HOME      Khutba      அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 3/9) | Tamil Bayan - 343   
 

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 3/9) | Tamil Bayan - 343

           

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 3/9) | Tamil Bayan - 343


அரஃபா பெருவெளியில் இறுதித் தூதரின் இறுதிப் பேருரை பகுதி

ஜுமுஆ குத்பா தலைப்பு : அரஃபா பெருவெளியில் இறுதித் தூதரின் இறுதிப் பேருரை பகுதி 3-9)

வரிசை : 343

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 17-10-2014 | 23-12-1435

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்தத் தூதரின் குடும்பத்தார், தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறிய பிறகு, அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தை எல்லா நிலைகளிலும் கடைபிடிக்குமாறு எனக்கும், உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக தொடங்குகின்றேன்.

தொடர்ந்து அல்லாஹ்வுடைய தூதர் தங்களது இறுதி ஹஜ்ஜில், அரஃபா பெருவெளியில் ஆற்றிய பேருரையில் இருந்துநமக்குத் தேவையான மிக முக்கிய வழிகாட்டுதலை, நேர்வழியின் பேருரையை நாம் பார்த்து வருகின்றோம்.

அல்லாஹ்வுடைய தூதர் தங்களது 23ஆண்டுகால ஏகத்துவப் புரட்சிக்குப் பின், சமூக சீர்திருத்தத்தின் கடின உழைப்புக்குப் பின், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நபித்தோழர்களை அங்கே ஒன்று கூட்டி, அவர்களை முன்வைத்தவர்களாக, கியாமநாள் வரை வரக்கூடிய முஸ்லிம் சமுதாயத்திற்கும், இந்த முஸ்லிம் சமுதாயத்தை பற்றி கேள்விப்படுகின்ற, இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி கேள்விப்படுகின்ற, ஒவ்வொரு மனிதனுக்கும் நேர் வழிகாட்டியாகவும், அந்த மனிதனுக்குரிய சரியான பாதையை தெளிவுப்படுத்தியவர்களாகவும்பல முக்கிய விஷயங்களை முறையாகத் தொகுத்து தந்தார்கள்.

உண்மையில் அந்த உரை என்பது, அல்குர்ஆனுடைய சாராம்சம் என்று சொல்லலாம். அல்லாஹ்வின் தூதர் அவர்களுடைய 23ஆண்டுகாலங்களில்அவர்கள் கூறிய ஹதீஸ்களுடைய சாராம்சம் என்று சொல்லலாம்.

அந்த அளவிற்கு ஆழமான, மிக முக்கிய விஷயங்களை, கருத்துக்களை அல்லாஹ்வின் தவ்ஹீதுடைய விஷயத்திலும், சமுதாயத்தின் கொடுக்கல் வாங்கல், வியாபாரம், தொழில்துறை, திருமணம், அரசியல் என்று எல்லா தரப்புகளைப் பற்றியும், எல்லா பகுதிகளைப் பற்றியும், வாழ்க்கையின் அத்தனை பக்கங்களைப் பற்றியும், அடிப்படை விஷயங்களை அல்லாஹ்வுடைய தூதர் நமக்கு கொடுத்திருக்கிறார்கள்.

அதனுடைய விஷயங்களை தான் இரண்டு வாரங்களாக தொடர்ந்து நாம் ஜும்ஆவில் கேட்டு வருகின்றோம். இன்றும் இன்ஷா அல்லாஹ் அதிலிருந்து சில நேர்வழிகளைப் பார்ப்போம்.

அல்லாஹ்வுடைய தூதர் மக்களை அழைக்கிறார்கள்;மக்களே!

الْمُسْلِمُونَ إِخْوَةٌ، وَلَا يَحِلُّ لِامْرِئٍ مِنْ مَالِ أَخِيهِ إِلَّا مَا أَعْطَاهُ عَنْ طِيبِ نَفْسٍ

முஃமின்கள்சகோதரர்கள். ஒரு முஸ்லிமுடைய செல்வம், இன்னொரு முஸ்லிமுக்கு மன விருப்பம் இல்லாமல்அனுமதிக்கப்பட்டதாகஹலாலானதாக ஆகாது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : ஹாகிம்,எண் : 318.

இந்த ஒரு வழிகாட்டலிலிருந்து நாம் பெறக்கூடிய படிப்பினைகள், பாடங்கள் என்ன? மக்களே! என்று அழைக்கிறார்கள். முந்தைய உரைகளில் நாம் பார்த்திருக்கிறோம். மக்களே என்று அழைக்கப்படும் போது, அதில் இஸ்லாமை ஏற்றவர்கள், இஸ்லாமை ஏற்காதவர்கள், தனக்கு முன்னால் இருப்பவர்கள், பிறகு பிற்காலத்தில் வரக்கூடிய எல்லா மக்களும் இதில் அடங்குவார்கள் என்பதை நாம் பார்த்தோம்.

இப்படி பொதுவான அழைப்பைவிடுத்து ரசூலுல்லாஹ் அடுத்து ஒரு விசேஷமான சட்டத்தை, அல்லாஹ்வுடைய தூதர் இங்கு கூறி, அதன் மூலமாக ஒரு பொது சட்டத்தையும் நமக்கு விவரிக்கிறார்கள்.

அதாவது, ஈமான் உடையவர்கள்தான் அவர்களுக்குள்ஒருவர் மற்றவருக்கு சகோதரராக கருதப்படுவார். ஓர் இறைநம்பிக்கையாளன்தனக்கு சகோதரனாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்றால், அவரும் தன்னைப் போல ஒரு இறைநம்பிக்கையாளராகத்தான் இருக்க வேண்டும்.

இன்று பல மக்களை நாம் பார்க்கிறோம்; மாற்றார்கள், ஈமானை இஸ்லாமைஏற்காதவர்களை, தங்களது சகோதரர் என்று சொல்கிறார்கள். தங்களின் உற்ற நண்பர் என்று சொல்கிறார்கள்.

