HOME      Khutba      ஈமான் உயர ஈமான் உறுதி பெற | Tamil Bayan - 176   
 

ஈமான் உயர ஈமான் உறுதி பெற | Tamil Bayan - 176

           

ஈமான் உயர ஈமான் உறுதி பெற | Tamil Bayan - 176


بسم الله الرحمن الرّحيم

ஈமான் உயர ஈமான் உறுதி பெற

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

 

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

 

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

அல்லாஹு தஆலா தன் வேதத்தில் கூறுகிறான்;

أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ

மனிதர்கள் ‘‘ நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (அல்குர்ஆன் 29 : 2)

وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ

இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கிறோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்ற) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான்.(அல்குர்ஆன்29 : 3)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள்;

மறுமை நாளில் ஒருவனை நரகத்தில் நுழைப்பதாக இருந்தால் அந்த நரகவாதி தெளிவாக சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெரிந்து கொள்வான்.அல்லாஹ் எனக்கு அநியாயம் செய்யவில்லை,இந்த நரகத்திற்கு தான் நான் தகுதியானவன். இந்த தண்டனையை தவிர வேறு எதற்கும் நான் தகுதியானவன் என்பதை.அது போன்று தான் ஒரு சொர்க்கவாதி.

அல்லாஹ்  ஒருவருக்கு ஏன் கண்ணியத்தை கொடுக்கிறான்? ஏன் ஒருவருக்கு இழிவை கொடுக்கிறான்? அவன் பாராபட்சம் காட்டுவதற்கு அநியாயக்காரன் அல்ல.

அல்லாஹ்வால் ஒருவன் கண்ணியப்படுத்தப்படுகிறான் என்றால் அந்த கண்ணியத்திற்கு அவன் தகுதியானவன்.அதற்குரிய பண்புகளும் ஒழுக்கங்களும் இறை நம்பிக்கையும் அவனிடத்தில் இருக்கிறது. ஆகவே அல்லாஹ் அவனை கண்ணியப்படுத்துகிறான்.

ஒருவன் இம்மையில் மறுமையில் இழிவுபடுத்தப்படுகிறான் என்றால் அவன் இழிவு படுத்த படுவதற்கு தான் தகுதியானவன்.அவனிடத்திலே இறை நிராகரிப்பு,ஈமானில் தடுமாற்றம், நயவஞ்சகத்தனம் இன்னும் கெட்ட குணங்கள் கெட்ட பண்புகள் குடிகொண்டு இருந்ததால் அவன் அந்த இழிவு நிலைக்கு ஆளாகிறான்.

அன்பிற்குரியவர்களே!இங்கிருந்துதான் ஒரு விஷயத்தைப் புரிய வேண்டும். பொதுவாக நம்மில் பலருடைய நிலை அல்லாஹ் குர்ஆனில் வர்ணித்ததை கொண்டுதான் இருக்கிறது.

நாங்கள் முஃமின்கள், நாங்கள் முஸ்லிம்கள், ஆனால் அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக அந்த உறுதியான இறை நம்பிக்கையின் நிலையை அடைவதற்காக தியாகங்கள் அர்ப்பணிப்புகள் செய்வதற்கு தயார் அல்ல.

எதையும் இழக்காமல் மிகப்பெரிய சொர்க்கத்தை அடைய வேண்டும் என்று கற்பனை செய்கிற மக்களாக இந்த முஸ்லிம்களில் ஒரு பெரும் சாரார் மாறிவிட்டார்கள்.

أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًاوَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ

கருத்து : இந்த தீனுக்காக அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்திற்காக எதிரிகளை எதிர்ப்பவர்கள் யார்? அல்லாஹ்வின் விருப்பத்திற்காக அல்லாஹ்வின் பொருத்தத்தை மறுமை வாழ்விற்காக இந்த மார்க்கத்திற்காக போராடியவர்கள் யார்? அப்போது ஏற்படுகின்ற சிரமங்கள் மற்றும் இழப்புகளை சகித்து கொள்பவர்கள் யார்?

என்பதை உலகத்திலேயே பிரித்து அல்லாஹ் உங்களுக்கு அறிவித்து விடாத வரை நீங்கள் சுலபமாக சுவனம் செல்லலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா?(அல்குர்ஆன் 2 : 115)

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

அல்லாஹ் கேட்கிறான்,

பொருள் : நீங்கள் என்ன எண்ணத்தில் இருக்கிறீர்கள்?சொர்க்கத்திற்குள் சுலபமாக நுழையலாம் என்றா? உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் எல்லாம் இன்னும் வரவில்லையே!!

