அல்பிர் ~ நன்மை எது ? (அமர்வு 3/3) | Tamil Bayan - 333
அல்பிர் நன்மை எது?
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்பிர் நன்மை எது? – (பகுதி 3-3)
வரிசை : 333
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 2-4-2021 | 20-8-1442
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை முழுமையாக அஞ்சிக் கொள்ளுமாறு, அல்லாஹ்வின் பயத்தை பின்பற்றி வாழுமாறுஉங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை தக்வாவை நினைவூட்டியவனாக ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ்வை பயந்து கொண்டவர்கள் இம்மையில் வெற்றி அடைவார்கள். மறுமையிலும் நிச்சயமாக அவர்களுக்கு வெற்றி உண்டு.
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா சூரத்துல் பகராவில் 177-ஆவது வசனத்தில் நன்மை என்றால் என்ன? அல்பிர் என்ற உயர்ந்த தரத்தை அடைவது எப்படி? என்று அல்லாஹ் கூறியிருக்கக்கூடிய வழிகாட்டுதலை நாம் பார்த்தோம்.
அல்பிர் என்ற உயர்ந்த நன்மையின் தரமானது, அல்லாஹ்வையும், மறுமை நாளையும், வேதங்களையும், தூதர்களையும்ஆழமாக உறுதியாக சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்பிக்கை கொள்வதில் இருக்கிறது.
வெறும் வாய்ப்பேச்சுகளில், திசைகளை முன்னோக்குவதில், பெருமை பேசுவதில்அல்பிர் என்ற நன்மையின் தரம் இல்லை.
மாறாக, அல்லாஹ்வின் மீதுண்டான மறுமையின் மீதுண்டான நம்பிக்கை, வானவர்கள் வேதங்களின் மீதுண்டான நம்பிக்கைஉள்ளத்தில் சரியாக இருக்க வேண்டும் என்ற ஒரு அடிப்படை விஷயத்தை பார்த்ததோடு, அல்லாஹு தஆலா அடியானுடைய இறை வணக்கத்தை இபாதத்தை சோதிப்பதற்காக, அவனுக்கு செல்வம் என்ற ஒரு சோதனையைக் கொடுத்து இருக்கிறான்.
ஒரு மனிதன் மஸ்ஜிதில் தொழுகிறான். அவனைப் பார்க்கும்போது, உள்ளச்சத்தோடு தொழுவதாக நாம் கருதுகிறோம். அவனுடைய ருகூஉ, சுஜூது, அவனது நிலை, மஸ்ஜிதில் அவன் கொடுக்கக்கூடிய நேரம், இவற்றையெல்லாம் வெளியிலிருந்து பார்க்கக்கூடிய நாம், இவர் ஒரு உள்ளச்சம் உடைய மனிதராக இருப்பார் என்பதாக நாம் கருதும் போது, அவருடைய அந்த உள்ளச்சம் என்பது, இது உண்மையில் உள்ள பயமா? இந்த பயம் இவருடைய உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வருகிறதா? என்பதை சோதிப்பதற்கு அல்லாஹு தஆலா செல்வம் என்ற ஒன்றை படைத்திருக்கின்றான்.
அந்த மனிதனை ஏதாவது ஒரு செல்வத்தை கொடுங்கள். அந்த செல்வத்தில் அவன் எப்படி நடந்து கொள்கிறான்? அல்லாஹ் அவனுக்கு கொடுத்த அந்த செல்வத்தை, அதில் அல்லாஹ்வுடைய ஹக்கை பேணுகிறானா?
மஸ்ஜிதில் தொழுகிறான். ஆனால், அல்லாஹ் அவனுக்கு கொடுத்திருக்கின்ற அந்த செல்வத்தில் அல்லாஹ்வுடைய ஹக்கை நிறைவேற்றவில்லை என்றால், இங்கே அவன் தொழுத தொழுகை, இங்கே அவனுடைய அந்த வெளித்தோற்றமான இறையச்சம், இவையெல்லாம் போலியானது.
உண்மை அற்றது. அது ஒரு உயிரற்றது என்பதை வெளிப்படையாக அல்லாஹ் அறிவித்து விடுவதற்காக, இப்படிப்பட்ட ஒரு சோதனையை வைத்திருக்கிறான்.
கண்ணியத்திற்குரியவர்களே! ஆகவேதான், அது அல்பிர் என்ற அந்த உயர்ந்த நன்மையை அடைவதற்கு, ஈமானை அல்லாஹு ரப்புல் ஆலமீன் முதல் நிபந்தனையாக ஏற்படுத்தியதற்கு பிறகு, செல்வத்தில் இவன் எப்படி நடந்து கொள்கிறான் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன், அவனுக்கு ஒரு சோதனையை ஏற்படுத்தினான்.
செல்வம் உனக்கு தேவை. அது நீ சம்பாதித்தது, நீ உழைத்தது, என்று எத்தனையோ காரணங்களை நீ அதை உரிமை கொண்டாடுவதற்கு சொல்லலாம்.
ஆனால், அதற்கு மேலாக அந்த செல்வத்தை கொடுத்தவன் உனது இறைவன் என்பதை நீ மறந்து விடாதே. ஆகவே, நான் விரும்புகிறபடி அந்த செல்வத்தை நீ செலவழிக்கிறாயா? அல்லது நீ விரும்பியபடி அந்த செல்வத்தை செலவழிக்க போகிறாயா?
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த செல்வத்தில் மனிதனுக்கு ஒரு பங்கைக் கொடுத்தான். இன்னொரு பங்கை தனக்கு என்று அல்லாஹ் ஆக்கி இருக்கிறான். எந்த ஒரு மனிதன் தனது செல்வத்தில் அல்லாஹ்வின் பங்கை அறியவில்லையோ, அல்லாஹ்வுடைய ஹக்கை அறியவில்லையோ அவன் அல்லாஹ்விற்கு மோசடி செய்தவன் ஆவான்.
