HOME      Khutba      நபியின் சிபாரிசுக்கு தகுதியானவர் யார் ? | Tamil Bayan - 155   
 

நபியின் சிபாரிசுக்கு தகுதியானவர் யார் ? | Tamil Bayan - 155

           

நபியின் சிபாரிசுக்கு தகுதியானவர் யார் ? | Tamil Bayan - 155


நபியின் சிபாரிசுக்கு தகுதியானவர் யார்?

ஜுமுஆ குத்பா தலைப்பு : நபியின் சிபாரிசுக்கு தகுதியானவர் யார்?

வரிசை : 155

இடம் : எஸ்.எம்.ஜெ.பிளாஸா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 19-11-2010 | 13-12-1431

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தை கடைப்பிடிக்குமாறு, எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக,அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவுபடுத்தியவனாக தொடங்குகிறேன்.

கேட்பவர்களை விட சொல்பவர்களுக்கு இறையச்சத்தையும், இஸ்லாமிய மார்க்க அடிப்படைகள் கடமைகளின் படியும் வழி நடப்பதற்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டுமென்றும் வேண்டியவனாக தொடங்குகிறேன்.

இன்று, ஒரு மிக முக்கியமான செய்தியை பற்றி நாம் பேச இருக்கின்றோம். அல்லாஹு தஆலா எந்த ஒரு செய்தியை முன்னிட்டு வானங்கள், பூமிகளை படைத்தானோ, மனிதனை, ஜின்னை படைத்தானோ, எந்த செய்திக்காக அல்லாஹு தஆலா தூதர்களை அனுப்பினானோ, அவர்கள் மீது வேதங்களை இறக்கினானோ,

எந்த செய்தியை நிலைநிறுத்துவதற்காக, அந்த செய்தியை ஏற்றுக்கொண்டவர்களின் பலருடைய ரத்தங்கள் இந்த பூமியில் சிந்தபட்டனவோ, எந்த செய்தியை ஏற்காதவர்களுடைய ரத்தங்கள் இந்த பூமியில் ஹலாலாக, அவற்றை ஓட்டுவது அனுமதிக்கப்பட்ட ஒன்றாக ஆக்கப்பட்டதோ அந்த செய்தியை பற்றி.

எந்த செய்தியை நாம் ஏற்றுக் கொள்ளாதவரை அல்லாஹ்வின் அருளையோ, பொருத்தத்தையோ, சொர்க்கத்தையோ அடைய முடியாதோ, அந்த செய்தியைப் பற்றி நம்மில் எத்தனை பேர் அதற்குரிய சரியான விளக்கத்தோடு தெரிந்து வைத்திருக்கின்றோம்.

முதலில் அந்த செய்தியை என்ன என்று தெரிந்து கொள்வோமாக!

நான், முன்னோர் பின்னோர் உடைய ஞானமெல்லாம் கொடுக்கப்பட்டு இருக்கிறேன் என்று கூறிய முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ

நபியே! லா இலாஹ இல்லல்லாஹுவை நீர் அறிந்துகொள்வீராக! அவற்றைப் புரிந்து கொள்வீராக! அவற்றை சிந்திப்பீராக! (அல்குர்ஆன் 47:17)

எத்தகைய ஒரு கட்டளையை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கிறான்.

அவர்களைத் தொடர்ந்து, அவர்களுடைய உம்மத்தாகிய நம்மீது இந்த கட்டளை எவ்வளவு ஒரு கடுமையானது,ஆழமானது, அழுத்தமானது என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும்..

இன்றைய அவசரகால உலக வாழ்க்கையில் பலருக்கு துன்யாவை தவிர்த்து வேற ஒன்றை சிந்திப்பதற்கு நேரமில்லை என்று பலர் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

மறுமை பற்றி சிந்திப்பதற்கோ,சொர்க்கம் நரகத்தைப் பற்றி சிந்திப்பதற்கோ, இவற்றுக்கெல்லாம் மேலாக படைத்த ரப்பை பற்றி சிந்திப்பதற்கு,படைத்த ரப்பை பற்றி புரிவதற்கு, படைத்த ரப்புக்கும் தனக்கும் உள்ள தொடர்பை பற்றி சிந்திப்பதற்கு,அந்தத் தொடர்பு வலுவாக இருக்கிறதா?பலவீனமடைந்து இருக்கிறதா?

இன்று, நான் இறந்தால், அந்த ரப்பின் மீது எனக்கு உள்ள ஈமான் முழுமையாக இருக்கிறதென்று என்னுடைய பதிவேட்டில் எழுதப்பட்டு அந்த பதிவேடு மூடப்படுமா?அல்லது இவன் பலவீனமானவன் அல்லது நயவஞ்சகன் அல்லது போலியானவன் என்று அந்தப் பதிவேட்டில் எழுதப்பட்டு மூடப்படுமா?

என்ற சிந்தனையெல்லாம் நமக்கு எங்கே இருக்கின்றது? நம்மில் எத்தனை பேருக்கு அந்த சிந்தனை இருக்கின்றது.

இந்த சிந்தனையற்ற நிலையிலேயே காலை,மாலை,பகல்,இரவு என்று அப்படியே உருண்டோடி கொண்டே இருக்கின்றன. இறுதியில் மனிதன் மரணத்தையும் சந்தித்து விடுகிறான்.

இந்த சிந்தனை நபிமார்களுக்கு அவர்களுடைய தூக்கத்தைப் பறித்து விட்டது. அந்த நபிமார்களை பின்பற்றிய தோழர்கள்,நல்லவர்கள் அவர்களுடைய தூக்கத்தை பறித்து விட்டது இந்த சிந்தனை.

இதைத்தான் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான் :

كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ

அவர்கள் இரவில் குறைவாக தூங்குவார்கள் என்று. (அல்குர்ஆன் 51:17)

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ (190) الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ (191) رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

இவர்கள் நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதை ஆராய்ச்சி செய்வார்கள். மேலும், ‘‘எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணாக படைக்கவில்லை. நீ மிகத்தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக!

எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ எவர்களை (நரக) நெருப்பில் நுழைத்து விட்டாயோ அவர்களை நிச்சயமாக நீ இழிவுபடுத்திவிட்டாய். (அத்தகைய) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவரும்) இல்லை. (அல்குர்ஆன் 3:190-192)

வானம் பூமிகளை பற்றி சிந்தித்து, படைத்த இறைவனின் வல்லமையை புரிந்து, அவனுக்கு நாம் இழைத்த குற்றங்களை நினைத்து வருந்தி, இந்த ஈமானிய சிந்தனையில் கழித்துவிட்டு, இந்த இறை தொடர்பை பலப்படுத்துவதில், வலுப்படுத்துவதில், இதை பசுமைப் படுத்துவதில் கழித்துவிட்டு மிக குறைவாக ஓய்வு எடுப்பார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:இவர்கள் யார்? மறுமையை அறியாத மற்ற மனிதர்களை போல இவர்களால் தூங்க முடியாது. மறுமையை அறியாதவர்கள், அல்லாஹ்வை அறியாதவர்கள், அல்லாஹ்வின் வல்லமையை புரியாத மக்களைப் போன்று இவர்களால் ஓய்வெடுக்க முடியாது.

ஏன்? இவர்களுடைய உள்ளத்தில் தங்கள் ஈமானைப் பற்றி கொண்ட பயம், அல்லாஹ்வை பற்றி உள்ள பயம், அல்லாஹ்வின் வல்லமையை குறித்து அவர்களுடைய உள்ளத்தில் ஏற்பட்ட பயங்கரமான ஒரு நடுக்கம்.

சற்று சிந்தித்துப் பாருங்கள்! இன்னும் சில மணி நேரங்களில் ஒரு பெரிய பூகம்பம் நடக்கப்போகிறது என்று அறிந்தால், தூக்கம் வருமா? இன்னும் சில மணி நேரங்களில் பெரிய சுனாமி ஒன்று தாக்கப் போகிறது என்பதை அறிந்தால் தூக்கம் வருமா?

இன்னும் சில மணி நேரங்களில் பெரிய ஒரு புயல் சூறாவளி காற்று தாக்க இருக்கிறது என்பதை அறிந்தால் தூக்கம் வருமா? ஒரு பெரிய அடைமழை பொழிந்து இந்த பூமியே வெள்ளக்காடாக மாறப்போகிறது என்பதை அறிந்தால் தூக்கம் வருமா?

அல்லது பயங்கரமான ஒரு நெருப்பு பற்றி எரிகிறது,இன்னும் சில மணி நேரங்களில் நாம் இருக்கும் இடத்தையும் தனக்கு இரையாக்கிக் கொள்ளும் என்பதை தெரிந்தால் தூக்கம் வருமா?

அல்லது ஒரு பெரிய ராணுவம் தாக்கி கொண்டு வருகிறது,இன்னும் சில மணி நேரங்களில் நாம் இருக்கும் இடத்தையும் அடைந்துவிடுவார்கள்,நம்மையெல்லாம் கொன்று குவித்து விடுவார்கள் என்பதை அறிந்தால் தூக்கம் வருமா?

இப்படி உலக ஆபத்துகளை எல்லாம் அறிந்து கொண்ட மக்கள், உலகத் துன்பங்களையெல்லாம், திடுக்கங்களையெல்லாம், துயரங்களையெல்லாம் புரிந்து கொண்டவர்கள் தூங்குவதில்லை.

ஆனால்,ஒரு கூட்டம் சொல்கிறார்கள்;நாங்கள் மறுமையை புரிந்து கொண்டோம் என்று கூறி விட்டு தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் :

يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ (1) يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயப்படுங்கள். நிச்சயமாக விசாரணை நாளின் அதிர்ச்சி மிக்க கடுமையானது.

அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும், தான் பாலூட்டும் குழந்தையை மறந்துவிடுவதையும் ஒவ்வொரு கர்ப்பினிப் பெண்ணிண் கருவும் சிதைந்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். (நபியே!) மனிதர்களை மதி மயங்கியவர்களாக நீர் காண்பீர். அவர்கள் (மதியிழக்கும் காரணம்) போதையினால் அல்ல. அல்லாஹ்வுடைய வேதனை மிக்க கடினமானது. (அதைக் கண்டு திடுக்கிட்டு அவர்கள் மதியிழந்து விடுவார்கள்.) (அல்குர்ஆன் 22 : 1,2)

மக்கள் இரண்டு கூறாகப் பிரிக்கப்படுகின்றன அந்த நாளின் திடுக்கம்.

செல்வந்தர்கள்ஏழைகள்,அழகானவர்கள் அழகற்றவர்கள்,அரபுகள் அஜமிகள்,வெள்ளையர்கள் கருப்பர்கள்,சுகமானவர்கள்நோயுற்றவர்கள் என்று பிரிக்கப் படமாட்டார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் :

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ (13) وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ

ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள், இன்பம் நிறைந்த சொர்க்கத்தில் இருப்பார்கள். நிச்சயமாகத் தீயவர்கள் நரகத்தில்தான் இருப்பார்கள். (அல்குர்ஆன் 82:13,14)

இரண்டு கூட்டங்கள் தான். நல்லவர்கள் தனியாக, தீயவர்கள் தனியாக பிரிக்கப்படுவார்கள். அந்த பிரிக்கப்படும் நாளின் திடுக்கத்தை, நம்பிக்கை கொண்டோம்.மறுமையில் நம் அமல்கள் எல்லாம் நிறுக்கப்படும்.

