தோழர்களும் நபிக்கு கீழ்ப்படிதலும் (அமர்வு 1/2) | Tamil Bayan - 338
தோழர்களும் நபிக்கு கீழ்படிதலும்
ஜுமுஆ குத்பா தலைப்பு : தோழர்களும் நபிக்கு கீழ்படிதலும் (அமர்வு 1-2)
வரிசை : 338
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 22-08-2014 | 26-10-1435
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை போற்றி புகழ்ந்துஅல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதர் மீதும் அந்தத் தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் அனைவரின் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியதற்குப் பிறகு அல்லாஹ்வை முழுமையாக பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வுடைய பயத்தை நினைவுகூர்ந்தவனாக ஆரம்பம் செய்கின்றேன்.
யார் அல்லாஹ்வை பயந்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் நிச்சயமாக நேர்வழி காட்டுவான். அவர்கள் இம்மையிலும் வெற்றியடைவார்கள். மறுமையிலும் வெற்றி அடைவார்கள்.
அல்லாஹ்வின் பொருத்தத்தை அடையக் கூடியவர்கள் அல்லாஹ்வின் பயத்தை பெற்றவர்கள் தான்.
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ் தஆலா இறை நம்பிக்கை என்ற சுவையை இரண்டு விஷயங்களில் வைத்திருக்கின்றான்.
அல்லாஹ்வின் மீது நேசம் வைப்பதிலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது நேசம் வைப்பதிலும் வைத்திருக்கின்றான்.
உண்மையாக அல்லாஹ்வை ஈமான் கொள்ளக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீது எப்படி நேசம் வைக்கிறார்களோ அல்லாஹ்வின் மீது எப்படி நம்பிக்கை கொள்கின்றார்களோ அல்லாஹ்வை எப்படி பயப்படுகின்றார்களோ அதுபோன்று அல்லாஹ்வின் அன்பையும் அல்லாஹ்வின் தூதர் மீது அன்பையும் நிரப்பமாக வைத்திருக்க வேண்டும்.
நாம் அன்பு வைப்பதற்கும் நேசிப்பதற்கும் முதல் தகுதியானவர்கள், அல்லாஹ்வும் அடுத்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் மீது வைத்திருக்கின்ற நேசம் என்பது வெறும் வார்த்தையால் மட்டுமல்ல. நேசம் என்பது செயலால் சேர்ந்திருக்க வேண்டும். அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதர் மீதும் நாம் வைத்திருக்கின்ற நேசமானது சாட்சிகளுடன் சேர்ந்து இருக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
நாம் நபித்தோழர்களை பார்க்கின்றோம். அல்லாஹ்வையும் நேசித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் நேசித்தார்கள். முழுமையாக நேசித்தார்கள். சொல்லாலும் நேசித்தார்கள். செயலாலும் நேசித்தார்கள். மனதாலும் நேசித்தார்கள்.
அவர்களுக்கு, குடும்பத்தின் உடைய பிரியத்தை விட சொத்து சுகங்கள் உடைய பிரியத்தை விட அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் ரசூலின் மீதும் பிரியம் நிரப்பமாக இருந்தது.
எனவே,அவர்கள் ஈமானிய சுவையை முழுவதுமாக அனுபவித்துக் கொண்டே இருந்தார்கள். அதற்கு அடையாளமாக அவர்களிடத்தில் காணப்பட்டது என்னவென்றால் அவர்களுடைய செயல்.
அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் எவ்வளவு விருப்பத்திற்கு உடையவர்களாக இருந்தார்கள் என்பதை அவர்களுடைய செயல்கள் மூலமாக நாம் தெரிந்து கொள்கின்றோம்.
இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கின்றார்கள்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பத்தில் தங்கத்தினால் ஆன மோதிரம் அணிய அனுமதி இருக்கும் பொழுது, தங்கத்திலான மோதிரத்தை செய்து அணிந்து இருந்தார்கள். அதைப்பார்த்து ஸஹாபாக்களும் தங்கத்திலான மோதிரத்தை செய்து அணிய ஆரம்பிக்கின்றார்கள்.
وَإِنِّي لَا أَلْبَسُهُ فَنَبَذَهُ فَنَبَذَ النَّاسُ
ஒருநாள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மிம்பரில் குத்பா கொடுத்து கொண்டிருக்கும் பொழுது அல்லாஹ் எனக்கு தங்க மோதிரம் அணிவதை தடை செய்து விட்டான் என்றுகூறி மோதிரத்தை கழற்றி எறிந்து விட்டார்கள்.
அதை கேட்ட ஸஹாபாக்களும் தான் அணிந்திருந்த ஒவ்வொரு தங்க மோதிரத்தையும் கழற்றி எறிந்து விட்டார்கள்.
அவர்கள் ரசூலுல்லாஹ்விடத்தில் இதை ஏன் அணிவதற்கு தடையானது என்று கேள்விகள் கேட்கவில்லை.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: அல்லாஹ் எனக்கு அப்போது இதை அனுமதித்ததான். இப்போது இதை தடை செய்து விட்டான் என்று. அதைக் கேட்ட சஹாபாக்களும் அப்படியே செய்தார்கள்.(1)
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 5427.
இந்த இடத்தில், ஒரு சஹாபி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்க மோதிரம் அணிந்திருந்தார்கள், அதை இப்பொழுது கழற்றி எறிந்து விட்டார்கள் என்று செய்தி தெரியாத அந்த ஸஹாபி தங்க மோதிரத்தை அணிந்து கொண்டு சபைக்கு வருகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த ஸஹாபியின் கையில் இருந்த மோதிரத்தை கழட்டி தூக்கி எறிந்து விட்டார்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கிருந்து சென்றதற்கு பிறகு அங்கிருந்த ஸஹாபாக்கள் சொன்னார்கள்.
