அல்லாஹ்வின் அன்பைப் பெற 10 வழிகள் - அல்லாஹ்வின் விருப்பத்தை தேர்ந்தெடுப்பது | Tamil Bayan - 321
بسم الله الرحمن الرّحيم
அல்லாஹ்வின் அன்பை பெற 10வழிகள் – அல்லாஹ்வின் விருப்பத்தை தேர்ந்தெடுப்பது
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வை எப்படி பயப்பட வேண்டுமோ அந்த முறையில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவு படுத்தியவனாக ஆரம்பம் செய்கிறேன்.
யார் அல்லாஹ்வை உண்மையில்ஒரு தூய்மையான உள்ளத்தோடு நேசிக்கிறார்களோ அவர்களுக்குஅல்லாஹு சுப்ஹானஹு தஆலாஅவனுடைய அன்பை வழங்குகிறான்.அல்லாஹ்வின் அன்பை கொண்டுதான் அல்லாஹ்வின் அருளை கொண்டுதான் நாம் சொர்க்கத்தை அடைய முடியும்.
அல்லாஹ்வுடைய அன்பு மிக விலை மதிக்க முடியாத ஒன்று.அதன் அடிப்படையில்தான் அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அவன் சொர்க்கத்தை வாக்களித்திருக்கிறான்.
يُدْخِلُ مَنْ يَشَاءُ فِي رَحْمَتِهِ
தனது அன்பில் தனது கருணையில் தான் நாடியவர்களை அல்லாஹ் சேர்த்துக் கொள்கிறான். (அல்குர்ஆன் 76 : 31)
எனவே அல்லாஹ்வுடைய அன்பை கேட்டுப் பெறுவது அல்லாஹ்வுடைய நேசத்திற்காக மன்றாடுவது நபிமார்களின் சுன்னாவாக -வழக்கமாக இருக்கிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த உருக்கமான பிரார்த்தனையைப் பாருங்கள்;
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَيَّ مِنْ نَفْسِي وَأَهْلِي، وَمِنَ المَاءِ البَارِدِ
அல்லாஹ்வே நான் உன்னிடத்தில் உனது அன்பை கேட்கிறேன்ك
கடுமையான தாகத்தின் நேரத்தில், குளிர்ந்த மதுரமான நீரின் மீது ஒரு தாகித்தவனுக்கு இருக்கக்கூடிய அன்பைவிட அந்த நேசத்தை விட உனது அன்பை உனது நேசத்தை எனக்கு அதிகமாக ஆக்கி வை என்று. (1)
அறிவிப்பாளர் : அபுத்தர்தா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : எண் : 3490, தரம் : ழயீஃப் (அல்பானி)
அப்படிப்பட்ட அந்த அல்லாஹ்வின் அன்பை அடைய வேண்டுமென்றால் அது சாதாரணமாக கிடைத்து விடாது.அதற்காக நாமும் சில தியாகங்களை, சில அர்ப்பணிப்புகளை செய்தாக வேண்டும்.
அந்த தியாகங்களை கொண்டு அந்த இபாதத்துகளை கொண்டுதான் அல்லாஹ்வின் அன்பை அடைந்துவிட முடியும்.அதனுடைய தொடரில் நாம் சில விஷயங்களை இன் ஷா அல்லாஹ் இந்த ஜும்ஆவில் பார்க்க இருக்கிறோம்.
இமாம் இப்னுல் கைய்யிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியது போன்று அல்லாஹ்வுடைய அன்பை அடைவதற்கு அவருடைய வேதமாகிய அல்குர்ஆனை பற்றிப் பிடிக்க வேண்டும்.
நஃபிலான வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடித்தரக்கூடிய உபரியான வணக்க வழிபாடுகளை பர்லான கடமைகளை பேணுதலாக செய்துகொண்டே இருக்க வேண்டும்.
அது போன்று நம்முடைய நாவை அல்லாஹ்வுடைய திக்கிரிலே திலைத்திருக்க செய்ய வேண்டும்.
காலை மாலை இரவு பகல் நாம் விழித்து இருக்கின்ற நேரங்கள் என்று எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை மறக்காமல் அல்லாஹ்வுடைய திக்ருகளை செய்துகொண்டே இருக்கவேண்டும்.
