HOME      Khutba      அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 4/9) | Tamil Bayan - 343   
 

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 4/9) | Tamil Bayan - 343

           

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 4/9) | Tamil Bayan - 343


அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை

ஜுமுஆ குத்பா தலைப்பு : அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 4/9)

வரிசை : 343

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 07-11-2014 | 14-01-1436

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கு அனுப்பிய அகிலத்தின் அருட்கொடையான அல்லாஹ்வின் படைப்புகளில் சிறந்தவராகிய முஹம்மது அவர்கள், தங்களது இறுதி ஹஜ்ஜில் கண்னியத்திற்குரிய தோழர்களுக்கு மத்தியில் தங்களது இருபத்திமூன்று ஆன்டு கால தவ்ஹீதுடைய பிரச்சாரத்தித்தின் சாராம்சமாக ஒரு அழகிய உரையை ஆற்றினார்கள்.

அந்த உரை பெரும்பாலும் அரஃபா மைதானத்தில் உரையாற்றப்பட்டது. அதிலிருந்து சில முக்கிய விஷயங்களை அல்லாஹ் உடைய தூதர் துல்ஹஜ்ஜுடைய பத்தாவது நாள் யவ்முன் நஹ்ரிலும் -(அறுத்துப்பலியிடும் நாள்) நினைவூட்டினார்கள்.

இந்த மொத்த உரைகளையும் ஹதீஸுகளையும் சேர்த்துத்தான் ரஸூலுல்லாஹ் அவர்களுடைய இறுதிப்பேருரை என்று சொல்லப்படும்.

இறுதிப்பேருரையின் தொடரை நாம் பார்த்து வந்தோம். அதில் சில விஷயங்கள் மீதமிருக்கின்றன. முடிந்த வரை அவற்றை நாம் இந்த அமர்வில் காண்போம்.

அல்லாஹ் உடைய தூதர் தங்களது இறுதிப்பேருரையின்போது கூறியதில் ஒன்று, ஜரீர் இப்னு அப்துல்லாஹ் அல்-பஜலியைப் பார்த்து கூறினார்கள்.

மக்களையெல்லாம் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள். பிறகு சொன்னார்கள்;

(இது மிகப்பெரிய ஒரு எச்சரிக்கை, குறிப்பாக இன்றைய காலத்தில் நம்மைப் பார்த்து அல்லாஹ் உடைய தூதர் அவர்கள் சொன்ன அறிவுரை போலவே இருந்தது.)

»لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ«

(மக்களே!) எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாய் மாறிவிடாதீர்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜரீர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 121, 1739, 4405.

அல்லாஹ் உடைய தூதர் அவர்கள் சொல்லிய கருணைமிக்க, பாசமிக்க, விட்டுக்கொடுக்கக்கூடிய மனப்பான்மை மிக்க இந்த நேரிய மார்க்கத்திலிருந்து திரும்பி விட வேண்டாம்.

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களுடைய இந்த மார்க்கம், மன்னிப்பு மற்றும் பெருந்தன்மையின் மீது அமைக்கப்பட்டது.

இஸ்லாத்திற்கு விரோதமாக இருந்த பெரும்பெரும் எதிரிகளைக் கூட அல்லாஹ்வின் தூதர் மன்னித்தார்கள். எங்கே மன்னிப்பு பயனளிக்காதோ, அவர்களைத் தவிர நபியின் அத்தனை எதிரிகளும் மன்னிக்கப்பட்டார்கள். மன்னிப்பு கேட்கப்பட்டவர்களும், சமரசத்திற்கு வந்தவர்களும் மன்னிக்கப்பட்டார்கள். எவ்வளவு தூரம் மன்னிப்பை கடைப்பிடிக்க முடியுமோ அவ்வளவு தூரம் மன்னைப்பை கடைபிடித்தார்கள்.

சிறந்த உதாரணத்தை வரலாற்றில் நாம் பார்ப்பதாக இருந்தால், ரஸூலுல்லாஹ் அவர்களுடைய மக்கா வெற்றியை நினைவுகூறுங்கள்.

அப்போதிருந்த மக்காவின் காஃபிர்கள்,நபிக்கு கடுமையாக பகைமை காட்டியவர்கள்; மக்காவில் பதிமூன்று ஆண்டு கால வாழ்க்கையில் கடும் துன்பங்களை கொடுத்தவர்கள்.

நபித்தோழர்களை கொன்றார்கள், அவர்களை நிம்மதியாக வாழவிடவில்லை, எதுவும் வேண்டாம் என மக்காவிலிருந்து நாடோடியாக ஹிஜ்ரத் செய்தால் கூட வெளியேர விடாமல் பயணத்திற்கு தடை, வழியில் கொல்ல முயற்சி, இப்படி பல தொந்தரவுகள்.

இந்த மக்களைத்தான் ரஸுலுல்லாஹ் ஹிஜ்ரி எட்டாம் ஆண்டில் வெற்றி கொண்டார்கள். இதே ஒரு வரலாற்று நிகழ்வு வேறு ஒரு ஆட்சியாளரால் நடந்தால், வெற்றிக் கொள்ளப்பட்ட மக்கள் கடும் துன்பங்களுக்கு ஆளாகியிருப்பார்கள்.

