HOME      Khutba      அல்லாஹ்வின் அன்பைப் பெற 10 வழிகள் - நஃபில் வணக்கங்கள் | Tamil Bayan - 319   
 

அல்லாஹ்வின் அன்பைப் பெற 10 வழிகள் - நஃபில் வணக்கங்கள் | Tamil Bayan - 319

           

அல்லாஹ்வின் அன்பைப் பெற 10 வழிகள் - நஃபில் வணக்கங்கள் | Tamil Bayan - 319


بسم الله الرحمن الرّحيم
 
அல்லாஹ்வின் அன்பைப் பெற பத்து வழிகள் - நஃபில் வணக்கங்கள்
 
 
 
إِنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ 
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا 
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا 
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
 
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் பயத்தையும் அச்சத்தையும் எனக்கும் உங்களுக்கும் நினைவு படுத்தியவனாக ஆரம்பம் செய்கிறேன். 
 
 
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வை பயந்து கொண்டவர்கள் இம்மையிலும் வெற்றி அடைவார்கள்; மறுமையிலும் வெற்றி அடைவார்கள். அல்லாஹ்வை பயப்படக் கூடியவர்கள்தான் அவனுக்கு மிக நெருக்கமானவர்கள் ஆவார்கள்.
 
 
 
அல்லாஹ்வை பயப்படக் கூடியவர்களுக்கு நாளை மறுமையில் விசாரணை இலகுவாக்கப்பட்டு வலது பக்க கூட்டத்திலே அவர்கள் சேர்க்கப்படுவார்கள்; மிக இலகுவாக அவர்கள் சொர்க்கம் செல்வார்கள் .
 
 
 
கண்ணியத்திற்குரியவர்களே!  அல்லாஹ்வை நாம் நேசிக்க வேண்டும். அல்லாஹ்வின் அன்பிற்கு நம் உள்ளத்தில் முதலிடம் தர வேண்டும் என்பதை நாம் பேசும்போது நாம் அல்லாஹ்வை நேசிப்பதைப் போன்று, நாம் அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பது போன்று அல்லாஹ்வும் நம்மீது அன்பு வைக்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்திலே எதிர்பார்க்க வேண்டும்.
 
 
 
அல்லாஹ்வின் அன்பை நாம் தேட வேண்டும்; அதற்காக நாம் துஆ செய்ய வேண்டும். அல்லாஹ் நம் மீது அன்பு வைக்க வேண்டுமென்றால், அல்லாஹ்வின் பாசம் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு தகுதி உடையவர்களாக நாம் இருக்க வேண்டும்.
 
 
 
நாம் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும் என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நமது நேசம் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வுடைய நேசம் நமக்கு கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும்.
 
 
 
மனிதர்களுக்கு நாம் செய்யும் உபகாரங்களுக்கு பதிலாக நாம் பிரதி உபகாரம் எதிர்பார்க்க கூடாது. ஆனால், அல்லாஹ்வின் விஷயத்தில் அப்படியல்ல.
 
 
 
நாம் தொழுகிறோமென்றால், யா அல்லாஹ்! இந்த தொழுகையை நீ ஏற்றுக் கொண்டு எனக்கு உன் மன்னிப்பைத் தா! நீ நல்லவர்களுக்கு வாக்களித்த சொர்க்கத்தை தா! என பிரதிபலனை, கூலியை எதிர்பார்த்தவர்களாக நாம் செய்ய வேண்டும்.
 
 
 
அப்படிப்பட்ட வணக்கத்தைத்தான் அல்லாஹ் எதிர்பார்க்கிறான். அல்லாஹ்வின் முகத்தை நாம் நாட வேண்டும்; அவனது பொருத்தத்தை நாட வேண்டும்; அல்லாஹ்விடத்தில் அமல்களின் நற்கூலியை நாடவேண்டும்; அதைத் தேடவேண்டும்; அதை எதிர்பார்க்க வேண்டும். 
 
 
 
இப்படி அல்லாஹ்வின் மீது நாம் வைக்கும் நேசத்திற்கு, யா அல்லாஹ்! நான் உன்னை நேசிக்கிறேன், உன் நேசத்தை எனக்குத் தா! என நாம் வேண்டும்போது அந்த நேசத்திற்கு தகுதி உடையவர்களாக நாம் இருக்கிறோமா, அப்படிப்பட்ட அமல்களை நாம் செய்கிறோமா, என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
 
 
 
அல்லாஹ் நம்மை நேசிப்பதற்கு உரிய அமல்கள் என்ன, அதற்குரிய காரியங்கள் என்ன என நாம் பார்க்கும்போது அல்லாஹ்வின் வேதமாகிய அல் குர்ஆனை ஓதுவது, அதை அதிகம் சிந்திப்பது, அல் குர்ஆனுடன் உள்ளத்தால் ஆழ்ந்த தொடர்புடன் இருப்பது என்பதை நாம் முன்னர் பார்த்தோம். 
 
 
 
இந்த ஜுமுஆவிலே இன்னும் சிலவற்றை பார்ப்போம். 
 
 
 
இப்னு கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள்:  1
 
 
 
التقرب إلى الله بالنوافل بعد الفرائض فإنها توصله إلى درجة المحبوبية بعد المحبة
 
 
 
ஃபர்ழான கடமைகளுக்கு பிறகு நஃபில் உபரியான அமல்களைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்குதல். நஃபிலான வணக்கங்கள் அல்லாஹ் நம்மை நேசிக்கின்ற தகுதிக்கு கொண்டுபோய் சேர்க்கும் நாம் அவனை நேசித்துக்கொண்டு இருந்த பின்னர்.
 
 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நாம் அவனை நெருங்குவதற்கு நமக்கு சில அமல்களை கட்டாய கடமையாக்கி விட்டான். கண்டிப்பாக, குறைந்தபட்சம் அந்த அமல்களை ஒவ்வொரு முஸ்லிமும் செய்தாக வேண்டும். அவைதான் இஸ்லாமுடைய ஐந்து கடமைகள். ஐந்து நேர தொழுகை, ரமழான் மாத நோன்பு, ஸகாத் கடமையானவர்களுக்கு ஸகாத், ஹஜ் கடமையானவர்களுக்கு ஹஜ் என்று ஒரு முஸ்லிம் கட்டாயம் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. அவற்றை செய்ததற்கு பிறகு தனது சக்திக்கு ஏற்ப உபரியான நஃபிலான வணக்க வழிபாடுகளை அதிகப்படுத்த வேண்டும்.
 
