HOME      Khutba      அல்பிர் ~ நன்மை எது ? (அமர்வு 1/3) | Tamil Bayan - 333   
 

அல்பிர் ~ நன்மை எது ? (அமர்வு 1/3) | Tamil Bayan - 333

           

அல்பிர் ~ நன்மை எது ? (அமர்வு 1/3) | Tamil Bayan - 333


அல்பிர் - நன்மை எது?

ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்பிர் - நன்மை எது? (பகுதி 1-3)

வரிசை : 333

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 06-06-2014 | 08-08-1435

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய  அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை போற்றி புகழ்வதோடு, அல்லாஹ்வுடைய தூதர் மீதும், அந்த தூதரின் குடும்பத்தார், தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறுவதோடு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை, அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு தஆலா கண்ணியமிக்க அல்குர்ஆனை நாம் சிந்திப்பதற்க்காக, நாம் உணர்வதற்க்காக, வாழ்க்கையில் படித்து பயன் பெறுவதற்க்காக இறக்கியிருக்கின்றான்.

அதை அலங்கரித்து, அதை போற்றி பாதுகாத்து, நமது அறைகளில் உயரே தூக்கி வைப்பதற்க்காக வேண்டி குர்ஆனை அல்லாஹ் இறக்கவில்லை.

அல்குர்ஆன் நெஞ்சங்களில் எழுதப்பட வேண்டும் என்பதற்க்காக அல்லாஹ் இறக்கியிருக்கிறான். நெஞ்சங்கள் அதை சுமக்க வேண்டும் என்பதற்க்காக அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கியிருக்கின்றான்.

بَلْ هُوَ آيَاتٌ بَيِّنَاتٌ فِي صُدُورِ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا الظَّالِمُونَ

அவ்வாறன்று. இது (இறைவனால்தான் அருளப்பட்ட) தெளிவான வசனங்களாக இருக்கின்றன. ஆகவே மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் இவை பதிந்துவிடும். ஆகவே, அநியாயக்காரர்களைத் தவிர (மற்றெவரும்) நம் வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 29:49)

ஒரு மனிதனை சீர்திருத்துவதற்கு ஒரு மனிதனை நேர்வழிப்படுத்துவதற்கு ஒரு மனிதனை சிறந்த சிந்தனை வாதியாக சீர்திருத்தவாதியாக சமூகவாதியாக நேரிய அறிவு படைத்தவனாக ஆக்குவதற்கு அவனை அல்குர்ஆனை சிந்திப்பவனாக அதை ஓதக்கூடியவனாக அதை உணரக்கூடியவனாக மாற்றுவதை தவிர வேறு வழியே இல்லை.

இன்று,முஸ்லிம்களுடைய சீர்கேடுகள், முஸ்லிம்களுடைய மார்க்க பற்றின்மை, இறையச்சமின்மை, ஒழுக்கமின்மை என்று எத்தனை நோய்களை நமது சமுதாய மக்களிடத்தில் நம்மிடத்தில் காண்கிறோமோ இந்த அனைத்து நோய்களுக்கும் ஒரே நிவாரணம், அல்லாஹ்வுடைய வேதம் தான்.

அல்லாஹு தஆலா இந்த வேதத்தை நோய் நிவாரணம், உள்ளத்தின் நோய்களுக்கு நிவாரணம் என்று சொல்கின்றான்.

யாராலும் திருத்த முடியாத, யாராலும் ஆட்சி செய்ய முடியாத, சமூகத்தில் இப்படிப்பட்ட மக்கள் இருக்கவே முடியாது என்று புறக்கணிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தை, அல்லாஹு ரப்புல் ஆலமீன், இந்த குர்ஆனை கொண்டு இந்த உலகத்தையே சீர்திருத்தக்கூடிய மக்களாக மாற்றினான்.

இன்றும் அதே குர்ஆன் தான் நமக்கு வழிகாட்டும். இன்றும் அதே குர்ஆன் தான் நம்மை திரும்ப நமது பாதைக்கு கொண்டு வரும். நாம் இழந்த கண்ணியத்தையும் வெற்றியையும் அதே குர்ஆன் தான் நமக்கு நிச்சயமாக பெற்று தரும்.

ஆகவே, அல்லாஹ்வின் வேதமாகிய இந்த குர்ஆனின் பக்கம் திரும்புவதை தவிர, நமக்கு வேறு வழியே இல்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.

அப்படி குர்ஆனுடைய வசனங்களை நீங்கள் சிந்திக்கும் போது ஆராயும் போது சூரத்துல் பகராவினுடைய 177-வது வசனத்தை சிந்திப்பதற்கு அதை படிப்பதற்கு, அதை வாழ்க்கையில் பின்பற்றுவதற்கு மறந்துவிடாதீர்கள்.

