HOME      Khutba      மனத்தூய்மை | Tamil Bayan - 307   
 

மனத்தூய்மை | Tamil Bayan - 307

           

மனத்தூய்மை | Tamil Bayan - 307


بسم الله الرحمن الرّحيم

மனத்தூய்மை

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும், அல்லாஹ்வின் அச்சத்தை நினைவுபடுத்தியவனாக தொடங்குகிறேன்.

இன்றைய அவசர கால உலக வாழ்க்கையிலேநாம் பல விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம். பல விஷயங்களை குறித்துக்கொள்கிறோம். பல விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம்.

அதை செய்தோமா? இல்லையா? அதில் என்ன குறை நடந்தது? அதை எப்படி செய்து இருக்கிறோம்? என்பதைப் பற்றி எல்லாம் நம்மை நாமே விசாரித்துக் கொள்கிறோம்.

இப்படி நாம் முக்கியத்துவம் தருகிற பல விஷயங்களை எடுத்துப் பார்த்தால், அவை அனைத்தும் இந்த உலக சம்பந்தமான விஷயங்களாகவே இருக்கின்றன.

நம்மில் பலர் துன்யாவுக்கு தருகிற முக்கியத்துவத்தை மறுமைக்கு தருவதில்லை.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் சூரத்துல் அஃலா விலே எப்படி சொல்கிறானோ அப்படித்தான் நம்மில் பலருடைய நிலைமை இருப்பதைப் பார்க்கிறோம்.

بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا

நீங்கள் அழியக்கூடிய அற்பமான உலக வாழ்க்கைக்கு தான் முக்கியத்துவம் தருகிறீர்கள். அதற்குத்தான் முன்னுரிமை தருகிறீர்கள். அதைத்தான் நீங்கள் தேர்ந்து எடுத்துக் கொள்கிறீர்கள். அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். (அல்குர்ஆன் 87 : 16)

அல்லாஹ் மறுமையைப் பற்றி மறுமையின் வெற்றியைப் பற்றி சொல்கிறான். இப்படி வெற்றிக்கு உண்டான வழிகளை பற்றி எல்லாம் உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் கூட நீங்கள் உலக வாழ்க்கைக்கு தான் முக்கியத்துவம் தருகிறீர்கள்.

ايثار–ஈசார்-ஒன்றைவிட ஒன்றை தேர்ந்தெடுத்தல். ஒன்றைவிட ஒன்றுக்கு மேன்மை, முக்கியத்துவம் அளித்தல். அதை நீங்கள் உலக வாழ்க்கைக்கு தான் செய்கிறீர்கள்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் இந்த உலக வாழ்க்கையை பற்றி சொல்லும்போது, الدنيا-அத்துன்யா என்ற வாழ்க்கையை சேர்த்து சொல்வான்.

துன்யா என்றால் அரபியில் அற்பமான இழிவான கேவலமான மட்டமான என்று பொருள்படும். இந்த அற்பமான உலக வாழ்க்கைக்கு தான் நீங்கள் முக்கியத்துவம் தருகிறீர்கள்.

ஆனால் மறுமை வாழ்க்கை மிகச் சிறந்த வாழ்க்கை. அதை மறந்து விடுகிறீர்கள். மறுமை வாழ்க்கை நிரந்தரமான வாழ்க்கை. முடிவு இல்லாத வாழ்க்கை. அந்த வாழ்க்கையை நீங்கள் பின்னால் விட்டு விடுகிறீர்கள். அதை மறந்து விடுகிறீர்கள். அதற்குண்டான முக்கியத்துவத்தை,சிறப்பை,அவசியத்தை நீங்கள் உணர்வதில்லை என்று அல்லாஹ் சொல்கிறான்.

சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். உதாரணத்திற்கு நாம் வெளியில் செல்லும் போது நல்ல தூய்மையான வெண்மையான ஆடையை உடுத்திக் கொண்டு வெளியே புறப்படுகிறோம். அப்படி செல்லும்போது அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் இருந்து கொஞ்சம் நம்மீது தெறித்து விடுகிறது. அந்த வெள்ளை ஆடையில் நம்மீது பட்டு விடுகிறது. உடனே நாம் அதற்காக கவலைப்படுகிறோம். மனம் புண்படுகிறது.

சரி, சின்ன புழுதி ஏதாவது அந்த ஆடையிலே பட்டுவிட்டால் கூட எவ்வளவு கவலைப் படுவோம். ஆஹா இவ்வளவு சுத்தமான ஆடை! நான் இந்த இடத்திற்கு செல்ல வேண்டுமே! என் ஆடையில் கரைபட்டு விட்டதே! என்று நாம் கவலைப்படுகிறோம்.

நம் உடலில் கறை பட்டால், நம் முகத்தில் கறை பட்டால், அதற்கெல்லாம் நாம் கவலைப்படுகிறோம். அதை சுத்தப்படுத்துவதற்கு முயற்சி செய்கிறோம்.

நம் உள்ளத்திலே எவ்வளவு கறைபடிந்து இருக்கிறது தெரியுமா? இந்த உள்ளத்தை சுத்தப்படுத்துவதற்கு, இந்த உள்ளத்தை தூய்மைப்படுத்துவதற்கு, இந்த உள்ளம் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உள்ளமாக இருக்கிறதா?

சுத்தமான உள்ளங்களை தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். அசுத்தமான உள்ளங்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

இந்த உள்ளத்திலே படிந்திருக்கிற கறைகளை நான் சுத்தம் செய்து இருக்கிறேனா? இந்த உள்ளத்தை களங்கப்படுத்திய, அசிங்கப்படுத்திய, எத்தனை விஷயங்கள் நமக்குள் இருக்கின்றன.

