HOME      Khutba      அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 2/9) | Tamil Bayan - 343   
 

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 2/9) | Tamil Bayan - 343

           

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 2/9) | Tamil Bayan - 343


அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை

ஜுமுஆ குத்பா தலைப்பு : அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை பகுதி - 2

வரிசை : 343

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 10-10-2014 | 16-12-1435

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ்வை பயந்து கொண்டவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பார்கள். அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை பேணுவார்கள். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மதித்து நடப்பார்கள்.

யாருடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பயம் இல்லையோ தக்வா என்ற தன்மை இல்லையோ அவர்கள் மார்க்கத்தை அலட்சியமாக பார்ப்பார்கள். அல்லாஹ்வுடைய சட்டங்களை அலட்சியம் செய்வார்கள். அல்லாஹ் கடமையாக்கிய ஃபர்ளான கடமைகளை பாழாக்குவார்கள். அல்லாஹ் தடுத்த பாவங்களை துணிந்து செய்வார்கள்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் கூறுகின்றான்:

وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى وَاتَّقُونِ يَاأُولِي الْأَلْبَابِ

நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டுசாதங்களில் தக்வா தான் மிகச் சிறந்தது. எனவே தக்வா என்ற கட்டுசாதத்தை நீங்கள் உங்களோடு எடுத்துக் கொள்ளுங்கள். அறிவுடையவர்களே! நீங்கள் என்னை பயந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் 2:197)

அல்லாஹு ரப்புல் ஆலமீன் கூறி இருக்கின்ற உபதேசத்திற்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையில் அல்லாஹ்வை பயந்து நடந்து கொள்வோமாக. அல்லாஹு வதஆலா உண்மையான தக்வாவை நம் அனைவருக்கும் நசீப் ஆக்குவானாக.

ரசூலுல்லாஹ் அரஃபா மைதானத்தில் ஆற்றிய உரையில் இருந்து ஒரு சில விஷயங்களை சென்ற ஜும்ஆவில் நாம் பார்த்தோம். அதிலிருந்து சில விஷயங்களை இன்ஷா அல்லாஹ் இந்த ஜும் ஆவிலும் நாம் பார்ப்போம்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் குறிப்பாக அரபுகளை பார்த்து,சஹாபாக்களை பார்த்து சொன்ன இந்த செய்தி பொதுவாக எல்லா முஸ்லிம்களுக்கும் உரிய சட்டம் தான் என்பதை மறந்து விடக்கூடாது.

ஹதீஸ் உடைய பொருள்: அல்லாஹ்வுடைய தூதர் இந்த இடத்தில் தங்களது தோழர்களைப் பார்த்து,யா அஸ்ஹாபி!என்றோ அல்லது யா அய்யுஹல் அரப்!என்றோ அழைக்கவில்லை. பொதுவாக உலக மக்கள் அனைவரையும் மறுமை நாள் வரக்கூடிய மக்கள் அனைவரையும் தங்கள்கண்முன் வைத்தவர்களாக அழைத்தார்கள்.

யா அய்யுஹன்னாஸ் -மக்களே! என்று அழைத்துச் சொல்கிறார்கள்;குறிப்பாக அரேபிய தீபகற்பத்தை குறித்து நபியவர்கள் சொல்கிறார்கள்.

أَيُّهَا النَّاسُ، فَإِنَّ الشَّيْطَانَ قَدْ يَئِسَ مِنْ أَنْ يُعْبَدَ بِأَرْضِكُمْ هَذِهِ أَبَدًا

உங்களது இந்த தீபகற்பத்தில் ஷைத்தான்,தான் வணங்கப்படுவதிலிருந்து நிராசை ஆகிவிட்டான். அவன் நம்பிக்கை இழந்து விட்டான். இனி இந்த ஜஸ்ரத்துல் அரேபியத்தில் உங்களால் சிலை வணக்கம் என்பது ஏற்படாது.

உங்களை மீண்டும் ஷிர்க் என்ற பெரும் பாவமான ஒரு கொடும் குற்றத்தில் நீங்கள் வீழ்வதிலிருந்து அல்லாஹ் உங்களை பாதுகாத்து விட்டான். உங்களை மீண்டும் அவன் ஷிர்க்கில் தள்ள முடியாது.

நூல் : இப்னு ஹிஷாம்

ஆனால் இதற்கு அடுத்து ரசூலுல்லாஹ் சொல்லக்கூடிய செய்தி முக்கியமானது.

நாமெல்லாம் இந்த இடத்தில் கொஞ்சம் சுதாரிக்க வேண்டிய நிதானிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். அந்த ஷைத்தான் வழி கெடுப்பதற்காகவே அல்லாஹ்விடத்தில் அவகாசம் வாங்கியிருக்கின்றான். மக்களை ஷிர்க்கில் தள்ள வேண்டும், குஃப்ரில் தள்ள வேண்டும், அது முடியவில்லை என்றால் அல்லாஹ்விற்கு பிடிக்காத செயல்களில் எப்படியாவது தள்ள முயற்சிப்பான்.

ஷிர்க்கிலிருந்து குப்ரிலிருந்து ஒரு மனிதன் பாதுகாப்பு பெற்றுவிட்டால் அடுத்து அவனை பெரும் பாவத்தில் தள்ள நினைப்பான்.