மிக முக்கியமான வசனம். அல்லாஹ் கூறுகிறான்:

لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ

மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு தனக்கு விருப்பமுள்ள பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய)வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து,) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்தும் கொடுத்து வருகிறாரோ அவரும்; வாக்குறுதி செய்த சமயத்தில் தங்கள் வாக்குறுதியை(ச் சரிவர) நிறைவேற்றுபவர்களும்; கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தான் நல்லோர்கள்.) இவர்கள்தான் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள்தான் இறையச்சமுடையவர்கள்! (அல்குர்ஆன் 2 : 177)

இந்த வசனத்திற்கு விளக்கமாக இமாம் முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் சொல்லக்கூடிய கருத்தை பாருங்கள்.

அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு, பணிந்து அல்லாஹ்வின் அடிமையாக நாம் வாழவேண்டும் என்ற ஈமானிய உணர்வுதான் நன்மையே தவிர, நீங்கள் உங்களுடைய வெளிரங்க முகத்தால், வெளிரங்கமான திசையை முன்னோக்கி விடுவதை மட்டும் நன்மையின் உச்சகட்டமாக, சிறப்பின் உச்சகட்டமாக, உயர்ந்த பண்புகளின் உச்சகட்டமாக எண்ணிவிடாதீர்கள்”.

அல்லாஹ் சொல்கிறான், கிழக்கின் பக்கம் அல்லது மேற்கின் பக்கம் உங்கள் முகங்களை முன்னோக்கி விடுவதுதான் எல்லா நன்மையும் என்று நீங்கள் எண்ணிவிடாதீர்கள்.

நன்மை என்றால் என்ன?நன்மையை உடையவர் யார்?  யார் அல்லாஹ்விடத்தில் ‘அல்பிர்’ என்ற அந்த உயர்ந்த தகுதியை அடைகிறார் என்றால், யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டாரோ, அவனுடைய வாயால் மொழியக்கூடிய ‘ஆமன்துபில்லாஹ்’ அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன் என்ற அந்த வார்த்தை, அவருடைய உள்ளத்தில் இறங்கியிருக்க வேண்டும். அல்லாஹ்வுக்கும் அவருடைய இதயத்திற்கும் உண்டான அந்த தொடர்பு பசுமையாக, ஈரமாக இருக்க வேண்டும்.

இன்று, பெரும்பாலான முஸ்லிம்களின் நிலைமை என்னவென்றால், ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறும்போதோ அல்லது எங்கேயாவது அல்லாஹ்வைப்பற்றி பேசும்போதோ, பேசப்படுவதை கேட்கும்போதோதான் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய நினைவு வரும்.

அல்லது அவர்கள் மஸ்ஜிதுக்குள் வந்தால் அல்லாஹ்வுடைய நினைவு வரும். மஸ்ஜிதிலிருந்து வெளியே சென்றால் அல்லாஹ்வை மறந்து விடுவார்கள். குடும்பத்தோடு இருக்கும்போது அல்லாஹ்வை மறந்து விடுவார்கள். தொழில்களில் இருக்கும்போது அல்லாஹ்வை மறந்து விடுவார்கள்.

இவர்களை அல்லாஹு ரப்புல் ஆலமீன், ஈமானின் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் என்று ஏற்று கொள்ளவில்லை.

رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ

பல ஆண்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பிவிடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறிவிடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 24:37)

அல்லாஹு ரப்புல் ஆலமீன், அவனை மறந்து வாழ்வதை அவன் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ

ஆகவே, நீங்கள் என்னை நினைத்துக் கொண்டேயிருங்கள். நானும் உங்களை நினைத்து (அருள் புரிந்து) வருவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்தி வாருங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.(அல்குர்ஆன் 2 : 152)

நாளை மறுமையில் பாவிகளுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தண்டனையை சுவைத்து பாருங்கள், வேதனையை அனுபவித்து பாருங்கள் என்று சொல்லும்போது,  

فَذُوقُوا بِمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا إِنَّا نَسِينَاكُمْ وَذُوقُوا عَذَابَ الْخُلْدِ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ

ஆகவே, ‘‘(நம்மைச்) சந்திக்கும் இந்நாளை நீங்கள் மறந்துவிட்டதன் பலனை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (இந்நாளை நீங்கள் மறந்தவாறே) நிச்சயமாக நாமும் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக என்றென்றும் நிலையான இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருங்கள்'' (என்றும் கூறப்படும்).(அல்குர்ஆன் 32 : 14)

ஈமான் என்பது ஏதோ மக்தப் மதரஸாவில், ஆமன்துபில்லாஹ் என்று சொல்வதோடு முடிந்துவிட்டதாக எண்ணிவிடாதீர்கள். எங்கேயாவது ஒரு முறை ஒரு வகுப்பில் அல்லாஹ்வை ஈமான் கொண்டோம் என்று படிப்பதை கொண்டு மட்டும் ஈமானாக எண்ணி விடாதீர்கள்.

