ரமழானுக்குப் பிறகு நாம் | Tamil Bayan - 141
ரமலானுக்கு பிறகு நாம்
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமலானுக்கு பிறகு நாம்
வரிசை : 141
இடம் : எஸ்.எம்.ஜெ.பிளாஸா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹு தஆலா ரமலான் மாதத்தை அடைந்து அந்த ரமலான் மாதத்தில் நம்மால் முடிந்த அளவிற்கு வணக்க வழிபாடுகள் செய்வதற்கு அருள் புரிந்தான்.
அல்லாஹ் அந்த வணக்க வழிபாடுகளை ஏற்றுக் கொள்வானாக! அவற்றில் உள்ள குறைகளை நிறைவு செய்வானாக!
ரமலான் மாதம் முடிந்து விட்டது. அடுத்த ரமலானை நம்மில் எத்தனை பேர் அடைவோம் அல்லது அந்த ரமலானை அடைவதற்கு முன்னால் நம்மில் எத்தனை பேரை மலக்குல் மவ்த் அழைத்துச் சென்றுவிடுவார் என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்!
யாரும் சொல்ல முடியாது, நான் அடுத்த ரமலான் வரை உயிரோடு இருப்பேன் என்று. நாளை நான் இருப்பேனா அல்லது இன்று மாலை வரை நான் இருப்பேனா என்பது கூட யாராலும் உறுதியிட்டு சொல்ல முடியாது.
وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا
எவரும் நாளைக்கு அவர் என்ன செய்வார் என்பதை அறியமாட்டார். (அல்குர்ஆன் 31 : 34)
எத்தனையோ பேர் பயணித்தார்கள். அந்தப் பயணத்திலிருந்து அவர்கள் தங்கள் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. அந்த பயணத்தில் அவர்கள் தங்களுடைய மறுமையின் பயணத்தையும் ஆரம்பம் செய்துவிட்டார்கள்.
இந்த ரமலான் வணக்க வழிபாடுகள் நிறைந்த ரமலானாக இருந்தது. குர்ஆனை திறந்து ஓதினார்கள். ஐங்கால தொழுகைகளை ஜமாஅத்தோடு தொழுக முயற்சித்தார்கள். அல்லாஹ்வை திக்ரு செய்தார்கள். தான தர்மங்கள் கொடுத்தார்கள். அல்லாஹ் உடைய இல்லமாகிய மஸ்ஜிதை நிரப்பமாக்கினார்கள்.
மேலும் பல நல்ல காரியங்களை இந்த ரமலானில் செய்தார்கள். இரவு வணக்க வழிபாடுகளை செய்தார்கள். தனிமையில் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்தார்கள். தங்களுடைய பாவங்களை நினைத்து வருந்தி அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு வேண்டினார்கள் .
இப்படி, நம்மில் ஒரு நல்ல கூட்டம் அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் முன்னேறி ரமலானை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்களோ அப்படி பயன்படுத்தி கொண்டவர்களும் நம்மில் இருக்கிறார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்! அவர்கள் வெற்றி அடைந்தவர்கள்.
பலர் இப்படியும் இருக்கிறார்கள், ரமலான் வந்தால் என்ன? அல்லது அல்லாஹ்வுடைய கட்டளைகள் ரசூலல்லாஹ் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறைகள் தங்களுக்கு முன்னால் போதிக்கப்பட்டால் என்ன?இவற்றைப் பற்றி எல்லாம் எந்தவிதமான அக்கறையும் எடுத்துக்கொள்ளாமல்,
பாவமான காரியங்கள், தடுக்கப்பட்ட காரியங்கள்,அல்லாஹ்விற்கு மாறு செய்வது, அவனுடைய தூதருக்கும் மாறு செய்வது, அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை பாழ்படுத்துவது,தொழுகையை விடுவது,நோன்பில் அலட்சியம் செய்வது,ஆசாபாசங்களை பார்ப்பது கேட்பது, இன்னும் பிற தடுக்கப்பட்ட அல்லாஹ்விற்கு வெறுப்பான காரியங்களில் ஈடுபட்டு கொண்டிருப்பது,இப்படி ரமலானை கழித்தார்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அத்தகைய கூட்டத்தில் நம்மையும் நம்முடைய சந்ததியர்களையும் ஆக்காமல் இருப்பானாக!
