HOME      Khutba      அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 1/9) | Tamil Bayan - 343   
 

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 1/9) | Tamil Bayan - 343

           

அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை (அமர்வு 1/9) | Tamil Bayan - 343


அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை

ஜுமுஆ குத்பா தலைப்பு : அரஃபா பெருவெளியில் இறுதி இறைத்தூதரின் இறுதிப்பேருரை பகுதி -1

வரிசை : 343

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 03-10-2014 | 09-12-1435

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அக்கம் பக்கம் திரும்பாமல் செவி தாழ்த்தி கேட்கக்கூடிய அந்த ஸஹாபாக்களுக்கு மத்தியில் உரையாற்றும் போது, ரசூலுல்லாஹ் அவர்கள், எனது பேச்சை நீங்கள் செவி தாழ்த்திக் கேளுங்கள் என்று சொல்கிறார்கள்.

அடுத்து சொல்லப்படக்கூடிய செய்தி எவ்வளவு ஆழமானது, அவசியமானது, முக்கியமானது என்பதை உணர்த்துவதற்காக இப்படி சொல்கிறார்கள்,

நான் உங்களுக்கு சில விஷயங்களை இன்று விவரிக்கப் போகிறேன் என்று.

ஆம், தங்களது 23ஆண்டுகால நபித்துவத்தில், அவர்கள் செய்த இஸ்லாமிய பிரச்சாரத்தின், குர்ஆனின் பிரச்சாரத்தின், சுன்னாவின் பிரச்சாரத்தின், தவ்ஹீதின் பிரச்சாரத்தின்,சீர்திருத்தத்தின் பிரச்சாரத்தின், ஒட்டுமொத்த சுருக்கத்தை அந்தப் பேருரையில் நபியவர்கள் சொல்லப் போகிறார்கள்.

சில நேரங்களில் மாணவர்களுக்கு இப்படியும் சில சிந்தனைகள் இருக்கலாம். தனது ஆசிரியர் தன்னிடத்தில் இருக்கும் பொழுதுஅந்த ஆசிரியருடைய மதிப்பை தெரியாமல் தான் மாணவர்கள் பலர் இருப்பார்கள்.

கல்விமான் தங்களுக்கு மத்தியில் இருக்கும் பொழுது, அந்த கல்விமானுடைய மதிப்பை உணராமல், கண்ணியத்தை உணராமல்மக்கள் இருப்பார்கள்.

அந்த கல்விமான் இறந்ததற்குப் பிறகு, ஆஹா! நமது உஸ்தாத் இறந்து விட்டாரே, நமது அறிஞர் இறந்து விட்டாரே, இன்னின்ன விஷயங்களை அவரிடத்தில் படித்திருக்கலாமே, இன்னின்ன விஷயங்களுக்கு உண்டான இல்மை அவரிடத்தில் கேட்டிருக்கலாமே, இன்னின்ன பிரச்சனைகளுக்கு உண்டான தீர்ப்பை அவரிடமிருந்து தெரிந்திருக்கலாமே என்று அவர்கள் வருத்தப்படுவார்கள்.

இறையருளின் மதிப்பு, அது இல்லாமல் போகும்போதுதான்தெரியும். என்று சொல்லப்படும். அப்படித்தான் ஒரு ஆலிமுடைய மதிப்பை, அந்த ஆலிம் இல்லாத போது தான் தெரிந்து கொள்ள முடியும்.

அல்லாஹ்வுடைய தூதர் மனித குலத்தில் ஆலிம்களுக்கெல்லாம் பெரிய ஆலிம்,அவர்களை விட இந்த ஷரீஅத்தை அறிந்தவர்கள், இந்த ஷரீஅத்தை சரியான முறையில் போதித்து கொடுக்கக்கூடியஒரு ஆசிரியர் இருக்க மாட்டார்.

முஆவியா இப்னு ஹகம் சொல்கிறார்கள்;

«مَا رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ وَلَا بَعْدَهُ أَحْسَنَ تَعْلِيمًا مِنْهُ»

அல்லாஹ்வுடைய தூதரை விட சிறந்த ஒரு ஆசிரியரை நபிக்கு முன்னாலும் நான் பார்த்ததில்லை, நபிக்குப் பின்னாலும் நான் பார்த்ததில்லை.

அறிவிப்பாளர் : முஆவியா இப்னு ஹகம்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 537.

வஹ்யினால் பாடம் கற்பிக்க கூடிய ஒரு ஆசிரியர். ஜிப்ரீலைக் கொண்டு ஒழுக்கம் பெற்று, கல்வியைப் பெற்று, குர்ஆனின் ஞான பொக்கிஷங்களை மக்களுக்கு சுன்னாவாக சொல்லக்கூடிய ஒரு பேராசிரியர்.

அவர்கள் சொல்கிறார்கள்;

«لَعَلِّي لَا أَرَاكُمْ بَعْدَ عَامِي هَذَا»

நான் அடுத்த ஆண்டு உங்களை சந்திக்க முடியாமல் போகலாம். இது போன்ற ஒரு வாய்ப்பு எனக்கு அடுத்து ஏற்படாமல் போகும்.

நூல் : அத்தாரமி - 231

என்று சொல்லிய ரசூலுல்லாஹி, சஹாபாக்களுக்கு மிகப்பெரிய ஒரு உணர்வை தூண்டுகிறார்கள்.

நம்மிடம் இருக்கக்கூடிய சாதாரணமான நேசமாசஹாபாக்கள் உள்ளத்தில் நபிக்கு இருந்தது? எதை வேண்டுமானாலும் இழக்கத் தயார். யாரை வேண்டுமானாலும் பார்க்காமல் இருக்க தயார்.