குர்ஆன் சுன்னாவினுடைய பார்வையில் இந்த வார்த்தை என்பது சரியா? என்று நாம் ஆராய்ச்சி செய்து பார்க்கும் பொழுது, மற்றவர்களைப் பொருத்தவரை சகோதரர் என்று சொல்வதோ, உற்ற நண்பர் என்ற வார்த்தையை பயன்படுத்துவதோ பொருத்தமற்றது, சரியாக ஆகாது.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா ஸுரத்துத் தவ்பாவுடைய 11-வது வசனத்தில் சொல்கிறான் :

فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَنُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ

அவர்கள் (தங்கள் நிராகரிப்பிலிருந்து விலகி அல்லாஹ்விடம்) மன்னிப்புக்கோரி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் (அவர்கள்) உங்கள் மார்க்க சகோதரர்களே. அறிவுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை (இவ்வாறு) விவரிக்கிறோம்.

சூரத்துல் மாயிதா உடைய 55-வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான் :

إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ

அல்லாஹ், அவனுடைய தூதர், இன்னும் எவர்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலை சாய்த்தும் வருகின்றனரோ இவர்கள்தான் நிச்சயமாக உங்கள் (உண்மையான) தோழர்கள் ஆவர். (அல்குர்ஆன் 5:55)

வசனத்தின் கருத்து : உங்களது உற்ற நண்பர்களாக, நெருக்கமான பொறுப்பாளர்களாக, தோழர்களாக, உள்ளத்தோடு பாசம் வைக்கும் அளவிற்கு, அன்பு, பாசம், பரிவு, இரக்கம் காட்டக் கூடிய அளவுக்கு ஒருவரை நீங்கள் நண்பராக ஆக்க வேண்டுமென்றால்,முதலாவதாக நம்மைப் படைத்து, வளர்த்து, காக்கின்ற நம்முடைய ரஹ்மானாகிய அல்லாஹ். நம்முடைய நட்புக்கு முதன்மையாக தகுதிபெறக்கூடியவன் ஆவான்.

நீங்கள் அல்லாஹ்வை நண்பனாக ஆக்கிக் கொண்டால், அல்லாஹ்வும் உங்களை நண்பனாக ஆக்கிக் கொள்வான். எதுவரை நீங்கள் அல்லாஹ்வை நண்பனாக ஆக்கிக் கொள்ள மாட்டீர்களோஅல்லாஹ்வும் உங்களை நண்பனாக ஆக்கிக் கொள்ள மாட்டான்.

அல்லாஹ்வின் தூதர் தங்களது மதீனா வாழ்க்கையின் இறுதி நிமிடங்களில், தோழர்களெல்லாம் ஒன்று கூடிஇருக்க, அந்தத் தோழர்களை பார்த்து சில விஷயங்களை சொல்கிறார்கள். எப்படி அரஃபா பெருவெளியில் சில உரைகளை கொடுத்தார்களோஅதுபோன்று சில விஷயங்களை மஸ்ஜிதுன் நபவியில் கூறுகிறார்கள்.

அப்போது அந்த தோழர்களைப் பார்த்து, உங்களில் யாருக்காவது நான் கடன்பட்டிருக்கிறேனா? உங்களில் யாருக்காவது நான் ஏதாவது தொந்தரவு செய்திருக்கிறேனா? யாரையாவது மனம் புண்படும்படி நான் செய்திருக்கிறேனா? அவர் என்னிடம் பழிவாங்கிக் கொள்ளலாம்.

யாருக்காவது நான் ஏதாவது கொடுக்க வேண்டுமா? அவர்கள் வாங்கிக்கொள்ளலாம். இப்படியெல்லாம் அல்லாஹ்வின் தூதர் கூறிக்கொண்டே வந்து, பிறகு தோழர்களைப் பார்த்து சொல்கிறார்கள்:

உங்களில் யாரெல்லாம் எனக்கு உதவி செய்தார்களோ, உங்களில் யாரெல்லாம் இந்த மார்க்கத்திற்காக அர்பணிப்புகள் செய்தார்களோ, கண்டிப்பாக நான் அவருக்கு அதற்குரிய பிரதிபலனை செய்திருக்கிறேன். ஆனால் அபூபக்ரை தவிர. அபூபக்ருக்கு அல்லாஹ் கூலி கொடுப்பான்.

இந்த வார்த்தையை சொல்லும் பொழுது அபூபக்ர் ரழியல்லாஹுஅன்ஹுதேம்பித் தேம்பி அழுகிறார்கள். அல்லாஹ்வின் தூதரே! நானும், எனது செல்வமும், எனது தாயும்தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்!

தன்னையும் தான் உடைமையாக்கிக் கொண்டிருக்கிற அனைத்தையும், அல்லாஹ்வுடைய தூதருக்காக, தீனுக்காக, அர்ப்பணம் செய்த ஒரு மனிதர் அபூபக்ர்.

அல்லாஹ்வின் தூதர் பிறகு சொல்கிறார்கள்; நான் அல்லாஹ்வைத்தவிர வேறு ஒருவரை உற்ற நண்பனாக நான் எடுத்துக் கொள்வதாக இருந்தால், அபூபக்ரை என்னுடைய உற்ற நண்பனாக எடுத்துக் கொள்வேன். ஆனால், அல்லாஹ் என்னை தன்னுடைய கலீலாக, உற்ற நண்பராக ஏற்றுக் கொண்டான். இப்ராஹீமை அல்லாஹ் எப்படி உற்ற நண்பனாக எடுத்து கொண்டானோஅதைப்போன்று.(1)

அறிவிப்பாளர் : அபூ சயீத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2382.

எதுவரை நமது உள்ளத்தின் முதன்மையானஅன்பை அல்லாஹ்விற்கு நாம் கொடுக்க மாட்டோமோஅதுவரை நாம் அல்லாஹ்வின் அன்பை பெற முடியாது.

யார் தேவை உள்ளவர்கள்?அல்லாஹ்வா? நாமா? நாம் அல்லாஹ்விடத்தில் தேவையுள்ளவர்கள். அல்லாஹ்விற்கு எந்த தேவையும் இல்லை.

يَاأَيُّهَا النَّاسُ أَنْتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ

மனிதர்களே! நீங்கள் அனைவரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ்வுடைய உதவி தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ  முற்றிலும் தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான். (அல்குர்ஆன் 35 : 15)

அபூதர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள்அறிவிக்கக்கூடிய அந்த ஹதீஸை, இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ்பதிவு செய்கிறார்கள்.

