HOME      Khutba      அல்பிர் ~ நன்மை எது ? (அமர்வு 2/3) | Tamil Bayan - 333   
 

அல்பிர் ~ நன்மை எது ? (அமர்வு 2/3) | Tamil Bayan - 333

           

அல்பிர் ~ நன்மை எது ? (அமர்வு 2/3) | Tamil Bayan - 333


அல்பிர் நன்மை எது?

ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்பிர் நன்மை எது? பகுதி - 2

வரிசை : 333

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 13-06-2014 | 15-08-1435

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வின் அச்சத்தை கடைப்பிடிக்குமாறு, அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை பயந்தவர்களாக, அல்லாஹ்வுடைய ஷரீஅத்தை பின்பற்றியவர்களாக வாழும்படி எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு தஆலா அல்பிர் என்ற உயர்ந்த ஒரு தரஜாவை வைத்திருக்கின்றான். அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் நிறைய படித்தரங்கள் இருக்கின்றன. அந்த படித்தரங்களில் ஒன்றுதான், அல்பிர் என்ற உயர்ந்த படித்தரம்.

احسان-இஹ்ஸான் என்ற படித்தரத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அது போன்று عمل صالح-அமலுன் ஸாலிஹுன் என்ற ஒரு தரஜாவை அறிந்திருப்பீர்கள்.

அதுபோன்றுதான், அல்பிர் என்ற ஒரு தரஜா. அதாவது, நன்மையின் ஒரு உச்ச நிலையை குறிப்பிடக் கூடிய ஒரு வார்த்தை.

எல்லாவிதமான நன்மைகளும் சேர்ந்து, அதாவது, அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய நன்மைகள், அல்லாஹ்வின் கட்டளைப்படி அடியார்களுக்கு செய்ய வேண்டிய நன்மைகள், இவை அனைத்தையும் ஒருங்கே தன்னில் பொதிந்திருக்கக்கூடிய வார்த்தைதான் அல்பிர் என்ற உயர்ந்த வார்த்தை.

அல்லாஹு தஆலா அதைத்தான் பின்வரும் வசனத்தில் கூறுகிறான் :

لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ

மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு தனக்கு விருப்பமுள்ள பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய)வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து,) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்தும் கொடுத்து வருகிறாரோ அவரும்; வாக்குறுதி செய்த சமயத்தில் தங்கள் வாக்குறுதியை(ச் சரிவர) நிறைவேற்றுபவர்களும்; கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தான் நல்லோர்கள்.) இவர்கள்தான் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள்தான் இறையச்சமுடையவர்கள்! (அல்குர்ஆன் 2:177)

அதாவது,உங்கள் முகங்களைக் கிழக்கின் பக்கமோ, மேற்கின் பக்கமோ திருப்புவதை நீங்கள் பெரும் நன்மையாக எண்ணிக் கொள்ளாதீர்கள். நன்மை, ஈமான், இறையச்சம், கீழ்ப்படிதல் என்பது உங்களுடைய உள்ளத்தில் இறங்காமல் அல்லாஹ் உங்களுக்கு இருக்கக்கூடிய அடிப்படை கடமைகளை செய்யாமல் திசைகளை கொண்டு பெருமை அடித்துக் கொண்டு, திசைகளை முன்னோக்குவதால் நீங்கள் அந்தஸ்து உடையவர்களாக அல்லாஹ்விடத்தில் ஆகிவிடலாம் என்று நீங்கள் எண்ணாதீர்கள்.

பிறகு அந்த உயர்ந்த நன்மை என்றால் என்ன? யாரை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்?

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ

இந்த பிர் உடைய நன்மையாளர்கள் இவர்கள் நாளை மறுமை நாளில் அந்த உயர்ந்த சொர்க்கத்தில் இருப்பார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறானே இந்த நிபந்தனைகளை நிறைவேற்றியவராக இருக்கவேண்டும். (அல்குர்ஆன் 82:13)

அல்லாஹ்வுடைய இந்த நிபந்தனைகளை நிறைவேற்றாமல் வெறும் புகழ்ச்சி கொண்டு பெருமை அடிப்பதை கொண்டு அதை ஒரு காலம் அடைய முடியாது என்பதை அல்லாஹு தஆலா மிக உறுதியாக தெளிவாகக் குறிப்பிடுகின்றான்.

அதில் முதலாவதாக, அல்லாஹ் சொல்லும் போது, அவர் ஈமான் -இறைநம்பிக்கை சரியாக இருக்க வேண்டும். அவருடைய உள்ளத்தில் அல்லாஹ்விற்கு கீழ்ப்படிதல் என்ற தன்மை பலமாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் மீது, மறுமை நாளின் மீது, வானவர்கள் மீது, வேதத்தின் மீது, இறைத்தூதர்கள் மீது அல்லாஹ் கூறியிருக்கக்கூடிய இந்த விஷயங்களின் மீது, இந்த அடிப்படைகளின் மீது அவருக்கு அசைக்க முடியாத ஈமான் இருக்க வேண்டும்.(அல்குர்ஆன் 2:177)

கண்ணியத்திற்குரியவர்களே! இதைப் பற்றிய விளக்கத்தை சென்ற வாரத்தில் நாம் பார்த்து விட்டு இப்போது அடுத்த சொல்லக்கூடிய அம்சங்களைப் பற்றி நாம் அறிந்துகொள்ள இருக்கின்றோம்.

அடுத்து அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா சொல்லக்கூடிய அடிப்படைகளை கொஞ்சம் நாம் தெளிவாக பார்க்கும் பொழுது இரண்டு மூன்று விஷயங்களை அல்லாஹு தஆலா அடுத்து குறிப்பிடுகின்றான்.

ஈமானுக்கு அடுத்தபடியாக இந்த இடத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடும்பொழுது, ஒரு முஃமீன் தனக்கு தன்னைப் படைத்தவன் அல்லாஹ், தன்னுடைய செல்வத்தை எல்லாம் அல்லாஹ் தான் எனக்கு கொடுத்தான். என்னுடைய இந்த வாழ்க்கையும் அல்லாஹ்வால் தான் கொடுக்கப்பட்டது.

