HOME      Khutba      அல்லாஹ்தான் பாதுகாவலன் | Tamil Bayan - 335   
 

அல்லாஹ்தான் பாதுகாவலன் | Tamil Bayan - 335

           

அல்லாஹ்தான் பாதுகாவலன் | Tamil Bayan - 335


بسم الله الرحمن الرّحيم

அல்லாஹ்தான் பாதுகாவலன்

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

அல்லாஹ்வை பயந்து கொண்டவர்கள் இம்மையிலும் வெற்றி அடைந்தார்கள் மறுமையிலும் வெற்றி அடைவார்கள். அல்லாஹ்வை பயப்படுவது ஈமானை அதிகரிக்க செய்கிறது;அல்லாஹ்வை பயப்படுவது நமது அமலை சுத்தப்படுத்துகிறது;நமது அமலை சீர்படுத்துகிறது;நமது எண்ணத்தைச் சுத்தப்படுத்துகிறது.

அல்லாஹ்வின் அச்சத்தைக் கொண்டுதான் ஓர் அடியான் அல்லாஹ்வை நெருங்க முடியும்; அல்லாஹ்வின் அன்பை அடைய முடியும்; அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

யார் அதிகமாக அல்லாஹ்வை பயப்படுகிறார்களோ யார் அதிகமாக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்கிறார்களோ அவர்கள்தான் அல்லாஹ்விற்கு மிக நெருக்கமானவர்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து மறுமையில் மிக நிம்மதி பெற்றவர்கள். அதிக பாதுகாப்பு பெற்றவர்கள் அவர்கள்தான்.

யார் இந்த உலகத்தில் அல்லாஹ்வை பயந்து கொண்டு இருக்கிறார்களோ அவர்களை மறுமையில் அல்லாஹு தஆலா மஹ்ஷரிலும் நிம்மதியாக வைத்திருப்பான்; கேள்வி கணக்கு கேட்கும் போதும் அவர்களை நிம்மதியாக வைத்திருப்பான்; அமல்கள் எடை போடப்படும் போதும் அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்; சிராத் பாலத்தை கடக்கும் போதும் அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்.

இந்த தக்வா -இறையச்சம் அடிப்படையில் அமைகின்ற அமல்கள் இந்த ஒரு காரணத்தை கொண்டு தான் அல்லது இந்த ஒரு அடிப்படையின் மீது தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது தீர்ப்பை இந்த மக்களுக்கு எழுதுகிறான்.

எந்த உம்மத் உடைய அமலும் ஈமானும் சீராக இருக்குமோ எந்த உம்மத் உடைய பாதை அல்லாஹ்வின் மீது அச்சம் உடையதாக இருக்குமோ அவர்களுடைய கொடுக்கல் வாங்கல் அவர்களுடைய தொழில்துறை அவர்களது குடும்ப வாழ்க்கை அவர்களது சமுதாய வாழ்க்கை அவர்களுக்கு மத்தியில் உள்ள எல்லா தொடர்புகளும் அல்லாஹ்வின் அச்சத்தின் படி அல்லாஹ்வின் வேதத்தின் படி அமைந்திருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் இருக்கும்போது அல்லாஹுத்தஆலா அந்த உம்மத்தை ஒருநாளும் கைவிட மாட்டான். அவர்களை பாதுகாக்கின்ற பொறுப்பை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன் கைவசம் வைத்துள்ளான்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தங்கள் தோழர்களிலேயே மிக வயது குறைந்த ஒரு தோழர் தனது உறவினர்களில் மிக நெருக்கமான ஒரு உறவினர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறக்கும் போது ஒரு சிறு பையனாக அவர்கள் இருந்தார்கள். அவர்கள்தான் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு.

சிறு பையனாக இருந்த அவரை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் பக்கம் அழைத்துச் சொல்லக்கூடிய அறிவுரையைப் பாருங்கள்; அவர்கள் சொல்கின்ற அந்த ஈமானின் உறுதியை வார்த்தைகளை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்;

يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ

நான் உனக்கு சில வார்த்தைகளை கற்று தருகிறேன்; சில அடிப்படைகளை போதிக்கின்றேன்; அந்த விஷயங்களை நீ மனனம் இட்டுக் கொள்! தெரிந்துகொள்! பிறகு சொல்கிறார்கள்;

احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ

அல்லாஹ்வைப் பாதுகாத்துக் கொள்! அல்லாஹ் உன்னை பாதுகாப்பான். (1)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2516, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

என்ன ஒரு வார்த்தைப் பாருங்கள்; வார்த்தையின் ஆழத்தை சிந்தித்துப்பாருங்கள்; அர்ஷிற்க்கு மேலுள்ள அந்த அதிபதி ஜிப்ரீலை மீக்காயிலை இஸ்ராஃபீலை பெரும்பெரும் வானவர்களை ஏழு வானங்களை அதற்கு கீழ் உள்ளவற்றை  ஆர்ஷை குர்ஸியை படைத்த அந்த ரப்பின் விஷயத்தில் முதல் அறிவுரையை சொல்கின்றார்கள்;

