HOME      Khutba      உண்மையாளர்கள் - பொறுமையாளர்கள் | Tamil Bayan - 175   
 

உண்மையாளர்கள் - பொறுமையாளர்கள் | Tamil Bayan - 175

           

உண்மையாளர்கள் - பொறுமையாளர்கள் | Tamil Bayan - 175


உண்மையாளர்கள்

ஜுமுஆ குத்பா தலைப்பு : உண்மையாளர்கள்

வரிசை : 175

இடம் : எஸ்.எம்.ஜெ.பிளாசா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 21-05-2010 | 07-06-1431

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வை நினைவுபடுத்தியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் நம் பாவங்களை மன்னிப்பானாக. நமக்கு அவனுடைய அச்சத்தை அதிகப்படுத்துவானாக. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நன்மையில் தீவிரம் காட்டுபவர்களாகவும் பாவத்தை விட்டு விலகிக் கொள்பவர்களாகவும் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக!

அல்லாஹு தஆலா, அவனுடைய அடியர்களிடத்தில் விரும்புகின்ற நல்ல பண்புகள் நல்ல குணங்களில் ஒன்று, உண்மையாளராக வாய்மையாளராக இருப்பது.

எது உள்ளத்தில் இருக்கிறதோ அது நாவின் வழியாக வெளிப்பட வேண்டும். உள்ளத்தில் ஒன்றை வைத்து நாவில் ஒன்றை சொல்வதை அல்லாஹு‌ ரப்புல் ஆலமீன் முனாஃபிக் - நயவஞ்சகனின் அடையாளம் என்று சொல்கிறான்.

இறை நம்பிக்கை உள்ளத்தில் இருக்க வேண்டும்.நாவில் வெளிப்பட வேண்டும். எதை மனதில் கொள்கையாக கொண்டிருக்கிறானோ அந்த கொள்கைக்கு ஏற்ப அவனுடைய சொல் இருக்க வேண்டும்.

இந்த உலகத்தில் மக்கள் மக்களை ஏமாற்றிவிடலாம். பொய் பேசி ஒருவரை மகிழ்ச்சிப்படுத்தி விடலாம். பொய்யின் மூலமாக பகட்டு வார்த்தைகளின் மூலமாக ஒருவரை திருப்தி படுத்தி விடலாம்.

அவர்களுக்கு உள்ளத்தின் ரகசியங்கள் தெரியாது. ஆனால்,அல்லாஹ் அப்படிபட்டவன் அல்ல. அல்லாஹ் உள்ளத்தின் ரகசியங்களை அறிந்தவன். உள்ளம் எதை மறைக்கிறது,கடைக்கண் எதை பார்க்கிறது என்ற அனைத்து ரகசியங்களும் அல்லாஹ்விற்கு முன்னால் வெளிப்படையான ஒன்றே.

மறைவு என்பது அவனுக்கு கிடையாது. மறைவு என்பது நமக்கு தான். அவன் உள்ளத்தின் ரகசியங்களை தெள்ளத் தெளிவாக அறிகிறான்.

அவனுடைய படைப்பினங்கள் அத்தனை ‌கோடியும் என்ன எண்ணுகின்றன, என்ன இனிமேல் எண்ணும், என்ன எண்ணின, போன்ற அனைத்தும் அல்லாஹ் உடைய அறிவில் மறைந்தது கிடையாது.

ஆகவே! இறை‌ நம்பிக்கையாளர்களிடத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்கள்‌ தங்கள் இறை நம்பிக்கையில், தங்கள் இறை வழிபாட்டில் உண்மையாளர்களாக சுத்தமானவர்களாக இருக்க வேண்டும்.

அவர்களுடைய இறை நம்பிக்கையில் பொய் கலக்கக்கூடாது. அவர்களுடைய வாக்குகளில் பொய் கலக்கக்கூடாது. அவர்களுடைய நல்ல பிரார்த்தனைகளில் பொய் கலக்கக்கூடாது. அவர்களுடைய நல்ல கொள்கைகளில் பொய் கலக்கக்கூடாது. அவர்களுடைய துஆக்கள் அவர்களுடைய எண்ணங்களில் எதிலும் பொய் கலந்து விடக்கூடாது.

சுத்தமானவர்களாக உண்மையானவர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.

ஆகவேதான், அவன் இறக்கிய இறுதி வேதம் அல்குர்ஆனில், உண்மையாளர்களுக்கென்றே பல அடையாளங்களை கூறினான். அவர்களை அல்லாஹ் புகழ்ந்தான். அவர்களுக்கு அல்லாஹ் அவனுடைய சொர்க்கத்தை வாக்களிக்கின்றான்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஸூரத்துல் மாயிதாவில் இப்படி குறிப்பிடுகின்றான்;

يَوْمُ يَـنْفَعُ الصّٰدِقِيْنَ صِدْقُهُمْ‌

உண்மையாளர்களுடைய உண்மை.. நாளை மறுமைநாளில் பலனளிக்கும். (அல்குர்ஆன் 5:119)

இந்த உலகத்தில் உண்மையாளர்கள் சோதிக்கப்படலாம். இந்த உலகத்தில் உண்மையாளர்கள் ஏதாவது ஒன்றை இழந்து விடலாம்.

ஆனால், மறுமையில் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் அவர்கள் எதையும் இழக்க மாட்டார்கள். உண்மை பேசுவதால் துன்யாவில் இலாபத்தை இழக்கலாம். உண்மை பேசுவதால் தொழிலை இழக்கலாம். உண்மை பேசுவதால் யாரிடத்திலாவது ஏதாவது பகைமையை சம்பாதிக்க ஒரு நிர்பந்தத்திற்கு ஆளாகலாம்.

ஆனால், நாளை மறுமையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த உண்மையாளர்களை நெருக்கிக்கொள்கிறான். அவனுக்கு அருகாமையில் வைத்துக்கொள்கிறான். அவனுடைய சொர்க்கத்தை அல்லாஹ் வாக்களிக்கின்றான்.

முஃமின்கள் யாரென்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடும்போது,

الصَّابِرِينَ وَالصَّادِقِينَ وَالْقَانِتِينَ وَالْمُنْفِقِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ

(அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மை பேசுகிறவர்களாகவும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பவர்களாகவும், தானம் செய்கிறவர்களாகவும், ‘ஸஹர்' நேரங்களில் (வைகறைப் பொழுதில் அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருகிறவர்களாகவும் இருக்கின்றனர்.(அல்குர்ஆன் 3:17)

முஃமின்கள் யார் தெரியுமா? அவர்கள் அல்லாஹ் உடைய மார்க்கத்தில் உறுதியாக இருப்பார்கள். எந்த நிலையிலும் மார்க்கத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். மார்க்கத்தை விலை பேச மாட்டார்கள்.

இன்று பெரும்பாலும் பொறுமை என்பதற்கு ஏதாவது சோதனையில் சகிப்போடு இருப்பதை தான் பொறுமை என்று மக்கள் விளங்கிக் கொள்கிறார்கள்.

ஆனால், குர்ஆனில் எங்கெல்லாம் பொறுமை என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றதோ, நீங்கள் பெரும்பாலும் பார்த்திருக்கலாம், போர் குறித்த வசனங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடும்போது பொறுமையாக இருங்கள் என்று சொல்வான்.

போரில் பொறுமையாக இருப்பதென்றால் புறமுதுகு காட்டாமல், தன்னுடைய உயிர் போனாலும், தான் கொல்லப்பட்டாலும் எல்லாரும் கொல்லப்பட்டாலும் சரி, அல்லாஹ் உடைய பாதையில் அல்லாஹ் உடைய தீனை நிலைநிறுத்துவதற்காக போர் மைதானத்தை விட்டு விலகாமல் புறமுதுகு காட்டி ஓடாமல் நிலையாக இருப்பது.