அல்லாஹ் கூறுவதாக ரசூலுல்லாஹ் சொல்கிறார்கள்:

«يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ، مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا، يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ، مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا»

என் அடியார்களே! உங்களில் முன்னோரிலிருந்து பின்னோர் வரை, மனிதர்களிலிருந்து ஜின்கள் வரை, எல்லோரும் மிக இறையச்சம் உடையஉள்ளம் உள்ளவர்களாக மாறி விட்டாலும், அது எனது ஆட்சியை அதிகரிக்கப் போவது இல்லை.

என் அடியார்களே! உங்களில் முன்னோர்களிருந்து பின்னோர் வரை, மனிதர்களிலிருந்து ஜின்கள் வரை, எல்லோரும் பெரும் பாவிகளாக ஆகிவிட்டாலும், அது என்னுடைய ஆட்சியை குறைக்க போவதுமில்லை.

அறிவிப்பாளர் : அபூதர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 2577.

கண்ணியத்திற்குரியவர்களே! மலக்குகள், பறவைகள், மனிதர்கள், படைப்பினங்கள், அத்தனையும் அல்லாஹ்வை வணங்குவதால், வணங்கக்கூடிய அந்த படைப்புகள் தான் நன்மைப் பெறுகின்றனவே தவிர, அல்லாஹ்வின் கண்ணியம் என்பது, இவைகள் வணங்கினாலும் வணங்காவிட்டாலும் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும்.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இதை நமக்கு தெளிவுபடுத்துகிறான். ஆகவே, ஒரு முஸ்லிம், அவர் முதலாவதாக அல்லாஹ்வை முன்னோக்க வேண்டும்.

وَيَهْدِي إِلَيْهِ مَنْ يُنِيبُ

நீங்கள் அல்லாஹ்வை முன்னோக்கினால் தான் அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பான். (அல்குர்ஆன் 42:13)

நீங்கள் அல்லாஹ்வை நண்பனாக எடுத்துக்கொண்டால், உங்களது உள்ளத்தில் முதன்மையான அன்பை அல்லாஹ்வுக்கு ஒதுக்கினால், அல்லாஹ்வும் உங்கள் மீது நேசம் வைப்பான்.

அல்லாஹ் இதை தான் சொல்கிறான்,ஒரு முஃமின் அல்லாஹ்வை தான் கடுமையாக நேசிக்க வேண்டும். அல்லாஹ்வுக்குத் தான் முதன்மையான அன்பை அவன் கொடுக்கவேண்டும் என்று. (அல்குர்ஆன் 2 : 165)

ஆகவே,ஈமானை பொருத்தவரை இதன் அடிப்படையில் தான் சகோதரத்துவம் அமைய வேண்டும்.

அல்லாஹ் சொல்கிறான், உங்களது நண்பன் அல்லாஹ். அடுத்து அல்லாஹ்வுடைய தூதர்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் வாழ்ந்த காலத்திலுள்ள மக்களுக்கு மட்டும்அவர்கள் நண்பர் அல்ல. ஒவ்வொரு முஃமினுக்கும் அல்லாஹ்வின் தூதர் நண்பராக, விருப்பத்திற்குரியவராக, நேசத்திற்குரியவராக மாற வேண்டும்.

இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ்பதிவு செய்கிறார்கள், அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் :

«لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ»

உங்கள் ஒருவருடைய ஈமான் முழுமையடையாது, எதுவரை நான் அவரிடத்தில், பிரியம் உள்ளவனாக, நேசம் உள்ளவனாக மாறுகிறேனோ. அவர் தனது தந்தையை நேசிப்பதைவிட, அவர் தன் பிள்ளைகளை நேசிப்பதை விட, மக்கள் அனைவரையும் நேசிப்பதை விட, நான் அவரிடத்தில் நேசத்திற்குரியவராக மாறுகின்ற வரை, உங்களில் எவருடைய ஈமானும் முழுமையடையாது, நிறைவடையாது என்று அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் சொல்கின்ற ஹதீஸை கவனியுங்கள்!

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 15.

ஒரு முஃமின், அல்லாஹ்வை நேசிக்க வேண்டும். அடுத்து அவனுடைய தூதரை நேசிக்க வேண்டும்.

அடுத்து அல்லாஹ் சொல்கிறான், இந்த அன்பை, இந்த சகோதரத்துவத்தை, நட்பை, நேசத்தை, தோழமையை அடுத்து நீங்கள் யாருக்கு கொடுக்க வேண்டும் என்றால், ஐந்து நேரத் தொழுகைகளை சரியாகத் தொழக்கூடிய, ஜகாத்தை சரியாக நிறைவேற்றக்கூடிய முஃமின்களுக்கு, என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 5:55)

முஸ்லிம்கள் என்ற பெயரை அல்லாஹ் இங்கு சொல்லவில்லை. காரணம்அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அனைத்தையும் அறிந்தவன். இந்த பெயரைக் கொண்டு சொந்தம் கொண்டாடக் கூடிய எத்தனையோ மக்கள் அல்லது ஈமானை கொண்டு சொந்தம் கொண்டாடக்கூடிய எத்தனையோ மக்கள், அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேணாதவர்களாக இருப்பார்கள் என்பதை அல்லாஹ் அறிந்தவன்.

எனவே தான், முஸ்லிம்கள் என்று அல்லாஹ் சொல்லி முடிக்கவில்லை. அல்லது ஈமான் உடையவர்கள் என்று அல்லாஹ் சொல்லி முடிக்கவில்லை.

وَالَّذِيْنَ اٰمَنُوا-ஈமானை சரியாக ஏற்றுக் கொண்டவர்கள், ஈமானை கற்று அதன் அடிப்படையில் செயல்படக் கூடியவர்கள்.

பிறகு சொல்கிறான், தொழுகையை நிறைவேற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும். முஸ்லிமாக இருந்தாலும், அவரிடத்தில் தொழுகை இல்லை என்றால், அவரிடத்தில் நாம் நட்பு வைக்க முடியாது.

எத்தனையோ தொழுகையாளிகளை, அவர்களுடைய தொழுகையற்ற நண்பர்கள், அவர்களின் தொழுகையைப் பாழாக்கி இருப்பதை நாம் பார்க்கிறோம்.

இவர் அவருக்கு தஃவா கொடுக்கலாம் என்று நட்பு ஆரம்பத்தில் ஆரம்பித்தது. ஆனால், கடைசியில், இவருடைய தொழுகையையும், இபாதத்தையும், பேணுதலையும் அவன் கெடுத்து விட்டு சென்று விடுகிறான். எத்தனையோ நல்ல மக்களை குடிகாரனாக மாற்றியதுஅவர்களுடைய நண்பர்கள்.