அல்லாஹ் உடைய தூதர் ஒரே வார்த்தை சொன்னார்கள், ஆறு அல்லது ஏழு நபர்களைத் தவிர,மற்றவர்கள் அனைவரையும் மன்னித்தார்கள், அவர்களை சிறை பிடிக்கவில்லை. விடுதலை செய்தார்கள்.(1)

மேலும் அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்;

»مَنْ دَخَلَ دَارَ أَبِي سُفْيَانَ فَهُوَ آمِنٌ، وَمَنْ أَلْقَى السِّلَاحَ فَهُوَ آمِنٌ، وَمَنْ أَغْلَقَ بَابهُ فَهُوَ آمِنٌ«

யார் தனது ஆயுதத்தை கீழே போட்டு விட்டாரோ அவர் மன்னிக்கப்பட்டார். யார் தனது வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாரோ அவரும் மன்னிக்கப்பட்டார். யார் மஸ்ஜிதுல் ஹரமிற்கு சென்றாரோ அவரும் மன்னிக்கப்பட்டார்.யார் அபூசுஃப்யானின் வீட்டிற்கு சென்றாரோ அவரும் மன்னிக்கப்பட்டார்என்று மன்னிப்பின் வாசலை அகலமாக திறந்து வைத்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1780.

இதுதான் இஸ்லாம்.மன்னிப்பின் மீதும், விட்டுக்கொடுப்பதின் மீதும், பெருந்தன்மையின் மீதும் அமைக்கப்பட்ட மார்க்கம்.

நபியவர்கள் சொன்னார்கள்;எனக்குப் பின்னால் நீங்கள் நேரிய வழிமுறையிலிருந்து திரும்பி விடாதீர்கள்.

நீங்கள் நீதத்தை, மன்னிப்பதை விட்டுவிட்டால் அது உங்களை இறை நிராகரிப்பில் சேர்த்துவிடும். பிறகு, உங்களில் ஒருவர் மற்றொருவரின் கழுத்தை வெட்டுவார், மற்றொருவரை கொல்வதை நியாயப்படுத்துவார். அதை ஆகுமாக்கிக் கொள்வார்.அதில் விருப்பம் கொள்வார்.

அல்லாஹ் பாதுகாப்பானாக! இன்று இஸ்லாமிய உலகில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

ரஸூலுல்லாஹ் அவர்களின் இந்த செய்தி எவ்வளவு அச்சுறுத்தக்கூடிய செய்தி. இன்றைய கால முஸ்லிம்கள் படிப்பினை பெற வேண்டிய செய்தி. கூட்டங்களாக, குழுக்களாக, இயக்கங்களாக பிரிந்தார்கள்.

அவர்களுக்கு மத்தியில் எப்போது ஒரு கூட்டத்திற்கு ஆயுதம் கிடைக்குமோ அப்போது இன்னொரு கூட்டத்தை கொலை செய்வதையே குறிக்கோளாக, ஜிஹாதின் ஒரு முக்கிய பங்காக ஆக்கிக் கொள்வார்கள்.

அல்லாஹ் உடைய தூதர் அவர்களின் இந்த மார்க்கத்தில் ஒரு முஃமினை, கலிமா சொன்னவரை, உங்களுக்கு ஸலாம் சொன்னவரது உயிரை இன்னும் அவரதுசெல்வத்தை பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாக இருக்கிறது.

ரஸூலுல்லாஹ் அவர்களின் மற்றொரு ஹதீஸ்,

»سِبَابُ المُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ«

ஒரு முஸ்லிமை ஏசுவது பெரும்பாவம். அவனை கொலை செய்வது இறைநிராகரிப்பாகும்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 48.

ஒரு முஸ்லிமை கேவலப்படுத்தி பேசுவது, அவருக்கு துக்கத்தை, அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய புனைப்பெயர்களைக் கொண்டு குறிப்பிடுவது.

இப்படி ஒரு மார்க்கத்தை நாம் பார்க்க முடியுமா? ஏசுவதைக் குறித்து கூட அது அல்லாஹுவுக்கு செய்யக்கூடிய மாறுபாடு, அல்லாஹுவுக்கு கட்டுப்படுவதிலிருந்து வெளியேறும் ஒரு பாவமாகும் என்று மார்க்கம் நமக்கு கூறுகின்றது.

فسوق-ஃபுஸூக்என்றால் அல்லாஹுவுக்கு கீழ்ப்படிவதிருந்து வெளியேறுவது.

அடுத்து ஒரு முஃமினிடத்தில் ஆயுதமேந்தி சண்டைக்கு செல்வது இறை நிராகரிப்பாகும்.

