HOME      Khutba      அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சுவீர் | Tamil Bayan - 309   
 

அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சுவீர் | Tamil Bayan - 309

           

அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சுவீர் | Tamil Bayan - 309


بسم الله الرحمن الرّحيم

அல்லாஹ்வின் தண்டனையை அஞ்சுவீர்

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வைப் பயந்துக் கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவுப் படுத்தியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் அவனுடைய அடியார்கள் மீது மாபெரும் அருள் உடையவன்;கருணை உடையவன். தன்னைத் தானே ارحم الراحمين-"அர்ஹமுர் ராஹிமீன்" -கருணையாளருக்கெல்லாம் மாபரும் கருணையாளன் என்று புகழ்ந்துகொள்கிறான். அந்த புகழ்ச்சிக்கு வேறு யாரும் தகுதியுடையவர்கள் இல்லை.

என் கோபத்தைவிட எனது அன்பு,கருணை,அருள் தான் மிகைத்து நிற்குமென்று தன் ஷிஃபத்துகளைப் பற்றி அல்லாஹ்சொல்கிறான்.

نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ

அல்லாஹ் தஆலா, தன் தூதருக்கு தன்னைப்பற்றி தன் அடியார்களுக்கு அறிமுகப்படுத்தும்படி கூறும்போது, நிச்சயமாக நான்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையுடையவன், அன்புடையோன் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 15 : 49)

இப்படியெல்லாம் அல்லாஹ் தனது அருளைப்பற்றி,தனது அன்பைப்பற்றி,தனது கருணையைப் பற்றி,பாசத்தைப் பற்றி,இரக்கத்தைப் பற்றி,தனது மன்னிப்பை பற்றி,தயாளத் தன்மையைப் பற்றிச் சொல்கிறவன்.

அதே நேரத்தில் அவனது சட்ட வரம்புகள் மீறப்பட்டால், அவனுடைய கட்டளைகளுக்கு மாற்றமாக அடியார்கள் நடந்து கொண்டால், அல்லாஹ்வுடைய ஷரீஆவை மீறினால், அல்லாஹு தஆலா வெறுத்த, சபித்த பாவங்களை மக்கள் செய்தால் அவர்களை தண்டிப்பதிலும் அல்லாஹ் மிகக்கடுமையானவன்.

وَأَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيمُ

நபியே!எனது மன்னிப்பு, கருணையைப் பற்றி சொல்கின்ற அதே நேரத்தில் எனது அடியார்களுக்கு இதையும் சொல்லி வையுங்கள்:எனது தண்டனை மாபெரும் கடுமையான தண்டனை ஆகும். (அல்குர்ஆன் 15 : 50)

குர்ஆனில் அல்லாஹ் தன்னைப்பற்றி சொல்லும்போது, شديد العقاب-"ஷதீதுல் இகாப், شديد العذاب-ஷதீதுல் அதாப்" -தண்டனை கடுமையானவன். அல்லாஹ்வுடைய தண்டனையைப் போன்று வேறு யாரும் தண்டனை கொடுக்க முடியாது.

سريع الحساب-"ஸரீயுல் ஹிசாப்" அவன் விசாரிக்க வந்துவிட்டால் அவனை விட விரைவாக தீவிரமாக வேறு யாரும் கேட்க முடியாது.

எனவே அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.

இன்று நம்மிலே ஒரு கூட்டம், (அல்லாஹ் மன்னிக்க வேண்டும்)தனது நன்மைகளைப் பற்றி,தனது வணக்க வழிபாடுகளைப் பற்றி திருப்தி கொண்டவர்களாக, தனது சமூகத்திலே எப்படிப்பட்ட பாவங்களை மக்கள் செய்தாலும் அதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ளாதவர்களாக தீமையை தடுக்காதவர்களாக இருக்கிறோம்.

நாம் எப்படி நம்மை நினைத்துக் கொண்டிருக்கிறாம் என்றால், அல்லாஹ் ரப்புல் ஆலமின் தடுத்த பாவங்களெல்லாம் ஏதோ முஸ்லிம்கள் மட்டும் விலகிக் கொள்வற்காக, முஸ்லிம்களின் மஸ்ஜிதுகளில் மட்டும் பேசப்படுவதற்காக என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

அன்றாட நமது வாழ்வாதாரத்திற்காக, எந்த ரிஸ்க் உடைய பொறுப்பை அல்லாஹ் தனது கையிலே வைத்திருக்கிறானோ? அவனது பொருப்பில் வைத்திருக்கிறானோ? அந்த ரிஸ்கை காஃபிர்களிடத்தில் வேண்டி பிச்சைக்கேட்டு அதற்கெல்லாம் மாநாடுகள் நடத்துகின்றோம்.

அதற்கெல்லாம் எத்தனையோ கலவரங்களையும் புரட்சிகளையும் நாம் செய்கின்றோம்.

எந்த பாவங்களை உலக மக்கள் அனைவரின் மீதும் பாவமாக குற்றமாக நான் தடுத்திருந்தேனோ, அந்த பாவத்திலிருந்து மக்களை நீங்கள் தடுத்தீர்களா என்று அல்லாஹ் ரப்புல் ஆலமின் நாளை மறுமை நாளிலே கேட்கமாட்டானா? விசாரிக்க மாட்டானா?

எங்கேயாவது ஒரு நிகழ்வு நடந்துவிட்டால் குறிப்பிட்ட அந்த நிகழ்வை குறித்து மட்டும் பேசுவது இஸ்லாமின் பார்வையல்ல.

