HOME      Khutba      அல்லாஹ்வைக் கொண்டே வெற்றியும் பாதுகாப்பும் | Tamil Bayan - 179   
 

அல்லாஹ்வைக் கொண்டே வெற்றியும் பாதுகாப்பும் | Tamil Bayan - 179

           

அல்லாஹ்வைக் கொண்டே வெற்றியும் பாதுகாப்பும் | Tamil Bayan - 179


அல்லாஹ்வை கொண்டே வெற்றியும் பாதுகாப்பும்

ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ்வை கொண்டே வெற்றியும் பாதுகாப்பும்

வரிசை : 179

இடம் : எஸ்.எம்.ஜெ.பிளாசா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 04-06-2010 | 21-06-1431

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை அச்சத்தை நினைவுபடுத்தி ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வை பயந்து கொண்டவர் இம்மையிலும் வெற்றியடைந்தார்; மறுமையிலும் வெற்றி அடைந்தார்.

இந்த உலகம் ஒரு சோதனைக்கூடம்... அல்லாஹு தஆலா அவன் அடியார்களை அவன் விரும்பியபடி சோதிக்கின்றான்.

சிலரை வறுமையில் சோதிக்கின்றான், சிலரை நோய்நொடிகளில் சோதிக்கின்றான்,சிலருக்கு சில துன்பங்களைக் கொடுத்து சோதிக்கின்றான், சிலருக்கு வியாபாரத்தில் நஷ்டங்களை கொடுத்துச் சோதிக்கின்றான்.

அல்லாஹு தஆலா நிச்சயமாக அவன் சோதித்தே தீருவேன் என்று அறிவிப்பும் செய்கின்றான்.

أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ (2) وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ

மனிதர்கள் ‘‘ நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கிறோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்ற) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான். (அல்குர்ஆன் 29 : 3)

சோதனையின் நோக்கம் என்ன? அல்லாஹ்வை மனப்பூர்வமாக இறைவனாக ஏற்றுக் கொண்டார் யார்? அல்லாஹ்வை பற்றிப் பிடித்தோர் யார்? அல்லாஹ்வை உண்மையிலேயே நேசிப்பவர் யார்? அல்லாஹ்வை உண்மையிலேயே பயப்படுபவர் யார்? உண்மையிலேயே நம்ப கூடியவர் யார்?

துன்பத்திலும் இன்பத்திலும் அல்லாஹ்வே போதுமானவன் என்று அவனைச் சார்ந்திருப்பவர் யார்?என்று சோதிப்பதற்காக, அந்த உண்மையானவர்களை பிரித்து அறிவதற்காக இந்த சோதனைகள் கொடுக்கப்படுகின்றன.

பொய்யர்கள், இன்பத்தைத் தந்தால் சுகத்தை தந்தால், வியாபாரத்தில் லாபத்தை கொடுத்தால், அனைத்து காரியமும் கைகூடி வந்தால் அல்லாஹ்வைப் போற்றிப்புகழ்வான். துக்கம் சோகம் சோதனை வந்தால் அல்லாஹ்வை இகழ்வான்.

பொய்யர்களை பிரித்துவிடுவதற்காக,போலிகளைப் பிரித்துவிடுவதற்காக, நிச்சயமாக நான் என் அடியார்களைச் சோதித்தே தீருவேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அன்பிற்குரியவர்களே! அல்லாஹு தஆலா இந்த உலகத்தில் தனக்கு விருப்பமான அடியார்களைச் சோதிக்கின்றான். இந்த மனித படைப்புகளில் அல்லாஹ்விற்கு விருப்பமான படைப்பு அவர்களின் நபிமார்கள் மற்றும் ரசூல்மார்கள்.

அல்லாஹு தஆலா தன்னுடைய ரசூல்மார்களை சோதித்தான், அவர்களுக்குத் துன்பங்களை கொடுத்தான், அவர்கள்மீது எதிரிகளைச் சாட்டினான், அவர்களுக்கு எதிரிகளைக் கொடுத்தான், அவர்களுக்குப் பயத்தைக் கொடுத்தான்.

சற்று சிந்தித்து பாருங்கள். எல்லா நபிமார்களும் சோதிக்கப்படுகிறார்கள், அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

«إِنَّ مِنْ أَشَدِّ النَّاسِ بَلَاءً الْأَنْبِيَاءَ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ»

மக்களில் அல்லாஹ்வின் சோதனைக்குக் கடுமையாக ஆளானவர்கள்,அல்லாஹ்வின் நபிமார்கள்.பிறகு அந்த நபிமார்களைப் போன்றவர்கள், அதாவது பொறுமையில், ஒழுக்கத்தில், இறை நம்பிக்கையில் அந்த நபிமார்களுக்கு ஒப்பாக,நபிமார்களின் வழியில் செல்வார்கள்.

அறிவிப்பாளர் : பாத்திமா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 27079.

இந்த உலகத்தில் நமக்கு ஏற்படக்கூடிய துன்பம், துயரம், மனக்கவலைகள், கஷ்டம், பொருளாதார நெருக்கடி, நோய், நஷ்டம், வறுமை எல்லாம் அல்லாஹ் ஓர் அடியானை கைவிட்டு விட்டான் என்பதற்கு அர்த்தம் அல்ல.

