அல்லாஹ்வின் அன்பைப் பெற 10 வழிகள் - அல்குர் ஆன் | Tamil Bayan - 318
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
அல்லாஹ்வின் அன்பைப் பெற 10வழிகள் - அல்குர் ஆன்
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்0கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரியவர்களே!!அல்லாஹு தஆலா அவன் படைத்த படைப்பினங்களில் சிறந்த படைப்பாக மனிதனை படைத்தான். இந்த மனிதனைப் படைத்ததோடு கல்பு என்ற ஒன்றை அல்லாஹு ரப்புல் ஆலமீன் படைத்திருக்கிறான். இந்தக் கல்பிலே அல்லாஹு தஆலா என்ன விரும்புகிறான் என்றால் இந்த அடியான் அந்தக் கல்பை கொண்டு படைத்த அல்லாஹ்வை நேசிக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.
அல்லாஹ்வுடைய முஹப்பத் இந்த உள்ளத்திலே இருக்கவேண்டிய பண்புகளில் மிகச் சிறந்த பண்பு, அல்லாஹ்வை நேசிப்பது. அந்த நேசத்தை நாம் உணர்வது. அல்லாஹ்வின் மீது நாம் வைக்கக்கூடிய அந்த அன்பை குறித்து ஏராளமான குர்ஆன் வசனங்கள் இருக்கின்றன. ஏராளமான நபிமொழிகள் அல்லாஹ்வுடைய ரசூல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய கூற்றுகள் இருக்கின்றன.
மனிதன் உலகத்திலே தன்னை சார்ந்து இருப்பவர்களை, உறவினர்களை இப்படி பல படைப்புகளை நேசித்துக் கொண்டிருக்கிறான். சில நேரங்களில் தான் வளர்க்கக்கூடிய பிராணிகளை கூட அவன் நேசிக்கிறான். தான் பயன்படுத்தும் பொருட்களைக் கூட நேசிக்கிறான். இப்படி நேசிப்பவர்களில் பலர் அல்லாஹ்வின் நேசத்தை உணராமல் இருப்பது, தன்னை படைத்த இறைவனை நேசிக்காமல் இருப்பது இதைவிட பெரிய கைசேதம் உலகத்தில் ஒன்றும் கிடையாது.
கண்ணியத்திற்குரியவர்களே!! அல்லாஹ்வின் மீது நாம் வைக்கக்கூடிய அன்பை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். இதற்கு உலகத்தையே நாம் விலையாக கொடுத்தாலும் அல்லாஹ்வின் மீது நாம் அன்பு வைப்பதற்கு நாம் உலகத்தில் வைத்துள்ள செல்வத்தை மட்டுமல்ல, இந்த முழு உலக செல்வத்தை அல்லாஹ் நமக்கு கொடுத்து இருந்து, அந்த செல்வத்தை எல்லாம் நாம் அல்லாஹ்வின் பாதையில் செலவழித்தாலும் அல்லாஹ் உனக்கு கொடுக்கக்கூடிய வாழ்க்கை அனைத்தையும் அல்லாஹ்வின் மீது அன்பை நம் உள்ளத்தில் ஏற்படுத்துவதற்காக செலவு செய்து அல்லாஹ்வின் மீது அன்பு வைத்தல் என்ற தன்மையை நாம் அடைந்து கொள்வோமானால், அன்புக்குரியவர்களே! நாம் இழந்தது ஒன்றுமே இல்லை.
ஏனென்றால் அதற்குப் பிரதிபலனாக நாம் அடைந்தது என்ன?? அல்லாஹ்வுடைய அன்பு. இது ஒரு சாதாரணமான விஷயம் அல்ல. இன்று முஸ்லிம்களில் பலருக்கு இந்த உணர்வே இல்லாமல் வாழ்வதை பார்க்கின்றோம்.
ஆகவேதான் மார்க்கத்தில் அவர்களுக்கு ஈடுபாடு இல்லை. அல்லாஹ்வின் சட்டத்தை அவர்கள் மதிப்பதில்லை. அல்லாஹ்வின் பக்கம் அழைக்கப்பட்டால் புறமுதுகு காட்டுகிறார்கள். முகம் திருப்பிக் கொள்கிறார்கள். அல்லாஹ்வின் சட்டம் நினைவூட்டப்பட்டால் அவர்கள் முகம் சுளிக்கிறார்கள், வெறுக்கிறார்கள்.
காரணம் என்ன? அல்லாஹ்வின் மீது அன்பை அவர்கள் உள்ளத்தில் கொண்டு வரவில்லை. இங்கு ஒரு நிகழ்வை நினைவுபடுத்துவது மிக முக்கியம் சகோதரர்களே.