பெரும் பாவத்திலிருந்தும் ஒரு மனிதன் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சியில் கண்ணும் கருத்துமாக கவனமாக இருந்தால், அடுத்து அவனை சிறு பாவங்களில் தள்ள முயற்சிப்பான்.

ஏனென்றால் சிறு பாவங்கள் என்பதையும் ஒரு மனிதன் ஒரு முஃமின் சாதாரணமாக எண்ணி விட முடியாது. பல சிறு பாவங்கள் தான் பெரும் பாவங்களுக்கு வாசல்களாக இருக்கின்றன.

எனவே அந்த சிறு பாவத்தில் தள்ளி, அவனை அதிலேயே ஈடுபட வைத்து, அதிலிருந்து மீள முடியாத அளவிற்கு அவனை அதில் சுகம் காண வைத்துவிட்டால் பிறகு அதன் தொடராக அவனைப் பெரும் பாவத்தில் தள்ளுவான்.

பிறகு பெரும் பாவத்தில் சிக்குண்ட ஒரு மனிதன், அந்தப் பெரும் பாவத்தை ஹலாலாக நினைக்க ஆரம்பித்தால்அவன் குஃப்ரு என்ற இறை நிராகரிப்பில் சென்று விடுகின்றான்.

அல்லாஹ்வின் தூதர் சொல்கிறார்கள் :

وَلَكِنَّهُ إنْ يُطَعْ فِيمَا سِوَى ذَلِكَ فَقَدْ رَضِيَ بِهِ مِمَّا تَحْقِرُونَ مِنْ أَعْمَالِكُمْ

ஷைத்தான் அவன் வணங்கப்படுவதிலிருந்து நிராசை அடைந்து விட்டாலும், மக்களை விட்டு விடுவோம் என்று இருந்து விடுவதில்லை. மாறாக உங்களுடைய அன்றாட காரியங்களில்நீங்கள் எதை ஒரு பொருட்டாக கருதுவதில்லையோ எதை அலட்சியமாக கருதுகிறீர்களோ அப்படிப்பட்ட காரியங்களில்உங்களை தள்ளி அதில் உங்களை ஈடுபடுத்தி அந்த விஷயத்திலாவது இந்த மக்கள் எனக்கு கட்டுப்படுகிறார்கள், எனக்கு கீழ்படிந்து நடக்கிறார்கள் என்று அவன் திருப்தி அடைவான்.

இந்த இடத்தில் நாம் பார்க்கவேண்டிய முக்கிய செய்தி, ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டால் அந்த மனிதன் அல்லாஹ்வை திருப்திப்படுத்துகிறான். நாம் தொழுகிறோம் என்றால் இந்தத் தொழுகையைக்  கொண்டு அல்லாஹ்வை திருப்திப்படுத்துகிறோம். நம்முடைய நோன்பைக் கொண்டு அல்லாஹ்வை திருப்திப்படுத்துகிறோம்.

ஒரு முஸ்லிம் ஹலாலை பேணுகிறார் என்றால் அவன் அல்லாஹ்வை திருப்திப்படுத்துகிறான். ஒரு முஸ்லிம் ஹராமான பாவங்களை விட்டு விலகிக் கொள்கிறான் என்றால் அவர் அல்லாஹ்வை திருப்தி அடையச் செய்கிறார்.

அமல்கள், நல்ல காரியங்கள்,சாலிஹான நற்கருமங்களை செய்யும் பொழுது ஒரு முஃமின் அல்லாஹ்வை திருப்தி அடையச் செய்கிறான். அல்லாஹ்வை மகிழ்ச்சி அடைய செய்கிறான். அல்லாஹ் திருப்திக் கொள்கிறான்.

என்னுடைய அடியான் என்னை வணங்குகிறான். என்னுடைய அடியான் என்னுடைய கட்டளைகளை பேணுகிறான். எனது ஹலால் ஹராம் உடைய சட்ட வரம்புகளை பேணுகிறான் என்று அல்லாஹ் திருப்தி அடைகிறான்.

இபாதத்துகள் அல்லாஹ்வை திருப்தி அடையச் செய்கின்றன. இபாதத்துகளை செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வை திருப்திப்படுத்துகின்ற வழியில்இருக்கிறார்.

இதே நேரத்தில் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு மாறு செய்கிறான் என்றால்,தடுத்த பாவங்களை செய்கிறான் என்றால் அல்லது அல்லாஹ் கடமையாக்கிய ஃபர்லான கடமைகளைப் பாழாக்குகிறான் என்றால் அந்த மனிதன் அல்லாஹ்வை அதிருப்தி அடையச் செய்கிறான். அந்த மனிதன் அல்லாஹ்வை கோபப்படுத்துகிறான்.

அதிலும் குறிப்பாக ஒரு மனிதன் பாவம் செய்கின்றான் என்றால், அல்லாஹ் தடுத்த பெரும் பாவங்களை செய்கிறான் என்றால், அவன் அல்லாஹ்வோடு போர் செய்யக் கூடியவனை போன்று, அல்லாஹ்வை எதிர்க்கக்கூடியவனைப் போன்று.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அவன் விரும்புவது,அடியார்கள் தனக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.