 
 
மக்களில் சிலர், நான் கடமையான அமல்களை செய்து விட்டேன், இதற்கு மேல் எனக்கு தேவை இல்லை, இதற்கு மேல் நன்மையை தேட வேண்டிய அவசியம் இல்லை என நஃபிலான வணக்கங்களை அலட்சியம் செய்வதை நாம் பார்க்கிறோம். இவ்வாறு இருப்பது அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கமாக்கி வைக்காது.
 
 
 
இவ்வாறானவர்கள் பொதுவான முஸ்லிம் என்ற  தரஜாவை வேண்டுமானால் அடைந்து விடலாமே தவிர, தனக்கு நெருக்கமான ஒரு கூட்டம் இருக்கிறார்கள் என்று அல்லாஹ் சொல்கிறானே அந்த நெருக்கமான, விசேஷமான அல்லாஹ்வின் அன்பை அடைந்த கூட்டத்தில் இவர்கள் ஆக முடியாது.
 
 
 
அல்லாஹ்வின் நெருக்கம் வேண்டும் என்றால் அதற்காக தம்மை வருத்தி, சிரமம் எடுத்து, நேரம் ஒதுக்கி நஃபிலான வணக்க வழிபாடுகளில் நாம் ஆர்வம் கொள்ள வேண்டும்.
 
 
 
‎அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா ஹதீஸ் குத்ஸியில் சொல்வதை பாருங்கள். 2
 
 
 
அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 
 
 
 
إنَّ اللَّهَ قالَ مَن عادَى لي ولِيًّا فقَدْ آذَنْتُهُ بالحَرْبِ
 
யார் எனது நேசத்திற்குரியவர்களோடு பகைமை கொள்கிறானோ அவனிடத்தில் நான் போருக்காக அறிவிப்பு செய்கிறேன்.
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா, நூல்: புகாரி, எண்: 6502   
 
 
 
அல்லாஹ்விற்கு நெருக்கமான நல்லடியார்களோடு நேசம் கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும். அவர்களின் அன்பை தேடுவதும் அல்லாஹ்வின் அன்பை தேடுவதில் உள்ள ஒரு அம்சம் ஆகும் . 
 
 
 
அல்லாஹ்வின் நல்லடியார்களை ஏசுவது, அவர்களுக்கு தொந்தரவு தருவதை அல்குர்ஆனில் அல்லாஹ் கடுமையாக அல்லாஹ் கண்டிக்கின்றான். 3
 
 
 
وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ
 
அவன் மீது நான் கட்டாயக் கடமையாக்கிய ஃபர்ளுகளை செய்வதைவிட எனக்கு மிக விருப்பமான வேறு ஒரு அமலைக் கொண்டு அடியான் என்னிடத்திலே நெருக்கமாக முடியாது.
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா, நூல்: புகாரி, எண்: 6502    
 
 
 
ஃபர்ழுகளில் மிக முக்கியமானது தொழுகையை ஆகும். அதை நாம் பேண வேண்டும். 
 
 
 
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى
 
பொருள்: எல்லாத் தொழுகைகளையும் குறிப்பாக, மிக உயர்வான தொழுகையும் பேணுங்கள்! (அல் குர்ஆன் 2 : 238)
 
 
 
وَالَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ يُحَافِظُونَ
 
பொருள்: அவர்கள் தங்கள் தொழுகையை பேணி நிறைவேற்றுவார்கள். (அல் குர்ஆன் 70 : 34)
 
 
 
முஃமின்கள் தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள் என அல்லாஹு தஆலா மேற்குறிப்பிட்ட வசனத்தில் கூறுகிறான். 
 
 
 
தொழுகைகளை பேணுவது என்றால், அதன் நேரங்களை கவனத்தில் கொள்வது; நேரம் தவறாமல் தொழுவது; ஜமாஅத் தொழுகையை ஆண்கள் சரியாக பேணுவது; பிறகு முதல் சஃப்பில் – முதல் வரிசையில், தக்பீர் தஹ்ரமாவுடன் தொழுவது. இன்னும், அதுபோன்று தொழுகையில் கூறப்படுகின்ற குர்ஆன் வசனங்கள் மற்றும் திக்ருகளை மன ஓர்மையோடு ஓதுவது ஆகும்.
 
 
 
பலர் தொழுகையில் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால் தாம் எதை ஓதுகிறோம் என்ற நினைவே இல்லாமல் அவர்கள் ஓதுவார்கள் .
 
 
 
நிலையிலே, ருகூவிலே, சுஜுதிலே அல்லாஹ்வை திக்ர் செய்வார்கள். ஆனால் தாம் ஓதுகின்ற திக்ருகளுக்கு என்ன பொருள் என்றும் தெரியாது. அதில் நினைவும் கவனமும் இருக்காது. நாவு சில சப்தங்களைக் கொண்டு அசைந்து கொண்டிருக்கும்.
 
 
 
இப்படித்தான் பல தொழுகையாளர்களின் தொழுகை இருப்பதை காண்கிறோம்.
 
 
 
தொழுகையை பேணுவதில் மேற்கூறப்பட்ட விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
 
 
அதைப்போன்று ஸகாத்தை எடுத்துக் கொண்டால், ஒரு முஸ்லிம் மீது ஸகாத் கடமையாகி விட்டால் அரபி மாத கணக்குப்படி ஒரு பொருள் தன்னிடம் வந்ததிலிருந்து ஓர் ஆண்டு காலத்தை சரியாக குறிப்பு வைத்து, அந்த ஸகாத்தின் தொகையை மிகச் சரியாக ஒரு சில்லறை காசுகளை கூட விட்டுவிடாமல் அதற்கு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
 
 
 
சிலர் ஸகாத் கொடுப்பது என்றால் என்ன நினைக்கிறார்கள்? அதாவது, சில்லரை காசுகளை மாற்றி வைத்துக்கொண்டு, அல்லது மட்டமான துணிகளை வாங்கி வைத்து, அதை தன் வீட்டில் வரிசையில் நிற்கும் மக்களுக்கு கொடுத்து விட்டால் தமது ஸகாத் நிறைவேறி விட்டதாக எண்ணுகிறார்கள் . 
 
 
 
அப்படியல்ல சகோதரர்களே! செல்வத்திற்கென்று ஸகாத்திருக்கிறது. தங்கம் வெள்ளிக்கு ஸக்காத் இருக்கிறது. ஆடு, மாடுகளுக்கு என்று ஸகாத் இருக்கிறது.
 
