HOME      Khutba      இறை நினைவு | Tamil Bayan - 147   
 

இறை நினைவு | Tamil Bayan - 147

           

இறை நினைவு | Tamil Bayan - 147


இறை நினைவு

ஜுமுஆ குத்பா தலைப்பு : இறை நினைவு

வரிசை : 147

இடம் : எஸ்.எம்.ஜெ.பிளாசா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 08-10-2010 | 29-10-1431

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வை பயந்து கொண்டவர்கள் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி அடைந்தார்கள்.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா பல வழிகளை நமக்கு கொடுத்திருக்கிறான். சில வணக்க வழிபாடுகளை அளவோடு குறிப்பிட்டு செய்யவேண்டுமென சொல்லுகிறான். சில வணக்க வழிபாடுகளை அளவில்லாமல் செய்து கொண்டே இருங்கள் எனக் குறிப்பிடுகின்றான்.

அத்தகைய வழிபாடுகளில் ஒன்று தான், அல்லாஹ்வை நினைவு கூறுவது. அல்லாஹ்வை புகழ்ந்தவர்களாக அல்லாஹ்வைத் துதித்தவர்களாக, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி செலுத்தியவர்களாக, எப்பொழுதும் அல்லாஹ்வோடு இருக்கிற அந்தத் தொடர்பை பசுமை படுத்தியவர்களாக, அல்லாஹ்வின் நினைவால் நம் நாவுகள் நனைந்ததாக இருக்கின்ற அந்த திக்ர் என்கிற இபாதத்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا (41) وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமாக நினைவு கூருங்கள்.காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள்.(அல்குர்ஆன் 33 : 41,42)

காலை,மாலை, இரவு,பகல், தூங்குவதற்கு முன், தூங்கியதற்குப்பின், தூக்கத்தில் திடுக்கிட்டு எழுந்தால்,தொழுகைக்கு முன்,தொழுகைக்குள், தொழுகையிலிருந்து வெளியேறிய பின், மஸ்ஜிதில் நுழைவதற்கு முன்,மஸ்ஜிதில் நுழைந்ததற்கு பின், வீட்டில் நுழைவதற்கு முன், வீட்டில் நுழைந்ததற்கு பின், வீட்டிலிருந்து வெளியேறும் போது, பயணத்திற்கு செல்லும்போது, கடைத்தெருவிற்கு செல்லும்போது, நீங்கள் ஆகாயத்தில் பறக்கும்போது, நீங்கள் கப்பல்களில் பயணிக்கும்போது.

அதுபோன்று, எல்லா நேரங்களிலும் இன்பமான நேரம், துக்கமான நேரம், லாபமான நேரம், நஷ்டமான நேரம், உடல் சுகமான நேரம், உடல் நோயுற்ற நேரம், எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை நினையுங்கள்.

நினைப்பதற்கு அவன் ஒருவனைத் தவிர வேறு யாரும் முழுமையான தகுதி உள்ளவன் அல்ல.

நினைப்பதற்கு தகுதியானவர்களிள் மிகத் தகுதியானவன், நன்றி செலுத்தப் படுவதற்கு தகுதியானவர்களிள் மிகத் தகுதியானவன் அல்லாஹ்.

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஒரு முஃமின், அல்லாஹுவை நினைக்காமல் எப்படி வாழ முடியும்?

وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ

உங்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடைகள் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதான். (அல்குர்ஆன்16 : 53)

ஆகவே,அந்த அல்லாஹ்வை நினைக்காமல் எப்படி இருக்க முடியும்?

நீங்கள் பிறருடைய நினைவை போன்று அல்லாஹ்வின் நினைவை ஆக்கிவிடாதீர்கள்.

அதாவது, தேவை ஏற்பட்டால் நினைப்பது. தேவை முடிந்து விட்டால் மறந்து விடுவது. கஷ்டம் ஏற்பட்டால் நினைப்பது. சுகம் ஏற்பட்டால் மறந்துவிடுவது.

இதுவல்ல, அல்லாஹ்வை நீங்கள் நினைப்பதற்குண்டான அழகு. எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை நினையுங்கள். எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வை நினையுங்கள்.

الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ

இவர்கள் நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதை ஆராய்ச்சி செய்வார்கள். (அல்குர்ஆன் 3 : 191)

வசனத்தின் கருத்து : அதாவது, நீங்கள் நிற்கும்போதும் அல்லாஹ்வை நினையுங்கள். நீங்கள் உட்கார்ந்திருக்கும் போதும் அல்லாஹ்வை நினையுங்கள். நீங்கள் படுத்திருக்கும் போதும் அல்லாஹ்வை நினையுங்கள்.

படுத்து உறங்க போகிறோம். அந்த நேரத்திலும் அல்லாஹுவை நினைக்காமல் ஒரு முஃமின் தூங்கக்கூடாது.

«بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوتُ وَأَحْيَا»

யா அல்லாஹ்! உன் பெயரால் தான் நான் மரணிக்கிறேன். உன் பெயரால் தான் நான் வாழ்கிறேன். நீதான் என்னை எழுப்புவாய். உன் பக்கமே நான் எழுப்ப படுவேன்.

அறிவிப்பாளர் : ஹுதைபா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6324.

இந்த துஆ ஓதாமல் அவன் தூங்கக்கூடாது. அல்லாஹ் தன்னை படைத்தவன். தன் வாழ்வும் சாவும் அவன் கையில் இருக்கின்றது என்று நம்பிக்கை கொண்ட பிறகு, ஒருவன் பிஸ்மில்லாஹ் என்று கூறாமல் தூங்குகிறான் என்றால் அவன் அல்லாஹ்வின் மறுமையில் நம்பிக்கை கொண்டதில் பலவீனம் இருக்கின்றது. அங்கு குறைபாடு இருக்கின்றது என்று பொருள்.