அதுபோன்று, ஒரு மனிதனுக்கு செல்வம், சுகம் கொடுப்பதுஅந்த அடியானை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான் என்பதற்கு அர்த்தம் அல்ல.

மாறாக அல்லாஹு தஆலா அடியானை எப்படி வேண்டுமானாலும் சோதிக்கின்றான். அல்லாஹ் கூறுகிறான் :

وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ

நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிப்போம். பின்னர் நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 21 : 35)

நன்மையைக் கொண்டும் சோதிப்போம், தீமையைக் கொண்டும் சோதிப்போம். இரண்டும் உங்களுக்குச் சோதனைதான்.

வறுமை எப்படி சோதனையோ அதுபோல் செல்வமும் ஒரு சோதனை. எவ்வாறு நோய் சோதனையா அதுபோலச் சுகமும் சோதனை. எப்படி துன்பம் சோதனையோ அதுபோல இன்பமும் ஒரு சோதனை. எப்படி துக்கமான வாழ்க்கை ஒரு சோதனையோ அதைப் போன்றுதான் மகிழ்ச்சியான வாழ்க்கையும் ஒரு சோதனை.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் சோதிக்கப் பட்டார்கள், நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சோதிக்கப் பட்டார்கள். எதிரிகள் அவர்கள்மீது சாட்டப்பட்டார்கள், அவர்களைக் கேலி செய்தார்கள், அவர்களுக்கு மன சஞ்சலத்தை கொடுத்தார்கள், கல்லால் எறிந்தார்கள், கற்களை அவர்கள்மீது குவியலாகும் அளவுக்கு அவர்கள்மீது எதிரிகளால் அடிக்கப்பட்டார்கள்.

ஒருமுறை நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு காஃபிர் தன் மகனைச் சுமந்து சொல்கின்றான். அப்போது அந்த மகன் சொல்கிறான்; என் தகப்பனே! என்னைக் கீழே இறக்கி விடுங்கள், நான் அந்த மனிதரைக் கல்லால் அடித்து விட்டு வருகிறேன் என்பதாக.

அந்த நேரத்தில்தான் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் கேட்கிறார்கள்;

وَقَالَ نُوحٌ رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا (26) إِنَّكَ إِنْ تَذَرْهُمْ يُضِلُّوا عِبَادَكَ وَلَا يَلِدُوا إِلَّا فَاجِرًا كَفَّارًا

இன்னும், நூஹ் பிரார்தித்தார்: ‘‘என் இறைவனே! பூமியில் இந்நிராகரிப்பவர்களில் ஒருவரையும் நீ வசித்திருக்க விட்டு வைக்காதே! நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால், உன் (மற்ற) அடியார்களையும் வழிகெடுத்தே விடுவார்கள். பாவிகளையும் நிராகரிப்பவர்களையும் தவிர, (வேறொரு குழந்தையை) அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 71 : 26,27)

இப்படி, அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கும் அளவிற்கு மனசஞ்சலத்திற்கு ஆளானார்கள்.

நபிமார்களில் அதிகமான துன்பங்களையும் துயரங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்தவர்கள் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம். ஒருபக்கம், அல்லாஹ் சிரமமான கட்டளைகளை இறக்கி அவர்களைச் சோதிக்கின்றான்.

وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ

இப்றாஹீமை அவருடைய இறைவன் (பெரும் சோதனையான) பல கட்டளைகளையிட்டு சோதித்த சமயத்தில் அவர் அவற்றை நிறைவு செய்தார். (அல்குர்ஆன் 2 : 124)

என்பது வயது நிறைந்தஇப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளை வருகிறது, கத்னா செய்து கொள்ளுங்கள் என்று.

மருத்துவரைச் சந்தித்தார்களா? எப்படி செய்வது? என்று கேட்டார்களா?இல்லை,வீட்டின் கொல்லைப் பக்கம் சென்று சிறு கோடாரியை எடுத்து,அதன் நுனி தோலை அப்படியே வலிக்க வெட்டி வீசி விட்டார்கள்.

எத்தனை கஷ்டம், சிரமம் அல்லாஹ்வின் மூலமாக அவர்களுக்குச் சோதனையாக அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அத்தனை சோதனையையும் தாங்கிக் கொண்டார்கள்.

அல்லாஹு தஆலா, மனைவியைப் பிரிய வேண்டும் என்று கூறுகிறான்.அதற்கும் தயார். சொந்த நாட்டை, வசதியான வாழ்க்கையை, வீட்டை, தோட்டம் கால்நடைகளை, விட்டுவிட்டு தன் மனைவி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு,நாடோடிபோல் செல்ல வேண்டும் என்றால் எங்கே செல்வது? எங்கே தங்குவது? எங்கே உணவு? என்று எந்தவிதமானமுன்னேற்பாடுமின்றி, தான் வசதியாக வாழ்ந்த அந்த இடத்தைப் பிரிய வேண்டும் என்றால் நம் உள்ளத்திற்கு எவ்வளவு சிரமமாக இருக்கும்!

அந்த சிரமத்தைக் கொண்டு இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சோதிக்கப் பட்டார்கள்.

எதிரிகள் கூடி நிற்கிறார்கள். இவர்களை நெருப்புக் குண்டத்தில் போடுவோம் என்று கூறுகிறார்கள். கூறுவது மட்டுமன்றி,பெரிய நெருப்பு அகழியையும் அவர்கள் தோன்றிவிட்டார்கள்.