என்னிடத்தில் இருக்கக்கூடிய எல்லா நிஃமத்துகளும் அல்லாஹ்வால்தான் கொடுக்கப்பட்டது. அல்லாஹ்வுடைய அருள் இல்லை என்றால் என்னால் எந்த ஒரு செல்வத்தையும் சம்பாதித்திருக்க முடியாது என்று நம்பிக்கை கொண்டு இருக்கிற ஒவ்வொரு முஸ்லிமும், அவன் ஏழையாக இருந்தாலும் சரி, செல்வந்தராக இருந்தாலும் சரி, தனது தகுதிக்கு வசதிக்கு ஏற்ப, அல்லாஹ் தனக்கு கொடுத்ததில் இருந்து, அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு செலவளிப்பவராக, தர்மம் செய்பவராக இருக்க வேண்டும்.

அப்படி இல்லாத ஒரு அடியானை அல்லாஹ் தன்னுடைய அடியானாக ஏற்றுக் கொள்ளவே இல்லை. தனது அடியார்களுக்கு கொடுக்காத ஒரு அடியானை அல்லாஹு தஆலா தன்னுடைய அடிமையாக ஏற்றுக் கொள்ள தயாரில்லை.

இறைத்தூதர்கள், அவர்களில் ஒரு சிலரை விட அதிகமான இறைத்தூதர்கள் வறுமையில் இருந்தார்கள். ஏழ்மையில் இருந்தார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்களிடம் இருந்த ஏழ்மையை விட வேறு யாரிடத்திலும் ஏழ்மை இருந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு ஏழ்மையில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தார்கள்.

ஆனால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி நாம் என்ன பார்க்கிறோம் படிக்கிறோம் என்றால், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் சொல்கிறார்கள்.

كَانَ أَجْوَدَ بِالْخَيْرِ مِنْ الرِّيحِ الْمُرْسَلَةِ

ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமலான் மாதம் வந்துவிட்டால் மிக வேகமாக வீசக்கூடிய காற்றை விட அதிக வேகத்தில் கொடை கொடுப்பார்கள்.

குர்ஆனை பரிமாறிக் கொள்வதற்காக ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் வரும்போதெல்லாம் நபியுடைய தர்மம் மேலும் பன்மடங்காக அதிகரிக்கும் என்று.(1)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1769.

ஆம், ஒரு முஸ்லிமுடைய கொடைத்தன்மை அப்படித்தான் இருக்கவேண்டும். கொடைத்தன்மையில் இருந்து தனது உள்ளத்தை நீக்கிக் கொண்ட ஒரு மனிதன், கஞ்சத்தனத்தால் தனது உள்ளத்தை நிரப்பிக் கொண்ட ஒரு மனிதன் கண்டிப்பாக ஈமானின் சுவையை சுவைக்கவே முடியாது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ்வுடைய பாதையில் ஏழைக்கு தர்மம் கொடுக்கக்கூடிய ஒரு அடியானுக்கும், கருமித்தனம் செய்யக்கூடிய ஒரு கஞ்சனுக்கும் உதாரணம் சொல்லும்போது, ஒரு மனிதனை குறிப்பிட்டார்கள்.

அவருடைய உடல் எல்லாம் இரும்பு ஆடைகளால் அப்படியே பூட்டப் பட்டிருக்கிறது. அவன் தர்மம் கொடுக்கின்றான். கொஞ்சம் கொடுக்கின்றான். கொஞ்சம் கொடுக்கின்றான். இப்படியே கொடுத்துக் கொண்டிருக்க அவனுடைய கழுத்துவரை போடப்பட்டிருந்த அந்த நெருக்கமான இரும்பு ஆடைகளுடைய ஒவ்வொரு சுருக்களாக, ஒவ்வொரு தட்டுகளாக, ஒவ்வொரு மூலைகளாக அப்படியே விலகி விலகி அந்த மனிதன் ஒரு சுதந்திரத்தை அடைகிறான்.

கஞ்சனுக்கு உதாரணம் எப்படி என்றால், அவன் அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் கேட்கப்படும் பொழுது கொடுக்காமல், அவனுடைய கையை இறுக்கிக் கொள்ளும் போதெல்லாம் அவனுடைய உடலின் மீது நெருக்கமாக போடப்பட்டிருந்த அந்த இரும்பு ஆடை மேலும் அவனை நெருக்கமாக்கி அவனுடைய வேதனையை அதிகரிக்கச் செய்கின்றது. இப்படிப்பட்ட ஒரு உதாரணத்தை ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.(2)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1352.

மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.

وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ

உங்களில் ஒருவர் அல்லாஹ்வுக்காக ஒரு ஏழைக்கு தர்மம் கொடுக்கும்போது, அந்த ஏழை அந்த தர்மத்தை பெறுவதற்கு முன்பாக அல்லாஹ் தஆலா தனது வலக்கரத்தால் அந்த தர்மத்தை பெற்றுக்கொள்கிறான்.

நீங்கள் உங்களுடைய ஒரு குதிரைக் குட்டியை எப்படி அன்பாக வளர்ப்பீர்களோ அது போன்று நீங்கள் கொடுத்த தர்மத்தை அல்லாஹ் வளர்க்கிறான். பெறுக்குகிறான். பன்மடங்காக்குகிறான்.

நாளை மறுமையில் நீங்கள் வரும் போது நீங்கள் செய்த ஒரு சில திர்கங்கள், தீனார்கள் பெரும் மலையை விட நன்மைகளாக நீங்கள் மறுமையில் பார்ப்பீர்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்.(3)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1321.

அல்லாஹு தஆலா இதைத்தான் குறிப்பிடுகின்றான்.

நன்மையினுடைய உச்சம் என்ன தெரியுமா? ஒரு செல்வம் அது தனக்கு விருப்பமாக இருப்பதோடு, அந்த செல்வத்தின் தேவை தனக்கு இருப்பதோடு, அந்த செல்வத்தின் நாட்டம் இருப்பதோடு அந்த செல்வத்தை அவன் கொடுக்கிறான்.

யாருக்கு கொடுக்கிறான்?இஸ்லாமிய மார்க்கம், அல்லாஹ்வுடைய இந்த தீன் நமக்கு ஒவ்வொன்றிலும் ஒழுக்கத்தை கற்பிக்கிறது. ஒரு முறையை கற்பிக்கிறது.

தர்மம் கொடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அல்லாஹ்வுடைய மார்க்கம், அதிகமாக கொடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அல்லாஹ்வுடைய இந்த தீன், அந்த தர்மத்தை நீ யாரிலிருந்து அனுபவிக்க ஆரம்பிக்க வேண்டும்? முதலில் உனது தர்மத்திற்கு தகுதியானவர்கள் யார்? என்பதை மிக அழகாகச் சொல்கிறது.

அல்லாஹ்வுடைய இந்த கூற்றைப் பாருங்கள்.