ஆனால், நபியை இழக்கத் தயாரில்லை. நபியை பார்க்காமல் இருக்கத் தயாரில்லை. அப்படிப்பட்ட ஒரு ஆழமான பாசம் உடையவர்கள் தான் சஹாபாக்கள்.

ஒரு சஹாபி ஓடோடி வருகிறார், யா ரசூலுல்லாஹ்! நான் நிம்மதி இழந்து விட்டேன். ஏன் தோழரே? சொல்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே! இந்த உலகத்தில் நாங்கள் இருக்கும் பொழுது, எப்பொழுதெல்லாம் உங்களை பார்க்க வேண்டும் என்று பிரியம் ஏற்படுகிறதோ, வந்து பார்த்துக் கொள்கிறோம். நான் என் குடும்பத்தினரிடத்தில் திரும்பிச் செல்கிறேன். எனது மனைவி மக்களோடு இருக்கிறேன்.

ஆனால், திடீரென்று எனக்கு உங்கள் மீது உண்டான பாசம் மிகைத்து விடும் போது, உங்களைப் பார்க்க ஆசைப்பட்டு, நான் மஸ்ஜிதுக்கு ஓடோடி வருகிறேன். உங்களை எப்படியாவது பார்த்துவிட்டு நான் திரும்பி விடுகிறேன். என் மனம் நிம்மதி பெறுகிறது.

ஆனால், நாளை மறுமையில் நான் சென்று விட்டால், அல்லாஹ் எனக்கு சொர்க்கத்தையும் வழங்கி விட்டால், நீங்களோ சொர்க்கத்தில் உயர்ந்த தரஜாக்களில் நபிமார்களோடு,ரசூல்மார்களோடு இருக்கும் பொழுது, சாதாரண அடியானாகிய நான் உங்களை அங்கே பார்க்கவில்லை என்றால் என்னால் எப்படி இருக்க முடியும்?

(அந்தத் தோழர் உடைய பாசத்தை பாருங்கள்!எப்போதுமே மறுமையை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவர்கள். எப்பொழுதுமே அல்லாஹ்வைப் பற்றி, அல்லாஹ்வுடைய தூதரை பற்றி, சொர்க்கத்தைப் பற்றி நினைத்துக் கொண்டே வாழ்க்கையை கழித்தவர்கள். நரகத்தை பற்றி உண்டான அச்சத்தில் வாழ்க்கையை கழித்தவர்கள். ஆஃகிரத்தை பற்றிய விசாரணையை நினைத்தே வாழ்க்கையை கழித்தவர்கள்.)

ரசூலுல்லாஹ் அவர்களால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. அமைதியாக இருக்கிறார்கள். அர்ஷுடைய இறைவனாகிய அல்லாஹ் பதிலளிக்கிறான்,

وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப் போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தான் மிக அழகான தோழர்கள். (அல்குர்ஆன் 4 : 69)

வசனத்தின் கருத்து : அல்லாஹ்வுக்கு முழுமையாக யார் கட்டுப்பட்டு நடக்கிறாரோ, அல்லாஹ்வுடைய தூதருக்கு யார் முழுமையாக கட்டுப்பட்டு நடக்கிறாரோ, கண்டிப்பாக அவர்கள் நபிமார்களோடு இருப்பார்கள், அவர்கள் சித்திக்குகளோடு இருப்பார்கள். ஷஹீதுகளோடு இருப்பார்கள். ஸாலிஹீன்களோடு அவர்கள் இருப்பார்கள். சிறந்த தோழர்கள், சிறந்த நண்பர்கள் இவர்கள்தான். கண்டிப்பாக சொர்க்கத்தில் தரஜாக்கள் இருக்கின்றன.

அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் முழுமையாக கட்டுப்பட்டவர்கள், எப்போது வேண்டுமானாலும் ரசூலுல்லாஹ்வை பார்க்கலாம். நபிமார்களில் யாரை விரும்புகிறாரோ, அவர்களை பார்க்கலாம். அப்படிப்பட்ட நெருக்கத்தை, அப்படிப்பட்ட தரஜாவைஅல்லாஹ் அவர்களுக்கு வழங்குவான்.(1)

நூல் : முசன்னஃப் இப்னு அபீ ஷைபா, எண் : 31774.

அந்தத் தோழர்களுக்கு மத்தியில் நபியவர்கள் சொல்கிறார்கள், நான் ஒரு கால் அடுத்த ஆண்டு உங்களைச் சந்திக்காமல் போகலாம். நபியவர்கள் இப்படி சொன்னார்கள் என்றால், அது நடந்தே தீரும் என்று பொருள்.

முஆதை பார்த்துச் சொன்னார்கள்;

«يَا مُعَاذُ، إِنَّكَ عَسَى أَنْ لَا تَلْقَانِي بَعْدَ عَامِي هَذَا، لَعَلَّكَ أَنْ تَمُرَّ بِمَسْجِدِي وَقَبْرِي»

முஆத்! நான் உன்னை இப்போது அனுப்புகிறேன். அடுத்த முறை நீ இங்கு வரும்போழுது, என்னை நீ சந்திக்க மாட்டாய், எனது கப்ருக்கு அருகில் எனது மஸ்ஜிதுக்கு அருகில்தான் நீ செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று. இதை கேட்டவுடன் முஆத் அழுகிறார். (2)

அறிவிப்பாளர் : முஆத்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு ஹிப்பான், எண் : 647.

