HOME      Khutba      அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 5/9) | Tamil Bayan - 343   
 

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 5/9) | Tamil Bayan - 343

           

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 5/9) | Tamil Bayan - 343


அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை

ஜுமுஆ குத்பா தலைப்பு : அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (பகுதி – 5-9)

வரிசை : 343

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 21-11-2014 | 28-01-1436

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியமிக்க அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்த பின் அல்லாஹ்வின் தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார்தோழர்கள் மீதும், நேர்வழியில் அவர்களைப் பின்பற்றிய நன்மக்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறிய பிறகு அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வை பயந்து வாழுமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறிவனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள், தங்களது இறுதி ஹஜ்ஜில் இறுதிப்பேருரையாக அரஃபா மைதானத்திலும் மினா பெருவெளியிலும் ஆற்றிய பேருரைகளிலிருந்து நாம் படிப்பினை பெற வேண்டிய பல விஷயங்களை தொடர்ந்து நாம் கேட்டு வருகிறோம். கேட்கின்ற விஷயங்களின் படி செயல்படுவதற்கு அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக!

அதன் தொடரில் இன்னும் பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். அரஃபா பெருவெளியில் அவர்கள் ஆற்றிய முக்கிய கட்டளைகளில் ஒன்று,அல்லாஹ்வின் வேதத்தையும் அல்லாஹ்வுடைய தூதர் சுன்னாவையும் அவர்களுடைய குடும்பத்தார்களையும் பேண வேண்டும் என்ற ஒரு முக்கியமான செய்தி ஆகும்.

ரஸூலுல்லாஹ் அவர்கள் கூறிய செய்தியை பல ஹதீஸ் நூல்களிலிருந்து நாம் பார்க்கிறோம். மிகத் தெளிவான அறிவுரையை நமக்கு கூறுகிறார்கள்.

தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கிறோம்.

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ (6) صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!(அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி.(உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல.(அல்குர்ஆன் 1 : 6,7)

என்று நாம் கேட்கின்ற அந்த பிரார்த்தனைக்கு அல்லாஹ்வுடைய தூதர் என்ன வழி?என்பதை இங்கே கூறுகிறார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1218.

அதுதான் அல்லாஹ்வின் வேதத்தைப் பற்றிப் பிடித்திருப்பது. முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் ஏற்படக்கூடிய எல்லா பிரச்சனைகளையும் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்த்துக் கொள்வது. அல்லாஹ்வின் வேதத்தை ஒவ்வொரு நாளும்,காலை மாலை,இரவு பகல் என்று எல்லா நேரத்திலும் ஓதிக் கொண்டிருப்பது.

அதன் கருத்துக்களை பொருளுணர்ந்து படித்து, அதை வாழ்க்கையில் செயல்படுத்தி, அதன் கருத்துக்களை மக்களுக்கு மத்தியில் பரப்பிக் கொண்டே இருப்பது. அந்த நேர்வழியின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டே இருப்பது.

இது தான் குர்ஆனை பற்றிப் பிடிப்பது, அல்லாஹ்வின் வேதத்தை பற்றிப் பிடிப்பது என்பதின் கருத்தாகும்.

இன்று பெரும்பாலான மக்களுடைய நிலை, அல்குர்ஆனுக்கு அழகிய உரை போட்டு, தங்களது அலமாரிகளில் உயரமான இடத்தில் வைத்துவிட்டு என்றைக்காவது ஒரு நாள் வியாழக் கிழமை அல்லது வெள்ளிக் கிழமை அல்லது ஏதாவது சடங்கு சம்பரதாயங்களுக்காக ஓதிவிட்டு அதை மூடி வைத்து விடுகிறார்கள். இது அல்குர்ஆனை அல்லாஹ்வின் வேதத்தை பற்றிப் பிடித்ததாககண்ணியப்படுத்தியதாக ஆகாது.

«وَقَدْ تَرَكْتُ فِيكُمْ مَا لَنْ تَضِلُّوا بَعْدَهُ إِنِ اعْتَصَمْتُمْ بِهِ»

அல்லாஹ்வின் வேதத்தை பற்றிப் பிடியுங்கள். நீங்கள் இதை பற்றிப் பிடித்தால் இதற்கு பிறகு ஒருகாலும் நீங்கள் வழிகெடவே முடியாது, வழிகேடு உங்களை நெருங்கவே முடியாது. அறவே வழிகெடமாட்டீர்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் மிக அழுத்தம் திருத்தமாக, மிகத் தெளிவாக உறுதியிட்டு கூறுகிறார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1218.

அல்லாஹ்வுடைய வேதம் ஓதப்பட வேண்டும். இன்று மக்களில் பலர்,வெறும் தமிழாக்கங்களைமொழியாக்கங்களை வைத்துக் கொண்டு இது தான் குர்ஆன் என்பதாக வாதாடிக் கொண்டிருக்கிறார்கள்.தமிழாக்கங்கள் அல்குர்ஆனுடைய எந்த ஒரு மொழி பெயர்ப்பும் அது குர்ஆனாக ஆகாது.

அல்குர்ஆனை அந்த ஆசிரியர், அந்த அறிஞர் எதை புரிந்து கொண்டாரோ அதிலிருந்து அதை மொழியாக்கம் செய்து கொடுக்கிறாரே தவிர, மொழி பெயர்க்கப்பட்டது இறை அல்லாஹ்வின் தூதர் அல் குர்ஆனை ஓதினார்கள், கண்ணியத்திற்குரிய தோழர்கள் ஓதினார்கள். அதை ஓதும்படி அல்லாஹ் கட்டளை இடுகிறான். இரண்டாவது விஷயம், அல் குர்ஆனின் அந்த அரபு திருவாசகங்களை ஓதுவதால் மட்டும் கடமை நீங்கிவிடாது.

