HOME      Khutba      நல்லவர்கள் | Tamil Bayan - 178   
 

நல்லவர்கள் | Tamil Bayan - 178

           

நல்லவர்கள் | Tamil Bayan - 178


நல்லவர்கள்

ஜுமுஆ குத்பா தலைப்பு : நல்லவர்கள்

வரிசை : 178

இடம் : எஸ்.எம்.ஜெ.பிளாசா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 11-06-2010 | 28-06-1431

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!அல்லாஹ்வை உரிய முறையில் பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் தக்வாவை ஈமானை உறுதிப்படுத்தி தருவானாக‌! நம் உயிர் கைப்பற்றப்படும் போது முஸ்லிம்களாக முஃமின்களாக அல்லாஹ்வை பயந்து கொண்ட நல்லவர்களாக கைப்பற்றப்படுவதற்கு அல்லாஹ் நமக்கு உதவுவானாக!

அல்லாஹு தஆலா அவன் படைத்த இந்த மனித படைப்பிலிருந்து ஒரு சாராரை விரும்புகிறான்.ஒரு சாராரை அவன் வெறுக்கின்றான். ஒரு கூட்டத்தை அவன் நேசிக்கிறான்.இன்னொரு கூட்டத்தை அல்லாஹ் வெறுக்கின்றான்.

அல்லாஹ் நேசிக்க கூடிய அல்லாஹ் விரும்பக்கூடிய கூட்டம் யாரென்றால் அவர்களைத்தான் அல்குர்ஆனும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ்களிலும் அஸ்ஸாலிஹுன் -நல்லவர்கள் என்று வர்ணிக்கிறது.

இன்று,நாம் ஒவ்வொருவரும் ஒரு துறையில் முன்னேறுவதற்கு முயற்சிக்கிறோம். ஒருவர் ஆலிமாக ஆவதற்கு முயற்சிக்கிறார். ஒருவர் மருத்துவராக பொறியாளராக அல்லது ஏதாவது ஒரு படிப்பை படித்து பட்டம் வாங்குவதற்காக முயற்சிக்கிறார்.

ஒரு முஸ்லிம் அவன் வாழ்க்கையில் முயற்சிக்க வேண்டும் என்றால்,முதலாவதாக அவர் நல்லவராக ஆவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

ஏனென்றால்,இஸ்லாம் மற்றும் ஈமான் இவற்றோடு நல்ல அமல்கள் சேரவில்லை என்றால் அங்கு பேராபத்தை மனிதன் எதிர்நோக்குகின்றான்.

ஏனென்றால், எந்த பாவத்தால் ஈமான் பறிபோகும்? எந்த பாகுபாட்டால் இஸ்லாம் மார்க்கத்தை விட்டு ஒருவன் வெளியேறி விடுவான்? என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்.

மார்க்க அறிஞர்கள் பல பாவங்களை பல குற்றங்களை நமக்கு பட்டியலிட்டு சொல்லுகின்றார்கள்.

என்ன பாவங்களை செய்தால் மனிதன் ஈமானை விட்டு வெளியேறி விடுகின்றான்? என்னென்ன பாவங்களை செய்தால் எந்தந்த வார்த்தைகளைப் பேசினால் ஒரு மனிதன் இஸ்லாமை விட்டு வெளியேறி விடுகிறான் என்று.

ஆகவே, நம்மில் அந்த ஸாலிஹான நல்லவர்களாக ஆகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அப்படி நாம் மாறினால் தான் அல்லாஹ்வுடைய அருளை அல்லாஹ் உடைய அன்பை நாம் அடைய முடியும்.

முதலில், இந்த சாலிஹான நல்லவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் என்ன?

அல்லாஹ் இவர்களை எந்த தரத்தில் வைத்திருக்கின்றான் என்பதை நாம் அறிய வேண்டும்.

இன்று மருத்துவரானால் அல்லது பெரிய படிப்பை படித்தால் அதனால் அவனுக்கு கிடைக்கக்கூடிய அந்த லாபம் மனிதனுக்கு தெரியக்கூடிய காரணத்தால் அந்தத் தகுதியை அடைவதற்கு முயற்சி செய்கின்றான்.

ஒரு தகுதி அடைந்ததற்கு பிறகு அதற்கு மேல் என்ன தகுதி இருக்கின்றது என்று தேடி அலைகின்றான். காரணம் என்ன? அந்தத் தகுதியால் கிடைக்கின்ற பலன்களை எதிர்பார்த்து. பலன் இல்லை என்றால் யாரும் முயற்சி செய்ய மாட்டார்கள்.

அதுபோன்றுதான் ஸாலிஹ் என்ற நல்லவர்களாக நாம் ஆகிவிட்டால் நமக்கு என்ன வெகுமதி? நமக்கு என்ன தரத்தை அல்லாஹ் கொடுக்க விரும்புகின்றான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப் போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தான் மிக அழகான தோழர்கள். (அல்குர்ஆன் 4 : 69)

அல்லாஹ்விற்கும் கட்டுப்படவேண்டும். அல்லாஹ்வுடைய தூதருக்கும் கட்டுப்பட வேண்டும். கட்டுப்படுவதில் அடிபணிவதில் அல்லாஹ் வேறு, ரசூல் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாது.

வணக்க வழிபாட்டை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் செய்ய முடியாது. இறைத்தூதருக்கும் செய்ய முடியாது. வானவர்க்கும் செய்ய முடியாது. எந்த நல்லடியார்களுக்கும் செய்ய முடியாது.

ஆனால், கட்டுப்படுவது, பணிவது, கீழ்ப்படிந்து நடப்பது, கட்டளைகளை ஏற்றுக் கொள்வது, தவிர்த்துக் கொள்வது என்று வந்துவிட்டால் அல்லாஹ்வுடைய கட்டளைகளை ஒரு முஸ்லிம் எப்படி தயக்கமில்லாமல் எந்தவிதமான கோணல் எண்ணம் இல்லாமல் முழு மனதோடு ஏற்று செயல்படுத்த வேண்டுமோ அது போன்றுதான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒன்றைக் கட்டளையிட்டு விட்டால் முஸ்லிம்களுக்கு அதில் இரண்டாவது அபிப்பிராயம் இருக்கக்கூடாது.

அல்லாஹ் கூறுகிறான் :

فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا

(நபியே) உனது ரப்பின் மீது ஆணையாக! தங்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்கில் உம்மை அவர்கள் நடு வராக்கி பின்னர் நீர் தீர்ப்பு வழங்கியதில் எத்தகைய அதிருப்தியையும் தங்கள் மனங்களில் கொள்ளாமல் அப்படியே ஏற்று முற்றிலும் வழிபடாத வரையில் அவர்கள் ஈமான் கொண்டவர்களாக மாட்டார்கள். (அல்குர்ஆன் 4 : 65)

அல்லாஹ்வுடைய கட்டளைக்கு எப்படி கீழ்படிய வேண்டுமோ அதுபோன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கட்டளைக்கும் கீழ்ப்படிய வேண்டும்.

