HOME      Khutba      தஜ்ஜால் | Tamil Bayan - 313   
 

தஜ்ஜால் | Tamil Bayan - 313

           

தஜ்ஜால் | Tamil Bayan - 313


بسم الله الرحمن الرحيم

தஜ்ஜால்

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

 

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

 

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!! அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார்கள் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் சலாமும் கூறியதற்கு பிறகு, அல்லாஹ்வை முழுவதுமாக பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் நினைவு படுத்தியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

யார் அல்லாஹ்வுக்கு பயந்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் நிச்சயம் நேர் வழிகாட்டுவான். யார் அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்களோ அல்லாஹ் அவர்களை பாதுகாப்பான். இரட்சித்து கொள்வான்.

கண்ணியத்திற்குரிய முஸ்லிம்களே! அல்லாஹு சுப்ஹானஹுதஆலா நம்மை இறுதி சமுதாயமாக ஆக்கி இருக்கின்றான். முந்தைய சமுதாய மக்கள் பார்க்காத பல விஷயங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பார்க்க இருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்!

மறுமையின் அடையாளங்கள், எந்த அடையாளங்களை குறித்து இறைத்தூதர்கள் எல்லோரும் எச்சரிக்கை செய்து கொண்டிருந்தார்களோ அந்த அடையாளங்களை அவர்களுடைய சமுதாயங்களில் பலர் பார்க்கவில்லை. ஆனால் இறுதியாக வந்த முஹம்மத் (ஸல்) மறுமையின் அடையாளங்கள் குறித்து சிறிய அடையாளம் என்றோ பெரிய அடையாளம் என்றோ எத்தனை அடையாளங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்களோ அந்த அடையாளங்களில் பல சிறிய அடையாளங்களையும் பெரிய அடையாளங்களையும் நம் எதார்த்த வாழ்க்கையில் பார்த்து கொண்டிருக்கிறோம்.

இன்னும் சில பெரிய அடையாளங்கள் தான் எஞ்சியிருக்கின்றன. அந்த அடையாளங்கள் நிகழ்ந்து விட்டால் கண்டிப்பாக அதை தொடர்ந்து மறுமை நிகழ்ந்து விடும்.

இன்று உலக மக்களை, முஸ்லிம்களை பார்க்கிறோம். பல விஷயங்களை குறித்து பல மனிதர்கள் குறித்து பல பொருட்கள் பிரச்சனைகளை குறித்து பயந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் பயப்பட தகுதியானது ஒன்று இருக்கிறதென்றால் அது மறுமை தான்.

அந்த மறுமையின் அடையாளங்கள் குறித்து அந்த மறுமை நிகழப்போவதற்கு முன்பு அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் (ஸல்) எந்த ஒரு தீய மனிதனை பற்றி எச்சரிக்கை செய்தார்களோ அந்த மனிதனை பற்றி பயப்படுபவர்கள் இன்று யாரும் இருக்கிறார்களா என்று சொல்லக்கூடிய அளவிற்கு முஸ்லிம்கள் மத்தியில் அதை பற்றிய நினைவூட்டல் இல்லாமல் இருக்கிறது.

காரணம் என்ன?‌ இந்த உலக விஷயத்திலே அல்லாஹ் தபாரக வதஆலா சில விஷயங்களை தன் பொறுப்பில் வைத்திருக்கிறான்.சில விஷயங்களை நமது அமல்களின் மீது அல்லாஹ் சாட்டி இருக்கின்றான்.

நமது அமல்கள் சரியாக இருக்குமேயானால் நல்ல ஆட்சியாளர்களை உங்களுக்கு ஏற்படுத்தி தருவேன்; உங்கள் மீது கருணை காட்டக்கூடியவர்களை உங்களுக்கு ஏற்படுத்தி தருவேன். உங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும். உங்களில் ஏழைகள் மீதும் வயது முதிர்ந்தவர்கள் மீதும் அவர்கள் கணிவோடு பரிவோடு நடந்து கொளாவார்கள் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமின் குறிப்பிட்டிருக்க !.

அமல்களை எல்லாம் பாழாக்கி விட்டு நற்செயல்களை எல்லாம் வீணாக்கி விட்டு குர்ஆன் ஹதீஸிலிருந்து தூரமாக இருந்துகொண்டு நல்ல ஆட்சியாளர்கள் அமைய வேண்டும். இவருக்கு ஆதரவு தெரிவித்தால் நமக்கு நன்மை செய்வாரா அவருக்கு ஆதரவு தெரிவித்தால் நமக்கு நன்மை செய்வாரா என்று முஸ்லிம் சமுதாயம் சிந்தித்து கொண்டிருக்கிறது.

தனது அமல்களை பற்றி, தனது சமுதாயத்தின் அமல்களை பற்றி அவை சீர்திருத்தப்பட வேண்டுமே! அமல்கள் குர்ஆன் சுன்னாவிற்கு ஏற்ப அமையவேண்டுமே! அப்போது தானே அல்லாஹ்வுடைய கருணை நமக்கு வரும் என்ற அடிப்படையில் சீர்திருத்த முயற்சிகளெல்லாம் குறைந்துவிட்டன.

தஜ்ஜால் என்ற ஒரு தீயவனை அல்லாஹு சுப்ஹானஹுதஆலா மறுமையின் அடையாளங்களில் ஒரு பெரிய அடையாளமாக ஆக்கினான். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)அவர்கள் அந்த மனிதன் தஜ்ஜாலை குறித்து மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்;

அல்லாஹ் இதற்கு முன் அனுப்பிய எல்லா நபிமார்களும் தனது உம்மத்தை தஜ்ஜாலைக் குறித்து எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

நூஹ் (அலை) அவர்களும் அவர்களுக்கு பின்னால் வந்த நபிமார்களும் தஜ்ஜாலைக் குறித்து தனது சமுதாயத்திற்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

நானும் திட்டமாக அவனை குறித்து உங்களை எச்சரிக்கை செய்கிறேன்.(1)

அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: புகாரி, எண்: 4402

என்று தன் உம்மத்தை பார்த்து, தன் தோழர்களை பார்த்து ரஸுல் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிய எச்சரிக்கையை முன்வைத்தார்கள்.

ஒரு சமயம் ரஸுல் (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது தஜ்ஜாலைக் குறித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தார்கள்.

அவனால் ஏற்படக்கூடிய குழப்பங்கள்,ஃபித்னாக்களைப் பற்றி எச்சரிக்கை செய்தார்கள். ஸஹாபாக்கள் கூறுகிறார்கள்; நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் என்ற நபித்தோழர் அறிவிக்கிறார்கள்.