இவர்களைப் பொருத்தவரை ரமழானின் புனிதத்தை இவர்கள் பேணவில்லை. ரமழானின் கண்ணியத்தை இவர்கள் கண்ணியப்படுத்த வில்லை. ரமழானுக்கு உரிய ஹக்கை இவர்கள் கொடுக்கவில்லை .
இவர்களுக்கு ரமழான் இருந்தால் என்ன, ரமலான் முடிந்தால் என்ன, தங்களுடைய துன்யாவைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்கு லட்சியம் இல்லை.
அல்லாஹு தஆலா இத்தகைய மக்களை பார்த்து சொல்கின்றான் :
مَنْ كَانَ يُرِيدُ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لَا يُبْخَسُونَ
எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 11 : 15)
مَنْ كَانَ يُرِيدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُ فِيهَا مَا نَشَاءُ لِمَنْ نُرِيدُ ثُمَّ جَعَلْنَا لَهُ جَهَنَّمَ يَصْلَاهَا مَذْمُومًا مَدْحُورًا
எவர்கள், (மறுமையைப் புறக்கணித்துவிட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள். (அல்குர்ஆன் 17 : 18)
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
யார் இந்த ரமலானை அடைந்தார்களோ அவர்களைப் பற்றி பேசுகிறோம். யார் இந்த ரமலானை கண்ணியப்படுத்தினார்களோ அவர்களைப் பற்றி பேசுகிறோம்.அத்தகைய மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?
அல்லாஹ் கூறுகிறான் :
إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ
உங்கள் நிலைமையை நீங்கள் மாற்றாத வரை உங்கள் நிலையை அல்லாஹ் மாற்ற மாட்டான். (அல்குர்ஆன்13 : 11)
நீங்கள் முடிவு செய்ய வேண்டும். நான் நல்லவனாக மாற வேண்டும். நான் பேணுதல் உள்ளவனாக மாறவேண்டும். தொழுகையை பேணக்கூடிய ஜகாத்தை பேணக்கூடிய சுன்னத்தை பேணக்கூடிய ஒரு நல்ல முஸ்லிமாக நான் மாற வேண்டும்.
என்று நீங்கள் உறுதி செய்து அதற்காக அழுது அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்யாதவரை அதற்குண்டான அருளை பாக்கியத்தை அல்லாஹ் கொடுக்க மாட்டான்.
பிரார்த்தனையின் தேவை அல்லாஹ்வின் அன்பின் தேவை. அதை உணர்ந்தவர்கள் இறைத்தூதர்கள்,ஸாலிஹீன் என்ற நல்லவர்கள்.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம், அல்லாஹ்வுடைய நெருக்கமான நண்பர், நபிமார்களின் இமாம், நபிமார்களின் தந்தை.
அவர்களுடைய பிரார்த்தனையை பாருங்கள்.
وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ
இப்றாஹீம் (தன் இறைவனை நோக்கிக்) கூறியதை (நபியே!) (அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (அவர்கள் இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! (மக்காவாகிய) இவ்வூரை அபயமளிக்கும் பட்டணமாக நீ ஆக்கிவைப்பாயாக! என்னையும் என் சந்ததிகளையும் சிலைகளை வணங்குவதில் இருந்து தூரமாக்கி வைப்பாயாக! (அல்குர்ஆன் 14 : 35)
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக! (அல்குர்ஆன் 14 : 40)
எத்தனை பேருக்கு கவலை இருக்கிறது. ரமழான் மாதத்தில் மஸ்ஜிதை அலங்கரித்தவர்கள், ஜமாஅத்தை பேணியவர்கள், ஐங்கால நேரத்தில் அதன் தொழுகையை தொழுதவர்கள் இன்று எங்கே சென்று விட்டார்கள்?
ரமழான் மாதத்தில் மட்டுமா அல்லாஹ் இந்த தொழுகையை நமக்கு பேணும் படி கட்டளை இட்டிருக்கின்றான்? ரமழான் மாதம் என்பது உபரியான வணக்க வழிபாடுகளை நபிலான அமல்களை அதிகம் செய்வதற்கு உண்டான மாதம்.