ஜய்னப் ரழியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கட்டளை கொடுத்தார்கள். இது ரசூல் உடைய வார்த்தை ரசூல் உடைய சொல் என்று ஜய்னப் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் சற்று அதை செய்வதில் தயக்கம் காட்டினார்கள்.

வளர்ப்பு மகனை மணமுடித்துக் கொள்ள வேண்டுமென்று. ஒரு அடிமையாக இருந்து உரிமை இடப்படுபவரை மணமுடிக்க வேண்டும் என்று.

ஜய்னப் ரழியல்லாஹு அன்ஹா குரைஷி வம்சத்தை சேர்ந்தவர்கள். தன் குலத்தை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லுகின்றார்கள்.

அந்தப் பெண் யோசிக்கிறாள். நானும் குறைஷி வம்சத்தை சேர்ந்தவள். இவர் அடிமையாக இருந்து உரிமை விடப்பட்டவர். உயர்ந்த குலத்தில் பிறந்த நான் ஒரு குலமற்ற பிரசித்தி பெற்ற பாமரையில் பிறக்காத ஒருவரை எப்படி மணமுடிப்பது? என்று தயங்குகிறாள்.

ஏழு வானங்களுக்கு மேலிருந்து அல்லாஹ் வசனத்தை இறக்குகிறான்.

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا

இன்னும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதாவது ஒரு காரியத்தை முடிவு செய்து விட்டால் , முஃமினான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களுடைய அக்காரியத்தில் அவர்கள் சுயமாக தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை. எவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்வாரோ அவர் நிச்சயமாக தெளிவான வழி கேடாக , திட்டமாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33 : 36)

இங்கே ஜய்னபை அழைத்து ஸெய்தை மணம் முடித்துக் கொள் என்று கட்டளையிடப்பட்டது. ஆனால், வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவது என்ன? முஃமினான ஆண் யாராக இருந்தாலும் முஃமினான பெண் யாராக இருந்தாலும், அவர்களுக்கு அனுமதி அல்ல.

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் ஒன்றை முடிவு செய்துவிட்டால், எதை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முடிவு செய்தார்களோ அதை அல்லாஹ் முடிவு செய்து விட்டான்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்களோ அவர்களுடைய வாயிலிருந்து எது வெளியேறிவிட்டதோ அதை அல்லாஹ் கூறிவிட்டான். அதை அல்லாஹ் முடிவு செய்து விட்டான்.

அது அல்லாஹ்விற்கு விருப்பமற்றதாக இருக்குமேயானால் உடனே வஹியை இறக்கி, நபியே! உமது பேச்சை மீட்டுக் கொள்ளுங்கள்! என்று கட்டளையிட்டிருப்பான்.

எதுவரை நீங்கள் கூறியது தவறு அல்லது உங்கள் செயல் தவறு என்று கண்டிக்கவில்லையோ அவை அனைத்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது.

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் இருவரையும் சேர்த்து சொல்லுகின்றான். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் ஒன்றை முடிவு செய்துவிட்டால் முஃமினான ஆணுக்கும் முஃமினான பெண்ணுக்கும் அனுமதி இல்லை, அவர்களுக்கு வேறு ஒரு அபிப்பிராயம் இருப்பதற்கு. யார் அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் பகிரங்கமான வழி கேட்டிலேயே சென்றுவிட்டார்கள். (அல்குர்ஆன் 33 : 36)

அன்பிற்குரியவர்களே! யார் இந்த அடிப்படையில் அல்லாஹ்விற்கு பணிந்து நடக்கிறார்களோ ரசூலுக்கு பணிந்து நடக்கிறார்களோ இவர்கள் நபிமார்களோடு இருப்பார்கள்.

சித்திக் என்ற அந்த உயர்ந்த உண்மையாளர்களோடு இருப்பார்கள். ஷுஹதா என்ற அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட உயிர் நீத்த தியாகிகளோடு இருப்பார்கள், நல்லவர்களோடு இருப்பார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மரண நேரம், கடுமையான நோய் காய்ச்சல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இருமல் அதிகமாக இருக்கிறது.

அந்த நேரத்தில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாயிலிருந்து வெளியேறிய வார்த்தையை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பதிவு செய்கிறார்கள்.

«مَا مِنْ نَبِيٍّ يَمْرَضُ إِلَّا خُيِّرَ بَيْنَ الدُّنْيَا وَالآخِرَةِ»، وَكَانَ فِي شَكْوَاهُ الَّذِي قُبِضَ فِيهِ، أَخَذَتْهُ بُحَّةٌ شَدِيدَةٌ، فَسَمِعْتُهُ يَقُولُ: {مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ} [النساء: 69] فَعَلِمْتُ أَنَّهُ خُيِّرَ

ஒரு இறைத்தூதருக்கு நோய் வந்துவிட்டால், அவருக்கு உடல் குறைவு ஏற்பட்டு விட்டால் அல்லாஹ் அவருக்கு இரண்டு விருப்பத்தை கொடுக்கிறான். ஒன்று,நீங்கள் துன்யாவை விரும்புகிறீர்களா? அல்லது மறுமையை விரும்புகிறீர்களா?

(அதாவது அதிகம் வாழவேண்டும் என்கின்ற ஆசை இருக்கின்றதா? அல்லது நீங்கள் மறுமையை தேர்ந்தெடுக்கிறீர்களா, என்னிடத்தில் வருவதை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்களா?

நபிமார்கள் யாருக்கும் உடல் நல குறைவு ஏற்பட்டாலும் இந்த இரண்டு விருப்பத்தை அல்லாஹ் கொடுப்பான். உங்களுக்கு முன்னால் இந்த இரண்டு விருப்பம் இருக்கின்றது, எதை நீங்கள் தேர்ந்தெடுக்க போகின்றீர்கள்?)

பிறகு,ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நிலையைப் பற்றி ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா சொன்னார்கள்;

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த மரண தருவாயில் ஏற்பட்ட வலி, அவர்களுடைய அந்த இருமல் அந்த நேரத்தில் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்.

யா அல்லாஹ்! என்னை உன்னுடைய இறைத்தூதர்களோடு சேர்த்து விடு, என்னை சித்தீக்குகளோடு சேர்த்து விடு, என்னை ஷஹீதுகளோடு சேர்த்து விடு, என்னை ஸாலிஹீன் என்ற நல்லவர்களோடு சேர்த்துவிடு.

