HOME      Khutba      அல்லாஹ்வின் நண்பர் | Tamil Bayan - 150   
 

அல்லாஹ்வின் நண்பர் | Tamil Bayan - 150

           

அல்லாஹ்வின் நண்பர் | Tamil Bayan - 150


அல்லாஹ்வின் நண்பர்

ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ்வின் நண்பர்

வரிசை : 150

இடம் : எஸ்.எம்.ஜெ.பிளாஸா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 29-10-2010 | 2-11-1431

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவுபடுத்தியவனாக, அல்லாஹ்வின் அச்சத்தை எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

யார் அல்லாஹ்வை பயந்து கொண்டார்களோ அவர்கள் இம்மையிலும் வெற்றி அடைந்தார்கள்; மறுமையிலும் வெற்றி அடைந்தார்கள்.

பலமுறை இந்த புனிதமான மாதங்கள் வரும்போதெல்லாம் சிறப்பிற்குரிய கண்ணியத்திற்குரிய, உயர்ந்த இறைத்தூதர்களில் ஒருவரான இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்அவர்களின் வரலாற்றைப் பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டு.

வரலாறை வெறும் தெரிந்து கொள்வதற்குரிய செய்தியாக அல்லாஹு தஆலா அவனுடைய புத்தகம் அல்குர்ஆனில் கூறவில்லை. மாறாக, இந்த வரலாறை கொண்டு அல்லாஹு ரப்புல் ஆலமீன் சில பாடங்களை நமக்கு கற்றுக்கொடுக்க விரும்புகிறான். 

இறைத்தூதர்களைப் பற்றி அல்லாஹு ரப்புல் ஆலமீன் பிரஸ்தாபிக்கும்போது நமக்கு அதில் சில படிப்பினைகளை வைத்திருக்கிறான்.

அந்த கண்ணியத்திற்குரிய நபிமார்களுடைய வரலாறுகளில் எந்தெந்த இடங்களில் நாம் பாடங்களை, கல்விகளை கற்க வேண்டுமா அந்த இடங்களை குர்ஆனில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒன்றுக்கு மேற்பட்ட பல இடங்களில் கூறுகிறான்.

இப்படி அதிகமாக குர்ஆனில் ஏறக்குறைய ஐம்பத்தி ஆறு இடங்களுக்கு மேலாக அல்லாஹ் ரப்பில் ஆலமீன் தம் நண்பராகிய தன் நேசத்திற்குரிய தோழராகிய இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப்பற்றி குறிப்பிடுகின்றான்.

இங்கே கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால், நபிமார்களுக்கெல்லாம் இறுதியாக இமாமாக அனுப்பப்பட்ட முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

நபியே!நீங்கள் இப்ராஹுமுடைய மார்க்கத்தை பின்பற்றுங்கள். இப்ராஹீமுடைய கொள்கையை பின்பற்றுங்கள் என்று கூறி,இப்ராஹீமுடைய கொள்கையை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்குரிய காரணம் என்ன?என்பதையும் அல்லாஹ் விவரிக்கிறான்.

مَا كَانَ إِبْرَاهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَكِنْ كَانَ حَنِيفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ

இப்றாஹீம் யூதராகவும் இருக்கவில்லை, கிறிஸ்தவராகவும் இருக்கவில்லை. எனினும், இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட நேரான கொள்கையுடைய முஸ்லிமாகவே இருந்தார். மேலும், அவர் இணைவைத்து வணங்குபவராகவும் இருக்கவில்லை. (அல்குர்ஆன் 3 : 67)

அதாவது, இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் அந்த தகுதி இருந்தது. அவர்கள் ஈமான் என்ற இறை விசுவாசத்தில், இறை நம்பிக்கையில் மிகவும் உறுதி உள்ளவராக இருந்தார்.

இரண்டாவது, அல்லாஹ்வின் மீதுள்ள அந்தப் பற்று, அல்லாஹ் எனக்குப் போதுமானவன், அவன் நாடாமல் எதுவும் நடக்காது, அவனுடைய துணை இல்லாமல் எதையும் நாம் செய்ய முடியாது, அல்லாஹ் பாதுகாத்தால் அழிக்க முடியாது, அல்லாஹ் அழிக்க நாடினால் பாதுகாக்க முடியாது, அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டால் அல்லாஹு ரப்புல் ஆலமீன் கட்டுப்பட்ட அந்த அடியானை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வான்.

நம்மில் பலருக்கு இந்த உண்மைகள் புரிவதில்லை. அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டால் அல்லாஹ்விற்கு முழுமையாக கீழ்படிந்து விட்டால், அல்லாஹ் என்னென்ன கட்டளைகளையெல்லாம் கூறுகிறானோ அப்படியே அதை செயல்படுத்தி விட்டால். அல்லாஹ்வின் விருப்பமே வாழ்க்கையின் குறிக்கோள்.

அல்லாஹ் விரும்பியதை தவிர, நான் எதையும் செய்ய மாட்டேன். என் விருப்பத்திற்கு நான் எதையும் செய்ய மாட்டேன். நான் செய்வதெல்லாம் அல்லாஹ் விரும்புவதை தான். அது எனக்கும், என் மனைவிக்கும், என் பிள்ளைகளுக்கும் அவர்களுடைய விருப்பத்திற்கு மாற்றமாக இருந்தாலும்.

அல்லது அல்லாஹ்வின் விருப்பத்திற்கு நடப்பதால் இந்த உலக வாழ்க்கையில் தன் உயிரை, தன் மனைவியின் உயிரை, தன் பிள்ளையின் உயிரையெல்லாம் இழக்க வேண்டிய கட்டம் ஏற்பட்டாலும் அதற்கும் நான் தயார்.

என் ரப்புக்கு சிரம் பணிந்து அவனுடைய மகிழ்ச்சியை தேடுவதில் இந்த துன்யாவிலுள்ள அனைத்தையும் இழக்க நான் தயார்.

அதுவும் எப்படி? நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அல்ல. வேறு வழியில்லை என்ற கதியினால் அல்ல. மாறாக மனம் விரும்பி அதில் மகிழ்ச்சி கண்டு மனப்பூர்வமாக அல்லாஹ்வின் விருப்பத்தை மட்டும் நாடி அந்த செயலை செய்வது.

