பிலால் என்று பெயர் வைக்கப்பட்டவர்களிலேயே சிறந்த பிலால் என்று சொல்.

நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 5638.

அல்லாஹ்வின் தூதர் ஒரு நாள் மஸ்ஜிதுன் நபவியில் அமர்ந்திருந்தார்கள். இப்பொழுது சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் உங்கள் முன் தோன்றுவார் என்று கூறினார்கள்.

ஸஹாபாக்களுக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்,இப்படிபட்ட ஒரு நற்செய்திக்கு யார் தகுதியானவர் என்று. சாதாரண ஒரு மனிதர் அங்கே வருகிறார். உளூ செய்த அந்த நீர் அவருடைய முகத்திலிருந்து வடிந்துக் கொண்டிருக்கிறது. மஸ்ஜிதிற்கு அருகில் தனது காலணிகளை கலட்டினார். இடது கையில் அதை எடுத்தார்.மஸ்ஜிதின் ஓரத்தில் அதை வைத்தார்.

பிறகு இரண்டு ரக்அத் சாதாரணமாக தொழுதார். ஸலாம் சொல்லிவிட்டு சென்று விட்டார். இரண்டாவது நாள் அல்லாஹ்வுடைய தூதரும் ஸஹாபாக்களும் அங்கே அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதே வார்த்தையை கூறுகிறார்கள்.சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் இப்போது உங்கள் முன் தோன்றுவார் என்று.

நேற்று எந்த மனிதர் வந்தாரோ அதே நிலையில் அதே மனிதர் வருகிறார்.தொழுகிறார்,தொழுதுவிட்டு சென்று விடுகிறார்.

மூன்றாவது நாளும் இதே வார்த்தையை ரஸூலுல்லாஹ் கூறுகிறார்கள். அதே மனிதர் வருகிறார்.

எப்படிப்பட்ட நற்செய்தி பாருங்கள், எத்தகைய பாக்கியம் பாருங்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரழியல்லாஹுஅன்ஹுநன்மையில் தீவிரம் கொண்ட,நன்மையை அடைவதில் பேராசை கொண்ட ஸஹாபி. உடனேஅந்த மனிதரின் பின்னால் செல்கிறார்கள்.

எனக்கு வீட்டில் கொஞ்சம் பிரச்சனை, நான் உங்களோடு தங்கிக் கொள்ளட்டுமா? அந்த தோழர் கூறுகிறார்; தங்கிக் கொள் என்று. மூன்று நாள் தங்குகிறார். பெரிய ஒரு சிறப்பான அமல் எதையும் பார்க்கவில்லை.

நாளாவது நாள் இஷா தொழுகைக்கு பிறகு நான் இன்றைக்கு என்னுடைய வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறும்பொழுது, அந்த தோழர் கேட்கிறார்? என்ன உங்களுடைய பிரச்சனை சுமூகமாகி விட்டதா? தீர்ந்து விட்டதா? என்று.

எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அல்லாஹ்வுடைய தூதர் மூன்று நாளாக ஒரு நற்செய்தியை கூறினார்கள். மூன்று நாளும் அந்த நற்செய்திக்கு தகுதியானவராக நீங்கள் தான் வந்தீர்கள் என்று.

அப்படி என்ன ஒரு சிறப்பான அமல் உங்களிடத்தில் இருக்கிறது?என்பதை தெரிவதற்கு தான் உங்களிடத்தில் நான் தங்கினேனே தவிர வேறு ஒன்றுக்கும் அல்ல.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்களுடைய இந்த கூற்றை மெய்பிக்கும் விதமாக அந்த தோழருடைய பதிலை பாருங்கள்.

நண்பரே! அமல் என்னவோ நீங்கள் பார்த்தது தான்.ஆனால், நபியவர்கள் இப்படி ஒரு வார்த்தையை என் விஷயத்தில் கூறினார்கள் என்றால் என்னிடத்தில் இருக்கக் கூடிய நான் தொடர்ந்து கடைபிடித்து வருகின்ற ஒரு அமலை நான் கூறுகிறேன்.

நான் எனது உள்ளத்தில் எந்த ஒரு முஸ்லிமை பற்றியும் அறுவறுப்பை வைத்துக் கொள்வது கிடையாது. எந்த ஒரு முஸ்லிமை பற்றியும் தீமையை என் உள்ளத்தில் வைத்துக் கொள்வது கிடையாது. நான் இரவு தூங்குவதற்கு முன்பாக எனக்கு செய்யப்பட்ட அநியாயங்கள், அநீதிகள் எல்வாவற்றையும் முஸ்லிம்களின் விஷயத்தில் மன்னித்தவனாக, யார் மீதும் எந்த கோபமும், எந்த விதமான அழுக்கும் இல்லாதவனாக இரவு படுக்கைக்கு செல்கிறேன்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் கூறுகிறார்கள்; இப்படிப்பட்ட ஒரு சிறந்த உள்ளம், பெருந்தன்மையுடைய உள்ளம் இதை தான் அல்லாஹ் எதிர்பார்க்கிறான். இதற்கு தான் அல்லாஹ்வுடைய தூதர்கூறியிருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 12697.