அல்லாஹ் கூறுகிறான் :
وَآتُوهُمْ مِنْ مَالِ اللَّهِ الَّذِي آتَاكُمْ
செல்வத்தை, அல்லாஹ்வுடைய ஹக்கை புரிந்து அதை நீ ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும். தேவையுள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டும். வறியவர்களுக்கு கொடுக்க வேண்டும். (அல்குர்ஆன் 24:33)
ஒவ்வொரு செல்வந்தரை பார்த்து அல்லாஹ் இப்படி சொல்லும் பொழுது, தனது அறிவால் அதை அவன் சம்பாதித்து இருக்கட்டும், தனது உடல் உழைப்பால் சம்பாதித்து இருக்கட்டும், அனுபவத்தால் சம்பாதித்து இருக்கட்டும், அல்லது தந்தை பாட்டன் இடமிருந்து வராசொத்தாக அவன் அந்த செல்வத்தை அடைந்து இருக்கட்டும்,
இப்படிப்பட்ட எல்லா செல்வங்களையும் பார்த்து அல்லாஹ் சொல்கின்றான் :
நான் உங்களுக்கு கொடுத்த எனது செல்வத்திலிருந்து நீங்கள் அந்த ஏழைகளுக்கு கொடுங்கள். (அல்குர்ஆன் 24:33)
மனிதனிடம் அமானிதமாக செல்வம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவன் சம்பாதித்தால், அவனது உறுப்புகள் அதில் பங்கு கொண்டால், அந்த உறுப்புகளை கொடுத்தவன் யார்? அறிவை கொடுத்தவன் யார்? தந்தையிடமிருந்து, பாட்டனிடமிருந்து அந்த சொத்தை வராசத்தாக உனக்கு வழங்கியவன் யார்? அல்லாஹ்.
ஆகவேதான், குர்ஆனை நீங்கள் சிந்தித்து, புரிந்து, பொருளறிந்து படித்திருப்பீர்களேயாயின், எந்த இடங்களில் எல்லாம் அல்லாஹு தஆலா ஜகாத்தை பற்றி சொல்கிறானோ, சதகாவை பற்றி சொல்கிறானோ, அங்கு நான் கொடுத்ததில் இருந்து நீங்கள் கொடுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
அல்லாஹ் ரப்புல் ஆலமின் தான் என்னை செல்வந்தனாக ஆக்கி இருக்கிறான் என்று எவன் உணரவில்லையோ அவன் அல்லாஹ்வின் விதியை நிராகரித்து விட்டான்.
தனது அறிவால் நான் சம்பாதித்தது, எனது திறமையால் நான் சம்பாதித்தது, இது எனது தந்தையின் செல்வம், சொத்தாக எனக்கு கிடைத்தது, என்னுடைய திறமை, என்னுடைய அறிவு, என்னுடைய படிப்பு, என்னுடைய கல்விஎன்று எவன் செல்வத்தை தன்பக்கம் சேர்க்கிறானோ அவன் அல்லாஹ்வை நிராகரித்தவனாக ஆவான்.
ஒவ்வொரு வசனத்திலும் அல்லாஹ் சொல்கிறான்,
اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ
அல்லாஹ் தான் நாடியவருக்கு விசாலமாக கொடுக்கிறான். நாடியவருக்கு சுருக்கி கொடுக்கிறான். (அல்குர்ஆன் 13 : 26)
ஒரு மனிதன் ஏழையாக இருப்பது அவனுடைய அறிவின்மையின் காரணமாக அல்ல. ஒரு மனிதன் செல்வந்தனாக இருப்பது அறிவின் காரணமாக அல்ல.
ஒரு மனிதன் ஏழையாக இருப்பது அவன் சோம்பேறித்தனத்தின் காரணமாக அல்ல. ஒரு மனிதன் செல்வந்தனாக இருப்பது அவனது திறமையால் சுறுசுறுப்பினால் கிடையாது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரழியல்லாஹு அன்ஹுசொல்கிறார்கள். நீங்கள் சுறுசுறுப்பாக உழைப்பதால் அல்லாஹ்வின் தக்தீரில் அல்லாஹ் எழுதியதை விட அதிகமாக சம்பாதித்துவிட முடியாது. நீங்கள் சம்பாதிக்காமல் இருக்கின்ற காரணத்தால் அல்லாஹ் எழுதியதை நீங்கள் தவற விட்டு விடவும் முடியாது.
இப்படி ஒருவன் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால், இந்த ஏற்பாட்டை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவன் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவன் அல்ல.
ஆகவே, பிர் உடைய இரண்டாவது கட்டமாக அல்லாஹ் சொல்லும் போது, செல்வத்தை சொல்கிறான்.
அல்லாஹ் கொடுத்த இந்த செல்வத்தை உனக்கு தேவை இருக்கிறது. அந்த செல்வத்தின் மீது உனக்கு நாட்டம் இருக்கிறது. அனுபவிக்கலாம் என்று நீ விரும்புகிறாய். தவறில்லை, ஆனால், அதற்கெல்லாம் மேலாக நான் கொடுத்த இந்த செல்வத்தில், எனக்கு ஒரு ஹக்கை நீ ஏற்படுத்து.
அந்த ஹக்கை மாற்றார்களின் மதங்களை போன்று கிடையாது. அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் பரிசுத்தமான, நீதமான, நேர்மையான, ஒழுக்கமான இந்த மார்க்கம், அல்லாஹ்வுடைய அந்த ஹக்கை நீ எங்கே கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது என்றால்?
உனது உறவினர்களுக்கு கொடு. உனது தாய் தந்தைக்கு கொடு. உனது சகோதரர்களுக்கு கொடு. உன் சகோதரர்களின் பிள்ளைகளுக்கு கொடு. உன் குடும்பத்தாருக்கு கொடு. ஏழைகளுக்குக் கொடு. வழியில் செல்பவர்களுக்கு கொடு. கேட்டு வருபவர்களுக்கு கொடு. அடிமைகளை உரிமை இடுவதற்கு கொடு.
இப்படி அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஜகாதுக்கு மேலாக சதகா என்று ஒரு கடமையை வைத்திருக்கிறான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இடத்தில் ஒரு தோழர் வருகிறார். அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நிறைய ஒட்டகங்கள் இருக்கின்றன. ஜகாத்தை கொடுத்து விடுகிறேன். இதற்கு மேலும் நான் கடமை செய்ய வேண்டுமா?
ஆம். அதில் ஜகாத் போக மேலும் கடமை இருக்கின்றன. யாராவது தண்ணீர் இறைக்க கேட்டால் அந்த ஒட்டகத்தை கொடு. யாராவது தன் பெண் ஒட்டகத்தை சினை ஆக்குவதற்கு கேட்டால் அதை கொடு. இப்படி யாராவது அந்த ஒட்டகத்தில் பால் மிச்சமாக இருக்கிறது. அதை கறந்து கொள்ளட்டுமா? என்று கேட்கிறார். அவரை கறந்து கொள்வதற்கு நீ அனுமதி கொடு.