இந்த ஒரு தூய தகுதிகள் எல்லாம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் இருந்தது. அல்லாஹ்விற்கு மக்கள் செய்கின்ற இந்த ஷிர்க்கான காரியங்களைப் பார்த்து முகம் கடுகடுத்த, முகம் சுளித்த, அதற்கு எதிராக போர் செய்த இறைத்தூதர்களில் முதன்மையான இடத்தைப் பெறுகிறார்கள், இப்ராஹீம்

அவர்கள் நெருப்புக் குண்டத்தில் போடப்பட்டது, அவர்களுடைய தந்தையால் அவர்கள் ஊரில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது, இந்த சோதனைகளை எல்லாம் அவர்கள் எதற்காக தாங்கினார்கள்? ‘ஷிர்க்' -இணை கற்பிக்கின்ற செயலை எதிர்த்த காரணத்தால்.

அல்லாஹ் எப்படி இணை கற்பிக்கப்படுவதை வெறுக்கிறானோ அதுபோன்று. அல்லாஹ்வுடைய தவ்ஹீதை நிலைநாட்டி, ஷிர்கிற்கு எதிராக அல்லாஹ் விரும்பிய விதத்தில் மிகப்பெரிய ஒரு புரட்சியை செய்தவர்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

இந்தப் புரட்சியின் பல பாடங்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான். சூரத்துஷ் ஷுஅராவில் கூறுகிறான், சூரத்துல் அன்பியாவில் கூறுகிறான், சூரா ஸாஃப்ஃபாத்தில் கூறுகிறான்.

இப்படி பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடும்போது ஒரு முக்கியமான செய்தியையும் அங்கே பதிவு செய்கிறான்.

அது என்னவென்றால், அந்த இணை கற்பிக்கப்படுகின்ற செயலை மட்டும் வெறுத்ததல்ல, மாறாக இணைகற்பிப்பவர் தன்னைப் பெற்றெடுத்த தன் தந்தையாக இருந்தாலும் சரி, தான் பிறந்து வளர்ந்த சமூகமாக இருந்தாலும் சரி, அவர்களோடு பகைமை காட்டினார்கள்.

தன் தந்தையை பார்த்துச் சொன்னார்கள்: “ நீயும் நீ இணை வைக்கிற இந்த சிலைகளும் எனக்கு எதிரிகள். உன்னை விட்டும் உன் சமூகத்தை விட்டும் நான் விலகிக் கொள்கிறேன்.

நீங்கள் இணைகற்பிக்கும் காலமெல்லாம் நான் உங்களோடு நட்பு பாராட்ட முடியாது. உங்களோடு நான் உறவு வைத்துக்கொள்ள முடியாதுஎன்று முழுமையாக தன் தந்தையை ஒதுக்கினார்கள், தம் சமூகத்தை ஒதுக்கினார்கள். அந்த மக்களோடு விரோதம் காட்டினார்கள். பகைமை காட்டினார்கள். (அல்குர்ஆன் கருத்து : 60 : 4)

நட்பு பகைமையின் இலக்கணத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய இந்த வரலாற்றிலிருந்து நமக்குச் சொல்கின்றான்.

எதன் அடிப்படையில் நட்பு அமைந்திருக்க வேண்டும்? ‘தவ்ஹீத்' -அல்லாஹ் ஒருவன் மட்டுமே இந்த பூமியில் வணங்கப்படவேண்டும். அல்லாஹ்விற்கு யார் ‘ஷிர்க்' செய்கிறார்களோ அவர்கள் தான் நம்முடைய எதிரிகள்.

யார் அல்லாஹ்வை அவன் விரும்பிய விதத்தில் பரிசுத்தமாக வணங்குகிறார்களோ அவர்கள் நம்முடைய நண்பர்கள். அவர்கள் நம்முடைய நேசர்கள் என்று அந்த நேசத்தின் பகைமையின்அந்த அடித்தளத்தை, அஸ்திவாரத்தை, அந்த அளவுகோலை, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் நமக்கு கூறி காட்டினார்கள்.

அந்த வரலாற்றை அல்லாஹ் ரப்புல் ஆலமீன், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கூறி, கட்டளையிடுகிறான்.

وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا

இப்றாஹீமுடைய (நேரான) மார்க்கத்தை பின்பற்றுவீராக! (அல்குர்ஆன் 4 : 125)

இப்ராஹீம் உடைய கொள்கையைمِلَّةَஎன்றால் மார்க்கம் என்று சொல்லலாம். அல்லது கொள்கை அல்லது செயல் திட்டம் அல்லது சென்ற வழி,பின்பற்றப்பட்ட கொள்கை, என்று சொல்லலாம்.

உங்கள் தந்தையாகிய இப்ராஹீமுடைய கொள்கையை பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் ஏன் கூறுகிறான்?என்பதற்குரிய விளக்கங்களை நாம் பார்க்க முடிகிறது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவன் படைத்த அடியார்களில் அவன் விரும்பிய நல்லவர்களை அவன் தேர்ந்தெடுக்கிறான். யாரை அவன் தேர்ந்தெடுத்தானோ அவர்களை நாம் நேசிப்பது, அவர்கள் மீது மரியாதை வைப்பது, அல்லாஹ்விற்காக அவர்கள் செய்த செயல்களைப் பற்றி பேசி அதிலிருந்து பாடம் பெறுவது,இது நம்முடைய ஈமானுடைய கடமை.

நமக்கு ஈமான் உயரவேண்டும் என்றால், நம்முடைய இறை நம்பிக்கையும் இறை விசுவாசமும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகிற தன்மையும் அல்லாஹ்விற்கு பணிகிற பண்பும் நம்மிடத்தில் முழுமையாக வரவேண்டும் என்றால் இதுபோன்ற இறைத்தூதர்களைப் பற்றி நாம் பேசியாக வேண்டும்.

அவர்களுடைய வாழ்க்கையைப் படித்தாக வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையை பரப்பி ஆகவேண்டும். அதனுடைய பாடங்களை நாம் கற்றாக வேண்டும்.

ஆகவே,இந்த வரலாறுகளை குர்ஆனில் படிக்கும்போது,சென்றுவிட்ட நபிமார்களின் வரலாறுகளை அல்லாஹ் கூறுகிறான் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல், இந்தப் பாடம் இந்த சம்பவம் எனக்கு என்ன பாடத்தை கொடுக்கிறது.