 
 
இவ்வாறு எவற்றுக்கெல்லாம் ஸகாத் கடமையாக இருக்கிறதோ அந்த பொருளை அதற்கு தகுதியானவர்களிடம் கொடுப்பதுதான் ஸகாத்தே தவிர, யாசகம் கேட்டவர்களிடம் நாம் கொடுக்கக்கூடிய அந்த சின்ன தொகைகள் ஸகாத் ஆகாது. அது உபரியான ஸதகாவாகத்தான் ஆகும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
 
 
 
இப்படி நோன்பு கடமையாக இருக்கிறது. ஹஜ் கடமையாக இருக்கிறது.
 
 
 
இப்படியான ஃபர்ழான கடமைகளை சரியாக, பேணுதலுடன் செய்ய முயற்சி செய்ய வேண்டும். அந்த கட்டாய கடமைகளில் அலட்சியம் செய்வது ஒரு அடியானின் ஈமானை அடியோடு தகர்த்துவிடும். ஒரு மனிதன் தொழுகையை விடுகிறான் என்றால், அது தனக்கு கடமை என தெரிந்தும் அதை விடுவானே என்றால் அவன் இஸ்லாத்தை விட்டே வெளியேறி விடுகிறான்.
 
 
 
அவ்வாறு ஸகாத் கடமை என தெரிந்து, அதை விட்டுவிட்டால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான்.
 
 
 
அவ்வாறு ஹஜ் கடமை என தெரிந்து தகுந்த காரணமில்லாமல் ஹஜ் செய்யாமல் அலட்சியம் செய்தால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான்.
 
 
 
இப்படி ஃபர்ளுகளில் அலட்சியம் செய்வது அவனை மார்க்கத்தை விட்டு வெளியேற்றி விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
 
 
அல்லாஹு தஆலா தன்னை நெருங்குவதற்கு மிகச் சிறந்த வழியாக, உங்கள் மீது நான் கடமையாக்கிய கடமைகளை சரியாக செய்யுங்கள் என்று கூறுகிறான்.
 
 
 
அதற்குப் பின் அல்லாஹ் கூறுகிறான்:
 
 
 
وما يَزالُ عَبْدِي يَتَقَرَّبُ إلَيَّ بالنَّوافِلِ حتَّى أُحِبَّهُ 
 
எனது அடியான் என்னை நெருங்கிக் கொண்டே இருக்கிறான், நான் அவனுக்கு கடமையாக்காத உபரியான வணக்கங்கள் மூலமாக. இறுதியாக நான் அவனை நேசிக்கின்றேன்.
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா, நூல்: புகாரி, எண்: 6502   
 
 
 
நஃபிலான வணக்க வழிபாடுகளை செய்வதன் மூலமாக அடியான் என்னை நெருங்கிக் கொண்டே இருக்கிறான். உதாரணமாக ஃபர்ழான தொழுகைக்கு முன் பின்னுள்ள சுன்னத்தான தொழுகையை தொழுவது; உளூவின் காணிக்கை தொழுகை; மஸ்ஜிதின் காணிக்கை தொழுகை; தஹஜ்ஜத் தொழுகை; ழுஹா தொழுகை.
 
 
 
இப்படிப்பட்ட நஃபிலான தொழுகைகளை நிறைவேற்ற வேண்டும்.
 
 
 
அல்லாஹ்வும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டித் தந்திருக்கும் உபரியான நல்லமல்களை நாம் அதிகம் செய்ய வேண்டும். 
 
 
 
அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தராத எதுவும் வணக்க வழிபாடுகளாக ஆகாது. உபரியான வழிபாடுகளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு காண்பித்து கொடுத்து விட்டார்கள்.
 
 
 
இன்று பலர் என்ன செய்கிறார்கள் என்றால், உபரியான வணக்க வழிபாடுகளாக தாங்களே சில வணக்க வழிபாடுகளை ஏற்படுத்தி விடுகிறார்கள். உபரியான வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு இபாதத்தை எந்த நேரத்தில் செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்று கூறி இருக்கிறார்களோ அதே போன்றுதான் அந்த இபாதத்தை செய்ய வேண்டும்.
 
 
 
உதாரணமாக, ஹஜ்க்கு செல்லும்போது அல்லது உம்ராவிற்கு செல்லும்போது அங்கு ஹஜ், உம்ராவை முடித்து விட்டு, மினா மற்றும் அங்கு உள்ள வேறு இடங்களை சுற்றிப் பார்ப்பதற்கு ஹாஜிகளை வழிகாட்டிகள் அழைத்துச் செல்வார்கள்.
 
 
 
ஹஜ் காலங்களில் அந்த இடங்களை சரியாக பார்க்க முடியாது என்பதால் அதை பார்ப்பதற்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு செல்லும் பலர் என்ன செய்வார்கள் என்றால், ஹஜ் அல்லாத நேரங்களில் அங்கு அமர்ந்து துஆ கேட்டுக் கொண்டிருப்பார்கள். நஃபில் தொழுகைகளைத் தொழுது கொண்டிருப்பார்கள். இவ்வாறு செய்வது நபியவர்கள் காட்டித்தராத ஒன்றாகும்.
 
 
 
நஃபில்தானே என்று ஒருவர் தான் விரும்பிய நேரத்தில், தான் விரும்பிய இடத்தில் ஒரு அமலை செய்யலாமா என்றால் அது பித்அத் ஆகிவிடும். அவ்வாறு செய்யக்கூடாது. 
 
 
 
அரஃபாவில் தங்குவது, துஆ கேட்பது என்றால் அதற்கு ஒரு நேரத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
 
 
 
மினாவில் தங்குவது என்றால் அதற்குரிய நேரத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் காட்டித் தந்து இருக்கிறார்கள்.
 
 
 
அதைத்தவிர தான் விரும்பிய நேரங்களில் சென்று அங்கு அமல்கள் செய்வது கூடாது.
 
 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ‎ அவர்கள் கூறினார்கள் : 4
 
مَن أحدَث في أمرِنا ما ليس فيه فهو رَدٌّ
 
நமது மார்க்கத்தில் அதில் இல்லாத ஒன்றை (-நாம் கற்றுத் தராத ஏதேனும் ஒன்றை) ஒருவர் செய்வாரேயானால் அது அவரிடமிருந்து நிராகரிக்கப்பட்டு விடும்.
 