ஒரு முஸ்லிம் எப்போதும் விழிப்புணர்வு உடையவனாக,அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்பவனாக, நன்மையை ஏவக் கூடியவராக, தீமையை தடுக்கக்கூடியவனாக இருக்க வேண்டும்.

ஏதோ ஒரு விஷயத்தில் ஒரு தீமை நடந்துவிட்டால்,நம்மை அந்த தீமை பாதிக்கும்போது அதை மட்டும் பேசினால் போதாது. அந்தத் துறையே தவறு.அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தான் இன்று உலக மக்களெல்லாம் சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விமர்சிக்கப்பட்ட போது குறிப்பிட்ட அந்த விமர்சனத்தை மட்டும் நாம் எதிர்த்து விட்டு என்னவோ நாமெல்லாம் ஒட்டுமொத்த துறையை அங்கீகரித்தவர்களைப் போன்று அதைப்பற்றி வாய்மூடி இருக்கிறோம்.(அல்லாஹ் மன்னிப்பாயாக!)

இஸ்லாமின் பார்வை என்ன? சினிமா என்ற துறையே உலகத்தில் இருக்கக்கூடாது.ஆபாசமென்ற அந்தத் துறையே இருக்கக்கூடாது.பொய்யான காவியங்கள், பொய்யான ஆபாசங்கள் இவைகளை மக்களுக்கு மத்தியில் பரப்பக்கூடாது.

சினிமாவின் மூலம் பரப்பக்கூடிய அத்தனை அசிங்கங்களுக்கும், அத்தனை ஆபாசங்களுக்கும், வன்முறைகளுக்கும், அத்தனை அநியாயங்களுக்கும், அத்தனை கேளிச்சித்திரங்களுக்கும் இஸ்லாம் எதிரானது, முஸ்லிம்கள் எதிரானவர்கள்.

நம்மை பாதிக்கும் போது மட்டுமல்ல,உலகத்தில் யாரை பாதித்தாலும் சரி,எத்தகைய ஒழுங்கான சமுதாயத்தின் ஒழுக்கங்கள் சீரழிந்தாலும் அதற்கு நாம் எதிரிகள்.

அப்போது தான் நம்மைப் பற்றி புரிய வருவார்கள். இவர்கள் சுயநலத்துக்காக வேண்டி சண்டைக்கு வரவில்லை. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு பாதிப்பு.

அதுபோன்றுதான் நமது சமுதாயத்தில் ஜினா (விபச்சாரம்). (அல்லாஹ் பாதுகாப்பானாக), இது எதன் மூலமாக பரவுகிறது?

இன்றைய காலத்தில் இந்த விபச்சாரத்தின் மிகப்பெரிய வழி என்னவென்றால் சினிமாவும், சீரியல்களும், ஆபாச பத்திரிக்கைகளும், புத்தகங்களும் தான்.

இதற்கு எதிராக நாம் என்ன செய்திருக்கிறோம்? ஏதோ இன்று பிரச்சனை புதிதாக ஏற்ப்பட்டது போன்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.அப்படியில்லை.

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா மனித உணர்விலே சில மாற்றங்களை வைத்திருக்கிறான். எப்போது அந்த மாற்றங்களுக்கு தடை, அந்த மாற்றங்களுக்கு கண்டிப்பு, அந்த மாற்றங்களுக்குண்டான சட்டம் கடுமையாக இல்லை என்று சொன்னால் மனிதன் அதன் பக்கம் சாய்வது அவனது நஃப்ஸுடைய இயல்பு ஆகும்.

அல்லாஹ் தஆலா அதிலிருந்து தடுக்கக் கூடியவர்களாக தான் முஸ்லிம்களை அமைத்திருக்கிறான்.

அல்லாஹ் தஆலா சில பாவங்களை தடுத்திருக்கிறான் என்றால் அது முஸ்லிம்கள் மீது மட்டும் அல்ல,மொத்த சமுதாயத்தின் மீதும் அந்த பாவத்தை அல்லாஹ் தடுத்திருக்கின்றான்.

லூத் (அலை) எப்போது தனது சமுதாயத்தை அந்தத் தவறை செய்யக் கூடியவர்களாக பார்த்தார்களோ, அந்த சமுதாயம் ஈமான் கொண்டவர்களாக இல்லை.

லூத் (அலை) அவர்களை ஈமான் கொண்டவர்களாக இருந்திருந்தால் அந்த பாவத்தை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். நீங்கள் என்னைக் கொண்டு நம்பிக்கைக் கொள்ளவில்லையே! என்னைக் கொண்டு ஈமான் கொள்ளவில்லையே! முதலிலே நீங்கள் ஈமான் கொள்ளுங்கள்;பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று லூத் (அலை) அமைதியாக இருக்கவில்லை.

உடனடியாக அந்த சமுதாயம் செய்துக் கொண்டிருந்த மோசமான செயலை அந்த சமுதாய மக்களுக்கு எடுத்துச் சொல்லி அதிலிருந்து அவர்களை திருத்த முயற்சிக்கிறார்கள்.

அதற்காக எவ்வளவு வேதனைப்பட்டார்கள் தெரியுமா? ஈமான் கொள்ளாத அந்த சமுதாயம் இவ்வளவு பயங்கரமான அசிங்கமான செயலை செய்கிறது.