இந்த சம்பவத்திலிருந்து அல்லாஹ், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத் ஆகிய எனக்கு என்ன சொல்ல விரும்புகிறான்? என்பதை அறிந்து உணர்ந்து தான் அந்த சம்பவத்தை நாம் கடக்க வேண்டும்.

ஆனால், இன்று, ஏன் நம்முடைய வாழ்க்கைகள் மாறுவதில்லை? ஸஹாபாக்கள் ஓதிய அதே குர்ஆனை ஓதுகிறோம். தாபிஃயீன்கள் ஓதிய அதே குர்ஆனை ஓதுகிறோம். வரலாற்றில் இந்த இஸ்லாமிய மார்க்கத்திற்காக தியாகம் செய்த நல்லவர்கள் ஓதிய அதே குர்ஆனை ஓதுகிறோம்.

அந்த குர்ஆன் அவர்களுடைய வாழ்க்கைகளையெல்லாம் புரட்டிப் போட்டது. ஆனால், நம்மைப் பொறுத்தவரை இந்த குர்ஆனுக்கு முன்னால் நம்மில் பலர் ஒரு கல்லைப் போன்று இருக்கிறார்கள்.

ஒரு கல்லுக்கு முன் குர்ஆன் ஓதப்பட்டால் அந்த கல்லில் எந்த மாற்றமாவது ஏற்படுமா? என்றால் எந்த மாற்றமும் ஏற்படாது. அது போன்றுதான் இன்று நம்மில் பலர் இருக்கிறார்கள்.

இதுவல்ல நாம் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதின் அழகு. இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாறுகளை எப்படியெல்லாம் அல்லாஹ் சொல்லுகின்றான் என்று கவனியுங்கள்.

அல்லாஹ், அவனுடைய அடியார்களை நேசிப்பதற்கு ஆசைப்படுகிறான். அந்த அடியார்களைப் பற்றி புகழ்ந்து பேசுவதை அல்லாஹ் விரும்புகிறான்.

அவனுடைய புத்தகம் அல்குர்ஆனில், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி கூறுகிறான்.

إِنَّ اللَّهَ اصْطَفَى آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ

நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், (அவருக்குப் பின்னர்) நூஹையும் இப்ராஹீமுடைய குடும்பத்தையும், இம்ரானுடைய குடும்பத்தையும் அகிலத்தாரைவிட மேலாக (உயர்வாக) தேர்ந்தெடுத்தான். (அல்குர்ஆன் 3 : 33)

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் எப்படி தேர்ந்தெடுத்தான்?  சூரத்துன்னிஸாவுடைய 125-வது வசனத்தில் சொல்கின்றான்,

وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا

அல்லாஹ் இப்ராஹீமை கலீல்-உற்ற நண்பனாக ஆக்கிக் கொண்டான். (அல்குர்ஆன் 4 : 125)

அரபியில் நண்பனுக்கு பல வார்த்தைகள் இருக்கின்றது. ரஃபீக் என்று சொல்வார்கள், சதீக் என்று சொல்லுவார்கள், சாஹிப் என்று சொல்லுவார்கள், கரீம் என்று சொல்லுவார்கள்.

இவற்றை விட ஆழமான அர்த்தத்தை கொடுக்கக் கூடியது தான் 'கலீல்' என்ற வார்த்தை. அதாவது, வேறு எந்த நோக்கமும் கலக்காமல், தன் நண்பனின் பொருத்தம் மட்டும் தான் நோக்கம். தன் நண்பனின் மகிழ்வு மட்டும் தான் நோக்கம்.

அவன் கூறுவது அனைத்தையும் செய்வதுதான் என் வாழ்க்கையின் நோக்கம். அவனுக்காக எதையும் இழக்க தயார் என்ற தரத்தில் நட்பு வரும்போது, அந்த நட்பிற்கு  “ஹுல்லத்” என்று சொல்லப்படும்.

அந்த தகுதியை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கொடுத்தான். அப்படித்தான் அவர்கள் நடந்து காட்டினார்கள். ஆகவே, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகின்றான்,

அல்லாஹ் இப்ராஹீமை கலீலாக -நண்பனாகநெருக்கமான, உண்மையான, உற்ற நண்பனாக ஆக்கிக் கொண்டான்.

இந்த தகுதியை அடைவதற்கு அவர்கள் எப்படியெல்லாம் தியாகம் செய்து இருப்பார்கள். இந்த உயர்வை அல்லாஹ்விடத்தில் பெறுவதற்கு அவர்கள் எப்படி எல்லாம் இந்த உலகத்தில் இழப்புகளையும் சோதனைகளையும் சிரமங்களையும் பலவிதமான துன்பங்களையும் சகித்து இருப்பார்கள் என்பதைத்தான் குர்ஆனில் 56இடங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பிரித்துப் பிரித்து ஆங்காங்கே அந்தந்த இடத்திற்கு தேவையான அளவு கூறிக்கொண்டே செல்கின்றான்.

முதலாவது விஷயம் என்னவென்றால், இந்த உயர்ந்த தரத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு கொடுத்ததற்குரிய காரணங்களை அல்லாஹ் பட்டியலிடும் போது, அதில் முதலாவதாக அல்லாஹ் பட்டியலிடுவது, தான் நம்பிக்கை கொண்ட அல்லாஹ்வை அவனுடைய தன்மைகளோடு அவனுடைய வல்லமைகளோடு அவனைப் புரிந்து அவனுடைய உயர்வுகளோடு அவனை மதிப்பிட்டு அவனை முற்றிலும் நம்பிக்கை கொண்ட ஒரு உண்மையான முஃமினாக அவர்கள் விளங்கினார்கள்.

நம்மில் பலரும் தன்னை மூஃமின்கள் என்று நம்பி இருப்பார்கள், நம்பியிருக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வை அவனுடைய வல்லமையோடு அல்லாஹ்வை அவனுடைய ஸிஃபத்களோடு புரிந்து கொள்வதற்கு அல்லாஹ்வைப் பற்றி அவனுடைய தன்மைகளோடு சிந்திப்பதற்கு நேரம் கொடுத்தவர்கள் எத்தனை பேர்?

