HOME      Khutba      ரமழான் சிறப்புகளும் சட்டங்களும் (அமர்வு 3/3) | Tamil Bayan - 334   
 

ரமழான் சிறப்புகளும் சட்டங்களும் (அமர்வு 3/3) | Tamil Bayan - 334

           

ரமழான் சிறப்புகளும் சட்டங்களும் (அமர்வு 3/3) | Tamil Bayan - 334


ரமழானின் சிறப்புகளும்சட்டங்களும்

ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமழானின் சிறப்புகளும், சட்டங்களும் (அமர்வு- 3-3)

வரிசை : 334

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 11-07-2014| 14-09-1435

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்து, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்தத் தூதரின் குடும்பத்தார் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறிய பிறகு, இறையச்சத்தைக் கொண்டு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன் .

இறையச்சத்திற்காகவே கொடுக்கப்பட்ட ஒரு புனிதமான மாதத்தில் நாம் இருக்கிறோம். தக்வாவை அதிகப்படுத்துவதற்கு இறையச்சத்தை சம்பாதிப்பதற்கு ஒரு சிறந்த காலமாக அல்லாஹு தஆலா நமக்கு இந்த ரமழானை கொடுத்திருக்கிறான்.

இந்த ரமழான், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு சென்று கொண்டிருப்பதை நாம் அறிகிறோம். அல்லாஹு ரப்புல் ஆலமீன் இந்த உலக வாழ்க்கையை அப்படித்தான்   அமைத்து இருக்கிறான்.

காலை வருவதும் பிறகு மாலையாக மாறுவதும் தொடர்ந்து நடக்கக்கூடிய ஒரு செயலாக அல்லாஹு தஆலா அமைத்திருக்கிறான்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் இறையச்சத்தையும் ஈமானையும் அல்லாஹ்வின் பக்கம் செல்வதற்குரிய ஆர்வத்தையும் யார் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் இந்த புனிதமிக்க காலங்களில் இருந்து தேவையான கட்டுச்சாதத்தை மறுமைக்காக ஏற்படுத்திக் கொள்கிறார்கள். தயார் செய்து கொள்கிறார்கள்.

அலட்சியத்திலும் வீணான காரியங்களிலும் தங்களது வாழ்க்கையை கழித்து கொண்டிருப்பவர்களுக்கு எல்லா மாதமும் ஒரே காலத்தை போன்றுதான்.

அவர்களுக்கு ரமழானோ அல்லது வேறு மாதமோ அல்லது வேறு நேரங்களோ என்றெல்லாம் அவர்களால் பிரித்துப் பார்த்து வித்தியாசப் படுத்தி இந்த ஒரு புனித மிக்க மாதத்திலாவது பாவங்களை விட்டு விலகி தவறுகளை விட்டு விலகி வீணான செயல்களை விட்டு விலகி அல்லாஹ்வின் அன்பை சம்பாதிப்பதற்கு நாம் மறுமைக்கான அமல்களை தேடிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வோமே என்ற எண்ணங்கள் எல்லாம் அலட்சியக்காரர்களுக்கும் வீணான காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கும் இல்லாமல் இருப்பதை நாம் பார்க்கிறோம்.

கண்ணியத்திற்குரியவர்களே! மறுமையினுடைய தேட்டம் சொர்கத்தினுடைய அருமை அல்லாஹ்வின் பொருத்தத்தின் மதிப்பு யாருடைய உள்ளத்தில் ஆழ பதிந்திருக்கிறதோ அவர்களுக்கு தான் இந்த மாதத்தின் அருமை தெரியும்.

அவர்கள் தான் இந்த மாதத்தை கொண்டு முழுமையான நன்மைகளை, முழுமையான இபாதத்துகளை அடைந்து கொள்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த விஷயத்தில் நமக்கு ஓர் சிறந்த அழகிய முன் மாதிரியாக திகழ்கிறார்கள். வணக்க வழிபாட்டில் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தை யாரும் மிஞ்சி விட முடியாது.