அன்னை ஆயிஷா சொல்லுகின்றார்கள்; எனக்கு புரிந்து விட்டது. ஒவ்வொரு நபிக்கும் அல்லாஹ் மரண நேரத்தில் அந்த இரண்டு விருப்பங்களைக் கொடுப்பான். அது போன்று என்னுடைய கணவர் ரசூலுல்லாஹ்விற்கும் இரண்டு விருப்பத்தை கொடுத்துவிட்டான். அவர்கள் மறுமையை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். நல்லவர்களோடு சேர்வதை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 4586.

ஆகவே, சென்றுவிட்ட எல்லா இறைத்தூதர்களும் அவர்களுடைய வாழ்நாளிலும் சரி, அவர்களுடைய மரணத் தருவாயிலும் சரி, அல்லாஹ்விடத்தில் அழுது அவர்கள் கேட்ட ஒரு துஆ இருக்கிறது என்றால், அது யா அல்லாஹ்! என்னை நல்லவர்களோடு சேர்த்து விடு, சாலிஹீன் என்ற நல்லவர்களோடு சேர்த்துவிடு என்று கேட்டார்கள்.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் எத்தகைய இறைத்தூதர்!அல்லாஹ் நம் நபிக்கு கட்டளையிடுகின்றான்;இப்ராஹீமை பின்பற்று என்று. அவரை ஹலீல் என்று அல்லாஹ் சொல்லுகின்றான்.

அந்த நபியின் பிரார்த்தனையை பாருங்கள்;

رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ

என ரப்பே! எனக்கு ஞானத்தை வழங்கி,என்னை நல்லடியார்கள் உடன் சேர்ப்பாயாக! (அல்குர்ஆன் 26 : 83)

இந்த பிரார்த்தனை ஒரு இடத்தில் மட்டுமல்ல. இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் எப்போதெல்லாம் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை கேட்டார்களோ அப்போது தன்னுடைய முடிவிற்கும் கேட்டார்கள், தனக்கு பிறக்கக்கூடிய குழந்தையும் சாலிஹான குழந்தையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள்.

இன்று நம்மில் பலர், அல்லாஹ்விடத்தில் குழந்தை வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றோம்.

யா அல்லாஹ்! சாலிஹான, உனக்கு வழிபடக்கூடிய நல்ல சந்ததிகளை கொடு என்று எந்த அளவிற்கு பிரார்த்தனை செய்கின்றோம்.

குழந்தை இல்லை இல்லை என்று கவலைப்பட்டு அதற்காக துஆ கேட்பவர்கள், நல்ல சந்ததிகளை கேட்க வேண்டும். சாலிஹான சந்ததிகளை கேட்கவேண்டும்.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் குழந்தை இல்லாத அந்த நேரத்தில் வேதனையை அனுபவித்த போது அல்லாஹ்விடத்தில் கேட்கிறார்கள்;

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

என்னுடைய ரப்பே! நல்லோர்களிலிருந்து எனக்கு ஒரு சந்ததியை அளித்திடுவாயாக! (அல்குர்ஆன் 37 : 100)

ஏனென்றால்,எந்த ஒரு குழந்தை சாலிஹானதாக இருக்குமோ அந்தக்குழந்தையின் பிரார்த்தனையால் பெற்றோர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்றான்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கின்றார்கள்;ஒரு அடியான் இறந்துவிட்டால் அவனுடைய அமல்கள் முடிவடைந்துவிடும். ஆனால் மூன்று காரியங்களைத் தவிர.

அதில் மூன்றாவது,

أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ

இவன் விட்டுப்போன சாலிஹான அந்த குழந்தை. (1)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1631.

இந்த சாலிஹான குழந்தை தன் தந்தைக்காக பிரார்த்தனை செய்கிறது. அவனுடைய பிரார்த்தனையால் அல்லாஹ் அவனுடைய தந்தையின் பாவங்களை மன்னிக்கின்றான். தந்தையுடைய தரஜாத்துளை அல்லாஹ் சொர்க்கத்தில் உயர்த்துகிறான்.

ஆகவேதான்,நபிமார்கள் தாங்களும் சாலிஹானவர்களாக ஆகவேண்டும்,சாலிஹானவர்களுடன் எங்களை சேர்த்து வை,இன்னும் சாலிஹான சந்ததிகளை எங்களுக்கு கொடு என பிரார்த்தனை செய்தார்கள்.

யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் கடைசிக்காலத்தில் பிரார்த்தனை செய்கிறார்கள்;

رَبِّ قَدْ آتَيْتَنِي مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ

‘‘என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்தருள்புரிந்து, கனவுகளின் வியாக்கியானங்களையும் எனக்குக் கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் நீதான் படைத்தாய். இம்மையிலும், மறுமையிலும் என்னை பாதுகாப்பவனும் நீதான். முற்றிலும் (உனக்கு) வழிப்பட்டவனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக!'' (என்று பிரார்த்தித்தார்.) (அல்குர்ஆன் 12 : 101)

இன்று,எத்தனை பேர் அல்லாஹ் அவருக்கு கொடுத்திருக்கிற அருளை, மனமாற அதை உணர்ந்து நினைக்கிறார்கள்.

நம்மில் பலர் அல்லாஹ் கொடுத்த அத்தனை நிஃமத்துகளையும் தனக்கு சொந்தமாக்கிக் கொள்கிறான். எனது திறமை எந்த கல்வியால் என்று. உண்மையான சொந்தக்காரனான அல்லாஹ்வை மறந்து விடுகிறான்.

அல்லாஹ்வின் அடியார்களே! பிரார்த்தனை என்றால் இப்படி உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளியேற வேண்டும்.

அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவன் நமக்கு செய்த அருளை அல்லாஹ்விற்கு முன்னால் ஏற்றுக்கொண்டு, தன் இயலாமையை பலவீனத்தை புரிந்து, அல்லாஹ்விடத்தில் அடியானின் உள்ளத்திலிருந்து அந்த வார்த்தைகள் வெளியேறும்போது அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்கிறான்.

இங்கே வார்த்தையை சொல்ல வேண்டும் என்றால் அங்கே செயல் அந்த வார்த்தையை உண்மை படுத்தவேண்டும். வார்த்தையால் சொல்வது அல்ல, நம்மோடு செயல் அமைந்திருக்கவேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் :

(إن لله تعالى آنيةً من أهل الأرض، وآنية ربكم قلوب عباده الصالحين، وأحبها إليه ألينها وأرقها)

அல்லாஹ் இந்த பூமியில் நேசிக்கின்ற ஒரு உள்ளம் இருக்கிறது என்றால்,அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனுடைய இல்மை போடுவதற்கு சில நல்லவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுக்கிறான்.