அல்லாஹுவை நம்முடைய ரப்பு என்று கூறுவோம். அல்லாஹ்விற்காக தொழுகிறோம் என்று கூறுவோம். அந்த அல்லாஹ் எப்படிப்பட்டவன்? அந்த அல்லாஹ்வுடைய வல்லமை என்ன? என்று தனிமையில் அமர்ந்து நாம் சிந்திக்கிறோமா? சிந்தித்து இருக்கிறோமா? அப்படி சிந்தித்திருந்தால் எவ்வளவு நேரம் சிந்தித்து இருக்கிறோம்? அல்லாஹ்வுடைய ஸிஃபத்தை நாம் எவ்வளவு புரிந்து இருக்கிறோம்?

இதில் யாரும் யாரையும் சோதிக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு அடியாரும் தன்னைப்பற்றி, நான் எந்த ரப்புக்கு ஒவ்வொரு நாளும் சுஜூது செய்கிறேனோ, எந்த ரப்பை குறித்து, ‘அல்லாஹு அக்பர்' அந்த அல்லாஹ்வை விட பெரியவன் யாரும் இல்லை, அல்லாஹ் தான் மிகப் பெரியவன் என்று கூறுகிறோமோ,

அவனுடைய பெருமை, அவனுடைய உயர்வு, ‘ஜபரூத்' -அடக்கி ஆளுகின்ற ஆற்றல், ‘மலகூத்' -இந்த பூமிகள் பிரபஞ்சங்கள், அண்டசராசரங்கள் அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குக் கீழ் வைத்திருக்கின்ற அந்த ஆளுமை,

அவன் நாடினால் ‘குன்' என்று சொல்லுவான், எல்லாம் ஆகிவிடும். வானத்தை ஆக்கினான், அதை அழிப்பதற்கும் ஆற்றல் உள்ளவன். பூமியை ஆக்கினான் அதை அழிப்பதற்கும் ஆற்றல் உள்ளவன்.

இந்த உலகத்தில் உள்ள பிரபஞ்சங்கள் எல்லாம் சேர்ந்து அல்லாஹ்வை எதிர்க்க நாடினால் எதிர்க்க முடியாது. அல்லாஹ்வோடு போராட முடியாது. அல்லாஹ்வின் கட்டளைகளை மறுக்க முடியாது.

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பூமி, கடல், மலை, மேகங்கள் எவ்வளவு பெரிய படைப்புகளாக இருந்தாலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அவனுடைய ஆற்றலுக்குள் இருக்கிறது.

இந்த அல்லாஹ்வை புரிவதற்கு இந்த ரப்பை புரிவதற்கு. தொழுகைக்கு முன்னால் நிற்கும் போது,

إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ إِبْرَاهِيمَ حَنِيفًا

வானங்களையும் பூமிகளையும் படைத்த இறைவனுக்கு முன்னால் என் முகத்தை நான் முன்னோக்க வைத்துவிட்டேன்.

அறிவிப்பாளர் : அலீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1290.

தொழுகைக்கு முன்னால் நாம் நிற்கும்போது, தொழுகையில் நான் ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்லும் போது, அவனுடைய வல்லமைகளை பெருமைகளை நினைத்து உள்ளம் துடிக்கிறது, நடுங்குகிறது, அந்த தொழுகையில் நிற்கும் போது அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கிறேன், என் முகத்தை அல்லாஹ்வை நோக்கி முன்னோக்க வைத்துவிட்டேன், அல்லாஹ்விற்கு முன்னால் பணிந்து விட்டேன், என் வாழ்க்கையை அகிலங்களுடைய ரப்பாகிய அல்லாஹ்விற்கு உரித்தானதாக ஆகிவிட்டேன் என்று நம்மால் சொல்ல முடியுமா?

அந்தக் கருத்தை நான் உணர்ந்து கொண்டேன், புரிந்து கொண்டேன் என்று சொல்ல முடியுமா?

யாருடைய உள்ளத்தில் இந்த துனியா பெருசாக இருக்குமோ, யாருடைய உள்ளத்தில் இந்த தங்கமும் வெள்ளியும் மதிப்புடையதாக இருக்குமோ, யாருடைய உள்ளத்தில் இந்த ஆசாபாசங்கள் குடிகொண்டிருக்குமோ, இந்த உலக வாழ்க்கையில் சிற்றின்பங்கள் அவர்களுடைய உள்ளத்தை கட்டிப்போட்டு வைத்திருக்குமோ, அவர்களுக்கு எங்கிருந்து புரியவரும், அல்லாஹ்வின் வல்லமை? அவர்கள் எப்படி புரிந்து கொள்ள முடியும், ரப்புடைய உயர்வை?

யார் இந்த துன்யாவை அற்பமாக மதித்தார்களோ, மறுமையை நிரந்தரமாக நினைத்தார்களோ அவர்கள்தான் புரிய முடியும் அல்லாஹ்வுடைய வல்லமையை.

இப்ராஹீம் நபி கூறினார்கள் என்றால், அந்த வார்த்தையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்தக் குர்ஆனில் நமக்கு கூறுகிறான் என்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தைகள்.

நாமும் சொல்லுகிறோம். நம் நாவிலிருந்து வார்த்தைகள் வெளிப்படுகின்றன. ஆனால், யார் அல்லாஹ்வை புரிந்து கொண்டார்களோ, ஈமான் யாருடைய உள்ளத்தில் இறங்கி விட்டதோ அவர்களைப் பொருத்தவரை அவர்கள் கூறுகின்ற கூற்று அவர்களுடைய உள்ளத்தில் இருந்து வெளிப்படுகிற கூற்று.

அவர்களுடைய உள்ளத்தில் இருந்து வெளியேறி அவர்களுடைய நாவின் வாயிலாக வெளியாகிற நாவின் வாயிலாக உச்சரிக்கப்படுகின்ற கூற்று.

حنيف-என்று சொன்னால் முற்றிலுமாக ஷிர்கிலிருந்து விலகி ‘தவ்ஹீத்' -அல்லாஹ் ஒருவனை வழிபடுவதின் பக்கம் சாய்ந்தவர்.

அதாவது தவ்ஹீதில் இருந்து அவரை பிரிக்க முடியாது. முற்றிலுமாக தவ்ஹீதோடு ஒட்டிக் கொண்டவர்.