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பதிவு செய்கிறார்கள். அனஸ் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். நானும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்
மஸ்ஜிதில் இருந்து வெளியேறி கொண்டிருந்தபோது,
حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَمَا أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَارِجَانِ مِنْ الْمَسْجِدِ فَلَقِيَنَا رَجُلٌ عِنْدَ سُدَّةِ الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَعْدَدْتَ لَهَا فَكَأَنَّ الرَّجُلَ اسْتَكَانَ ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا أَعْدَدْتُ لَهَا كَبِيرَ صِيَامٍ وَلَا صَلَاةٍ وَلَا صَدَقَةٍ وَلَكِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ قَالَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ(صحيح البخاري 6620 -)
மஸ்ஜிதின் வாசலுக்கு அருகே எங்களை ஒரு மனிதன் சந்தித்தார். ஒரு மனிதன் என்று இங்கு கூறுவதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம்; ஸஹாபாக்களுக்கு மத்தியிலே ஒரு அறிமுகம் இல்லாத ஒரு மனிதன் வந்தால் அவர் ஒரு புதிய மனிதன், அறிமுகம் இல்லாதவர் என்று புரிய முடிகிறது.அந்த மனிதர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துரிதமாக வெளியேறிக் கொண்டிருப்பதை பார்த்து, எதிர்பாராமல்,
அல்லாஹ்வின் தூதரே! மறுமை எப்பொழுது வரும்? கியாமத் நாள் எப்பொழுது நிகழும்? என்று கேட்கிறார்.நீ அந்த மறுமைக்காக என்ன செய்து வைத்திருக்கிறாய்? அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படி கேட்டவுடன்,
அந்த மனிதர் என்ன கூறுவது என்று தெரியாமல் அந்த அடியான் பலவீனம் அடைந்து விட்டான்; பணிந்து விட்டான்; முகம் தாழ்த்தி விட்டான்; என்ன பதில் சொல்வது என்று அவருக்குத் தெரியவில்லை. எப்படிப்பட்ட ஒரு கேள்வி, நீ என்ன அமல் செய்து வைத்திருக்கிறாய்?? அதற்கான தயாரிப்பு என்ன செய்து வைத்திருக்கிறாய்?அந்த விசாரணைக்கு நீ என்ன செய்து வைத்திருக்கிறாய்?அந்தக் கேள்விக்கு அந்த மனிதன் அப்படியே நடுங்கி பணிந்து விடுகிறான். அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமான தொழுகைகளையோ, அதிகமான நோன்புகளையோ, அதிகமான தர்மங்களையோ நான் செய்து இருக்கவில்லையே. ஒன்று மட்டும்தான் நான் வைத்திருக்கிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விரும்புகிறேன்.அல்லாஹ்வின் மீது எனக்கு முஹப்பத் இருக்கிறது. அல்லாஹ்வின் தூதர் மீது எனக்கு முஹப்பத் அதிகம் இருக்கிறது.
கண்ணியத்திற்குரியவர்களே!! இங்கே ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். நபியின் மீது யாராவது பொய் கூறினால் உடனே அல்லாஹு ரப்புல் ஆலமீன் அதை வெளிப்படுத்தி விடுவான்.
உள்ளத்தில் ஒன்று வைத்துக்கொண்டு நாவில் ஒன்று கூறினால் உடனே அல்லாஹ், தூதரே! இவர் சொல்வது பொய்; இவர் உள்ளத்தில் வேறொன்று இருக்கிறது; இவர் நாவினால் வேறொன்றை சொல்கிறார். என்று அல்லாஹ் வெளிப்படுத்தி விடுவான். ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் யாருமே பொய் பேச முடியாது.
இந்த தோழர் கூறுகிறார், அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் நேசிக்கிறேன். அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸலாம் கூறுகிறார்கள்.
أَنْتَمَعَمَنْأَحْبَبْتَ
நீ யாரை நேசித்தாயோ அவரோடு மறுமையில் இருப்பாய் என்று அந்தத் தோழருக்கு சொன்னார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 6620
கண்ணியத்திற்குரியவர்களே!! இன்று நம்மிடம் யாராவது வந்து நீ உண்மையாக யாரை நேசிக்கிறாய்? உன் உள்ளத்தில் உண்மையாக யார்மீது முஹப்பத் இருக்கிறது? என்று கேட்டால், நமக்கு இந்த வார்த்தையை சொல்ல தகுதி இருக்கிறதா??என்ன அன்பை நாம் உணர்ந்து இருக்கிறோம். இதே ஹதீஸை புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி 3412பதிவு செய்கிறார்கள். அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மேலதிகமான ஒரு கூற்றையும் சேர்த்து பதிவு செய்திருக்கிறார்கள்.
அதிலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பணிவிடை செய்து; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினாவுக்கு நுழைந்ததில் இருந்து அவர்கள் மரணிக்கும் வரை நபி அவர்களுக்கு பயணத் தோழராக நபி அவர்களுக்கு வீட்டு பணியாளராக;. நபி அவர்களிடத்தில் கல்வியை கற்று; நபிக்கு பணிவிடை செய்வதையே தன் திருப்தியை கண்ட, தன் தாயைப் பிரிந்து தந்தையைப் பிரிந்து முழு வாழ்க்கையையும் அற்ப்பணித்த அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்.
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُأَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ السَّاعَةِ فَقَالَ مَتَى السَّاعَةُ قَالَ وَمَاذَا أَعْدَدْتَ لَهَا قَالَ لَا شَيْءَ إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَمَا فَرِحْنَا بِشَيْءٍ فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ (صحيح البخاري 3412 -)
நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களுடன் மறுமையில் இருப்பாய் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் அல்லவா, இதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியை போன்று வேறு எதனாலும் எங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதே இல்லை; என்று கூறிய அனஸ் ரலியல்லாஹு அன்ஹு மேலும் கூறுகிறார்கள். நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களை நேசிக்கிறேன் அபூபக்கரை நேசிக்கிறேன் உமரை நேசிக்கிறேன்.
