ரமழான் சிறப்புகளும் சட்டங்களும் (அமர்வு 1/3) | Tamil Bayan - 334
ரமழான் சிறப்புகளும்சட்டங்களும்
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமழான் சிறப்புகளும்சட்டங்களும் (அமர்வு 1-3)
வரிசை : 334
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 27-06-2014 | 29-08-1435
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறு அல்லாஹ்வுடைய பயத்தை தனிமையிலும் சபையிலும் எல்லா சூழ்நிலைகளிலும் கடைப்பிடிக்குமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக அல்லாஹ்வுடைய பயத்தை நினைவூட்டியவனாக ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ்வை பயந்து கொண்டவர்கள் இம்மையிலும் வெற்றி அடைந்தார்கள். மறுமையிலும் வெற்றி அடைந்தார்கள்
அல்லாஹு ரப்புல் ஆலமீன் தனது கண்ணியத்திற்குரிய புத்தகமான குர்ஆனில் கூறுகிறான்:
وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا
அவன்தான் இரவையும், பகலையும் மாறி மாறி வரும்படி செய்திருக்கிறான். (இதைக் கொண்டு) எவர்கள் நல்லுணர்ச்சி பெற்று, அவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறார்களோ அவர்களுக்காக (இதைக் கூறுகிறான்).(அல்குர்ஆன் 25: 62)
இரவை படைத்ததும் அல்லாஹ்வை வணங்குவதற்காக. பகலுக்கு என சில வணக்க வழிபாடுகள். இரவுக்கு என சில வணக்க வழிபாடுகள்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் இரவுக்கும் பகலுக்கும் ஒவ்வொரு நேரத்திற்கும் ஏற்ப பிரித்து கொடுத்து அந்த தன்மைக்கு ஏற்ப அமைத்துக் கொடுத்து அடியார்கள் தன் பக்கம் நெருங்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.
இந்த குறுகிய கால வாழ்க்கையில் அதிகம் நாம் நன்மையை சேர்க்கக்கூடிய காலமாக, நாம் அதிகம் நன்மையை சம்பாதிப்பதற்க்குடிய காலமாக ஏற்படுத்தி இருக்கிறான்.
அப்படிப்பட்ட காலங்களில் ஒன்று தான் மிக விரைவில் அடைய இருக்கின்ற இந்த ரமலானுடைய மாதம். நன்மைகளுக்காகவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து நமக்கு வழங்கப்பட்ட மாதம், தவறவிட்ட நன்மைகளை அள்ளிக் கொள்வதற்காக, இனியும் நன்மைகளை சேகரித்துக் கொள்வதற்காக, மறுமையில் சொர்க்கதின் வீட்டை பெறுவதற்காக அவ்வாறு ரப்புல் ஆலமீன் கொடுத்திருக்கக் கூடிய இந்த மாதம்தான் ரமலான் மாதம்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் எவ்வளவு பாசத்தோடும் நேசத்தோடும் கூறுவதைப் பாருங்கள்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்.(அல்குர்ஆன் 2: 183)
ரமலானுடைய மாதத்தில் மனிதன் தனது மன இச்சைகளை கட்டுப்படுத்துகிறான்; அல்லாஹ்வை நோக்கி தனது கரங்களை உயர்த்துகிறான்.
அடியார்களில் சிலர்,தான் செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர்,யா அல்லாஹ் உன்னை வணங்குவதற்கு எங்கள் வாழ்க்கையை வணக்க வழிபாட்டில் கழிப்பதற்கு எங்களுக்கு உதவி செய்!
மேலும் சிலர், அல்லாஹ்விடத்தில் தன் நிலையிலிருந்து பாதுகாப்பு தேடுகிறார்கள். தங்களுக்கு நல்லதை கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
மற்றும் பலர், அல்லாஹ்வை திக்ரு செய்வதிலும் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுவதில் ஈடுபட்டு துஆ கேட்பதற்கு கூட நேரம் இல்லாமல் தங்களை முழுமையாக வணக்க வழிபாடுகளில் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அல்லாஹ்வுடைய திக்ரை ஓதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதிக் கொண்டே இருக்கிறார்கள். அல்லாஹ்விடத்தில் துஆவை கேட்டுக் கொள்கிறார்கள். இவர்களுக்காக விசேஷமான ஒன்றை அல்லாஹ் வைத்திருக்கிறான்.