இப்படி ஒரு செய்தியை நபியவர்கள் சொல்கிறார்கள் என்றால், கண்டிப்பாக அது நடக்கப் போகிறது என்று பொருள்.

இப்படி கவனங்களை திருப்பியதற்குப் பிறகு ரசூலுல்லாஹ் சொல்கிறார்கள்; எல்லா மக்களையும் அழைத்து, நபிக்கு முன்னாள் ஈமான் கொண்ட சஹாபாக்கள், அரபியை விளங்கக்கூடிய அந்த மக்கள், முஹாஜிர்கள், அன்சாரிகள், மக்காவாசிகள், மதீனாவாசிகள், அதைச் சுற்றியுள்ள மக்கள் இருந்தாலும், நபியினுடைய நோக்கம்,உலக மக்களையெல்லாம் அவர்கள் முன்னோக்கி பேசுகிறார்கள்.

அல்லாஹ்வினுடைய தூதுச் செய்தியைகியாம நாள் வரை வரக்கூடிய எல்லா மக்களுக்கும் பிரகடனப்படுத்துவதற்காக, ஓ மக்களே! என்று பொதுவாக எல்லோரையும் அழைக்கிறார்கள்.

ஏற்றுக்கொண்டவர்களே, ஏற்றுக் கொள்ளாதவர்களே, நம்பிக்கை கொண்டவர்களே, மறுத்தவர்களே, யாராக இருந்தாலும் சரி, உலக மக்களே! இதுதான் சட்டம். இதுதான் நியதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் நிம்மதியாக வாழ முடியும்.

நபியவர்கள் இப்படி பொதுவாக மக்களை அழைக்கும்போது,அங்கு கேட்கக் கூடிய மக்கள் முஸ்லிம் மக்கள். நபியை ஈமான் கொண்ட முஃமினான மக்கள்.

அந்த மக்களை ரசூலுல்லாஹ் முன்வைத்து உலக மக்களுக்கெல்லாம் சட்டம் சொல்கிறார்கள்;

«إِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ حَرَامٌ عَلَيْكُمْ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا»

உங்களுடைய உயிர்கள், உங்களுடைய இரத்தங்கள், உங்களுடைய செல்வங்கள், உங்களுக்கு புனிதமானது, கண்ணியமானது, உங்களுக்கு தடுக்கப்பட்ட ஒன்று.

அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1218.

ஹராம் என்ற வார்த்தை,மார்க்க சட்டத்தின் அடிப்படையில் இரண்டு இடங்களில் பயன்படுத்தப்படும். புனிதம், கண்ணியம், மிகமிக உயர்வு என்ற அர்த்தத்திலும்ஹராம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்.

அல் மஸ்ஜிதுல் ஹராம் என்று சொல்லப்படும். புனிதமான, கண்ணியமான, மிக உயர்வான மஸ்ஜித்.

இன்னொன்று, அல்லாஹ் எந்த ஒன்றை உண்ண கூடாதென்று, செய்யக்கூடாதென்று தடுத்துவிட்டானோஅந்த செயலில் உள்ள தீமையின் காரணமாகஅதற்கும் ஹராம் என்று சொல்லப்படும்.

மதுவை ஹராம் என்று சொல்லப்படும். பன்றியை உண்பது ஹராம் என்று சொல்லப்படும். அது தடுக்கப்பட்டது, அசுத்தமானது என்ற அர்த்தத்தில்.

அல்லாஹ்வுடைய தூதர் இங்கு சொல்கிறார்கள்; உங்களுடைய உயிர்கள், உங்களுடைய செல்வங்கள், உங்களுக்கு புனிதமானவை. உங்களுக்கு அது தடுக்கப்பட்டவை. ஒருவர் மற்றவரின் உயிரை சேதப்படுத்தக்கூடாது. ஒருவர் மற்றவரைக் கொன்று விடக் கூடாது. காயப்படுத்தக் கூடாது. ஒருவர் மற்றவரின் செல்வத்தை அவருடைய விருப்பம் இல்லாமல் எடுத்து கொள்ளக் கூடாது.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுடைய செல்வத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால், இரு தரப்பிலும் பரஸ்பரமான ஒரு வியாபாரம் இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கல் இருக்க வேண்டும். அல்லது அன்பளிப்பு இருக்க வேண்டும் அல்லது வாரிசுரிமை இருக்க வேண்டும்.

இப்படி இல்லாமல் எந்த ஒரு அடிப்படையிலும் சரி, ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுடைய செல்வத்தை அடைவானேயானால்அது ஹராமானது. தடுக்கப்பட்ட ஒன்று. அல்லாஹ்விடத்தில் பாவமான ஒன்று.

மேலும், ஒரு முஸ்லிமுடைய உயிர் கொல்லப்பட வேண்டும் என்றால், அதற்குரிய சட்டங்கள் இருக்கின்றன. அந்த சட்டங்களை தவிர, அதை மீறி யாராவது ஒருவன் ஒரு முஸ்லிமுடைய உயிரை தொடுவானேயானால், நாளை மறுமையில் மிகப்பெரிய ஒரு அவல நிலைக்கு அவன் ஆளாகுவான்.

"يَجِيءُ الْمَقْتُولُ مُتَعَلِّقًا بِالْقَاتِلِ، يَقُولُ: يَا رَبِّ، سَلْ هَذَا فِيمَ قَتَلَنِي؟"

கொல்லப்பட்ட மனிதன் நாளை மறுமையில் அந்த நிலையில் எழுப்பப்படுவான். அவருடைய உடலில் இருந்து இரத்தங்கள் பீறிட்டு ஓடிக்கொண்டிருக்கும். அவன் தன்னை கொன்றவனை பிடித்துக்கொண்டு, யா அல்லாஹ்! இவன் தான் என்னை கொன்றவன். இவன் என்னை எதற்காக கொன்றான் என்று கேள்! என்று அந்த மனிதன் சொல்லிக்கொண்டே இருப்பான். (3)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 1941.