நபியவர்கள் அந்த தஜ்ஜாலைக் குறித்து எங்களுக்கு பயமுறுத்திய அந்த அச்சுறுத்தல், அவர்கள் பேசிய பேச்சு அவனை குறித்த அடையாளங்கள் அவனுடைய காலத்திலே ஏற்படக்கூடிய ஃபித்னாக்களை குறித்து நபி (ஸல்) அவர்களுடைய அறிவிப்பு எப்படி இருந்ததென்றால்!

ஏதோ மதீனாவில் சமீபத்தில் இருக்கின்ற அந்த பேரிச்ச மர தோட்டம் அளவுக்கு அவன் வந்துவிட்டான், தோட்டத்தில் அவன் இருக்கின்றான் என்கின்ற அளவுக்கு நபியவர்களுடைய பேச்சு அமைந்திருந்தது.

நூல்: முஸ்லிம், எண்:2937

எந்த அளவிற்கு எதார்த்தத்தை பற்றி ரஸுல் (ஸல்) அவர்கள் பயந்திருக்கிறார்கள். எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். ரஸுல் (ஸல்) அவர்கள் தங்கள் தொழுகையிலே தஜ்ஜாலின் தீங்கிலிருந்து பாதுகாப்பு தேடிக்கொண்டிருந்தார்கள்.

தங்களது தோழர்களுக்கு எப்படி குர்ஆனை‌ மனப்பாடம் செய்து கொடுப்பார்களோ அது போன்று அந்த தொழுகையின் கடைசி இருப்பில் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்பு கேட்கக்கூடிய துஆவைக் கற்றுக்கொடுப்பார்கள்.

ஒரு விஷயத்திலிருந்து பாதுகாப்புத் தேடும்படி அல்லாஹ்வோ அல்லாஹ்வுடைய தூதரோ கூறினார்கள் என்றால் அதை சாதாரணமாக மதிப்பிட்டு விடாதீர்கள்!

நரகத்தைப் பற்றி அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் பாதுகாப்பு தேடிக்கொள்ளும் படி நமக்கு கட்டளையிட்டிருக்கிறார்கள். அதுபோன்று தான் இந்த தஜ்ஜாலைக் குறித்து, யா அல்லாஹ்! தஜ்ஜாலுடைய ஃபித்னாவிலிருந்து நான் உன்னிடத்திலே பாதுகாவல் தேடுகிறேன், என்று ரஸுல் (ஸல்) அவர்கள் நமக்கு துஆவை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்றால் அந்த தஜ்ஜாலுடைய ஃபித்னாவை சாதாரணமாக எடைபோட்டு விடாதீர்கள்.

கண்ணியத்திற்குரிய நபித் தோழர்களும் அவர்களுக்கு பின்னால் வந்த தாபியீன்களும் தங்கள் பிள்ளைகளுக்கு இது குறித்து எச்சரிக்கை செய்வார்கள். தங்கள் மனைவிமார்களுக்கும், தனது சமுதாயத்தினருக்கும் எச்சரிக்கை செய்வார்கள்.

அன்றைய காலங்களிலேயே அவர்கள் இவ்வாறு கூறுவார்கள் என்றால்,நமது காலத்தை கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களுடைய காலத்திலேயே பாவங்கள் அதிகமாகி விட்டன. நபியவர்கள் கூறிய சிறிய அடையாளங்கள் எல்லாம் வந்துவிட்டன என்று அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள் என்றால்,

இன்று அதைவிட எத்தனையோ மடங்கு முஸ்லிம் சமுதாயத்திலே பொதுவாகவும் சரி அல்லது மாற்றார்களுக்கு மத்தியிலும் சரி என்ன பாவங்களை அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் எச்சரித்தார்களோ அந்த பாவங்களை எல்லாம் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ்களைப் பார்ப்போம். இந்த தஜ்ஜாலை பற்றிய அறிமுகம், இந்த தஜ்ஜால் என்பவன் யார்? அவன் எங்கே இருக்கிறான்? அவன் வருவதற்கு முன்னால் என்னென்ன அடையாளங்கள் நிகழும்? இவற்றையெல்லாம் ஹதீஸ்களிலே பார்க்கிறோம்.

இமாம் முஸ்லிம் (ரஹ்) பதிவு செய்கிறார்கள்; கடல்தீவுகளின் ஒரு தீவிலே தஜ்ஜால் இப்போது உயிரோடிருக்கிறான். அவன் சங்கிலிகளை கொண்டு கட்டப்பட்டிருக்கிறான். அவனது இரு கரங்களும் அவனது கழுத்தோடு கட்டப்பட்டிருக்கிறது.

அவனது கைகளையும் கழுத்தோடு பிறகு அவனுடைய கரண்டைக் காலிலிருந்து அவனது முட்டிக்கால்கள் வரை இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறான்.

தஜ்ஜாலைப் பற்றி ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவன் கூறுவதாக,

وَإِنِّي أُوشِكُ أَنْ يُؤْذَنَ لِي فِي الْخُرُوجِ

அவன் கூறிக்கொண்டிருக்கிறான்; அதிவிரைவில் எனக்கு அனுமதி வழங்கப்படும். நான் இந்த தீவிலிருந்து வெளியேறுவதற்கு, இந்த சங்கிலிகளிலிருந்து வெளியேறுவதற்கு எனக்கு அனுமதி வழங்கப்படும் நான் வெளியேறுவேன் என்பதாக.

ரஸுல் (ஸல்) அவர்கள் சில அடையாளங்களை சொன்னார்கள்; ஹவ்ரான், ஃபலஸ்தீன் என்ற இரண்டு நகரங்களுக்கு மத்தியில் இருக்கின்ற பைஸான் என்ற ஊருடைய பேரித்தம் தோட்டங்கள் தனது காய் கனிகளை கொடுக்காது. இதுவரை காய்த்துக் கொண்டிருக்கக் கூடிய அந்த பைஸான் நகரத்து பேரித்தம் பழ தோட்டங்கள் அது காய்க்காது

அதுபோன்று ஜோர்டானிலே ஓடிக்கொண்டிருக்கக்கூடிய மிகப்பெரிய நதியை ஒட்டியுள்ள பெரிய ஏரி, ஏறக்குறைய 53 கிமீ நீளத்திலே 13 கிமீ அகலத்திலே 46 மீ ஆழத்திலே இருக்கக்கூடிய அந்த நதி முற்றிலுமாக வற்றிவிடும் என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதை போன்று அந்த நதி வற்றிக் கொண்டிருப்பதை காண்கிறோம். அதுபோன்று சிரியா தேசத்தில் உள்ள சுகர் என்ற ஊற்று நீரும் முற்றிலுமாக நீங்கிவிடும்.

அங்கே மக்கள் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் அந்த நீரைக் கொண்டு பயன்பெற முடியாமல் முற்றிலுமாக வற்றிவிடும்.