அவர்களைத்தான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த துன்யாவில் அல்லாஹ்வுடைய பாத்திரங்கள் என்று சொல்லுகிறார்கள்.

பாத்திரம் என்றால் எதற்கு சொல்லப்படும். அதில் மக்களுக்கு பயன்படும் பொருள் வைக்கப்பட்டு அதிலிருந்து பிறகு எடுக்கப்படும்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

பூமியில் அல்லாஹ்வுக்கு என்று பாத்திரம் இருக்கின்றன. அல்லாஹ்வுடைய பாத்திரங்கள் நல்லவர்களுடைய உள்ளங்கள். சாலிஹான மக்களுடைய உள்ளங்கள். அவர்களுடைய உள்ளங்களில் கோணல் இருக்காது. அவர்களுடைய உள்ளங்களில் மன இச்சை இருக்காது. அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் வேதத்தில் தூதரின் முடிவில் உடன்பாடு காண மாட்டார்கள்.

அல்லாஹ் சொன்னதை அவன் சொன்னது போல் புரிந்து கொள்வார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை அவர்கள் என்ன நோக்கத்துடன் சொன்னார்களோ அந்த நோக்கத்திலேயே அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ, எண் : 2163.

எதுவரை நாம் அல்லாஹ்விற்கு பணியக் கூடிய நல்லவராக மாற மாட்டோமோ, நம்முடைய அமல்களை அல்லாஹ்விற்கு விருப்பமானதாக ஆக்கிக் கொள்ள மாட்டோமோ அதுவரை இந்த ஸாலிஹ் என்ற தரத்தை அடைய முடியாது.

எதுவரை ஸாலிஹீன் என்ற தரத்தை ஒரு ஆலிமோ அல்லது ஒரு சாதாரண மனிதன் அடைய மாட்டானோ அவரிடத்தில் நேர் வழியைப் பார்க்க முடியாது.

கல்வி இருக்கலாம், ஞானம் இருக்கலாம், பேசலாம், ஆனால், குர்ஆன் சுன்னா உடைய ஒளியை அவர்களிடத்தில் பார்த்து முடியாது.

இந்த சாலிஹான மக்கள் எங்கே வசித்தாலும் சரி,எப்படி வசித்தாலும் சரி,எந்த நாட்டில் இருந்தாலும் சரி, இவர்கள்தான் அல்லாஹ்விற்கு நெருக்கமானவர்கள். இவர்கள்தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நெருக்கமானவர்கள்.

அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை தேட வேண்டுமா?ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பாசத்தை அடைய வேண்டுமா?அதற்காக நாம் செய்ய வேண்டியது மிகவும் சாதாரண ஒன்றுதான்.

ஸாலிஹ் என்ற நல்லவர்களாக நாம் மாறிவிடுவது. நம்முடைய செயல்களை அல்லாஹ்விற்கு விருப்பமானதாக ஆக்கிக் கொள்வது. இதன் மூலம் அல்லாஹ் நம்மை நெருங்கி கொள்கிறான். நாளை மறுமையில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நெருக்கமானவர்களாக இருக்கலாம்.

எந்த அளவு ஸாலிஹீன்களை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நேசித்தார்கள் பாருங்கள்.

ஹபஷாவிற்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில தோழர்களை அனுப்பினார்கள். அவர்கள் மூலமாக அந்த மன்னர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ஏற்றுக்கொண்டார்.

அவர் மரணிக்கிறார். அப்போது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பாசத்தை பாருங்கள்.

«مَاتَ اليَوْمَ رَجُلٌ صَالِحٌ، فَقُومُوا فَصَلُّوا عَلَى أَخِيكُمْ أَصْحَمَةَ»

இன்றைய தினம் இந்த பூமியில் சாலிஹான ஒரு நல்லவர் மரணித்து விட்டார். நஜ்ஜாஷி இறந்துவிட்டார். நீங்கள் எல்லாம் எழுங்கள். என்னோடு அவர்களுக்கு தொழுகை நடத்துங்கள் என்று கூறி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை நடத்துகிறார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3877.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிராத்தனை அத்தனை சஹாபாக்கள் உடைய பிரார்த்தனையை அந்த நபர் அடைந்ததற்குரிய காரணம், அவர் சாலிஹான மனிதர்.

எப்போது அந்த மன்னர் இறந்தாரோ அதே நேரத்தில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சில நிமிடங்கள் கூட முந்தவில்லை, பிந்தவில்லை. அவர் அங்கே மரணிக்கிறார், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இங்கே வஹீ வருகின்றது.

அவர் அரசர் என்ற காரணத்தினால்.

அஸ்ஹமா -அவர் அல்லாஹ்வுடைய உண்மையான சாலிஹான அடியாராக இருந்த காரணத்தால் அல்லாஹ் அர்ஷில் இருந்து செய்தி சொல்லிவிடுகிறான்.

இப்படி சாலிஹான ஒருவராக நாம் இருக்கும்போது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய துஆவை நாம் அடைந்து கொள்கிறோம்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் உடைய துஆ மட்டுமல்ல, அவர்களுக்கு முன்னால் சென்ற அத்தனை இறைத்தூதர்கள் உடைய துஆவும், பிறகு ரசூலுல்லாஹ்விற்குப் பின்னால் கியாமத்து நாள் வரை வரக்கூடிய அத்தனை கோடி முஃமின்களுடைய முஸ்லிம்களுடைய பிரார்த்தனையும் நமக்கு கிடைக்கிறது.

தொழுகையில் நாம் ஒரு துஆ செய்கின்றோம்.அந்த துஆவை செய்யாமல் எந்தத் தொழுகையையும் முடிக்க முடியாது. அது எத்தனை ரக்அத் தொழுகையாக இருந்தாலும் சரி.

தொழுகையின் முதல் அமர்வில் நீங்கள் தஷஹ்ஹுதில் உட்கார்ந்தால்,

«التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ»

இந்த துஆவை நமக்கு கற்றுக் கொடுத்துவிட்டு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

நீங்கள் இப்படி பிரார்த்தனை செய்தால் இந்த பூமியில் உள்ள அத்தனை நல்லவர்களுக்கும் இந்த பிரார்த்தனை போய் சேரும்.

ஏன்?இதில் எங்கள் மீதும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பு நிலவட்டும்,இந்த பூமியிலுள்ள சாலிஹான நல்லவர்கள் எல்லோரின் மீதும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பு நிலவட்டும் என்ற வார்த்தை உள்ளது.

