HOME      Khutba      ரமழான் சிறப்புகளும் சட்டங்களும் (அமர்வு 2/3) | Tamil Bayan - 334   
 

ரமழான் சிறப்புகளும் சட்டங்களும் (அமர்வு 2/3) | Tamil Bayan - 334

           

ரமழான் சிறப்புகளும் சட்டங்களும் (அமர்வு 2/3) | Tamil Bayan - 334


ரமழான் சிறப்புகளும் சட்டங்களும்

ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமழான் சிறப்புகளும்சட்டங்களும் (அமர்வு 2-3)

வரிசை : 334

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 04-07-2014 | 07-09-1435

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய பயத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வுடைய அச்சத்தை கடைபிடித்து வாழும்படி, அல்லாஹ் நம்மை பார்க்கிறான்; கண்காணிக்கிறான்;நமது செயல்களை அறிந்து தெளிவாக எழுதக்கூடிய வானவர்களை நம்முடன் ஆக்கி இருக்கிறான், இந்த நினைவோடு வாழும்படி எனக்கும் உங்களுக்கும் இந்த அச்சத்தை நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

இறையச்சத்திற்கும் நல்ல அமல்களுக்கும் கொடுக்கப்பட்ட மாதத்தில் நாம் இருக்கிறோம். அல்லாஹ்விற்கு பயந்து கொள்வதற்கு நமக்கு துணையாக இருக்கின்ற பயத்தை அதிகப்படுத்துகின்ற ஒரு சிறந்த மாதத்தில் நாம் இருக்கிறோம்.

அல்லாஹ் நமக்கு அனுமதித்த விஷயங்களையும் அல்லாஹ்விற்காக விடக்கூடிய நாம், இந்த ரமலானுடைய பகலில் உணவையும், குடிப்பையும், இன்னும் நமது சுய தேவையையும் அல்லாஹ்விற்காக விட்டு அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்குகாக, யாரும் பார்க்கவில்லை என்றாலும், அல்லாஹ் நம்மை பார்க்கின்றான் என்று ஒரு உணர்வை ஏற்படுத்தக்கூடிய இந்த வணக்க வழிபாட்டை இந்த ரமலானுடைய பகலில் நாம் கடைப்பிடிக்கிறோம்.

இது நமக்கு எதை நினைவூட்டுகின்றது என்றால், ரமலான் அல்லாத எல்லா காலங்களிலும் முஸ்லிம்களாகிய நமக்கு தடுக்கப்பட்டது என்று எதையெல்லாம் விவரித்துச் சொல்லி இருக்கின்றானோ அதை விட்டு விலகி கொள்வதற்கு ஒரு சிறந்த பயிற்சியை இந்த ரமலான் மாதத்தில் நாம் பெறலாம்.

இந்த ரமலான் மாதத்தில் பெறக்கூடிய தக்வாவின் பயிற்சி, ரமலான் அல்லாத ஏனைய பதினோரு மாதங்களில் இருக்க வேண்டும் என்பதற்காகதான் ஒரு முழு மாதத்தையும் நீங்கள் அல்லாஹ்வை வழிபட்டு நடப்பதற்கு ஒதுக்குங்கள்.

பகலில் நீங்கள் நோன்பு இருந்து அல்லாஹ்வை வணங்குங்கள். இரவில் குர்ஆன் ஓதியும் நின்று வணங்கியும் அல்லாஹ்வை வணங்குங்கள். அதன் மூலமாக இறையச்சத்தை நீங்கள் அடைவீர்கள் என்று அல்லாஹ் நமக்கு வழிகாட்டுகிறான்.

இந்த ரமலானுடைய காலத்தை நன்மைகளை அள்ளி செல்லக்கூடிய காலமாக அல்லாஹ் ஆக்கி இருக்கிறான்.

இந்த நன்மையான காரியங்களில் ஒன்றுதான், தான தர்மம். அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கக் கூடிய செல்வங்களை அல்லாஹ் எவ்வளவு கொடுத்து இருக்கின்றானோ அந்த செல்வத்திலிருந்து அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேடி ஏழைகளுக்கு, பலகீனமானவர்கள், தேவை உடையவர்கள், அனாதைகள் என்று அவர்களுக்கு தானதர்மங்கள் செய்வதன் மூலமாக அல்லாஹ்வுடைய பொறுத்தத்தை இந்த மாதத்தில் நாம் அதிகமதிகம் பெறலாம்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் நமக்கு சிறந்த அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிய ஒரு ஹதீஸ் ஸஹீஹுல் புகாரியில் பதிவாகி இருப்பதைப் பார்க்கிறோம்.

كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ بِالْخَيْرِ

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தானம் தர்மம் செய்வதில் மக்களை முந்தியர்களாக இருந்தார்கள். (1)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6,1769.

அல்லாஹ்வின் தூதரை விட அதிகம் தானம் தர்மம் செய்பவர் யாரும் இருக்க முடியாது.