அறிவிப்பாளர்: ஆயிஷா, நூல்: புகாரி, எண்: 2697 
 
 
 
வணக்கங்கள் என மக்கள் அவர்களாகவே பல வணக்க வழிபாடுகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். இவ்வாறு செய்வது கூடாது. அது மறுக்கப்பட வேண்டிய ஒன்று. அது ஏற்றுக்கொள்ளப்படாது. ஆதலால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னென்ன வணக்க வழிபாடுகளை செய்திருக்கிறார்கள், கற்றுத் தந்திருக்கிறார்கள் என்று தெரிந்து அவற்றை மட்டுமே செய்ய வேண்டும் .
 
 
 
ரமழானிலே கியாமுல்லைல் தொழுகிறோம்; ரமழான் அல்லாத மாற்ற மாதங்களில் இரவிலே தஹஜ்ஜத் தொழுகை தொழுகிறோம். இது அல்லாஹ்வுக்கு மிகப் பிடித்தமான தொழுகை. இப்படி உபரியான வணக்க வழிபாடுகளில் ஆர்வம் கொள்ள வேண்டும். இது நமக்கு சிரமமாக இருக்கும். அந்த சிரமத்தை தாங்கி போராடும்போதுதான் அல்லாஹ்வின் நெருக்கத்தை நாம் பெறமுடியும்.
 
 
 
அதேபோல் ஸகாத் என்ற கட்டாயக் கடமை உள்ளது. ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டிய கடமையான ஸகாத்தை தவிர உபரியான தான தர்மங்கள் செய்வது, தேவையுடையவர்களுக்கு கொடுப்பது, கைகால் முடமாணவர்களுக்கு கொடுப்பது என இப்படிப்பட்ட உபரியான தர்மம் கொடுப்பதன் மூலம் அல்லாஹ்வின் நெருக்கத்தை அடையலாம்.
 
 
 
சிலர் என்ன செய்கிறார்கள், தங்களுடைய கடமையை மட்டும் நிறைவேற்றிவிட்டு உபரியான தர்மங்களில் அவர்கள் ஆர்வம் காட்டுவது கிடையாது.
 
 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வதை பாருங்கள்: அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நீங்கள் செய்யக்கூடிய ஒரு தர்மம் அது குறைவாக இருந்தாலும் அல்லாஹு தஆலா அதை மதிக்கிறான். 
 
 
 
وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَىٰ حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا 
 
பொருள் : அவர்கள் உணவின் பிரியம் இருந்து அதை ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் கைதிகளுக்கும் வழங்குவார்கள். நாங்கள் உங்களுக்கு அல்லாஹ்வின் முகத்திற்காக உணவளிக்கின்றோம். உங்களிடம் நாங்கள் கூலியையோ நன்றியையோ எதிர்பார்க்கவில்லை (என்று கூறுவார்கள்). (அல்குர்ஆன் 76 : 8,9)
 
 
 
நீங்கள் ஒரு தர்மத்தை செய்தால் அது ஒரு ரூபாயாக இருந்தாலும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி, அதை யாருக்கு கொடுக்கிறோமோ அந்த ஏழையின் மீது நேசம் கொண்டவராக அவர்களை அலட்சியம் செய்யாமல் கொடுக்க வேண்டும். அந்த செல்வத்தின் மீது நாம் நேசம் கொண்டு இருந்தபோதிலும் அதை அழகாக மனமுவந்து கொடுக்க வேண்டும்.
 
 
 
கேட்டு வந்தவர் மீது வெறுப்பு கொள்ளாமல், எனக்கு ஒரு நன்மை கிடைப்பதற்கு அல்லாஹ் இவரை ஒரு காரணமாக வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொடுக்க வேண்டும்.
 
 
 
நமக்கு நன்மை கிடைப்பதற்கு ஒருவர் காரணமாக இருந்தால் அவர் விரும்பப்பட வேண்டியவரா, அல்லது வெறுக்கப்படவேண்டியவரா என நாம் சிந்தித்து, அவர் விரும்பப்பட வேண்டியவர் என்பதை நாம் உணர வேண்டும்.
 
 
 
அல்லாஹ் ஒருவருக்கு நம்மிடத்தில் தேவை ஏற்படுத்தி இருப்பது போன்று, நம்மிடம் கேட்க வந்த அவரிடம் நாம் சென்று அவருடைய கதவைத் தட்டி நாம் உதவி கேட்க வேண்டி வந்திருந்தால் எவ்வாறு இருக்கும் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 
 
 
இவ்வாறு அல்லாஹு தஆலா தனது ஒரு அடியாரின் தேவையை நிறைவேற்ற நம்மை தேர்ந்தெடுத்து அந்த அடியானை நம் வீட்டிற்கே வரச் செய்து இருக்கிறான் என்றால் அதை நாம் நல்லமுறையில் உணர்ந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை அல்லாஹ் எனக்கு தந்திருக்கிறான் என்று வந்தவரின் மீது நேசம் கொண்டவராக கொடுக்க வேண்டும்.
 
 
 
கொடுக்கப்படும் தர்மம் சிறிய அளவே இருந்தபோதிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் இவ்வாறு கொடுக்கும் தர்மத்தை அல்லாஹ் தனது வலது கரத்தில் வாங்கிக் கொள்கிறான்.  பிறகு அதை அல்லாஹ் வளர்க்கிறான். எவ்வாறு என்றால், உங்களில் ஒருவருக்கு ஒரு குதிரை இருந்து, அதற்கு குட்டி பிறந்தால் அந்தக் குதிரைக் குட்டியை எப்படி பாசமாக அக்கறையுடன் வள்ப்பாரோ அவ்வாறு அல்லாஹ் இந்த ஸதகாவை வளர்க்கிறான். நாளை மறுமையில் அவர் அதை பார்க்கும் பொழுது ஒரு பெரிய மலையை விட பெரியதாக அந்த தர்மம் காட்சியளிக்கும். 5
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா, நூல்: திர்மிதி, எண்: 662, தரம் – ஸஹீஹ்
 
 
 
கண்ணியத்திற்குரியவர்களே! இப்படி உபரியான தர்மங்கள் அல்லாஹ்வை நாம் நெருங்குவதற்கு உரிய காரணமாக அமையும்.
 
 
 
கண்ணியத்திற்குரியவர்களே!
 
