HOME      Khutba      குர்பானியின் சட்டங்கள் | Tamil Bayan - 341   
 

குர்பானியின் சட்டங்கள் | Tamil Bayan - 341

           

குர்பானியின் சட்டங்கள் | Tamil Bayan - 341


بسم الله الرحمن الرحيم
 
குர்பானியின் சட்டங்கள்
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
 
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
 
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
 
 
கண்ணியத்திற்குரியவர்களே! புனிதமிக்க ஒரு மாதத்தில் நாம் இருக்கிறோம். அல்லாஹு சுப்ஹானஹு தஆலா ஆண்டுகளைப் படைத்து, அந்த ஆண்டுகளை பன்னிரண்டு மாதங்களாக பிரித்து, அந்த பன்னிரண்டு மாதங்களில் நான்கு மாதங்களை புனிதமான மாதமாக (அல்அஷ்ஹுருல் ஹுரும்) கண்ணியமிக்க, புனிதமிக்க மாதங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏற்படுத்தியிருக்கிறான்.
 
அந்த மாதங்களில் ஒன்றில் தான் இருக்கிறோம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த மாதங்களில் நாம் பேன வேண்டிய ஒழுக்கங்கள், இந்த மாதங்களில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அமல்கள் வழிபாடுகளைப்பற்றி நமக்கு மிக அதிகம் கூறியிருக்கிறார்கள்.
 
ஒரு முஸ்லிம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்கு ஒரு தெளிவான வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அல்லாஹ்வின் வேதத்தில் எப்படி சொல்லப்பட்டு இருக்கிறது? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படி வழிகாட்டி இருக்கிறார்கள்? எப்படி செய்து இருக்கிறார்கள்? என்பதை அறிந்து ஆதாரத்தின் அடிப்படையில் செய்வது தான் ஒரு முஸ்லிமுடைய செயலாக இருக்கும். 
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இந்த ஹஜ்ஜுடைய மாதத்தை புனிதமிக்க நான்கு மாதங்களில் ஒரு மாதமாக வைத்துள்ளான். 
 
1- துல்கதா, 2-துல்ஹஜ், 3- முஹர்ரம், 4- ரஜப் என்கிற இந்த நான்கு மாதங்கள்தான் புனிதமான மாதங்கள். 
 
ஒருவர் ஹஜ்ஜுக்காக வேண்டி இஹ்ராம் கட்ட வேண்டும் என்றால் அவர் துல்கஃதா மாதத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். ஹஜ்ஜுக்கு செல்லக்கூடியவர் துல்ஹஜ் பிறை 8 இல் இருந்து ஹஜ்ஜுடைய அமல்களை ஆரம்பிப்பார்கள்.
 
ஹஜ்ஜுக்கு செல்லாமல் தங்கியிருக்கூடிய நம்மை போன்றவர்கள், இவர்களுக்கு இந்த துல்ஹஜ் மாதத்தினுடைய முதல் பத்து நாட்கள், பொரும்பாலான மக்களுக்கு இந்த துல்ஹஜ் மாதத்துடைய முதல் பத்து நாட்களுடைய சிறப்பு அதனுடைய உயர்வு தெரியாமல் இருக்கிறது.
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்களை பற்றி சொல்லும் போது, குறிப்பாக பத்து பகல்களைப் பற்றி சொல்லும் போது,
 
وَالْفَجْرِ (1) وَلَيَالٍ عَشْرٍ
 
விடியற்காலையின் மீது சத்தியமாக, பத்து இரவுகளின் மீது சத்தியமாக. (அல்குர்ஆன் 89 : 1,2)
 
இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் மீது சத்தியம் செய்கிறான். மார்க்க அறிஞர்கள் இதற்கு விளக்கம் சொல்லும் போது ரமலானுடைய கடைசி பத்து இரவுகள் சிறப்பானது. அதுபோன்று துல்ஹஜ் உடைய முதல் பத்து பகல்கள் சிறந்தவை என்று குறிப்பிடுகிறார்கள்.
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த நாட்களில் அதிகம் அமல் செய்பவர்களாக, நல்ல அமல்களை விரைந்து செய்பவர்களாக இருந்தார்கள். 
 
இந்த துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் அதிகமாக திக்ர் செய்வது, தக்பீர்கள் ஓதுவது, முடிந்தால் நோன்பு வைப்பது, தான தர்மம் செய்வது போன்ற வணக்க வழிபாடுகளை எவ்வளவு அதிகம் செய்ய முடியுமோ அவ்வளவு அதிகப்படுத்துவது. 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; 
 
عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ، وَلَا أَحَبُّ إِلَيْهِ مِنَ الْعَمَلِ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ [ص:324]، فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّهْلِيلِ، وَالتَّكْبِيرِ، وَالتَّحْمِيدِ» (مسند أحمد5446 -)
 
இந்த பத்து நாட்களில் பகல்களில் செய்யக்கூடிய அமல்கள் ஏனைய நாட்களில் பகலில் செய்யக்கூடிய அமல்களைவிட அல்லாஹ்விடத்தில் மிக உயர்ந்தது. 
 
அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னத் அஹ்மத், எண்: 5446
 
இந்த துல்ஹஜ் மாதத்தின் அமல்களின் ஒன்று தான் குர்பானி கொடுப்பது. அல்லாஹ்விற்காக பிராணியை அறுத்துப் பலியிடுவது. 
 
அல்லாஹு தஆலா கூறுகின்றான்;
 
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (1) فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
 
நபியே! நாம் உமக்கு மிகப்பெரிய நன்மைகளை கொடுத்து இருக்கிறோம்; கவ்ஸர் என்கின்ற தடாகத்தை விசேஷமாக ஆகி இருக்கிறோம். 
 