أعطيته أفضل ما أعطي السائلين
குர்ஆனை ஓதுவதின் காரணத்தினால் என்னிடம் தனது தேவைகளைக் கேட்க முடியாமல் ஆகி விட்டவர்களுக்கு என்னிடம் பிரார்த்திப்பவர்களுக்கு கொடுப்பதை விட சிறந்ததை கொடுப்பேன் என்று அல்லாஹ் சொல்கிறான்.
அறிவிப்பாளர் : அபூ சயீத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2926.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், ஒருவர் குர்ஆன் ஓதும் பொழுது குர்ஆனில் என்ன இருக்கிறது? அல்லாஹ்வுடைய புகழ் இருக்கிறது. அல்லாஹ்வுடைய திக்ர் இருக்கிறது. அதில் நபிமார்கள் அல்லாஹ்விடத்தில் கேட்ட பிரார்த்தனைகளும் நல்லவர்கள் அல்லாஹ்விடத்தில் கேட்ட பிரார்த்தனைகளும் இருக்கிறது.
எனவே, ஒரு மனிதன் தனது வார்த்தையால் அல்லாஹ்விடத்தில் கேட்பதைவிட நபிமார்கள் கேட்ட துஆக்களை கொண்டு அவன் குர்ஆனில் அல்லாஹ் உடைய வசனத்தை ஓதிக் கொண்டு வரும்பொழுது தனியாக ஒரு மனிதன் தன்னுடைய வார்த்தைகளில் கேட்பதைவிட சிறந்தது ஒன்றை அல்லாஹ் தருகிறான்.
அல்லாஹ்வின் அடியார்களே! இந்த ரமலானுடைய மாதம் என்பது ஒரு ஆற்றல்மிக்க மாதம்; இதனுடைய மாதம் ஒரு கொடை நிறைந்த மாதம்; உயர் மிக்க மாதம்; தியாகமிக்க மாதம்.
அல்லாஹ்வுடைய தூதர் இந்த மாதத்தில்தான் மக்காவை வெற்றி கொண்டார்கள். அல்லாஹ்வுடைய தூதரும் முஸ்லிம்களும் நோன்பு இருந்தவர்களாக மக்காவை வெற்றி கொண்ட மாதம் இந்த ரமலானுடைய மாதம்.
இதே மாதத்தில் தான் பத்ர உடைய பெரிய போர் வெற்றி பெற்றது. முஸ்லிம்களுடைய கொடி ஓங்கியது. காபிர்களும் அநியாயக்காரர்கள் உடைய கொடியை அல்லாஹ் இந்த மாதத்தில்தான் ஒழித்தான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்களுடைய தோழர்களில் வரலாற்றில் நாம் பார்த்தோம் என்றால் இந்த மாதத்தில் தான் அதிகம் ஆற்றல் மிக்கவர்களாக திகழ்ந்திருக்கிறார்கள்.
அதிகம் உறுதிபடைத்தவர்களாக திகழ்ந்திருக்கிறார்கள். வணக்க வழிபாட்டில் அவர்களுடைய தியாகமும் திகழ்ந்திருக்கின்றன.
ரமலான் என்பது அருளுக்குரிய மாதம். இந்த ரமலான் பெருமைக்குரிய மாதம். இந்த ரமலான் என்பது கொடை கொடுப்பதற்குரிய மாதம்.
ஆனால் இதில் கவலைக்குரிய செயல் என்னவென்றால், நம்மில் பலர், இந்த ரமலானுடைய மாதத்தை சோம்பேறித்தனத்திற்கு ஆக்கி வைத்திருக்கிறார்கள். தூங்குவதற்காக ஆக்கி வைத்திருக்கிறார்கள்.
நோன்பு நோற்றோம் என்ற பெயரில் பகலெல்லாம் தூங்குவதற்காக வைத்திருக்கிறார்கள். இரவினில் வீணான செயல்களை செய்து நேரத்தை கழிப்பதற்காக விடியும் வரை வீணான பல செயல்களை செய்கிறார்கள்.