இன்று மார்க்கத்தை பற்றி பலவாறாக பேசிக் கொண்டிருக்கிற நம் மக்களுக்கு, இந்த மார்க்கம் எதற்காக கொடுக்கப்பட்டது என்ற நோக்கமே தெரியாமல் பலர் இருக்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏன் அனுப்பப்பட்டார்கள்? அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மிகத்தெளிவாக சொல்கிறான்:

هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ

கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில் உள்ள ஒருவரை அவன் (தன்) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தபோதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். (அல்குர்ஆன் 62 : 2)

وَآخَرِينَ مِنْهُمْ لَمَّا يَلْحَقُوا بِهِمْ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

(இவர்களுக்காகவும்), இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.(அல்குர்ஆன் : 62 : 3)

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை மிக ஆழமாக கவனிக்க வேண்டும். அல்லாஹு தஆலா இஸ்லாமை ஏற்ற மக்களை இரண்டு பிரிவாக இங்கே பிரிக்கிறான்.

ஒரு கூட்டம் அல்லாஹ்வுடைய தூதரோடு வாழ்ந்தவர்கள்.

(என்னுடைய வழக்கம்:சஹாபாக்களை பற்றி எங்கே குர்ஆனிலே அல்லாஹ் குறிப்பிடுகிறானோ, அவர்களுடைய சிறப்பு அங்கே சொல்லியே ஆகவேண்டும்.)

அல்லாஹ் இந்த இடத்திலே அப்படித்தான் சொல்கிறான். நேரடியாக நபியோடு ஈமான் கொண்ட சஹாபாக்களை பார்த்து அல்லாஹ் சொல்கிறான்.

வசனத்தின் கருத்து : அவர்களை முஃமின்கள்-ஈமான் உடையவர்கள் என்று அல்லாஹ் அங்கே ஏற்றுக்கொள்கிறான். ஏனென்றால் பின் வருகின்ற வசனம் நமக்கு தெளிவாக சொல்கிறது.

முஃமின்களில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவன் அனுப்பினான். அந்த தூதருக்கு கொடுக்கப்பட்ட பணி என்ன?

நான் அவருக்கு இறக்கிய வேத வசனங்களை அந்த முஃமின்களுக்கு ஓதி காட்டுவார், குர்ஆனை படித்துக் காட்டுவார்.இந்த மக்களை பரிசுத்தப்படுத்துவார்.

உடலை சுத்தப்படுத்துவதற்கு, உடம்பில் உள்ள கறைகளைப் போக்குவதற்கு, உடையில் உள்ள அசுத்தத்தைப் போக்குவதற்கு அரபியில் تنظيف-தன்லீஃப் அல்லது تطهير-தத்ஹீர் என்று சொல்லப் படும்.

உள்ளத்தை சுத்தப்படுத்துவதற்கு, உள்ளத்தில் உள்ள கறைகளை அகற்றுவதற்கு,  உள்ளத்தை அல்லாஹ்விற்கு விருப்பமான பண்புகளை கொண்டு அலங்காரம் செய்வதற்குஅரபியில் تزكية-தஜ்கியா என்று சொல்லப்படும்.

அல்லாஹ் சொல்கிறான் : அந்த நபி குர்ஆனை ஓதிக்காட்டுவார், குர்ஆனுடைய வசனங்களை எடுத்துச் சொல்வார்.அதன் மூலமாக இந்த மக்களை அவர் பரிசுத்த படுத்துவார். அவர்களுடைய உள்ளங்களை சுத்தப்படுத்துவார், தூய்மைப் படுத்துவார்.

அடுத்து என்ன செய்வார்? குர்ஆனையும் அந்த குர்ஆனுக்கு விளக்கமாக நாம் அவருக்கு கொடுத்த ஹதீஸ் என்ற ஞானத்தையும் அவர்களுக்கு கற்பிப்பார்.

அல்லாஹ் சொல்கிறான் : இந்த நபி அனுப்பப்படுவதற்கு முன்னால் இந்த முஃமின்கள் வழிகேட்டில் தான் இருந்தார்கள்.

முஃமின்கள் என்றால் இவர்கள் ஈமானை ஏற்றுக் கொள்வதற்கு முன்னால், இந்த நபி வருவதற்கு முன்னால், இவர்கள் வழிகேட்டில் இருந்தார்கள்.

வழிகேட்டிலிருந்த அவர்களை அல்லாஹ் நபியை அனுப்பி அதன் மூலமாக நேர்வழிக்கு எடுத்துக் கொண்டான். அசுத்தத்தில் இருந்து பரிசுத்தத்திற்கு அல்லாஹ் எடுத்துக் கொண்டான். அறியாமையிலிருந்து அறிவுக்கு அல்லாஹ் அவர்களை எடுத்துக்கொண்டான்.

அத்தனை சான்றுகளையும் அல்லாஹுத்தஆலா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஸஹாபாக்களுக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு, வழங்குகிறான்.

சிலர் கேட்கலாம்:இங்கே முஃமின்கள் என்று பொதுவாக தானே வந்திருக்கிறது? எல்லோரையும் இது எடுத்துக் கொள்ளுமே? ஸஹாபாக்களை மட்டும் இது எப்படி எடுக்கும் என்று சொல்கிறீர்கள்.

அல்லாஹ் சொல்கிறான்: இவர்களுக்குப் பின்னால் அடுத்து வரக்கூடிய மற்ற மக்களுக்காகவும், இந்த தூதரை அனுப்பி இருக்கிறேன். அவர்கள் இன்னும் இந்த சஹாபாக்களை வந்து சேரவில்லை.

அப்போ சூரத்துல் ஜும்ஆவுடைய இந்த மூன்றாவது வசனம், நமக்குத் தெளிவாக என்ன சொல்ல வருகிறது? முந்தைய வசனத்தில் கூறப்பட்ட அல்முஃமினீன் -ஈமான் உடையவர்கள் என்பது சஹாபாக்களை குறிக்கிறது.

அடுத்து நபிக்கு கொடுக்கப்பட்ட பணி என்ன? குர்ஆனை மக்களுக்கு எடுத்து ஓதுவது. இதன் மூலமாக மக்களுடைய உள்ளங்களை சுத்தப்படுத்துவது. தர்பியத், தஜ்கியா.

