HOME      Khutba      முஸ்லிம்களின் உயர்வு இட ஒதுக்கீட்டிலா? இஸ்லாமிலா? | Tamil Bayan - 314   
 

முஸ்லிம்களின் உயர்வு இட ஒதுக்கீட்டிலா? இஸ்லாமிலா? | Tamil Bayan - 314

           

முஸ்லிம்களின் உயர்வு இட ஒதுக்கீட்டிலா? இஸ்லாமிலா? | Tamil Bayan - 314


முஸ்லிம்களின் உயர்வு இட ஒதுக்கீட்டிலா? இஸ்லாமிலா?

ஜுமுஆ குத்பா தலைப்பு : முஸ்லிம்களின் உயர்வு இட ஒதுக்கீட்டிலா? இஸ்லாமிலா?

வரிசை : 314

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 24-01-2014 | 23-03-1435

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வை பயந்துகொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாக இந்த குத்பாவை அரம்பம் செய்கிறேன்.

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ் என்ற பேரரசனை,அந்த உண்மையான இறைவனை நம்பிக்கை கொண்டவர்கள்.

நாம் செய்யக்கூடிய எந்த செயலாக இருந்தாலும்,நமது உண்மையான இறைவனாகிய அந்த அல்லாஹ்வின் புறத்திலிருந்து வழிகாட்டுதல் வேண்டும்.

ரப்பு வழிகாட்டாத எந்த ஒரு செயலையும் எந்த ஒரு காரியத்தையும் ஒரு முஸ்லிமால் செய்ய முடியாது. அவன்தான் உண்மையான முஸ்லிம்.

فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

என்னிடமிருந்து உங்களுக்கு (என் தூதர்கள் மூலம்) நேர்வழி நிச்சயமாக வரும். (உங்களில்) எவர்கள் என் நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 38)

ஒரு முஸ்லிம், தன் தலைவர் ஒன்றைக் கூறுகிறார், தன்னுடைய குரு ஒன்றைக் கூறுகிறார், தன்னுடைய இமாம் ஒன்றைக் கூறுகிறார், அவன் கூறுகிறான், இவன் கூறுகிறான், என்று செல்வானேயானால் நிச்சயமாக அல்லாஹ்வின் வழிகாட்டல் இன்றி மக்களை யார் வழி நடத்துகிறார்களோ அவர்கள் இந்த உம்மத்தை நரக படுகுழியில் தள்ளி விடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

அல்லாஹ்வுடைய வழிகாட்டுதல் மட்டும் தான் நம்மை சொர்க்கத்தில் போய் சேர்க்க முடியும்.நமது இம்மையின் மறுமையின் வெற்றியை தேடித் தர முடியும்.

அல்லாஹ்வின் வழிகாட்டுதல் இல்லாத,அதற்கு முரணான வழிகாட்டுதல்,அது யார் புறத்தில் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட ஒரு தலைவரிடத்திலிருந்து வந்தாலும் சரி, அந்த வழிகாட்டுதல் நமக்கு நேர்வழியை தராது; நமக்கு வெற்றியை தராது; நமக்கு கண்ணியத்தை தராது.

மாறாக, அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். அதனுடைய முடிவு இம்மையிலும் மறுமையிலும் கஷ்டமாகத் தான் இருக்கும்.

அல்லாஹ்,இந்த முஸ்லிம்களுடைய கண்ணியத்திற்கு அவன் பொறுப்பேற்று இருக்கிறான். இந்த முஸ்லிம்களுடைய ஆட்சி அதிகாரத்திற்கு அவன் பொறுப்பேற்று இருக்கிறான். இந்த முஸ்லிம்களுடைய நல்ல வாழ்க்கைக்கு அல்லாஹ் பொறுப்பேற்று இருக்கிறான்.

இந்த உலகத்தில் அனைத்து படைப்புகளையும் பார்க்கிறோம் அதில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கண்ணியத்தை கொடுத்திருக்கிறான்,உயர்வை கொடுத்திருக்கிறான்.

காரணம் அவர்களுக்கு அப்படி ஒரு உயர்வான தீனை கொடுத்திருக்கிறான். அப்படி உயர்வான ஒரு வழிகாட்டியான இறுதித் தூதரை கொடுத்திருக்கிறான்.

முஹம்மது அவர்களை கிடைக்கப்பெற்ற ஒரு சமுதாயம்,அவர்கள் மூலமாக குர்ஆனையும் சுன்னாவையும் பெற்ற ஒரு சமுதாயம்.