அதுபோன்று தூங்கி எழுந்த பிறகும் துஆ ஓத வேண்டும்.

இன்று சிலரைப் பார்க்கலாம்; விழித்தற்கு பிறகு பல விஷயங்களைப் பற்றி பேசுவார்கள். திடுக்கிட்டு எழுவார்கள். ஆனால், அவர்களுடைய சிந்தனை எல்லாம் அல்லாஹ்வைப் பற்றி இருக்காது.

அல்லாஹ்வோடு இவனுடைய தொடர்பு பசுமையாக இருக்கின்றது... அல்லாஹ்வை இவன் தன்னுடைய ரப்பு என்று புரிந்து வைத்திருக்கின்றான். அவனிடத்தில் தான் தன்னுடைய உயிர் இருக்கிறது என்று புரிந்து வைத்திருக்கின்றான்.

இன்றைய நாள் நமக்கு கிடைத்திருப்பது அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கிற அவகாசம். அல்லாஹ் நாடியிருந்தால் நம் வாழ்க்கை எல்லாம் அல்லாஹு ரப்புல் ஆலமீன் நேற்றோடு முடித்திருக்கலாம்.

அல்லாஹ் நாடவில்லை என்றால் நம்மால் எழுந்திருக்க முடியுமா? இந்த உயிர் திரும்ப வருமா?

இவற்றையெல்லாம் ஒரு முஃமின் நம்பிக்கை கொண்டிருந்தால் அவன் எழுந்தவுடன் கூறுகின்ற வார்த்தை என்னவாக இருக்கும்?

«الحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ»

எங்களை மரணிக்க வைத்ததற்கு பிறகு எங்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அறிவிப்பாளர் : ஹுதைபா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6324.

பலபேருக்கு இந்த துஆக்கள் எல்லாம் தெரியாது.

ஒரு முஸ்லிம் காலையின் பொழுதை அவன் துவக்கும் போது அவன் கூறுகிற வாசகம் அல்லாஹ்வின் நினைவாக இருக்க வேண்டும்.

அவன் நோயாளியாக படுத்திருக்கலாம். நஷ்டமடைந்து படுத்திருக்கலாம். ஒரு துக்கமான செய்தியைக் கேட்டு படுத்திருக்கலாம். உடல் வலியால் வேதனையால் படுத்து இருக்கலாம். சொத்து சுகங்களை இழந்து படுத்திருக்கலாம்.

அன்று இரவு தன் தகப்பனை இழந்திருக்கலாம். அல்லது தன் மனைவியைத் கஃபன் செய்திருக்கலாம். அல்லது தன் பிள்ளையை கஃபன் செய்திருக்கலாம். எத்தனையோ இந்த உலகங்களில் உள்ள செல்வங்களை எல்லாம் அவன் இழந்து இருக்கலாம்.

ஆனால், அவன் தூங்கி எழும்போது அவற்றையெல்லாம் அவன் நினைவு கூறலாமா? அந்தத் துக்கங்கள் எல்லாம் அவன் நினைவுக்கு வரலாமா? என்ன நினைவுக்கு வர வேண்டும்? யார் நினைவுக்கு வர வேண்டும்? அல்ஹம்து லில்லாஹ்! அல்லாஹ் உனக்கே புகழ் எல்லாம்.

இந்த நேரத்தில் உன்னை நினைக்காமல் வேறு யாரை நினைப்பது! என்னை விழிக்க வைத்தாயே! எந்த நிலையில் என்னை விழிக்க வைத்தால் என்ன?

நோயாளியும் இதை சொல்லியாக வேண்டும். வறுமையில் உள்ளவனும் இதை சொல்லியாக வேண்டும். துக்கத்தில் உள்ளவனும் இதை சொல்லியாக வேண்டும். துன்பத்தில் உள்ளவனும் இதை சொல்லியாக வேண்டும்.

ஏன் தெரியுமா?ஒருவன் நோயில் இருக்கின்றான். இந்த நோயை குணப்படுத்துவதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதற்கு அல்லாஹ் எனக்கு ஒரு வாழ்வை கொடுத்து தவ்ஃபீகை

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை ஒரு முஃமினை பொருத்தவரை அவனுடைய நோய் அவனுடைய சுகவீனம் அவனுக்கு கஃப்பாரா.

இன்று நாம், நோயைப் பார்த்து பயப்படுகிறோம். பயப்பட வேண்டிய ஒன்று தான். நோய் ஏற்பட்டதால் அல்லாஹ்வை குறை கூற வேண்டிய அவசியம் இல்லை.;

ஒரு முஃமினை பொருத்தவரை அந்த நோயும் அவனுக்குக் கஃப்பாரா. என் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு இந்த நோய் காரணியாகும்.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு நோயாளியை சந்திக்க சென்றால் இப்படி பிரார்த்தனை செய்வார்கள்:

«لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ»

அல்லாஹ்வின் நாட்டப்படி இந்த நோய் உங்களின் பாவங்களை விட்டு கழுவி சுத்தப்படுத்தி விடும். (1)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 5662.

அல்ஹம்துலில்லாஹ் எப்படிப்பட்ட பிரார்த்தனை!

ஆகவேதான்,மார்க்க அறிஞர்கள் எழுதுகிறார்கள்: திடீரென்று மரணிப்பதை விட சற்று நோய்வாய்ப்பட்டு படுக்கையிலிருந்து பிறகு மரணிப்பது சிறந்தது என்று. காரணம், சிறு பெரு பாவங்களுக்கெல்லாம் அந்த நோய் கஃப்பாராக ஆகிவிடும்.