பொதுவாகவே இரவு வணக்கங்களில் குர்ஆன் ஒதுவது, தர்மம் செய்வது, ஏழைகளை  ஆதரிப்பது, அல்லாஹ் உடைய வணக்க வழிபாடுகளை அதிகப்படுத்துவது, அல்லாஹ்வின் அச்சத்தால் அழுவது என்று அல்லாஹ்வை திருப்தி படுத்துவதையே தனது வாழ்க்கையின் நோக்கமாக கொண்டிருந்த ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், இந்த ரமழானுடய மாதத்தை மேலும் விசேஷமாக கழித்தார்கள் என்று நாம் பார்க்கிறோம் .

குறிப்பாக இன்னும் ஒரு வாரத்தில் இன்ஷா அல்லாஹ் நாம் அடைய இருக்கின்ற ரமழானின் மூன்றாவது பத்து என்ற விசேஷமான பத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி பேணினார்கள் என்பது பற்றி பார்ப்போம்.

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள் :

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ أَحْيَا اللَّيْلَ وَأَيْقَظَ أَهْلَهُ وَجَدَّ وَشَدَّ الْمِئْزَرَ

"ரமழானின் கடைசி பத்து இரவுகள் வந்து விடுமேயானால், இரவு எல்லாம் அவர்கள் விழித்து இருப்பார்கள்", இரவை ஹயாத் ஆக்கிவிடுவார்கள்.

அதாவது, இரவை வணக்க வழிபாட்டில் கழிப்பார்கள், தொழுகையில் நின்றவர்களாக, குர்ஆன் ஒதியவர்களாக, சுஜூதில் ருகூவில் துஆகள் கேட்பதில் ஈடுபடுவார்கள்.

மேலும், தன்னுடைய குடும்பத்தார்களை இரவு நேரத்தில் மற்ற காலங்களில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லாஹு அலைஹி வஸல்லம், தான் நின்று வணங்கும் போது அவர்களை எழுப்ப மாட்டார்கள்.

அவர்கள் வித்ரு தொழுகாமல் தூங்கி இருந்தால் மட்டும் வித்ரு தொழுகுவதற்காக தஹஜ்ஜத் தொழுகையின் கடைசி நேரத்தில் எழுப்பி விடுவார்கள்.

ஏனென்றால், பெண்களை பொறுத்தவரை கணவனுக்காக குழந்தைகளுக்காக மற்ற குடும்ப வேலைகளை எல்லாம் செய்து விட்டு இரவு நேரத்தில் அவர்கள் அசதியாக இருப்பார்கள்.

அவர்கள் பலகீனமான படைப்பு, மற்ற நேரத்தில் சிரமம் கொடுக்காத ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ரமழானுடய கடைசி பத்து இரவில் தான் முழுமையாக இரவில் வணங்கி கொண்டிருப்பது மட்டுமன்றி, தங்களது மனைவிமார்களை எழுப்பி விடுவார்கள்.

வணக்க வழிபாட்டிற்காக தன்னுடைய எல்லா மனைவிமார்களையும் எழுப்பி விடுவார்கள். தொழுகை இருந்தாலும் இல்லை என்றாலும் திக்ர் செய்வது, துஆக்கள் கேட்பது, அல்லாஹ்விடத்தில் இறைஞ்சுவது போன்ற வணக்க வழிபாடுகளில் அவர்களுக்கு அனுமதிக்கபட்ட வணக்க வழிபாடுகளில் அவர்கள் ஈடுபட்டு கொண்டிருக்கலாம்.

தன்னுடைய மற்ற மனைவிமார்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடைசி பத்து நாட்களின் இரவில் தூங்க விட மாட்டார்கள்.

தானும் சிரமம் எடுத்து, கடின முயற்சி செய்வார்கள். சாதாரண முயற்சி அல்ல, கடுமையான முயற்சி செய்வார்கள்.