அறிவிப்பாளர்: ஃபாத்திமா பின்த் கைஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 2942

இப்படி தஜ்ஜால் வருவதற்கு முன்னர் மிகப்பெரிய அடையாளங்கள் கண்ணால் பார்க்கப்படக்கூடியவை நிகழும் என்று ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஈரானில் உள்ள குராஸான் என்ற பகுதியில் அஸ்பஹான் என்ற நகரத்தில் யூதர்கள் குடிக்கொண்டிருக்கிறார்கள். யூதக் குடியிருப்பிலிருந்து தான் அவன் முதன்முதலாக வெளியேறுவான்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَخْرُجُ الدَّجَّالُ [ص:56] مِنْ يَهُودِيَّةِ أَصْبَهَانَ، مَعَهُ سَبْعُونَ أَلْفًا مِنَ الْيَهُودِ عَلَيْهِمُ السِّيجَانُ»(مسند أحمد 13344 -)

அப்போது அவன் வெளியேறும்போது அவனோடு70,000 யூதர்கள் பின் தொடர்வார்கள். அந்த 70,000 யூதர்களும் அவனுக்கு பாதுகாவலர்களாக அவனை சுற்றியிருப்பார்கள் என்று அல்லாஹ் உடைய தூதர் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: முஸ்னத் அஹ்மத், எண்: 13344

இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். பல நேரங்களில் நாம் மாற்றார்களை மற்றும் யூத கிறிஸ்தவர்களை பார்க்கிறோம். பார்க்கிறோம். ரஸுல் (ஸல்) அவர்களுடைய கூற்றின் மீது இந்த யூதர்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கை சாதாரணமானதல்ல.

நபியை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர ஆனால் இந்த நபி ஒரு வார்த்தையை சொல்லிவிட்டால் கண்டிப்பாக நிகழும் என்பதில் யூதர்களுக்கு ஆழமான நம்பிக்கை இருக்கிறது.

ஆகவே தான் இன்று வரலாற்றிலே பார்க்கிறோம்; நடப்புகளை கண்காணிக்கக்கூடிய மக்கள் சொல்கிறார்கள் பல பாகங்களிலிருந்தும் யூதர்கள் அந்த தஜ்ஜாலுடைய வருகையை எதிர்பார்த்தவர்களாக இஸ்பஹான் என்ற அந்த யூதக் குடியிருப்பிலே அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அதற்காக அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய விழாவை வைத்து தஜ்ஜாலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்ற குறிப்பையும் நாம் பார்க்கிறோம்.

தஜ்ஜாலின் தோற்றம் :

அவன் ஒரு வாலிபன். சிவப்பு நிறத்தை சேர்ந்தவன். உடல் பருமனானவன். மிகப்பெரிய தோற்றம் உடையவன். அவனது நெற்றி விசாலமானதாக இருக்கும், ஆனால் உடலினுடைய நீளத்திலே கொஞ்சம் குனிந்தவனாக சாய்ந்தவனாக இருப்பான்.

அதிகமாக சுருட்டை முடி கொண்டவனாக இருப்பான். அவனுடைய இரண்டு கண்களில் ஒரு கண் குருடாக இருக்கும். ஒரு கண் மட்டும் தான் அவனுக்கு இருக்கும். கண்னுடைய இன்னொரு பகுதி இருக்காது. முற்றிலுமாக தடவப்பட்டதை போன்று சதை உள்ளதாக. ஒரு திராட்சை பழத்தை வைத்து மூடப்பட்டால் எப்படி சமமாக இருக்குமோ அந்த பகுதி சதையுள்ள பகுதியாக இருக்கும்.ஒற்றைக் கண்ணனாக இருப்பான் என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நூல்கள் : புகாரி (7128), அபூ தாவூத் (4320)

 

தமீமுத்தாரி என்ற ஒரு நபித்தோழர் ஒரு சமயம் பயனத்திலே சென்றபோது பயணத்தில் வழித்தவறி ஒரு தீவிலே ஒதுங்குகிறார்.

அங்கே தஜ்ஜாலை பார்க்கிறார், பார்த்துவிட்டு ரஸுல் (ஸல்) அவர்களிடம் வந்தபோது,  அல்லாஹ்வின் தூதரே! எனது பயனத்தில் வழித்தவறி ஒரு தீவுக்கு சென்றேன். அந்தத் தீவிலே இப்படிப்பட்ட மனிதனை நான் பார்த்தேன் என்று சொன்னபோது, ரஸுல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்; நீர் பார்த்த அவன் தான் தஜ்ஜால் என்று.

அந்த தஜ்ஜாலைப் பற்றி தமீமுத்தாரி வர்ணிக்கிறார்கள்; வாழ்க்கையில் நாங்கள் பார்த்த பிரம்மாண்ட மனிதன் என்று அவனை கூறலாம்

உயரத்திலும் உடல் பருமனிலும் அப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்டமான மனிதனை நாங்கள் பார்த்திருக்கவில்லை. அப்படிப்பட்ட மனிதனை நான் பார்த்து வந்தேன் என்று

அல்லாஹ் உடைய தூதர் (ஸல்) அவர்கள் சொல்லக்கூடிய ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

«مَا بَيْنَ خَلْقِ آدَمَ إِلَى قِيَامِ السَّاعَةِ خَلْقٌ أَكْبَرُ مِنَ الدَّجَّالِ»

அல்லாஹ் ரப்புல் ஆலமின் ஆதம் (அலை) அவர்களை படைத்ததிலிருந்து மறுமை நாள் நிகழும் வரை தஜ்ஜாலைப் போன்ற ஒரு பெரிய‌ படைப்பு இந்த உலகத்திலே படைக்கப்பட்டிருக்காது. அப்படிப்பட்ட ஒரு பெரிய படைப்புதான் தஜ்ஜால்.

அறிவிப்பாளர்: இம்ரான் இப்னு ஹுசைன் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 2946

இந்த தஜ்ஜால் வெளியேறி என்ன செய்வான்?

மக்களெல்லாம் தன்னை வணங்கும் படி அழைப்பான். நான் தான் அல்லாஹ் என்று சொல்வான். நான் வானங்கள் பூமியை படைத்தவன் என்று சொல்வான்.