وَلَا يَرْضَى لِعِبَادِهِ الْكُفْرَ وَإِنْ تَشْكُرُوا يَرْضَهُ لَكُمْ

எனினும், தன் அடியார்கள் (தன்னை) நிராகரிப்பதை அவன் விரும்புவதே இல்லை. நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின், அதனால் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான்.(அல்குர்ஆன் 39:7)

அல்லாஹு தஆலா ஒரு நாளும் தனது அடியார்கள் மூலமாக இறை நிராகரிப்பு நிகழ்வதை அவன் விரும்ப மாட்டான். யோசித்துப் பாருங்கள்;நம்மை படைத்தான்; ஏனைய படைப்புகளை விட கண்ணியப்படுத்தினான்.

هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا

அவன்தான் (பூமியையும்) பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்.(அல்குர்ஆன் 2:29)

பூமியில் உள்ள அனைத்தையும் நமக்காக படைத்து, அவற்றின் மூலமாக பயன்பெறக்கூடிய முழு ஆற்றலையும் அறிவையும் கொடுத்ததற்குப் பிறகு, அல்லாஹ்வுடைய அருள்களில் சுகமாக வாழக்கூடிய இந்த மனிதன்,அல்லாஹ்வுக்கு மாறு செய்வானேயானால்இதைவிட ஒரு நன்றிகெட்ட தன்மை இருக்க முடியுமா?

وَإِنْ تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنْسَانَ لَظَلُومٌ كَفَّارٌ

ஆகவே, அல்லாஹ்வுடைய அருட் கொடைகளை நீங்கள் கணக்கிடும் சமயத்தில் அதை உங்களால் எண்ண முடியாது! (இவ்வாறு எல்லாமிருந்தும்) நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறவன், மிக மிக நன்றிகெட்டவன் ஆவான். (அல்குர்ஆன் 14:34)

ஆகவே, ஒரு மனிதன் இபாதத் செய்கிறான் என்றால் அவன் அல்லாஹ்வை திருப்திப்படுத்துகிறான். ஒரு மனிதன் பாவம் செய்கிறான் என்றால் அவன் அல்லாஹ்வை கோபப்படுத்துகிறான்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் நம்மை நாமேசோதித்துக் கொள்ள வேண்டும். நாம் ரஹ்மானை திருப்திப்படுத்திக் கொண்டிருக்கிறோமா?அல்லாஹ் நமக்கு அருள் புரிய வேண்டும். அல்லது நாம் ஷைத்தானை திருப்திப்படுத்துகிறோமா?அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஆகவேதான், அல்லாஹ்வுடைய தூதர் இந்த இடத்தில் இப்படி ஒரு எச்சரிக்கையை நமக்கு சொல்கிறார்கள். நீங்கள் ஒரு பாவத்தை இது ஒரு சின்ன பாவம் தானே? இதில் என்ன இருக்கிறது? இது ஒரு பெரிய பாவம் இல்லையே? என்பதாக நினைத்து நீங்கள் சிறு சிறு பாவங்களை செய்தால் அல்லாஹ் ஏற்படுத்திய ஹராம் என்ற சட்ட வரம்புகளை நீங்கள் நெருங்க ஆரம்பித்துவிட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் ஒன்று,அந்த சிறு பாவங்கள் உங்களை பெரும் பாவங்களுக்கு அழைத்துச் செல்லும்.

இரண்டாவது, அந்த சிறு பாவங்கள் அல்லாஹ்வை அதிருப்தி அடையச் செய்கின்றன. ஷைத்தானை திருப்தி அடையச் செய்கின்றன. எனவே ஷைத்தான் விஷயத்தில் நீங்கள் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

நீங்கள் அல்லாஹ்வை திருப்திப் படுத்துகிறீர்களா? அல்லது ஷைத்தானை திருப்தி படுத்துகிறீர்களா?

நீங்கள் கவனம் அற்றவர்களாக, அலட்சியமாககருதக்கூடிய அந்த சிறு சிறு பாவங்களை உங்களை செய்யவைத்து ஷைத்தான் திருப்தி அடைவான்.

நீங்கள் ஷைத்தானை திருப்திப்படுத்த நினைக்கிறீர்களா? அல்லது ரஹ்மானை திருப்திப்படுத்த நினைக்கிறீர்களா? என்பதில் கவனமாக இருங்கள்.

அடுத்து அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்:

أَيُّهَا النَّاسُ: إنَّ النَّسِيءَ زِيادَةٌ فِي الْكُفْرِ، يُضَلُّ بَهْ الَّذِينَ كَفَرُوا، يُحِلُّونَهُ عَامًا وَيُحَرِّمُونَهُ عَاما، لِيُواطِؤُا عِدَّةَ مَا حَرَّمَ اللَّهُ، فَيُحِلُّوا مَا حَرَّمَ اللَّهُ، وَيُحَرِّمُوا مَا أَحَلَّ اللَّهُ، وَإِنَّ الزَّمَانَ قَدْ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالْأَرْضَ، وَإِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلَاثَةٌ مُتَوَالِيَةٌ، وَرَجَبُ مُضَرَ ، الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ

மக்களே! மாதங்களை முன்பின்னாக மாற்றிக் கொள்வது இறை நிராகரிப்பிலேயே ஒரு கடுமையான இறை நிராகரிப்பு ஆகும். ஏனென்றால் ஆண்டுகளை அல்லாஹ் படைத்தான். ஒவ்வொரு ஆண்டுகளுக்கும் பன்னிரண்டு மாதங்களை அல்லாஹ் படைத்தான். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு காலத்தை அல்லாஹ் நிர்ணயம் செய்தான். அதன் அடிப்படையில்தான் மாதங்களும் சுழன்று கொண்டிருக்க வேண்டும். மனிதன் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப மாதங்களை முன்பின்னாக மாற்றிக் கொள்வது இறை நிராகரிப்பின் உச்சமாகும் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா 12மாதங்களை படைத்தவன்.நான்கு மாதங்களை புனித மாதங்களாக அல்லாஹ் அறிவித்திருக்கின்றான். அந்த புனித மாதங்களில் போர் செய்வதை அல்லாஹ் தடுத்திருக்கிறான். எல்லா காலங்களிலும் ஒரு முஸ்லிம் பாவம் செய்யக்கூடாது என்று இருக்கின்ற அந்த சட்டத்தோடு குறிப்பாக அந்த நான்கு மாதங்களில் மிகப் பேணுதலாக இருக்க வேண்டும்.

ஹக்குகளைப் பேண வேண்டும். யாருக்கும் எந்தவிதமான அநீதியும் செய்யக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டு இருக்கின்றான்.

ஆனால் அரபுகள் போர் செய்து கொண்டே இருப்பார்கள். ரஜப் உடைய மாதம் அல்லாஹ்வுடைய புனித மாதங்களில் ஒரு மாதம். ஆகவே அந்த மாதத்தை வேறு ஒரு மாதமாக ஆக்கிக்கொண்டு ரஜபை வேறு எங்கேயாவது தள்ளி வைத்து விடுவார்கள் அதுபோன்று தொடர்ந்து வரக்கூடிய துல்காயிதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம், இந்த மூன்று மாதங்களும் புனித மாதங்களில் தொடர்ந்து வரக்கூடிய மாதங்கள்.

இந்த துல்காயிதா உடைய மாதத்தை அவர்கள் தள்ளிப் போட்டுக் கொள்வார்கள். இப்படியாக மாதங்களை முன் பின்னாக தள்ளி மாற்றிக் கொண்டே இருப்பார்கள். தங்களுடைய சண்டைகளை யுத்தங்களை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்காக.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் மக்காவை வெற்றி கொண்டதற்குப் பிறகு அந்த நசீஆ என்ற அடிப்படையில்தான் மாதங்கள் வந்து கொண்டிருந்தன.

ஆகவேதான் ஒன்பதாவது ஹிஜ்ரியில் அல்லாஹ்வின் தூதர் ஹஜ்ஜுக்காக செல்ல வில்லை.ஹஜ்ஜுக்காக அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு, அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அனுப்பினார்கள் .

ஏனென்றால் அப்பொழுது நசீஆவின் அடிப்படையில் துல்ஹஜ் மாதம் என்பது அதனுடைய நேரத்தில் காலத்தில் வரவில்லை.

அல்லாஹ்வின் தூதர் இனி நசீஆ செய்யக் கூடாது என்று கட்டளை பிறப்பித்து விட்டு அடுத்த ஆண்டில் துல்ஹஜ்ஜுடைய மாதம்வரும்போது ஹஜ்ஜுக்காக வருகிறார்கள்.

அப்பொழுது தான் சொல்கிறார்கள்:மக்களே! வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த போது, காலம் எந்தெந்த அமைப்பில் இருந்ததோ, அதே அமைப்புக்கு திரும்ப வந்து விட்டது. மாதங்கள் அதே காலத்தில் இப்பொழுது நிகழ்ந்து விட்டன. இனி யாரும் மாதத்தை முன்பின்னாக மாற்றக்கூடாது. அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை 12மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் அரபுகளுக்கு மீண்டும் முந்திய காலத்தில் பேணப்பட்டு வந்த புனிதம் என்ற மரபை உறுதிப்படுத்தினார்கள்.

நூல் : இப்னு ஹிஷாம்

இதிலிருந்து நாம் தெரியக்கூடிய முக்கியமான விஷயங்களில் ஒன்று, நமது இஸ்லாமிய மார்க்கம் என்பது, நன்மைகளை உறுதிப்படுத்தக் கூடிய வரவேற்கக் கடிய மார்க்கம் இது.

ஆகவேதான் அல்லாஹ்வுடைய தூதர் அய்யாமுல் ஜாஹிலிய்யாவில் அரபுகளுக்கு மத்தியில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுடைய மார்க்கத்திலிருந்து என்னென்ன நற்குணங்கள் மீதம் இருந்தனவோ அந்த நற்பண்புகளை அல்லாஹ்வுடைய தூதர் ஏற்றுக்கொண்டார்கள். அதை வரவேற்றார்கள். அந்தப் பண்புகளை உறுதிப்படுத்தினார்கள். அதை மீண்டும் செழிப்படையச் செய்தார்கள். அதற்கு சிறப்புகளை சொன்னார்கள்.

அரபுகளின் குணத்தில் கொடைகொடுப்பது ஒரு குணம், விருந்தோம்பல் செய்வது ஒரு குணம். வீரம் ஒரு நல்ல குணம். இப்படியாக எத்தனையோ நல்ல குணங்கள் இருந்தன.