முஸ்லிம்களில் பலருக்கு தவ்ஹீத் என்றால் என்ன? என்று அர்த்தம் தெரியாது. பள்ளிக்கும் தொழுகைக்கு வருவார்கள். அல்லாஹ்வையும் தொழுவார்கள். சிலை வணங்கிகள், கோயில்களுக்குச் சென்று தங்கள் சிலைகளை வணங்குவது போன்று இன்று முஸ்லிம்களில் பலர், முஸ்லிம் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்களில் பலர், தங்களுக்கும் சில கோயில்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அதாவது, நல்லவர்கள் அடங்கி இருக்கின்ற அடக்கஸ்தலங்களுக்கு சென்று, ஸுஜூதும் செய்வார்கள். அங்கே ருகூஉ செய்வார்கள், அங்கே தவாஃப் செய்வார்கள், அங்கே சுற்றுவார்கள், அங்கே நேர்ச்சைகள் செய்வார்கள்.

இவர்கள் ஒருக்காலும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பின்பற்றியவர்களாக ஆக முடியாது. இவர்களுடைய தொழுகை இப்ராஹீம் நபியுடைய தொழுகையாக ஆக முடியாது. இவர்கள் இப்ராஹீம் நபியுடைய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல.

யார் தவ்ஹீதோடு, அந்த அல்லாஹ்வின் ஒருமைப்பாட்டோடு ஷிர்க்கை கலந்து விட்டார்களோ, அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் பிறரை சேர்த்து விட்டார்களோ, அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய பணிவுகளை மரியாதைகளை அந்த உள்ளச்சத்தை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்துவிட்டார்களோ அவர்கள் முஷ்ரிக்குகளாக  ஆகிவிட்டார்கள்.

حنيف-என்பதற்கு இன்னொரு பொருள், அல்லாஹ்விற்கு கட்டப்படுகின்ற தன்மையில் உறுதியானவர் என்பதாகும்.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையைப் பார்க்கிறோம்.

إِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ

இப்றாஹீமை (நோக்கி) அவருடைய இறைவன் ‘‘நீ (எனக்கு) பணிந்து வழிப்படு!'' எனக் கூறிய சமயத்தில் அவர் (எவ்வித தயக்கமுமின்றி) ‘‘அகிலத்தாரின் இறைவனுக்கு (இதோ) நான் பணிந்து வழிப்பட்டேன்'' எனக் கூறினார். (அல்குர்ஆன் 2 : 131)

இஸ்லாம் என்றால் கட்டுப்படு! நான் கூறுகின்ற கட்டளைகளுக்கு கட்டுப்படு! காலத்தைப் பார்க்காதே! நேரத்தைப் பார்க்காதே! சூழ்நிலைகளைப் பார்க்காதே! ஆபத்துகளை பார்க்காதே! ஆதரவுகளை பார்க்காதே! உலகமெல்லாம் உன்னை எதிர்த்தாலும் சரி.

அதுதான் கட்டுப்படுதல். காலங்களும் சூழ்நிலைகளும் சாதகமாக இருக்கும் போது செய்வதற்கு பெயர் அல்ல கட்டுப்படுதல்.

இன்று நம்முடைய கட்டுப்படுதல் அப்படித்தான் இருக்கிறது. நெருக்கடி வந்துவிட்டால் சொல்வார்கள்; வட்டி வாங்காமல் எப்படி பிசினஸ் பண்ண முடியும்? சோதனை நெருங்கிவிட்டால் நெருக்கடிக்கு ஆளாகி விட்டால், இந்தக் காலத்தில் ஹலால் ஹராமை பார்த்தால் சம்பாதிக்க முடியுமா?

வியாபாரம் அதிகமாகி விட்டால் தொழில் பெருகி விட்டால், இவ்வளவு அதிகமான நமக்கு நெருக்கடிகள் இருக்கும் போது தொழுகைக்கு பள்ளிக்கு ஜமாத்திற்கு எல்லாம் செல்ல முடியுமா? இருக்கும் இடத்திலேயே தொழுது கொள்வோம். இன்னும் செல்வம் அதிகமாகி விட்டால், அந்த தொழுகையும் அப்படியே குறைந்துவிடும்.

அடுத்து தர்மம் என்ற பேச்சு வரும்போது, இப்படி சம்பாதிக்கின்ற செல்வத்தில், ஒரு கோடி ரூபாய்க்கு இரண்டரை லட்சம் கொடுக்க வேண்டும். இப்படி மொத்தமாக இரண்டரை லட்சத்தை தூக்கிக் கொடுத்தால், நாம் சம்பாதித்த, கஷ்டப்பட்ட செல்வம் ஆச்சே! இதை எப்படி உழைக்காத ஒருத்தருக்கு சும்மா கொடுப்பது?

40கிலோ தங்கம் வைத்திருந்தால் அதில் ஒரு கிலோ தங்கத்தை தூக்கி ஜகாத்தாக கொடுக்க வேண்டும். பார்க்கிறார்; ஒரு கிலோ தங்கம் ஆயிற்றே!

பிறகு, அவன் சாதகங்களைத் தேடுகிறார். எங்கிருந்தாவது ஏதாவது ஒரு ஃபத்வா கிடைக்குமா? கிடைக்கிறது ஃபத்வா, வாழ்க்கையில் ஒரு முறை ஒரு பொருளுக்கு கொடுத்தால் போதும் என்று. முடிந்தது அதோடு.

இவர்களைத்தான் அல்குர்ஆன் முனாஃபிக் என்று சொல்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக! தங்களுக்கு சாதகமாக இருந்தால் ஒட்டிக் கொள்வார்கள். தங்களுக்கு பாதகமாக இருந்தால் வெட்டிக் கொள்வார்கள்.

இப்ராஹீம், எப்படிப்பட்ட முஸ்லிம்? அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். அவரை நான் சோதித்தபோது அத்தனை சோதனைகளும் அவருக்கு பாதகமாகவே இருந்தன. எழுவது வயதைத் தாண்டியதற்குப்பிறகு அல்லாஹ் சொல்லுகின்றான்.

இப்ராஹீமே நீங்கள் கத்னா செய்து கொள்ளுங்கள் என்று. மருத்துவரை தேடினார்களா? யா அல்லாஹ்! இவ்வளவு முதியவனாக ஆகி விட்டதற்கு பிறகு நான் எப்படி செய்வதென்று யோசித்தார்களா?