அதில் பாவங்களும் அடங்கும். இப்படி கழித்து பஜர் தொழுகையை கூட கொடுக்காமல் தொழுகையை அலட்சியம் செய்வதை நாம் பார்க்கிறோம். அல்லாஹ் நமது சமுதாயத்தை சீர்த்திருத்தம் செய்வானாக!
நமது முன்னோர்கள், ரமலானுடைய மாதத்தை உணர்வோடு கழித்தார்கள். அந்த ரமலானுடைய மாதத்தில் உள்ளத்தோடு அவர்கள் வாழ்ந்தார்கள். அவர்களுடைய உடல் மட்டும் போகவில்லை, அவர்களுடைய உள்ளமும் நோன்பு இருந்தது.
அவர்களுடைய உள்ளம் அந்த நோன்பை உணர்ந்தன. அவர்களுடைய உடலும் அந்த நோன்பை உணர்ந்தன. அவர்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் அவர்களோடு நோன்பை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது.
அந்த அளவுக்கு பக்குவம் பெற்றவர்களாக ரமலானோடு ஒன்றியவர்களாக அவர்கள் நோன்பு நோற்றார்கள்.
ஆகையால்தான், வணக்க வழிபாட்டில் ரமலானின் அவர்களுடைய இவர்களைப் பார்க்கும் பொழுது அவர்களுடைய பகலெல்லாம் குர்ஆன் ஓதுவதாக, இரவெல்லாம் நின்று வணங்குவதாக என்ற நிலை அவர்களிடத்தில் இருந்ததை நாம் பார்க்கிறோம்.
தவறான பேச்சுக்களையோ, வீணான பேச்சுகளையோ, அனாவசியமான செயல்களையோ அவர்கள் ரமலான் மாதத்தில் செய்யவில்லை.
அல்லாஹ்வின் அடியார்களே! ரமலான் மாதத்தில் அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கிற நோன்பு என்பது சிறந்த இபாதத் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
குறிப்பாக, எந்த இபாதத்தை அல்லாஹ் இஸ்லாமின் அடிப்படை அம்சமாக ஆக்கியிருக்கின்றானோ அதில்ஒன்றாக இந்த நோன்பு இருக்கிறது. அந்த அளவிற்கு வணக்க வழிபாடுகளில் மிக உயர்ந்த வணக்க வழிபாடாக இந்த நோன்பு கருதப்படுகிறது.
இந்த ஐந்து அம்சங்களை அல்லாஹ் நமக்கு மட்டும் கடமை ஆக்கவில்லை. நமது முன்னோர்களுக்கும் கடமையாக்கி இருக்கிறான்.
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு இந்த நோன்பு கடமையாக்கப்பட்டது போன்று உங்களுடைய முன்னோர்களுக்கும் கடமையாக்கப்பட்டது என்பதை அல்லாஹ் கூறுவதிலிருந்து இந்த நோன்பின் முக்கியத்துவத்தை நாம் புரிய வேண்டும். (அல்குர்ஆன் 2: 183)
இந்த நோன்பில் நாம் என்ன செய்யப்போகிறோம்? எதை அடையப் போகிறோம்? என்றால், இமாம் அஹ்மத் அறிவிக்கக் கூடிய அறிவிப்பை பாருங்கள்.
ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்லல்லாஹு அலைஹி வஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்லம் அவர்கள் சொன்னார்கள்.
إِنَّمَا الصِّيَامُ جُنَّةٌ يَسْتَجِنُّ بِهَا الْعَبْدُ مِنْ النَّارِ
நோன்பு ஒரு கேடயம். அடியான் தன்னை இந்த நோன்பின் மூலமாக நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்கிறான்.
அறிவிப்பாளர் : ஜாபிர்ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 15264.
நோன்பு ஒரு கேடயம் என்பதை அல்லாஹ்வுடைய தூதர் வஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள் என்றால், நாம் அந்த நோன்பை அப்படி பயன்படுத்துகிறோமா, பாதுகாக்கிறோமா, நோன்புடைய அந்த ஒழுக்கங்கள், நோன்புடைய வணக்க வழிபாடுகள் பாதுகாக்கப்படுகின்றனவா?
எத்தனை முஸ்லிம்கள்,ரமலான் மாதத்தில் கூட தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதற்கு அலட்சியம் செய்கிறார்கள் என்றால், இவர்களுக்கு எப்படி இந்த நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கக்கூடிய கேடயமாக அமையும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.
