HOME      Khutba      நல்ல முடிவை வேண்டுவோம் | Tamil Bayan - 183   
 

நல்ல முடிவை வேண்டுவோம் | Tamil Bayan - 183

           

நல்ல முடிவை வேண்டுவோம் | Tamil Bayan - 183


நல்ல முடிவை வேண்டுவோம்

ஜுமுஆ குத்பா தலைப்பு : நல்ல முடிவை வேண்டுவோம்

வரிசை : 183

இடம் : எஸ்.எம்.ஜே பிளாசா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 28-05-2010 | 14-06-1431

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ்வின் அச்சம் நன்மைகளின் பக்கம் தம்மைத் தூண்டக் கூடியது. அல்லாஹ்வை யார் பயந்துக் கொண்டாரோ நல்ல முடிவை அவர் வாழ்க்கையில் பெறுவார். அல்லாஹ் அவரை இம்மையிலும் பாதுகாப்பான் மறுமையிலும் பாதுகாப்பான்.

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இன்றைய ஜும்ஆவில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயமாவது, அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்ட ஒரு முஃமின் லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று மனப்பூர்வமாக அல்லாஹ்வை பயந்து மொழிந்த ஒரு முஸ்லிம் இந்த தூய திருக்கலிமாவின் மீதே தன் மரணம் அமைய வேண்டும் என்பதற்காக என்ன முயற்சிகள் செய்ய வேண்டும்?

தன் முடிவு அல்லாஹ்விடத்தில் நல்ல முடிவாக அமைய வேண்டும். குர்ஆனில் ஹதீஸில் இதைப் பற்றி சொல்லும் போது ஹுஸ்னுல் ஹாதிமா, ஹுஸ்னுல் ஆகிபா என்று சொல்லப் படுகிறது.

நம்முடைய வாழ்க்கை முடியும்போது அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாக,  மறுமையை நம்பிக்கை கொண்டவர்களாக, நம்முடைய இறை நம்பிக்கையில் இறை நிராகரிப்பை கலக்காதவர்களாக, இணைவைப்பை கலக்காதவர்களாக, நயவஞ்சகத்தை கலக்காதவர்களாக நாம் எப்படி மரணிப்பது?

அதுபோன்று கெட்ட முடிவை விட்டு அல்லாஹ்விடத்தில் எப்படி நாம் பயந்து கொள்வது, பாதுகாப்புத் தேடுவது?

வாழும்போது முஸ்லிம்களாக வாழ்ந்தவர்கள் மஸ்ஜித்களில் தொழுதவர்கள் எத்தனையோ நல்ல காரியங்களை செய்தவர்கள், ஆனால் அவர்கள் இறக்கும் போது முஸ்லிமான நிலையிலேயே மரணித்தார்களா? என்று பார்க்கும்போது நாளை மறுமையில் தெரிய வரும்.

எத்தனையோ மக்கள் நம்மோடு தொழுது இருப்பார்கள், நம்மோடு நோன்பு வைத்திருப்பார்கள், ஹஜ் செய்திருப்பார்கள். நாளை மறுமையில் அல்லாஹ் அவர்களை காஃபிர்கள் -இறை மறுப்பாளர்கள் கூட்டத்தில், அல்லது முனாஃபிக் என்ற நயவஞ்சகன் உடைய கூட்டத்தில் சேர்த்திருப்பான். (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!)

அன்பிற்குரியவர்களே! நல்லவர்கள் தங்கள் முடிவை பயந்து கொண்டிருப்பார்கள். பாவிகள் பயப்பட மாட்டார்கள்.

அல்லாஹுத்தஆலா இந்த முடிவைப் பற்றி மரணத்தின் எச்சரிக்கை குறித்து மறுமையின் நிலையை குறித்து நமக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறான்.

قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ

(நபியே! அவர்களை நோக்கி,) கூறுவீராக: ‘‘நீங்கள் வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாகப் பிடித்துக் கொள்ளும். பின்னர், மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனிடம் கொண்டு போகப்பட்டு, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 62 : 8)

இந்த உலகத்தில் மனிதன் விரும்பாத ஒன்று மரணம். இந்த மரணத்திலிருந்து தப்பிப்பதற்காக வாழ்க்கையில் தான் சேகரித்த அத்தனை செல்வங்களையும் செலவழிக்க அவன் தயாராக இருக்கிறான்.

ஆனால் இந்த வாழ்க்கையில் இந்த உலகத்தில் அவன் நிரந்தரமானதை அடைய முடியாது. நிச்சயம் ஒரு நாள் மரணித்து ஆக வேண்டும்.

மரணத்தோடு வாழ்க்கை முடிந்து விடுமா?

அன்பிற்குரியவர்களே! அலீ  ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் சொல்கிறார்கள் :

((الناس نيام فإذا ماتوا انتبهوا))

மக்கள் எல்லாம் இப்பொழுது தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இறக்கும் போது விழித்துக் கொள்வார்கள்.

அதாவது எப்படி தூக்கத்தில் இருப்பவனுக்கு வெளி வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது தெரியாதோஅதுபோன்று தான் கப்ரில் என்ன நடக்கிறது, மறுமையில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது எல்லாம் நமக்கு தெரியாது.

எத்தனையோ பேரை நாம் கப்ரில் அடக்கம் செய்கிறோம். அங்கே என்ன நடக்கிறது என்பதை யார் அறிவார்கள் அல்லாஹ்வை தவிர.

அல்லாஹ் என்றால் யார்? என்று இன்று எத்தனை முஸ்லிம்கள் அல்லாஹ்வை அறிந்திருக்கிறார்கள்.

எத்தனை முஸ்லிம்கள் அல்லாஹ்வுடைய தன்மைகளை புரிந்திருக்கிறார்கள். இன்று எத்தனை முஸ்லிம்கள் அல்லாஹ் என்று பெயர் கூறப்படும் போது அவர்களுடைய உள்ளங்கள் நடுங்குகின்றன.

முஃமின்களுடைய நிலமை என்ன?

ஒரு முஃமின் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவன். மறுமையை நம்பிக்கை கொண்டவன். அல்லாஹ்வின் ஆற்றலை அவன் வல்லமையை நம்பிக்கை கொண்டவன் அல்லாஹ்வை பற்றி பேசும்போது அவனது உள்ளங்கள் பயம் கொண்டிருக்க வேண்டும்.

அல்லாஹ் என்ற பெயர் உச்சரிக்கப்படும் போது, அல்லாஹ்வின் வல்லமைப் பற்றி பேசும் போது, அல்லாஹ்வின் உயர்வை பற்றி பேசப்படும் போது, ஒரு முஃமின் நடுங்கிக்கொண்டே இருப்பான்.

அன்பிற்குரியவர்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்கிறான் : நீங்கள் யாரிடத்தில் வர இருக்கிறீர்கள். அந்த அல்லாஹ்விடத்தில் நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.

அவனுக்கு எதுவும் மறைந்ததல்ல. அவன் உங்களுடைய ரகசியங்களை அறிகிறான். உங்களுடைய மறைவான விஷயங்களையும் அறிகிறான்.