தோழரே! ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆண்களுக்குத் தான் இந்த மோதிரத்தை ஹராம் ஆக்கினார்கள். பெண்களுக்கு அல்ல. எனவே நீங்கள் இந்த மோதிரத்தை கொண்டு சென்று உங்கள் பெண்களுக்கு அணியலாமே.
அந்தத் தோழர் சொன்னார்; எப்பொழுது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என் கரத்தில் இருந்து பிடுங்கி எறிந்துவிட்டாகளோ ஒருபோதும் நான் அதை சென்று எடுக்க மாட்டேன்.
எதை ரசூலுல்லாஹ் எறிந்து விட்டார்களோ அது எனக்கு தேவை இல்லை. என்னுடைய வீட்டிற்கும் தேவையில்லை. அது எனக்கு ஹராமாக இருந்து என் பெண்களுக்கு ஹலாலாக இருந்தால் கூட, அதை ஒருநாளும் நான் எடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளதை நாம் பார்க்கின்றோம்.
ஸஹாபாக்கள் உடைய அந்த வார்த்தை என்பது அப்படித்தான் இருந்தது. அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கட்டுப்படக்கூடிய விஷயத்தில் அவர்கள் எதையும் பொருட்படுத்தாதவர்களாக, யார் குறுக்கே வந்தாலும் அதற்கு கீழ்படியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதை பல வரலாறுகளில் பார்க்கின்றோம்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழும் பொழுது செருப்பு அணிந்து கொண்டு தொழுகின்ற வழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள். ஸஹாபாக்களும் செருப்பு அணிந்து கொண்டு தொழுவார்கள்.
ஒருமுறை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுது கொண்டிருக்கும் பொழுது தங்களுடைய செருப்பை கழற்றி விட்டார்கள். இதைப்பார்த்த ஸஹாபாக்கள் எல்லோரும் அவர்களும் செருப்பை கழற்றி விட்டார்கள்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகை முடிந்ததும் தோழர்களே! நீங்கள் ஏன் செருப்பை கழற்றி விட்டீர்கள் என்று கேட்கின்றார்கள். அப்போது அந்தத் தோழர்கள் உடைய பதிலைப் பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் உங்களது செருப்பை கழற்றி விடுவதை பார்த்து தான் நாங்களும் கழற்றி விட்டோம்.
தோழர்களே அப்படியா! சரி, நான் ஏன் கழட்டினேன் தெரியுமா? ஜிப்ரீல் என்னிடத்தில் வந்து சொன்னார்கள்; உங்களுடைய செருப்பில் அசுத்தம் இருக்கிறது என்று. எனவே நான் கழட்டினேன்.
إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَلْيَنْظُرْ فَإِنْ رَأَى فِي نَعْلَيْهِ قَذَرًا أَوْ أَذًى فَلْيَمْسَحْهُ وَلْيُصَلِّ فِيهِمَا
ஒருவர் பள்ளிக்கு வந்தால் முதலில் அவர் தனது செருப்பையும் பார்க்கட்டும். அதில் ஏதாவது அசுத்தம் இருந்தால் அதை அப்படியே விட்டு விடட்டும் அல்லது சுத்தம் செய்துவிட்டு அதை போட்டுக் கொண்டு தொழுகட்டும்.
நான் அசுத்தம் இருந்ததால் அதை கழற்றி விட்டேன். நீங்கள் அசுத்தம் இருந்தால் அதை கழுவி விட்டு அதை போட்டுக் கொண்டு தொழலாம் என்று இரண்டாவதாக அந்த விளக்கத்தை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (2)
அறிவிப்பாளர் : அபூசயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவுத், எண் : 555.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதை இமாம் ரஹிம பதிவு செய்கிறார்கள்.
இதிலிருந்து என்ன நாம் தெரிந்துகொள்ள வேண்டும்? அல்லாஹு தஆலாவிற்கும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கட்டுப்படக் கூடிய தன்மை தோழர்கள் இடத்தில் முழுமையாக இருந்ததை நாம் பார்க்கின்றோம்.
அதேபோன்று ஒரே இடத்தில் தொழுகை நடந்து கொண்டிருக்கின்றது. அதில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ரசூலுல்லாஹ் எப்படி தொழுகின்றார்களோ அதுபோன்று தான் தோழர்களும் தொழுகின்றார்கள். தொழுகைக்கு முன்பு தொழுகைக்கு பின்பு என்பதெல்லாம் கிடையாது.
பொதுவாக தொழுகையில் சில அமல்களை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். ஸஹாபாக்களும் அறிந்து வைத்திருக்கின்றார்கள். தொழுகை என்றால் இந்த நேரத்தில் தொழ வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பார்கள்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையில் செருப்பை கழற்றுவதை கவனித்த ஸஹாபாக்கள் இதற்கு முன்னால் தொழுகைக்கு முன்பு காலணிகளை கழற்ற வேண்டும் என்பதை அவர்கள் இதற்கு முன்னால் அறியவில்லை.
ஆனால், அவர்கள் பொறுமையாக இருந்து ரசூலுல்லாஹ் தொழுகையை முடித்ததும் கேட்போம். ஏன் செருப்பை கழற்றினீர்கள்? இது அல்லாஹ்வுடைய கட்டளையா? என்று கேட்போம். சரி, கேட்டுவிட்டு அடுத்த தொழுகையில் நாம் செருப்பை கழற்றுவதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வோம் என்பதாக அந்த தோழர்கள் இருக்கவில்லை.
ரசூலுல்லாஹ் செருப்பை கழற்றினார்கள். அவ்வளவுதான் அங்கு விளக்கம் தேவையில்லை. அல்லாஹ்வுடைய கட்டளை வந்திருக்கும். அதனால் கழற்றியிருப்பார்கள். அதற்குப் பிறகு ரசூலுல்லாஹ்விடம் கேட்கின்றார்கள்.