அல்லாஹு தஆலா இந்த நோன்பை நமக்கு கொடுத்ததன் மூலமாக இறையச்சம் நமக்கு வரவேண்டும் என்று சொல்கிறானே,இறையச்சம் உங்களுடைய உள்ளத்தில் ஆழமாக பதிய வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறானே,உங்கள் மனமெல்லாம் அல்லாஹ்வுடைய பயத்தால் நிரம்பியிருக்க வேண்டும் என்று அல்லாஹ் சொல்கின்றான் என்றால் அப்படிப்பட்ட நோன்பாக நமது நோன்பை ஆக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பொதுவாக நபிலான நோன்புகளைப்பற்றி சொல்லும்போதுகூட, வாலிபர்களுக்கு சொல்கிறார்கள் :
يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ
திருமணத்திற்குரிய ஆண்கள் பொருள் ஆற்றல் உடல் ஆற்றல் இருந்தால் உடனடியாக திருமணம் முடித்துக் கொடுங்கள். (1)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1905,4678.
படிப்பு முடியட்டும் என்று தள்ளிப் போடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. சம்பாதித்து வீடு வாங்கிக் கொள்கிறேன் என்று தள்ளிப் போடுவதற்கு அனுமதி இல்லை.
அல்லது எனக்கு தங்கை இருக்கின்றாள், அக்கா இருக்கின்றாள் என்று தள்ளிப் போடுவதற்கு அனுமதி இல்லை. அல்லது எனது தந்தை இன்னும் வீடு கட்டவில்லை என்று தள்ளிப்போடுவது அனுமதி இல்லை.
உங்களால் மூன்று நாட்களுக்கு உங்கள் மனைவிக்கு உணவு உடை கொடுப்பதற்கு ஆற்றல் இருக்குமேயானால், உங்கள் மனைவியை தங்க வைப்பதற்கு ஒரு சிறந்த ஒரு இடம் இருக்குமேயானால், அது பெரிய பங்களாவாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு கூரையாக இருந்தாலும் சரி, இந்த ஒரு ஆற்றல் உங்களிடத்தில் இருக்குமேயானால் அவர்கள் கண்டிப்பாக உடனடியாக திருமணம் முடித்து கொள்ளட்டும்.
அன்பானவர்களே! இந்த ஒரு விஷயத்தை உங்களுக்கு ஆழமாக அழுத்தமாக பதிய வைக்க விரும்புகிறேன்.
இன்று முஸ்லிம் சமுதாயத்தின் வாலிபர்கள் சீரழிந்தார்கள், அல்லாஹ் பாதுகாத்தவர்களை தவிர. சமுதாயத்தின் வாலிபப் பெண்கள் சீரழிந்தார்கள் அல்லாஹ் பாதுகாத்தவர்களை தவிர.
இவர்கள் சீரழிந்ததற்கான காரணம் என்ன? இவர்களுடைய தந்தைமார்கள் இவர்களுடைய தாய்மார்கள் இவர்களுடைய சமுதாயம் தவறான காரணங்களை சொல்லி மாயமான காரணங்களைச் சொல்லி திருமணங்களை இவர்கள் தள்ளிப்போட்டதின் காரணமாக நமது வாலிபர்கள் தவறான செயல்களில் சென்றதை நாம் பார்க்கிறோம்.
பெண்களில் பலர், தவறான பாதைகளில் சென்றதை நாம் பார்க்கிறோம். அதுக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று திருமணம் அதற்குரிய நேரத்தில் செய்யப்படாததுதான்.
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் அனுமதிக்காத, மாற்றார்களின் கலாச்சாரங்களை பின்பற்றி அவர்கள் சொல்லக்கூடிய காரணத்தை முஸ்லிம்கள் சொல்லி திருமணத்தை தள்ளிப்போட்ட காரணத்தால் சமுதாயத்தில் வாலிபர்கள் தவறான வழியில் சென்று விட்டதை பார்க்கிறோம்.
அன்பானவர்களே! கொஞ்சம் மனதில் நினைத்துப் பாருங்கள். ஒரு மனிதன், வாழ்க்கையில் ஒரு முறை தவறி விட்டால், ஒரு முறை சீர் கெட்டு விட்டால் படிந்த கரையை அவனால் எப்படி நீக்க முடியும்>? என்பதை யோசித்துப் பாருங்கள்.