ஈமான் என்பது அல்லாஹ்வை மறக்காத நிலையில் உங்களை வைக்க வேண்டும். ஈமான் என்பது அல்லாஹ்வின் நினைவில் உங்களை பசுமையாக வைக்க வேண்டும். ஈமான் என்பது அல்லாஹ்வின் அச்சத்தில் உங்களை நிலைத்திருக்க செய்ய வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ

எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து இருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக வானவர்கள் வந்து (அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைக் கொண்டு சந்தோஷமடையுங்கள்'' என்றும் வானவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 41 : 30)

இதைத்தான் அல்லாஹ் சொல்கிறான். நீங்கள் ஈமான் கொண்டோம் என்று சொல்லிவிட்டு ஒரு திசையை முன்னோக்கிவிட்டால் போதும் என்று நினைத்துவிடாதீர்கள். தொழுகையில் திசையை முன்னோக்குவது நீங்கள் உயர்ந்த ஈமானாக, ‘பிர்’ என்ற அந்த நன்மையாக நீங்கள் எண்ணிவிடாதீர்கள். அல்லாஹ்வின் மீது உங்கள் நம்பிக்கையை அசைக்க முடியாத, உறுதியான அறுபடாத நம்பிக்கையாக இருக்க வேண்டும்.

செல்வத்தை கொடுத்தால்அல்லாஹ்வை நினைக்கிறான். சோதனையை கொடுத்தால், அல்லாஹ்வை மறந்து விடுகிறான். அல்லாஹ் அருளை வழங்கினால், அல்லாஹ்வை புகழ்கிறான். அல்லாஹ் அவனுடைய வாழ்வாதாரத்தை சுருக்கி விட்டால், அல்லாஹ்வை குறை கூற ஆரம்பித்துவிடுகிறான்.

இவர்களுடைய தொடர்பு எப்படி என்றால், அவர்கள் அறுந்த ஒரு நூலில் இருக்கிறார்கள். அல்லாஹ்வோடு தொடர்பு அறுந்த நிலையில் இருக்கிறார்கள்.

நன்மைகள் கிடைத்தால் ரொம்ப சந்தோஷமாக இருப்பான். என் இறைவன் என்னை எப்படி கவனித்தான் தெரியுமா, எப்படி வைத்திருக்கிறான் தெரியுமா?என்று. அல்லாஹ்வுடைய சோதனை அவனை தொட்டு பார்த்தால், அல்லாஹ்வுக்கும் அவனுக்கும் சம்மந்தம் இல்லாதவனை போன்று அவன் மாறி விடுகின்றான்.

ஆகவேதான் ஒரு முஃமின் அவனுடைய ஈமானுடைய நிலை அல்லாஹ்வின் மீதும், அல்லாஹ் விதித்த விதியின் மீதும் எப்படி இருக்க வேண்டும் என்றால், எந்த சோதனையிலும் எனது ரப்பு எனக்கு போதுமானவன். வறுமையிலும் அல்லாஹ் போதுமானவன், நோயிலும் அல்லாஹ் போதுமானவன், செல்வத்திலும் அல்லாஹ் போதுமானவன், கல்வியிலும் அல்லாஹ் போதுமானவன். எது இருந்தாலும் இல்லையென்றாலும் அவன் எனக்கு போதுமானவன்.

அடுத்து அல்லாஹ் சொல்கிறான்,

وَالْيَوْمِ الْآخِرِ

மறுமையை கொண்டு அவனுடைய நம்பிக்கை. (அல்குர்ஆன் 2 : 177)

எந்த ஒரு நிலையிலும், அல்லாஹ்வின் மீதும்,அல்லாஹ் ஏற்படுத்திய அந்த மறுமை நாளின் மீது உண்டான நம்பிக்கை.

அல்லாஹ் தன் மீது நம்பிக்கையை சொல்லும் போதெல்லாம், மறுமையின் நம்பிக்கையை சேர்த்தே சொல்கிறான் என்றால், இந்த மறுமையின் நம்பிக்கை தான் அல்லாஹ்வின் கட்டளைகள் மீது நம்மை நிலைத்திருக்கச் செய்யும்.

அல்லாஹ் கூறுகிறான் :

وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا

எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படுபவையாக இருக்கின்றன.(அல்குர்ஆன் 17:19)

மறுமையின் நோக்கம் உள்ளவர்தான், இந்த உலக வாழ்க்கையை அல்லாஹ்வுக்காக அர்பணிப்பார். அவரால் தான் இந்த உலக மக்களால் சாதிக்க முடியாத, இந்த உலக மக்களுக்கெல்லாம் சிரமமாக இருக்கக்கூடிய செயல்கள் எல்லாம் மறுமையின் தேடல் உள்ளவர்களுக்கு தான், சொர்க்கத்தின் தேடல் உள்ளவர்களுக்கு தான் அவையெல்லாம் ஒரு சாதாரணமான காரியமாக இருக்கும்.

وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ (45) الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ

எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே தவிர (மற்றவர்களுக்கு) மிகப்பளுவாகவே இருக்கும்.(உள்ளச்சமுடைய) அவர்களோ தங்கள் இறைவனை நிச்சயமாக சந்திப்போம் என்றும், அவனிடமே நிச்சயமாக செல்வோம் என்றும் உறுதியாக நம்புவார்கள்.(அல்குர்ஆன் 2 : 45,46)

யார் அல்லாஹ்வை சந்திப்போம் என்ற உணர்வோடு இருக்கிறார்களோ, அவர்களுக்கு தொழுகையை தவிர, இந்த உலகத்தில் இன்பமானது எதுவும் இருக்காது. உலக செல்வங்கள், தோட்டம் துறவு, மனைவி மக்கள் பிள்ளை இந்த உலகத்தின் இன்பங்களெல்லாம் அவனுக்கு கொடுக்கப்பட்டு, இரண்டு ரக்ஆத் தொழுகை ஒரு பக்கத்தில் வைக்கப்பட்டு, இந்த இரண்டில் எதை நீ தேர்ந்தெடுப்பாய் என்றால், ஒரு முஃமின் தொழுகையை தேர்ந்தெடுப்பான். ஒரு முஃமின் அல்லாஹ்விற்கு முன்னால் ஸுஜுது செய்வதை தேர்ந்தெடுப்பான்.

குபைப் ரழியல்லாஹு அன்ஹு,குறைஷி காஃபிர்களால் கொல்லப்படுவதற்க்காக, அதுவும் சாதாரணமான கொலை அல்ல. அவரை இலக்காக நிறுத்தி வைத்து, அத்தனை காஃபிர்களும் அம்பால் எரிய போகிறார்கள். ஈட்டியால் கொல்லப்போகிறார்கள்.

அப்பொழுது ஃகுபைப், எனக்கு அவகாசம் கொடுங்கள், இரண்டு ரக்அத் தொழுது கொள்கிறேன் என்று கேட்கிறார்கள்.

குபைப் தொழுதுவிட்டு சொல்கிறார், “அல்லாஹ்வே! எனது ஸலாமை உனது தூதருக்கு எடுத்துச் சொல்”. அதே நேரத்தில் அல்லாஹ் ரஸூலுல்லாஹ்விடம் சொல்கிறான், குபைப் கொல்லப்பட போகிறார், அவர் உங்களுக்கு ஸலாம் சொல்கிறார்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்சொன்னார்கள்,

وَجُعِلَتْ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ

 

எனது கண் குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டிருக்கிறது.

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸுனனுன் நஸாயி, எண் : 3879.

அழகானஅன்பான மனைவிகள், பாசமான மனைவிகளை கொடுக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்என்ன சொல்கிறார்கள்? இன்பம் எதில் இருக்கிறது? என் கண் குளிர்ச்சி எதில் இருக்கிறது?

ஆயிஷாவில் இல்லை. ஹஃப்சாவில் இல்லை. உம்மு சலமாவில் இல்லை. என் கண் குளிர்ச்சி ஃபாத்திமாவில் இல்லை.

இவர்களெல்லாம் என் மகிழ்ச்சிக்கு உரியவர்கள், எனது விருப்பத்திற்குரியவர்கள். என் கண்குளிர்ச்சி இரண்டு ரக்அத் தொழுகையில் இருக்கிறது. அல்லாஹு அக்பர்!

நினைத்து பாருங்கள்! ஒரு முஃமினுடைய நிலை, மறுமை என்று நினைக்கும் பொழுது, மறுமையின் அமல்களை தான் உயர்வாக பார்ப்பான்.

இன்று முஸ்லிம்களை பாருங்கள், ஃபர்ளான தொழுகையின் அருமையே தெரியாமல் இருக்கிறார்கள்.

அல்லாஹ் சொல்கிறான்,

فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا

(இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டார்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே (அழிவையே) சந்திப்பார்கள். (அல்குர்ஆன் 19 : 59)

கண்ணியத்திற்குரியவர்களே! ஆகிரத்துடைய நம்பிக்கை, அல்லாஹ்விற்கு முன்னால் நிற்க வேண்டும் என்ற நம்பிக்கை, இந்த நம்பிக்கை தான் மார்க்கத்தை பின்பற்றுவதை நமக்கு இலகுவாக்கும். மார்கத்தில் முன்னேறி செல்வதை நமக்கு இலகுவாக ஆக்கும். இந்த மார்க்கத்திற்காக அர்ப்பணிப்பு செய்வதை நமக்கு இலகுவாக ஆக்கும்.

