HOME      Khutba      சகராதுல் மவ்த் | Tamil Bayan - 315   
 

சகராதுல் மவ்த் | Tamil Bayan - 315

           

சகராதுல் மவ்த் | Tamil Bayan - 315


சகராதுல் மவ்த்

ஜுமுஆ குத்பா தலைப்பு : சக்ராதுல் மவ்த்

வரிசை : 315

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 14-02-2014 | 14-04-1435

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரியவர்களே!அல்லாஹ் சுப்ஹாஹு தஆலா பல விஷயங்களை குறித்து நமக்கு எச்சரிக்கை செய்கிறான்.இன்னும் நினைவூட்டுகிறான்.அல்லாஹ்வின் அந்த எச்சரிக்கைகளை ஒருபோதும் நாம் அலட்சியம் செய்து விடக்கூடாது. ஒருபோதும் நாம் கவனக்குறைவாக கையாண்டு விடக்கூடாது.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா எச்சரித்த விஷயங்களில் ஒன்று தான், நாம் சந்திக்க இருக்கின்ற, எதன் சந்திப்பிலிருந்து நம்மால் ஒருபோதும் தப்பிக்க முடியாதோ, அந்த மரணம்.

மரணம் என்பது அது ஒரு சாதாரணமான நிகழ்வு அல்ல.இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக அந்த மரணத்தை சந்திக்க வேண்டும். வாழ்க்கையில் ஒரு முறை தான் அந்த சந்திப்பு.

உலகத்தில் மற்றவர்களை நாம் சந்திப்பதுண்டு. ஒன்றுக்குப் பலமுறை சந்திக்கலாம். இன்று, நாளை, மறுநாள் என்று சந்திப்பதற்கு வாக்கு கொடுக்கலாம்.

ஆனால், மரணம் என்ற அந்த நிகழ்வை நாம் ஒருமுறைதான் சந்திக்க போகின்றோம். இரண்டாவது முறை அந்த மரணத்தை நாம் சந்திக்க முடியாது.

கண்ணியத்திற்குரிய இறைத்தூதர்கள் அந்த மரணத்தை குறித்து மரணத்தின் அந்த நிகழ்வை குறித்து பயந்து கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள். அல்லாஹு தஆலா மரணத்தைப் பற்றி அல்குர்ஆனில் கூறும் போது, மக்களுக்கு அச்சமூட்டும் விதத்தில் தான் கூறுகின்றான்.

قُلْ يَاأَيُّهَا الَّذِينَ هَادُوا إِنْ زَعَمْتُمْ أَنَّكُمْ أَوْلِيَاءُ لِلَّهِ مِنْ دُونِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (6) وَلَا يَتَمَنَّوْنَهُ أَبَدًا بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ (7) قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ

(நபியே!) நீர் கூறுவீராக: ‘‘யூதர்களே! நீங்கள் மற்ற மனிதர்களைவிட அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள் என்று மெய்யாகவே நீங்கள் எண்ணிக்கொண்டிருந்து, அந்த எண்ணத்தில் நீங்கள் உண்மையானவர்களாகவும் இருந்தால், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்.'' இவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (பாவத்)தின் காரணமாக, எக்காலத்திலும் இவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். அல்லாஹ் இந்த அநியாயக்காரர்களை நன்கறிந்தவன். (நபியே! அவர்களை நோக்கி,) கூறுவீராக: ‘‘நீங்கள் வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாகப் பிடித்துக் கொள்ளும். பின்னர், மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனிடம் கொண்டு போகப்பட்டு, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 62 : 6-8)

வசனத்தின் கருத்து : (பாவிகளை பொறுத்த வரை மரணத்தை விட ஒரு மோசமான சந்திப்பு வேறு ஒன்றும் இருக்காது.)

யூதர்கள் பெருமை அடித்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் நபிமார்களின் பிச்சளங்கள். எங்களை அல்லாஹ் ஒன்றும் செய்ய மாட்டான்.

நாங்களெல்லாம் இறந்துவிட்டால் நேரடியாக சொர்க்கம் சென்று விடுவோம் என்று அவர்கள் பெருமை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் அல்லாஹ்வின் குழந்தைகள், அல்லாஹ்வின் நேசர்கள் என்று தம்மைப் பற்றிப் பெருமையாகப் பேசினார்கள்.

அல்லாஹ் சொல்கிறான்; நீங்கள்தான் அல்லாஹ்வின் நேசர்கள் என்று பிதற்றுகின்றீர்களா? மக்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கம் கிடைக்காது, நீங்கள் தான் அல்லாஹ்வின் நெருக்கம் உள்ளவர்கள் என்று பெருமை கொள்கிறார்களா?

நபியே! நீங்கள் சொல்லுங்கள்; மரணத்தை கொஞ்சம் நீங்கள் ஆசைப்படுங்கள். உங்கள் கூற்றில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்.

அல்லாஹ் சொல்கிறான்; ஒருக்காலும் அவர்கள் அந்த மரணத்தை ஆசைப்படவே மாட்டார்கள்.

சூரத்துல் பகராவில் அல்லாஹ் குறிப்பிடுவது போன்று.

ஆயிரம் ஆண்டுகள் இந்த உலகத்தில் வாழ்க்கை வாழ வேண்டுமென்று தான் அவர்கள் ஆசைப்படுவார்களே தவிர, மரணத்தை அவர்கள் நினைவு கூறமாட்டார்கள்.(அல்குர்ஆன் 2 : 96)

காரணம், அவர்களுடைய கரங்கள் அவ்வளவு பாவங்கள் செய்திருக்கின்றன.

இதைத்தான் நாம் கவனிக்க வேண்டும். எந்த ஒரு மனிதன் பாவம் அதிகமாக செய்வானோ, வணக்க வழிபாடுகளை அலட்சியம் செய்வானோ, அல்லாஹ்வின் கட்டளைகளை பாழாக்குவானோ, அவன் ஒருகாலும் மரணத்தை நினைக்க மாட்டான். மரணத்தை அவன் வெறுப்பான். மரணம் தனக்கு வரக்கூடாது என்பதாகவே அவன் நினைத்துக் கொண்டிருப்பான்.

