HOME      Khutba      இல்முடைய அவசியமும் சிறப்பும் | Tamil Bayan - 340   
 

இல்முடைய அவசியமும் சிறப்பும் | Tamil Bayan - 340

           

இல்முடைய அவசியமும் சிறப்பும் | Tamil Bayan - 340


இல்ம் உடைய அவசியமும் சிறப்பும்

ஜுமுஆ குத்பா தலைப்பு : இல்ம் உடைய அவசியமும் சிறப்பும்

வரிசை : 669

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 2-4-2021 | 20-8-1442

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹு தஆலா நமக்கு கொடுத்த இந்த மார்க்கத்தை யார் நேசிக்கிறார்களோ தேடுவார்களோ அவர்கள் இந்த மார்க்கத்தின் இல்மை தேடுவார்கள்.

யார் இந்த இல்மை தேடுவார்களோ அவர்கள் இந்த இல்மை பெற்றுக் கொள்வார்கள். கிடைக்கப் பெறுவார்கள். அல்லாஹ் சுபஹானல்லாஹ் இந்த மார்க்கத்தை இல்ம் என்ற அஸ்திவாரத்தின் மீது அமைத்துள்ளான்.

இஸ்லாமின் முந்தைய காலத்தை அறியாமைக் காலம் மடமைக் காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. காரணம், அவர்களின் எந்த ஒரு சொல் செயலும் கல்வியின் மீது அமைக்கப்பட்டு இருக்காது. மன இச்சை, வழிகேடு, வரம்பு மீறுதல், அறியாமை என்ற அடிப்படையில் தான் அவர்களின் செயல்பாடு அமைந்திருக்கும்.

ஆனால் அல்லாஹ்வுடைய தீனாகிய இஸ்லாம், அல்லாஹ்வுடைய வஹ்யின் மூலம் கொடுக்கப்பட்ட இஸ்லாம் மக்களுக்கு முதலாவதாக இந்தக் கல்வியை போதித்தது.

அவர்கள் எதை செய்யவேண்டும்? எதை செய்யக்கூடாது? எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது? என்பதை போதித்தது.

அவர்களைப் படைத்த அல்லாஹ்விற்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? மறுமையில் வெற்றி பெறுவதற்கு என்ன வழி? சொர்க்கத்தை அடைவதற்கு என்ன வழி? இந்த உலகத்தில் பாதுகாப்பாக வாழ்வதற்கு உள்ள பாதை எது? என்று ஒவ்வொரு விஷயத்தையும் துல்லியமாக அவனுடைய புத்தகமாகிய அல்குர்ஆனிலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஹதீஸிலும் அல்லாஹுத்தஆலா போதித்து தந்தான்.

கண்ணியத்திற்குரிய சகாபாக்களை அல்லாஹுத்தாலா உயர்த்தினான்; கண்ணியப்படுத்தினான்; மேன்மைப்படுத்தினான்.

அல்லாஹ்வுடைய உயர்ந்த தரஜாவாகிய அவனுடைய பொருத்தம் என்ற அந்தஸ்தை அல்லாஹுத்தஆலா அந்த சஹாபாக்களுக்கு கொடுத்தான்.

அதற்கான அடிப்படைக் காரணம் என்னவென்றால் அந்த சஹாபாக்களின் ஈமான். அதற்குப்பிறகு சகாபாக்கள் இநத மார்க்கத்தைக்கற்றார்கள். அதற்காக தங்களை அர்ப்பணித்தார்கள். கற்ற அந்த மார்க்கத்தை வாழ்க்கையில் ஏற்று பின்பற்றினார்கள்.

இதுதான் அவர்களிடத்தில் இருந்த சிறப்புக்குரிய காரணமே தவிர, அவர்கள் அரபு குலத்தார் என்பதற்காகவோ, நபியின் வம்சத்தார்கள் என்பதற்காகவோ அல்லாஹ்வுடைய சிறப்பை அவர்கள் அடையவில்லை.

அவர்கள் அல்லாஹ்வுடைய சிறப்பை அடைந்ததற்கான காரணம் என்ன? அவர்கள் நபியை ஈமான் கொண்டது. இந்த மார்க்கத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டது. இந்த மார்க்கத்தை அவர்கள் கற்றது, பிறருக்கு கற்றுக் கொடுத்தது.

ஆகவே இந்த இல்மை அல்லாஹ்வுடைய இந்த தீனை அதற்குரிய சரியான ஆதாரங்களிலிருந்து கற்றுக்கொள்வது முஸ்லிம்களின் மீது ஒரு கட்டாயக் கடமையாக இருக்கிறது.

ஒரு முஸ்லிம் எந்த ஒரு செயலை செய்தாலும், அது வணக்க வழிபாடுகளாக இருந்தாலும், கொடுக்கல் வாங்கலாக இருந்தாலும், குடும்ப வாழ்க்கையாக, அரசியல் வாழ்க்கையாக இருந்தாலும் அவை ஒவ்வொன்றுக்கும் உரிய தெளிவான விளக்கங்களை அல்லாஹுத்தஆலா இந்த மார்க்கத்தில் கொடுத்துள்ளான். அவற்றைக் கற்றுக் கொள்ளும்போதுதான் அந்த மார்க்கத்தை அறிந்தவர்களாக ஆகின்றோம்.