உங்களுடைய வெளிப்படையான விஷயங்களையும் அறிகிறான்.

சபையில் நீங்கள் என்ன செய்தீர்கள், தனிமையில் நீங்கள் என்ன செய்தீர்கள், வியாபாரத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள், மஸ்ஜித்களில் நீங்கள் என்ன செய்தீர்கள்.

உங்களுடைய வாழ்க்கை காலையில் மாலையில் இரவில் பகலில் எப்போது எப்படி இருந்தது என்பதை துல்லியமாக அறிந்து வைத்திருப்பான்.

அவனுடைய இல்மு ஒன்றே போதுமானது நம்மிடத்தில் கணக்கு கேட்பதற்கு.

அல்லாஹ்வுடைய இல்மு அல்லாஹ்வுடைய ஞானம் எப்படிப்பட்டது தெரியுமா?

கடுமையான ஒரு காரிருலில், பயங்கரமான இருட்டில்ஒரு கருப்பு பாறையில், ஒரு கருப்பு சிறிய எறும்பு ஊர்ந்து சென்றால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன்அர்ஷின் மீது அவனது கண்ணியத்திற்கு தக்கவாறு அவன் உயர்ந்து இருப்பதோடு, அந்த கருப்பு எறும்பை துல்லியமாக பார்க்கிறான். அந்த கருப்பு எறும்பின் அசைவை அவன் கேட்கிறான். அது உள்ளத்தில் என்ன நினைக்கிறது என்பதை அவன் அறிந்து இருக்கிறான்.

அல்லாஹ்வுடைய பார்வை எந்த திரையையும் தடுத்து விடாது. எந்த தூரமும் தடுத்து விடாது. எந்த இருளும் தடுத்து விடாது. அப்படித்தான் அல்லாஹ்வுடைய அறிவை அல்லாஹ்வுடைய கேட்கும் ஆற்றலை யாரும் தருக்க முடியாது.

அல்லாஹ் சொல்கிறான் : மரணம் ஒரு முடிவு கிடையாது. வாழ்க்கை அதோடு முடிவது கிடையாது. மறுமையில் மீண்டும் கொண்டுவரப் படுகிறீர்கள். அல்லாஹ்விற்கு முன்னால் நிறுத்தப்படுவீர்கள். என்ன நடக்கப்போகிறது.

நீங்கள் என்ன செய்தீர்கள்? எதை பார்த்தீர்கள், எதை பிடித்தீர்கள்,எங்கே சென்றீர்கள், என்ன உள்ளத்தில் உறுதி கொண்டீர்கள், உங்களுடைய வாழ்க்கை, உங்களுடைய அமல், உங்களுடைய அனைத்து செயல்பாடுகளையும் அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

இந்த வாழ்க்கையில் நன்மைகளை சேகரிக்காதவர்கள், தங்களுடைய பாவங்களுக்காக அல்லாஹ்விடத்தில் பிழை பொறுப்பை தேடாதவர்கள், பாவ சுமையோடு வரும்போது நாளை மறுமையில் இந்த ஆத்மா அல்லாஹ்விடத்தில் புலம்பும்.

யா அல்லாஹ்! என்னை மீண்டும் அனுப்ப மாட்டாயா? என்று பாவம் செய்த ஆத்மாக்கள் அல்லாஹ்விற்கு முன்னால் கதறும்.

அன்பிற்குரியவர்களே! அந்த நாளில் தப்பிக்க முடியாது. அந்த நாளில் எதையும் மறைக்க முடியாது. அந்த நாளில் எங்கும் ஓடி ஒளிய முடியாது.

அல்லாஹ் நமக்கு தெளிவு படுத்துகிறான் :

يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُحْضَرًا وَمَا عَمِلَتْ مِنْ سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ

ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து) தனக்கும், தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே? என்று விரும்பும். ஆகவே, அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப்பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கிறான். (ஏனென்றால்,) அல்லாஹ் (தன்) அடியார்களிடம் மிக்க இரக்கமுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 3 : 30)

வசனத்தின் கருத்து : அந்த நாளில் எந்த ஆத்மா நன்மை செய்து வந்ததோ, அந்த நன்மையை அது கண்ணுக்கு முன்னால் பார்த்துக் கொள்ளும். நீங்கள் செய்த நன்மைகளை அல்லாஹ் அழிக்க மாட்டான். அதனுடைய நன்மைகளை அதனுடைய கூலிகளை அல்லாஹ் குறைக்க மாட்டான்.

அதேபோன்று எந்த ஆத்மா பாவம் செய்து வந்ததோ, அல்லாஹ்விற்கு மாறு செய்து வந்ததோ, உள்ளத்தில் நயவஞ்சகத்தோடு, இறை நிராகரிப்போடு அல்லாஹ்வுடைய கட்டளைகளை மீறி வந்ததோ அந்த ஆத்மா உடைய நிலைமை என்ன ஆகும்?

அங்கே கதறுவார்கள், கத்துவார்கள், இந்த பாவங்களுக்கும் எங்களுக்கும் இடையே வெகு தூரமான ஒரு தூரம் ஏற்பட்டிருக்க வேண்டுமே, யா அல்லாஹ்! இந்த பாவங்களை விட்டும் எங்களை தூரமாக்கி விடு என்று அந்த நாளில் கதறுவார்கள்.

அல்லாஹ் சொல்கிறான் : இந்த உலகத்தில் நீங்கள் வாழும் போதே என்னை பற்றி நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்.

அல்லாஹ் அவனைப்பற்றி நமக்கு எச்சரிக்கை செய்கிறான். ஆட்சிகளுக்கு சொந்தக்காரன், அதிகாரங்களுக்கு சொந்தக்காரன், அவனை யாரும் மீற முடியாது.  அவனுடைய கட்டளைகளை மீறமுடியாது. அவனுடைய ஆற்றலை யாரும் எதிர்க்க முடியாது. அவனுடைய ஆட்சியில் அவனுக்கு எதிராக யாரும் சதி செய்ய முடியாது. அவன் நாடினால் அது நடக்கும், அவன் கட்டளையிட்டால் அது நிறைவேற்றப்படும்.

அந்த ரப்புல் ஆலமீன், அடக்கி ஆளக்கூடிய அந்த அரசன், ஜிப்ரீலை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். மீக்காயீலை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். அத்தனை கோடி கோடி மலக்குகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான்.

மாபெரும் வானத்தைப் படைத்தவன், அதற்குமேல் அர்ஷைப் படைத்தவன், இந்த மகா பூமியைப் படைத்தவன், அவனுடைய ஆற்றலை எந்த அடியானும் மீற முடியாது.

அவன் நாளை மறுமையில் கேட்பான்.