சிலர் சொல்வார்கள்; இஸ்லாத்திற்காக நாங்கள் வாளெடுக்கிறோம்என்று.எந்த இஸ்லாத்திற்காக வாளெடுக்கிறோம் என்று சொல்கிறார்களோ, அந்த வாளாளேயே இஸ்லாத்தை விட்டு அவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

எந்த காரணத்திற்காக வாளெடுக்கிறோம் என்று சொல்கிறார்களோ, அந்த காரணத்தினாலேயே அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு முஸ்லிமை ஏசுவது மார்க்கத்தை விட்டு வெளியேறுவதாகும்.அல்லாஹுவுக்கு கீழ்ப்படிவதிலிருந்து வெளியேறுவதாகும், ஒரு முஸ்லிமிடத்தில் சண்டை செய்வது இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதாகும்.

மார்க்க அறிஞர்கள் சொல்கிறார்கள்;குஃப்ரின் படித்தரங்கள் இருக்கின்றன.அதில் இதுவும் ஒருவகையான குஃப்ர். இந்த குஃப்ரில் ஒருவர் நீடித்துக் கொண்டே செல்லும்போது அதுவே அல்லாஹுவை நிராகரிக்கக்கூடிய பெரிய இறை நிராகரிப்பாக வழி வகுத்துவிடும்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் முஃமின்களின் இரத்தம், உயிர் விஷயத்தில் அக்கறை கொண்டு சொன்ன ஒரு எச்சரிக்கையைப் பார்ப்போம்.

«أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ بِالدِّمَاءِ»

நாளை மறுமையில் மனிதர்களும் ஜின்களுயும் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும் அந்த நாளில் முதல் தீர்ப்பு எங்கிருந்து ஆரம்பம் ஆகுமென்றால், அது உயிர்களின் விஷயத்தில்தான்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6533.

யார் ஒருவன் இன்னொரு ஆன்மாவிற்கு என்ன தீங்கு செய்தான்?என்னென்ன பிரச்சினை ஏற்படுத்தினான்? என்பது குறித்துதான் முதலாவதாக அல்லாஹ் தீர்ப்பை ஆரம்பிப்பான்.

அல்லாஹ் உடைய தீனின் மகத்துவத்தைப் பாருங்கள், அல்லாஹ் உடைய வணக்க வழிபாடுகள் எத்தனையோ இருக்க, அல்லாஹ் உடைய அடியார்கள் யாராக இருந்தாலும், அது முஸ்லிமாக அல்லது முஸ்லிமல்லாதவராக இருக்கட்டும், இந்த உலக வாழ்க்கையில் மனிதர்கள் நிம்மதியாக, கண்ணியமாக, பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பது அல்லாஹ் உடைய மார்க்கத்தின் அடிப்படை சட்டமாகும்.

ஆகவேதான் இஸ்லாமிய ஆட்சி நடக்கக்கூடிய நாட்டில் முஸ்லிமல்லாத ஒருவரின் உயிருக்குஅல்லாஹ் உடைய தூதர் எப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பை தந்தார்களென்றால்,

«مَنْ قَتَلَ مُعَاهَدًا لَمْ يَرِحْ رَائِحَةَ الجَنَّةِ، وَإِنَّ رِيحَهَا تُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا»

யார் இஸ்லாமிய ஆட்சியில் வாழக்கூடிய ஒரு முஸ்லிமல்லாதவரை கொலை செய்வானோ அவன் நாளை சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர முடியாது. அதன் வாடையோ நாற்பதாண்டு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3166.

இத்தகைய பாதுகாப்பை இஸ்லாமிய மார்க்கம் ஒரு உயிருக்கு தருகின்றது. அவ்வாறு கொலை செய்யக்கூடிய ஒரு முஸ்லிம், அவன் ஒரு வணக்கசாலியாக இருந்தாலும், கஃபதுல்லாஹ்வில் நின்று வணங்கக்கூடியவனாக இருந்தாலும் சரி.

இதைவிட உயிர்பொருள் பாதுகாப்பிற்கு, கண்ணியத்திற்கு உறுதி செய்யக்கூடிய ஒரு மாரக்கம் இஸ்லாத்தைத் தவிர வேறு மார்க்கம் இருக்க முடியாது.

மறுமையோடு சம்மந்தப்படுத்துகிறார்கள். இங்கு தவறு செய்தால் அதற்குரிய தண்டனை மறுமையில் கிடைக்கும். நபியின் தோழர்கள் உயிர்கள் பாதுகாப்பதில் அதிகம் கவனமாக இருந்தார்கள்.

பத்ருடைய போரில் கைதிகள் கொல்லப்பட வேண்டாம் என்பது நபியின் விருப்பமாக இருந்தது.அபூபக்ர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களின் விருப்பமாக இருந்தது.

எத்தனையோ சந்தர்ப்பங்களில் உண்மையான கொலை குற்றத்திற்கு தண்டனை கொலையாகும், அப்படிப்பட்ட தருனங்களில் கூட உமர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் கேட்கிறார்கள், காலித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்கிறார்கள்;

அல்லாஹ்வின் தூதரே!இவனை ஏன் நாம் மன்னிக்க வேன்டும்?இவனது கழுத்தை வெட்டுவதற்குஅனுமதி கொடுங்கள் என்று கேட்டார்கள்.