முஸ்லிம் என்று பெயர் வைத்துக் கொள்வதால் ஒரு மனிதன் அந்தஸ்து உயர்வை அடைந்துவிட முடியாது, அந்த இஸ்லாமை கற்று அதை செயல்படுத்துகின்ற வரை.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அவனுடைய புத்தகம் அல்குர்ஆனில் கூறுகிறான்:

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ

உங்களிலுள்ள நம்பிக்கையாளர்களுக்கும், கல்வி ஞானம் உடையவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிவான். (அல்குர்ஆன் 58: 11)

இறை நிராகரிப்பு, இணை வைத்ததிலிருந்து வெளியேறி அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது கண்ணியத்தின் முதல் படி.ஷிர்க் -இணைவைப்பு இது ஒரு இழிவான செயல். ஒரு மனிதன் தன்னைத்தானே இழிவு படுத்தக்கூடிய செயல் இணைவைப்பு.

அல்லாஹ் உருவாக்கிய கண்ணியப்படுத்திய மனிதரை இந்த ஷிர்க் கேவலப்படுத்துகிறது, அவனது சுயமரியாதையை வீழ்த்தி விடுகிறது. கண்ணியத்துக்குரியவராக ஆராய்ந்து செயல்படக்கூடியவராக இருக்கக்கூடிய ஒரு மனிதரை சிந்திக்க விடாமல், அறிவைப் பயன்படுத்த விடாமல், முட்டாளாக,  மடையனாக, பொய்களை நம்பக்கூடியவனாக, வீணான சடங்குகளை நம்பக் கூடியவனாக. மனிதனை மாற்றிவிடுகிறது இந்த இறை நிராகரிப்பும் இணைவைப்பும்.

ஆகவே ஒரு மனிதன் இணைவைப்பில் இருந்து இறை நிராகரிப்பில் இருந்து தவ்பா செய்து அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறான் என்றால் அது அந்த மனிதனுக்கு கொடுத்த கண்ணியத்தில் முதலாவதாகும்.

அல்லாஹு தஆலா அவனுக்கு கொடுத்த உயர்வை அடைகிறான். மனிதனுக்கு என்று ஒரு சங்கையை ஒரு மதிப்பை அல்லாஹ் கொடுத்திருக்கின்றான். அந்த மதிப்பை அவன் உணர்கின்றான்.

இந்த உலகத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொள்கின்ற ஒருவன் அவனுக்கு வசதியான வாழ்க்கை கிடைக்கவில்லை என்றாலும் இந்த உலகத்தில் அவன் இஸ்லாமை ஏற்று அதனால் எத்தனையோ சுகபோக வாழ்க்கையை அவன் விட்டிருந்தாலும் அல்லாஹ் கொடுத்த கண்ணியத்தை ஈமானை அவன் அடைகின்றான் என்றால் அதுவே மிகப் பெரிய பாக்கியம் என்பதை மறந்துவிடக்கூடாது.

அந்த பாக்கியத்தை அடையப்பெறுவது இந்த உலகத்தில் அதுவே அல்லாஹ்வுடைய மிகப்பெரிய நிஃமத்.

மனிதனாக பிறந்து அதற்குரிய பலனை எப்போது பெறுகிறான் என்றால், அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதன் மூலமாகத்தான்.

செல்வத்தினாலோ இந்த உலக படிப்பினாலோ அல்லாஹ்வுடைய பாக்கியத்தை அடைய முடியாது. ஈமான் என்ற ஒரு கண்ணியத்தைக் கொண்டு மட்டும் தான் அவன் அந்த பாக்கியத்தை பெற முடியும..

அல்லாஹ் கூறுகின்றான் : உங்களில் யார் என்னை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கு நான் கண்ணியத்தை கொடுக்கின்றேன். யார் இல்மு கொடுக்கப்பட்டார்களோ ஈமான் கொண்டதற்கு பிறகு யாருக்கு கொடுக்கப்பட்டதோ அவர்களுக்கு அவர்களுடைய பதவியை அல்லாஹ் மேலும் உயர்த்துகிறான்.

ஈமானுக்கு அடுத்ததாக அல்லாஹ் சொல்லக்கூடிய அந்த ஷிஃபத்தை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இறை நம்பிக்கை என்ற சிறந்த தராதரத்தை அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொன்னதற்குப் பிறகு வேற எந்த ஒன்றையும் அல்லாஹ் குறிப்பிடவில்லை.

ஈமான் கொடுக்கப்பட்டு இல்மு பெறப்பட்டால் அவனுடைய அந்தஸ்து மிக அதிகமாக இருக்கும் என்று அல்லாஹ் சொல்கின்றான்.

கண்ணியத்திற்குரிய சஹாபாக்களை நீங்கள் பாருங்கள். அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ரலியல்லாஹு அன்ஹும் இன்னும் இதுபோன்று கல்வி கொடுக்கப்பட்ட சஹாபாக்கள் அவர்களுடைய காலத்திலும் அந்த மக்களுக்கு மத்தியில் இருந்த கண்ணியத்தைப் பாருங்கள். இன்று வரை கல்வி கொடுக்கப்பட்ட அந்த மூத்த சஹாபாக்களுக்கு உரிய கண்ணியத்தைப் பாருங்கள்.

அந்த சஹாபாக்கள் செல்வத்தின் காரணமாக மதிக்கப்பட்டார்களா? இல்லை அவர்களுடைய அழகின் காரணமாக பரம்பரையின் காரணமாக மதிக்கப்பட்டார்களா? அவர்களின் இல்மின் காரணமாக மதிக்கப்பட்டார்கள்.