உங்களுடைய நெருக்கமான உறவினர்களுக்கு, உங்களுடைய உறவுகளுக்கு, உங்களுடைய தாய் தந்தை வழி உறவுகளுக்கு, அந்த செல்வத்தை அதனுடைய விருப்பம் உங்களுக்கு இருப்பதோடு கொடுங்கள்.

இன்று நாம் பார்க்கிறோம்; பலர், பெருமைக்காக தர்மம் செய்கிறார்கள். ஊருக்காக தர்மம் செய்கிறார்கள். பெயர் புகழுக்காக தர்மம் செய்கிறார்கள். தங்களுடைய இந்த உறவுகளை மறந்து விடுகிறார்கள்.

எங்கே தனக்கு பிரபல்யம் கிடைக்குமோ, எங்கே தன்னுடைய பெயர் ஆடம்பரமாக விமர்சிக்கப்படுமோ அந்த இடத்தில் அவருடைய தர்மத்தை பார்க்கலாம்.

ஆனால், அவர்களுடைய தாய் தந்தை, அவருடைய தாய் தந்தை உறவினர்கள், அவருடைய வழித்தோன்றல்கள், இவருடைய தர்மத்திற்கு மிக தகுதியுள்ளவர்களாக இருந்தும் ஏதோ ஒரு சில காரணங்களுக்காக அல்லது ஒன்றும் இல்லாத ஒரு காரணத்தில் அவர்களை பகைத்துக் கொண்டு, அவர்களுக்கு அந்த தர்மத்தை அவர்  தடுத்துவிட்டு, எங்கெல்லாம் அவர் தர்மங்களை கொடுத்துக் கொண்டிருப்பார்.

இப்படிப்பட்ட தர்மத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். குர்ஆனில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அல்லாஹ் கூறுகிறான் :

يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ

 (நபியே! பொருள்களில்) ‘‘எதைச் செலவு செய்வது? (யாருக்குக் கொடுப்பது?)'' என்று உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீர் கூறுவீராக: (நன்மையைக் கருதி) ‘‘நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதைத்) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குக் கொடுங்கள். இன்னும், நீங்கள் (வேறு) என்ன நன்மையைச் செய்தபோதிலும் அதையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான். (அல்குர்ஆன் 2 : 215)

நீங்கள் செல்வத்தை தர்மமாக கொடுக்க வேண்டுமென்றால் முதலில் உங்களுடைய பெற்றோர்களுக்கு நீங்கள் கொடுங்கள். அல்லாஹு அக்பர். எப்படிப்பட்ட அல்லாஹ்வுடைய அறிவுரை பாருங்கள்.

அந்த தாய் தந்தை, நமக்கு அநியாயம் செய்து இருந்தாலும், அல்லது நம்மை சிறுவயதில் கவனிக்காமல் விட்டு இருந்தாலும் சரி, நமது தாய் தந்தை நமது தர்மத்திற்கு முதல் தகுதியுடையவர்கள் அவர்கள்தான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த தீனில் தாய் தந்தைக்கு கொடுக்கக்கூடிய அந்த மரியாதை, அந்த ஹக்கை, வேறு எந்த மார்க்கத்திலும் நீங்கள் பார்க்க முடியாது. அல்லாஹ் அதை உறுதிப்படுத்தி இருக்கிறான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.

நீ சம்பாதித்த செல்வத்தை எல்லாம் தந்தை எடுத்துக் கொண்டு, நீ சம்பாதித்த செல்வத்தை எல்லாம் தந்தை எடுத்துக்கொண்டு, அந்த வீட்டிலிருந்து வெளியே துரத்தி விட்டாலும் கூட, உனது தந்தையை நீ எதிர்க்கக் கூடாது. (4)

அறிவிப்பாளர் : முஆத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 21060.

இன்று பாருங்கள். ஒரு தந்தை ஒரு மகனைப் படிக்க வைத்திருப்பார். செலவு செய்து இருப்பார். எல்லா நன்மைகளையும் அந்த மகனுக்காக செய்திருப்பார். ஆனால், படித்த பட்டதாரி ஆகி, பெரிய ஒரு மதிப்புமிக்க ஒரு நிலையில் வந்ததற்கு பிறகு, தாய் தந்தையை புறக்கணிக்கக் கூடிய மக்கள் நமது முஸ்லிம் சமுதாயத்திலும் இருப்பதை நாம் பார்க்கும் பொழுது மிக வேதனையாக இருக்கிறது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஒரு தோழர் வந்து கேட்டார். இப்படி இப்படி எனது குடும்பத்தில் நடக்கிறது என்று.

அல்லாஹ்வுடைய தூதரே! நான் என்ன செய்வது என்று. அல்லாஹ்வுடைய தூதருடைய சுருக்கமான பதிலை பாருங்கள்.

أَنْتَ وَمَالُكَ لِأَبِيكَ

நீயும் உனது செல்வமும் தனது தந்தைக்கு சொந்தமானவர்கள். அவ்வளவுதான். நீயும் உனது செல்வமும் உனது தந்தைக்கு சொந்தமானதுதான்.

அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா எண் : 2291, 2282.

எனவே, தந்தை வைத்திருக்கின்ற செல்வத்தில் நீ அனுமதி கேட்டு எடுக்க வேண்டும். உன்னிடத்தில் அவர் கேட்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அவர் எடுத்தது போக மிச்சம் தான் உனக்கு.

உன்னையே தனது வேலைக்காரராக வாழ்நாளெல்லாம் வைத்துக்கொள்ள தந்தை விரும்பினாலும், அவருக்கு வாழ்நாள் எல்லாம் நீ வேலை செய்வதை தவிர உனக்கு வேறு வழியில்லை.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹு தஆலா அதைத்தான் சொல்கிறான் :

அடுத்ததாக,والاقربين-நெருக்கமான உறவினர்கள்.

தமது தாய் தந்தைக்கு அடுத்தபடியாக தாய் தந்தையின் சகோதர சகோதரிகள். இன்று பெரும்பாலும் எப்படி வாழ்க்கை மாறுகிறது என்றால், காஃபிருடைய சூழ்நிலையில் வாழ்ந்து, அவர்களுடைய பழமொழிகளை முஸ்லிம்கள் அப்படியே ஏற்றுக்கொண்டு, முஸ்லிம்கள் பின்பற்ற கூடிய நிலையை பாருங்கள்.

பங்காளிகள் என்பதாக பெயர் வைக்கிறார்கள். அதாவது சண்டைக்காரர்கள் என்பதாக தங்களுக்கு மத்தியில் அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய மார்க்கம் அப்படி  சொல்லவில்லை.