இப்படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இஸ்லாமிய மார்க்கத்தில் தர்மத்தை விசாலமாக ஆக்கினார்கள்.
அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா அடுத்து சொல்கிறான் :
பிர் என்ற அந்த உயர்ந்த நன்மை சாதாரணமானது இல்லை. அல்லாஹு தஆலா இந்த மார்க்கத்தில் அவ்வளவு தரங்களை வைத்திருக்கின்றான். பிர் என்ற அந்த உயர்ந்த தரஜாவை அடைவதற்கு அல்லாஹ் சொல்லக்கூடிய அந்த மூன்றாவது நிபந்தனை,
وَأَقَامَ الصَّلَاةَ-அவரிடத்தில் தொழுகை சரியாக இருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2 : 177)
அல்லாஹ்வுடைய இபாதத் சரியாக இருக்கிறதா? ஏனென்றால் சில நேரங்களில் மனிதன் எப்படி செய்கிறான் என்றால், அவனுடைய நஃப்ஸுக்கு அவன் அடிமையாகி விடுகிறான். சில செயல்கள் அவனுக்கு அதிகமாக பிடித்திருக்கும்.
எனவே இதை செய்தால் எனக்கு போதும் என்பதாக அவன் இருந்துவிடுகிறான். சிலருக்கு தர்மம் கொடுப்பதில் அதிக ஈடுபாடு இருக்கும். ஏழைகளுக்கு செய்வதில் அதிக ஈடுபாடு இருக்கும்.
சிலரை நாம் வாழ்க்கையில் பார்க்கிறோம். தொழுகை இருக்காது. இபாதத் இருக்காது. அல்லாஹ்விற்கு முன்னால் சுஜூது செய்ய மாட்டான். முஸ்லிம்களுடன் அவன் மஸ்ஜிதுகளில் வந்து நிற்க மாட்டான்.
அவருக்கு,தொழுகையின் சிறப்பை பற்றி தொழுகையின் முக்கியத்துவத்தை பற்றி சொன்னால்,என்னை அல்லாஹ் தண்டிக்க மாட்டான்,நான் தொழவில்லை என்றால் எந்த பிரச்சினையும் கிடையாது.
காரணம், நான் யாருக்கும் அநியாயம் செய்வது கிடையாது. நான் ஏழைகளுக்கு திருமணம் முடித்து வைக்கிறேன். ஏழைகளுக்கு நான் தர்மம் கொடுக்கிறேன். இப்படி தனது கொடைத்தன்மை, தனது தர்மத்தை காரணமாக சொல்லி, அல்லாஹ் தன் மீது கடமையாக்கிய இபாதத்தை, தொழுகை என்ற இபாதத்தை அவர் அலட்சியம் செய்கிறார்.
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இப்படி ஒரு நடுநிலையற்ற, அல்லாஹ் சொன்ன வழியில் அல்லாஹ்வை வணங்காத ஒரு முறையை, அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவே மாட்டான்.
ஒரு மனிதர் ஏழைகளுக்கு தர்மம் செய்கிறான். அதேநேரத்தில் அல்லாஹ்வுக்கு முன்னால் அவன் சுஜுது செய்ய வில்லை என்றால், அவனுடைய தர்மமும் நாளை மறுமையில் அவனுக்கு பயனளிக்காது.
நிச்சயமாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதற்குரிய கூலியை இம்மையிலேயே கொடுத்து முடித்து விடுவான். நாளை ஆகிரத்தில் அவர் எந்தவிதமான நன்மையையும் அடைய முடியாது.
அல்லாஹு தஆலா இந்த தீனை நமக்கு புரிய வைக்கும் போது, எப்படி அவன் விளக்குவான்? என்றால், சில நேரங்களில் மிக முக்கியமானதை கடைசியில் சொல்வான் முஸ்தஹப்பான காரியத்தை முதலில் சொல்வான்.
அதனால் நாம், முந்தி சொல்லப்பட்டது அதிக முக்கியத்துவம், கடைசியில் சொல்லப்பட்டால் முக்கியத்துவம் குறைவு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் எந்த இடத்தில் எதை முதலில் சொல்ல வேண்டுமோ அதை சொல்வான்.
இந்த இடத்தில் அல்லாஹு சுப்ஹானஹு தஆலா தொழுகை, அதாவது ஈமானை சொன்னதற்குப் பிறகு உபரியான சதகாவை இரண்டாவதாக சொன்னான். நஃபிலான சதகாவை அல்லாஹ் இரண்டாவதாக சொன்னான். மூன்றாவதாக, பர்ளான தொழுகையை அல்லாஹ் சொல்கிறான்.
ஆகவே,யாரும் இப்படி தவறாக புரிந்துகொள்ளக்கூடாது, தொழுகையின் முக்கியத்துவம் இவ்வளவுதான் என்று.
தொழுகையை நிலை நிறுத்த வேண்டும். இந்த தொழுகையோடு ஜகாத்தையும் அல்லாஹ் சேர்க்கிறான். (அல்குர்ஆன் 2 : 177)
இன்று, முஸ்லிம்களில் பலர், தொழுகையின் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்கின்றஎத்தனையோ நல்ல தொழுகையாளிகள், தனது தொழுகைக்காக நேரங்களை ஒதுக்ககூடிய நல்ல தொழுகையாளிகள் பலர், ஜகாத் என்று வரும்போது அவர்கள் கைகள் இருகிக் கொள்கின்றன.
அவர்களது மனம் இறுகிக் கொள்கிறது. ஏழைகளை பார்த்தால், ஜகாத் கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டால் அவர்களுக்கு உள்ளத்தில் ஏதோ ஒரு நெருக்கடி ஏற்பட்டு, உலகமே இருண்டதை போன்று அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எப்படி இந்த ஜகாத்திலிருந்து, இந்த கடமையிலிருந்து தப்பிப்பது? என்பதாகக் கூட பலர் யோசிக்கிறார்கள். அதற்காக தந்திரங்களை செய்கிறார்கள்.
முந்திய காலத்தில் ஒரு கூட்டம் இருந்தார்கள். அவர்கள் பெரிய செல்வந்தர்கள், அந்த வருடம் முடியும்போது அந்த செல்வத்தை எல்லாம் தனது மனைவிக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுவார்கள்.
ஏன்? ஒரு பொருள் ஒரு வருடம் முழுமையாக இருந்தால் ஜகாத் கடமை. எனவே தந்திரமாக, அந்த பதினோறு மாதம் கணக்கு வரும்பொழுது அந்த செல்வத்தை தனது மனைவிக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுவார்கள்.