ஸஹீஹுல் புகாரியில் நபிமார்களின் பாடங்களை எடுத்துப் பாருங்கள். தன்னுடைய வீட்டின் கொல்லைப் பகுதிக்கு செல்கிறார்கள். ஒரு கட்டையில் தன்னுடைய உறுப்பின் தோல் முனையை வைத்து சிறிய ஒரு கோடாரியை எடுத்து வெட்டி வீசி விடுகிறார்கள்.

அல்லாஹு அக்பர்! எப்படிப்பட்ட பணிதல்! ரப்பு சொல்லிவிட்டான், ரப்புடைய கட்டளை நம்ரூத்தை எதிர்க்க வேண்டுமென்று. அவனுக்கு முன்னால் நின்று ‘லாயிலாஹ இல்லல்லாஹ்' சொல்ல வேண்டுமென்று. எப்படி இருக்கும்?

மூஸா அலைஹிஸ்ஸலாம், அல்லாஹ் அவர்களிடத்தில் பேசிய போது, ஃபிர்அவ்ன் இடத்தில் நீ செல் என்று சொன்னபோது, மூஸா அலைஹிஸ்ஸலாம் சொன்னார்கள், யா அல்லாஹ்! அவனை நினைத்து எனக்கு பயமாக இருக்கிறது. அவன் என்னை தண்டித்து விடுவான். சிறையில் அடைத்து விடுவான் என்று.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம், அப்படியா? யா அல்லாஹ்! அந்த அநியாயக்காரன் நம்ரூதுக்கு முன்னால் சென்று ‘லாயிலாஹ இல்லல்லாஹ்' சொல்ல வேண்டுமா? அதற்கும் நான் தயார்.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அந்த நம்ரூதுக்கு முன்னால் நின்று ‘லாயிலாஹ இல்லல்லாஹ்' சொல்லும்போது. அவன் கேட்கிறான் ,”உன்னுடைய இறைவன் யார்”?

“என்னுடைய இறைவன் உயிரை கொடுப்பான் உயிரை எடுப்பான்.“

அந்த முட்டாள் அரசனுக்கு புரியவில்லை. இரண்டு சிறைக்கைதிகளை அழைக்கிறான். அழைத்து ஒருவனின் கழுத்தை சீவி விடுகிறான். ஒருவனை உரிமையிட்டு ‘நீ செல்' என்று கூறுகிறான். பார், நானும் உயிர்பித்தேன். நானும் உயிர் கொடுத்தேன். என்று சொல்லுகிறான்.

இந்த நிலையை தன் கண் முன்னால் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு நபி, ஒரு மனிதர், ஒரு இறைவனுடைய தூதர் தன்னைச்சுற்றி எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இருந்தது.

இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ பாதுகாப்புகளை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். எத்தனையோ சுற்றுச்சூழல்களை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். ஆனால், பெரும்பாலான நபிமார்களுடைய காலத்தில் அது இல்லை.

அதுவும் குறிப்பாக அந்தக் காலத்தில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மட்டும்தான் அங்கே முஸ்லீமாக இருக்கிறார். அந்த நேரத்தில் அந்த அநியாயக்கார அரசனுக்கு முன்னால் நின்று கொண்டு பதில் கூறுவது என்றால் அங்கு எப்படிப்பட்ட துணிவு இருந்திருக்க வேண்டும்.

மனதில் எந்த சலனமும் இல்லை. எந்தவிதமான தடுமாற்றமும் இல்லை. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்ற வார்த்தைகள், “மூஸா அலைஹிஸ்ஸலாம் ஃபிர்அவ்னுக்கு முன்னால் அந்த சூனியக்காரர்கள் தங்களுடைய ‘அசாக்களை' எல்லாம் போட்டு பாம்பாக அதை அவர்களுடைய கண்ணுக்கு காண்பித்த பொழுது,

فَأَوْجَسَ فِى نَفْسِهِۦخِيفَةً مُّوسَىٰ

மூஸாவிற்கு ஒரு பயம் ஏற்பட்டது. மூஸா அந்த பயத்தை உணர்ந்தார் என்று அல்லாஹ் சொல்லுகிறான். (அல்குர்ஆன் 20:67)

ஆனால், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி இங்கே குறிப்பிடும் போது, அவர்களுடைய மனதில் இருந்த உறுதியை அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

சொல்லுகிறார்கள்,”அப்படியா? உனக்கு இது புரியவில்லையா? அடுத்த ஆதாரத்தை சொல்லுகிறேன். என் இறைவன் சூரியனை கிழக்கிலிருந்து கொண்டு வருகிறான். அதை மேற்கில் மறைய வைக்கிறான். உன்னால் முடிந்தால் கொண்டு வா பார்ப்போம்.”

பார்க்க – (அல்குர்ஆன் 2 : 252)

இப்படி ஏகத்துவத்தின் பிரச்சாரம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வாழ்க்கையில்,அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கட்டுப்படு என்று கூறிய அந்தக் கட்டளைக்குப் பின்னால் அத்தனை சோதனைகளையும் தாங்கத் தயார் என்ற உறுதியில் அவர்கள் வந்தார்கள்.

இதைத்தான் அல்லாஹ் حنيفاஎன்று சொல்லுகிறான்

அதாவது, அல்லாஹ்விற்கு கட்டுப்படுவதில் ஒரே உறுதியில் இருப்பவன். இந்த சம்பவத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஸூரத்துல் அன்ஆமில் அப்படியே தொடர்ந்து சொல்லி வருகிறான்.

கடைசியில் அல்லாஹ் ரப்பில் ஆலமீன் முடிக்கும்போது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உள்ளத்தில் இருந்த அந்த உறுதியை சொல்லுகின்றான்.

அந்த பயம் அற்ற தன்மை. ஷிர்க்கையும், ஷிர்க் செய்கின்ற முஷ்ரிக்குகளையும் பார்க்கும் போது எந்தவிதமான பயமும் இல்லாமல், அவர்களுக்கு முன்னால் தவ்ஹீதை எடுத்துச் சொல்லக்கூடிய தன்மை. அதனால் அழிவு ஏற்பட்டாலும் சரியே.