அல்லாஹ்வின் தூதர் இதை மிகக் கடுமையாக வலியுறுத்துகிறார்கள் :

«الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ، فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ»

மனிதன் தன்னுடைய நண்பனின் மார்க்கத்தைத் தான் பின்பற்றுவான். எனவே அவன் நண்பனை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் கவனமாக இருக்கட்டும்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத்,எண் : 4833.

கடுமையான வார்த்தையை நபி சொல்லியுள்ளார்கள். இன்று கிறிஸ்துவர்களை, யூதர்களை அல்லது மாற்றார்களை நண்பர்களாக எடுத்துக்கொண்டு, அவர்களோடு நெருக்கமாக பழகி, பலர் தங்களுடைய மார்க்கத்தின் மீது உள்ள பிடிப்பை, மார்க்கத்தின் மீதுள்ள பற்றை பலவீனப்படுத்தி கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

அவர்களோடு சேர்ந்து, பல ஹராமான செயல்களில் அல்லது அந்த காஃபிர்களுடைய ஷிர்க்கான மதச்சடங்குகளில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலைகளை பார்க்கிறோம்.

இது, இவனைப் பாவியாக மாற்றிவிடும். இல்லை, அந்த காஃபிருடைய மத சடங்குகளில் விருப்பத்தோடு ஈடுபடக்கூடியவனாக, இவன் இருப்பாரேயானால் அவனை இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வெளியேற்றிவிடும்.

ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே! ஈமான் உடையவர்கள் தான்நம்முடைய நண்பர்களாக, நம்முடைய சகோதரர்களாக நாம் எடுத்துக் கொள்வதற்கு தகுதியுள்ளவர்கள். ஒரு காஃபிரை, நாம் அந்த இடத்தில் வைத்து பார்க்கவே முடியாது.

அல்லாஹ் கூறுகிறான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا بِطَانَةً مِنْ دُونِكُمْ لَا يَأْلُونَكُمْ خَبَالًا وَدُّوا مَاعَنِتُّمْ قَدْ بَدَتِ الْبَغْضَاءُ مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ قَدْ بَيَّنَّا لَكُمُ الْآيَاتِ إِنْ كُنْتُمْ تَعْقِلُونَ

நம்பிக்கையாளர்களே! உங்(கள் மார்க்கத்தை சேர்ந்தவர்)களையன்றி (மற்றவர்களை) உங்களுக்கு மிக நெருக்கமானவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. உங்களுக்குத் துன்பம் ஏற்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்(ச் சொற்)களைக் கொண்டே (அவர்களுடைய) பகைமை வெளிப்பட்டுவிட்டது. (உங்களைப் பற்றி) அவர்களுடைய உள்ளங்கள் மறைத்திருப்பவையோ மிகக் கொடியவை. நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்கு விவரித்துவிட்டோம். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளலாம்.). (அல்குர்ஆன் 3:118)

வசனத்தின் கருத்து : முஃமின்களே! உங்கள் அல்லாத மற்றவர்களை, நெருக்கமான நண்பர்களாக ஒருபோதும் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு தொந்தரவு தருவதும், நீங்கள் சிக்கல் சிரமங்களில் வீழ்ந்துவிடுவதும்தான் அவர்களுக்கு விருப்பமாக இருக்கும்.

அவர்களுடைய நாவுகளிலிருந்து அவர்களின் பொறாமை, பகைமை வெளிப்பட்டிருக்கிறது, பல சூழ்நிலைகளில், சந்தர்ப்பங்களில். உங்களுக்கு அவர்களது உள்ளங்களில் எதை மறைத்து வைத்திருக்கிறார்களோ, அது அவர்களுடைய நாவால் அவர்கள் வெளிப்படுத்தியதை விட பயங்கரமானது. நாம் உங்களுக்கு தெளிவான அத்தாட்சிகளை கூறுகின்றோம்.

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா இந்த இறைமறுப்பாளர்கள் பற்றி சொல்லும் பொழுது, அவர்கள் உங்களிடத்தில் நேசம் காட்டமாட்டார்கள். உங்களிடத்தில் உறவுகளை பேண மாட்டார்கள். உங்களை வாயால்தான் திருப்தி படுத்துவார்களே தவிர, அவர்களது உள்ளங்கள் அதை மறுத்துக் கொண்டே இருக்கும். வெறுத்துக்கொண்டே இருக்கும். அவர்களில் அதிகமானோர் பெரும் பாவிகள் தான்.

ஆகவேதான், சந்தர்ப்பம் வரும் பொழுது, அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, முஸ்லிம்களுக்கு பகைவர்களாக, எதிரிகளாக, முஸ்லிம்களை கொல்லக்கூடிய கொடூரமானவர்களாக மாறுவதை நாம் பார்க்கிறோம்.

ஆகவே,ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை, அவருடைய சகோதரத்துவம் என்பது, அவருடைய உள்ளம் சார்ந்த நட்பு என்பது அது முஃமின்களுக்கு மத்தியில் தான் இருக்க வேண்டும்.

ஆனால், அதே நேரத்தில் முந்திய ஜும்ஆக்களில் நாம் பார்த்தோம், பழக்கம் என்பதும், நேர்மையான தொடர்புகள் என்பதும், ஹலாலான கொடுக்கல் வாங்கல் என்பதும், மனிதாபிமான உதவிகள் என்பதும் அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அதை பொதுவாக்கி இருக்கின்றான்.

காஃபிராக இருந்தாலும் கூட, அவன் விஷயத்தில் குரோதத்தை நமது உள்ளத்தில் வைப்பதற்கு நமக்கு அனுமதி இல்லை. ஒரு காஃபிருக்கு மோசடி செய்வதற்கு நமக்கு அனுமதி இல்லை. ஒரு காஃபிருடைய பின்னாலிருந்து அவனை தாக்குவதற்கு நமக்கு நமது மார்க்கம் அனுமதி அளிக்கவில்லை.

நீதத்தை நேர்மையைப் பேணும்படி சொல்லக்கூடிய நமது மார்க்கமானது, உங்களுக்குள் நீங்கள் நட்பு வைப்பது தான் உங்களுக்கு நல்லது, உங்களது தோழர்களாக உங்களை ஆக்கிக் கொள்வதுதான் உங்களுக்கு நல்லது என்று சொல்கிறது.