அப்போதும் ரஸூலுல்லாஹ் அவர்கள் மரண தண்டனை தரவில்லை. நபியை ஏசினார்கள், குறை கூறினார்கள், நபியின் சட்டத்தை எதிர்த்தார்கள். ஆனால் கலிமா சொன்ன ஒரே காரணத்திற்காக நபியவர்கள் விட்டுவிடுங்கள் என கூறினார்கள்.

இப்படிப்பட்ட மன்னிப்புடைய மார்க்கம் தான் இஸ்லாம்.

ஒரு உயிரை கொல்வதாக இருந்தால் அதில் அவ்வளவு பேணுதல் தேவைப்படுகிறது. ஆதாரங்கள், சாட்சிகள், பல கட்ட விசாரனைகள், ஆலோசனைகள் என நீண்ட வழிமுறைகள் தேவைப்படுகிறது.

ஆனால் இன்று ஆயுதமேந்திய குழுக்கள்,ஜிஹாது என்ற பெயரில் வகுப்புச் சண்டை செய்யக்கூடியவர்கள்,சட்டத்தை தங்களது கைகளில் எடுத்துக் கொண்டு தங்களது குழுக்களுக்கு ஆதரவு தெரிவிக்காதவர்களை, தங்களுக்கு எதிரானவர்களை கைதிகளாக பிடித்துக் கொல்கிறார்கள் என்றால் கண்டிப்பாக இவர்களுக்கும் மார்க்கத்திற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்பதை அறிய வேண்டும்.

மற்றொரு ஹதீஸில், அல்லாஹ் உடைய தூதர் கேட்கிறார்கள்;பரம ஏழை யார் என்று உங்களுக்கு தெரியுமா? என்று. அல்லாஹ்வின் தூதரே!யாரிடத்தில் ஒரு நயா பைசா இல்லையோ அவர்தான் பரம ஏழைஎன தோழர்கள் தெரிவித்தனர்.

அல்லாஹ்வின் தூதர் இங்கு ஒரு தனி அகராதியே கற்பித்தார்கள். என்னுடைய உம்மத்தில் முஃப்லிஸ்-பரம ஏழை யார் என்றால், மறுமை நாளில் ஒருவன் வருவான், அவனிடத்தில் தொழுகை இருக்கும், நோன்பு இருக்கும், ஜகாத் கொடுத்திருப்பான், ஆனால் யாரையாவது ஏசியிருப்பான், யாராவது ஒருவர் மீது பழி, அவதூறு சுமத்தியிருப்பான், இன்னொருவரது செல்வத்தை அவரது அனுமதியில்லாமல் அனுபவித்திருப்பான், ஒருவரை கொன்று விட்டான், ஒருவனை அடித்துவிட்டான். (2)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2581.

இங்கு நாம் ஒரு சில விஷயங்களை கவணிக்க வேன்டும். நம்மில் சிலர் வெளியில் வரும்போது யாருடைய செருப்பையாவது சிறிது நேரத்திற்கு அனுமதியில்லாமல் அணிந்து செல்வார்கள், குளியலரையில் சென்றால் வேறொருவரது பொருளை அது அந்த பொருளின் உரிமையாளர் ஏற்றுக் கொள்வார் என்று இருக்கும் பட்சத்தில் தவிர, மற்ற வேளையில் பயன்படுத்துவார்கள்.

இது தடுக்கப்பட்ட ஒன்றாகும். அல்லாஹ் ஒரு பட்டியலை சொல்கிறான்.அவர்களை தவிர, மற்றவர்கள், அறிமுகமில்லாதவர்களது பொருளை அவர்களது அனுமதி பெற்ற பிறகுதான் பயன்படுத்த வேண்டும். இந்த விஷயமும் இந்த ஹதீஸில் அடங்கும்.

இந்த ஹதீஸில்,அடிப்பதை கூட அல்லாஹ் உடைய தூதர் தடுத்திருக்கிறார்கள்.

உங்களிடத்தில் வேலை செய்யக்கூடிய அடிமையாக இருந்தலும் சரி, அடிக்காதீர்கள்என சொன்னார்கள். அடிப்பதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதியில்லை.

நபியின் நெருக்கமான தோழர் தனது அடிமையை அடித்து விட்டார். அல்லாஹ்வின் தூதர் அவரைப் பார்த்து,நீங்கள் மறுமையில் என்ன சொல்லப் போகிறீர்கள்? என திரும்பத் திரும்ப கேட்டார்கள்.

இதைக் கேட்ட அந்த தோழர், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹுக்காக நான் இவரை விடுதலை செய்கிறேன்என்று கூறினார். (3)

அறிவிப்பாளர் : அபூ மஸ்ஊத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1659.

அவதூறு என்பதையும் இந்த சமுதாயத்தில் கவனத்தோடு அனுக வேண்டிய விஷயம், சிந்தனையில் வந்தபடி, யாருடைய பேச்சையாவது கேட்டு பிறர் மீது குறை சொல்வது. இன்று மக்களுக்கு மத்தியில் சாதாரணமாக ஆகிவிட்டது.