அருகில் செல்ல முடியவில்லை. எப்படி தூக்கி எறிவது? அதற்காக ஒரு மிஞ்சனிக்கருவியையும் தயார் செய்தார்கள். அந்தக் கருவியின் கீழே அமர வைத்து அந்த நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறிய வேண்டும் என்பதற்காக.

அன்பிற்குரியவர்களே! ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம், யஹ்யா அலைஹிஸ்ஸலாம், மூசா அலைஹிஸ்ஸலாம், ஈஸா அலைஹிஸ்ஸலாம், அய்யூப் அலைஹிஸ்ஸலாம், ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம், தாவூது அலைஹிஸ்ஸலாம் இப்படி அனைத்து நபிமார்களின் வாழ்க்கையிலும் எடுத்துப் பாருங்கள்.

அய்யூப் அலைஹிஸ்ஸலாம் நோயைக் கொண்டு சோதிக்கப் பட்டார்கள். உலகத்திலேயே இனி அது போன்று நோய்க்கு ஆளானவர் இருக்கமாட்டார். அது போன்று நோய்நொடியால் கஷ்டப்படுபவர் உலகத்தில் இன்னொரு மனிதர் இருக்க மாட்டார். அதுவும் ஒரு மாதம் இரண்டு மாதம் அல்ல, 18ஆண்டுகள் கஷ்டப்பட்டார்கள்.

ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் குழந்தை இல்லை, அல்லாஹ்விடத்தில் முறையிடுகிறார்கள், குழந்தை இல்லாமல் பெரும் சோதனைக்கு ஆளானார்கள்.

அழுகிறார்கள். தான் ஒரு நபி, நபிக்கு ஒரு வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்று மன நெருக்கடிக்கு ஆளானார்கள்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யூதர்களால் சோதிக்கப்பட்டார்கள், நிம்மதியாக அல்லாஹ்வின் மார்க்கத்தை போதிக்க முடியவில்லை. வீடு வீடாக ஒளிந்து செல்கிறார்கள். கிராமம் கிராமமாக ஒளிந்து செல்கிறார்கள்.

அவர்களிடம் ஒளு செய்கின்ற லோடாவை தவிர, அவர்கள் அணிந்திருக்கும் ஒரு ஆடையைத் தவிர, வேறு துனியாவின் பொருளாதாரம் எதுவும் அவர்களிடம் இல்லை.

ஒரு நபி, அல்லாஹ்வின் வேதம் கொடுக்கப்பட்டவர், யாரை கண்ணியத்திற்குரியவர், நெருக்கமானவர், என்னுடைய அத்தாட்சி என்று அல்லாஹ் கூறுகின்றானோ அந்த நபியின் நிலைமையைப் பாருங்கள்.

எதிரிகளுக்குப் பயந்து ஓடி ஒளிகிறார்கள்.இப்படியெல்லாம் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சோதிக்கப்பட்டார்கள்.

மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சோதனை மறைந்த ஒன்று கிடையாது, ஃபிர்அவ்ன் என்ற எதிரியின் மூலமாகச் சோதிக்கப்பட்டார்கள். சோதனையில் ஒரு உச்சகட்ட சோதனை ஆட்சியாளர்களால், அரசாங்கத்தால் சோதிக்கப்பட்டார்கள்.

அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, ஒரு சமுதாயம் அப்படி சோதிக்கப்படவும் இல்லை, எப்படி மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவருடைய குடும்பத்தார்களும் இனத்தவர்களும் சோதிக்கப்பட்டது போன்று.

வரலாற்றில் இப்படியொரு சோதனை இதற்கு முன்பும் நீங்கள் கண்டிருக்க மாட்டீர்கள். ஒரு இனத்தவரையுடைய ஆண் மக்கள் அனைவரையும், பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் அந்தப் பெற்றோருக்கு முன்னால் அந்த வீட்டிலேயே ஃபிர்அவ்னின் இனத்தவர்கள் இஸ்ரவேலர்களின் குழந்தையை அறுத்துக் கொன்றிருந்தார்கள்.

இப்படிபட்ட வேதனையை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், இனத்தவரை இஸ்ரவேலர்களை தவிர வேறு யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள். பிறந்த குழந்தை ஆடு அறுப்பது போன்று அறுக்கப்பட்டார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஹுபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்றும் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வருகிறார்கள்.

யா ரசூலல்லாஹ்! குறைஷிகள் உடைய துன்பங்கள் எங்கள்மீது தாங்க முடியவில்லை. எப்படிப்பட்ட சோதனைக்கு ஆளானார்கள்! ஹுபைப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய சோதனைகளிலிருந்து ஒரு லட்சம் பிரித்து அதில் ஒன்று கூட இன்று நாம் ஈமானுக்காகச் சந்திக்கவில்லை.

அத்தகைய சோதனையைக் குறைஷிகளின் மூலமாக அனுபவித்து வந்து ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கூறுகிறார்கள்.

யா ரசூலல்லாஹ்! எங்களுக்காக நீங்கள் அல்லாஹ்விடத்தில், இந்த எதிரிகளுக்கு எதிராகத் துவா கேட்க மாட்டீர்களா? என்று.