 
 
وما يَزالُ عَبْدِي يَتَقَرَّبُ إلَيَّ بالنَّوافِلِ حتَّى أُحِبَّهُ 
 
“அடியான் நற்செயல்களை செய்து என்னை நெருங்கிக் கொண்டே இருக்கிறான்.”
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா, நூல்: புகாரி, எண்: 6502
 
 
 
ஒவ்வொரு உபரியான செயல்களை செய்யும்போதும் அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடி நான் செய்கிறேன் என்று செய்ய வேண்டும். அல்லாஹ்வின் முகத்தை நாடி நான் செய்கிறேன் என்ற உணர்வோடு நாம் செய்ய வேண்டும்.
 
 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களது மரணத்தருவாயில் தங்கள் தோழர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அவர்களிடம் கூறினார்கள்: உங்களில் ஒருவர் எனக்கு உபகாரம் செய்து இருந்தால் அதை கூறட்டும். அதற்குரிய பிரதிபலனை நான் தருகிறேன். உங்களில் யாராவது ஒருவர் எனக்கு நன்மை செய்து இருந்தால் அதைவிட அதிகமான ஒன்றை நான் உங்களுக்கு செய்திருக்கலாம். உங்களில் எனக்கு நன்மை செய்தவருக்கு எல்லாம் நான் கூலி கொடுத்து விட்டேன் ஆனால் அபூபக்ரைத் தவிர.  அபூபக்ருக்கு அல்லாஹ்தான் நிறைவான கூலி கொடுப்பான் என கூறினார்கள். (6)
 
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், நூல்: புகாரி, எண்: 642
 
 
 
நபி மேலும் கூறினார்கள் :
 
 
 
فإنَّ اللهِ تَعَالَى قَدِ اتَّخَذَنِي خَلِيلًا، كما اتَّخَذَ إبْرَاهِيمَ خَلِيلًا، ولو كُنْتُ مُتَّخِذًا مِن أُمَّتي خَلِيلًا لَاتَّخَذْتُ أبَا بَكْرٍ خَلِيلًا،
 
 
 
நிச்சயமாக அல்லாஹ் என்னை உற்ற நண்பனாக எடுத்துக் கொண்டான், இப்ராஹீமை உற்ற நண்பனாக அவன் எடுத்துக் கொண்டது போன்று. எனது உம்மத்தில் இருந்து ஒருவரை உற்ற நண்பராக நான் எடுபவனாக இருந்தால் நான் அபூபக்ரை உற்ற நண்பனாக எடுத்துக் கொள்வேன். 7
 
 
 
அறிவிப்பாளர்: ஜுன்துப் இப்னு அப்துல்லாஹ் அல்பஜலி, நூல்: முஸ்லிம், எண்: 532
 
 
 
அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்கை வரலாற்றில் ஒரு சம்பவத்தை பாருங்கள். மக்காவிலே இருக்கும்பொழுது அடிமையான முஸ்லீம்களில் யாரையெல்லாம் காஃபிர்கள் அடிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என்று பார்த்து அந்த பலவீனமான அடிமைகளை தேடிச்சென்று வாங்கி அவர்களை உரிமை விட்டு விடுவார்கள். 8
 
 
 
அந்த காலத்தில் அடிமைகள் என்பது மிகப்பெரிய சொத்தாகும். அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பலவீனமான அடிமைகளாய் வாங்குகிறார்கள்; இஸ்லாமிற்காக துன்புறுத்தப்பட்ட அடிமைகளை வாங்குகிறார்கள்; பின்பு அவர்களை உரிமை விட்டுவிடுகிறார்கள்.
 
 
 
அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை கூறுகிறார்கள்: மகனே நீ பலவீனமான அடிமைகளை அதிகம் விலை கொடுத்து வாங்குகிறாய். அவர்களை உன் தேவைக்கு பயன்படுத்தலாம் அல்லவா? அவர்களை கொண்டு பொருள் ஈட்டலாம் அல்லவா? அவ்வாறு செய்யாமல் அவர்களை உரிமை விட்டு விடுகிறாய். நீ பலமான அடிமைகளை வாங்கியிருந்தால் கூட அவர்களை நீ உரிமை இட்டபின் பிற்காலத்தில் உனக்கு ஏதும் ஒரு தேவை இருக்குமானால் அவர்கள் உனக்கு உதவி செய்வார்கள். அப்படியில்லாமல் நீ பலவீனமான அடிமைகளை வாங்கி உரிமை இட்டுக் கொண்டு இருக்கிறாயே என்று கூறியபோது அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “தந்தையே! இந்த அடிமைகளை நான் வாங்குவதும், அவர்களை உரிமை விடுவதும் அல்லாஹ்வின் முகத்திற்காகவே தான். நாளை மறுமையில் நரக நெருப்பிலிருந்து அல்லாஹ் என்னை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் என கூறினார்கள்.
 
 
 
அபூபக்ர் அவர்களுடைய இந்தக் கூற்று அல்லாஹ்விற்கு பிடித்துவிட்டது. சூரத்துல் லைலில் ஏழுக்கும் மேற்பட்ட வசனங்களை அல்லாஹு தஆலா அவர்களுக்காகவே இறக்கினான்.
 
 
 
فَأَنْذَرْتُكُمْ نَارًا تَلَظَّى (14) لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى (15) الَّذِي كَذَّبَ وَتَوَلَّى (16) وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى (17) الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى (18) وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَى (19) إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى (20) وَلَسَوْفَ يَرْضَى (21)
 
(சூரா லைல்: வசனம் 14-21)
 
 
 
மக்களே! கொதிக்கின்ற ஜுவாலை விடக்கூடிய நரகத்தை நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன். துர்பாக்கியவான் அந்த நரகத்திலேயே கண்டிப்பாக செல்வான். இறையச்சமுள்ள அடியான் அந்த நரகத்தில் இருந்து தூரமாக்கப் படுவான். அந்த இறையச்சமுடைய அடியான் செல்வத்தை அல்லாஹ்வின் பாதையிலேயே செலவழித்துக் கொண்டே இருக்கிறான். தனது உள்ளம் பரிசுத்தமாக வேண்டும் என்பதற்காக. அல்லாஹ் தன்னை நல்லவர்களிளே பதிய வேண்டும் என்பதற்காக. பிறர் எந்த உதவியும் அவருக்கு செய்யாமல் இருந்தாலும் அல்லாஹ்வின் முகத்தை நாடி அவர் இந்த தர்மத்தை செய்கிறார்.
 