தவ்பாச் செய்தால் அல்லாஹ் கண்டிப்பாக மன்னிப்பான். ஆனால், அவன் வழிதவறுவதற்குரிய காரணங்களில் சூழ்நிலைகளில் அவனை தள்ளியவர்கள் யார்? அவனுடைய பெற்றோர்கள், அவனுடைய சமுதாயம், அவர்கள் அல்லாஹ்விடத்தில் தண்டிக்கப்படுவார்கள், விசாரிக்கப் படுவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த கட்டளையை கொடுத்து விட்டு சொல்கிறார்கள்.
فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ
இந்த திருமணம் உங்களின் பார்வைகளைத் தாழ்த்தவைக்கும். உங்களது கற்பை திருமணம் பாதுகாக்கும். ஒருவனுக்கு உடல் வலிமை இருந்து பொருளாதாரம் இல்லையா உடனடியாக அவர் நோன்பை அதிகப்படுத்தடும்.
ஏன்? இந்த நோன்பு அவர் இச்சையைக் கட்டுப்படுத்தும். அவருடைய ஆசையை கட்டுப்படுத்தும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1905,4678.
உபரியான நோன்பு என்பது நமது இச்சையை கட்டுப்படுத்தக்கூடிய நமது உள்ளத்தில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோன்பு என்று சொன்னால், இந்த ரமலான் உடைய நோன்பில் நாம் எந்த அளவுக்கு இறையச்சத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதை இந்த இடத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் வருகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு கட்டளை கொடுங்கள். அதன் மூலம் அல்லாஹ் எனக்கு நன்மை அளிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
(அன்பிற்குரியவர்களே! சஹாபாக்கள் அல்லாஹ்வுடைய தூதரிடத்தில் உலகத்திற்கான தேவைகளை கேட்கவில்லை. செல்வம் பெருக வேண்டும், பணக்காரனாக வேண்டும், நான் பதவி படைத்தவனாக ஆக வேண்டும், என்ன செய்வது? என்று இப்படிப்பட்ட கேள்விகளை அவர்கள் கேட்கவில்லை.
இன்று பலர், மார்க்க அறிஞர்களை அணுகுகிறார்கள் என்றால், ஆலிம்களிடத்தில் செல்கிறார்கள் என்றால் அவர்களுடைய நோக்கம், ஆலிம்சா ஏதாவது துஆ சொல்லிக் கொடுங்கள், வியாபாரம் பரக்கதாக இருப்பதற்கு.
இன்னும் சிலர், ஆலிம்சா ஏதாவது எழுதி கொடுங்கள், என் கடையில் மாட்டுவதற்கு, வியாபாரம் மிகவும் கம்மியாக இருக்கிறது.
கண்ணியத்திற்குரியவர்களே! நீங்கள் ஹலாலான வியாபாரம் செய்தால் உண்மையான வியாபாரம் செய்தால் அல்லாஹ் உங்களுக்கு வானத்திலிருந்து கொட்டிக் கொடுப்பான். ஏமாற்றி, பொய் பேசி, கொடுத்த வாக்கை மாற்றி என்னதான் சம்பாதித்தாலும் அல்லாஹ்வுடைய கோபம் உங்களுடைய எல்லா சம்பாத்தியத்தையும் அழித்துவிடும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸை பாருங்கள் :
فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا
வாங்கக்கூடியவரும் விற்கக்கூடியவரும் ஒன்று சேர்ந்து ஒரு பொருளை வாங்குகிறார்கள். வாங்குபவர் அதற்குண்டான பணத்தை கொடுக்கிறார், அவர்கள் இருவரும் உண்மையைப் பேசி தெளிவாக பேசி ஒப்படைத்தால் அல்லாஹ் அவர்களுடைய அந்த கொடுக்கல்-வாங்கலில் பரக்கத் செய்கிறான். அவர்கள் பொய் பேசினால் அந்த வியாபாரத்தின், குறையை மறைத்தால் கண்டிப்பாக இவர்களுடைய வியாபாரத்தில் பரக்கத் அழிக்கப்படும்.
அறிவிப்பாளர் : ஹகீம் இப்னு ஹிஸாம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1937.