அதோடு சேர்த்து நம்மால் முடிந்த அளவு அதனுடைய பொருளை, கருத்தை அது ஏன் இறக்கப்பட்டது? அந்த வசனத்தில் அல்லாஹ் என்ன கட்டளையை எனக்கு தருகிறான்? அந்த வசனத்தில் அல்லாஹ் எதிலிருந்து என்னை தடுக்கிறான்? மறுமையை பற்றி சொல்லப்படுகிறதா? உலக வாழ்க்கையைப் பற்றி சொல்லப்படுகிறதா?

என்ற செய்தியை முதலாவதாக அந்த அரபி மூலமொழியிலிருந்து புரிய முயற்சிக்க வேண்டும். முடிந்த அளவு அந்த மூல மொழியைக் கற்றுக் கொண்டு அதிலிருந்து புரிய முயற்சிக்க வேண்டும்.

இரண்டாவதாக, முடியாத பட்சத்தில் முடிந்த அளவு சரியான மொழிபெயர்ப்புகளைக் கொண்டு,அதனுடைய கருத்துக்களை,புரியாத சட்டத் தெளிவுகளை அதற்குரிய தகுதி பெற்ற மார்க்க அறிஞரிடமிருந்து,அதற்கென்று எழுதப்பட்ட ஆதாரப்பூர்வமான நூலிலிருந்து கற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

பிறகு, எதை நாம் அல் குர்ஆனிலிருந்து கற்றுக் கொண்டோமோ அதை வாழ்க்கையில் பின்பற்றுவது, அதை பிற மக்களுக்கு எடுத்துச் சொல்வது. அல்குர்ஆனின் கருத்துக்களை அதன்பொருள்களை மக்களுக்கு மத்தியில் சொல்லிக் கொண்டே இருப்பது.

இதுதான் அல்குர்ஆனை பேணுவது, அதை பற்றிப் பிடிப்பது, அல்லாஹ்வின் வேதத்தை வாழ்க்கையில் கடைபிடிப்பது என்பதற்குரிய பொருளாகும்.

அதை புனிதப்படுத்தி, அதை உயரத்தில் வைத்துவிட்டால் மட்டும் அல்குர்ஆனை கண்ணியப்படுத்தியதாகவோ, அதை பற்றிப்பிடித்ததாகவோ ஆகாது என்பதை முஸ்லிம் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த இடத்தில்,ரஸூலுல்லாஹி அவர்களின் மூலமாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் அல்லாஹ்வின் வேதம் என்று வந்திருக்கிறது. மற்றும் சில அறிவிப்புகளில் கூடுதல் விளக்கம் நமக்கு பதிவு செய்யப்படுகிறது.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் இறுதி ஹஜ்ஜில் கூறினார்கள்.

«فَاحْذَرُوا يَا أَيُّهَا النَّاسُ إِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمْ مَا إِنِ اعْتَصَمْتُمْ بِهِ فَلَنْ تَضِلُّوا أَبَدًا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

மக்களே! மிக உஷாராக இருந்து கொள்ளுங்கள், மிக கவனமாக இருந்து கொள்ளுங்கள்.நான் உங்களுக்கு விட்டு செல்கிறேன். எதை நீங்கள் பற்றிப் பிடித்தால் ஒருகாலும் வழிகெடவே மாட்டீர்களோ அப்படிப்பட்டதை நான் உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்.

இதற்கு பிறகு அல்லாஹ்வின் தூதர் இரண்டு விஷயங்களை கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹுபதிவு செய்கிறார்கள்.

1.             அல்லாஹ்வுடைய வேதம்.

2.             அவனுடைய நபியுடைய சுன்னத்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 318.

ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், அதாவது அல்குர்ஆன் என்று குறிப்பிடப்படும் பொழுது அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் மூலமாக இறக்கப்பட்ட தொழுகையில் ஓதப்படுகின்ற வஹியை மட்டும் குறிக்கும்.

كتاب الله-அல்லாஹ்வுடைய வேதம் என்றும், அல்லாஹ்வுடைய புத்தகம் என்றும் சொல்லப்படும் பொழுது அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஜிப்ரயீலின் வழியாக நபிக்கு இறக்கப்பட்டிருந்தாலும் சரி அல்லது ஓதப்படாத வஹீயின் மூலமாக நேரடியாக ரஸூலுல்லாஹி அவர்களுடைய கல்பில் இறக்கப்பட்ட செய்தியாக இருந்தாலும் சரி كتاب اللهஎன்ற வாசகம் இரண்டையும் எடுத்துக் கொள்ளும்.

இந்த ஒரு வாசகத்தை பொதுவாக பார்க்கும் பொழுது முந்திய ஹதீஸிற்கும் இந்த இரண்டாவது ஹதீஸிற்கும் இடையில் எந்த விதமான முரண்பாடும் கிடையாது.

இதை தான் இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ்தங்களது ஸஹீஹ் நூலில் கடைசி பாடமாக குர்ஆன், சுன்னாவை பற்றிப் பிடிப்பது என்ற ஒரு பகுதியை அமைத்து, ஹதீஸில் كتاب اللهஎன்று சொல்லப்பட்டால் அல்லது குர்ஆனில் வெரும் كتابஎன்று சொல்லப்பட்டால் அது ஹதீஸையும் உள்ளடக்கிக் கொள்ளும் என்பதை அதிகமான அறிவிப்பாளர்களை கொண்டு, அதிகமான செய்திகளை கொண்டு அதை உறுதிப்படுத்துகிறார்கள்.

அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் அறிவிக்கக் கூடிய ஹதீஸை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ்இந்த பாடத்தில் பதிவு செய்கிறார்கள்.