அதற்காக மாற்றார்களை எல்லாம் எதிரிகளாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று நமது மார்க்கம் சொல்லவில்லை. நல்ல பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்;நல்ல ஒழுக்கங்களை மேற்கொள்ளுங்கள்;நீதமான கொடுக்கல்-வாங்கல் உறவுகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள். அது அவர்களை உங்களது மார்க்கத்தின் பக்கம் இழுக்கக்கூடியதாக, கவரக்கூடியதாக இருக்கட்டும்.

ஆனால், நீங்கள் அவர்களோடு நட்பு வைத்து, உங்களது மார்க்கத்தை நீங்கள் இழக்கும்படி நேரிட வேண்டாம். அல்லாஹ்வின் தூதர் அவர்களுடைய வார்த்தை இதைத்தான் நமக்கு சொல்கிறது.

அடுத்து குறிப்பாக, முஸ்லிம் சமுதாயத்தில் அவர்களுடைய கொடுக்கல்-வாங்கல், வியாபாரம், தொழில் துறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் இந்த ஒரே ஒரு வாசகத்தை, மிகப்பெரிய நீண்ட நீண்ட பக்கங்களில்எழுதப்படவேண்டிய சட்ட நுணுக்கங்களை எப்படி சொல்லி முடிக்கிறார்கள் பாருங்கள்!

وَلَا يَحِلُّ لِامْرِئٍ مِنْ مَالِ أَخِيهِ إِلَّا مَا أَعْطَاهُ عَنْ طِيبِ نَفْسٍ

ஒரு முஸ்லிமுக்கு தனது இன்னொரு முஸ்லிமுடைய செல்வத்திலிருந்துஎது ஹலால் என்றால், அவன் மனம் விரும்பிஎதை உங்களுக்கு தருகிறானோ அதுதான் உங்களுக்கு ஹலால்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : ஹாகிம்,எண் : 318.

இந்த ஒரு வார்த்தை நமக்கு எவ்வளவு ஆழமான கருத்தை போதிக்கிறது என்றால், எந்த ஒரு தொழில்துறை, அல்லது எந்த ஒரு கொடுக்கல் வாங்கல், எந்த ஒரு வியாபாரம், அதில் இரு தரப்பினருடைய சமரசமான, ஒரு பரஸ்பர அன்பு இல்லையோ, விட்டுக்கொடுத்தல் இல்லையோ, தெளிவான ஒரு உடன்பாடு இல்லையோ, அப்படிப்பட்ட செல்வம், ஒரு முஸ்லிமுக்கு ஹலால் ஆகாது.

அவன் அதை ஹலால் என்று எடுத்துக் கொண்டாலும், அல்லாஹ்வின் தீனில் அது ஹலாலாக ஆகாது. ஒரு முஸ்லிமுடைய செல்வத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால், நீங்கள் அதன் மூலமாக பயன்பெற வேண்டும் என்றால், அவன் மனமுவந்து உங்களுக்கு கொடுத்திருக்க வேண்டும்.

ஒன்று வியாபாரத்தின் மூலமாக கொடுத்திருக்க வேண்டும். அல்லது அன்பளிப்பின் மூலமாக கொடுத்திருக்க வேண்டும். அல்லது சொத்துரிமையின் அடிப்படையில் உங்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். அல்லது ஹலாலான தர்மத்தின் மூலம் கிடைத்திருக்க வேண்டும்.

இதைத் தவிர வேறு ஒரு வழியில் நிர்பந்தப்படுத்தியோ, அச்சுறுத்தல் செய்தோ, அல்லது மோசடி செய்தோ, அல்லது ஏமாற்றியோ, அல்லது பதுக்கியோ, ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுடைய செல்வத்தை எடுப்பானேயானால், லஞ்சத்தின் அடிப்படையிலோ, அல்லது வட்டியின் அடிப்படையிலோ, இப்படி மேற்கூறப்பட்ட ஹலாலான வழி அல்லாத எந்த ஒரு வழிமுறையிலும் அவன் ஒரு முஸ்லிமுடைய செல்வத்தை எடுப்பானேயானால், அது அவனுக்கு ஹலால் ஆகாது.

மனம் ஒப்புதல் இருக்க வேண்டும். மனமார விட்டுக்கொடுத்தல் இருக்க வேண்டும். அது ஹலாலான வழியாக இருக்கவேண்டும்.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா, சூரா அன்னிஸா உடைய 29-வது வசனத்தில், இதே விஷயத்தை அழுத்தமாக சொல்கிறான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا

நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவேயன்றி உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்கிவிட வேண்டாம். நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவேயன்றி உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் விழுங்கிவிட வேண்டாம். (இதற்காக) உங்களில் ஒருவருக்கொருவர் (சச்சரவிட்டு) வெட்டிக்கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகக் கருணையாளனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 29)

அல்லாஹ்வுடைய தூதர் சொல்லக்கூடிய ஹதீஸை ஸஹீஹ் புகாரியில் பார்க்கிறோம்.  கொடுக்கல் வாங்கல் செய்து கொள்ளக்கூடிய வியாபாரிகள் அதே இடத்தில் இருக்கும் போது அவர்களுக்கு அனுமதி இருக்கிறது,அவர்கள் தங்களுடைய வியாபாரத்தை முறித்து கொள்வதற்கு.

ஒருவர் ஒரு கடையில் போர்வை வாங்குகிறார். இது எனக்கு வேண்டும் என்று அவர் சொல்கிறார். அவரும் இதற்குரிய விலையை சொல்கிறார். இருவரும் திருப்தி கொள்கிறார்கள். சரி நான் வாங்கிக் கொள்கிறேன் என்று முடித்து விடுகிறார்கள்.

ஆனால், திடீரென்று அவருக்கு ஞாபகம் வருகிறது. தன்னிடத்தில் இருக்கக்கூடிய இந்த பணம் தனக்கு இதைவிட ஒரு முக்கியமான தேவைக்கு அவசியம் என்பதாக.உடனே அவர் சொல்கிறார், இல்லை இப்போது என்னால் வாங்க முடியாது. நான் இதை நாளை வந்து வாங்கிக் கொள்கிறேன். அல்லது பிறகு ஒரு நேரத்தில் பார்த்துக் கொள்கின்றேன் என்று சொல்லும்பொழுது, அந்த விற்ககூடியவர், இல்லை! நீ உறுதி செய்து விட்டாய், இந்த சாமானை நான் கீழே இறக்கி விட்டேன். நாம் வியாபாரத்தை பேசி விட்டோம். கண்டிப்பாக நீ வாங்கி ஆக வேண்டும் என்று நிர்பந்திக்கக்கூடாது.