அவர்களை கடுமையான நோய் தீண்டியது,பசி தீண்டியது,வறுமை தீண்டியது,எதிரிகளால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டார்கள், கூட்டம் கூட்டமாக இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தங்கள் இல்லங்களை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

தங்கள் கண்முன்னால் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள்,கண்முன்னால் சொத்துக்கள் பொருளாதாரங்கள் சூறையாடப்பட்டன, இறைத்தூதர்களை கொன்றார்கள்.இறைநேசர்களை கொன்றார்கள்,கடுமையான ஒரு அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள்.

நபியும் அந்த நபியுடன் இறைநம்பிக்கை ஏற்றுக்கொண்ட முஃமின்களும் அல்லாஹ்விடத்தில் வேண்டினார்கள்.

அல்லாஹ்வின் உதவி எப்போது எங்களுக்கு வரும் ???

அறிந்துகொள்ளுங்கள் அல்லாஹ்வின் உதவி மிக சமீபமாகவே இருக்கிறது.(அல்குர்ஆன் 2 : 214)

கண்ணியத்திற்குரியவர்களே! இறைத்தூதர்களின் வாழ்க்கைகளை எடுத்துப் பாருங்கள்.

நூஹ் அலைஹி வஸ்ஸலாம் அவர்களிலிருந்து நம் நேசத்திற்குரிய நம் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை வந்த இறைத் தூதர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பாருங்கள்.

குர்ஆன் பக்கம் பக்கமாக பேசுகிறது. எத்தகைய சோதனைகளுக்கு ஆளானார்கள்.எத்தகைய  சிரமங்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது?!

ஊரை விட்டு நீங்கள் வெளியேற வேண்டும். இல்லை என்றால் எங்கள் மதத்திற்கு திரும்பிவிட வேண்டும் என்று நபிமார்களை பார்த்து சொல்லப்பட்டது.

قَالُوا إِنَّا تَطَيَّرْنَا بِكُمْ لَئِنْ لَمْ تَنْتَهُوا لَنَرْجُمَنَّكُمْ وَلَيَمَسَّنَّكُمْ مِنَّا عَذَابٌ أَلِيمٌ

இந்த ஊரை விட்டு நீங்கள் வெளியேற வேண்டும்அல்லது  எங்கள் மதத்திற்கு திரும்பிவிட வேண்டும்.இல்லை என்றால் உங்களை கல்லால் எறிவோம் என்றார்கள்.(அல்குர்ஆன் 36 : 18)

கல்லால் எறியவும் செய்தார்கள். காயப்படுத்தினார்கள், சேதப்படுத்தினார்கள். பல துன்பங்களைக் கொடுத்தார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே!!!இறைதூதர்கள் மறுமையை நாடினார்கள். அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடினார்கள். மறுமை வாழ்க்கை உண்மை என்பதை புரிந்து இருந்தார்கள்.  இந்த உலகத்தில் இந்த தியாகங்களை சந்திக்காமல் இந்த இன்னல்களை சந்திக்காமல் அல்லாஹ்விடத்தில் உயர்ந்த பதவியை அடைய முடியாது என்பதை புரிந்து இருந்தார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்; இறைத்தூதர்கள் அவர்களோடு அல்லாஹ்வின் விருப்பத்தை தேடுகின்ற ரிப்பி -என்கின்ற அந்த நன்மக்கள், ரப்பு என்ற ஒருவன் தான் எங்களுக்கு தேவை.அல்லாஹ்வுடைய பொருத்தம் ஒன்று தான் தேவை. இதற்காக எதையும் இழக்கத் தயார். ஆனால் ரப்புடைய பொருத்தத்தை இந்த உலகத்தில் எதற்காகவும் நாங்கள் இழக்கத் தயாரில்லை.

இத்தகைய நன்மக்களை தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்;

وَكَأَيِّنْ مِنْ نَبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ

நபிமார்களோடு சேர்ந்து எத்தனையோ நன்மக்கள் அல்லாஹ்வின் பாதையிலே போரிட்டார்கள். அவர்கள் பலவீனம் அடையவில்லை. எதிரிகளை பார்த்து அவர்கள் தடுமாறவில்லை. எங்களால் முடியாது, எங்களால் இது இயலாது, என்று போர்க்களத்தை விட்டு உயிரை கொடுப்பதை விட்டு புறமுதுகு காட்ட வில்லை. எதிரிகளுக்கு முன்னால் பணியவில்லை.இப்படி உறுதியாக உள்ள மக்களை தான் முஃமின்களை தான் அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3 : 146, 147)

وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّا أَنْ قَالُوا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