நபியை ஈமான் கொண்டார்கள். நபி உடைய ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு செயலையும் பாதுகாத்தார்கள். அதை கற்றுக் கொண்டார்கள். அதை புரிந்து கொண்டார்கள். எனவே ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு கண்ணியத்தைக் கொடுத்தான்.

அல்லாஹ்வின் தூதருக்குப் பிறகு கலீஃபா ஆகக்கூடிய அந்தஸ்தை அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு பெறுகின்றார்கள்.அது,நபியிடம் இருந்து கற்றுக்கொண்ட கல்வியின் காரணமாக பெற்றார்கள்.

சஹாபாக்களில் மிகப் பெரிய அந்தஸ்து யாருக்கு என்றால் முதலாவதாக அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு. இரண்டாவதாக, கல்வியில் அந்தஸ்து யாருக்கு என்றால் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு. மூன்றாவது உஸ்மான். நான்காவது அலி ரழியல்லாஹு அன்ஹு என்று அவர்களுக்கு தரம்பிரித்து சொல்லப்படும்.

கல்வியின் காரணமாகவும் நபியோடு அவர்களுக்கு இருந்த நெருக்கம் காரணமாகவும் அந்த அந்தஸ்திற்கு தகுதி பெறுகிறார்கள் என்று முஹத்திஸ்களும், முஃபஸ்ஸிர்களும்,  ஃபுகஹாக்களும் நமக்கு சொல்கின்றார்கள்.

இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கின்றார்கள் :

قال الإمام أحمد -رحمه الله- (الناس إلى العلم أحوج منهم إلى الطعام والشراب، لأن الرجل يحتاج إلى الطعام والشراب في اليوم مرة أو مرتين وحاجته إلى العلم بعدد أنفاسه)

ஒரு மனிதனுக்கு எந்த அளவு உணவு தேவையோ குடிக்கும் நீர் தேவையோ அதைவிட அதிகமாக அல்லாஹ்வுடைய தீன் தேவை. மார்க்க கல்வி தேவை. ஹலால் ஹராம் சட்டம் தேவை. ஏனென்றால் உணவு குடிபானம் என்பதோ ஒரு நாளில் ஒரு முறையோ இரு முறையோ மட்டும்தான் நமக்கு தேவை உடையதாக இருக்கலாம். ஆனால் இல்ம் உடைய தேவை என்பது அவன் மூச்சு விடும் அளவிற்கு தேவை.

எந்த ஒரு நேரத்தையாவது இந்த நேரத்தில் அல்லாஹ்வுடைய வழிகாட்டுதல் எனக்கு தேவையில்லை என்று சொல்ல முடியுமா? தூக்கத்திற்கு முன்பு என்ன செய்யவேண்டுமென்று ஒரு இல்ம் இருக்கிறது. தூக்கத்தில் ஏதாவது பிரச்சனை அதற்கும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வழிகாட்டுதல் இருக்கின்றது

அல்லாஹ்வை அறிவது, அவனுடைய சிஃபத்தை அறிவது, அவனுடைய ஹராம் ஹலால் அறிவது, அவனுடைய பொருத்தத்தை அறிந்துகொள்வது, அவனுடைய வெறுப்பை அறிந்து கொள்வது, இதனை தெரிந்து கொள்வதன் மூலமாக தான் அல்லாஹ்வின் மீது உண்மையான பயம் வரும் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான் :

إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ

நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தான். (அல்குர்ஆன் 35 : 28)

இமாம் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வை உண்மையான முறையில் பயப்படக்கூடியவர்கள் யார் என்றால் அல்லாஹ்வை அறிந்து கொண்டவர்கள் தான். அல்லாஹ்வின் ஞானம் எந்த அளவிற்கு நிறைவடைகின்றதோ அந்த அளவிற்கு அல்லாஹ்வின் மீதான பயமும் அவனுக்கு முழுமையடைகிறது.

இன்று சிலர்,வெளிரங்கமான சில செயல்களை தக்வா என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் அது எந்த விதத்திலும் தக்வாவிற்கு சம்பந்தம் உடையதாக இருக்காது.

தக்வா என்பது அல்லாஹ்விற்கு விருப்பமானதை அறிந்து அதை செய்வது, அல்லாஹ்விற்கு வெறுப்பானதை அறிந்து அதிலிருந்து விலகுவது, ஹராமான பாவமான செயல்கள், அது சிறியதாக இருக்கட்டும் அல்லது பெரியதாக இருக்கட்டும், அவற்றை விட்டும் விலகி இருப்பது. அல்லாஹ்வின் மீது உள்ளத்தில் இருக்கக்கூடிய மரியாதையும் கண்ணியமும் இதுதான்.

தக்வா என்பது ஆடைகளில் வெளிப்படாது. அது நல்லவர்களின் அடையாளமாக இருக்கும். சில ஆடைகள் முஸ்லிம்களில் ஒழுக்கமானவர்களின் ஆடைகளாக இருக்கும். ஆனால் அந்த ஆடையை அணிந்து கொள்வது மட்டும் தக்வா என்பதாக எண்ணிவிடக்கூடாது. அல்லது அந்த ஆடைகளை அணிந்து விடுவதால் நாம் தக்வா வாதிகளாக ஆகிவிட முடியாது. அப்படி எண்ணவும் கூடாது.