பொறுமை என்று சொன்னால் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக இருப்பது தான் அதனுடைய முதல் பொருள்.

இரண்டாவது பொருள் தான், சோதனைகளை தாங்குவது, கஷ்டங்களை தாங்குவது. இந்த துன்யாவின் ஏற்பாட்டிற்கு ஏற்ப என்ன ஒரு சோதனைகளை அல்லாஹ் தருகிறானோ அதில் சகிப்பாக இருப்பது.

அல்லாஹ் சொல்கிறான்; முஃமின்கள் யார்? அவர்கள் மார்க்கத்தில் உறுதியாக இருப்பார்கள். இரண்டாவது பண்பை அல்லாஹ் சொல்கிறான். அவர்கள் உண்மையாளர்களாக இருப்பார்கள்.

அவர்களுடைய வணக்க வழிபாடு கொள்கை அனைத்திலும் உண்மை வெளிப்படும். இன்னும் அவர்கள் அல்லாஹ்விற்கு பணிந்தவர்களாக இருப்பார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! ஒரு செல்வந்தனின் செல்வம் அல்லாஹ்விற்கு அவன் பணிவதை விட்டு தடுத்துவிடக் கூடாது.

ஒரு அதிகாரியின் அதிகாரம், ஒரு ஆட்சியாளனின்‌ ஆட்சி அல்லாஹ்விற்கு முன்னால் பணிந்தவனாக தொழுகையில் நிற்கும்போது, பிரார்த்தனைக்காக கைகளை தூக்கும்போது, அல்லாஹ்விடத்தில் ஒன்றை வேண்டும்போது, வணக்க வழிபாடுகளை எந்த வகையில் செய்தாலும் சரி, பணிந்து செய்ய வேண்டும். 

பணிவோடு செய்கின்ற வணக்க வழிபாடுகளை தான் அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ்விற்கு முன்னால் பெருமை அடித்தால், எவ்ளவு காலம் அவன் வணங்கினாலும் சரி, வழிபாடுகளை செய்தாலும் சரி, அல்லாஹ் அவனை சபித்து விடுவான்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இப்லீஸ். அல்லாஹ்வின் சமூகத்தில் மலக்குகளோடு வணக்க வழிபாடு செய்து கொண்டிருந்தான்.

ஆனால் எப்பொழுது சமூகத்தில் பெருமை அடித்தானோ, அல்லாஹ் கூறினான்; இப்லீஸ் உனக்கு பெருமை அடிப்பதற்கு இங்கே தகுதியல்ல. நீ சபிக்கப்பட்டு விட்டாய், கேவலமானவனாக நீ வெளியேறிவிடு, என்று ரப்புல் ஆலமீன் அவனை சபித்து வெளியே அனுப்பிவிட்டான்.

அடுத்து அல்லாஹ் சொல்கிறான்;

அவர்கள் அல்லாஹ் உடைய பாதையில் தர்மம் செய்வார்கள். அதிகாலையில் சுபுஹு தொழுகைக்கு முன்னால் எழுந்து அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கேட்டு கொண்டிருப்பார்கள்.(அல்குர்ஆன் 3:17)

இது முஃமின்களுடைய பண்பு என்று அல்லாஹ் சொல்கிறான்.

இதில் இரண்டாவது பண்பாக அல்லாஹ் கூறியது, உண்மையாளர்கள். எல்லா காரியங்களிலும் உண்மையை வெளிப்படுத்தக் கூடியவர்கள்.

இதே உண்மையாளர்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஸூரா அஹ்ஸாபுடைய 35-வது வசனத்தில் இப்படி குறிப்பிடுகின்றான்.

إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَالْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْقَانِتِينَ وَالْقَانِتَاتِ وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا

நிச்சயமாக முஸ்லிம் ஆண்களும் பெண்களும், நம்பிக்கையுடைய ஆண்களும் பெண்களும், (இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும்) கீழ்ப்படியும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.(அல்குர்ஆன் 33:35)

முஃமினுடைய அத்தனை பண்புகளையும் அல்லாஹ் இங்கே ஒட்டுமொத்தமாக வர்ணிக்கிறான். முஃமின்கள் அல்லாஹ்விற்கு அடிபணிவார்கள். இஸ்லாமிய கடமைகளை பின்பற்றுவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்; இவர்கள் அனைவருக்கும் நான் என் மன்னிப்பை முடிவு செய்துவிட்டேன். இவர்களுக்கு மகத்தான கூலியை நான் எழுதி விட்டேன் என்று.

உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்தில் வருகிறார்கள். பெண்களின் பிரதிநிதியாக வருகிறார்கள்.

யா ரசூலல்லாஹ்! ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த குர்ஆனில் அல்லாஹ் ஆண்களைப் பற்றியே குறிப்பிட்டு சொல்கிறானே. எங்களை அல்லாஹ் குறிப்பிடவில்லையே?

ஏனென்றால் அரபியில் அமைந்திருக்கக்கூடிய அந்த வாசகங்கள்,

يايها الذين ٱمنوا ل،يأيها المسلمون

என்பதாக ஆண்களுடைய ஸீகாவின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.

அந்த அடிப்படையில் கேள்வி கேட்கிறார்கள். யா ரசூலல்லாஹ்! அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஆண்களைப் பற்றி குர்ஆனில் குறிப்பிடுகிறானே. நன்மை செய்யக்கூடிய எங்களுக்கு இதில் பங்கில்லையா? எங்களுக்கு நன்மைகளின் வாக்குறுதி இல்லையா என்று கேட்கிறார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன், இவர்களுடைய இந்த வார்த்தை உண்மையாக இருந்த காரணத்தால், உள்ளத்தின் ஆழத்தில் இருந்து எழுந்த காரணத்தால், இவர்களுடைய இந்த கேள்விகளுக்கு பதிலாகவே அர்ஷிலிருந்து வசனத்தை இறக்கிவிட்டான்.

அதுதான் ஸூரத்துல் அஹ்ஸாப் உடைய 35-வது வசனம்.

ஸஹாபாக்கள் உள்ளத்தில் இருந்த அந்த உண்மையான ஈமானை பாருங்கள். அவர்களுடைய உள்ளத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் பேசினார்கள்.

பகட்டு என்பது முகஸ்துதி என்பது பிறரை ‌சந்தோசப்படுத்துவதற்காக பேசுவதென்பது ஸஹாபாக்களுடைய வாழ்க்கையில் இல்லாத ஒரு பண்பு.

ஆகவேதான், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஸஹாபாக்களை எங்கெல்லாம் குறிப்பிடுகிறானோ, அவர்களை உண்மையாளர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அவர்கள் சுத்தமானவர்கள் என்று குறிப்பிடுகிறான்.

நாளை மறுமையில் இந்த சஹாபாக்களை குறித்து அல்லாஹ் இப்படிக் கூறுவான். இது உண்மையாளர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாள். (அல்குர்ஆன் 5 : 119)

இறைநம்பிக்கை கொண்டதிலிருந்து தங்களுடைய இறுதி மூச்சு வரை அத்தனை சோதனைகளிலும், முகம் சுளிக்காமல், அல்லாஹ்வின் விஷயத்தில் அல்லாஹ்வின் மார்க்க விஷயத்தில் தங்களுக்கென்று எதையும் ஒதுக்காமல், எப்படி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் பைஅத் கொடுத்தார்களஅதன்படி தங்கள் வாழ்க்கையை அமைத்தார்கள்.

அவர்கள் எப்படி பைஅத் கொடுத்தார்கள்? யா ரசூலல்லாஹ்! எங்களுடைய உயிர்கள் பறிபோனாலும், எங்களுடைய பெண்கள் விதவையாக்கப்பட்டாலும், எங்களுடைய பிள்ளைகள் அனாதையாக்கப்பட்டாலும் நாங்கள் உங்களை பாதுகாப்போம்.