 
 
இவ்வாறு அபூபக்ர் அவர்களின் செயலை அல்லாஹ் புகழ்ந்து கூறியுள்ளான். 9
 
 
 
இப்படி அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நஃபிலான வணக்கங்களை நாம் செய்ய வேண்டும். இதன்மூலம் அல்லாஹ்வுக்கு நாம் நெருக்கமாகி கொண்டே செல்லலாம்.
 
 
 
إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا
 
நாங்கள் உங்களுக்கு அல்லாஹ்வின் முகத்திற்காக உணவளிக்கின்றோம். உங்களிடம் நாங்கள் கூலியையோ நன்றியையோ எதிர்பார்க்கவில்லை (என்று கூறுவார்கள்). (அல்குர்ஆன் 76 : 9)
 
 
 
நாம் உங்களுக்கு கொடுப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகதான். நீங்கள் எங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதற்காக அல்ல என்ற அடிப்படைகளில் நஃபில்களை செய்ய வேண்டும். 
 
 
 
இந்த அடிப்படையிலேயே ஒரு அடியான் நஃபிலான வணக்கங்களை செய்யும்போது எந்த அளவிற்கு அவன் அல்லாஹ்வை நெருங்கி விடுகிறான் என்றால், அல்லாஹ் கூறுகிறான்
 
 
 
فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا
 
இப்படி செய்யும் ஒரு அடியானை நான் நேசிக்கிறேன். நான் அந்த அடியானை நேசித்து விட்டால் அவன் கேட்கக்கூடிய செவியாக, அவன் பார்க்கக்கூடிய பார்வையாக, அவன் பிடிக்கக்கூடிய கையாக , அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுகிறேன்.
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா, நூல்: புகாரி, எண்: 6502
 
 
 
அதாவது, அல்லாஹ்வின் பொருத்தம் இந்த அளவிற்கு அவனுடன் ஒன்றி விடுகிறது. இதற்குப்பின் அல்லாஹ்விற்கு பிடிக்காத எந்த செயலையும் அவன் செய்ய மாட்டான்.
 
 
 
وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ
 
கருத்து: அவன் என்னிடத்தில் எதை கேட்டாலும், அவன் கேட்டதை உடனடியாக நான் அவனுக்கு கொடுப்பேன். அவன் என்னிடத்தில் பாதுகாவல் தேடினால் கண்டிப்பாக நான் அவனை பாதுகாப்பேன். நான் எதிலும் முன் தயங்குவது கிடையாது. ஆனால் ஒரு முஃமினுடைய உயிரை வாங்கும்போதே தவிர. அந்த முஃமின் மரணத்தை வெறுக்கிறான் (காரணம் மேலும் மேலும் நல்லமல்கள் செய்ய வேண்டும் என்பதற்காக) என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா, நூல்: புகாரி, எண்: 6502
 
 
 
இமாம் இப்னு ரஜப் ஹன்பலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது ஜாமிவுல் உலூம் வல்ஹிகம் என்ற நூலில் இந்த ஹதீஸிற்கு விளக்கமாக சொல்கிறார்கள்: 10
 
 
 
ஃபர்ழுகளை நிறைவேற்றிவிட்டு நஃபில்களின் மூலமாக அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடுபவர்கள்தான் அல்லாஹ்விடத்தில் மிக நெருக்கமானவர்கள். நன்மைகளில் முந்தக் கூடியவர்களில் முதன்மையானவர்களாக இருப்பார்கள். அவர்கள் ஃபர்ழுகளை செய்ததற்குப் பிறகு நஃபில்களை செய்வதில் அதிக சிரமமும் முயற்சியும் எடுத்தார்கள். அமல்களை செய்வது மட்டுமல்லாமல் அல்லாஹ்விற்கு பிடிக்காத வெறுக்கத்தக்க காரியங்கள் என்ன என்று பார்த்து அது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதிலிருந்து தவிர்ந்து கொண்டு வாழ்வார்கள். சிறு பாவமாக இருந்தாலும் பெரிய பாவமாக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு அஞ்சி பேனுதலான வாழ்கையை வாழ்வார்கள். சந்தேகத்திற்கு இடமான விஷயங்களில் இருந்து தவிர்ந்து கொள்வார்கள். இந்த நிலைக்கு ஒருவர் வரும் பொழுது அல்லாஹ்வின் அன்பிற்கு உரித்தான ஒருவராக அவர் மாறுகிறார் என இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.
 
 
 
அல்லாஹ் தன் அடியான் தன்னை இப்படி நெருங்க வேண்டும் என்று விரும்புகிறான். தனது நேசத்தை அவனுக்கு கொடுக்க விரும்புகிறான்.
 
 
 
இதற்கு தகுதியுடையவர்களாக நாம் ஆக வேண்டும். அல்லாஹ்வின் வேதத்தை அதிகம் அதிகம் ஓதுவதை போன்று, அல்லாஹ்வின் தூதர் நமக்கு மார்க்கத்தில் காட்டித்தந்துள்ள நஃபிலான வணக்க வழிபாடுகளான தொழுகைகள், நோன்புகள், தானதர்மங்கள் போன்ற நபிலான வணக்க வழிபாடுகளில் ஆர்வம் கொண்டு அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைவதற்கு முயற்சி செய்வோமாக! 
 
 
 
அல்லாஹ் நம் அனைவரின் பாவங்களையும் மன்னித்து, நல்லோர்களில் சேர்ப்பானாக. அல்லாஹ்வின் வேதத்தை முழுமையாக பின்பற்றக் கூடியவர்களாகவும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னாவை பின்பற்றக் கூடியவர்களாகவும் என்னையும் உங்களையும் அக்கிவைப்பனாக! ஆமீன்.
 
 
 
 
 
குறிப்பு: ஆடியோவில் இருந்து எழுதியவர் : சகோதரி மர்யம் முஸ்ஃபிரா
 
 
 
தமிழ் திருத்தம் செய்தவர் : மவ்லவி இமாமுத்தீன் ஹசனி
 
 
 
இறுதி மேலாய்வு மற்றும் சரிபார்ப்பு : மார்க்க ஊழியன் உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம், தாருல் ஹுதா
 
 
 
ஜுமுஆ குத்பா நடைப் பெற்ற இடம் : மஸ்ஜிதுல் ஹுதா – தாருல் ஹுதா, மண்ணடி |
 
நாள் : 28.02.2014 
 
 
 
 
 
 
குறிப்புகள்:
 
 
 
குறிப்பு 1).
 