நீங்கள் ஏன் செருப்பை கழற்றிநீர்கள் என்று. அதன் பின்பு விளக்கம் கூறினார்கள்; நான் கழற்றுவதற்கு காரணம் அசுத்தம் இருந்ததால். பிறகு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ரசூலுல்லாஹ் சொல்லிக் கொடுத்தார்கள்.
கண்ணியத்திற்குரியவர்களே! அந்த தொழுகையில் இருந்த அத்தனை ஸஹாபாக்களும் முதல் ஸஃப்பில் இருந்தவர்கள். நபி அவர்கள் செருப்பை கழற்றுவதை பார்க்கின்றார்கள். அதனால் அவர்கள் செருப்பை கழற்றுகின்றார்கள்.
இரண்டாவது ஸஃப்பில் இருந்தவர்கள் முதல் ஸப்பில் உள்ளவர்களுக்கு கழற்றியதை பார்த்து இவர்கள் ஏன் கழற்றுகின்றார்கள் என்று நாம் பிறகு கேட்போம் என்று அவர்கள் இருக்கவில்லை.
இவர்கள் கழற்றி இருக்கின்றார்கள் என்றால் இவர்கள் நபியைப் பார்த்திருப்பார்கள். அதனால் இவர்கள் செருப்பை கழற்றி இருப்பார்கள் என்று நினைத்து இவர்கள் செருப்பை கழற்றி விட்டார்கள். இவர்களைப் பார்த்து மூன்றாவது ஸப்பில் உள்ளவர்களும் அதனை கழற்றி விடுகின்றார்கள்.
கண்ணியத்திற்குரிய தோழர்கள் அவர்கள் ஒரு காரியத்தை செய்கின்றார்கள் என்றால் நபி செய்யாமல் அவர்கள் செய்ய மாட்டார்கள். அங்கு அறிவிற்கோ தத்துவத்திற்கோ விளக்கத்திற்கோ எந்த இடமும் இல்லை. ஏனென்றால் அங்கு அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் கட்டுப்படுவது என்பது தத்துவத்திற்கும் விளக்கத்திற்கும் மேலான ஒன்று.
கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்களுக்கு இந்த கட்டுப்படக் கூடிய தன்மை எவ்வளவு அதிகமாக இருந்தது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய செயல்களை பார்த்தீர்களென்றால், ரசூலுல்லாஹ் உடைய ஹதீஸிற்கு மாற்றமாக ரசூலுல்லாஹ் உடைய செயல்களுக்கு மாற்றமாக யார் செய்தாலும் சரி, அது சிறிய அளவாக இருந்தாலும் சரி, கடுமையாக கோபப்படுபவர்களாக இருந்தார்கள். அது தன்னுடைய பிள்ளைகளாக இருந்தாலும் சரி.
عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ أَنْ يُصَلِّينَ فِي الْمَسْجِدِ فَقَالَ ابْنٌ لَهُ إِنَّا لَنَمْنَعُهُنَّ فَغَضِبَ غَضَبًا شَدِيدًا وَقَالَ أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقُولُ إِنَّا لَنَمْنَعُهُنَّ
இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹதீஸ் அறிவித்துக் கொண்டிருக்கும் பொழுது அல்லாஹ்வுடைய அடிமைப் பெண்களை நீங்கள் மஸ்ஜிதில் இருந்து தடுக்க வேண்டாம் என்ற ஹதீஸை கூறினார்கள்.
அப்பொழுது இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மகனாரில் ஒருவர், நாங்கள் எங்களது பெண்களை தடுப்போம் என்று சொன்னார்கள்.
தனது மகனின் மீது கடுமையாக கோபம் கொண்டார்கள். சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் இருந்து ஒரு செய்தியை சொல்கின்றேன். நீ, நாங்கள் அந்த பெண்களை தடுப்போம் என்று கூறுகின்றாயா? என்று கடுமையாக கோபம் கொண்டு' மற்ற ஹதீஸ்களில் அறிவிக்கின்றார்கள்; பல நாட்கள் அந்த மகனிடத்தில் பேசாமல் இருந்தார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா,எண் : 16.
இன்று,நாம் எப்படி? நமக்கு விருப்பமான விஷயங்களில் நம்முடைய பிள்ளைகள் கட்டுப்பட்டால் விருப்பம் காட்டுவோம். நமக்கு விருப்பமான விஷயங்களில் நம்முடைய பிள்ளைகள் கட்டுப்படாவிட்டால் வெறுப்பை காட்டுவோம்.
கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள் உடைய விஷயத்தில் எப்படி இருந்தது என்றால் அல்லாஹ்விற்கு விருப்பமான விஷயங்கள் தங்களுக்கும் விருப்பமாக இருந்தன. அல்லாஹ்விற்கு விருப்பம் இல்லாத விஷயங்களை தன்னுடைய பிள்ளைகளும் ஏன் தன்னுடைய மனைவி மார்களும் செய்வதாக இருந்தால் கடுமையாக கோபம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
இப்படி ஒரு விஷயம் அல்ல,பல விஷயங்களைப் பார்க்கின்றோம்.
அபூ மஸ்ஊத் என்ற நபித்தோழர் ஒரு முறை கோபத்தில் தனது அடிமையை அடித்துக் கொண்டிருக்கிறார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சப்தமிட்டவர்களாக அவர்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
நபியின் தோற்றத்தை பார்த்த அந்த தோழர் கடுமையான பயத்தில் தனது கையில் இருந்த கம்பை அல்லது அந்த சாட்டையைக் கீழே போட்டுவிட்டு செல்கின்றார்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அந்த தோழரை பார்த்து சொல்கின்றார்கள்.
«اعْلَمْ، أَبَا مَسْعُودٍ، لَلَّهُ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَيْهِ»
இந்த ஒரு அடிமையாளர் மீது உனக்கு இருக்கும் சக்தியைவிட அல்லாஹ் உன்மீது சக்தி பெற்று இருக்கின்றான்.