யா அல்லாஹ்!எங்கள் இறைவா!எங்கள் பாவங்களை மன்னித்து விடு!எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறி விட்ட செயல்களையும் அந்த நிலைகளையும் எங்களுக்கு மன்னித்துவிடு!எங்கள் பாதங்களை இந்த மார்க்கத்தின் பக்கம் உறுதிப்படுத்து!மார்க்கத்தை பின்பற்றுவதில் இந்த மார்க்கத்தை எதிர்க்கின்ற காஃபிர்களை எதிர்ப்பதில் எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயா! (அல்குர்ஆன் 3 : 147)

அல்லாஹ் உதவி செய்யாமல் வேறு யாரும் நமக்கு உதவி செய்ய முடியாது. அல்லாஹ் பாதத்தை பலப்படுத்தாமல் நம்மால் எதையும் தாங்கி விட முடியாது. அல்லாஹுதஆலா நம்மைப்பார்த்து கேட்கிறான்;

إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை மிகைப்பவர் யாரும் இல்லை!  உங்களை அவன் கைவிட்டு விட்டால் அவனுக்கு பிறகு உங்களுக்கு உதவி செய்பவர்கள் யார் இருக்கிறார் ??(அல்குர்ஆன் 3 : 160)

யோசித்துப் பாருங்கள். இன்று நம் இறைநம்பிக்கையின் நிலை எப்படி இருக்கிறது? இந்த இறை நம்பிக்கையின் நிலையை அறிய வேண்டும் என்றால் நம்முடைய உள்ளத்தில் உள்ள இறை நம்பிக்கை ஈமான் இஸ்லாமுக்கு கட்டுபடுகிற அந்த பக்குவம் வர வேண்டும்.

إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ

இப்ராஹீமுக்கு அவருடைய இறைவன் கூறினான்; இப்ராஹீமே! நீ கட்டுப்பட்டு விடு! அவர் கூறினார்:அகிலங்களின் இறைவனுக்கு நான் கட்டுப்பட்டு விட்டேன்!(அல்குர்ஆன் 2 : 131)

எதையும் செய்ய தயார்!எதையும் இழக்கத் தயார்!மனைவி பிள்ளைகள் குடும்பம் சொத்து சுகம் அனைத்தையும் இழக்கத் தயார்!

நபிமார்கள் இமாம், நபிமார்களின் தந்தை அவர்களை அல்லாஹ் உதாரணமாக நமது நபிக்கு சொல்லுகின்றான்.

ثُمَّ أَوْحَيْنَا إِلَيْكَ أَنِ اتَّبِعْ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ

இப்ராஹீமுடைய கொள்கையைப் பற்றி பிடி!இப்ராஹீமுடைய கொள்கையில் நீ செல்!இப்ராஹீமுடைய வாழ்க்கையிலே உனக்கு உதாரணம் இருக்கிறது!உன்னோடு இறைநம்பிக்கை கொண்ட முஃமின்களுக்கு உதாரணம் இருக்கிறது!(அல்குர்ஆன்16 : 123)

அவர்கள் தங்கள் சமூகத்தை எப்படி எதிர்கொண்டார்கள்? ஈமானை அடிப்படையாக வைத்து இஸ்லாமை அடிப்படையாக வைத்து அவர்கள் தங்களுடைய நேசத்தை தங்களுடைய உறவை அமைத்தார்கள்.

அன்பிற்குரியவர்களே!ஒரு செய்தியை கேட்டுக் கொள்ளுங்கள்!

யார் பத்ருப் போரில் கலந்து கொண்ட முஃமின்களின் சிறப்பு எப்படிபட்டதென்றால் இந்த உலகத்தை அல்லாஹ் படைத்த நாளிலிருந்து அனுப்பிய இறைத்தூதர்களில் உள்ள உங்களைவிட, உலகத்தை அல்லாஹ் படைத்து மனித சந்ததிகளை உருவாக்கி, இறைத் தூதர்களை அனுப்பினான்.அந்த இறைத்தூதர்களில் உள்ள எல்லா உம்மத்துகளையும் விட, அந்த உம்மத்துகளில் உள்ள எல்லா மனிதர்களையும் விடவும், முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்துகளிலே பத்ரு ஸஹாபாக்கள் பத்ரில் கலந்து கொண்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த உயர்வை அல்லாஹ் யாருக்கும்கொடுக்கவில்லை.

உங்களில் சிறந்தவர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்துகள்.

அதில் மிகச் சிறந்தவர்கள், முதன்மையானவர்கள் பத்ரில் கலந்து கொண்ட சஹாபாக்கள். ஏன்? அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான்.

இவர்கள் யார் தெரியுமா?இறைநம்பிக்கையை ஈமானை எதிர்க்கக்கூடிய தந்தையாக இருந்தாலும் சரி,தாய் மாமனாக இருந்தாலும் சரி, சொந்த சகோதரனாக இருந்தாலும் சரி, ஈமானை எதிர்க்கக்கூடிய இன்னும் அல்லாஹ்வோம் அவனுடைய தூதரோடும்  முரண்பாடு காட்டக்கூடியவர்களுடன் தோழமை கொள்ள மாட்டார்கள்.