எனவே நான் ஆதரவு வைக்கின்றேன். நான் அவர்களை நேசிப்பதால் நிச்சயமாக அவர்களோடு நான் மறுமையில் இருப்பேன் என்று; அவர்களைப் போன்று அமல்களை நான் செய்யவில்லை என்றாலும்.
அவர்களுடைய செயல் அவர்களுடைய சொல்லை உண்மைப்படுத்தியது. ஆனால் நம்முடைய செயல் நம்முடைய சொல்லை உண்மைப்படுத்துமா???
பிலால் ரலியல்லாஹு அன்ஹு மரணத்தருவாயில் இருக்கிறார். மனைவி அழுகிறார். சிரித்துக் கொண்டே கூறுகிறார்கள்.
غدا نلقى الأحبة محمدا وحزبه
நான் என்னுடைய நேசர்களை சந்திக்கப் போகிறேன். முஹம்மதையும் முஹம்மதுடைய தோழர்களையும்;
மரணத்தருவாயில் மனைவி மக்கள் அழுது கொண்டிருக்க பிலால் சிரிக்கிறார்கள்;எதனை நினைத்து சிரிக்கிறார்? யாருடைய பிரிவால் அழுதுகொண்டு இருந்தாரோ, யாருடைய பிரிவு அவரை மதீனாவை விட்டு தூரமாக்கியதோ, அந்த பிலால் மரணத்தருவாயில் சிரிக்கிறார். நான் நாளை என்னுடைய தோழர்களை சந்திக்கப் போகிறேன். முஹம்மதையும் முஹம்மதுடைய தோழர்களையும்.
இப்படி அல்லாஹ்வுடைய அன்பைக் குறித்து ஏராளமான ஹதீஸ்கள் இருக்கின்றன. இந்த நேரத்திலே இங்கே நாம் ஒன்றை பார்க்க இருக்கிறோம். அது என்ன? நாம் அல்லாஹ்வை நேசிப்பது போன்று அல்லாஹ்வும் நம்மை நேசிக்க வேண்டும்.
يُحِبُّهُمْوَيُحِبُّونَهُ
அல்லாஹ் அப்படித்தான் சொல்கிறான்.உண்மையான மூமின்களை அல்லாஹ்வும் நேசிப்பான்;அவர்களும் நேசிப்பார்கள். )அல்குர்ஆன் 5:54(
அப்படி அல்லாஹ் நம்மீது முஹப்பத் வைக்க வேண்டுமென்றால்,அதற்க்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆய்வுசெய்து இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி தங்களுடைய நூல் மதாரிஜுஸ் ஸாலிஹீன் என்ற நூலிலே ஒரு பத்து விஷயங்களை சொல்கிறார்கள்.
அல்லாஹ் நம் மீது நேசம் வைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்.
அல்லாஹ்வின் மீதுள்ள அன்பை நம் உள்ளத்தில் கொண்டு வரவேண்டும்.
அப்படி கொண்டு வந்து நாம் முழுமைப்படுத்தும் போது அவனுடைய அன்பை நமக்கு தருகிறான். அல்லாஹ்வுடைய அன்பை அடைவதற்குரிய முக்கியமான ஒன்று.
قراءة القران بتدبر و بتفهم لمعانيه
நீங்கள் அல்லாஹ்வுடைய அன்பை அடைவதற்கு அல்லாஹ்வின் வேதத்தை கொஞ்சம் சிந்தனையோடு, ஆய்வோடு அதை சிந்திப்பதோடு குர்ஆனை படியுங்கள். எப்படி ஒரு அடியான் பரிச்சைக்கு தயாராகுவதாக இருந்தால் புத்தகத்தை எடுத்துக்கொண்டு அதை எப்படி மனப்பாடம் செய்வானோ; எப்படி விளக்கமாக, விரிவாக ஆய்வு செய்து; அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று ஒரு திறந்த கண்ணோட்டத்தோடு சிந்தித்துப் பார்த்து படித்து புரிவானோ, அதைவிட அதிகமாக குர்ஆனின் வசனங்களை சிந்தியுங்கள்.
அல்லாஹ் இந்த வசனத்தை கொண்டு எதை நமக்கு நாடி இருக்கிறான்? இதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? என்ன நமக்கு போதிக்கிறது? என்று இரவு பகலாக சிந்தித்து, புரிந்து, அதை அமல் செய்வதில் கவனம் செலுத்துங்கள்.
அல்லாஹ் உங்களை நேசிப்பான்.
فمن احب ان يكلمه الله فليقرء كتاب الله
அல்லாஹ் உங்களிடம் பேச வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அல்லாஹ்வின் வேதத்தை ஓதுங்கள். அல்லாஹ் உங்களோடு பேச வேண்டும் என்று விரும்பினால் அல்லாஹ்வின் வேதத்தை நீங்கள் ஓதுங்கள்.
ஹசன் பசரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகிறார்கள் பாருங்கள்.