அல்லாஹ் கூறுகிறான் :

فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ (6) فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ (7) وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ (8) فَأُمُّهُ هَاوِيَةٌ (9) وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ (10) نَارٌ حَامِيَةٌ

எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ, அவன் தங்குமிடம் ஹாவியாதான். அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா? (அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும். (அல்குர்ஆன் 101 : 7-10)

இந்த செய்திகளை கேட்டதற்குப் பிறகு, இந்த செய்திகளை நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதற்கு பிறகு, நாளை மறுமையில் அல்லாஹ் நரகத்தின் முதுகின் மீது ஒரு பாலத்தை அமைப்பான்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَإِنْ مِنْكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا

அதைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உமது இறைவனிடம் முடிவு செய்யப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும்.(அல்குர்ஆன் 19 : 71)

அந்த பாலத்தின் மீது எல்லோரும் சென்றுதான் ஆகவேண்டும். அந்தப் பாலத்தைச் சுற்றி கொக்கிகள் இருக்கும், சங்கிலிகள் இருக்கும், அவற்றில் யாரைக் கவ்வ வேண்டுமென்று பெயர் எழுதப்பட்டிருக்கும். கவ்வி நரகத்தில் தள்ளிக் கொண்டிருக்கும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

أَدَقُّ مِنْ الشَّعْرَةِ وَأَحَدُّ مِنْ السَّيْفِ

நம் தலைமுடியைவிட மென்மையாக இருக்கும்.அவ்வளவு மென்மையாக இருக்கும்.  வாளை விட கூர்மையாக இருக்கும். அந்தப் பாலத்தில் கடக்க வேண்டும்.

அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 269.

யார் கடப்பார்கள்? எப்படி கடப்பார்கள்? என்ற செய்திகளை எல்லாம் தெரிந்தற்கு பிறகு, அப்படி ஒரு நாள் வரும், அந்த நாளிலே நமக்கும் அந்த நிலை ஏற்படும், என்பதையெல்லாம் நம்பிக்கை கொண்டதற்கு பிறகு, ஒரு கூட்டம் தூங்குகிறது என்றால், அப்படி சொல்பவர்கள் தங்களைப் பற்றிய நிலையை சிந்திக்காமல் அலட்சியம் செய்வார்கள் என்றால், இவர்கள் செய்தியை அறிந்தார்களா?

என்றால், நம்முடைய நிலைமைகளை பார்க்கும்போது, அந்த செய்திகளை எல்லாம்  நாம் கேட்காதவர்களைப் போன்று இருப்பதை பார்க்கிறோம்.

ஏன்? அந்த செய்திகளை கேட்டவர்களுக்கு என்று அல்லாஹ் என்ன அடையாளங்களைச் சொன்னானோ. அந்த அடையாளங்கள் வாழ்க்கையில் காணப்படுவதில்லை.

إِنَّمَا يُؤْمِنُ بِآيَاتِنَا الَّذِينَ إِذَا ذُكِّرُوا بِهَا خَرُّوا سُجَّدًا وَسَبَّحُوا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ

நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், எவர்கள் (பூமியில்) சிரம் பணிந்து தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதி செய்கிறார்களோ அவர்கள்தான் நம் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள். அவர்கள் கர்வம்கொண்டு பெருமையடிக்கவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 32: 15)

வசனத்தின் கருத்து : அல்லாஹ் கூறுகிறான், நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொண்ட உண்மையான முஃமின்கள் யார் என்பதற்குவிளக்கம் சொல்கிறான்.

என் அத்தாட்சிகளை, என் வசனங்களை, என்னுடைய ஆதாரங்களை நம்பக் கூடியவர்கள் யார் தெரியுமா? அவர்களுக்கு நம் வசனங்களை கொண்டு உபதேசிக்கப்பட்டால்,

அல்லாஹ் இப்படி அவன் புத்தகத்தில் கூறுகிறான், அல்லாஹ்வின் தூதர் சொல்கிறார், என்று ஒரு செய்தி அவர்களுக்கு சொல்லப்பட்டால், அந்த ரப்புக்கு கீழ்படியும் விதமாக, அந்த ரப்புக்கு பணியும் விதமாக, அந்த ரப்புடைய கட்டளையை ஏற்று நடக்கும் விதமாக அவர்கள் அப்படியே சுஜூதில் விழுந்து விடுவார்கள்.

தங்கள் பெருமை, அந்தஸ்து, மரியாதை, கண்ணியம், பணம், கல்வி அனைத்தையும் காலுக்கு கீழே போட்டு புதைத்துவிடுவார்கள். எங்கள் ரப்புடைய கட்டளை தலைசாய்த்து விட்டோம்.

குர்ஆன் இப்படி சொல்கிறது என்று கூறப்பட்டால் மமதை கொள்ள மாட்டார்கள், திமிரு காட்டமாட்டார்கள்.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உனக்கு இப்படி சொல்லி இருக்கிறார்கள் என்று உபதேசிக்கப்பட்டால், பார்க்கலாம், பிறகு பார்க்கலாம், வயோதிகமானால் பார்க்கலாம், இப்போதுதான் வயோதிகம் ஆரம்பித்திருக்கிறது இன்னும் சில ஆண்டுகள், காலங்கள் கழிந்தால் பார்க்கலாம்.

அல்லது இப்போது நாம் இருக்கிற நிலைமைக்கு இது ஒத்துவராது, இந்த காலத்தில் எல்லாம் இப்படி நடக்க முடியுமா?

இவர்களா அல்லாஹ்வையும், ரஸூலையும் ஈமான் கொண்டவர்கள்?கிடையாது.

அல்லாஹ் கூறிவிட்டானா, நபி சொல்லி விட்டார்களா, அப்படியே பணிந்து விடுவார்கள். எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள்.

தங்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள். அல்லாஹ் கூறிவிட்டானா, அது நிச்சயம் சத்தியம் இருக்கும். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொல்லி விட்டார்களா, அதைத்தாண்டி ஒரு உண்மை இருக்காது.

இன்று என்ன நடக்கிறது? ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினாலும், நம் அறிவை மிஞ்சி ஒரு உண்மை இருக்காது என்று ஒரு கூட்டம்.