அபு தல்ஹா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் ஓடோடி வருகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் சொன்னதாக நான் கேள்விப்பட்டேன். எங்களது செல்வத்தில் சிறந்த செல்வத்தை அல்லாஹ்வுக்காக கொடுக்காதவரை நாங்கள் உயர்ந்த நன்மையை அடைய முடியாது. அல்லாஹ் எங்களை அப்படி கொடுக்கும்படி சொல்கிறான்  என்று அல்லாஹ் கூறியதாக நான் கேள்விப்பட்டேனே அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னபோது,

ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; ஆம் அபு தல்ஹா அப்படி தான் அல்லாஹ் சொல்லியிருக்கிறான்.

 (ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபு தல்ஹாவுடைய இந்த தோட்டத்தில் இளைப்பாறுவதற்காக செல்வார்கள். அவ்வளவு அடர்ந்த பேரீத்த மரங்களையுடைய, மதுரமான தண்ணீரையுடைய அழகான தோட்டம். மஸ்ஜிதுந்நபவிக்கு மிக அருகாமையில் இருந்தது.)

அப்போது அபு தல்ஹா சொல்கிறார்; அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய செல்வங்களில் இந்தத் தோட்டம்தான் உயர்ந்த தோட்டம் என்பது உங்களுக்கு தெரியும். நான் அதை அல்லாஹ்விற்காக தர்மம் செய்கிறேன் என்று சொல்கிறார். 

இந்த வார்த்தையை கேட்ட ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்று ரஸூலுல்லாஹ்விற்கு தேவை இருக்கிறது. மஸ்ஜித் தேவை இருக்கிறது. ஜிகாதிற்கு தேவை இருக்கிறது. ஹிஜ்ரத்திற்கு வந்த முஜாஹித் ஏழைகளுக்கு தேவை இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதருடைய சிறந்த வழிகாட்டலை பாருங்கள்.

சொல்கிறார்கள்;

ذَلِكَ مَالٌ رَابِحٌ

அபு தல்ஹா! அது ரொம்ப உயர்ந்த செல்வம் ஆயிற்றே! நான் உனக்கு ஒரு ஆலோசனை சொல்கிறேன். அந்த செல்வத்தை உனது உறவினர்களுக்கு தர்மமாக கொடுத்துவிடு.

அபு தல்ஹா சொல்கிறார்; அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் சாட்சியாக இருங்கள். என்னுடைய தந்தையின் சகோதரருடைய பிள்ளைகளுக்கு நான் அதை வக்ஃபு செய்துவிட்டேன். அதை தர்மமாக கொடுத்துவிட்டேன்.

யாருக்கு? என்னுடைய தந்தையின் சகோதரர்களுடைய பிள்ளைகளுக்கு தர்மமாக ஆக்கி விட்டேன். அவர்கள் எல்லோரும் இந்த செல்வத்திலிருந்து பங்கு பெற்றுக் கொள்ளலாம். இந்தத் தோட்டம் முழுக்க எனது சாச்சாவின் குடும்பத்திற்கு வக்ஃபு என்பதாக எழுதிவிட்டார்கள். அல்லாஹு அக்பர்!

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 1461.

இதுதான் ஈமான். இதைத்தான் அல்லாஹ் சொல்கிறான், இந்த பிர் என்பது செல்வத்தின் தேவை இருக்கும்போது, அந்த செல்வத்தை நீங்கள் கொடுக்க வேண்டும்.

உங்களுடைய உறவுகளை நீங்கள் பாருங்கள். இன்று, முஸ்லிம் சமுதாயத்தில் பல ஏழைகள் வட்டிக்கு செல்கிறார்கள். பலரிடத்தில் கடன்பட்டு விட்டு தனது மானத்தை இழக்கக்கூடிய அளவிற்கு, பல நிர்பந்தங்களை இந்த வாழ்க்கையில் சந்திக்கக் கூடிய அளவுக்கு அவர்கள் ஆளாகி விடுவதற்கு என்ன காரணம் என்றால்,

ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள செல்வந்தரும் தனது குடும்பத்தில் உள்ள ஏழைகளை முதலில் அவர்கள் அனுசரிக்க ஆரம்பித்து விட்டால், தனது செல்வத்தின் ஒரு பகுதியை அவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்துவிட்டால், அந்த ஏழைகள் வட்டிக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் இருக்காது. மாற்றார்கள் இடத்தில் கடனுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் இருக்காது.

தனது சொந்த வீட்டை தனது மற்ற தேவையான பொருட்களை விற்று ஒரு நிர்பந்தமான நிலைக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்காது.

இன்று ,ஒரு குடும்பத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒருவருக்கு செல்வத்தை தருகிறான் என்றால், அவர் என்ன நினைக்கிறார்? அந்த செல்வத்தைக் கொண்டு தான் அனுபவிக்க வேண்டு.ம் தான் வாழவேண்டும், தனது செல்வத்தில் தன்னையும் தனது மனைவி பிள்ளைகளையும் தவிர வேறு யாருக்கும் எந்தவிதமான பங்குமே இல்லாத அளவிற்கு பலர் நடந்து கொள்வதைப் பார்க்கிறோம்.

தன்னுடைய அற்பத் தேவைகளுக்கு எல்லாம் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்யக் கூடிய அந்த முஸ்லிம்கள், தன்னுடைய உறவுகள் தன்னிடத்தில் தேவைக்காக வரும் பொழுது சில சில்லறைகளை சில அற்பமான தொகைகளை கொடுத்து விட்டு, அதையும் அவர்களை எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ, எவ்வளவு அலைய வைக்க முடியுமோ, எவ்வளவு மனம் நோக வைக்க முடியுமோ, அந்த அளவுக்கு செய்து விட்டு அதற்குப் பிறகு ஒரு அற்ப தொகையை கொடுப்பதைப் பார்க்கிறோம்.

எப்படி நாம் தெரிகிறோம் தெரியுமா? சிலரிடத்தில் பேசும் பொழுது, உங்களுடைய அந்த உறவினர் இருக்கின்றாரே, அவர் நல்ல வசதியில் இருக்கிறாரே, இவர் இப்படி இருக்கிறாரே, அவரும் உங்களது உறவினர் தானே என்று சொல்லும்போது,

பலரும் உங்களிடத்தில் சொன்னது உங்களுக்கு இப்பொழுது நினைவிற்கு வரலாம். அவர்களிடத்தில் சென்று கேட்பதைவிட ஒரு அந்நியனிடத்தில் சென்று கேட்டு விடுவது நமக்கு இலகுவாக இருக்கும்.