கஅபாவின் அருகில் தன்னுடைய போர்வையை தலையணையாக வைத்துப் படுத்திருந்த ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், முகம் சிவந்தவராக எழுந்து, என் இனத்தவரே, உங்களுக்குப் பொறுமை இல்லையா? என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார்கள்.

இவ்வளவு பொறுமையை மேற்கொண்டபிறகு அத்தகைய துன்பங்களில் ஒரு சிறு துளி கூட நம் மீது இறக்கினால், நம்முடைய நிலைமை என்ன ஆகியிருக்கும்?! அல்லாஹ் பாதுகாப்பானாக.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்த தோழர்களுக்கு இஸ்ரவேலர்களுக்கு நடந்த அந்தக் கொடுமைகளைச் சொல்கிறார்கள்.

என் தோழர்களே! இஸ்ரவேலர்களுக்கு ஈமானின் காரணமாக ஏற்பட்ட சோதனையை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? ஒருவர் இறைநம்பிக்கையை ஏற்றுக்கொண்டால், அல்லாஹ் என் இறைவன் என்று கூறினால் அந்த அடியானை அழைத்து வரப்படும். இரும்பினாலானகூர்மையான பற்கள் உடைய சீப்பை கொண்டுவரப்படும்.

அவர்களின் உடம்பில் தோல்களில் வருடி எடுப்பார்கள். பிறகு, சதை பிண்டமாக அவர்கள் காட்சி அளிப்பார்கள். அந்த நேரத்தில் கூட அவர்கள் ஈமானை விடவில்லை. தன் சமூகத்திற்கு எதிராக அல்லாஹ்விடம் கையேந்த வில்லை. பொறுமையைக் கொண்டிருந்தார்கள்.

இன்னும், முந்தைய இஸ்ரவேலர்களிடம் ஒருவர் ஈமானை ஏற்றுக் கொண்டால், அவரை அழைத்து வந்து அவரின் இடுப்பு அளவுக்குக் குழிதோண்டப்படும். பிறகு, அதில் புதைக்கப்படுவார். பிறகு, ரம்பம் கொண்டு அவர் தலையில் இரண்டு பிரிவுகளாக அவர் அறுக்கப்படுவார்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், இந்தத் துன்பத்தில் கூட அவர்கள் ஈமானை விடவில்லை, நிலை தடுமாற வில்லை. தனது கொள்கையில் உறுதியாக இருந்தார்கள்.(1)

அறிவிப்பாளர் : கப்பாப் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6943.

சோதனைகளை அல்லாஹ் எப்படி நாடுகிறானோ அப்படி பொழிவான். சோதிப்பதற்குதான் இந்த உலகம்.

எவர் பொறுமையாக மார்க்கத்தில் உறுதியாக அல்லாஹ்விடம் முறையிடும் பழக்கத்தைக் கொண்டார்களோ, பாவங்களை விட்டு விலகி, நன்மையின் பக்கம் வந்து, தனக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் உள்ள உறவைச் சீர்திருத்தம் செய்து கொண்டார்களோ அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியைக் கொடுப்பான்.

அன்பிற்குரியவர்களே! மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது கூட்டத்திற்கு அறிவுரை கூறினார்கள்,

قَالَ مُوسَى لِقَوْمِهِ اسْتَعِينُوا بِاللَّهِ وَاصْبِرُوا إِنَّ الْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ

(அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி ‘‘நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே! அதை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்'' என்று கூறினார். (அல்குர்ஆன் 7 : 128)

வசனத்தின் கருத்து : ஆட்சியைக் கொடுப்பவன் அல்லாஹ். ஆட்சியை எடுப்பவன் அல்லாஹ். இரவைப் பகலில் நுழைப்பவன் அல்லாஹ். பகலை இரவில் நுழைப்பவன் அல்லாஹ். உயிருள்ள பொருளில் உயிரற்ற பொருளை வெளியாக்குபவன் அல்லாஹ். உயிரற்ற பொருளிலிருந்து உயிருள்ள பொருளை ஏற்படுத்துபவன் அல்லாஹ். கண்ணியத்தை கொடுப்பவன் அல்லாஹ். கண்ணியத்தை எடுப்பவன் அல்லாஹ்.

நீங்கள் எதில் கண்ணியத்தை தேடுகிறீர்களோ அதில் அல்லாஹ் இழிவை கொடுக்கிறான். எதில் இழிவை பார்க்கிறீர்களோ அதில் அல்லாஹ் கண்ணியத்தை ஏற்படுத்துகிறான்.

இந்த மக்கள் உலகத்தை கொண்டு கண்ணியத்தை தேடுகிறார்கள். படிப்பு,ஆட்சி,செல்வம்,ஆடம்பர வாழ்க்கை கொண்டு கண்ணியத்தை தேடுகிறார்கள். அல்லாஹ் இஸ்லாமிய மார்க்கத்தைக் கொண்டு ஈமானிலும் இந்த மக்களுக்கு கண்ணியத்தை ஏற்படுத்துகிறான்.

உமர் ரலியல்லாஹு அவர்கள் மதினாவில் கலீஃபாவாக இருக்கும்போது, ரோமர்களின் கிஸ்ராவின் ஆட்சியை சின்னாபின்னமாக்கி இனி கிஸ்ரா, கைஸர் கிடையாது, இனி இஸ்லாம் மட்டும் தான் என்று இஸ்லாமிய ஆட்சியை நிலை நிறுத்தினார்கள்.