கொல்லப்பட்ட மனிதனை, அல்லாஹ் அவன் மீது கருணை காட்டி, அவனை அப்படியே அர்ஷுக்கு நெருக்கமாக்கி கொண்டிருப்பான்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னார்கள் :

«أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ فِي الدِّمَاءِ»

முதல் முதலாக படைப்புகளுக்கு மத்தியில்அல்லாஹ் தீர்ப்பு வழங்கக் கூடிய ஒரு விஷயம், இரத்தங்களை பற்றித்தான். உயிர்களைப் பற்றி தான் இருக்கும்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1678.

ஆகவேதான், அல்லாஹ் சொல்லக்கூடிய வசனத்தின் விதத்தைப் பாருங்கள்;

وَمَا كَانَ لِمُؤْمِنٍ أَنْ يَقْتُلَ مُؤْمِنًا إِلَّا خَطَأً

தவறுதலாகவே தவிர, ஓர் இறை நம்பிக்கையாளரை (முஃமினை) கொலை செய்வது வேறு எந்த இறை நம்பிக்கையாளருக்கும் ஆகுமானதல்ல. (அல்குர்ஆன் 4 : 92)

வசனத்தின் கருத்து : ஒரு இறைநம்பிக்கையாளன், இன்னொரு இறை நம்பிக்கையாளனை கொள்வது என்பது சாத்தியமற்ற ஒன்று, நடக்க முடியாத ஒன்று, சாத்தியமற்ற ஒன்று. ஆனால், தவறாக ஏற்பட்டு விட்டாலே தவிர.

வேட்டையன் கொள்வதற்காக அம்பு எறிகிறான், திடீரென அங்கு ஒருவன் வந்து, அவன் மீது அம்பு பட்டு விடுகிறது. இந்த மாதிரி தவறான ஒரு நிலையில் கொல்லப்பட்டாலே தவிர, ஒரு முஃமின் இன்னொரு முஃமினை கொள்வதற்கு எந்தவிதமான வழியும் இல்லை.

ஆனால், இன்று நம் முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு வகுப்பினரை பாருங்கள். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்ட வேண்டும்.

தன்னுடைய கொள்கைக்கு எதிரானவர்கள், தன்னுடைய வாதத்திற்கு மாற்றமானவர்கள், தான் நம்பக்கூடிய அல்லது தான் செய்யக்கூடிய பிரச்சாரத்திற்கு அவர்கள் எதிர் அணியில் இருக்கிறார்கள் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக, நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை, தொழக்கூடிய மக்களைஅவர்கள் கொன்று குவிக்கிறார்கள்.

பொது இடங்களில் கொன்று குவிக்கிறார்கள். சாலைகளில் கொன்று குவிக்கிறார்கள். அவர்களுடைய இல்லங்களில் கொன்று குவிக்கிறார்கள். நாளை மறுமையில் அவர்கள் அல்லாஹ்விடத்தில் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா கோபப்படக் கூடிய செயல்களில் ஒன்று, உயிர்கள் கொல்லப்படும் போது,

وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ

(எவரையும் கொலை செய்வது ஆகாதென்று) அல்லாஹ் தடுத்திருக்க, நீங்கள் எம்மனிதனையும் நியாயமின்றி கொலை செய்து விடாதீர்கள்.(அல்குர்ஆன் 17:33)

அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை அதற்குரிய ஹக்கு இல்லாமல் நீங்கள் கொல்லாதீர்கள் என்றுஅல்லாஹ் கடுமையாக சட்டம் சொல்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னார்கள் :

«مَنْ صَلَّى صَلاَتَنَا وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا وَأَكَلَ ذَبِيحَتَنَا»

யார் நாம் அறுக்கக் கூடிய பிராணியை சாப்பிட்டு, நாம் தொழக் கூடிய தொழுகை முறையில் தொழுது, நமது கிப்லாவை முன்னோக்குகிறாரோ, அவருடைய உயிர், பொருள் பாதுகாக்கப் பட்டு விட்டது.(4)

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 391.

எந்த கருத்து வேற்றுமையாக இருந்தாலும் சரிஅல்லது எந்தவிதமான ஒரு பிரிவாக இருந்தாலும் சரி, அவர்களுடைய உயிரை நாம் ஹலாலாக்கி கொள்வதற்கான வழி இல்லை

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் சொல்கிறார்கள்; இது இந்த ஒரு நேரத்திற்கு மட்டும் உள்ள சட்டமல்ல, உங்களது ரப்பை நீங்கள் சந்திக்கின்ற வரை, மறுமை நாள் வரை இதுதான் உங்களுக்கு சட்டம்.

உங்களது உயிர், பொருள் உங்களுக்கு பாதுகாப்பானது, கண்ணியமானது, புனிதமானது, தடுக்கப்பட்ட ஒன்று. உங்களது ரப்பை நீங்கள் சந்திக்கின்ற வரை என்று கூறிய ரசூலுல்லாஹ், அடுத்துஇதற்கு உதாரணம் சொல்கிறார்கள்;

நீங்கள் எப்படி உங்களுடைய இந்த நாளானஅரஃபாவுடைய நாளை புனிதமாக மதிக்கிறீர்களோ, உங்களுடைய இந்த துல்ஹஜ் மாதத்தை புனிதமாக கருதுகிறீர்களோ, உங்களுடைய இந்த மக்கா நகரத்தை நீங்கள் புனிதமாக கருதுகிறீர்களோ, அதுபோன்றுஒரு முஃமினுடைய உயிர், ஒரு முஃமினுடைய பொருள் தடுக்கப்பட்டது.

அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1218.

இன்று முஸ்லிம்களில் பலர், மார்க்கம் என்றால் அதற்கு ஒரு மரியாதை வைத்திருப்பார்கள். குர்ஆனுக்கு ஒரு மரியாதை வைத்திருப்பார்கள். வணக்க வழிபாட்டுக்கு ஒரு மரியாதை வைத்திருப்பார்கள்.

ஆனால், அவர்களை அப்படியே ஒரு பொருளாதாரத்தில் கொண்டு வந்து விட்டால், ஒரு வியாபாரத்திற்கு கொண்டு வந்து விட்டால், ஒரு அமானிதத்தில் அவர்களைக் கொண்டு வந்து விட்டால், அவர்கள் ஒரு சதவீதம் கூட இறையச்சத்தின் வெளிப்பாடு இல்லாத மக்களாக, மக்களின் சொத்துக்களை ஹராமான முறையில் தவறான முறையில் பயன்படுத்தக் கூடிய மக்களாக, அபகரிக்க கூடிய மக்களாக இருப்பதைப் பார்க்கிறோம்.

வியாபாரத்தில் பொய்,மோசடி, நிலுவையில் குறைபாடு. இன்னும் எப்படியெல்லாம் அல்லாஹ் தடுத்த விஷயங்களில் தங்களது செல்வத்தை தேடிக் கொள்கிறார்கள் என்றால், இவர்களுக்கும் தீனுக்கும், இவர்களுக்கும் இஸ்லாமுக்கும்எந்த சம்பந்தமும் இல்லாததைப் போன்று.

ஆகவேதான், ஒரு மனிதன் தொழுவதற்கு ஒரு அளவு ஈமான் தேவை என்றால், அதைவிட வியாபாரத்தில் தொழில்துறையில், ஹலால் ஹராமை பேணுவதற்குஅதைவிட அதிகமான பலமான ஈமான் தேவை.

ஒரு மனிதன் ஆட்சி செய்ய வேண்டும், அரசாங்கம் நடத்த வேண்டும் என்றால், தொழில் துறைக்கு தேவையான ஈமானை விட, இபாதத்துக்கு தேவையான ஈமானை விட, அரசாங்கம் நடத்துவதற்கு ஈமான் தேவை.

அல்லாஹ்வுடைய தூதர் இந்த விஷயத்தில் மிகத்தெளிவான ஒரு நிலைப்பாட்டை முஸ்லிம்களுக்குச் சொன்னார்கள்.

ஒரு உயிர், ஒரு பொருள் புனிதமாக கருதப்படவேண்டும். அது கண்ணியமாக மதிக்கப்பட வேண்டும். அல்லாஹ் ஹலாலாக்கிய வழிகளை தவிர, வேறு வழிகளில் இவற்றில் ஒரு முஸ்லிம் ஒரு மனிதன் செயல்படக் கூடாது என்பதை தெளிவுப்படுத்தி விட்டுதான் அடுத்த உரைக்கே செல்கிறார்கள்.

அடுத்த உரையிலும் மக்களுக்கு மத்தியில் நிம்மதியான வாழ்க்கைக்குண்டான வழிகாட்டல்கள் தான் உள்ளன.

ஏனென்றால், இறை வழிபாட்டை செய்ய வேண்டுமென்றால் நீங்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் படி அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு ஒரு உண்மையான வணக்கசாலியாக, நல்லமனிதனாக வாழவேண்டுமென்றால், நிம்மதியான உலக வாழ்க்கை தேவை. ஒரு பாதுகாப்பான உலக வாழ்க்கை தேவை. ஒரு பரஸ்பர அன்புடைய உலக வாழ்க்கை தேவை.

அப்படிப்பட்ட உலக வாழ்க்கை இல்லாமல், அல்லாஹ்வை இபாதத் செய்ய முடியாது. நிம்மதியாக அல்லாஹ்வை வணங்க முடியாது.

ஆகவே, ரசூலுல்லாஹ் அல்லாஹ்வுடைய ஹக்குகளை கூறுவதற்கு முன்பாக, அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளை பற்றி சொல்வதற்கு முன்பாக, இந்த சமுதாயம் எப்படி உருவானால் அல்லாஹ்வுடைய ஹக்குகளை அவர்கள் நிலைநிறுத்த முடியும், அல்லாஹ்வுடைய இபாதத்துகளை அவர்கள் சரியாக செய்ய முடியும் என்பதற்காக, அடியார்கள் அடியாருக்கு செய்யக்கூடிய ஹக்குகளை கூறி ஆரம்பிக்கிறார்கள்.

பிறகு சொல்கிறார்கள்; “உங்களிடம் யாராவது நம்பி ஒரு அமானிதத்தை ஒப்படைத்தால், அந்த அமானிதத்தை அவர் அழகிய முறையில், தன்னிடத்தில் ஒப்படைத்தவரிடத்தில், அதை அவர் திரும்ப கொடுத்து விடட்டும்,

நூல் : அத்தாரமி - 231

அமானிதத்தைப் பேணுவது, இறையச்சத்தை உடைய முஃமின்கள், தக்வாவுடைய முஃமின்களுடைய அடையாளம்.