அடுத்து, அந்த மாதம் முடிந்த பிறகு, ஒரு மாதம், இரண்டு மாதம் கழித்து, தான் கொடுத்த அன்பளிப்பை திரும்ப கொடுத்து விடு என்று நிர்பந்திப்பார்கள். அதை அன்பளிப்பாக திரும்பப் பெற்றுக் கொள்வார்கள்.
இப்படி அவர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைத்தார்கள். ஆனால், அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகிறார்கள்.
இந்த தந்திரம் செய்பவர்களுக்கு இருக்கக்கூடிய அந்த தண்டனை, சாதாரணமான மனஇச்சையில் ஒருவர் குற்றம் செய்பவனுக்கு இருக்கக்கூடிய தண்டனையை விட பயங்கரமான தண்டனை, தந்திரம் செய்பவனுக்கு இருக்கும்.
சனிக்கிழமைவாசிகள் என்று ஒரு கூட்டம் இருந்தார்கள். அவர்கள் செய்த பாவம் என்ன தெரியுமா? அல்லாஹ் தடுத்த அந்த நாளில் நாங்கள் மீன் பிடிக்கவில்லை. ஆனால் அதற்குரிய ஏற்பாட்டைச் செய்கிறோம்.
மீனை நாங்கள் தொடவில்லை என்பதாக தந்திரம் செய்தார்கள். அல்லாஹு சுப்ஹானஹு தஆலா உலக மக்களில் பாவம் செய்த எவரையும் அந்த அளவு தண்டிக்கவில்லை, அந்த அளவு அவர்கள் மீது சாபத்தை இறக்கவில்லை, இந்த சனிக்கிழமைவாசிகள் மீது அல்லாஹ் இறக்கியது போன்று.
லூத் அலைஹிஸ்ஸலாம்கூட்டம் அழிக்கப்பட்டார்கள். ஆது, சமூதுடைய கூட்டம் அழிக்கப்பட்டார்கள். சப்தத்தைக் கொண்டு, இடியைக் கொண்டு, நெருப்பைக் கொண்டு அழிக்கப்பட்டு முடிக்கப்பட்டு விட்டார்கள். அவர்களது காரியம் முடிந்தது.
ஆனால், அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் தந்திரம் செய்து, ஹராமை ஹலால் ஆக்குவதற்காக இவர்கள் செய்த இந்த பாவத்திற்கு அல்லாஹ் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா, மட்டமான கேவலமான குரங்குகளாக நீங்கள் மாறிவிடுங்கள்.
அந்த மீன் பிடித்தவர்களும், அதற்கு தந்திரம் செய்தவர்களும், அதை தடுக்காமல் இருந்த அந்த கூட்டத்தார் அனைவரும் குரங்குகளாக மாற்றப்பட்டார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக. (அல்குர்ஆன் 2 : 65)
கண்ணியத்திற்குரியவர்களே! இந்த ஜகாத் என்பது சாதாரணமான ஒரு விஷயம் இல்லை.இந்த ஜகாத்துடைய முக்கியத்துவத்தை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள், அல்லாஹ் மூன்று அமல்களை மூன்று அமல்களோடு சேர்த்து இருக்கிறான். புரிந்துகொள்ளுங்கள்! அந்த மூன்று அமல்கள் அல்லாஹ்விடம் இருந்து அதனுடன் இணைக்கப்பட்ட அமலை கொண்டே தவிர ஏற்றுக் கொள்ளப்படாது.
சிலர் என்ன பேசுகிறார்கள்? கீழ்ப்படிவதில், கட்டுப்படுவதில், அல்லாஹ்வுக்கு அதிக முக்கியத்துவம். அல்லாஹ்வுடைய வேதத்திற்கு அதிக முக்கியத்துவம். குர்ஆனில் இருந்தால் கண்டிப்பாக அதை ஏற்றுக்கொள்வோம்.
ஹதீஸில் இருந்தால், ரசூலுல்லாஹ் சொல்லி இருந்தால், அதை நாங்கள் பார்ப்போம். அதை நாங்கள் சிந்திப்போம். ஒருவர் அறிவிக்கிறாரா? இரண்டு பேர் அறிவிக்கிறார்களா? அது குர்ஆனுக்கு முரண்படுகிறதா? இஸ்லாமிய அடிப்படைக்கு முரண்படுகிறதா? என்று இவர்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்ததற்கு பிறகு ரசூலுல்லாஹ் உடைய ஹதீஸை பின்பற்றலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்வார்கள்.
ஆனால் அப்படி அல்ல. அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவது என்றால் நபிக்கு கட்டுப்படாமல் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டவராக ஆக முடியாது. மிகத் தெளிவாக, ஆணித்தரமாக, அழுத்தமாக அல்லாஹ் சொல்கின்றான்.
مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ
ரசூலுக்கு யார் கட்டுப்படுகிறாரோ அவர்தான் அல்லாஹ்விற்கு கட்டுப்பட முடியும். அவர்தான் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவராக ஆகுவார். (அல்குர்ஆன் 4 : 80)
வணங்குவது, வழிபடுவது என்பது அல்லாஹ்வுக்கு மட்டும் தான். ஆனால்,கீழ்படிவது, கூற்றை அங்கீகரிப்பது, கட்டளையை ஏற்று நடப்பதுஎன்று வரும்பொழுது அல்லாஹ் சொன்னது ரசூல் சொன்னது என்று தனியாக பிரிக்க முடியாது.
அடுத்து இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள், ஸகாத்தை நிறைவேற்றாமல் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது.
ஒரு மனிதன் இரவுத் தொழுகையை தொழுகிறான். ஒரு மனிதன் சுன்னத் தொழுகையை தொழுகிறான். நஃபிலை, ஃபர்ளை தொழுகிறான். ஆனால்,அல்லாஹ் அவனுக்கு செல்வத்தைக் கொடுத்திருக்க, அந்த செல்வத்தில் ஜகாத்தை கடமையாக்கி இருக்க, அவன் ஜகாத்தை நிறைவேற்றவில்லை என்றால் தொழுகையே அங்கீகரிக்கப்படாது. தொழுதும் எந்த நன்மையும் இருக்காது.
மேலும் சொன்னார்கள், நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ளவராக இருக்க வேண்டுமா? பெற்றோருக்கு நன்றி உள்ளவராக இல்லாமல், உங்களை பெற்றெடுத்த தாய் தந்தைக்கு நீங்கள் நன்றி செலுத்தாமல், அவர்களுக்கு நீங்கள் உபகாரம் செய்யாமல், நீங்கள் அல்லாஹ்விற்கு நன்றி உள்ளவராக ஆகமுடியாது.