இதை மேடை போட்டு சர்வ சாதாரணமாக, ஒருவரது தனிப்பட்ட விஷயங்களில் கூட பிறரை கலங்கப்படுத்துவது இலேசாகிவிட்டது.

அல்லாஹுடைய தூதர் பிறருடைய குறைகளை மறையுங்கள் என சொல்லியுள்ளார்கள்.ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் கேவலப்படுத்தினால், கேவலப்படுத்தியவனை அல்லாஹ் கேவலப்படுத்துவான், அவன் தனது வீட்டிற்க்குள் இருந்தாலும் சரி. (4)

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2032.

ஆகவே அல்லாஹ்வின் இந்த மார்க்கத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ரஸூலுல்லாஹ் மறுமையில் ஒருவனை முஃப்லிஸ் என்று ஏன் சொல்கிறார்கள்?யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்களோ, அது ஒரு சின்ன வார்த்தையாக இருந்தாலும் சரி, அதை திட்டியவரும் திட்டப்பட்டவரும் மறந்திருப்பார்.

ஆனால் அல்லாஹ் மறக்க மாட்டான். அல்லாஹ் மறக்கக்கூடியவனல்ல, அவன் நீதமானவன், அவன் நீதத்தை விரும்பக்கூடியவன், அவன் ஏட்டை விரித்துவிடுவான். திட்டப்பட்ட மனிதரை அழைத்து வருவான், நீ இவனால் பாதிக்கப்பட்டிருக்கிறாய், இவன் மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பான்.

திட்டியவரின் நன்மையை எடுத்து பாதிக்கப்பட்டவரது நன்மையில் சேர்க்கப்படும். இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவரின் நன்மையிலிருந்து எடுத்து கொடுத்துக் கொண்டே இருக்கப்படும்.

கடைசியில் நன்மைகள் காலியாகிவிடும், பிறகு பாதிக்கப்பட்டவரின் தீமையை எடுத்து பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு கொடுக்கப்படும், கடைசியில் நரகத்தில் எறியப்படுவான்.(2)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2581.

அல்லாஹ்வின் இந்த மார்க்கம் உயிர்கள் விஷயத்தில் கடுமையான சட்டங்களை தந்திருக்கிறது.

அல்குர்ஆன் வசனங்களை கவனமாக படித்து பாருங்கள், அல்லாஹ் எப்படிப்பட்ட எச்சரிக்கை செய்கிறான் என தெரியும்.

وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا (93) يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا ضَرَبْتُمْ فِي سَبِيلِ اللَّهِ فَتَبَيَّنُوا وَلَا تَقُولُوا لِمَنْ أَلْقَى إِلَيْكُمُ السَّلَامَ لَسْتَ مُؤْمِنًا تَبْتَغُونَ عَرَضَ الْحَيَاةِ الدُّنْيَا فَعِنْدَ اللَّهِ مَغَانِمُ كَثِيرَةٌ كَذَلِكَ كُنْتُمْ مِنْ قَبْلُ فَمَنَّ اللَّهُ عَلَيْكُمْ فَتَبَيَّنُوا إِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا

தவறுதலாகவே தவிர, ஓர் இறை நம்பிக்கையாளரை (முஃமினை) கொலை செய்வது வேறு எந்த இறை நம்பிக்கையாளருக்கும் ஆகுமானதல்ல. (உங்களில்) எவரேனும் ஓர் இறை நம்பிக்கையாளரை தவறுதலாகக் கொலை செய்து விட்டால் (அதற்குப் பரிகாரமாக) இறை நம்பிக்கையாளராகிய ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அத்துடன் இறந்தவருடைய வாரிசுகள் (மன்னித்துத்) தானமாக விட்டாலே தவிர, அதற்குரிய நஷ்ட ஈட்டையும் அவர்களிடம் செலுத்த வேண்டும். (இறந்த) அவன் உங்கள் எதிரி இனத்தவனாக இருந்து நம்பிக்கையாளராகவும் இருந்தால் நம்பிக்கையாளராகிய ஓர் அடிமையை விடுதலை செய்தால் போதும். (நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியதில்லை. இறந்த) அவன் உங்களுடன் உடன்படிக்கை செய்துகொண்ட வகுப்பாரில் உள்ளவனாக இருந்தால் அவனுடைய வாரிசுகளுக்கு நஷ்டஈட்டைச் செலுத்துவதுடன் நம்பிக்கையாளரான ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும். (இவ்வாறு பரிகாரம் செய்வதற்குரிய பொருளை) எவரேனும் அடையாவிட்டால் அவன் அல்லாஹ்விடம் (தன் குற்றத்தை) மன்னிக்கக் கோரி இரண்டு மாதம் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.

எவனேனும் ஒரு முஸ்லிமை (நன்கறிந்து) வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான். அதில் அவன் நீண்ட காலம் தங்கி விடுவான். அவன்மீது அல்லாஹ் கோபம்கொண்டு அவனை சபித்துவிடுவான். இன்னும் மகத்தான வேதனையையும் அவனுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறான்.