இன்னொரு கூட்டம், ரஸூலுல்லாஹ் சொன்னதைவிட என்னுடைய ஷேக், என்னுடைய இமாம், என்னுடைய ஊர் ஜமாத் அதை நான் எப்படி மீற முடியும் என்று கூறக்கூடிய ஒரு கூட்டம்.

அல்லாஹ் கூறுகிறான்: பணிந்து விடுவார்கள். ஒரு சட்டம் குர்ஆனிலிருந்து, ஹதீஸிலிருந்து அவர்களுக்கு தெரியவந்தால், அந்த நம்பிக்கையாளர்கள் அதை செயல்படுத்துவதை தவிர, அதை பின்பற்றுவதைத் தவிர அவர்கள் வேறு வழியை பார்க்க மாட்டார்கள்.

ஸஹாபாக்களைப் பற்றி அல்லாஹ் இப்படித்தான் சொல்கிறான்.ரஸூலுல்லாஹ் உடைய வாயிலிருந்து ஒரு வார்த்தை வெளியாகி விட்டால், அதைப் பின்பற்றுவதில், அதை செயல்படுத்துவதில்,அதை நம்பிக்கை கொள்வதில், அதை பரப்புவதில் முனைப்பு காட்டுவார்கள்; தீவிரம் காட்டுவார்கள். அதைத் தவிர ஒரு மாற்று வழியைத் தேட மாட்டார்கள்.

இன்று, நம்மில் பலரின் நிலைப்பாடு என்ன? எப்படி எல்லாம் ஹதீஸுக்கு மாற்றம் செய்யலாம், ஹதீஸ் என்று தெரிந்தாலும் எப்படி எல்லாம் அதை மறுக்கலாம், எப்படி எல்லாம் அதைத் தட்டிக் கழிக்கலாம், என்னென்ன காரணங்களை எல்லாம் கூறி புறக்கணிக்கலாம்.

காரணம், இவர்கள் இப்லீஸ் உடைய கூட்டாளியாக மாறிவிட்டார்கள். ஷைத்தானோடு அவர்கள் தோழமை வைத்துக் கொண்டார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் :

إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

எனினும், மெய்யாகவே நம்பிக்கை கொண்டவர்களோ அவர்களுக்கு இடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றித்) தீர்ப்பு பெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வரும்படி அழைக்கப்பட்டால், அதற்கவர்கள் ‘‘நாங்கள் செவி சாய்த்தோம்; நாங்கள் கீழ்ப்படிந்தோம்'' என்று கூறுவதைத் தவிர, வேறு ஒன்றும் கூறுவதில்லை. இவர்கள்தான் முற்றிலும் வெற்றி அடைந்தவர்கள் ஆவர். (அல்குர்ஆன் 24:51)

இன்று என்ன? இஸ்ரவேலர்கள் தங்கள் தூதருக்கு கூறியதைப் போன்று “கேட்போம் மாறு செய்வோம்”.

இந்த  ஜும்ஆ மஜ்லிஸை விட்டு வெளியேறிய உடனே மாறு செய்பவர்கள் எத்தனை பேர். எத்தனை இடங்களில் மார்க்க அறிஞர்கள் உபதேசம் செய்கிறார்கள். கேட்டு வெளியில் செல்லும்போதே மாறு செய்து செல்பவர்கள் எத்தனை பேர். இவர்கள் இஸ்ரவேலர்களை விட மோசமானவர்கள்.

அந்த அடையாளங்களை தான் அல்லாஹ் சொல்கிறான். ‘

تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ

அவர்கள் (நித்திரையில் ஆழ்ந்திருக்கும்போது) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி, தங்கள் இறைவனிடம் (அவனது அருளை) ஆசை வைத்தும், (அவனது தண்டனையை) பயந்தும் பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள். (அல்குர்ஆன் 32:16)

வசந்தின் கருத்து : அந்த செய்தியை நம்பி விட்டால் இரவில் படுக்கையில் துயில் கொள்ளாது. அந்த படுக்கையிலிருந்து அவர்களுடைய  விலாக்கள் எட்டி தூரமாக ஆகிவிடும்.

எவ்வளவு அழகான வசனத்தை அல்லாஹ் சொல்கிறான். எவ்வளவு ஆழமாக சொல்கிறான்.

இன்று, பெயர் தாங்கி முஸ்லிம்களை போன்றா? இரவில் சீரியல்கள் என்றால், இரவில் விளையாட்டுகள் என்றால் விழித்து பார்க்கிறது ஒரு கூட்டம் என்று கேள்விபடுகிறோம்.

நல்ல சந்தோஷமான நாட்களை எப்படி கழிப்பது, எப்படி கொண்டாடுவது என்று கூட முஸ்லிம் சமுதாயத்தில் பலருக்கு தெரிவது கிடையாது.

‘இன்று பெருநாள், வாங்க பீச்சுக்கு போய் சுத்திட்டு வருவோம்’ இப்படி ஒரு கூட்டம். ‘இன்று பெருநாள், வாங்க சினிமாக்கு போய் பார்த்துட்டு வருவோம்’ என்று சொல்கிற  ஒரு கூட்டம். ‘இன்று பெருநாள், வாங்க ரெஸ்டாரண்ட் போய் சாப்பிட்டு விட்டு வருவோம்’ என்று சொல்கிற ஒரு கூட்டம்.

இவர்களையெல்லாம் மறுமையில் நம்பிக்கை கொண்ட முஃமின் என்று அல்லாஹ் ஏற்றுக்கொள்வானா?

அல்லாஹ் சொல்கிறான் :

அவர்களுடைய விலாக்கள் அவர்களுடைய படுக்கையில் இருந்து தூரமாக இருக்கும். மேலும் அவர்கள், தங்கள் இறைவனை பயத்தோடும் பாசத்தோடும் அழைத்துக் கொண்டிருப்பார்கள்.

ஒருபக்கம், யா அல்லாஹ்! எங்களை தண்டித்து விடாதே! என்று கூறி  இன்னொருபக்கம், யா அல்லாஹ்! எங்களுக்கு சொர்க்கத்தை கொடு! என்று ஆதரவு வைத்துக் கொண்டிருப்பார்கள்.