ரமழான் மாதம் என்பது அல்லாஹ்வின் பாதையில் தானதர்மங்கள் செய்வதற்கும் அல்லாஹ்வுடைய வேதம் குர்ஆனை அதிகமதிகம் ஓதுவதற்கும் உண்டான மாதம்.
ஆனால், அல்லாஹ் கடமையாக்கிய பர்ளான கடமைகளை, மேலும் எந்தெந்த செயல்களை செய்யக்கூடாது பார்க்கக்கூடாது கேட்கக் கூடாது என்றெல்லாம் அல்லாஹ் எதை தடை செய்து விட்டானோ அதை ரமலானில் மட்டும் தவிர்த்துக் கொள்வதற்காக அல்ல. ரமழானில் மட்டும் விட்டு விடுவதற்காக அல்ல!
சிலரைப் பற்றிக் கேள்விப் படுகிறோம். பெருமையாக சொல்வார்கள்; ரமழான் வந்துவிட்டால் எங்கள் வீட்டில் உள்ள டிவியை போர்த்தி விடுவோம். எல்லா சீரியல்களையும் நாங்கள் அனைத்து விடுவோம், துண்டித்து விடுவோம். ரமழான் முடிந்ததற்கு பிறகு அதை நாங்கள் திறந்து விடுவோம் என்று.
ஆபாசங்களை பார்ப்பதும் அசிங்கங்களை கேட்பதும் ரமலானில் மட்டுமா அல்லாஹ் தடை ஆக்கினான்? ரமழான் முடிந்துவிட்டால் நான் உங்களுக்கு அதை ஆகுமாக்கி விட்டேன் என்று ரப்புல் ஆலமீன் கூறி இருக்கிறானா?
இது என்ன மார்க்கம்?! முஸ்லிம்களின் இந்த இரட்டை நிலைப்பாடு என்ன? ரமழானில் அல்லாஹ்வை வணங்குகிறார்கள், அல்லாஹ்வின் கட்டளைகளை பேணுகிறார்கள், அல்லாஹ் தடுத்த ஹராமான காரியங்களை விட்டு விலகிக் கொள்கிறார்கள். ரமழான் முடிந்து விட்டால் கடமைகளைப் பாழாக்குகிறார்கள்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ஒரு செய்தியை குறித்து இறை நிராகரிப்பு என்று சொல்லி இருக்கிறார்கள் என்றால், அத்தனை சஹாபாக்களும் ஒருமித்த கருத்தோடு ஒரு அமலை விடுவது இறை நிராகரிப்பு என்று சொல்லியிருக்கிறார்கள் என்றால் அது தொழுகையை விடுவதுதான்.
யார் ஒருவன், அல்லாஹ் கடமையாக்கிய இந்த ஐங்கால தொழுகையை அது கடமை என்று தெரிந்து அதற்கு பிறகு அவன் விட்டு விடுவானோ அவன் இறை மறுப்பாளன்.
சஹாபாக்கள் காலத்தில் தொழுகையை விட்டவர்கள் யாரும் இல்லை. வெளிப்படையாக முனாஃபிக் என்று அறியப்பட்டு விட்டானோ அவர்களை தவிர. அவர்கள் கூட வீடுகளில் தொழுது கொண்டார்கள்.
காரணம், தொழுகையை விட்டால் முஸ்லிம்களே இல்லை என்று நம்மை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்று பயந்து மஸ்ஜிதுக்கு வந்து தொழுதார்கள்.
பிறகு அடுத்த காலகட்டங்களில் பெரும்பாலான இமாம்கள் சொன்னது என்னவென்றால், யார் ஒருவன் தொழுகையை விட்டானோ தொழுகை கடமை என்று அவனுக்கு அறிவுறுத்தப்பட்ட பிறகும், ஃபர்ளு என்று அவனுக்கு நல்ல உபதேசம் செய்யப்பட்டதற்கு பிறகும், அவன் ஜமாஅத்தோடு மஸ்ஜிதில் தொழுகையை நிறைவேற்றுவதற்கு தயாராகவில்லை என்றால், முஸ்லிம்களுடைய கலிஃபா அவனை சிறைச்சேதம் செய்ய வேண்டும், கொலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள்.