அல்லாஹ் அவர்களைப் பற்றி கூறுகின்றான்;

لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُولَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُمْ بِرُوحٍ مِنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ أُولَئِكَ حِزْبُ اللَّهِ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ

(நபியே!) எந்த மக்கள் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்கள், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்பவர்களிடம் நேசம் கொண்டு உறவாடுவதை நீர் காண மாட்டீர். அவர்கள், தங்கள் பெற்றோர்களாக அல்லது தங்கள் சந்ததிகளாக அல்லது தங்கள் சகோதரர்களாக அல்லது தங்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே! (அவர்களை நம்பிக்கையாளர்கள் நேசிக்க மாட்டார்கள்.) இவர்களுடைய உள்ளங்களில்தான் அல்லாஹ் நம்பிக்கையை பதியவைத்துத் தன் அருளைக் கொண்டும் இவர்களைப் பலப்படுத்தி வைத்திருக்கிறான். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் இவர்களைப் புகுத்தி விடுவான். அதில் என்றென்றும் இவர்கள் தங்கி விடுவார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றித் திருப்தியடைவார்கள். இவர்கள்தான் அல்லாஹ்வின் கூட்டத்தினர். நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தான் வெற்றி அடைந்தவர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 58 : 22)

உமர் ரழியல்லாஹு அவர்கள் தனக்கு மிக விருப்பமான தன் தாய்மாமனையும் பத்ரியில் கொன்றார்கள். தன்னுடைய தாயின் சகோதரனை கொன்றார்கள்.நேசமானவர்  மிக பாசமானவர். ஆனால், அல்லாஹ்வை ரசூலை எதிர்த்த காரணத்தால் கொன்றார்கள். அது போன்று பல சஹாபாக்கள் தங்களின் சொந்த உறவினர்களை உறவு என்று பார்க்காமல் அல்லாஹ்விற்காக வேண்டி கொன்றார்கள்.

அதுமட்டுமல்ல போரிலே கைதானவர்களை குறித்து உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்;

அல்லாஹ்வின் தூதரே!எங்களில் உள்ள உறவினர்களை எங்களிடத்தில் கொடுங்கள்.  அல்லாஹ்வையும் உங்களையும் எதிர்த்த காரணத்தால் எங்கள் கரங்களால் நாங்கள் அவர்களை கொல்ல வேண்டும். எங்கள் உள்ளத்திலே அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் தவிர வேற எந்த அன்பும்  இல்லை என்பதை அல்லாஹ் புரியவேண்டும்,அல்லாஹ் அறியவேண்டும், என்று வெளிப்படையாக சொன்னார்கள்.

சுப்ஹானல்லாஹ்! நினைத்துப் பாருங்கள்!

அலி (ரலி) இடத்திலே கொடுங்கள்; அவனுடைய சகோதரன் அக்கீலை அவன் கொள்ளட்டும்.என்னிடத்தில் கொடுங்கள் இன்ன இந்த உறவினர்களை நான் கொள்கிறேன் என்றார்.

அப்போதுதான் அல்லாஹ் வசனத்தை இறக்கினான்; இவர்கள் அல்லவா முஃமின்கள்.இவர்கள் அல்லாஹ்வையும் ரசூலையும் எதிர்க்கக் கூடியவர்கள் தங்களுடைய பெற்றோர்களாக இருந்தாலும்,தங்களுடைய பிள்ளைகளாக,தங்களுடைய சகோதரர்களாக, நெருங்கிய உறவினர்களாக, இருந்தாலும் அவர்களை நேசிக்க மாட்டார்கள்.அவர்களின் உள்ளங்களில் தான் அல்லாஹ் ஈமானை எழுதிவிட்டான். (அல்குர்ஆன் 58 : 22)

கண்ணியத்திற்குரியவர்களே!!இந்த சோதனை  امتحان-இம்திஹான் ابتلاء-இப்திலா ஒரு முஃமின் கண்டிப்பாக ஈமானுடைய நிலைமையிலே உயர்ந்த இடத்தை அடைய வேண்டும்.

அதனுடைய வகைகளைத்தான் குர்ஆனிலே நாம் பலவாறாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

குர்ஆன் ஈமானில் இந்த உயர்ந்த தரத்தை அடைவதற்கு அதற்கு உண்டான வழிகளை நமக்கு சொல்லித் தருகிறது. ஆனால் கட்டிடங்களை உயர்த்த வேண்டும், தங்களை குவிக்க வேண்டும், பரந்த நிலங்களை வாங்க வேண்டும், என்ற சிந்தனை கொண்டவர்களுக்கு இவை எல்லாம் புரியாது.