ஏன் அந்த செய்தி ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ இவருடைய உள்ளத்தில் குடிகொண்டு விட்டது. இவர்களுடைய கல்பில் குடிகொண்டு விட்டது அந்த செய்தி.

யாருடைய உள்ளத்தில் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’குடி கொள்ளவில்லையோ, அவர்களுக்கு இதெல்லாம் புரியாது. அவர்களுக்கு இந்த செய்திகள் எல்லாம் இந்த உண்மைகள் எல்லாம் விளங்காது.

அழிவை எதிர்நோக்கி கொண்டிருக்கின்ற ஒரு சமுதாயத்தில், யாரெல்லாம் குடித்துவிட்டு கும்மாளம் அடித்து விட்டு, தன்னுடைய சுகமான மெத்தையில் தூங்கிக்கொண்டு இருக்கின்ற ஒரு கள்வனை போல, ஒரு கயவனை போல,ஒரு தீயவனை போல அவர்கள் இருப்பார்கள்.

ஆனால், அந்த நல்லவர்கள், இவர்களுடைய உள்ளத்தில் ஏற்பட்ட அந்த திடுக்கம், அந்த பயம் இவர்களுடைய தூக்கத்தைப் போக்கிவிட்டது. இறுதியாக அசந்து இனி தூங்குவதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு வரும்போது அப்படியே சாய்வார்கள்.

இன்று நம்முடைய நிலைப்பாடு என்ன? தூங்குவதற்காகவே தனியா ஒரு அரேஞ்மண்ட், சுகமான மெத்தை, சுகமான ஏசி, எல்லா ஏற்பாடுகளையும் தூங்குவதற்காக செய்து கொண்டு தூங்கச்செல்கிறோம்.

மறுமையை மறந்தவன்,ஆஹிரத்தை மறந்தவன், லாயிலாஹ இல்லல்லாஹ்வை பற்றி சிந்திக்காதவன் இவனுக்கு என்ன தெரியும் இந்த துனியாவுடைய இன்பத்தைத் தவிர, இவர்களைப் பற்றி அல்லவா அல்லாஹ் சொல்கிறான்.

وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الْأَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَهُمْ

எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள், மிருகங்கள் தின்பதைப்போல் தின்று கொண்டும், (மிருகங்களைப் போல்) சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்கிறார்கள். (எனினும்,) அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். (அல்குர்ஆன் 47:12)

அல்லாஹ் இந்த கேவலத்தில் இருந்து உங்களையும், என்னையும் பாதுகாப்பானாக! எப்படி சொல்கின்றான்? ஆடு மாடு கால்நடைகள் இருக்கும் அல்லவா, இந்த கால்நடைகளைப் போன்று இவர்கள் சாப்பிடவேண்டும், சுகம் அனுபவிக்க வேண்டும் என்றுதான் இருக்கிறார்கள்.மறுமையை மறந்து இருக்கிறார்கள்.

அல்லாஹ் எப்படி ஒப்பிடுகிறான் பாருங்கள். சாப்பாடு, தூக்கம், வசதி என்று தேட கூடியவர்களை கால்நடைகளைப் போன்று என்று அல்லாஹ் சொல்கிறான்.

இந்த கால்நடைகள் சாப்பிடுவது போன்று, இந்த கால்நடைகள் தூங்குவது போன்று, சுகம் அனுபவிப்பது போன்று இவர்கள் இந்த துனியாவில் உணவை சிந்திக்கிறார்களே! சுகத்தை சிந்திக்கிறார்களே! மறுமையை மறந்து விட்டார்களே!

அல்லாஹ் சொல்கிறான் :

وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ

அந்த மறுமையை  நினைத்த காரணத்தால், அந்த மறுமையின் வீடுதான் நிலையான வீடு என்று தெரிந்த காரணத்தால் தங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதில் தயக்கம் காட்டமாட்டார்கள். (அல்குர்ஆன் 32:16)

இந்த ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’உடைய செய்தி புரியாதவர்களாக இருக்கிறோம். அல்லாஹ் நமக்கு புரிய வைப்பானாக!

அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வருகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் உங்களிடத்தில் ஒன்றைக் கேட்க வேண்டும்.

(ஒன்றை கவனித்துக் கொள்ளுங்கள்;சஹாபாக்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் தூதரிடத்தில் துனியாவை பற்றி கேட்டது கிடையாது. இந்த உலக வாழ்க்கையின் வசதிகளைப் பற்றி கேட்டது கிடையாது. இன்று நம்மில் பலர் இருப்பதுபோன்று.

இன்று,முஸ்லிம்களுடைய கடைகள் என்றால், அதற்கு அடையாளம் என்ன தெரியுமா? அங்கு தாயத்துக்கள் தகடுகள் மாற்றப் பட்டிருக்க வேண்டும். இவைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன?

அதற்கென்று ஆலிம்கள், அதற்கென்று ஹஜரத்மாறுகள், மவ்லவிமாறுகள். அங்கே சென்று,வியாபாரத்தில் நல்ல பரக்கத்து வேண்டும்,அதற்கு பெரிய தாயத்தாக எழுதி கொடுங்கள். ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரின் விலைவாசிக்கு ஏற்ப, அந்த தாயத்துக்கள் தகடுகள் அதனுடைய அளவுக்கு ஏற்ப விற்கப்படுகின்றன.

சிந்திப்பதற்காக ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்கிறேன்; ஓர் இடத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, அப்போது ஒருவர் வந்து என்னுடைய வியாபாரம் நல்ல பரக்கத்தாக நடப்பதற்கு ஏதாவது ஓர் துஆவை சொல்லுங்கள் என்று கூறினார்.

கூறிய அவர், ஒவ்வொருநாளும் வியாழக்கிழமை மாலை அதாவது வெள்ளி இரவு ஹஜரத்தை கூப்பிட்டு நான் யாஸீன் ஓதுகிறேன், துஆ ஓதுகிறேன். ஆனாலும் வியாபாரத்தில் ஒரே பிரச்சனையாக இருக்கிறது. ஏதாவது நல்ல துஆ இருந்தால் சொல்லுங்கள்.