தொழக் கூடியவர்கள் அத்தனை பேருடைய துஆக்களையும் ஒரு ஸாலிஹான மனிதன் அடைந்து கொள்கிறார்.

ஒரு முஸ்லிம் சாலிஹானவனாக இருக்கும்போது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த துஆ, சஹாபாக்கள் உடைய துஆ,தாபியீன்கள் உடைய துஆ, உலகத்தில் உள்ள அத்தனை முஃமின்களுடைய துஆவும், அவர்கள் நமக்கு முன்னால் இறந்துவிட்டாலும் அந்தப் பிரார்த்தனையில் நாமும் பங்கு பெறுகிறோம்.

இந்த சாலிஹான மனிதருடைய நிலைமை, அவர் உயிர் வாழும் போது மட்டும் அல்லாஹ்விடத்தில் காண்ணியம் பெறுவதல்ல.

இவருடைய உயிர் கைப்பற்றப்பட்டபட்டால் இவருடைய ஜனாஸா எடுத்துச் செல்லப்பட்டால் அங்கே நடக்கின்ற அந்த காட்சியை ரசூல் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் சொல்லுகின்றார்கள்.

முதலாவதாக, ஒரு சாலிஹான மனிதர் உடைய மரணத்தருவாயை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லுகின்றார்கள்.

மனிதனின் உயிர் வாங்குவதற்கு மலக்குகள் வருகிறார்கள்.அந்த மனிதன் நல்லவனாக இருந்தால் மலக்குகள் அந்த உயிரை பார்த்து சொல்வார்கள்;

اخْرُجِي أَيَّتُهَا النَّفْسُ الطَّيِّبَةُ، كَانَتْ فِي الْجَسَدِ الطَّيِّبِ، اخْرُجِي حَمِيدَةً، وَأَبْشِرِي بِرَوْحٍ وَرَيْحَانٍ، وَرَبٍّ غَيْرِ غَضْبَانَ

நல்ல ஆன்மாவே, பரிசுத்த ஆன்மாவே! பரிசுத்தமான நல்ல உடலில் நீ இருந்தாய்.உன்னை இந்த அடியான் பாவத்தில் ஈடுபடாமல் பாதுகாத்தான்.

அல்லாஹ்வால் புகழ பட்டவனாக நீ வா! அல்லாஹ்வுடைய வெகுமதியை நீ சுபச்செய்தியாக ஏற்றுக்கொள்! வெற்றியை சுபச் செய்தியாக ஏற்றுக்கொள்! சொர்க்கத்தின் நறுமணத்தை நீ சுபச் செய்தியை ஏற்றுக் கொள்! உன் மீது கோபம் இல்லாமல் அந்த இறைவன் இருக்கின்றான் என்ற சுபச் செய்தியை நீ ஏற்றுக்கொள்!

வானவர் அந்த மனிதருக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு இந்த வார்த்தையைச் சொல்லிக் கொண்டே இருப்பார்; பரிசுத்தமான ஆன்மாவே! பரிசுத்தமான இந்த உடலிலிருந்து நீ வெளியேறி வா, நீ வெளியே ஏறி வா! என்று அழைத்துக் கொண்டே இருப்பார்.

இந்த சுபச் செய்திகளை கேட்கின்ற அந்த ஆன்மா அப்படியே துள்ளிக் குதித்துக் கொண்டு அவருடைய உடலில் இருந்து வெளியேறும்.

பிறகு, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; அந்த உயிரை வானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அப்போது அந்த முதல் வானத்தில் உள்ள வானவர்கள் சொல்வார்கள்.

நல்ல ஆன்மாவே! பரிசுத்தமான உடலில் இருந்த நல்ல ஆன்மாவே! அல்லாஹ்வுடைய புகழை ஏற்றுக் கொண்டவனாக நீ வா! அல்லாஹ்வால் புகழப்பட்டவனாக நீ வா!

அல்லாஹ் உடைய பொருத்தத்தைக் கொண்டு அல்லாஹ் உன் மீது கோபம் இல்லாமல் இருக்கிறான் என்ற நற்செய்தியைக் கொண்டு நீ வா!

என்று அந்த முதல் வானத்தில் உள்ள வானவர்கள் சொல்வார்கள். இப்படி ஒவ்வொரு வானத்திலுள்ள மலக்குகளும் அந்த நஃப்ஸை வாழ்த்திக் கொண்டே இருப்பார்கள்.

பிறகு, எந்த வானத்தின் மேல் அல்லாஹ் இருக்கின்றானோ அந்த வானத்திற்கு அந்த நஃப்ஸை அழைத்துச் செல்லப்படும்.

இதற்கு மாற்றமாக ஒருவன் நல்லவனாக இல்லை என்றால் தீயவனாக கெட்டவனாக இருந்தால் அவனுடைய முடிவு என்ன?

வானவர்கள் சொல்வார்கள்;

اخْرُجِي أَيَّتُهَا النَّفْسُ الْخَبِيثَةُ، كَانَتْ فِي الْجَسَدِ الْخَبِيثِ، اخْرُجِي ذَمِيمَةً، وَأَبْشِرِي بِحَمِيمٍ، وَغَسَّاقٍ، وَآخَرَ مِنْ شَكْلِهِ أَزْوَاجٌ

ஓ கெட்ட ஆன்மாவே! கெட்ட உடலில் நீ இருந்தாய்,நீ புறப்படு!என்று சொல்வார்கள்.

இந்த வார்த்தையை கேட்ட உடனே அவனுக்கு முடிவாகிவிடும்,நமக்கு நரகம் முடிவு செய்யப்பட்டு விட்டது என்று.

அவனுடைய அந்த உயிர் ஓடி ஒளிந்து கொள்ள பார்க்கும். அவனுடைய உடலில் அத்தனை பாகங்களையும் கவ்விப் பிடித்துக் கொள்ள பார்க்கும். அப்போதுதான் மலக்குகள் அந்த உயிரை பலவந்தமாக கட்டாயப்படுத்தி உடலில் அனைத்து பாகங்களிலிருந்தும் கடுமையாக இழுப்பார்கள்.

இதைத்தான் அல்லாஹ் சொல்கின்றான்:

وَالنَّازِعَاتِ غَرْقًا

பாவிகளின் உயிரை பலமாக வேகமாக சிரமத்தோடு பிடித்து இழுக்கக் கூடிய வானவர்கள் மீது சத்தியமாக! என்று. (அல்குர்ஆன் 79 : 1)

பிறகு அந்த உயிருக்கு சொல்லப்படும்;

கேவலமான நிலையில் நீ வா!நரகத்தின் கொதிநீர் உனக்கு கிடைக்கும்! கஸ்ஸாக் என்ற பாவிகளின் சலம் சீழ் உனக்கு கிடைக்கும்! இன்னும் பலவிதமான வேதனை உனக்கு கிடைக்கும்!