ஆகவே நீங்கள் உங்களுடைய இறைவனுக்காக தொழுது வணங்குவீராக. இன்னும் அறுத்து பலியிடுவீராக. (அல்குர்ஆன் 108 : 1,2)
 
இந்த இடத்தில் குறிப்பாக துல்ஹஜ் பிறை 10 அன்று தொழக்கூடிய தொழுகைகளையும் அன்று கொடுக்கப்படும் குர்பானி வணக்கத்தையும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான் என்று மார்க்க அறிஞர்கள் நமக்கு விளக்கம் சொல்கிறார்கள். 
 
அல்லாஹ்வை நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை புகழ்வதற்காக இந்த துல்ஹஜ் மாதத்தில் கடமையாக்கி இருக்கக்கூடிய வணக்க வழிபாடுகளில் ஒன்று தான் துல்ஹஜ் பிறை 10 அன்று நாம் தொழக்கூடிய பெருநாள் தொழுகையும் அதன் பிறகு அல்லாஹ்விற்காக அறுத்து பலியிடக்கூடிய குர்பானி பிராணியும் ஆகும்.
 
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;
 
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
 
நீங்கள் கூறுங்கள்: ‘‘நிச்சயமாக என் தொழுகையும், என் (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. (அல்குர்ஆன் 6 : 162)
 
ஸயீத் இப்னு ஜுபைர் ரஹிமஹுல்லாஹ் குறிப்பிடுகிறார்கள். نسك என்கிற இந்த வார்த்தை பிறை 10 அன்று அறுத்துப் பலியிடக்கூடிய அந்த பலி பிராணியைத் தான் குறிக்கிறது என்று குறிப்பிடுகின்றார்கள். 
 
எப்படி சூரா கவ்ஸரிலே தொழுகையோடு சேர்த்து அல்லாஹு தஆலா குர்பானியை சொன்னானோ அது போன்று சூரா அல் அன்ஆம் இந்த வசனத்திலும் எனது தொழுகையும் நான் அறுத்து அல்லாஹ்விற்காக பலியிட கூடிய அந்த குர்பானி பிராணியும் அல்லாஹ்விற்காக என்று விசேஷமாக சொல்லக்கூடிய அளவிற்கு அல்லாஹு தஆலா வலியுறுத்தி சொல்கிறான் என்பதை நாம் கவனத்தில் வைக்க வேண்டும். 
 
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; 
 
عَنِ ابْنِ عُمَرَ قَالَ: «أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ يُضَحِّي» (مسند أحمد4955 -)
 
இமாம் அஹ்மத் பதிவு செய்கிறார்கள்.ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் பத்து ஆண்டுகள் தங்கி இருந்தார்கள்; இந்த பத்து ஆண்டுகளும் உழ்ஹிய்யா -குர்பானி கொடுக்கும் வளமை உடையவர்களாக இருந்தார்கள். 
 
அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னத் அஹ்மத், எண்: 4955
 
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, குர்பானி என்பது ஏதோ ஒரு வழக்கமான, ஒரு சடங்கான செயல் அல்ல. 
 
மாறாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது அடையாள சின்னமாக, தனது தவ்ஹீதின் அத்தாச்சிகளாக ஆக்கி இருக்கக்கூடிய ஒரு முக்கியமான அமல் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். 
 
அல்லாஹ் கூறுகின்றான்;
 
ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ
 
இதுதான் (இறைவன் வகுத்ததாகும்,) எவர் அல்லாஹ்வின் சின்னங்களை மேன்மை படுத்துகிறாரோ நிச்சயமாக அது உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும். (அல்குர்ஆன் 22 : 32)
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இந்த ஒரு வழமையை நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்தில் இருந்து வைத்து இருந்தான். 
 
ஆகவேதான் அல்லாஹ் நமக்கு கட்டளை இடும்போது, 
 
لَا تُحِلُّوا شَعَائِرَ اللَّهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْيَ وَلَا الْقَلَائِدَ
 
நீங்கள் புனிதமிக்க மாதங்களை பங்கப் படுத்தி விடாதீர்கள்; அந்த மாதங்களில் பாவங்களை செய்து அதன் புனிதத்தை பாழாக்கி விடாதீர்கள். 
 
மேலும் அல்லாஹ் கூறுகிறான்; அல்லாஹ்வுடைய அடையாளச் சின்னங்கள், அல்லாஹ் கண்ணியப்படுத்திய இடங்களில் பாவம் செய்து அதன் புனிதத்தை பாழாக்கி விடாதீர்கள். 
 
மேலும் அல்லாஹ் கூறுகிறான்; அல்லாஹ்விற்காக நேர்ச்சை செய்யப்பட்ட அல்லாஹ்விற்காக வேண்டி நிய்யத் செய்யப்பட்டு மாலையிடப்பட்ட குர்பானி பிராணிகள். 
 
மேலும் குர்பானிக்காக வேண்டி வாங்கப்பட்ட குர்பானிப் பிராணிகள் இவற்றையும் நீங்கள் பாழ்படுத்திவிடாதீர்கள். இவற்றை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். இவற்றின் கண்ணியத்தை குறைத்து விடாதீர்கள். (அல்குர்ஆன் 5 : 2)
 
அதாவது அவற்றிற்கு தேவையான உணவுகளை கொடுப்பது; அவசியத் தேவை இருந்தாலே தவிர அதன் மீது தேவையில்லாமல் பிரயாணம் செய்வது கூடாது.
 