ஆகவே, கண்ணியத்திற்குரிவர்களே! இது தான் நம்முடைய சமுதாயத்தின் அடிப்படையாக அடித்தளமாக இருக்க வேண்டும்.

ஈமான், இறையச்சம் இதை தான் நம்முடைய பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும். இது தான் நமது சமுதாயத்தில் பதவிகள் கொடுக்கப்படுவதற்கும், கண்ணியங்கள் மக்களுக்கு மத்தியில் செய்யப்படுவதற்கும், இந்த ஈமான் தக்வாவின் அடிப்படையில் தான். தக்வா உள்ளவர்கள் நம்மில் மேன்மையானவர்கள், அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் சரி .

படிப்பில் குறைவானவர்களாக இருந்தாலும் சரி, சமுதாய அந்தஸ்தில் குறைவானவர்களாக இருந்தாலும் சரி. தக்வாவிற்கு தான் நம்முடைய சமுதாயத்தில் முன்னுரிமை சகோதரர்களே! அந்த தக்வாவை நாமும் பெறுவதோடு, நம்முடைய பிள்ளைகளுக்கு, நம்முடைய சமுதாய மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

அல்லாஹ்வை பயப்படுவதை கொண்டு தான் அல்லாஹ்விடத்தில் கண்ணியத்தை அடைய முடியும். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏனைய மக்களை விட நமக்குஉயர்வை, கண்ணியத்தை, இந்த தக்வாவை கொண்டு தான் தருகிறான்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா என்னையும் உங்களையும் அவனைப் பயந்துக் கொள்ளக் கூடிய நன்மக்களில் ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، حَدَّثَنِي مَنْ سَمِعَ خُطْبَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَسَطِ أَيَّامِ التَّشْرِيقِ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ، أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا أَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ، إِلَّا بِالتَّقْوَى أَبَلَّغْتُ» ، قَالُوا: بَلَّغَ رَسُولُ اللَّهِ، ثُمَّ قَالَ: «أَيُّ يَوْمٍ هَذَا؟» ، قَالُوا: يَوْمٌ حَرَامٌ، ثُمَّ قَالَ: «أَيُّ شَهْرٍ هَذَا؟» ، قَالُوا: شَهْرٌ حَرَامٌ، قَالَ: ثُمَّ قَالَ: «أَيُّ بَلَدٍ هَذَا؟» ، قَالُوا بَلَدٌ حَرَامٌ، قَالَ: «فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ بَيْنَكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ» ـ قَالَ: وَلَا أَدْرِي قَالَ: أَوْ أَعْرَاضَكُمْ، أَمْ لَا ـ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا أَبَلَّغْتُ "، قَالُوا: بَلَّغَ رَسُولُ اللَّهِ، قَالَ: «لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ» (مسند أحمد- 23489)

குறிப்பு 2)

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا دَاوُدُ يَعْنِي ابْنَ قَيْسٍ، عَنْ أَبِي سَعِيدٍ، مَوْلَى عَامِرِ بْنِ كُرَيْزٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحَاسَدُوا، وَلَا تَنَاجَشُوا، وَلَا تَبَاغَضُوا، وَلَا تَدَابَرُوا، وَلَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ وَلَا يَخْذُلُهُ، وَلَا يَحْقِرُهُ التَّقْوَى هَاهُنَا» وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍ «بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ، كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ، دَمُهُ، وَمَالُهُ، وَعِرْضُهُ» (صحيح مسلم- 2564)

குறிப்பு 3)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ: مَرَّ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا تَقُولُونَ فِي هَذَا؟» قَالُوا: حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ يُسْتَمَعَ، قَالَ: ثُمَّ سَكَتَ، فَمَرَّ رَجُلٌ مِنْ فُقَرَاءِ المُسْلِمِينَ، فَقَالَ: «مَا تَقُولُونَ فِي هَذَا؟» قَالُوا: حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ لاَ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ لاَ يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ لاَ يُسْتَمَعَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا خَيْرٌ مِنْ مِلْءِ الأَرْضِ مِثْلَ هَذَا» (صحيح البخاري- 5091)

குறிப்பு 4)

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ أُسَامَةَ وَهُوَ ابْنُ زَيْدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ، مَوْلَى عَبْدِ اللهِ بْنِ عَامِرِ بْنِ كُرَيْزٍ يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَذَكَرَ نَحْوَ حَدِيثِ دَاوُدَ، وَزَادَ، وَنَقَصَ وَمِمَّا زَادَ فِيهِ «إِنَّ اللهَ لَا يَنْظُرُ إِلَى أَجْسَادِكُمْ، وَلَا إِلَى صُوَرِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ» وَأَشَارَ بِأَصَابِعِهِ إِلَى صَدْرِهِ (صحيح مسلم - 2564)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/