நபி (ஸல்) அவர்கள் அவன் பொய்யன், அவன் ஏமாற்றக்கூடியவன்,
அவன் அல்லாஹ் அல்ல என்பதற்கு அடையாளம் நமக்கு சொல்கிறார்கள்;

قَالَ ابْنُ عُمَرَ: ثُمَّ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ فَقَالَ: «إِنِّي أُنْذِرُكُمُوهُ وَمَا مِنْ نَبِيٍّ إِلَّا قَدْ أَنْذَرَهُ قَوْمَهُ، لَقَدْ أَنْذَرَهُ نُوحٌ قَوْمَهُ، وَلَكِنْ سَأَقُولُ لَكُمْ فِيهِ قَوْلًا لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ، تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ، وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ»(صحيح البخاري 3057 -)

மக்களே! இதற்கு முன்னால் வந்த எந்த நபியும் தங்களது சமுதாயத்தவர்களுக்கு அறிவித்து தராத அடையாளத்தை நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன்.

நீங்கள் அறிந்து கொள்வீர்கள்! அவன் ஒற்றைக் கண்ணன் என்பதை.

அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்ல. அல்லாஹ்விற்கு இரண்டு கண்கள் இருக்கின்றன. அந்த இரண்டு கண்களைக் கொண்டு அவன் பார்க்கிறான்.

அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: புகாரி, எண்: 3057

யார் தன்னை அல்லாஹ் என்று கூறிக்கொண்டு உங்களை அச்சுருத்த வருவானோ தன்னை வணங்கும் படி அழைப்பானோ அந்த தஜ்ஜால் ஒற்றைக் கண்ணுடையவன். அவனை பார்த்தால் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ، يَقْرَؤُهُ كُلُّ مُؤْمِنٍ، كَاتِبٍ وَغَيْرِ كَاتِبٍ

அதுமட்டுமல்ல தஜ்ஜாலின் நெற்றியில் அவன் காஃபிர் என்று எழுதப்பட்டிருக்கும். படிக்க தெரிந்தவர்களும் சரி, படிக்க தெரியாதவர்களும் சரி! அவனது நெற்றியிலே எழுதப்பட்டிருக்கும் அந்த வார்த்தையை படித்து தெரிந்து கொள்வார்கள். (2)

அறிவிப்பாளர்: ஹுதைஃபா ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 2934

இந்த தஜ்ஜாலின் வருகையைக் குறித்து அப்போது ஏற்படக்கூடிய மிகப்பெரிய இழப்பைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்;

ثَلَاثٌ إِذَا خَرَجْنَ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ، أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا: طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَالدَّجَّالُ، وَدَابَّةُ الْأَرْضِ

மூன்று அடையாளங்கள் நிகழ்ந்துவிட்டால், அதற்குப்பிறகு ஈமானை ஏற்றுக் கொள்ளக்கூடிய அடியாரின் ஈமான் அவருக்குப் பலன் தராது. அல்லது ஏற்கனவே முஃமினாக இருந்த ஒரு மனிதர் நன்மை செய்து கொண்டால் புதிதாக நன்மைகளை தேடிக்கொண்டால் அந்த நன்மையும் அவருக்குப் பலன் தராது.

தவ்பா உடைய வாசல் அடைக்கப்பட்டு விடும். அதற்குப் பிறகு தவ்பா செய்பவரின் தவ்பா ஏற்றுக்கொள்ளப்படாது.

சூரியன் மேற்கிலிருந்து உதயமாகிவிட்டால், தஜ்ஜால் வெளியேறிவிட்டால், பூமியிலிருந்து மிகப்பெரிய ஒரு மிருகத்தை அல்லாஹ் வெளிப்படுத்துவான்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரன் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 158

அந்த மூன்று அடையாளங்களும் நிகழ்ந்து விட்டால் யாருடைய ஈமானும் பயன் தராது. யாருடைய நன்மையும் பயன்தராது. யாருடைய தவ்பாவும் பயன் தராது. என்று தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.

இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;

بَادِرُوا بِالأَعْمَالِ

நீங்கள் அமல்களை செய்யுங்கள்; விரைந்து செய்யுங்கள்; வேகமாக செய்யுங்கள். நீங்கள் எதை எதிர்பார்கிறீர்கள்?

மறுமை வருவதை எதிர்பார்க்கிறீர்களா? தஜ்ஜால் வருவதை எதிர்பார்க்கிறீர்களா?

فَشَرُّ غَائِبٍ يُنْتَظَرُ

”எதிர்பார்க்கக்கூடிய விஷயங்களிலே மிக மோசமானவன் தஜ்ஜால். அவனுடைய வருகையை எதரிபார்த்தா இருக்கிறீர்கள்!? மறுமையின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? மறுமையை குறித்த அச்சம் உங்களுக்கு இல்லையா? (3)

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: திர்மிதி, எண்: 2306

அந்த தஜ்ஜால் என்ன செய்வான்? மக்களிடத்திலே வருவான்; நான் தான் அல்லாஹ் என்று சொல்வான். அவன் மனிதர்களைக் கொல்வான். கொன்ற மனிதர்களை அவனே உயிர்பிப்பான். ஒரு மனிதரை அழைத்து வாளால் இரு துண்டுகளாக வெட்டிவிட்டு பிறகு அந்த மனிதனை பெயர் கூறி அழைப்பான். அந்த மனிதன் உயிரோடு வருவான்.

இதையெல்லாம் பார்த்து இவன் அல்லாஹ்வாக இருப்பானோ என்று காஃபிர்கள் முனாஃபிக்குகள் யாருடைய உள்ளத்திலே சந்தேகம் இருந்ததோ அவர்களெல்லாம் அவனை அல்லாஹ் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

ஒரு மனிதனை அவனுடைய தலையிலிருந்து அப்படியே அவனது கால் வரை இரண்டு துண்டாக ரம்பத்தால் பிளந்துவிடுவான். பிறகு சொல்வான் என் பக்கம் வா என்பதாக. பின்பு அவன் ஒரு சமமான மனிதனாக எழுந்து நிற்பான்.

அவன் வானத்தை பார்த்து சொல்வான்; நீ மழை பொழி! என்பதாக. வானம் மழை பொழியும். பூமியை பார்த்து சொல்வான்; உன் விளைச்சல்களை நீ கொண்டு வா! என்பதாக. பூமி விளைய ஆரம்பித்துவிடும்.

அறிவிப்பாளர்: அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 2938.

அவனோடு இரண்டு நதிகள் ஓடிக்கொண்டு இருக்கும். ஒன்று பார்ப்பதற்கு வெண்மை நிறமான நதியாக இருக்கும். இன்னொன்று பார்ப்பதற்கு நெருப்பு நதியாக இருக்கும். தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;

உங்களில் யாராவது அந்த தஜ்ஜாலைப் பார்த்தால், அவன் சொல்வான்; என்னை கொண்டு நம்பிக்கைக் கொள்கிறாயா!? இல்லையா? என்று கேட்பான். மறுத்தால் மறுத்தவர்களை நெருப்பு நீரிலே போடுவான். ஆனால் அதுவோ அவருக்கு சொர்க்கமாக ஒரு மதுரமான ஒன்றாக இருக்கும்.