சொன்னேன்! ஹலாலை பேணுங்கள், ஹராமை தவிர்த்துக்கொள்ளுங்கள், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டை செய்யுங்கள், அல்லாஹ் பரக்கச் செய்வான். என்று கூறிவிட்டு சரி தெரிந்து கொள்வோம் என்பதற்காக, நீங்கள் என்ன வியாபாரம் செய்கிறீர்கள்? என்று கேட்டேன்.

அவர் சொன்னார், சினிமா சீடி வியாபாரம் செய்கிறேன் என்று. செக்கிங் வருவதின் காரணத்தால் பிரச்சினையாக இருக்கிறது, அந்தப் பிரச்சினையிலிருந்து பாதுகாப்பதற்க்கு ஏதாவது தாயத்துக்கள் தகடுகள் இருக்கிறதா?

அங்கே சென்று துஆ ஓதுவதற்க்கு, ஒருவர் தன்னை ஆலிம் என்று சொல்லிக்கொண்டு வந்து, ஓதிவிட்டு பணம் வாங்கி செல்கிறார் என்றால், அவருடைய நிலைமையையும் இவருடைய நிலைமையையும் சற்று சிந்தித்து பாருங்கள்.

ஏன் இதை சொல்கிறேன் என்றால், ஒருவரைப் பற்றி சொல்லி கேவல படுத்துவதற்காக அல்ல. சமுதாயத்தின் நிலையை சிந்தித்து பாருங்கள், சமுதாயத்தின் அறிவீனத்தை, பலவீனத்தை, அறியாமையை சிந்தித்துப் பாருங்கள்.)

ஹதீஸின் தொடர் : அபூ ஹுரைரா, அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களிடத்தில் ஒன்றை கேட்கப் போகிறேன்.

சொன்னார்கள், அபூ ஹுரைரா! கேளுங்கள் என்று.

مَنْ أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِكَ يَوْمَ الْقِيَامَةِ

அல்லாஹ்வின் தூதரே! நாளை மறுமையில் உங்களுடைய சிபாரிசை அதிகம் பெற்று,நற்பேறு பெறக்கூடிய அந்த பாக்கியவான் யார்?

இங்கு ஒரு தகவலையும் சொல்லிச்செல்கிறேன், இன்று சிலர், தங்களை கல்விமான் என்று சொல்கிற சில மக்கள், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சிபாரிசு எல்லாம் நமக்கு தேவை இல்லை, அவர்களுடைய சிபாரிசு இல்லாமல் நேராக நாம் சொர்க்கம் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள்.

நபியவர்கள் அல்லாஹ்விடத்தில் சிபாரிசை ஆரம்பிக்கின்ற வரை ஒரு நபி கூட சொர்க்கத்திற்கு செல்ல முடியாது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொல்கிறார்கள், முதலாவதாக நான்தான் சிபாரிசை ஆரம்பிப்பேன். என் சிபாரிசு தான் ஏற்றுக்கொள்ளப்படும். அதற்குப் பிறகுதான் நபிமார்களை கவ்விக்கொண்ட அந்த பயம் அவர்களை விட்டு அகலும்.

அவர்கள் சுயநினைவுக்கு திரும்புவார்கள். அதுவரை يا نفسي! يانفسي! يا نفسي!எனக்கு என்ன ஆகும், எனக்கு ஒன்றுமே தெரியாது, என்று தன்னைப் பற்றியே எல்லோரும் பயந்து கொண்டிருப்பார்கள்.

பார்க்க, ஸஹீஹுல் புகாரி : 4343,4349.

அல்லாஹ்வின் கோபம் அவ்வளவு பயங்கரமாக இருக்கும்.

அபூஹுரைரா கேட்ட கேள்விக்கு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் பதில் சொன்னார்கள் :

لَقَدْ ظَنَنْتُ يَا أَبَا هُرَيْرَةَ أَنْ لَا يَسْأَلُنِي عَنْ هَذَا الْحَدِيثِ أَحَدٌ أَوَّلُ مِنْكَ لِمَا رَأَيْتُ مِنْ حِرْصِكَ عَلَى الْحَدِيثِ

அபூஹுரைரா! ஹதீஸ்களை அறிய வேண்டும் என்ற அந்த ஆவலினால், முதலாவதாக நீதான் இந்த கேள்வியை கேட்பாய் என்று நான் நினைத்திருந்தேன்.(1)

அறிவிப்பாளர் : அபூஹுரைராரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 97.

இன்று என்ன? ரஸூலுல்லாஹ்வுடைய ஹதீஸ் நூல்கள் எல்லாம் பள்ளிகளில் தூங்குகின்றன, புத்தக நிலையங்களில் தூங்குகின்றன, வீடுகளில் வாங்கி வைக்கப்பட்டு தூங்கிகின்றன.

ஆனால், பார்ப்பதோ படிப்பதோ இவற்றுக்கெல்லாம் முரணாக வேறு ஒன்றை. இந்த சமுதாயம் ரஸூலுல்லாஹ்வின் பெயரால் மவ்லித் கொண்டாடுகிறது. ரஸூலுல்லாஹ்வின் பெயரால் மீலாது கொண்டாடுகிறது.

சொல்லாத செயலை எல்லாம் செய்கிறது. சொல்லிவிட்டு சென்ற பொக்கிஷங்களை எல்லாம் புறக்கணிக்கிறது. அவற்றை எல்லாம் மறந்து கொண்டிருக்கிறது. விலக்கி வைத்துவிட்டது. அவற்றை படிப்பதற்கு, சிந்திப்பதற்கு, ஆராய்வதற்கு எந்த நேரங்களையும்  ஒதுக்குவது கிடையாது.கண்ணியத்திற்குரியவர்களே!