அல்லாஹ்வை பாதுகாத்துக் கொள்! அல்லாஹ்வுடைய கட்டளைகளை,அல்லாஹ் உடைய மார்க்கத்தை,அல்லாஹ்வுடைய அந்த தீனை பாதுகாப்பதை,அல்லாஹ்வின் தீனின் படி நடப்பதை,அல்லாஹ் விதித்த வரம்பை மீறாமல்,அல்லாஹ்வுடைய சட்டங்களைப் பாழாக்காமல்,அல்லாஹ் நமக்கு எதை அனுமதித்தானோ அதைக்கொண்டு போதுமாக்கி,அல்லாஹ் தடுத்த சிறிய பெரிய விஷயங்களில் இருந்து விலகி இருக்கின்ற தக்வா உடைய நிலையை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கின்றார்கள்; அல்லாஹ்வைப் பாதுகாத்துக் கொள் என்று.

அல்லாஹ்வை நேசிப்பது என்பது அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நேசிக்காமல் முடியாது. அல்லாஹ்வை பயப்படுவது என்பது அல்லாஹ் தடுத்த பாவங்களில் இருந்து விலகாமல் முடியாது. அதுபோன்றுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தை பாதுகாப்பது அல்லாஹ்வை பாதுகாப்பது.

அதாவது,ஒருவன் அல்லாஹ்வின் மார்க்கத்தை பாதுகாக்கிறான் என்றால் அவன் அல்லாஹ்வை மதிக்கின்றான்; அவன் அல்லாஹ்வை கண்ணியப்படுத்துகின்றான்; அல்லாஹ்வை மகிமைப்படுத்துகின்றான்.

ஒருவன் அல்லாஹ்வின் சட்டங்களை மீறுகிறான் என்றால்,அல்லாஹ்வின் சட்டங்களை பாழாக்குகின்றான் என்றால்,அல்லாஹ்வின் கட்டளைகளை உடைக்கிறான் என்றால் அவன் அல்லாஹ்வின் விஷயத்தில் பேணவேண்டிய கண்ணியத்தை அவன் பேணவில்லை.

அல்லாஹ்வின் கண்ணியம், மரியாதை, அல்லாஹ்வின் கம்பீரம், அந்த வல்லமை, அல்லாஹ்வுடைய அந்த கிப்ரியா, அல்லாஹ்வுடைய அந்த மலக்கூத் அல்லாஹ்வுடைய அந்த ஜபரூத் அவனுடைய மகத்துவம் இவனுடைய உள்ளத்தில் இல்லை.

ஆகவே தான் அல்லாஹ்வின் சட்டங்களை மீறி அல்லாஹ்வின் கட்டளைகளை அவன் உடைக்கின்றான். அவற்றை அவன் துச்சமாக மதிக்கிறான்.

எனவேதான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; அல்லாஹ்வை பாதுகாத்துக் கொள்!

அல்லாஹ்வுடைய இந்த சட்ட வரம்புகளை பேணுவதை அல்லாஹ்வை மதிப்பதாக அல்லாஹ்வின் மீது நேசம் கொள்வதாக அல்லாஹ்வுடைய கண்ணியத்தை பாதுகாப்பதாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கின்றார்கள்.

இன்று சர்வ சாதாரணமாக முஸ்லிம் சமுதாயத்துடன் நிலைமையை நாம் பார்க்கின்றோம்;அவர்களுடைய ஈமானின் பலகீனம்,அல்லாஹ்வைப் பற்றி அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு அறியாமை,அல்லாஹ்வுடைய வல்லமையைப் பற்றி,அவனுடைய அந்த மகத்துவத்தைப் பற்றி அவனால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி அறியாமை.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் நாடினால் அவன்தான் காரணங்களை உருவாக்குகின்றான்; அந்தக் காரணங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் உண்டாக்கக்கூடியவன் அவன்தான். அந்த சூழல்களை உருவாக்கக்கூடியவனும் அவன் தான். விளைவுகளை உருவாக்கக்கூடியவனும் அவன் தான்.

காரணமும் அவன் கையில்தான். காரணங்களால் ஏற்படக்கூடியவைகளும் அவன் கையில் தான். சில காரணங்கள் உங்களுக்கு பாதகமாக தோன்றலாம். அல்லாஹ் அதை உங்களுக்கு சாதகமாக ஆக்கி தருவான். அல்லாவின் கையில்தான் எல்லாம் இருக்கின்றது.