அதுபோன்றுதான் நான்காவது விஷயமாக இமாம் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்;
மிக முக்கியமான ஒரு போராட்டத்தை மிக முக்கியமான ஒரு தியாகத்தை இங்கே குறிப்பிடுகிறார்கள்;
சில நேரங்களில் நமக்கு இப்படி ஒரு போராட்டங்கள் உள்ளத்தில் ஏற்படும். அல்லாஹ் ஒன்றை விரும்புவான்; நமது மனமோ வேறு ஒன்றை விரும்பும்.
இந்த நேரத்திலே நாம் யாருடைய பிரியத்திற்கு முக்கியத்துவம் தருகிறோம்?நமது மனம் விரும்பக்கூடியதற்கு முக்கியத்துவம் தருகிறோமா?அல்லது அல்லாஹ் உடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நமது விருப்பத்தை தூரமாக நமது விருப்பத்தை நாம் புறக்கணிக்கிறோமா? எப்படிப்பட்ட சோதனை பாருங்கள்.
இந்த சோதனையை உலகத்தில் மக்கள் செய்கிறார்கள்.நீ என்னை நேசிப்பவனாக இருந்தால் எனது பிரியம் உனது உள்ளத்தில் இருந்தால் நீ இதை செய்!இதை தேர்ந்தெடு!என்பதாக தாங்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களிடத்தில் செய்கிறார்கள்.
பிள்ளைகளிடத்தில் பெற்றோர்கள்;உனக்கு என்மீது அன்பு இருக்குமானால் நான் சொன்னதை செய், இதைச் செய், அதைச் செய், இதை செய்யாதே, அதை செய்யாதே என்று அவர்கள் சில முறையீடுகளை வைக்கிறார்கள்.
இதுபோன்று பிள்ளைகள் பெற்றோர்களிடத்தில்;நண்பன் நண்பர்களிடத்தில். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்;
படைத்த இறைவனாகிய அல்லாஹ் الجليل மகா கம்பீரமானவன்; العظيمமகா மகத்தானவன்; العزيزஎல்லோரையும் யாவற்றையும் மிகைத்தவன்.
அவனுக்கு யாருடைய அன்பும் தேவை இல்லாமல் இருக்க அவனுக்கு யாருடைய இபாதத்தும் தேவை இல்லாமல் இருக்க படைப்புகள் எல்லாம் அவன் பக்கம் தேவையுடையவர்கள். அவனுக்கு யாருடைய தேவையும் எப்போதும் இருந்ததில்லை.
يَاأَيُّهَا النَّاسُ أَنْتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ
மக்களே நீங்கள் தான் ஏழைகள்;நீங்கள் தான் தேவை உள்ளவர்கள்;அல்லாஹ்விற்க்கு எப்போதும் யாருடைய தேவையும் எந்த வித்ததிலும் இருந்தது கிடையாது. அவன் முற்றிலும் தன்னில் நிறைவானவன். அவன் புகழுக்குரியவன். (அல்குர்ஆன் 35 : 15)
அப்படிப்பட்ட அல்லாஹ்வின் அன்பை நாம் அடைய வேண்டுமென்றால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்; நாம் நமது பிரியத்தை நாம் நமது அன்பை அவனுடய அன்புக்காக தியாகம் செய்ய வேண்டுமா? இல்லையா?
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா சூரத்துத் தவ்பா ஒன்பதாவது அத்தியாயத்தில் 62வது வசனத்தில் கூறுகிறான்;
وَاللَّهُ وَرَسُولُهُ أَحَقُّ أَنْ يُرْضُوهُ إِنْ كَانُوا مُؤْمِنِينَ
அவர்கள் மெய்யாகவே நம்பிக்கையாளர்களாயிருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள் (என்பதை அறிந்துகொள்வர்). (அல்குர்ஆன் 9 : 62)
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா எப்படிப்பட்ட ஒரு நிபந்தனையை சொல்கிறான்; உன் உள்ளத்தில் இருக்கக்கூடிய ஈமான், நீ கூறிய லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கூற்று, அந்த கூற்றிலே நீ உண்மையானவனாக, சுத்தமானவனாக, பொய் கலக்காதவனாக, நயவஞ்சகம் கலக்காதவனாக இருந்தால் நீ முதலில் யாரை திருப்திப்படுத்த வேண்டும்?