இரண்டு நபர்களுக்கு இடையில் ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனைக்கு தீர்வு தேடி ரஸூலுல்லாஹ்விடத்தில் வந்த பொழுது அல்லாஹ்வின் தூதர் அந்த இருவரையும் பார்த்து கூறினார்கள்:

«لَأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ»

உங்கள் இருவருக்கும் மத்தியில் அல்லாஹ்வுடைய கிதாபை கொண்டு நான் தீர்ப்பளிப்பேன் என்று கூறிய ரஸூலுல்லாஹி அதற்கு அடுத்ததாக குர்ஆனுடைய வசனத்தை அங்கே ஓதிகாட்டவில்லை. குர்ஆனிலிருந்து ஒரு சட்டத்தை எடுத்து அவர்கள் கூறவில்லை. மாறாக, அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த ஓதப்படாத வஹீயாகிய ஹதீஸிலிருந்து சட்டத்தை கூறி அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிக்கிறார்கள்.(1)

அறிவிப்பாளர் : அபூஹுரைராரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 2724.

இதிலிருந்து இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ்,كتاب اللهஎன்பது எப்படி அல்லாஹ் இறக்கிய குர்ஆனிற்கு சொல்லப்படுமோ அது போன்று ரஸூலுல்லாஹ் அவர்கள் கூறிய சட்டங்களுக்கும் كتاب اللهஎன்று சொல்லப்படும் என்பதை இங்கே நமக்கு விளக்கிக் காட்டுகிறார்கள்.

ஆகவே, ஒரு முஃமினுடைய நேர்வழி என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கப்பட்ட அந்த குர்ஆனை பற்றிப்பிடிப்பதை கொண்டும் அதற்கு பிறகு ரஸூலுல்லாஹி அவர்கள் என்ன வழிமுறையை சுன்னாவை நமக்கு விட்டுச் சென்றார்களோ அதை பற்றிப் பிடிப்பதை கொண்டும் தான் நம்முடைய நேர்வழி இருக்கிறது.

நாம் நேர்வழியில் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் இந்த இரண்டை விட்டு வெளியேறிவிடக் கூடாது.

அடுத்து இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ்அவர்கள் பதிவு செய்யக்கூடிய அறிவிப்பில் மேலும் ஒரு செய்தி நமக்கு அதிகமாக கிடைக்கிறது.

அதில் அல்லாஹ்வின் தூதர் தங்களது குடும்பத்தாரை பற்றி,தங்களது உறவினர்களில் நேர்வழி பெற்ற ஈமானை ஏற்றுக் கொண்ட அஹ்லுல் பைத் என்று சொல்லப்படக் கூடிய நபியின் நெருக்கமான உறவினர்களை குறித்தும்,நீங்கள் அவர்களுக்கு மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.அவர்களை நீங்கள் பேண வேண்டும். அவர்கள் விஷயத்தில் அவமரியாதையாகவோ, தரக்குறைவாகவோ நீங்கள் நடந்து கொள்ளக் கூடாது என்பதையும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் நமக்கு நேர்வழிக்காக கொடுத்த பாதுகாப்பு இந்த விஷயங்கள்.

அல்லாஹ்வின் வேதத்தை பற்றிப் பிடிப்பது, நபியின் சுன்னாவை பற்றிப்பிடிப்பது, நபியின் குடும்பத்தார்கள், நபியின் தோழர்களுக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதை. அவர்கள் விஷயத்தில் நாம் பேண வேண்டிய ஒழுக்கங்களை பேணுவது.

இது நம்மை நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்கிறது, வழிகேட்டிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

வழிகேடு என்பதை ஒரு சாதாரண விஷயமாக நீங்கள் நினைத்து விடாதீர்கள். இந்த வழிகேடு எப்படி என்றால், ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அதில் கீழிருந்து ஒரு ஓட்டை போடப்பட்டால் அந்த பாத்திரத்தில் உள்ள தண்ணீர் எல்லாம் எப்படி வெளியேறி அந்த பாத்திரம் காலியாகி விடுமோ அது போன்று தான் வழிகேடு என்பது.

அதை எந்த விதத்தில், எந்த வகையில், எந்த அளவில் ஒரு முஸ்லிமிடத்தில் வந்துவிட்டாலும் அவனுடைய அமல்களை பாழாக்கி, அவனுடைய ஈமானை பாழாக்கி, அவனுடைய நற்குணங்களை பாழாக்கி அவனை முற்றிலுமாக அழித்தொழித்து விடும்.

நரக நெருப்பில் தள்ளக்கூடிய ஒன்று தான் வழிகேடு என்பது. கொள்கையில் வழிகேடு வரலாம், செயல்களில் வழிகேடு வரலாம், அமல்களில் வழிகேடு வரலாம், நற்பண்புகளில் வழிகேடு வரலாம்.

இப்படி வழிகேடு என்பது பல விதமான வழிகேடு இருக்கிறது. இந்த எல்லா வழிகேடுகளுக்கும் மூல வழிகேடாகிய கொள்கையில் ஏற்படக் கூடிய வழிகேடு, அகீதாவில் ஈமானில் ஏற்படக்கூடிய வழிகேடு, அமல்களில் ஏற்படக்கூடிய வழிகேடு இருக்கின்றது.

இது ஏன் ஏற்படுகிறது? மனிதன் எப்பொழுது குர்ஆனை சுன்னாவை புறக்கணித்து விட்டு தனது விருப்பத்திற்கு ஏற்ப, தனது அறிவுக்கு ஏற்ப, தனது மன இச்சைக்கு ஏற்ப, தன்னுடைய புரிதலுக்கு ஏற்ப, தன்னுடைய சிந்தனைக்கு ஏற்ப மார்க்கத்தை அணுக ஆரம்பிக்கிறானோ, மார்க்கத்தில் தனது அறிவுக்கு ஏற்ப எப்பொழுது கருத்துகளை சொல்ல ஆரம்பிக்கிறானோ, தனது சிந்தனைக்கு ஏற்ப மார்க்கத்தில் எப்பொழுது சட்டங்களை சொல்ல ஆரம்பிக்கிறானோ அப்போது அவனும் வழிகெடுவான். அவனை பின்பற்றியவர்களையும் அவன் வழிகெடுத்தே தீருவான்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் கூறியதை பாருங்கள்.