அல்லாஹ்வை உறுதியாக நம்பாத வரை,அல்லாஹ்வுடைய சட்டங்களைப் பேணாத வரை அல்லாஹ்வுடைய பாதுகாப்பை அடைய முடியாது என்பதைத்தான் முதல் வாக்கியத்தில் சொல்கின்றார்கள். அல்லாஹ்வைப் பேணிக் கொள்; அல்லாஹ் உன்னை பேணிக்கொள்வான்.

இரண்டாவது வாக்கியத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்;

احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ

அல்லாஹ்வைப் பேணிக் கொள்! அல்லாஹ்வைப் பேணிக் கொண்டால் அல்லாஹ்வை நீ காண்பாய்; அவனை நீ அடைவாய்; அவனை நீ பெறுவாய்.

உனக்கு முன்னால் அல்லாஹ்வை காண்பது என்றால் அல்லாஹ்வுடைய உதவி நமக்கு அவ்வளவு நெருக்கமாக இருக்கும். அல்லாஹ்வுடைய ரஹ்மத் நன்மை உடையவர்களுக்கு இஹ்ஸான், ஈமானிய சுத்தம் உடையவர்களுக்கு, இஹ்லாஸ் உள்ளவர்களுக்கு அல்லாஹ்வுடைய ரஹ்மத் மிக நெருக்கமாக இருக்கின்றது.

அல்லாஹ் சொல்கின்றான்;

إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ

நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள், நன்மை செய்யும் அழகிய குணமுடையவர்களுக்கு மிக சமீபத்திலிருக்கிறது. (அல்குர்ஆன் 7 : 56)

அல்லாஹ் கேட்கின்றான்; 

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்கள் கஷ்டங்களை நீக்கி வைக்க) ‘‘அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)'' என்று கேட்டதற்கு ‘‘அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது'' என்று (நாம் ஆறுதல்) கூறும் வரை அவர்கள் ஆட்டிவைக்கப்பட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 214)

அல்லாஹு சுப்ஹானஹுதஆலாஎப்படியெல்லாம் நபிமார்கள் எதிரிகளால் அச்சுறுத்தப் பட்டார்கள் என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்றால் சூரா இப்ராஹீமை படித்துப்பாருங்கள்;சூரா அல் அஃராபை நீங்கள் படித்துப் பாருங்கள்;

لَنُخْرِجَنَّكَ يَاشُعَيْبُ وَالَّذِينَ آمَنُوا مَعَكَ مِنْ قَرْيَتِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا

நபியைப் பெயர்சொல்லி அழைத்து அவர்கள் சொல்கின்றார்கள்;உங்களை நாங்கள் வெளியாக்கியே தீருவோம். உங்களை மட்டுமல்ல, உங்களோடு ஈமான் கொண்ட அந்த மக்களையும் வெளியாக்கியே தீருவோம். எங்களது ஊரிலிருந்து எங்களது நகரத்தில் இருந்து உங்களை வெளியேற்றுவோம்.

அல்லது நீங்கள் திரும்பவும் எங்கள் மார்க்கத்திற்கு எங்களது கொள்கைகளுக்கே நீங்கள் வந்துவிடவேண்டும். அப்படி இல்லை என்றால் இனி இந்த ஊரிலேயே நீங்கள் இருக்க முடியாது. (அல்குர்ஆன்7 : 88)

வரலாற்றில் இது ஒரு புதிய வாசகம் அல்ல, இந்த நாடு என்பது சிலை வணங்கக்கூடியவர்களுக்கு மட்டும்தான். அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் ஏற்றுக் கொண்டவர்களுக்கு இங்கு இடமில்லை என்று சொல்வது வரலாற்றில் ஒரு புதிய வார்த்தை அல்ல. முஃமின்கள் பார்த்து வந்த வார்த்தை; கேட்டு வந்த வார்த்தை.

அந்த வார்த்தையை நபிமார்களுக்கு சொன்னார்கள்; அல்லாஹு ரப்புல் ஆலமீன் சூரா இப்ராஹீமிலே சொல்லும்பொழுது, இந்த வார்த்தையை எல்லா காஃபிர்களும் தங்களது நபிமார்களைப் பார்த்து நீங்கள் எங்கள் மார்க்கத்திற்கு கொள்கைக்கு திரும்ப வந்து விட வேண்டும் அல்லது உங்களை ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம் அல்லது உங்களை கொலை செய்து விடுவோம் கல்லெறிந்து உங்களை கொள்வோம் என்பதாக மிரட்டினார்கள்; பயமுறுத்தினார்கள்.

அந்த சூழ்நிலையை அல்லாஹ் வர்ணிக்கின்றான்; நபியும் நபியுடன் இருந்தவர்களும் அந்த நேரத்தில் அவர்கள் எங்கு திரும்பினார்கள்? என்ன அவர்கள் பிரார்த்தித்தார்கள்?