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடைய பாதையில் (போருக்காக) நீங்கள் சென்றால் (போர்முனையில் எதிர்படுபவர்கள் நம்பிக்கையாளர்களா? நிராகரிப்பவர்களா? என்பதைத்) தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். (அவர்களில் எவரேனும் தம்மை நம்பிக்கையாளர் என்று உங்களுக்கு அறிவிப்பதற்காக) உங்களுக்கு ஸலாம் கூறினால் (அவர்களிடமிருந்து) இவ்வுலக வாழ்க்கைக்குரிய (அற்பப்) பொருளை நீங்கள் அடையக்கருதி ‘‘நீ நம்பிக்கையாளரல்ல'' என்று அவரைக் கூறி (வெட்டி) விடாதீர்கள். அல்லாஹ்விடத்தில் ஏராளமான பொருள்கள் இருக்கின்றன. (அவற்றை நீங்கள் அடையலாம்.) இதற்கு முன்னர் நீங்களும் இவ்வாறே (பயந்து பயந்து இஸ்லாமை வெளியிட்டுக் கொண்டு) இருந்தீர்கள். அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்தான். (அதன் பின்னரே நீங்கள் உண்மை நம்பிக்கையாளராக ஆனீர்கள்.) ஆகவே, (போர்புரிவதற்கு முன்னதாகவே உங்கள் முன் இருப்பவர்கள் நம்பிக்கையாளர்களா? இல்லையா? என்பதைத் தீர விசாரித்துத்) தெரிந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் 4 : 92-94)

அதற்கடுத்து அல்லாஹ் ஒரு சம்பவத்தை கூறுகின்றான், அல்லாஹ் உடைய தூதர் அவர்கள் ஒரு படையை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்புகிறார்கள். அங்கு சென்ற போது எதிரிகள் ஒடிவிடுகின்றனர்.ஒருவர் மட்டும் தனது செல்வங்களோடு அங்கிருக்கிறார். சில நேரங்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தங்களது குடும்பத்தார்களிடம் தங்களது ஈமானை பாதுகாப்பதற்க்காக வெளிப்படுத்தாமல் இருப்பர்.

முஸ்லிம்கள் அந்த பக்கம் சென்றால் அவர்கள் முஸ்லிம்களோடு சேர்ந்து கொள்வார்கள். சஹாபாக்கள் அந்த மனிதரை அடைந்த போது, அவர்தான் ஒரு முஸ்லிம் என சொல்லிவிட்டு ஸலாம் கூறுகின்றார்.

முஸ்லிம்களில் இருந்த ஒருவர், 'நீ உன்னுடைய உயிர் மற்றும் பொருளை பாதுகாப்பதற்குத்தான் சொல்கிறாய்என்ற எண்ணத்தில் அவரை கொன்றுவிட்டார்.

லாஇலாஹ இல்லல்லாஹுசொல்லி, சலாம் கூறி, தான் ஒரு முஸ்லிம் என கூறியவரை இப்படி கொன்று விட்டீரே என்று மற்ற தோழர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த பிரச்சினை அந்த குழு மதீனாவிற்கு திரும்பியதற்கு பிறகு அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பல அறிவிப்புகளில் இந்த செய்தி வருகிறது. மொத்த அறிவிப்புகளையும் உற்றுப் பார்த்தால், இந்த பிரச்சினையில் நபியவர்களின் கோபமும் வெறுப்பும் மிகப் பயங்கரமாக இருந்தது.

தன் பாதுகாப்புக்காகதான் அவர் இவ்வாறு செய்ததாக அவர் சொன்னதும் நபியவர்கள், அந்த கொல்லப்பட்டவரின் உள்ளத்தை திறந்து பார்த்தாயா?அவர் என்ன நோக்கத்தில் சொன்னார்? என்று.

லாஇலாஹ இல்லல்லாஹுஎன்று சொன்னவரை எப்படி கொன்றாய்?என திரும்ப திரும்ப கேட்டார்கள். வெட்டிய தோழர் சொல்கிறார்;இப்படிப்பட்ட சம்பவம் நான் முஸ்லிமாக மாறும் முன்னர் நடந்திருக்கக்கூடாதா!என்று வருத்தப்படுகிறார். (5)

அறிவிப்பாளர் : உசாமா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 96.

நபியின் கோபம் ஒரு புறம், அல்லாஹ்வின் கோபமோ, முஃமின்களே, நீங்கள் அல்லாஹ் உடைய பாதையில் ஜிஹாதுக்காக சென்றால் கவனமாக இருங்கள், தன்னை முஸ்லிம் என்று சொன்ன மனிதனை முஃமின் இல்லை என்று சொல்லாதீர்கள், உலக செல்வமா? உங்களுக்குத் தேவை, அல்லாஹுவிடத்தில் நிறைய கனீமத்துகள் இருக்கின்றன. நீங்களும் ஒரு நேரம் உங்களது இஸ்லாமை வெளிப்படுத்த முடியாமல் இப்படித்தானே பயந்து கொண்டு இருந்தீர்கள். நீங்களும் ஒரு நேரத்தில் காஃபிராகத்தானே இருந்திர்கள், அல்லாஹ் உங்கள் மீது அருள் புரிந்தான். எனவே கவனமாக இருங்கள். (அல்குர்ஆன் 4:94)

அல்லாஹ் உடைய இந்த வசனம் எவ்வளவு பெரிய தாக்கத்தை சஹாபாக்களுக்கு கொடுத்தது. அவர்கள் ஒரு உயிரை கொல்கின்ற விஷயத்தில் மிகப் பேனுதலாக இருந்தார்கள்.