மாறாக தக்வா என்பது இந்த ஆடைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு அவருடைய இல்மிலும் அவருடைய அமலிலும் இருக்கக்கூடிய ஒன்று.

மக்களை நீங்கள் பார்க்கலாம்; பெரிய ஜிப்பாவோடு பெரிய தாடியோடு வணக்கசாலிகளாக இருப்பார்கள். ஆனால், ஹலால் ஹராம் உடைய இல்மில் அவர்கள் குறை செய்வார்கள்.

எத்தனையோ ஹராமை அன்றாடம் செய்யக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். லஞ்சம் கொடுக்கிறார்கள், பொய் பேசுகிறார்கள், ஏமாற்றுகிறார்கள், வாக்கிற்க்கு மாறுசெய்கிறார்கள், அல்லது வட்டி வாங்கி வியாபாரம் செய்கின்றார்கள்.

இன்று எத்தனையோ மக்களைப் பாருங்கள்; நகரங்களில் வாழக்கூடிய மக்கள் இந்த வட்டியில் எந்த அளவிற்கு சம்பந்தப்பட்டு உள்ளார்கள். பல தொழுகையாளிகள் அவர்களுடைய வெளிரங்கத்தை பார்த்தால் பெரிய வணக்கசாலியாக, நல்ல மனிதர் போன்று தெரியும்.

ஆனால் அவர்களுடைய வியாபாரத்தை எடுத்துப்பார்த்தால் அவர்களுடைய ஆரம்பத்திலிருந்து இறுதிவரை வட்டியிலேயே அவர்களுடைய அன்றாட வாழ்க்கை செல்வதைப் பார்க்கிறோம்.

இன்னும் சிலர் இந்த வட்டியை ஹலால் ஆக்குவதற்கு தந்திரத்தை சொல்கிறார்கள்: மக்களிடத்தில் வட்டி வாங்கினால் கொடுத்தால்தான் கூடாது.

வங்கிகளில் வட்டிக்கு வாங்கலாம், அங்கு நம்முடைய பணத்தை வட்டிக்கு கொடுக்கலாம். அது தப்பு கிடையாது. ஏனென்றால் அங்கு வியாபாரம்தான் செய்யப்படுகிறது. என்று தந்திரம் குதர்க்கம் செய்கிறார்கள்.

எந்த ஒன்றை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் போர் செய்வதற்கு சமம் என்று சொல்கின்றானோ அப்படிப்பட்ட ஒரு பாவத்தை, மண இச்சையை கலந்து, ஷைத்தானுக்கு அடிமையாகி, அதை ஹலால் ஆக்குகிறார்கள்.

இது பாவத்தை பாவம் என்று கருதி செய்வதை விட மிக பயங்கரமானது.

ஒரு மனிதன் ஒரு பாவத்தை பாவம் என்று தெரிந்த நிலையில் செய்கின்றான். பாவம் தான் தெரியாமல் செய்து விடுகிறான். இவருடைய பாவங்கள் மன்னிக்கப்படலாம். அல்லாஹ் இவர்களுடைய நன்மையின் மூலமாகவோ அல்லது தண்டனையை கொடுத்தோ அவனை மன்னிப்பான்.

ஆனால், பாவத்தை அந்த குற்றத்தை அவன் ஹலால் என்று செய்வானேயானால் அவன் காஃபிராகி விடுகின்றான். அல்லாஹ் ஹராமாக்கியதை ஹலால் ஆக்குவதனால் அல்லாஹ்வை அவன் நிராகரித்து விடுகின்றான். அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் இருந்து வெளியேறி விடுகின்றான். இதுதான் இல்முடையவர்களுடைய தீர்ப்பு என்பதை மறந்து விடக்கூடாது.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலாஇந்த தக்கவா -பயம் என்பதை இல்மிலும் அமலிலும் வைத்துள்ளான்

இந்த இல்மைப் பற்றி அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்வதைப் பாருங்கள்:

أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا كَذَلِكَ زُيِّنَ لِلْكَافِرِينَ مَا كَانُوا يَعْمَلُونَ

(வீழ்ச்சி அடைந்து) மரணித்தவர்களாக இருந்தவர்களில் எவரை நாம் உயிர்ப்பித்து மனிதர்களுக்கிடையில் நடமாடுவதற்குரிய ஒளியையும் கொடுத்திருக்கின்றோமோ அவர், இருளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமலிருப்பவனுக்குச் சமமாவாரா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய (தீய)செயல்கள் அழகாக்கப்பட்டு விட்டன. (அல்குர்ஆன் 6 : 122)

வசனத்தின் கருத்து : ஒரு மனிதன் இறை நிராகரிப்பில் இருப்பதை அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஒரு ஜனாசாவாக -செத்த பிணமாக இருப்பதற்கு ஒப்பிடுகின்றான்.

இறை நிராகரிப்பில் இருப்பதை இருள்களில் இருப்பதற்கு ஒப்பிடுகின்றான்.

குப்ரில் ஷிர்க்கில் இருக்கக்கூடிய ஒரு மனிதருக்கு இஸ்லாம், ஹிதாயத் -நேர்வழி கிடைப்பதன் மூலம் அவனுக்கு புதிய ஒரு வாழ்க்கை அமைகிறது.

அந்த மனிதன் இஸ்லாத்தை பெற்றதற்கு பிறகு இஸ்லாம் முடியவில்லை. அவன் தேடி பெறுகின்றான்.