அவர்கள் கூறினார்கள் :

وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُمْ بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا فَأَيُّ الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالْأَمْنِ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ

உங்களுக்கு அல்லாஹ் எதற்கு அத்தாட்சியை இறக்கவில்லையோ அதை நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கியதைப் பற்றி ஒரு சிறிதும் நீங்கள் பயப்படாதிருக்க, நீங்கள் இணைவைத்தவற்றை நான் எவ்வாறு பயப்படுவேன். அச்சமற்றிருக்க நம்மிரு பிரிவினரில் மிகத் தகுதியுடையவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (கூறுங்கள்). (அல்குர்ஆன்6 : 81)

அல்லாஹ் கூறுகிறான் :

فَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَسْفَلِينَ

இவ்வாறு அவர்கள், அவருக்குத் தீங்கிழைக்கக்கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே இழிவானவர்களாக ஆக்கி விட்டோம்.(அல்குர்ஆன்37 : 98)

இப்ராஹுமுக்கு எதிராக அவர்கள் சதி செய்ய நினைத்தார்கள். பெரும் ஒரு குழியை அகழைத் தோண்டி நெருப்பு மூட்டி அவர்களை அதில் போட்டார்கள். அல்லாஹ் பாதுகாத்தான்.

காரணம் என்ன? அல்லாஹ் தன் அடியாரைப் பாதுகாப்பான். நடந்தால் அல்லாஹ்வின் நாட்டப்படி. அல்லாஹ்வின் கட்டளைகளை செயல்படுத்தும் போது ஏற்படுகிற இழப்புகளைத் தாங்கிக் கொள்பவன்தான் முஸ்லிம்.

அல்லாஹ்வின் கட்டளைகளை அல்லாஹ்வின் தீனை ஏற்று நடக்கும்போதும், அல்லாஹ்வின் தீனை பரப்புகிற போதும் ஏற்படுகிற நஷ்டங்களை கஷ்டங்களை துன்பங்களை எதிரிகளின் தொந்தரவுகளை சகித்துக் கொள்பவன்தான் முஸ்லிம்.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பண்புகளில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குர்ஆனில் பல இடங்களில் சொல்கிற பண்பு,

إِنَّ إِبْرَاهِيمَ لَحَلِيمٌ أَوَّاهٌ مُنِيبٌ

நிச்சயமாக இப்றாஹீம் மிக்க சகிப்புடையவர், அதிகம் பிரார்த்திப்பவர் (எதற்கும்) நம்மையே முன்நோக்குபவர் ஆவார். (அல்குர்ஆன்11 : 75)

வசனத்தின் விளக்கம் : இந்த வசனத்தில் மூன்று பண்புகளை அல்லாஹ் சொல்லுகிறான்,

حليم-இப்ராஹீம் மிகவும் சகிப்பவராக இருந்தார்.

அல்லாஹ்வுடைய الاسماءالحسنىவிலும் இந்தப் பெயர் வரும். அல்லாஹ்விற்கு இந்தப் பெயர் கூறப்படும் போது அதனுடைய தன்மை மிக மிக முழுமையானது. படைப்பினங்களுடைய தன்மைக்கு ஒப்பாகாது.

படைப்பினங்களுக்கு அல்லாஹ் இந்த தன்மையை சொல்லும்போது, அவர் அவர்களுடைய தகுதிக்கேற்ப, நபிமார்களுக்கு சொல்லும்போது அதனுடைய உயர்வு, அடுத்து மற்றொரு நல்லடியார்களுக்கு சொல்லும்போது அதற்கேற்ப இருக்கும்.

அல்லாஹ், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இந்தக் கண்ணியத்தை அல்லாஹ் கொடுத்ததற்குரிய காரணங்களைச் சொல்லும் போது 'ஹலீம்' –சகிப்பவர், பொறுத்துக் கொள்பவர், அல்லாஹ்வுடைய கட்டளைகளில் உள்ள நுட்பங்களை அறிந்து கொள்பவர்.

இத்தனை பொருள்கள் இந்த ‘ஹலீம்' என்பதற்கு வரும். ‘ஹலீம்' அல்லாஹ் ஒன்றை கூறியிருக்கிறான் என்றால் அதில் ஒரு நன்மை இருக்கும்.

இன்று எப்படி? நம் அறிவைக் கொண்டு சிந்தித்து பார்க்க வேண்டும். நபிமார்கள் என்ன சொன்னார்கள்? அல்லாஹ்வுடைய கட்டளைகளில் அறிவை நுழைக்க முடியாது. மனிதர்களுடைய செயல்பாடுகளில் வேண்டுமானால் அறிவை நுழைக்கலாம்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் மூஸா அலைஹிஸ்ஸலாம் திகைத்து நின்றபோது கூறுகிறான், உன் கைத்தடியைக் கொண்டு கடலை அடி என்று.

சாதாரண மனிதனின் அறிவு என்ன சொல்கிறது? இந்த நேரத்தில் கைத்தடியைக் கீழே போட்டு அது ஒரு பெரிய பாம்பாக மாறி ஃபிர்அவ்னின் படைகளை பயமுறுத்தட்டும் என்று சொல்லுவது தானே பொருத்தமாக இருக்கும் என்று அற்ப மனிதருடைய அறிவு வேண்டுமானால் சொல்லலாம்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் கேட்டார்களா?யா அல்லாஹ்! அங்கே ஃபிர்அவ்னுக்கு முன்னால் கைத்தடியைக் கீழே போடச் சொன்னாய். பாம்பாக மாற வைத்தாய் இப்பொழுது கடலை அடிக்க சொல்கிறாயே? கடலை அடிப்பதால் எனக்கு என்ன லாபம்?

அல்லது ஃபிர்அவ்னுக்கு என்ன பாதிப்புஎன்று கேட்டார்களா? இல்லை.

இதுதான் இஸ்லாம்! அல்லாஹ் கூறி விட்டால் கட்டுப்படு! பணிந்துவிடு! செய்துவிடு! அதை யோசிக்காதே! அதில் மாற்றத்தைத் தேடாதே! அதில் முரண்பாட்டை தேடாதே! அதில் குதர்க்கத்தை தேடாதே!

அல்லாஹ்வுடைய கட்டளை, மூஸா அலைஹிஸ்ஸலாம், யா அல்லாஹ்! இந்த பாலைவனத்தில் மாட்டிக்கொண்டோம். திக்கற்றவர்களாக திகைத்து நிற்கிறோம், தண்ணீர் வேண்டும்.