அவர்கள் மதினாவிலிருந்து பாலஸ்தீனத்திற்கு புறப்படுகிறார்கள். ஒரு நாட்டை ஆளக்கூடிய அரசர் புறப்பட்டால் படைசூழ புறப்படுவார்கள், ஆனால் இங்கேஉமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அவருடைய அடிமை இருவர் மட்டுமே புறப்படுகிறார்கள்.

ஏனென்றால், அவர்கள் அல்லாஹ்விற்கு பயந்தார்கள்.மக்களுக்கு பயப்படவில்லை. மக்களுக்கு நீதம் செலுத்தினார்கள். எனவே, அவர்களுக்கு மக்களின் தீமையை அஞ்ச வேண்டிய அவசியமும் இல்லை.

அல்லாஹ்விற்காக மக்களை கண்ணியப்படுத்தினார்கள். மக்கள் உமர் ரலியல்லாஹு அவர்களை அல்லாஹ்விற்காக கண்ணியப் படுத்தினார்கள்.

உமர் ரலியல்லாஹு அவர்கள் புறப்படுகிறார்கள். பைத்துல்மாலில் இருந்து எந்த ஒட்டகத்தையும் குதிரையையும் அவர்கள் எடுக்கவில்லை. தங்களுடைய சொந்த தேவைக்கு எந்த குதிரையை வைத்திருந்தார்களோ அந்த சாதாரண குதிரையைக் கொண்டு புறப்படுகிறார்கள்.

ஒரு மைல் கலிபா உமர் ரலியல்லாஹு அவர்கள் அமர்ந்து செல்வார்கள், அடிமை நடந்து வரவேண்டும். மறுமுறை அடிமை உட்கார்ந்து வருவார், கலிஃபா நடந்து செல்ல வேண்டும்.

இப்படி ஒரு மாத காலம் ஏறக்குறைய 1000கிலோமீட்டர் தூரமுள்ள மதினாவில் இருந்து பாலஸ்தீனுக்கு கலிபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வரக்கூடிய அந்த காட்சி.

உமர் ரலியல்லாஹு அவர்கள் கீழே ஒரு போர்வை, மேல் ஒரு போர்வை. கலீபா அவர்களின் ஆடை இதுதான். சில அத்தியாவசிய தேவைக்காக ஒரு துணி அவர்களிடம் இருக்கிறது.

எங்கேயாவது அவர்களுக்கு துணி துவைக்க வேண்டும் என்றால், அதை உடுத்திக்கொண்டு துவைத்து விட்டு அது காயும் நேரம் வரை காத்திருப்பார்கள். பின் மீண்டும் உடுத்திக் கொண்டு பயணம் புறப்படுவார்கள்.

அம்ர் இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒருமுறை ஹஜ் பயணத்தில் உமர் ரலியல்லாஹு அவர்களுடன் பயணம் செல்லும்போது, சுபுஹ் தொழுகைக்கு நேரமாகி விட்டது, கலீபாவை காணவில்லை.

அம்ர் இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்; உங்களுடைய கலிஃபாவை நான் தேடி வருகிறேன் என்று, அப்போது உமர் ரலியல்லாஹு அவர்கள் ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நீங்கள் அங்கேயே இருங்கள், நான் வருகிறேன் என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

அம்ர் இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு கேட்கிறார்கள். கலிபா உங்களுக்கு என்ன ஆனது? என்று, உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எனக்கு இஹ்திலாம் (குளிப்பு கடமை) ஆகிவிட்டது. என்னுடைய ஆடையை துவைத்து, அது சற்று உலர்வதற்காக எதிர் பார்த்து இருக்கிறேன்.

அம்ர் இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், கலிபாவே! நீங்கள் இன்னொரு மாற்று ஆடையை வைத்திருக்கலாமே என்று கேட்கிறார்கள்.கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்; மக்கள் சொல்வார்களே, கலிஃபா இடத்தில் இரண்டு ஆடை இருக்கிறது என்று,ஒரே ஒரு ஆடையைக் கொண்டு வாழ்க்கையை கழித்தார்கள்.

அபூ உபைதா ரலியல்லாஹு அன்ஹு கலீஃபா வரக்கூடிய காட்சியைப் பார்க்கிறார்கள். சற்று மௌனமாக சென்று கலிபா இடத்தில் அமைதியாக, பயந்து பேசுகிறார்கள்.

கலீபாவே! உங்களுடைய ஆடையை நீங்கள் மாற்றிக் கொள்ளலாமே! நீங்கள் இந்த மக்கள் மதிக்கக்கூடிய, அரசர்கள் அணியக் கூடிய கண்ணியமான ஆடையைநாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.

இவர்கள் ஆடைக்கு மதிப்பு அளிக்கக் கூடியவர்கள். இவர்கள் பகிரங்கமான பகட்டுக்கு மதிப்பு அளிக்கக் கூடியவர்கள். நீங்கள் ஒரு கலிஃபா ஆயிற்றே! உங்களை இப்படி ஒரு சாதாரண நிலையில் பார்த்தால் அவர்கள் எப்படி நினைப்பார்களோ?

உங்களுக்காக நாங்கள் ஒரு உயர்ந்த ஜாதி குதிரையை கொண்டு வருகிறோம். அதில் நீங்கள் அமர்ந்து வரலாம். என்று அபூ உபைதா அவர்கள் கூறுகிறார்கள்.