நாமெல்லாம்,நமது தேவையை போக மிஞ்சியதை தர்மம் செய்வோம். அதிலும் ஒரு குறிப்பிட்ட அளவை நாம் செய்வோம்,

ஆனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தர்மம் என்பது, ஒன்று தன்னிடம் இருப்பது தனக்கு தேவையானதாக இருந்தும் அதை தர்மம் செய்து விடுவார்கள். இரண்டாவது, தன்னிடம் வரக்கூடிய சகோதரர்களுக்கு தன்னிடம் எதுவும் இல்லை என்றால் கடன் கொடுப்பதற்கு யாராவது இருப்பாரேயானால் அவரிடம் இருந்து கடன் வாங்கி தர்மம் செய்வார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தனக்காக கடன் வாங்கியதைவிட ஏழைகளின் தேவைக்காக கடன் வாங்கியது அதிகம். அல்லது அதற்கும் வழியில்லை என்றால் அல்லாஹ்வின் தூதர் கொடுப்பவர் யாராவது இருப்பாரேயானால் அவரிடம் செல்லுங்கள் என்று கை காட்டி விடுவார்கள்.

நான் கூறியதாக கூறுங்கள் என்பதாக, உங்களுடைய தேவை நிறைவேற்றப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழமை இருந்தது.

கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணத்தை பற்றி சொல்லும் பொழுது, நபியிடத்தில் எந்த ஒரு பொருளைக் கேட்டாலும் அவர்கள் இல்லை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது கிடையாது.

அவர்களிடத்தில் இருந்தால் கொடுப்பார்கள். இல்லையென்றால் இருப்பவர் இடத்தில் வழிகாட்டி அனுப்புவார்கள். அல்லாஹ்வின் தூதருடைய கொடை கொடுப்பது ரமலான் மாதத்தில் அதிகமாக இருக்கும்.

நூல் : முஸ்லிம், எண் : 56.

முதல் ஹதீஸின் தொடர் : வானவர் ஜிப்ரீல் ஒவ்வொரு ஆண்டு இறக்கப்பட்ட அந்த குர்ஆனுடைய வசனங்களையும் இந்த ஆண்டில் இறக்கப்பட்ட குர்ஆனுடைய வசனங்களையும் ஓதி காண்பிப்பதற்காக, நபியவர்கள் ஓதுவதைக் கேட்பதற்காக இறங்குவார்கள்.

அந்த நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் அதிகம் தான தர்மம் செய்வார்கள். வேகமாக வீசக்கூடிய ஒரு புயல் காற்றின் வேகம் எவ்வளவு இருக்குமோ அதைவிட அதிகமாக அவர்களுடைய தர்மத்தின் வேகம் இருக்கும்.(1)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6,1769.

இந்த தர்மம் என்ற பெயர் வரும் பொழுது, அல்லது கொடை என்ற பெயர் வரும் பொழுது, நம்மில் அதிகமானோர் தவறான அர்த்தங்களை வைத்துவிட்டு நம் மீது கொடை கடமை கிடையாது எனுர் அந்த கடமையிலிருந்து பொறுப்பிலிருந்து தூரமாக்கி விடுகிறார்கள்.

தர்மம் என்றால் என்ன? அல்லாஹ் எப்படி தர்மம் கொடுக்க சொல்கிறான்? அல்லாஹ் கூறுகிறான் :

لِيُنْفِقْ ذُو سَعَةٍ مِنْ سَعَتِهِ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا

(பால் குடிப்பாட்ட செலவு செய்யும் விஷயத்தில்) வசதியுடையவர் தன் தகுதிக்குத் தக்கவாறு (தாராளமாகச்) செலவு செய்யவும். ஏழ்மையானவர், அல்லாஹ் அவருக்குக் கொடுத்ததிலிருந்துதான் செலவு செய்வார். எம்மனிதனையும் அல்லாஹ் அவனுக்குக் கொடுத்ததற்கு அதிகமாக(ச் செலவு செய்யும்படி) நிர்ப்பந்திப்பதில்லை. சிரமத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதிசீக்கிரத்தில் இலகுவை கொடுத்துவிடுவான். (அல்குர்ஆன் 65:7)

ஒருவரிடத்தில் 10ரூபாய் இருக்கின்றது என்றால் அதிலிருந்து ஒரு ஐம்பது பைசாவை அல்லது ஒரு ரூபாயை தர்மம் செய்ய முடிந்தாலும் அதுவும் தர்மம் தான்.

அல்லாஹு தஆலா தர்மத்தின் அளவை பார்க்கவில்லை. தர்மம் எங்கே கொடுக்கப்படுகிறது? யாருக்குக் கொடுக்கப்படுகிறது? எந்த எண்ணத்தில் கொடுக்கப்படுகின்றது? என்பதை அல்லாஹ் பார்க்கிறான்.

நீங்கள் கொடுக்கக்கூடிய அளவை அல்லாஹ் பார்ப்பதில்லை. ஒரு மனிதன் ஆயிரம் கொடுக்கலாம், இலட்சம் கொடுக்கலாம், அல்லது கோடி கொடுக்கலாம்.அல்லாஹு தஆலா கொடுக்கப்படக் கூடிய பொருளை வைத்து நன்மையை முடிவு செய்வது கிடையாது.