எங்களுடைய செல்வத்தில் நாங்கள் உங்கள் விஷயத்தில் கருமித்தனம் காட்ட மாட்டோம். உங்களை எதிரிகளிடத்தில் ஒப்படைக்க மாட்டோம்.

போர் மைதானத்தை விட்டு புறமுதுகு காட்ட மாட்டோம் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்தில் வாக்குறுதி தந்தார்கள். அந்த வாக்குறுதியின்படி தங்களுடைய வாழ்க்கையை அமைத்தார்கள்.

ஸஹாபாக்கள் யார்? இந்த பூமியில் நடக்கும் போதே சொர்க்கவாசிகள் என்று வாக்களிக்கப்பட்டு பூமியில் நடந்தவர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கிறார்கள்;

இந்த பூமியில் சொர்க்கவாசி ஒருவர் நடமாடுவதை நீங்கள் பார்க்க வேண்டுமா? இவரை நீங்கள் பாருங்கள்.

பிலாலை பார்த்து கதீஜாவை பார்த்து உம்மு சுலைமை பார்த்து அபூபக்ர், உமர், உஸ்மான் அலி என்று ஆயிரக்கணக்கான ஸஹாபாக்களுடைய பெயர்களை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்டு சொன்னார்கள்.

காரணம், அவர்களுடைய உள்ளத்தில் இருந்த உண்மை. இப்படித்தான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களுக்கு பயிற்சி கொடுத்தார்கள்.

எந்த நிலையிலும் தங்களுடைய ஈமானில் பொய் கலந்து விடாமல், தங்களுடைய பேச்சில் பொய் கலந்து விடாமல், தங்களுடைய அனைத்து விதமான செயல்பாடுகளிலும் நயவஞ்சகத்தனமோ போலித்தனமோ அல்லது பிறரை திருப்திப் படுத்துவதற்காக புகழ்வதற்காக எதாவது ஒன்றை சொல்வதோ ஸஹாபாக்களிடத்தில் அறவே கிடையாது.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களுக்கு கொடுத்த தர்பியாவைப் பாருங்கள்.

இமாம் புகாரி பதிவு செய்கிறார்கள். நீங்கள் உண்மை பேசுங்கள் உண்மையாளர்களாக இருங்கள். அப்படி இருந்தால் தான் நீங்கள் நன்மை செய்ய முடியும். உண்மை பேசுகிறவன் தான் உண்மையில் நல்ல காரியங்களை செய்ய முடியும். யாரிடத்தில் உண்மை இல்லையோ அவர்களால் நல்ல காரியங்களை செய்ய முடியாது.

إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى البِرِّ، وَإِنَّ البِرَّ يَهْدِي إِلَى الجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا

உங்களுடைய சொல்லில் உங்களுடைய பணியாளர்களோடு உங்களுடைய தொழிலாளிகளோடு உங்களுடைய மனைவியோடு உங்களுடைய பிள்ளைகளோடு உங்களுடைய வணக்க வழிபாடுகளில் உங்களுடைய அனைத்து செயல்களிலும் உண்மையை நீங்கள் கடைபிடியுங்கள்.

யார் உண்மையை கடைபிடிப்பாரோ அந்த உண்மை அவரை நன்மையின் பக்கம்,இறைவழிபாட்டின் பக்கம் கரம்பிடித்து இழுத்துச் செல்லும். நன்மை உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.

ஒருவன் தன்னுடைய அனைத்து காரியங்களிலும் உண்மை பேசிக்கொண்டே இருப்பான். உண்மை பேசுவதையே தன்னுடைய பழக்கமாக ஆக்கிவிட்டான். இவன் அல்லாஹ்விடத்தில் சித்தீக் என்று எழுதப்படுகிறான்.

எந்த தரத்தில் உயர்கிறான்? அல்லாஹ்விடத்தில் சித்தீக் என்ற தரம். சித்தீக் உடைய தரம் என்ன தெரியுமா? அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய புத்தகமல் குர்ஆனில் இப்படி குறிப்பிடுகின்றான்.

وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்செய்த நபிமார்கள், சத்தியவான்கள், சன்மார்க்கப் போரில் உயிர்நீத்த தியாகிகள், நல்லொழுக்கம் உடையவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில்) வசிப்பார்கள். இவர்கள்தான் மிக அழகான தோழர்கள்.(அல்குர்ஆன் 4 : 69)

அல்லாஹ்வுடைய அந்த சமூகத்தில் சொர்க்கத்தில் அல்லாஹ்வின் பார்வையில் முஃமின்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இப்படித்தான் தரம் பிரித்து வைத்திருக்கிறான்.

முதலாவது தரம்,நபிமார்கள் ரசூல்மார்கள். அடுத்த தரம் உள்ளவர்கள்,உண்மையாளர்கள் என்று அல்லாஹ் யாரை அங்கீகரித்துக் கொண்டானோ அவர்கள்.

யார் தன்னுடைய அனைத்து செயல்களிலும் அனைத்து சொற்களிலும் உண்மையை கையாளுகிறாரோ வாய்மையை கடைபிடிக்கிறாரோ அவரை அல்லாஹ் சித்தீக் என்று பதிவு செய்கிறான்.

உண்மைக்கு மாற்றமாக பொய் பாவத்திற்கு வழிகாட்டுகிறது.

மனிதன் கவனக்குறைவாக பொய் பேசுகிறான். அல்லது அதை ஒரு அலட்சியமாக எடுத்துக் கொண்டு, அல்லது அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை.

சின்ன விஷயத்தில் ஆரம்பித்து கடைசியில் ‌பெரிய விஷயம் வரை அவனுடைய அன்றாட வாழ்க்கையில் அவன் மக்களுக்கு மத்தியில் பொய் பேசும்போது பொய்யை தன்னுடைய கொள்கையாக தன்னுடைய குணமாக கொள்ளும்போது, அடுத்து என்ன ஆகிறது தெரியுமா?

அல்லாஹ்வோடு உள்ள விஷயங்களிலும் அவன் பொய்யை கலக்கிறான். அல்லாஹ் பாதுகாப்பானாக. எப்போது அல்லாஹ்வோடு உள்ள அவனுடைய வணக்க வழிபாடுகளில் அவனுடைய செயல்பாடுகளில் அவன் பொய்யை கலக்கிறானோ அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

وَإِنَّ الكَذِبَ يَهْدِي إِلَى الفُجُورِ، وَإِنَّ الفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا

பொய் பாவத்திற்கு வழிகாட்டுகிறது. பாவம் மனிதனை நரகத்திற்கு வழிகாட்டுகிறது.

மனிதன் பொய் பேசுகிறான், கொஞ்சம் கொஞ்சம் என்று ஆரம்பித்து, வாழ்க்கையே பொய்யாக மாறிவிடுகிறது. இறுதியில் அல்லாஹ்விடத்தில் அவன் பொய்யனாகவே எழுதப்பட்டு விடுகிறான். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 6094.

கண்ணியத்திற்குரியவர்களே! ஸஹாபாக்களுடைய வாழ்க்கையைப்‌ பாருங்கள். இந்த ஸஹாபாக்களை புகழ்ந்து அல்லாஹ் சொல்கிறான்.

مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا (23) لِيَجْزِيَ اللَّهُ الصَّادِقِينَ بِصِدْقِهِمْ وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ إِنْ شَاءَ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا

நம்பிக்கையாளர்களில் ஆண்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் பலர் (இறந்து ‘ஷஹாதத்' என்னும்) தங்கள் இலட்சியத்தை அடைந்து விட்டனர். வேறு சிலர் (மரணிக்கவில்லை என்றாலும் அதை அடைய ஆவலுடன்) எதிர்பார்த்தே இருக்கின்றனர். (என்ன நேரிட்டாலும் அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து) ஒரு சிறிதும் மாறுபட்டுவிடவே இல்லை. உண்மையுடன் நடந்துகொண்ட (இ)வர்களுக்கு அவர்களின் உண்மைக்குத் தக்க கூலியை அல்லாஹ் கொடுத்தே தீருவான். எனினும், நயவஞ்சகர்களை அவன் நாடினால் வேதனை செய்வான். (அவன் நாடினால் அவர்களையும் மன்னிப்புக் கோரும்படிச் செய்து) அவர்களை மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையுடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 33: 23,24)

இன்று,நம்மிலும் சில முஸ்லிம்கள் நேர்ச்சை செய்கிறார்கள்;யா அல்லாஹ்!எனக்கு செல்வதை கொடுத்தால், எனக்கு பிள்ளையை‌ கொடுத்தால், நாகூரில் சென்று மொட்டை போடுகிறேன்,நாகூரில் சென்று புறா வாங்கி விடுகிறேன் என்று.

எப்படிப்பட்ட கேவலமான ஷிர்க்கான நேர்ச்சைகள். ஸஹாபாக்கள் செய்த நேர்ச்சைகள் என்ன? யா அல்லாஹ்!எங்களுக்கு நீ ஒரு வாய்ப்பை கொடு,உன்னுடைய மார்க்கத்தை நிலைநிறுத்துவதற்கு,உன்னுடைய எதிரிகளை வெட்டுவதற்கு.

யாஅல்லாஹ் எங்களுக்கு ஒரு வாய்ப்பை கொடு,அப்போது நீ பார்ப்பாய்;எங்களுடைய உள்ளங்களில் என்ன ஈமானை மறைத்து வைத்திருக்கிறோம்?எந்த இறைநம்பிக்கை எங்களிடம் இருக்கிறது என்பதாக.

இந்த வசனத்தை குறித்து அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் இமாம் புகாரி ரஹிமதுல்லாஹி அலைஹி பதிவு செய்த ஹதீஸ்.

«يَا رَسُولَ اللَّهِ غِبْتُ عَنْ أَوَّلِ قِتَالٍ قَاتَلْتَ المُشْرِكِينَ، لَئِنِ اللَّهُ أَشْهَدَنِي قِتَالَ المُشْرِكِينَ لَيَرَيَنَّ اللَّهُ مَا أَصْنَعُ»

பத்ர் போரில் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய சிறிய தந்தை அனஸ் இப்னு நழ்ர்அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்‌ குறைஷிகளுடைய வியாபாரக் கூட்டத்தை வழிமறிப்பதற்கு செல்கிறார்கள் என்ற எண்ணத்தில் சில ஸஹாபாக்கள் தங்கிவிட்டார்கள்.

அந்த ஸஹாபாக்களில் அனஸ் இப்னு நழ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். திரும்பியதற்கு பிறகு சொன்னார்கள்;யா ரசூலல்லாஹ்!நீங்கள் அபூஜஹ்லுடைய படையை எதிர்நோக்கி செல்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரிந்திருந்தால் ஒருகாலும் போரிலிருந்து பின்வாங்கி இருக்க மாட்டோம்.

ஆயுதமற்ற குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை வழிமறிக்க நீங்கள் செல்கிறீர்கள் என்ற காரணத்தால் தான் இந்த எண்ணிக்கை போதும் என்று நாங்கள் போரில் கலந்து கொள்ளாமல் தங்கி விட்டோம்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொல்கிறேன்; முஷ்ரிக்குகளோடு நீங்கள் போர் புரிந்த அந்த முதல் போரில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அல்லாஹ் அடுத்து எனக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தால்,நான் என்ன செய்ய போகிறேன் என்று சத்தியமாக அல்லாஹ் பார்ப்பான்.

இப்படி அனஸ் இப்னு நழ்ர் ரழியல்லாஹு அன்ஹு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் பேசுகிறார்கள்.

இந்த பேச்சை அல்லாஹ் வானத்திலிருந்து அர்ஷுக்கு மேலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறான். பொய் பேச‌முடியுமா? போலித்தனமாக ரசூலுல்லாஹ்வை சந்தோசப்படுத்த முடியுமா? உள்ளத்தின் உண்மைகளை அறிந்தவன் ஆயிற்றே.

எத்தனை முனாஃபிக்குகளை அல்லாஹ் கேவலப்படுத்தினான். எத்தனை நயவஞ்சகர்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இழிவுபடுத்தினான்.

அடுத்து, அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள்;

உஹதுடைய போர் மைதானம் சூடுபிடித்து விட்டது. சில சலசலப்புகளின் காரணமாக, சில தவறுகளின் காரணமாக, முஸ்லிம்கள் பிரிந்து ஓடுகிறார்கள்.

முஷ்ரிக்குகள்‌ ரசூலுல்லாஹ்வை அடித்துவிட்டார்கள். காயப்படுத்திவிட்டார்கள். அந்த நேரத்தில் அனஸ் இப்னு நழ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்லாஹவிடத்தில் துஆ செய்கிறார்கள்.

யா அல்லாஹ்!நான் முஸ்லிம்களுடைய இந்த செயலுக்காக உன்னிடத்தில் பாதுகாப்பு தேடுகிறேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட்டு விட்டு இவர்கள் ஓடிவிட்டார்களே,அதற்காக நான் உன்னிடத்தில் நான் பாதுகாப்பு தேடுகிறேன்.

இந்த முஷ்ரிக்குகள் அல்லாஹ்வின் தூதரை காயப்படுத்தினார்களே,உன்னுடைய மார்க்கத்தை அழிப்பதற்காக வந்திருக்கிறார்களே, இவர்களுடைய செயலில் இருந்து நான் உன்னிடத்தில் பாதுகாப்பு தேடுகிறேன்.

என்று கூறி போர் மைதானத்தை நோக்கி விரைகிறார்கள். அப்போது ஸஅத் இப்னு முஆத் ரழியல்லாஹு அன்ஹு வருகிறார்கள்.

«يَا سَعْدُ بْنَ مُعَاذٍ، الجَنَّةَ وَرَبِّ النَّضْرِ إِنِّي أَجِدُ رِيحَهَا مِنْ دُونِ أُحُدٍ»

ஸஅத் இப்னு முஆதே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? உங்களுக்கு உஹதுடைய மலையிலிருந்து சொர்க்கத்தின் வாசனை வீசவில்லையா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உஹத் மலை பக்கத்திலிருந்து சொர்க்கத்தின் வாடையை நான் நுகர்கிறேன். என்று கூறி போர் மைதானத்தில் முஷ்ரிக்குகளின் உள்ளே நுழைகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதரே!நான் அப்போது அனஸ் இப்னு நழ்ரை பார்த்தேன். அவர் செய்த தியாகத்தை என்னால் செய்ய முடியவில்லை. முஷ்ரிக்குகளுக்குள் அவர் நுழைந்துவிட்டார். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதற்காக.

கடைசியில் அவருடைய ஜனாஸாவை எடுத்துவரப்படுகிறது. எந்த நிலையில் தெரியுமா? அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு சொல்கின்றார்கள்.

அவர்களை போர் மைதானத்திலிருந்து கொண்டு வரப்பட்ட போது,எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன. எண்பதுக்கும் மேற்பட்ட வெட்டுகள். வாளின் வெட்டுகள் ஈட்டியின் குத்துகள்,அம்பினால் எறியப்பட்ட அடையாளங்கள் அவர்களுடைய உடலில் காணப்பட்டன.

முஷ்ரிக்குகள் அவர்களுடைய முகத்தை சேதப்படுத்தினார்கள். மூக்கு கண் காது என்று அனைத்தையும் அறுத்து எறிந்துவிட்டார்கள்.