அந்த நல்ல குணங்களை எல்லாம் அல்லாஹ்வுடைய தூதர் இஸ்லாம் என்ற போர்வையில்அவற்றை போர்த்தி ஒரு சிறந்த ஒரு தர்பியாவை கொண்டு அதை வளர்த்தார்கள். அதற்குரிய சிறப்புகளை சொன்னார்கள்.

அதுபோன்றுதான் இந்த புனிதம் என்பது அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா எதை புனிதமாக மதிக்க சொன்னானோஎதை கண்ணியமாக நடத்த சொன்னானோ அதை புனிதமாக நடத்துவதும் கண்ணியமாக நடத்துவதும் ஈமானுடைய குணங்களில் ஒன்று.

அல்லாஹ் விரும்பக் கூடிய ஒரு காரியம் மாதங்களின் புனிதம். இது ஒரு கண்ணியம். குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதத்தின் புனிதம்,இது அல்லாஹ்விடத்தில் கண்ணியமானது. அல்லாஹ்வுடைய நபிமார்கள் அல்லாஹ்வால் கண்ணியமாக பேணபட்டவர்கள்; நடத்தப்பட்டவர்கள். அல்லாஹ் விரும்புகிறான் மக்களும் அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று.

அதுபோன்று பொருட்களில் காலங்களில் இடங்களில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் சில புனிதங்களை சில கண்ணியத்தை அல்லாஹ் வைத்திருக்கிறான்.

அல்லாஹ்வுடைய ஊராகிய மக்காபுனிதமானது என்று அல்லாஹு தஆலா அறிவித்திருக்கின்றான். அதை புனிதமான ஒன்றாக அல்லாஹ் ஆக்கி இருக்கிறான்.

முஃமின்கள் முஸ்லிம்கள் அதை புனிதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஒரு மதிப்பு மிக்கதாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுடைய வீடு, ஸஃபா மர்வா உடைய மலை, ஜம் ஜம் உடைய நீரூற்று, முஸ்தலிஃபாஅரஃபா மினா உடைய இடங்கள் இவையெல்லாம் அல்லாஹ்வுடைய புனித அடையாளச் சின்னங்கள்.

இவற்றை அல்லாஹ் தேர்ந்தெடுத்திருக்கிறான். அல்லாஹ் கண்ணியப்படுத்தி இருக்கிறான். அல்லாஹ்வோடு சேர்க்கப்பட கூடிய ஒன்று இவை.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா ஆகவேதான் பல இடங்களில் இதை வலியுறுத்தி சொல்கிறான்.

இதை கண்ணியப்படுத்துவது மூலமாக அடியார்களிடத்தில் அவன் என்ன எதிர்பார்க்கிறான்? அல்லாஹ்வுடைய கண்ணியம் அல்லாஹ்வுடைய மதிப்பு இவருடைய உள்ளத்தில் இருக்குமேயானால், அல்லாஹ் எதை கண்ணியப்படுத்த சொன்னானோ அதை இவன் கண்ணியப்படுத்துவான். அவன் நமது ஈமானை பரிசோதிக்கின்றான் .

சிலர், தங்களுடைய ஈமானில் தங்களுடைய அறிவைக்கொண்டு ஒரு அளவை ஏற்படுத்துவார்கள். தங்களுடைய ஒரு சிந்தனையைக் கொண்டு அவர்கள் ஒரு திட்டத்தை ஏற்படுத்துவார்கள். அதற்கேற்ப தான் ஈமானை பாவிப்பார்கள். அதற்கேற்ப தான் தங்களின் ஈமானை அவர்கள் அமைத்துக் கொள்வார்கள்.

இல்லை சகோதரர்களே, அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா எப்படி சொல்லியிருக்கின்றானோ அப்படித்தான் நம்முடைய ஈமான் இருக்க வேண்டும்.

அல்லாஹ் கண்ணியப்படுத்த வேண்டும் என்று சொன்னதை ஒரு முஃமின் கண்ணியப்படுத்தியே ஆகவேண்டும்.

ஒரு நபியின் கூட்டத்தார் ஒரு ஒட்டகத்தை அறுத்த காரணத்தால் எப்படிப்பட்ட வேதனையைக் கொண்டு அவர்கள் ஆளாக்கப்பட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் சாலிஹ் நபிக்கு அத்தாட்சியாக ஒரு ஒட்டகத்தை கொடுத்தான்.

فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا (13) فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْبِهِمْ فَسَوَّاهَا

அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி ‘‘இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாமலும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாமலும்) விட்டு விடுங்கள்'' என்று கூறினார். எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான்.(அல்குர்ஆன் 91:13,14)

வசனத்தின் கருத்து : அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா உடைய அந்த எச்சரிக்கையை பாருங்கள். அல்லாஹ் ஒரு ஒட்டகத்தை அனுப்பினான். மக்களின் பார்வைக்கு அது ஒரு சாதாரணமான ஒட்டகமாக இருக்கலாம். எல்லா ஒட்டகங்களும் அல்லாஹ் படைத்த ஒட்டகம் தான்.