இந்த வார்த்தையை கேட்ட அபூ மஸ்ஊத் (பத்ரு போரில் கலந்து கொண்ட மிகப்பெரிய ஸஹாபி) சொல்கின்றார்.
இதற்கு பிறகு எத்தனையோ அடிமைகளை போர்களில் அல்லாஹு தஆலா எனக்கு கொடுத்தான். ஆனால், நான் ஒரு நுனியளவு கூட அடிமையை அடிக்கவில்லை.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த தோழரை வாழ்க்கையில் ஒரு முறை தான் கண்டித்தார்கள். ஆனால், அந்தத் தோழர், இனி வாழ்நாளில் எந்த அடிமையையும் நான் அடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்தார். (3)
அறிவிப்பாளர் : அபூ மஸ்ஊத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1659.
நாம் என்ன செய்வோம்;அல்லாஹ்வின் தூதரே!இவர் என்ன செய்தார் தெரியுமா?நான் இவரை ஏன் அடித்தேன் என்று தெரியுமா? நான் அடித்ததை மட்டும்தானே நீங்கள் பார்த்தீர்கள்.
இன்று அப்படித்தான். ஒரு மனிதனைப் பார்த்து நீ திருந்து!என்று சொன்னால், உனக்கு தெரியுமா? இதற்கு முன்னால் என்ன நடந்தது என்று.இப்படியாக ஹதீஸ்களை கேட்கும்போதே அதற்கு கட்டுப்படக்கூடிய தன்மை என்பது நம்மில் குறைவாக இருப்பதைப் பார்க்கின்றோம்.
ஹதீஸ்கள் அவர்களிடத்தில் சொல்லப்பட்டால் கூட, அவர்கள் தங்களிடத்திலுள்ள ஒரு நியாயத்தை கூறுகின்றார்கள். தங்களுடைய தவறான செயல்களுக்கு அவர் ஒரு விளக்கத்தை கற்றுக்கொண்டு ஹதீஸ்களின் படி செயல்படுவதற்கு அவர்கள் ஒரு தாமதம் காட்டுகின்றார்கள்; தள்ளிப்போடுகிறார்கள்.
சகோதரர்களே !அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதரின் மீதும் நேசம் இருப்பதைக் காட்டுவதை விட நமது ஈமானில் குறை இருப்பதைப் பார்க்கின்றோம்.
கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்களில் ஆண்கள் மட்டுமல்ல, ஆண்களுக்கு இணையாக பெண்களும் இந்த கட்டுப்படக்கூடிய தன்மையில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சொல்லுக்கும், அல்லாஹ்வுடைய வசனங்களுக்கும் கீழ்ப்படிதலுக்குரிய விஷயங்களை கண்ணியத்திற்குரிய ஸஹாபி பெண்களும் செய்திருக்கின்றார்கள்.
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, உம்மு சலமா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்.
அன்சாரி பெண்களைப் பற்றி இந்த இரண்டு தாய்மார்களும் சொல்கின்றார்கள்; ஹிஜாபை பற்றி அல்லாஹ்வுடைய சட்டம் குர்ஆனில் இறக்கப்பட்டது.
وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ
பெண்கள் தங்களுடைய மேல் ஆடைகளில் போர்வையைக் கொண்டு போர்த்திக் கொள்ள வேண்டும். அதற்கு மேலாக ஒரு முழு ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தங்களது துப்பட்டாவை தங்கள் மேல் போட்டு மறைத்துக் கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் 24 : 31)
என்ற வசனம் இறங்கிய போது, இதைக் கேட்ட ஸஹாபாக்கள் தங்களுடைய மனைவிமார்களுக்கு இதை அறிவிக்கின்றார்கள்.
இந்த வசனம் இறங்குகின்றது. இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கேட்ட ஸஹாபாக்கள் தங்களுடைய வீட்டுப் பெண்களுக்கு இதை ஓதிக் காண்பிக்கின்றார்கள்.
இதைக்கேட்ட அன்சாரிப் பெண்கள் அனைவருமே தங்கள் வீட்டிலிருந்த பெரிய பெரிய போர்வைகளை எடுத்து, இரண்டாக கிழித்து, ஒரு பகுதியை வீட்டில் வைத்துக் கொண்டார்கள்.
இன்னொரு பகுதியை முழுவதுமாக தங்களை மறைத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். கடை தெருவில் நின்றவர்கள் ஓடோடிச் சென்றார்கள். வீட்டிற்குச் சென்று தங்களை முழுவதுமாக மறைத்துக் கொண்டு அதற்குப் பின்புதான் வெளியே வந்தார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்தச் சொல்லுக்கு கட்டுப்படுவதில் அவர்களுடைய தீவிரத்தை நாம் பார்க்கின்றோம்.
எந்த ஒரு ஸஹாபி பெண்ணிடத்திலும் மாற்றமான எந்த ஒரு செயலையும் நாம் பார்க்கவில்லை. அப்படியா? ஹிஜாப் உடைய வசனம் இறங்கி இருக்கின்றதா? அந்த ஹிஜாப் எப்படி இருக்க வேண்டும்? எந்த நேரம் அணிய வேண்டும்? இப்படியாக எந்த ஒரு எல்லா கேள்வியும் கேட்டு விட்டு, எல்லா விளக்கங்களையும் தெரிந்து விட்டு அவர்கள் அணியவில்லை.
அல்லாஹ் மறைக்க சொல்லி இருக்கின்றான். எப்படி மறைக்க சொல்லி இருக்கின்றான் என்பதை அவர்கள் எப்படி புரிந்தார்களோ அப்படியாக தீவிரம் காட்டினார்கள்.
நாம் என்ன செய்கின்றோம்? ரசூலுல்லாஹ் உடைய ஒரு ஹதீஸ் நமிடத்தில் வருமேயானால் அது நம்முடைய செயல்பாடுகளுக்கு மாற்றமாக இருந்தால் ஒருவேளை ரசூலுல்லாஹ் இதற்காக சொல்லியிருப்பார்களோ? நம்மை இது குற்றம் பிடிக்காது என்று நம்முடைய தரப்பு நியாயத்தை மட்டும் நாம் பார்ப்போம்.