அல்லாஹ் சொல்கிறான்:

எந்த மரணத்தை பார்த்து நீங்கள் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களை சந்திக்க வரும். மறைவானவற்றையும் வெளிப்படையான விஷயங்களையும் நன்கு அறிந்த அந்த இறைவனிடம் நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 62 : 8)

நீங்கள் செய்த அத்தனை விஷயங்களையும் அவன் உங்களுக்கு அறிவிப்பான். உங்கள் கண்கள் செய்தவை, உங்கள் காதுகள் கேட்டவை, உங்களுடைய கரங்களால் நீங்கள் பிடித்தவை, உங்கள் கால்களால் நீங்கள் நடந்தவை என அனைத்து விஷயங்களையும் அல்லாஹ் பதிவுசெய்து வைத்திருக்கிறான்.

وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُسْتَطَرٌ

சிறிதோ, பெரிதோ அனைத்துமே அதில் வரையப்பட்டிருக்கும். (அல்குர்ஆன் 54 : 53)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். (அல்குர்ஆன் 3 : 185)

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரும் கண்டிப்பாக மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும்.

மனிதன் எப்படி உணவை சுவைக்கிறானோ, அது கசப்பாக இருக்கிறதா? சுவையாக இக்கிறதா? இனிப்பா? புளிப்பா? என்று மனிதனின் நாவு உணர்வதை போல, அவனுடைய ஆன்மா அவனுடைய மரணத்தை சுவைக்கும்.

அல்லாஹு அக்பர்! அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அந்த மரணத்தை மனிதனுக்கு கொடுப்பதற்காக, உயிரை கைப்பற்றுவதற்காக வானவர்களை அவன் தயார் செய்து வைத்திருக்கிறான்.

அந்த வானவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்த விதத்திலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்.

وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً حَتَّى إِذَا جَاءَ أَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لَا يُفَرِّطُونَ

அவன் தன் அடியார்களை அடக்கி ஆளுகிறான்; மேலும், உங்களுக்குப் பாதுகாவலர்களையும் ஏற்படுத்துகிறான். (மரண நேரம் வரும்வரை அவர்கள் உங்களை பாதுகாக்கின்றனர்,) பின்னர், உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால் நமது (வானவத்) தூதர்கள் அவரை உயிர் வாங்குகின்றனர். அவர்கள் (குறித்த காலத்திற்கு முன்னரோ, பின்னரோ உயிரைக் கைப்பற்றி) ஏதும் தவறிழைப்பதில்லை. (அல்குர்ஆன் 6 : 61)

எந்த ஒரு மனிதனும் தனது செல்வத்தால்,தனது ஆட்சி அதிகாரத்தால்,தனது கல்வியினால் வேறு எந்த ஒன்றினாலும் நான் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து விட்டேன் என்று எண்ண வேண்டாம்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சில காலங்கள் வேண்டுமானால் அவனுக்கு அவகாசம் அளிப்பான். அல்லாஹ் அவகாசம் அளிப்பதை யாரும் நினைத்துவிட வேண்டாம், அல்லாஹ் நம்மை கண்டுகொள்ளாமல் இருக்கிறான் என்று.

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ

(நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீர் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம், திறந்த கண் திறந்தவாறே இருந்து விடக்கூடிய (கொடிய தொரு மறுமை) நாள் வரும் வரைதான்! (அல்குர்ஆன் 14 : 42)

மேலும், அல்லாஹ் இந்த மரணத்தைப் பற்றிச் சொல்கிறான்:

نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ

மரணத்தை நாம் உங்களுக்கு விதித்து விட்டோம். அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. (அல்குர்ஆன்56 : 6)

அந்த வானவர்கள் முந்தியும் வரமாட்டார்கள்,பிந்தியும் வரமாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்தில் வருவார்கள்.

நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை பற்றி அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்.

ஒரு தாய் தன் மகனுக்கு பால் கொடுக்கிறாளே! என்பதையும் அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். பிள்ளைகளை எல்லாம் விட்டுவிட்டு இந்த மனிதன் சம்பாதிப்பதற்காக வெளியேறி இருக்கின்றானே! என்பதைப் பற்றியும் அவர் பொருட்படுத்த மாட்டார்.

தேவை உள்ளவர்களின் தேவைகளை அவர்கள் கண்டுகொள்ள மாட்டார். அவருக்கு இடப்பட்டதை அவர் நிறைவேற்றுவார். அல்லாஹ் சுபஹானஹு தஆலா அப்படித்தான் வந்த வானவரை அமைத்திருக்கிறான்.

அந்த மரணத்துடைய நிலையைப் பற்றி அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்கிறான். மரணத்தருவாய் என்பது ஒரு பயங்கரமான மயக்கம். அது ஒரு பயங்கரமான சூழ்நிலை. அந்த மயக்கத்திற்கு எந்த ஒரு மருத்துவமும் கிடையாது.

அந்த பதட்டமான திடுக்கமான நிலைக்கு எந்த ஒரு மருத்துவத்தை செய்தும், எப்படிப்பட்ட மருந்து கொடுத்தும், ஏன் எத்தனையோ ஆயத்துகளை ஓதினாலும் கூட, அந்த ஒரு திடுக்கத்திலிருந்து அவனை பாதுகாக்க முடியாது.

அல்லாஹ் அந்த மரணத்தை பற்றி அந்த மரணத்தருவாயை பற்றிக் சொல்லும்பொழுதுமரணத்தின் அந்த மயக்கம்,மரணத்தின் கொடூரம் கடுமையான ஒரு நிகழ்வு என்று அல்லாஹ் சொல்கிறான்.

وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ

மரணத்தின் சிரமம் மெய்யாகவே வந்துவிடும் சமயத்தில் (அவனை நோக்கி) ‘‘நீ தப்பிவிடக் கருதியது இதுதான்'' (என்று கூறப்படும்.) (அல்குர்ஆன் 50 : 19)

சத்தியமான அந்த மரணம் வந்தே தீரும்.அதை யாரும் பொய்ப்பிக்க முடியாது. உண்மைகளை கொண்டுவரும்.

கண்ணியத்திற்குரியவர்களே! அந்த மரணம் வரும் பொழுது கடுமையான மயக்கம் அந்த மனிதனை சூழ்ந்து கொள்ளும்.

அந்த மயக்கத்தைப் பற்றி அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இரண்டு இடங்களில் சொல்கிறான்.

ஸூரத்துல் அஹ்சாப் உடைய 19-ஆவது வசனத்தில் முனாஃபிக்குகளை பற்றி அல்லாஹ் சொல்கிறான்.