«دَعُونِي مَا تَرَكْتُكُمْ، إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلاَفِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ، وَإِذَا [ص:95] أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ»

நான் உங்களுக்கு எதை கற்றுக் கொடுத்திருக்கிறேனோஅதோடு நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள்.என்னை விட்டு விடுங்கள். உங்களுக்கு முன்னால் சென்ற மக்கள் அழிந்து நாசமானதற்கு என்ன காரணம், தங்களுடைய நபிமார்களிடத்தில் அவர்கள் எதிர் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். தங்களுடைய நபிமார்களின் கருத்துகளுக்கு மாறுபட்டார்கள், முரண்பட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 7288.

ஒரு மனிதனுக்கு நபியின் வழி இது தான் என்று தெளிவாக சரியான தொடரைக் கொண்டு உறுதியாகி விட்டால் அதற்கு அடிபணிந்து விட வேண்டும், அதற்கு கட்டுப்பட்டு விட வேண்டும். நாங்கள் கேட்டோம், கட்டுப்பட்டோம், ஈமான் கொண்டோம் என்ற நிலைக்கு அவன் வந்துவிட வேண்டும்.

அதை விட்டுவிட்டு அவன் அந்த ஹதீஸின் மீது தனது அறிவைக் கொண்டு ஆட்சேபனை செய்வானேயானால், அந்த ஹதீஸிற்கு முரண்படுவானேயானால் அதை தான் அல்லாஹ்வுடைய தூதர் கூறுகிறார்கள், அது நபிமார்களிடத்தில் எதிர் கேள்வி கேட்பது ஆகும்.

ஒரு மனிதன்,ஒரு நபி உயிராக இருக்கும் பொழுது அந்த நபி சொல்லக்கூடிய சொற்களுக்குஎதிராக ஒருவன் பேசுவதும், அந்த நபியிடத்தில் அவர் சொன்ன கருத்துக்கு முரணாக பேசுவதும் ஒன்று தான்.

அந்த நபியின் மரணத்திற்கு பிறகு,அந்த நபி கூறியதாக நம்பத்தகுந்த நன்மக்கள் மூலமாக வரக்கூடிய செய்திகளில் அவன் ஆட்சேபனை செய்தால் அந்த செய்திகளுக்கு அவன் முரண்பட்ட கருத்துகளை சொன்னால் இதுவும் ஒன்று தான். ஒரு நபிக்கு முன்னால் நேரடியாக முரண்படுவதும் அவருடைய கருத்துகளை எதிர்ப்பதும் ஒன்று தான்.

அல்லாஹ்வின் தூதர் கூறுகிறார்கள்:

நான் உங்களுக்கு எதை கொடுத்தேனோ, எதை கற்பித்தேனோ அதோடு என்னை நீங்கள் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன்னால் சென்றவர்கள் அழிந்தார்கள்.காரணம், அவர்கள் தங்களது நபிமார்களிடத்தில் எதிர் கேள்வி கேட்டார்கள். தங்களது நபிமார்களுடைய கருத்துகளுக்கு அவர்கள் முரண்பட்டார்கள்.

அடுத்து அல்லாஹ்வுடைய தூதர் கூறினார்கள்:

நான் உங்களை ஒரு காரியத்திலிருந்து தடுத்து விட்டால் அதை விட்டு நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 7288.

காரணங்களை தேடாதீர்கள்.ஒருவேளை இதற்காக தடுத்திருப்பார்களோ?இதனால் தடுத்திருப்பார்களோ?அப்படி இல்லை என்றால் நாம் செய்யலாம் என்றெல்லாம் காரணங்களை தேடாதீர்கள்.

இன்று சில மக்கள் செய்வதை போன்று, அல்லாஹ்வின் தூதர் வட்டியை ஏன் தடுத்தார்கள் என்றால்,அது அந்த காலத்தில் ஏழைகளிடத்தில் வாங்கப்பட்டது. அதனால் தடுத்தார்கள். இன்று செல்வந்தர்களாகிய நாம் நமது வியாபாரத்தை பெருக்குவதற்காக, தொழிலுக்காக வாங்குகிறோம். எனவே, தவறு இல்லை என்று கூறுகிறார்கள்.

அந்த காலத்தில் வறுமைக்காக வட்டி வாங்கினார்கள். இந்த காலத்தில் வியாபாரத்திற்காக நாம் வாங்குகிறோம். இதன் மூலமாக பலர் இலாபம் அடைகிறார்கள். எனவே, இது தவறு இல்லை என்று பல வியாபாரிகள் பேசுவதை பார்க்கிறோம்.

அதுபோன்று, அந்த காலத்தில் வாழ்ந்த பன்றிகளெல்லாம் அசுத்தங்களை சாப்பிட்டன. எனவே, மார்க்கத்தில் தடுக்கப்பட்டது. நமது காலத்தில் வாழக்கூடிய பன்றிகள் நல்ல காய்கறிகளை சாப்பிடுகின்றன. எனவே, இந்த பன்றி மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல என்று முரண்பாடான அசிங்கமான கருத்துகளை பேசக்கூடிய மக்களை நாம் பார்க்கிறோம்.

இப்படி எந்த ஒரு விஷயத்தில் மார்க்கத்தில் ஒன்று தடுக்கப்பட்டதற்கு பிறகு அதில் அறிவைக் கொண்டு ஒருவன் பேசுவானேயானால் அவன் வழிகெட்டுவிடுவான். இதை தான் அல்லாஹ்வுடைய தூதர் மிகவும் குறிப்பிட்டு இங்கே கூறினார்கள்.

முடியாததை அல்லாஹ் மன்னிப்பான். ஆனால், இதை செய்யக்கூடாது என்று அல்லாஹ் தடுத்துவிட்டால் அதிலிருந்து கண்டிப்பாக விலகியே ஆக வேண்டும். அதில் முடிந்த அளவு முடியாத அளவு என்று பாகுபாடு கிடையாது.