قال الحسن البصري رحمه الله تعالى: إن من كان قبلكم رأوا القرآن رسائل من ربهم، فكانوا يتدبرونها بالليل وينفذونها بالنهار
நமது முன்னோர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இருந்தும் அவர்களுடைய தோழர்களின் காலத்தில் இருந்தும் தூரமாக இல்லை.அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வம்சத்தில் வந்தவர்கள் சொல்கிறார்கள்; நமக்கு முன்னால் வந்தவர்கள் தமது இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட கடிதமாக பார்த்தார்கள்.
எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று அல்லாஹ் மூலம் கொடுக்கப்பட்ட கடிதமாக பார்த்தார்கள். அதனால் குர்ஆனின் வசனங்களை கவனமாக இரவிலே ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். பகலிலே இந்தக் குர்ஆனின் படி நடந்து கொண்டிருந்தார்கள்.
இரவை, குர்ஆனை தொழுகையில் ஓதுவதற்கு தொழுகையில் வெளியில் ஓதுவதற்கு அதை சிந்திப்பதற்கு படிப்பதற்கு இரவை பயன்படுத்தினார்கள். பகலில் அதில் சொல்லப்பட்ட சட்டங்கள், வியாபாரமாக இருக்கட்டும், குடும்பமாக இருக்கட்டும், ஏனைய விஷயங்களாக இருக்கட்டும், குர்ஆனில் உள்ள படி அவர்கள் நடந்தார்கள். யாரைக் குறித்து சொன்னார்கள்? ஸஹாபாக்களை குறித்து. கண்ணியத்திற்குரிய இந்தத் தாபியீன்கள் குறித்து.
இவ்வாறு இமாம் இப்னு ஜவ்ஸி கூறுகிறார்கள்
நாமும் இன்று குர்ஆன் ஓதுகிறோம்? அதை எப்படி ஓத வேண்டும்? ஒழுக்கத்தோடு ஒதுகிறோமா? இமாம் ஜவ்ஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுவதைப் பாருங்கள். ஒரு மனிதன் குர்ஆனை எடுத்து ஓதும் பொழுது அவன் சிந்திக்க வேண்டும், உணர வேண்டும். அல்லாஹு தஆலா தன்னுடைய பேச்சின் அர்த்தங்களை, கருத்துகளை அடியாரின் சிந்தனைக்கு தகுந்தவாறு அவர்களின் புரிதலுக்கு தகுந்தவாறு அவர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதிலே, அவற்றை இறக்குவதிலே எப்படி நுட்பமாக மென்மையாக நடந்து இருக்கிறான். அல்லாஹ் அதில் எந்த ஒரு விஷயத்தையும் மூடல் ஆக்கவில்லையே! நாம் புரியாத அளவிற்கு சிரமம் ஆக்கவில்லையே!
தெளிவான சட்டங்களால் தெளிவான வசனங்களால் மிக அழகிய உபதேசங்களால் அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனுடைய வேதத்தை எனக்கு கொடுத்து இருக்கிறானே, நாம் ஓதுவது மனிதர்களின் வார்த்தை அல்ல.
என்னிடத்திலே அல்லாஹ் பேசுகிறான். அவனுடைய மகத்துவத்தை உள்ளத்திலே கொண்டு வரவேண்டும். அல்லாஹ் என்னோடு பேசுகிறான் என்னுடைய ரப்பு உடைய கலாமை நான் ஓதுகிறேன் என்ற சிந்தனையோடு உணர்வோடு குர்ஆனை ஓதுங்கள். இமாம் நவவி (ரஹ்) சொல்கிறார்கள்.
اول ما يجب علي القارئ ان يستحضر في نفسه انه مناج الله
நமது மஸ்ஜிதுகளில் கூடகுர்ஆன் ஓதுவதற்கு சட்டம் வைத்திருக்கிறார்கள். எதை நமது முன்னோர்கள் சொன்னார்களோ கல்விமான்கள் சொன்னார்களோ அதை விட்டுவிட்டார்கள். எதற்கு ஆதாரமே இல்லையோ அதைப் பிடித்துக் கொண்டார்கள்.மஸ்ஜிதுக்கு வந்தால் ஒருவருடைய முதுகுக்குப் பின்னால் குர்ஆன் ஓதாதீர்கள்; நீங்கள் குர்ஆன் ஓதும் பொழுது கால் நீட்டாதீர்கள்; குர்ஆனை மடியில் வைத்து ஓதாதீர்கள்; சாய்ந்துகொண்டு குர்ஆன் ஓதாதீர்கள்; கடைசிச் சஃப்பில் உட்கார்ந்து ஓதாதீர்கள்; என்று பல சட்டங்களை போட்டு மக்களை குர்ஆன் ஓதுவதில் இருந்தே தடுத்து வைத்திருக்கிறார்கள்.
அப்படித்தானே பார்க்கிறோம் மஸ்ஜித் உடைய முன் சஃப்பில் மட்டும் குர்ஆன் இருக்கும் ஒருவர் குர்ஆன் ஓத வேண்டுமென்றால் முன் சஃப்பில் தான் ஓத வேண்டும்; அப்படி பின்னால் வந்து விட்டால் குர்ஆன் எடுத்துக்கொண்டு கிப்லாவை முதுகைத் திருப்பிக் கொண்டு ஓதுவார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
மஸ்ஜிதில் கஅபாவை பார்த்து இபாதத் செய்யக்கூடிய இடத்திலே இவர்களாக ஒரு சட்டத்தை ஆக்கிக்கொண்டு முதுகுக்குப் பின்னால் குர்ஆன் ஓதக் கூடாது என்று கஅபாவின் பக்கம் முதுகை திருப்பிக்கொண்டு ஓதுகிறார்கள். யார் இவற்றை சொன்னது? இந்த சட்டங்களை இயற்றியது?