அலி ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் சொல்கிறார்கள்,

فَكُونُوا مِنْ أَبْنَاءِ الْآخِرَةِ وَلَا تَكُونُوا مِنْ أَبْنَاءِ الدُّنْيَا

துன்யா,ஆஃகிரா இந்த இரண்டுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். நீங்கள் மறுமையின் பிள்ளைகளாக இருங்கள், துன்யாவின் பிள்ளைகளாக ஆகி விடாதீர்கள்.

நூல் : புகாரி.

ஆம் இந்த ஆகிரத்தினுடைய நம்பிக்கை தான் உள்ளத்திலிருந்து அல்லாஹ் எதிர்பார்க்கிறான். சஹாபாக்களால் மிகப் பெரிய தியாகங்களை சிறு சிறு படைகளால்  எத்தனையோ சிறு படைகள், பெரும்படைகளை வெற்றி கொண்டிருக்கின்றன.

எதன் மூலமாக? அல்லாஹ்வின் மீதும் ஆகிரத்தின் மீதும் நம்பிக்கை இருந்த காரணத்தால். காலித் இப்னு வலீத்ரழியல்லாஹு அன்ஹுரோமர்களை எதிர்த்த போது, கிஸ்ராவை எதிர்த்த போது, அந்த பெரும் பயிற்சி கொடுக்கப்பட்ட படையை எதிர்த்த போது, அவர்கள் அந்த மன்னர்களுக்கு, அந்த படை தளபதிகளுக்கு எழுதியனுப்பிய கடிதத்தில் எதை குறிப்பிட்டார்கள்.

அவர்களை மிரட்டினார்களா? தங்களது ஆயுதத்தை கொண்டு மிரட்டினார்களா? தங்களுடைய போர் திறமையை கொண்டு மிரட்டினார்களா? தங்களிடத்தில் இருக்கக்கூடிய படை பட்டாளத்தின் எண்ணிக்கையை கொண்டு மிரட்டினார்களா? இல்லையே.

சாதாரண வாசகம். இரண்டு வரிகளில் பதிந்த வாசகம். என்னோடு ஒரு கூட்டம் இருக்கிறது. அல்லாஹ்வை புகழ்ந்ததற்கு பிறகு, தூதரின் மீது சலவாத்தை எழுதியதற்கு பிறகு, காலித் சொல்லக்கூடிய வார்த்தை என்ன?

என்னோடு ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த கூட்டத்திற்கு மரணம் பிடிக்கும். அல்லாஹ்விற்க்காக சாக வேண்டும் என்று அவர்களுக்கு பிடிக்கும். எப்படி உங்களுக்கு மதுவும், வாழ்க்கையும் பிடிக்குமோ அதுபோன்று

இது தான் எழுதினார். இது தான் கிஸ்ராக்களுடைய, கைசர்களுடைய உள்ளதை ஆட்டம் காண செய்தன. அவர்களுடைய ஆட்சியை பறித்தன. அவர்களுடைய தூக்கத்தை பறித்தன.

தோழர்களின் ஒரு சிறு கூட்டம், கிஸ்ரா கைசருடைய அந்த பூமியில் இறங்கிவிட்டால், தலைதெறிக்க ஓடுவதை தவிர, புறமுதுகுகாட்டுவதை தவிர, அல்லது வேறெங்காவது தனது உயிரை பாதுகாப்பதற்கு ஓடுவதை தவிர, அவர்களுக்கு வேறு வழியே இல்லாமல் போனது.

யார் அல்லாஹ்வை சந்திப்பதற்கு தயாராக இருக்கிறார்களோ, அவர்களுக்கு தான் மரணம் பிடிக்கும். அல்லாஹ்வை சந்திப்பதற்கு தயாராக இருப்பவன் யார்? அமல்களை அதிகம் செய்திருப்பவன்.

அல்லாஹ் யூதர்களைப் பற்றி சொல்லும்போது,

وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَنْ يُعَمَّرَ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ

மேலும், (நபியே! அந்த யூதர்கள்) மற்ற மனிதர்களை விடவும் (குறிப்பாக) இணைவைப்பவர்களை விடவும் (நீண்ட நாள்) உயிர்வாழ மிகவும் பேராசை உடையவர்களாக இருப்பதை நிச்சயம் காண்பீர்! அவர்களில் ஒவ்வொருவனும் ‘‘தான் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ வேண்டுமே?'' என்று விரும்புவான். (அவ்வாறு நீண்ட நாள்) உயிருடன் இருக்க அவனை விட்டுவைத்தாலும் அது வேதனையிலிருந்து ஒரு சிறிதும் அவனைத் தப்பிக்க வைத்துவிடாது. அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான். (அல்குர்ஆன் 2:96)

அடுத்து அல்லாஹ் சொல்கிறான்,

وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ

அல்லாஹ்வுடைய வானவர்களின் மீது நம்பிக்கை. அல்லாஹ் இறக்கிய வேதத்தின் மீது நம்பிக்கை, அல்லாஹ் அனுப்பிய தூதர்களின் மீது நம்பிக்கை. (அல்குர்ஆன்2 : 177)

இந்த வேதத்தின் மீது நம்பிக்கை, தூதர்களின் மீது நம்பிக்கை என்பது ஏற்றுக்கொள்வதோடு நின்று விடாது.