யார் மறுமையை நாடுகிறார்களோ ஆஹிரத்தை நாடுகிறார்களோ,சொர்க்கத்தில் உயர்ந்த பதவியை விரும்புகிறார்களோ,அவர்களுக்கு தான் இது புரியும்.

எப்போதும் காசுகளை எண்ணிக் கொண்டு எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதைத் தேடிக் கொண்டிருப்பவன் இதை புரிய மாட்டான்.

كَلَّا إِنَّهَا لَظَى (15) نَزَّاعَةً لِلشَّوَى (16) تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّى (17) وَجَمَعَ فَأَوْعَى

(எனினும்) அது ஆகக்கூடியதல்ல. நிச்சயமாக அது நரகத்தின் நெருப்பு. (இவனைச் சூழ்ந்து கொள்ளும்.) அது தோல்களை எரித்து (மூளையை உருக்கி) விடும். புறம்காட்டிச் சென்று புறக்கணித்தவர்களை எல்லாம் அது அழைக்கும். (பொருளைச்) சேகரித்து(ச் செலவு செய்யாது) பத்திரப்படுத்தி வைத்திருந்தவர்களையும் (தன்னிடம் அழைக்கும்). (அல்குர்ஆன் 70 : 15)

அவனுடைய பொழப்பு எல்லாம் என்ன சேர்க்க வேண்டும்? எவ்வளவு மிஞ்சி இருக்கிறது? எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது? நான் பெரிய பணக்காரனாக ஆகிவிட்டேனா? நான் பெரிய செல்வந்தனாக ஆகிவிட்டேனா? என்று சிந்திப்பவர்களுக்கு இது புரியாது.

அன்பிற்குரியவர்களே! ஒரு பக்கம் அந்த இறை நம்பிக்கையின்,ஈமானின் உயர்ந்த நிலையை அடைவதற்கு அல்லாஹ் கொடுத்துள்ள வழிகள்,ஒன்று அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடு செய்வதில் அல்லாஹ்வை திருப்தி படுத்துகிற காரியத்திலே ஒரு அடியான் தன்னை ஈடுபடுத்துவது; மேலும், அப்போது ஏற்படுகிற சிரமங்களை சகித்துக் கௌள்வது.

நஃப்ஸு சொல்லும்; ஏன் சுப்ஹ்விற்கு  எழுந்து செல்கிறாய்? மஸ்ஜிதுக்கு கொஞ்சம் தூங்கி வீட்டிலேயே தொழுது விட்டு தூங்கு என்று சொல்லும்.

மேலும் சொல்லும்; இரவுத்தொழுகை அசதியாக இருக்கிறது, மார்க்கம் லேசானது தூங்கி கொள் என்று.

கண்ணியத்திற்குரியவர்களே!! இந்த மார்க்கம் லேசானது என்ற சொல் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. மார்க்கம் இலகுவானது என்ற சொல்லுக்கு நம் சிறப்புக்குரிய முன்னோர்கள் என்ன விளக்கத்தை சொன்னார்களோ அந்த விளக்கம் இன்று மக்களுக்கு தெரியாது.

மார்க்கம் இலகுவானது என்ற சொல்லை எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் விரும்பும் போது எல்லாம் மார்க்கத்தை விட்டு விடுவது. இவர்களுக்கு எங்கே கொஞ்சம் சோர்வு அல்லது கொஞ்சம்அசதி அல்லது கொஞ்சம் இடையூறு ஏற்படுகிறதோ அங்கே மார்க்கத்தை வழிபாட்டை வணக்கத்தை விட்டு விட்டு வெளியே சென்று விடுவது. இதற்குப் பெயர் மார்க்கம் இலகுவானது என்று புரிந்து வைத்திருக்கிறார்கள்.

மார்க்கம் இலகுவானது என்பதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறியவில்லையா?

ஏன் அவர்கள் தங்கள் பாதங்கள் வீங்க இறைவனை வணக்கத்தை இபாதத்தை செய்கிறார்கள்? அவர்களுக்கு தெரியாதா? அல்லாஹ் மிகப் பெரிய மன்னிப்பான் என்று.

ஏன் தங்களுடைய தாடிகள் நனையும் அளவு கதறி கதறி அழுதார்கள். ஒரு பாத்திரத்தில் நீர் கொதிக்க வைத்தால் அது உச்சத்தை அடையும் போது அதனுடைய கொதிக்கும் சத்தம் எப்படி வருமோ அப்படி அல்லவா அவர்களின் நெஞ்சில் இருந்து அழும் சத்தம் வந்து கொண்டிருந்தது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவிமார்களுக்குத் தெரியாதா?? ஸஹாபாக்களுக்கு தெரியாதா?? மார்க்கம் இலகுவானது என்று.