ஸஹாபாக்களுடைய வாழ்க்கை வழிமுறையை பார்க்கிறோம். மார்க்கத்தில் சுன்னாவிற்கு கட்டுப்படுகின்ற விஷயத்தில்,அல்லாஹ்வின் தூதர் அவர்களுடைய ஹதீஸிற்கு கட்டுப்படுகின்ற விஷயத்தில் அவர்கள் கொண்டிருந்த பேணுதலை பாருங்கள்.

அல்லாஹ்வின் தீனில் தங்களது அறிவைக் கொண்டு பேசுவதை அவர்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.அதில் மிக எச்சரிக்கையாக இருந்தார்கள்.

சஹ்ல் இப்னு ஹுனைஃப் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் மூலமாக இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ்ஒரு செய்தியை பதிவு செய்கிறார்கள்.

சஹ்ல் இப்னு ஹுனைஃப் ரழியல்லாஹுஅன்ஹுமூத்த நபித் தோழர்களில் ஒருவர்,அவர்கள் கூறுகிறார்கள்.

يَا أَيُّهَا النَّاسُ اتَّهِمُوا رَأْيَكُمْ عَلَى دِينِكُمْ

மக்களே! உங்களது மார்க்க விஷயத்தில் உங்களது அறிவைக் கொண்டு பேசிவதில் நீங்கள் கவனமாக இருங்கள்.உங்களது அறிவை நீங்கள் சந்தேகப்பட்டுக் கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு ஹுனைஃப்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 7308.

குர்ஆனை சந்தேகப்படாதீர்கள், சுன்னாவை சந்தேகப்படாதீர்கள். சுன்னாவிற்கு எதிராக, உங்களது தீனிற்கு எதிராக உங்களது அறிவு பேசுமேயானால், உங்களது சிந்தனை உங்களை தூண்டுமேயானால், உங்களது கருத்து உங்களை தூண்டுமேயானால் உங்களது சிந்தனையை, உங்களது அறிவை, உங்களது கருத்தை நீங்கள் சந்தேகித்துக் கொள்ளுங்கள்.அல்லாஹ்வின் தீனை நீங்கள் சந்தேகிக்காதீர்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஹுதைபிய்யா உடன்படிக்கையில் அவர்கள் மக்களுக்கு கூறினார்கள்:

மக்களே! அல்லாஹ்வின் கட்டளை இப்பொழுது நாம் உம்ராவை முடிக்க வேண்டுமென்று.எனவே முடித்துக் கொள்வோம் என்பதாக கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதருடைய கட்டளை வந்த பிறகும் பல தோழர்கள் இப்படி யோசித்தார்கள்; ஏன் நாம் விட்டுக் கொடுக்க வேண்டும்? ஏன் நாம் பணிந்து செல்ல வேண்டும்? நாம் மரணத்திற்கு தயாராக இருக்கிறோமே!நமது மார்க்கம் உண்மையான மார்க்கமாயிற்றே!அவர்களுடைய மார்க்கம் பொய்யாயிற்றே!எதிர்த்து நாம் சண்டை இடலாமே! என்றெல்லாம் எண்ணினார்கள். அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார்த்தார்கள்.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் எதை அல்லாஹ்வின் கட்டளையாக கூறினார்களோ அதில் உறுதியாக இருந்தார்கள். அதற்கு பிறகு தான் கண்ணியமிக்க அந்த தோழர்களுக்கு புரிய வந்தது;இது நமது அறிவால் சொன்ன விஷயம். அல்லாஹ்வின் தூதருடைய கட்டளைக்கு அறிவைக் கொண்டு முரண்படக்கூடாது, நமது கருத்தைக் கொண்டு முரண்படக்கூடாது என்று அந்த அத்தனை தோழர்களும் ரஸூலுல்லாஹ் அவர்களுடைய சுன்னாவிற்கு, அவர்களுடைய கட்டளைக்கு கட்டுப்பட்டார்கள்.

ஸஅது இப்னு ஹுனைஃப் கூறுகிறார்கள்:

وَلَوْ أَسْتَطِيعُ أَنْ أَرُدَّ أَمْرَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ لَرَدَدْتُهُ

ஹுதைபிய்யாவின் அந்த உடன்படிக்கையில் ரஸூலுல்லாஹ்வுடைய கட்டளைக்கு எனது அறிவைக் கொண்டு நான் மாறு செய்ய நினைத்திருந்தால் மாறு செய்திருப்பேன். ஆனால், அல்லாஹ் என்னை பாதுகாத்தான்.நான் எனது நபிக்கு கட்டுப்பட்டதால் அல்லாஹ்வுடைய பாதுகாப்பிற்கு நாங்கள் வந்தோம்.

அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு ஹுனைஃப்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 7308.

அலீ ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் சொல்லக் கூடிய ஒரு முக்கியமான செய்தியை இமாம் அபூதாவுது ரஹிமஹுல்லாஹ்பதிவு செய்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள். நீங்கள் உங்களது கால்களுக்கு காலுறைகளை அணிந்து கொண்டால் உளூ செய்யக் கூடிய நேரத்தில் அந்த காலுறைகளை கழற்றி விட்டு அந்த கால்களை நீங்கள் கழுவ வேண்டிய அவசியம் இல்லை.அதற்கு மேலிருந்து நீங்கள் தடவிக் கொண்டால் போதுமானது. ஆனால், கீழே தடவ வேண்டிய அவசியம் இல்லை.

அலீ ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் கூறுகிறார்கள்;

لَوْ كَانَ الدِّينُ بِالرَّأْيِ لَكَانَ أَسْفَلُ الْخُفِّ أَوْلَى بِالْمَسْحِ مِنْ أَعْلَاهُ

மார்க்கம் அறிவைக் கொண்டு இருக்குமேயானால் நீங்கள் அணிந்த அந்த தோல் காலுறைகளின் மேல் தடவச் சொன்னதற்கு பதிலாக கீழே தான் தடவச் சொல்லிருக்க வேண்டும்.