அறிவு என்ன சொல்லுகிறது? கைத்தடியைக் கொண்டு மண்ணைக் கிளறினால் மண்ணை தோண்டினால் ஊற்றுக் கண்கள் வரலாம் என்று அறிவு கூறுகிறது.

அல்லாஹ் கூறுகிறான்; கைத்தடியைக் கொண்டு கல்லை அடி என்று. மறு பேச்சு பேசவில்லை. உடனே செய்தார்கள்.(அல்குர்ஆன் 2:60)

மனிதனுடைய அறிவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது அல்லாஹ்வின் ஆற்றல். மனிதனுடைய அழிவுகளால் அல்லாஹ்வின் கட்டளைகளில் உள்ள நுட்பங்களை சூழ்ந்து அறிய முடியாது.  (அல்குர்ஆன் 2:255)

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வுடைய கட்டளைக்கு முன்னால் அப்படித்தான் இருந்தார்கள்.அல்லாஹ்வுடைய கட்டளை வந்துவிட்டால் அதில் முழுமையாக சகித்துக் கொண்டார்கள். அடியார்களின் துன்பங்களை சகித்தார்கள். அல்லாஹ்வின் கட்டளையை களால் ஏற்பட்ட சோதனைகளை சகித்தார்கள்.

இந்த எல்லா சகிப்புகளிலும் அவர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? அடுத்த வார்த்தைகளிலேயே அல்லாஹ் சொல்லுகிறான், “அவ்வாஹூன்” -அல்லாஹ்விடத்தில் அதிகமாக பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தார்கள்.

‘துஆ, தாவத்’ அல்லாஹ்வின் பக்கம் அடியார்களை அழைத்தார்கள். அல்லாஹுவை அழைத்துக் கொண்டு இருந்தார்கள் தங்கள் உதவிக்காக.

இன்று, பெரும்பாலும் நம்மில் பலர், இந்த துஆவின் அருமையை இழந்து விட்டார்கள். இந்த துஆவின் மதிப்பு அவர்களுக்கு தெரிவதில்லை.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், “துஆ முஃமினுடைய ஆயுதமாக இருக்கிறது”என்று.

அல்லாஹ்விற்கு முன்னால் கூனி குறுகி கையேந்தி, தன் பலவீனத்தைக்கூறி, “ரப்பே! என்னை இரட்சித்துக்கொள்! இறைவா! நான் ஏழை, எனக்கு கொடு! நான் தேவையுள்ளவன்! எனக்கு என் தேவைகளை நிறைவேற்று! எனக்கு பாதுகாப்பை கொடு! கண்ணியத்தை கொடு!”

எல்லா தேவைகளையும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் கேட்டுப் பெற்றார்கள். அவர்களுடைய பிரார்த்தனைகள் அனைத்தையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டான்!

அதற்கு காரணம், முந்திய தன்மை “ஹலீம்” அவர்களிடத்தில் அல்லாஹ்விற்கு முன்னால் இருந்த கட்டுப்படுகிற தன்மை. “அவ்வாஹுன்” துஆ செய்து கொண்டே இருப்பார்கள்.

எப்படிப்பட்ட துஆக்கள்? “யா அல்லாஹ்! என்னை மன்னித்துவிடு! யா அல்லாஹ்! மறுமையில் என்னை கேவலப்படுத்தாதே! யா அல்லாஹ்! என்னை சொர்க்கத்தின் வாரிசுகளில் ஒருவனாக ஆக்கு!”என்பதாக.

ஒரு முஃமினுடைய நாவு ஒன்று, அல்லாஹ்வின் நினைவை கொண்டு, அல்லாஹ்வை புகழ்வதை கொண்டு இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

இல்லையென்றால் அல்லாஹ்விடத்தில் மன்றாடுவதைக்கொண்டு, தன்னுடைய அடிமைத்தனத்தை அல்லாஹ்விற்கு முன்னால் வெளிப்படுத்துவதைக்கொண்டு, தன்னுடைய பலவீனத்தை அல்லாஹ்விற்கு முன்னால் பிரஸ்தாபிப்பதைக்கொண்டு அவனுடைய நாவு ஈடுபட்டிருக்க வேண்டும்.

இன்று, நம்முடைய நிலைமை என்ன? அவர்களைப் பற்றிப் பேசுவோம். இவர்களைப் பற்றிப் பேசுவோம். படைப்புகளைப் பற்றி பேசுவோம். படைக்கப்பட்ட அற்ப பொருட்களுடைய தன்மைகளை பற்றிப் பேசுவோம்.

ஒருவர் தன் செல்போனைப்பற்றிப் பேசுவார், தன் செருப்பைப்பற்றிப் பேசுவார், தன் காரைப்பற்றிப் பேசுவார், பங்களாவைப்பற்றி பேசுவார், தன் துண்யாவைப்பற்றி பேசுவார். இப்படி அல்லாஹ்வை பேசவேண்டிய இந்த நாவு அற்ப படைப்புகளை பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கிறது.

நபிமார்களுடைய தன்மை, “அவ்வாஹுன்” அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்.

அடுத்து அல்லாஹ் சொல்கிறான், "منيب"-அல்லாஹ் ஒருவனையே அவர் முன்னோக்கி இருந்தார்.

எந்த நிலைமை ஏற்பட்டாலும் சரி, அல்லாஹ் நீ என்னை பாதுகாத்துக் கொள்! அல்லாஹ் நீ எனக்கு உதவி செய்! என்று அல்லாஹ்வை முன்னோக்குதல்.

இப்படி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் இத்தனை உயர்வுகளை கூறுகிறான் என்றால் அவர்களிடத்தில் இருந்த ஈமானிய பண்புகள்தான் காரணம்.

شَاكِرًا لِّاَنْعُمِهِ‌

அல்லாஹுடைய நிஃமத்திற்கு நன்றி செலுத்தக்கூடியவர். (அல்குர்ஆன் : 16:121)

இத்தகைய பண்புகளிலிருந்து நாம் படிப்பினைகள் பெற்று, நம்முடைய வாழ்க்கையிலும் அது போன்ற ஒரு நல்ல பண்புகளையும், நல்ல தண்மைகளையும் உருவாக்கிக் கொள்வதற்கு அல்லாஹ்வுடைய விருப்பத்தை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அல்லாஹ் அதற்கு வாய்ப்பளிப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/