யார் தன்னை ஏற்றுக் கொண்டார்களோ அவர்களை நதி நீராக காட்சி அளிக்கக் கூடிய அந்தத் தோட்டத்திலே அவன் புகுத்துவான். ஆனால் அது அவனுக்கு நரகமாக இருக்கும் என்று தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.(2)

அறிவிப்பாளர்: ஹுதைஃபா ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 2934

தஜ்ஜால் இந்த பூமியில் மிக வேகமாக பயணம் செய்வான்.அதன் காரணமாகத்தான் அவனுக்கு மஸீஹ் என்று சொல்லப்படுகிறது. தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;

كَالْغَيْثِ اسْتَدْبَرَتْهُ الرِّيحُ

வேகமாக காற்று வீசக்கூடிய நேரத்தில் பெய்யக்கூடிய அடைமழை எவ்வளவு வேகமாக பெய்யுமோ அதுபோன்று அவன் வேகம் இருக்குமென்று சொன்னார்கள்.

பாழடைந்து கிடக்கக்கூடிய கட்டிடங்களை பார்த்து சொல்வான்;உனக்கு கீழே புதைத்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய தங்கம் வெள்ளி பொக்கிஷங்களை எல்லாம் நீ வெளியே கொண்டு வா! என்பதாக. அந்த பாழடைந்த கோட்டைகளிலே இருக்கக்கூடிய பொக்கிஷங்கள் எல்லாம் வெளியே வருவது மட்டும் அல்ல. அந்த பொக்கிஷங்கள் எல்லாம் அவன் செல்லக்கூடிய எல்லா இடத்திற்கும் செல்லும்.

அறிவிப்பாளர்: நவ்வாஸ் இப்னு சம்ஆன் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 2937.

இப்படிப்பட்ட காட்சிகளை எல்லாம் ஒரு சாதாரண மனிதன் பார்த்தான் என்றால் அவன் உள்ளத்தில் என்ன நிலை ஏற்படும்! எனவே தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்தார்கள்.

அவன் இந்த பூமியிலே எவ்வளவு நாள் தங்கி இருப்பான்?

أَرْبَعُونَ يَوْمًا، يَوْمٌ كَسَنَةٍ، وَيَوْمٌ كَشَهْرٍ، وَيَوْمٌ كَجُمُعَةٍ، وَسَائِرُ أَيَّامِهِ كَأَيَّامِكُمْ

நாற்பது நாட்கள் இந்த பூமியிலே தங்கி இருப்பான். அவனது முதல் நாள் ஓர் ஆண்டைப் போல இருக்கும். அவனது இரண்டாவது நாள் ஓர் மாதத்தைப் போன்றும் . மூன்றாவது நாள் ஓர் வாரத்தைப் போன்றிருக்கும். அவனது ஏனைய நாட்கள் நம்முடைய மற்ற நாட்களை போலிருக்கும்.

அறிவிப்பாளர்: நவ்வாஸ் இப்னு சம்ஆன் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 2937

பூமியிலுள்ள அத்தனை நாடுகளையும் நாடுகளிலுள்ள அத்தனை கிராமங்களையும் நகரங்களையும் அவன் சுற்றி வந்துவிடுவான்.

மக்கா மதீனாவைத் தவிர, மக்கா மதீனாவிற்குள் நுழைய அவன் முயற்சி செய்வான். ஆனால் ரப்புல் ஆலமீன் மக்கா மதீனா வாசல்களில் வாளோடு மலக்குகளை அல்லாஹ் வைத்திருப்பான்.

அவன் நுழைய முற்சிக்கும்போதெல்லாம் அந்த வானவர்கள் தஜ்ஜாலை விரட்டிவிடுவார்கள். அந்த இரண்டு பூமிகளையும் அல்லாஹ் பாதுகாத்து வைத்திருக்கிறான்.

கடைசியாக அந்த தஜ்ஜால் மதினாவிற்கு அருகிலே வருவான். அருகிலே வந்து உஹது மலையினுடைய மேற்கு பகுதியில் உள்ள சதுப்பு நிலமான இடத்தில் தன் கூடாரங்களை அமைப்பான். அவனைச் சுற்றி அவன் ஸஹாக்கள் எல்லாம் இருப்பார்கள்.

இங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிடுகிறார்கள்; அவன் மதினாவிற்கு வெளியில் கூடாரமிட்டு எதிர்பார்த்து கொண்டிருக்கும்போது மதீனாவில் உள்ள பெண்கள் எல்லாம் வெளியேறி வந்துவிடுவார்கள். யாருடைய உள்ளத்தில் பலவீனமான ஈமான் இருக்கிறதோ அப்படிப்பட்ட பெண்கள் எல்லாம் அவன் காட்டக்கூடிய அதிசயங்களை பார்ப்பதற்காக அவனை கடவுள் என்று நினைத்து வெளியேறிவிடுவார்கள்.

இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்; ஒவ்வொரு காலத்திலும் மதீனா முனாஃபிக்குகளை காஃபிர்களை வெளியேற்றிக் கொண்டிருக்கும் என்பதாக.

பெண்களை குறித்து ரஸுல் (ஸல்) சொன்ன இந்த விஷயங்கள் குழப்பங்கள் விஷயத்தில் மார்க்கித்திற்கு முரணான விஷயங்களில் வெளிப்படையான விஷயங்களை பார்த்து ஏமாந்து அல்லாஹ்வின் கட்டளைகளை மீறி ஷிர்க்கான காரியங்களில் அதிகமாக விழக்கூடியவர்கள் பெண்களாக இருப்பார்கள் என்று நபி (ஸல்) குறிப்பிடுகிறார்கள்.

இன்று பார்க்கிறோம். கப்ரு தர்ஹாக்களில் நடக்கக்கூடிய ஷிர்க்கான செயல்களில் பல விஷயங்கள் பெண்களின் மூலமாக தான் நிகழ்கிறது. அந்த ஷிர்க் நடக்கும் இடங்களுக்கு அதிகமாக செல்லக்கூடியவர்கள் பெண்களாக இருக்கிறார்கள்.