அவர்களுடைய உள்ளங்களை சுத்தப்படுத்துவது. உள்ளம் சுத்தமாகாமல், எத்தனைதான் வெளிரங்கமான செயல்களை நீங்கள் திருத்திக் கொண்டாலும் சரி, அந்த செயல்களுக்கு அல்லாஹ்விடத்தில் பலன் இருக்காது.

கல்பு சுத்தமாகாத வரை, கல்பின் குறைகள், அழுக்குகள், அசுத்தங்கள் நீக்கப்படாத வரை நம்முடைய வெளிரங்கமான அமல்களுக்கு, அல்லாஹ்விடத்தில் பெரிய முக்கியத்துவம் இருக்காது.

இன்னும் சொல்லப்போனால் சில நேரங்களில் உள்ளத்திலே அசுத்தம் இருக்கும்போது, உடல் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும், செயல் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும், அல்லாஹ் அந்த செயல்களை ஏற்றுக் கொள்வதே கிடையாது.

உதாரணத்திற்கு ஒருவர் தொழுகிறார். அல்லது வாரி வழங்குகிறார், தர்மம் செய்கிறார், மஸ்ஜித் கட்டுகிறார், மதரஸா கட்டுகிறார், யத்தீம்களுக்கு உதவி செய்கிறார், அனாதைகளுக்கு உதவி செய்கிறார் ஆனால் அவருடைய உள்ளத்திலே முகஸ்துதி என்ற அசுத்தம் இருக்கிறது.

ரியா என்ற அசுத்தம் இருக்கிறது. இவருடைய வணக்க வழிபாடுகளை, இவருடைய தான தர்மங்களை, இவருடைய இவ்வளவு பெரிய நற்கருமங்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? நிச்சயமாக அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

ஒருவர் பல நல்ல காரியங்கள் செய்கிறார். ஆனால் ஷிர்க் -இணை வைத்தல் என்ற அசுத்தம் அவருடைய உள்ளத்திலே இருக்கிறது.

அல்லாஹ் நபியைப் பார்த்துச் சொல்கிறான் :

لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ

நபியே நீங்கள் இணை வைத்தாலும், உங்களுடைய எல்லா அமல்களும் வீணாகிப் போய்விடும். நாசமாகிவிடும்.அதற்கு நன்மை கிடைக்காது என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 39 : 65)

ஆகவே தான் நம்முடைய இஸ்லாமிய மார்க்கத்தில் குர்ஆனிலே, சுன்னாவிலே, இந்த கல்புகுண்டான முக்கியத்துவம், மிக ஆழமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

அல்லாஹ் மிகத்தெளிவாக சொல்கிறான் :

لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ

(இவ்வாறு குர்பானி செய்தபோதிலும்) அதன் மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவது இல்லை. உங்கள் இறையச்சம்தான் அவனை அடையும்.(அல்குர்ஆன்22 : 37)

தக்வா எங்கே இருக்கிறது? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய இறுதி ஹஜ்ஜில், மக்களுக்கு மினாவில் உபதேசம் செய்யும்போது சொன்னார்கள்:

التَّقْوَى هَاهُنَا

மக்களே! இறையச்சம் இந்த கல்பிலே இருக்கிறது.இறையச்சம் இந்த கல்பிலே இருக்கிறது.இறையச்சம் இந்த கல்பிலே இருக்கிறது. (1)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2564.

இறை அச்சம் ஆடையில் அல்ல. நம்முடைய வெளிறங்கமான தோற்றத்திலே அல்ல. இறையச்சம் என்பது கல்பிலே இருக்கிறது.

கண்ணியத்திற்குரியவர்களே! கல்புடைய சுத்தம், கல்பை பரிசுத்தப்படுத்துவது, கல்பை அல்லாஹ்விற்கு விருப்பமான குணங்களை கொண்டு அலங்கரிப்பது, அல்லாஹ்விற்கு வெறுப்பூட்டக்கூடிய, ஷைத்தானுக்கு விருப்பமான காரியங்களை விட்டு இந்த உள்ளத்தை சுத்தப்படுத்துவது.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் மிகத் தெளிவாக நமக்கு இந்த அடிப்படையை சொல்கிறான். வெற்றி என்பது பொருளை வைத்து அல்ல. வெற்றி என்பது அழகை வைத்து அல்ல.

வெளிரங்கத்திலே, ஒரு மனிதன் தோற்றத்தில் மிக அழகாக இருக்கின்றான். இவன் வெற்றி அடைந்தவனாக ஆகிவிடுவானா? அல்லது பெரிய செல்வ செழிப்பில் இருக்கிறான்.இவனுக்கு வெற்றி கிடைக்குமா?

அல்லாஹு ரப்புல் ஆலமீன் திட்டவட்டமாக மறுத்து விட்டான்.

இன்று பாருங்கள்: நம்மில் எத்தனைபேர் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு முயற்சி செய்கிறோம்.

உடலுக்கு ஏதாவது ஒரு பொருள் அல்லது ஒரு உணவுநோயை ஏற்படுத்தும் என்றால் அந்த உணவை விட்டு விடுகிறோம். சுகர் வந்து விட்டால் எனக்கு சுகர் ஒத்துக்காது, எனக்கு இப்படித்தான் உணவு வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கின்றோம்.

பீபிவந்துவிட்டால் இப்படித்தான் எனக்கு வேண்டும் என்று உணவிலேயே கட்டுப்பாடுகள். இன்னும் என்னென்ன நோய்கள் நம்மை தாக்கும் என்று பயம் இருக்குமோ, அதற்கு ஏற்ப உணவுகளை நாம் கட்டுப்படுத்திக் கொள்கிறோம். அதற்கேற்ப உணவுகளிலேயே நாம் மாற்றம் செய்து கொள்கிறோம்.

ஒவ்வொரு நாளும் எவ்வளவு பெரிய அபாயகரமான நோய்கள் இந்த உள்ளத்தை தாக்கிக் கொண்டு இருக்கின்றன! இந்த உள்ளத்தை காயப்படுத்திக் கொண்டு இருக்கின்றன! இந்த உள்ளத்தை மெளத்தாக்கிக் கொண்டு இருக்கின்றன!