கொடுக்கப்படக் கூடிய பொருளுக்கும் நன்மை இருக்கிறது. ஆனால், மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தான் கொடுக்கக்கூடிய பொருளுக்கும் எண்ணிக்கைக்கும் நன்மை உள்ளது.

செலவு செய்பவரின் எண்ணம் சரியில்லை என்றால், அவரிடத்தில் மனத்தூய்மை இல்லை என்றால், அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நாடக் கூடிய தூய எண்ணம் இல்லை என்றால், மறுமையின் பயத்தை முன் நிறுத்தி நரக நெருப்பிலிருந்து நான் விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றால், இதற்கு மாறாக புகழை விரும்பியோ மக்களுக்கு மத்தியில் பிரபலத்தை விரும்பியோ என்று இருக்குமேயானால் இந்த தர்மமே அவரை நாளை நரக நெருப்பில் முகம் குப்பற விழ செய்துவிடும்.

அல்லாஹு தஆலா கூறுகிறான் :

وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا (8) إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا

மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள். (தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) ‘‘நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடம் நாம் ஒரு கூலியையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை (என்றும்) கூறுவார்கள்.(அல்குர்ஆன் 76: 8,9)

இறையச்சம் உடையவர்கள் தர்மம் கொடுக்கும் பொழுது அவர்கள் அல்லாஹ்வுடைய முகத்திற்காக தர்மம் கொடுக்கிறார்கள். இன்று பலர், தங்களுடைய பெயர் புகழ் எங்கே வெளிப்படுத்தப்படுமோ அங்கே தேவையில்லை என்றாலும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் செலவு செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கே நமக்கு பேர் புகழ் சேராதோ எங்கே நம்மை முன்னிலைப்படுத்துவது இருக்காதோ, அங்கே தேவைகள் இருந்தாலும் அலட்சியம் செய்யக் கூடிய பல முஸ்லிம்களைப் பார்க்கிறோம்.

இப்படிப்பட்டவர்களின் தர்மம் அல்லாஹ்விற்கு தேவை கிடையாது. அல்லாஹ்விற்காக செய்யப்படக் கூடிய அந்த குர்பானியை பற்றி அல்லாஹ் கூறும் பொழுது,

لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ

(இவ்வாறு குர்பானி செய்தபோதிலும்) அதன் மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவது இல்லை. உங்கள் இறையச்சம்தான் அவனை அடையும்.(அல்குர்ஆன் 22: 37)

இந்த தர்மம் அல்லாஹ்விற்கு தேவை இல்லை. அதன் பக்கம் அவன் தேவையுடையவன் இல்லை.

யூதர்கள் அப்படி தான் பேசினார்கள் அப்படி தான் பேசினார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களுக்கு உணவளிப்பான், நாங்கள் ஏன் உணவளிக்க வேண்டும்? என்று கேட்டார்கள்.

لَقَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ فَقِيرٌ وَنَحْنُ أَغْنِيَاءُ سَنَكْتُبُ مَا قَالُوا وَقَتْلَهُمُ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ وَنَقُولُ ذُوقُوا عَذَابَ الْحَرِيقِ

எவர்கள் ‘‘நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள்தான் சீமான்கள்'' என்று கூறினார்களோ, அவர்களுடைய சொல்லை திட்டமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். (இப்படி) அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நிச்சயமாக நாம் பதிவு செய்கிறோம். (ஆகவே, மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப்பாருங்கள்'' என நாம் கூறுவோம். (அல்குர்ஆன்3 : 181)

அன்பிற்குரியவர்களே!தர்மம் யாருக்கு கொடுக்கின்றோம்?என்பது மிக முக்கியமான ஒன்று. ஆகவேதான், கடமையான தர்மம் என்று வரும் பொழுது அதற்குரிய 8வகையினரை அல்லாஹ் சொல்கிறான்.

பிறகு உபரியான தான தர்மம் என்று வரும் பொழுது அதற்கு அல்லாஹ் ஒரு பட்டியலைச் சொல்கிறான். அல்லாஹ்விற்காக செலவு செய்யக்கூடிய தர்மம் என்பது அல்லாஹ்வுடைய பாதை என்பதை மறந்து விடாதீர்கள்.

அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு நமது செல்வத்திலும் நமது உயிரிலும் கடமை இருக்கின்றது.

நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்கள் நம்மை பற்றி பேசும் பொழுது அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் உங்கள் உயிரையும் பொருளையும் கொண்டு போரிடுங்கள் என்று பேசுகிறது.

إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ يَرْجُونَ رَحْمَتَ اللَّهِ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

எவர்கள் மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்களும்; எவர்கள் (நிராகரிப்பாளர்களின் துன்பத்தால் ‘மக்கா'வாகிய) தம் ஊரைவிட்டும் வெளியேறினார்களோ அவர்களும்; எவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறார்களோ அவர்களும்தான் அல்லாஹ்வின் கருணையை நிச்சயமாக எதிர்பார்க்கின்றனர். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 2:218)

மேலும், அல்லாஹ் கூறுகிறான் :

انْفِرُوا خِفَافًا وَثِقَالًا وَجَاهِدُوا بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ فِي سَبِيلِ اللَّهِ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ

நீங்கள் சொற்ப ஆயுதமுடையவர்களாக இருந்தாலும் சரி, முழு ஆயுத பாணிகளாக இருந்தாலும் சரி, நீங்கள் (கால்நடையாகவோ குதிரைமீதேறியோ) புறப்பட்டு, அல்லாஹ்வுடைய பாதையில் உங்கள் பொருள்களையும் உயிர்களையும் தியாகம் செய்து போர் புரியுங்கள். நீங்கள் அறிவுடையவர்களாய் இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (அல்குர்ஆன் 9:41)

அல்லாஹு ரப்புல் ஆலமீன் செலவு செய்யக்கூடியவருடைய எண்ணத்தை பார்க்கிறான். எப்படி கொடுக்கின்றார் என்பதை அல்லாஹ் பார்க்கிறான்.

பெருமையோடு கொடுக்கிறாரா? முகஸ்துதிக்காக கொடுக்கிறாரா? அந்த நல்லவர்கள் சஹாபாக்கள் எப்படி தர்மம் செய்தார்கள்? என்பதை அல்லாஹ் கூறுகிறான்.

அவர்கள் தர்மம் செய்யும் பொழுது என்ன சொல்வார்கள் என்றால், இந்த தர்மத்திற்கு நாங்கள் எந்த கைமாறும் எதிர்பார்க்கவில்லை. ஏழைகளை கண்ணியப் படுத்தி கொடுப்பார்கள்.

முஸ்லிம் செல்வந்தர்கள் இடமிருந்து முஸ்லிம் ஏழைகள் தர்மத்தை பெறும்பொழுது மனம் நொந்த மக்களாக அல்லாஹ் நம்மை இப்படிப்பட்ட ஒரு நிலையில் ஆகிவிட்டானே! இன்னொருவர் வாசலில் நிற்கும் படி அல்லாஹ் என்னை ஆக்கி விட்டானே! என்று நிற்பதைப் பார்க்கின்றோம்.

எத்தனை தடவை விரட்டப்படுகிறார்கள்? தர்மம் அவர்களுக்கு கொடுக்கப்படும் பொழுது எந்த அளவிற்கு அவர்களுடைய கண்ணியம் சீரழிக்கப்படுகிறது. அந்த அளவிற்கு நமது சமுதாயத்தின் நிலைமை மாறி இருப்பதைப் பார்க்கின்றோம்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அல்லாஹு தஆலா இந்த ஜகாத் எனும் கடமையை வைத்திருப்பதைப் போல சதக்கா என்னும் கடமையை வைத்திருக்கின்றான்.

சதக்காவை பொறுத்தவரை அல்லாஹு தஆலா எங்களுக்கு வாசலை திறந்து வைத்து விட்டான். நீங்கள் இந்த சதக்காவிற்காக எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

ஆனால் ஜகாத் என்று வரும்பொழுது அல்லாஹு தஆலா நீங்கள் எதைக் கொடுக்க வேண்டும் என்று சொன்னானோ, எப்படி கொடுத்த வேண்டும் என்று சொன்னானோ அப்படிதான் கொடுக்க வேண்டுமே தவிர, நமது ஆசைக்கு ஏற்ப, நமது விருப்பத்திற்கு ஏற்ப ஜகாத்தை மாற்றிக் கொடுக்கும் முறையை திருத்திக் கொள்வதற்கு நமக்கு அருகதை இல்லை என்பதை தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு அல்லாஹ் ஒட்டகத்தை கொடுத்திருந்தான் என்றால் அந்த ஒட்டகத்திலிருந்து ஒரு ஒட்டகத்தை தான் நீங்கள் ஜகாத்தாக கொடுக்க வேண்டுமே தவிர, இந்த ஒட்டகத்தை வைத்து இந்த ஏழை என்ன செய்வார்? எனவே காசாக மாற்றி கொடுக்கிறேன். ஒட்டகத்தை நானே வைத்துக் கொள்கிறேன் என்றால் அதற்கு அனுமதி இல்லை.

அல்லாஹ் உங்களுக்கு ஆடுகளை கொடுத்தால், ஜகாத்தை விதித்து இருக்கின்றான் என்றால், அந்த ஆட்டிலிருந்து ஒரு ஆட்டை தான் நீங்கள் கொடுக்க வேண்டுமே தவிர அதனுடைய பணத்தை நீங்கள் கொடுக்கக்கூடாது.

உங்களுக்கு தங்கம் வெள்ளி வியாபாரப் பொருட்களாக இருக்குமென்றால் நீங்கள் அதனுடைய பணத்தை தான் கொடுக்க வேண்டுமே தவிர, உங்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டு அதை ஜகாத்தாக கொடுக்க கூடாது.