ஆனால்,ஒரு நபிக்கு அற்புதமாக, தன்னுடைய ஒரு அடையாள சின்னமாக, எதுவும் இல்லாமல் எதையும் படைப்பதற்கு ஆற்றல் உள்ளவன் என்பதை வெளிப்படுத்துவதற்காக அல்லாஹ் கொடுத்த அந்த ஒட்டகம் என்பது சாதாரண ஒட்டகங்களை போன்று அல்ல.

சாதாரண ஒட்டகங்களை நீங்கள் அறுத்து சாப்பிடலாம். புசிக்கலாம். அதை நீங்கள் உங்களுடைய வாகனங்களாக பயன்படுத்தலாம். ஆனால் அல்லாஹ் எதை முஃஜிஸாவாக கண்ணியப்படுத்தி கொடுத்தானோ அதற்கு நீங்கள் எந்த வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது. அதை அடித்து விரட்டக் கூடாது. அதற்கென்று தண்ணீர் குடிப்பதற்கு ஒரு நாளை நீங்கள் ஒதுக்கிவிட வேண்டும்.

அது அந்தக் கிணற்றிலிருந்து குடிக்கக் கூடிய நாளில் நீங்கள் தண்ணீர் எடுக்கக்கூடாது என்ற அளவிற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு ஒட்டகத்தின் விஷயத்தில் கண்ணியம் பேணப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறான் என்றால் அந்த ஒட்டகத்தை அறுத்த மக்களை எச்சரிக்கின்றான்.

அவர்களுடைய இந்த பாவத்தின் காரணமாக அவர்களை அல்லாஹ் அழித்து நாசமாக்கி விட்டான்.

அல்லாஹ்வின் அடையாளமாக கொடுக்கப்பட்ட ஒரு ஒட்டகத்தின் விஷயத்தில், அல்லாஹ்வின் சட்டத்தை மீறியதால் ஒரு கூட்டம் அழிக்கப்படுகிறது என்றால், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதை விட எவ்வளவோ புனிதமானதாக கண்ணியமானதாக அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒரு அத்தாட்சியாக இறக்கி இருக்கக்கூடிய அவனுடைய கலாம் ஆகிய குர்ஆன், அவனுடைய மார்க்கம். அவனுடைய ஹலால் ஹராம் உடைய சட்ட வரம்புகளை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

இவற்றில் மக்கள் வரம்பு மீறி நடந்தால் இவர்கள் தண்டனைக்கு உரித்தானவர்கள்.

இன்றைய முஸ்லிம் சமுதாயம் சோதிக்கப்படுகிறது. எதிரிகள் எப்படி வேண்டுமானாலும் நாசப்படுத்தலாம் என்ற துணிவில் இருக்கிறார்கள்.

இந்த முஸ்லிம் சமுதாயத்தின் உடைய கண்ணியம், இவர்களுடைய உயிர் பொருள் இவற்றிற்கு எந்த மதிப்பும் இல்லையா? நாமெல்லாம் தொழுகிறோம்; அல்லாஹ்விடத்தில் கேட்கிறோம். ஆனால் விடிவுகாலம் இல்லையே! என்று யோசித்து பார்க்கிறோமா?

நம்மில் ஒரு பெரும் கூட்டம் அல்லாஹ்வுடைய ஷரீஅத்தை அவமதித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் அல்லாஹ்வுடைய வேதத்தை அவமதித்து கொண்டிருக்கிறார்கள். அதை படிக்காமல் புரியாமல் அதனுடைய சட்டங்களை பேணாமல் அதனுடைய ஹலால் ஹராம்களை மதிக்காமல் இருக்கிறார்கள்.

இதன் மூலம் அல்லாஹ் கோபப்படுவானா இல்லையா? ஒரு ஒட்டகத்தை அவமதித்த போது அதற்கு தொந்தரவு செய்தபோது அல்லாஹு ரப்புல் ஆலமீன் கோபப்பட்டான்.

எப்படிப்பட்ட தூதரை நமக்காக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அனுப்பியிருக்கிறான்! அந்த நபி கூறினார்கள் :

«مَثَلِي وَمَثَلُكُمْ كَمَثَلِ رَجُلٍ أَوْقَدَ نَارًا، فَجَعَلَ الْجَنَادِبُ وَالْفَرَاشُ يَقَعْنَ فِيهَا، وَهُوَ يَذُبُّهُنَّ عَنْهَا، وَأَنَا آخِذٌ بِحُجَزِكُمْ عَنِ النَّارِ، وَأَنْتُمْ تَفَلَّتُونَ مِنْ يَدِي»

எனக்கும் உங்களுக்கும் உதாரணம்,ஒரு குளிர் நேரத்தில் பயணம் செய்தபோது குளிர் காய்வதற்காக வெளிச்சத்திற்காக நெருப்பை எரிக்கிறான். அந்த நேரத்தில் விட்டில் பூச்சிகள் அந்த வெளிச்சத்தைப் பார்த்துவிட்டு அதில் விழுவதற்காக வெளிச்சத்தை நோக்கி வந்து அந்த நெருப்பில் விழுந்து எரிந்து கருகின்றன.

அந்த மனிதனோ இறக்கப்பட்டு அந்த விட்டில் பூச்சிகளை இங்குமங்குமாக திருப்பி விடுகிறான். அதிலிருந்து தடுக்க முயற்சிக்கிறான். ஆனால் அவையோ அந்த நெருப்பை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

நான் உங்களின் இடுப்பைப் பிடித்து நரகத்திலிருந்து இழுக்க முயற்சிக்கிறேன். ஆனால் நீங்களோ அதில்தான் விழுவேன் என்று சென்று கொண்டிருக்கிறீர்களே.

அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2285.

அல்லாஹ் கடமையாக்கிய ஃபர்லான கடமைகளில் மனம் ஈடுபடுவதில்லை. பாவங்கள் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன.

«حُجِبَتِ النَّارُ بِالشَّهَوَاتِ، وَحُجِبَتِ الجَنَّةُ بِالْمَكَارِهِ»

 

சொர்க்கம் மனதிற்கு விருப்பமற்ற காரியங்களைக் கொண்டு சூழப்பட்டிருக்கிறது. நரகம் இச்சையான காரியங்களைக் கொண்டு சூழப்பட்டிருக்கிறது.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 6487.

நஃப்ஸுக்கு எது ஆசையாக இருக்கிறது? எதில் மனம் ஈடுபடுகிறது? கொள்கையில் ஈடுபடக்கூடிய மனங்கள் எங்கே? அல்லாஹ்வின் வேதத்தை ஓதி கலைப் படுவதில் ஈடுபடக்கூடிய மனிதர்கள் எங்கே?

இரவுகளை இபாதத்களைக் கொண்டு அலங்கரிக்கக்கூடிய மக்கள் எங்கே? தான தர்மங்களை கொண்டு தங்களது செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்கக் கூடிய மக்கள் எங்கே?

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் இதைத்தான் எச்சரிக்கையாக சொல்கின்றார்கள்.

அல்லாஹ் புனிதமாக்கியதை புனிதமாக கருதுவது,அதை மதிப்பது,அதை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் சொன்னானோ அப்படி நடந்து கொள்வது.

இது அல்லாஹ்வின் கட்டளையை நாம் ஏற்பதில் அடங்கும்.இந்த மாதங்களின் கண்ணியத்திலிருந்து ஒட்டுமொத்த ஷரீஅத் உடைய கண்ணியத்தை நாம் அறிகிறோம்.

அல்லாஹ்வுடைய தூதர் அடுத்து சொல்கிறார்கள் :

أَيُّهَا النَّاسُ، فَإِنَّ لَكُمْ عَلَى نِسَائِكُمْ حَقًّا، وَلَهُنَّ عَلَيْكُمْ حَقًّا، لَكُمْ عَلَيْهِنَّ أَنْ لَا يُوطِئْنَ فُرُشَكُمْ أَحَدًا تَكْرَهُونَهُ، وَعَلَيْهِنَّ أَنْ لَا يَأْتِينَ بِفَاحِشَةِ مُبَيَّنَةٍ، فَإِنْ فَعَلْنَ فَإِنَّ اللَّهَ قَدْ أَذِنَ لَكُمْ أَنْ تَهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَتَضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرَّحٍ [2] ، فَإِنْ انْتَهَيْنَ فَلَهُنَّ رِزْقُهُنَّ وَكُسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ وَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا، فَإِنَّهُنَّ عِنْدَكُمْ عَوَانٌ [3] لَا يَمْلِكْنَ لِأَنْفُسِهِنَّ شَيْئًا، وَإِنَّكُمْ إنَّمَا أَخَذْتُمُوهُنَّ بِأَمَانَةِ الله، واستحللتم فزوجهنّ بِكَلِمَاتِ اللَّهِ

மக்களே!அறிந்து கொள்ளுங்கள். உங்களது பெண்களுக்கு உங்கள் மீது உரிமை இருக்கிறது.

(பெண்களுக்கு உரிமையே இல்லை. எந்த விருப்பமும் இல்லை. எந்த நாட்டமும் இல்லை. அவர்கள் ஒரு படைப்பா? என்றுகூட சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த யூத சமுதாயத்திற்கு மத்தியில் ரோம பாரசீக கலாச்சாரத்திற்கு மத்தியில் மிகப்பெரிய ஒரு சமுதாய புரட்சியை அறிவிப்பு செய்கிறார்கள். அரபு மக்கள் கூட அப்படித்தான் விளங்கி வைத்திருந்தார்கள். பெண் கொலை, பெண் குழந்தைகளை புதைப்பதைக் கொண்டு கண்ணியம் கருதிக் கொண்டிருந்தார்கள். பெண் குழந்தைகள் பிறப்பதை கேவலமாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். )

நபி சொல்கிறார்கள்; உங்களது பெண்களுக்கு உங்கள் மீது ஹக்கு -உரிமை இருக்கிறது. இருக்கிறது. உங்களுக்கும் அவர்கள் மீது ஹக்கு -உரிமை இருக்கிறது.

அடுத்து சொல்கிறார்கள் :

ஆண்களே! நீங்கள் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன தெரியுமா? அவர்கள் உங்களது இல்லங்களில் நீங்கள் விரும்பாதவர்களை (அந்நியர்களை) உங்களது வீடுகளுக்குள் அனுமதிக்கக் கூடாது.