அல்லாஹ் சொல்கின்றான்: அவனுடைய கையில் ஒளியை வெளிச்சத்தை அவன் வைத்துக் கொள்கின்றான். பிறகு அந்த இல்மின் மூலமாக மக்களுக்கு மத்தியில் நடந்து செல்லும் பொழுது அவனுக்கு கிடைக்கக்கூடிய கண்ணியத்தை பாருங்கள். மக்கள் அவனை சங்கைப்படுத்துவதையும் மரியாதை செலுத்துவதையும் பாருங்கள்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சிக்காலம் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். நமது வரலாற்றில் தாபியீன்கள், இமாம்கள் ஆயிரக்கணக்கான ஆலிம்கள் உலமாக்கள் இவர்களெல்லாம் போரில் கைது செய்யப்பட்டு அடிமைகளாக போரில் கொண்டு வரப்பட்டவர்கள்.

அவர்களுடைய பிள்ளைகள் எப்போது இந்த தீனை கற்றுக் கொண்டார்களோ இன்று நாம் அவர்களை நம் இமாம்களாக சொல்கின்றோம். இமாம்களாக ஏற்றுக் கொள்கின்றோம்.

இமாம் அபூஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஃபார்சி வம்சத்தை சேர்ந்தவர்கள். முஸ்லிம்களின் கைதியாக கிடைத்த அடிமை வம்சத்தில் உள்ளவர்கள்.

இன்று உலக மக்கள் அவர்களை இமாம் என்று சொல்கிறார்கள்.அல்லாஹ் இவர்களுக்கு இந்த பாக்கியத்தை கொடுத்தான்.

இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய மூதாதையர் ஒரு ஸஹாபிக்கு கைதியாக கிடைக்கப் பெற்றவர். அவருடைய பிள்ளை மேலும் அவருடைய பிள்ளை இந்த இல்மை தேடி பெறும்போது இன்று ஹதீஸில் முஃமின்களுக்கு அமீர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அல்லாஹ் தகுதியை கொடுத்துள்ளான்.

இப்படி நூற்றுக்கணக்கான இமாம்கள் உடைய பெயரை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ், இமாம் இப்னுசீரின் ரஹிமஹுல்லாஹ் இவர்கள் போன்றவர்கள் இந்த தீனை பாதுகாத்தவர்கள். குர்ஆனையும் சுன்னாவையும் மனப்பாடம் செய்து இந்த உம்மத்திற்காக கற்றுக் கொடுத்தவர்கள். இந்த உம்மத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் இவர்களுக்காக நாம் கடமைப்பட்டுள்ளோம். இவர்களுக்காக நாம் துஆ செய்கின்றோம். அந்த அந்தஸ்தை அவர்கள் இல்மின் மூலமாக கிடைக்கப் பெறுகிறார்கள்.

உமர் (ரலி) அவர்கள் ஒருமுறை ஹஜ்ஜுக்கு வந்தபோது, மக்காவின் கவர்னராக இருந்தவருடன் ஹஜ் செய்வதற்காக வந்திருந்தார்கள். அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள்: இப்போது நீ ஹஜ் செய்ய வந்து விட்டாயே! மக்காவில் கஃபத்துல்லாஹ்வில் முஸ்லிம்களுக்கு தொழுகை நடத்துவதற்கு யாரை நீ நியமித்துள்ளாய்? என்று கேட்டபோது ஒரு அடிமையின் பெயரை சொல்கின்றார்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு கேட்கின்றார்கள் : ஒரு அடிமை தான் கிடைத்தாரா? உனக்கு வேறு ஒரு சுதந்திரமானவர் கிடைக்கவில்லையா? என்று கேட்டதற்கு அவர்கள் சொல்கின்றார்கள் :

அமீருல் முஃமினீன் அவர்களே! இந்த அடிமை மக்காவில் இருப்பவர்களில் அதிகமாகக் குர்ஆனை சரியாக கற்றவர். நபியின் உடைய சுன்னாவை சரியாக கற்றவர். அதனால்தான் எனது பிரதிநிதியாக நான் அவரை மக்காவில் முஸ்லிம்களுக்கு தொழுகை நடத்துவதற்காக நியமித்து வந்துள்ளேன் என்று அந்த கவர்னர் சொன்னபோது, உமர் ரலியல்லாஹு அன்ஹு சரியான ஒருவரை தேர்வு செய்துள்ளீர்கள் என்று கூறினார்கள்.

அல்லாஹ் இந்த வேதத்தின் மூலமாக சில மக்களுக்கு உச்சத்தை கொடுப்பான், கண்ணியத்தை கொடுப்பான். சில மக்களுக்கு அல்லாஹ் தாழ்வை கொடுப்பான். யார் இந்த வேதத்தை கற்றார்களோ அவர்களுக்கு உயர்ந்த கண்ணியத்தை கொடுப்பான். யார் இந்த வேதத்தை புறக்கணித்தார்களோ கற்றுக் கொள்ளவில்லையோ அவர்களுக்கு தாழ்வைக் கொடுப்பான்.

இப்படிப்பட்ட ஒரு கண்ணியத்தை நாம் இந்த இல்மின் மூலமாக அடைய பெறுகின்றோம்.

அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள் :

أَفَمَنْ يَعْلَمُ أَنَّمَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ أَعْمَى إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ

உமது இறைவனால் உமக்கு இறக்கப்பட்ட (வேதத்)தை (அது) உண்மைதான் என்று உறுதியாக நம்பக்கூடியவன் (பார்வையிழந்த) குருடனுக்கு ஒப்பானவனா? (ஆகமாட்டான்.) நிச்சயமாக (இதைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவரெல்லாம் அறிவுடையவர்கள்தான். (அல்குர்ஆன் 13 : 9)

யாருக்கு இந்த குர்ஆனுடைய இல்ம் இல்லையோ அல்லாஹ்வின் வேதத்தின் ஞானம் இல்லையோ அந்த மனிதனை அல்லாஹுத்தஆலா குருடன் என்று சொல்கின்றான். அல்லாஹ்வின் சட்டங்களை, அல்லாஹ்வின் விருப்பத்தை அறியாதவன் கண்ணிருந்தும் குருடன் ஆவான்.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :

يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ

(அல்லாஹ்) தான் விரும்பியவர்களுக்கே ‘ஹிக்மா' (ஞானம், நுண்ணறி)வை கொடுக்கிறான். ஆதலால், எவர் ஹிக்மாவைக் கொடுக்கப் பெறுகிறாரோ அவர் நிச்சயமாக பல நன்மைகளைப் பெற்றுவிடுவார். ஆயினும் (இந்த நுண்ணறிவு, ஞானத்தைக்கொண்டு) அறிவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உணர்வு பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 269)

இந்த வசனத்தின் மூலம் இல்ம் உடைய மகத்துவம், கண்ணியம், மதிப்பு என்ன என்பதை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:

مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ

அல்லாஹ் ஒரு மனிதனுக்கு நன்மை செய்ய நாடினால் அந்த மனிதனுக்கு தீனுடைய ஞானத்தை கொடுக்கின்றான். தீனுடைய அறிவை ஞானத்தை பொக்கிஷத்தை அல்லாஹ் கொடுக்கின்றான்.(1)

அறிவிப்பாளர் : முஆவியா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2884, 6768.

இதன் மூலம் செல்வம் கொடுக்கப்பட்டவர்கள் அல்லது உலகில் பெரிய பட்டங்களைப் பெற்றவர்கள் இதை அல்லாஹ் நமக்கு நன்மையை நாடி இருக்கின்றான் என்று சொல்லமுடியாது, அது பயன்படுத்துகின்ற முறையைப் பொறுத்தே.

ஆனால், மார்க்க இல்மில் ஒருவன் நுழைய ஆரம்பிப்பது, இல்மை ஒருவன் கற்க ஆரம்பிப்பது அல்லாஹ் அவனுக்கு நலவை நாடிவிட்டான் என்பதற்கு பெரும் அடையாளமாக இருக்கின்றது.

இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்யக்கூடிய மற்றொரு ஹதீஸை பாருங்கள் : ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகின்றார்கள் :

الدُّنْيَا مَلْعُونَةٌ مَلْعُونٌ مَا فِيهَا إِلَّا ذِكْرَ اللَّهِ وَمَا وَالَاهُ أَوْ عَالِمًا أَوْ مُتَعَلِّمًا

இந்த துன்யா முழுவதும் சபிக்கப்பட்டது இந்த துனிய வில் உள்ளவை சபிக்கப்பட்டது ஆனால் அல்லாஹ்வுடைய திக்ரை தவிர நினைவைத் தவிர அல்லது அந்தத் திக்ருக்கு உதவியாக இருக்கக்கூடிய விஷயங்களைத் தவிர, கல்வியை கற்றுக் கொடுக்கக்கூடிய ஆலிமை தவிர அல்லது கல்வியை கற்றுக் கொள்ளக்கூடிய மார்க்க  இல்ம் உள்ள மாணவர்களை தவிர.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2322, தரம் : ஹசன் (அல்பானி)

எவ்வளவு தெளிவான விஷயத்தை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கூறியுள்ளார்கள். துன்யாவுடையை ஒரு விஷயம் அது தீனுக்கு உதவியாக இருந்தால்தான் அல்லாஹ்வுடைய சாபத்திலிருந்து அது நீங்குகிறது; பாதுகாக்கப்படுகிறது.

அல்லாஹ்வுடைய குர்ஆனுடைய, நபியின் சுன்னா உடைய இல்ம் என்பது அதனுடைய தொடக்கமே அல்லாஹ்வுடைய ஒரு அருள், அல்லாஹ்வுடைய ரஹ்மத் ஆகும்.

அல்லாஹ்வுடைய தூதர் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதாக அபூதர்தா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ

யார் ஒரு மனிதன் இல்மை தேடி ஒரு பாதையில் செல்கின்றானோஅல்லாஹ் அந்த மனிதனை சொர்க்கத்தின் பாதையில் அவனை நடத்த வைக்கின்றான். (2)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 4867.

ஹலால் ஹராம் உடைய இல்ம் அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அடையக்கூடிய இல்ம்.அல்லாஹ் என் மீது எதை கடமையாக்கினான்என்பதைப் பற்றிய இல்ம். அது சொர்க்கத்தின் பாதையை இலகுவாக்கி சொர்க்கத்தின் பாதையில் அல்லாஹ் அவனை நடத்தாற்றுகின்றான்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் :

மலக்குமார்கள் தங்களது இறக்கைகளை மார்க்க இல்ம் தேடக்கூடிய ஒரு மாணவனுக்காக விரிக்கின்றார்கள். வானத்தில் உள்ளவர்கள் பூமியில் உள்ளவர்கள் எல்லாம் ஆலிமிற்க்காக மன்னிப்பு தேடுகிறார்கள். தண்ணீரில் உள்ள மீன்கள் ஒரு ஆலிமிற்க்காக பாவமன்னிப்பு தேடுகின்றன.