ஒன்றுக்கு பலமுறை லூத் (அலை) அந்த சமுதாய மக்களிடம் செல்கிறார்கள்:

وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ

லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பிவைத்தோம்.) அவர் தம் மக்களை நோக்கி ‘‘உங்களுக்கு முன்னர் உலகத்தில் எவருமே செய்திராத மானக்கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கிறீர்கள்?(அல்குர்ஆன் 7 : 80)

إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِنْ دُونِ النِّسَاءِ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ

நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கிறீர்கள். நீங்கள் மிக்க வரம்பு மீறிய மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார். (அல்குர்ஆன்7 : 81)

எப்போது அந்த மக்கள் ஈமான் கொள்ளாமல் இந்த பாவத்திலிருந்தும் திருந்தவில்லையோ அல்லாஹ் ரப்புல் ஆலமின் மிகப்பெரிய வேதனையை அவர்கள் மீது இறக்கினான்.அந்த வேதனை சாதாரணமான தண்டனை அல்ல.

மற்ற சமுதாய மக்கள் ஈமான் கொள்ளாதபோது அல்லாஹ் ரப்புல் ஆலமின் அவர்களையும் தண்டித்தான்; அவர்கள் மீதும் தன் கோபத்தை இறக்கினான்.

ஆனால்,யார் இந்த அசிங்கமான அநாகரிகமான செயலை செய்தார்களோ அவர்களின் மீது அல்லாஹ்வை நிராகரித்தவர்களின் மீது மட்டும் இறக்கப்படுகிற வேதனையைவிட பன்மடங்கு வேதனையை அல்லாஹ் இறக்கினான்.

ஒரு மனிதன் குஃப்ரிலே மட்டும் இருந்தால் அவன் மீது என்ன வேதனை இறக்கப்படுமோ அதைவிட பன்மடங்கு வேதனையை அல்லாஹ் ரப்புல் ஆலமின் இந்த ஒழுங்கீனமான செயலை செய்தவர்கள் மீது இறக்கினான்.

فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِنْ سِجِّيلٍ مَنْضُودٍ

நம் கட்டளை(யின் நேரம்) வந்ததும் அவர்களுடைய ஊரை தலைக்கீழாக கவிழ்த்து விட்டோம். (அதற்கு முன்னர்) அவர்கள் மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையைப் போல்) பொழியச் செய்தோம். (அல்குர்ஆன்11 : 82)

مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ وَمَا هِيَ مِنَ الظَّالِمِينَ بِبَعِيدٍ

(எறியப்பட்ட செங்கல் ஒவ்வொன்றிலும்) உங்கள் இறைவனால் அடையாளமிடப் பட்டிருந்தது. (புரட்டப்பட்ட) அவ்வூர் இவ்வக்கிரமக்காரர்களுக்கு வெகு தூரமுமல்ல; (விரும்பினால் அதை இவர்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.) (அல்குர்ஆன் 11 : 83)

ஜினாவில் இருந்து உருவாகக் கூடிய இன்னொரு பாவம் தான் இந்தப் பாவம்.

லூத் (அலை)அவர்களின் சமுதாயத்திலே பெண்களிலே இந்த பாவம் பரவியது.பிறகு ஆண்களிலே இந்த பாவம் பரவியது. அதைத்தான் ரப்புல் ஆலமீன் குர்ஆனிலே நமக்கு எச்சரிக்கை செய்து சொல்கிறான்.

இந்தப் பாவத்தை அவர்கள் செய்தால் அவர்களுக் மட்டும்தான் என்று இருந்து விடக்கூடாது.

وَمَا كُنَّا مُهْلِكِي الْقُرَى إِلَّا وَأَهْلُهَا ظَالِمُونَ

எந்த ஊராரையும் அவர்கள் அநியாயம் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே தவிர நாம் அழிக்கவில்லை. (அல்குர்ஆன் 28 : 59)

இறைத்தூதர் அவர்கள் ஒருமுறை பிரசங்கம் செய்துகொண்டிருந்தபோது சொன்னார்கள் :

«لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ، فُتِحَ اليَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ» وَحَلَّقَ بِإِصْبَعِهِ الإِبْهَامِ وَالَّتِي تَلِيهَا، قَالَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ: أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟ قَالَ: «نَعَمْ إِذَا كَثُرَ الخَبَثُ»

 

ரஸுல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: அரபுகளுக்கு நாசம் உண்டாகட்டும். மிகப்பெரிய தீமை அவர்களை எதிர்நோக்கி இருக்கிறது. யஃஜுஜ் மஃஜுஜ் உடைய அந்த தடுப்பிலிருந்து இந்த அளவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது என்று (ஸல்)அவர்கள் தனது கட்டைவிரலையும் அதற்கு அடுத்துள்ள விரலையும் வளையமாக வைத்துச் சொல்லிக் காட்டினார்கள்.

அப்போது ரஸுல் (ஸல்)அவர்களுடைய மனைவிமார்களில் ஒருவர் கேட்கிறார், அல்லாஹ்வின் தூதரே!எங்களில் நல்லவர் இருக்கும்போதும் எங்களுக்கு அழிவு வருமா?

(ரஸுல் (ஸல்) அவர்களின் பதிலை பாருங்கள், எவ்வளவு பயப்பட வேண்டிய விஷயத்தைச் சொல்கிறார்கள்:)

ஆம் வரும் அல்லாஹ்வின் தண்டனை வரும், அல்லாஹ்வின் அழிவு வரும், அல்லாஹ்வின் சாபம் இறங்கும்.தீமை, பாவம் மிகைத்துவிட்டால் கண்டிப்பாக வரும்.

அறிவிப்பாளர் : ஜைனப் ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 3346.