இன்று,மக்கள் தன்னுடைய உலக விஷயங்களுக்கு அறிவுரை கேட்பதற்காக, உடலில் நோய் என்றால் தனக்கு ஒரு அறிவுரை கொடுப்பதற்க்காக,தனக்கென்று ஒரு மருத்துவரை அணுகுகின்றார்கள்.

தனக்கு அரசாங்கத்தோடு ஒரு பிரச்சனை என்றால், அதை சமாளிப்பதற்காக தனக்கென்று ஒரு அட்வகெட்டை அணுகுகிறார்கள். தனக்கு வருவாயில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அதை சமாளிப்பதற்காக தனக்கென்று ஒரு ஆடிட்டரை அணுகுகிறார்கள்.

அன்பிற்குரியவர்களே! என்றைக்காவது நமது இம்மை மறுமை பிரச்சனைக்கு குர்ஆனை சார்ந்திருக்கிறோமா? குர்ஆனின் பக்கம் திரும்பியிருக்கிறோமா? கொஞ்சம் ஒவ்வொருவரும் நமது உள்ளத்தை தொட்டு பாருங்கள். யோசித்து பாருங்கள்.

குர்ஆனை ஓதுகிறோம். ரமலான் மாதம் வரப்போகிறது. இதுவரை குர்ஆனை திறக்காதவர்களெல்லாம் திறக்க போகிறார்கள். எத்தனையோ வீடுகளில் போர்த்தி உயரத்தில் வைக்கப்பட்டிருந்த குர்ஆன் தூசி தட்டப்படும் இன்னும் கொஞ்ச நாளில். அந்த குர்ஆன் உறையிலிருந்து கழட்டப்படும், பரக்கத்துக்காக, தப்பு என்று சொல்லவில்லை.

ஆனால்,அந்த பரக்கத்தை அடைவதற்கு முன்னால், அந்த குர்ஆன் ஹிதாயத்திற்காக இறக்கப்பட்டது என்பதை மறந்து விட வேண்டாம்.

குர்ஆனோடு என்ன தொடர்பு? காலையில் அதை எடுத்து ஓதுகிறோமா?ஓதக்கூடிய வசனங்களை புரிந்தோமா? புரிந்த வசனங்களை வாழ்க்கையில் உணர்ந்து பார்த்தோமா? அதை நாம் பிறருக்கு எடுத்து சொன்னோமா? அல்லாஹ்வுடைய வேதத்தை எடுத்து சொல்லாத மனிதனுக்கு நாவு எதற்கு? அல்லாஹ்வின் வேதத்தை எடுத்து சொல்லாத, படிக்காத, உணராத மனிதனுக்கு கண் எதற்கு? யோசித்துப் பாருங்கள்.

குர்ஆனுக்காக வேண்டி உழைக்காத மனிதனுக்கு கை எதற்கு, கால் எதற்கு, அல்லாஹ் அவனுக்கு கொடுத்த உறுப்புகள் எதற்கு?

இந்த உறுப்புகளை கொண்டு இந்த துன்யாவின் தேவைகளை எல்லாம் அவன் நிறைவேற்றி கொள்கிறான். ஆனால், அல்லாஹ்வின் வேதத்திற்கு அவன் என்ன செய்திருக்கிறான்? யோசித்து பாருங்கள்.

அல்லாஹ் எந்த வேதத்தை இறுதி வேதமாக இறக்கினானோ, அந்த வேதத்திற்கு இவன் செய்த கடமை என்ன? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அல்லாஹ் எனக்கு கண்ணை கொடுத்தான், இந்த கண்ணை கொண்டு இந்த குர்ஆனை எத்தனை மணிநேரம் ஒரு நாளைக்கு பார்க்கிறேன்? எனக்கு கொடுத்த அறிவை கொண்டு குர்ஆனை எவ்வளவு நேரம் ஓதுகிறேன். அதைப்பற்றி நான் எவ்வளவு நேரம் சிந்திக்கிறேன்.