உள்ளத்தில் நிராகரிப்பை மறைத்து வைத்துக் கொண்டு நாவில் ஈமானைப் பேசக்கூடிய, உள்ளத்தில் நபியின் மீது வெறுப்பை வைத்துக் கொண்டு வெளியில் ஈமானை பேசக்கூடிய அந்த முனாஃபிக்குகள்-நயவஞ்சகர்கள் பற்றி அல்லாஹ் சொல்கிறான்:

أَشِحَّةً عَلَيْكُمْ فَإِذَا جَاءَ الْخَوْفُ رَأَيْتَهُمْ يَنْظُرُونَ إِلَيْكَ تَدُورُ أَعْيُنُهُمْ كَالَّذِي يُغْشَى عَلَيْهِ مِنَ الْمَوْتِ

(அவர்கள்) உங்கள் விஷயத்தில் கஞ்சத்தனத்தைக் கைக்கொண்டிருக்கின்றனர். (நபியே!) ஒரு பயம் சம்பவிக்கும் சமயத்தில், மரண தருவாயில் மயங்கிக் கிடப்பவர்களைப்போல் அவர்கள் கண்கள் சுழன்று சுழன்று உங்களைப் பார்த்த வண்ணமாய் இருப்பதை நீர் காண்பீர். (அல்குர்ஆன் 33 : 19)

இந்த இடத்தில் அல்லாஹ், முனாஃபிக்குகளுடைய நிலையை மரணத் தருவாயில் இருக்கின்ற மனிதனின் நிலைக்கு ஒப்பிடுகிறான்.

கண்ணியத்திற்குரியவர்களே!பாவிகளின் உயிர்களை வாங்குவதற்காகவே சில வானவர்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அனுப்பி வைப்பான்.

அவர்கள் சாதாரணமான வானவர்கள் அல்ல, மிகக் கடுமையான வானவர்கள்.

இந்த வானவர்களின் வருகையைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான் :

وَلَوْ تَرَى إِذِ الظَّالِمُونَ فِي غَمَرَاتِ الْمَوْتِ وَالْمَلَائِكَةُ بَاسِطُو أَيْدِيهِمْ أَخْرِجُوا أَنْفُسَكُمُ الْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنْتُمْ تَقُولُونَ عَلَى اللَّهِ غَيْرَ الْحَقِّ وَكُنْتُمْ عَنْ آيَاتِهِ تَسْتَكْبِرُونَ

இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) ‘‘உங்கள் உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும். நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி, நீங்கள் அவனுடைய வசனங்களை பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும்'' (என்று கூறுவதை நீர் காண்பீர்). (அல்குர்ஆன்6 : 93)

ஹதீஸில் இதன் விளக்கத்தை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்.

அந்த வானவர்கள் மரணத்தருவாயில் இருக்கின்ற மனிதனிடத்தில் சொல்வார்கள். (சுற்றி இருக்கக்கூடிய நாம் அதைக் கேட்க முடியாது. அந்த மனிதன் கேட்பான்.)

உங்கள் உயிர்களை வெளியே கொண்டு வாருங்கள். இந்த வானவர்களை பார்த்தவுடனே அந்த உயிர் உடலை கவ்விக் கொள்ளும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு உதாரணம் சொல்கிறார்கள்:

فَتُفَرَّقُ فِي جَسَدِهِ، فَيَنْتَزِعُهَا كَمَا يُنْتَزَعُ السَّفُّودُ مِنَ الصُّوفِ الْمَبْلُولِ، فَيَأْخُذُهَا

ஒரு முள்ளின் மீது போடப்பட்ட ஈரத்துணி, அந்த முள்ளில் எப்படி பிடித்துக் கொள்கிறதோ அதுபோன்று அவருடைய உயிர் அவருடைய உடலை சொருகிக் கொள்ளும். அந்த வானவர்கள் அந்த உயிரை பிடித்து எடுப்பார்கள்.

அறிவிப்பாளர் : பரா இப்னு ஆசிப் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 18534.

மிகக் கேவலமான தண்டனை அவர்களுக்கு கொடுக்கப்படும். அல்லாஹ் பாதுகாப்பானாக!

அந்த மரணத்தருவாயில் கொடுக்கப்படுகின்ற வேதனைத்தான் மிகக் கேவலமானது. அங்கே ஒரு மனிதன் சந்திக்கின்ற மரணம் மிகவும் கேவலமானது.

இந்த உலகத்தில் எதுவும் கேவலம் இல்லை, ஹராமான ஒரு செயலை தவிர, அல்லாஹ் தடுத்த பாவங்களைத் தவிர.

இந்த உலகத்தில் மனிதனுக்கு எதுவும் கேவலம் இல்லை. அவன் ஒரு ஏழையாக கிழிந்த ஆடைகளை உடுத்தக் கூடியவனாக இருக்கட்டும், ஒரு முறையான வீடு இல்லாமல் கூரையில் வசிக்கக் கூடியவனாக இருக்கட்டும், அவனது உடல் அழகு எதுவும் இல்லாமல் இருக்கட்டும், எதுவுமே இந்த உலகத்தில் கேவலம் இல்லை.

கேவலம் எது? ஹராமை செய்வது. அல்லாஹ் தடுத்த பாவத்தை செய்வது. அதன் காரணமாகத்தான் மரணத்தருவாயில் அப்படி ஒரு வேதனையை சந்திக்கிறான்.

அல்லாஹ் சொல்கிறான்:

மிகக் கேவலமான இழிவான தண்டனை உனக்கு கொடுக்கப்படும். அல்லாஹ்வின் மீது அவன் சொல்லாததை நீங்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தீர்கள். அவனது மார்க்கத்தில் அல்லாஹ் சொல்லாததை நீங்கள் செய்து கொண்டிருந்தீர்கள். (அல்குர்ஆன் 6 : 93)

இன்று, சில மக்களிடம், அல்லாஹ்வின் குர்ஆன் வசனங்களைக் கொண்டு அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டால்,நபியின் சுன்னாவைக் கொண்டு உபதேசிக்கப்பட்டால்,இதையெல்லாம் விட்டு விடுங்கள், நமது ஜமாத் நமது கலாச்சாரம் என்ன சொல்கிறது என்று பாருங்கள் என்று பேசுகிறார்கள்.