அதற்கு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பதில், முகம் சிவந்தவர்களாக சொன்னார்கள்; அபூ உபைதா! நபியின் தோழர் ஆயிற்றே, இந்த உம்மத்தின் நம்பிக்கையாளர் என்று ரசூலூல்லாஹ் கூறி பெயர் பெற்றவர் ஆயிற்றே.

இந்த வார்த்தையை உன்னைத் தவிர வேறு யாராவது கூறியிருந்தால், அவரை இந்த வார்த்தைக்கான அடையாளமாக அவருக்கு தண்டனை அளித்திருப்பேன்.

அபூ உபைதாவே! ஆடு மேய்க்கக் கூடிய இடையர்களாக நாம் இருந்தோம். இறந்த பிராணிகளை திண்ணக் கூடியவர்களாக இருந்தோம்.நாம் இப்படி கேவலமாக இருந்தோம்.

அல்லாஹ் நமக்கு இந்த இஸ்லாமிய மார்க்கத்தை கொடுத்தான். இந்த மார்க்கத்தை கொண்டு கண்ணியத்தை கொடுத்தான். நாகரீகத்தை கற்றுக்கொடுத்தான்,உயர்வை கொடுத்தான்,இஸ்லாமை கொண்டு இந்த வாழ்க்கையை கொடுத்தான்.

எனவே, அல்லாஹ் கொடுத்த இந்த கண்ணியத்தின் வழியைத் தவிர, வேறு ஒரு வழியில் அவன் கண்ணியத்தை தேடினால், அல்லாஹ் நிச்சயம் அவனை கேவலப்படுத்தியே தீருவான். அல்லாஹ் அவனை இழிவுபடுத்தியே தீருவான்.

சஹாபாக்கள் இடத்தில் என்ன ராணுவம் இருந்தது? அவர்களிடத்தில் என்ன படைபலம் இருந்தது? எதிரிகள் பயந்தார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு,காலித் ரலியல்லாஹு அன்ஹு, அபூ உபைதா ரலியல்லாஹு அன்ஹுஆகிய நபியவர்களுடைய தோழர் வருகிறார்கள்.

இவர்கள் ஜிஹாதில் கலந்து கொள்கிறார்கள் என்றால் போதும் எதிரிகள் நடுங்கி விடுவார்கள். காரணம், அவர்கள்அல்லாஹ்வின் மார்க்கத்தை மதித்தார்கள்.

கிஸ்ரா உடைய மன்னன் தோற்று ஓடுகிறான். அவனுடைய ஓட்டம் சீனாவில் சென்று நிற்கிறது. சீனாவின் பேரரசர் காலில் விழுந்து கெஞ்சுகிறான். என்னுடைய கிஸ்ராவின் ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று. அரபுகளை எதிர்த்து கொல்ல வேண்டும், பழிவாங்க வேண்டும், எனக்கு படை பலம் கொடு,உதவி செய் என்று கெஞ்சுகிறான்.

அப்போது சீனாவின் மன்னன், நான் உன்னிடத்தில் சில கேள்விகளை கேட்கிறேன். அதற்கு பதில் சொல்.ஒரு மன்னன் இன்னொரு மன்னன் இடத்தில் உதவி தேடினால்,அந்த மன்னன் உதவி செய்வது மனிதாபிமான கடமை.

அப்போது கிஸ்ரா மன்னன், என்ன கேட்க வேண்டும்? என்று கூறினான். சீனாவின் மன்னன் கேட்கிறான்,அந்த மக்கள் இரவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? கிஸ்ரா மன்னன் கூறுகிறான், இரவில் அந்த மக்கள் குர்ஆன் ஓதுகிறார்கள்,தங்கள் இறைவனின் வேதத்தை ஓதுகிறார்கள்.

அடுத்து, இரண்டாவது கேள்வியை கேட்கிறான், அவர்கள் போர் மைதானத்திற்கு வந்தால் எப்படி இருக்கிறார்கள்? அதற்கு கிஸ்ரா பதில் கூறுகிறான், போர்க்களத்தில் மரணத்தை ஷஹாதத்தை விரும்புகிறார்கள். அதில் ஒவ்வொருவரும் மற்றவரை விட தான் முதலாவதாக போரில் கொல்லப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

மூன்றாவது கேள்வி, இறைவன் அவர்களுக்கு வேதத்தை அருளினான். அந்த வேதத்தில் தடைசெய்யப்பட்ட ஹராமான காரியத்தில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள்?

அவர்கள் இறைவன் தடைசெய்யப்பட்ட காரியத்தில் முற்றிலுமாக விட்டு விடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இறைவன் அவர்களுக்கு அனுமதித்த ஹலாலை பேணுகிறார்கள். இது இவர்களின் தன்மை என்று கிஸ்ரா சொல்கிறார்.

அப்போது அந்த சீனாவின் மன்னன் கூறுகிறார்; என் தோழரே! இந்த தன்மை யாருடைய கூட்டத்தின் தன்மையாக இருக்குமோ, உலக சக்தி எல்லாம் ஒன்று சேர்ந்தால் கூட அவர்களை வீழ்த்த முடியாது என்று.