இந்தக் குர்ஆனை எப்படி ஓத வேண்டும் என்ற சட்டத்தை யார் சொல்லிக் கொடுப்பது?
இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி கூறுகிறார்கள்;
குர்ஆனை ஓத ஆரம்பிக்கும்போது மனதில் என்ன எண்ணம் வரவேண்டும்? நான் அல்லாஹ்வுடன் பேச தயார் ஆகிறேன்.
அதை உள்ளத்திலே கொண்டு வாருங்கள். இதைத்தானே அல்லாஹ் சொல்கிறான். ஒரு அடியான் தொழுகைக்கு நின்று சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதும்போது அவன் என்னிடத்தில் பேசுகிறான் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ் கூறுவதாக கூறுகிறார்கள்.
நமது முன்னோர்கள் அதை எப்படி ஓதி அல்லாஹ்வுடைய அன்பை பெற்றார்கள் என்றால் குர்ஆனை நாம் ஓத ஆரம்பிக்கும் பொழுது நான் அல்லாஹ்வோடு பேசுகிறேன் என்ற எண்ணத்தில் ஓத வேண்டும்.
அல்லாஹ் என்னோடு இப்போது பேசப் போகிறான் என்ற உணர்வோடு ஆரம்பிக்க வேண்டும்.
இன்று பெரும்பாலானவர்கள் குர்ஆனை முடிக்க கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் குர்ஆனை சிந்திப்பதில் கவனம் செலுத்துவதில்லை. அதற்காக குர்ஆனை ஓதவே வேண்டாம் என்று சொல்லவில்லை சகோதரர்களே. குர்ஆனின் வார்த்தைகளை வசனங்களை ஓத ஆர்வமுள்ளவர்கள் அதை புரிவதற்கும் ஆர்வம் கொள்ள வேண்டும்; அதன் சட்டங்களை புறிவதற்கும் ஆர்வம் கொள்ள வேண்டும்; சில பேர் தெரியாமல் இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? பயம் அவர்களுக்கு. அவர்கள் குர்ஆனை ஹிதாயத்திற்காக ஓதவில்லை.
பரக்கத்திற்காக ஓதுகிறார்கள்; குர்ஆன் ஓதினால் காரியங்கள் இலகுவாகும்; கண்டிப்பாக இலகுவாகும். ஓதினால் ரிஸ்க் உடைய பரக்கத் கிடைக்கும்; கண்டிப்பாக கிடைக்கும்.
ஓதினால் இந்த உலகத்துடைய வாழ்வாதாரங்களை அல்லாஹ் லேசாக்கி வைப்பான்; கண்டிப்பாக வைப்பான். ஆனால் அதற்கு மட்டுமா குர்ஆன்? இல்லையே! அல்லாஹு தஆலா குர்ஆனின் முதல் நோக்கமாக ஹிதாயத்தை நேர்வழியை அல்லாஹ் சொல்கிறான்.
شَهْرُرَمَضَانَالَّذِيأُنْزِلَفِيهِالْقُرْآنُهُدًىلِلنَّاسِوَبَيِّنَاتٍمِنَالْهُدَىوَالْفُرْقَانِ
ரமழான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)து என்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருகுர்ஆன் (என்னும்வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் 2 : 185)
هُدًىلِلنَّاسِ
மக்களுக்கு வழிகாட்டியாக. (அல்குர்ஆன் 2 : 2)
நீ எதை செய்யவேண்டும்? எதை செய்யக்கூடாது? எதைப் பார்க்க வேண்டும்? எதைப் பார்க்க கூடாது? எங்கே போகவேண்டும்? எங்கு போக கூடாது? உங்களது வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை சட்டங்களையும், குடும்பம், தொழில் துறை, பொருளாதாரம் அத்தனைக்கும் கூடும், கூடாதவை எல்லாவற்றிற்கும் குர்ஆனை கொடுத்து வழிகாட்டியாக இறக்கி இருக்கிறான்.
அப்ப வெறும் பரக்கத்திற்காக ஓதுபவர்கள் அந்த குர்ஆனை சிந்திக்க மாட்டார்கள். ஏன் தெரியுமா?தான் செய்யக்கூடிய செயலை அது தடுத்து விட்டால், ஹராமான செயலை தடுத்து விட்டால் என்ற பயம். நான் செய்யாத ஒரு செயல் அந்த குர்ஆனில் சொல்லப்பட்டிருந்தால் என்ன செய்வது? இப்படி பரக்கத்திற்காக ஓதுபவர்களில் பலர் குர்ஆனை ஆழ்ந்து ஆராய்ந்து சிந்திப்பதில்லை. காரணம் என்ன? உங்களது செயலை இந்த குர்ஆன் கண்டித்து விடுமோ!