அன்பிற்குரியவர்களே! மரணத்தருவாயில் பாவியின் நிலையைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான் :

حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ (99) لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلَّا إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ

(நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்களில் எவனுக்கும் மரணம் வந்தாலோ (அவன் தன் இறைவனை நோக்கி) ‘‘ என் இறைவனே! என்னை (உலகத்திற்கு) திரும்ப அனுப்பிவிடு.நான் விட்டு வந்த அ(ந்த உலகத்)தில் (இனி) நல்ல காரியங்களையே நான் செய்து கொண்டிருப்பேன்'' என்று கூறுவான். (எனினும்,) அது ஆகக்கூடிய காரியமன்று. (இத்தகைய சந்தர்ப்பங்களில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (தவிர வேறில்லை). அவர்களுக்கு முன் ஓர் அரண் ஏற்பட்டு விடும். (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரை அதில் தங்கிவிடுவார்கள்.(அல்குர்ஆன்23 : 99,100)

வசனத்தின் கருத்து : பாவிகள் அல்லாஹ்வை மறந்தவர்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தை மறந்தவர்கள். வணக்க வழிபாட்டுக்காக படைக்கப்பட்டோம் என்பதை மறந்தவர்கள்.

இவர்களில் ஒருவருக்கு உயிர் வாங்கக்கூடிய மலக்குல் மவ்த் வந்துவிட்டால், அப்பொழுது அந்த மனிதன் ரப்பி -எனது இறைவன் என்று அழைப்பான்.

நான் இந்த உலகத்தில் விட்ட விஷயங்களில் கொஞ்சம் நல்ல அமல்களை சேர்த்துக் கொள்கின்றேன். எத்தனையோ நேரங்களை வீணாக்கி விட்டேனே!

நான் கொஞ்சம் அமல் செய்து கொள்கிறேன். என்னை கொஞ்சம் விடுவாயா? என்று அல்லாஹ்விடத்தில் கதறுவான்.

இந்த கதறக்கூடிய கதறலை அங்கே சுற்றி இருப்பவர்கள் கேட்க மாட்டார்கள். அல்லாஹ்வுடைய வானவர்கள் கேட்பார்கள். அல்லாஹ் கேட்பான்.

அப்பொழுது, அல்லாஹ் அந்த வானவருக்கு கட்டளை போடுவான். அந்த வானவர் நினைப்பார். அல்லாஹ் இவனுக்கு ஏதும் அவகாசம் கொடுப்பானா என்று?

ஆனால், ஒருக்காலும் அவனுக்கு அவகாசம் கிடைக்காது. இவன் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருப்பான். இன்னும் பத்து நாளைக்குப் பிறகு மலக்குல் மவ்த் வந்தாலும் இதைத்தான் அவன் சொல்வான். இதைத்தான் இவன் செய்வான்.

இவனுக்குப் பிறகு நரகத்தின் தண்டனை இவனுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. அங்கே இவன் வரவேண்டும். எழுப்பப்படுகிற நாள் வரை கப்ருடைய அதாப் அவனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பிட்ட நேரத்தில் அவனுடைய உயிரை எடுத்து வாருங்கள் என்று அல்லாஹ் அந்த மலக்குகளுக்கு கட்டளையிடுவான்.

அந்த மலக்குகள் எதனையும் பொருட்படுத்த மாட்டார்கள். அல்லாஹ்வின் கட்டளைப்படி அந்த உயிரை வாங்குவார்கள். (அல்குர்ஆன்23 : 99,100)

சூரத்துல் முனாஃபிக்கூனில், பாவி ஒருவன் சொல்வதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ (10) وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்,) ‘‘என் இறைவனே! ஒரு சொற்ப காலத்திற்கு என்னை விட்டுவைக்க வேண்டாமா? (அவ்வாறு விட்டால்,) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேன்'' என்று கூறுவான். (எனினும்) ஓர் ஆத்மாவுடைய (மரணத்தின்) தவணை வரும்போது அதை அல்லாஹ் பிற்படுத்தவே மாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 63 : 10,11)

வசனத்தின் கருத்து : உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாக உங்களுக்கு நான் கொடுத்தவற்றில் நீங்கள் தர்மம் செய்யுங்கள். அப்படி அவனுக்கு மரணம் வந்தால் அந்த மனிதன் சொல்வான்;

என்‌இறைவா! இன்னுமொரு சமீபமான ஒரு தவணை எனக்கு கொடுக்க மாட்டாயா? என் செல்வங்களை எல்லாம் தர்மம் செய்வேனே! என்று சொல்வான். அப்பொழுது அவன் ஆசை வைப்பான், அல்லாஹ் கொடுத்த அவ்வளவு செல்வங்களையும் அல்லாஹ்வுடைய பாதையில் கொடுத்து விடுவதற்கு.

ஆனால்,அவன் வாழும் பொழுது அவனுடைய எல்லா செல்வத்தையும் அல்லாஹ் அவனிடத்தில் கேட்கவில்லையே! உன் மீது கடமையாக்கப்பட்ட ஜக்காத். நாற்பதில் ஒரு சதவீதம். அந்த அளவை தானே அல்லாஹ் கேட்டான்.

உனது தேவை போக எஞ்சியதில் சிலவற்றை ஏழைகளுக்கு கொடுத்து கொள். யாசிப்பவர்களுக்கு இல்லாதவர்களுக்கு உன் செல்வத்தில் கொஞ்சத்தை கொடுத்துக் கொள் என்று அல்லாஹ் கூறினானே! (அல்குர்ஆன் 70 : 24,25)

உங்களுக்கு நாம் கொடுத்தவற்றிலிருந்து கொஞ்சத்தை செலவு செய்யுங்கள் என்றுதானே அல்லாஹ் கூறினான். (அல்குர்ஆன் 2 : 254)

அதையெல்லாம் செய்யாமல் அலட்சியம் செய்து கொண்டிருந்த மனிதன் மரணத்தருவாயில் சொல்வான்;யா அல்லாஹ் நீ  கொடுத்ததை எல்லாமே நான் கொடுத்து விடுகிறேன்.

இன்னும் நிறைய வணக்க வழிபாடுகளை செய்து நன்மையை அடைந்து கொள்கிறேன் என்று சொல்வான்.

அல்லாஹ்வுடைய முடிவைப் பாருங்கள்!

எந்த ஒரு உயிராக இருந்தாலும் சரி,அந்த உயிருக்கு உரிய தவணை முடிவு காலம் வந்துவிட்டால் அல்லாஹ் அதற்கு அவகாசம் அளிக்க மாட்டான்.