உதாரணத்திற்க்கு ஒரு ஒட்டகத்தை குர்பானிக்காக வாங்கி வைத்து இருக்கிறார்; அவர் ஹஜ்ஜுக்காக வேண்டி குர்பானி பிராணியை அழைத்து செல்லும்போது அவருக்கு பிரயாணம் செய்வதற்கு வேறு ஒட்டகம் இல்லை என்றாலே தவிர அதன் மீது சவாரி செய்யாமல் இருக்க வேண்டும். 
 
அந்த அளவுக்கு அதை கண்ணியப்படுத்தும் படி அல்லாஹ் நமக்கு கட்டளையிட்டு இருக்கிறான். காரணம்? அல்லாஹ்விற்காக நிய்யத் செய்யப்படக்கூடிய குர்பானி பிராணி என்பதனால். 
 
இன்று முஸ்லிம்களில் பலர் இந்த குர்பானியின் விஷயத்தில் அலட்சியம் செய்வதை பார்க்கிறோம். ஒரு சில இடங்களில் மக்கள் இந்தக் குர்பானியை அறுக்கின்ற விஷயத்தில் ஆர்வம் காட்டுகின்ற அதே நிலையில், மற்றொரு பக்கம் பார்க்கும் போது முஸ்லிம்களில் பலர் இந்த குர்பானி விஷயத்தில் இங்குதான் நாம் ஆடுகள் நிறைய அறுக்கிறோமே, இங்கு தேவையில்லை என்று அவர்கள் காசுகளை தர்மம் கொடுப்பவர்களாக, அல்லது குர்பானி பிராணியை வேறு ஒரு ஊரிலே அறுப்பதற்காக வேண்டி அனுப்பக்கூடியவர்களாக இருப்பதை நாம் பார்க்கிறோம். 
 
ஏழை உடைய ஹக்கு என்கிற ஒன்று இருக்கின்ற அதே நேரத்தில், அல்லாஹ்வுடைய சட்டம் இது அல்லாஹ்வுடைய அடையாளச் சின்னங்களில் ஒன்று. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 10 ஆண்டுகள் தாங்களாகவே குர்பானிப் பிராணியை அறுத்து இருக்கிறார்கள். அவர்களுடைய ஊரில்தான் அறுத்து இருக்கிறார்கள். மதீனாவை சுற்றி தேவையுள்ளவர்கள் இருந்தார்கள். அங்கு குர்பானிப் பிராணி சிலவற்றை அனுப்புங்கள் என்று சொல்லவில்லை. 
 
ஆனால் அறுக்கப்பட்டதற்கு பிறகு இறைச்சியிலிருந்து சிலவற்றை நாமும் சாப்பிட்டு மீதம் இருக்கிறதை வேண்டுமானால் அனுப்பலாமே தவிர மொத்தமாக நாம் கொடுக்க வேண்டிய, நம்மீது கடமையான ஆட்டை அல்லது நம் மீது கடமையாக இருக்கின்ற குர்பானியின் பங்கு மாட்டையோ வேறு ஒரு ஊரில் அறுப்பது இஸ்லாமிய நடைமுறையில் உள்ளவை அல்ல. சுன்னாவின் நடைமுறையில் உள்ளவை அல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 
 
கண்ணியத்திற்குரியவர்களே! இந்த உழ்ஹிய்யா என்பது அது ஒரு ஆடாக அல்லது ஒரு மாடாக அல்லது ஒரு ஒட்டகமாக கொடுக்கலாம். 
 
இந்த உழ்ஹிய்யா உடைய சட்டம் என்னவென்றால் உழ்ஹிய்யா கொடுப்பது யாருக்கு வசதி இருக்கிறதோ, அதாவது யாருக்கு ஒரு ஆட்டை வாங்கி கொடுப்பதற்கோ அல்லது ஒரு மாட்டில் ஒரு ஒட்டகத்தில் ஒரு பங்கைப் பெற்றுக் கொள்வதற்கான சக்தி இருக்கிறதோ அவர்கள் மீது உழ்ஹிய்யா கொடுப்பது கட்டாய கடமையாகும். 
 
வாஜிபாக இருக்கிறது. ஒரு விரும்பத்தக்க செயல் அல்ல. விரும்பினால் செய்யலாம்; விரும்பவில்லை என்றால் விட்டுவிடலாம் என்கிற செயல் அல்ல. மாறாக வாஜிபான செயலாக இருக்கிறது. 
 
இப்னுமாஜா ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்; 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்;
 
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَ لَهُ سَعَةٌ، وَلَمْ يُضَحِّ، فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا» (سنن ابن ماجه3123 -) حكم الألباني] حسن 
 
யாருக்கு வசதியிருந்தும் அவர் உழ்ஹிய்யா தரவேண்டும் என்று நிய்யத் இல்லையோ நாங்கள் பெருநாள் தொழக்கூடிய அந்த பெருநாள் மைதானத்துக்கு அவர் வரவேண்டாம். 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு மாஜா, எண்: 3123
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் தடை உத்தரவை பாருங்கள். பெருநாள் மைதானத்துக்கு தொழுகையே கடமை இல்லாத ஹைலு உடைய பெண்களை அழைத்து வாருங்கள். நிஃபாஸ் உடைய பெண்களை கூட அழைத்து வாருங்கள் என்று சொன்னார்கள். 
 
எந்த பெண்ணுக்கு உடுத்துவதற்கு மேலாடை -ஹிஜாப் ஆடை இல்லையோ இரவல் வாங்கிக் கொண்டாவது ஹிஜாபை அணிந்து கொண்டு பெருநாள் மைதானத்திற்கு வரவேண்டும். 
 
வெக்கி தன் திரைக்கு பின்னால் ஒழிந்திருக்கக்கூடிய அந்த பெண்கள் கூட பெருநாள் தொழுகைக்கு வர வேண்டும் என்று கட்டளையிட்ட ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உழ்ஹிய்யா விஷயத்தில் வசதியிருந்தும் கொடுக்காமல் அலட்சியம் செய்யக் கூடிய அந்த மக்களுக்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கொடுத்த தடை என்ன?
 