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :

أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ خَالِصًا مِنْ قَلْبِهِ أَوْ نَفْسِهِ

யார் தூய்மையோடு இணைவைத்தல் கலக்கபடாமல், உள்ளத்திலோ, செயலிலோ,  நம்பிக்கையிலோ, வழிபாட்டிலோ இணைவைத்தல் கலக்காமல் தூய்மையாக لاالهالااللهமொழிந்தாரோ, அவர் நாளை மறுமையில் என் சிபாரிசுக்கு மிகவும் தகுதியானவர்!

அறிவிப்பாளர் : அபூஹுரைராரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 97.

இதனுடைய அருமை என்ன? ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். இந்த لاالهالااللهகூறாமல்,இதன்படி நடக்காமல் யாருமே சொர்க்கத்திற்க்கு செல்ல முடியாது. சொர்க்கத்தின் சாவி இந்த لاالهالاالله.

கண்ணியத்திற்குரியவர்களே! இதற்கு ஒரு வித்தியாசம் என்ன தெரியுமா? அரபுகள், குறைஷிகள் அந்த காலத்தில் இந்த لاالهالااللهவின் பொருளை புரிந்த காரணத்தால் இது நம்முடைய வாழ்க்கைக்கு மாற்றமாக ஆகிவிடும். இதை ஏற்றுக் கொண்டால் பல மாற்றங்களை சந்திக்க வேண்டி வரும்.

எப்படி? இந்த لاالهالااللهவை ஏற்றுக்கொண்டால் முந்திய வாழ்க்கை, இதற்கு அடுத்துள்ள வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டு விடும் என்பதால் இதை மறுத்தார்கள்.

இன்று இருக்கின்ற முஸ்லிம்களுடைய நிலைமை அவர்களுக்கு தெரிந்திருந்தால், இப்படி இருக்குமேயானால் அவர்கள் இதை ஏற்று இருப்பார்கள்.

அது என்ன?

لاالهالااللهஎன்று கூறுவோம். ஆனால், வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் செய்வோம்.

لاالهالااللهஎன்று கூறுவோம். குடிப்போம், ஜினா,ஃபனா எல்லா காரியங்களிலும் ஈடுபடுவோம். அல்லாஹ்வைத்தான் வணங்குவோம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சொல்வோம்.

ஆனால், அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்பது போன்று இறந்துவிட்ட மக்களிடத்திலும் பிரார்த்தனை செய்வோம். அல்லாஹ்விடத்தில் துணையை நாடுவது போன்று இறந்து விட்டவர்களிடத்திலும் துணை நாடுவோம்.

நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? எத்தனை வாகனங்களில் ஹாஜா கரீப் நவாஜ் துணை, மொய்தீன் ஆண்டவர் துணை, நாகூர் ஆண்டவர் துணை, யா மொய்தீன், யா ஹாஜா கரீப் நவாஜ் என்று எழுதப் பட்டிருக்கிறது.

இன்று பலரை பற்றி கேள்விபடுகிறோம்; காபிர்களை போன்று, முஷ்ரிக்குகளை போன்று அவர்கள், ஏதாவது ஒரு புதிய வாகனமோ, ஒரு புதிய பொருளோ வாங்கி விட்டால், அந்தப் புதிய வாகனத்தை எடுத்துக்கொண்டு, அவர்கள் நம்பி இருக்கிற கோவிலுக்கு செல்வார்கள், பூஜை போடுவார்கள்.

இன்று தங்களை, லாயிலாஹ இல்லல்லாஹ்வை உடையவர்கள்,இந்த லாயிலாஹ இல்லல்லாஹ்வை பின்பற்றுகிறவர்கள் என்று சொல்கிற முஸ்லிம்களில் பலர், செல்லுகிற இடம் கோயில் அல்ல. கோயில் என்ற பெயரில் உள்ள இடம் அல்ல.

ஆனால், வேறு ஒரு பெயரில் தர்கா என்றோ கப்ருகள் என்றோ நல்லவர்கள்  அடக்கஸ்தலம் என்றோ, புனித தலம் என்றோ என்று இருக்கின்ற ஒரு கோயிலுக்கு. ஒரு கப்ருக்குச் சென்று, அங்கே அவர்கள் நடத்துகிற அதே பூஜை, எதை முஷ்ரிக்குகள் தங்களுடைய கோயில்களில் நடத்துகிறார்களோ அதுபோன்று இவர்களும் செய்கிறார்கள்.

யார் அல்லாஹ்வை தவிர, அந்த ஒரு ரப்பை தவிர, அந்த ஒரு படைப்பாளனை தவிர மற்றவர்களிடத்தில் தங்களின் தேவைகளை கேட்டு பிரார்த்தித்தானோ, அவர்களால் நன்மை தீமை நடக்கும் என்று நம்பினானோ, அவர்கள் நமக்கு உதவுவார்கள், நம் பிரார்த்தனையை கேட்பார்கள், நம்முடைய தீங்கை அகற்றுவார்கள், என்று இறந்துவிட்ட ஒரு மனிதனைப் பற்றி, நபியாக இருந்தாலும் சரி, அந்த நபியிடத்தில் கேட்டாலும் சரி.

இப்படி ஒருவன் நம்பினால், அதை செய்தால், இவன் எத்தனை இலட்சம் எத்தனை கோடி முறை இந்த லாயிலாஹ இல்லல்லாஹுவை கூறினாலும், இந்த லாயிலாஹ இல்லல்லாஹ் நாளை மறுமையில் இவனை பாதுகாக்காது.

காரணம் என்ன? ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :

مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ خَالِصًا مِنْ قَلْبِهِ

இணைவைத்தல் கலக்க படாமல், இணைவைத்தல் என்ற நஜீஸ், அசுத்தம் கலக்க படாமல் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் இந்த லாயிலாஹ இல்லல்லாஹ் பலன் அளிக்கும்.

அறிவிப்பாளர் : அபூஹுரைராரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 97.