அவர்கள் செய்து கொண்டிருந்த அத்தனை விஷயங்களையும் காரியங்களையும் அல்லாஹ் ஆழ்ந்து அறிந்து கொண்டிருக்கிறான்.

அன்பிற்குரியவர்களே!அந்த மரணத்தருவாயின் இன்னொரு காட்சியை அல்லாஹ் சூரத்துல் கியாமாவில் சொல்கிறான்.

كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ (26) وَقِيلَ مَنْ رَاقٍ (27) وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ (28) وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ (29) إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ

எனினும், (எவனேனும் நோய்வாய்ப்பட்டு, அவனின்) உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டால், (அவனுக்குச் சமீபத்தில் இருப்பவர்கள் அவனைச் சுகமாக்க) மந்திரிப்பவன் யார்? (எங்கிருக்கிறான்?) என்று கேட்கின்றனர். எனினும், அவனோ நிச்சயமாக இதுதான் (தன்) பிரிவினை என்பதை (உறுதியாக) அறிந்துகொள்கிறான்.(அவனுடைய) கெண்டைக்கால், கெண்டைக் காலோடு பின்னிக் கொள்ளும். அச்சமயம், அவன் (காரியம் முடிவு பெற்று) உமது இறைவன் பக்கம் ஓட்டப்பட்டு விடுகிறான். (அல்குர்ஆன் 75 : 26-30)

அந்த ஸக்ராத் உடைய நிலையைப் பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பயந்தார்கள்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் என் வீட்டில் மரணம் எய்தினார்கள். என்னுடைய நாளில் மரணம் எய்தினார்கள். எனது நெஞ்சுக்கு மத்தியில் அவர்களுடைய உயிர் பிரிந்தது.

கடைசி நேரத்தில், அல்லாஹ் எனது எச்சியை அவருடைய எச்சியோடு அல்லாஹ் சேர்த்தான்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா உடைய சகோதரர் அப்துர் ரஹ்மான் கையில் மிஸ்வாகோடு வருகிறார். நான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எனது நெஞ்சோடு சாய்த்து வைத்துக் கொண்டிருந்தேன்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அப்துர் ரஹ்மானையும் அவருடைய கையிலிருந்த மிஸ்வாகை பார்த்ததையும் நான் கண்டுகொண்டு நான் அறிந்து கொண்டேன். மிஸ்வாக் செய்வதை ரசூலுல்லாஹ் விரும்புகிறார்கள் என்று.

நான் கேட்டேன்; அல்லாஹ்வின் தூதரே! அந்த மிஸ்வாக் குச்சியை நான் வாங்கித் தரட்டுமா? என்று.ஆம், என்று தலையால் சைகினை செய்தார்கள்.

நான் அந்த குச்சியை வாங்கி கொடுத்தேன். ஆனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களால் அந்த குச்சி கடுமையாக இருந்ததால் அதைக் கொண்டு பல் துலக்க முடியவில்லை.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா சொல்கிறார்கள்;அல்லாஹ்வின் தூதரே!நான் அதை உங்களுக்காக மென்மையாக்கி தரட்டுமா? கடித்து அதை பதப்படுத்தி தரட்டுமா? என்று. நபியவர்கள், ஆம் என்று சொல்கிறார்கள். அதை அவர்களுக்கு மென்மையாக்கி கொடுத்தேன்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த மிஸ்வாக்கை கொண்டு தனது பற்களை துலக்கிக் கொண்டார்கள்.

அவர்களுக்கு முன்னால் ஒரு தண்ணீர் வைக்கப்பட்ட பாத்திரம் இருந்தது. அதில் தனது இருகரங்களையும் தண்ணீரில் நினைத்துக்கொண்டு தனது முகத்தில் தடவிக் கொண்டிருந்தார்கள்.

கடைசியாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியது,

«لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ»

லா யிலாஹ இல்லல்லாஹ் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள் மரணத்திற்கு இப்படிப்பட்ட வேதனைகள் இருக்குமா?மரணத்தருவாயில் இப்படிப்பட்ட மயக்கங்கள் இருக்குமா? நிச்சயமாக மரணத்திற்கு மிக கடுமையான சூழ்நிலை இருக்கிறது.

பிறகு தனது கைகளை உயர்த்தினார்கள்.

«فِي الرَّفِيقِ الأَعْلَى»

உயர்ந்த நண்பனோடு நான் சேர வேண்டுமென்று அல்லாஹ்வை பார்த்து சொன்னார்கள்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உயிர் பிரிந்தது. வானத்தை நோக்கி சுட்டிக்காட்டிக் கொண்டிருந்த ரசூலுல்லாஹ்வின் கரம் கீழே சாய்ந்தது என்று ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்.(1)

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 4449.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அந்த ஸக்ராத்துடைய நிலையைப் பற்றி எவ்வளவு வேதனைப் பட்டார்கள்!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் சக்ராத் உடைய நிலை எப்படி இருக்கும் என்பதை ஒரு நீண்ட ஹதீஸில் சொல்லியிருக்கிறார்கள்.

பரா இப்னு ஆசிப் ரழியல்லாஹுஅன்ஹுகூறுகிறார்கள் : நாங்கள் அன்சாரி தோழர் உடைய ஜனாஸாவிற்கு சென்றபொழுது, ஜனாஸாவை கொண்டு சென்று விட்டோம். ஆனால், கபர் தோண்டப் படாமல் இருந்தது.

நாங்கள், ரசூலுல்லாஹ்வைச் சுற்றி உட்கார்ந்து கொண்டோம். எங்கள் தலையில் பறவை அமர்ந்தால் எப்படி இருக்குமோ அந்த அளவிற்கு ஆடாமல் அசையாமல் அமர்ந்து கொண்டோம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் தனது கையில் இருந்த ஒரு குச்சியை கொண்டு பூமியை கிளறி கொண்டிருந்தார்கள்.

பிறகு சொன்னார்கள்:

«اسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ مَرَّتَيْنِ، أَوْ ثَلَاثًا»

அல்லாஹ்விடத்தில் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடுங்கள் என்று மூன்று முறையோ அல்லது இரண்டு முறையோ சொன்னார்கள்.

பிறகு சொன்னார்கள்;ஒரு முஃமினுக்கு கடைசி நேரம் வந்துவிட்டால், இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து மறுமையில் சேரக்கூடிய கடைசி நிலை வந்துவிட்டால், வானத்திலிருந்து அவனை வரவேற்பதற்காக வானவர்கள் வருவார்கள்.