அது வழி கெடுகிறது என்றால், அது பாதை தவறுகிறது என்றால், அது நிச்சயமாக அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதரை அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதத்தை அவர்கள் புரியவில்லை, அவர்கள் படிக்கவில்லை.

தங்களது பிரச்சனைகளை அந்த வேதத்தை கொண்டும் சுன்னாவைக் கொண்டும் அவர்கள் தீர்த்துக் கொள்ள வில்லை.

அல்லாஹ் கண்ணியத்திற்குரிய அந்த வாக்கை வெற்றிக்குரிய வாக்கை எதன் அடிப்படையில் கொடுக்கிறான்?

சோதனை ஏன் வருகிறது? சோதனையை எப்படி எதிர்கொள்வது? என்ற அல்குர்ஆனில் வழிகாட்டுதல் நமக்கு இல்லையா?

எத்தனை வசனங்களில் அல்லாஹ் இந்த உம்மத்தை குறித்துப் பேசுகிறான்.

ரசூலுல்லாஹ் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை பாருங்கள். எந்த ஒரு நபியும் சிரமப்படாத சிரமத்தை நபி அவர்கள் சந்தித்தார்கள்.

அவர்களும் அவர்களது தோழர்களும் ஒரு வருடம் அல்ல, ஒரு மாதம் அல்ல, பதிமூன்று வருடங்கள் தொடர்ந்து சிரமப்பட்டார்கள். கடைசியில் அவர்கள் தனக்குப் பிரியமான அந்த ஊரை விட்டும் வெளியேற்றப்பட்டார்கள்.

கண்ணியத்திற்குரிய தோழர்கள் பெரிய செல்வந்தர்களாக இருந்தவர்கள். உடுத்த உடையை தவிர, இந்த உலகத்தில் அவர்களுக்கு எதுவும் இல்லாத வகையில் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அப்பேற்ப்பட்ட பெரிய சோதனைகளுக்குப் பிறகு அல்லாஹ் அவர்களுக்கு மதினாவை கொடுத்தான், மதினாவில் கண்ணியத்தை கொடுத்தான், ஆட்சியை கொடுத்தான். அதுவும் உடனடியாக கொடுக்கவில்லை;

மதினாவிற்கு வந்ததற்கு பிறகு கூட, அவர்கள் எண்ணிக்கை குறைவானவர்களாகவும்  யஹூதிகள் அதிகமாகவும் இருந்தார்கள்; எல்லோருக்கும் மத்தியில் ஒரு பயமான சூழ்நிலையில் வாழ்க்கையை தொடங்கி இறுதியில் ஒரு புரட்சி கண்டார்கள். தவ்ஹீதை நிலைநாட்டினார்கள். இஸ்லாமிய ஆட்சிய நிலை நிறுத்தினார்கள்.

காரணம், அவர்கள் முழுமையாக தங்கள் வாழ்க்கையை அல்லாஹ்விற்காக அமைத்துக் கொண்டார்கள். தீனுக்காக வாழ்ந்து துன்யாவை வென்றார்கள்.

இன்று நமது நிலைப்பாடு,துனியாவுக்காக நாம் வாழ்கிறோம். அல்லாஹ் துனியாவை நமக்குக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

மாற்றார்கள், முஸ்லிம்களிடத்தில் எங்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள், உங்கள் ஆட்சியில் நாங்கள் நிம்மதியாக வாழ்வோம் என்று முஸ்லிம்களிடத்தில் தங்களுக்கு பாதுகாப்பை வேண்டினார்கள்.

ஆனால், இன்று முஸ்லிம் தனது பாதுகாப்பை மாற்றார்களிடத்தில் கேட்கிறான். யூதர்கள் கிறிஸ்துவர்கள் மஜூஸிகள் முஷ்ரிக்குகளிடத்தில் கேட்கிறான். அல்லாஹ் யாரிடத்தில் பாதுகாப்பு தேடாதீர்கள் என்று சொன்னானோ அவர்களிடம் கேட்கிறான்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاءَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் 5 : 51)

உங்களுடைய பலத்தை நீங்கள் உங்களிடமிருந்தே தேடுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.உங்களுடைய வலிமையை நீங்கள் உங்களிடமே உருவாக்குங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

ஸூரத்துல் அன்ஃபாலை படித்துப் பாருங்கள்.

وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ وَمِنْ رِبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِنْ دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ (60) وَإِنْ جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ

அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், லாயத்தில் (திறமையான) குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்கள் எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம். இவர்களைத் தவிர (எதிரிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்தான் அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் (அதன் கூலியை) உங்களுக்கு முழுமையாகவே அளிக்கப்படும்; (அதில்) ஒரு சிறிதும் (குறைவு செய்து) நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.

(நபியே) அவர்கள் சமாதானத்திற்கு இணங்கிவந்தால், நீரும் அதன் பக்கம் இணங்கிவருவீராக. அல்லாஹ்விடமே பொறுப்பு சாட்டுவீராக; நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 8 : 60,61)

ஒரு முஃமின்,கல்வியில் ஆற்றலை உருவாக்க வேண்டும். உடல் வலிமையில் ஆற்றலை உருவாக்க வேண்டும். பொருளாதாரத்தில் ஆற்றலை உருவாக்க வேண்டும். ஏனென்றால், அல்லாஹ் கொடுப்பதாக வாக்களித்து இருக்கிறான்.

ஒரு காபிருக்கு அல்லாஹ் வாக்களிக்கவில்லை. எந்த ஒரு முஸ்லிம் அல்லாஹ்விற்கு இணை வைக்காமல் இருக்கிறானோ அவனுக்கு அல்லாஹ் இந்த இந்த துனியாவை கொடுப்பதாக வாக்களித்து இருக்கிறான்.

வெறும் சாதாரண செல்வத்தை மட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்தை கொடுப்பதாக வாக்களித்து இருக்கிறான்.

ஒரு முஸ்லிம் நீதமானவன். அல்லாஹ்வை பயப்படக் கூடியவன். ஒழுக்கமானவன். இவர்களிடத்தில் ஆட்சி அதிகாரம் இருந்து இவர்கள் ஒன்றிணைந்து இருந்தால் அதன் மூலம் மூலமாக அசத்தியம் அடங்கியிருக்கும்.

அதன் மூலமாக ஒழுங்கீனம் இல்லாமல் இருக்கும். அதனால் ஏற்படக் கூடிய கலாச்சார சீரழிவுகள் இல்லாமல் இருக்கும்.

அவர்களிடத்தில் ஆட்சி அதிகாரம் சென்றுவிட்டால் அநியாயம் பெருகிவிடும். சமூக சீரழிவுகள் பரவ ஆரம்பிக்கும்.

எனவே, அல்லாஹ் சொல்கிறான்; முஸ்லிமே! நீ பலமாக இரு, அதனால் உன்னுடைய பலத்தை காஃபிரிடமிருந்து தேடாதே, உன்னுடைய பலத்தை அல்லாஹ் உன்னிடமே வைத்திருக்கிறான்.

ஒரு சாதாரண முஸ்லிமால் என்ன செய்ய முடியும்? என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நபித்தோழர்கள் எதை சாப்பிட்டுவிட்டு ஜிஹாத் செய்தார்கள்? அவர்கள் ஜிஹாது செல்லக்கூடிய நேரத்தில் அவர்களுக்கு ஒரு வேளை உணவு கிடைக்கும்.

ஒரு பயணத்திற்கு சென்றால் ஒரு ஸஹாபிக்கு ஒரு நாளைக்கு ஒரு பேரிச்சம் பழம் கிடைக்கும். அடுத்த நாளைக்கு ஒரு பேரிச்சம் பழத்தை இரண்டு சஹாபிகள் பங்கிட்டு சாப்பிடுவார்கள். அடுத்த நாளுக்கு அந்தப் பேரிச்சம் பழத்தின் கொட்டையை மட்டும் சப்புவான். அடுத்த நாளைக்கு அதுவும் இருக்காது.

அங்கு இருக்கக்கூடிய மரத்தின் இலையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவார்கள். இது தான் சஹாபாக்கள் உடைய உணவு.

அவர்களிடமிருந்த ஆயுதம் என்ன? ஏதோ சில போர்களில் கனிமம் ஆக கிடைத்த ஆயுதத்தை சஹாபாக்கள் வைத்திருந்தார்கள். அவர்கள் காலத்தில் ஆயுத தொழிற்சாலை என்று எங்குமே இல்லை.

எங்காவது படித்ததுண்டா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களுக்கு ஆயுதம் செய்யக்கூடிய தொழிலை கற்றுக் கொடுத்தார்கள் என்று. ஆயுத தொழிற்சாலைகளை முஸ்லிம்கள் வைத்திருந்தார்கள் என்று?