பெருநாள் தொழக்கூடிய அந்த பெருநாள் மைதானத்துக்கு அவர் வரவேண்டாம். 
 
அந்த அளவுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெறுப்பை காட்டியிருக்கிறார்கள். 
 
இன்று நம்மில் பலர் அதற்கு உண்டான சரியான ஏற்பாடு செய்யாமல் கடைசி நேரம் வரை பார்த்துக்கொள்ளலாம், பார்த்துக்கொள்ளலாம். 
 
எத்தனையோ நம்முடைய மேல் மிச்சமான செலவுகளை குறைத்தால், அனாவசியமான செலவுகள் செய்யாமல் இருந்தாலே கண்டிப்பாக ஒவ்வொருவரும் குர்பானி கொடுப்பதற்கான வசதியை பெறுகின்றனர். 
 
ஆட்டை கொடுக்கலாம்; அதற்காக ஒரு ஆறுமாதமாக நம் செலவுகளை குறைத்து ஒரு சாதாரணமான குடும்பத்தில் உள்ளவர் கூட ஆறு மாதமாக அவசியமான செலவுகளை கூட குறைத்து அல்லாஹ்விற்காக வேண்டி சுருக்கி கொள்வாரோ கண்டிப்பாக ஒவ்வொருவரும் ஒரு ஆட்டை கொடுக்கலாம். 
 
அதுவும் முடியவில்லை என்றால் மாட்டின் ஒரு பங்கை அல்லது ஒட்டகத்தின் ஒரு பங்கை கொடுக்கலாம். மாட்டின் பங்கு என்பது நமது ஊரை பொருத்தவரை எல்லோரும் இலகுவாக கொடுக்கக்கூடிய ஒன்று. ஒருவர் ஒரு மாட்டின் ஒரு பங்கை சேர அலட்சியம் செய்வாரேயானால் அல்லாஹ்வுடைய இந்த புனித கடமையிலே அவர் செய்யக்கூடிய மிகப்பெரிய அலட்சியம் என்பதை அவர் கவனத்தில் கொள்ளவேண்டும். அதிலிருந்து விலகி தவ்பா செய்ய வேண்டும். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த வார்த்தையை பாருங்கள்.
 
யாருக்கு மேல் மிச்சமாக இருக்கிறதோ, தனது செலவுகள் போக, அதாவது அன்றாட உணவு, அந்த மாதத்திற்குரிய உணவு போக அவரிடத்திலே மேல் மிச்சமாக வசதி இருக்குமேயானால், உழ்ஹிய்யா கொடுக்க வேண்டும் என்ற ஏற்பாட்டில் அவர் இல்லை என்றால் நம் தொழக்கூடிய மைதானத்திற்கே அவர் வரவேண்டாம் என்று சொல்கிறார்கள். 
 
குர்பானி பிராணிகளின் வயது ?
 
அடுத்து கண்ணியத்திற்குரியவர்களே! ஒட்டகமாக இருந்தால் அல்லது மாடாக அல்லது ஆடாக இருந்தால் அந்த குர்பானி பிராணி எத்தனை வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்? என்றால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவின் அடிப்படையில்,
 
ஒட்டகமாக இருக்குமேயானால் அரபி மாத கணக்குப்படி சரியாக ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 
 
மாடாக இருக்குமேயானால் முழுமையாக இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 
 
ஆடுகளாக இருக்குமேயானால் ஆறு மாதங்கள் முழுமை அடைந்து இருக்கவேண்டும். 
 
உக்பா இப்னு ஆமிர் (ரலி) கூறுகிறார்கள்;
 
عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: «ضَحَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجَذَعٍ مِنَ الضَّأْنِ» (سنن النسائي4382 -)  [حكم الألباني] صحيح 
 
நாங்கள்  ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் செம்மறி ஆட்டில் ஆறுமாதம் முழுமையான ஆட்டை குர்பானி கொடுக்கும் வழக்கம் உடையவர்களாக இருந்தோம். 
 
நூல் : நசாயி, எண் : 4352
 
ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே! சனிய்யா அல்லது முஸின்னா என்று சொல்லப்படும். ஒட்டமாக இருந்தால் ஐந்து ஆண்டுகள் முழுமை அடைந்திருக்கவேண்டும். மாடாக இருந்தால் இரண்டு ஆண்டுகள் முழுமை அடைந்திருக்கவேண்டும். 
 
எனவே எதோ ஒரு பிராணியை கணக்கில்லாமல் அறுத்துவிடலாம் என்று எண்ணிவிடக்கூடாது. 
 
மேலும் அந்த குர்பானி பிராணி குறித்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள்;
 
عَنْ عُبَيْدِ بْنِ فَيْرُوزَ، قَالَ: سَأَلْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ مَا لَا يَجُوزُ فِي الْأَضَاحِيِّ. فَقَالَ: قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصَابِعِي أَقْصَرُ مِنْ أَصَابِعِهِ، وَأَنَامِلِي أَقْصَرُ مِنْ أَنَامِلِهِ فَقَالَ: " أَرْبَعٌ لَا تَجُوزُ فِي الْأَضَاحِيِّ - فَقَالَ -: الْعَوْرَاءُ بَيِّنٌ عَوَرُهَا، وَالْمَرِيضَةُ بَيِّنٌ مَرَضُهَا، وَالْعَرْجَاءُ بَيِّنٌ ظَلْعُهَا، وَالْكَسِيرُ الَّتِي لَا تَنْقَى ". قَالَ: قُلْتُ: فَإِنِّي أَكْرَهُ أَنْ يَكُونَ فِي السِّنِّ نَقْصٌ. قَالَ: «مَا كَرِهْتَ فَدَعْهُ وَلَا تُحَرِّمْهُ عَلَى أَحَدٍ» قَالَ أَبُو دَاوُدَ: «لَيْسَ لَهَا مُخٌّ» (سنن أبي داود2802 -) ]حكم الألباني] : صحيح
 
நான்கு வகையான பிராணியை உழ்ஹியாவிலே கொடுக்கக்கூடாது.
 