ஏனென்றால், கீழ் புறம் தான் பூமியில் படுகிறது, நடக்கும் பொழுது அங்கும் இங்குமாக படுகிறது. மேல் புறம் எந்த விதமான அழுக்குகளுக்கோ அல்லது அசுத்தங்களுக்கோ ஆளாவது கிடையாது.

ஆனால், மார்க்கம் மேல் புறத்தை தடவுங்கள் என்று சொல்கிறது. அறிவைக் கொண்டு மார்க்கம் இருக்குமேயானால் கீழ் புறத்தை தடவுவது தான் சிறந்ததாக இருக்கும். எனவே, மார்க்கத்தில் நீங்கள் அறிவை புகுத்தி அதில் முரண்பாட்டை தேடாதீர்கள். (2)

அறிவிப்பாளர் : அலீரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 162, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் சொல்லக்கூடிய செய்தியை இமாம் பைஹகி ரஹிமஹுல்லாஹ்பதிவு செய்கிறார்கள்.

«اتَّقُوا الرَّأْيَ فِي دِينِكُمْ»

உங்களது மார்க்க விஷயத்தில் எனது அபிப்ராயம், எனது கருத்து, எனது சிந்தனை, இது என்னுடைய ஆய்வு என்று கூறுவதை நீங்கள் பயந்துக் கொள்ளுங்கள்.(3)

நூல் : அல்மத்ஹல் லில்பைஹகீ, எண் : 210.

காரணம், இது பெரிய வழிகேட்டில் கொண்டு போய் விட்டு விடும்.

இமாம் அஹமது இப்னு ஹம்பல் ரஹிமஹுல்லாஹ்கூறுகிறார்கள்;

« لا تكاد ترى أحدا نظر في الكلام إلا وفي قلبه دغل»

யார் ஒரு மனிதன் மார்க்கத்தில் தனது அறிவைக் கொண்டு பேசுகிறானோ, சுன்னாவை மறுக்கிறானோ, சுன்னாவில் முரண்பாடுகளை தேடுகிறானோ அவன் அவனுடைய உள்ளத்தில் கண்டிப்பாக நயவஞ்சகத்தின் அழுக்கு இருக்கின்ற காரணத்தினால் தான் அவன் சுன்னாவை அறிவைக் கொண்டு எதிர்க்கிறான்.நபி வழியில் அவன் தனது அறிவைக் கொண்டு, தனது சிந்தனையைக் கொண்டு முரண்பாட்டை தேடுகிறான்.

ஸஹாபாக்களுடைய பல விஷயங்களை நாம் பார்க்கின்றோம்.இந்த மார்க்கத்தில் அறிவைக் கொண்டு விளையாடுவது, சுன்னாவில் அறிவைக் கொண்டு முரண்பாட்டை தேடுவதை குறித்து எவ்வளவு கடுமையாக அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் பாருங்கள். இதை ரயீ -அறிவு என்று கூறுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்களும் எனது கருத்து, எனது அபிப்ராயம், எனது சிந்தனை, நான் புரிந்தது என்னவென்றால் இப்படி பேசுவதை எப்படி கண்டித்திருக்கிறார்கள் பாருங்கள்.

இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ்பதிவு செய்கிறார்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள்.

«إِنَّ اللَّهَ لاَ يَنْزِعُ العِلْمَ بَعْدَ أَنْ أَعْطَاكُمُوهُ انْتِزَاعًا، وَلَكِنْ يَنْتَزِعُهُ مِنْهُمْ مَعَ قَبْضِ العُلَمَاءِ بِعِلْمِهِمْ، فَيَبْقَى نَاسٌ جُهَّالٌ، يُسْتَفْتَوْنَ فَيُفْتُونَ بِرَأْيِهِمْ، فَيُضِلُّونَ وَيَضِلُّونَ»

அல்லாஹ் இல்மை உங்களுக்கு கொடுத்ததற்கு பிறகு அதை அப்படியே பிடுங்கி விட மாட்டான். மாறாக, அல்லாஹ் உங்களது இல்மை உங்களில் உள்ள இல்ம் உள்ளவர்களை அல்லாஹ் மரணிக்க வைப்பதை கொண்டு தான் இல்மை எடுத்துக் கொள்வான். அடுத்து கல்வி உள்ளவர்கள் இல்லாத பட்சத்தில் அறியாத முட்டாள்கள் ஜாஹில் மக்கள் தான் இருப்பார்கள்.

அவர்களிடத்தில் சென்று மார்க்க சட்டம் கேட்கப்படும், அவர்களிடத்தில் மார்க்க அபிப்ராயங்கள் கேட்கப்படும். தங்களது அறிவைக் கொண்டு அவர்கள் பதில் கூறுவார்கள். அவர்களும் வழிகெடுவார்கள், தங்களை நம்பி வந்த மக்களை அவர்கள் வழிகெடுப்பார்கள். (4)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : எண் : 7307.

இன்று பல பேச்சாளர்களை பார்க்கிறோம், பல அழைப்பாளர்களை பார்க்கிறோம். ஏதாவது ஒரு விஷயம் அவர்களிடத்தில் கேட்கப்பட்டால் எனக்கு தெரியாது என்று கூறுவது அவர்களுக்கு வெட்கமாக இருக்கிறது. ஏதாவது ஒரு பதிலை கூறுகிறார்கள். ஆதாரம் கேட்டால் இப்படி தான் இருக்க வேண்டும் வேறு எப்படி இருக்க முடியும் என்று கூறுகிறார்கள்.மார்க்கத்தில் தங்கள் அறிவைக் கொண்டு அவர்கள் விளையாடுவதை பாருங்கள்.