ஹராமான ஷிர்க்கான செயல்களைச் செய்து, தாயத்தை கட்டித் தொங்க விடுவதின் மூலமாக அல்லாஹ்வுடைய பரக்கத்தை வானத்தில் இருந்து கொண்டு வர முடியாது. அல்லாஹ்வுடைய பரக்கத்தை தங்களுடைய வியாபாரத்தில் இறங்க வேண்டும் என்றால் அதனுடைய நிபந்தனைகளை உண்மையாக வைத்திருக்க வேண்டும்.
அதற்குரிய நிபந்தனைகளை அல்லாஹ் பெருந்தன்மையாக வைத்திருக்கிறான். மறந்துவிடாதீர்கள்.
ஹதீஸின் தொடர் : அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்கிறார்கள் :
مُرْنِي بِأَمْرٍ يَنْفَعُنِي اللَّهُ بِهِ
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு கட்டளை கொடுங்கள், அதன் மூலம் அல்லாஹ் எனக்கு நன்மை அளிக்க வேண்டும்
அல்லாஹ்வுடைய தூதர் பதிலளித்தார்கள் :
عَلَيْكَ بِالصِّيَامِ فَإِنَّهُ لَا مِثْلَ لَهُ
தோழரே! நோன்பை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், இந்த நோன்புக்கு சமமான வேறு ஒரு வணக்கம் இல்லை.
அறிவிப்பாளர் : அபூ உமாமாரழியல்லாஹு அன்ஹு, நூல் : நஸயி,எண் : 2221, 2191.
ஸஹ்ல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ
சொர்க்கத்தில் ரய்யான் என்று சொல்லக்கூடிய வாசல் இருக்கிறது. அதில் நோன்பு நோற்றவர்கள் மட்டும் தான் செல்வார்கள். அங்கு வேறு யாரும் நுழைய முடியாது. அந்த வாசலில் நோன்பாளிகள் எங்கே என்று வானவர்கள் அழைப்பார்கள். மஹ்ஷரில் இருந்து நோன்பாளிகள் புறப்படுவார்கள். வேறுயாரும் அந்த வாசல் வழியாக செல்ல முடியாது. அவர்கள் நுழைந்ததற்கு பிறகு சொர்க்கத்தில் அந்த ரய்யான் என்ற வாசல் அடைக்கப்பட்டு விடும்.
அறிவிப்பாளர் : ஸஹ்ல்ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 1763.
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பின் சிறப்பை பற்றி சொன்னார்கள் :
الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ الصِّيَامُ أَيْ رَبِّ مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ فَشَفِّعْنِي فِيهِ وَيَقُولُ الْقُرْآنُ مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ فَشَفِّعْنِي فِيهِ قَالَ فَيُشَفَّعَانِ
அல்லாஹ்விடத்தில் வணக்க வழிபாடுகள் நாளை பேசும். இக்லாஸ் உடன் செய்யப்பட்ட இபாதத்கள், மறுமைக்காக செய்யப்பட்ட வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விடத்தில் பேசும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: நாளை மறுமையில் நீங்கள் நோற்ற நோன்பும் நீங்கள் ஓதியக் குர்ஆனும் சிபாரிசு செய்யும். அப்படி செய்யும் பொழுது அந்த நோன்பு அல்லாஹ்விடத்தில் பேசும்;
என் இறைவா! நான் இந்த அடியானை சாப்பிட விடாமல் தடுத்தேன். அழகான சுவையான உணவுகள் இருந்தும் அதை நெருங்காமல் நான் தடுத்தேன். இசைக்களை ஆசைகளை விட்டு அவனை தடுத்தேன். பசித்தவன் உணவிருந்தும் சாப்பிட முடியாமல் ஆக்கினேன். ஆகவே, நான் அவனுக்காக செய்யப்படக்கூடிய சிபாரிசை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6337.
இந்த மாதிரி ஒரு சிபாரிசை நபிமார்கள் கூட செய்யமுடியாது. நபிமார்கள் அல்லாஹ்விடத்தில் பரிந்துரையாக விண்ணப்பம் தான் செய்வார்கள். இவரை நீ மன்னித்து தான் ஆக வேண்டும் என்று சொல்லமாட்டார்கள்.