عشرة أسباب تجلب محبة الله تعالى
 
قال رحمه الله في مدارج السالكين: فصل في الأسباب الجالبة للمحبَّة والموجِبة لها وهي عشرة أحدُها: قراءةُ القرآن بالتدبر والتفهّم لمعانيه وما أُريدَ به، كتدبّر الكتابِ الذي يحفظه العبدُ ويشرحه؛ ليتفهَّم مُرادَ صاحبه منه. الثاني: التقرب إلى الله بالنوافل بعد الفرائض فإنها توصله إلى درجة المحبوبيَّة بعد المحبة. الثالث: دوام ذكره على كل حال باللسان والقلب والعمل والحال فنصيبه من المحبة على قدر نصيبه من هذا الذكر. الرابع: إيثارُ محابّه على محابّك عند غلَبَات الهوى، والتسَنُّمُ إلى محابّه وإن صَعُبَ المرتقى. الخامس: مطالعة القلب لأسمائه وصفاته، ومشاهدتها ومعرفتها، وتقلّبه في رياض هذه المعرفة ومباديها؛ فمن عرف الله بأسمائه وصفاته وأفعاله أحبَّه لا محالة، ولهذا كانت المعطّلة والفرعونية والجهمية قطّاع الطريق على القلوب بينها وبين الوصول إلى المحبوب. السادس: مشاهدة برِّه وإحسانه وآلائه ونعمه الباطنة والظاهرة فإنها داعية إلى محبته. السابع: وهو من أعجبها، انكسار القلب بكليته بين يدي الله تعالى، وليس في التعبير عن هذا المعنى غير الأسماء والعبارات. الثامن: الخلوة به وقت النزول الإلهي لمناجاته وتلاوة كلامه، والوقوف بالقلب والتأدب بأدب العبودية بين يديه، ثم ختم ذلك بالاستغفار والتوبة. التاسع: مجالسة المحبين الصادقين، والتقاط أطايب ثمرات كلامهم كما ينتقى أطايب الثمر، ولا تتكلَّم إلا إذا ترجَّحتْ مصلحة الكلام، وعلمتَ أنَّ فيه مزيدًا لحالك ومنفعةً لغيرك. العاشر: مباعدةُ كلِّ سببٍ يحولُ بينَ القلب وبينَ اللهِ عزَّ وجلَّ.
 
 
 
 
 
குரிப்பு 2). 
 
إنَّ اللَّهَ قالَ: مَن عادَى لي ولِيًّا فقَدْ آذَنْتُهُ بالحَرْبِ، وما تَقَرَّبَ إلَيَّ عَبْدِي بشيءٍ أحَبَّ إلَيَّ ممَّا افْتَرَضْتُ عليه، وما يَزالُ عَبْدِي يَتَقَرَّبُ إلَيَّ بالنَّوافِلِ حتَّى أُحِبَّهُ، فإذا أحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الذي يَسْمَعُ به، وبَصَرَهُ الذي يُبْصِرُ به، ويَدَهُ الَّتي يَبْطِشُ بها، ورِجْلَهُ الَّتي يَمْشِي بها، وإنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ، ولَئِنِ اسْتَعاذَنِي لَأُعِيذَنَّهُ، وما تَرَدَّدْتُ عن شيءٍ أنا فاعِلُهُ تَرَدُّدِي عن نَفْسِ المُؤْمِنِ، يَكْرَهُ المَوْتَ وأنا أكْرَهُ مَساءَتَهُ.
 
الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
 
الصفحة أو الرقم: 6502 | خلاصة حكم المحدث : [صحيح]
 
 
 
 
 
குறிப்பு 3).
 
وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا (58)سورة الأحزاب
 
அல்குர்ஆன் 33 : 58
 
 
 
குறிப்பு 4).
 
 
 
مَن أحدَث في أمرِنا ما ليس فيه فهو رَدٌّ. قال ابنُ عيسى: قال النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم: مَن صنَع أمرًا على غيرِ أمْرِنا فهو رَدٌّ.
 
الراوي : عائشة أم المؤمنين | المحدث : أبو داود | المصدر : سنن أبي داود | الصفحة أو الرقم : 4606 | خلاصة حكم المحدث : سكت عنه [وقد قال في رسالته لأهل مكة كل ما سكت عنه فهو صالح] | التخريج :أخرجه البخاري (2697)، ومسلم (1718)، وأبو داود (4606) واللفظ له، وابن ماجه (14)، وأحمد (26033)
 
குறிப்பு 5).
 
 
 
إنَّ اللهَ يقبلُ الصدقةَ ، ويأخذُها بيمينِه ، فيُرَبِّيها لِأَحَدِكم ، كما يُرَبِّي أحدُكم مُهْرَه ، حتى إنَّ اللُّقْمَةَ لَتَصِيرُ مِثْلَ أُحُدٍ. وتصديقُ ذلك في كتابِ اللهِ – عَزَّ وجَلَّ - : أَلَمْ يَعْلَمُوا أَنَّ اللَّهَ هُوَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ وَيَأْخُذُ الصَّدَقَاتِ و يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ
 
الراوي : أبو هريرة | المحدث : الترمذي | المصدر : سنن الترمذي | الصفحة أو الرقم : 662 | خلاصة حكم المحدث : حسن صحيح | انظر شرح الحديث رقم 39535
 
குறிப்பு 6).
 
 
 
خَرَجَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ في مَرَضِهِ الذي مَاتَ فِيهِ، عَاصِبٌ رَأْسَهُ بخِرْقَةٍ، فَقَعَدَ علَى المِنْبَرِ، فَحَمِدَ اللَّهَ وأَثْنَى عليه، ثُمَّ قالَ: إنَّه ليسَ مِنَ النَّاسِ أحَدٌ أمَنَّ عَلَيَّ في نَفْسِهِ ومَالِهِ مِن أبِي بكْرِ بنِ أبِي قُحَافَةَ، ولو كُنْتُ مُتَّخِذًا مِنَ النَّاسِ خَلِيلًا لَاتَّخَذْتُ أبَا بَكْرٍ خَلِيلًا، ولَكِنْ خُلَّةُ الإسْلَامِ أفْضَلُ، سُدُّوا عَنِّي كُلَّ خَوْخَةٍ في هذا المَسْجِدِ، غيرَ خَوْخَةِ أبِي بَكْرٍ.
 