எப்போது அல்லாஹ்வுடைய உதவி நமக்கு வரும் என்று எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்ததே தவிர, இவர் வந்தால் உதவி செய்வார்; அவர் வந்தால் உதவி செய்வார்; இவர் நம்மை பாதுகாப்பார்; அவர் நமக்கு உதவியாக இருப்பார்; என்றெல்லாம் படைப்புகள் மீது மனிதர்களின் மீது அவர்கள் ஆதரவு வைக்கவில்லை. மக்களின் மீது அவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை.

அல்லாஹ்வுடைய உதவியைக் கொண்டு மட்டும்தான் முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற முடியும். தங்களது தீனைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். தங்களது ஈமானை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ஒரு முஃமினுடைய அடிப்படை எதிர்பார்ப்பு,அடிப்படை நம்பிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்றால் முதலில் எனது மார்க்கம் பாதுகாக்கப்பட வேண்டும்; முதலில் எனது ஈமானிய அடிப்படையில் எந்தக் குறையும் இடையூறும் வந்து விடக் கூடாது.

நான் வாழக்கூடிய இடத்தில், நான் வேலை செய்யக்கூடிய இடத்தில், நான் இருக்கக்கூடிய குடும்பத்தில் ஈமானைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் அந்த குடும்பத்தில் இருந்து ஹிஜ்ரா செய்ய வேண்டும்.

நாம் அரசாங்கத்தை மட்டும்தான் பார்க்கின்றோம். அரசாங்கம் செய்கின்ற செயலை மட்டும் தான் பார்க்கின்றோம். எத்தனை முஸ்லிம் குடும்பங்கள் அந்தக் குடும்பத்தின் தலைவர்கள் அந்தக் குடும்பத்தின் பொறுப்பில் உள்ளவர்கள் ஃபிர்அவ்னை விட மோசமானவர்கள் தெரியுமா? அந்த குடும்பத்தின் தலைவர்கள் நம்ரூதை விட கேவலமானவர்கள் தெரியுமா? எத்தனை வாலிபர்களுக்கு முஸ்லிம் குடும்பத்தில் இஸ்லாம் படி நடப்பதற்கு உரிமை இல்லை; அனுமதி இல்லை தெரியுமா?

மார்க்க ஒழுக்கங்களைப் பேணுவதற்கு அவர்களுக்கு அனுமதியில்லை. நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். இவர்களின் பார்வையெல்லாம் எதன்மீது இருக்கிறது? அரசாங்கத்தின் மீது. என்ன நோக்கம்? தங்களது சொத்திற்காக, செல்வத்திற்காக, தங்களது  பொருளாதாரத்திற்காக.

இன்று பல நாடுகளில் பல முஸ்லிம்கள் சில அநியாயக்கார அரசர்களை மன்னர்களை அதிகாரிகளை பயப்படுகிறார்கள் என்றால் இவர்களால் தங்கள் மார்க்கத்திற்க்கு பாதிப்பு என்பதற்காக அல்ல. இவர்களால் தீனுக்கு தடை ஏற்படும் என்பதற்காக அல்ல. இவர்களால் நம் உயிருக்கும் பொருளுக்கும் ஆபத்துஎன்பதற்காகத்தான் அநியாயக்கார அரசர்களை, அநியாய மன்னர்களை, அநியாயக்கார அதிகாரிகளைப் பயப்டுகிறார்களே தவிர,

அல்லாஹ்வுடைய தீனுக்கு இவன் இடையூறாக அமைந்து விடுவானே, அல்லாஹ்வுடைய சட்டங்களை உடைப்பதற்கு இவன் காரணமாகி விடுவானே, அல்லாஹ்வுடைய சட்டங்களைப் பேண முடியாமல் இருப்பதற்கு இவன் காரணமாகி விடுவானே என்று இவர்கள் பயந்து இருந்தால் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி இருப்பார்கள். தங்களைப் பாதுகாத்துக் கொண்டு இருப்பார்கள்;தங்களை சீர்திருத்திக் கொண்டு இருப்பார்கள்;  அமல்களின் பக்கம் நெருங்கி இருப்பார்கள்;தங்களுக்கு மத்தியில் ஒற்றுமையை கடைப்பிடித்து இருப்பார்கள்.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு எதிரியாக மாற மாட்டான். அல்லாஹு ரப்புல் ஆலமீன் எதிரிகளை முஸ்லிம் மக்களின் மீது சாட்டுகிறான் என்றால் அதனுடைய அடிப்படைக் காரணங்களில், ஈமானுடைய பலவீனம் என்று ஒன்று இருக்கும் போது, அமல்கள் சீர்கெட்டு போயிருக்கும் என்று இருக்கும்போது, அது போன்று இன்னொரு காரணம், எப்போது முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒற்றுமை இல்லாமல் போகிறதோ, ஈமானைக்கொண்டு இஹ்லாஸைக் கொண்டு குர்ஆன் சுன்னா அடிப்படையில் அவர்களுக்கு மத்தியில் ஒற்றுமை இல்லாமல் போகிறதோ, அவர்களில் ஒருவர் மற்றொருவருக்கு எதிரியாக மாறுகிறாரோ, முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் பகைமையை ஏற்படுத்திக்கொண்டு மாற்றார்கள் உடன் கை கோர்ப்பதில் ஆர்வம் கொள்கிறார்களோ, இப்படிப்பட்ட சூழ்நிலைகள் இருக்கும்போது ஏன் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எதிரிகளை சாட்டாமல் இருப்பான்? அல்லாஹு ரப்புல் ஆலமீன் உடைய அடிப்படை இந்த ஒரு அமைப்பில் தான் அமைந்து கொண்டிருக்கிறது.