கண்ணியத்திற்குரியவர்களே!! இறைவழிபாட்டை, இபாதத்தை விடுவதற்கு பெயரல்ல மார்க்கம் இலகுவானது.

மார்க்கம் இலகுவானது என்றால் நீங்கள் இறை வழிபாட்டில் சிரமத்தை எடுத்துக் கொண்டால், நீங்கள் ஃபர்ளிலிருந்து ஆரம்பித்து உயரிய வணக்கங்கள் வரை நீங்கள் இபாதத்களிலே வணக்க வழிபாட்டில் சிரமத்தை எடுத்துக் கொண்டால் அப்பொழுது தீன் எளிமையானது.

إِنَّ الدِّينَ يُسْرٌ

இந்த தீன் லேசானது. (1)

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: புகாரி, எண்: 39

ஏன் லேசானது?நீங்கள் இந்தக் குறுகியகால துன்யா வாழ்க்கையிலே சிரமப்பட்டு நீங்கள் துன்பங்களை துயரங்களை சிரமங்களை அனுபவித்து விட்டு நிரந்தரமான மறுமை வாழ்க்கையில் சுகமான இலகுவாக இருக்க போகிறீர்கள்.

இதைத்தான் நம் சிறப்பிற்குரிய முன்னோர்கள் சொன்னார்கள். மார்க்கம் இலகுவானது என்று.

உங்கள் மார்க்கத்தில் இறைவழிபாட்டை விடுவதற்கு அல்லாஹ் காரணங்களை வைக்கவில்லை. உங்களால் நின்று தொழ முடிய வில்லையா? உட்கார்ந்து தொழுங்கள். ஒழு செய்ய  முடியவில்லையா? தயம்மும் செய்து தொழுங்கள்.

இது தான் மார்க்கம் இலகுவானது என்பதற்குப் பொருள்.

நம்முடைய அற்ப ஆசைகளால் அற்ப எண்ணங்களால் இறைவழிபாட்டை புறக்கணித்துவிட்டு ஆசைகளின் பின்னால் செல்வதற்கு பெயரல்ல மார்க்கம் இலகுவானது.

கண்ணியத்திற்குரியவர்களே!!! வணக்க வழிபாடு தொழுகையிலிருந்து, நோன்பு நோற்பதில் இருந்து, குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது, இரவு வணக்கங்கள், அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வது, இது எல்லாம் அடியான் தன் இறைநம்பிக்கையை உண்மையானது என்பதை நிரூபிப்பதற்கு அல்லது தன் நம்பிக்கையை சுத்தப்படுத்துவதற்கு அல்லது தன் உள்ளத்தில் உள்ள இறை அன்பு உயர்ந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உண்டான வழிமுறைகள்.

யாருக்கு இபாதத்தில் ஆர்வம் இல்லையோ யாருக்கு அல்லாஹ்வை வழிபடுவதில், இந்த வழிபாட்டின் சிரமங்களை தாங்கிக் கொள்வதில் ஆர்வம் இல்லையோ அவர்கள் தங்களை முஃமின்கள் என்று சொன்னால் அவர்கள் போலிகள்.

إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا

நிச்சயமாக (நிராகரிக்கும்) இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்(கக் கருது)கின்றனர். எனினும், அல்லாஹ்வோ அவர்களை வஞ்சித்து விடுகிறான். அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு)கிறார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவே தவிர அல்லாஹ்வை தியானிப்பதில்லை.(அல்குர்ஆன்4 : 142)

தொழுகைக்கு வந்தால் சோம்பேறித்தனமாக வருவது. அலட்சியத்தோடு வருவார்கள். வேறு எங்காவது இவர்கள் அழைக்கப்பட்டார்கள் என்றால்  புது சட்டையை மாற்றிக்கொள்வார்கள்.புத்தம் புது ஆடைகளை அணிந்து கொள்வார்கள்.நறுமணங்களை பூசிக்கொள்வார்கள். உற்சாகத்தோடு செல்வார்கள்.

தொழுகைக்கு அழைத்தால் சோம்பல், அலட்சியத்தோடு ஒரு நிர்பந்தத்தோடு வருவார்கள்.

முனாஃபிக் அல்லாஹ்வை நினைவு கூற மாட்டான். குறைவாகவே தவிர. இபாதத்தில்  அவனுக்கு ஆர்வம் இருக்காது. குர்ஆன் ஓதுவதில் ஆர்வம் இருக்காது.