இன்று என்ன நடக்கின்றது? தங்கம் வெள்ளியினுடைய ஜகாத் இவற்றையெல்லாம் ரொக்கப் பணமாகதான் ஜகாத்தாக கொடுக்க வேண்டும்.

ஆனால் இன்று பல செல்வந்தர்கள், இரண்டு மாபெரும் தவறுகளை செய்கின்றார்கள். ஒன்று, துள்ளியமாக தங்களது வியாபார பொருட்களையும் ரொக்க இருப்புகளையும் கணக்கெடுப்பது கிடையாது. இது மிகப்பெரிய தவறு.

ஏதோ ஒரு குத்துமதிப்பாக ஒரு செல்வத்தை கொடுத்தால் போதும் என்று நினைக்கிறார்கள், இது தவறு. எவ்வளவு துள்ளியமாக எடுக்க முடியுமோ அவ்வளவு துல்லியமாக எடுத்து அதிலிருந்து நாற்பதில் ஒரு அளவை நூற்றுக்கு இரண்டரை சதவீதத்தை ரொக்கப் பணமாக கொடுக்க வேண்டும்.

நாம் எந்த விதமான காரணங்களையும் சொல்ல முடியாது. இவர்களுக்கு காசு கொடுத்தால் இவர்கள் ஏதாவது செய்து விடுவார்கள். அதனால் அரிசியாக கொடுக்கிறோம், பருப்பாக கொடுக்கிறோம்என்று காரணம் சொல்ல முடியாது.

எப்போது உங்கள் மீது ஜகாத் கடமையாகி விட்டதோ ஜகாத்தின் அளவானது 100ரூபாய் லிருந்து அந்த இரண்டரை ரூபாய் என்பது நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

இது உங்களுக்கே கிடையாது. இது உங்கள் செல்வமே கிடையாது. இதில் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த இரண்டரை ரூபாய் என்பது இது முழுக்க முழுக்க ஏழைகளுக்குரிய உரிமை. ஏழைகள் உடைய செல்வம்.

அதை எடுத்துக் கொடுப்பதற்கு உங்களை ஒரு நிர்வாகியாக ஒரு காவலாளியாக தான் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கின்றானே தவிர, உனது விருப்பத்திற்கு ஏற்ப அதை செலவழிப்பதற்கு அது உனது செல்வம் அல்ல.

ஆகவேதான், இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய ஃபத்வாக்களில் ஒன்று, ஒருவனுடைய பாக்கெட்டில் ஜக்காத் கொடுக்க வேண்டிய பணம் இருக்கின்றது என்றால், ஒரு ஏழை தேவையை உடையவன் ஜகாத்தை கேட்கிறான் கொடுக்கவில்லை என்றால், சட்டையிலிருந்து ஜகாத்தை எடுத்துக்கொண்டால் இவன் மீது குற்றமாகாது என்று சொல்கிறார்கள்.

ஏன்? அந்த ஏழையை அவனுடைய ஹக்கை எடுத்து இருக்கின்றானே தவிர, அந்த செல்வந்தன் உடையதை அல்ல.

குறிப்பிட்ட காலம் வந்தவுடன் கணக்கிட்டு நாம் கொடுப்பதற்கு அல்லாஹ் நமக்கு அதை வைத்திருக்கின்றான் தவிர, நாமாக ஒன்றை நினைத்துக்கொண்டு அந்த செல்வத்தை சேமிப்பதற்கு அல்லாஹ் அனுமதி அளிக்கவில்லை.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் அழகிய முன்மாதிரியை நாம் பார்க்கின்றோம்.

தானியத்தின் ஸகாத் தானியமாக வசூல் செய்யப்பட்டது. ஒட்டகம் ஆடு மாடு என்ற கால்நடைகளின் ஜக்காத் கால்நடைகளாக கொடுக்கப்பட்டது. தங்கம் வெள்ளியின் ஜக்காத் ரொக்கமாக வசூலிக்கப்பட்டு கொடுக்கப்பட்டதே தவிர, ஏழைகளுக்கு பயனுள்ள பொருட்களை நாங்கள் வாங்கி கொடுக்கின்றோம் என்ற அடிப்படையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களுக்குப் பின்னால் வந்த தோழர்களும் அப்படி செய்ததில்லை. செய்வதற்கு அனுமதி கொடுத்ததில்லை.

நான்கு இமாம்களின் ஃபத்வாக்கள் கூட இதில் அமையவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, பொதுவாக நீங்கள் இந்த ரமலானுடைய மாதத்தில் பார்க்கலாம்; ஜக்காத் கொடுக்கிறோம் என்பதாக துணிமணிகளை வாங்கி வைத்துக்கொண்டு ரமலானுடைய கடைசி பத்தில் ஒரு நாள் இரண்டு நாளாக ஏழைகளை வாசலில் காக்க வைத்து வரக்கூடிய ஏழைகளுக்கு சேலை, ஆண்களுக்கு வேட்டி சட்டை என்று கொடுக்கிறார்கள்.