அதே சபையில் இருக்கின்ற வரை, கிரயம் கைப்பற்றப்பட்டு பொருள் ஒப்படைக்கப்படாத வரை, இருவர்களுக்கும் முழுமையான அனுமதி இல்லை. கிரயம் கைப்பற்றப்பட்டு அதற்குரிய பொருள் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு விடுமேயானால், இருவரும் ஒரே சபையில் இருப்பார்களேயானால்,

அல்லாஹ்வுடைய தூதர் சொல்கிறார்கள்:

«مَنْ أَقَالَ مُسْلِمًا أَقَالَهُ اللَّهُ عَثْرَتَهُ»

ஒருவர் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், எனது இந்த வியாபாரத்தை முறித்துக் கொடு என்று வாடிக்கையாளர் சொல்வாரேயானால், நீங்கள் உங்கள் சகோதரர் முடித்து கேட்கக்கூடிய அந்த வியாபாரத்தைமுறித்துக் கொடுங்கள். அல்லாஹ் உங்களுடைய கஷ்டங்களை மறுமையில் முறித்து விடுவான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத்,எண் : 3460, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

எப்படிப்பட்ட ஒரு தாராளமான மார்க்கத்தை, தாராளமான மனப்பான்மையைநமக்கு மார்க்கம் சொல்லித் தருகிறது பாருங்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்:

" البَيِّعَانِ بِالخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، - أَوْ قَالَ: حَتَّى يَتَفَرَّقَا - فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا "

அந்த இருவரும் தங்களுக்குள் எதையும் மறைக்காமல் உண்மையை பேசிக்கொண்டால், இன்னும் பொருளை தெளிவுபடுத்தி விற்பார்களேயானால், இருவர்களுடைய கொடுக்கல்-வாங்கலில் அல்லாஹ் பரக்கத் செய்வான்.

அவர்கள் மறைப்பார்களேயானால், பொய் பேசிக் கொள்வார்களேயானால், இருவரும் ஒருவர் மற்றவர் மீது பொய் பேசி மறைத்து செயல்படுவார்களேயானால், இருவர்களுடைய வியாபாரத்தில் பரக்கத் அழிக்கப்பட்டுவிடும்.

அறிவிப்பாளர் : ஹகீம் இப்னு ஹிஸாம் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2079.

லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் வியாபாரம் செய்யக் கூடிய மக்களுடைய வாழ்க்கையை பாருங்கள். அபிவிருத்தியற்ற வாழ்க்கையாக, ஒரு சாபக்கேடான வாழ்க்கையாக, ஒரு மோசமான வாழ்க்கையாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.

காரணம், அவர்களுடைய வியாபாரத்தில் ஏதோ அங்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. அவர்களுடைய கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை இருக்கிறது.

வட்டியை அல்லாஹ் அளிப்பான். (அல்குர்ஆன் : 2:276)

என்று அல்லாஹ் பயன்படுத்திருக்கக்கூடிய அந்த محقஎன்ற வார்த்தையை தான் நபியவர்களும் ஹதீஸில் பயன்படுத்தி இருக்கின்றார்கள்.

இன்னொரு ஹதீஸை இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ்பதிவு செய்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்:

«ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ»

மூன்று வகையான மக்களிடத்தில் அல்லாஹ் பேசமாட்டான். அவர்களை அல்லாஹ் பார்க்கவும் மாட்டான். அவர்களை அல்லாஹ் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மறுமை நாளில் கடுமையான வேதனை அவர்களுக்கு இருக்கும்.

இந்த விஷயத்தைக் கேட்ட அபூதர் ரழியல்லாஹுஅன்ஹுபயந்து நடுங்கி,இப்படிப்பட்ட பாவிகள் யார்? நஷ்டவாளிகள் யார்? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்கிறார்கள்.

நபியவர்கள் சொன்னார்கள் :தங்களது கீழ் ஆடையை கரண்டைக்குக் கீழ் அணியக்கூடிய ஆண்கள். எந்த எண்ணத்தில் அவர்கள் அணிந்தாலும் சரியே, பெருமை என்று அணிந்தாலும் சரிய, இல்லை வழக்கம் என்று அணிந்தாலும் சரியே.

நபியவர்கள் பொதுவாக சொல்கிறார்கள். யார் பெருமையோடு அணிகிறார்களோ, அவர்களுக்கு கூடுதலான தண்டனை.

ஆண்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய எந்த ஆடையாக இருந்தாலும் சரி, அது லுங்கியாக இருந்தாலும் சரி, பேண்டாக இருந்தாலும் சரி, வேறு எந்த ஒரு கீழ் ஆடையாக இருந்தாலும் சரி, அது கரண்டைக்குக் கீழ் செல்லுமேயானால், அப்படி உடுத்தக்கூடியவரை அல்லாஹ் நாளை மறுமையில் பார்க்கவும் மாட்டான்; பேசவும் மாட்டான்; அவர்களை அல்லாஹ் சுத்தப்படுத்த மாட்டான். அவர்களுக்கு கடுமையான தண்டனை இருக்கிறது.

இரண்டாவது நபர், தான் செய்த உபகாரத்தை சொல்லி காண்பிப்பவர். தான் செய்த உபகாரத்தை சொல்லிக் காண்பித்து, பிறருடையமனதை நோகடிக்கக்கூடியவர்.

அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம், இவர் யார் தெரியுமா? இவருக்கு நான்தான் செய்தேன். இவரை நான்தான் படிக்க வைத்தேன். இவருக்கு நான் இதை செய்தேன் என்பதாக, அவர் மனம் நோகும்படி, அவர் செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டுவது. அல்லது பெருமைக்காகபுகழுக்காக சொல்லிக் காட்டுவது. இப்படி விளம்பரத்துக்காக சொல்லிக் காட்டுவது. செய்த உபகாரத்தை சொல்லிக் காட்டக் கூடியவர்கள்.

மூன்றாவது நபர், தன்னுடைய வியாபார பொருளை, பொய் சத்தியம் செய்து விற்கக்கூடியவன்.

ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து வாங்கியிருப்பான். அந்த இடத்திலிருந்து வாங்கினோம் என்று சொன்னால், அந்த இடத்திலிருந்து வரவழைத்தோம் என்று சொன்னால், மக்கள் வாங்க மாட்டார்கள் என்று இடத்தை மாற்றி சொல்வது. அதனுடைய தரத்தை மாற்றிச் சொல்வது. அதனுடைய அளவை மாற்றி சொல்வது.

சத்தியம் என்றால், அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்கிறேன் என்று சொன்னால் மட்டும் சத்தியம் அல்ல. மார்க்கத்தில் கண்டிப்பாக இது இப்படித்தான், என்று உறுதியின் வார்த்தைகள் எதை பயன்படுத்தினாலும் சரி, ஃபிக்ஹு மார்க்க சட்டங்களின் அடிப்படையில் அது சத்தியமாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

இவர்களிடத்தில் அல்லாஹ் பேசமாட்டான். இவர்களை பரிசுத்த படுத்த மாட்டான்.(2)

அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 106.

இப்படி நூற்றுக்கணக்கான ஹதீஸ்களை பார்க்கிறோம். சொத்துக்களை, செல்வங்களை அபகரிக்கக்கூடியவர்கள், அது யாருடைய சொத்தாக இருந்தாலும் சரி, யாருடைய செல்வமாக இருந்தாலும் சரி, அளவு எதுவாக இருந்தாலும் சரி,செய்யக்கூடிய குற்றத்தை தான் அல்லாஹ் பார்க்கிறான்.

நபியவர்கள் சொல்கிறார்கள் :

لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ القِيَامَةِ، قَالَ أَحَدُهُمَا: يُنْصَبُ، وَقَالَ الآخَرُ: يُرَى يَوْمَ القِيَامَةِ، يُعْرَفُ بِهِ"

நாளை மறுமை நாளில் மோசடி செய்து, ஏமாற்றி வந்த ஒவ்வொருவருக்கும்ஒரு கொடி கொடுக்கப்படும். இவர் இன்னாருவருக்கு மோசடி செய்திருக்கிறார் என்று அதில் எழுதப்பட்டிருக்கும். அந்த கொடி அவரை விட்டு நீங்காது. அவர் எவ்வளவுதான் அதை தூக்கி எறிந்தாலும் கூட.

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 3186.

அல்லாஹ்வின் தூதர் மதீனாவின் தெருக்களில், வியாபாரங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது சென்றார்கள். அப்பொழுது மழை பெய்திருந்தது. ஒரு வியாபார குவியலை நபியவர்கள் கடந்து செல்லும் பொழுது, அதில் தானியங்கள் இருந்தன.

நபியவர்கள் அந்ந தானியத்திற்குள் கையை நுழைத்து, அதிலிருந்து சில தானியங்களை எடுத்தார்கள். அது நனைந்திருந்தது.

இந்த குவியலுக்கு சொந்தக்காரரே! மேல் காய்ந்திருக்கக்கூடிய தானியம், கீழே ஈரமான தானியம். என்ன இது? என்று கேட்கிறார்கள்.

அந்த மனிதர் பயந்து விட்டார். அல்லாஹ்வின் தூதரே! ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கில் நான் செய்யவில்லை. நான் இந்த தானியத்தை எனது கிராமத்திலிருந்து கொண்டு வரும்பொழுதுமழை பெய்த காரணத்தால் ஈரமாகி விட்டது.

நான் தானிய மூட்டையை அவிழ்த்து கொட்டிய போது, ஈரமான தானியம் கீழே சென்றுவிட்டது. ஈரம் படாமல் நனையாமலிருந்த காய்ந்த தானியங்கள்மேலே வந்துவிட்டன அல்லாஹ்வின் தூதரே! இதுதான் நடந்ததே தவிர, ஏமாற்றுவதற்காக செய்யவில்லை என்று சொன்னதற்கு பிறகும், எண்ணங்களை அறிந்தவன் அல்லாஹ் என்பதை ரசூலுல்லாஹ் தெளிவுபடுத்தும் விதமாக, மார்க்க சட்டம் என்ன என்பதை அவர்களுக்குத் சொல்கிறார்கள்:

«مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي»

நமது சமுதாயத்தை யார் ஏமாற்றுகிறார்களோ அவர் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர் அல்ல.(3)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 102

நாளை மறுமையில் ஒரு மனிதன் எல்லா காரியங்களையும் முடித்துவிட்டு ஓடோடி சென்று கொண்டிருப்பான். ஸிராத்துக்கு முன்னால் செல்லும் பொழுது அவன் அந்த ஸிராத்தைகடக்க விடாமல் தடுத்து நிறுத்தப்படுவான்.

காரணம், தன்னுடைய நண்பருடைய தனது சகோதரனுடைய ஒரு மிஸ்வாக் குச்சியை, அவருக்கு தெரியாமல் அவன் எடுத்திருந்த காரணத்தால்.

இன்று நமது ஊரில் பயன்படுத்தக்கூடிய வேப்பங்குச்சியை போன்று அல்லது ஆலமரத்து குச்சியை போன்று ஒரு குச்சி. 5ரூபாய் அல்லது 10ரூபாய் மதிப்புள்ள ஒரு குச்சியை, தனது சகோதரரிடமிருந்துஅவரது விருப்பத்திற்கு மாற்றமாக, அவருக்கு தெரியாமல், எடுத்து இவன் பயன்படுத்திய காரணத்தால், எல்லா கட்டங்களையும் தாண்டி வந்தவன் ஸிராத் பாலத்திற்கு முன்னால் நிறுத்தப்படுகிறான். அதற்குரிய ஹக்கை கொடுத்துவிட்டு வா என்று.

அங்கே என்ன இருக்கும்? நாம் தீனார்களை கொடுக்க முடியுமா? திர்ஹம்களை கொடுக்க முடியுமா? அதற்காக அமல்கள் பறிக்கப்படும்.

அல்லாஹ்வுடைய தூதர் உடைய எச்சரிக்கையை பாருங்கள். நீங்கள் ஒரு ஜான் நிலத்தை அபகரித்திருந்தாலும், ஏழு பூமிகளிலிருந்துஅந்த ஒரு ஜானுடைய நிலம் எடுக்கப்பட்டு, அது ஒரு அரிகண்டமாகவளையமாக அபகரித்தவனுடைய கழுத்தில் மாட்டப்படும் என்று எச்சரிக்கை செய்கின்றார்கள்.