இன்று முஸ்லிம்கள் தங்களுடைய துன்யாவிற்காகத்தான் காஃபிர்களை பயப்படுகிறார்கள் தவிர தங்களுடைய தீனுக்காக பயப்படுகிறார்களா?

அல்லாஹ்வுடைய தீனுக்காக இவர்களுடைய கவலை இருக்குமேயானால் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக இவர்களுடைய கவலை இருக்குமேயானால் இவர்கள் தங்கள் வாழ்க்கையில் முதலில் மார்க்கத்தை பாதுகாப்பார்கள். மார்க்கத்தைப் பேணுவார்கள். எதைப் பேசினாலும் அந்த மார்க்கத்திற்காக பேசுவார்கள்.

இன்று எத்தனை உரிமைகள் காஃபிர் அரசாங்கத்தில் பிச்சைகளாக கேட்கப்படுகின்றன? அவற்றில் ஏதாவது ஒன்று அல்லாஹ்வுடைய தீனை முன்னிறுத்தி கேட்கப்படுகின்றதா?அல்லாஹ்வுடைய மார்க்கத்தை முன்னிறுத்திக் எடுக்கப்படுகிறதா?என்றால் எந்த ஒரு ரிஸ்குக்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறானோ எந்த ஒரு வாழ்வாதாரத்திற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறானோ அந்த ஒரு ரிஸ்கிற்காக காபிர்கள் இடத்திலே பிச்சை கேட்கக்கூடியவர்கள் அதிகமாக இருக்கிறார்களே தவிர அல்லாஹ் உடைய தீனுக்காக குரல்கொடுத்து தீனுக்காக எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது முஸ்லிம்கள் தீனை பேணுவதில் சுதந்திரமானவர்களாக வீரமானவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காகக் குரல்கள் கொடுக்கப்படுகின்றனவா? முயற்சிகள் எடுக்கப்படுகின்றனவா?என்றால் இல்லை.

அல்லாஹு சுப்ஹானஹுதஆலாஇப்படிப்பட்ட சோதனைகளை கொடுப்பான்.இந்த சோதனைகளை கொண்டு அவன் என்ன எதிர்பார்க்கிறான்? அல்லாஹ்வின் பக்கம் அடியார்கள் திரும்ப வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைத்தான் நமக்கு சொல்லிக் காட்டுகின்றார்கள்;அல்லாஹ்வின் சட்டங்களை நீ பேணாத வரை அல்லாஹ்வின் உதவியை உனக்கு முன்னால் பார்க்கவே முடியாது.

நமக்கு முன்னால் சென்ற சமுதாயத்தவர்கள் அல்லாஹ்வின் சட்டங்களை பேணிக் கொண்டு இருந்தார்கள். சோதனைகள் ஆரம்பத்தில் வந்தன;பிறகு அவர்கள் வெற்றி கொண்டார்கள்.

முஸ்லிம் சமுதாயத்தில் அஸ்ஹாபுல் உஹ்தூது என்று மிகப்பெரிய ஒரு சோதனைக்கு உள்ளான ஒரு சமுதாயத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு ஒரு உதாரணமாக கூறுகின்றான்.

பார்க்க : (அல்குர்ஆன் 85 : 1-10)

ஏறக்குறைய 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட அந்த மக்கள் கொல்லப்பட்டார்கள்; அகல் தோண்டி நெருப்பு மூட்டப்பட்டு அந்த நெருப்பில் அவர்கள் அப்படியே போடப்படுகிறார்கள். ஒருவர் பின் ஒருவராக வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு ஊர்மக்கள் ஒருவர் பின் ஒருவராக அந்த அகல் நெருப்பிலே அவர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள்.