ஒரு ஆலிமிற்க்கும் ஒரு ஆபிதிற்க்கும் உள்ள வித்தியாசம் ஏனைய நட்சத்திரங்களை விட சந்திரனுக்கு உள்ள சிறப்பை போன்றது.

உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள். நபிமார்கள் தீனாரையோ திர்ஹமையோ விட்டு செல்லவில்லை. அவர்கள் விட்டுச் சென்றது இல்மைத்தான். யார் தீனை அடைய பெற்றார்களோ அவர்கள் மகத்தான பாக்கியத்தை அடைய பெற்றார்கள்.(3)

அறிவிப்பாளர் : அபூதர்தாரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 3157.

அல்லாஹ்வுடைய தீன் என்பது நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. இன்று இந்த இல்மை தெரியாத காரணத்தால் முஸ்லிம்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட வழிகேட்டை பார்க்கின்றோம்.

தொழுகையில் வழிகேடு. வணக்க வழிபாடுகளில் வழிகேடு. இஸ்லாமிய கலாச்சாரத்தில் வழிகேடு. இஸ்லாம் இன்று அவர்களுக்கு அன்னியமாக மாறிக்கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுடைய சட்டங்கள் அன்னியமாக மாறிக்கொண்டிருக்கிறது.

அல்லாஹ்வுடைய அடிப்படை விஷயங்களை அறியாத மக்களாக, தீனுடைய அசல் விஷயங்களை தெரியாத, தீனுடைய ஒழுக்கங்களை தெரியாத மக்களாக இன்று உம்மத்தில் பெரும் கூட்டம் மாறி இருக்கின்றார்கள்.

அதற்கு என்ன காரணம் என்றால் அல்லாஹ்வுடைய இந்த வேதம் குர்ஆனுடைய இந்தக் கல்வி சுன்னா உடைய கல்வி அவர்களுக்கு போதிக்கப் படுவதில்லை.

நமது இன்றைய வாலிபர்கள் வாலிபப் பெண்கள் திருமணப் பருவத்தை அடைந்து விடுகின்றார்கள். அவர்களுக்குத் திருமணம் ஒரு சடங்காக நடத்தி வைக்கப்படுகின்றது.

அவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியுமா? குடும்பம் என்றால் என்னவென்று தெரியுமா?தந்தையின் பொறுப்பு என்பது அவர்கள் அறிவார்களா? பிள்ளைகளுடைய கடமைகள் என்பதை அறிவார்களா? மனைவியுடைய ஹக்குகளை அவர்கள் அறிவார்களா? எந்த ஒன்றையும் அறியாமல், பொருளாதாரக் கல்வியும், செல்வமும், படிப்பும், அவர்களுடைய சமுதாய அந்தஸ்தும் தான் அவர்களுடைய தகுதியாக இருக்கிறது.

ஒரு வியாபாரம் செய்கின்றான். அந்த வியாபாரத்தில் எது ஹராம்? எது ஹலால்? என்று அவனுக்கு தெரிவதில்லை. எத்தனையோ ஹராமை சர்வ சாதாரணமாக செய்து கொண்டிருக்கின்றான். அதனுடய சட்டங்களை தெரியாத காரணத்தால்.

அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லக்கூடியதைக் கேளுங்கள் :

என்ன நேர்ந்தது எனக்கு?! நான் இப்படிப்பட்ட ஒரு மோசமான காட்சியை பார்க்கின்றேன்; உங்களுடைய உலமாக்கள் எல்லாம் சென்று கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் உங்களில் உள்ள அறியாத மக்களோ இல்ம் இல்லாத மக்களோ அந்த உலமாக்களிடமிருந்து எந்தக் கல்வியும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றார்களே!

நீங்கள் கல்வி உயர்த்தப்படுவதற்கு முன்பதாக கல்வியை கற்றுக் கொள்ளுங்கள். கல்வி எப்படி உயர்த்தப்படும் என்றால், உலமாக்கள் இந்த உலகத்தை விட்டு செல்வது தான் கல்வி உயர்த்தப்படுவது என்று அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு சொல்லி காட்டுகின்றார்கள்.

இன்று நாம் பார்க்கிறோம்: அல்லாஹு ரப்புல் ஆலமீன் இந்த உலகத்தில் உலமாக்களை கொடுத்துள்ளான். கல்வி பெற்ற அறிஞர்களை கொடுத்திருக்கின்றான். ஆனால் அவர்களிடமிருந்து கல்வியை நாம் தேடுகின்றோமா? நம்முடைய சில வணக்க வழிபாடுகளை செய்து கொடுப்பதற்காக மட்டும் உலமாக்களை நாம் வைத்திருக்கின்றோமே தவிர, அந்த ஆலிமிடமிருந்து ஹராம் ஹலால் உடைய சட்டங்களை கற்கின்றோமா?

இன்று மஸ்ஜிதுகளை தொழுகைக்காக மட்டுமே கட்டி வைக்கப்பட்ட இல்லங்களாக மாறிக்கொண்டு வருவதை நாம் பார்க்கிறோம். இப்படியா நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் இருந்தது?