لِمَنِ الْمُلْكُ الْيَوْمَ لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ

(அவர்களை நோக்கி,) இன்றைய தினம், ‘‘எவருடைய ஆட்சி? (என்று கேட்டு, அனைவரையும்) அடக்கி ஆளும் ஒருவனாகிய அந்த அல்லாஹ்வுக்குரியதே!'' (என்று பதில் கூறப்படும்). (அல்குர்ஆன் 40 : 16)

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் பேச பயப்படுவார்கள். எல்லா நபிமார்களும் அல்லாஹ்விடத்தில் பேச பயப்படுவார்கள்.

அன்றைய நாளில் அல்லாஹ்வுடைய கோபத்தைப் பற்றி, அல்லாஹ்வுடைய தூதர் ரசூலுல்லாஹ் சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் :

إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ

அல்லாஹ் அதற்கு முன்பும் அதேபோல் கோபப்பட்டது இல்லை, அதற்குப் பின்பும் அதேபோல் கோபப்பட மாட்டான். அந்தளவு கோபத்தில் அவன் இருப்பான்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4343.

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

قُلْ إِنْ تُخْفُوامَا فِي صُدُورِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمْهُ اللَّهُ وَيَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

(நபியே!) கூறுவீராக: உங்கள் மனங்களில் நீங்கள் மறைத்துக் கொண்டாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். (இது மட்டிலுமா?) வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் அறிகிறான். (அறிவது மட்டுமல்ல) அல்லாஹ் (இவை) அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 3 : 29)

அன்பிற்குரியவர்களே! ஒரு முஃமின் அல்லாஹ்வைப் பயந்து கொண்டிருப்பான். தன்னுடைய மறுமை என்னவாகும்? தன்னுடைய கப்ரில் தனக்கு என்னவாகும்? தான் மரணிக்கும் போது ஒரு முஸ்லிமாக நான் மரணிப்பேனா?

யா அல்லாஹ்! எனக்கு கலிமா உடைய பாக்கியம் வேண்டும். யா அல்லாஹ்! நான் மரணிக்கும் போது லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்ல வேண்டும். நான் பாவத்தில் இருக்கும்போது எனக்கு மரணத்தை கொடுத்து விடாதே! என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படாமல் எனக்கு மரணத்தை கொடுத்து விடாதே! வாழ்க்கையில் அவன் செய்த அத்தனை பாவங்களையும் ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணி அல்லாஹ்விடத்தில் அழுது கொண்டிருப்பான்.

மறைத்து செய்த பாவங்கள், வெளிப்படையாக செய்த பாவங்கள், அறிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள், வேண்டுமென்று செய்த பாவங்கள், விளையாட்டாக செய்த பாவங்கள், அத்தனை பாவங்களையும் ஒவ்வொரு நாளும் மட்டுமல்ல, ஒவ்வொரு தொழுகையிலும், நினைத்து அழுது அழுது அல்லாஹ்விடத்தில் கூறிக் கொண்டே இருப்பான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தொழுகையைப் பற்றி அறிவிக்கக்கூடிய சஹாபாக்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  தஷஹ்ஹுதுல் உட்கார்ந்த பிறகு அத்தஹியாத் ஓதிய பிறகு, சலவாத் ஓதிய பிறகு, அல்லாஹ்விடத்தில் நான்கில் இருந்து பாதுகாப்புத் தேடி அதற்குப் பிறகு அவர்கள் எத்தனை துஆக்கள் ஒதி இருக்கிறார்கள்.

அதில் ஒன்றுதான்,

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ دِقَّهُ وَجِلَّهُ وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ

யா அல்லாஹ்! என் பாவங்களை மன்னித்து விடு, நான் வெளிப்படையாக செய்ததை அல்லது மறைத்து செய்தவை, சிறிய பாவங்கள், பெரிய பாவங்கள், விளையாட்டாக செய்த பாவங்கள், வேண்டுமென்றே செய்த பாவங்கள், தனிமையில் செய்த பாவங்கள், சபையில் செய்த பாவங்கள், யா அல்லாஹ்! என்னுடைய எல்லாப் பாவங்களையும் நான் உன்னிடத்தில் ஒப்படைத்து விடுகிறேன். என்னை மன்னித்துவிடு! நான் தனிமையில் கூட்டத்தில் மறைந்து மறையாமல் வெளிப்படையாக வேண்டும் என்று விளையாட்டாக செய்த எல்லா பாவங்களையும் மன்னித்து விடு!

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 745.

எத்தனை பாவமன்னிப்பின் வார்த்தைகளை, வாக்கியங்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தருகிறார்கள்.

அன்பிற்குரியவர்களே! ஒரு முஸ்லிம் தன் முடிவை பயந்து கொண்டிருப்பான். தவ்பா  கேட்காத நிலையில் எனக்கு மரணம் வந்தால் என்னுடைய நிலைமை என்னவாகும்?

என்னுடைய ஏடுகளில் இருந்து குற்றங்கள் அழிக்கப்படாமல் மலக்குல் மவ்த் உயிரைக் கைப்பற்றி விட்டால் நான் அல்லாஹ்விடத்தில் என்ன பதில் சொல்வேன்? இது ஒரு முஃமினுடைய ஒரு முஸ்லிமுடைய எண்ணமாகும்.

யார் அல்லாஹ்வை மறந்தும், மறுமையை மறந்தும், தங்களுடைய அழிச் சாட்டியங்களில் அத்துமீறி நடந்தார்களோ, யாருக்கு தங்களுடைய சிறிய பெரிய நன்மைகளின் மீது கர்வம் வந்ததோ, கல்வியின் மீது கர்வம் வந்ததோ, அல்லது தன்னுடைய அறிவின் மீது மமதை வந்ததோ, யார் தங்களுடைய பாவங்களை அலட்சியம் செய்தார்களோ, நன்மைகளில் அவர்கள் பொடுபோக்காக அலட்சியமாக கவனக்குறைவாக இருந்தார்களோ, அவர்கள் அல்லாஹ்வை பயப்பட மாட்டார்கள்.

ஷைத்தான் அவர்களை ஏமாற்றத்தில் வீழ்த்தி விடுகிறான். ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அலங்கரித்து காட்டுவான்.

உண்மையாளர்கள் நம்பிக்கையாளர்கள் முஃமின்கள் அப்படி இருக்க மாட்டார்கள்.

அல்லாஹ் சொல்வதை பாருங்கள் :

إِنَّ الَّذِينَ هُمْ مِنْ خَشْيَةِ رَبِّهِمْ مُشْفِقُونَ (57) وَالَّذِينَ هُمْ بِآيَاتِ رَبِّهِمْ يُؤْمِنُونَ (58) وَالَّذِينَ هُمْ بِرَبِّهِمْ لَا يُشْرِكُونَ (59) وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَى رَبِّهِمْ رَاجِعُونَ (60) أُولَئِكَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ

நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களும், எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கைகொள்கிறார்களோ அவர்களும், எவர்கள் தங்கள் இறைவனுக்கு எவரையும் இணை ஆக்காமல் இருக்கின்றனரோ அவர்களும், எவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரை தானம் கொடுப்பதுடன் அவர்களுடைய உள்ளங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் செல்வோம் என்று பயந்து கொண்டிருக்கின்றனவோ அவர்களும், ஆகிய இவர்கள்தான் நன்மையான காரியங்களில் விரைந்து செல்கிறவர்கள். மேலும், அவர்கள் அவற்றை செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்கின்றனர். (அல்குர்ஆன் 23 : 57-61)

அன்பிற்குரியவர்களே! நம்முடைய வாழ்க்கையைப் பாருங்கள். தொழுகையில் நிற்கும் போது கூட பணிவு இல்லாமல், தன் பாவங்களுக்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கோராமல், அலட்சியமாக இருக்கும் அல்லாஹ்வுடைய இந்த அடியார்களைப் பற்றி என்ன சொல்வது என்று யோசித்து பாருங்கள்.