உறவுகள் யாரும் உதவுவதற்கு முன் வரவில்லை என்று முஸ்லிம்கள் சாதாரணமாக இன்று சொல்வதை அன்றாட வாழ்க்கையில் பார்க்கிறோம்.

அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இதை ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவே இல்லை. அடுத்து அல்லாஹ் சொல்கிறான், واليتامىஉங்களுடைய செல்வத்தினுடைய இரண்டாவது ஒரு பகுதி அது கண்டிப்பாக அநாதைகளுக்காக இருக்க வேண்டும்.

இன்று முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு சில இடங்களில் ஒரு சில நல்ல மக்களைத் தவிர, பெரும்பாலனவர்களுக்கு அனாதைகளை பற்றி அக்கறையே இல்லாமல் இருப்பதைப் பார்க்கிறோம்.

இன்று முஸ்லிம்களில் சில இடங்களில் சில மக்கள் நடத்துகின்ற அந்த அனாதை இல்லங்களுக்கு ரமலான் மாதத்தில், அவர்கள் வீடு வீடாக ஏறி, மஸ்ஜிது மஸ்ஜிதாக ஏறி அவர்கள் படக்கூடிய வேதனையை பார்த்தால், அல்லாஹ்வுடைய இந்த தீனிலா குர்ஆன் இறக்கப்பட்ட ஒரு மார்க்கத்திலா, இத்தனை ஹதீஸ்கள் சொல்லப்பட்ட ஒரு மார்க்கத்திலா, முஸ்லிம்களுடைய அனாதைகளுக்கு இப்படிப்பட்ட ஒரு கேவலமான நிலையில் இருக்கிறோம்!

ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்சொன்னார்கள் :

وَأَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا

நானும் எதீம்களை ஆதரிக்கக் கூடியவனும் இந்த இரண்டு விரல்களை போன்று இருப்போம் என்று.

அறிவிப்பாளர் : சஹ்ல் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரிஎண் : 5304.

எப்படிப்பட்ட ஹதீஸ் பாருங்கள். எதீம்களுடைய தலையை நீங்கள் தடவி விடுவது உங்களுக்கு நன்மை என்று சொன்னார்கள்.

நீங்கள் எதீமை பராமரிப்பீர்கள் என்றால் நாளை மறுமையில் என்னோடு சொர்க்கத்தில் இருப்பீர்கள் என்று சொன்னார்கள்.

ஆனால் இன்று, முஸ்லிம்களுடைய நிலையைப் பாருங்கள். தங்களுடைய பிள்ளைகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்யக் கூடியவர்கள், முஸ்லிம்களில் உள்ள ஏழைகளுக்காக தேடி வரும் பொழுது எவ்வளவு சில்லரைகளை கொடுக்கிறார்கள் என்று பாருங்கள்.

அல்லாஹு தஆலா கூறுகிறான் :

فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ (11) وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ (12) فَكُّ رَقَبَةٍ (13) أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ (14) يَتِيمًا ذَا مَقْرَبَةٍ (15) أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ

எனினும், (இதுவரை) அவன் ‘அகபா'வை (கணவாயை)க் கடக்கவில்லை.(நபியே!) ‘அகபா' என்னவென்று நீர் அறிவீரா? அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது. அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.(அல்குர்ஆன் 90 : 11-16)

அன்பிற்குரியவர்களே! அல்குர்ஆனில் எங்கெல்லாம் உணவளிப்பது என்று வருகிறதோ, நம்மில் பலர் எப்படி விளங்கி இருக்கிறார்கள் என்றால், அதனுடைய குறைந்தபட்ச  அளவை மட்டும் வைத்திருக்கிறார்கள்.

உணவளித்தல் என்பதற்கு அதனுடைய குறைந்தபட்ச அளவு என்ன? ஒரு மனிதனின் ஒரு நேர பசியை போக்குவது. இதை மட்டுமே நமது முஸ்லிம்கள்,இதுதான் நாம் செய்யக்கூடிய பெரிய நன்மை என்பதாக நினைத்துக் கொண்டார்கள்.

உண்மையில் உணவளித்தல் என்பதற்கு அந்த ஒரு சிறு அர்த்தம் மட்டுமல்ல. ஒரு ஒரு ஏழையாக உள்ள, ஒரு அனாதையாக, ஃபகீராக உள்ள ஒரு முஸ்லிமுக்கு அவருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது.

الطعام-என்பதனுடைய முதல் அர்த்தம், அவருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பது. எதன் மூலமாக அவர் சுயமாக சம்பாதித்து தன்னையும் தனது குடும்பத்தையும் உணவிலும் உடையிலும் தேவையற்றவராக ஆக்கிக் கொள்ள முடியுமோ, அப்படி பட்ட ஒரு வாழ்வாதாரத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கணும்.

இதைத்தான் குர்ஆனில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறானே தவிர, இன்று முஸ்லிம்கள் செய்கிறார்கள் அல்லவா, வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் சில பொட்டலங்களை வாங்கி கையில் வைத்துக் கொண்டு, யாசகம் கேட்க கூடிய மக்களுக்கு தூக்கி கொடுத்து விட்டு செல்கிறார்கள்.

இதை உணவளித்தல் என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால், இது உணவளித்தல் என்பதுடைய கடைசி தரஜா.

அதனுடைய முதல் தரஜா எது? ஒருவருக்கு தேவையான முழு வாழ்க்கை ஆதாரங்களையும் ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பது, அதுதான் அல்லாஹ்விற்கு பிடித்தமான உணவளித்தல் என்பதுடைய அந்த முதல் தரஜா.

இன்று, இந்த வேலையை யார் செய்கிறார்கள் தெரியுமா? முஸ்லிமல்லாதவர்கள், கிறிஸ்தவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள், இந்த வேலையை எடுத்துக் கொண்டு உலகில் உள்ள பெரும்பாலான ஏழை நாடுகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

ஏன்? நாம் வாழக்கூடிய இந்த நாட்டில் எத்தனை ஏழைகள் இருக்கிறார்கள்? நீங்கள் கவனித்து பார்த்தால் தெரியும். சில ரிக்ஷாகாரர்களைப் பாருங்கள். தள்ளுவண்டிக்காரர்களைப் பாருங்கள்.

அவர்களுக்கும் அந்த கிறிஸ்தவ மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஆனால் ஜீசஸ் பற்றி எழுதி இருப்பார்கள். சிலுவைப்படம் வரைந்திருப்பார்கள். அங்கே பல விதமான ஸ்லோகங்களை எழுதி வைத்திருப்பார்கள்.