இன்னும் எந்த அளவிற்கு மார்க்க அறிஞர்கள் கூறுகின்றார்கள் என்றால், தொழுகையை விட்டவன் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறியவன். அவனுக்கு நீங்கள் உங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்கக் கூடாது.
அல்லது தொழுகையை விட்ட ஒரு பெண்ணாக இருந்தால் அந்தப் பெண்ணை உங்களுடைய ஆண் மக்களுக்கு நீங்கள் மணப் பெண்ணாக ஏற்றுக் கொள்ளக் கூடாது.
கண்ணியத்திற்குரியவர்களே! ரமழானில் மட்டுமா இந்த ஐங்காலத் தொழுகையை அல்லாஹ் கடமையாக்கினான்?
அல்லாஹ் கூறுகிறான் :
وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ
நபியே உமக்கு மரணம் வரும்வரை நீங்கள் உங்கள் இறைவனை வணங்கிக் கொண்டே இருங்கள். (அல்குர்ஆன் 15 : 99)
இபாதத்,வாழ்க்கையில் இருந்து பிரிக்கமுடியாத ஒரு அம்சம். எப்போது ஒரு மனிதன் 'மஜ்னூன்' பைத்தியம் பிடித்து விடுமோ, அல்லது இறந்து விடுவானோ, அப்போதுதான் இந்த இபாதத் என்பது அவனை விட்டு பிரிகிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த மரணத் தருவாயில் இருக்கும்போது,நோயினால் அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும்போது இரண்டு தோழர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ஒருவர் வலது பக்கமாக ஒருவர் இடது பக்கமாக பிடித்து கொள்கிறார்கள்.
அவர்களை தூக்கி நிறுத்துகிறார்கள். அவர்களுக்கு தங்களுடைய காலால் நிற்க முடியவில்லை. தளர்ந்து விட்டார்கள். அவர்களுடைய கால்கள் பூமியில் தேய்த்த வண்ணமாக அவர்களை அழைத்துக் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.
சிந்தித்து பார்க்க வேண்டாமா? ரமழான் முடிந்ததற்குப்பிறகு குர்ஆனை விட்டு தூரமாகி விட்டார்கள். இந்த குர்ஆன் இவர்களை அழைக்கவில்லையா?
இந்த குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதம். ஒவ்வொரு நாளும் இதை ஓத வேண்டும் என்று அல்லாஹ்வுடைய கட்டளை இவர்களுக்கு நினைவு வரவில்லையா?
அல்லாஹ் கூறுகிறான் :
وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ
நபியே! உமது இறைவனின் வேதத்தை நீங்கள் ஓதிக் கொண்டே இருங்கள். (அல்குர்ஆன் 18 : 27)
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலை மாலை இரவு என்று குர்ஆனை ஓதிக் கொண்டே இருந்தார்கள்.
பலருடைய நிலையை நாம் பார்க்கிறோம்,ரமலானுக்கு மட்டும் குர்ஆன் ஓதுகின்ற பழக்கத்தை வைத்திருக்கின்றார்கள்.
இதுவல்ல ஒரு முஸ்லிமுடைய குணம். ரமலான் மாதத்தில் அதிகமாக ஓத வேண்டும். ரமலான் முடிந்ததற்கு பிறகு ஒரு முஸ்லிம் குர்ஆனின் உறவை துண்டித்துக் கொள்ள கூடாது.
ரமலான் மாதத்தின் மூலமாக அல்லாஹ் ஒரு தர்பியா கொடுத்தான். நம்மிடம் இருந்த சில அலட்சியங்கள் அல்லது சில குறைபாடுகளை நீக்கி கொள்வதற்காக, அல்லது வாழ்நாளில் பயணத்தின் காரணமாக அல்லது வேறு சில தவிர்க்க முடியாத வேலைகளின் காரணமாக விடுபட்ட இடைவெளிகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, உள்ளங்களில் ஏற்பட்ட பழுதுகளை அகற்றி கொள்வதற்காக.