இந்த ஆத்மாவிற்கு இப்படி துர்செய்தி கூறப்பட்டு பிடித்து இழுக்கப்பட்டு கொண்டுசெல்லப்படும்.

முதல் வானத்திக்கு சென்றால் அந்த வானவர் பதிலளிக்க மாட்டார், மறுத்துவிடுவார். உனக்கு அனுமதி இல்லை.

கெட்ட ஆன்மாவே! உனக்கு எப்பொழுதும் சுகம் கிடையாது. உனக்கு நலம் உண்டாகாமல் இருக்கட்டும். நீ திரும்பிச் செல் என்பதாக அந்த வானவர் சொல்லிவிடுவார். பிறகு அந்த உயிர் பூமியில் தூக்கி வீசப்படும். (2)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 4262.

ஒரு பாவியான ஒரு கெட்டவன் உடைய முடிவு எப்படி இருக்கிறது? என்பதை கவனியுங்கள். ஒரு நல்லவர் சாலிஹானவருடைய முடிவு எப்படி இருக்கிறது? என்பதையும் கவனியுங்கள்.

இது மரணத்தருவாயில் உயிர் வாங்கப்படும் போது உள்ள நிலை. அடுத்து உயிர் வாங்கப்பட்டு விட்டால் சாலிஹான இந்த மனிதருடைய நிலை என்ன தெரியுமா?

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லுகின்றார்கள்:

" إِذَا وُضِعَتِ الجِنَازَةُ، فَاحْتَمَلَهَا الرِّجَالُ عَلَى أَعْنَاقِهِمْ، فَإِنْ كَانَتْ صَالِحَةً قَالَتْ: قَدِّمُونِي، قَدِّمُونِي، وَإِنْ كَانَتْ غَيْرَ صَالِحَةٍ قَالَتْ: يَا وَيْلَهَا، أَيْنَ يَذْهَبُونَ بِهَا؟ يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شَيْءٍ إِلَّا الإِنْسَانَ، وَلَوْ سَمِعَهَا الإِنْسَانُ لَصَعِقَ "

ஒரு ஜனாஸாவை முஸ்லிம்கள் தங்களுடைய தோளில் எடுத்துச் சென்றால்,அந்த ஜனாஸா சாலிஹான ஒரு நல்ல மனிதருடைய ஜனாஸாவாக இருந்தால் அது சொல்லும்;

என்னை விரைவாக கொண்டு சென்று வைத்துவிடுங்கள், என்னை தாமதப்படுத்தாதீர்கள், சீக்கிரமாக முற்படுத்தி எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும்.

அதே நேரத்தில் அந்த ஜனாஸா ஒரு பாவியின் ஜனாஸாவாக இருந்தால், எனக்கு ஏற்பட்ட நாசமே! எனக்கு ஏற்பட்ட கேடே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்? என்று கதற ஆரம்பித்து விடும்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: இந்த ஜனாஸா உடைய சப்தத்தை மனிதனை தவிர எல்லோரும் கேட்கிறார்கள். மனிதன் கேட்டால் அச்சத்தால் பயத்தால் மூர்ச்சையாகி விடுவான். எனவே அல்லாஹ் அப்படி கேட்காமல் வைத்துவிட்டான்.

அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1380.

ஒரு சாலிஹானவராக இருக்கும்போது அல்லாஹ் அவருடைய ஜனாஸாவிற்கு கொடுக்கக்கூடிய கண்ணியம், அது வெளியேறும் பொழுதும் சந்தோஷத்தோடு வெளியேறுகிறது. அது சுமந்து செல்லும்போதும் சந்தோஷத்துடன் செல்லுகின்றது.

காரணம், அவர் சாலிஹானவர். அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டவராக நல்லவராக வாழ்ந்த காரணத்தால்.

இப்படி உன்னுடைய அடுத்த முடிவு, கப்ருடைய முடிவு, அடுத்து மறுமை உடைய முடிவு. அல்லாஹு ரப்புல் ஆலமீன் இந்த சாலிஹான மக்களைப் பார்த்து சொல்லுகின்றான்; ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் சொல்கின்றார்கள் அல்லாஹ் கூறியதாக.

«أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ»

நான் என்னுடைய சாலிஹான அடியாருக்கு தயார் செய்துவிட்டேன். எந்தக் கண்ணும் இந்த உலகத்தில் பார்த்திருக்காது, எந்த காதும் கேட்காது, எந்த மனிதனுடைய உள்ளத்திலும் அந்த இன்பங்கள் உதித்திருக்கவும் செய்யாது.

என்று கூறிவிட்டு இதற்கு உங்களுக்கு விளக்கம் வேண்டுமா? நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். அல்லாஹ் கூறுகின்றான்;

நல்லவர்களுக்காக நான் மறைத்து வைத்திருக்கக் கூடிய கண் குளிர்ச்சி மிக்க நிஃமத்துகளை இந்த உலகத்தில் யாராலும் அறிந்துக் கொள்ள முடியாது. (அல்குர்ஆன் 32 : 17)

அப்படி என்ன ரப்புல் ஆலமீன் சொர்க்கத்தில் அந்த ஸாலிஹீன்களுக்கு  வைத்திருக்கின்றான்?குர்ஆனில் அல்லாஹ் சொல்கின்றான்,ஹதீஸில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லுகின்றார்கள்.

ஆசை படுவதற்கு பெருமை படுவதற்கு ஒரு இடம் இருக்கிறது என்றால்,அது சொர்க்கம் ஒன்றுதான்.

அல்லாஹ் எப்படி சந்தோஷப்படுகிறான் பாருங்கள்!ஒரு அடியான் நல்லவனாக சாலிஹானவனாக இருக்கும்போது,அவனைத் தன்னுடைய அடியான் என்று சொல்லுவதற்கு அல்லாஹ் சந்தோஷப்படுகிறான்.

ஆகவேதான்,பாவிகளை அல்லாஹ்வுடைய அடியார் என்று சொல்லப்படாது. அவர்களையும் அல்லாஹ்தான் படைத்தான். ஆனால்,அல்லாஹ் அவர்களை தனது அடியார்களாக ஏற்றுக்கொள்ளவில்லை.

நபிமார்களை அல்லாஹ் எங்கெங்கெல்லாம் புகழ்கின்றானோ அங்கே அவர்களை சாலிஹான நல்லவராக நன்றி செலுத்தக்கூடிய அடியான் என்று அல்லாஹ் புகழ்கிறான்.