கண்ணியத்திற்குரியவர்களே! ஜகாத்தை பற்றி அல்லாஹ் எப்படி எல்லாம் சொல்கிறான் பாருங்கள்!
சில இடங்களில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஜகாத்தை பற்றி சொல்லும் பொழுது, நீங்கள் இந்த ஜகாத்தை கொண்டு எனக்கு கடன் கொடுக்கிறீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
இந்த உலகத்தில் கடன் கொடுத்தால் திருப்பி கொடுப்பவர்கள் மிகப் பெரிய பாக்கியவான்களாக, மிகப்பெரிய சிறந்தவர்களாக கருதப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
ஏனென்றால்,இன்றைய காலம் எப்படி இருக்கிறது என்றால், அல்லாஹ் பாதுகாப்பானாக!கடன் வாங்கும்போது அவனிடத்தில் இருக்கக் கூடிய அந்த மனப்பக்குவம், கடன் வாங்கிய பிறகு முற்றிலுமாக மாறி விடுகிறது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிகச்சிறந்த அழகிய முன்மாதிரியை நமக்கு காட்டி தந்தார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஒரு யஹூதி இடத்தில் கடன் வாங்கி இருந்தார்கள். அந்த கடனை நிறைவேற்றுவதற்கு இன்னும் இரண்டு மூன்று அல்லது நான்கு நாட்கள் மீதம் இருக்கின்றன.
ஆனால், அந்த தவணைக்குள் அந்த யூதன் ரஸூலுல்லாஹ்விடம் வந்து ரஸூலுல்லாஹ்வின் சட்டையை பிடித்து, ஓ குறைஷிகளே! அப்துல் முத்தலிப் உடைய மகனே! இவ்வளவு காலதாமதம் செய்து கொண்டிருக்கிறாயே! என் கடனை கொடு நீங்கள் செய்வது சரியா?என்று முரட்டுத்தனமாக கேட்கிறார்.
ஆனால்,கடன் கொடுப்பதற்கு உண்டான அந்தத் தவணை இன்னும் வரவில்லை. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அமைதியாக இருக்கிறார்கள்.
அந்த யஹூதியை வரவேற்று அமர வைக்கிறார்கள். இங்கே உமர் கடினமாக அந்த யஹூதி இடத்தில் பேச நினைக்கிறார். பேசியும் விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமரை சாந்தப்படுத்துகிறார்கள். அமைதிப்படுத்துகிறார்கள்.
உமரே! இப்படி நீ கடிந்து கொள்வது சரியல்ல. அந்த யஹூதிக்கு முன்னால், தங்களது தோழர்களுக்கு முன்னால் அல்லாஹ்வுடைய தூதர் உமரிடத்தில் சொல்லக்கூடிய அந்த அறிவுரையைப் பாருங்கள்.
உமரே! நீ என்ன செய்ய வேண்டும்? என்னை பார்த்து,அல்லாஹ்வின் தூதரே! கடன் வாங்கினால் அந்த கடனை அழகிய முறையில் கொடுத்துவிடுங்கள் என்று.எனக்கு கட்டளை கொடு.
அடுத்து சொன்னார்கள், அந்த யஹூதி இடத்தில் நீ இப்படிச் சொல்;அழகிய முறையில் உனது கடனை நீ பெற்றுக் கொள் என்று.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லக்கூடிய பணிவை பாருங்கள். அந்த அழகிய பண்பாட்டை பாருங்கள். இது ஒரு நீண்ட சம்பவம்,இறுதியில் என்ன நடக்கிறது?
ஜைது இப்னு சஅனா என்ற அந்த யூதர் இந்த சம்பவம் முடியும் போது,கலிமா சொல்கிறார். இதை தெரிந்து கொள்வதற்குத்தான் நான் இப்படி கடினமாக நடந்து கொண்டேன். நபியிடம் கடினமாக நடக்க வேண்டும் என்பது எனக்கு நோக்கமில்லை.
நான் முஸ்லிம்களை, உம்மத்தை, உம்மத்துடைய நபியை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி சோதித்தேன் என்று கூறி ஷஹாதாவை சொல்கிறார்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 5147.
அல்லாஹ் சொல்கிறான்.
مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً وَاللَّهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ
(சிரமத்தில் இருப்பவர்களுக்கு தர்மம் கொடுப்பதன் மூலம்) அழகான முறையில் அல்லாஹ்விற்கு கடன் கொடுப்பவர் யார்? அதை அவன் அவர்களுக்கு பன்மடங்கு அதிகரிக்கும்படிச் செய்வான். அல்லாஹ் (பொருளை சிலருக்குச்) சுருக்கியும் கொடுப்பான். (சிலருக்குப்) பெருக்கியும் கொடுப்பான். இன்னும், அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 2:245)
இன்று,சிலர், ஏழைகளிடம் இருந்து அடமானத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு கொடுக்கக்கூடிய அந்த வட்டியில்லாத கடனை قَرْضًاحَسَنًاஎன்று சொல்கிறார்கள்.
அல்குர்ஆன் அதை சொல்லவில்லை. கொடுக்கப்பட்ட கடன் திரும்ப வாங்க படாமல் அவருக்கு உரிமையாக்கி வைக்கப்பட்டதை தான் قَرْضًاحَسَنًاஎன்று அல்லாஹ் சொல்கிறான்.
அடுத்து,இந்த ஜகாதிற்கு அல்லாஹ் சொல்லக்கூடிய மகிமை என்ன தெரியுமா?
قُلْ إِنَّ رَبِّي يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَهُ وَمَا أَنْفَقْتُمْ مِنْ شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ
(நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு அதிகமான வாழ்வாதாரத்தைக் கொடுக்கிறான்; தான் விரும்பியவர்களுக்கு குறைத்து விடுகிறான். ஆகவே, நீங்கள் எதை தானம் செய்தபோதிலும் அவன் அதற்குப் பிரதி கொடுத்தே தீருவான். அவன் கொடையளிப்பவர்களில் மிக்க மேலானவன்.(அல்குர்ஆன் 34 : 39)
மனிதன் ஏன் நெருக்கடிக்கு, கஞ்சத்தனத்திற்கு ஆளாகிறான்? ஒரு கோடியிலிருந்து இரண்டரை லட்சத்தை நாம் கொடுத்தால் என்ன ஆவோம்? இதை வைத்து நாம் என்ன செய்யலாம்?என்றெல்லாம் அவன் திக்கு தடுமாறிக் கொண்டிருக்க கூடிய நேரத்தில், இந்த வசனத்தை அவன் சிந்தித்துப் பார்க்கட்டும்.