கண்ணியத்திற்குரியவர்களே! சஹாபாக்கள் எப்படி குர்ஆனை ஓதினார்கள்? கண்ணியத்திற்குரிய அவர்கள் குர்ஆனோடு வாழ்ந்தவர்கள் குர்ஆனை எப்படி பார்த்தார்கள்? ஒவ்வொருவரும் அவருடைய மனநிலைக்கு ஏற்ப எப்படி ஈடுபட்டார்கள் பாருங்கள்.
அன்றாடம் ஓதும் ஒரு சூரா.மக்கள் சில சடங்குகளுக்காகவே அந்த சூராவை வைத்திருக்கிறார்கள். சடங்குகளுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளாக சில புத்தகங்களை வைத்திருப்பார்கள். அவர்களுடைய வீட்டில் கதம் ஓதுவதற்காக யாராவது இறந்துவிட்டால், அல்லது விசேஷங்களுக்கு, அல்லது அன்றாடம் இதைமட்டும் செய்துவிட்டால் போதும். இஸ்லாத்திலே வேறு ஏதும் செய்வதற்காக ஒன்றுமில்லை. அல்லது குர்ஆனிலே வேறு பகுதியே இல்லை. அதற்காக பிரித்து தொகுத்து வைத்திருப்பார்கள். அதை மட்டுமே ஓதுவார்கள். எதற்காக அந்த சூராக்களை அல்லாஹ் இறக்கினான்?
சூரத்துல் இக்லாஸ் சூரத்துல் நாஸ், சூரா யாசின், சூரத்துல் ஃபலக், ஸூரத்துல் காஃபிரூன் என்ற இப்படிப்பட்ட சூராக்களை வெறும் சடங்குகளுக்கு மட்டுமே வைத்திருக்கிறார்கள். இவர்கள் குர்ஆனை மகிமைப்படுத்தி விட்டார்கள் என்று எண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் தான் குர்ஆனை கேவலப்படுத்துகிறார்கள்.
குர்ஆனை கிழிக்கப் கூடியவன் எப்படியோ,குர்ஆனின் பிரதிகளை அவமதிக்க கூடியவன் எப்படியோ, அவனுக்கும் இவனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
யூதர்கள் எப்படி தங்களது சடங்குகளுக்காக மட்டுமே வேதத்தை ஆக்கிக் கொண்டார்களோ அப்படித்தான் முஸ்லிம்களில் இந்த கூட்டமும் தாயத்துகளுக்காக தகடுகளுக்காக குர்ஆனை அச்சாரமாக எழுத்துக்களாக ஆக்கி, குர்ஆனை கால்களிலும், கைகளிலும், இடுப்பிலும், கழுத்துகளிலும், கடைகளிலும் தொங்க விடுவதற்காக ஆக்கிகிறார்களே இவர்களுக்கும் யஹூதிகளுக்கும் என்ன வித்தியாசம்?
சஹாபாக்களுடைய உணர்வைப் பாருங்கள்.
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பதிவு செய்திருக்கிறார்கள்;
அம்ரா பின்த் அப்துர்ரஹ்மான் சொல்கிறார்கள்; இவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வளர்ப்பில் வளர்ந்தவர்கள்;
حَدَّثَهُ عَنْ أُمِّهِ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ وَكَانَتْ فِي حَجْرِ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ رَجُلًا عَلَى سَرِيَّةٍ وَكَانَ يَقْرَأُ لِأَصْحَابِهِ فِي صَلَاتِهِمْ فَيَخْتِمُ بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ فَلَمَّا رَجَعُوا ذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ سَلُوهُ لِأَيِّ شَيْءٍ يَصْنَعُ ذَلِكَ فَسَأَلُوهُ فَقَالَ لِأَنَّهَا صِفَةُ الرَّحْمَنِ وَأَنَا أُحِبُّ أَنْ أَقْرَأَ بِهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبِرُوهُ أَنَّ اللَّهَ يُحِبُّهُ (صحيح البخاري 6827 -)
முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் ஒரு சிறு படையை அனுப்பினார்கள். அதற்கு ஒருவரை தளபதியாக ஆக்கினார்கள். யாரை பொறுப்பாளராக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஆக்குகிறார்களோ அவர்கள் தான் தொழுகை நடத்த வேண்டும். அந்த சஹாபி தங்களது தோழர்களுக்கு தொழுகை வைக்கும்பொழுது ஒவ்வொரு ரக்அத்திலும் சூரத்துல் பாத்திஹாவையும் பிறகு மற்றொரு சூராவையும் ஓதி விட்டு, சூரத்துல் இக்லாஸ் ஓதுவார்கள். அதற்குப் பிறகுதான் அவர்கள் ருகூஃ செய்வார்கள். எந்த தொழுகையாக இருந்தாலும் சரி, அதாவது சத்தமாக ஓதக்கூடிய தொழுகையாக இருந்தாலும் சரி, அல்லது மௌனமாக தொழக்கூடிய தொழுகையாக இருந்தாலும் சரி. அப்படித்தான் அவருடைய வழக்கமாக இருந்தது.