ஆனால் அந்த நோய்களை பற்றியெல்லாம் சிந்திக்காமல், அந்த நோய் என்னிடத்தில் இருக்கிறதே, எப்படி என்னை சுத்தப்படுத்துவேன்? என்று கவனமில்லாமல் இருக்கின்றோம்.

அல்லாஹ்வுடைய எச்சரிக்கையை பாருங்கள் : ஒரு பக்கம் நற்செய்தி சொல்கிறான். இன்னொரு பக்கம் பயங்கரமான எச்சரிக்கையை அல்லாஹ் சொல்கிறான் :

சூரத்துல் ஷம்ஸ் 91-வது அத்தியாயத்தில், ஒன்பதாவது பத்தாவது வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

பல சத்தியங்களை அல்லாஹ் செய்து வருகிறான். சூரியன் மீது சத்தியம் செய்கிறான்.

ஏனென்றால், சொல்லக்கூடிய விஷயம் அவ்வளவு பயங்கரமான விஷயம். எளிதாக எடுத்துக் கொள்ளப்படுகிற விஷயமல்ல.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஒன்றின் மீது சத்தியம் செய்கிறான் என்றால், அந்த விஷயத்தின் உடைய முக்கியத்துவம் அப்படிப்பட்டது.

அப்படி இருந்தால்தான் அல்லாஹு ரப்புல் ஆலமீன் சத்தியம் செய்வான். அல்லாஹ்வுடைய சாதாரணமான வார்த்தையே முஃமின்களை அச்சுறுத்துவதற்கு, அவர்களின் கவனத்தை திருப்புவதற்கு போதுமானது.

இருந்தாலும் மக்களில் பலர் மறதியாளர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுடைய கவனத்தை திருப்புவதற்காக, அலட்சியம் செய்பவர்கள் உடைய அலட்சியத்தையும் எச்சரிக்கை செய்வதற்காகவே பல இடங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சத்தியம் செய்வது பழக்கம்.

அந்த அடிப்படையில்தான் 12க்கும் மேற்பட்ட பொருட்களின் மீது அல்லாஹ் சத்தியம் செய்கிறான். அவன் படைத்தசூரியனின் மீது, அதன் வெளிச்சத்தின் மீது, சந்திரனின் மீது, அது சூரியனை தொடர்ந்து வரும்போது, இரவின் மீது, பகலின் மீது, ஆணின் மீது, பெண்ணின் மீது, அல்லாஹ் படைத்த வானத்தின் மீது, ஆத்மாவின் மீது, அல்லாஹ்வின் மீது என்று பல சத்தியங்களை அல்லாஹு ரப்புல் ஆலமீன் தொடர்ந்து செய்ததற்குப் பிறகு அல்லாஹ் சொல்கிறான்.

இதற்கு முன்னால் அல்லாஹ் சொல்கிறான் : ஆன்மாவின் மீது சத்தியமாக! இந்த நஃப்சை -ஆன்மாவைபடைத்த இறைவன் மீது சத்தியமாக! இந்த ஆன்மாவிற்கு நல்லது எது? கெட்டது எது? என்ற விளக்கத்தை நாம் உணர வைத்து விட்டோம்.

நாம் தமிழிலே மனசாட்சி என்று சொல்வோம்.இந்த நஃப்ஸின் உடைய ஆழத்தில் அல்லாஹ் அதை பதிய வைத்திருக்கிறான்.

ஆகவே தான், அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஒரு நபித்தோழர் வந்து கேட்கிறார்:

நன்மை எது? பாவம் எது? என்று எனக்கு விளக்கம் தாருங்கள்.

இந்த கேள்விக்கு விளக்கம் தருவது என்றால், ஏறக்குறைய ஒரு பத்து மணி நேரம் பயான் செய்யவேண்டும். நன்மையெல்லாம் இது இது. தொழுகையிலிருந்து கடைசி வரை எண்ண வேண்டும். பாவம் எல்லாம் இது இது என்று ஒரு பெரிய பட்டியலே தரவேண்டும்.

ஆனால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு மிக அழகாக சொன்னார்கள். அவர்களின் வார்த்தை சுருக்கமாக இருக்கும். ஆனால், கருத்து ஆழமாக இருக்கும். இது அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த சிறப்பம்சமாகும்.

சொன்னார்கள் :

وَالْإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِكَ

உனது உள்ளத்திலே எது உனக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறதோ, எது உன் உள்ளத்திலே நெருடலை ஏற்படுத்துகிறதோ, குத்துகிறதோஅது பாவம்.அதை விட்டுவிடு.

அறிவிப்பாளர் : நவ்வாஸ் இப்னு சம்ஆன் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2553.

எவ்வளவு அழகான விளக்கம்!

நிச்சயம் அல்லாஹ் இந்த உள்ளத்திற்கும் அப்படிப்பட்ட ஒரு அமைப்பை தான் கொடுத்திருக்கிறான். பாவம் செய்யும்போது இந்த உள்ளம் நிச்சயமாக தடுக்கும். வேண்டாம் இதை செய்யாதே என்ற அருவருப்பை ஏற்படுத்தும்.

மீறி அந்த உள்ளத்தை காலில் போட்டு நசுக்கி விட்டு மிதித்துவிட்டு அந்தப் பாவத்தை அவன் செய்யத் துணியும் போது தான் ஷைத்தான் அவனுக்கு அந்தப் பாவத்தை அலங்கரித்து விடுகிறான்.

குடிப்பவன் குடிப்பதற்கு முன்னால், ஜினா –விபச்சாரம் செய்பவர் ஜினாவிற்கு முன்னால், திருடுபவன் திருட போவதற்கு முன்னால், பொய் சொல்பவன் பொய் சொல்வதற்கு முன்னால், ஏமாற்றுபவன் ஏமாற்றுவதற்கு முன்னால், இப்படி எத்தனை விதமான பாவங்கள் இருக்கின்றதோ அந்த பாவங்களை செய்பவர்கள், அவர்கள் அந்த பாவங்களை செய்வதற்கு முன்னால் அந்த நஃப்ஸ் அவர்களுக்கு சொல்லும். செய்யாதே! என்று.