எத்தனை இரவுகள் விழித்திருப்போம்.  எதற்காகவோ விழித்திருப்போம்.  எத்தனை இரவுகள் விழுத்து பேசியிருப்போம்.  என்னென்ன நோக்கங்களுக்காக எந்தெந்த செயல்களிலே விழித்திருப்போம்.யோசித்துப் பாருங்கள்.

இந்த இரவின் ஒரு பெரும்பகுதியில் லா யிலாஹ இல்லல்லாஹ் உச்சரிப்பதில் அதை சிந்திப்பதில் நேரம் கழிப்போம் என்று சொல்கிற முஃமின்கள் எங்கே !!!.

இன்று இரவு எல்லாம் நான் தொழுகையிலேயே இருந்தேன்;குர்ஆனை ஓதினேன்;திக்ர் செய்தேன்;என் பாவங்களை நினைத்து அழுதேன்;இவையெல்லாம் குர்ஆனிலே சொல்லப்படவில்லையா???

இதுவரை நம் சமூகத்தில் தொழுகையில் விரலை ஆட்டலாமா? ஆட்டக் கூடாதா? என்பதை பற்றிதான் எங்கு சென்றாலும் கேள்வி. எப்படி கை கட்டுவது?இங்கேயா?அங்கேயா?சின்ன சின்ன காரியங்களில் சண்டை செய்து கொள்வது.

இவற்றை மட்டும் பேசி இறைநம்பிக்கையின் பல விஷயங்களை கோட்டை விட்ட மக்களை நாம் பார்க்கிறோம். அதற்காக மார்க்கத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி செய்தார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் அலட்சியம் காட்டக்கூடாது. தொழுகை போன்ற வணக்க வழிபாடு எதுவாக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்ததை போன்று தான் செய்ய வேண்டும்.

அவர்கள் விரலை ஆட்டினால் ஆட்டி தான் ஆக வேண்டும். அவர்கள் விரலை நீட்டி வைத்தார்கள் என்றால் நீட்டி வைக்கத்தான் வேண்டும். யாருடைய சொல்லுக்கும் செயலுக்கும் நபியின் சொல்லை விட வேண்டாம். ஏனென்றால் நபி அல்லாஹ்வால் வஹி கொடுக்கப்பட்டவர். நபி அவர்தான் முதல் இமாம். அவரை விட்டுவிட்டு வேறு எந்த இமாமும் பின்பற்றுவதற்கு நமக்கு அனுமதி இல்லை.

ஆனால் கண்ணியத்திற்குரியவர்களே!!! அந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுக்கொடுத்த மார்க்கத்திலே அவர்களுடைய வாழ்க்கை வழிகாட்டலில்  இந்த இறை நம்பிக்கையின் பக்கங்களை எல்லாம் பார்க்காமல், இந்தத் தியாகங்களை எல்லாம் பார்க்காமல், ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு கடைசி வரை அதை செய்து கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கற்றுக் கொடுக்கவில்லை.

நபிக்கு அல்லாஹ் சொல்கிற உபதேசத்தை பாருங்கள்.

فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا (5) إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا (6) فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ (7) وَإِلَى رَبِّكَ فَارْغَبْ (8)

நிச்சயமாக சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது. மெய்யாகவே சிரமத்துடன் சௌகரியம் இருக்கிறது. ஆகவே, (மார்க்கப் பிரச்சாரத்திலிருந்து) நீர் விடுபட்டதும், (இறைவனை வணங்குவதற்கு) சிரத்தை எடுப்பீராக. மேலும், (துன்பத்திலும் இன்பத்திலும்) உமது இறைவனையே நீர் நோக்கி நிற்பீராக! (அல்குர்ஆன் 94 : 5-8)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;

உலகத்திலே நீங்கள் கஷ்டப்பட்டால் மறுமையில் சவுகரியமாக இருக்கலாம்.  இந்த உலகத்திலே நீங்கள் துன்பங்களை துயரங்களை சோதனைகளை அனுபவித்தால் மறுமையில் சுகமாக இருக்கலாம்.

அல்லாஹு அக்பர் !!ஒரு பக்கம் அழைப்பு பணி, இன்னொரு பக்கம் அல்லாஹ்விடத்தில் அழைப்பு.

நபியே ! நீங்கள் ஆசை பட வேண்டியது உங்கள் இறைவனின் பொருத்தத்தை.

அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கட்டும் போது அல்லாஹ்வின் அன்பு கல்பில் எவ்வளவு நிறைந்திருக்கிறது? அந்த உணர்வு ஏற்படவில்லை என்றால் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று சொல்கிறார் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையவன் என்று சொல்கிறார்.அந்த அன்பு இருப்பதை உணரவில்லை என்று சொன்னால் இவர்களுடைய பிஸ்மில்லாஹ் என்ன மாற்றத்தை கொடுக்கும்? இவருடைய சூரத்துல் ஃபாத்திஹா  இவனுடைய வாழ்க்கையில் எந்த புரட்சியை ஏற்படுத்தும்? என்ன மாற்றத்தை கொடுக்கும்?