என்ன காரணம் தெரியுமா? அந்த சைக்கிள் ரிக்ஷாவை அல்லது அந்த தள்ளு வண்டியை அல்லது சைக்கிளை வாங்கி கொடுத்தது ஒரு சர்ச்சுடைய நிர்வாகமாக இருக்கும். அவருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அந்த சர்ச்சுடைய நிர்வாகமாக இருக்கும்.

எதை முஸ்லிம்கள் மஸ்ஜிதில் இருந்து செய்யவேண்டுமோ, தங்களது வேலைகளை மட்டுமல்ல தங்களது சமுதாயத்தில் சுற்றி இருக்கக் கூடிய எல்லா ஏழைகளுக்கும் செய்ய வேண்டிய கடமைப்பட்ட முஸ்லிம்கள், அதை செய்யாத காரணத்தால், ஏன், தங்களது இனத்தை சேர்ந்த சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு முஸ்லிம்கள் மறந்து இருக்கும்பொழுது மாற்று மக்களுக்கு இவர்கள் என்ன செய்வார்கள்?

ஆனால், அவர்கள் எப்படி ஜாதி மதம் பார்க்காமல், முதலில் மற்றவர்களை விலை கொடுத்து, அவர்களுக்கு உதவி செய்து, அவர்களுடைய உள்ளங்களை விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தங்களது மதத்தை அவர்களுக்கு திணித்து அவர்களை தங்களது மதத்தில் இழுத்துக்கொள்கிறார்கள்.

அன்பிற்குரியவர்களே! இது மிகப்பெரிய ஒரு கைசேதத்திற்குரிய ஒரு நிலை. அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா முஸ்லிம்களுக்கு சொல்கிறான்.

நீங்கள் அந்த பிர் என்ற உயர்ந்த தரஜாவை அடைய வேண்டும் என்றால் எதீம்களை ஆதரியுங்கள். அனாதைகளை நீங்கள் ஆதரியுங்கள்.

இந்த மிஸ்கின் என்பவர்கள் யார்? இவர்களுக்கு அவர்களுடைய அன்றாட சம்பாத்தியம் அது அவர்களுடைய சாதாரணமான ஒரு தேவையை நிறைவேற்றுமே தவிர, எதிர்பாராமல் வரக்கூடிய தேவைகளை, அது உணவு தேவையோ அல்லது அவர்களுடைய உடை இருப்பிடம் தேவையோ அல்லது அவர்களுடைய மருத்துவ தேவையோ அதை நீங்கள் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு அவர்களுக்கு வருமானம் இருக்காது.

இவர்களெல்லாம் மார்க்கத்தில் மிஸ்கீன் என்று சொல்லப்படுவார்கள். நாம் என்ன வைத்திருக்கிறோம்? மிஸ்கின் என்றால், யாசகம் கேட்டு வரக்கூடியவர்களை மிஸ்கின் என்று வைத்திருக்கிறோம்.

அல்லாஹ் சொல்லக்கூடிய மிஸ்கின் என்பவர்கள் யார் என்றால், அவர்கள் யாசகம் கேட்க மாட்டார்கள்.

அல்லாஹ் அவர்களைப் பற்றி சொல்கிறான் :

لِلْفُقَرَاءِ الَّذِينَ أُحْصِرُوا فِي سَبِيلِ اللَّهِ لَا يَسْتَطِيعُونَ ضَرْبًا فِي الْأَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ أَغْنِيَاءَ مِنَ التَّعَفُّفِ تَعْرِفُهُمْ بِسِيمَاهُمْ لَا يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ

(நம்பிக்கையாளர்களே!) சில ஏழைகள் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காகவே தங்களை (முற்றிலும் அர்ப்பணம் செய்து) ஒதுக்கிக் கொண்டதால் (தங்கள் சொந்த வாழ்விற்குத் தேடக்கூட) பூமியில் நடமாட சாத்தியப்படாதவர்களாக இருக்கின்றனர். (மேலும், அவர்கள்) யாசிக்காததால் (அவர்களின் வறுமை நிலையை) அறியாதவர்கள் அவர்களை செல்வந்தர்களென எண்ணிக் கொள்கின்றனர். அவர்களுடைய (வறுமையின்) அடையாளங்(களாகிய ஆடை, இருப்பிடம் ஆகியவை)களைக் கொண்டு நீங்கள் அவர்களை அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடத்தில் வருந்தியும் கேட்க மாட்டார்கள். (இத்தகைய ஏழைகளுக்கு) நீங்கள் நல்லதில் இருந்து எதைச் செலவு செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து அதற்குரிய கூலியை உங்களுக்குத் தரு)வான். (அல்குர்ஆன் 2 : 273)

நமது மனநிலையை நமது சூழ்நிலையை நீங்கள் நினைத்துப் பாருங்கள். எத்தனையோ நமது நண்பர்களுடன் நாம் நெருங்கிப் பழகுகிறோம். அவர் எவ்வளவு கடன் உள்ளவர், எவ்வளவு பிரச்சனையில் உள்ளவர், உங்களுக்கு என்ன சிரமம் இருக்கிறது? என்பதாக நாம் கேட்டிருக்கிறோமா?கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

நம்முடைய தர்மத்தைக் கொண்டு நாம் எவ்வளவு தூரமெல்லாம் செல்கிறோம். ஆனால், அன்றாடம் நம்மிடத்தில் பழகக்கூடிய நம்மோடு நெருக்கமாக இருக்கக் கூடிய எத்தனையோ நம்முடைய நண்பர்கள் அவர்களுக்கு எத்தனையோ தேவை இருக்கலாம். ஆனால், நமது நண்பனிடத்தில் நமது தேவையைக் கேட்டு விட்டால், சொல்லி விட்டால், அடுத்து இவன் பழக மாட்டானே! இவன் பேசமாட்டானே! என்பதற்காகவே தனது நண்பர்களிடத்தில் தனது தேவைகளை மறைத்துக் கொண்டு அதை வெளியில் ஒரு அந்நியரிடத்தில் சென்று கேட்கக்கூடியவர்களை நாம் பார்க்கிறோம்.

நாம் ஒருவரிடத்தில் நெருக்கமாக பழகி, அன்பாகப் பழகி, ஈடுபாடாக பழகியும் அவருடைய தேவையை அறிந்து கொள்ளலாமல் இருப்போமேயானால் இதைவிட ஒரு கீழ்த்தரமான நட்பு எதுவுமே கிடையாது.