சூனியத்தை நாடக்கூடியவர்கள் அதிகமாக பெண்களாக இருக்கிறார்கள். ஆகவே நமது சமுதாய பெண்களுக்கு தவ்ஹீதை குறித்து ஈமானை குறித்து தண்டனையை குறித்து எச்சரிக்கை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்; அப்போது மதீனாவில் மிகப்பெரிய ஒரு ஆட்டம் ஏற்படும். அந்த ஆட்டத்திலே அங்கு இருக்கும் பலவீனமானவர்கள் வெளியேறி வந்து விடுவார்கள். தஜ்ஜாலை பின்தொடர நினைப்பவர்கள் பின்தொடர்வார்கள். இது தஜ்ஜாலினால் ஏற்பட்ட ஆபத்தாக இருக்குமோ அவனிடத்தில் சென்று அடைக்கலம் காணலாம் என்பதாக வெளியேறி வந்துவிடுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள்;

إِنْ يَخْرُجْ وَأَنَا فِيكُمْ، فَأَنَا حَجِيجُهُ دُونَكُمْ، وَإِنْ يَخْرُجْ وَلَسْتُ فِيكُمْ، فَامْرُؤٌ حَجِيجُ نَفْسِهِ وَاللهُ خَلِيفَتِي عَلَى كُلِّ مُسْلِمٍ

நான் இருக்கும்போது அந்த தஜ்ஜால் வந்துவிட்டால் உங்கள் சார்பாக நான் அவனிடம் போராடக் கூடியவராக இருப்பேன். நான் இல்லையென்றால் ஒவ்வொரு மனிதனும் அவனுடைய நஃப்ஸுக்கு தஜ்ஜாலோடு போராடக்கூடிய ஒருவனாக இருக்கிறான் என்று தனது மரணத்துக்கு பின்னுள்ள நிகழ்வை ரஸுல் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அறிவிப்பாளர்: நவ்வாஸ் இப்னு சம்ஆன் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 2937.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த நேரத்தில் நடக்கக்கூடிய அதிசயமான நிகழ்வையும் சொன்னார்கள்; மதீனாவிலிருந்து ஒரு வாலிபன் வெளியேறுவார். அவர் அப்போது மதீனாவிலேயே சிறந்த மனிதராக இருப்பார். தஜ்ஜாலைப் பார்த்து சொல்வான்;

أَشْهَدُ أَنَّكَ الدَّجَّالُ الَّذِي حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

இமாம் புகாரி பதிவு செய்கிறார்கள்;

அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் சாட்சி சொல்கிறேன்; எந்த தஜ்ஜாலைக் குறித்து (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தார்களோ அந்த தஜ்ஜால் நீ தான் என்பதாக. அவனுக்கு முன்னால் துணிவோடு நின்றுக்கொண்டு சாட்சி சொல்வான். தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை செய்வார்.

இது ஈமானால் ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வு. தூதர் (ஸல்) அவர்கள் அந்த வாலிபரை குறித்து அவர்தான் அப்போது மதீனாவிலே சிறந்த வாலிபராக இருப்பார் என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

தஜ்ஜாலிடமிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்வது?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;

عَنْ أَبِي الدَّهْمَاءِ، قَالَ: سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ، يُحَدِّثُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَمِعَ بِالدَّجَّالِ فَلْيَنْأَ عَنْهُ، فَوَاللَّهِ إِنَّ الرَّجُلَ لَيَأْتِيهِ وَهُوَ يَحْسِبُ أَنَّهُ مُؤْمِنٌ فَيَتَّبِعُهُ، مِمَّا يَبْعَثُ بِهِ مِنَ الشُّبُهَاتِ»، أَوْ «لِمَا يَبْعَثُ بِهِ مِنَ الشُّبُهَاتِ» هَكَذَا قَالَ (سنن أبي داود 4319 -]حكم الألباني] : صحيح

யாருக்கு தஜ்ஜாலின் வருகையைப் பற்றிய செய்தி கிடைக்கிறதோ அவர் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரண்டு ஓடட்டும். அவனை விட்டு தூரமாக இருக்கட்டும்.

அல்லாஹ் பாதுகாப்பானாக!!

ஒரு மனிதன் தன்னை ஒரு பெரிய முஃமினாக நினைத்துக்கொண்டு எனது உள்ளத்திலே ஈமான் இருக்கிறது என்னை அவன் ஒன்றும் செய்துவிடமுடியாது என்று அவனை நோக்கி வருவான். அவன் காட்டக்கூடிய அந்த அதிசயங்களை பார்த்து உண்மையில் அவன் அல்லாஹ்வாக இருப்பானோ! இவனிடத்திலே சக்தி இருக்கிறதோ! என்று தஜ்ஜாலின் பின்னால் சென்றுவிடுவான். அவ்வளவு பெரிய சந்தேகத்தில் அவனை தள்ளக்கூடிய விஷயங்களை அவன் செய்து காட்டுவான் என்று தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பாளர்: இம்ரான் இப்னு ஹுசைன் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: அபூ தாவூத், எண்: 4319

இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தின் பக்கம் நபியவர்கள் நமக்கு எச்சரிக்கையை சுட்டிக் காட்டுகிறார்கள். அதாவது இன்று பலர் ஏதாவது பிரச்சனையான இடங்கள் ஏற்பட்டால், ஏதாவது அல்லாஹ்வின் புறத்திலிருந்து சோதனை ஏற்பட்டால் அந்த இடங்களுக்கு போய் பார்ப்போம் என்று சொல்கிறார்கள்.

சுனாமி ஏற்பட்டால் கடலிலே எப்படி சுனாமி ஏற்படுகிறது? அல்லது எங்காவது புயல் வீசினால் அது எப்படி வீசுகிறது? என்று பார்ப்போம். இப்படியெல்லாம் அந்த நிகழ்வுகள் நடக்கக்கூடிய இடங்களுக்கு அந்த நிகழ்வுகளை பார்ப்பதற்காக செல்கிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அப்படியல்ல. ஒரு இடத்தில் அல்லாஹ்வின் வேதனை இறங்குகிறது என்பதை கேள்விப்பட்டால் அதிலிருந்து நீங்கள் விலகி விரண்டோடி செல்லுங்கள். உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் வேதனை நிகழக்கூடிய அந்த இடத்தில் நீங்கள் இருக்காதீர்கள் என்று சொன்னார்கள்.

நிகழ்வு நடந்ததற்கு பிறகு அங்கு இருக்கக்கூடிய மக்களை பாதுகாப்பதற்காக அல்லது பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்காக அவர்களுக்கு சிகிச்சை செய்வதற்காக செல்வது என்பது வேறு. நிகழ்வு நடந்து கொண்டிருக்கும்போது அது எப்படி நடக்கிறது என்று பார்த்து ரசிப்பதற்காக, இன்னும் சிலர் அங்கு நின்றுக்கொண்டு படம் பிடித்து கொண்டிருப்பார்கள். இவையெல்லாம் அல்லாஹ்வின் மீதுள்ள பயமின்மையை குறிக்கிறது.

மார்க்கத்தை பலமாக பற்றிப் பிடிப்பதை தவிர தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு வேறு வழியில்லை.