மேலும், மனைவிமார்களை விட்டும் முற்றிலும் விலகி இருப்பார்கள். எந்த வகையிலும் தங்களை ஆகுமான விஷயங்களை கூட மனைவிமார்கள் பக்கம் அவர்கள் திரும்பி பார்க்காமல் முழுக்க முழுக்க வணக்க வழிபாட்டிற்காக இந்த ரமழான் உடைய இரவுகளில் இருப்பார்கள் என்பதை உணர்த்தும் விதமாக தான் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சொல்கிறார்கள் "மனைவிகளை விட்டும் அவர்கள் விலகி இருப்பார்கள்" என்று.

அறிவிப்பாளர் : ஆயிஷாரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 2008.

இந்த ஹதீஸில் நான்கு அமல்களை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து பார்க்கிறோம்.

ஒன்று, ரமழான் உடைய மற்ற இரவுகளில் அதிக நேரம் வணங்கக்கூடியவர்களாக இருந்தாலும் கொஞ்சம் ஒய்வு எடுப்பவர்களாகவும் இருந்தார்கள். ஆனால், ரமழான் உடைய கடைசி பத்து இரவுகளில் முழுமையாக இரவு எல்லாம் விழித்து வணங்குவார்கள் என்ற செய்தியை நாம் பார்க்கிறோம்.

இன்று, நமது மக்களிடையே அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ் மன்னிப்பானாக! எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்து கொள்கிறார்கள். மன வேதனையாக இருக்கிறது.

இவர்களுடைய தொழுகையை பார்த்தால் இவர்கள் தொழுகிறார்களா? விளையாடுகிறார்களா? என்ன செய்கிறார்கள்? ஒன்றுமே  புரியவில்லை?

யாருக்கு, எப்படி மனம் விரும்புகிறதோ அப்படி தொழுகிறார்கள், யாருக்கு எப்படி உள்ளம் நாடுகிறதோ அப்படி தொழுகிறார்கள்.

எத்தனை மக்களை பாருங்கள்! இந்த ரமழான் மாதத்தில் கூட ஃபரலான தொழுகையை பேணுவதில்லை, ஜமாஅத்களை பேணுவது கிடையாது, தொழுகைக்கு எப்போது வந்தாலும் சரி தாமதமாக வருவது, ஒரு ரக்அத் தவறுகிறது, இரண்டு ரக்அத் தவறுகிறது, கடைசியில் ஸலாம் உடைய நேரத்தில் வருகிறார்கள்.இல்லையென்றால் ஜமாஅத் முடிந்த பிறகு தனியாக அவர்கள் தொழுகிறார்கள்.

யோசித்து பாருங்கள்! சர்வ சாதாரணமாக ஜமாஅத் தவருவதை, அவர்கள் எந்த வகையிலும் ஒரு கவலையாகவோ, ஒரு வேதனையாகவோ, தனக்கு ஒரு இழப்பு ஏற்பட்டதாகவோ எடுத்துக் கொள்வது கிடையாது .

صَلَاةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلَاةَ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً

"ஒரு தொழுகையை அதை நீங்கள் ஜமாஅத்தோடு நிறைவேற்றினால் இருபத்தியேழு  மடங்கு நன்மை" என்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 609.

ஒரு தொழுகைக்கு இருபத்தியேழு மடங்கு நன்மை அதிகமாக கிடைக்கிறது.ஆனால்,மக்கள் இதில் அதிகம் அலட்சியம் காட்டுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு அலட்சியத்தை மக்கள் காட்டுவதின் விளைவு, ஃபர்லான தொழுகை, பிறகு கியாமுள் லைல், ரமழானின் கடைசி பத்து இரவுகள் என்று எடுத்து கொண்டால் உண்மையில் நாம் செய்வது எல்லாம் நமக்கு நன்மையாக கிடைக்கவில்லை என்றாலும் கூட பாவமாக எழுதப்படாமல் இருக்குமேயானால் அதுவே போதும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நமது மக்கள் இன்று அந்த ரமழானின் கடைசி பத்து இரவுகள் கழிப்பதை பார்க்கிறோம்.

அல்லாஹ்விற்காக வேண்டி செய்கிறார்கள், மறுமையை எதிர் பார்த்து செய்கிறோம் என்று சொல்கிறார்கள், ரமழானை பயன்படுத்தி கொள்வதற்காக, ரமழானில் சம்பாதிப்பதற்காக என்று சொல்கிறார்கள்.