ஆனால், வணக்க வழிபாடுகள் அப்படி அல்ல. வணக்க வழிபாடு இறைவனுடைய ஹக்கு இது. எனவேதான் அல்லாஹுத்தஆலா வணக்க வழிபாடுகளுக்கு அப்படிப்பட்ட ஒரு ஆற்றலைக் கொடுத்திருக்கின்றான்.
இன்னொரு அறிவிப்பில்,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
சூரா பகரா ஓதுங்கள்,சூரா ஆல இம்ரான் ஓதுங்கள்.இந்த இரண்டு சூராக்களையும் ஓதி அதனுடைய சட்டங்களை பேணியவருக்காக நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் அவை வாதாடும். (2)
அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு சம்ஆன் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1338.
ஆனால், மற்ற அடியார்களை அல்லாஹ் சொல்லும் பொழுது, வானவர்களைப் பற்றி சொல்லும் பொழுது, ஏனைய நல்லவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்லும் பொழுது, அல்லாஹ் யாருக்கு விரும்புகிறானோ அவர்களைத் தவிர வேறு யாரும் அவர்களுக்கு சிபாரிசு செய்ய முடியாது.
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ارْتَضَى وَهُمْ مِنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ
அவர்களுக்கு முன்னுள்ளவற்றையும், அவர்களுக்கு பின்னுள்ளவற்றையும் அவன் அறிகின்றான். அவன் விரும்பியவருக்கேயன்றி வேறெவருக்காகவும் அவர்கள் பரிந்து பேசுவதில்லை. மேலும் அவர்கள் அவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். (அல்குர்ஆன் 21: 29)
ஹதீஸின் தொடர் : குர்ஆன் அல்லாஹ்விடத்தில் பேசும்; இந்த அடியானை இரவில் தூங்கவிடாமல் நான் அவனைத் தடுத்தேன். எனவே, என் விஷயத்தில் அவனுடைய சிபாரிசு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள். வேறு யாருக்கும் இந்த சிபாரிசு இல்லை. இரண்டின் சிபாரிசும் ஏற்றுக் கொள்ளப்படும்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6337.
மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
யார் ரமலானில் தனது ஈமானை அதிகரித்துக்கொண்டு அல்லாஹ்விடத்தில் நன்மையை தேடி நோன்பை ஆரம்பிப்பார்களோ, அவர்களுடைய பழைய பாவத்தை எல்லாம் அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.
அறிவிப்பாளர் : அபூஹுரைராரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 37.
நோன்பு என்பது ஒரு சடங்கிற்காக வைக்கவேண்டியவிஷயம் இல்லை என்று புரிந்துகொள்ளுங்கள்.
எனவேதான்,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஈமானை அதிகரிப்பதற்காக அல்லாஹ்விடத்தில் நண்மையை எதிர்பார்த்தவனாக என்ற அந்த நிபந்தனையை சொல்கிறார்கள்.
இந்த நோன்பு என்பது ஈருலக மகிழ்ச்சிக்கு ஒரு காரணமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்
لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் இருக்கின்றன. ஒரு மகிழ்ச்சி, நோன்பு திறக்கும் பொழுது அவருக்கு ஏற்படக் கூடிய மகிழ்ச்சி. இரண்டாவது, தனது ரப்பை அவர் சந்திக்கும் பொழுது.(3)
அறிவிப்பாளர் : அபூஹுரைராரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1771, 7492.
இவற்றையெல்லாம் நாம் உணர்கின்றோமா? என்று பார்க்க வேண்டும். பேசப்படுவதற்காக கேட்கப்படுவதற்காக மட்டுமல்ல.
ஸஹர் செய்கிறார். பிரியத்தோடு நோன்பு வைத்திருக்கிறார். மனிதன் அந்த நோன்பு திறக்கின்ற விரிப்பில் உட்கார்ந்து முன்னால் எல்லா வகையான உணவுகளும் குடிபானங்கள் இருந்தும் கூட அந்த நோன்பு திறக்கக் கூடிய நேரத்தை எதிர்பார்த்து ஒரு நிமிடம் கூட முந்தாமல் நேரம் வந்தவுடன் பிஸ்மில்லாஹ் என்று சாப்பிட்டு அவருக்கு இருக்கக்கூடிய அந்த மகிழ்ச்சி, அல்லாஹ்விற்காக நோற்ற நோன்பை அல்லாஹ்விற்காக விடுகிறேன்.