அவர்களது முகமோ வெண்மையாக இருக்கும். அவர்களது முகம் சூரியனைப் போன்று இருக்கும். சொர்க்கத்துடைய கஃபனை வைத்திருப்பார்கள்.சொர்க்கத்துடைய நறுமணத்தை வைத்திருப்பார்கள்.

வந்தவர்கள், அவருக்கு எந்தவிதமான திடுக்கத்தையும் கொடுத்து விடாமல், அவருடைய பார்வை எட்டும் அளவு தூரத்தில் சுற்றி அப்படியே மலக்குல் மவ்த்தை எதிர்பார்த்து உட்கார்ந்து கொள்வார்கள்.

பிறகு மலக்குள் மவ்த் வருவார். அவருடைய தலைக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு சொல்வார்.

أَيَّتُهَا النَّفْسُ الطَّيِّبَةُ، اخْرُجِي إِلَى مَغْفِرَةٍ مِنَ اللَّهِ وَرِضْوَانٍ

அமைதி பெற்ற ஆத்மாவே!

(எப்போதும் மறுமையை முன்னோக்கிய ஆத்மாவிற்கு சொல்லப்படக்கூடிய வார்த்தை இது. அல்லாஹ் உடைய நேசத்தை, ரசூல் உடைய நேசத்தை, மார்க்கத்தின் நேசத்தை யார் முற்படுத்தினார்களோ, அல்லாஹ்வின் விதியைக் கொண்டு யார் திருப்தி அடைந்தார்களோ அவர்களுக்கு இவ்வாறு சொல்லப்படும்.)

நல்ல ஆத்மாவே! இப்பொழுது நீ அல்லாஹ்வுடைய மன்னிப்புக்கு வா, அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்கு வா என்று.

அப்பொழுது அந்த உயிர் எப்படி வெளியேறும் என்றால்,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்; ஒரு தண்ணீர் உள்ள தோல் துருத்தியில் இருந்து தண்ணீர் வடிவது போன்று,நீர் வலிந்து ஓடுவது போன்று அவனுடைய  உடலிலிருந்து உயிர் வெளியேறும்.

மலக்குல் மௌத் உயிரை வாங்குவார். அவ்வளவுதான்,அவர் வாங்கிய அடுத்த நொடியே அவர்களை சுற்றி காத்துக் கொண்டிருந்த நன்மை உடைய வானவர்கள் ரஹ்மத்துடைய வானவர்கள் உடனே மலக்குல் மவ்த்துடைய கையிலிருந்து அந்த உயிரை வாங்கிக் கொண்டு, அவர்கள் கொண்டு வந்த சொர்க்கத்தின் கஃபனில் சுருட்டுவார்கள்.

பிறகு, நறுமணத்தை பூசுவார்கள். இந்த பூமியிலேயே அதிக நறுமணமுடைய கஸ்தூரியின் வாடை அந்த ரூஹிலிருந்து வெளியேறும்.

பிறகு, அவர்கள் வானத்திற்கு கொண்டுச் செல்வார்கள். அவர்கள் வானத்திற்கு கொண்டு செல்லும் பொழுது அவருடைய வாடையை நுகரும் வாணவர்கள் எல்லாம் சொல்வார்கள்:

ஆஹா!இந்த நல்ல ஆன்மா யாருடைய ஆன்மா?என்பதாக. அந்த வானவர்கள் சொல்வார்கள்.

இந்த உலகத்தில் அந்த அடியானை எந்த நல்ல பெயரைக் கொண்டு அழைத்துக் கொண்டிருந்தார்களோ, அந்த நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார், இப்படிப்பட்ட நல்ல காரியங்களை செய்தவர் என்பதாக அவரை புகழ்ந்து சொல்வார்கள்.

இறுதியாக, வானத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கே இவருக்காக வானத்தின் கதவுகள் திறப்பதற்கு கோரப்படும். வானத்தில் கதவுகள் திறக்கப்படும்.

இப்படியாக ஒவ்வொரு வானத்தில் உள்ள வானவர்கள் அவரை வரவேற்று ஏழாவது வானத்திற்கு அழைத்துச் செல்வார்கள்.

பிறகு, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்வான்;

اكْتُبُوا كِتَابَ عَبْدِي فِي عِلِّيِّينَ، وَأَعِيدُوهُ إِلَى الْأَرْضِ، فَإِنِّي مِنْهَا خَلَقْتُهُمْ، وَفِيهَا أُعِيدُهُمْ، وَمِنْهَا أُخْرِجُهُمْ تَارَةً أُخْرَى

எனது அடியானின் ஏட்டை இல்லிய்யூன் என்ற சொர்க்கத்தில் எழுதுங்கள். மீண்டும் இவனை பூமிக்குக் கொண்டு செல்லுங்கள்.அதிலிருந்துதான் அவர்களை நான் படைத்தேன்.அதில் அவர்களை நான் மீட்டுவேன். மற்றொரு நாள் நான் அவர்களை அதிலிருந்தே‌ கொண்டுவரச் செய்வேன் என்று அல்லாஹ் சொல்லுவான்.

அந்த வானவர்கள் அவனை கொண்டு வந்து பூமியில் வைத்ததற்கு பிறகு, அவருடைய உடலில் அவர்களுடைய ரூஹ் மீட்டப்பட்ட போது, இரண்டு வானவர்கள் வருவார்கள்.

கேட்பார்கள்;உனது ரப்பு யார்?என்று கேட்பார்கள்.ரப்பி - எனது ரப்பு அல்லாஹ் என்று கூறுவான்.

யார், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனுக்கு இணை வைக்காமல் இருந்தார்களோ, நயவஞ்சகத்தை கலக்காமல் இருந்தார்களோ, அவர்கள் சொல்வார்கள் என் இறைவன் அல்லாஹ் என்று.

பிறகு, அவரிடம் உன் மார்க்கம் எது?என்று கேட்கப்படும். அவன் சொல்லுவான்; எனது மார்க்கம் இஸ்லாம் என்று.

பிறகு, அவனிடத்தில் கேட்கப்படும்; உங்களுக்கு அனுப்பப்பட்ட இவரைப் பற்றி தெரியுமா? என்று. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை காண்பித்து கேட்கப்படும்.

அவர் அல்லாஹ்வுடைய தூதர் என்பதாக சொல்வார். அப்பொழுது அந்த வானவர்கள் கேட்பார்கள்; இவையெல்லாம் எப்படி உனக்கு தெரியும்? என்று.