ஒரு கேசட் போட்ட மாதிரி தான்.ஒரு சீடியில்  சூரத்துல் பாத்திஹாவை ஓத வைத்தால் அந்த கேசட்டில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா? அதில் எந்த தாக்கம் இருக்கும்? அப்படித் தான் இன்று பலரின் தொழுகைகள் மாறி விட்டதற்கு காரணம்.

துன்யாவிற்கு  எடுத்துக் கொள்கிற சிரமங்களின் ஒருசில அளவுகூட அல்லாஹ்வை அடைய வேண்டும் அவனுடைய பொருத்தத்தை அடைய வேண்டும் அவனுடைய இபாதத்தில் நான் களைப்புற  வேண்டும்என்பதற்காக எடுத்துக்கொள்ளவில்லை.

அல்லாஹ் மனித படைப்பின் நோக்கத்தைப் பற்றி கூறுகிறான்;

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ

ஜின்களையும், மனிதர்களையும் (அவர்கள் என்னை அறிந்து) என்னை வணங்குவதற்கே தவிர (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன்51 : 56).

துன்யாவுக்காக  எவ்வளவு வியர்வை சிந்தி இருப்போம்.கால் கடுக்க நின்று இருப்போம் தூக்கத்தை இழந்திருப்போம்.

இபாதத்திலே அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ????

யோசித்துப் பாருங்கள்!

இப்படியே வாழ்க்கை நீண்டு கொண்டே சென்றால் அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவது போன்று தான்.

الناس نيام فإذا ماتوا انتبهوا

மறுமையை அறியாதவர்கள் எல்லாம் இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் தங்களை. விழித்துக்கொண்டு இருப்பவர்களாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்

இப்போது இவர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.அவர்கள் இறக்கும் போது தெரியும் விழித்துக்கொள்வார்கள். அப்படி விழிப்பதால் எந்த பலனும் இல்லை.

ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே!!

இந்த இறை நம்பிக்கை உண்மையாக வேண்டும்.பரிசுத்தமாக வேண்டும்.இதனுடைய அளவு கூட வேண்டும். இதனுடைய உண்மையான ருசியை உணர வேண்டும் என்றால் மறுமை நிறைந்த ஈமானை கொண்டு உயர்ந்த தரஜாத்துக்களை அடைய வேண்டும் என்று சொன்னால் அதற்கு உழைப்பு அர்ப்பணிப்பு தியாகங்கள் தேவை.

وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ

எவர்கள் நம் வழியில் (செல்ல) முயற்சிக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம் (நல்) வழிகளில் செலுத்துகிறோம். நன்மை செய்பவர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான். (அல்குர்ஆன்29 : 69)

இந்த தியாகங்களை நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவனுடைய அருளை எதிர் பார்க்க முடியாது. அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவனுடைய அன்பை எதிர் பார்க்க முடியாது. அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இழக்கவில்லை  என்றுசொன்னால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எதையும் கொடுக்க மாட்டான்.

அவன் சோதிக்கிறான்;விரும்புகிறான்;தன்னுடைய அடியான் எனக்காக எந்த அளவு பாடுபடுகிறான்?எனக்காக எந்த அளவு சிரமப்படுகிறான்? என்பதை அறிந்து கொள்ள.

இப்ராஹிம் கஷ்டப்பட்டார்; கடைசியாக தன் மகனை பலி கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறிய போது கூட , அதற்கும் தயங்கவில்லை. அல்லாஹ் கூறிவிட்டான்.

وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا

இப்போது இப்ராஹீமுடைய உள்ளம் அல்லாஹ்விற்காக சுத்தமாகி விட்டது.அல்லாஹ் இப்ராஹீமை உற்ற நண்பனாக ஆக்கிக் கொண்டான். (அல்குர்ஆன் 4 : 125)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கும் அந்த பரிசுத்தமான உண்மையான இறை நம்பிக்கையாளர்களாக இறைத்தூதர்களின் வழியில் செல்வதற்கு உதவி செய்வானாக!!!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم

குறிப்புகள் :

குறிப்பு 1).

حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ مُطَهَّرٍ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، عَنْ مَعْنِ بْنِ مُحَمَّدٍ الغِفَارِيِّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الدِّينَ يُسْرٌ، وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلَّا غَلَبَهُ، فَسَدِّدُوا وَقَارِبُوا، وَأَبْشِرُوا، وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوْحَةِ وَشَيْءٍ مِنَ الدُّلْجَةِ»(صحيح البخاري 39 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/