யார் பலகீனமானவர்களாக, அசிங்கமான ஆபாசங்களுக்கு பின்னால் செல்கிறார்களோ, உள்ளத்தில் நயவஞ்சகம் என்ற நோயை மறைத்து கொண்டிருக்கிறார்களோ, இந்த மார்க்கத்தில் உறுதியான பிடிப்பில்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் தான் தஜ்ஜால் பின்னால் செல்வார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த அந்த துஆவை தஷஹ்ஹுதுடைய ஒவ்வொரு கடைசி அமர்விலும் நாம் ஓதுகிறோம்.

أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فِي صَلَاتِهِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ المَأْثَمِ، وَالْمَغْرَمِ،» فَقَالَ لَهُ قَائِلٌ: مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ مِنَ الْمَغْرَمِ؟، فَقَالَ: «إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ، وَوَعَدَ فَأَخْلَفَ»(سنن أبي داود 880 -) حكم الألباني] : صحيح

பொருள்; அல்லாஹ்வே! நரக நெருப்பிலிருந்து பாதுகாவல் தேடுகிறேன்; கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாவல் தேடுகிறேன்; வாழ்க்கை மரணத்தின் குழப்பத்திலிருந்து பாதுகாவல் தேடுகிறேன்; மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நான் பாதுகாவல் தேடுகிறேன் என்ற துஆவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டிப்பாக ஓத வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

எனவே தான் மார்க்க அறிஞர்களில் மிகப்பெரிய மார்க்க அறிஞர் இமாம் தாஊஸ் சொல்கிறார்கள்; தஷஹ்ஹுதில் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்பு கேட்கும்படியான அந்த துஆவை ஓதுவது வாஜிபாகும்.

அப்படி ஒருவர் ஓதாமல் தொழுகையை முடித்துக் கொண்டால் அவர் மீண்டும் தொழுகையை மீட்டுத் தொழவேண்டும் என்ற அளவிற்கு அவர்களுடைய ஃபத்வா அமைந்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே கண்டிப்பாக இந்த துஆவை நாமும் மனப்பாடம் செய்வதோடு நமது பிள்ளைகளுக்கும் அந்த துஆவை மனப்பாடம் செய்து கொடுக்க வேண்டும்.

அதுபோன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;

فَمَنْ أَدْرَكَهُ مِنْكُمْ، فَلْيَقْرَأْ عَلَيْهِ فَوَاتِحَ سُورَةِ الْكَهْفِ

யாராவது தஜ்ஜாலின் வருகையைப் பற்றிக் கேள்விப்பட்டால் உடனே அவர் சூரத்துல் கஹ்ஃபுடைய முந்தைய முதல் பத்து வசனங்களை ஓதிக்கொள்ளட்டும்.யார் அந்த பத்து வசனங்களை ஓதிக்கொள்வாரோ அவர் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்பு தேடுவார்.

அறிவிப்பாளர்: நவ்வாஸ் இப்னு சம்ஆன் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 2937.

பதினெட்டாவது அத்தியாயத்தின் முதல் பத்து வசனங்கள்.

இன்று நம் பிள்ளைகளுக்கு எத்தனையோ விஷயங்களை மனப்பாடம் செய்து கொடுக்கிறோம். இதுபோன்ற விஷயங்கள் உண்மையில் மனப்பாடம் செய்து கொடுப்பதற்கு தகுதியானவை என்பதை மறந்துவிடாதீர்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலின் ஃபித்னாவைப் பற்றி மேலும் சொன்னார்கள்; ஈஸா (அலை) அவர்கள் தஜ்ஜால் இருக்கும்போது திமஷ்க்கினுடைய மஸ்ஜிதின் மினாராவிலிருந்து இறங்குவார்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமின்அவர்களை இறக்குவான்.

அல்லாஹ்வின் அடியார்களெல்லாம் அவர்களை சூழ்ந்து கொள்வார்கள். எப்போது தஜ்ஜால் மதீனாவிலிருந்து பைத்துல் மக்தஸை நோக்கி வருவானோ லுத் என்ற வாசலுக்கு அருகில் ஈஸா (அலை) அவர்கள் தஜ்ஜாலைப் பெற்றுக் கொள்வார்கள்.

எப்போது ஈஸா (அலை) அவர்களை தஜ்ஜால் பார்க்கிறானோ

ذَابَ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ

தண்ணீரிலே நீர் கரைவதைப் போன்று அவன் அப்படியே உருக ஆரம்பித்து விடுவான்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 2897

இது எதை சுட்டிக் காட்டுகிறது என்றால் ஒரு பாத்தில் -ஒரு பொய், ஒரு அசத்தியம் அது எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும் சரி! மக்களின் கண் பார்வைக்கு அது ஒரு பெரிய சக்தியாக தோன்றினாலும் சரி, அல்லாஹ்வின் வேதத்தின் படி நடப்பவர், அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றி நடப்பவருக்கு முன்னால் அந்த சக்தி ஒரு அற்பமானது.

அல்லாஹ் சொல்வதைப் போல,

مَثَلُ الَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ أَوْلِيَاءَ كَمَثَلِ الْعَنْكَبُوتِ اتَّخَذَتْ بَيْتًا وَإِنَّ أَوْهَنَ الْبُيُوتِ لَبَيْتُ الْعَنْكَبُوتِ لَوْ كَانُوا يَعْلَمُونَ

அல்லாஹ்வையன்றி (மற்றவற்றைத் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களின் உதாரணம்: நூலாம் பூச்சி கட்டிய வீட்டை(த் தாங்கள் வசிக்க எடுத்துக் கொண்டவர்களின் உதாரணத்தை) ஒத்திருக்கிறது. வீடுகளில் எல்லாம் மிக்க பலவீனமானது நிச்சயமாக நூலாம் பூச்சியின் வீடுதான். (நூலாம் பூச்சியின் வீடு இவர்களை எவ்வாறு பாதுகாக்க முடியாதோ அவ்வாறே இவர்கள் தங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்ட தெய்வங்களும் இவர்களை பாதுகாக்க முடியாது. இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே! (அல்குர்ஆன் 29 : 41)

وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا

சத்தியம் வந்தே தீரும். சத்தியம் உயர்ந்தே தீரும். அசத்தியம் அழிந்தே தீரும். நிச்சயமாக அசத்தியம் அழியக் கூடியது. (அல்குர்ஆன் 17 : 81)

ஈஸா (அலை) அவர்கள் சாதாரண மனித உருவிலே இருப்பார்கள். அவர்களிடத்திலே தஜ்ஜால் காட்டுவதை போன்ற பெரிய ஆற்றலெல்லாம் இருக்காது. ஆனால் அல்லாஹ்வின் வஹீயைக் கொண்டு பாதுகாக்கப்பட்டவர்கள்.