இமாம்களில் பிரசித்தி பெற்ற ஒரு மார்க்க அறிஞர்,முஹத்திஸ் அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ்.ஹதீஸ்கலை அறிஞர்களுக்கெல்லாம் இமாமாக இருந்தவர். தபஉதாபியீன்களில் வரக்கூடியவர்.

ஒருமுறை சிரியாவில்கல்வி படித்துக் கொண்டிருந்தபோது தனது எழுதுகோல் அங்கே உடைந்து விட்ட போது, தனது அருகிலிருந்த மற்றொரு மாணவரிடத்திலிருந்து ஒரு எழுதுகோலை வாங்குகிறார்.

அப்போது ஒரு காய்ந்த மரத்தை சீவி எழுதுகோலாக பயன்படுத்துவார்கள். அதை வாங்கி எழுதிவிட்டு பிறகு மாணவர்கள் கலைந்து விடுகிறார்கள். இவர்களும் மறந்துவிடுகிறார்கள். கொடுத்தவரும் மறந்துவிடுகிறார்கள்.

இவர்களுடைய பையில் அந்த எழுதுகோல் சென்றுவிடுகிறது. இமாமவர்கள் சிரியாவிலிருந்து இராக்குக்கு வந்துவிட்டார்கள். அங்கே வந்ததற்குப் பிறகு, தனது புத்தகங்களை புரட்டும் போதுஅதற்கு அடியில் ஒரு எழுதுகோல் இருந்தது.

சிறப்பிற்குரிய அந்த இமாமினுடைய பேணுதலை பாருங்கள். மரத்தால் செய்யப்பட்டஒரு சிறிய எழுதுகோல், தன்னோடு படித்த ஒரு தோழன், அவன் தன்னிடத்தில் அது வந்து விட்டது என்று தெரிந்தால் கண்டிப்பாக அதை விட்டுகொடுத்து விடுவான். இருந்தாலும் அவருடைய பேணுதலை பாருங்கள்.

அந்த பொருளை திரும்ப கொடுப்பதற்காக இராக்கிலிருந்து திரும்ப நடைபயணமாக அவர்கள் சிரியாவிற்கு செல்கிறார்கள். அந்த மாணவனை அந்த மஸ்ஜிதில் திரும்ப தேடி, அவர்களிடத்தில் அதை ஒப்படைத்துவிட்டு திரும்புகிறார்கள்.

இதுதான் ஹலால் ஹராம் உடைய பேணுதல். இன்று நம் மக்களுடைய நிலைமை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், பத்து ரூபாய் என்ற கணக்கில் அல்ல. லட்சம் லட்சமாக மூழ்கிக் கொண்டு, கோடிகோடியாக மூழ்கிக் கொண்டு, பிறருடைய செல்வத்தில், மோசடியால் வாழ்ந்து, மோசடியால் செழிப்பாக இருக்க கூடிய மக்கள்.

மக்களை ஏமாற்றி, நாம் சாதூர்யமாக, சாமர்த்தியமாக இருக்கிறோம் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். இவர்களை ஏமாற்றி விடலாம். ரப்புல் ஆலமீனை ஏமாற்ற முடியாது. கண்கள் செய்யும் மோசடிகளையும் அவன் அறிந்து வைத்திருக்கிறான். உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பதையும் அவன் அறிந்து வைத்திருக்கிறான்.

ஆகவே இந்த விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். தொழுகையில் கவனமாக இருந்து, நோன்பில் கவனமாக இருந்து, ஜகாத், ஹஜ்ஜில் கவனமாக இருந்து, ஹலால் ஹராம் உடைய விஷயத்தில் கவனமற்றவர்களாக இருந்து விடுவோமேயானால், கொடுக்கல் வாங்கலில் கவனமற்றவராக இருந்து விடுவோமேயானால் பிறருடைய செல்வத்தில் கொடுக்கல் வாங்கலில் பேணுதலற்றவராக இருந்து விடுவோமேயானால், அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!

எந்த நாளில் நண்பனோ, செல்வமோ, தாய் தந்தையோபலனளிக்க முடியாதோ அந்த நாளில், நாம் செய்த இந்த தவறுகளுக்காக அமல்களை விலையாக கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்.

வேறு எதுவும் அங்கு விலை இருக்காது. மிக கைசேதத்திற்குரிய நிலையாக மாறிவிடும். அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நம் சமுதாயத்தை பாதுகாப்பானாக! ஹலால் ஹராம் பேணுவதற்குரியதவ்ஃபீக்கைதந்தருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرِ بْنِ يَحْيَى بْنِ خَالِدٍ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، جَلَسَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ: «عَبْدٌ خَيَّرَهُ اللهُ بَيْنَ أَنْ يُؤْتِيَهُ زَهْرَةَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ، فَاخْتَارَ مَا عِنْدَهُ» فَبَكَى أَبُو بَكْرٍ وَبَكَى، فَقَالَ: فَدَيْنَاكَ بِآبَائِنَا وَأُمَّهَاتِنَا، قَالَ فَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ الْمُخَيَّرُ، وَكَانَ أَبُو بَكْرٍ أَعْلَمَنَا بِهِ، وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَمَنَّ النَّاسِ عَلَيَّ فِي مَالِهِ وَصُحْبَتِهِ أَبُو بَكْرٍ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا، وَلَكِنْ أُخُوَّةُ الْإِسْلَامِ، لَا تُبْقَيَنَّ فِي الْمَسْجِدِ خَوْخَةٌ إِلَّا خَوْخَةَ أَبِي بَكْرٍ» (صحيح مسلم  - 2382)

குறிப்பு 2)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، قَالُوا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ» قَالَ: فَقَرَأَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مِرَارًا، قَالَ أَبُو ذَرٍّ: خَابُوا وَخَسِرُوا، مَنْ هُمْ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «الْمُسْبِلُ، وَالْمَنَّانُ، وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ» (صحيح مسلم - 106)

குறிப்பு 3)

وَحَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ، جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، قَالَ ابْنُ أَيُّوبَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: أَخْبَرَنِي الْعَلَاءُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا، فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ: «مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟» قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللهِ، قَالَ: «أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ، مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي» (صحيح مسلم -102)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/