ஒரு அடியான், அல்லாஹ்விடத்தில் இஸ்திக்ஃபார் தௌபா செய்வதற்கும், யாருடைய ஹக்குகளையாவது இவன் தன்னிடத்தில் வைத்திருந்தால் அந்த ஹக்குகளை ஒப்படைப்பதற்கும், அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதற்கும், தான் அநியாயம் செய்தவர்களோடு சமரசம் செய்து அவர்களிடத்தில் திருப்பி கொடுப்பதற்கும் இது ஏற்றமானது; இது சிறந்தது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திடீர் மரணத்தை விட்டு அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடினார்கள்.

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ، وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ، وَالْحَرِيقِ

யா அல்லாஹ்! மூழ்கி சாவதிலிருந்து, எரிந்து சாவதிலிருந்து, இடிந்து விழுந்து சாவதிலிருந்து, உயரமான இடத்திலிருந்து சறுக்கி கீழே விழுந்து சாவதிலிருந்து, திடீர் மரணத்திலிருந்து நான் பாதுகாப்பு தேடுகிறேன்.

அறிவிப்பாளர் : அபுல் அஸ்வத் அஸ்சுலமி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : நசாயி, எண் : 5533.

எத்தனை அழகான பிரார்த்தனை பாருங்கள்.

ஒருவர் கப்பலில் பயணம் செய்கிறார். திடீரென்று கப்பல் உடைந்து மூழ்கி விடுகிறார். திடீரென்று வீடு தீப்பற்றி எரிகிறது. இன்றைய விமான விபத்துக்கள் கூட தீ விபத்து என்று சொல்லலாம்.

அல்லாஹ்வின் நினைவு என்பது காலங்களைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டது அல்ல.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹாஅவர்கள் கூறுகிறார்கள் :

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ»

தங்களின் அனைத்து நேரங்களிலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வை நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 373.

அல்லாஹ்வின் நினைவை மறந்தவர்களாக ஒரு நிமிடம் கூட ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழவில்லை.

சில மார்க்க அறிஞர்கள் எழுதுகிறார்கள் :

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய சுய தேவையை நிறைவேற்றுவதற்காக சென்று திரும்பும்போது.

غفرانك

யா அல்லாஹ்!உன் மன்னிப்பை நான் கேட்கிறேன்.

நம்முடைய சுய தேவைக்கு சென்று திரும்பும் போது ஓத வேண்டிய துஆ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.

இங்கு மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் :

சுய தேவைக்கு சென்று வரும்போது பாவமன்னிப்புத் தேடுவதற்கு என்ன காரணம்?

அந்த இடத்தில் நாவால் அல்லாஹுவை நினைவு கூற முடியாமல் போக முடிகிறது. அப்படி என்றால் ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கை அல்லாஹ்வுடைய திக்ரோடு எப்படி தொடர்புடையதாக இருக்க வேண்டும்!

அல்லாஹ்வை எப்படி திக்ரு செய்ய வேண்டும்? திக்ருக்காக ஒதுக்க வேண்டிய நேரம் என்ன? திக்ர் எவ்வளவு செய்ய வேண்டும்? 

இன்று சிலர் சொல்வார்கள்; நான் இன்று இரவு அதிக நேரம் விழித்திருந்தேன் என்று.

நன்மையில் விழித்தவர்கள் நாளை மறுமையில் நன்மையை அறுவடை செய்வார்கள். பாவத்தில் விழித்தவர்கள் நாளை மறுமையில் பாவத்தின் தண்டனையை அறுவடை செய்வார்கள்.

அல்லாஹ் சொல்கின்றான் :

நீங்கள் இரவில் விழிக்க வேண்டுமா?அல்லாஹ்வின் தஸ்பீஹ்வில் விழித்திருங்கள் என்று.

அல்லாஹ்வைத் துடிப்பதில் அல்லாஹ்வை நினைப்பதில் நீண்ட இரவு அவனை விழித்திருங்கள்.

ஒரு முஸ்லிம் எப்பொழுது எழுந்திருக்க வேண்டும் தெரியுமா?

அல்லாஹ் குறிப்பிடுகின்றான் :

وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ

அவர்கள் விடியற்காலை நேரத்தில் (எழுந்து தங்கள் இறைவனை வணங்கி, அவனிடம் பாவ) மன்னிப்புக் கோருவார்கள். (அல்குர்ஆன் 51 : 18)

முஸ்லிம்கள் சுபுஹு தொழுகைக்கு முன்னால் உள்ள அதிகாலை சஹர் நேரத்தில் எழுந்திருப்பார்கள்.

எழுந்து என்ன செய்வார்கள்? அல்லாஹ் எங்களை மன்னித்துவிடு என்று அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்புக் கேட்டு கொண்டிருப்பார்கள்.

மார்க்க அறிஞர்கள் எழுதுகிறார்கள் :

ஒரு மனிதன் பகலெல்லாம் வேலை பார்க்கிறான். இரவில் தூங்கி விடுகிறான். எழுந்திருப்பது கிடையாது. இவனுடைய உதாரணம், பொதி சுமக்கும் கழுதையைப் போல.

ஏன்?அல்லாஹ்வை நினைப்பதற்கு இவன் என்ன நேரம் வைத்திருக்கின்றான்?அந்தக் கழுதை கூட எல்லா நேரங்களிலும் திக்ரு செய்கிறது.

அல்லாஹ் கூறுகின்றான் :

وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ

எல்லா பொருட்களும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றன. மனிதனே உனக்கு புரியவில்லையா? அவை எப்படி தஸ்பீஹ் செய்கின்றன என்று. (அல்குர்ஆன்17 : 44)

இந்த திக்ரு குறித்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

«مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لاَ يَذْكُرُ رَبَّهُ، مَثَلُ الحَيِّ وَالمَيِّتِ»

அல்லாஹ்வை நினைப்பவன் உயிர் உள்ளவன் போன்று. அல்லாஹ்வை நினைக்காதவன் மய்யித்தைப் போன்று.