எப்படி தெரியுமா? அவர்களுடைய ரமழானின் கடைசி பத்து இரவுகள் வருவார்கள். என்னென்ன வேலைகளை எல்லாம் செய்ய வேண்டுமோ எல்லாம் வேலைகளையும்  செய்து கொண்டு இருப்பார்கள்.

கடைசியில் இமாம் ருகூவிற்கு போகும் முன்பு போய் சேர்ந்து கொள்வார்கள், இது தொழுகையா? இப்படிபட்ட தொழுகையையா நமக்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்று கொடுத்தார்கள்?

எவ்வளவு சிறந்த வணக்க வழிபாடு, இந்த ரமழானின் கடைசி பத்து இரவுகளின் வணக்கம் என்பது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதற்கு கொடுத்த முக்கியத்துவம் என்ன? அல்லாஹ் அதற்கு கொடுத்த முக்கியத்துவம் என்ன? சஹாபாக்கள் எப்படி அதை பேணினார்கள்?

ஆனால், நாம் சோம்பேறிகளாக இருக்கிறோம். ஓதப்படக்கூடிய வசனங்களின் கருத்துகள் நமக்கு புரியவில்லை என்றாலும், அதனுடைய மொழி தெரியாத காரணத்தால், அர்த்தங்களை புரியவில்லை என்றாலும், அந்த வசனங்களோடு ஒன்றி, அதை காது கொடுத்து கேட்டு, அந்த உச்சரிப்பை உள் வாங்கி, மனதில் அதை ஈடுபடுத்துகிறார்களா என்றால் அதுவும் இருப்பதில்லை.

எப்படி நீங்கள் இதை சொல்கிறீர்கள் என்று கேட்கலாம்? தொழுகைக்கு முன்பும் , தொழுகைக்கு பின்பும் அவர்கள் செய்ய கூடிய செயல்களை பார்த்ததால், இதை தான் பார்ப்பவர்களும் சொல்வார்கள்.

தொழுது முடிக்கிறார்கள், தொழுது முடித்ததற்கு பிறகு, எங்கேயாவது ஓடுகிறார்கள், பொதுவாக என்ன செய்கிறார்கள் என்றால், கண்டிப்பாக அந்த நேரத்தில் தண்ணீர் தாகம் என்பது ஏற்படும்.

ஆனால், கொஞ்சம் அந்த தாகத்தை கட்டுப்படுத்தி, தேவையான அளவிற்கு மட்டும் தண்ணீரை நாம் குடித்தோம் என்று சொன்னால் தொழுகையை முழுமையாக நிறைவேற்றுவதற்கும், உற்சாகமாக நிறைவேற்றுவதற்கும் நமக்கு வசதியாக இருக்கும்.

அப்படி இல்லாமல், தண்ணீரை வயிறு முட்ட குடித்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு சோம்பேறித்தனமும், அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது சுய  தேவையின் அவசியமும் ஏற்பட்டு விடும்.

இப்படி அவர்களுடைய தொழுகையின் முன் பின் செயல்களை பார்க்கும்போது, அவர்கள் அந்த தொழுகையில் காட்டக்கூடிய ஆர்வம் என்ன?

ஜமாஅத் ஆரம்பமாகி விடுகின்றது,பெரும்பாலானவர்களை பார்த்தால், எல்லாம் ஆங்காங்கே நின்று கொண்டு இருப்பார்கள், இன்னும் சில இடங்களில், இரண்டாவது ரகஅத்தில் ருகூவிற்கு முன்னால் சேர்ந்து ஒரு ரக்அத்தில் எழுந்து தொழக்கூடியவர்களையும் பார்க்கிறோம்.

கேட்டால், கால் வலிக்கிறது, கை வலிக்கிறது, இடுப்பு வலிக்கிறது. எப்படிப்பட்ட அற்ப காரணங்கள் இவை.