இஸ்லாமிய மார்க்கத்தில் இப்படிப்பட்ட ஒரு நட்பே கிடையாது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்படிப்பட்ட ஒரு நட்பை இஸ்லாமிய மார்க்கத்தில் கற்றுக் கொடுக்கவில்லை.

என்ன நட்பை கற்றுக்கொடுத்தார்கள்? இன்பத்திலும், துன்பத்திலும், சுகத்திலும், துக்கத்திலும், மகிழ்ச்சியிலும், கவலையிலும் அனைத்திலும் பங்கு கொள்ளக் கூடிய ஒரு சகோதரத்துவ நட்பை தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காண்பித்துக் கொடுத்தார்கள்.

சகோதரர்களே! இதை அல்லாஹ் சொல்கிறான். மிஸ்கின்களுக்கு கொடுங்கள். வழிப்போக்கர்களுக்குக் கொடுங்கள். கேட்டு வரக்கூடிய மக்களுக்கு கொடுங்கள். அடிமைகளை உரிமை இடுவதற்கும் கொடுங்கள்.

இப்படி அல்லாஹ் தஆலா ஈமானை கூறியதற்கு பிறகு, தர்மத்தை ஸதகாவை பற்றி அல்லாஹ் சொல்கிறான்.

அடுத்து தொழுகையைப் பற்றி ஸதகாவை பற்றி வருகிறது. இங்கே நாம் என்ன கவனிக்க வேண்டும் என்று பார்த்தால், அல்லாஹ்வுடைய தூதர் இடத்தில் ஒரு பெண்மணி வருகிறார்கள்.

வந்து கேட்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே! நான் ஜகாத்தை கொடுத்துவிட்டேன். இதற்கு மேலும் எனது செல்வத்தில் ஏதாவது கொடுக்க வேண்டுமா? என்று கேட்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த வசனத்தை ஓதிக் காட்டுகிறார்கள். நீங்கள் ஜகாத்தை கொடுத்ததற்குப் பிறகும் செல்வத்தில் உங்களுக்கு உங்கள் மீது கடமை இருக்கிறது. அதை நீங்கள் தர்மமாக உங்களை கேட்டு வரக்கூடிய உறவினர்களுக்கோ எதீம்களுக்கு உங்களை சுற்றியுள்ள முஸ்லிம்களான ஏழைகளுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஃபாத்திமா பின்த் கைஸ் என்ற பெண்மணி கேட்கிறார்; அல்லாஹ்வின் தூதரே!

என்னிடத்தில் மிஸ்கால் அதாவது இன்றைய கணக்குப்படி 336கிராம் தங்க நகை இருக்கிறது. இதற்கு நான் ஸகாத்தை கொடுத்துவிட்டேன். இருந்தாலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறிய வசனத்தை நான் கேட்டேன்.

செல்வம் அது தனக்கு பிரியமாக இருப்பதோடு, அந்த செல்வத்தை அல்லாஹ்விற்காக கொடுக்கக்கூடிய மக்கள் இவர்கள் பிர் என்ற அந்த நன்மையை அடைவார்கள் என்பதை நான் கேட்டேன்.

அல்லாஹ்வின் தூதரே! இந்த 336கிராம் உள்ள தங்கத்தை நான் என்ன செய்வது? அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்,

இதை அப்படியே நெருக்கமான உனது உறவினர்களுக்கு தர்மமாக கொடுத்துவிடு. இந்த ஃபாத்திமா பின்த் கைஸ் உடைய நிறைய சம்பவங்களை நாம் பார்க்கிறோம்.

நூல் : தஃப்ஸீர் தபரீ: 3/342.

ஒருமுறை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சில மார்க்க விஷயங்களை கேட்டு வருகிறார்கள். கையில் இரண்டு மொத்தமான வளையல்களை பார்க்கிறார்கள்.

இந்த இரண்டு வளையல்களுக்கும் ஜகாத்தை கொடுத்து வருகிறாயா? கேட்டுவிட்டு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள், அப்படி இல்லை என்றால் நரகத்தின் இரண்டு வளையல்கள் உனது கையில் போடப்பட்டு இருக்கின்றன என்பதை அறிந்து கொள்.

இந்த வார்த்தையை கேட்டவுடன் ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹாஅவர்கள் அந்த இரண்டு வளையல்களையும் சமர்ப்பித்து விட்டு, அல்லாஹ்வின் தூதரே! நான் இதை தர்மமாக ஆகிவிட்டேன் என்று சொல்கிறார்கள்.

தஃப்ஸீர் தபரீ.

அது போன்று நபியிடத்தில் இன்னொரு அரபி வருகிறார், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எனக்கு நிறைய ஒட்டகங்களை கொடுத்திருக்கிறான். அதனுடைய ஜகாத்தை கொடுத்து வருகிறேன். அதற்கு மேலும் அந்த ஒட்டகத்தில் அல்லாஹ்விற்காக செய்ய வேண்டுமா என்று?கேட்கிறார்.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஆம். அதற்கு மேலும் கடமை இருக்கிறது. அது என்ன? யாராவது தனது வயலுக்கு நீர் பாய்ச்ச வேண்டும், அதற்கு கொஞ்சம் உங்களது ஒட்டகத்தை கொடுத்து உதவுங்கள் என்று கேட்டால், அதற்காக நீ கொடுக்க வேண்டும்.

யாராவது தன் பெண் ஒட்டகையை சினையாக்க வேண்டும் என்பதற்காக, உனது ஆண் ஒட்டகையை கேட்டால் அதற்கு நீ கண்டிப்பாக கொடுத்தாக வேண்டும்.

உனது ஓட்டகைகளில் அதிகமாக பால் இருக்கின்றன. உனது தேவைக்கும் அதிகமாக இருக்கின்றன. அதை நான் கறந்து கொல்லட்டுமா என்று கேட்டு வந்தால், கறந்து கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

இப்படி ஸகாத்திற்கு போக, கடமையான ஸகாத்திற்கு மேலாகவும், அல்லாஹ்வுடைய பாதையில் தர்மத்தை கொடுக்கும்போதும், அதுவும் தனக்கு தேவை இருந்தும், தனக்கு அந்த பொருளில் ஆசையிருந்தும், அல்லாஹ்விற்காக கொடுக்கும்போது அல்பிர் என்ற உயர்ந்த தரஜாவை அல்லாஹ்விடத்தில் நெருக்கமான ஒரு தகுதியை முஃமீன் அடைகிறான்.