அறிவிப்பாளர் : அபூமூஸா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6407.

இன்று, நம் வாழ்க்கையை சற்று நினைத்துப் பாருங்கள். அல்லாஹுவை நினைவு கூறுவதில் நாம் எந்த அளவிற்கு இருக்கின்றோம்.

நம்மில் பலருக்கு திக்ர் உடைய வாசகங்கள் கூட தெரியாமல் இருப்பார்கள். பலருக்கு அல்லாஹ்வை திக்ரு செய்வதற்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்த அந்தத் தூய வார்த்தைகளை அறியாதவர்களாக இருப்பார்கள்.

அவற்றையெல்லாம் ஹதீஸ் நூல்கள் மூலமாகவும் ஆதாரமிக்க துஆக்களின் நூல்கள் மூலமாகவும் தெரிந்துகொள்ள வேண்டும்ல்.

அல்லாஹ்வை நினைப்பதற்கு என்று அழகிய வாசகங்களை அல்லாஹ்வும் கற்றுக் கொடுத்திருக்கின்றான். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வை அவனுடைய அழகிய பெயர்களைக் சொல்லிக் கொண்டே இருப்பது. அல்லாஹ்வைப் பற்றி அல்லாஹ்வுடைய அடியார்களிடத்தில் பிரஸ்த்தாபித்துக்கொண்டே இருப்பது.

அர் ரஹ்மான் -அளவற்ற அருளாளன். அர் ரஹீம் அன்பு செலுத்தக் கூடியவன். அல் கஃபூர் பாவங்களை மன்னிப்பவன்.

எனது பாவங்களை மன்னிப்பானாக! என்று அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களைக் கொண்டு அவனைப் புகழ்ந்து கொண்டே இருப்பது. அவற்றைப்பற்றி மக்களுக்கு மத்தியில் பிரஸ்தாபித்து கொண்டே இருப்பது.

அல்லாஹ் சொல்லுகின்றான் :

நீங்கள் என்னிடத்தில் மன்னிப்பு கேளுங்கள். நான் பாவங்களை மன்னிக்கக் கூடியவனாக இருக்கின்றேன்.

நூஹ் அலைஹிஸ்ஸலாம் தன் சமூகத்தைப் பார்த்துச் சொன்னார்கள் :

فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا

என் சமூக மக்களே!அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேளுங்கள் அவன் பாவங்களை மன்னிப்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 71 : 10)

ஒரு கஷ்டப்படுகின்ற துக்கப்படுகின்ற ஒரு மனிதனை பார்த்தால் அவரிடத்தில் அல்லாஹ்விடத்தில் கேட்பாயாக என்று சொல்லுங்கள்.

அல்லாஹ் கூறுகிறான்;

أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ

கஷ்டத்தில் சிக்கித் தவிப்பவர்கள் பிரார்த்தனை செய்தால் என்னைத் தவிர அவன் பிரார்த்தனைக்கு வேறு யாரு பதில் கொடுக்க முடியும்? (அல்குர்ஆன் 27 : 62)

அல்லாஹ்வுடைய பெயர்களில் ஒன்று, முஜீப் -பதில் அளிப்பவன். கரீம் -அருகாமையில் உள்ளவன். முஹ்ஸின் -அளவுகடந்து உபகாரம் செய்பவன்.

ஆகவே, அல்லாஹ்விடத்தில் கேள்.

வறுமையில் ஒருவனை பார்க்கிறீர்களா? அவர்களிடத்தில் சொல்லுங்கள்; அல்லாஹ்விடத்தில் உனக்கு வாழ்க்கைக்கு தேவையானதை கேள் என்று.

அல்லாஹ் சொல்கின்றான் :

يَاأَيُّهَا النَّاسُ أَنْتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ

மனிதர்களே! நீங்கள் அனைவரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ்வுடைய உதவி தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ முற்றிலும் தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான். (அல்குர்ஆன் 35 : 15)

எந்த நிலையிலும் சரி,அல்லாஹ்வை அவனுடைய அடியார்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த மக்கள் நபிமார்களை போல. அந்த நபிமார்களுக்கு பிறகு அந்த நபிமார்களின் கட்டளைகளை எடுத்து பிரச்சாரம் செய்யக் கூடியவர்களை போல.

நபிமார்கள் தாங்களும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தார்கள்.பிறரையும் அல்லாஹ்வை நினைவு கூறும் படி தூண்டிக் கொண்டே இருந்தார்கள்.

எப்படிப்பட்ட வாழ்க்கை சந்தர்ப்பங்களை எல்லாம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வரலாறுகளில் நாம் பார்க்கிறோம்.

அன்னை ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மனிதர்களிலேயே மிகவும் பிடித்தமானவர்.

பாத்திமாவிற்கு யாரும் தொந்தரவு தராதீர்கள். கடைசி நேரத்தில் ஃபாத்திமாவோடு பேசிக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட நேசம் மிகுந்த பாசம் மிகுந்த மகள்தான் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா.

அந்த பாத்திமாவிற்கு ஒரு கஷ்டம் என்றால் அவர்களுக்கு ஒரு சிரமம் என்றால் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்!

ஆனால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறுமைக்காக பிறந்தவர்கள் அல்லவா. மறுமைக்காக மக்களை தயார்படுத்தும் படி ஏவப்பட்டவர்கள் அல்லவா. இந்த உலக சுகங்களை எல்லாம் துறக்க வேண்டுமென்று அல்லாஹ்வால் பனிக்கப்பட்டவர்கள் அல்லவா.