அவர்கள் பாவிகள் ஆவார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். அல்லாஹ்வுடைய ஹக்கை மீறியவர்களாக ஆகிவிடுவார்கள். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் எப்படி கொடுத்து இருக்கிறார்களோ அப்படித்தான் நாம் கொடுக்க வேண்டுமே தவிர நமது விருப்பத்திற்கு ஏற்ப நாம் மாற்றிவிடக் கூடாது.

ஆகவே இந்த சதக்காவை பொருத்தவரை உபரியான தான தர்மங்களை பொருத்தவரை நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக்கியமில்லை. யாருக்கு கொடுக்கிறோம்? தேவை உள்ளவர்களுக்கு கொடுக்கிறோமா? பசித்தவருக்கு கொடுக்கிறோமா? வறுமையை போக்குவதற்கு கொடுக்கிறோமா?என்பது முக்கியம்.

அல்லாஹ் கூறுகிறான் :

فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ (11) وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ (12) فَكُّ رَقَبَةٍ (13) أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ (14) يَتِيمًا ذَا مَقْرَبَةٍ (15) أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ

எனினும், (இதுவரை) அவன் ‘அகபா'வை (கணவாயை)க் கடக்கவில்லை. (நபியே!) ‘அகபா' என்னவென்று நீர் அறிவீரா? அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.(அல்குர்ஆன் 90 : 11-16)

யாராவது அநியாயமாக கைதிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் அவர்களை விடுவிப்பதற்கு இந்த ஜகாத்தை நாம் பயன்படுத்துவது மிக சிறந்த ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள்.

அடுத்து ஒரு ஏழை பசியால் வறுமையால் மண்ணைக் கவ்விக் கொண்டு இருக்கின்றான். அவனால் எந்த ஒரு சுய வியாபாரமும் செய்து கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஒரு வருமானத்திற்கு உண்டான ஒரு தான தர்மத்தை நீங்கள் செய்யுங்கள்.

அவர்களுக்கு நீங்கள் செய்யும் தான தர்மம் தான் அவரை பிறரிடம் கையேந்தி நிற்காத  நிலைக்கு ஆக்கும்.அதுதான் சிறந்த தானதர்மம்.

ஒரு லட்ச ரூபாயை 100ரூபாயாக பிரித்து பலநூறு மக்களுக்கு கொடுப்பதைவிட அந்த ஒரு லட்ச ரூபாயை ஒரு ஏழைக்கு கொடுத்து அவருக்கு ஏதாவது ஒரு சிறு கடையை வைப்பதற்கு அவருக்கு ஒரு முதலீட்டை ஏற்படுத்திக் கொடுத்து அதன் மூலமாக மாத வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

மார்க்க அறிஞர்கள் சொல்கிறார்கள்; அந்த ஒரு லட்ச ரூபாயை கொடுத்து அடுத்த வருடம் அவரை இதற்காக கொடுக்கும்படி ஆக்க வேண்டும். இதுதான் ஜகாத் உடைய நோக்கம்,இதுதான் அல்லாஹ்விற்கு உகந்தது‌.

இந்த மார்க்கத்தின் சட்டங்களை நாம் பார்ப்போமேயானால் நாம் வியந்து போய்விடுவோம். அப்படி அல்லாஹ் தனது சட்டங்களை வைத்திருக்கிறான்.

இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்; ஒரு மனிதன் கோடிக்கணக்கான மதிப்புள்ள விவசாய நிலத்தை வைத்திருக்கிறான். அவன் விவசாயம் செய்து விட்டால் அவனிடத்தில் எந்த ஒரு காசும் இல்லை. இப்போது இந்த கோடிக்கணக்கான விவசாய நிலத்தை இவன் அறுவடை செய்ய வேண்டும். அந்த தானியத்தை இவன் பாதுகாக்க வேண்டும். அடுத்து இதை அவன் சந்தைக்கு கொண்டு போய் விற்க வேண்டும்.

ஆனால் விவசாயம் செய்து விட்டதால் இவனுடைய இருப்பு அனைத்தும் காலியாகி விட்டது. இப்போது என்ன செய்வது? நமது இஸ்லாமிய சமுதாயம் இருக்குமேயானால், இப்போது புரிந்து வைத்திருக்கின்ற சமுதாயமாக இருக்குமேயானால், இவர்கள் என்ன சொல்வார்கள்;

எங்கேயாவது போய் இவன் கடன் வாங்கட்டும், உன்னிடம் வைத்திருக்கின்றான் அல்லவா? அதில் பாதி வித்து விடட்டும் என்று இந்த சமுதாயம் சொல்லும்.

ஆனால், மார்க்கம் சொல்கிறது; ஜக்காத் கடமையான செல்வந்தர்கள் தனது ஜக்காத்தை இந்த அடியானே கொடுக்க வேண்டும். கோடிக்கணக்கான விவசாய நிலத்திற்கு சொந்தக்காரர் அந்த அறுவடையை இவன் செய்து முடிப்பதற்கு உண்டான முழுமையான ஜக்காத் அவனுக்கு கொடுக்கப்படும்.