ஆனால், இதே இந்த மக்கள் தங்களுடைய உலக தேவைகளுக்காக நிற்கும் போது, ரேஷன் கடையில் நிற்கும் போது, டிக்கெட்டுகள் முன் பதிவு செய்வதற்காக வரிசையில் நிற்கும் போது, இன்னும் பல இடங்களில் வரிசையில் நிற்கும்போது இவர்களுடைய உடல் வலி எங்கே செல்கிறதோ? இவர்களுடைய இடுப்பு வலி எங்கே செல்கிறதோ? இவர்களுடைய குறுக்கு வழி எங்கே செல்கிறதோ? எல்லாம் மறைந்து விடுகிறது.

ஆனால், வணக்க வழிபாடு என்று வந்து விட்டால் அவ்வளவு காரணங்களை சொல்கிறார்கள்.

ஏன்? அல்லாஹு தஆலா சலுகையை ஏற்படுத்த வில்லயா? உடல் வழியாக இருந்தால், கால் வழியாக இருந்தால், இடுப்பு வழியாக இருந்தால் உக்கார்ந்து தொழலாம், அதுவும் முடியவில்லை என்றால் சாய்ந்து கொண்டே தொழலாம்.

ஆனால், தொழுகையை ஆரம்பிப்பதில் இமாம் தக்பீர் கட்டிய உடன் அவரோடு சேர்ந்து தக்பீர் கட்ட வேண்டும் என்ற ஆர்வம் இன்றைய நமது வாலிபர்களிடத்தில், இன்று நமது சமுதாய மக்களிடத்தில் இல்லாதது மிகப் பெரிய வருத்தம் அளிக்கிறது.

நீங்கள் அந்த இடத்தில் இருக்கிறீர்கள், அங்கு தொழுகைக்காக அல்லாஹு அக்பர் என்று அழைக்கப் படுகிறது, இமாம் தக்பீர் சொல்கிறார், ஆனாலும் அனாவசியமான தேவைகளுக்காக செல்போனை நோண்டுகிறோம், இங்கும் அங்கும் திரும்பி கொண்டிருக்கின்றோம், அலட்சியம் செய்து கொண்டிருக்கின்றோம்.

பிறகு மனம் சொல்லும்போது எழுந்து நிற்கிறோம் என்று சொன்னால், அல்லாஹ்விற்காக நிற்கிறோமா? மறுமைகாக நிற்கிறோமா? ஏதோ நமது மனம் விரும்பும்போது நிற்கிறோமா? என்பதை நாம் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இரவு வணக்க வழிபாடு இப்படி இருந்தது இல்லை என்று நாம் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

நம்முடைய அமல்களை நாம் எப்படி மாற்றி கொண்டிருக்கின்றோம் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் இரவு தொழுகைக்காக நீங்க ஒதுக்க வேண்டும் என்று சொல்லக்ககூடிய அளவில் மூன்று அளவுகளை அல்லாஹ் சொல்கிறான்.

ஒரு அளவு, நீங்கள் இரவில் மூன்றில் இரண்டு பகுதிகளை தொழுகையில் வணக்க வழிபாட்டில் கழிக்க வேண்டும். மஃரிப் உடைய நேரத்தில் இருந்து ஃபஜ்ர் உடைய நேரம் வரை (சுபஹ் சாதிக் உதயம் ஆகும் நேரம் வரை)

உதாரணமாக, மாலை 6 :40மணிக்கு மஃரிப் உடைய நேரம் வருகிறது என்றால், அடுத்து காலை 5 : 40மணிக்கு ஃபஜ்ர் உடைய நேரம் ஆரம்பிக்கிறது என்றால் ஏறக்குறைய பத்து மணி நேரம் இருக்கிறது.