الراوي : عبدالله بن عباس | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 467 | خلاصة حكم المحدث : [صحيح] | انظر شرح الحديث رقم 6509
 
 
 
குறிப்பு 7).
 
 
 
سَمِعْتُ النبيَّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ قَبْلَ أنْ يَمُوتَ بخَمْسٍ، وهو يقولُ: إنِّي أبْرَأُ إلى اللهِ أنْ يَكونَ لي مِنكُم خَلِيلٌ، فإنَّ اللهِ تَعَالَى قَدِ اتَّخَذَنِي خَلِيلًا، كما اتَّخَذَ إبْرَاهِيمَ خَلِيلًا، ولو كُنْتُ مُتَّخِذًا مِن أُمَّتي خَلِيلًا لَاتَّخَذْتُ أبَا بَكْرٍ خَلِيلًا، ألَا وإنَّ مَن كانَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ قُبُورَ أنْبِيَائِهِمْ وصَالِحِيهِمْ مَسَاجِدَ، ألَا فلا تَتَّخِذُوا القُبُورَ مَسَاجِدَ، إنِّي أنْهَاكُمْ عن ذلكَ.
 
الراوي : جندب بن عبدالله | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 532 | خلاصة حكم المحدث : [صحيح | 
 
குறிப்பு 8).  பார்க்க அர் ரஹீக்குல் மக்தூம் 
 
قال صفي الرحمن المباركفوري في الرحيق المختوم في صفحة 66
 
وممن عذب من العبيد : عامر بن فُهَيْرَة، كان يعذب حتى يفقد وعيه ولا يدرى ما يقول .
 
واشترى أبوبكر رضي الله عنه هؤلاء الإماء والعبيد رضي الله عنهم وعنهن أجمعين، فأعتقهم جميعًا . وقد عاتبه في ذلك أبوه أبو قحافة وقال : أراك تعتق رقابًا ضعافًا، فلو أعتقت رجالًا جلدًا لمنعوك . قال : إني أريد وجه الله . فأنزل الله قرآنًا مدح فيه أبا بكر، وذم أعداءه . قال تعالى : { فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّى لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى الَّذِي كَذَّبَ وَتَوَلَّى } [ الليل : 14 : 16] وهو أمية بن خلف، ومن كان على شاكلته { وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَى إِلَّا ابْتِغَاء وَجْهِ رَبِّهِ الْأَعْلَى وَلَسَوْفَ يَرْضَى } [ الليل : 17 : 21] وهو أبو بكر الصديق رضي الله عنه .
 
 
 
குறிப்பு 9).
 
 
 
أخرج أبو جعفر بن جرير الطبري رحمه الله رحمة واسعة ونور مرقده وغفر له
 
حدثني محمد بن إبراهيم الأنماطي، قال: ثنا هارون بن معروف. قال: ثنا بشر بن السَّريّ، قال: ثنا مصعب بن ثابت، عن عامر بن عبد الله عن أبيه، قال: نـزلت هذه الآية في أبي بكر الصدّيق: ( وَمَا لأحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَى * إِلا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الأعْلَى * وَلَسَوْفَ يَرْضَى) .
 
حدثنا ابن عبد الأعلى، قال: ثنا ابن ثور، عن معمر، قال: أخبرني سعيد، عن قتادة، في قوله ( وَمَا لأحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَى ) قال: نـزلت في أبي بكر، أعتق ناسا لم يلتمس منهم جزاء ولا شكورا، ستة أو سبعة، منهم بلال، وعامر بن فُهَيرة. 
 
குறிப்பு 10(.
 
قال ابن رجب رحمه الله في جامع العلوم والحكم
 
وقوله وما تقرب إلى عبدي بمثل أداء ما افترضته عليه ولا يزال عبدي يتقرب إلى بالنوافل حتى أحبه لما ذكر أن معاداة أوليائه محاربة له ذكر بعد ذلك وصف أوليائه الذين تحرم معاداتهم وتجب موالاتهم فذكر ما يقرب به إليه وأصل الموالاة القرب وأصل المعاداة البعد فأولياء الله هم الذين يتقربون إليه بما يقربهم منه وأعداؤه الذين أبعدهم منه بأعمالهم المقتضية لطردهم وإبعادهم منه فقسم أولياءه المقربين قسمين أحدهما من تقرب إليه بأداء الفرائض ويشمل ذلك فعل الواجبات وترك المحرمات لأن ذلك كله من فرائض الله التي افترضها على عباده والثاني من تقرب إليه بعد الفرائض بالنوافل فظهر بذلك أن دعوي طريق يوصل إلى التقرب إلى الله تعالى وموالاته ومحبته سوي طاعته التي شرعها على لسان رسوله ممن ادعي ولاية الله ومحبته بغير هذا الطريق تبين أنه كاذب في دعواه كما كان المشركون يتقربون إلى الله تعالى بعبادة من يعبدونه من دونه كما حكي الله عنهم أنهم قالوا ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفي الزمر وكما حكي الله عن اليهود والنصاري أنهم قالوا نحن أبناء الله وأحباؤه المائدة مع إصرارهم على تكذيب رسله وارتكاب نواهيه وترك فرائضه فلذلك ذكر في هذا الحديث أن أولياء الله على درجتين أحدهما المقربون إليه بأداء الفرائض وهذه درجة المقتصدين أصحاب اليمين وأداء الفرائض أفضل الأعمال كما قال عمر بن الخطاب رضي الله عنه أفضل الأعمال أداء ما افترض الله والورع عما حرم الله وصدق النية فيما عند الله تعالى وقال عمر بن عبد العزيز في خطبته أفضل العبادات أداء الفرائض واجتناب المحارم وذلك أن الله تعالى إنما افترض على عباده هذه الفرائض فيقربهم عنده ويوجب لهم رضوانه ورحمته وأعظم فرائض البدن التي تقرب إليه الصلاة كما قال تعالى {وَاسْجُدْ وَاقْتَرِبْ} العلق وقال النبي ﷺ أقرب ما يكون العبد من ربه وهو ساجد وقال إذا كان أحدكم يصلي فإنما يناجي ربه وربه بينه وبين القبلة وقال إن الله ينصب وجهه لوجه عبده في صلاته ما لم يلتفت ومن الفرائض المقربة إلى الله تعالى عدل الراعي في رعيته سواء كانت رعيه عامة كالحاكم أو خاصة كعدل آحاد الناس في أهله وولده كما قال ﷺ كلكم راع وكلكم مسئول عن رعيته.
 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/