கடைசியில் அவர்களை அடையாளம் காணுவதற்காக அவர்களுடைய சகோதரி அழைத்து வரப்படுகிறார். அவர்களின் விரலில் நுனியில் இருந்த அடையாளத்தை வைத்து, அவர், இவர் தான் அனஸ் இப்னு நழ்ர் என்பதாக அனஸ் இப்னு நழ்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய சகோதரி அடையாளம் காட்டுகிறார்கள்.

இவர்களைக் குறித்து தான் அல்லாஹு ரப்புல் ஆலமீன் சூரத்தில் அஹ்ஸாபுடைய இந்த வசனத்தை இறக்கினான்.

مِنَ الْمُؤْمِنِيْنَ رِجَالٌ صَدَقُوْا مَا عَاهَدُوا اللّٰهَ عَلَيْهِ‌

இவர்கள்,அல்லாஹ்வோடு தாங்கள் செய்த ஒப்பந்தத்தை உண்மைப்படுத்தி காட்டினார்கள். (அல்குர்ஆன் 33: 23)

அதில் எந்தவிதமான கஞ்சத்தனமோ அல்லது போலித்தனமோ இவர்கள் வெளிப்படுத்தவில்லை என்று, அல்லாஹ் சாட்சி சொல்கிறான். (1)

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2805.

இதே அனஸ் இப்னு நழ்ர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களுடைய மற்றுமொரு படிப்பினை பெற வேண்டிய சம்பவம்.

இந்த உஹது போரில் கலப்பதற்கு முன்னால், ஒருநாள் இவர்களுடைய சகோதரிக்கும் இன்னொரு பெண்ணிற்கும் இடையில் ஒரு சின்ன பேச்சுவார்த்தை. அது கொஞ்சம் அதிகமாகி சண்டையாகி விடுகின்றது.

இவர்களுடைய சகோதரி அந்தப் பெண்ணின் பல்லை உடைத்து விடுகிறார்கள். இந்தப் பிரச்சனை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வருகிறது.

அப்போது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வளவு நெருங்கிய தோழராக இருந்தால் என்ன,நீதம் நீதம் தான். சத்தியம் சத்தியம் தான்.

என்னுடைய மகள் ஃபாத்திமா திருடினாலும் அவளுடைய கையை வெட்டுவேன் என்று கூறிய ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் தோழர்களுடைய சகோதரிகள் தப்பு செய்து விட்டால், மன்னித்து விட்டு விடுவார்களா?

அப்போது சொன்னார்கள்;இவளுடைய பல்லை பழிக்குப்பழி உடைக்க வேண்டும். அப்போது அருகில் இருந்த அனஸ் ரலியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்;

இந்த பிரச்சினை வரும்போது அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுடைய குடும்பத்தார்கள் பழிக்குப் பழி வாங்கியே தீருவோம்,மன்னிக்க மாட்டோம்,எந்த வித மான நஷ்ட ஈடையும் நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்தில் வந்தார்கள்.

அதைத்தான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்தில் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அந்த சபையில் சொல்கிறார்கள்;அல்லாஹ்வின் தூதரே!உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக!சொல்லுகிறேன்;என்னுடைய சகோதரியின் பல் உடைக்கப்படாது என்பதாக.

அல்லாஹு அக்பர்!ஒரு சமயம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த வார்த்தையைக் கேட்டு விட்டு அமைதியாகி விட்டார்கள்.

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் உண்மையின் பாடத்தில் சத்தியத்தின் படத்தில் ஈமானின் உறுதியின் பாடத்தில் இதை கொண்டு வருகிறார்கள்.

அல்லாஹ்வின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

«إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ»

அல்லாஹ்வின் அடியார்களில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீது ஒன்றை சத்தியமிட்டு சொல்லிவிட்டால், அவர்களுடைய சத்தியத்தை முறிக்கும்படி அல்லாஹ் ஆக்கமாட்டான். அவர்கள் எப்படி சத்தியம் செய்தார்களோ அப்படியே அல்லாஹ் நடத்தி விடுவான்.

அனஸ் ரலியல்லாஹு அன்ஹு இந்த சத்தியத்தை செய்ததற்குப் பிறகு, சற்று சில நிமிடங்கள் வரை பழிக்குப்பழி வாங்குவோம் என்று துடித்துக் கொண்டிருந்த அந்த குடும்பத்தார்கள்,அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவர்களுடைய உள்ளங்களை மாற்றிவிட்டான்.

யா ரசூலுல்லாஹ்!நாங்கள் நஷ்ட ஈடு வாங்கிக் கொள்கிறோம். நாங்கள் பழிக்குப் பழி வாங்குவதற்கு விரும்பவில்லை என்று கூறுகிறார்கள். (2)

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2703.

கைபர் போருக்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செல்கிறார்கள். ஒரு அரபி,ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஜமாஅத்தை பார்க்கிறார்.

நானும் உங்களோடு கலந்து கொள்கிறேன். நீங்கள் என்ன மார்க்கத்தை போதிக்கிறீர்கள் என்று கேட்கிறார்.

அப்போது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈமானை எடுத்துச் சொல்ல,அவரும் ஈமானை ஏற்றுக் கொள்கிறார். அடுத்து நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? நாங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் போருக்காகச் செல்கிறோம்.

சரி,போரில் கொல்லப்பட்டால் என்ன கிடைக்கும்?

(முந்தைய காலத்திலும் போர் நடந்தது. அந்தப் போர் ஆட்சிக்காக,அதிகாரத்திற்காக,குலப்பெருமைகளுக்காக நடந்தது.

ஆனால்,இஸ்லாமிய போர் குலத்திற்காக அல்ல,பெருமைக்காக அல்ல,இந்த நாட்டுக்காக இந்த பூமிக்காக அல்ல.

அல்லாஹ்வுடைய தீன் ஓங்கப்பட வேண்டும். அநியாயம் செய்யப்படுகின்ற மக்களுக்குஅவர்களுடைய நீதம் கிடைக்க வேண்டும். சத்தியத்தின் வாசல்கள் விசாலமாக திறக்கப்பட வேண்டும். மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைய வேண்டும் என்ற காரணத்திற்காக தான் இஸ்லாத்தில் போர் அனுமதிக்கப்பட்டது. இஸ்லாத்தில் போர் கடமையாக்கப்பட்டது.)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; அப்படியா நீ போரில் கொல்லப்பட்டால் உனக்கு சொர்க்கம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

உடனே அந்தத் தோழர், புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் போரில் கலந்து கொள்கிறார். கைபர் போருக்கு செல்கிறார்கள். முதல் நாள் போர் முடிகிறது.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் போருடைய கனிமத்து பொருட்களை பங்கு வைக்கிறார்கள். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த கிராமத்து அரபிக்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பொறுப்பு கொடுத்திருந்தார்கள், சஹாபாக்களுடைய குதிரைகளை ஒட்டகங்களை மேய்க்க வேண்டும் என்பதாக.

அவர் மேய்ப்பதற்காக சென்றிருந்தார். பங்கு வைத்த போது அவர் இல்லை. அப்போது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருக்கான பங்கை எடுத்து ஒதுக்கி, அவர் வந்தால் நீங்கள் கொடுத்துவிடுங்கள் என்று ஒரு தோழரிடத்தில் ஒப்படைக்கிறார்கள்.

அவர் திரும்பிய போது அந்த தோழர் இது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களுக்காக கொடுத்த பங்கு என்று வைக்கிறார்கள். அப்போது அந்த பங்கை எடுத்துக் கொண்டு அந்தத் தோழர் ஓடி வருகிறார்.

அல்லாஹ்வின் தூதரே!நான் ஏன் தெரியுமா ஈமானை ஏற்றேன்? நான் ஏன் தெரியுமா உங்களோடு போரில் கலந்து கொண்டேன்? அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியும் போது, ஒரு அம்பு வர வேண்டும்,அந்த அம்பு என்னுடைய தொண்டைக்குழியில் இந்த இடத்தில் குத்த வேண்டும். அதில் நான் அல்லாஹ் வின் பாதையில் ஷஹீதாக வேண்டும்.