அல்லாஹ்வும் அப்படித்தான் சொல்கிறான் :

وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

நீங்கள் ஒரு வேதனையை பயந்துகொள்ளுங்கள். அது உங்களில் அநியாயக் காரர்களை மட்டுமே பிடிக்குமென்பதல்ல; (முடிவில் அது உங்களையும் சூழ்ந்து கொள்ளலாம்.) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன்8 : 25)

அல்குர்ஆனிலே அல்லாஹுதஆலா இதற்காகவே ஒரு அழகான வரலாற்றை எடுத்துச் சொல்கிறான். அந்த வரலாற்றை சொல்லி முடிக்கும் போதெல்லாம் இதில் உபதேசம் இருக்கிறது, இதில் அறிவுரை இருக்கிறது, இதில் அச்சமூட்டுகின்ற படிப்பினை இருக்கிறது என்று அல்லாஹ் கூறுகிறான்.

சனிக்கிழமை வாசிகளைப் பற்றி, அந்த சமுதாயத்தில் மூன்று விதமான கூட்டம் இருந்தார்கள்.

ஒரு கூட்டம், அல்லாஹ் உடைய கட்டளையை மீறி சனிக்கிழமையில் மீன் பிடிப்பதற்குண்டான தந்திரங்களை செய்துக் கொண்டிருந்தார்கள்.

இன்னொரு கூட்டம், நமக்கென்ன நாமா அந்த தீமையை செய்கிறோம் என்று வாய்மூடி இருந்தார்கள். அந்தத் தீமையை செய்யவில்லை.

இன்னொரு கூட்டம்,அவர்கள் அல்லாஹ்வை பயந்தார்கள், அல்லாஹ்வின் தண்டனை இறங்கி விடுமோ என்று அஞ்சினார்கள். அந்த மக்களிடத்திலே சென்று அந்த மக்கள் தங்களை இகழ்ந்தாலும் பழித்தாலும்அந்த மக்களுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

செய்யாதீர்கள்! அல்லாஹ்வின் தண்டனை வந்துவிடும்.அல்லாஹ் தடுத்த பாவங்கள் செய்வதற்கு நீங்கள் தந்திரங்கள் செய்யாதீர்கள் என்று அறிவுரை சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

அப்போது அமைதியாக இருந்த ஒரு கூட்டம் நன்மையை ஏவி தீமையை தடுத்த மக்களைப் பார்த்து சொன்னார்கள் :

وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ

(இதை அவ்வூரிலிருந்த நல்லோர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து தடை செய்தார்கள். இதைக் கண்ட வேறு) ஒரு கூட்டத்தினர் (அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எவர்களை அழித்துவிட வேண்டுமென்றோ, கடினமான வேதனைக்குள்ளாக்க வேண்டுமென்றோ நாடியிருக்கிறானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கிறீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கவர்கள் ‘‘இதனால் நாம் உங்கள் இறைவனிடம் நம் பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காக (நாங்கள் நல்லுபதேசம் செய்கிறோம் என்றும், இதனால் மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒருக்கால்) விலகிவிடலாம்'' என்றும் பதில் கூறினார்கள். (அல்குர்ஆன்7 : 164)

நாளை மறுமையிலே அல்லாஹ்விடத்திலே சென்றால் அல்லாஹ் கேள்வி கேட்பான்:நான் தடுத்த பாவத்தை அந்த மக்கள் செய்யும் போது, நீ அவர்களை தடுத்தாயா? என்று நம்மை பார்த்து கேட்க மாட்டானா?

ஷரீஅத் உடைய சட்டங்கள் மீறப்படுகின்றன, இந்த உம்மத்திலே எப்பேற்பட்ட பாவங்களை எல்லாம் அல்லாஹ் ஹராமாக்கி இருக்கிறானோ அதையெல்லாம் இவ்வளவு வெளிப்படையாக, பகிரங்கமாக செய்கிறார்களே! பயந்து பயந்து செய்த பாவத்தை எல்லாம் சட்டரீதியாக ஆக்கப் பார்க்கிறார்களே!

இதற்காக நாம் என்ன செய்கிறோம்? அல்லாஹ் கேட்கமாட்டானா? உனது தேவைக்காக குரல் கொடுத்தாய், உனது தேவைக்காக எத்தனை போராட்டங்கள் செய்தாய்? உன்னுடைய தேவைகளுக்காக எவ்வளவு செல்வங்களை செலவு செய்தாய்?

ஆனால்,என்னுடைய ஷரீஅத் மீறப்படும் போது? இது இந்த நேரத்தில் மட்டும் செய்யக்கூடிய வேலை அவல், எப்போதும் செய்யப்பட வேண்டிய வேலை. நமது பலவீனமே அதுதான்.

அந்த நேரத்தில் மட்டும் நினைவு கூர்ந்துவிட்டு பிறகு மறந்து விடுகிறோம்.

முஸிலிம்களாக இருக்கட்டும், மாற்றார்களாக இருக்கட்டும் இவர்களுக்கு மத்தியிலே ஒவ்வொரு நாளும் ஒரு பொது இடத்தில் அல்லாஹ்வின் மார்க்கம் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹ் தடை செய்த பாவங்களை குறித்த எச்சரிக்கை நடந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படியில்லை என்றால் இந்த மாதிரியான சூழ்நிலைகள் ஏற்பட்டு தான் ஆகும். அந்த நேரத்தில் குரல் கொடுத்தால் அது மிகைக்காது.

காரணம், அந்த பாவத்தை அவர்கள் பழகிவிட்டார்கள். அந்த பாவத்திலே அவர்கள் பரிகொடுத்து விட்டார்கள்.

இது முதல் விஷயம், அடுத்தடுத்துள்ள விஷயங்கள் இன்னும் பயங்கரமாக இருக்கும். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா முடிவில் அவர்களுக்கு தண்டனையை இறக்கினான்.