இப்படியாக ஹதீஸுக்கு மாற்றமாகவே நாம் செய்வோம். ஆனால் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கட்டளை எது? என்று நாம் அதனை உடனடியாக எடுத்து செய்ய மாட்டோம்.
அந்த ஈமான் தான் உண்மையான கீழ்படிதலை காண்பிக்கின்றது.
அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஒரு சம்பவத்தை பாருங்கள்.
மதினா உடைய கடை வீதியில் அன்சாரிகள் தங்களுடைய விலை பொருட்களை காய வைக்கின்ற மைதானத்தில், அவர்கள் நடந்து செல்லும்போது உமர் அவர்களை பார்த்து நபியவர்கள் சொன்னார்கள்.
«مَا يَسُرُّنِي أَنَّ عِنْدِي مِثْلَ أُحُدٍ هَذَا ذَهَبًا، تَمْضِي عَلَيَّ ثَالِثَةٌ وَعِنْدِي مِنْهُ دِينَارٌ، إِلَّا شَيْئًا أَرْصُدُهُ لِدَيْنٍ، إِلَّا أَنْ أَقُولَ بِهِ فِي عِبَادِ اللَّهِ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا»
அபூதர்!அல்லாஹு தஆலா எனக்கு உஹதுமலை அளவிற்கு தங்கத்தை கொடுத்திருந்தாலும் மூன்றாவது நாள் மூன்றாவது இரவு வருவதற்கு முன்பாக இந்த உஹது மலை அளவு தங்கத்திலிருந்து எனக்கு ஒரு தீனாரை கூட எடுத்துக்கொள்ள மாட்டேன்.
ஆனால்,எனக்கு கடன் இருக்குமேயானால் அல்லாஹ்வுக்காக வேண்டி அந்த செல்வத்திலிருந்து வலது பக்கமாக அல்லது இடது பக்கமாக எனது பின்பக்கமாக எனது முன்பக்கமாக நான் அதிலிருந்து எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருப்பேன் என்று கூறிவிட்டு சொன்னார்கள்.
«إِنَّ الأَكْثَرِينَ هُمُ الأَقَلُّونَ يَوْمَ القِيَامَةِ، إِلَّا مَنْ قَالَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا - عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ وَمِنْ خَلْفِهِ وَقَلِيلٌ مَا هُمْ»
யார் இந்த துன்யாவில் அதிகம் செல்வம் படைத்தவர்களாக இருப்பார்களோ நாளை மறுமையில்அவர்கள்தான் அமல்களில் மிக குறைந்தவர்களாகசொர்க்கத்தின் தலைவர்களில் மிக குறைந்தவர்களாக இருப்பார்கள்.
ஆனால்,யார் தனது செல்வத்தை இப்படி இப்படியாக தனது வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் கேட்பவர்களுக்கெல்லாம் செலவழித்துக் கொண்டிருந்தாரோ அவர்களைத் தவிர மற்றவர்கள் அமல்களில் மிக குறைந்தவர்களாக இருப்பார்கள்.
அறிவிப்பாளர் : அபூதர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6444.
(செல்வம் சொத்து சுகம் என்பது நாம் மட்டும் அனுபவிப்பதற்காக கொடுக்கப்பட்டது அல்ல என்பதை ஒரு முஸ்லிம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய இந்த செல்வமானது அல்லாஹ்வின் அடியார்களுக்கு பங்கு வைப்பதற்காக எங்களிடத்தில் கொடுத்திருக்கின்றான்.உதவி கேட்பவர்களுக்காக ஏழைகளுக்காக அல்லாஹ் எங்களிடத்தில் கொடுத்திருக்கின்றான்.
அநாதைகளுக்காக கைம்பெண்களுக்காக அல்லாஹ் எங்களிடத்தில் கொடுத்திருக்கின்றான் என்பதை அறிந்து, அவர்களுக்காக யார் செலவழிக்கிறார்களோ அவர்கள்தான் அந்த செல்வத்தை சரியான வழியில் பயன்படுத்தியவர்கள். அவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருப்பார்கள்.
யார்அல்லாஹ்வுடைய ஹக்குகளில் தன்னுடைய செல்வத்தை குறைவாக செலவழித்து விட்டு, தன்னுடைய வாழ்க்கையில் செல்வத்தை அதிகமாக செலவழித்தார்களோ அவர்களைப் பற்றித்தான் அல்லாஹ்வின் தூதர் சொல்கின்றார்கள் :
அதிகமான செல்வத்தை இந்த துன்யாவில் பெறக்கூடிய மக்கள் நாளை மறுமையில் அமல்களில் மிக குறைவானவர்களாக இருப்பார்கள் என்று.)
பிறகு சொன்னார்கள்; அபூதர்! இந்த இடத்திலேயே நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். நான் வருகின்ற வரை இந்த இடத்தை விட்டு நீங்கள் கிளம்பி விடாதீர்கள் என்று சொல்லிவிட்டு நபியவர்கள் அந்த இருளில் அப்படியே கிளம்பி சென்று விட்டார்கள். எங்கே சென்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
ரொம்ப கடுமையான ஒரு உயர்ந்த சத்தத்தை நான் கேட்டபோது, நபிக்கு ஏதாவது ஒரு ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்று நான் பயந்தேன். நபியை தேடி அந்த இடத்திலிருந்து புறப்படுவதற்கு நான் தயாரானேன்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்ன அந்த கூற்று எனக்கு நினைவுக்கு வந்தது. நானாக உன்னிடத்தில் வரும் வரை நீ இங்கிருந்து எங்கும் செல்லக்கூடாது என்று அவர்கள் எனக்கு கட்டளையிட்டது எனக்கு ஞாபகம் வந்தது. எனவே நான் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடத்தில் வந்தார்கள்.