உன் தாய் தந்தையை திருப்பிப்படுத்துவதை விட, உன் பெற்றோர்களை, உன் பிள்ளைகளை உன் நண்பர்களை திருப்திப்படுத்துவதை விட, ஏன் உன்னையே நீ திருப்திப்படுத்துவதை விட, உன்னை படைத்த ரப்பை நீ திருப்திப்படுத்த வேண்டும். அப்போது தான் உன்னுடைய ஈமான் உண்மையான ஈமான். அந்த ரப்பு அனுப்பிய தூதரை நீ திருப்திப்படுத்த வேண்டும்.
யார் ஷரீஆவை கொண்டு வந்தார்களோ, யார் வேதத்தைக் கொண்டு வந்தார்களோ அந்தத் தூதருடைய திருப்தியை தேடவேண்டும்.அல்லாஹ்வுடைய திருப்தி அந்த தூதருடைய திருப்தியை நீங்கள் தேடியாக வேண்டும் நீங்கள் உண்மையான முஃமின்களாக இருந்தால்.
இந்த இடத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எப்படி ஒரு எச்சரிக்கையை சொல்கிறான்? யாருடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் திருப்தி அல்லாஹ்வை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் வாழ்கிறார்களோ அவர்களுடைய ஈமானில் அங்கே பலவீனம் இருக்கிறது. அவர்கள் ஈமானில் பலவீனமானவர்கள்; உண்மையான ஈமான் அவர்களுக்கு இருக்குமேயானால் அல்லாஹ்வின் பொருத்தத்தை தேடி இருப்பார்கள்.
அல்லாஹ் நமக்கு எதை விரும்புவான்?
அல்லாஹ் சொல்கிறான்; நான் உங்களுக்கு மறுமையை விரும்புகிறேன். ஆனால் நீங்களோ உங்களுக்கு அர்ப்ப துன்யாவைத்தான் எப்போதும் தேடுகிறீர்கள்.
அல்லாஹ்வுடய விருப்பத்திற்காக மனிதன் இந்த துன்யாவுடைய விருப்பங்களை இழக்ககவில்லை என்றால் அவன் ஈமானையும் அடைய முடியாது; அல்லாஹ்வின் விருப்பத்தையும் அடையமுடியாது.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா இதை சூரத்துல் தவ்பாவிலே எச்சரிக்கையாக சொல்வதைப் பாருங்கள்;
قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
(நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) நீர் கூறுவீராக: உங்கள் தந்தைகளும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் சகோதரர்களும், உங்கள் மனைவிகளும், உங்கள் குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் (உங்கள்) பொருள்களும், நஷ்டமாகிவிடுமோ என நீங்கள் பயந்து (மிக எச்சரிக்கையுடன்) செய்து வரும் வர்த்தகமும், உங்களுக்கு மிக்க விருப்பமுள்ள (உங்கள்) வீடுகளும் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விடவும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவதைவிடவும் உங்களுக்கு மிக விருப்பமானவையாக இருந்தால் (நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களல்ல. நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரை நீங்கள் எதிர்ப்பார்த்திருங்கள். (இப்படிப்பட்ட) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 9 : 24)
யாரை பாவிகள் என்று அல்லாஹ் சொல்கிறான்?யார் இந்த துன்யாவின் பொருள்களை அல்லாஹ்வை விட அதிகமாக நேசிக்கிறார்களோ,ரசூலை விட அதிகம் நேசிக்கிறார்களோ,அல்லாஹ்வுடைய தீனை விட அதிகம் நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் சொல்கிறான்.
எப்படி தொழுகையை விட்டவன்,மார்க்கத்தைப் புறக்கணித்தவனை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பாவிகளின் பட்டியலில் சேர்க்கிறானோஅது போன்று யாருக்கு அல்லாஹ்வின் அன்பின் தேட்டம் இல்லையோஇந்த துன்யாவுக்கு தான் முன்னுரிமை கொடுக்கின்றானோ,அல்லாஹ்வுடைய மார்க்கத்தை புறந்தள்ளி கொண்டு இருக்கிறானோ அவர்களை அல்லாஹ் பாவிகள் என்று சொல்கிறான்.அல்லாஹ் பாதுகாப்பானாக!
இதுகுறித்து ஒரு அழகான சம்பவத்தை அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமக்கு இந்த குர்ஆனில் இறக்கி அந்த சம்பவத்தை நபியே நீங்கள் மக்களுக்கு ஓதி காட்டுங்கள் என்று சொல்கிறான்.
فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக இச்சரித்திரத்தை (அடிக்கடி) ஓதிக் காண்பியுங்கள். (அல்குர்ஆன்7 : 176)
சூரா அல் அஃராஃப் உடைய 175,176,177ஆகிய வசனங்களில் சொல்கிறான்;
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ
(நபியே!) நீர் அவர்களுக்கு (‘பல்ஆம் இப்னு பாஊர்' என்னும்) ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக் காண்பிப்பீராக. அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்(து கண்ணியமாக்கி வைத்)திருந்தோம். எனினும் அவன் ‘‘(பாம்பு தன் சட்டையை விட்டு வெளியேறுவதைப் போல) அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்; (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழிதவறி விட்டான். (அல்குர்ஆன் 7 : 175)
அல்லாஹு ரப்புல் ஆலமீன் இஸ்ரவேலர்களிலே பல்ஆம் இப்னு பாஊர்என்ற மனிதருக்கு மார்க்க கல்வியை கொடுத்திருந்தான்;பெரும் ஞானத்தை அல்லாஹ் கொடுத்திருந்தான்.அவனுடைய இபாதத் அவனுடைய இல்ம் மிக உயர்ந்ததாக இருந்தது.
அல்லாஹ்வுடைய மிக மகத்தான பெயராகிய الاسم الاعظم– அல்இஸ்முல் அஃழம் என்ற அந்த பெயர் கற்பிக்கப்பட்டு இருந்தான். அவனுடைய உள்ளத்தில் அப்படிப்பட்ட ஒரு இறைஞானம் இருந்தது. அவனுடைய பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு அவனுக்கு அல்லாஹ்விடதிலே தகுதி இருந்தது.
அல்லாஹ் சொல்கிறான்;
வசனத்தின் கருத்து;
நமது அத்தாட்சிகளை,நமது வசனங்களை,நமது கல்வியை கொடுத்த ஒரு மனிதனின் வரலாற்றை நீங்கள் உங்கள் உம்மத்திற்கு சொல்லிக் காட்டுங்கள்;
ஆனால், அந்த வசனங்கள் எல்லாம் அந்த கல்விகள் எல்லாம் கொடுக்கப்பட்டும் கூட அவன் அதிலிருந்து அப்படியே கலண்டு கொண்டான்.
எந்த வார்த்தையை அல்லாஹ் பயன்படுதுகிறான் என்றால்,
ஒரு பாம்பு எப்படி தனது தோளிலிருந்து கலண்டு தோல் தனியாக பாம்பு தனியாக வந்துவிடுமோ அதற்கு பயன்படுத்தக்கூடிய அந்த அரபி பதத்தை கூறுகிறான்.
انسلخ- கலண்டு வந்துவிட்டான். அந்த இல்மை அப்படியே விட்டுவிட்டு அதற்கும் தனக்கும் சம்மதம் இல்லாதவனை போன்று அதற்கும் தனக்கும் எந்த ஒரு உறவும் இல்லாதவனை போன்று அந்த கல்வியை விட்டு விட்டு அவன் வெளியேறி விட்டான்
ஷைத்தான் அவனை பின் தொடர்ந்தான்.எப்போது ஒரு மனிதன் இந்த மார்க்கத்தில் இருந்து கொஞ்சம் விலகுவானோ ஷைத்தான் அவனோடு சவாரி செய்து கொள்வான்.ஷைத்தான் அவனை ஒட்டிக்கொள்வான்.
எதுவரை அல்லாஹ்வின் தீனை பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறோமோ இது ஒரு கேடயம், இது ஒரு பாதுகாப்பு ஆயுதம். இதை நாம் கையிலே வைத்து இருக்கின்ற வரை ஷைத்தான் நம்மிடம் இருந்து தூரமாக இருப்பான்.
எங்கே மார்க்கத்தை கொஞ்சம் தளர்த்துகிறோமோ,மார்க்கத்தில் கொஞ்சம் தளர்ந்து விடுகிறோமோ,கொஞ்சம் நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்,கொஞ்சம் பரவாயில்லை என்று அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை கொஞ்சம் மீறுகிறானோ ஷைத்தான் சவாரி செய்து கொள்வான்.
அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை பாதுகாப்பவர்களாக முஃமின்கள் முஸ்லிம்கள் இருக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய சட்ட வரம்பிலே எப்போது ஒரு சின்ன ஓட்டையை மனிதன் போடுகிறானோ அடுத்து அடுத்து அந்த ஓட்டையை ஷைத்தான் பெரிதாக்கிக் கொண்டே இருப்பான். இறுதியாக அல்லாஹ்வுடைய தீனில் இருந்து அவனை முற்றிலுமாக வெளியாக்குகின்றவரை
அல்லாஹ் எப்படி சொல்கிறான் ;
وَدُّوا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ
நபியே!நீங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுப்பதற்கு அவர்கள் விரும்புகிறார்கள்.அப்படி நீங்கள் விட்டுக் கொடுத்தால் அவர்களும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.(அல்குர்ஆன் 68 : 9)
நபியிடத்தில் வந்து பேரம் பேசினார்கள்; அல்லாஹ்வுடைய இந்த தீன் விஷயத்தில் பல மாதிரியான பேரம் அதில் குறைந்தபட்சம், எங்கள் சிலைகளை நீங்கள் ஏசாமல் விட்டுவிடுங்கள்; அது போதும்.
ஒரு நாள் எங்களது சிலைகளை வணங்குவோம்; ஒரு நாள் அல்லாஹ்வை வணங்குவோம் என்று ஆரம்பித்து கடைசியிலே ஒரு நாளைக்கு,அடுத்துஒரு வாரம்,அதற்கடுத்து மாதத்திற்கு ஒருமுறை வாழ்த்து,அடுத்து வருஷத்திற்கு ஒருமுறை.
இப்படியாக எதிலும் நபியவர்கள் விட்டுக்கொடுக்காமல் போன போது கடைசியாக அவர்கள் சொன்னார்கள்; குறைந்தபட்சம் உங்களது இந்த வேதத்தில் குர்ஆனில் எங்கள் சிலைகளைப் பற்றி படிக்கப்படுகிறதல்லவா? அதையாவது நீங்கள் ஓதி காட்டாமல் இருங்கள். அதை நீங்கள் விட்டு விடுங்கள். நாங்கள் உங்களுக்கு தொந்தரவு செய்ய மாட்டோம்.
முடியுமா? அல்லாஹ்வின் வேதத்தில் எந்த ஒன்றையாவது ஒரு நபியால் மறைக்க முடியுமா? ஒரு நபியால் ஓதி காட்டாமல் இருக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. இதுதான் ஷைத்தானுடய திட்டம்.
கொஞ்சம் மனிதனை தீனிலிருந்து சருக வைப்பான். நப்ஸுக்கு அடிமையாக ஆக்கி பார்ப்பான். கொஞ்சம் அடிமை ஆகிவிட்டால் போதும், முற்றிலுமாக கழுத்தில் அவன் வளையத்தை மாட்டி அவன் விரும்பக்கூடிய இடத்தில் இழுத்துச் செல்வான்.
அடுத்து அல்லாஹ் சொல்கிறான்;
وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ذَلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
நாம் எண்ணியிருந்தால் (நம்) அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும், அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் (சரீர) இச்சையைப் பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. நீங்கள் அதைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. அதை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. இதுவே, நம் வசனங்களைப் பொய்யாக்கும் (மற்ற) மக்களுக்கும் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக இச்சரித்திரத்தை (அடிக்கடி) ஓதிக் காண்பியுங்கள். (அல்குர்ஆன்7 : 176)
நபியே இந்த இந்த மனிதனின் வரலாற்றை ஓதிக்காட்டுங்கள் என்று அல்லாஹ் ஆரம்பிக்கிறான்.
முடிக்கும் போதும் சொல்கிறான்;
இந்த வரலாற்றை மக்களுக்கு நீங்கள் விவரமாக எடுத்துச் சொல்லுங்கள்; அவர்கள் சிந்திக்க வேண்டும்; அவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக.
سَاءَ مَثَلًا الْقَوْمُ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا وَأَنْفُسَهُمْ كَانُوا يَظْلِمُونَ
நம் வசனங்களைப் பொய்யாக்கிய மக்களின் இவ்வுதாரணம் மிகக் கேவலமானது; அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். (அல்குர்ஆன்7 : 177)
مَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِي وَمَنْ يُضْلِلْ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள்;அல்லாஹ் யாரை வழிகெடுத்து விடுகிறானோ அவர்கள்தான் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 7 : 178)
இந்த பல்ஆம் இப்னு பாஊர் என்ற மனிதனுடையசம்பவம் என்ன? ஒரு இறைத்தூதருக்கு எதிராக பிரார்த்தனை செய்யும்படி துஆ கேட்கும் படி தனது சமூதாயத்தவர்களால் அவன் நிர்பந்திக்கப்படுகிறான்; ஆசையூட்டப்படுகிறான்.