فَلَمَّا عَتَوْا عَنْ مَا نُهُوا عَنْهُ قُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ

ஆகவே தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறவே, அவர்களை நோக்கி ‘‘நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுங்கள்'' என்று (சபித்துக்) கூறினோம். (அவ்வாறே அவர்கள் ஆகிவிட்டனர்.) (அல்குர்ஆன்7 : 166)

இந்த இடத்தில் குர்ஆனின் விரிவுரையாளர் அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்:

அந்த சனிக்கிழமையில் வரம்பு மீறி பாவம் செய்தவர்கள்,மீன் பிடிக்க தந்திரம் செய்தவர்களை மட்டும் தான் அல்லாஹ் கண்டித்தான் என்று நீங்கள் நினைத்து கொள்ளாதீர்கள்

யார் நன்மையை ஏவி தீமையை தடுக்கவில்லையோ அவர்களும் குரங்குகளாக மாற்றப்பட்டார்கள். .(அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!)

அவர்கள் அந்தத் தீமையை செய்யவில்லை, ஆனால் அந்தத் தீமை நடந்த போது அதற்காக அவர்கள் முகம் சுளிக்கவில்லை, அந்தத் தீமையை தடுப்பதற்கு எந்த முயற்சியும் அவர்கள் செய்யவில்லை. அதன் காரணமாக அவர்களும் அந்த பாவிகளில் கணிக்கப்பட்டார்கள்.

இதற்காக பெரிய மேடை தேவைப்படாது, பெரிய மஜ்லிஸ் தேவைப்படாது.அன்றாடம் நாம் பழகக்கூடிய பார்க்கக்கூடிய நம்மோடு தொடர்புடைய மக்கள்,அவர்கள் முஸ்லிம்களாக இருக்கட்டும் அல்லது மாற்றாராக இருக்கட்டும், அவர்களுக்கு ஏன் நாம் அல்லாஹ் உடைய சட்டத்தை எடுத்துச் சொல்ல முடியாது?

ஒரு முஸ்லிம் அல்லாதவரிடத்தில் விபச்சாரத்தைப் பற்றி அது எவ்வளவு பெரிய பயங்கரமான பாவம் என்று சொல்லிருக்கிறோமா? அதுபோன்று இசையாக இருக்கட்டும், ஆபாசமாக இருக்கட்டும், நடனமாக இருக்கட்டும் எந்த பாவங்களை எல்லாம் மக்கள் கண்டு களித்து கொண்டிருக்கிறார்களோ இந்த பாவங்களை தடுப்பதற்காக நமக்கு மத்தியிலே நாம் ஏதாவது செய்திருக்கிறோமா?

மாற்றாரை பார்க்கும்போது, இது உங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியது கலாச்சாரத்தை ஒழுக்கத்தை சீரழிக்கக்கூடியது என்று கூறியிருக்கிறோமா?

முஸ்லிம்களே அந்த வியாபாரத்தை அந்த துறையை செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்பது பெரிய கேவலம்.

இன்னும் மிக மோசமான நிலை என்ன என்றால்,அப்படி செல்பவர்களை இவர்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள், சமுதாயத்திற்கு வழிகாட்டி, இவர்களெல்லாம் காலத்தின் தொழில்நுட்பங்களை சரியாக பயன்படுத்தக் கூடியவர்கள் என்று அவர்களை ஊக்குவிக்கிறார்களே! இது எவ்வளவு வருத்ததிற்குரிய விஷயம்!

நன்மையை ஏவி தீமையை தடுக்காமல் வாய் மூடி இருந்தோமென்று சொன்னால் அல்லாஹ்வின் மிகப்பெரிய சோதனை இறங்கிவிடும் . அல்லாஹ் ரப்புல் ஆலமின் அது குறித்து நம்மிடம் நிச்சயமாக விசாரணை செய்வான்.

ஷுஹைப் (அலை) அவர்களை ஏற்றுக்கொள்ளாத மக்கள் நிலுவையிலே அளவையிலே மோசடி செய்து கொண்டிருந்தார்கள்.இதைப்பார்த்து அவர்கள் வாய் மூடி இருந்தார்களா? இவர்கள் முஃமின்கள் இல்லை என்று பேசாமல் இருந்தார்களா? இல்லையே!அவர்களுடைய கடைத் தெருவிற்கு சென்றார்கள். சொன்னார்கள்:

وَلَا تَنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ

நீங்கள் அளவையில் நிலுவையில் குறைவு செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 11 : 84)

அல்லாஹ் உங்களுக்கு நிஃமத்துகளை செல்வத்தை கொடுத்திருக்கிறானே! மக்களுடைய செல்வங்களில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள்! அநியாயம் செய்யாதீர்கள்! அவர்களுக்கு மோசடி செய்யாதீர்கள் என்று உபதேசம் செய்தார்கள்.

நாம் ஒரு முஸ்லிம் அல்லாதவருக்கு தீமையான விவரங்களைக் குறித்த எச்சரிக்கை செய்கிறோமா? பாவத்தை குறித்த எச்சரிக்கை செய்கிறோமா? ஷிர்க்கைப் பற்றி மட்டும் ‌எச்சரிக்கை செய்வது நம்மீது கடமை என்று நினைக்காதீர்கள்.