பாவம் குற்ற உணர்வை ஏற்படுத்தும். அதை புறக்கணித்துவிட்டுஅவன் அந்தப் பாவத்தில் விழும் போது ஷைத்தான் அவனை கவ்விக் கொள்கிறான். அவனுக்கு அந்தப் பாவத்தை அலங்கரித்து விடுகிறான். அந்தப் பாவத்தில் ஷைத்தான் அவனுக்கு ஒரு ருசியை, ஒரு இன்பத்தை ஏற்படுத்துகிறான். பிறகு ஷைத்தான் வலையில் சிக்கி, ஷைத்தானின் நண்பனாக ஆகி விடுகிறான்.

அல்லாஹ் மிகத்தெளிவாக இதை சொன்னான் : அல்லாஹ் ஒவ்வொரு ஆத்மாவுக்கும், தக்வா எனும் இறையச்சம் எது? பாவம் எது என்பதை உணர்த்தி விட்டான் என்று.

தெளிவாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். பாவத்தின்  விளக்கத்தைக் கேட்கும் போது, உனது உள்ளத்தில்எது வருத்தத்தை தருகிறதோ அது பாவம் என்று புரிந்து கொள் என்பதாக.

கண்ணியத்திற்குரியவர்களே! நீங்கள் பார்த்திருக்கலாம் : சில சமயங்களில் பாவங்களில் நாம் சிக்கும் போது அல்லாஹு ரப்புல் ஆலமீன் உடனடியாக இந்த உள்ளத்திலே அந்த ஈமானுடைய ஒளியை போடுகிறான். இறையச்சமுள்ள முஃமின்கள் உடைய கல்பு இப்படித்தான் இருக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான்:

إِنَّ الَّذِينَ اتَّقَوْا إِذَا مَسَّهُمْ طَائِفٌ مِنَ الشَّيْطَانِ تَذَكَّرُوا فَإِذَا هُمْ مُبْصِرُونَ

கருத்து : அல்லாஹுத்தஆலா பாவம் செய்யமாட்டார்கள் என்று சொல்லவில்லை. இறையச்சம் உள்ளவர்கள் யார்? ஷைத்தானிடமிருந்து அவர்களுக்கு ஏதாவது தீண்டுதல் நிகழ்ந்தால், ஷைத்தானின் ஊசலாட்டங்களுக்கு, அவர்கள் எப்போதாவது ஆளாகி விட்டால், உடனடியாக அல்லாஹ்வை நினைத்துக்கொள்வார்கள். அவர்களுடைய கல்புடைய கண்கள் திறந்துவிடும். (அல்குர்ஆன் 7 : 201)

மறுமையைப் பார்ப்பார்கள், சொர்க்கத்தைப் பார்ப்பார்கள், நரகத்தைப் பார்ப்பார்கள், கப்ருடைய வேதனையைப் பார்ப்பார்கள், அல்லாஹ்வுடைய வேதனையை பயந்துகொண்டு வெளியே வந்துவிடுவார்கள்.

யாரிடத்தில் தக்வா இல்லையோ, யாரிடத்தில் அல்லாஹ்வுடைய பயம் இல்லையோ, அவர்கள் அந்த நரகப் படுகுழியில், பாவப் படுகுழியில் விழுந்து விடுவார்கள்.

இதைத்தான் அல்லாஹ் நமக்கு சொல்லிக் காட்டுகிறான்.

இந்த நஃப்சை சுத்தம் செய்வதற்கு நீங்கள் முயற்சி செய்யுங்கள். நஃப்சை பாவங்களிலிருந்து, குற்றங்களிலிருந்து, கெட்ட குணங்களிலிருந்து, எனக்கு பிடிக்காத எல்லாவிதமான குணங்களிலிருந்து உங்களுடைய நஃப்சை, உங்களுடைய ஆன்மாவை உங்களுடைய கல்பை சுத்தப்படுத்துங்கள் என்று.

யார் இந்த கல்பை சுத்தப்படுத்தினார்களோ, அவர்கள் வெற்றி அடைந்தார்கள். பிலால் வெற்றி அடைந்தார், அம்மார் வெற்றி அடைந்தார். வஹ்ஷி வெற்றியடைந்தார்.

எத்தனை நபித்தோழர்கள், அவர்களுக்கு அழகு கிடையாது. கருப்பு இனத்தை சேர்ந்தவர்கள். கோரமான தோற்றம் உடையவர்கள்.

எத்தனையோ ஆயிரக்கணக்கான அழகர்களை விட, அவர்கள் அல்லாஹ்விடத்திலேமிக நெருக்கமானவர்கள்.

எதை வைத்து? அவர்கள் கல்பு அங்கே பரிசுத்தப்படுத்தப்பட்டது. எவ்வளவு அதாபுகள் செய்யபட்டபோதிலும் கூட, அந்த அதாபுடைய வலி தெரியவில்லை பிலாலுக்கு.

அஹத், அஹத் -அல்லாஹ் அல்லாஹ், என்று சொல்லிக்கொண்டிருந்தார். பிலால் அவர்களிடத்தில் கேட்கப்பட்டது. பிலாலே! இவ்வளவு கொடுமைப்படுத்தினார்கள்.உங்களுக்கு வலிக்க வில்லையா? என்று.

பிலால் கூறுகிறார் :

قال: "مزجت حلاوة الإيمان بمرارة العذاب، فطغت حلاوة الإيمان على مرارة العذاب؛ فصبرت"

இந்த வலியின் கசப்பை, ஈமானுடைய சுவையோடு நான் கலந்தேன். ஈமானின் சுவை எனக்கு மிகைத்து விட்டது என்பதாக.

என்ன ஒரு உள்ளம்! இந்த உள்ளத்தால் அல்லாஹ் அவரை நேசித்தான், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேசித்தார்கள். சஹாபாக்கள் நேசித்தார்கள்.