الْعَوْرَاءُ بَيِّنٌ عَوَرُهَا
 
1. எதனுடைய குறை வெளிப்படையாக தெரிகிறதோ, அதில் காயம் ஏற்பட்டு இருக்கலாம்.நோய்நொடி ஏற்பட்டு இருக்கலாம். 
 
குறிப்பாக கண்ணில் ஏற்பட்ட குறைகள். கண் குருடாக இருக்குமேயானால், இரண்டு கண்னோ அல்லது ஒரு கண்னோ குருடாக இருக்குமேயானால் அப்படிப்பட்ட ஆடுகளை மாடுகளை ஒட்டகங்களை குர்பானி கொடுக்கக்கூடாது.
 
وَالْمَرِيضَةُ بَيِّنٌ مَرَضُهَا
 
2. தெளிவாக வெளிப்படையாக இது நோய் பிடித்த பிராணி என்று தெளிவாக தெரியக்கூடிய  மெலிந்து சப்பாணியாக இருக்கும் பிராணிகளை பயன்படுத்தக்கூடாது. 
 
وَالْعَرْجَاءُ بَيِّنٌ ظَلْعُهَا 
 
3. நொண்டி செல்லும் பிராணி  அதனுடைய முடம் தெளிவாகத் தெரிகிறதோ அப்படி பட்டதையும் நாம் குர்பானியிலே கொடுக்கக்கூடாது. 
 
وَالْكَسِيرُ الَّتِي لَا تَنْقَى 
 
4. பிறப்பிலே நன்றாக இருந்து  பிறகு கை கால் முறிந்தது இதுவும்  குர்பானியிலே பயன்படுத்தக்கூடாது. 
 
அறிவிப்பாளர்: பரா இப்னு ஆசிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: அபூ தாவூத், எண்: 2802
 
அடுத்து இந்த குர்பானியில் சிறந்த பிராணி எதுவென்றால் கருப்பும் வெள்ளையும் கலந்த பிராணி. அதாவது முழுமையான வெள்ளை அல்லாத கருப்பிலே சாய்ந்து வெள்ளை உடையப் பிராணி குர்பானி ஆடுகளில்  மிக சிறந்தது என்பதை நாம் பார்க்கிறோம். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற்று,
 
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَمُ عَفْرَاءَ أَحَبُّ إِلَيَّ مِنْ دَمِ سَوْدَاوَيْنِ» (مسند أحمد9404 - ) 
 
இரண்டு கருப்பு ஆடுகளை குர்பானியில் கொடுப்பதை விட கருப்பு நிறம் சாய்ந்த வெள்ளை நிற ஆட்டை குர்பானியிலே கொடுப்பது மிக சிறந்தது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னத் அஹ்மத், எண்: 9404
 
மேலும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழமையாக இமாம் அபூதாவூத் (ரலி) பதிவு செய்கிறார்கள். 
 
عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ يُضَحِّي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشٍ أَقْرَنَ فَحِيلٍ، يَنْظُرُ فِي سَوَادٍ، وَيَأْكُلُ فِي سَوَادٍ، وَيَمْشِي فِي سَوَادٍ (سنن أبي داود 2796 -) ]حكم الألباني] : صحيح
 
நல்ல கொம்புள்ள, ஆண் ஆட்டை அதனுடைய நிறம் கருப்பு நிறம் சாய்ந்த முழுமையான வெள்ளையும் அல்லாமல் முழுமையான கருப்பும் அல்லாமல் கருப்புநிறம் சாய்ந்த அந்த பிராணியை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்பானிக்காக தேர்ந்தெடுத்து கொடுக்கின்ற வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.
 
அறிவிப்பாளர்: அபூ சயீத் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: அபூ தாவூத், எண்: 2796
 
குர்பானி பங்கு :
 
அதுபோன்று இந்த குர்பானிப் பிராணியிலே ஒட்டகமாக அல்லது மாடாக இருக்குமேயானால் அதில் ஏழு நபர்கள் பங்கு சேரலாம். 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய காலத்தில் நடந்த நிகழ்வில் ஜாபிர் (ரலி) அன்ஹு அறிவிக்கிறார்கள்;
 
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَحَضَرَ النَّحْرُ، فَذَبَحْنَا الْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ، وَالْبَعِيرَ عَنْ عَشْرَةٍ» (مسند أحمد2484 -)
 
ரசூலுல்லாஹ் உடைய காலத்திலே ஹுதைபிய்யாவில் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும் அதுபோன்று ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும் நாங்கள் குர்பானி கொடுத்தோம் என்று. 
 
நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 2484
 
அதுபோன்று யார் குர்பானி பிராணியை நேரடியாக அறுக்க முடியவில்லையோ அவர் தன் சார்பாக வேறு ஒருவரை அறுப்பதற்கு நியமிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று, முடிந்தால் தானாக அறுப்பது மிக சிறந்த செயல். முடியவில்லை என்றால் தன் சார்பில் ஒருவரை நியமிக்கலாம். அந்த குர்பானிப் பிராணியை தன்னுடைய ஊரில் கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; 
 
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَإِنَّمَا ذَبَحَ لِنَفْسِهِ، وَمَنْ ذَبَحَ بَعْدَ الصَّلاَةِ فَقَدْ تَمَّ نُسُكُهُ، وَأَصَابَ سُنَّةَ المُسْلِمِينَ» (صحيح البخاري5546 -)
 
குர்பானியின் நேரத்தை பொருத்தவரை தொழுகை முடிந்த பின் அந்த குர்பானிப் பிராணி அறுக்கப்பட வேண்டும். 
 