தொழுகையில் இருக்கும்போதுகூட அல்லாஹ்வுடைய நினைவு வராமல் அல்லாஹ்வுடைய பயம் வராமல் அல்லாஹ்விற்கு முன்னால் பணியாமல் இருக்கிற மக்களைப் பற்றி என்ன சொல்வது!

ஆனால் நல்லவர்கள், அல்லாஹ்வுடைய பயத்தால் நடுங்குவார்கள். தங்களுடைய  இறைவனுடைய அத்தாட்சிகளையும் நம்புவார்கள்.

அல்லாஹ் கூறி விட்டான், நம்பிக்கை கொண்டோம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், நம்பிக்கை கொண்டோம்.

அல்லாஹ் கூறியதில் அவனுடைய தூதர் கூறியதில் குதர்க்கம் செய்ய மாட்டார்கள். அதில் அவர்கள் முரண்பாடுகளை காணமாட்டார்கள். அதில் வித்தியாசங்களை காணமாட்டார்கள். நபியின் கட்டளைக்கு முன்னால் முற்றிலும் பணிவார்கள்.

அல்லாஹ்வுடைய கட்டளைகளை நம்புவது போன்றே நபியுடைய கட்டளையையும் நம்புவார்கள். அல்லாஹ் சொன்ன மறைவான விஷயங்களை நம்பிக்கை கொண்டது போன்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொன்ன அத்தனை விஷயங்களையும் நம்பிக்கை கொள்வார்கள்.

இன்று சில முட்டாள்கள் உருவாகி இருக்கிறார்கள். ஹதீஸை குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்த்து அதில் முரண்பாடுகளை தேடுபவர்கள். குர்ஆனில் வந்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வோம். ஹதீஸில் வந்தால் அதில் எங்களுடைய அறிவைக்கொண்டு ஆராய்ச்சி செய்வோம் என்பதாக.

அல்லாஹ் எங்கேயாவது அவனுடைய கண்ணியமிக்க இந்த குர்ஆனில் கீழ்படியுங்கள், அல்லாஹ்விற்கு கட்டுப்படுங்கள் என்று சொல்லும்போது அவனையும் அவனுடைய தூதரையும் பிரித்து இருக்கிறானா?

வணக்க வழிபாடுகளை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய ஸ்தானத்தில் தன்னுடைய இபாதத்தில் யாரையும் கூட்டாக்கி கொள்ளவில்லை. அவனுடைய வணக்க வழிபாடுகளில் அவனைத் தவிர வேறு யாருக்கும் செய்ய முடியாது.

ஆனால் அந்த அல்லாஹ், கீழ்ப்படியும் விஷயத்தில் தன்னுடைய நபிக்கு கீழ்படியாதவர்களை தனக்கு கீழ்படியாதவர்கள் என்று சொன்னான்.

யார் ரசூலுக்கு கட்டுப்படுவாரோ, யார் ரசூலுக்கு கீழ்ப்படிவாரோ அவர்தான் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டவர்.

ஒரு முஃமின் தன்னுடைய அறிவைக்கொண்டு இந்த மார்க்கத்தில் குதர்க்கத்தை தேடமாட்டான். ஒரு முஃமின் அல்லாஹ் சொல்லிவிட்டால் அவனுடைய தூதர் சொல்லிவிட்டால் அப்படியே நம்பிக்கை கொள்வான்.

அடுத்து அல்லாஹ் கூறுகிறான் : முஃமின்கள் யார்? அல்லாஹ்விற்கு ஷிர்க் -இணை வைக்க மாட்டார்கள்.

அன்பிற்குரியவர்களே! எங்கெல்லாம் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நல்லவர்களுடைய பண்புகளை, முஃமின்கள் உடைய பண்புகளை சொல்கிறானோ, அங்கே அவர்கள் ஷிர்க் செய்ய மாட்டார்கள். அல்லாஹ்விற்கு சமமாக யாரையும் வணங்க மாட்டார்கள்.

ஆனால் இன்று, எத்தனை பேர் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். அல்லாஹ்வை வணங்காமல் அல்லது அல்லாஹ்வை வணங்குவது போன்றும் தங்களுடைய இறந்துவிட்ட முன்னோர்களை, அவர்களுடைய அடக்கஸ்தலங்களை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ்விற்கு முன்னால் ஒரு சுஜூது செய்வார்கள், இறந்தவர்களுடைய இடங்களுக்குச் சென்று அங்கேயும் சுஜூது செய்கிறார்கள். அல்லாஹ்விற்கு நேர்ச்சை செய்கிறார்கள் அவர்களுக்கும் நேர்ச்சை செய்கிறார்கள். அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை கேட்கிறார்கள், அவர்களிடமும் பிரார்த்தனை கேட்கிறார்கள். அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் இஃதிகாஃப் இருப்பது போன்று, இறந்தவர்களுடைய கப்ருகளுக்கு சென்று அங்கேயும் இஃதிகாஃப் இருக்கிறார்கள்.

அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடுவது போன்றே இறந்துவிட்ட நல்லவர்களுக்கும் அறுத்துப் பலியிடுகிறார்கள்.

அல்லாஹ் சொல்கிறான் : ஒருவன் அல்லாஹ்விற்கு இணை வைக்கும் போது, அவன் அல்லாஹ்வை பயப்படவில்லை. அவன் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளவில்லை.

அல்லாஹ்வை பயப்பட கூடியவன், அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளை நம்பிக்கை கொள்ளக் கூடியவன், அல்லாஹ்விற்கு ஷிர்க் செய்யமாட்டான்.

ஒருவன் அல்லாஹ்விற்கு முன்னால் வைத்த இந்த நெற்றியை அல்லாஹ்  அல்லாதவருக்கு முன்னால் வைக்க மாட்டான். அல்லாஹ்விற்கு முன்னால் தூக்கிய கரத்தை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு முன்னால் தூக்க மாட்டான்.

அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் தங்கி வழிபாடு செய்த ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் தவிர அவனுக்காக கட்டப்பட்ட மஸ்ஜிதுகளில் தவிர வேறு எங்கும் சென்று வணக்க வழிபாடுகளை தேடி வணக்க வழிபாடுகளை செய்து அல்லாஹ்வுடைய பொருத்தத்தை தேட மாட்டான்.