இந்த பத்து மணி நேரத்தில் மூன்றில் இரண்டு பகுதி (இது ரமழான் அல்லாத காலங்களில், ரமழான் உடைய காலங்களில் அதிலும் கடைசி பத்தில் கூட முழு இரவு அதை தனியாக வைத்து கொள்ள வேண்டும்)

பொதுவாக இரவு தொழுகையின் நேரத்தை அல்லாஹ் சொல்லும்போது "மூன்றில் இரண்டு பகுதி நபியே நீங்கள் தொழுவதை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 73 : 20)

மூன்றில் இரண்டு பகுதி என்று சொன்னால் ஏறக்குறைய ஏழு மணி நேரங்கள்.இப்படி தொழுதால் தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இரவில் சூரா ஆல இம்ரான் ஓதினார்கள், நிஸாவை ஓதினார்கள், அல்மாயிதா ஓதினார்கள்,அல்அன்ஆமைஓதினார்கள்.

நாம் எப்படி தொழுகிறோம்? வரும் பொழுதே நேரத்தை பார்த்துவிட்டு வருகிறோம். இமாம் தொழுகையை முடித்தவுடன் உடனே நேரத்தை பார்க்கிறார்கள். இப்படி ஒரு பலகீனமான மனநிலையில் இருக்கிறோம்.

இதே உலகம் என்று வந்துவிட்டால், டீக்கடையில் நின்று மணிக்கணக்கில் பேசுவார்கள். பெரும்பாலானவர்கள், ஃபஜ்ர் தொழுகையில் இமாமை எவ்வளவு சுருக்கமாக ஓத முடியுமோ அவ்வளவு ஓதுங்கள்.

இதன் காரணமாக சூரா இக்லாஸ் ஃபஜ்ர் தொழுகைக்காக, அதன்பிறகு சுருக்கமாக தொழுகை முடிக்கப்படுகிறது.

அதன் பிறகு, இந்த மக்கள் தொழுகையில் இருந்து வெளியான பிறகு முஸ்லிம்களுடைய நிலையானது டீக்கடையில் எத்தனை பேர் நியூஸ் பேப்பர் படிப்பதில், எத்தனை பேர் தெருக்களில் நின்றுகொண்டு நேரங்களை வீணாக்குவதை நாம் பார்க்கிறோம்.

உடல் உழைப்பிற்காக உடல் ஆரோக்கியத்திற்காக எத்தனை பேர் மைல் கணக்கில் நடந்து எவ்வளவு உடலைக் களைப்படைய செய்கிறார்கள். மறுமையின் வணக்கம், சொர்க்கத்தின் வணக்கம், அல்லாஹ்வுடைய பொருத்தம், நபியின் கண் குளிர்ச்சி தொழுகை, அதில் வரும் பொழுதும் நேரத்தை பார்க்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்க்கிறோம். ஃபஜர் தொழுகையில் சூரா கஹ்ஃபை முழுமையாக ஓதுகிறார்கள். சூரா யூசுப் முழுமையாக ஓதுவார்கள்.

இரண்டாவது, அல்லாஹு தஆலா இந்த இரவுத் தொழுகையின் நன்மையை சொல்லும் பொழுது, இரவின் பாதி என்று சொல்கிறான். 10மணி நேரம் என்றால் அதில் 5மணி நேரம் நீங்கள் அல்லாஹ்வை வணங்குவதில் தொழுகையில் கழிக்கவேண்டும்.

பிறகு அல்லாஹ், மூன்றில் ஒரு பகுதி என்று சொல்கிறான். (அல்குர்ஆன் 73 : 20)

ஆனால், இவற்றில் நாம் மிக அலட்சியம் செய்கிறோம். என்ன வணக்க வழிபாடு இது? வழி தெரியாத வணக்க வழிபாடு.

நபியே நீங்கள் அழைப்பு பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டீர்கள் என்றால் என்னை வணங்கி நீங்கள் கலைப்படைவீர்களாக என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 94 : 7)

ஒரு பக்கங்களுக்கு 4பக்கங்களாக ஓதிவிட்டால் தலை வெடித்த மாதிரி மக்களின் நிலை இருப்பதை பார்க்கிறோம்.

நபியவர்கள் ஒரு தொழுகையில் சூரா பகரா முழுமையாக ஓதினார்கள். நாமோ இன்று இரண்டு நாட்கள் ஓதிக் கொண்டிருக்கின்றோம்.