கடைசியாக குழந்தையை சுமந்தவளாக ஒரு பெண் வருகிறாள்; அந்தப் பெண்ணுக்கு தன் மீது பயமில்லை. பரவாயில்லை அல்லாஹ்வுக்காக நாம் இழக்கிறோம். ஆனால் எதையுமே அறியாத இந்த குழந்தை ஒரு முஃமினுக்கு பிறந்த காரணத்தால் இந்தக் குழந்தையை நெருப்பில் வீசப்படுகிறதே என்று ஒரு தாய்க்கு அந்த உள்ளத்தில் ஏற்படக்கூடிய ஒரு பாசத்தால் அந்த தாய் ஒரு நிமிடம் நிதானிக்கும் போது அல்லாஹு ரப்புல் ஆலமீன் எப்படிப்பட்ட சரித்திர அதிசயத்தை நிகழ்த்துகிறான் பாருங்கள்;

இந்த இஸ்லாமிய வரலாற்றிலேயே மூன்று குழந்தைகளை தான் அல்லாஹ் பேச வைக்கின்றான். அதிலே ஒரு குழந்தை இந்த குழந்தை.

அந்தக்குழந்தை அப்பொழுது அந்தத் தாயிடத்தில் பேசுகிறது; ஒரு நபிக்கு கொடுத்த முஃஜிஸா.ஒரு ஈமானிய உணர்வுள்ள ஒரு தாய்க்கு அல்லாஹ் ஏற்படுத்துகின்றான். அவளைக் கண்ணியப்படுத்துவதற்காக;  அவளது ஈமானை பலப்படுத்துவதற்காக.

அந்தக் குழந்தை பேசுகிறது;

يَا أُمَّهْ اصْبِرِي فَإِنَّكِ عَلَى الْحَقِّ

என் தாயே! நீ சகித்துக் கொள்; நீ பொறுத்துக் கொள்; நீ சத்தியத்தில் இருக்கிறாய். இந்த வார்த்தையைக் கேட்டவுடன் தானாக முன்வந்து அந்த குழந்தையுடன் நெருப்பில் விழுந்து விடுகிறாள்.

அறிவிப்பாளர் : சுஹைப் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 3005.

அல்லாஹ் என்ன சொல்கிறான்; இந்த வரலாற்றைப் பற்றி அந்த அகல் தோன்றியவர்கள் அந்த முஃமின்களை எல்லாம் நெருப்பில் போட்டார்களே. எதற்காக?

وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ

இந்த முஃமின்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக. முஃமின்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் பழிவாங்கப்பட்டார்கள்.(அல்குர்ஆன் 85 : 8)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய இந்த சோதனை என்பது அல்லாஹ் அவர்களை கைவிட்டு விட்டான் என்பதற்கு அர்த்தமா? யார் அந்த நெருப்பில் போடப்பட்டார்களோ சிறிது நேரத்திற்கு தான் அந்த வேதனை.அதற்குப் பிறகு அவர்களுடைய தங்குமிடம் சொர்க்கம். அல்லாஹ்வுடைய தீனுக்காக உயிரைவிடக்கூடிய ஒவ்வொருவரின் இடம் சொர்க்கம்.

இங்கு ஹபீப் நஜ்ஜார் யாசிர் உடைய வரலாற்றைப் படித்துப் பாருங்கள்; அல்லாஹ்வின் பக்கம் அழைத்த ஒரே காரணத்திற்காக சமுதாய மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டம் அவர்களின் தொண்டையை ஆட்டை அறுப்பது போன்று அறுக்கிறது. இன்னொரு கூட்டம் அவரின் வயிற்றின் மேலே மிதிக்கிறது. இத்தகைய மரணத்தருவாயில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு சொர்க்கத்தை காட்டுகின்றான்.

قِيلَ ادْخُلِ الْجَنَّةَ قَالَ يَالَيْتَ قَوْمِي يَعْلَمُونَ (26) بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ الْمُكْرَمِينَ

(எனினும், மக்கள் அவருடைய நல்லுபதேசத்தைக் கேளாது அவரைக் கொலை செய்துவிட்டனர்! ஆகவே, அவரை நோக்கி) “நீர் சொர்க்கத்தில் நுழைவீராக!'' எனக் கூறப்பட்டது.