ஏன் நெருக்கமானவர்களாக இருந்தாலும் கூட, நீங்கள் யாருக்கு அனுமதி தருகிறீர்களோ அவர்கள் மட்டும்தான் உங்களது இல்லங்களுக்கு வருவதற்கு, உங்கள் இல்லங்களில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆபாசமான அசிங்கமான விபச்சாரம் கொண்ட செயல்களை அவர்கள் அறவே செய்யக் கூடாது. அப்படி அவர்கள் செய்து விட்டால் அவர்கள் தவறான காரியத்தைச் செய்து விட்டார்கள். அதுபோன்ற பழக்கத்திற்கு அவர்கள் ஆளாகி விட்டார்கள்.

விபச்சாரம் என்பது தண்டிக்கப்பட வேண்டிய தண்டனை, நிறைவேற்றப்பட வேண்டிய குற்றம். ஆனால் யாராவது ஒரு அந்நிய ஆணிடம் பேசி விட்டாளோ, அல்லது ஒரு அன்னிய ஆணின் சந்திப்பை அந்தப் பெண் செய்து விட்டாலோ அல்லாஹ்வுடைய தூதர் சொல்கிறார்கள்:

உங்களுக்கு அல்லாஹ் அனுமதி கொடுத்திருக்கிறான். நீங்கள் அவர்களை படுக்கையில் ஒதுக்கி வையுங்கள். காயம் ஏற்படாமல் அவர்களை அடித்து அவர்களைத் திருத்தப் பாருங்கள்.

அவர்கள் இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி திருந்திக் கொண்டு, உங்களுக்கு கட்டுப்பட்டு, நல்ல ஒழுக்கமுள்ள பத்தினியான மனைவியாக அவர்கள் வாழ ஆரம்பித்து விட்டால் அவர்களுக்குரிய ரிஸ்க்கை கண்டிப்பாக நீங்கள் கொடுக்க வேண்டும். அவர்களுக்குரிய உடையை அழகிய முறையில் நீங்கள் கொடுக்க வேண்டும்.

அந்தப் பெண்களை அல்லாஹ் உங்கள் வாழ்க்கைக்குத் துணைகளாக உதவியாளர்களாக கொடுத்திருக்கிறான். அவர்கள் தங்களுக்கென்று எந்த விருப்பத்தையும் வைத்துக் கொள்வதில்லை. நீங்கள் எங்கே தங்க வைக்கிறீர்களோ அங்கே தங்குகிறார்கள். நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதை உண்ணுகிறார்கள்; உடுத்துகிறார்கள்.

இப்படி தன்னையே உங்களுக்காக அர்ப்பணித்து வந்திருக்கக்கூடிய உங்களது மனைவிமார்கள், அல்லாஹ்வின் பாதுகாப்பைக் கொடுத்து நீங்கள் அவர்களை உங்களது இல்லங்களுக்கு அழைத்து வந்திருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வாக்கை கூறி மார்க்க அடிப்படையில் அவர்களிடத்தில் சுகம் பெறுவதை நீங்கள் உரிமையாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

இப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தத்திற்குப் பிறகு உறுதிமானத்திற்குப் பிறகு அல்லாஹ் உங்களிடத்தில் அமானிதமாக கொடுக்கப்பட்ட அந்தப் பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு நீங்கள் நன்மையை நாடுங்கள்.

நூல் : இப்னு ஹிஷாம்

எப்படிப்பட்ட அறிவுரையை சொல்கிறார்கள் பாருங்கள். பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். பெண்கள் விஷயத்தில் நீங்கள் வரம்பு மீறி அவர்களிடத்தில் இல்லாத குறைகளை சுமத்துவதில் இருந்து, அவர்களால் முடியாத செயலை அவர்கள் மீது சுமத்துவதில் இருந்து விலகிக்கொள்ளுங்கள்.

உலகத்தில் எத்தனையோ தத்துவங்களை பார்க்கலாம். இப்படி ஒரு அழுத்தமான ஆழமான சுருக்கமான வார்த்தையில் வாழ்க்கைனுடைய அத்தனை அம்சங்களுக்கும் தேவையான அறிவுரைகளை ரசூலுல்லாஹ் அவர்களுடைய இறுதிப் பேருரையில் தவிர வேறு எங்கும் காண முடியாது.

அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என்றால்அப்போது அங்கே அல்லாஹ் ஒரு பெரிய பொறுப்பை வைத்திருக்கிறான். சில கடமைகளை வைத்திருக்கிறான் என்று அதில் எப்போதும் அச்ச உணர்வில் இருக்க வேண்டும்.

இன்று பெரும்பாலும் ஆண்களுடைய நிலை, பெண்களை எப்படி வேண்டுமானாலும் ஏசலாம், திட்டலாம், எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம், எப்படி வேண்டுமானாலும் அடிக்கலாம் என்று ஒரு மிருகத்தனமான மடத்தனமான கொள்கையில் இருக்கிறார்கள். இவர்களுக்கும் இஸ்லாமுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அல்லாஹ்வுடைய தூதர், நீங்கள் அவர்களுக்கு நன்மையே நாடுங்கள் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு நன்மையை நாடுங்கள் என்று சொல்கிறார்கள்.

இத்தகைய அழகிய அறிவுரைகள் அடங்கிய ரசூலுல்லாஹ் அவர்களின் அரஃபா உடைய பேருரையை நாம் படித்து உணர்ந்து அதன்படி நம் வாழ்க்கையில் செயல்பட கடமைப்பட்டிருக்கிறோம்.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் அதற்கான தவ்ஃபீக்கை தருவானாக.

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/