ஆரம்பத்தில் மறுத்துவந்த இந்த பல்ஆம் இறைத்தூதருக்கு எதிராக நான் எப்படி பிரார்த்தனை செய்ய முடியும்? அவரும் அதே இறை கல்வியை கொடுக்கப்பட்டவர்; அதே இறை கல்வியைப் பெற்ற நான் ஒரு இறைத்தூதருக்கு ஆதரவாக உறுதி அளிப்பவராக இருக்க வேண்டுமா? அல்லது இறைத்தூதருக்கு எதிராக நான் பிரார்த்தனை செய்து அவரை அழிக்க வேண்டுமா? முடியாது.இது ஒரு பெரிய மகா பாதகமான செயல்.இந்த செயலை நான் செய்ய மாட்டேன் என்று சொல்கிறான்.
எப்போது சாதாரணமாக சொல்லி இஸ்ரவேலர்கள் உடைய அந்த அறிஞன் ஏற்றுக் கொள்ளவில்லையோ,அப்போது அந்த மக்கள் (இஸ்ரவேலர்கள்) செல்வத்தைக் கொடுத்து தங்கம் வெள்ளியை கொண்டு பெண்களைக் கொண்டு அவனுக்கு ஆசை ஊட்டினார்கள்.
அந்த தங்கம் வெள்ளிகளை,பெண்களைப் பார்த்த போது இவையெல்லாம் நமக்குக் கிடைக்கின்றனவே என்று அந்த தங்க குவியல்களை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்;அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்...
ஆரம்பத்தில் புறக்கணித்து கொண்டே இருந்த அந்த இஸ்ரவேலர்களின் ஆலிம், கடைசியில் பிரம்மாண்டமான ஒரு குவியலின் அளவு தங்கங்களை வெள்ளிகளை பார்த்ததற்கு பிறகு இவ்வளவு பெரிய செல்வம் கிடைக்கிறதே என்று, அல்லாஹ்விடத்தில் ஒரு நபிக்கு எதிராக துஆ செய்ய கையை உயர்த்தி விடுகிறான்.
எப்போது கைகளை ஏந்தி,அவன் வார்த்தைகளை ஆரம்பிக்கிறானோ அதே நேரத்தில் எதுவும் பேச முடியாதவனாக அவன் நாக்கை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வெளியே எடுத்து விடுகிறான்.
அதைத்தான் சொல்கிறான்;ஒரு நாயின் நாக்கு எப்படி நிரந்தரமாக தொங்கிக் கொண்டே இருக்குமோ,அதை நீங்கள் விரட்டினாலும் சரி விரட்டாமல் விட்டாலும் சரி அதுபோன்று அவருடைய நாக்கு நிரந்தரமாக தொங்க கூடியதாக ஆக்கிவிட்டோம்.
நாவு வாய்க்குள் இருந்தால்தானே அவனால் பேச முடியும். அந்த நாவை நாம் வெளியே இழுத்து விட்டோம் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
பார்ப்பவர்கள் எல்லாம் பல்ஆமா? இவ்வளவு பெரிய அறிஞனா இப்படி ஒரு கேவலமான நிலைக்கு ஆகிவிட்டான்!
அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமாக நடந்த காரணத்தினால் நாயைப் போன்று நாக்கை தொங்க விட்டவனாக சபிக்கப்பட்டவன் ஆயிற்றே!என்று மக்கள் பேசக்கூடிய அளவுக்கு அவனுடைய உதாரணத்தை அல்லாஹ் ஆக்கினான்.
இது எதனால் ? துனியாவின் மீது ஆசை வந்ததற்காக. நஃப்ஸின் மீது ஆசை வந்ததற்காக. நப்ஸுடைய ஆசைக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்காக. அல்லாஹ்வின் சட்ட வரம்புகளை மீற நினைத்தபோது.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனை எப்படி கேவலபடுத்தினான் என்று பாருங்கள்.
நப்ஸுக்கு கீழ்ப்படியாமல் நப்ஸுக்கு கட்டுப்படாமல் இருக்கவேண்டும் என்ற இந்த அறிவுரையை அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவன் அனுப்பிய எல்லா இறைத்தூதருக்கும் சொல்லிக்கொண்டே இருக்கிறான்.