அமல்களில் ஏற்பட்ட அந்த இடைவெளியை சரி செய்து கொள்வதற்காக ரமலானுடைய மாதத்தை கொடுத்து இந்த ரமழானில் அதிகமதிகம் ஓதுங்கள்.
தொழுகையில் ஓதுங்கள்,தொழுகைக்கு வெளியே ஓதுங்கள் என்ற கட்டளை கொடுக்கப்பட்டதே தவிர, ரழானோடு குர்ஆனின் உறவை முடித்துக் கொள்ளுங்கள் என்பதற்காக அல்ல.
எப்படி ரமழான் மாதத்தில் தொழுகைக்கு முன்னால் ஆஜராகி, அதற்குரிய நேரம் வருவதற்கு முன்னால் அல்லது இகாமத்திற்கு உடைய நேரம் வருவதற்கு முன்னால் ஆஜராகி, சுன்னத்தான தொழுகைகளை தொழுது விட்டு குர்ஆனை ஓதிக் கொண்டு இருந்தோமோ, அதனுடைய பொருள்களை படித்து கொண்டு இருந்தோமோ அந்த பழக்கத்தை விட்டுவிடக்கூடாது.
அப்படி ஒருவன் இந்த ரமழானோடு அமலை நிறுத்திக் கொள்கிறான் என்றால், அவன் உண்மையில் இந்தக் குர்ஆனை இறக்கிய அல்லாஹ்வை நேசிக்க வில்லை, அல்லது இந்த குர்ஆனின் மகத்துவத்தை அவன் புரியவில்லை, இந்த உறவை அவன் மதிக்கவில்லை என்றுதான் பொருள்.
உண்மையில் யார் அல்லாஹ்வை நேசிக்கிறாரோ, உண்மையில் யார் இந்த குர்ஆனின் மகத்துவத்தை உணர்கிறாரோ, அவர் இந்த குர்ஆனின் உறவை முடித்துக் கொள்ள மாட்டார்.
மாறாக, இந்த ரமழானில் தொடர்பை அதிகப்படுத்திக் கொண்டு, மேலும் மேலும் தஜ்வீதோடு சரியான உச்சரிப்போடு, குர்ஆன் நன்கு ஓதத் தெரிந்தால் இதனுடைய பொருளை விளங்குவதற்கு உண்டான அடுத்த கட்டம் என்ன? அல்லாஹ் தடுத்த காரியங்களை அறிய வரும்போது அவை தன்னுடைய வாழ்க்கையில் இருந்தால் அல்லாஹ்விடத்தில் தவ்பா செய்து அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்பது போன்ற முயற்சியில் ஈடுபடுவார்.
யா அல்லாஹ்! நீ தடுத்த இந்த காரியம் நான் எத்தனை நாட்களாக இதை அறியாமல் இருந்தேன்!
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்களுடைய தோழர்களையும் பார்க்கிறோம்.
இந்த குர்ஆனில் அவர்களுக்கு இருந்த உறவு. ரமலான் முடிந்ததற்கு பிறகும் இந்தக் குர்ஆனை அவர்கள் கண்ணிய படுத்தினார்கள்.
ஸஹீஹுல் புஹாரியில் குர்ஆனின் சிறப்பு என்ற பாடத்தில் பதிவான ஹதீஸ். ஒரு நபித்தோழர் வருகிறார், யா ரசூலல்லாஹ்! எனக்கு அமல்களை கற்றுத் தாருங்கள்! என்னென்ன அமல்களை நான் செய்ய வேண்டும்?எவ்வளவு செய்ய வேண்டும்?
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: ஒரு மாதத்திற்கு ஒருமுறை குர்ஆன் ஓதுங்கள் என்று.(1)
அறிவிப்பாளர் : அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1839.
(சாதாரண ஒரு முஸ்லிம்,குறைந்தது ஒரு முறையாவது ஒரு மாதத்திற்கு ஒரு குர்ஆனை ஹத்தம் செய்ய வேண்டும்.)