அல்லாஹ்விற்காக இந்த நோன்பை நான் முடிக்கிறேன் என்று அந்த எண்ணத்தோடு சாப்பிடும் பொழுது அது பேரித்தம்பழமாக இருந்தாலும் சரி, அவருக்கு அப்போது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது.
அப்படிப்பட்ட மகிழ்ச்சியை நாளை மறுமையிலும் அனுபவிப்பார் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.
அன்பிற்குரியவர்களே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு இந்த ரமலானுடைய மாதத்தைப் பற்றி செல்லும்பொழுது, இதற்கு முந்திய ரமலானில் இருந்து இந்த ரமலான் வரை நீங்கள் செய்த சிறு பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமளானில் இந்த இரவுத் தொழுகையை சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.
ஆகவே, இந்த நோன்பு என்பது வெறும் பசித்து இருப்பதால் தாகித்து இருப்பதால் மட்டுமில்லாமல் நமது உறுதியை நமது இறையச்சத்தை அதிகப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.
சோம்பேறித் தனத்திற்கு காரணமாகவோ அலட்சியத்திற்கு காரணமாகவோ நமது நோன்பை நாம் ஆகிவிடக்கூடாது.
புறம் பேசுவதிலிருந்தும், தவறான காரியங்களில் ஈடுபடுவதில் இருந்தும், நேரங்களை வீணாக சுற்றி கழித்து வீணாக்குவதை விட்டும், நமது ரமலானுடைய மாதத்தை முழுமையாக பாதுகாத்து அல்லாஹ்விடத்தில் நமது இம்மை மறுமை நன்மைக்காக பிரார்த்தனை செய்வோமாக.
அல்லாஹு தஆலா வரக்கூடிய ரமலானில் முஃமின்களுக்கு அருள் புரிந்த ரமலானாக அவருடைய மன்னிப்பு கிடைத்த ரமலானாக பரக்கத் நிறைந்த ரமலானாக இம்மை மறுமை சிறப்புகளை அடைந்த ரமலானாக ஆக்கி அருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ حَدَّثَنِي عُمَارَةُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ قَالَ دَخَلْتُ مَعَ عَلْقَمَةَ وَالْأَسْوَدِ عَلَى عَبْدِ اللَّهِ فَقَالَ عَبْدُ اللَّهِ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَبَابًا لَا نَجِدُ شَيْئًا فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ (صحيح البخاري 4678 -)
குறிப்பு 2)
حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ أَخْبَرَنَا يَزِيدُ بْنُ عَبْدِ رَبِّهِ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ مُحَمَّدِ بْنِ مُهَاجِرٍ عَنْ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْجُرَشِيِّ عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ قَالَ سَمِعْتُ النَّوَّاسَ بْنَ سَمْعَانَ الْكِلَابِيَّ يَقُولُا سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يُؤْتَى بِالْقُرْآنِ يَوْمَ الْقِيَامَةِ وَأَهْلِهِ الَّذِينَ كَانُوا يَعْمَلُونَ بِهِ تَقْدُمُهُ سُورَةُ الْبَقَرَةِ وَآلُ عِمْرَانَ وَضَرَبَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةَ أَمْثَالٍ مَا نَسِيتُهُنَّ بَعْدُ قَالَ كَأَنَّهُمَا غَمَامَتَانِ أَوْ ظُلَّتَانِ سَوْدَاوَانِ بَيْنَهُمَا شَرْقٌ أَوْ كَأَنَّهُمَا حِزْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ تُحَاجَّانِ عَنْ صَاحِبِهِمَا (صحيح مسلم 1338 -)
குறிப்பு 3)
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ عَنْ أَبِي صَالِحٍ الزَّيَّاتِ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ وَالصِّيَامُ جُنَّةٌ وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلَا يَرْفُثْ وَلَا يَصْخَبْ فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ لِلصَّائِمِ فَرْحَتَانِ يَفْرَحُهُمَا إِذَا أَفْطَرَ فَرِحَ وَإِذَا لَقِيَ رَبَّهُ فَرِحَ بِصَوْمِهِ (صحيح البخاري 1771 -)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/