அல்லாஹ் சொல்கிறான் : இன்னும் முஃமின்கள் எப்படிப் பட்டவர்கள். அவர்கள் செய்வதை செய்வார்கள். அவர்களுடைய உள்ளங்களோ பயந்து கொண்டிருக்கும். என்ன பயம் இருக்கும்? அல்லாஹ்விற்கு முன்னால் நான் திரும்ப வேண்டுமே, அல்லாஹ் என்னை விசாரிப்பானே என்ற பயம் இருக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

பிறகு அல்லாஹ் சொல்கிறான் : இந்த தன்மை உள்ளவர்கள் தான் நன்மையில் விரைந்து செல்வார்கள். நன்மையை அவர்கள் முந்திக் கொள்வார்கள்.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே! செய்வதை செய்வார்கள், அவர்களுடைய உள்ளங்களோ அல்லாஹ்வின் பக்கம் தாங்கள் திரும்பவேண்டும் என்ற பயத்தில் இருக்கும் என்று அல்லாஹ் கூறுகிறானே? இந்த செய்வதை செய்வார்கள் என்றால் பாவங்களை செய்து கொண்டு அல்லாஹ்வை பயப்படுவதையா? இந்த வசனம் குறிக்கிறது.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் சொன்னார்கள்: ஆயிஷா! இதைப்பற்றி அல்லாஹ் இங்கு சொல்லவில்லை. அல்லாஹ் இங்கு எதை சொல்கிறான்? ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஒரு முஃமின்  அல்லாஹ்வை இரவெல்லாம் வழிபட்டதற்குப் பிறகு, அவனுடைய பாதையில் போர் செய்த பிறகு, தான தர்மங்களை வாரி வழங்கியதற்கு பிறகு, அல்லாஹ்வை பயப்படுவான்.

யா அல்லாஹ்! இதை உன்னுடைய பொருத்தத்தில் செய்தேனா? அல்லது வேறு விதமான எண்ணம் என்னுடைய நிய்யத்தில் கலந்துவிட்டதா?

யா அல்லாஹ்! இது உன்னிடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லது இதை நீ நிராகரித்து விடுவாயா?

யா அல்லாஹ் என்னை நீ இந்த நன்மைகளின் பொருட்டால் மன்னித்து விடுவாயா? அல்லது துர்பாக்கியம் உடையவனாக நான் ஆகிவிடுவேனா? என்று அல்லாஹ்வைப் பயந்து கொண்டிருப்பதை அல்லாஹ் இங்கு சொல்கிறான்.

இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது? எந்த நிலைமையில் நம்முடைய முஸ்லிம் மக்கள் இருக்கின்றார்கள்?

பாவங்கள், பாவங்கள், பாவங்கள். ஆனால் அல்லாஹ்வை பயப்படுவதில்லை. இங்கு அல்லாஹ் என்ன சொல்லுகிறான்? நல்லவர்கள் நன்மைகளை செய்துகொண்ட அல்லாஹ்வை பயப்படுவார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையை பார்க்கவில்லையா? இரவெல்லாம் அழுதார்கள், அவர்களுடைய தாடி நனையும் அளவிற்கு அழுதார்களே, அழுகையில் அவர்களின் கண்ணீர் அவர்களுடைய பாதங்களை நனைத்து விடும்.

எதற்காக அழுதார்கள்? அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக்கூடிய அடியானாக இருக்க வேண்டும் என்பதற்காக.

அபூ பக்ர் அவர்கள் அழுதார்களே, நான் ஒரு குருவியாக ஆகியிருக்க வேண்டுமே, ஒரு மரமாக ஆகியிருக்க வேண்டுமே, நான் வெட்டப்பட்டு மக்கள் என்னை எரித்து சாம்பலாக்கி விட வேண்டுமே என்று அபூபக்கர் அழுதார்கள். குர்ஆனை ஓத ஆரம்பித்தால் அழுது அழுது அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு விடும். எதனால் அழுதார்கள்? நன்மைகளை செய்தார்கள். அல்லாஹ்வை அஞ்சினார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறித்து குறிப்பாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்கிறான்:

எப்படி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தங்களுடைய அந்த மறுமை நிலையை பயந்து கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக இருக்க வேண்டுமே! ஷைத்தான் உடைய ஊசலாட்டங்களால் வழி கெட்டுவிடக் கூடாதே, நஃப்ஸ் உடைய அலங்கரிப்பால்.

இந்த நஃப்ஸ் என்ன செய்யும்? எப்போதும் பாவங்களை அலங்கரித்துக் கொண்டே இருக்கும். அந்த நஃப்ஸ் உடைய வலையில் சிக்கி வழி தவறி விடக்கூடாது என்று பயந்து கொண்டே இருப்பார்கள்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவர்களைப் பற்றி சொல்கிறான் :

وَإِنْ كَادُوا لَيَفْتِنُونَكَ عَنِ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ لِتَفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهُ وَإِذًا لَاتَّخَذُوكَ خَلِيلًا (73) وَلَوْلَا أَنْ ثَبَّتْنَاكَ لَقَدْ كِدْتَ تَرْكَنُ إِلَيْهِمْ شَيْئًا قَلِيلًا (74) إِذًا لَأَذَقْنَاكَ ضِعْفَ الْحَيَاةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيرًا

நாம் உமக்கு வஹ்யி மூலம் அறிவித்ததை நீர் விட்டு(விட்டு) அதல்லாததை நம்மீது நீர் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உம்மை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். உம்மை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீர் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிட நெருங்கி இருப்பீர். (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீர் உயிராக இருக்கும் போதும் நீர் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உமக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீர் காணமாட்டீர். (அல்குர் ஆன் 17 : 73-75)

ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சொல்கிறார்கள்; அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் எப்பொழுதெல்லாம் அவர்களுடைய பார்வை வானத்தைப் பார்ப்பார்களோ அப்பொழுது அல்லாஹ்விடத்தில் துஆ செய்வார்கள் :

اللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ

உள்ளங்களை புரட்டுபவனே! எங்கள் உள்ளங்களை உன் வழிபாட்டில் உறுதியாக இருக்க வை.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் இந்தப் பிரார்த்தனையைக் கேட்ட போது சில ஸஹாபாக்கள் அவர்களிடத்தில் கேட்டார்கள்;யா ரசூலுல்லாஹ்! ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இப்படி பயப்படுகிறீர்களே? என்ன விஷயம் என்பதாக,

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அடியார்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கு இடையில் இருக்கின்றன. அல்லாஹ் எப்படி நாடுகிறானோ அப்படி அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்.(1)

அறிவிப்பாளர் : அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 4798.