أُولُو الْعَزْمِ(உலுல் அஸ்ம்)-என்ற மிகப்பெரிய ஈமானிய பலமுடைய நபிமார்களுக்கு அல்லாஹ் சொல்லியதைப் பாருங்கள்;
மூஸா அலைஹி வஸ்ஸலாது வஸ்ஸலாம் எப்படிப்பட்ட இறைத்தூதர்! அந்த நபிக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முதன்முதலாக வஹீயை கொடுக்கும்போது சொல்கிறான்;
إِنَّ السَّاعَةَ آتِيَةٌ أَكَادُ أُخْفِيهَا لِتُجْزَى كُلُّ نَفْسٍ بِمَا تَسْعَى
நிச்சயமாக மறுமை வந்தே தீரும். ஒவ்வோர் ஆத்மாவும் தன் செயலுக்குத் தக்க கூலியை அடையும் பொருட்டு அதை நான் (மனிதர்களுக்கு) மறைத்து வைக்க விரும்புகிறேன். (அல்குர்ஆன் 20 : 15)
فَلَا يَصُدَّنَّكَ عَنْهَا مَنْ لَا يُؤْمِنُ بِهَا وَاتَّبَعَ هَوَاهُ فَتَرْدَى
ஆகவே, அதை (-மறுமையை) நம்பிக்கை கொள்ளாமல் சரீர இச்சையைப் பின்பற்றுபவன் அந்நாளை நம்பிக்கை கொள்வதிலிருந்து உம்மைத் தடுத்துவிட வேண்டாம். அவ்வாறாயின் நீர் அழிந்து விடுவீர்.''(அல்குர்ஆன் 20 : 16)
யார் தன்னுடைய நப்ஸுடைய இச்சைகளை பின்பற்றுகிறானோஅவன்தான் மறுமையின் பாதையிலிருந்து விலகுவான்.
இன்று ஆடல், பாடல், குடி இதுபோன்ற நப்ஸுக்கு விருப்பமான நப்ஸுக்கு சுகமான இந்த இச்சை நிறைந்த இந்த பாவங்களில் விழக்கூடியவர்களை பாருங்கள். மறுமையின் நம்பிக்கை இருக்குமேயானால் கண்டிப்பாக இவர்கள் விழ மாட்டார்கள்.
இந்த அர்ப்ப துன்யாவின் இன்பத்தை அவர்கள் சுகமாக கண்டு மறுமையின் பேரின்பத்தை அவர்கள் துறந்திருக்க மாட்டார்கள்.
மறுமையை புறக்கணித்த காரணத்தினால் ஆகிரத்தின் இன்பத்தின் மதிப்பு அவர்களுக்கு தெரியாத காரணத்தினால், இந்த துன்யாவுடைய மதுவிலே அவர்கள் சுகம் பார்க்கிறார்கள்;இந்த துன்யா உடைய ஹராமான பெண்களிலே அவர்கள் சுகம் பார்க்கிறார்கள்;இந்த துன்யா உடைய ஹராமான செல்வத்தில் அவர்கள் பெயரை புகழை மதிப்பையும் கண்ணியத்தையும் பார்க்கிறார்கள்.
யார் தனது மன இச்சையின் படி செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமையின் பாதையிலிருந்து தடம் புரளச் செய்து விடுவான்.
ஒரு ஆலிம்அவருக்கு இந்த துனியாவின் மீது மோகம் ஏற்படுமேயானால் தங்களை பின்பற்றக்கூடிய அந்த மக்களை அவன் தடம் புரளச் செய்து விடுவான்.
இப்படி ஒரு சின்ன குடும்பத்தில் இருந்து ஆரம்பித்து, ஒரு குடும்பத் தலைவனிடமிருந்து ஆரம்பித்து,ஒரு கோத்திர தலைவனிடமிருந்து ஆரம்பித்து,ஒரு பெரிய சமுதாயத்தின் தலைவர்கள் வரை ஒட்டுமொத்த மக்களின் தலைவர்கள் வரை எப்போது இந்த துன்யா உடைய முஹப்பத் வந்துவிடுமோ அவர்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்களை வழிகெடுத்து விடுவார்கள்.