(அல்லாஹு அக்பர்! எப்படிப்பட்ட பரிட்சை பாருங்கள்.

அந்த மனிதன் சொல்வான்: அல்லாஹ்வுடைய வேதத்தை நான் படித்திருக்கிறேன். அதை‌ நான் நம்பிக்கை கொண்டிருந்தேன். அதில் சொல்லப்பட்டதெல்லாம் உண்மை என்று ஏற்றுக்கொண்டிருந்தேன்.

அந்த வேதத்தில் தான் அல்லாஹ்வைப் பற்றி, அல்லாஹ்வுடைய மார்க்கத்தைப் பற்றி, அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட முஹம்மது ரசூலுல்லாஹ்வை பற்றி நான் படித்து இருக்கின்றேன் என்று சொல்வான்.

யார், இந்த குர்ஆனை படிக்க வில்லையோ, அதற்கு நேரம் செலுத்த வில்லையோ, அந்த குர்ஆனை சிந்திக்கவில்லையோ, அவர்கள் என்ன சொல்வார்கள் என்று யோசித்து பாருங்கள்!)

வானத்திலிருந்து ஒரு அழைப்பாளர் அழைப்பார்.என் அடியான் உண்மை கூறிவிட்டான். அவருக்கு சொர்க்கத்தின் விரிப்பை கொடுங்கள். சொர்கத்தினுடைய ஆடையை அவனுக்கு அணிவியுங்கள். சொர்க்கத்தின் வாசலை திறந்து வையுங்கள் என்று.

சொர்க்கத்தின் நறுமணம் வரும். சொர்க்கத்தினுடைய நல்ல வாசனைகள் எல்லாம் அவனுக்கு வரும். அவருடைய கபுர் அவனுடைய பார்வைக்கு எட்டும் அளவிற்கு விசாலமாக்கப்படும்.

ஒரு அழகிய மனிதன் அப்பொழுது வருவார். அவருடைய மேனியிலிருந்து நறுமணங்கள் வீசிக்கொண்டிருக்கும். அந்த மனிதர் சொல்வார்; இன்றைய நாளில் உனக்கு தீங்கு தரக்கூடிய எதையும் பார்க்க மாட்டாய்.

உனக்கு வருத்தம் தரக்கூடிய எதையும் பார்க்க மாட்டாய். மகிழ்ச்சியை‌ தவிர இன்று எதுவுமே உனக்கு இருக்காது என்று சொல்லும் பொழுது அந்த மனிதன் சொல்வான்:

இவ்வளவு பிரகாசமான முகம் உடையவனே! நன்மையை எனக்கு கொண்டு வந்தவனே! நீ யார்? என்று கேட்பான். அப்பொழுது அவர் சொல்வார்;நான் உன்னுடைய நல்ல அமல் என்பதாக.

அப்பொழுது, அந்த மனிதன் சொல்வார்: என் இறைவா! உடனே எனக்கு கியாமத்தை கொண்டு வா. நான் எனது குடும்பத்தாரிடம் செல்ல வேண்டும் என்பதாக.

அவ்வளவு ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிப்பார்.

அடுத்து, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காஃபிரை பற்றி, பாவியை பற்றி சொன்னார்கள்.

அல்லாஹ்வை நிராகரித்த காஃபிரான இந்த அடியான் இந்த உலகத்தை விட்டு பிரிந்து மறுமையில் சேரக்கூடிய நேரம் வந்துவிட்டால், கருப்பு நிறமுடைய மலக்குகள் வருவார்கள்.

தோலினால் செய்யப்பட்ட முடியினால் செய்யப்பட்ட ஒரு முரட்டு ஆடையை கொண்டு வருவார்கள். வந்து சூழ்ந்து உட்கார்ந்து கொள்வார்கள்.

மலக்குல் மவ்த் உயிர் வாங்க வரும்பொழுது, அந்த மலக்குல் மவ்த் சொல்வார்:

أَيَّتُهَا النَّفْسُ الْخَبِيثَةُ، اخْرُجِي إِلَى سَخَطٍ مِنَ اللَّهِ وَغَضَبٍ

மிக கெட்ட உயிரே! கேவலமான உயிரே! அல்லாஹ்வின் கோபத்தின் பக்கம் வா. அல்லாஹ்வின் வெறுப்பின் பக்கம் வா என்று அவர் கூறுவார்.

உடனே அவனுடைய உயிர் பயந்து, உடலின் அத்தனை பாகங்களிலும் பிரிந்து அவனுடைய உடலை கவ்விக் கொள்ளும். மலக்குல் மவ்த் அந்த உயிரை பிடித்து இழுப்பார்.

எப்படி முட்களில் போடப்பட்ட ஈரமான துணியை இழுக்கப்படுமோ, அப்படி அந்த உயிரை பிடித்து இழுப்பார். அவருடைய கரத்தில் அந்த உயிர் வந்தவுடன் அந்த உயிரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வானவர்கள் வாங்கிக் கொள்வார்கள்.

இப்படியாக அவனுடைய கரம் மாற்றிக் கொண்டு செல்லும் பொழுது, இந்த வானவர்கள் அந்த உயிரிலிருந்து வரக்கூடிய துர்நாற்றத்தைப் பார்த்து சொல்வார்கள்:

இது என்ன துர்நாற்றம்? யாருடைய உயிர்? இவ்வளவு கேவலமாக இருக்கிறதே? அவனுக்கு இந்த துன்யாவில் கூறப்பட்ட பெயர்களிலேயே கேவலமான பெயரைக் கொண்டு அந்த வானவர்கள் சொல்வார்கள்;

இன்னாருடைய மகன் இன்னார், இவ்வளவு கெட்ட காரியங்களை செய்து கொண்டிருந்தவன். அவனுடைய உயிர் தான் இப்பொழுது கொண்டு போகப்படுகிறது என்பதாக.

கடைசியாக வானத்திற்கு கொண்டு சென்ற பிறகு, வானத்தின் கதவைத் திறக்கும்படியாக வானவர்கள் கோறுவார்கள்.

ஆனால், வானத்தின் கதவுகள் அவனுக்காக திறக்கப்படாது என்று கூறிவிட்டு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குர்ஆனின் வசனத்தை ஓதி காட்டினார்கள்.

{لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ}

அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தை அடையவே மாட்டார்கள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம். (அல்குர்ஆன் 7 : 40)

கடுமையாக கேவலபடுத்தப்பட்டு பிறகு, அந்த உயர்ந்த வானத்திலிருந்து அவர்கள் பூமிக்கு தூக்கி எறியப்படுவார்கள்.

அதையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குர்ஆனிலிருந்து ஓதி காட்டுகிறார்கள்.

{وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ، فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ}

அல்லாஹ்வுக்கு இணைவைக்காது, அவன் ஒருவனுக்கே முற்றிலும் தலைசாய்த்து விடுங்கள். எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து (தலைகீழாக) விழுந்தவனைப் போலாவான். அவனை (கழுகு போன்ற) பறவைகள் இறாஞ்சி (கொத்தி)க் கொண்டு போய்விடும் அல்லது காற்று வெகு தூரத்திற்கு அடித்துக் கொண்டு சென்றுவிடும். (அல்குர்ஆன் 22 : 31)

கடைசியாக, அந்த மனிதனுடைய ரூஹ் உடலில் கொண்டு வரப்பட்டு, இரண்டு வானவர்கள் வருவார்கள். நீ யாரை வணங்கினாய்?யாருக்கு சுஜூது செய்தாய்? யார் இடத்தில் பிரார்த்தனை செய்தாய்? நீ யார் மீது தவக்குல் வைத்துக்கொண்டிருந்தாய்? உனது ரப்பு யார்? என்று அவர்கள் கேட்பார்கள்?

அவன் கூறுவான்;

هَاهْ هَاهْ لَا أَدْرِي

ஒன்றுமே தெரியாதே! என்பதாக.

பிறகு, உனது மார்க்கம் என்ன? என்று கேட்பார்கள். எனக்கு ஒன்றுமே தெரியாது என்று கூறுவான்.

உங்களுக்கு அனுப்பப்பட்ட இந்த மனிதரைப் பற்றி உனக்கு தெரியுமா? என்று கேட்பார்கள். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு அழைப்பாளர் அழைப்பார். இவன் பொய் சொல்லிவிட்டான். நரகத்தின் விரிப்பை இவனுக்கு விரியுங்கள். நரகத்தின் வாசலை இவனுக்கு திறந்து வையுங்கள்.

என்று கூறியவுடன் நரகத்தில் இருந்து கடின உஷ்ணம் உள்ள விச காற்றுகள் அவன்மீது வீசும். அவனது கப்ர் அவனை நெருக்கும். அவனுடைய விலாக்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கொள்ளும்.

மிகக் கோரமான முகமுடைய ஒருவர் வருவார். அவரிடமிருந்து துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கும்.

இனி உனக்கு தொந்தரவு தரக்கூடிய, உன்னை கேவலப்படுத்தக்கூடிய, உனக்கு வேதனை தரக்கூடியது தான் வந்து கொண்டே இருக்கும்.

இதுதான் உனக்கு நற்செய்தி என்பதாக சொல்வார். இந்த நாளைப் பற்றி தான் உனக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. உனக்கு அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்தது என்பதாக.

அந்த மனிதன் சொல்வான்; நீ யார்? என்பதாக. இத்தனை தீமைகளின் செய்திகளை எனக்கு சொல்கிறாயே?

அந்த மனிதன் சொல்லுவான்; நான் தான் நீ செய்த கெட்ட செயல் என்பதாக.

அவன் சொல்லுவான்; என் இறைவா! மறுமையை நீ நிகழ்த்தி விடாதே என்று.

அறிவிப்பாளர் : பரா இப்னு ஆசிப் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 18534.

கண்ணியத்திற்குரியவர்களே! இப்படித்தான் நாம் ஒவ்வொருவரும் மரணத்தை சந்திக்க இருக்கின்றோம்.

ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தின்படி, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழிகாட்டலின் படி வாழ்வோமேயானால், கண்டிப்பாக அல்லாஹ் மரணத்தருவாயில் நமக்கு தவ்ஹீதுடைய கலிமாவை நஸீபாக்குவான்.

நமது உயிரை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நல்ல வானவர்களைக் கொண்டு வாங்கச் செய்வான். சொர்க்த்துடைய கஃபனைக் கொண்டும் சொர்க்கத்துடைய நறுமணத்தைக் கொண்டும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த உயிரை அலங்கரிப்பான்.

அப்படிப்பட்ட நல்லவர்களில் அல்லாஹ் என்னையும் உங்களையும் ஆக்க வேண்டும் என்று துஆ செய்கிறேன்.

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، أَنَّ أَبَا عَمْرٍو ذَكْوَانَ، مَوْلَى عَائِشَةَ، أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ كَانَتْ تَقُولُ: إِنَّ مِنْ نِعَمِ اللَّهِ عَلَيَّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُوُفِّيَ فِي بَيْتِي، وَفِي يَوْمِي، وَبَيْنَ سَحْرِي وَنَحْرِي، وَأَنَّ اللَّهَ جَمَعَ بَيْنَ رِيقِي وَرِيقِهِ عِنْدَ مَوْتِهِ: دَخَلَ عَلَيَّ عَبْدُ الرَّحْمَنِ، وَبِيَدِهِ السِّوَاكُ، وَأَنَا مُسْنِدَةٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَأَيْتُهُ يَنْظُرُ إِلَيْهِ، وَعَرَفْتُ أَنَّهُ يُحِبُّ السِّوَاكَ، فَقُلْتُ: آخُذُهُ لَكَ؟ فَأَشَارَ بِرَأْسِهِ: «أَنْ نَعَمْ» فَتَنَاوَلْتُهُ، فَاشْتَدَّ عَلَيْهِ، وَقُلْتُ: أُلَيِّنُهُ لَكَ؟ فَأَشَارَ بِرَأْسِهِ: «أَنْ نَعَمْ» فَلَيَّنْتُهُ، فَأَمَرَّهُ، وَبَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ أَوْ عُلْبَةٌ - يَشُكُّ عُمَرُ - فِيهَا مَاءٌ، فَجَعَلَ يُدْخِلُ يَدَيْهِ فِي المَاءِ فَيَمْسَحُ بِهِمَا وَجْهَهُ، يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ» ثُمَّ نَصَبَ يَدَهُ، فَجَعَلَ يَقُولُ: «فِي الرَّفِيقِ الأَعْلَى» حَتَّى قُبِضَ وَمَالَتْ يَدُهُ (صحيح البخاري 4449 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/