கண்ணியத்திற்குரியவர்களே! எப்படி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் பயந்தார்கள்! அப்படிதான் நல்லவர்கள் பயப்படுவார்கள். தங்களுடைய இறைவழிபாட்டில் தங்களுடைய இஸ்லாமிய கொள்கையில் தங்களுடைய வழிபாடுகளில் எந்தவிதமான, அல்லாஹ்விற்கு விருப்பம் அற்ற செயல்கள் கலந்து விடக்கூடாது என்று அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருப்பார்கள்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் நல்லவர்களைப் பற்றி சொல்லும்போது, அவர்கள் தங்கள் ரப்பிடத்தில் இவ்வாறு துஆ செய்வார்கள் ;

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

(மேலும், அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்கள் உள்ளங்கள் (அதில் இருந்து) தவறி விடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!'' (அல்குர்ஆன் 3 : 8)

அன்பிற்குரியவர்களே! சத்தியத்தில் நாம் இருந்தாலும், உண்மையான நேரான வழியில் நாம் இருந்தாலும், அல்லாஹ்விடத்தில்  நாம் பயந்து கொண்டே இருக்க வேண்டும்.

யா அல்லாஹ்! இந்த சத்தியத்தை அறியக்கூடிய வாய்ப்பை கொடுத்தவன் நீ, என்னை முஸ்லிமாக ஆக்கியதும் நீ, என்னை முஃமினாக ஆக்கியதும் நீ, என்னை தொழுகை யாளியாக ஆக்கியதும் நீ, ஹலாலை ஹராமை பேணக்கூடிய ஒரு நல்லவனாக ஆக்கியதும் நீ.

உன்னுடைய அருள் இல்லை என்றால், நீ எனக்கு கருணை காட்டவில்லை என்றால், நீ எனக்கு தவ்ஃபிக் செய்யவில்லை என்றால் நான் முஸ்லிமாக ஆகியிருக்க முடியாது. நான் முஃமீனாக ஆகியிருக்க முடியாது. நான் தொழுது இருக்க முடியாதுஎன்று தன்னுடைய முழு பலவீனத்தையும், தன்னுடைய முழு குறையையும் அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொண்டு இருக்கிறான்.

அல்லாஹ்வுடைய தூதர் சல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் அவர்கள் கூறுகிறார்கள். 

لَوْلَا اللَّهُ مَا اهْتَدَيْنَا وَلَا تَصَدَّقْنَا وَلَا صَلَّيْنَا

 

அல்லாஹ்வுடைய அருள் இல்லை என்றால் நமக்கு ஹிதாயத் கிடைத்து இருக்காது. அல்லாஹ்வுடைய அருள் இல்லை என்றால் நாம் தொழுது இருக்க மாட்டோம். (2)

அறிவிப்பாளர் : பரா இப்னு ஆசிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3795.

இன்று பாருங்கள்! தங்களுடைய அறிவின் மீது பெருமைப்படக்கூடியவர்கள் நாங்கள் கண்டுபிடித்தோம், நாங்கள் தெளிவான சிந்தனையில் இருக்கின்றோம், எங்களுடைய கண்டுபிடிப்பு. நாங்கள் புரிந்து இருக்கிறோம், நாங்கள் புரிந்து கொண்டது போல் யாரும் புரியவில்லை. நாங்கள் அறிந்தது போன்று யாரும் அறியவில்லை. உலகத்தில் உள்ள அத்தனை மக்களும் வழிகேட்டில் இருக்கிறார்கள் எங்களைத் தவிர, எங்கள் கூட்டத்தைத் தவிர என்று சொல்வார்கள்.

அவர்களுடைய வழிகேட்டுக்கு இந்த வார்த்தையை தவிர வேறு ஆதாரம் தேவையா?

ஒரு முஃமின் எப்படி இருப்பான்? யா அல்லாஹ்! உன்னுடைய அருளால் எனக்கு இந்த ஹிதாயத் கிடைத்திருக்கிறது. யா அல்லாஹ்! நான் புரிந்து இருப்பது தவறாக இருக்கலாம் என்னை திருத்துவாயாக.

யா அல்லாஹ்! நீ எங்களுக்கு நேர்வழி கொடுத்ததற்கு பிறகு எங்கள் உள்ளங்களில் கோணலை ஏற்படுத்தி விடாதே! வழிகேட்டின் பக்கம் எங்கள் உள்ளங்களை திருப்பி விடாதே! இது ஒரு முஃமினுடைய பயம் ஒரு முஸ்லிமுடைய பயம்.

அன்பிற்குரியவர்களே! அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனுடைய அடியார்களை எப்படி வேண்டுமானாலும் சோதிப்பான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லிக் காட்டுகிறார்கள்.

إذا أراد الله بعبد خيرا استعمله قالوا وكيف يستعمله قال يوفقه لعمل صالح قبل موته

ஒரு அடியானுக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவனை அல்லாஹ் பயன்படுத்திக் கொள்வான். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஸஹாபாக்கள் கேட்டார்கள்; யா ரசூலுல்லாஹ்! அல்லாஹ் பயன்படுத்திக் கொள்வான் என்றால் எப்படி?

ரசூலுல்லாஹ் அவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ் அந்த மனிதருக்கு நல்வழி காட்டுவான். அவர் மரணிப்பதற்கு முன்னால் நன்மைகளை செய்வதற்கு வாய்ப்பு கொடுப்பான். அந்த நன்மைகளை செய்யும் போது அவரை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னளவில் ஏற்றுக்கொள்வான், உயர்த்திக் கொள்வான் என்று.

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 12055.

அன்பிற்குரியவர்களே! முடிவு அதுதான். நம்முடைய மறுமையின் கணக்கு வழக்கில் இருக்கிறது. யார் அல்லாஹ்வை பயந்து கொண்டு ஈமானில் உறுதியாக இருந்தார்களோ அவர்களுக்கு நல்ல முடிவை அல்லாஹ் கொடுப்பான்.

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

யார் எங்கள் இறைவன் அல்லாஹ் என்று சொல்லி அதில் உறுதியாக இருந்தார்களோ அவர்களுக்கு பயமில்லை. அவர்கள் கவலைப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 46 : 13)

சொத்துக்களையும் செல்வங்களையும் வியாபாரங்களையும் பெருக்கிக் கொண்டு, கடைசி வாழ்க்கையில் நிம்மதியாக வாழ்வோம் என்று அல்லாஹ்வை மறந்து விட்டு தன் அறிவின் மீதும் தன் செல்வத்தின் மீதும் தன் சொத்தின் மீதும் மறந்து இருக்கக்கூடிய மக்கள் எத்தனை பேர்? தங்களுடைய முடிவை பயப்படாமல் இருப்பவர்கள் எத்தனை பேர்?

ஈமானைப் பற்றி கவலைப் பட்டால், மறுமையைப் பற்றி கவலைப்பட்டால், சொர்க்கத்தைப் பற்றி கவலைப்பட்டால், எந்த வாழ்க்கையில் நிரந்தரமாக இருக்கப் போகிறோமோ அங்கே எந்த கவலையும் அல்லாஹ் வைக்க மாட்டான்.

இந்த அற்ப்ப வாழ்க்கைக்காக தற்காலிகமான வாழ்க்கைக்காக இந்த வாழ்க்கையிலிருந்து எத்தனை மன்னர்கள் மன்னாதி மன்னர்கள் எல்லாம் செத்து மண்ணோடு மண்ணாக மக்கி விட்டார்களோ, அவர்களுடைய ஆட்சிகளை விடவா? அவர்கள் சேகரித்த பொருளாதாரங்களை விடவா? அவர்கள் வெற்றி கொண்ட நாடுகளை விட நாம் சேகரித்து விட முடியும். நாம் ஒன்று சேர்த்து விட முடியும்.