ரோமர்களின் மீது படை எடுத்த போது ஒரு பெரிய இக்கட்டான நிலை வந்துவிட்டது. அப்போது போர் உடைய கமாண்டர் கேட்கிறார்; இரவில் குர்ஆன் ஓதக் கூடிய காரிகள் எங்கே இருக்கிறார்கள். குர்ஆனை மனனம் செய்தவர்கள் முன்னால் வாருங்கள் போருக்கு. அந்த காரிகள் முன்னேறி வருகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை அளிக்கிறான்.

அன்பிற்குரியவர்களே! அல்லாஹ்வுடன் நமக்குரிய உறவை பலப்படுத்தாத வரை, அல்லாஹ்விற்கு முன்னால் அடிபணியாத வரை அல்லாஹ் கண்ணியத்தை தரமாட்டான்.

அல்லாஹ் அக்பர்! என்று கைகட்டி நிற்க வேண்டும். நான் அல்லாஹ்வின் அடிமை, நாம் ஒரு ஆட்சியாளராக,அரசனாக, அதிகாரியாக இருந்தாலும், நான் அல்லாஹ்வின் அடிமை. அல்லாஹ் எனக்கு தீனை கொடுத்திருக்கிறான். அந்த தீனின் படி ஆட்சி செய்வது, தீனில் சொல்லப்பட்ட கட்டளைப்படி நடப்பது இதுதான் எனக்கு கண்ணியம். அல்லாஹ்விற்கு முன்னால் பணியாமல் கண்ணியத்தை தேடினால் அல்லாஹ் இழிவுபடுத்தி விடுவான்.

முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை, சஹாபாக்களின் வாழ்க்கையை, இந்த உலகத்தில் வாழ்ந்த நல்லவர்களின் வாழ்க்கையை பாருங்கள்!

இன்று முஸ்லிம்களின் நிலைமை என்ன ஆகிவிட்டது. அல்லாஹ்வோடு தனக்கு உள்ள தொடர்பை துண்டித்து விட்டார்கள். ஃபர்ளான வணக்க வழிபாடுகளில் அலட்சியம். ஃபர்ளான வணக்க வழிபாடுகளை விடுபவர்கள், இந்த முஸ்லிம் சமுதாயத்தில் 80%இருக்கிறார்கள்.

தொழுகை, ஸக்காத்தை விட்டவர்கள், ஹஜ் கடமையாகியும் ஹஜ் செய்யாமல் வாழும் செல்வந்தர்கள். இப்படி பர்லான கடமையை பாளாக்கக் கூடியவர்கள், அதன்பிறகு ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்கு அல்லாஹ் ஏற்படுத்திய இரவு நேரம்.

ஆனால், இன்றுபெரும்பாலான முஸ்லிம் மக்களின் இரவு பகுதி எதில் கழிக்கப்படுகிறது?

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எதை சபித்தானோ,எதன் மீது அவனுடைய கோபத்தை இறக்கினானனோ, அந்தக் காரியங்களில் ஆடல்,பாடல்,குடி இந்த காரியங்களை இரசிப்பது. இதில்தான் பெரும்பாலான முஸ்லிம்களின் நேரம் கழிந்து கொண்டிருக்கிறது,கூட்டம் கூட்டமாக இந்த பாவத்தை நோக்கி ஓடுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்,என்னுடைய இந்த உம்மத்தில் சோதனை நிகழும்,பூமியில் பூகம்பங்கள் ஏற்படும், உருவம் மாற்றப்படும், தொடர்மழை கொண்டு அல்லாஹ் அழிப்பான்.

எப்போது? இந்த உம்மத் மூன்று காரியங்களை செய்தால். 1. பாடக்கூடிய பாடகிகளுக்கு பின்னால் இந்த உம்மத் ஓடிவிட்டால். 2. மது அருந்தினால். 3. இசைக்கருவிகளை பயன்படுத்தினால் இந்த உம்மத்திற்கு அல்லாஹ்வுடைய சோதனை இறங்கிவிடும்.

அன்பிற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வோடு நமக்கு உள்ள உறவை நமக்கு கற்றுக் கொடுத்தார்கள். அந்த உறவை சீர் படுத்தாமல் இந்த துணியாவில் எதையும் சாதிக்க முடியாது.

அல்லாஹ் கூறுகிறான்,

وَمَنْ يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

எவர் அல்லாஹ்வை உறுதியாக பற்றிப் பிடித்துக் கொண்டாரோ, அவர் நேரான மார்க்கத்தின் பக்கம்வழிகாட்டபடுவார். (அல்குர்ஆன் 3 : 101)

எந்த சோதனை வந்தாலும்சரி,அது அரசாங்க ரீதியாக இருந்தாலும் சரி, தனி வாழ்க்கையில் வந்தாலும் சரி, எப்படிப்பட்ட சோதனையாக இருக்கட்டும், வறுமையின் மூலமாக,பசியின் மூலமாக, நஷ்டத்தின் மூலமாக, எதிரிகளின் மூலமாக, இப்படி எந்த சோதனை எந்த வழியில் வந்தாலும் ஒரே ஒரு மீழ்ச்சி இருக்கிறது, அது அல்லாஹ்வை கொண்டு மட்டுமே.