அல்லாஹு சுப்ஹானஹு தஆலாஇதே அறிவுரையை தனது நபிக்கு அல்லாஹ் சொல்லாமல் விடவில்லை.
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرُطًا
(நபியே!) எவர்கள் சிரமங்களைச் சகித்துத் தங்கள் இறைவனின் திரு முகத்தையே நாடி அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் உம்மையும் நீர் ஆக்கிக் கொள்வீராக. இவ்வுலக அலங்காரத்தை நீர் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உமது கண்களைத் திருப்பி விடாதீர். தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய உள்ளத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர். அவனுடைய காரியம் எல்லை கடந்து விட்டது. (அல்குர்ஆன் 18 : 28)
அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறும்போது, அல்லாஹ்வுடைய எல்லையை மீறும்போது ஒரு மனிதன் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகிறான்.
ஒரு இல்மை கொண்டு பயன்பெற முடியாமல் அல்லாஹ் ஆக்கிவிடுவான்.
அவருக்கு இறையச்சம் இருந்தாலும் கூட அந்த இறையச்சம் பலவீனமடைய கூடிய அளவிற்கு அவனுடைய நிலமை மாறிவிடும்.நப்ஸுக்கு அவன் முக்கியத்துவம் கொடுக்கும்போது.
அல்லாஹ் சொல்கிறான்;
أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَى عِلْمٍ وَخَتَمَ عَلَى سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَى بَصَرِهِ غِشَاوَةً فَمَنْ يَهْدِيهِ مِنْ بَعْدِ اللَّهِ أَفَلَا تَذَكَّرُونَ
(நபியே!) தன் இச்சையை(த் தான் வணங்கும்) தெய்வமாக எடுத்துக் கொண்ட ஒருவனை நீர் கவனித்தீரா? அவனுக்கு(ப் போதுமான) கல்வி இருந்தும் (அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டுவிட்டான். அவனுடைய செவியின் மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை அமைத்து விட்டான். அல்லாஹ் இவ்வாறு செய்த பின்னர், அவனை யாரால்தான் நேரான வழியில் செலுத்த முடியும்? நீங்கள் நல்லுணர்வு பெற வேண்டாமா? (அல்குர்ஆன் 45 : 23)
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலாவிடத்திலே நாம் பிரார்த்தனை செய்யவேண்டும்; நப்ஸுடைய தீங்கில் இருந்து நாம் பாதுகாக்க வேண்டும்.
ஒன்று,நப்ஸு எதை விரும்புகிறதோ அடக்கவேண்டும்.
இரண்டாவது,அதற்கு மாற்றமானதை நாம் செய்ய வேண்டும்.
ஷைத்தானை நாம் எப்போதும் நமது எதிரியாக எடுத்துக்கொண்டு, அவன் விரும்பக்கூடியது, அவன் சொல்லக்கூடியது, அவனுக்கு விருப்பமான வழிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இப்படி நாம் இருப்போமேயானால் அல்லாஹ்வுடைய அருளைக் கொண்டு நமது நப்ஸின் தீங்குகளிலிருந்து நம்முடைய நப்ஸின் கெடுதிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அல்லாஹ்விடத்தில் அதற்குண்டான பாதுகாப்பை நாம் எப்போதும் தேடிக் கொண்டிருப்போமாக!
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா என்னையும் உங்களையும் நப்ஸுடைய தீங்கிலிருந்து பாதுகாப்பு பெற்றவர்களாக, ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்பு பெற்றவர்களாக,
யாரை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய அருளிலே ரஹமத்திலே பாதுகாப்பிலே வைத்தானோ அத்தகைய நன்மக்களில் நம்மையும் ஆக்கி அருள வேண்டுமென்று என்று துஆ செய்கின்றேன்.
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سَعْدٍ الأَنْصَارِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَبِيعَةَ الدِّمَشْقِيِّ، قَالَ: حَدَّثَنَا عَائِذُ اللَّهِ أَبُو إِدْرِيسَ الخَوْلَانِيُّ، عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " كَانَ مِنْ دُعَاءِ دَاوُدَ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَالعَمَلَ الَّذِي يُبَلِّغُنِي حُبَّكَ، اللَّهُمَّ اجْعَلْ حُبَّكَ أَحَبَّ إِلَيَّ [ص:523] مِنْ نَفْسِي وَأَهْلِي، وَمِنَ المَاءِ البَارِدِ» (سنن الترمذي 3490 -)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/