அல்லாஹ் உடைய கட்டளை அல்லாஹ்வின் மார்க்கத்தில் அப்படித்தான். "ஒரு உயிரை கொல்வது உலக மக்கள் அனைவரையும் கொல்வதற்க்கு சமமானது. ஒரு உயிரை பாதுகாப்பது உலக மக்கள் அனைவரையும் பாதுகாப்பதற்கு சமமானது.

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ் உடைய மார்க்கத்திற்கு கட்டுப்பட்டவர்களாக நம்முடைய கோபம், பகைமை அனைத்தும் நம்முடைய காலுக்கு கீழே போட்டு புதைக்கப்பட வேண்டியவை.

நீதம், நேர்மை, பெருந்தன்மை,விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை, பரஸ்பர அன்பு, இதுதான் மார்க்கத்துடைய அடிப்படை. பழிவாங்கும் உணர்வு உங்களை அத்துமீறி நடக்கச் செய்ய வேண்டாம். நீங்கள் பழி தீர்த்துக் கொண்டால், நீதமான முறையில் நடந்து கொள்ளுங்கள்.

இந்த குர்ஆனுடைய மார்க்கத்தில், குற்றமற்றவர்களைஅப்பாவி மக்களை கொல்வதும், தனது கருத்துக்குஆதரவு தரவில்லை, தனக்கு உதவி செய்யவில்லை என்பதற்கெல்லாம் இன்று சில இயக்கங்கள் அப்பாவி மக்களைசித்ரவதை செய்வதை, கைதிகளாக பிடிப்பதை, கொல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

அல்லாஹ் உடைய மார்க்கத்தில் அவர்கள் மிகப்பெரிய குற்றவாளிகள், அவர்களுக்கும் மார்க்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாளை மறுமையில் அல்லாஹுவிடத்தில் மிக கடுமையான தண்டனைக்கு ஆளாவார்கள்.

எல்லோரும் இந்த விஷயத்தில் கவனமானவர்களாக,புரிந்தவர்களாக இருக்க வேண்டும். ஒரு இடத்தில் இருக்கும் நோய் வேறு இடத்திற்கு பரவுவது இலேசாக நடந்துவிடும். நம்முடைய உணர்வுகளை கட்டுப்படுத்தி, அல்லாஹ் உடைய சட்டம் எது?நம்முடைய அறிஞர்கள் நமக்கு என்ன வழி காட்டுகிறார்கள்? என்பதைத்தான் முஸ்லிம்கள் நோக்க வேண்டுமே தவிர, இயக்கங்களின் தலைவர்கள் சொல்வதையெல்லாம் நீங்கள் எடுத்துக் கொண்டால், அவர்களை உங்கள் மார்க்க வழிகாட்டிகளாக நீங்கள் எடுத்துக் கொண்டால், கண்டிப்பாக வழி தவறுவதை தவிர, அல்லாஹ் உடைய மார்க்கத்தில் அத்துமீறுவதை தவிர வேறொன்றும் நடக்காது.

அல்லாஹ் உடைய மார்க்க சட்டங்களை, அல்லாஹ் உடைய வேதத்திலிருந்து, நபியின் சுன்னாவிலிருந்து அதை கற்றுத் தேர்ந்த 'கல்வியில் ஆழமானவர்கள்' என்று அல்லாஹ் சொல்வது போல், அவர்களை அடையாளம் கண்டு, கோபத்திற்கு, பகைமைக்கு இப்படிப்பட்ட அற்பமான எந்த காரணத்திற்கும், உணர்வுகளுக்கும் அடிமையாகாமல் நீதத்தோடு இருக்கிறார்களே அவர்களிடத்தில் சட்டம் கேட்டு நீங்கள் செயல்படும் போதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் நடுநிலையோடு, நேர்மையான பக்கத்தில் இருப்பீர்கள்.

அல்லாஹ்விடத்தில் துஆ செய்வோமாக!அல்லாஹ் நமது பாவங்களை மன்னித்து, சமுதாயத்தை நேரான, நீதமான, ஒழுக்கமான பாதையில் பாதுகாப்பாக வைத்திருப்பானாக.