அமானிதத்தைப் பேணாமல் இருப்பது, கெட்ட குணமுடைய யூதர்களின் பண்பாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

நல்லவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் :

وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَائِمًا

(நபியே!) வேதத்தையுடையவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலையே நம்பி ஒப்படைத்தபோதிலும் (ஒரு குறைவுமின்றி) உம்மிடம் திரும்ப செலுத்தி விடுவார்கள். அவர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்களிடம் நீர் ஓர் அற்ப நாணயத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதற்காக நீர் (வம்பு செய்து) அவர்கள் (தலை) மேல் நிற்காத வரை அதைத் திரும்பக் கொடுக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் : 3:75)

அமானிதத்தைப் பேணுவது இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை குணங்களில் ஒன்று.

அல்லாஹ்வுடைய தூதர் கஃபத்துல்லாவை கைப்பற்றினார்கள். மக்காவை வெற்றி கொண்டார்கள். அப்போது கஃபத்துல்லாவின் சாவி, தல்ஹா வமிசத்திடமிருந்து, அப்துதார் உடைய வம்சத்திடமிருந்து அலீ ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் வாங்கி வரும்படி பணித்தார்கள்.

அதை வாங்கி வந்து கஃபத்துல்லாஹ்வை திறந்து, சிலைகளிலிருந்து சுத்தப்படுத்தி, அதை கழுவி விட்டதற்குப் பிறகு, அலி ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களும், அவர்களுடைய குடும்பத்தாரும் இந்த சாவி ஹாஷிம் வம்சத்தை சேர்ந்த நம்மிடத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

ஆனால், அல்லாஹ்வுடைய தூதர், இது ஒரு அமானிதம். அல்லாஹ் அந்த குடும்பத்திற்கு கொடுத்திருக்கிறான். அதை அவர்களிடமே திரும்ப கொடுங்கள் என்று கூறி, ஆட்சி அதிகாரம் ஏற்பட்டாலும், ஆதிக்கம் ஏற்பட்டாலும், முஸ்லிம்களாகிய நாம் வரம்பு மீற முடியாது. நீதத்துக்கு நியாயத்திற்கு மாற்றமாக நாங்கள் செல்ல முடியாது. அமானிதத்தில் நாங்கள் எந்த விதமான பங்கமும் விளைவிக்க முடியாது என்பதை ரசூலுல்லாஹ் அழகிய முறையில் அங்கே நிரூபித்துக் காட்டினார்கள்.

அவர்கள் நாடியிருந்தால், கண்டிப்பாக அந்த சாவியை மீண்டும் பறித்திருக்கலாம். அவர்கள் நாடியிருந்தால் நீங்கள் எல்லாம் புதிய முஸ்லிம்கள்,உங்களிடத்தில் நாங்கள் கொடுக்க முடியாது,இதுவரை எங்களுக்கு நீங்கள் எதிரிகளாக இருந்தீர்கள் என்று அந்த சாவியை ரசூலுல்லாஹ் தன் குடும்பத்திலேயேதக்க வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை.

இன்று, முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒப்பந்தத்தை பேணுவது, வாக்கை பேணுவது, அமானிதத்தைப் பேணுவது என்பதை சாதாரணமான ஒன்றாக, மதிப்பற்ற ஒன்றாக நினைக்கிறார்கள்.

வாக்கு ஒன்றை கொடுக்கிறார்கள், மாற்றம் செய்கிறார்கள். ஒப்பந்தம் ஒன்றை செய்கிறார்கள், மாற்றம் செய்கிறார்கள். இப்படிப்பட்ட மோசமான நிலையில் இருப்பதை நாம் பார்க்கிறோம்.

அடுத்து,ரசூலுல்லாஹ் சமூக சீர்திருத்தத்தின் மறுபக்கத்திற்கு செல்கிறார்கள்.

أَلَا كُلُّ شَيْءٍ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ تَحْتَ قَدَمَيَّ مَوْضُوعٌ، وَدِمَاءُ الْجَاهِلِيَّةِ مَوْضُوعَةٌ، وَإِنَّ أَوَّلَ دَمٍ أَضَعُ مِنْ دِمَائِنَا دَمُ ابْنِ رَبِيعَةَ بْنِ الْحَارِثِ، كَانَ مُسْتَرْضِعًا فِي بَنِي سَعْدٍ فَقَتَلَتْهُ هُذَيْلٌ، وَرِبَا الْجَاهِلِيَّةِ مَوْضُوعٌ، وَأَوَّلُ رِبًا أَضَعُ رِبَانَا رِبَا عَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، فَإِنَّهُ مَوْضُوعٌ كُلُّهُ

அறியாமைக் காலத்தில், கொடுக்கல்-வாங்கலில், வட்டியில், வட்டியின் அடிப்படையில் என்ன ஒரு வியாபாரம் செய்து கொண்டிருந்தார்களோ, அந்த வட்டி அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இனி முதலை மட்டுமே திரும்ப கேட்பதற்கு, கடன் கொடுத்தவர், வியாபாரம் செய்தவர் அருகதை பெறுகிறார்.

வட்டி அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது என்று கூறிய ரசூலுல்லாஹ் , சீர்திருத்தத்தை முதலாவதாக தன்னிலிருந்தும், தன் குடும்பத்திலிருந்தும் ஆரம்பிக்கக் ஆரம்பிக்கிறார்கள்.

வட்டியில் முதலாவதாக எனது சிறிய தந்தை அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபுக்கு சேர வேண்டிய அத்தனை வட்டிகளையும் நான் தள்ளுபடி செய்து விடுகிறேன். ஆகவே, அவரிடம் கடன் பெற்றவர்அசல் தொகையை மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதுமானது.