நீ கொடு,அல்லாஹ் உனக்கு திரும்ப கொடுப்பான். எப்படிக் கொடுப்பான்? நீ கொடுத்ததை விட அதிகமாக கொடுப்பான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சொன்னார்கள்,
مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ وَمَا زَادَ اللَّهُ عَبْدًا بِعَفْوٍ إِلَّا عِزًّا وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ اللَّهُ
நீங்கள் கொடுக்கின்ற தர்மத்தால் செல்வம் குறையாது. நீங்கள் மன்னித்தால் அல்லாஹ் உங்களுக்கு கண்ணியத்தை தான் அதிகப்படுத்துவான். நீங்கள் பணிந்தால் அல்லாஹ் உங்களுக்கு உயர்வை தான் அதிகப்படுத்துவான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 4689.
கண்ணியத்திற்குரியவர்களே! இந்த ஜகாத்தை ஏதோ கடைசி உம்மத்தாகிய நமக்கு மட்டும் அல்லாஹ் கடமையாக்கவில்லை. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்து, அல்லாஹ் கட்டளைகளைக் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து, நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிலிருந்து ஷரியத்தின் சட்டங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கடமையாக்கியதிலிருந்து, இந்த ஜகாத்தை அல்லாஹ்வுடைய ஷரியத்தில் பிரிக்க முடியாது.
ஒரு இபாதத்தாக, கட்டாய கடமையாக ஆக்கியிருக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான் :
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ
(எனினும், அவர்கள்) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, மற்ற மார்க்கங்களைப் புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே தவிர, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) அவர்களுக்கு ஏவப்படவில்லை. (இது, அவர்களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம். (அல்குர்ஆன் 98:5)
அல்லாஹு தஆலா நபிமார்களைப் பற்றி கூறுகிறான் :
وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ
மேலும், நம் கட்டளைகளை (மக்களுக்கு) ஏவி நேரான வழியை அறிவிக்கக்கூடிய தலைவர்களாகவும் அவர்களை ஆக்கினோம். நன்மையான காரியங்களைச் செய்யுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ‘ஜகாத்' கொடுத்து வருமாறும் அவர்களுக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். அவர்கள் அனைவரும் நம்மையே வணங்கிக் கொண்டிருந்தார்கள். (அல்குர்ஆன் 21:73)
மக்களுக்கு நன்மைகளை செய்து கொண்டே இருங்கள். இன்று சிலர்,யார் எப்படி கெட்டால் என்ன? எப்படி இருந்தால் என்ன? எந்த பிரச்சினையில் இருந்தால் என்ன? எங்களுக்கு அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை என்று சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
நாங்கள் பேசினால் வானத்திற்கு மேல் உள்ளதை பேசுவோம். நாங்கள் பேசினால் மண்ணுக்குக் கீழே உள்ளதை பேசுவோம். இதை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. முஸ்லிம்களுக்கு எங்கே என்ன நடந்தால் என்ன? எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தால் என்ன? ஆபத்துகள் வந்தால் என்ன? அதை பற்றி எல்லாம் நாங்கள் பேசவேண்டிய அவசியம் இல்லை என்பதாக சிலர் சொல்வார்கள்.
அது என்னமோ இறையச்சத்தின் உச்சமாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ் அப்படி சொல்லவில்லை.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :
ومن لم يهتم بالمسلمين فليس منهم
முஸ்லிம்களின் காரியத்தை பற்றி அவர் அக்கறை கொள்ளவில்லை என்றால், முஸ்லிம்களை சேர்ந்தவரே அல்ல.
அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : தப்ரானி,எண் : 478, 7473.
ஒரு முஸ்லிமுக்கு வேதனை ஏற்படும் பொழுது, அவருடைய உடலிலோ பொருளிலோ ஒரு தீங்கு ஏற்படும் போது, அந்த முஸ்லிமுக்கு உதவவில்லை என்றால், எங்கே இவனுக்கு உதவி தேவையென்று நிர்பந்தமாக விரக்தியாக இருப்பாரோ, அந்த இடத்தில் அல்லாஹ் இவனைக் கைவிட்டு விடுவான்.
கண்ணியத்திற்குரியவர்களே! இந்த விஷயத்தில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். அடுத்து அல்லாஹ் சொல்கிறான், அந்த நபிமார்களுக்கு அல்லாஹ் கொடுத்த கட்டளையில்,
தொழுகையை சரியாக நிலை நிறுத்துங்கள்.ஜகாத்தை கொடுத்து வாருங்கள். (அல்குர்ஆன் 21:73)
எல்லா இறைத் தூதர்களுக்கும் இந்த கடமையை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் இப்படி புகழ்கிறான்.
وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِنْدَ رَبِّهِ مَرْضِيًّا
தொழுகையைக் கடைப்பிடிக்கும்படியும், ஜகாத்தும் கொடுத்து வரும்படியும் அவர் தன் குடும்பத்தினரை ஏவிக்கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விரும்பப்பட்டவராகவும் இருந்தார். (அல்குர்ஆன் 19:55)
இன்று,நமது நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எந்த அளவு தனது மனைவி பிள்ளைகளின் தொழுகை விஷயத்தில் ஒரு குடும்பத்தலைவர் அக்கறையோடு இருக்கிறார் என்று.
எல்லா விஷயத்திலும் விசாரிப்பார். எல்லா விஷயத்திலும் கருத்தாக கண்காணிப்பாக இருப்பார். ஆனால்,தொழுகை என்று வந்துவிட்டால்,தனது குடும்பத்தார்கள் விஷயத்தில் அவ்வளவு அலட்சியமாக இருப்பார்.
அல்லாஹ் சொல்கிறான்;இதுவல்ல இறைதூதர்களின் பண்பாடு. நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு ஃபோன் செய்து உணவு தயாராகி விட்டதா? உணவு அனுப்பி விட்டீர்களா? என்று கேட்கக்கூடிய அதே நேரத்தில்,அது தொழுகை நேரமாக இருக்குமேயானால், தொழுது விட்டீர்களா? என்று கேட்க மறந்து விடாதீர்கள்.