கனிமத்தில் கிடைத்ததை வைத்திருப்பார்கள். அவ்வளவுதான். ஆனால், அவர்களுடைய வலிமை எங்கிருந்தது? அவர்களுடைய லா யிலாஹா இல்லல்லாஹ்வில் இருந்தது. அவர்களது தக்பீரில் இருந்தது.

குறிப்பாக எதிரிகள் முன்னால் நிற்கும் போது துணிவாக நின்றார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக நின்றார்கள். அதில் அவர்களுக்கு வலிமையை அல்லாஹ் கொடுத்தான். சஹாபாக்களை பார்க்கும்பொழுது எதிரிகளின் உள்ளத்தில் பயத்தை போட்டான்.

سَنُلْقِي فِي قُلُوبِ الَّذِينَ كَفَرُوا الرُّعْبَ بِمَا أَشْرَكُوا بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَمَأْوَاهُمُ النَّارُ وَبِئْسَ مَثْوَى الظَّالِمِينَ

நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் அதிசீக்கிரத்தில் நாம் திகிலை உண்டுபண்ணி விடுவோம். ஏனென்றால், அவர்கள் இணைவைப்பதற்கு அல்லாஹ் எவ்வித ஆதாரமும் அவர்களுக்கு அளிக்காதிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்கள். இவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். (நரகத்திலும்) அநியாயக்காரர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது. (அல்குர்ஆன் 3 : 151)

உங்கள் உள்ளத்தில் ஈமான் இருக்குமானால் உங்களை எதிர்க்கக்கூடிய முஷ்ரிக்குகள் உள்ளத்தில் நாம் பயத்தை போடுவோம்.

அல்லாஹ் பயத்தை போடாமல் அவர்கள் பயப்பட மாட்டார்கள்.காரணம்,நம்மைவிட அவர்களிடம் ஆயுதம் அதிகமாக இருக்கும்.நம்மைவிட அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள்.

அவர்கள் நம்மைப் பார்த்து பயப்பட வேண்டும் என்றால் அதற்கு என்ன தேவை? நமது உள்ளத்தில் ஈமான் தேவை.எது அவர்களிடத்தில் இல்லையோ அது நமக்குத் தேவை.

அவர்களிடத்தில் ஈமான் இல்லை. நம்மிடத்தில் இமான் இருக்க வேண்டும். அவர்களுக்கு ஆயுதத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. நமக்கு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்.

அவர்களோ நபியை மறுத்தவர்கள். நாம் நபியை ஏற்றுக்கொண்டவர்கள்.

ஒரு காஃபிர் அல்லாஹ்வுக்கும் எதிரி. அவன் தூதருக்கும் எதிரி. அவன் மலக்குகளுக்கும் எதிரி.

இன்னும், இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அல்லாஹ்வின் படைப்பினங்கள் அனைத்திற்கும் காஃபிர் எதிரி.

அந்த எதிரிகளை நீங்கள் அறியமாட்டீர்கள். சமயசந்தர்ப்பங்கள் பார்த்து அவர்கள் உங்களுக்கு சதித் திட்டங்கள் தீட்டுவார்கள். அவர்களை அல்லாஹ் மட்டுமே அறிவான்.

மூமீன்களே!உங்களது கடமை என்ன?அல்லாஹ் உங்களுக்கு எதை கொடுத்தானோ அதை அல்லாஹ்வுடைய தீனுக்காக செலவு செய்யுங்கள். அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக நீங்கள் செலவு செய்யுங்கள். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை வளர்க்க நீங்கள் பாடுபடுங்கள். (அல்குர்ஆன் 8 : 60,61)

இந்த வசனத்தைக் கொண்டு ஒரு சில கருத்துக்கள் நாம் படிப்பினை பெற்று செல்வோம். அல்லாஹ் உங்களது பலத்தை உங்களிடம் தேடுங்கள் என்று சொல்கிறான். ஆனால், நாம் சோம்பேறியாக இருக்கிறோம்.

ஒரு அலட்சியப்போக்கு உடையவர்களாக நம்மை நாமே வீணாக்க கூடியவர்களாக நம் சமுதாயத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

நம் சமுதாயத்திற்கு என்ன தெரியும்?ஞாயிற்றுக்கிழமை ஆகிவிட்டால் கல்யாணம் என்ற பெயரில் விருந்து சாப்பிட தெரியும். ஞாயிற்றுக்கிழமை தூங்குவதற்கு தெரியும். ஏதாவது விடுமுறை நாள் என்றால் சுற்றுவதற்கு தெரியும்.

முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காக, முஸ்லிம்களின் இளைஞர்களை வலிமை உடையவர்களாக ஆக்குவதற்காக நம்மிடத்தில் ஏதாவது ஒரு பயிற்சி இருக்கிறதா?

கோஷங்களும் சில கூப்பாடுகளும் போட்டுவிட்டு பொட்டலத்தை சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்கு தான் பெரும்பாலான அமைப்புகள் இருக்கின்றன..

முஸ்லிம்களை அல்லாஹ்வுடைய மார்க்கத்தை கொண்டு வீரம் உடையவர்களாக முஸ்லிம்களை நபி காட்டிய வழிமுறைகளில் ஒற்றுமையுடையர்களாக மாற்றுவதற்கான அமைப்போ அதற்குண்டான வழிமுறையோ நம்மிடத்தில் இல்லை.

அடுத்து, அல்லாஹ் என்ன சொல்கிறான்?

நீங்கள் உங்களுடைய தீனிற்க்கு செலவு செய்ய தயாராக இருக்கிறீர்களா?உங்களது மார்க்கத்தை பாதுகாப்பதற்கு வளர்ப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.

ஆனால், முஸ்லிம்களில் அல்லாஹ்வுடைய தீன் வளர்வதில் செலவு செய்பவர்கள் குறைவானவர்களாக இருக்கிறார்கள்.

முஸ்லிமுடைய எண்ணம் எப்படி இருக்கிறது? பணம் ஈட்டும் பொழுதும் செலவு செய்யும் போதும் தான் என்ற எண்ணம் மட்டும்தான் அவனுக்கு இருக்குமே தவிர, எனது தீனுக்காக நான் என்ன செலவு செய்தேன்?

சில சில்லரை காசுகளை தர்மமாக ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, தம்மைத் திருத்திக் கொள்வார்கள். அல்லாஹ் நம்மை பொருந்திக் கொள்வான் என்று நீனைத்துக்கொள்வார்கள்.

நீங்கள் எப்படி உங்களது சுய தேவைக்காக, உங்களது படிப்பிற்காக, உங்களுக்கு வீட்டிற்காக, உங்களது செல்வத்தை ஒதுக்குகிறீர்களோ அதுபோன்று அல்லது அதற்கு சமமாக அல்லாஹ்வுடைய தீனுக்காக நீங்கள் செலவு செய்ய மாட்டீர்களோ உங்களது செல்வத்திற்கும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கிடையாது. உங்களது உயிருக்கும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பு கிடையாது.

அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த செல்வம் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பாதுகாக்க பயன்படவில்லை என்றால் உங்களுடைய செல்வத்திற்கு எந்த பாதுகாப்பும் கிடையாது.

அல்லாஹ் கூறுகிறான்:

إِنْ يَسْأَلْكُمُوهَا فَيُحْفِكُمْ تَبْخَلُوا وَيُخْرِجْ أَضْغَانَكُمْ (37) هَاأَنْتُمْ هَؤُلَاءِ تُدْعَوْنَ لِتُنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ فَمِنْكُمْ مَنْ يَبْخَلُ وَمَنْ يَبْخَلْ فَإِنَّمَا يَبْخَلُ عَنْ نَفْسِهِ وَاللَّهُ الْغَنِيُّ وَأَنْتُمُ الْفُقَرَاءُ وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ

அவ்வாறு, அவன் (தனக்காக) உங்களிடம் கேட்டு வற்புறுத்தினாலும் (அதைக் கொடுக்காது) நீங்கள் கஞ்சத்தனம் செய்வீர்கள்; (அந்நேரத்தில்) அல்லாஹ் உங்கள் கெட்ட எண்ணங்களை வெளியாக்கி விடுவான்.

 (மக்களே!) நீங்கள் நன்கு கவனத்தில் வையுங்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய அழைக்கப்படும் சமயத்தில், கஞ்சத்தனம் செய்பவரும் உங்களில் இருக்கிறார். அவ்வாறு எவரேனும் கஞ்சத்தனம் செய்தால், அவர் தனக்குக் கேடாகவே கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ்வோ தேவையற்றவன். நீங்கள் தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். (அவனுடைய கட்டளைகளை) இன்னும் நீங்கள் புறக்கணித்தால், (உங்களை அழித்து) உங்களை அல்லாத மக்களை (உங்கள் இடத்தில்) மாற்றி (அமைத்து) விடுவான். பின்னர், அவர்கள் உங்களைப் போல் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் 47 : 37,38)

இன்று,மாற்றார்கள் நம்மை விட குறைவான எண்ணிக்கையில் இருந்தவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு கண்ணியம் இருக்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. அவர்கள் அவர்களுடைய தேவையை யாரிடமும் கேட்டுப் பெறுவதில்லை.