யா ரசூலல்லாஹ்! நீங்கள் சென்றதற்கு பிறகு நான் ஒரு சத்தத்தைக் கேட்டேன். உங்களுக்கு ஏதாவது நடந்திருக்குமோ என்று நான் பயந்துவிட்டேன்.
நபியவர்கள் கேட்டார்கள்; ஆம், அந்த சத்தத்தை நீ கேட்டாயா? ஆம், அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்டேன்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :
அந்த சப்தம் யாருடைய சத்தம் தெரியுமா? ஜிப்ரில் உடைய வருகையின் சத்தம்.
" ذَاكَ جِبْرِيلُ أَتَانِي، فَقَالَ: مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الجَنَّةَ، قُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ: وَإِنْ زَنَى، وَإِنْ سَرَقَ"
யார் உமது உம்மத்தில் அல்லாஹ்விற்கு இணை வைக்காமல் இறந்துவிடுவாரோ அவர் சொர்க்கம் செல்வார் என்ற நற்செய்தியை ஜிப்ரீல் எனக்கு கூறினார்.
என்று அபூதர் ரலியல்லாஹுவிடம் கூறும்போது அபூதர் ரலியல்லாஹு அன்ஹு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடத்தில் கேட்கின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதரே!அந்த மனிதர் ஜினா செய்திருந்தாலும் கூடவா? திருடி இருந்தாலும் கூடவா?
ஆம்,அந்த மனிதர் ஜினா செய்திருந்தாலும் கூட,அந்த மனிதர் திருடி இருந்தாலும் கூட அல்லாஹ் முஃமினுடைய பாவங்களை தவ்பாவின் மூலமாக மன்னிப்பான்.
அறிவிப்பாளர் : அபூதர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6444.
அவர்களுடைய ஏனைய அமல்களின் மூலமாக அல்லாஹ் மன்னிப்பான். அல்லது நரகத்தில் சிறிது நாள் தண்டனை கொடுத்து, பிறகு ஈமான் கொண்டவர்களை மன்னித்து நரகத்திலிருந்து அவர்களை கண்டிப்பாக ஒருநாள் வெளியேற்றி சொர்க்கத்திற்குள் நுழைவிக்க வைப்பான்.
இதுபோன்று, இன்னொரு ஹதீஸில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பணியாளர்களாக இருந்த அனஸ் ரழியல்லாஹுஅன்ஹுஅறிவிக்கின்றார்கள்.
ஒருமுறை, ஒரு தையல்காரர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விருந்துக்கு அழைத்தார்கள். அவர்களுடன் நானும் சென்றேன் அந்த தையல்காரர் ஒரு ரொட்டியையும் அதற்குரிய சால்னாவையும் தயாரித்து வைத்தார்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த சால்னாவில் சுரைக்காயை பார்த்தார்கள். அதைத் தேடித் தேடி அந்தப் பாத்திரத்தில் இருந்து சுரைக்காயை எடுத்து சாப்பிட்டார்கள்.
அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள். அன்றைய நாளில் இருந்து சுரக்காவை நான் மிக பிரியப்பட்டு சாப்பிட்டேன். (4)
அறிவிப்பாளர் : அனஸ்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2041.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது தோழர்கள் வைத்திருந்தது வெறும் மரியாதை மட்டுமல்ல. அல்லது அவர்களை ஒரு புனிதமாக மரியாதையாக மனதில் வைத்திருந்தது மட்டுமல்ல.
மாறாக,அந்தத் தூதரின் சொல் செயல் அனைத்தையும் ஏற்று வாழ்க்கையில் முழுமையாக ஏற்று,அந்த கட்டளைக்கு பணியக்கூடியதை நாம் பார்த்தோம்.
இன்று,நம்மிடத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பலவீனம் என்னவென்றால்,அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஆழமான அதிகமான அன்பு இருக்கிறது.சந்தேகம் இல்லை.
அல்லாஹ்வின் தூதர் அவர்களுடைய பெயரை கேட்டால் மனதில் ஒரு மதிப்பு வருகின்றது.அவர்களின் மீது உள்ளத்தில் மதிப்பு இருக்கின்றது.
ஆனால்,அவர்களுடைய அந்த மதிப்பு என்பது அந்தப் புனிதம் என்பது மனதோடு முடிந்து விடுகின்றது தவிர, அவர்களுடைய சுன்னத்தான வழிமுறைகளை நாம் எந்த அளவிற்கு பின்பற்றுகின்றோம். அதில் எந்த அளவிற்கு நாம் விரைந்து செயல்படுகின்றோம் என்பதைப் பார்த்தால் நம்மில் அதிகமானவர்கள் அதில் குறை உள்ளவர்களாக பலவீனமானவர்களாக இருக்கின்றோம்.
இன்னும் பல இடங்களில் பார்த்தால் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது வைத்திருக்கின்ற மதிப்பு மரியாதை அன்பு என்பது வெறும் சடங்குகளோடு நின்று விடுகின்றன.
வாழ்க்கையில் மாதத்திற்கு ஒரு முறை ஏதாவது சடங்குகளை செய்து விட்டால் அல்லது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரைக் கேட்டால் சிலரை நீங்கள் பார்த்திருக்கலாம் உடனே கையில் ஊதி கண்ணில் வைத்துக் கொள்வார்கள்.
இப்படி ஒரு ஹதீஸும் இல்லை.ஆனால் மக்கள் அதை நம்பி செய்கின்றார்கள். நபியின் மீது அன்பு இருப்பதை வெளிப்படுத்துவதற்காக.
இப்படி, எது எல்லாம் மார்க்கத்தில் இல்லையோ அதையெல்லாம் அனாச்சாரங்கள் சடங்குகள். இவற்றிற்கெல்லாம் அதிகமாக ஆர்வம் இருப்பதைப் பார்க்கின்றோம்.
ஆனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டிய ஸஹீஹான ஹதீஸ்கள் நடைமுறை வழிகளை பார்க்கும் பொழுது அவற்றை எடுத்து பின்பற்றுவதற்கு அவர்கள் முன்வரவில்லை. ஏன் அவற்றை தெரிந்து கொள்வதற்கே அவர்கள் விரைவதில்லை.
அல்லாஹு தஆலா ஒரு தெளிவான கட்டளையை நமக்குச் சொல்கின்றான்.
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
(நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவன், பெரும் கருணையாளன் ஆவான்.''(அல்குர்ஆன் 3 : 31)
ஆகவே, நம்முடைய தொழுகை வணக்க வழிபாடுகள், நம்முடைய கலாச்சாரம், ஏன் நமது நாம் உண்பது, உடுத்துவது, தொழில்துறை, வியாபாரம், எல்லாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வல்லம் அவர்கள் காட்டித்தந்தபடி தான் இருக்க வேண்டும். அதற்கு மாற்றமாக செய்வதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை.
சல்மான் ஃபாரிஸ் இடத்தில் ஒரு கிறிஸ்துவர் மிகப் பரிகாசமாக சொல்கின்றான். என்ன உங்களுடைய இந்த தோழர் அதிசயமாக இருக்கின்றாரே! ஒரு நபியாக இருக்கின்றார், அவருக்கு என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்லிக் கொடுக்கக் கூடாது, என்பது தெரியவில்லை. ஒரு மலம் ஜலம் கழிப்பதற்கு கூடவா ஒழுக்கத்தை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.
அவர் என்ன நினைக்கிறார்? நபி என்பவர் வெறும்இறைவழிபாட்டை போதிப்பதற்காக மட்டும், வெறும் மசூதிகளில் தொழுகை நடத்துவதற்காக மட்டும்தான். காரணம் என்ன? அவர்களுடைய நபிமார்களிடம் இருந்து அவர்களுக்கு கிடைத்தது அது தான்.
அதைக்கேட்ட சல்மான் பாரிஸ் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள், ஆம் எங்கள் தூதர் எங்களுக்கு அதையும் கற்றுக் கொடுத்தார்கள்.
நாங்கள் எப்படி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார்கள். எப்படி அமர வேண்டும் என்பதையும், எந்த திசை நோக்கி அமர வேண்டும்? எந்தத் திசையில் அமரக்கூடாது?என்பதையும் கற்றுக் கொடுத்தார்கள் என்று அதற்கு மேலதிகமாக அந்த கிறிஸ்தவரிடத்தில் சொல்லிக் காட்டினார்கள். (5)
அறிவிப்பாளர் : சல்மான் ஃபாரிஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 262.
இப்படித்தான் ஒரு முஸ்லிமுடைய அன்றாட ஒழுக்கங்கள் இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் மீசையை எப்படி வைத்திருக்க வேண்டும்? தனது நகங்களை என்றைக்கு எப்பொழுது வெட்ட வேண்டும்? தனது உடைகளை தனது உடம்பை எப்படி சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்? தனது உணவை எப்படி ஆரம்பிக்க வேண்டும்? எப்படி முடிக்க வேண்டும்? என்று அத்தனை ஒழுக்கங்களையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு போதித்து இருக்கின்றார்கள்.
இன்னும் சொல்லப்போனால் தலை முடி விஷயத்தில் கூட நமக்கு ஒழுக்கத்தை சொல்லிக் கற்ப்பித்திருக்கிறார்கள்.
தலை முடியை எப்படி சீவுவது? தலை முடியை எப்படி வெட்டுவது? என்பதற்கும் ஒழுக்கம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
«مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ»
உங்களில் ஒருவருக்கு முடி இருக்குமேயானால்அந்த முடியை அவர் சுத்தமாக சுகாதாரமாக வைத்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 4163.
தலையில் எண்ணெய் வைத்து சீவி கொள்ள வேண்டும். பரட்டையாக வைத்திருக்கக் கூடாது. தலை சீவாமல் இருக்க கூடாது.
மேலும்,வழிமுறைகளை சொன்னார்கள்; நடு வாங்கு எடுத்து அவர் சீவட்டும்.
இன்று பலர், மாற்றாரை போன்று கிராப் வைத்துக் கொள்கிறார்கள். சினிமாக்களில் சீரியல்களில் வரக்கூடியதைப் போன்று தங்களுடைய தலையை மாற்றிக் கொள்கிறார்கள்.
மேலும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தலை முடி வெட்டுவதில் ஒழுக்கத்தை சொல்லி காண்பித்தார்கள்.
ஒன்று, தலைமுடி வெட்டுவதாக இருந்தால் மொட்டை அடித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் தலைகளில் எல்லா பாகத்திலிருந்தும் சமமாக முடிகளை குறைத்துக்கொள்ளலாம். அல்லது நீண்ட முடியை கிர்தாவாக காது வரை வைத்துக் கொள்ளலாம். அல்லது புஜம் வரை வைத்துக் கொள்ளலாம். இதுதான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தலைமுடியில் காட்டிய ஒழுக்கம்.
ஒரு முஸ்லிம் மாற்றார்களைப் போன்று கிராப் வெட்டுவதை அல்லது டிசைன் டிசைன்களாக இன்று நாம் பார்க்கிறோம் அல்லவா? தலை உடைய இரண்டு பகுதிகளிலும் முடி இருக்காது. மேல் பார்த்தால் முடி இருக்கும். அல்லது மேல முடி இருக்காது, மற்ற பகுதிகளில் முடி இருக்கும்.
அல்லது ஏதோ ஒரு கோடு போட்ட மாதிரி, ரயில் உடைய இரண்டு ஃபிளாட் ஃபார்ம் போட்ட மாதிரி. எப்படி எல்லாம் தங்களுடைய முடிகளை இவர்கள் மாற்றிக் கொள்கிறார்கள்.