ஷிர்க் எப்படி பயங்கரமான பாவமோ அதே இடத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமின் மற்ற பாவங்களையும் சொல்கிறான்:

قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ

(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்தவற்றை(யும் ஏவியிருப்பவற்றையும்) நான் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறேன். (அவையாவன:) அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்காதீர்கள். (உங்கள்) தாய் தந்தையுடன் மிக அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள் (அவர்களுக்கு உதவி செய்யுங்கள்). வறுமைக்குப் பயந்து உங்கள் பிள்ளைகளை நீங்கள் கொலை செய்யாதீர்கள். (ஏனென்றால்,) உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ உள்ள மானக்கேடான விஷயங்களில் எதற்கும் நெருங்காதீர்கள். (கொலை செய்யக்கூடாதென்று) அல்லாஹ் தடை செய்துள்ள எந்த மனிதனையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் (தவறு செய்யாது) உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு இவற்றை (விவரித்து) உபதேசிக்கிறான். (அல்குர்ஆன்6 : 151)

இந்த வசனத்தில் அல்லாஹ் உங்கள் குழந்தைகளை நீங்கள் கொல்லாதீர்கள் என்றும் கூறியுள்ளான்.

ஒருவன் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள முடியாது என்று பக்கத்து நாட்டிலே ஒரு சட்டம் இருக்கிறது.அப்படி பெற்றால் அவருக்கு சிறை தண்டனை அளிப்பார்கள். கர்ப்பிணியாக இருந்தால் அவளது கற்பை கலைத்து விடுவார்கள்.

ஆரம்பத்தில் இது ஏதோ சமுதாயத்திற்கு நன்மை இருக்கிறது. அதனால் தான் அரசாங்கம் இப்படி சொல்கிறது என்று வாய்மூடி இருப்பார்கள். பிறகு அதனுடைய விபரீதத்தை புரிவார்கள்.

அல்லாஹ்வின் சட்டத்தை, அல்லாஹ்வின் மார்க்கத்தை எதிர்த்து எந்த ஒரு சட்டம் இயற்றப்பட்டாலும் சரி, அல்லாஹ் தடுத்த பாவங்களுக்கு சாதகமாக அந்த பாவங்களை மக்களுக்கு மத்தியில் பரப்பும் படி எந்த ஒரு சட்டம் இயற்றப்பட்டாலும் சரி, அதற்காக ஒரு முஸ்லிம் விழிப்புணர்வோடு அந்த சமுதாயத்திற்கு அந்த தீமையை பற்றி எச்சரிக்கை செய்ய வேண்டும்.

போராடுவது புரட்சி செய்வதென்றால் கலகம் செய்வது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். கலகத்திற்கும் இஸ்லாமிற்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.

وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ

கலகம் செய்வது கொலையைவிட பயங்கரமானது. (அல்குர்ஆன் 2 : 191)

அல்லாஹ் கலகம் செய்பவர்களை நேசிக்கமாட்டான். புரட்சி,போராட்டம் என்றால் என்ன?மக்களுக்கு பிரச்சாரத்தால் விழிப்புணர்வு செய்வது. அதிகமான மக்கள் தீமையை வெறுக்க ஆரம்பித்தால் அந்த தீமை அங்கே தடுக்கப்பட்டுவிடும்.

இந்தியாவில் சில மாநிலங்களில் விபச்சாரம் அனுமதிக்கப்பட்டதாக இருக்கிறது.காரணம் என்ன? அதிகமான அதனை அங்கீகரித்து கொண்டார்கள். எனவே அரசாங்கத்திற்கு அதற்கு சாதகமாக சட்டம் இயற்றுவது தவிர வேறு வழி இல்லை.

இப்படித்தான் தீமை மிகைக்குமேயானால்,அதிகமான மக்கள் சிக்குண்டுவிடுவார்களேயானால் அரசாங்கம் அதற்கு சாதகமாக சட்டத்தை இயற்றுவது தவிர வேறு வழியில்லை. காரணம் என்ன இவர்கள் பெரும்பான்மையினர் படி அரசியலை ஆட்சிகளை ஆளக் கூடியவர்கள்.

இவர்களுக்கு பெரும்பான்மையினரை திருப்தி படுத்துவதுதான் நோக்கமாக இருக்குமே தவிர,ஒழுக்கமோ சமூகப் பாதுகாப்போ இதெல்லாம் அவர்களுக்கு முக்கியமாக இருக்காது.

ஆனால்,ஒரு முஸ்லிமுக்கு அல்லாஹ்வின் மார்க்கம் முக்கியம். மனிதர்களின் பாதுகாப்பு முக்கியம். சமுகத்தின் ஒழுக்கம் முக்கியம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எவ்வளவு அழகான உதாரணத்தை நமக்கு சொல்கிறார்கள்:

" مَثَلُ القَائِمِ عَلَى حُدُودِ اللَّهِ وَالوَاقِعِ فِيهَا، كَمَثَلِ قَوْمٍ اسْتَهَمُوا عَلَى سَفِينَةٍ، فَأَصَابَ بَعْضُهُمْ أَعْلاَهَا وَبَعْضُهُمْ أَسْفَلَهَا، فَكَانَ الَّذِينَ فِي أَسْفَلِهَا إِذَا اسْتَقَوْا مِنَ المَاءِ مَرُّوا عَلَى مَنْ فَوْقَهُمْ، فَقَالُوا: لَوْ أَنَّا خَرَقْنَا فِي نَصِيبِنَا خَرْقًا وَلَمْ نُؤْذِ مَنْ فَوْقَنَا، فَإِنْ يَتْرُكُوهُمْ وَمَا أَرَادُوا هَلَكُوا جَمِيعًا، وَإِنْ أَخَذُوا عَلَى أَيْدِيهِمْ نَجَوْا، وَنَجَوْا جَمِيعًا "

 

அல்லாஹ்வின் சட்ட வரம்புகள் பேணப்படவேண்டும் என்று அதற்காக இரவு பகலாக முயற்சிப்பவன்.