ஒருமுறை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்காக வரும்பொழுது அறுக்கப்பட்ட ஒரு பிராணியை பார்த்தார்கள். இது என்னவென்று கேட்டார்கள்; ஒருவர் அவசரமாக அறுத்துவிட்டார். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; இல்லை. இது ஒரு சாதாரண மாமிசத்திற்கு அறுக்கபட்ட பிராணியாக தான் இருக்குமே தவிர குர்பானிக்காக ஆகாது.
 
யார் தொழுகைக்கு முன் அறுத்தாரோ அவர் தம்முடைய தேவைக்காக அறுத்தவர் ஆவாரே தவிர குர்பானி என்கிற ஒரு அமலை ஒரு சுன்னத்தை அல்லாஹ்வுடைய ஒரு அடையாளச் சின்னங்களில் ஒன்றான அந்த வணக்கத்தை செய்ததற்காக அறுத்தவராக ஆகமாட்டார்.
 
மேலும் யார் தொழுகையை முடித்ததற்கு பிறகு துல்ஹஜ் உடைய பெருநாள் தொழுகை முடிந்த பிறகு அறுப்பாரோ அவருடைய குர்பானி தான் குர்பானியாக முழுமையாக நிறைவேறும். அவர்தாம் முஸ்லிம்களுடைய சுன்னாவை நிறைவேற்றியவர் ஆகுவார்.
 
அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 5546
 
அடுத்து பெருநாள் உடைய தொழுகை முடிந்ததில் இருந்து அன்றைய தினம் முழுமையாக அதற்குப்பிறகு அய்யாமுல் தஷ்ரீக் என்று சொல்லப்படக்கூடிய பிறை 11, 12, 13 அன்று சூரியன் மறையும் வரை உள்ள நேரங்களில் அந்த குர்பானி பிராணியை அறுப்பதற்கு அனுமதி இருக்கிறது.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். 
 
وَكُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ
 
அய்யாமுல் தஷ்ரீக் உடைய எல்லா நாட்களும் குர்பானி அறுப்பதற்குரிய நாட்கள் என்று. 
 
அறிவிப்பாளர்: ஜுபைர் இப்னு முத்இம் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னத் அஹ்மத், எண்: 16751
 
ஆகவே பிறை பத்தில் அறுக்கலாம். முடியவில்லை என்றால் பிறை 11 ல் அறுக்கலாம். முடியவில்லை என்றால் பிறை 12.  முடியவில்லை என்றால் பிறை 13 ல் அறுக்கலாம் 
 
ஆனால் ஒன்றை கவனிக்கவேண்டும். அலட்சியத்தின் காரணமாக தள்ளிப் போடக் கூடாது. அமல்கள் விஷயத்தில் அமல்களை எவ்வளவு சீக்கிரம் விரைந்து செய்வாரோ அவ்வளவு சிறந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
அடுத்து கண்ணியத்திற்குரியவர்களே! ஒரு சில மக்கள் செய்யக்கூடிய தவறு என்னவென்றால் அந்த குர்பானிப் பிராணி அறுக்கப்பட்டதற்கு பிறகு, அறுத்து அதை சுத்தம் செய்வதற்கு வரும் அந்தக் கூலி ஆட்களுக்கு அந்த குர்பானி இறைச்சியிலிருந்து கூலியை கொடுக்கிறார்கள். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒரு செயல்.
 
கூலி என்பது தனியாக கொடுக்கப்பட்டு விடவேண்டும். அந்த ஆட்டுடைய தோலை கூட கூலியாக கொடுக்கக்கூடாது. அதுபோன்று வேறு சில பாகங்களை தலை, குடல், கால் போன்றவற்றையும் கூலியாக கொடுக்கக்கூடாது. 
 
அதுபோன்று அவருடைய கூலி முழுமையாக நிறைவு செய்யப்பட வேண்டும். குறைவு செய்யக்கூடாது.
 
அதற்குப் பிறகு குர்பானி கொடுப்பவர் விரும்பும் பொருட்டு மற்ற முஸ்லிம்களில் ஒருவராக கவனித்து அந்த குர்பானி இறைச்சியை கொடுக்கலாமே தவிர கூலியில் இருந்து கணக்கிட்டு எந்த ஒன்றையும் குர்பானி இறைச்சியிலிருந்து கொடுக்கக் கூடாது.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்தக் கட்டளையை அலி (ரலி) அறிவிக்கிறார்கள்; இமாம் புகாரி இமாம் முஸ்லிம் பதிவு செய்கிறார்கள்;
 
 عَنْ عَلِيٍّ، قَالَ: «أَمَرَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَقُومَ عَلَى بُدْنِهِ، وَأَنْ أَتَصَدَّقَ بِلَحْمِهَا وَجُلُودِهَا وَأَجِلَّتِهَا، وَأَنْ لَا أُعْطِيَ الْجَزَّارَ مِنْهَا»، قَالَ: «نَحْنُ نُعْطِيهِ مِنْ عِنْدِنَا» )صحيح مسلم(1317-
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய குர்பானி ஒட்டகங்களை அறுக்கும் படி எனக்கு கட்டளையிட்டார்கள் அதன் இறைச்சியை தர்மம் செய்யும்படி அதனுடைய தோள்களை தர்மமாக கொடுக்கும்படி எனக்கு கட்டளையிட்டார்கள்.
 