நபியவர்கள் ஒரு ரக்அத்தில் சூரா பகரா ஓதினார்கள். சூரா நிஸா, சூரா மாயிதா, சூரா அன்ஆம்ஓதினார்கள்.

நாம் அவற்றை ஆறு நாட்கள் ஏழு நாட்கள் ஓதுகிறோம். ஓதிவிட்டு ஏதோ பெரிதாக அல்லாஹ்விற்கு சாதித்துக் கொடுத்த மாதிரி, அவருக்கு ஏதோ பெரிய நன்மையை செய்துவிட்டது போன்ற ஒரு தன்மையை பார்க்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

ரமலானுடைய கடைசிப் பத்தில் லைலத்துல் கத்ர் என்னும் சிறந்த இரவை அல்லாஹ் வைத்திருக்கிறான். ஒரு விஷயத்தை அல்லாஹ் கண்ணியமாக பேசுகின்றான் என்றால் அது சாதாரணமான விஷயமாக இருக்காது.

அது குறித்து அல்லாஹ் கூறுகிறான் :

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ (1) وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ (2) لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ (3) تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ (4) سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ (5)

நிச்சயமாக நாம் இந்த குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலதுல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கிவைத்தோம்.(நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீர் அறிவீரா? கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் வானவர்களும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர். ‘‘ஸலாம்'' (ஈடேற்றம்) உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது). (அல்குர்ஆன் 97 : 1-5)

அல்லாஹ்வுடைய தூதர் லைலத்துல் கத்ரை ரமலான் கடைசி பத்தில் தான் சொன்னார்கள். குறிப்பாக ரமலானுடைய கடைசி ஒற்றைப்படை இரவில் நீங்கள் தேடுங்கள், இதற்காக விசேஷமான ஒரு அமலையும் செய்தார்கள்.

கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ்வுடைய தூதர் ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதிலிருந்து, மதினாவிற்கு வந்ததிலிருந்து ரமலானுடைய கடைசிப் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருப்பார்கள். அவர்களின் மனைவிமார்களும் இருந்தார்கள். கடைசிப் பத்தில் அதை தேடுங்கள் என்று சொன்னார்கள். (1)

அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 771.

இஃதிகாஃப் என்பது ஒரு சிறந்த வணக்கம். கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள் இருந்திருக்கிறார்கள். ரசூலுடைய மனைவிமார்களும் ஏனைய பெண்களும் இருந்திருக்கிறார்கள்.

இன்று, எத்தனையோ மக்களைப் பாருங்கள், அவர்கள் ஊர் சுற்ற செல்வார்கள். அப்போதெல்லாம் மனைவிகளை பிரிவதற்கு அவர்களுக்குச் சிரமம் இருக்காது. பிள்ளைகளை விட்டு தூரமாக செல்வதற்கு சிரமமாக இருக்காது.

உங்களுடைய பொருளாதார தேவைக்காக விசா வந்துவிட்டால் வெளிநாட்டுக்குச் சென்று நாட்கணக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். அது எப்படிப்பட்ட நிலைமைகளிலும் இக்கட்டான சூழ்நிலைகளில் கூட ஏற்றுக் கொண்டு இருப்பார்.

எனக்கு மெத்தையில் படுத்து பழக்கம், அதனால் பள்ளிவாசலில் படுக்க முடியாது. எனக்கு டாய்லெட் ரொம்ப சுத்தமாக இருக்கனும். இப்படி அற்பமான காரணங்களை சொல்லி இன்று வாலிபர்கள் வயோதிகர்கள் புறக்கணிப்பதை பார்க்கிறோம்.

யாராவது கப்ருக்கு போகிற மாதிரி பத்து பேர் இருந்தார்கள் என்றால் அவர்களை கொண்டு வந்து பள்ளிக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். ஏன், வாலிபர்களுக்கும் மறுமை தேவையில்லையா?

வாலிபர்களுக்கு சொர்க்கம் தேவையில்லையா? வாலிபர்களுக்கு அல்லாஹ்வுடைய பொருத்தம் தேவையில்லையா? அவர்களுக்கு லைலத்துல் கத்ர் தேவையில்லையா? யோசித்துப்பாருங்கள்!