அல்லாஹ்விடமிருந்து வேறு எங்கும் தப்பிக்க முடியாது, வேறு எங்கும் ஒதுங்க முடியாது. அல்லாஹ்விடமே தவிர.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய கைகளில் அந்த விதியை வைத்திருக்கிறான். நிலைமைகளை மாற்றக்கூடியவன் அவன். ஆட்சியில் இருப்பவர்களை சாதாரண மக்களாக கைதிகளாக அவன் மாற்றுவான். கைதிகளை ஆட்சியாளராகவும் மாற்றுவான்.

இன்று, இந்த முஸ்லிம் சமூகம் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளில் ஒன்று, ஆட்சியாளர்களின் மூலமாக, அதிகாரிகளின் மூலமாக.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு இதற்கான தெளிவான வழிகாட்டலை சொன்னார்கள்.

எப்போது உங்களுடைய அமல் செயல்பாடுகள் கெட்டு விடுமோ, நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு விலகி விடுவீர்களோ, வணக்க வழிபாடுகளை புறக்கணித்து விடுவீர்களோ, ஆசாபாசங்களில் சென்று விடுவீர்களோ, உங்களுடைய வியாபாரத்தில் தர்மத்தில் நாணயத்தை விட்டுவிடுவீர்களோ, வணக்க வழிபாட்டை விட்டு விளகுவார்களோ அப்போது அநியாயக்கார அரசனை அல்லாஹ் சாட்டுவான்.

நல்ல ஆட்சியாளர்கள் வேண்டுமா?இரக்கம் அளிக்கக்கூடிய நேர்மையான ஆட்சியாளர்கள் வேண்டுமா? அதற்கு ஒரே வழி, அல்லாஹ்வோடு உங்களுடைய தொடர்பை சரி செய்து கொள்ளுங்கள்.

ஹராமை,அநீதத்தை நீங்கள் விட்டுவிடுங்கள். பொய், ஏமாற்றத்தை நீங்கள் விட்டுவிடுங்கள், உங்களுடைய ஆட்சியாளர்கள் விட்டுவிடுவார்கள்.

அல்லாஹ்வின் பக்கம் தீனின் பக்கம் திரும்புவதைத் தவிர வேறு வழி நமக்கு இல்லை. அதுதான் அல்லாஹ் விரும்பக்கூடிய இஸ்லாமிய மார்க்கம்.

வாழ்க்கை,கொள்கை, செயல்பாடு அனைத்திலும் இதைப் பின்பற்றி அல்லாஹ்விற்கு முன்னால் பணிந்து, யா அல்லாஹ்! நீ என்னை கைவிட்டு விடாதே!

நெருப்புக் குண்டத்தில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பாதுகாத்தவனே! கடலைப் பிளந்து மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பாதுகாத்தவனே! எதிரிகளிடமிருந்து ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை உயர்த்தி பாதுகாத்தவனே! நீ எப்படி வேண்டுமானாலும் பாதுகாத்துக் கொள்வாய், கண்ணியப்படுத்தி கொள்வாய்,

நாங்கள் உங்களுடைய அடியார்கள். எங்களுடைய திறமையை கொண்டு, எங்களுடைய பலத்தை கொண்டு, எங்களுடைய செல்வத்தைக் கொண்டுஉன்னிடத்தில் பாதுகாப்பு கேட்கவில்லை.

யா அல்லாஹ்! நாங்கள் உன் பக்கம் தேவையுடையவர்கள் என்பதைக் கொண்டு, நாங்கள் பலவீனமானவர்கள் என்பதைக் கொண்டு,நாங்கள் இழிவானவர்கள் என்பதை கொண்டு,கண்ணியமிக்க உன்னிடத்தில் ஆட்சி மிக்க உன்னிடத்தில் அதிகாரமிக்க உன்னிடத்தில் பணிந்து மன்றாடிக் கேட்கின்றோம். உன்னுடைய தீனை நாங்கள் பின்பற்றுகிறோம்.

அல்லாஹ் நம்முடைய சந்ததிகளை,குடும்பத்தாரை அனைவரையும் இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் நிலைநிறுத்துவானாக! அல்லாஹ் நம்மை ஏற்றுக் கொள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا قَيْسٌ، عَنْ خَبَّابِ بْنِ الأَرَتِّ، قَالَ: شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُتَوَسِّدٌ بُرْدَةً لَهُ فِي ظِلِّ الكَعْبَةِ فَقُلْنَا: أَلاَ تَسْتَنْصِرُ لَنَا أَلاَ تَدْعُو لَنَا؟ فَقَالَ: «قَدْ كَانَ مَنْ قَبْلَكُمْ، يُؤْخَذُ الرَّجُلُ فَيُحْفَرُ لَهُ فِي الأَرْضِ، فَيُجْعَلُ فِيهَا، فَيُجَاءُ بِالْمِنْشَارِ فَيُوضَعُ عَلَى رَأْسِهِ فَيُجْعَلُ نِصْفَيْنِ، وَيُمْشَطُ بِأَمْشَاطِ الحَدِيدِ، مَا دُونَ لَحْمِهِ وَعَظْمِهِ، فَمَا يَصُدُّهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَاللَّهِ لَيَتِمَّنَّ هَذَا الأَمْرُ، حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ، لاَ يَخَافُ إِلَّا اللَّهَ، وَالذِّئْبَ عَلَى غَنَمِهِ، وَلَكِنَّكُمْ تَسْتَعْجِلُونَ» (صحيح البخاري- 6943)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/