அதற்கு காரணம், அவர்கள் தங்களது தீனுக்காக செலவு செய்கிறார்கள். தன்னுடைய வழிபாட்டுத்தலங்களோடு தொடர்புடைய மக்களுக்காக அவர்களில் வறியவர்களுக்கு ஏழைகளுக்காக அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால், முஸ்லிம்களுடைய மஸ்ஜிதில் ஏதாவது ஒரு பொறுப்பு இருக்கிறதா?ஏதாவது ஒரு அமைப்பு இருக்கிறதா? மஸ்ஜிதில் இருந்து அவர்களுக்கு படிப்பு செலவிற்கு செலவு செய்யப்படும், அவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என்று இன்று நமது மஸ்ஜிதுகளில் அதற்கான ஏற்பாடு இருக்கிறதா?

ஆண்டில் ஒருமுறை மீலாது கொண்டாடவும், மஸ்ஜிதில் கூட்டாக சேர்ந்து பிரியாணி சாப்பிடவும், இதுதவிர முஸ்லிம்களுடைய மஸ்ஜிதில் வேறு செயல்பாடு கிடையாது.

அங்கு ஏழைகளுக்கு இடமில்லை, வறியவர்களுக்கு இடமில்லை. அங்கு தேவையுள்ளவர்கள் அங்குள்ள இமாமை அல்லது பள்ளி முத்தவல்லியை அணுகிய எனது மகனுக்கு படிப்பு தேவை இருக்கிறது, மருத்துவ தேவை இருக்கிறது, முஸ்லிம்களில் செல்வந்தர்கள் மூலமாக எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்க முடியுமா? பிச்சைக்காரர்களை போன்று வெளியில் நிறுத்திவிடுவார்கள். யாசகம் கேட்டு ஏதாவது பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிடுவார்கள்.

அவர்களுடய தீன் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் முஸ்லிம்களில் ஏழைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

முஸ்லிம்கள் பலம் உள்ளவர்களாக வலிமையுள்ளவர்களாக இருக்கவேண்டும்.இப்பொழுது, முஸ்லிம்கள் காஃபிர்களைப் போன்று தங்களது கலாச்சாரத்தை மாற்றிக் கொண்டார்கள்.

அவர்களிடத்தில் சமுதாயத்திற்கு பயன்படக் கூடிய கல்விகள் இருக்கின்றதே? அதைக் கற்று அதில் முன்னேறி அவர்களுக்கு சவால் விடுபவர் நம்மில்  யாரும் தயார் கிடையாது.

காரணம், அதற்கு உழைப்பு தேவை. ஆனால், முஸ்லிம்கள் இந்த காபிர்களிடத்தில் எதில் போட்டி போடுகிறார்கள்?

நீ சீரழிவதை விட நான் சீர் அழிவேன், அதைக்கொண்டு தான் போட்டி போடுகிறார்களே தவிர, ஆக்கபூர்வமாக நாம் நமது தீனுக்காக என்ன செய்ய வேண்டும், எப்படி முன்னேற்ற வேண்டும் என்று அதில் யாரும் முன்னேறுவது கிடையாது.

அல்லாஹ் சொல்கிறான்:

நீங்கள் இப்படி இருந்தால் காஃபிர்கள் பணிந்து வருவார்கள். நீங்கள் பணிய வேண்டிய தேவையில்லை.

இப்படி எத்தனை வசனங்களில் அல்லாஹ் சொல்லியிருக்கிறான்.

நீங்கள் வலிமையாக இருங்கள், பலமாக இருங்கள், மார்க்கத்தையும் உங்களையும் பாதுகாத்து கொள்ளுங்கள், அவர்கள் உங்களிடத்தில் பணிந்து வருவார்கள். அப்படி பணிந்து வந்தால் நீங்களும் சமாதானத்தை தேடுங்கள்.நீ ங்களும் அவர்களுக்குப் பணிந்து போங்கள். அவர்கள் உடன்படிக்கைக்கு வந்து விட்டால் நீங்களும் உடன்படிக்கைக்கு வந்து விடுங்கள்.