அதற்குப்பிறகு சஹாபாக்கள் பயணத்திலிருந்து திரும்பிய பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் பயணத்தில் நடந்த விஷயங்களை பரிமாறிக் கொண்ட பொழுது இந்த விஷயத்தையும் குறிப்பிட்டுச் சொன்னார்கள். நபியவர்களே சல்லல்லாஹு அலைஹிவசல்லம் நீங்கள் யாரை எங்களுக்கு அமீராக நியமித்தீர்களோ அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தும் பொழுது ஒவ்வொரு தொழுகையிலும் சூரத்துல் இக்லாசை ஓதிய பிறகுதான் ருகூஃ செய்துகொண்டிருந்தார்.
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். அவரிடத்திலே காரணம் கேளுங்கள்.
இங்கு ஒன்றைப் புரியவேண்டும் சகோதரர்களே!
ஒருவருடத்தில் இருந்து ஒரு நிகழ்வை புரிய வேண்டுமென்றால் அதற்கான காரணத்தை ஆராய வேண்டும். நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் அவரிடத்திலே இதற்கான காரணம் கேட்க சொன்னார்கள்.
அந்த சஹாபி ஒரு வார்த்தை சொன்னார்கள்;
لِأَنَّهَا صِفَةُ الرَّحْمَنِ
சூரத்துல் இக்லாசில் அந்த ரப்புல் ஆலமீன் அவனுடைய பண்புகளை சொல்கிறான். அல்லாஹ் ஒருவன் தான்; அனைத்திலும் அவன் ஒருவன் தான் உலகத்தை படைத்து பரிபாலிப்பதிலும் அவன் ஒருவன்தான் என்னை பரிபாலிப்பவன் அவன் ஒருவன் தான்; நான் நம்பிக்கை வைப்பதற்கு தகுதியானவனும் அவன் ஒருவன் தான்; கேட்பதற்கு தகுதியானவன் அவன் ஒருவன் தான்; ஆதரவு வைப்பதற்குத் தகுதியானவன் அவன் ஒருவன் தான்;
அவன் ஒருவன் என்பதோடு எத்தனை சிஃபத்துக்கள் வேண்டுமானாலும் நாம் சேர்க்கலாம்; உலகப் படைப்புகள் எல்லாம் இரட்சிப்பதற்கு அவன் ஒருவன் தான்; உலக மக்களுக்கெல்லாம் உணவளிப்பதற்கு அவன் ஒருவன் தான்; மக்களெல்லாம் மரணித்த பிறகு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புபவனும் அவன் ஒருவன்தான்;
படைத்தவன் அவன் ஒருவன் தான்; வானங்களை படைத்தவன் அவன் ஒருவன் தான்; இந்த பிரபஞ்சங்களில் நாம் பார்த்தவை பார்க்காதவை எல்லாத்தையும் படைத்தவனும் அவன் ஒருவன் தான்; கேட்டவை கேட்காதவை வெளிரங்கமாக தெரிந்தவை தெரியாதவை அனைத்தையும் படைத்தவன் அவன் ஒருவன் தான்.
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
اَللّٰهُ الصَّمَدُ
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
لَمْ يَلِدْ ۙوَلَمْ يُوْلَدْ ۙ
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
وَلَمْ يَكُنْ لَّهٗكُفُوًا اَحَدٌ
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல்குர்ஆன் : 112 : 1-4)
எப்படி உணர்ந்திருப்பார்கள் இந்த வாசகத்தை; எத்தனை முறை சிந்தித்து இருந்தால் இப்படி உணர்ந்திருப்பார்கள்; எப்படி நினைத்திருந்தால் இந்த சூரா உடைய முஹப்பத் அவர் உள்ளத்தில் உறைந்திருக்கும்;
அவர் சொல்கிறார்; நான் இந்த சூராவை ஓத விரும்புகிறேன். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் அந்த தோழர் சொன்ன சொல் அமானிதமாக ஒப்படைக்கப்படுகிறது.
நபி அவர்கள் உடனே சொல்கிறார்கள்;
أَخْبِرُوهُأَنَّاللَّهَيُحِبُّهُ
சொல்லுங்கள்; அல்லாஹ் அவரை நேசிக்கிறான். அல்லாஹ் நம்மை நேசிக்க வேண்டுமென்றால் அல்லாஹ்வுடைய சிஃபத்தை, கலாமை நாம் நேசிக்க வேண்டும்; அதைப் புரிந்து ஓதவேண்டும்; படிப்பதில் அதன் கருத்துக்களை தெரிந்து கொள்வதில் அல்லாஹ்வுடைய அடியார் இடத்தில் கொண்டு போய் சேர்ப்பதில் பக்கம் மக்களை அழைப்பதிலே எந்த அளவு ஆர்வமும் ஈடுபாடும் இருக்கிறதோ அந்த அளவு அல்லாஹ்வின் நேசத்தை அடையலாம்.
கண்ணியத்திற்குரிய சஹாபாக்களை பாருங்கள்; இன்னொரு வசனத்தையும் எவ்வளவு சிந்தித்தார்கள். அபுதர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
ஒருமுறை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் சூரத்துல் மாயிதா உடைய 118வது வசனத்தை
إِنْتُعَذِّبْهُمْفَإِنَّهُمْعِبَادُكَوَإِنْتَغْفِرْلَهُمْفَإِنَّكَأَنْتَالْعَزِيزُالْحَكِيم
நாளை மறுமையில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் பேசக்கூடிய அந்த உரையாடலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குர்ஆனிலிருந்து இரவிலே ஆரம்பித்தவர்கள் சுபுஹ் நேரத்தில் அதான் கொல்லப்படும் நேரம்வரை இந்த வசனத்தை தான் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டே இருந்தார்கள்.