என்ன நன்மை ஏற்படும் தெரியுமா? அறுவடை செய்து முடிக்கும் பொழுது நீங்கள் எந்த அளவு ஜகாத்தாக கொடுத்தீர்களோ அதைவிட பன்மடங்கு அவன் அல்லாஹ்வுடைய பாதையில் ஜக்காத் ஆக கொடுப்பார். இதைத்தான் இஸ்லாம் ஜகாத்தாக சொல்கிறது.

ஜகாத் என்பது வருடா வருடம் கையேந்தக்கூடியவர்களை அதிகரிப்பது அல்ல. ஜகாத் என்றால், அவர் தனது பணத்தின் மூலமாக தனது வாழ்க்கையை நிறைவேற்றக் கூடியவராக வேண்டும்.

இன்னும் மார்க்க சட்டம் என்னவென்றால் ஜக்காத் ஒரு ஏழைக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று சொன்னால் பைத்துல்மாலில் இருந்து கொடுக்கக்கூடிய ஜகாத் தனிமனிதர் இடத்தில் அந்த அளவு வசதி இல்லை என்றால் அது தனி விஷயம்.

பைத்துல்மாலில் வசூல் செய்யப்பட்டு பைத்துல்மால் மூலமாக ஜகாத் கொடுத்தப்படும் என்று சொன்னால், கொடுக்கப்படக்கூடியவர்கள் எத்தனை மனைவிகளோ, எத்தனை பிள்ளைகளோ, அவர்களுடைய முழு எண்ணிக்கையின் அளவுக்கு அவர் யாரிடமும் கையேந்த கூடாத அளவிற்கு அவருடைய உணவுப் பொருளாக இன்றைக்குத் தேவையான மற்றும் ஏனைய சுய தேவைக்கு போதுமான அளவுக்கு ஒரு வருடத்திற்கு உரிய செலவு அந்த ஏழைக்கு கொடுக்கப்படவேண்டும்.

இன்று என்ன செய்கிறோம்? எங்கேயாவது ஹோட்டலுக்குப் போய் ரெண்டு பொட்டலத்தை வாங்கி கொடுத்துவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். இது ஒரு சாதாரண உபரியான தர்மம்.

ஜகாத் என்பது, ஒருவருக்கு ஒரு வருடத்திற்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் என்று அவருடைய குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் போதுமான அளவிற்கு முழுமையாக, அவருடைய தேவையை நிறைவேற்றுவதுதான். இது ஜக்காத் உடைய அடிப்படை என்று சொல்கிறார்கள்.

இந்த ஜகாத் என்று வந்துவிட்டால் அவரவர் முஃப்தியாக மாறிவிடுகிறார், அவர் அவர் வல்லுனராக மாறிவிடுகிறார், அவர் மன இச்சைக்கு ஏற்பசில சில்லறைகளை பிரித்துக் கொடுத்துவிட்டு ஜகாத் கொடுத்து விட்டோம் என்று திருப்தி அடைந்து கொள்கிறார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

ஆக, இந்த ஜகாத் உடை விஷயத்தில் மார்க்க அறிஞர்களை அணுகி தெளிவான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்; அதன் மூலமாக தான் அல்லாஹ்விடத்தில் நன்மையை எதிர்பார்க்க முடியும்.

அல்லாஹ் கூறுகிறான் :

وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ

அவர்கள் ஜகாத்து கொடுத்து வருவார்கள். (அல்குர்ஆன் 23: 4)

இந்த ரமலானுடைய மாதத்தில் சிறந்த வணக்க வழிபாடுகளில் ஒன்று, ரமலானுடைய கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருப்பது.

அல்லாஹ்வுடைய தூதர் கடைசி பத்தில் லைலத்துல் கத்ர் உடைய இரவை தேடி இஃதிகாஃப் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஒற்றைப்படை இரவுகளில் தேடுங்கள் என்று சொல்கிறார்கள்.

ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஒரு மாதம் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான் அல்லாஹ்விற்கு மிக பிடித்தமான இரவு. வானவர்கள் இறங்குகிறார்கள். ஜிப்ரீல் இறங்குகிறார்கள். அல்லாஹ்விடத்தில் இருந்து எல்லா காரியங்களும் நிறைவேற்றப்படுகிறது. முஃமின்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 97 : 1-5)

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய தோழர்கள் இருந்திருக்கிறார்கள்.அவர்களுடைய மனைவிமார்கள் இருந்திருக்கிறார்கள். ஆகவே,அப்படிப்பட்ட ஒரு வணக்கத்தைசெய்வதற்கு நாம் முயற்சி செய்வோமாக!~

அடுத்து, சில முக்கியமான சட்டங்கள்,

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சஹர் பற்றி கூறும் போது, சஹருடைய உணவை தாமதப்படுத்துங்கள் என்று சொன்னார்கள்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சஹர் சாப்பிட்டுவிட்டு பர்ளான தொழுகைக்கு எழுந்து சென்ற பொழுது ஐம்பது வசனங்கள் ஓதக்கூடிய அளவிற்குதான் நேரம் இருந்தது என்பதாக சஹாபாக்கள் கூறுகிறார்கள்.