(சொர்க்கத்தில் நுழைந்த) அவர் “என் இறைவன் எனக்கு மன்னிப்பளித்து மிக்க கண்ணியமானவர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கிவிட்டதை என் மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறினார். (அல்குர்ஆன் 36 : 26, 27)

இங்கே ஏற்படக்கூடிய அந்த மரணத்தின் அடுத்த நுழைவாயில் சொர்க்கம். எனவேதான் அல்லாஹு சுப்ஹானஹுதஆலாஷஹீத் களைப் பற்றி சொல்லும்போது நபிமார்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனி விஷயத்தை அல்லாஹ் சொல்கின்றான்;

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ

(நபியே!) அல்லாஹ்வின் பாதையில் (போர்செய்து) வெட்டப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என நீர் ஒருபோதும் எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தங்கள் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கிறார்கள். (மேலும்,) அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது. (அல்குர்ஆன் 3 : 169)

فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

அல்லாஹ் தன் அருளால் (வீரமரணம் எய்திய) அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைகிறார்கள். இன்னும், தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவர்களைப் பற்றி ‘‘அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்'' என்று மகிழ்ச்சியடைகின்றனர்.(அல்குர்ஆன் 3 : 170)

يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ وَأَنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُؤْمِنِينَ

அல்லாஹ்வி(ன் அருளி)னால் தாங்கள் அடைந்த பாக்கியத்தைப் பற்றியும், மேன்மையைப் பற்றியும் ‘‘நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் (நற்)கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடவில்லை'' என்றும் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்.(அல்குர்ஆன் 3 : 171)

நான் என்ன எதிர்பார்க்கின்றோம்?நம்முடைய எண்ணங்கள் எல்லாம் உடனுக்குடன் கண்ணுக்கு எதிராக காட்டப்பட வேண்டும் என்று.இப்படி எந்த ஒரு நபியும் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். நபிமார்களுடைய வரலாறுகளை குர்ஆனில் நீங்கள் படித்துப் பாருங்கள்.

وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِاللَّهِ

பொறுமையாக இருங்கள்;அல்லாஹ்வுக்காக பொறுமையாக இருங்கள்;உங்கள் பொறுமை அல்லாஹ்வைக் கொண்டு. (அல்குர்ஆன் 16 : 127)

இந்த சோதனையில் அல்லாஹுத்தஆலா முஃமின்கள் கடைசிவரை விடமாட்டான். உண்மையாளர்கள் யார்? போலிகள் யார்? என்பதைப் பிரிப்பதற்காக அல்லாஹ் கொடுக்கக்கூடிய சோதனை இது. கண்டிப்பாக நல்ல முடிவு இறையச்சம் உடையவர்களுக்கு.

இஸ்ரவேலர்கள் 400ஆண்டுகள் ஃபிர்அவ்னிடத்தில் துன்பப்பட்டார்கள். அல்லாஹு ரப்புல் ஆலமீன் அதற்குப்பிறகு அவர்களிடத்தில் நபியை அனுப்பினான். அதற்குப் பிறகும் அவர்களுக்கு சோதனை.அவர்கள் சொன்னார்கள்;

قَالُوا أُوذِينَا مِنْ قَبْلِ أَنْ تَأْتِيَنَا وَمِنْ بَعْدِ مَا جِئْتَنَا

நீங்கள் வருவதற்கு முன்பும் சோதனை; நீங்கள் வந்ததற்குப் பிறகும் சோதனை என்றெல்லாம் அவர்கள் புலம்பினார்கள். (அல்குர்ஆன் 7 : 129)

மூசா நபி அவர்கள் சொன்னார்கள்; பொறுமை பொறுமை என்று.

அல்லாஹ் சொல்கிறான் ;

وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنَى عَلَى بَنِي إِسْرَائِيلَ بِمَا صَبَرُوا وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ وَمَا كَانُوا يَعْرِشُونَ

ஆகவே, இஸ்ராயீலின் சந்ததிகள் (ஃபிர்அவ்னால் ஏற்பட்ட கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (அவர்களுக்கு) உங்கள் இறைவன் கொடுத்த வாக்கு மிக நல்ல விதமாகவே நிறைவேறிற்று. ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும் கட்டியிருந்த மாட மாளிகைகளையும் (உற்பத்தி செய்திருந்த தோட்டம் துறவுகளையும்) நாம் தரைமட்டமாக்கி விட்டோம். (அல்குர்ஆன் 7 : 137)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைத்தான் சொல்கின்றார்கள்;

அல்லாஹ்வை பாதுகாத்துக் கொண்டால் அல்லாஹ்வுடைய தீனை நீ பாதுகாத்துக் கொண்டால் அவனது கண்ணுக்கு முன்னால் காண்பாய். அவனுடைய உதவிகளை நீ பெற்றுக் கொண்டே இருப்பாய்.

மேலும் சொன்னார்கள் ;

إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ

உனக்கு எதுவும் தேவையா? உனது தேவையை உனது பிச்சையை உனது கோரிக்கையை அல்லாஹ்விடத்தில் கேள். உனக்கு உதவி தேவையா? அல்லாஹ்விடத்தில் உதவியைத் தேடு.

பிறகு சொல்கிறார்கள்; தக்தீர் மீது மூஃமின்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கை குறித்து.