இல்லை என்றால்,தொழுகையை நீங்கள் நிலை நிறுத்துங்கள்;சீக்கிரமாக தொழுங்கள்;அமைதியாக தொழுங்கள்;பொறுமையாக தொழுங்கள் என்று அவர்களுக்கு உபதேசம் செய்ய மறந்து விடாதீர்கள்.
எத்தனையோ செல்வந்தர்கள் ஒரு குடும்பத்தில் இருக்கிறார்கள். அண்ணன், தம்பி, சகோதரன் என்றும் குடும்பத்தில் எத்தனையோ செல்வந்தர்கள் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு மத்தியில் எல்லா விஷயங்களைப் பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. ஆனால்,ஒரு சகோதரன் குடும்பத்தில் பொறுப்பாக இருப்பவர், இன்னொருவரிடத்தில் உன்னுடைய ஜகாத்தை கொடுத்து விட்டாயா? நீ அதை கணக்கு பார்த்து விட்டாயா? எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை எடுத்து விட்டாயா? உனக்கு ஏதாவது செல்வம் பற்றாக்குறையாக இருக்கிறதா? நான் உனக்கு தரட்டுமா? என்று பொறுப்பு கொள்ளக் கூடியவர்கள் எத்தனைபேர்!?
அல்லாஹ் தஆலா இதைத்தான் சொல்கிறான். இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் எப்படிப்பட்டவர்கள்! தனது குடும்பத்திற்கு தொழுகையை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். ஜகாத்தை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
இதனால் அவர்கள் அல்லாஹ்விடத்தில் அடைந்த நன்மை என்ன? மிகப்பெரிய பொருத்தத்திற்குரிய ஒரு தரஜாவை அவர் அடைந்தார்.
இன்று காலம் எப்படி மாறிக்கொண்டு இருக்கிறது என்றால், ஒரு குடும்பத்தில் இருப்பார்கள். அண்டை வீட்டார்களாக இருப்பார்கள். உறவுக்குள் இருப்பார்கள். சகோதரர்களாக இருப்பார்கள்.
ஆனால்,தனது சகோதரனுடைய உலக விஷயங்களில் எல்லாம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்கள், தீன் என்று வந்துவிட்டால் அது அவர்களுடைய விருப்பம் என்று விட்டுவிடுவார்கள்.
துன்யாவின் விஷயத்தில் அக்கறை செலுத்துவார்கள். இன்கம்டாக்ஸ்காரர் வருகிறார். அங்கே அப்படி நடந்து விடும். இதை நீ இப்படி செய்து கொள். அதை இப்படி செய்து கொள் என்று துன்யாவில் செல்வத்தை பாதுகாப்பதற்கு ஆயிரம் ஆலோசனைகள் சொல்வார்கள்.
ஆனால்,அல்லாஹ்வுடைய ஹக்கை நிறைவேற்றுவதற்கு, நீ இந்த முறை ஜகாத்தை கொடுத்து விட்டாயா? கணக்கு பார்த்து விட்டாயா? உனக்கு என்ன பிரச்சனை? என்று குடும்பத்தில் எத்தனை பேர் தன்னுடைய உறவினர்களுக்கு தன்னுடைய குடும்பத்தார்களுக்கு அல்லாஹ்வின் ஹக்கு விஷயத்தில் உபதேசம் செய்கிறார்கள்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி சொல்கிறான்,
وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنْتُ وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا
நான் எங்கிருந்தபோதிலும் அவன் என்னை மிக்க பாக்கியவானாகவே ஆக்குவான். நான் வாழும்வரை தொழுகையைக் கடைப்பிடித் தொழுகும்படியும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்திருக்கிறான். (அல்குர்ஆன் 19:31)
இன்று,நாம் நமது குழந்தைகளை தர்மத்தில் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறோமா? அவர்கள் கையில் ஒரு நூறை கொடுத்து, ஒரு ஐம்பதை கொடுத்து, ஒரு பத்தைக் கொடுத்து, இதை சென்று ஏழைக்கு தர்மம் செய்து கொண்டு வா என்று பழக்கப்படுத்துகிறோமா?
ஆனால், இன்று பார்க்கிறோம்; எந்த குழந்தைகள் தனது தாய் தந்தை தர்மம் செய்யாமல் இருப்பதை பார்க்கிறார்களோ, அந்த குழந்தை தன் தாய் தந்தையை விட மிக கருமிகளாக இறுக்கம் உள்ளவர்களாக மாறுவதை பார்க்கிறோம்.
கண்ணியத்திற்குரியவர்களே! இது ஒரு சாதாரண விஷயமல்ல. அல்லாஹு தஆலா சூரத்துத் தவ்பாவில் 11-வது வசனத்தில் சொல்லக்கூடிய கட்டளையை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், ஜகாத் கொடுக்காதவருக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் எந்த பங்கும் இல்லை என்று அல்லாஹ் சொல்கிறான்.
فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَنُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
அவர்கள் (தங்கள் நிராகரிப்பிலிருந்து விலகி அல்லாஹ்விடம்) மன்னிப்புக்கோரி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வந்தால் (அவர்கள்) உங்கள் மார்க்க சகோதரர்களே. அறிவுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை (இவ்வாறு) விவரிக்கிறோம். (அல்குர்ஆன் 9:11)
என்ன கருத்தை அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்கிறான்? ஒரு மனிதன் ஷிர்கிலிருந்து வெளியேறியதற்கு பிறகு, தொழுகையை நிறைவேற்ற வில்லை என்றால், ஜகாத்தை அவன் கொடுக்கவில்லை என்றால், அவனை மார்க்க சகோதரனாக ஏற்றுக் கொள்ள முடியாது.
இதைத்தான் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு, ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வஃபாத்திற்கு பிறகு நிறைவேற்றினார்கள்.
ஒரு கூட்டம், ரசூலுல்லாஹ் மரணித்த பிறகு, இனி நாம் ஸகாத்தை கலீஃபாவிடத்தில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் விரும்பினால் கொடுக்கலாம். விரும்பவில்லை என்றால் கொடுக்க தேவையில்லை என்று சொன்னார்கள்.
இன்னொரு கூட்டம், ஜகாத் என்பது ரசூலுல்லாஹ் உயிரோடு இருக்கும்போது தான் முஸ்லிம்களின் மீது கடமை. ரசூலுல்லாஹ் மரணித்துவிட்டார்கள். இனி செல்வத்தில் எந்த ஒரு கடமையும் இல்லை என்று சொன்னார்கள்.
அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கூற்றை இமாம் புகாரி பதிவு செய்கிறார்கள்.
وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ
யார் தொழுகை தனி, ஜகாத் தனி என்று பிரிக்கிறார்களோ அவர்களிடத்தில் நான் போர் செய்வேன்.(1)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1312, 7284.
ரசூலுல்லாஹ்வின் காலத்தில் ஒரு ஒட்டகத்தை அல்லது ஒட்டகத்தின் கயிறை ஜகாத்தாக ஒருவர் கொடுத்துக்கொண்டிருந்து, அதை இப்போது என்னிடத்தில் கொடுக்க மறுத்தால் அதற்காக நான் அவர்களிடத்தில் போர் செய்வேன் என்று கூறி போர் செய்து காட்டினார்கள். மறுத்தவர்களை கொன்றார்கள். அவர்களில் பெண்களையும் சிறுவர்களையும் அடிமையாக்கி மதீனாவிற்கு கொண்டு வந்தார்கள்.
இப்படித்தான்! மார்க்கம் நமக்கு கட்டளையிடுகிறது. நாளை மறுமையில் ஜகாத் கொடுக்காதவருடைய நிலைமை என்ன தெரியுமா? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லக்கூடிய ஹதீஸை இமாம் புகாரி பதிவு செய்கிறார்கள்.
யாருக்கு அல்லாஹ் செல்வத்தை கொடுத்து அதற்குரிய ஸகாத்தை நிறைவேற்றவில்லையோ, அந்த ஜகாத்துடைய செல்வம் தங்கமாக இருக்கட்டும், வெள்ளியாக இருக்கட்டும், அந்த செல்வம் ஒரு பெரிய விஷமுள்ள ஒரு மலைப் பாம்பாக மறுமையில் அவனுக்கு கொண்டுவரப்படும்.
அந்த மலைப்பாம்பை பற்றி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி சொல்கிறார்கள்? கடுமையான விஷத்தின் காரணமாக அந்தப் பாம்பின் உடைய தலையில் எந்தவிதமான ரோமங்களும் இருக்காது. அதனுடைய விஷத்தின் கடுமையின் காரணமாக இரண்டு கரும்புள்ளிகள் அதனுடைய தலையின் மீது இருக்கும். அந்தப் பாம்பு இவருடைய வாயைக் கவ்விக் கொள்ளும்.
மேலும் அது சொல்லும்,
நான்தான் நீ சேர்த்து வைத்த செல்வம். நான் தான் உன்னுடைய செல்வம் என்று அவனைத் தீண்ட ஆரம்பிக்கும். மஹ்ஷரில் அவன் நிற்க்கும்போது.
அடுத்து நரகத்திற்குள் அவன் அனுப்பப்பட்டால், அங்கே உள்ள தண்டனை பயங்கரமானது.
இதை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிவிட்டு ஆல இம்ரானுடைய 180-ஆவது வசனத்தை ஓதி காட்டுகிறார்கள்.
وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرًا لَهُمْ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
எவர்கள், அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லது என்று எண்ணிவிட வேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். வானங்கள் பூமியின் வாரிசுரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 3:180)
கண்ணியத்துக்குரியவர்களே! யார் ஜகாத் கொடுக்காமல் இருக்கிறார்களோ, அவர்களைப் பற்றி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கூற்றை பார்க்கிறோம்.
«مانع الزكاة يوم القيامة في النار»
ஜகாத்தை தராமல் யார் தடுத்து வைத்திருக்கிறானோ நாளை மறுமையில் அவன் நரகத்தில் இருப்பான். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்மை பாதுகாப்பானாக.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : தப்ரானி, எண் : 934.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை அழைத்துக் கூறுகிறான் :
هَا أَنْتُمْ هَؤُلَاءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ فَمِنْكُمْ مَنْ يَبْخَلُ وَمَنْ يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَنْ نَفْسِهِ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنْتُمُ الْفُقَرَاءُ وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ
(மக்களே!) நீங்கள் நன்கு கவனத்தில் வையுங்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய அழைக்கப்படும் சமயத்தில், கஞ்சத்தனம் செய்பவரும் உங்களில் இருக்கிறார். அவ்வாறு எவரேனும் கஞ்சத்தனம் செய்தால், அவர் தனக்குக் கேடாகவே கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ்வோ தேவையற்றவன். நீங்கள் தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். (அவனுடைய கட்டளைகளை) இன்னும் நீங்கள் புறக்கணித்தால், (உங்களை அழித்து) உங்களை அல்லாத மக்களை (உங்கள் இடத்தில்) மாற்றி (அமைத்து) விடுவான். பின்னர், அவர்கள் உங்களைப் போல் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் 47 : 38)
கண்ணியத்திற்குரியவர்களே! முஸ்லிம்களுடைய தேவை இருக்கிறது. அல்லாஹ்வுடைய தீனுடைய தேவையிருக்கிறது. அல்லாஹ்வுடைய சோதனை இன்று முஸ்லிம்களின் மீது மழையாக பொழிவதற்குரிய ஒரு காரணத்தை, ஹதீஸின் வெளிச்சத்தில் நாம் பார்த்தோமேயானால், முஸ்லிம்கள் தங்களுடைய ஜகாத்தை சரியாக கொடுக்காமல் இருப்பதும், ஜகாத்தின் விஷயத்தில் முஸ்லிம்கள் செய்யக்கூடிய அலட்சியமும், அவர்களுடைய சோதனைக்கு எதிரிகள் அவர்கள் மீது சாட்டப்படுவதற்கு, அவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை மார்க்க ஆதாரங்களின் வழியாக நாம் தெரிந்து கொள்கிறோம்.
அல்லாஹ்வை நமது வணக்க வழிபாடுகளிலும், அல்லாஹ் கொடுத்த செல்வத்திலும் பயந்து கொள்வோமாக. அல்லாஹ் விரும்பிய விதத்தில் அல்லாஹ்வுடைய செல்வத்தை செலவழிப்பதற்கும், அந்த செல்வத்தை ஏழை எளியவர்களுக்கு கொடுத்து அல்லாஹ்வுடைய நன்மையை அடைவதற்கும் அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் அருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ الْحَكَمُ بْنُ نَافِعٍ أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ عَنْ الزُّهْرِيِّ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَفَرَ مَنْ كَفَرَ مِنْ الْعَرَبِ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَهَا فَقَدْ عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ فَقَالَ وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ قَدْ شَرَحَ اللَّهُ صَدْرَ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ (صحيح البخاري 1312 -)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/