(கண்ணியத்திற்குரியவர்களே!மனிதர்களை திருப்திபடுத்துவதற்காக சொல்லப்பட்ட வார்த்தையா இது? ரசூலுல்லாஹ்விடத்தில் தனக்கு ஒரு மதிப்பு வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட வார்த்தையா இது? இல்லை. உண்மையான ஈமானோடு சொர்க்கத்தின் ஆசையோடு சொல்லப்பட்ட வார்த்தை.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

«إِنْ تَصْدُقِ اللَّهَ يَصْدُقْكَ»

நீ அல்லாஹ்வோடு உண்மையாக நடந்தால் அல்லாஹ்வும் உன்னோடு உண்மையாக நடப்பான்.

அடுத்த நாள் போர். போரில் கொல்லப்பட்டவர்களை எடுத்து வரப்டும் பொழுது இவர்களும் எடுத்துவரப்படுகிறார்கள். எந்த நிலைமையில்? இவர் எந்த இடத்தில் விரல் வைத்து சுட்டிக் காட்டினாரோ அதே இடத்தில் அம்பால் குத்தப்பட்டு இருக்கிறார். அதன் காரணமாக அவர் மரணித்து இருக்கிறார்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்கள்; நேற்று இந்த வார்த்தையை சொன்னாரே அவர்தானே இந்த தோழர் என்பதாக?

அப்போது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; இவர் அல்லாஹ்விடத்தில் உண்மை பேசினார். அல்லாஹ்வும் இவருடைய ஆசையை உண்மையாக நடத்தி விட்டான்.

அடுத்து, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆவர்கள், தான் அணிந்திருந்த ஜுப்பாவை கலட்டுகிறார்கள். அந்தச் ஜுப்பாவில் இவர்களை கஃபனிடுகிறார்கள்.

பிறகு, தனக்கு முன்னால் அவர்களை வைத்து அவர்களுக்காக ஜனாசா தொழுக வைக்கிறார்கள். அப்போது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படி துஆச் செய்கிறார்கள்,

«اللَّهُمَّ هَذَا عَبْدُكَ خَرَجَ مُهَاجِرًا فِي سَبِيلِكَ فَقُتِلَ شَهِيدًا أَنَا شَهِيدٌ عَلَى ذَلِكَ»

யா அல்லாஹ்!உன்னுடைய இந்த அடிமை உன்னுடைய  பாதையில் ஹிஜ்ரத் செய்தவராக வந்தார். உன்னுடைய பாதையில் ஷஹீதாக கொல்லப்பட்டார். இதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன்.

அறிவிப்பாளர் : ஷத்தாத் பின் அல்ஹாத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : நசாயி, எண் : 1953.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான ஒரு நிகழ்வு. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு பத்ரில் ஆரம்பித்து, கடைசி போர் வரை எல்லாப் போர்களிலும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கலந்து கொண்டார்கள்.

சஹாபாக்கள் உடைய சிறப்பம்சம் என்னவென்றால், அவர்கள் எந்த போரில் கலந்து கொண்டாலும் இந்தப் போரில் நான் ஷஹீதாகி விட வேண்டும். என்ற எண்ணத்தோடுதான் கலந்து கொண்டார்கள். அதன் காரணமாகத்தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களை திருப்திக் கொள்கிறான்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலும் சரி, அவர்களுக்கு பின்னாலும் சரி, ஷஹாதத்தை எதிர்பார்த்து தான் சஹாபாக்கள் போட்டார்கள்.

துன்யாவை எதிர்பார்த்து அல்ல,ஆட்சி அதிகாரத்தை எதிர்பார்த்து அல்ல.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மரணத்திற்குப் பின்னால் வாழும் ஒரு வாய்ப்பையும் அடைகிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதருடைய காலத்தில் நடந்த போரில் கொல்லப்பட முடியவில்லையே! ஷஹாதத்துடைய பாக்கியம் கிடைக்கவில்லையே! என்று மனக்கவலை அவர்களுக்கு இருந்தது.

பிறகு, அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வாழ்க்கை. அதிலும் பல போர்களில் கலந்து கொள்கிறார்கள்,ஆனால், ஷஹாதத் கிடைக்கவில்லை.

அடுத்து கலிஃபாவாக ஆக்கப்பட்டு விடுகிறார்கள். கலீஃபாவை முஃமின்கள் போரில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்க மாட்டார்கள். கமாண்டர்களை, தலைவர்களை, தளபதிகளை தான் அனுப்புவார்கள்.

கலீஃபா என்பவர் இஸ்லாமிய நாட்டில் அந்த தலைநகரில் அவர் கண்டிப்பாக இருந்து முஸ்லிம்களுடைய காரியத்தை நிர்வகிக்க வேண்டும்.

ஆனால், உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மன விருப்பமோ கிலாஃபத்தில் சுகம் காணுவதில் அல்ல. யா அல்லாஹ்! நீ எனக்கு ஷஹாதத்தை கொடு. அதுவும் என்னுடைய மரணம் உன்னுடைய ரசூல் உடைய ஊரிலே இருக்க வேண்டும்.

இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பதிவு செய்கிறார்கள். நல்லவர்கள் உண்மையானவர்கள் துஆச் செய்தால் அந்த துஆவை அல்லாஹ் எப்படி ஏற்றுக் கொள்வான் என்பதற்கு அடையாளமாக இதை எழுதுகிறார்கள்.

இன்று, நாமும்தான் துஆச் செய்கிறோம். அந்த துஆவில் உண்மை இருப்பது கிடையாது. போலித்தனம் இருக்கிறது. நயவஞ்சகத்தனம் இருக்கிறது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இல்லை.

அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். அல்லாஹ் எனக்குக் கொடுப்பான் என்ற ஆழமான நம்பிக்கை இல்லை. உள்ளத்திலிருந்து பிரார்த்தனைகள் வெளியாகுவது இல்லை. நாவின் நுனியிலிருந்து இந்த பிரார்த்தனைகள் வெளியாகின்றன.

எனவே நம்மில் பலருடைய துஆக்கள் அங்கீகரிக்கப்படுவது இல்லை. உமர் ரலியல்லாஹு அன்ஹு இப்படி துஆச் செய்தார்கள்.

«اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ، وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»

யா அல்லாஹ்! எனக்கு ஷஹாதத்தைக் கொடு. யா அல்லாஹ்! என்னுடைய மௌத்தை உன்னுடைய ரசூலுடைய ஊரில் ஆக்கியவை.

நூல் : புகாரி, எண் : 1890.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவர்களுடைய துஆவை ஏற்றுக் கொண்டான்.ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த மிஹ்ராபில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சுபுஹு தொழுகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  மஜூஸி ஒருவனால் அவர்கள் கொல்லப்படுகிறார்கள்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு ஹஜ்ஜுக்குச் சென்றாலும் இந்த துஆவை செய்வார்கள். எங்கு சென்றாலும் இந்த துஆவை செய்வார்கள்.

சஹாபாக்கள் கேட்பார்கள்; நீங்கள் கலீஃபாவாக ஆனதற்கு பிறகு உங்களுக்கு ஷஹாதத்தா?அதுவும் உங்களுக்கு ஷஹாதத் ரசூலுல்லாஹ் உடைய ஊரிலா? எப்படி சாத்தியம்? என்பதாக.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஒன்றை நடத்திக் காட்ட விரும்பினால் அவனுக்கு காரணங்கள் தேவையில்லை. அவன் காரணங்களை அதற்காக ஏற்படுத்தி விடுவான். நாம் நினைக்காத விதத்தில் அல்லாஹு ரப்புல் ஆலமீன் அந்த சூழ்நிலைகளை ஏற்படுத்துவான்.