ஃபாத்திமாவிற்க்கும் அலிக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. கணவனே! என் கஷ்டத்தை பார்க்கிறீர்கள். என் கையை பார்த்தீர்களா? என் தோள்பட்டையை பார்த்தீர்களா? என்னுடைய அன்றாட வேலைகளை பார்த்தீர்களா? என்னுடைய உடையை பார்த்தீர்களா?

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் பணிவிடை ஆள்கள் வந்திருக்கிறார்களே, அடிமைப் பெண்கள் வந்து இருக்கிறார்களே நம் வீட்டிற்கு வேலை செய்வதற்கு அடிமைப் பெண்ணை வாங்கி வரலாமே, கேட்டு வருவீர்களா? என்று சொல்கிறார்கள்.

இன்று, சில மக்கள் பேசுவதை பார்க்கிறோம்; என் மகள் மிகவும் சொகுசாக வளர்ந்தவள். எனவே, அந்த மகளை ஒரு பணக்காரன் வீட்டிற்குத்தான் மணமுடித்துக் கொடுப்பேன். ஒரு வசதியான இடத்தில் தான் மணம் முடித்துக் கொடுப்பேன்.

மறுமையை மறந்தவர்கள் தான் இப்படி பேசுவார்கள். அல்லாஹ்வின் அச்சத்தை இழந்தவர்கள் தான் இப்படி பேசுவார்கள்.

மறுமை என்றால் என்ன? மார்க்கம் என்றால் என்ன? இந்த உலகம் எதற்காக படைக்கப்பட்டது? என்பதை தெரிந்து கொள்ளாதவர்கள் தான் இப்படி பேசுவார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணத்திற்கு மணமகனை தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல்களை கற்றுக்கொடுத்தார்கள்.

அந்த அளவுகோலை புரியாதவர்கள் தான் இப்படி பேசுவார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்

மணமகனை தேர்ந்தெடுக்க வேண்டுமா?

ஒருவர் உங்களிடத்தில் வந்து உங்கள் பெண்ணை உங்கள் சகோதரியை மணம் பேசுகிறார்.அவருடைய மார்க்கம் அவருடைய குணம் சரியாக இருந்தால் நீங்கள் அவருக்கு மணமுடித்துக் கொடுக்க வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.

இந்தக் கட்டளையை ஏற்காதவர் குழப்பத்தையும் ஆபத்தையும் சந்தித்துக் கொள்ள வேண்டும்.

இன்று, ஒரு முஸ்லிம் அவன் திருமணம் பேசும்போது வறுமையைக் காரணம் காட்டி புறக்கணிக்கப்பட்டால் புறக்கணிப்பவன் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்தை சேர்ந்தவன் அல்ல.

ஒரு முஸ்லிம் குணத்தாலும் பண்பாலும் மார்க்கத்தால் சிறந்தவன். அவன் பெண் கேட்டு வரும்போது அவன் படிப்பின் தகுதியை வைத்து அவர் புறக்கணிக்கப் பட்டால்  அவனுடைய சமூக அந்தஸ்தால் புறக்கணிக்கப் பட்டால் புறக்கணிப்பவர் மறுமுறை அவருடைய ஈமானை சரி செய்து கொள்ளட்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மகளார் படாத கஷ்டமா? கைகள் காய்த்து விட்டன, தோள்கள் பதிந்துவிட்டன, அன்றாடம் சிரமம்.

சுவர்க்க பெண்மணிகளின் தலைவி. அந்தப் பெண்ணுடைய நிலைமையை பாருங்கள்.

அலி ரழியல்லாஹுஅன்ஹுஒருமுறை வருகிறார்கள். பாத்திமா விடம் சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்கிறதா? என்று கேட்கும் அளவிற்கு குடும்ப நிலை வறுமையில் இருந்தது.

அப்போது பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சொல்லுகிறார்கள்; அன்பு கணவரே! சாப்பிடுவதற்கு வீட்டில் ஒன்றுமே இல்லை என்று.

பொறுத்திருங்கள் என்று கூறிவிட்டு அலி ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் புறப்படுகிறார்கள். ரசூலுல்லாஹ் அவர்களுடைய மருமகனார். இந்த உம்மத்தின் நான்காம் கலிஃபா. சொர்க்கத்து நற்சான்று சொல்லப்பட்டவர்களில் ஒருவர்.

ஒரு யஹூதியின் தோட்டத்திற்கு செல்லுகின்றார். தோட்டத்தின் உரிமையாளரே! ஏதாவது கூலி வேலை இருக்கிறதா செய்வதற்கு?

அவர் சொல்லுகின்றார்; பேரித்தம் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவேண்டும், முடிந்தால் செய் என்று.

பேரித்தம் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறார். என் கூலி? என்று கேட்கிறார். ஒரு கை நிறைய பேரித்தம் பழங்களை கொடுக்கிறார்.

பல மணிநேரங்கள் தோட்டத்தில் உள்ள அத்தனை மரங்களுக்கும் தண்ணீர் இறைத்து கொடுத்ததற்கு பிறகு கிடைக்கின்ற கூலி, கைநிறைய பேரீத்தம் பழங்கள்.

இதை எடுத்து வந்து தானும் சாப்பிடுகிறார். தன் மனைவிக்கும் கொடுக்கிறார். தன் பிள்ளைகளுக்கும் கொடுக்கிறார்.

கூலி வேலை செய்கிறார் என்கின்ற காரணத்தால், அவரிடத்தில் மார்க்கம் இருந்தும், அவரிடத்தில் பண்புகள் இருந்தும், ஒருவர் தன் மகளை அவருக்கு மணம் முடித்து கொடுப்பதற்கு மறுத்தால் அவன் அலியை அவமதிப்பவன்.

அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சாதாரண தோட்ட வேலை செய்து சம்பாதித்து ரசூலல்லாஹ் அவர்களுடைய மகளை காப்பாற்றினார்கள். அவர்களுக்கு பசிக்கு உணவு அளித்தார்கள்.

செய்கின்ற வேலையில் அவமானம் இல்லை. நீங்கள் பார்க்கின்ற தொழில்களில் கேவலம் இல்லை.

கேவலம் எது தெரியுமா? பணக்காரர்கள் என்று பேசுகிறார்களே, வட்டியில் சம்பாதிக்கிறார்கள், இது கேவலம். பொய் சொல்லி சம்பாதிக்கிறார்கள், இது கேவலம். ஏமாற்றி சம்பாதிக்கிறார்கள், இது கேவலம். மோசடி செய்து சம்பாதிக்கிறார்கள், இது கேவலம்.

ஹாலாலில் சம்பாதிப்பது கேவலம் அல்ல. கூலிவேலை செய்து உண்மையாக அல்லாஹ்விற்கு பயந்து, தன் எஜமானருக்கு விசுவாசமாக இருந்து,தன் உரிமையாளருக்கும் விசுவாசமாக இருந்து, அல்லாஹ்வையும் ஏமாற்றாமல் தன் எஜமானறையும் ஏமாற்றாமல் உண்மையாக பேசி, கூலி வேலை செய்து சம்பாதிக்கின்றானே இந்த மனிதன் நாளை அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவனாக இருப்பான்.

அவன் சொர்க்கத்திற்குச் செல்வான்.இவன் நரகத்திற்கு செல்வான். முகம் குப்பற தூக்கி எறியப்படுவான். அதுதான் கேவலம்.

இந்த உலகத்தில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வது கேவலம் அல்ல,ஒருவரிடத்தில் கூலி வேலை செய்வது கேவலம் அல்ல.

மாடிவீட்டில் வாழ்வது கண்ணியம் என்று நினைப்பார்கள். உயர்ந்த பங்களாக்களில் வாழ்வது கண்ணியம் என்று நினைப்பார்கள். சொகுசு கார்களில் சுற்றுவது கண்ணியம் என்று நினைப்பார்கள்.

அல்லாஹ் முஃமின்களைப் பற்றி சொல்கின்றான் :

الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

இவர்கள் நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதை ஆராய்ச்சி செய்வார்கள். மேலும், ‘‘எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணாக படைக்கவில்லை. நீ மிகத்தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக! (அல்குர்ஆன் 3 : 191)

ஒருமனிதன் நரகத்தில் தள்ளப்படுவது கேவலம். இதைத்தான் அல்லாஹ்வின் நண்பர்  இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் பயந்தார்கள்.

இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் கேட்கிறார்கள் :

وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ (87) يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ (88) إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ

(உயிர் கொடுத்து) எழுப்பப்படும் (மறுமை) நாளில் நீ என்னை இழிவுக்குள்ளாக்காதே! அந்நாளில், பொருளும் பிள்ளைகளும் ஒரு பயனுமளிக்கா. ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்). (அல்குர்ஆன் 26 : 89)

எந்த உள்ளத்தில் அல்லாஹ்வின் அன்பு மட்டும் இருந்ததோ,எந்த உள்ளத்தில் அல்லாஹ்வின் மீது மட்டும் தவக்குல் இருந்ததோ,அல்லாஹ்வின் மீது மட்டும் ஆதரவு இருந்ததோ,அந்த உள்ளம் உள்ளவர்கள் மட்டும்தான் நாளை மறுமையில் வெற்றி அடைவார்கள்.

அவர்களுடைய உடல் எப்படி இருந்தால் என்ன! குருடனாக இருந்தால் என்ன! நொண்டியாக இருந்தால் என்ன! முடமாக இருந்தால் என்ன! அவன் ஏழையாக இருந்தால் என்ன! யாராக இருந்தாலும், கல்புன் சலீம் -ஆக இருக்க வேண்டும். அவர்தான் அங்கே நேர்வழி பெறுவார். அவர்தான் அங்கே பாதுகாப்புப் பெறுவார்.

சம்பவத்தின் தொடர்ச்சி : கண்ணியத்திற்குரியவர்களே! திரும்பவும் சம்பவத்திற்கு வருவோம். அலி ரழியல்லாஹுஅன்ஹுசொல்லுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதரிடத்தில் எனக்கு கேட்பதற்கு வெட்கமாக இருக்கிறது என்று. எப்படிப்பட்ட சிரமம்! அந்த சிரமத்தில் கூட, அதுவும் ரசூலுல்லாஹ் இடத்தில் தன்னுடைய மாமனார் இடத்தில் கேட்பதற்கு வெட்கப்படுகிறார்.

இன்று, கேட்பது நாகரிகமாக மாறிவிட்டது. அதுவும் மாமனாரிடத்தில் வருத்தி கேட்பது அது உரிமையாக மாறிவிட்டது.

அப்போது ஃபாத்திமா சொல்லுகின்றார்கள்; சரி நான் கேட்டு வருகிறேன். ரசூலுல்லாஹ் அவர்களின் சபையில் வந்து நின்றார்கள்.

கேட்பதற்கு நாணம் தடுக்கிறது. முடியவில்லை எப்படியோ வந்து விட்டார்கள். ஆனால், நாவு வரவில்லை. சிரிது நேரம் தாமதித்து விட்டு திரும்பி விடுகிறார்கள்.

சில தோழர்களோடு பேசிக்கொண்டிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய தேவைகளை முடித்துக் கொண்டு, மகளார் வந்தாரே, ஃபாத்திமா அவருடைய அந்த முகத்தின் அறிகுறிகளை தெரிந்து கொண்டு ஓடோடி வருகிறார்கள்.