ஆனால், இன்று என்ன செய்கிறார்கள்? நபியை விட தங்களுக்கு மார்க்கம் தெரிந்ததை போன்று, சஹாபாக்களை விட தங்களுக்குத் மார்க்கம் தெரிந்ததை போன்று, ஸஹருடைய நேரத்தை அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே, இன்னும் சிலர் அதை விட அதிகமாக ஸஹரை முடித்துவிடுகிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள் என் உம்மத் சஹரை பிற்படுத்தும் வரை நன்மையில் இருக்கும்.

அதுபோல், எப்பொழுது சூரியன் மறைகிறதோ அப்பொழுது நாம் இஃப்தார் செய்துவிட வேண்டும்.

மக்கள் இதிலும் தவறுகிறார்கள். பேணுதல் என்று கூறி ஒவ்வொருவரும் அவரவர்கள் நேரத்தை கணக்கிட்டு கொள்கிறார்கள். எதை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கூறினார்களோ அதுதான் இறையச்சம்.

மூன்று நபர்களுடைய துஆக்கள் அல்லாஹ்விடத்தில் மறுக்கப்படுவது இல்லை. முதலாவது நீதம் தவறாமல் ஆட்சி செய்யக்கூடிய அரசன், இரண்டாவது நோன்பு  வைத்திருப்பவர் நோன்பு திறக்கக் கூடிய நேரத்தில் கேட்கக்கூடிய துஆ.

நூல் : இப்னுமாஜா, எண் : 1752.

ஆகவே, நாம் இப்தார் உடைய சபையில் உட்காரும் பொழுது, வீணான விஷயங்களைப் பேசாமல், உணவைப்பற்றி சொல்லாமல், நமது உள்ளம் அல்லாஹ்வை நோக்கியதாக, நமது உம்மத்துக்காக நமது குடும்பத்திற்காக சமுதாயத்திற்காக கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

சில நாடுகளில் மிக அழகாக ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். யாரெல்லாம்  இப்தாருக்கு வருவார்களோ அவர்களுக்கு பள்ளியில் வரிசையாக அடுக்கி வைத்திருப்பார்கள்.

எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் வரிசையாக அமர்ந்து இருப்பார்கள். யார் என்று பார்க்க மாட்டார்கள். எல்லாம் முஸ்லிமான சகோதரர்கள். ஆனால் இன்று நமது பள்ளிவாசல்களில்  என்ன நடக்கிறது‌?

முன்னாடி வந்து விடுவார். பக்கத்தில் இடம் போட்டுவிடுவார். யாருக்கு என்று கேட்டால் எனது தம்பிக்கு என்று சொல்வார்.

இப்படியாக ஒரு பிரிவினை காட்டக்கூடிய சூழலைப் பார்க்கிறோம். அந்த ஒரு மூன்று நான்கு நிமிடங்களுக்கு முன்னால் சேர்ந்து வரிசையாக அமர்ந்து யார் நமது பக்கத்தில் உட்கார்ந்தால் என்ன? எல்லாம் நமது சகோதரர்களே. இருப்பதை பகிர்ந்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் அமரும்பொழுது நமது உள்ளங்கள் துஆ கேட்பதற்கு இருக்கின்றன.

இன்னும் சிலர், அரை மணி நேரம் நேரம் முன்னாடியே அந்த உணவு விரிப்புக்கு முன்னால் உட்கார்ந்து அந்த வைத்திருக்கக் கூடிய சுவையான உணவை பார்ப்பார், வாசனையை நுகர்வார், மன ஒருமை ஏற்படுமா? ஏற்படாது. இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் ‌.

அடுத்து மூன்றாவதாக, அநீதி இழைக்கப்பட்டவர்களுடைய துஆ அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. யாருக்கும் எந்த விதத்திலும், அது பிள்ளைகளாக இருந்தால் என்ன? மனைவியாக இருந்தால் என்ன? வேலை செய்பவர்களாக இருந்தால் என்ன? காஃபிராக இருந்தாலும் அவர்களுக்கு எந்த விதத்திலும் அநீதம் இழைப்பதற்கு அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு அனுமதி தரவில்லை.

அல்லாஹ் நம் அனைவரையும் ரமலானுடைய நோன்பை பேணியவர்களாக ஆக்கி அருள் புரிவானாக.

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ أَنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ بِالْخَيْرِ وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ وَكَانَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام يَلْقَاهُ كُلَّ لَيْلَةٍ فِي رَمَضَانَ حَتَّى يَنْسَلِخَ يَعْرِضُ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقُرْآنَ فَإِذَا لَقِيَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام كَانَ أَجْوَدَ بِالْخَيْرِ مِنْ الرِّيحِ الْمُرْسَلَةِ (صحيح البخاري 1769 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/