அங்கே ஹராம் ஹலால் உடைய கல்விகள், குர்ஆனுடைய கல்விகள், சுன்னா உடைய கல்விகள் போதிக்கப்பட்டு வந்தன. வெறும் இபாதத் செய்வதற்காக மட்டும் தனியாக ஒரு தொழிலை இஸ்லாமிய மார்க்கத்தில் நாம் அறியவில்லை.

கலிபாக்கள் மஸ்ஜிதில் இமாமை நிர்ணயித்தார்கள். ஆனால் அந்த இமாமுடைய பொறுப்பு என்னவாக இருந்தது? முஸ்லிம்களுக்கு கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும்; குர்ஆனை போதிக்க வேண்டும் .

ஆனால் துன்யாவில் மூழ்கிவிட்ட முஸ்லிம்களாகிய நாம் நமது ஃபர்ழான கடமைகளை முடிப்பதற்காக மட்டும் அந்த இமாம்களை வைத்து விட்டோமே தவிர, அவர்களிடமிருந்து இல்மை பெற்றுக் கொள்வதில்லை.

எவ்வளவு நேரம் நமக்கு இருக்கின்றன? எவ்வளவு நேரம் நாம் செலவு செய்கின்றோம்? திருமணத்திற்கு செலவு செய்யக்கூடிய வீணான நேரத்தை பாருங்கள்.

அல்லாஹுத்தஆலா எந்த ஒன்றை மிக மிக லேசானதாக ஆக்கினானோ, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் மிக மிக லேசானதாக்கினார்களோ அந்தத் திருமணமோ இன்று ஆண்டுகள் கணக்கில்  மாதங்கள் கணக்கில் செலவு கொடுத்து சிரமப்பட்டு செய்யக்கூடிய ஒன்றாக மாறிக்  கொண்டு இருக்கின்றது.

ஆனால் எந்த ஒரு இல்மிற்காக நபிமார்கள் நாட்கணக்கில் பயணம் செய்தார்களோ,  எந்த ஒரு இல்மிற்காக வாழ்க்கை எல்லாம் செலவு செய்ய வேண்டும் என்று அல்லாஹ் சொன்னானோ அந்த இல்மிற்கு மக்களிடத்தில் கண்ணியம் இல்லை. அந்த இல்மிற்காக நேரங்கள் ஒதுக்கப்படுவது இல்லை.

பொருளாதார கல்வியை படிப்பதில் பிசி, பொருளை சம்பாதிப்பதில் பிசி, ஆலிம்களிடத்தில் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடிய எத்தனையோ மக்களை நாம் பார்க்கின்றோம்.

எதற்காக பழக்கம் வைத்திருக்கிறார்கள்? பரக்கத்திற்காக பழக்கம் வைத்திருக்கிறார்கள். நட்பிற்காக பழக்கம் வைத்திருக்கிறார்கள். ஆலிம்சா வீட்டிற்கு அழைத்து சென்றால் பரக்கத். அதற்காக பழக்கம் வைத்திருக்கிறார்கள்.

இன்று நமக்கு எத்தனை உலமாக்களை தெரியும். நாம் அவர்களிடத்தில் சென்று ஹலால் ஹராம் உடைய கல்வியை முறையாக படிக்கின்றோமா? எப்போதாவது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அப்போது மட்டும் அவர்களிடத்தில் சென்று அணுகுகிறோம்.

அல்லாஹ்வுடைய தீனுக்காக நாம் என்ன செய்தோம் என்றுஅல்லாஹ் இதுகுறித்து நம்மிடத்தில் கேள்வி கேட்பான்.

இந்த இல்மை நாம் தேடிப் பெறவில்லை என்றால் எப்படி நாம் அமலை சரியாக செய்ய முடியும்? எப்படி நாம் இந்த மார்க்கத்தை பிற மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும்?

ஆகவே, நம்முடைய நேரத்தில் ஒரு பெரும் பகுதியை அல்லாஹ்வுடைய தீனுக்காக ஒதுக்குங்கள். அல்லாஹ்வுடைய இல்மை கற்றுக் கொள்வதற்காக நேரம் ஒதுக்குங்கள். அல்லாஹ்வுடைய தீனை கற்று அதன்படி செயல்படக்கூடிய நல்லடியார்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி வைப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ عَنْ يُونُسَ عَنْ الزُّهْرِيِّ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ وَاللَّهُ الْمُعْطِي وَأَنَا الْقَاسِمُ وَلَا تَزَالُ هَذِهِ الْأُمَّةُ ظَاهِرِينَ عَلَى مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ ظَاهِرُونَ (صحيح البخاري 2884 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ وَاللَّفْظُ لِيَحْيَى قَالَ يَحْيَى أَخْبَرَنَا و قَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمْ السَّكِينَةُ وَغَشِيَتْهُمْ الرَّحْمَةُ وَحَفَّتْهُمْ الْمَلَائِكَةُ وَذَكَرَهُمْ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ (صحيح مسلم 4867)

குறிப்பு 3)

حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ سَمِعْتُ عَاصِمَ بْنَ رَجَاءِ بْنِ حَيْوَةَ يُحَدِّثُ عَنْ دَاوُدَ بْنِ جَمِيلٍ عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ قَالَ كُنْتُ جَالِسًا مَعَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِدِ دِمَشْقَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا الدَّرْدَاءِ إِنِّي جِئْتُكَ مِنْ مَدِينَةِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا جِئْتُ لِحَاجَةٍ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا مِنْ طُرُقِ الْجَنَّةِ وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ (سنن أبي داود 3157 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/