உங்களுக்கு தெரியுமா? எத்தனை சஹாபாக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு பிலால் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

கலிபா உமர் இப்னு கத்தாப் தங்களுடைய பேரன்களுக்கு பிலால் என்று பெயர் வைத்தார்கள். பிலாலின் மீது அவர் கொண்டிருந்த பாசத்தால்.

எத்தனையோ குறைஷித் தலைவர்கள் எல்லாம் கலீஃபா உமர் இடத்திலே அனுமதி கேட்டு வருவார்கள். அவர்களை எல்லாம் வாசலிலே நிற்க வைத்து விடுவார்கள். பிலால் வந்துவிட்டால், எந்த அனுமதியும் அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களின் சமூகத்திற்கு வந்துவிடலாம். 

பிலாலை பார்த்தால் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்வார்கள்:

هذا سيدنا

இவர் எங்களுடைய தலைவர் என்பதாக.

எதன் மூலமாக அல்லாஹ் இந்த கண்ணியத்தை அவர்களுக்குக் கொடுத்தான்?அவர்களுடைய ஈமான் சுத்தமாக இருந்தது, உள்ளம் தூய்மையாக இருந்தது.

அல்லாஹ் தெளிவாக சொல்கிறான்:

وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا

யார் இந்த உள்ளத்தை மண்ணிலே போட்டு புதைத்தானோ அவன் நாசமாகி விட்டான். (அல்குர்ஆன் 91 : 10)

யார் இந்த ஆன்மாவை கவனிக்கவில்லையோ? இதை பேணவில்லையோ, இதனுடைய ஆரோக்கியத்தை தனது கவனத்தில் கொள்ள வில்லையோ, இதனுடைய பரிசுத்தத்தை தன் கவனத்தில் கொள்ள வில்லையோ, அவரை அல்லாஹ் சொல்கிறான். அவர் தன் ஆன்மாவை மண்ணிலே போட்டு புதைத்து விட்டார்.

ஒரு விஷயத்திலே ஒருவர் அலட்சியமாக இருக்கும்போது, நீ பாழ்படுத்தி விட்டாயே நாசமாக்கி விட்டாயே என்று நாம் சொல்வோம். அல்லாஹ் அப்படித்தான் சொல்கிறான்.

அல்லாஹ்வின் அடியார்களே! நஃப்சை பரிசுத்தப்படுத்துவது என்றால் என்ன? நஃப்சை பாழாக்குவது என்றால் என்ன? அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு அதற்கு விடை சொல்கிறான்.

நஃப்சுடைய பரிசுத்தம், நஃப்சு உடைய தஸ்கியா, எதிலிருந்து ஏற்படுகிறது? நஃப்ஸ் உடைய தஸ்கியாவை அடைவதற்கு இன்று வழிதவறிய மக்கள் எத்தனையோ வழிகளைக் கையாளுகிறார்கள்.

ஆனால் முடிவு என்ன? அந்த வழிகேடர்கள் இஸ்லாமை அறியாத, இஸ்லாமை ஏற்காத துறவறத்தில் உள்ளவர்கள், அல்லது வேறு விதமான மோசமான கொள்கையிலே உள்ளவர்கள்.

அது கிறிஸ்தவம் ஆக இருக்கட்டும், அல்லது இந்து மதமாக இருக்கட்டும், அல்லது துறவறத்தின்படி தங்களுடைய சீடர்களுக்கு ஆன்மா பரிசுத்தத்தை தருகிறோம் என்று சொல்லக்கூடிய யாராக இருந்தாலும் சரி, அவர்களுடைய ஒட்டுமொத்த, அந்த கொள்கை அவர்களை நிச்சயமாக நாசப்படு குழியில், ஷைத்தானின் வலையில் தள்ளி விடும் என்பதற்கு நமக்கு வரலாறுகள் சாட்சியாக இருக்கின்றன.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமக்குத் தெளிவாக சொல்லிவிட்டான். ஒரு முஃமின் தன் கல்பை பரிசுத்த படுத்தவேண்டும் என்று நினைத்தால், முதலாவதாக அவன் தன் ஈமானை சரி செய்ய வேண்டும்.

அதைத் தான் அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை, இணைவைத்தல் கலக்காமல், முகஸ்துதி கலக்காமல், புகழை விரும்பாமல், மறுமையின் மீது, அல்லாஹ்வின் மீது, சொர்க்கத்தின் மீது, நரகத்தின் மீது உண்மையான இறை நம்பிக்கை இருக்க வேண்டும்.

எப்படி இந்த உலக வாழ்க்கையில் தன் கண்ணால் பார்க்கின்ற பொருட்களின் மீது அவருக்கு நம்பிக்கை இருக்குமோ, இதைவிட ஆழமாக மறுமையை நம்பி ஆகவேண்டும். இதைவிட உண்மையாக ஆஹிரத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

ஏனென்றால் இந்த சூரியன் இந்த சந்திரன் இன்னும் உலகத்திலே நடக்கின்ற இந்த நடப்புகளை எல்லாம் நாம் கண்ணால் பார்க்கின்றோம்.

ஆனால் மறுமையை குறித்து நமக்கு செய்தி சொன்னவர்கள் யார்? சொர்க்கத்தை குறித்து நமக்கு செய்தியை சொன்னவர்கள் யார்? நரகத்தை குறித்து நமக்கு செய்தி சொன்னவர்கள் யார்?

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தான். அல்லாஹ்வை விட உண்மையாளன் யார் இருக்க முடியும்?

அல்லாஹ்வுடைய தூதரை விட அல்லாஹ்வுக்குப் பிறகு உண்மையாளர் யார் இருக்கமுடியும்?

கண்ணியத்திற்குரியவர்களே! ஏனோ தெரியவில்லை.நம் காலத்து முஸ்லிம்களுக்கு ரசூலுல்லாஹ் அவர்களின் வாக்கின் மீது நம்பிக்கை ஏற்படுவது கிடையாது. ரசூலுல்லாஹ்  உடைய சொல்லின் மீது அவர்களுக்கு முழுமையான ஈமான் வருவது கிடையாது.