(முஸ்லிம்களெல்லாம் அப்படித்தான் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம்கள் எல்லாம் இஸ்லாம் என்னும் வீட்டினுடைய ஒரு கல்லாக இருக்கிறான். தன்புறத்திலே ஓட்டை விழாமல் அவன் பார்த்துக் கொள்ளட்டும். அப்படியென்றால் நாம் நம்மை சுற்றி உள்ளவர்களை அனைவருக்கும் உணர்த்திக் கொண்டே இருக்கிறோமா? இல்லை அவற்றை எல்லாம் பார்த்துவிட்டு வாய் மூடி செல்கிறோம் என்றால் நம் சார்பாக உள்ள கட்டிடத்தில் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்.)

ஹதீஸின் தொடர் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உதாரணம்- ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) 'நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள்விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : நுஃமான் இப்னு பஷீர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 2493.

அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை பேணக்கூடியவனாக முஸ்லிம் இருக்க வேண்டும். அதாவது,தன்னளவில் மட்டுமல்ல,தன் கண்ணுக்கெதிராக எந்த தவறு நடக்குமோ உடனடியாக அதை தடுக்க வேண்டும். கரம் பிடித்து தடுக்க வேண்டும்.

எங்கே கரத்தால் தடுக்க முடியவில்லை என்ற பயம் இருக்குமோஅங்கு குறைந்தபட்சம் சொல்லினாலாவது அதன் தீமையை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

ஆனால், நம் நிலை? இன்று பல பேர் எத்தனையோ தவறான தொழில் செய்பவர்களோடு நட்பு வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த தவறை அவர்களுக்கு உணர்த்துவதில்லை. வட்டியோடு வியாபாரம் செய்பவர்கள், மோசடியான வியாபாரம் செய்பவர்கள், ஆபாசங்களை விற்க்கக்கூடியவர்கள் இப்படி எத்தனையோ பேரை பார்க்கிறோம், கண்டிக்கிறோமா? (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைதான் நமக்கு சொன்னார்கள். ஒரு முஸ்லிம் தன்னளவிலும் அல்லாஹ்வின் சட்டங்களை பேணக் கூடியவராக இருக்க வேண்டும். அதுபோன்று சமுதாயத்தில் சட்டங்கள் மீறப்படாமல் அந்த சட்டங்களை பாதுகாப்பவனாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் சுப்ஹாஹு தஆலா கூறக்கூடிய அந்த கடுமையான வசனத்தை பாருங்கள் :

وَكَأَيِّنْ مِنْ قَرْيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبْنَاهَا حِسَابًا شَدِيدًا وَعَذَّبْنَاهَا عَذَابًا نُكْرًا

எத்தனையோ ஊர்வாசிகள் தங்கள் இறைவனின் கட்டளைக்கும், அவனுடைய தூதர் களுக்கும் மாறுசெய்தனர். ஆதலால், அவர்களை நாம் வெகு கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்டு, அவர்களை மிகக் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்தோம். (அல்குர்ஆன் 65 : 8)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த பாவங்களை தடுத்தார்களோ அதில் குறிப்பாக الفواحش-“அல்ஃபவாஹிஷ்” என்று அல்லாஹ் குர்ஆனில் கூறிய அசிங்கமான, ஒழுங்கீனமான செயல்கள் இதை எல்லா சமுதாயத்திற்கும் அல்லாஹ் தடுத்து வைத்திருக்கிறான்.

அந்த செயலை மக்கள் செய்யும்போது அதற்கு எந்த பெயர் சூட்டினாலும் சரி, கண்டிப்பாக அது தடுக்கப்பட வேண்டியது. அதிலிருந்து சமுதாய மக்கள் திருத்தப்பட வேண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நமது குடும்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.இன்று இந்த சினிமா கலாச்சாரம், ஆபாசம் முஸ்லிம் வீடுகளிலே ரசித்து பார்க்கப்படுகிறது. (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

அன்றாட பத்திரிகைகளில் வரக்கூடிய செய்திகள் வீடுகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. அவற்றை பிள்ளைகள் படிக்கிறார்கள்; அந்த அசிங்கமான, பார்க்கப்படக்கூடாத உருவங்களை அந்த பெண் பிள்ளைகள் பார்த்தால் அவர்களது சிந்தனை எப்படி வரும்?

ஒரு ஹிஜாப் அணிந்த பெண்பிள்ளை தொடர்ந்து இதை பார்த்து வந்தால் தன்னை பிற்போக்கு வாதியாக கருதி இப்படி தான் இருக்க வேண்டும் என்று அதில் இருக்க கூடியவராக மாறுவாள்.

இந்த காலத்தில் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஹிஜாபை வெறுக்கக் கூடியவராக மாறுவாள். அதை பார்த்து இதுதான் சுதந்திரம் என்றும் தன்னை ஒரு அடிமை என்றும் உணர ஆரம்பிப்பாள்.

இன்று படிக்கின்ற முஸ்லிம் பெண்பிள்ளைகள் பலர் ஹிஜாபுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்? ஹிஜாபை வெறுக்க என்ன காரணம்? அல்லது குறைந்தபட்சம் அவர்கள் வாயால் சொல்லவில்லையென்றாலும் எப்போது ஹிஜாபை கழட்டுவதற்கான சூழ்நிலை வருமோ அப்போது கழட்டி விடுவார்கள்.

அது தனது மார்க்கப் பற்றில் உள்ள அம்சம் என்பதை அறிந்திருப்பார்களானால் அதை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள்.