அல்லாஹ் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்.அவன் நன்கு கேட்கக் கூடியவன்.அவன் நன்கு அறிய கூடியவன். (அல்குர்ஆன் 8 : 61)

இது, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு சொல்லக்கூடிய சட்டம். இப்படி பல வசனங்களில் நமது சிந்தனைகளை அல்லாஹ் பலப்படுத்துகிறான்.

அல்லாஹ் துணை இருக்கிறான் என்று அவன் நமக்கு வாக்களிக்கிறான். நாம் அவர்களிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ் சொல்கிறான் :

وَلَنْ يَجْعَلَ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا

சத்தியமாக அல்லாஹ் ஒருக்காலும் முஃமின்களுக்கு எதிராக காபீர்களுக்கு பலத்தை கொடுக்கவே மாட்டான்.(அல்குர்ஆன் 4 : 141)

அல்லாஹ்வை விட உண்மை பேசுபவர்கள் யார் இருக்க முடியும்? அல்லாஹ்வை விட நேரான வார்த்தை கூறுபவர்கள் யார் இருக்க முடியும்?

மேலும், அல்லாஹ் கூறுகிறான் :

وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ

முஃமின்களே!உங்களுக்கு உதவுவது என் மீது கடமை. (அல்குர்ஆன் 30 : 47)

எனக்கு உதவி செய்பவர்களுக்கு சத்தியமாக நான் உதவி செய்வேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.அப்படிப்பட்ட ரப்பு நம்மைக் கைவிட்டு விடுவானா?

மேலும், அல்லாஹு ரப்புல் ஆலமீன் கூறுகிறான் :

قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ سُنَنٌ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ (137) هَذَا بَيَانٌ لِلنَّاسِ وَهُدًى وَمَوْعِظَةٌ لِلْمُتَّقِينَ (138) وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

உங்களுக்கு முன்னரும் (இப்படி) பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. (ஆகவே,) நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இறைவனுடைய வசனங்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எப்படி ஆனது என்பதைப் பாருங்கள். இது (பொதுவாக) மனிதர்களுக்கு (உண்மையைத்) தெளிவாக்கக் கூடியதும், (சிறப்பாக) இறையச்சமுடையவர்களுக்கு நேர்வழி காட்டியும், நல்லுபதேசமும் ஆகும். (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள். (அல்குர்ஆன் 3 : 137-139)

இன்று, முஸ்லிம்களுடைய நிலைப்பாடு என்ன என்றால், நாம் காஃபிர்களோடு இருந்து, இறை நிராகரிப்பின் அடிப்படையில் போராடி, அவர்களின் வழியிலேயே சென்று அவர்களது ஆட்சியை பிடிப்போம். பதவியை பெறுவோம் என்று அந்த குழுவின் வழியில் போராடுகிறார்கள் தவிர, அல்லாஹ்வுடைய தீனின் வழியில் அல்ல.

அல்லாஹ்வுடைய தீன் பாழாகிக்கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுடைய தீனை பாழாக்குவதற்காக முஸ்லிம்களின் இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அல்லாஹ்வுடைய தீன் புறக்கணிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது

அல்லாஹு தஆலா கூறுகிறான் :

وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ (55) وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ (56) لَا تَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا مُعْجِزِينَ فِي الْأَرْضِ وَمَأْوَاهُمُ النَّارُ وَلَبِئْسَ الْمَصِيرُ

(மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை(ப் பூமிக்கு) அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதியாக்கி வைப்பதாகவும், அவன் இவர்களுக்கு விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். (அன்றி) அவர்கள் தன்னையே வணங்கும்படியாகவும், எதையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். இதன் பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள்தான்.

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்தும் கொடுத்து (அவனுடைய) தூதரை (முற்றிலும்) பின்பற்றி வாருங்கள். நீங்கள் (இறைவனுடைய) அருளை அடைவீர்கள்.