சொர்க்கத்தை அல்லாஹ் ஏற்கனவே படைத்துவிட்டான். நாளை மறுமை உடைய வாழ்க்கை தான் உண்மையான வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் ஒரு மனிதன் வெற்றி அடைய வேண்டும்.

அந்த வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி கிடைக்க வேண்டும். அந்த வாழ்க்கையில் ஒரு மனிதன் ஆபத்திலிருந்து துன்பத்திலிருந்து நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அதுதான் உண்மையான வெற்றி.

அந்த சொர்க்கத்திற்கு சேர வேண்டுமென்றால் சாலிஹான நல்லவராக இருக்க வேண்டுமே தவிர, வேறு ஒரு வழி கிடையாது. இந்த துன்யாவில் வாழும்போது நாம் அல்லாஹ்விடத்தில் நெருங்க வேண்டும். சாலிஹான அடியானாக ஆக வேண்டும் என்று முயற்சி செய்தால் அல்லாஹ் நமக்கு கொடுக்கக்கூடிய வெகுமதி என்ன தெரியுமா?

அல்லாஹ் நம்மை பாதுகாக்கின்றான். எல்லா வகையிலும் பாதுகாப்பு. சாலிஹான அடியானாக ஆகிவிட்டால் எல்லா வகையிலும் பாதுகாப்பு. வானத்திலிருந்து அல்லாஹ் பாதுகாப்பு கொடுப்பான்.

உடலுக்கு பாதுகாப்பு கொடுப்பான், உயிருக்கு பாதுகாப்பு கொடுப்பான், பொருளுக்கு பாதுகாப்பு கொடுப்பான், கண்ணியத்திற்கு அல்லாஹ் பாதுகாப்பு கொடுப்பான். மொத்தத்திற்கும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பாதுகாப்பு கொடுப்பான்.

சூரத்துல் அன்ஆமில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகின்றான்:

إِنَّ وَلِيِّيَ اللَّهُ الَّذِي نَزَّلَ الْكِتَابَ وَهُوَ يَتَوَلَّى الصَّالِحِينَ

‘‘நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்தான்; அவனே இவ்வேதத்தை இறக்கினான். அவனே நல்லடியார்களை பாதுகாக்sகிறான். (அல்குர்ஆன் 7 : 196)

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு நாளும் இரவு தூங்கும்போது அல்லாஹ்விடத்தில் செய்த பிரார்த்தனை:

இந்த பிரார்த்தனையை நீங்கள் செய்யுங்கள் என்று நமக்கு கட்டளையிட்டார்கள்.

سُبْحَانَكَ اللهُمَّ رَبِّي بِكَ وَضَعْتُ جَنْبِي، وَبِكَ أَرْفَعُهُ، إِنْ أَمْسَكْتَ نَفْسِي، فَاغْفِرْ لَهَا، وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ

யா அல்லாஹ்! உன்னை நான் புகழ்கிறேன். உன்னை பரிசுத்தப் படுத்துகிறேன். நீ தான் என் இறைவன். என் விலாவை உன்னை கொண்டுதான் நான் படுக்க வைத்து இருக்கின்றேன்.என்னுடைய ஆற்றல் இல்லை. உன்னை கொண்டுதான் என் விலாவை நான் உயர்த்த முடியும். நீ என் உயிரைத் தடுத்து வைத்துக் கொண்டால், இந்தத் தூக்கத்திலேயே நீ எனக்கு மரணத்தை கொடுத்து விடுவதாக இருந்தால் என்னை நீ மன்னித்துவிடு!

இந்த உயிரை நீ மீண்டும் எனக்கு துன்யாவில் விட்டால் நல்லவர்களை உன்னுடைய சாலிஹானவர்களை எப்படி நீ பாதுகாப்பாயோ அதுபோன்று நீ என்னைப் பாதுகாத்துக் கொள்வாயாக!

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2714.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்குவதற்கு முன்னால் தன் தவ்பாவை புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் படுக்கும்போது செய்த பிரார்த்தனைகளில் ஒன்று,

«الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا، وَكَفَانَا وَآوَانَا، فَكَمْ مِمَّنْ لَا كَافِيَ لَهُ وَلَا مُؤْوِيَ»

யா அல்லாஹ்!நீ எனக்கு உணவு கொடுத்தாய், நீ எனக்கு தண்ணீர் கொடுத்தாய், நீ எனக்கு தங்குவதற்கு இடம் கொடுத்தாய், என் தேவைகளுக்கு போதுமானதாக நீ இருக்கிறாய்!எத்தனையோ மக்கள் படுப்பதற்கு அவர்களுக்கு இடம் இல்லையே!அவர்களுக்கு உதவுபவர் யாரும் இல்லையே!என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2715.

தூங்கும்போது நாம் அல்லாஹ்விடம் செய்கின்ற ஒப்பந்தத்தைப் பாருங்கள். நம்மிடம் இருக்கக்கூடிய ஈமானை புதுப்பிக்கக்கூடிய அந்த வசனங்களைப் பாருங்கள்.

ஹதீஸ் நூல்களில் பாருங்கள்;எத்தனை பாதுகாப்புகள்,எத்தனை அல்லாஹ்வுடைய உதவிகள்,சாலிஹான மக்களுக்கு கிடைத்திருக்கிறது!

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அந்த நிகழ்வு நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று. தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

மூன்று மக்கள் காட்டில் சென்று கொண்டிருக்கும்போது மழை நேரத்தில் ஒரு குகையில் ஒதுங்குகிறார்கள். அந்தக் குகையில் ஒதுங்கி அதற்கு பிறகு மேல் இருந்து ஒரு பாறை உருண்டு குகையின் வாசலை அடைந்து விடுகிறது.

மிகப்பெரிய ஆபத்து,இனி வெளியேறுவதற்கு எந்த வழியும் இல்லை,எந்த தொடர்பும் இல்லை.அப்போது அந்த மக்கள் சொன்னார்கள்;

இந்த நேரத்தில் நாம் பாதுகாப்பு பெற வேண்டுமென்றால்,நாம் செய்த சாலிஹான நல்ல அமல்களைக் கொண்டு அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்பதை தவிர வேறு வழி இல்லை என்று கூறி, அல்லாஹ்விற்காக தான் செய்த சாலிஹான நல்ல அமல்களை ஒவ்வொருவரும் கூறி பிரார்த்தனை செய்கிறார்கள். அல்லாஹ் அந்தப் பாறையை அந்த குகையின் வாசலில் இருந்து வெளியேற்றுகிறான்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3465.

சாலிஹான மக்களோடு இருப்பது, அல்லாஹ் நம்மை மன்னிக்கிறான், நம்மை ஏற்றுக்கொண்டான் என்பதற்கான அடையாளம்.