ஆனால் அவற்றிலிருந்து எந்த ஒன்றையும் அறுப்பவருக்கு, சுத்தம் செய்பவருக்கு கொடுக்கக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு கட்டளையாக சொன்னார்கள். 
 
அறிவிப்பாளர்: அலீ ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 1317
 
மேலும் இந்த குர்பானிப் பிராணியின் இறைச்சியை பொருத்தவரை அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நமக்கு வழி காட்டுகிறான், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டுகிறார்கள். 
 
كُلُوا وَأَطْعِمُوا وَادَّخِرُوا
 
நீங்களும் சாப்பிடுங்கள்; பிறருக்கும் உணவளியுங்கள்; நீங்கள் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
 
அறிவிப்பாளர்: சலமா இப்னு அக்வஃ ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 5569
 
இதிலிருந்து மார்க்க அறிஞர்கள் சொல்லக்கூடிய கருத்தாவது, ஒன்று அந்த குர்பானிப் பிராணியை அறுத்ததற்கு பிறகு அதனுடைய இறைச்சியின் ஒரு பகுதியை நாம் வைத்துக் கொள்ளலாம். ஒரு பகுதியை நாம் தர்மம் செய்யலாம். ஒரு பகுதியை நாம் உறவினர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கலாம். இப்படி மூன்றாகப் பிரித்துக் கொள்வது சிறந்தது என்பதாக மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
 
அதுபோன்று இந்த குர்பானிப் பிராணியை பொருத்தவரை வீட்டில் இருக்கக்கூடிய எல்லா மக்களும் குர்பானியை நிறைவேற்ற வேண்டுமா? இல்லை வீட்டில் பொறுப்பாக இருக்ககூடிய வீட்டுக்கு தலைவராக இருக்கக்கூடியவர் நிறைவேற்றினால் போதுமா என்றால்? 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் நடந்த அந்த நிகழ்வை அந்த வழமையை அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்க இமாம் திர்மிதி பதிவு செய்கிறார்கள்.
 
سَأَلْتُ أَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ: كَيْفَ كَانَتِ الضَّحَايَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «كَانَ الرَّجُلُ يُضَحِّي بِالشَّاةِ عَنْهُ وَعَنْ أَهْلِ بَيْتِهِ، فَيَأْكُلُونَ وَيُطْعِمُونَ حَتَّى تَبَاهَى النَّاسُ، فَصَارَتْ كَمَا تَرَى (سنن الترمذي1505 - ) 
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலே ஒரு மனிதர் ஒரு ஆட்டை தன் சார்பாகவும் தனது குடும்பத்தார் சார்பாகவும் அறுப்பவராக இருந்தார். 
 
அறிவிப்பாளர்: அபூ அய்யுப் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி, எண்: 1505
 
ஆகவே அந்த குர்பானிப் பிராணி என்பது வீட்டினுடைய அந்தப் பொறுப்பாளர் தலைவர் நிறைவேற்றும் போது அந்த வீட்டில் உள்ளவர் சார்பாக நிறைவேறி விடும். ஒவ்வொருவரும் தனியாக கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 
 
அது போன்று இறந்தவர்களுக்காக குர்பானி கொடுப்பது. தனது உறவினர்களில் யாராவது இறப்பதற்க்கு முன் ஒவ்வொரு ஆண்டும் என் சார்பாக குர்பானி கொடுத்து விடுங்கள் அல்லது இத்தனை ஆண்களுக்கு கொடுத்துவிடுங்கள் என்று கட்டாயமாக வஸிய்யத்து செய்து இருந்தால் அவர் சார்பாக அந்த வஸிய்யத்து நிறைவேற்றப்படலாம்.
 
இது அல்லாமல் இருக்கும் நிலைகளில் ஒவ்வொரு ஆண்டும், போன வருடம் இறந்துபோன எங்க அத்தாவுக்கு ஒன்று; எங்க அம்மாவுக்கு ஒன்று என்று இப்படி இறந்தவர்களுக்காக என்று தனியாக குர்பானி கொடுப்பது சுன்னாவில் உள்ளது அல்ல. நபியும் இறந்துவிட்ட தன் மனைவி கதீஜா வுக்காகவோ, இறந்துவிட்ட தன் ஜஜ்ஜாவுக்காகவோ குர்பானி கொடுக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
குர்பானி பிராணியை யார் அறுக்க வேண்டும் :
 
இந்த குர்பானி அறுப்பதை பொறுத்தவரை முடிந்த அளவு தானே அறுக்க வேண்டும். அறுக்கும் போது பிஸ்மில்லாஹ் அல்லாஹு அக்பர். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். 
 
عَنْ أَنَسٍ، قَالَ: «ضَحَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ، فَرَأَيْتُهُ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا، يُسَمِّي وَيُكَبِّرُ، فَذَبَحَهُمَا بِيَدِهِ» (صحيح البخاري5558 -)
 
இந்த இரண்டு ஆட்டையும் தனது கரத்தால் அறுத்தார்கள். 
 
அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 5558
 
இன்று சிலர் என்ன நினைக்கிறார்கள்? பொதுவாக ஒரு சில விஷயங்களில் அவர்கள் வஸ்வாஸ் உள்ளவர்களாக அல்லது ஒருவிதமான மன நோய் உள்ளவராக இருக்கிறார்கள். 
 
இப்படி தானாக அறுப்பதை அவர் சாதாரணமான செயலாகவும், அல்லது தனது கண்ணியத்தை குறைக்கும் செயலாகவும் நினைக்கிறார்கள். 
 
அன்பிற்குரியவர்களே! அப்படி அல்ல. இது ஒரு இபாதத். இபாதத்தை பொருத்தவரை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாம் அதில் ஈடுபடுவதைதான் நமக்கு வலியுறுத்துகிறார்கள். 
 