நிய்யத் வைத்தோம் என்று சொன்னால் எப்படி வேணாலும் நாம் இஃதிகாப் இருக்கலாம். நாம் அற்ப காரணத்திற்காக எத்தனையோ விடுமுறைகள் எடுத்திருப்போம். அவற்றையெல்லாம் இந்த ரமலானுடைய கடைசி 10க்காக ஒதுக்கி வைத்து எந்த நேரமாக இருக்கட்டும் மற்ற நாட்களில் நமது விடுமுறைகளை சுருக்கி இந்த ரமலானுக்காக வேண்டி விடுமுறைகளை எடுத்து இருக்கலாம். ஆனால், வணக்க வழிபாடுக்காக எடுக்க மாட்டார்கள்.

நபியே! நீங்கள் உங்கள் ரப்பின் பக்கம் ஆர்வம் கொள்வீர்களாக. (அல்குர்ஆன் 94 : 7)

அந்த இறைத்தூதர்கள் என் மீது ஆர்வம் கொண்டு என்னை வணங்கினார்கள் என்று சொல்கிறான்.

இன்று நமது நிலையை பாருங்கள். தொழுகையிலும் நமக்கு ஆர்வம் இல்லை, வணக்க வழிபாடு முடிந்ததும் நமது நிலை எவ்வாறு இருக்கின்றது? என்பதை பற்றியும் கவலை இல்லை. இந்த வணக்க வழிபாடுகள் எதைக் குறிக்கின்றது என்பதை நினைத்துப் பாருங்கள்.

இன்னும் சில நாட்கள்தான் இருக்கின்றன. இந்த ரமலானை முழுமையாக பயன்படுத்தி அல்லாஹ்வுடைய அருளை பெறுவதற்கு நாம் முயற்சி செய்வதோடு நமது நண்பர்களுக்கு குடும்பத்தாருக்கு சகோதரர்களுக்கு இந்த ரமலான் உடைய முக்கியத்துவத்தை, கடைசி பத்தின் இஃதிகாஃபின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்வோமாக. அல்லாஹ் இந்த ரமலானை ஏற்றுக் கொள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُوسَى قَالَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ يَحْيَى عَنْ أَبِي سَلَمَةَ قَالَ انْطَلَقْتُ إِلَى أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ فَقُلْتُ أَلَا تَخْرُجُ بِنَا إِلَى النَّخْلِ نَتَحَدَّثُ فَخَرَجَ فَقَالَ قُلْتُ حَدِّثْنِي مَا سَمِعْتَ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةِ الْقَدْرِ قَالَ اعْتَكَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ الْأُوَلِ مِنْ رَمَضَانَ وَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ فَاعْتَكَفَ الْعَشْرَ الْأَوْسَطَ فَاعْتَكَفْنَا مَعَهُ فَأَتَاهُ جِبْرِيلُ فَقَالَ إِنَّ الَّذِي تَطْلُبُ أَمَامَكَ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطِيبًا صَبِيحَةَ عِشْرِينَ مِنْ رَمَضَانَ فَقَالَ مَنْ كَانَ اعْتَكَفَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلْيَرْجِعْ فَإِنِّي أُرِيتُ لَيْلَةَ الْقَدْرِ وَإِنِّي نُسِّيتُهَا وَإِنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ فِي وِتْرٍ وَإِنِّي رَأَيْتُ كَأَنِّي أَسْجُدُ فِي طِينٍ وَمَاءٍ وَكَانَ سَقْفُ الْمَسْجِدِ جَرِيدَ النَّخْلِ وَمَا نَرَى فِي السَّمَاءِ شَيْئًا فَجَاءَتْ قَزْعَةٌ فَأُمْطِرْنَا فَصَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ وَالْمَاءِ عَلَى جَبْهَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَرْنَبَتِهِ تَصْدِيقَ رُؤْيَاهُ (صحيح البخاري 771 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/