இன்று அவர்களுடைய நிலை என்ன? மறுமைக்காக கவலைப்படாமல், இந்த அற்ப துன்யாவிற்காக கவலைப்படக் கூடியவர்கள்.

இவர்கள் மறுமையில் கவலைப்படுவார்கள். அந்த கவலைக்குப் பிறகு ஒரு இன்பமும் இருக்காது. அந்தக் கவலை அவர்களுக்கு நன்மையைத் தேடித் தராது.

அல்லாஹ் சொல்கிறான் : யார் அல்லாஹ் உடைய ஈமானில் உறுதியாக இருந்தார்களோ அவர்களுக்கு பயம் அல்ல. அவர்கள் கவலைப்படமாட்டார்கள்.

மறுமையில் அல்லாஹ் யாருக்கு கொடுப்பான்? இந்த உலகத்தில் ஏழைகளாக இருந்தவர்கள், மக்களால் மதிக்கப்படாமல் இருந்தவர்கள், மக்களால் விரட்டப்பட்டவர்கள், மக்களால் கேவலப்படுத்த பட்டவர்கள், இவர்களை அல்லாஹ் நாளை மறுமையில் எழுப்பும் போது இவர்களுடைய நிலைமை என்னவாக இருக்கும்?

மக்களால் கண்ணியப்படுத்த பட்டவர்கள் இன்று எப்படி பலர் தங்களுடைய மன்னர்களை தங்களுடைய அதிகாரிகளை சந்திக்கும்போது அவர்களை கண்ணியப் படுத்துகிறார்கள் என்பதை பார்த்திருக்கிறோம்.

அன்பிற்குரியவர்களே! இப்படி மக்களால் கண்ணியப்படுத்த பட்டவர்கள், மக்களால் மதிக்கப்பட்டவர்கள், சபையில் முன்னிலை படுத்துபவர்கள் இவர்களுடைய நிலை மறுமையில் எப்படியிருக்கும் ?

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தெளிவாக சொல்கிறான் :

تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ

(மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ, பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். முடிவான நற்பாக்கியம் இறையச்சம் உடையவர்களுக்குத்தான் உண்டு.(அல்குர்ஆன் 28 : 83)

அன்பிற்குரியவர்களே! உலக வாழ்க்கையில் ஒரு மனிதனுடைய ஏழ்மையும் அல்லது உலக வாழ்க்கையில் ஒரு மனிதனுடைய செல்வமும் அல்லாஹ்விடத்தில் அவனை நெருக்கி வைக்காது.

உலக வாழ்க்கையில் ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தாலும் சரி, அவனுடைய அமலை வைத்து தான் அல்லாஹ் அங்கே முடிவு செய்வான். ஆகவே தான் நல்லவர்கள் பயந்து கொண்டே இருப்பார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அபீ முலைக்கா ரளியல்லாஹு அன்ஹு தாபியீன்களில் மிகப்பெரிய ஒருவர். 30சஹாபாக்களிடத்தில் கல்வி படித்தவர்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு ஸஹாபியை பார்ப்பதே இஸ்லாம் ஈமான் உடைய நிஃமத்துக்குப் பிறகு மிகப்பெரிய ஒரு நிஃமத். அவர்களிடத்தில் கல்வி படிப்பது அதற்குப் பிறகு மிகப்பெரிய நிஃமத்.

இப்படி முப்பது நபித்தோழர்களிடத்தில் கல்வி படித்தவர்கள். அவர்கள் சொல்கிறார்கள்:

أَدْرَكْتُ ثَلَاثِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُمْ يَخَافُ النِّفَاقَ عَلَى نَفْسِهِ

30சஹாபாக்களிடத்திலேயே நான் கல்வி படித்திருக்கிறேன். அவர்களிடத்தில் நான் சேர்ந்திருக்கிறேன். அவர்களுடன் நான் பழகி இருக்கிறேன். அவர்கள் அனைவரும் தங்களின் ஈமானில் நயவஞ்சகத்தனம் கலந்து விட்டதோ என்று பயந்து கொண்டிருந்தார்கள். தங்களுடைய முடிவை குறித்து பயந்து கொண்டிருந்தார்கள். தங்களுடைய இறை நம்பிக்கை பற்றியும் பெருமையாக அவர்கள் பேசியது கிடையாது.

என்னுடைய ஈமான் ஜிப்ரீல் உடைய ஈமானை போன்று, என்னுடைய ஈமான் மீக்காயிலுடைய ஈமான் போன்று என்று அவர்கள் பெருமை பேசியது கிடையாது. தங்களுடைய ஈமானை குறித்து அவர்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.(3)

அறிவிப்பாளர் : இப்னு அபீ முளைக்கா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 46.

ஹஸன் பஸரி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் சொல்கிறார்கள் : ஈமானை பயப்படக்கூடியவன் முஃமினாக தான் இருப்பான். பாவம் செய்தால் பயப்படுவான், நன்மை செய்தால் பயப்படுவான்,

பாவம் செய்தால், யா அல்லாஹ்! என்னுடைய நஃப்சுக்கு அடிமையாகி நான் பாவம் செய்துவிட்டேன் என்னை தண்டித்து விடாதே!

நன்மை செய்தால், யா அல்லாஹ்! இந்த நன்மையை உன்னுடைய திருமுகத்தை நாடி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். முகஸ்துதியில் கலந்து விடக்கூடாது. மேலும் உன்னுடைய நபி உடைய வழிக்கு மாற்றமாக நான் எதையும் செய்துவிடக்கூடாது என்று அல்லாஹ்வை பயப்படுவான்.

ஹஸன் பஸரி சொல்கிறார்கள். யார் இந்த ஈமானை பயப்பட வில்லையோ தன் முடிவை பயப்பட வில்லையோ அவன் ஒரு முனாஃபிக் ஆகத்தான் இருப்பான். ஈமானை பயப்படாத அவன் தன்னுடைய முடிவை குறித்து பயப்படாதவன் அவன் ஒரு முனாஃபிக்காகத் தான் இருப்பான்.

அல்லாஹ் அப்படித்தான் சொல்கிறான் : முஃமின்களை குறித்து அல்லாஹ் சொல்லும்போது,

وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ

இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்கள் பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வைத் தவிர (இவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.) (அல்குர்ஆன் 3 : 135)

அன்பிற்குரியவர்களே! நம்முடைய முடிவு நல்ல முடிவாக இருக்க வேண்டும், அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்ல முடிவாக இருக்க வேண்டும் என்றால்  அதற்குச் சில அடிப்படைத் தன்மைகள் இருக்கவேண்டும்.