இந்த ஹதீஸின் தொடரில் உமர் ஃபாரூக் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் கூறுகிறார்கள்:

« أصبح أهل الرأي أعداء السنن أعيتهم أن يعوها وتفلتت منهم أن يرووها فاستبقوها بالرأي»

இந்த அறிவைக் கொண்டு பேசக்கூடியவர்கள் மார்க்கத்தின் சுன்னாவிற்கு எதிரிகளாக இருக்கிறார்கள். ஹதீஸ்களை கற்றுக் கொள்ள முடியாமல் போன காரணத்தால், ஹதீஸ்களை மனப்பாடம் செய்ய முடியாமல் போன காரணத்தால் தங்களது அறிவைக் கொண்டு அவர்கள் பேசுகிறார்கள்.

நூல் : இஃலாமுல் முவக்கியீன் இப்னுல் கய்யிம்

இப்னு வஹப் ரஹிமஹுல்லாஹ்அவர்கள் அறிவிக்கக்கூடிய அறிவிப்பில் உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களுடைய இந்த கூற்று இன்னும் சற்று விளக்கத்தோடு பதிவு செய்யப்படுகிறது.

«واستحيوا حين سئلوا أن يقولوا لا نعلم فعارضوا السنن برأيهم فإياكم وإياهم»

அவர்களிடத்தில் மார்க்க விஷயங்கள் கேட்கப்பட்டால் எங்களுக்கு தெரியாது என்று சொல்வது அவர்களுக்கு வெட்கமாக இருக்கிறது. அவர்கள் ஒரு கருத்தை சொல்கிறார்கள்.ஆனால், பின்னால் அது ஹதீஸிற்கு முரணாக தெரிகிறது என்று வந்தவுடனே தங்களது கருத்தை நியாயப்படுத்துவதற்காக, தங்களது சிந்தனையை நியாயப்படுத்துவதற்காக ஹதீஸை மறுக்கக் கூடிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

நான் உங்களை எச்சரிக்கை செய்கிறேன், அவர்களையும் எச்சரிக்கை செய்கிறேன் என்று உமர் அவர்களுடைய கூற்றை பார்க்கிறோம்.

நூல் : இஃலாமுல் முவக்கியீன் இப்னுல் கய்யிம்

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்:

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : " مَنْ أَحْدَثَ رَأْيًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ وَلَمْ تَمْضِ بِهِ سُنَّةٌ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَدْرِ عَلَى مَا هُوَ مِنْهُ إِذَا لَقِيَ اللَّهَ "

ஒரு மனிதன் மார்க்கத்தில் ஒரு கருத்தை கூறுகிறான். அல்லாஹ்வின் வேதத்திலும் அந்த கருத்து இல்லை, நபியின் சுன்னாவிலும் அந்த கருத்து இல்லை என்றால் நாளை மறுமையில் இவன் அல்லாஹ்வை சந்தித்து என்ன பதில் சொல்வான்?

யோசித்துப் பாருங்கள். அல்லாஹ்வுடைய தீன் இது, அல்லாஹ்வுடைய மார்க்கம் இது.அல்லாஹ்வுடைய வேதத்தில் இல்லாத ஒரு கருத்தை, நபியின் சுன்னாவில் இல்லாத ஒரு கருத்தை மார்க்கத்தில் தனது அபிப்ராயமாக ஒருவன் கூறுவானேயானால் அவன் அல்லாஹ்வை நாளை மறுமையில் சந்திக்கும் பொழுது என்ன பதில் சொல்வான் என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

இமாம் ஸஅது ரஹிமஹுல்லாஹ்கூறுகிறார்கள்:

«إنما هلكتم حين تركتم الآثار وأخذتم بالقياس»

உங்களுக்கு அழிவு எப்பொழுது வந்தது தெரியுமா? ஹதீஸ் ஓதிக்காட்டப்பட்டால், ஹதீஸ் அறிவிக்கப்பட்டால் அதை நீங்கள் விட்டு விட்டீர்கள். இவருடைய கருத்து, அவருடைய கருத்து என்று மக்களுடைய கியாஸ்களை, மற்றவர்களுடைய அனுமானங்களை நீங்கள் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தீர்கள். இது தான் உங்கள் அழிவிற்கு காரணம்.

நூல் : இஃலாமுல் முவக்கியீன் இப்னுல் கய்யிம்

இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ்கூறுகிறார்கள்:

وعن الحسن «إنما هلك من كان قبلكم حين شعبت بهم السبل وحادوا عن الطريق فتركوا الآثار وقالوا في الدين برأيهم فضلوا وأضلوا»

உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் எப்பொழுது வழிகெட்டார்கள். அவர்களுக்கு மத்தியில் பித்அத்துகள் தோன்றின, அனாச்சாரங்கள் தோன்றின, நேர்வழியை விட்டு அவர்கள் விலகினார்கள், சுன்னாக்களை அவர்கள் மறுத்தார்கள். மார்க்கத்தில் தங்களுடைய அபிப்ரயாத்திற்கு ஏற்ப அவர்கள் கருத்துக்களை கூறினார்கள். தாங்களும் வழிகெட்டார்கள், மற்றவர்களையும் வழிகெடுத்தார்கள்.

நூல் : இஃலாமுல் முவக்கியீன் இப்னுல் கய்யிம்

இப்படி நூற்றுக் கணக்கான எச்சரிக்கைகளை நாம் பார்க்கிறோம்.

அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு மனிதன் விலகிச் செல்லும் பொழுது அதில் தனது அறிவைக் கொண்டு முரண்பாட்டை தேடும் பொழுது அல்லது நபியுடைய ஸஹீஹான சுன்னாவில் எதை ரஸூலுல்லாஹி செய்தார்கள், சொன்னார்கள், அங்கீகரித்தார்கள் என்று ஸஹாபாக்களின் மூலமாக, அடுத்து நம்பத்தகுந்த அறிவிப்பாளர்களின் மூலமாக நமக்கு கிடைத்து விட்டதோ அதற்கு கட்டுப்படுவதே தவிர, அதற்கு கீழ்படுவதை தவிர, அதை ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதை தவிர ஒரு முஸ்லிமிற்குஒரு முஃமினுக்கு வேறு ஒரு நிலை இல்லை.