யார், அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டோம் என்று லாயிலாஹ இல்லல்லாஹ்வை  கூறிவிட்டு, இதற்குப் பிறகு அவர்கள் தர்காக்கள் என்ற பெயரிலோ, ஜண்டாக்கள் என்ற பெயரிலோ அல்லது வேறு எந்த பெயரிலோ அவர்கள் இணைவைத்தல் காரியத்தை செய்வார்களோ அவர்களும், கோயில்களில் அல்லது சர்ச்களில் அல்லாஹ்விற்கு இணைவைக்கும் மக்களும், இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படி சமமானவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எப்படி கோயிலில் வழிபாடு செய்கிற ஒருவனை முஸ்லிம் என்று கருத முடியாதோ, அவன் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறினாலும் அல்லது அவன் பள்ளிக்கு வந்து தொழுதாலும், அப்படித்தான் தர்காக்களில் வழிபாடு செய்பவர்களும், அவர்கள் முஸ்லிம்கள் அல்ல, அவர்கள் முஷ்ரிக்குகள்.

அவர்களோடு நாம் திருமண உறவு வைக்க முடியாது. அவர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்த முடியாது. ஏன், அவர்களை குளிப்பாட்ட கூட கூடாது.

காரணம், அவர்கள் அல்லாஹ்விற்க்கு இணை வைத்த முஷ்ரிக்குகள் ஆவார்கள். மார்க்க சட்டம் புரியவில்லை. மார்க்க சட்டத்தை அதற்குரிய மார்க்க அறிஞர்களிடத்தில் இருந்து அதற்குரிய விளக்கங்களோடு, ஹதீஸ்களோடு  பார்ப்பதில்லை.

இந்த லாயிலாஹ இல்லல்லாஹ்வின் உண்மை செய்தியை நாம் விளங்க வேண்டும். இந்த லாயிலாஹ இல்லல்லாஹ் அதை கூறியவரிடமிருந்து பரிசுத்தமான ஈமானை பரிசுத்தமான தவ்ஹீதை கேட்கிறது.

யார், அந்தப் பரிசுத்தமான ஈமானை இணைவைத்தல் கலக்கப்படாத தவ்ஹீதை இந்த லாயிலாஹ இல்லல்லாஹ்விற்க்கு கொடுத்தார்களோ இவர்கள்தான் முஃமின்கள்.

யார், இந்த லாயிலாஹ இல்லல்லாஹ்வோடு இணைவைத்தலை கலந்தார்களோ, ஷிர்க்கை கலந்தார்களோ, அதிலிருந்து அவர்கள் தவ்பா செய்து அல்லாஹ்விடத்தில்  வருந்தி மன்னிப்புக் கேட்டு, தங்களின் ஈமானை புதுப்பித்து, அந்த ஷிர்க்கிலிருந்து  விலகி பரிசுத்தமான ஈமானுக்கு வரவில்லையோ இவர்கள் முஃமின்களாக ஆக மாட்டார்கள். இவர்கள் முஸ்லிம்களாக ஆகமாட்டார்கள்.

அல்லாஹ் இந்த செய்தியைதான் நபி அவர்களுக்கு சொல்லும் விதமாகநமக்கு உணர்த்துகிறான்.

وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

(நபியே!) உமக்கும், (நபிமார்களின்) உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் மெய்யாகவே வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது: (அது என்ன வென்றால், அல்லாஹ்வுக்கு) நீர் இணைவைத்தால், உமது நன்மைகள் அனைத்தும் அழிந்து, நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்.(அல்குர்ஆன் 39:65)

இன்று, நம்முடைய செல்வங்களும், நம்முடைய திறமைகளும், நம்முடைய அறிவுகளும் இந்த லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதற்க்காக, இதை போதிப்பதற்க்காக, அறியாமையின் காரணத்தினாலோ, அல்லது தவறான வழிகாட்டுதலின் காரணத்தினாலோ,இந்த லாயிலாஹ இல்லல்லாஹ்வை மறந்து வாழக்கூடிய ஒரு பெறிய சமுதாயத்தை சத்தியத்தின் பக்கம் அழைக்க வேண்டிய நாமும் நம்முடைய சக்திகளும், நம்முடைய பொருள்களும் இன்று எதற்க்கு பயன்படுத்தப்பட்டு கொண்டிருகிறது.

நமக்கு மத்தியில் சண்டை செய்வதற்க்கு, நமக்கு மத்தியில் ஒருவருக்கு ஒருவர் ஏசுவதற்க்கு திட்டுவதற்கு அல்லது பகை மேற்கொள்வதற்கு.

வேண்டாம். எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த லாயிலாஹ இல்லல்லாஹ்விற்காக வாழ்வோமாக. இந்த லாயிலாஹ இல்லல்லாஹ்வை பரப்புவதற்காக, இதை வாழ்க்கையில் கடைபிடிப்பதற்காக, இந்த லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதற்காக, இதன் உண்மையான விஷயத்தை எப்படி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போதித்தார்களோ, அந்த முறையில் இதை மக்களுக்கு போதிப்பதற்கு, நம்முடைய வாழ்க்கையை, நம்முடைய நேரத்தை, நம்முடைய பொருளை, நம்முடைய அனைத்து திறமைகளையும் செலவழிப்போமாக.

அல்லாஹ்! என் பாவங்களையும், உங்கள் பாவங்களையும் மன்னிப்பானாக! நான் கூறியவற்றில் எனக்கும் உங்களுக்கும் நேர்வழியை தந்தருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَنْ أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِكَ يَوْمَ الْقِيَامَةِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ ظَنَنْتُ يَا أَبَا هُرَيْرَةَ أَنْ لَا يَسْأَلُنِي عَنْ هَذَا الْحَدِيثِ أَحَدٌ أَوَّلُ مِنْكَ لِمَا رَأَيْتُ مِنْ حِرْصِكَ عَلَى الْحَدِيثِ أَسْعَدُ النَّاسِ بِشَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ خَالِصًا مِنْ قَلْبِهِ أَوْ نَفْسِهِ (صحيح البخاري 97 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/