நூறு கொலைகளை செய்தவன். எனக்கு தௌபா இருக்காதா? என்று வருகிறான். எனக்கு தௌபாவை காட்டிக் கொடுக்கக் கூடிய ஒரு அறிஞர் இருக்க மாட்டாரா?

மக்கள் சொன்னார்கள்; இவரிடத்தில் செல்வாயாக, அப்போது அந்த அறிஞர் சொல்லுகின்றார்; நீ வாழ்கின்ற ஊர் பாவிகளுடைய ஊர், அந்த ஊரிலேயே நீ வசித்து விடாதே. இதோ இந்த ஊரில் அல்லாஹ்வை வணங்க கூடிய நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து விடு, அல்லாஹ் உன்னை மன்னித்து விடுவான் என்று சொல்கிறார்.

அந்த அடியான் பாதிதூரம் கூட செல்லவில்லை, அவருக்கு உயிர் போய்விடுகிறது. அப்போது வானவர்கள் வருகிறார்கள். ரஹ்மத் உடைய வானவர்கள், அதாபுடைய வானவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொள்கிறார்கள்.

இவர் நன்மையே செய்யவில்லை, இவனை நரகத்திற்கு அழைத்து செல்வோம் என்று.

ரஹ்மத் உடைய மலக்குகள் சொல்லுகிறார்கள்; இல்லை, இவன் அல்லாஹ்வை முன்னோக்கி வந்துவிட்டான் என்று.

இந்த இடத்தில் அல்லாஹ் அவனை மன்னிப்பதற்குண்டான காரணம் என்ன தெரியுமா?

அந்த சாலிஹான நல்லவர்களோடு சேர்ந்து வாழவேண்டும் என்ற எண்ணத்தில் அந்த பூமியை நோக்கி அவன் பயணித்ததை அல்லாஹ் பொருந்திக் கொண்டான்.(3)

ஆகவே, அல்லாஹ் அவனை மன்னித்தான். தன் கருணையில் சேர்த்துக் கொண்டான்.

அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3470.

நமக்கு அல்லாஹ் கொடுத்த வாழ்க்கை சொற்பமான வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் நல்ல அமல்களை செய்து அல்லாஹ்விற்கு விருப்பமான சாலிஹான மக்களில் நாமும் சேர வேண்டும். அல்லாஹ் அதற்கு வாய்ப்பளிப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ يَعْنِي ابْنَ سَعِيدٍ، وَابْنُ حُجْرٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ هُوَ ابْنُ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ " (صحيح مسلم 14 - 1631)

குறிப்பு 2)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " الْمَيِّتُ تَحْضُرُهُ الْمَلَائِكَةُ، فَإِذَا كَانَ الرَّجُلُ صَالِحًا، قَالُوا: اخْرُجِي أَيَّتُهَا النَّفْسُ الطَّيِّبَةُ، كَانَتْ فِي الْجَسَدِ الطَّيِّبِ، اخْرُجِي حَمِيدَةً، وَأَبْشِرِي بِرَوْحٍ وَرَيْحَانٍ، وَرَبٍّ غَيْرِ غَضْبَانَ، فَلَا يَزَالُ يُقَالُ لَهَا ذَلِكَ حَتَّى تَخْرُجَ، ثُمَّ يُعْرَجُ بِهَا إِلَى السَّمَاءِ، فَيُفْتَحُ لَهَا، فَيُقَالُ: مَنْ هَذَا؟ فَيَقُولُونَ: فُلَانٌ، فَيُقَالُ: مَرْحَبًا بِالنَّفْسِ الطَّيِّبَةِ، كَانَتْ فِي الْجَسَدِ الطَّيِّبِ، ادْخُلِي حَمِيدَةً، وَأَبْشِرِي بِرَوْحٍ وَرَيْحَانٍ، وَرَبٍّ غَيْرِ غَضْبَانَ، فَلَا يَزَالُ يُقَالُ لَهَا ذَلِكَ حَتَّى يُنْتَهَى بِهَا إِلَى السَّمَاءِ الَّتِي فِيهَا اللَّهُ عَزَّ وَجَلَّ، وَإِذَا كَانَ الرَّجُلُ السُّوءُ، قَالَ: اخْرُجِي أَيَّتُهَا النَّفْسُ الْخَبِيثَةُ، كَانَتْ فِي الْجَسَدِ الْخَبِيثِ، اخْرُجِي ذَمِيمَةً، وَأَبْشِرِي بِحَمِيمٍ، وَغَسَّاقٍ، وَآخَرَ مِنْ شَكْلِهِ أَزْوَاجٌ، فَلَا يَزَالُ يُقَالُ لَهَا ذَلِكَ حَتَّى تَخْرُجَ، ثُمَّ يُعْرَجُ بِهَا إِلَى السَّمَاءِ، فَلَا يُفْتَحُ لَهَا، فَيُقَالُ: مَنْ هَذَا؟ فَيُقَالُ: فُلَانٌ، فَيُقَالُ: لَا مَرْحَبًا بِالنَّفْسِ الْخَبِيثَةِ، كَانَتْ فِي الْجَسَدِ الْخَبِيثِ، ارْجِعِي ذَمِيمَةً، فَإِنَّهَا لَا تُفْتَحُ لَكِ أَبْوَابُ السَّمَاءِ، فَيُرْسَلُ بِهَا مِنَ السَّمَاءِ، ثُمَّ تَصِيرُ إِلَى الْقَبْرِ " (سنن ابن ماجه- 4262) [حكم الألباني] صحيح

குறிப்பு 3)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ إِنْسَانًا، ثُمَّ خَرَجَ يَسْأَلُ، فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ فَقَالَ لَهُ: هَلْ مِنْ تَوْبَةٍ؟ قَالَ: لاَ، فَقَتَلَهُ، فَجَعَلَ يَسْأَلُ، فَقَالَ لَهُ رَجُلٌ: ائْتِ قَرْيَةَ كَذَا وَكَذَا، فَأَدْرَكَهُ المَوْتُ، فَنَاءَ بِصَدْرِهِ نَحْوَهَا، فَاخْتَصَمَتْ فِيهِ مَلاَئِكَةُ الرَّحْمَةِ وَمَلاَئِكَةُ العَذَابِ، فَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَقَرَّبِي، وَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَبَاعَدِي، وَقَالَ: قِيسُوا مَا بَيْنَهُمَا، فَوُجِدَ إِلَى هَذِهِ أَقْرَبَ بِشِبْرٍ، فَغُفِرَ لَهُ " (صحيح البخاري- 3470)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/