இன்று, மனிதனின் ஒரு பெரும்பகுதி வாழ்க்கை,பல குப்பைகளை படித்து முடிப்பதில் அவனது வாழ்க்கை கழிகிறது. பிறகு தொழில், வியாபாரம் அல்லது வேலை என்று வந்துவிட்டால், வாழ்க்கையின் இரண்டாவது பகுதி, வாழ்க்கையை மூன்று பகுதியாக பிரித்தால்,

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்சொன்னார்கள், எனது உம்மத்துடைய வயது அறுபதிலிருந்து எழுபது வரை இருக்கும்.

இப்போது அறுபது என்று வைத்துக்கொண்டால், இருபது வயது வரை படிப்பதில் கழிந்து விடுகிறது. அடுத்த இருபது வயது வியாபாரத்தில் கழிகிறது. பிறகு இருபது வயதையும் இன்னும் எதில் தான் கழித்து கொண்டிருக்கிறான் மனிதன் யோசித்து பாருங்கள்.

அல்லாஹ்வுடைய தீனுக்காக, அல்லாஹ் இறக்கிய இந்த வேதத்துக்காக நாம் எதை மிச்சப்படுத்தி வைத்திருக்கிறோம்.

நாம் செலவழிப்பதற்கு மிகவும் தகுந்தது அல்லாஹ்வுடைய வேதம். நாம் படிப்பதற்கு, பரப்புவதற்கு மிகத் தகுதியானது அல்லாஹ்வுடைய வேதம். கவலையில் ஓதினால் மகிழ்ச்சி அடையலாம். பிரச்சனைகளில் ஓதினால், அதற்குரிய தீர்வை அடையலாம்.

அவர்கள் அப்படி ஓதும்போது ஓதுகின்ற அந்த எழுத்துகளுக்கு ஏற்ப அவர்களுக்கு நன்மை இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சொன்னார்கள், நான் அலிஃப், லாம், மீம் ஐ ஒரு எழுத்தாக சொல்ல மாட்டேன். லாம் ஒரு எழுத்து, அதற்கு பத்து நன்மை உண்டு. மீம் ஒரு எழுத்து அதற்கு பத்து நன்மை உண்டு. அலிஃப் ஒரு எழுத்து அதற்கு பத்து நன்மை உண்டு.

நன்மை கிடைத்துவிடும்.ஆனால், அதைக் கொண்டு அல்லாஹ் என்ன ஹிதாயத்தை நாடினானோ, என்ன நற்செய்தியை அல்லாஹ் நாடுகிறானோ, என்ன ஒரு அறிவுரையை அல்லாஹ் நாடினானோ அதை எதைக்கொண்டு அடைய முடியும்? அந்த குர்ஆனை படிப்பதைக் கொண்டு, அதை உணர்வதைக் கொண்டு, அதை சிந்திப்பதைக் கொண்டு.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன், எங்கே கோபமாக கேட்கிறான், எங்கே கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துகிறான் என்று குர்ஆனை கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்து பாருங்கள்.

மென்மையை விரும்பக் கூடிய ரஹ்மான், அன்பை விரும்பக் கூடிய ரஹ்மான் மக்களுக்கு கருணையோடு போதிக்கக்கூடிய ரஹ்மான் சில இடங்களில் கோபத்தோடும் பேசுகிறான். சில இடங்களில் கடுமையாகவும் அல்லாஹ் கண்டிக்கிறான்.

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا

நீங்கள் குர்ஆனை ஆழ்ந்து சிந்திக்கமாட்டீர்களா? உங்கள் உள்ளங்களில் பூட்டுகள் போடப்பட்டிருக்கின்றனவா? (அல்குர்ஆன் 47 : 24)

இதைவிட கோபமான ஒரு வார்த்தையை அல்லாஹ்விடத்திலிருந்து அடியான் எதிர்பார்க்க முடியுமா?

أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ وَلَا يَكُونُوا كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ

நம்பிக்கை கொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைத்தும், அவன் இறக்கிவைத்த சத்திய (வசன)ங்களைக் கவனித்தும் பயப்படக்கூடிய நேரம் (இன்னும்) வரவில்லையா? இவர்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல், இவர்களும் ஆகிவிட வேண்டாம். (இவ்வாறே) அவர்கள் மீதும் ஒரு நீண்ட காலம் கடந்து விட்டது. ஆகவே, அவர்களுடைய உள்ளங்கள் கடினமாக இருகிவிட்டன. இன்னும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளாகி விட்டனர்.(அல்குர்ஆன் 57:16)

உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு, தொழுகையில் நின்று அவர்கள் ஓதினார்கள் என்றால், ஏறக்குறைய மஸ்ஜிதுந் நபவியில் அந்த காலத்தில், அவ்வளவு பெரிய ஸஃப்பில், ஏழு எட்டு ஸஃப்ஃபுகள் நிற்பார்களேயானால், எட்டாவது ஸஃப்பு வரை அவர்கள் அழக்கூடிய சப்தத்தை கேட்டு மக்கள் அழுவார்கள். ஒவ்வொரு வசனத்தை ஓதும்போது உணர்ந்தார்கள், புரிந்தார்கள்.

அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் விஷேச தன்மையே, அவர்களால் நூற்றுக்கணக்கான பெண்கள், சிறுவர்கள் மக்காவில் எதன் காரணமாக முஸ்லிம் ஆனார்கள் தெரியுமா? குறைஷி காஃபிர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

அபூபக்ரே! இரண்டில் ஒன்றை தேர்ந்தெடு. ஒன்று,உனது வீட்டிற்கு வெளியே நின்று குர்ஆனை ஓதி இப்படி தொழுவதை நிறுத்து. இல்லையென்றால் ஊரைவிட்டு ஓடிவிடு.

அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹுதனது வீட்டிற்கு வெளியில் ஒரு முற்றத்தை வைத்திருந்தார்கள். நபியிடமிருந்து கற்ற வேத வசனங்களை, அந்த இடத்தில் நின்று கொண்டு, தொழுகையில் அழகாக ஓதிக்கொண்டிருப்பார்கள்.

பக்கத்தில் உள்ள பெண்கள், சிறுவர்கள் எல்லாம் வந்து உட்கார்ந்து விடுவார்கள். அவர்கள் ஓதக்கூடிய குர்ஆனின் தொனியில், அவர்கள் அந்த குர்ஆனாடு சேர்ந்து அழக்கூடிய அழுகையில், மறுமையைப்பற்றி, அல்லாஹ்வை பற்றி ஓதும்போதுஅந்த பெண்களும் அழுவார்கள். அந்த சிறுவர்களும் அழுவார்கள்.

இப்படியே, பல குரைஷி பெண்களின் உள்ளங்களில் அவர்களுடைய சிறுவர்களின் உள்ளங்களில் இஸ்லாம் பதிந்துவிட்டது.

இதைப்பார்த்த குரைஷி காஃபிர்கள், அபூபக்ரிடத்தில் வந்து, ஒன்று தொழுகையை விடு, இல்லையென்றால் ஊரை விட்டு ஓடிவிடு.

அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், மூட்டை முடிச்சுகளை எடுத்து கொண்டு, அல்லாஹ்வை தொழ வேண்டும்,

மூஃமின்களே! என்னுடைய பூமி விசாலமானது. எங்கே இருந்தாலும் என்னை நீங்கள் வணங்குங்கள். அதுதான் உங்களுக்கு நோக்கம். இங்கே தான் அங்கே தான் என்று இல்லை.

எடுத்து கொண்டு கிளம்பி விட்டார்கள். இப்னு துஃக்னா பார்க்கிறார். அபூபக்கர் உனக்கு என்ன ஏற்பட்டது. எனது மக்கள் நான் தொழுவதை தடுக்கிறார்கள். எனவே நான் இந்த ஊரைவிட்டு வெளியே செல்கிறேன். தனது பாதுகாப்பை கொடுத்து அழைத்து வருகிறார்.

கண்ணியத்திற்குரியவர்களே! இதுதான் குர்ஆனுடைய ஈடுபாடு.

அல்லாஹ் சொல்கிறான், “நன்மை என்பது அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது. அந்த நம்பிக்கை உள்ளத்தில் பசுமையாக இருப்பது, மறுமையின் மீது நம்பிக்கை. அந்த நம்பிக்கை அவருடைய வாழ்க்கையில் எதார்த்தமாக உண்மையாக வெளிப்படுவது.

அல்லாஹ்வுடைய வானவர்களின் மீது நம்பிக்கை, அல்லாஹ்வுடைய வேதத்தின் மீது நம்பிக்கை, அல்லாஹ் அனுப்பிய நபிமார்களின் மீது நம்பிக்கை. அதில் இறுதி நபியாகிய முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களோடு அவர்களின் சுன்னாவை பின்பற்றுவதோடு, அவர்களை மனமாற நேசிப்பதோடு, அவர்களின் சுன்னாவிற்காக தன்னை அர்பணிப்பதைக் கொண்டு, தனது வாழ்க்கையில் அதை படிப்பதைக் கொண்டு பரப்புவதைக் கொண்டு.

இதன் மூலமாக தான் நீங்கள் நன்மையின் உச்சத்தை அடைய முடியுமே தவிர, முகத்தை திருப்பி கொண்டு, திசைகளை வைத்து பெருமையை பேசி நீங்கள் ஈமானையும் அடைய முடியாது, நன்மையின் உச்சத்தையும் அடைய முடியாது என்று அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.

அடுத்து ஆயத்துடைய தொடரில் மேலும் பல விளக்கங்கள் இருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அடுத்த ஜும்ஆக்களில் பார்ப்போம்.

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/