அல்லாஹ்வுடைய அச்சம் இருக்கவேண்டும், தனிமையிலும் சரி, சபையிலும் சரி, கூட்டத்திலும் சரி, அல்லாஹ்வுடைய பயம் அல்லாஹ்வுடைய அச்சம் வெளிப்படவேண்டும்.

அல்லாஹ் சொல்கிறான் : அல்லாஹ்வுடைய பயம் ஒன்று தான் நம்மை பாவங்களிலிருந்து தடுக்கக்கூடியது. அல்லாஹ்வுடைய பயம் ஒன்றுதான் நாளை மறுமையில் பயமற்ற வாழ்க்கையை  அல்லாஹ்விடத்தில் தேடித் தரக்கூடியது.

இரண்டாவதாக இஹ்லாஸ் இருக்க வேண்டும். நம்முடைய சொல்லும் நம்முடைய செயலும் அல்லாஹ்விற்காக இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் சொல்லிலும் செயலிலும் வேறொன்றை கலந்து விடக்கூடாது. நிஃபாக் நயவஞ்சகத்தை முகஸ்துதியை கலந்து விடக்கூடாது.

அடுத்து எந்த ஒரு இஸ்லாமை ஈமானை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு கொடுத்து இருக்கிறானோ, அல்லாஹ்வுடைய கட்டளைகளை ஃபர்லான கடமைகளை நஃபிலான உபரியான வணக்க வழிபாடுகளை அல்லாஹ் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறானோ, எந்த ஒரு மார்க்கத்தில் நமக்கு அல்லாஹ் ஹலால் ஹராமை கூறுகிறானோ அதில் உறுதியாக இருக்க வேண்டும்.

فَاصْدَعْ بِمَا تُؤْمَرُ

நபியே! உங்களுக்கு எப்படி ஏவப்பட்டதோ அதுபோன்று நீங்கள் நிலையாக இருங்கள். (அல்குர்ஆன் 15 : 94)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஒரு நபித்தோழர் கேட்கிறார்.

யா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் எனக்கு ஒரு உபதேசம் செய்யுங்கள். இனி எவரிடத்திலும் சென்று நான் உபதேசம் கேட்கும் நிலை இருக்கக்கூடாது. அப்போது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

சொல் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன் என்று. பிறகு அந்த ஈமானில் நீ உறுதியாக இருப்பாயாக.

அன்பிற்குரியவர்களே!அல்லாஹ்வை அதிகம் நினைவு கூற வேண்டும். எப்போதும் அல்லாஹ்வை முன்னோக்கிய உள்ளம் உடையவர்களாக இருக்க வேண்டும். அல்லாஹ்வை திக்ரு செய்யக்கூடிய நாவை பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

அல்லாஹ்வுடைய புத்தகமான குர்ஆனை ஓதக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இந்த குர்ஆன் அடியானுக்கு மறுமையை நினைவூட்டுகிறது. அடியானை அல்லாஹ் உடன் இணைக்கக்கூடிய அல்லாஹ்வின் பொருத்தத்தின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடிய இந்த குர்ஆன் அடியானை அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் தூண்டக்கூடிய மிகப்பெரிய ஒரு சக்தி.

ஒரு முஸ்லிம் தன்னுடைய முடிவை அஞ்ஜினால் ஒரு முஸ்லிம் தன்னுடைய முடிவு நல்ல முடிவாக இருக்க வேண்டும் என்று நம்பினால் அல்லாஹ்விடத்தில் ஆதரவு வைத்தால் குர்ஆனை காலை மாலை இரவு பகல் எல்லா நேரங்களிலும் குர்ஆனை பிரியாமல் இருப்பான். ஓதிக் கொண்டே இருப்பான்.

இந்த நல்ல தன்மைகளை இந்த நல்ல காரியங்களை நம்முடைய வாழ்க்கையில் கடைப்பிடிப்பதோடு அல்லாஹ்விடத்தில் நல்ல முடிவை கேட்கும்போது அல்லாஹ்விடத்தில் உள்ளத்தால் கண்ணால் அழுது அஞ்சி கேட்கும்போது, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய அருளால் நமக்கு அந்த நல்ல முடிவை கொடுப்பான்.

அல்லாஹ் தன்னிடத்தில் கேட்கப்பட்ட நல்லவைகளை மறுக்க மாட்டான். யார் அல்லாஹ்வை ஆதரவு வைத்தார்களோ அல்லாஹ் அவர்களை கைவிடமாட்டான். யார் அல்லாஹ்வை பயந்தார்களோ அவர்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மறுமையில் பயம் அற்றவர்களாக ஆக்குவான். யார் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்டார்களோ அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான்.

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ وَابْنُ نُمَيْرٍ كِلَاهُمَا عَنْ الْمُقْرِئِ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ حَدَّثَنَا حَيْوَةُ أَخْبَرَنِي أَبُو هَانِئٍ أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُا أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ قُلُوبَ بَنِي آدَمَ كُلَّهَا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ كَقَلْبٍ وَاحِدٍ يُصَرِّفُهُ حَيْثُ يَشَاءُ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ (صحيح مسلم 4798 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ الْبَرَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْقُلُ التُّرَابَ يَوْمَ الْخَنْدَقِ حَتَّى أَغْمَرَ بَطْنَهُ أَوْ اغْبَرَّ بَطْنُهُ يَقُولُ وَاللَّهِ لَوْلَا اللَّهُ مَا اهْتَدَيْنَا وَلَا تَصَدَّقْنَا وَلَا صَلَّيْنَا فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا وَثَبِّتْ الْأَقْدَامَ إِنْ لَاقَيْنَا إِنَّ الْأُلَى قَدْ بَغَوْا عَلَيْنَا إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا وَرَفَعَ بِهَا صَوْتَهُ أَبَيْنَا أَبَيْنَا (صحيح البخاري 3795 -)

குறிப்பு 3)

بَاب خَوْفِ الْمُؤْمِنِ مِنْ أَنْ يَحْبَطَ عَمَلُهُ وَهُوَ لَا يَشْعُرُ وَقَالَ إِبْرَاهِيمُ التَّيْمِيُّ مَا عَرَضْتُ قَوْلِي عَلَى عَمَلِي إِلَّا خَشِيتُ أَنْ أَكُونَ مُكَذِّبًا وَقَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ أَدْرَكْتُ ثَلَاثِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُمْ يَخَافُ النِّفَاقَ عَلَى نَفْسِهِ مَا مِنْهُمْ أَحَدٌ يَقُولُ إِنَّهُ عَلَى إِيمَانِ جِبْرِيلَ وَمِيكَائِيلَ وَيُذْكَرُ عَنْ الْحَسَنِ مَا خَافَهُ إِلَّا مُؤْمِنٌ وَلَا أَمِنَهُ إِلَّا مُنَافِقٌ وَمَا يُحْذَرُ مِنْ الْإِصْرَارِ عَلَى النِّفَاقِ وَالْعِصْيَانِ مِنْ غَيْرِ تَوْبَةٍ لِقَوْلِ اللَّهِ تَعَالَى( وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ) صحيح البخاري

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/