(நபியே!) நிராகரிப்பவர்கள் பூமியில் (ஓடி ஒளிந்து தப்பித்துக்கொண்டு) நம்மைத் தோற்கடித்து விடுவர் என நீர் எண்ண வேண்டாம். (அவர்களைத் தண்டனைக் குள்ளாக்கியே தீருவோம். மறுமையில்) அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது. (அல்குர்ஆன் 24 : 55-57)

வசனத்தின் கருத்து : இது அல்லாஹ்வுடைய வாக்கு. நீங்கள் ஈமானை பேணுங்கள். அந்த ஈமானின் அடிப்படையில் நல்லமல்களை செய்யுங்கள். அப்படி செய்தால், அல்லாஹ் உங்களுக்கு கொடுக்கக் கூடிய தகுதி, அவன் உங்களை பூமியின் கலீபாவாக ஆக்குவான்.

இன்று, தொழுகை பாழாக்கப்படுகிறது, விபச்சாரம் செய்யப்படுகிறது, மது குடிக்கப்படுகிறது, நாளுக்குநாள் அல்லாஹ்வுடைய சட்டம் மீறப்பட்டுக் கொண்டிருக்கிறது.

யார் ஈமானைப் பாதுகாத்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் ஆட்சியை தருகிறான். ஆட்சியை அல்லாஹ்வைத்தவிர யாரும் கொடுக்க முடியாது.அல்லா இழிவை கொடுத்தால் யாரும் கண்ணியத்தைக் கொடுக்க முடியாது.

குர்ஆனைப் படித்து பாருங்கள். அல்லாஹ் கூறுகிறான் :

إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர் எவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்விடமே நம்பிக்கையாளர்கள் பொறுப்பை ஒப்படைக்கவும். (அல்குர்ஆன் 3 : 160)

யார் வாக்கு கொடுத்தாலும் சரி,எத்தனை அரசாங்கங்கள் வந்து வாக்கு கொடுத்தாலும் சரி, ஓ முஸ்லிமே!நீ அல்லாஹ்வுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றாத வரை, நீ உன் ரப்புக்கு கட்டுப்பட்டவனாக மாறாதவரை, உலக மக்கள் எவரும் உனக்கு உதவியாளராக மாறமாட்டார்கள்.

வாக்கு கொடுப்பார்கள். ஆனால், வாக்கை மீறுவார்கள். அவன் வாக்குறுதியை நீ மீறிக் கொண்டிருக்கிறாய்.

ஆகவே, நீங்கள் தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஸகாத்தைக் கொடுங்கள்; ரசூலுக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் கருணை காட்டப் படுவீர்கள்.

அல்லாஹ்வை நிராகரிக்கின்ற காபிர்கள், இந்த பூமியின் ஆட்சி அதிகாரத்தில் எவ்வளவுதான் சென்றாலும், பேரரசராக வல்லரசாக தங்களை மாற்றிக் கொண்டாலும் சரி, நீங்கள் அவர்களை பார்த்து பயப்படாதீர்கள். அவர்கள் ரப்பை தோற்கடித்து விடுவார்கள் என்று எண்ணாதீர்கள்.

ஏனெனில், உங்களது ரப்பு நானாக இருக்கிறேன். எனது கையில் சூரியன் இருக்கிறது. சந்திரன் இருக்கிறது. பூமி இருக்கிறது.

நீங்கள் எனக்கு கட்டுப்பட்டால் அவர்களை பணிய வைப்பது பலவீனப்படுத்துவது என்னுடைய பொறுப்பு என்று அல்லாஹ் சொல்கிறான்.

அந்த காஃபிர்களுக்கு இம்மையில் மட்டுமல்ல, நாளை மறுமையிலும் அவர்களுக்கு கெட்ட முடிவு இருக்கிறது என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஆகவே, குர்ஆனை நாம் படிக்கவேண்டும். அல்லாஹ் நமக்கு வழிகாட்டுதலை கொடுத்திருக்கிறான்.

இன்றைய முஸ்லிம்கள் பிளவுபட்டு, தங்களுக்குள் கோஷ்டிகளாக, ஒருவர் ஒருவரை இகழ்ந்து கொண்டு, ஒருவர் ஒருவரை சண்டை போட்டுக்கொண்டு, இந்த உம்மத்தை உயர்த்துவதற்காக எதை செய்தாலும் சரி, இந்த உம்மத்திற்கு கண்ணியம் கிடைக்காது. பாதுகாப்பும் கிடைக்காது.

முதலாவதாக, குர்ஆன் சுன்னாவின் வழியில் இந்த சமுதாயம் ஒன்றுசேர வேண்டும். அல்லாஹ்வுடைய தீனை பாதுகாத்தால் அல்லாஹ் உங்களுடைய துனியாவை பாதுகாப்பான்.

அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக! அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/