ஒரு வேலை நம்மால் முடியவில்லை என்றால், உதாரணத்திற்கு குர்பானி கொடுக்கக்கூடிய அந்த மனிதர் அந்த பொறுப்பாளர் அந்த நேரத்தில் நோயுற்றவராக இருக்கிறார்; அல்லது அவருக்கு முடியாத ஏதாவது ஒரு தடங்கல் இருக்கிறது அப்படி இருந்தாலே தவிர அறுப்பதற்கு வேறு ஒருவரை நியமிப்பதை மார்க்கம் விரும்பவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 
 
ஹதீஸில் தனது கரத்தால் அதை அறுத்தார்கள்.
 
பிஸ்மில்லாஹ் சொல்லி தக்பீர் சொல்லி அறுத்தார்கள் என்று வருகிறது.
 
குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை :
 
அதுபோன்று வீட்டில் உள்ள பொறுப்பாளர்களில் யார் ஒருவர் நிய்யத் வைத்து விடுகிறாரோ குர்பானி கொடுப்பதற்கு வசதி இருந்து குர்பானி கொடுக்க வேண்டும் என்ற நிய்யத் வைக்கிறாரோ அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறையிலிருந்து முடிகின்ற வரை அவர் தன்னுடைய முடிகளையும் நகங்களையும் வெட்டாமல் இருக்க வேண்டும். 
 
ஆகவே அதற்கு முன்பாக நகங்களை வெட்டுவது குறைப்பதாக இருந்தாலே முன்பே செய்து கொள்ள வேண்டும். 
 
இன்று இன்னுமொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும். சிலர் என்ன செய்கிறார்கள்? முதல் பிறையிலிருந்து குர்பானி கொடுக்கப்படுகின்ற வரை நகங்களை வெட்டாமல் தாடியை சிரைக்காமல் இருக்கிறார்கள். 
 
ஆனால் குர்பானி கொடுத்து அதற்குப் பிறகு தாடியை சிரைக்கிறார்கள். இப்படி செய்பவர் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். இந்த பத்து நாட்களில் முடிவு எடுக்காமல் இருப்பது இது ஒரு சுன்னா ரசூலுல்லாஹ்வால் வலியுறுத்தப்பட்ட நபிவழி. 
 
இந்த பத்து நாள் முடிந்ததற்கு பிறகுதான் நகங்களை வெட்டுவது முடிகளை குறைத்துக்கொள்வது அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஆனால் தாடியை எப்போதுமே சிரைக்க கூடாது என்பது அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் முஸ்லிம்கள் மீது கட்டாயக் கடமையாகிய ஒன்று. 
 
ஒரு முஸ்லிம் எப்போதுமே தாடியை சிரைக்கக்கூடாது. தாடியை மலிப்பது சிரைப்பது ஹராம். ஒரு பெரும் பாவத்தில் ஒன்று. அதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். 
 
இங்கு பத்து நாளைக்கு சுன்னத்தை பேணி விட்டு பத்தாவது நாள் முடிந்ததற்கு பிறகு எதை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் எல்லா நாட்களிலும் தடுத்தார்களோ அதை செய்கின்ற வழக்கத்தை பார்க்கிறோம். 
 
அதுபோன்று ரமலானுடைய பெருநாளாக இருந்தால் பெருநாள் தொழுகைக்கு வரக்கூடியவர் காலையிலேயே எழுந்து குளித்து சுத்தமாகி புதிய ஆடைகளை அணிந்து வருவதைப் பார்க்கிறோம். அந்த நேரத்தில் தங்களது தாடியையும் சரித்துவிட்டு அல்லது தாடியை குறைத்து விட்டு வருகிறார்கள். 
 
அல்லாஹ் நமக்கு சந்தோசமாக கொடுத்திருக்கக்கூடிய அந்த நாட்களில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கோபத்தை தூண்டக்கூடிய செயல்களை செய்து விட்டு வரும்போது அவர்கள் என்ன துஆ அல்லாஹ்விடத்தில் தங்களுக்கு அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறார்கள்?
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;
 
سَمِعْتُ أُمَّ سَلَمَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ لَهُ ذِبْحٌ يَذْبَحُهُ فَإِذَا أُهِلَّ هِلَالُ ذِي الْحِجَّةِ، فَلَا يَأْخُذَنَّ مِنْ شَعْرِهِ، وَلَا مِنْ أَظْفَارِهِ شَيْئًا حَتَّى يُضَحِّيَ» (صحيح مسلم-(1977
 
யார் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நிய்யத் வைத்து விடுகிறார்களோ அவர் துல்ஹஜ் பிறை பிறந்ததற்கு பிறகு தங்களது முடிவுகளை எடுக்க வேண்டாம்; தங்களது நகங்களையும் வெட்ட வேண்டாம் அவர் குர்பானி கொடுத்து முடிக்கின்ற வரை.
 
அறிவிப்பாளர்: உம்மு சலமா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 1977
 
ஆகவே இதுபோன்ற குர்பானி உடைய சட்டங்களை தெரிந்து நமது வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். தெரியாத மக்களுக்கும் இதை குறித்து நாம் சொல்ல வேண்டும். எந்த ஒரு இபாதத்தாக இருந்தாலும் அல்லாஹ் அதை நமக்கு எப்படி கடமையாக்கி இருக்கிறான்ன்? அல்லாஹ்வுடைய தூதர் எப்படி வழிகாட்டினார்கள்? என்ற இல்மை கற்று செயல்பட வேண்டும். அல்லாஹ் அதற்க்கு வாய்ப்பளிப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
 
 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/