அன்பிற்குரியவர்களே!ஸஹாபாக்களுடைய ஆண்கள் மட்டுமல்ல இந்த நிலையில் ஹஸாபாக்களுடைய பெண்களுக்கும் சரி, உண்மையான ஈமான் இருந்தது.  அல்லாஹ்வுடைய பாதையில் ஷஹீதாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. உண்மையான தியாகத்தின் மனப்பான்மை இருந்தது.

ஒரு சமயம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்கள்.

அப்போது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எழுகிறார்கள். எழுந்தவுடன் சிரிக்கிறார்கள். அப்போது ரசூலுல்லாஹ்விடம் உம்மு ஹராம் கேட்கிறார்கள். யா ரசூலல்லாஹ்! கனவில் நீங்கள் என்ன பார்த்தீர்கள்? சிரித்தவர்களாக எழுந்திருக்கிறீர்களே என்று.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்ல்; உம்மு ஹிராமே! நான் எனக்குப் பின்னால் என்னுடைய உம்மத் அல்லாஹ்வுடைய பாதையில் கடலில் சென்று போர் புரிவதை பார்த்தேன். கடல் கடந்து சென்று போர் புரிவதை பார்த்தேன்.

அவர்கள் கடலில் எப்படி பயணிக்கிறார்கள் என்றால் மன்னர்கள் தங்களுடைய உயர்ந்த கட்டிலில் அமர்ந்திருப்பதை போன்று நான் அவர்களைப் பார்த்தேன்.

இந்த வார்த்தையை கேட்ட போது உம்மு ஹராம் ரலியல்லாஹு அன்ஹா சொன்னார்கள்; யா ரசூலுல்லாஹ்! சுபச்செய்தி சொல்லப்பட்ட உங்களுக்கு கனவில் காட்டப்பட்ட அந்தப் படையில் நானும் இருக்க வேண்டும் என்று எனக்கு துஆ செய்யுங்கள்.

அல்லாஹு அக்பர். அந்த பெண்மணி, உபாதா இப்னு ஸாமித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மனைவியாக இருந்தார்கள்.

அடுத்து, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் திரும்பவும் தூங்குகிறார்கள். திரும்ப எழுந்திருக்கிறார்கள். திரும்பவும் சிரிக்கிறார்கள். உம்மு ஹராம் கேட்கிறார்கள்; யா ரசூலல்லாஹ்! என்ன நேர்ந்தது? நீங்கள் சிரிக்கிறீர்களே?

இன்னும் எனக்கு ஒரு முஸ்லிம்களுடைய படை காண்பிக்கப்பட்டது. அவர்கள் கடலில் பயணிக்கிறார்கள் மன்னர்கள் கட்டில்களில் அமர்ந்திருப்பது போன்று.

யா ரசூலல்லாஹ் அந்தப் படையிலும் நான் செல்ல வேண்டும் என்று துஆ கேளுங்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்; நீ முந்தைய படையை சேர்ந்தவள் என்பதாக.

இந்த வார்த்தையின் அர்த்தம் அப்போது யாருக்கும் புரியவில்லை.

இரண்டாவது படைக்காக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த பெண்மணிக்கு ஏன் துஆ செய்யவில்லை? முந்தைய படைக்கு துஆ செய்தார்கள்.

உபாதா இப்னு அஸ்ஸாமித் ரலியல்லாஹு அன்ஹு, முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஆட்சியில் துருக்கியாவை கைப்பற்றுவதற்காக அவர்கள் கடல் கடந்து செல்லும் பொழுது அவர்களுடைய மனைவியாரும் அந்த போரில் கலந்து கொள்கிறார்கள்.

எப்படி இவர்களுக்கு ஷஹாதத் கிடைக்கிறது? இவர்கள் கப்பலிலிருந்து கீழே இறங்கி தங்களுடைய குதிரை வாகனத்தில் ஏறும் போது குதிரை மிரண்டுவிடுகிறது. அதிலிருந்து கீழே விழுந்து வாகனத்தால் மிதிபட்டு அங்கேயே மரணிக்கிறார்கள். (3)

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2788.

எப்படிப்பட்ட உண்மையான ஆசை!

இன்று பலர் போர்களைப் பற்றி பேசலாம்.தியாகங்களை பற்றி பேசலாம். ஈமான்,வாழ்க்கையில் இருக்கின்ற அந்த உண்மை,அது தான் அல்லாஹ்விடத்தில் அந்த பாக்கியத்தை அல்லாஹ்வுடைய அருளை நமக்கு தேடித்தரும்.

உபாதா இப்னு ஸாமித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மனைவி அப்படித்தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமிடத்தில் வேண்டினார்கள். அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவர்களுடைய அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டான். அவர்களுடைய அந்த துஆவை ஏற்றுக் கொண்டான்.

பத்ரு போரில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சஹாபாக்களை ஒன்று சேர்க்கிறார்கள். அப்போது உமைர் இப்னு வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு மறைந்து கொள்கிறார்கள்.

அப்போது ஸஅத் இப்னு வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு தங்களது சகோதரரைப் பார்த்து கேடட்கிறார்கள்; என்னுடைய சகோதரரே! நீங்கள் ஏன் மறைந்து கொள்கிறீர்கள்?

அப்போது வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்; எனது சகோதரரே! நான் உன்னை விட வயதில் குறைவானவன். நான் உயரம் குறைவானவனாக இருக்கிறேன். எங்கே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் என்னை பார்த்துவிட்டாள் நீ சிறியவன் என்று கூறி திருப்பி அனுப்பி விடுவார்களோ என்று நான் பயப்படுகிறேன்.

ஆனால், எனக்கோ இந்தப் போரில் நான் ஷஹீத் ஆக வேண்டும் என்று ஆசை உள்ளது. கண்ணியத்திற்குரியவர்களே, பத்ரு போரில் கொல்லப்பட்ட ஸஹாபாக்களில் உமைர் இப்னு அபீ வக்காஸ் அவர்களும் ஒருவர்.

இதுபோன்று அபு கைசமா ரலியல்லாஹு அன்ஹு தங்களுடைய மகனாரோடு ஒரு ஒப்பந்தம் செய்கிறார்கள். மகனே! நம்முடைய குடும்ப தேவையும் இருக்கிறது.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ருக்காக செல்கிறார்கள். எதுவும் நடக்கலாம், போரும் நடக்கலாம், அங்கே வியாபாரக் கூட்டத்தை கைப்பற்றவும் செய்யலாம். நாம் என்ன செய்வது?

அப்போது மகனார் சொல்கிறார்; என்னுடைய தந்தையே! இங்கே உங்களுக்கும் ஆசை அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாக வேண்டும் என்று. எனக்கும் ஆசை அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாக வேண்டும் என்று.

கடைசியில் அங்கே சீட்டு எழுதி போடுகிறார்கள். போட்டால் மகனாருடைய பெயர் வருகிறது. அப்போது தந்தை சொல்கிறார்;

என் அன்பிற்குரிய மகனே! இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்து விடு., மகனார் சொல்கிறார்கள்; என் தந்தையே! இங்கே போட்டி பொருளுக்காக அல்ல. இங்கே போட்டி துன்யாவுக்காக அல்ல. சொர்க்கத்திற்காக உள்ள போட்டி ஆயிற்றே. சொர்க்கத்திற்கு தவிர வேறு ஒன்றாக இருந்திருந்தால் இந்த வாய்ப்பை உங்களுக்கு கொடுத்திருப்பேன்.

ஆனால் இது சொர்க்கத்திற்காக உள்ள போட்டி, இதை நான் உங்களுக்கு கொடுக்க மாட்டேன் என்று. சொல்லி விடுகிறார்கள்.

அபூகைஸமாவுடைய இந்த மகனாரும், பத்ருப் போரில் கொல்லப்படுகிறார்கள். எத்தனை வரலாறுகளை நாம் பார்க்கிறோம். இத்தனை உண்மை நிகழ்வுகளை பார்க்கிறோம்.