அந்த நிலையில் தனது அறிவைக் கொண்டு பேசுவானேயானால் அதை நிராகரித்தாலும் சரி அல்லது அதற்கு மாற்றுப் பொருள் கூறினாலும் சரி அல்லது இதெல்லாம் நமக்கு விளங்காது,ஒதுக்கி வைத்து விடுவோம் என்று கூறினாலும் சரி அல்லது இவையெல்லாம் நமது காலத்திற்கு பொருந்தாது என்று கூறினாலும் சரி,கண்டிப்பாக நேர்வழியில் இருந்தவன் விலகி விடுவான்.

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! நமது வாலிபர்களை பாதுகாப்பானாக! நமது சமுதாயத்தை பாதுகாப்பானாக! நேர்வழியின் பக்கம் அல்லாஹ் நம்மை ஒன்று சேர்ப்பானாக! அல்லாஹ்வின் வேதத்தையும், நபியின் சுன்னாவையும் பற்றிப் பிடிக்கக் கூடியவர்களாக நம்மை ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَزَيْدِ بْنِ خَالِدٍ الجُهَنِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُمَا قَالاَ: إِنَّ رَجُلًا مِنَ الأَعْرَابِ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنْشُدُكَ اللَّهَ إِلَّا قَضَيْتَ لِي بِكِتَابِ اللَّهِ، فَقَالَ الخَصْمُ الآخَرُ: وَهُوَ أَفْقَهُ مِنْهُ، نَعَمْ فَاقْضِ بَيْنَنَا بِكِتَابِ اللَّهِ، وَأْذَنْ لِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: قُلْ، قَالَ: إِنَّ ابْنِي كَانَ عَسِيفًا عَلَى هَذَا، فَزَنَى بِامْرَأَتِهِ، وَإِنِّي أُخْبِرْتُ أَنَّ عَلَى ابْنِي الرَّجْمَ، فَافْتَدَيْتُ مِنْهُ بِمِائَةِ شَاةٍ، وَوَلِيدَةٍ، فَسَأَلْتُ أَهْلَ العِلْمِ، فَأَخْبَرُونِي أَنَّمَا عَلَى ابْنِي جَلْدُ مِائَةٍ وَتَغْرِيبُ عَامٍ، وَأَنَّ عَلَى امْرَأَةِ هَذَا الرَّجْمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَأَقْضِيَنَّ بَيْنَكُمَا بِكِتَابِ اللَّهِ، الوَلِيدَةُ وَالغَنَمُ رَدٌّ، وَعَلَى ابْنِكَ جَلْدُ مِائَةٍ، وَتَغْرِيبُ عَامٍ، اغْدُ يَا أُنَيْسُ إِلَى امْرَأَةِ هَذَا، فَإِنِ اعْتَرَفَتْ فَارْجُمْهَا»، قَالَ: فَغَدَا عَلَيْهَا، فَاعْتَرَفَتْ، فَأَمَرَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرُجِمَتْ (صحيح البخاري 2724 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا حَفْصٌ يَعْنِي ابْنَ غِيَاثٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ خَيْرٍ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: لَوْ كَانَ الدِّينُ بِالرَّأْيِ لَكَانَ أَسْفَلُ الْخُفِّ أَوْلَى بِالْمَسْحِ مِنْ أَعْلَاهُ، وَقَدْ «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى ظَاهِرِ خُفَّيْهِ» (سنن أبي داود 162 -]حكم الألباني] : صحيح

குறிப்பு 3)

أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، ثنا أَبُو الْعَبَّاسِ، مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ , أبنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، أبنا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ: «يَا أَيُّهَا النَّاسُ , إِنَّ الرَّأْيَ إِنَّمَا كَانَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُصِيبًا , لِأَنَّ اللَّهَ جَلَّ وَعَزَّ كَانَ يُرِيهِ , إِنَّمَا هُوَ مِنَّا الظَّنُّ وَالتَّكَلُّفُ» . قَالَ: وأبنا ابْنُ وَهْبٍ قَالَ: وَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ , عَنِ ابْنِ [ص:190] عَجْلَانَ , عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ , أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «اتَّقُوا الرَّأْيَ فِي دِينِكُمْ» (المدخل إلى السنن الكبرى للبيهقي 210)

குறிப்பு 4)

حَدَّثَنَا سَعِيدُ بْنُ تَلِيدٍ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ شُرَيْحٍ، وَغَيْرُهُ عَنْ أَبِي الأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، قَالَ: حَجَّ عَلَيْنَا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو فَسَمِعْتُهُ يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ لاَ يَنْزِعُ العِلْمَ بَعْدَ أَنْ أَعْطَاكُمُوهُ انْتِزَاعًا، وَلَكِنْ يَنْتَزِعُهُ مِنْهُمْ مَعَ قَبْضِ العُلَمَاءِ بِعِلْمِهِمْ، فَيَبْقَى نَاسٌ جُهَّالٌ، يُسْتَفْتَوْنَ فَيُفْتُونَ بِرَأْيِهِمْ، فَيُضِلُّونَ وَيَضِلُّونَ»، فَحَدَّثْتُ بِهِ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو حَجَّ بَعْدُ فَقَالَتْ: يَا ابْنَ أُخْتِي انْطَلِقْ إِلَى عَبْدِ اللَّهِ فَاسْتَثْبِتْ لِي مِنْهُ الَّذِي حَدَّثْتَنِي عَنْهُ، فَجِئْتُهُ فَسَأَلْتُهُ فَحَدَّثَنِي بِهِ كَنَحْوِ مَا حَدَّثَنِي، فَأَتَيْتُ عَائِشَةَ فَأَخْبَرْتُهَا فَعَجِبَتْ فَقَالَتْ: وَاللَّهِ لَقَدْ حَفِظَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو (صحيح البخاري 7307)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/