காரணம் என்ன, அவர்கள் சினிமாக்களில் அப்படிதான் பார்க்கின்றார்கள். அதேபோன்று தங்களை மாற்றிக்கொள்ள பார்க்கின்றார்கள். இது சாதாரணமான விஷயமல்ல.
ஒரு சமயம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கஅப் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களுடைய குடும்பத்தாரில் சில குழந்தைகளை பார்க்கின்றார்கள். தலை உடைய சில பகுதிகளில் குறைக்கப்பட்டு சிரைக்கப்பட்டு சில பகுதிகளில் முடி விடப்பட்டிருந்தது.
உடனே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த குழந்தைகளை அழைக்கின்றார்கள்.
பக்கத்தில் அமர வைக்கின்றார்கள். உடனே முடி சிரைப்பவரை கூப்பிட்டு முழுமையாக அந்த குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க சொல்கின்றார்கள். இதை சாதாரணமான விஷயமாக அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை.
நூல் : முஸ்னத் அஹ்மத்.
அடுத்து முடி வளர்ந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று அவர்கள் விடவில்லை. உடனே அதை சரி செய்வதற்கு என்ன வழி, இதனால் முஸ்லிம் சமுதாயம் எந்த வழியில் செல்லும் என்பதை தனது குடும்பத்தில் இருந்து அவர்கள் செயல்முறை படுத்தி காட்டினார்கள்.
ஆகவே, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முழுமையாக கட்டுப்படுவோமாக! அவர்கள் மீது நாம் முழுமையாக வைத்திருக்கக்கூடிய அன்பை அவர்களுடைய மார்க்கத்தின் மீது, அவர்களுக்கு கட்டுப்படுத்தக்கூடிய தன்மையின் மீது வெளிப்படுத்தி அல்லாஹ்வுடைய அன்பையும் மன்னிப்பையும் அடைய பெறுவோமாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اصْطَنَعَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَجَعَلَ فَصَّهُ فِي بَطْنِ كَفِّهِ إِذَا لَبِسَهُ فَاصْطَنَعَ النَّاسُ خَوَاتِيمَ مِنْ ذَهَبٍ فَرَقِيَ الْمِنْبَرَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ فَقَالَ إِنِّي كُنْتُ اصْطَنَعْتُهُ وَإِنِّي لَا أَلْبَسُهُ فَنَبَذَهُ فَنَبَذَ النَّاسُ قَالَ جُوَيْرِيَةُ وَلَا أَحْسِبُهُ إِلَّا قَالَ فِي يَدِهِ الْيُمْنَى (صحيح البخاري 5427 -)
குறிப்பு 2)
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَبِي نَعَامَةَ السَّعْدِيِّ عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِأَصْحَابِهِ إِذْ خَلَعَ نَعْلَيْهِ فَوَضَعَهُمَا عَنْ يَسَارِهِ فَلَمَّا رَأَى ذَلِكَ الْقَوْمُ أَلْقَوْا نِعَالَهُمْ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاتَهُ قَالَ مَا حَمَلَكُمْ عَلَى إِلْقَاءِ نِعَالِكُمْ قَالُوا رَأَيْنَاكَ أَلْقَيْتَ نَعْلَيْكَ فَأَلْقَيْنَا نِعَالَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ جِبْرِيلَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَانِي فَأَخْبَرَنِي أَنَّ فِيهِمَا قَذَرًا أَوْ قَالَ أَذًى وَقَالَ إِذَا جَاءَ أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَلْيَنْظُرْ فَإِنْ رَأَى فِي نَعْلَيْهِ قَذَرًا أَوْ أَذًى فَلْيَمْسَحْهُ وَلْيُصَلِّ فِيهِمَا (سنن أبي داود 555 -)
குறிப்பு 3)
وحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ، قَالَ: كُنْتُ أَضْرِبُ غُلَامًا لِي، فَسَمِعْتُ مِنْ خَلْفِي صَوْتًا: «اعْلَمْ، أَبَا مَسْعُودٍ، لَلَّهُ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَيْهِ»، فَالْتَفَتُّ فَإِذَا هُوَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، هُوَ حُرٌّ لِوَجْهِ اللهِ، فَقَالَ: «أَمَا لَوْ لَمْ تَفْعَلْ لَلَفَحَتْكَ النَّارُ»، أَوْ «لَمَسَّتْكَ النَّارُ» صحيح مسلم - 1659)
குறிப்பு 4)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: «دَعَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَانْطَلَقْتُ مَعَهُ فَجِيءَ بِمَرَقَةٍ فِيهَا دُبَّاءٌ، فَجَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ مِنْ ذَلِكَ الدُّبَّاءِ وَيُعْجِبُهُ»، قَالَ: فَلَمَّا رَأَيْتُ ذَلِكَ جَعَلْتُ أُلْقِيهِ إِلَيْهِ وَلَا أَطْعَمُهُ، قَالَ: فَقَالَ أَنَسٌ: «فَمَا زِلْتُ بَعْدُ يُعْجِبُنِي الدُّبَّاءُ» (صحيح مسلم - 2041)
குறிப்பு 5)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الْأَعْمَشِ، وَمَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ سَلْمَانَ، قَالَ: قَالَ لَنَا الْمُشْرِكُونَ إِنِّي أَرَى صَاحِبَكُمْ يُعَلِّمُكُمْ حَتَّى يُعَلِّمَكُمُ الْخِرَاءَةَ، فَقَالَ: أَجَلْ «إِنَّهُ نَهَانَا أَنْ يَسْتَنْجِيَ أَحَدُنَا بِيَمِينِهِ، أَوْ يَسْتَقْبِلَ الْقِبْلَةَ، وَنَهَى عَنِ الرَّوْثِ وَالْعِظَامِ» وَقَالَ: «لَا يَسْتَنْجِي أَحَدُكُمْ بِدُونِ ثَلَاثَةِ أَحْجَارٍ» (صحيح مسلم -262)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/