அவர்களை பார்த்த உடன் தஜ்ஜாலின் உள்ளத்தில் அல்லாஹ் எப்படிப்பட்ட பயத்தை போடுகிறான் என்றால் அவனுடைய அந்த ஆற்றல்களெல்லாம் நீங்கி அவனது உடல் கூனி குறுகி தண்ணீரில் உப்பு கரைவதை போன்று கரைய ஆரம்பித்துவிடுவான்.

ஈஸா (அலை) அவர்கள் தனது கையில் இருக்கக்கூடிய ஈட்டியால் அவனை கொல்வார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.

இப்படி மறுமையை குறித்து நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்கின்ற அதே நேரத்தில் தஜ்ஜாலைக் குறித்து மிகக் கடுமையாகவும் ஆழமாகவும் நமக்கு எச்சரிக்கை செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைக் குறித்து எச்சரிக்கை செய்து கொண்டிருந்தபோது ஒரு முக்கியமான விஷயத்தை நமக்கு குறிப்பிடுகிறார்கள்;

عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَتَذَاكَرُ الْمَسِيحَ الدَّجَّالَ، فَقَالَ: «أَلَا أُخْبِرُكُمْ بِمَا هُوَ أَخْوَفُ عَلَيْكُمْ عِنْدِي مِنَ الْمَسِيحِ الدَّجَّالِ؟» قَالَ: قُلْنَا: بَلَى، فَقَالَ: «الشِّرْكُ الْخَفِيُّ، أَنْ يَقُومَ الرَّجُلُ يُصَلِّي، فَيُزَيِّنُ صَلَاتَهُ، لِمَا يَرَى مِنْ نَظَرِ رَجُلٍ»(سنن ابن ماجه 4204 -)حكم الألباني-حسن

தஜ்ஜாலை விட பயமான ஒன்று என்னிடம் இருக்கிறது அது“முகஸ்துதி” என்றார்கள். الشِّرْكُ الْخَفِيُّ”அஷ்ஷிர்குல் ஹஃபீ”

ஒரு மனிதன் தொழுகைக்காக எழுந்து நிற்பான். அப்போது யாராவது அவன் பக்கத்தில் வருபவர்கள் அவனை பார்ப்பார்கள். அவர் பார்க்கிறார் என்பதற்காக இன்னும் அழகாக தொழ முயற்சி செய்வான். அப்படிப்பட்ட முகஸ்துதி தஜ்ஜாலை விட அதிக பயத்திற்குரியது.

என்று (ஸல்) அவர்கள் கூறிய முகஸ்துதி பற்றிய எச்சரிக்கையையும் நாம் இந்த இடத்திலே பயந்துக் கொள்ள வேண்டும்.

அறிவிப்பாளர்: அபூ சயீத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: இப்னு மாஜா, எண்: 4204

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா மறுமையின் அச்சமுடையவர்களாக மறுமைக்காக நல்ல தயாரிப்புகளை செய்து கொள்ளக்கூடிய முஸ்லிம்களாக என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم

குறிப்புகள் :

குறிப்பு 1).

حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدٍ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: كُنَّا نَتَحَدَّثُ بِحَجَّةِ الوَدَاعِ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا، وَلاَ نَدْرِي مَا حَجَّةُ الوَدَاعِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ ذَكَرَ المَسِيحَ الدَّجَّالَ فَأَطْنَبَ فِي ذِكْرِهِ، وَقَالَ: " مَا بَعَثَ اللَّهُ مِنْ نَبِيٍّ إِلَّا أَنْذَرَ أُمَّتَهُ، أَنْذَرَهُ نُوحٌ وَالنَّبِيُّونَ مِنْ بَعْدِهِ، وَإِنَّهُ يَخْرُجُ فِيكُمْ، فَمَا خَفِيَ عَلَيْكُمْ مِنْ شَأْنِهِ فَلَيْسَ يَخْفَى عَلَيْكُمْ: أَنَّ رَبَّكُمْ لَيْسَ عَلَى مَا يَخْفَى عَلَيْكُمْ ثَلاَثًا، إِنَّ رَبَّكُمْ لَيْسَ [ص:177] بِأَعْوَرَ، وَإِنَّهُ أَعْوَرُ عَيْنِ اليُمْنَى، كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ، (صحيح البخاري 4402 -)

குறிப்பு 2).

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَأَنَا أَعْلَمُ بِمَا مَعَ الدَّجَّالِ مِنْهُ، مَعَهُ نَهْرَانِ يَجْرِيَانِ، أَحَدُهُمَا رَأْيَ الْعَيْنِ، مَاءٌ أَبْيَضُ، وَالْآخَرُ رَأْيَ الْعَيْنِ، نَارٌ تَأَجَّجُ، فَإِمَّا أَدْرَكَنَّ أَحَدٌ، فَلْيَأْتِ النَّهْرَ الَّذِي يَرَاهُ نَارًا وَلْيُغَمِّضْ، ثُمَّ لْيُطَأْطِئْ رَأْسَهُ فَيَشْرَبَ مِنْهُ، فَإِنَّهُ مَاءٌ بَارِدٌ، وَإِنَّ الدَّجَّالَ مَمْسُوحُ الْعَيْنِ، عَلَيْهَا ظَفَرَةٌ غَلِيظَةٌ، مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ كَافِرٌ، يَقْرَؤُهُ كُلُّ مُؤْمِنٍ، كَاتِبٍ وَغَيْرِ كَاتِبٍ» (صحيح مسلم  - (2934)

குறிப்பு 3).

حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ، عَنْ مُحَرَّرِ بْنِ هَارُونَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَادِرُوا بِالأَعْمَالِ سَبْعًا هَلْ تُنْظَرُونَ إِلَّا إِلَى فَقْرٍ مُنْسٍ، أَوْ غِنًى مُطْغٍ، أَوْ مَرَضٍ مُفْسِدٍ، أَوْ هَرَمٍ مُفَنِّدٍ، أَوْ مَوْتٍ مُجْهِزٍ، أَوِ الدَّجَّالِ فَشَرُّ غَائِبٍ يُنْتَظَرُ، أَوِ السَّاعَةِ فَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، إِلَّا مِنْ حَدِيثِ مُحَرَّرِ بْنِ هَارُونَ وَقَدْ رَوَى بِشْرُ بْنُ عُمَرَ، وَغَيْرُهُ عَنْ مُحَرَّرِ بْنِ هَارُونَ، هَذَا وَقَدْ رَوَى مَعْمَرٌ، هَذَا الحَدِيثَ عَمَّنْ، سَمِعَ سَعِيدًا المَقْبُرِيَّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ وَقَالَ: «تَنْتَظِرُونَ»(سنن الترمذي 2306 -) حكم الألباني] : ضعيف

 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/