நம்மில் பலர் நம்மை முஃமின்கள் என்று ஈமான் உள்ளவர்கள் என்று நம்பி இருக்கிறோம்.அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு அந்த ஈமானை முழுமைப்படுத்தி தரட்டும். நிறைவாக தரட்டும்.

ஆனால்,நம்முடைய ஈமானை நாமே எடை போட்டு பார்க்கும் போது,உரசிப் பார்க்கும் போதுதான் தெரியும், நம்முடைய ஈமானில் உள்ள பலவீனம்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் மக்காவில் வாழ்ந்த ஒரு காஃபிர், அல்லாஹ்வை நம்பாதவன், ரசூலை ஏற்காதவன், உமையா இப்னு கலஃப். இவனுடைய நிலை என்ன தெரியுமா?

உஹது போரில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கைகளில் இருந்து புறப்பட்ட ஒரு சிறிய ஈட்டி, அவனுடைய கழுத்தை லேசாக உரசி சென்றது. இலேசான ஒரே ஒரு காயத்தை தான் ஏற்படுத்தியது.

அவன் கத்தினான்; முஹம்மது என்னை கொன்று விட்டார். இவர் மக்காவில் இருக்கும் போதே சொன்னார். என்னை கொல்வேன் என்பதாக.இவர் என்மீது துப்பி இருந்தால் கூட நான் செத்து இருப்பேன் என்று.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்திலே வாழ்ந்த ஒரு காஃபிருக்கு அவர்கள் சொன்னால் அது அப்படியே நடக்கும் என்ற நம்பிக்கைஇருந்தது.

அபூலஹபின் மகன்கள் ரசூலுல்லாஹ்வை கடுமையாக கொடுமைப் படுத்திய போது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கையேந்தினார்கள்.

" اللهُمَّ سَلِّطْ عَلَيْهِ كَلْبًا مِنْ كِلَابِكَ "

யா அல்லாஹ்!உன்னுடைய மிருகங்களில் இருந்து ஒரு மிருகத்தை இவன்மீது சாட்டுவாயாக! என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூ உபைதா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : பைஹகீ,எண் : 10052, தரம் : ஹசன் (இப்னு ஹஜர், ஷவ்கானி)

ஷாம் தேசத்திற்கு வியாபாரத்திற்காக செல்கிறான். அந்த இடத்திலே சிங்கங்கள் இருப்பது கிடையாது.ஆனால் சிங்கத்தின் சப்தத்தை அந்த வியாபார கூட்டத்தார்கள் கேட்கிறார்கள். அப்பொழுது அபூலஹபின் மகன் சொல்கிறான்:முஹம்மது என்னை கொன்று விட்டார் என்று.

கூட்டத்தார்கள் கேட்கிறார்கள் : என்ன பேசுகிறாய்? எங்கோ காட்டிலே ஒரு சிங்கத்தின் சப்தத்தைக் கேட்டு விட்டு, இப்படி பதறுகிறாயே என்று? அவன் கூறுகிறான்: இல்லை. முஹம்மது எனக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்தார். அல்லாஹ்வுடைய மிருகங்களில் இருந்து ஒரு மிருகத்தை எனக்கு சாட்டும்படியாக, அதைத்தான் நான் இப்பொழுது பார்க்கிறேன் என்றான்.

அது போல தான் நடந்தது. இரவிலே இவனை பாதுகாப்பதற்காக எல்லா விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துகொண்டு, இவனை நடுவிலே தூங்க வைத்துவிட்டு கூட்டத்தார்கள் எல்லாம் தூங்கும்போது வந்த சிங்கம், அவனை மட்டும் தேடி அவனுடைய கழுத்தைக் கொய்து விட்டு செல்கிறது.

அறிவிப்பாளர் : அபூ உபைதா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : பைஹகீ,எண் : 10052, தரம் : ஹசன் (இப்னு ஹஜர், ஷவ்கானி)

கண்ணியத்திற்குரியவர்களே! ரசூலுல்லாஹ் உடைய காலத்திலே வாழ்ந்த அந்த காஃபிர்களுக்கு ரசூலுல்லாஹ் உடைய வார்த்தையின் மீது நம்பிக்கை இருந்தது. அவர்கள் மறுத்ததற்கு என்ன காரணம்? குலப்பெருமை காரணமாக, மூதாதையர்களின் மார்க்கத்தை எப்படி விடுவது என்று அந்த ஆணவத்தின் காரணமாக மறுத்தார்கள்.

இன்று நம்முடைய முஃமின்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.என்ன ஈமான் இருக்கிறது? ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள் என்று சொல்லும்போது, பார்க்கலாம் அதையெல்லாம், மறுமை என்று சொல்லும்போது, பார்க்கலாம் அதையெல்லாம், பாவத்தால் அல்லாஹ் அழிவை ஏற்படுத்துவான்; ஆபாசங்கள் இந்த அசிங்கங்களால், பயங்கரமான தண்டனைகளை அல்லாஹ் இறக்குவான் என்றெல்லாம் எவ்வளவுதான் மிம்பர்களிலே அவர்களுக்கு பிரசங்கம் செய்யப்பட்டாலும் சரி,

ஆனால், இன்னும் இதுநாள் வரை பெரும்பாலான முஸ்லிம்கள் சினிமாக்களை பார்ப்பதிலிருந்து, அதை தங்களுடைய வீடுகளில் அரங்கேற்றுவதில் இருந்து, சீரியல்கள் பார்ப்பதிலிருந்து, இந்த ஆபாசமான பாடல்களை ஆடல்களை அசிங்கங்களை கேட்பதிலிருந்து தவிர்ந்துக் கொள்வதாக தெரியவில்லை.

இது என்ன உணர்த்துகிறது? அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கூற்றின் மீது உண்மையான ஈமான் இருந்திருக்குமேயானால், நிச்சயமாக இவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து திருந்தி இருப்பார்கள். தவ்பா செய்து இருப்பார்கள்.