கண்ணியத்திற்குரியவர்களே! நீங்கள் அந்த பிர் என்ற தரஜாவை அடைவது, ஒரு பேச்சைக் கொண்டோ அல்லது வேறு விதமான செயல்களை கொண்டோ கிடையாது. உள்ளத்தில் உங்களுடைய ஈமான் உறுதியாக இருந்து, நான் கொடுத்த செல்வத்தை அதன் மீது உங்களுக்கு பிரியம் இருப்பதோடு, உங்களுடைய நெருக்கமான உறவினர்களுக்கு, எதீம்களுக்கு, மிஸ்கீன்களுக்கு, வழிப்போக்கர்களுக்கு, அனாதைகளுக்கு அதுபோன்று அடிமைகளை உரிமை இடுவதற்கு நீங்கள் செலவு செய்யும் போதும், அல்லாஹ்விடத்தில் உயர்ந்த பிர் என்கிற நன்மையை அடைகிறீர்கள்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சஹாபாக்களும் இந்த ஒரு தரஜாவுக்கு எவ்வளவு போட்டி போட்டு இருப்பார்கள் என்பதை நாம் வாழ்க்கையில் பார்க்கிறோம்.

இன்று, முஸ்லிம்களுடைய ஒரு பரிதாபமான நிலையாக இருக்கிறது. வட்டிக்கு கடன் கொடுப்பதற்காக பேங்குகள் திறக்கப்படுகின்றன. ஒரு முஸ்லிம்களுடைய முஹல்லா வட்டிக்கு கடன் கொடுப்பதற்காக அடகு நகை வைத்து கடன் பெறுங்கள்.

நாங்கள் பன்மடங்காக உங்களுக்கு தருகிறோம் என்பதாக மாற்றார்கள் முஸ்லிம்களுடைய செல்வத்தை விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களுடைய ஈமானை விலை பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு கேவலமான நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்படுகிறார்கள் என்றால், அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இதற்கு அல்லாஹ் தஆலா இஸ்லாமிய மார்க்கத்தில் சமூகத்தில் யாருக்கு செல்வத்தை கொடுத்தானோ, யார் சமூகத்தின் பொறுப்பு உடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் நாளை மறுமையில் கண்டிப்பாக விசாரிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை சுற்றியுள்ள ஏழை எளிய மக்களை அவர் அனுசரிக்க ஆரம்பித்து விட்டால், அவருடைய தேவையை கண்டு கொள்ள ஆரம்பித்துவிட்டால், அல்ஹம்துலில்லாஹ்! மிகப்பெரிய ஒரு கண்ணியத்தை மிகப்பெரிய ஒரு பாதுகாப்பை சமுதாயத்தின் ஒரு கண்ணியத்தை நாம் உணரமுடியும் .

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா அப்படிப்பட்ட ஒரு நல்ல சிந்தனையை நம் அனைவருக்கும் ஏற்படுத்துவானாக. நம் சமுதாயத்தில் உள்ள குறைகளை அல்லாஹ் நீக்கி ஈமானைக் கொண்டும், இக்லாஸைக் கொண்டும் நல்ல பண்புகளைக் கொண்டும் அல்லாஹ் அலங்கரித்து அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ أَنَّ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ بِالْخَيْرِ وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ وَكَانَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام يَلْقَاهُ كُلَّ لَيْلَةٍ فِي رَمَضَانَ حَتَّى يَنْسَلِخَ يَعْرِضُ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقُرْآنَ فَإِذَا لَقِيَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام كَانَ أَجْوَدَ بِالْخَيْرِ مِنْ الرِّيحِ الْمُرْسَلَةِ (صحيح البخاري 1769 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا مُوسَى حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَثَلُ الْبَخِيلِ وَالْمُتَصَدِّقِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ و حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَثَلُ الْبَخِيلِ وَالْمُنْفِقِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ مِنْ ثُدِيِّهِمَا إِلَى تَرَاقِيهِمَا فَأَمَّا الْمُنْفِقُ فَلَا يُنْفِقُ إِلَّا سَبَغَتْ أَوْ وَفَرَتْ عَلَى جِلْدِهِ حَتَّى تُخْفِيَ بَنَانَهُ وَتَعْفُوَ أَثَرَهُ وَأَمَّا الْبَخِيلُ فَلَا يُرِيدُ أَنْ يُنْفِقَ شَيْئًا إِلَّا لَزِقَتْ كُلُّ حَلْقَةٍ مَكَانَهَا فَهُوَ يُوَسِّعُهَا وَلَا تَتَّسِعُ تَابَعَهُ الْحَسَنُ بْنُ مُسْلِمٍ عَنْ طَاوُسٍ فِي الْجُبَّتَيْنِ وَقَالَ حَنْظَلَةُ عَنْ طَاوُسٍ جُنَّتَانِ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرٌ عَنْ ابْنِ هُرْمُزَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جُنَّتَانِ (صحيح البخاري 1352 -)

குறிப்பு 3)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ سَمِعَ أَبَا النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ وَلَا يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ (صحيح البخاري 1321 -)

குறிப்பு 4)

حَدَّثَنَا عَبْد اللَّهِ حَدَّثَنِي أَبِي حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ الْحَضْرَمِيِّ عَنْ مُعَاذٍ قَالَ أَوْصَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَشْرِ كَلِمَاتٍ قَالَ لَا تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا وَإِنْ قُتِلْتَ وَحُرِّقْتَ وَلَا تَعُقَّنَّ وَالِدَيْكَ وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ وَلَا تَتْرُكَنَّ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَإِنَّ مَنْ تَرَكَ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَقَدْ بَرِئَتْ مِنْهُ ذِمَّةُ اللَّهِ وَلَا تَشْرَبَنَّ خَمْرًا فَإِنَّهُ رَأْسُ كُلِّ فَاحِشَةٍ وَإِيَّاكَ وَالْمَعْصِيَةَ فَإِنَّ بِالْمَعْصِيَةِ حَلَّ سَخَطُ اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِيَّاكَ وَالْفِرَارَ مِنْ الزَّحْفِ وَإِنْ هَلَكَ النَّاسُ وَإِذَا أَصَابَ النَّاسَ مُوتَانٌ وَأَنْتَ فِيهِمْ فَاثْبُتْ وَأَنْفِقْ عَلَى عِيَالِكَ مِنْ طَوْلِكَ وَلَا تَرْفَعْ عَنْهُمْ عَصَاكَ أَدَبًا وَأَخِفْهُمْ فِي اللَّهِ (مسند أحمد 21060 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/