இந்த தீனுக்காக அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக இதை பின்பற்றுவதிலும் சரி, அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக தியாகங்களை அர்ப்பணிப்புகளை செய்வதிலும் சரி, சஹாபாக்களுடைய உண்மையான தியாகங்கள்.

எதை பேசினார்களோ எதை அவர்கள் தங்களுடைய கொள்கையாக கொண்டார்களோ அதற்காக அவர்கள் உண்மையை நிலை நிறுத்தினார்கள். உண்மையான வாக்குகளாக அவர்களுடைய பேச்சுகள் இருந்தன. உண்மையான சொல்களாக அவர்களுடைய பிரார்த்தனைகள் இருந்தன.

அல்லாஹ் அவர்களை அங்கீகரித்தான். அவர்களைக் கொண்டு இந்த தீனை அல்லாஹ் முழுமை படுத்தினான். அவர்களேக் கொண்டே இஸ்லாமை அல்லாஹ் கண்ணியப் படுத்தினான். அவர்களைக் கொண்டே முஸ்லிம்களை அல்லாஹ் கண்ணியப் படுத்தினான்.

ஆனால், நம்முடைய இன்றைய வாழ்க்கை எப்படி ஆகிவிட்டது? இறை வழிபாடுகளில் போலித்தனம், நம்பிக்கையில் போலித்தனம், குணங்களில் போலித்தனம் என்று எல்லா வகையிலும் சரி, ஒரு முஸ்லிமுடைய இஸ்லாமிய பற்று, ஒரு முஃமினுடைய இறை நம்பிக்கை என அனைத்தும் போலித்தனம் வெளிப்படுவதை பார்க்கிறோம்.

மக்களுக்குக் காட்டுவதற்காக ஒன்று. தங்களுடைய தனி வாழ்க்கையில் ஒன்று. சமூகத்தில் ஒன்று என்று நயவஞ்சகமும் இந்த பொய்த்தனமும் பரவி இருப்பதை பார்க்கிறோம்.

எத்தனை முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், எத்தனை உழைப்புகள் செய்யப்பட்டாலும், எதுவரை அல்லாஹ்வின் நம்பிக்கையில் நம்முடைய மார்க்கத்தில் நம்முடைய சொல்லில் பேச்சில் நாம் உண்மையாளர்களாக மாற மாட்டோமோ அதுவரை அல்லாஹ்வுடைய உதவியை பார்க்க முடியாது.

காரணம், உண்மையான முஃமின்களுக்கு தான் அல்லாஹ் உதவியை கடமையாக்கி இருக்கிறான்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் என்னையும் உங்களையும் அந்த உண்மையான முஃமின்களுடன் ஆக்கியருள்வானாக! அந்த ஸஹாபாக்களுடைய கூட்டத்தில் அல்லாஹ் சேர்த்தருள்வானாக! அவர்கள் செய்த நல்ல தியாகங்களை போன்று, நம்மிடத்திலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தியாகங்களை ஏற்றுக் கொள்வானாக! வாங்கிக் கொள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الخُزَاعِيُّ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ حُمَيْدٍ، قَالَ: سَأَلْتُ أَنَسًا قَالَ: ح وحَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، حَدَّثَنَا زِيَادٌ، قَالَ: حَدَّثَنِي حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: غَابَ عَمِّي أَنَسُ بْنُ النَّضْرِ عَنْ قِتَالِ بَدْرٍ، فَقَالَ: «يَا رَسُولَ اللَّهِ غِبْتُ عَنْ أَوَّلِ قِتَالٍ قَاتَلْتَ المُشْرِكِينَ، لَئِنِ اللَّهُ أَشْهَدَنِي قِتَالَ المُشْرِكِينَ لَيَرَيَنَّ اللَّهُ مَا أَصْنَعُ»، فَلَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ، وَانْكَشَفَ المُسْلِمُونَ، قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعْتَذِرُ إِلَيْكَ مِمَّا صَنَعَ هَؤُلاَءِ - يَعْنِي أَصْحَابَهُ - وَأَبْرَأُ إِلَيْكَ مِمَّا صَنَعَ هَؤُلاَءِ، - يَعْنِي المُشْرِكِينَ - ثُمَّ تَقَدَّمَ»، فَاسْتَقْبَلَهُ سَعْدُ بْنُ مُعَاذٍ، فَقَالَ: «يَا سَعْدُ بْنَ مُعَاذٍ، الجَنَّةَ وَرَبِّ النَّضْرِ إِنِّي أَجِدُ رِيحَهَا مِنْ دُونِ أُحُدٍ»، قَالَ سَعْدٌ: فَمَا اسْتَطَعْتُ يَا رَسُولَ اللَّهِ مَا صَنَعَ، قَالَ أَنَسٌ: فَوَجَدْنَا بِهِ بِضْعًا وَثَمَانِينَ ضَرْبَةً بِالسَّيْفِ أَوْ طَعْنَةً بِرُمْحٍ، أَوْ رَمْيَةً بِسَهْمٍ وَوَجَدْنَاهُ قَدْ قُتِلَ وَقَدْ مَثَّلَ بِهِ المُشْرِكُونَ، فَمَا عَرَفَهُ أَحَدٌ إِلَّا أُخْتُهُ بِبَنَانِهِ قَالَ أَنَسٌ: " كُنَّا نُرَى أَوْ نَظُنُّ أَنَّ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِيهِ وَفِي أَشْبَاهِهِ: {مِنَ المُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ} [الأحزاب: 23] إِلَى آخِرِ الآيَةِ " (صحيح البخاري- 2805)

குறிப்பு 2)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنِي حُمَيْدٌ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ: أَنَّ الرُّبَيِّعَ وَهِيَ ابْنَةُ النَّضْرِ كَسَرَتْ ثَنِيَّةَ جَارِيَةٍ، فَطَلَبُوا الأَرْشَ، وَطَلَبُوا العَفْوَ، فَأَبَوْا، فَأَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَهُمْ بِالقِصَاصِ، فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ: أَتُكْسَرُ ثَنِيَّةُ الرُّبَيِّعِ يَا رَسُولَ اللَّهِ، لاَ وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ، لاَ تُكْسَرُ ثَنِيَّتُهَا، فَقَالَ: «يَا أَنَسُ كِتَابُ اللَّهِ القِصَاصُ»، فَرَضِيَ القَوْمُ وَعَفَوْا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ» زَادَ الفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، فَرَضِيَ القَوْمُ وَقَبِلُوا الأَرْشَ (صحيح البخاري- 2703)

குறிப்பு 3)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ فَتُطْعِمُهُ - وَكَانَتْ أُمُّ حَرَامٍ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ - فَدَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَطْعَمَتْهُ وَجَعَلَتْ تَفْلِي رَأْسَهُ، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ، قَالَتْ: فَقُلْتُ: وَمَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: " نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَيَّ غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ، يَرْكَبُونَ ثَبَجَ هَذَا البَحْرِ مُلُوكًا عَلَى الأَسِرَّةِ، أَوْ: مِثْلَ المُلُوكِ عَلَى الأَسِرَّةِ "، شَكَّ إِسْحَاقُ، قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهمْ، فَدَعَا لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ وَضَعَ رَأْسَهُ، ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ، فَقُلْتُ: وَمَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَيَّ غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ» - كَمَا قَالَ فِي الأَوَّلِ - قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، قَالَ: «أَنْتِ مِنَ الأَوَّلِينَ»، فَرَكِبَتِ البَحْرَ فِي زَمَانِ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، فَصُرِعَتْ عَنْ دَابَّتِهَا حِينَ خَرَجَتْ مِنَ البَحْرِ، فَهَلَكَتْ (صحيح البخاري- 2788)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/