இன்று மூஃமின்களுக்கு தக்தீரின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. தக்தீர்யின் மீது நம்பிக்கை என்பது வாயளவில் மட்டும் சிறு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதைப் போன்று, மக்தப்களில் மனப்பாடம் செய்கின்றார்களே தவிர வாழ்க்கையில் தக்தீரை நம்புவது என்பது ஒரு அம்சமாக பலரிடத்தில் பார்க்க முடியவில்லை.

நபியவர்கள் சொல்கின்றார்கள்;

وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ

மனிதர்கள் மட்டுமல்ல. ஜின்களும் ஒன்று சேர்ந்து உனக்கு நன்மை செய்ய நாடினால் அல்லாஹ் எழுதியதைத் தவிர வேறு ஒன்றையும் செய்ய முடியாது.

மேலும் சொல்கிறார்கள்;

وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ

மனிதர்கள் மட்டுமல்ல, ஜின்களும் ஒன்று சேர்ந்து உனக்கு எதிராக ஒரு தீமையை நாடினால் அல்லாஹ் நாடியதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2516, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

இப்படிப்பட்ட நம்பிக்கை முஸ்லிம் சமுதாயத்தில் வராதவரை அமல்களின் சீர்திருத்தம் வராதவரை ஒழுக்கங்களின் சீர்திருத்தம் வராதவரை ஈமானின் பக்கம் நபியின் சுன்னாவின் பக்கம் அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் வராதவரை தங்களுக்கு மத்தியில் உள்ள பகைமைகளை பொறாமைகளை தங்களுக்கு மத்தியில் உள்ள சண்டை சச்சரவுகளை குழப்பங்களை நீக்கிவிட்டு முஃமின்களாக சகோதரர்களாக எதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் தங்களது இறுதிப் பேருரையில் சொன்னார்களோ;

«لَا تَحَاسَدُوا، وَلَا تَبَاغَضُوا، وَلَا تَجَسَّسُوا، وَلَا تَحَسَّسُوا، وَلَا تَنَاجَشُوا، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا»

அல்லாஹ்வின் அடியார்களே எல்லாம் சகோதரர்களாக இருங்கள்; உங்களுக்கு மத்தியிலே ஒருவர் மற்றொருவரை பார்த்து முகத்தை திருப்பிக் கொள்ளாதீர்கள்; உங்களுக்கு மத்தியிலே ஒருவருக்கொருவர் குரோதம் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; நீங்கள் ஒருவரின் குறையைப் பற்றி ஆராய்ச்சி செய்யாதீர்கள்; என்றெல்லாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன சமுதாய ஒழுக்கங்களைப் பேணிப் பாதுகாத்து அந்த சுண்ணா உடைய வாழ்க்கையின் பக்கம் திரும்பாத வரை அல்லாஹ் தன் தீர்ப்பை மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்தின் நிலையை அல்லாஹ் மாற்ற மாட்டான்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2563.

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ

மனிதர்கள் (தங்கள் தீய நடத்தையை விட்டு) தங்களை மாற்றிக்கொள்ளாத வரை நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களுக்குப் புரிந்த அருளை) மாற்றி விடுவதில்லை. (அல்குர்ஆன் 13 : 11)

நாம் பயப்படுவதற்கும் நாம் கேட்பதற்கும் மிகத் தகுதியானவன் அல்லாஹ் தான். நாம் யாசிப்பதற்கும் ஆதரவு வைப்பதற்கும் எல்லாவற்றிற்கும் மிகத் தகுதியானவன் அல்லாஹ்தான்.

وَمَنْ يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

அல்லாஹ்வைப் யார் பற்றி கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுக்கு நேர்வழி காட்டப்படும். (அல்குர்ஆன் 3 : 101)

ஆகவே நம் ஈமானை சரி செய்வோமாக! நமது குடும்பத்தை சரி செய்வோமாக! நமது சமுதாயத்தை சரி செய்வோமாக! அல்லாஹ் ரப்புல் ஆலமின் இடத்திலே அவனுடைய குர்ஆனைக் கொண்டு அவனுடைய நபியின் சுன்னாவை பின்பற்றுவது கொண்டு நாம் நெருக்கம் காண்போமாக. அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம்முடைய எல்லா சோதனைகளிலிருந்து எல்லாவிதமான ஆபத்துகள் பயத்தில் இருந்து நம்மை பாதுகாக்க அவன் போதுமானவன்.

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، وَابْنُ لَهِيعَةَ، عَنْ قَيْسِ بْنِ الحَجَّاجِ، ح وحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا أَبُو الوَلِيدِ قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ قَالَ: حَدَّثَنِي قَيْسُ بْنُ الحَجَّاجِ، المَعْنَى وَاحِدٌ، عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَقَالَ: «يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ، احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ، احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ، وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ، وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ، رُفِعَتِ الأَقْلَامُ وَجَفَّتْ الصُّحُفُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ"(سنن الترمذي2516 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/