ஃபாத்திமாவே எதற்காக நீங்கள் வந்தீர்கள்? நீங்கள் வந்ததற்கு என்ன காரணம்? அப்போது சொல்லுகிறார்கள்;

அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையே! என் கைகளை பார்த்தீரா? காய்த்து விட்டது. என் தோள் பட்டையை பார்த்தீரா? தோள் துருத்தியில் தண்ணீரைக் கொண்டுவந்து கொண்டுவந்து இந்தத் தோளில் ஒரு அடையாளம் பட்டுவிட்டது. என்னுடைய உடைகளை பார்த்தீர்களா? ஓய்வே இல்லை.

அப்போது ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அப்படியா மகளே! நான் உனக்கு ஒன்றைச் சொல்லி தரட்டுமா?நீ கேட்கின்ற அந்த பணிப்பெண்ணை விட சிறந்த ஒன்றை நான் உனக்கு சொல்லித் தரட்டுமா?

அன்னை பாத்திமா சொல்லுகின்றார்கள்; அல்லாஹ்வின் தூதரே! சொல்லிக்கொடுங்கள்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: 33தடவை சுப்ஹானல்லாஹ் என்றும், 33தடவை அல்ஹம்துலில்லாஹ் என்றும், 34தடவை அல்லாஹு அக்பர் என்றும் தூங்குவதற்கு முன்னால் சொல்லிக்கொள்ளுங்கள்.

இது உங்களுக்கு உங்களோடு பணிகளில் ஒத்துழைக்கின்றன பணிப்பெண்ணை விட வேலைக்காரர்களை விட சிறந்தது. (2)

அறிவிப்பாளர் : அலீ ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3705.

துன்யாவைக் கேட்டு வந்தவருக்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஹிரத்தைக் கொடுத்தார்கள்.

இந்த ஹதீஸை ஒருமுறை ஸஹீஹுல் புகாரியில் எடுத்து பார்ப்போமாக!

இந்த ஹதீஸ் கூறுகின்ற பாடம் என்ன? தன் மகளுக்கு துன்யாவின் சிரமங்களின் பக்கம் பார்வை திரும்பியபோது மறுமையை நினைக்கும்படி சொன்னார்கள். இபாதத்தின் பக்கம் திரும்பும் படி சொன்னார்கள்.

இன்று,வேலைக்காரர்களை எதற்கு வைக்கிறார்கள்? அப்பதான் கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் போக முடியும். சுற்றிப் பார்ப்பதற்கு போகமுடியும். நம்ம கொஞ்ச நேரம் ஃப்ரீயா உட்கார்ந்து டிவி பார்க்க முடியும்.

அன்னை ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சொன்னார்கள்; அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஏற்றுக்கொண்டோம். சிறந்த ஒரு அன்பளிப்பை எங்களுக்கு கொடுத்தீர்கள். எப்படிப்பட்ட பெண் அவர்கள்!

யா ரசூலல்லாஹ் உங்களால் கொடுக்க முடியாதா?இத்தனை பேர் வைத்திருக்கிறீர்களே! இத்தனை அடிமை ஆட்கள் கணீமத்தில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள்.

ஏன் தன் மகளுக்கு தன்னிடத்தில் அடிமைப் பெண்கள் இருந்தும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடுக்கவில்லை? என்ற காரணத்தை அறிஞர்கள் சொல்லுகின்றார்கள் :

இவர்தான் உண்மையான தலைவர். பைத்துல்மாலில் தனக்கென ஒரு பங்கு இருந்தும் அதைவிட முஸ்லிம் ஏழைகளை அதற்கு உரிமையாளர்களாக கருதியவர் தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

அந்த அடிமையை விட்டால் ஒரு முஸ்லிம்கள் கைதியை காஃபிர்களிடமிருந்து விடுதலை செய்யலாம். அல்லது அதை ஒரு முஸ்லிம்களுக்கு கொடுத்தால் அது அவருக்கு பிரயோஜனமாக இருக்கட்டும் நமக்குப் பிரயோஜனமாக இருப்பதைவிட, என்ற சமூக நன்மையை கருத்தில் கொண்டுதான்தன் நன்மையை இங்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின் தங்கினார்கள்.

பொதுவாக இன்றைய நிலைமை என்ன? சமூக தலைவர்களாக இருக்கட்டும், சமூகப் பொறுப்பாளர்களாக இருக்கட்டும், எது வந்தாலும் சரி, எது கிடைத்தாலும் சரி, அதை தான் அனுபவிக்க வேண்டும், தனக்கு முதலாவதாக, தன்னுடைய மனைவிக்கு முதலாவதாக, தன்னுடைய பிள்ளைகளுக்கு முதலாவதாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒரு முறை கொஞ்சம் உணவு பொருட்கள் வருகிறது. தேன் அல்லது நெய் அது போன்ற விஷயங்கள். பங்கு வைத்துக் கொடுக்க வேண்டும்.

அவருடைய மனைவியார் சொல்லுகிறார்; நான் பங்கு வைக்கட்டுமா? என்று. உமர் சொல்கின்றார்கள்; வேண்டாமென்று.

ஏனென்றால், அதை பங்கு வைக்கும்போது உன் கையில் ஒட்டியதை நீ எடுத்து அதை சாப்பிட்டு விட்டால் அது உனக்கு கூடுதலாக ஆகிவிடுமோ என்று நான் அல்லாஹ்விடத்தில் பயப்படுகிறேன்.

எப்படிப்பட்ட தக்வா பாருங்கள்! எப்படிப்பட்ட பேணுதல் பாருங்கள்!