ஆகவே நீ அவர்களை வேதனை செய்தால் அவர்கள் உன்னுடைய அடிமைகள்; யாரும் கேட்க முடியாது. நீ மன்னித்தால்,அவர்களித்திலே உள்ள தவ்ஹீதை தக்வாவை வைத்து அவர்களை மன்னித்தால் நீயோ மகா மிகைத்தவன். உன்னை யாரும் கேட்க முடியாது. (அல்குர்ஆன் 5 : 118)
ஹகீம் –ஞானவான். உனது மன்னிப்பாக இருக்கட்டும் அல்லது தண்டனையாக இருக்கட்டும், கண்டிப்பாக அதில் ஒரு ஞானம் இருக்கும்
இந்த வசனத்தை அல்லாஹ்வுடைய தூதர் இரவிலிருந்து காலைவரை ஓதி கொண்டு இருந்தார்கள் என்றால் நாம் புரியாத எத்தனையோ விஷயங்களை அவர்கள் புரிகிறார்கள். இன்று சடங்கு சம்பிரதாயத்திற்காக மேலோட்டமாக குர்ஆனை படித்துவிட்டு தூக்கிப் போட்டு விடுகிறார்கள். இப்படியா குர்ஆன் ஓதப்படுவது?
தமீமுத்தாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மாணவர்கள் அறிவிக்கிறார்கள்; தமீமுத்தாரி ரலியல்லாஹு அன்ஹு சூரத்துல் ஜாசியா உடைய இருபத்தி ஒன்றாவது வசனத்தை இரவெல்லாம் ஓதிக் கொண்டிருந்தார்கள்.
أَمْحَسِبَالَّذِينَاجْتَرَحُواالسَّيِّئَاتِأَنْنَجْعَلَهُمْكَالَّذِينَآمَنُواوَعَمِلُواالصَّالِحَاتِسَوَاءًمَحْيَاهُمْوَمَمَاتُهُمْسَاءَمَايَحْكُمُونَ
எவர்கள் பாவத்தைத் தேடிக்கொண்டார்களோ அவர்களை, நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களைப் போல்நாம் ஆக்கிவிடுவோம் என்றுஎண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அவர்கள் உயிருடன் இருப்பதும் அவர்கள் இறந்து விடுவதும் சமமே. அவர்கள் (இதற்குமாறாகச்) செய்துகொண்டமுடிவு மகா கெட்டது. (அல்குர்ஆன் 45: 21)
தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாலிபத்தை கொடுக்கப்பட்ட செல்வத்தை தனக்கு கொடுக்கப்பட்ட அறிவை கொடுக்கப்பட்ட வாழ்நாளை அவனை நம்பிக்கை கொள்வதிலும் அவன் இயற்றிய சட்டத்தை ஏற்று நடப்பதிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு வாழ்க்கை நடத்தியவர்களும், அல்லாஹ்வை மறந்தவர்கள்,அல்லாஹ்வை புறக்கணித்தவர்கள்,சட்டங்களைப் படிக்காதவர்கள்,தெரியாதவர்கள்,மன இச்சையிலே வாழ்க்கை வாழ்ந்தவர்கள் இரு கூட்டத்தாரும் அல்லாஹ் சமமாக்கி விடுவானா? கண்டிப்பாக ஆக்க மாட்டான். என்ற பொருளுடைய இந்த வசனத்தை இரவெல்லாம் ஓதி கொண்டிருந்தார்கள் என்றால் எப்படி அவர்களுடைய வாழ்க்கையை குர்ஆனோடு ஒத்துப் பார்த்திருப்பார்கள்? தங்களை இந்த வசனத்தோடு சுயபரிசோதனை செய்திருப்பார்கள் பாருங்கள்.
இப்படி நாம் எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு முறையும் குர்ஆனைப் படிக்கும் பொழுது அதிலிருந்து ஒரு வசனத்தை வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
நான் இந்த குர்ஆன் வசனத்தோடு என்ன சம்பந்தம் வைத்திருக்கிறேன்? குர்ஆன் வசனம் எனது வாழ்க்கையில் என்ன மாற்றம் கொண்டு வந்திருக்கிறது? நான் செய்யாத ஒன்றை இந்த குர்ஆன் வசனத்தால் செய்து கொண்டிருக்கிறேனா? என்னிடத்தில் இருக்கக்கூடிய தவறை குர்ஆன் வசனத்தை கொண்டு நான் திருத்தி இருக்கிறேனா?என்று ஆழ்ந்து குர்ஆனோடு சிந்தித்து பார்த்தால் கண்ணியத்திற்குரியவர்களே
குர்ஆனுடைய மகத்துவம் தெரியவரும்; இந்தக் குர்ஆனை நமக்கு இறக்கிய அல்லாஹ்வுடைய மகத்துவம் தெரியவரும் சகோதரர்களே.
அல்லாஹ்வுடைய அன்பை அடையலாம். அல்லாஹ் உடைய வேதத்தை ஓதி படித்து அதன் மூலம் அல்லாஹ்வின் அன்பை பெறக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக! ஆமீன்.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/