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

تخريج الحديث : ليس له إسناد ثابت، وهذا مرسل أو معضل، مع جهالة المرسِل، وهذا إسناد ضعيف

இது பலகீனமான ஒரு ஹதீஸ் ஆகும். ஆனால் இதன் கருத்து மற்ற ஹதீஸ்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விளக்கங்களை கீழுள்ள லிங்கில் சென்று பார்க்கவும் :

https://islamqa.info/amp/ar/answers/290672

குறிப்பு 2)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ؟» قَالُوا: الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ، فَقَالَ: «إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ، وَصِيَامٍ، وَزَكَاةٍ، وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا، وَقَذَفَ هَذَا، وَأَكَلَ مَالَ هَذَا، وَسَفَكَ دَمَ هَذَا، وَضَرَبَ هَذَا، فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ، وَهَذَا مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ، ثُمَّ طُرِحَ فِي النَّارِ» صحيح مسلم (2581)

குறிப்பு 3)

وحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ، قَالَ: كُنْتُ أَضْرِبُ غُلَامًا لِي، فَسَمِعْتُ مِنْ خَلْفِي صَوْتًا: «اعْلَمْ، أَبَا مَسْعُودٍ، لَلَّهُ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَيْهِ»، فَالْتَفَتُّ فَإِذَا هُوَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، هُوَ حُرٌّ لِوَجْهِ اللهِ، فَقَالَ: «أَمَا لَوْ لَمْ تَفْعَلْ لَلَفَحَتْكَ النَّارُ»، أَوْ «لَمَسَّتْكَ النَّارُ» (صحيح مسلم (1659

குறிப்பு 4)

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَكْثَمَ، وَالجَارُودُ بْنُ مُعَاذٍ قَالَا: حَدَّثَنَا الفَضْلُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ وَاقِدٍ، عَنْ أَوْفَى بْنِ دَلْهَمٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: صَعِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ المِنْبَرَ فَنَادَى بِصَوْتٍ رَفِيعٍ، فَقَالَ: «يَا مَعْشَرَ مَنْ أَسْلَمَ بِلِسَانِهِ وَلَمْ يُفْضِ الإِيمَانُ إِلَى قَلْبِهِ، لَا تُؤْذُوا المُسْلِمِينَ وَلَا تُعَيِّرُوهُمْ وَلَا تَتَّبِعُوا عَوْرَاتِهِمْ، فَإِنَّهُ مَنْ تَتَبَّعَ عَوْرَةَ أَخِيهِ المُسْلِمِ تَتَبَّعَ اللَّهُ عَوْرَتَهُ، وَمَنْ تَتَبَّعَ اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ وَلَوْ فِي جَوْفِ رَحْلِهِ» قَالَ: وَنَظَرَ ابْنُ عُمَرَ يَوْمًا إِلَى البَيْتِ أَوْ إِلَى الكَعْبَةِ فَقَالَ: «مَا أَعْظَمَكِ وَأَعْظَمَ حُرْمَتَكِ، وَالمُؤْمِنُ أَعْظَمُ حُرْمَةً عِنْدَ اللَّهِ مِنْكِ»: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ الحُسَيْنِ بْنِ وَاقِدٍ، وَرَوَى إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ السَّمَرْقَنْدِيُّ، عَنْ حُسَيْنِ بْنِ وَاقِدٍ، نَحْوَهُ، وَرُوِي عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوُ هَذَا (سنن الترمذي 2032 ) [حكم الألباني] : حسن صحيح

குறிப்பு 5)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ح، وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي مُعَاوِيَةَ كِلَاهُمَا، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي ظِبْيَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ - وَهَذَا حَدِيثُ ابْنِ أَبِي شَيْبَةَ - قَالَ: بَعَثَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَرِيَّةٍ، فَصَبَّحْنَا الْحُرَقَاتِ مِنْ جُهَيْنَةَ، فَأَدْرَكْتُ رَجُلًا فَقَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ، فَطَعَنْتُهُ فَوَقَعَ فِي نَفْسِي مِنْ ذَلِكَ، فَذَكَرْتُهُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ وَقَتَلْتَهُ؟» قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنَّمَا قَالَهَا خَوْفًا مِنَ السِّلَاحِ، قَالَ: «أَفَلَا شَقَقْتَ عَنْ قَلْبِهِ حَتَّى تَعْلَمَ أَقَالَهَا أَمْ لَا؟» فَمَا زَالَ يُكَرِّرُهَا عَلَيَّ حَتَّى تَمَنَّيْتُ أَنِّي أَسْلَمْتُ يَوْمَئِذٍ، قَالَ: فَقَالَ سَعْدٌ: وَأَنَا وَاللهِ لَا أَقْتُلُ مُسْلِمًا حَتَّى يَقْتُلَهُ ذُو الْبُطَيْنِ يَعْنِي أُسَامَةَ، قَالَ: قَالَ رَجُلٌ: أَلَمْ يَقُلِ اللهُ: {وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ} [الأنفال: 39]؟ فَقَالَ سَعْدٌ: قَدْ قَاتَلْنَا حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ، وَأَنْتَ وَأَصْحَابُكَ تُرِيدُونَ أَنْ تُقَاتِلُوا حَتَّى تَكُونَ فِتْنَةٌ )صحيح مسلم 158 - (96)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/