ஒரு தீமை காட்டப்பட்டு, அதையே பார்த்து வளர்ந்த ஒரு காரணத்தால், அதுதான் சிறந்து என்று அவர்கள் மனதிலே பதிந்து விட்ட காரணத்தினால் அவர்கள் இப்படி செய்கிறார்கள்.

இப்படி அல்லாஹ் தடுத்த எந்தவொரு பாவத்தையும் சாதாரணமாக மதித்து விடாதீர்கள்.அல்லாஹ் கட்டளையிட்ட எதையும் குறைவாக மதிப்பிடாதீர்கள். எப்போது அல்லாஹ் தடுத்த பாவத்தில் அது சிறிய பாவம்தான் என்ற பார்வையை மார்க்கத்தில் ஏற்படுத்துகிறோமோ அதுதான் மிகப்பெரும் பாவத்திற்கு வழிகாட்டுகிறது.

இதைத்தான் தாதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜினாவை தடுக்க வேண்டுமா, அல்லாஹ் என்ன சொல்கிறான்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொல்கிறார்கள்? முதலில் கண்ணிலிருந்து ஆரம்பியுங்கள்.

கண் ஜினா செய்கிறது, அது பார்வையினால்.காது ஜினா செய்கிறது, அது கேட்பதால்.கால் ஜினா செய்கிறது, அந்த இடத்திற்கு நடப்பதால்.

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் (ஸல்) அதற்கான வழிகளை காரணங்களை தடுத்தார்கள். அதற்கான சிறிய வாசல்களை தடுத்தார்கள்.

அல்லாஹ் தடுத்த மிகப்பெரிய பாவங்களில் இந்த விபச்சாரமும் அது போன்று ஓரினச் சேர்க்கையும் மிகப் பெரும் பாவமாகும்.

அல்லாஹ் ரப்புல் ஆலமின் அதை செய்த குற்றத்தால் ஒரு சமுதாயத்தை அவ்வளவு மோசமாக அழித்திருக்கின்றான். இந்த செய்தியை நாம் நமக்கு மத்தியில் சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது. நமது வாலிபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருந்தால் மட்டும் போதாது.

நம்மை பார்த்து நம்மை சுற்றியுள்ள மாற்று மத மக்களுக்கும், இது மனித சுதந்திரம் என்று நினைக்காதீர்கள்; இது படைத்த இறைவனால் கோபிக்கப்பட்ட சபிக்கப்பட்ட பாவம். இதை செய்வதால் இறை தண்டனைக்கு ஆளாவீர்கள் என்று அல்லாஹ்வின் அச்சத்தை கொண்டு அவர்களை பயமூட்டுங்கள்.அல்லாஹ் தண்டனையை கொண்டு அவர்களை அச்சமூட்டுங்கள்.

இந்த சட்டத்தை முஸ்லிம்கள் வெறும் சட்டரீதியாக எதிர்க்கிறோம் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். படைத்த இறைவனால் கோபிக்கப்பட்ட பாவம், இதனால் ஒரு சமுதாயமே அழிக்கப்பட்டிருக்கிறது என்று அல்லாஹ்வின் தண்டனை கொண்டு பயமூட்டும்போது அதன் விபரீதத்தை அவர்கள் உணர்வார்கள்.

இதன் மூலமாக அவர்கள் இஸ்லாமிற்குள்ளும் வர வாய்ப்புள்ளது. இப்படித்தான் ஒவ்வொரு விஷயங்களையும் மார்க்க அடிப்படையில் எடுத்து அது குறித்த முழுமையான விளக்கத்தை முஸ்லிம்களுக்கும் நாம் ஏற்படுத்த வேண்டும்.

நம்மை சார்ந்துள்ள சமுதாயத்திற்கு அந்த விஷயத்தை எடுத்துச் சொல்லும்போது அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ரஸுல் (ஸல்) அவர்களின் சுன்னாவிலிருந்து அந்த பாவத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? அந்த பாவத்தால் ஏற்படக்கூடிய தண்டனை என்ன? என்பதை உணர்த்த வேண்டும்.

ரஸுல் (ஸல்) சொன்னார்கள் : எந்த சமுதாயத்தில் மது அருந்தப்படுமோ? எந்த சமுதாயத்தில் விபச்சாரம் பெருகி விடுமோ? எந்த சமுதாயம் வட்டி வாங்குமோ முன்னோர்கள் கேள்விப்படாத நோய்களையெல்லாம் அந்த சமுதாயத்திற்கு அல்லாஹ் இறக்குவான். பூகம்பங்கள் நிகழும், வானத்தில் இருந்து மழை பொழிந்து அழிக்கப்படுவார்கள், கல் மழையை கொண்டு அழிக்கப்படுவார்கள். உருவங்கள் மாற்றப்படுவார்கள்

இன்று எத்தனையோ பிரசவங்களை பாருங்கள்; கோரமான உருவங்களை கொண்டு பிரசவம். காரணம் என்ன? அங்கே அல்லாஹ் சபித்த பாவங்கள் அதிகம் நிகழ்ந்து கொண்டிருகக்கிறது என்பதை தான் உணர்த்துகிறது.

இப்படி நல்ல விஷயங்களை கொண்டு நாம் எச்சரிக்கை செய்வோமேயானால் நிச்சயமாக அல்லாஹ் யாருடைய உள்ளத்திலே ஒரு நல்ல ஈமானை நல்ல இறை அச்சத்தை ஏற்படுத்தி இருக்கானோ அவர்கள் நேர்வழி பெறுவார்கள். அவர்கள் சத்தியத்திற்கு திரும்புவார்கள். அல்லாஹ் அதற்கு வாய்ப்பளிப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/