அந்த பாவங்களை தங்களுடைய வீட்டிலிருந்து வெளியேற்றி இருப்பார்கள். ஆனால் அப்படி காட்சி தெரியவில்லையே!

முஸ்லிம்களுடைய வீடுகளுக்கு செல்லுங்கள்.காஃபிர்களுடைய வீடுகளை போன்றுதான். அங்கு எல்லாவிதமான ஆபாசங்களும், கூட்டம் கூட்டமாக தந்தை மகன் பிள்ளை பெற்றோர் என எல்லோராலும் பார்க்கப்படுகிறது; கேட்கப்படுகிறது; ரசிக்கப்படுகிறது.

இது, ஈமானின் பலவீனத்தையும்,நம்பிக்கையின்பலவீனத்தையும் உணர்த்துகிறது.

இந்த கல்பை சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்றால், அதற்கு முதலாவது ஈமான்.

இரண்டாவது தொழுகை. அந்தத் தொழுகையை அதன் உரிய நேரத்தில் அல்லாஹ்வுடைய பயத்தோடு மன அச்சத்தோடு முழுமையான ஓர்மையோடு தொழவேண்டும்.

இன்று நம்மில் அதிகமானவர்கள் தொழுவது போன்று கிடையாது. எப்பொழுது கடைசி நேரம் இகாமத் சொல்லப்படுமோ, அதுவரை எதிர்பார்த்து இருப்பார்கள். தொழுகையில் நிற்கும் போது உலகத்தை எல்லாம் நினைவு கொள்வார்கள். அல்லாஹ்வை தவிர, எல்லோரையும் நினைத்து விடுவார்கள். அல்லாஹ்வை மறந்து விடுவார்கள்.

மறுமையைத் தவிர எல்லாவற்றையும் நினைத்து விடுவார்கள். மறுமையை மறந்து விடுவார்கள். அல்லாஹ் தொழுகையை நம் மீது கடமையாக்கியதே, அல்லாஹ் உடைய நினைவுக்காக,

وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي

என் நினைவை நீங்கள் உள்ளத்திலே கொண்டு வருவதற்காக தொழுகையை கடைபிடியுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 20 : 14)

தொழுகைக்கு அடுத்து ஜகாத். இந்த ஜகாத் நம்முடைய உள்ளத்தை சுத்தப்படுத்துகிறது என்று அல்லாஹ் சொல்கிறான்.

சூரத்துல் லைலில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி சொல்கிறான்:அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய தன்மையைப் பற்றி சொல்கிறான்:

الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى

அவர் செல்வத்தை அல்லாஹ்வுடைய பாதையில் அல்லாஹ் என் உள்ளத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே கொடுத்தார். (அல்குர்ஆன் 92 : 18)

தொழுகை ஜகாத் நம்முடைய கல்பை சுத்தப்படுத்துவதற்கு, தர்பியா செய்வதற்குண்டான மிகப்பெரிய ஒரு ஆன்மீக பயிற்சி.

ஆனால், இதை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முஸ்லிம்களுக்கு மார்க்கமாகவே ஆக்கி இருந்தும், அன்றாட அமலாக ஆக்கி இருந்தும்நம்முடைய பலருக்கு இது புரிவதில்லை.

மாற்றார்கள் இப்போது கவர்ச்சியாக காட்டக்கூடியஆடல்,பாடல்,யோகா,இன்னும் எத்தனையோ விதமான இந்த அலங்காரங்கள். அலங்கார வகுப்புகள் இவற்றைப் பார்த்து அங்கே சென்றால் நிம்மதி கிடைக்கிறது, உடல் ஆரோக்கியம் கிடைக்கிறது, மன ஓர்மை கிடைக்கும் என்றெல்லாம் முஸ்லிம்களில் பலர் பேசுவதை நாம் பார்க்கிறோம்.

கண்ணியத்திற்குரியவர்களே! அவர்கள் பேசவில்லை அவர்களுடைய நாவிலிருந்து ஷைத்தான் பேசுகிறான், இப்லீஸ் பேசுகிறான்.

யார் இந்த மார்க்கத்தை தவிர, வேறொன்றில் தங்கள் மனதிற்கு நிம்மதியை தேடுகிறானோ, அல்லாஹ்வுடைய நினைவைத் தவிர வேறொன்றில் தனக்கு ஆன்மாவின் திருப்தியை தேடுகிறானோ, வணக்க வழிபாட்டை தவிர வேறொன்றில் யார் தன் ஆன்மாவிற்கு வெற்றியை தேடுகிறானோ, சுத்தத்தை  தேடுகிறானோ அவன் நிச்சயமாக ஒரு குருடனாக, ஒரு மூடனாக தான் இருக்க முடியும்.

யார் இந்த இப்ராஹிம் உடைய மார்க்கத்தைத் தவிர வேறொரு வழியை தன் ஆன்மாவின் வெற்றிக்காக தேடுகிறானோ, அவனை அல்லாஹ் மூடன் என்று சொல்கிறான்:

وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ

எவன், தானே மூடனாகி விட்டானோ அவனைத் தவிர இப்றாஹீமுடைய (இஸ்லாம்) மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? (அல்குர்ஆன் 2 : 130)

தக்வா உடைய முக்கியமான பகுதி, இந்த கல்பைசுத்தப்படுத்துவதற்கான மிக முக்கியமான வழி, இந்த கல்பு கெட்டுபோகக்கூடிய காரணிகளை விட்டும் பாதுகாப்பது.

இந்த உள்ளம் கண்ணால் கெடும், காதால் கெடும், நாவால் கெடும், சிந்தனையால் கெடும். ஆகவே இந்த நான்கு வழிகளில் நாம் பாதுகாக்க வேண்டும்.

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّوَّاسِ بْنِ سِمْعَانَ الْأَنْصَارِيِّ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ الْبِرِّ وَالْإِثْمِ فَقَالَ: «الْبِرُّ حُسْنُ الْخُلُقِ، وَالْإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِكَ، وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ» (صحيح مسلم  2553)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/