அடுத்து சொல்கிறார்கள்;அறியாமைக் காலத்தில், நபித்துவத்திற்கு முன்பு நடந்த கொலைகள், அந்தக் கொலைகளுக்காக இப்போது பழி வாங்கக்கூடாது. இஸ்லாம் வந்ததற்குப் பிறகு, நேர்மையான மார்க்கம் வந்ததற்குப் பிறகு, அறியாமைக் காலத்தில் செய்த பாவங்களுக்காக, தவறுகளுக்காக அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்.

அந்தக் காலம் முடிந்துவிட்டது. அதற்குரிய தண்டனை இப்போது நிறைவேற்றப்படமாட்டாதுஎன்பதை வலியுறுத்துகிற நேரத்தில் அல்லாஹ்வுடைய தூதர் இங்கும் தங்களுடைய குடும்பத்தை சேர்ந்தஅப்துல் முத்தலிபுடைய பேரர்களில் ஒருவரான, ஹாஷிம் குடும்பத்தைச் சேர்ந்த, ஆமிர் இப்னு ரபீஆ இப்னு ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப்.

ரசூலுல்லாஹ் உடைய சிறிய தந்தைகளில் ஒருவனான ஹாரிஸ் உடைய மகனார் ரபிஆ, அவருடைய மகனாரான ஆமிர்.

இவர் ஒரு இடத்தில் பால் குடிப்பதற்காக குழந்தையாக கொடுக்கப்பட்டிருந்தார். அந்தக் குழந்தையை ஹுதைல் வம்சத்தை சேர்ந்த சிலர், ஒரு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கொன்று விட்டார்கள்.

அதற்குப் பழி வாங்குவதற்காக அப்துல் முத்தலிப் உடைய குடும்பத்தார்கள் கொதித்துக் கொண்டிருந்தார்கள். நமக்கு ஆட்சி அதிகாரங்கள் ஏற்படுமேயானால், நமக்கு வலிமை ஏற்படுமேயானால்ஹுதைல் குடும்பத்தில் அதற்கு பகரமாக அதை கொன்றவரைஅல்லது அதற்கு பகரமாக ஒரு குழந்தையை கொள்வோம் என்ற வெறியில் இருந்தார்கள்.

அய்யாமுல் ஜாஹிலிய்யாவில் இந்த கொலை நடந்தது. இனிமேல் இந்த கொலைக்கு பழி தீர்ப்பதற்காக வேண்டி ஒரு உயிரை நீங்கள் கொல்லக்கூடாது.

முதலாவதாக, ஆமிர் இப்னு ரபீஆ கொல்லப்பட்டதனுடைய அந்தக் கொலைக் குற்றத்தைநான் மன்னிக்கிறேன்என்று அந்த மன்னிப்பின் விஷயத்தையும் தனது குடும்பத்திலிருந்தே ரசூலுல்லாஹ் ஆரம்பிக்கிறார்கள்.

மேலும் சொல்கிறார்கள்; அய்யாமுல் ஜாஹிலிய்யாவில் எதையெல்லாம் நீங்கள் பெருமையாக கருதி கொண்டிருந்தீர்களோ, மதிப்பு மரியாதையாக எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, இனி அதன் அடிப்படையில் மதிப்பு மரியாதை கிடையாது.

இனி குலத்தின் அடிப்படையில், பரம்பரையின் அடிப்படையில், வம்சத்தின் அடிப்படையில், செல்வத்தின் அடிப்படையில், வீரத்தின் அடிப்படையில் உங்களுக்கு மரியாதை கொடுக்கப்படாது.

இனி, உங்களுக்குள்ள மரியாதை தக்வாவின் அடிப்படையில்தான்.

அதாவது, இந்த அனைத்து விதமான மதிப்பு, மரியாதை, பதவிகளெல்லாம் இனி உங்களுக்கு கிடையாது. ஆனால், கஅபாவின் பொறுப்பாகிய, கஅபாவை நிர்வகிக்க கூடிய, பராமரிக்க கூடிய பொறுப்பை தவிர,ஹாஜிகளுக்கு நீர் கொடுக்கக்கூடிய பொறுப்பைத்தவிர.

அது எப்படி இதற்கு முன்னால் பேணப்பட்டு வந்ததோஅதே அடிப்படையில், அதே குடும்பத்தில் பேணப்படும்.

அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்; இனி யாராவது ஒருவர், யாரையாவது வேண்டுமென்று கொலை செய்தால், அதற்காக கண்டிப்பாக பழிவாங்கப்படும்.

ஒரு மனிதன் சண்டை செய்கிறான், கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. ஆனால்,அந்த நேரத்தில் சண்டை முற்றி அதிகமான காயங்களால் ஒருவன் இறந்துவிட்டால், அதற்கும் இஸ்லாமிய மார்க்கத்தில் குற்றப் பரிகாரம் செய்தாக வேண்டும்.

நூறு ஒட்டகங்களைஅவன் அதற்கு குற்ற பரிகாரமாக கொலையுண்டவனின் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ்வுடைய தூதர் கூறுகின்றார்கள்.

இன்னும் இது போன்ற அறிவுரைகளை அல்லாஹ்வுடைய தூதர் அரஃபாவுடைய அந்தப் பெருவெளியிலும், அன்றைய தினத்திலும், அதற்கு அடுத்துள்ள நாட்களிலும் கூறுகிறார்கள். முடிந்தால் இன் ஷா அல்லாஹ் அவற்றை அடுத்த அமர்வுகளில் பார்ப்போம்.