பொதுச்சொத்தை நிர்வகிப்பவர்களிடத்தில் இருக்கவேண்டிய பேணுதல், பயம் உமர் ரழியல்லாஹு அன்ஹு இடத்திலிருந்து படிக்கவேண்டியது.

இப்படி அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நம்மை திக்ரோடு இணைக்க விரும்புகிறான். இந்தத் திக்ர் உள்ளத்திற்கு உயிரைக் கொடுக்கிறது. அல்லாஹ்வோடு நம்மை நெருக்கமாக்கிறது.

அல்லாஹ் சொல்கின்றான்:

وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ

அடியானே! நீ என்னை நினைத்தால் நான் உன்னோடு இருக்கிறேன். நீ என்னை நினைத்தால் நீ என்னை நினைக்கும் போதெல்லாம் நான் உன்னோடு இருக்கின்றேன். நீ என்னை மனதில் நினைத்தால் நானும் உன்னை மனதில் நினைக்கின்றேன். நீ என்னை ஒரு கூட்டத்தில் நினைத்தால் அதைவிட சிறந்த கூட்டத்தில் நான் உன்னைப் பற்றிப் பேசுகின்றேன். (3)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 7405.

நாம் சுகமான காலங்களில் அல்லாஹ்வை நினைக்கும் போது நம்முடைய வறுமை நேரங்களில் அல்லாஹ் நம்மை நினைக்கிறான்.

இல்லை,சுகமான நேரங்களிலெல்லாம் அல்லாஹ்வை மறந்துவிட்டு வறுமையில் அல்லாஹ்வை நினைக்கும் போது அல்லாஹ் சொல்வதாக வருகிறது,

இந்த அடியானுக்கு என்ன? சுகம் கொடுத்தபோது நன்மை கொடுத்தபோது என்னை மறந்து விட்டான்.வறுமையில் என்னை நினைக்கிறான் என்று.

கண்ணியத்திற்குரியவர்களே! இந்த திக்ர் ஷைத்தானை நம்மை விட்டு விரட்டுகிறது. காரணம், எந்த உள்ளம் அல்லாஹ்வை மறந்து விட்டதோ அந்த உள்ளத்தோடு ஷைத்தான் தொடர்பு வைத்துக் கொள்கிறான்.

பாவமான எண்ணங்கள் பாவங்களை செய்ய வேண்டுமென்ற ஆர்வம், பாவிகளோடு நட்பு, பாவிகள் மீது பிரியம், பாவமான காரியங்களை பார்த்தல்,கேட்டல் பாவமான காரியங்களுக்கு செல்லுதல், இவையெல்லாம் எப்போது நடக்கிறது தெரியுமா?

எப்போது அல்லாஹ்வை அடியான் மறக்கிறானோ அப்போது தான்.

அல்லாஹ்வை நீங்கள் நினைவு கூறும் போது ஒரு ஷைத்தானுடைய இசையை கேட்பதற்கு மனம் வருமா?அதைப் பார்ப்பதற்கு மனம் வருமா? நிச்சயமாக வராது.

முஃமின்களுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கும் கேடயம் திக்ர். அல்லாஹுவை நினைவு கூறுவதால் அல்லாஹ்வோடு நமக்கு தொடர்பு கொள்வது மட்டுமல்ல, அல்லாஹ்வை வணக்க வழிபாடுகள் கொண்டு திருப்தி படுத்துவதற்கும், பாவங்களை விட்டு நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும் மிகப்பெரிய வாய்ப்பு இந்த திக்ர் ஏற்படுத்துகிறது.

ஆகவேதான், திக்ரு உள்ளவர்களை அல்லாஹ் தனியாக விசேஷமாக புகழ்ந்து குர்ஆனில் சொல்லிக் கொண்டே இருக்கிறான்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் என் பாவங்களையும் உங்கள் பாவங்களையும் மன்னித்து அல்லாஹ்வை நினைவு கூரும் நல்லவர்களாக ஆக்கியருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى رَجُلٍ يَعُودُهُ، فَقَالَ: «لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ» فَقَالَ: كَلَّا، بَلْ حُمَّى تَفُورُ، عَلَى شَيْخٍ كَبِيرٍ، كَيْمَا تُزِيرَهُ القُبُورَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَنَعَمْ إِذًا» (صحيح البخاري- 5662)

குறிப்பு 2)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الحَكَمِ، سَمِعْتُ ابْنَ أَبِي لَيْلَى، قَالَ: حَدَّثَنَا عَلِيٌّ، أَنَّ فَاطِمَةَ عَلَيْهَا السَّلاَمُ، شَكَتْ مَا تَلْقَى مِنْ أَثَرِ الرَّحَا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْيٌ، فَانْطَلَقَتْ فَلَمْ تَجِدْهُ، فَوَجَدَتْ عَائِشَةَ فَأَخْبَرَتْهَا، فَلَمَّا جَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ عَائِشَةُ بِمَجِيءِ فَاطِمَةَ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْنَا وَقَدْ أَخَذْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْتُ لِأَقُومَ، فَقَالَ: «عَلَى مَكَانِكُمَا». فَقَعَدَ بَيْنَنَا حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى صَدْرِي، وَقَالَ: «أَلاَ أُعَلِّمُكُمَا خَيْرًا مِمَّا سَأَلْتُمَانِي، إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا تُكَبِّرَا أَرْبَعًا وَثَلاَثِينَ، وَتُسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَتَحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ فَهُوَ خَيْرٌ لَكُمَا مِنْ خَادِمٍ» (صحيح البخاري- 3705)

குறிப்பு 3)

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَقُولُ اللَّهُ تَعَالَى: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً " (صحيح البخاري- 7405)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/