ரசூலுல்லாஹ் அவர்கள் உயிர்கள் பேணப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும், முஸ்லிம்களுடைய சொத்துக்கள், அவர்களுக்கு மத்தியில் உண்டான கொடுக்கல் வாங்கல், அவர்களுக்கு மத்தியில் உண்டான எல்லா உறவுகளும், அல்லாஹ்வின் சட்ட வரம்பின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.

அவர்களுக்கு மத்தியில் உள்ள அனைத்து விதமான தொடர்புகளும் சம்மந்தங்களும் நீதத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். ஒழுக்கத்தின் அடிப்படையில் அமைந்திருக்கவேண்டும். நேர்மையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

அதையே கட்டளையாக, சட்டமாக ஆக்கினார்கள். அதை மீறும் போது, அதை விட்டு விலகி, மனோ இச்சையின் அடிப்படையில் செல்லும்போதுகண்டிப்பாக அதனால் அவனுக்கு மட்டும் ஆபத்தல்ல, அவனை சுற்றி உள்ள சமுதாயத்திற்கும் ஆபத்து.

அல்லாஹ்வுடைய சட்டத்தை மீறக்கூடிய ஒவ்வொரு முஸ்லிமும் துன்யாவை இழக்கிறான். அவனுடைய ஆஃகிரத்தையும் இழக்கிறான். ஆஃகிரத்தினுடைய இழப்பு, துன்யாவின் இழப்பை விட பயங்கரமானது.

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம் அனைவரையும் அல்லாஹ்வுடைய தூதர் உடைய வழிகாட்டுதலின்படி மார்க்கத்தை பின்பற்றுவதற்கு உதவி செய்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو قَالَ: ثنا زَائِدَةُ بْنُ قُدَامَةَ عَنْ مَنْصُورٍ عَنْ مُسْلِمٍ عَنْ مَسْرُوقٍ قَالَ: قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ مَنْ شَاءَ اللَّهُ مِنْهُمْ: يَا رَسُولَ اللَّهِ مَا يَنْبَغِي لَنَا أَنْ نُفَارِقَكَ فِي الدُّنْيَا فَإِنَّكَ لَوْ مِتَّ رُفِعْتُ فَوْقَنَا , فَلَمْ نَرَكَ , فَأَنْزَلَ اللَّهُ {وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا} [النساء: 69] (مصنف ابن أبي شيبة- 31774

குறிப்பு 2)

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا أَبُو نَشِيطٍ مُحَمَّدُ بْنُ هَارُونَ بْنِ رُهَيْمٍ بَغْدَادِيٌّ ثِقَةٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنِي رَاشِدُ بْنُ سَعْدٍ، عَنْ عَاصِمِ بْنِ حُمَيْدٍ السَّكُونِيِّ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ، خَرَجَ مَعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوصِيهِ مُعَاذٌ رَاكِبٌ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ رَاحِلَتِهِ فَلَمَّا فَرَغَ، قَالَ: «يَا مُعَاذُ، إِنَّكَ عَسَى أَنْ لَا تَلْقَانِي بَعْدَ عَامِي هَذَا، لَعَلَّكَ أَنْ تَمُرَّ بِمَسْجِدِي [ص:415] وَقَبْرِي» فَبَكَى مُعَاذٌ خَشَعًا لِفِرَاقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ الْتَفَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ الْمَدِينَةِ، فقَالَ: «إِنَّ أَهْلَ بَيْتِي هَؤُلَاءِ يَرَوْنَ أَنَّهُمْ أَوْلَى النَّاسِ بِي، وَإِنَّ أَوْلَى النَّاسِ بِي الْمُتَّقُونَ، مَنْ كَانُوا حَيْثُ كَانُوا، اللَّهُمَّ إِنِّي لَا أُحِلُّ لَهُمْ فَسَادَ مَا أَصْلَحْتَ، وَايْمُ اللَّهِ لَيَكْفَؤُونَ أُمَّتِي عَنْ دِينِهَا كَمَا يُكْفَأُ الْإِنَاءُ فِي الْبَطْحَاءِ». [3: 66] (صحيح ابن حبان- 647)

குறிப்பு 3)

حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمَّارٍ، عَنْ سَالِمٍ، سُئِلَ ابْنُ عَبَّاسٍ عَنْ رَجُلٍ قَتَلَ مُؤْمِنًا، ثُمَّ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا، ثُمَّ اهْتَدَى، قَالَ: وَيْحَكَ، وَأَنَّى لَهُ الْهُدَى، سَمِعْتُ نَبِيَّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: " يَجِيءُ الْمَقْتُولُ مُتَعَلِّقًا بِالْقَاتِلِ، يَقُولُ: يَا رَبِّ، سَلْ هَذَا فِيمَ قَتَلَنِي؟ " وَاللَّهِ لَقَدِ أَنْزَلَهَا اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَا نَسَخَهَا بَعْدَ إِذِ انْزَلَهَا، قَالَ: وَيْحَكَ، وَأَنَّى لَهُ الْهُدَى؟ (مسند أحمد مخرجا 1941)

குறிப்பு 4)

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَبَّاسٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ المَهْدِيِّ، قَالَ: حَدَّثَنَا مَنْصُورُ بْنُ سَعْدٍ، عَنْ مَيْمُونِ بْنِ سِيَاهٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى صَلاَتَنَا وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا فَذَلِكَ المُسْلِمُ الَّذِي لَهُ ذِمَّةُ اللَّهِ وَذِمَّةُ رَسُولِهِ، فَلاَ تُخْفِرُوا اللَّهَ فِي ذِمَّتِهِ» (صحيح البخاري 391)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/