அப்போது அவர் சொல்கின்றார்; அல்லாஹ்வின் தூதரே! இது சாதாரண மக்களுக்கு உரியது அல்லவா! என்னால் இதற்கு மேலும் அமல் செய்ய முடியும்.
(இதுதான் சஹாபாக்களும் நமக்கும் உள்ள வித்தியாசம். நம்முடைய நிலைமை என்ன?
துன்யாவை பொருத்தவரை போதுமென்ற மனப்பான்மை பலருக்கு வருவதே கிடையாது. எனக்கு இது போதும் அல்ஹம்துலில்லாஹ்! இன்றைய பரக்கத்தை அல்லாஹ் கொடுத்துவிட்டான். நான் இபாதத்திற்கு செல்ல போகிறேன். நான் வணக்க வழிபாட்டுக்கு செல்ல போகிறேன். இன்று எனக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துவிட்டது !
அதிக நேரம் கிடைத்து விட்டது. இஸ்லாமிய ந நூல்களைப் படிப்பதற்கு எனக்கு அதிக நேரம் கிடைத்து விட்டது.
இன்று நம்மில் எத்தனை பேர் நம் வாழ்க்கையை மாற்றி இருக்கிறோம்?துன்யாவைப் பொருத்தவரை இரவு பகல், களைப்பு, அசதி, துக்கம், துயரம், உடம்பு சுகம் இன்மை எதையும் பார்ப்பது கிடையாது.
போதுமென்ற தன்மை துன்யாவை பொருத்தவரை நம்மில் பலருக்கு அறவே இருப்பது கிடையாது.
ஆனால், தீன் என்று வந்துவிட்டால், மார்க்கம் வழிபாடு என்று வந்துவிட்டால், இந்த அளவு செய்தால் போதும், நான் இன்று இதை செய்து விட்டேன் என்று நிறைவு காணுகிறார்கள்.
மார்க்க அறிஞர்கள் சொல்கின்றார்கள்: இதுதான் ஸஹாபாக்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.)
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஏழைகள் வருகிறார்கள்.யா ரசூலல்லாஹ்!அல்லாஹ் எங்களை ஏழையாக வைத்திருக்கின்றான். எங்களிடத்தில் செல்வம் இல்லை. இதோ இந்த செல்வந்தர்கள் இருக்கிறார்கள். எங்களைப் போன்று தொழுகிறார்கள்; எங்களைப் போன்று நோன்பு வைக்கிறார்கள்; ஆனால் அவர்களை போன்று நாங்கள் ஜிஹாதுக்கு வரமுடியவில்லை ;
செல்வம் இல்லாத காரணத்தால் ஹஜ்ஜுக்கு வரமுடியவில்லை. செல்வம் இல்லாத காரணத்தால் ஜகாத் சதகா கொடுக்க முடியவில்லை; செல்வம் இல்லாத காரணத்தால் நாளை மறுமையில் அவர்களை விட்டு நாங்கள் பின்தங்கி விடுவோமோ என்று பயப்படுகிறோம் என்று கூறினார்கள்.(2)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 798.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் வாழ்ந்த செல்வந்தர்கள் அப்படி இருந்தார்கள் .
இன்று, நம்முடைய காலத்தில் வாழ்கின்ற செல்வந்தர்கள் ஓரிரு பேர் இடத்தில் தான் மார்க்கம் என்பது, அதுவும் பேருக்கு ஒட்டி இருப்பதை பார்க்கின்றோம்.
இல்லை என்று சொன்னால் இந்த செல்வமே அவரை மார்க்கத்திலிருந்து வரம்பு மீறுவதற்கு தூண்டக் கூடியதாக மாறி விடுவதை நாம் எதார்த்தமாக பார்க்கிறோம்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன ஒரு பாதுகாப்புத் தேடினார்களோ அந்தப் பாதுகாப்பை நாமும் தேட வேண்டும்.
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ غِنًى يُطْغِينِي
யா அல்லாஹ்! உன் மார்க்கத்தை விட்டு மீரவைக்கும் படியான, உனது கட்டளைகளை தாண்ட வைக்கும் படியான செல்வ நிலையில் வைத்து விடாதே!
(எந்த செல்வம் பெருமை கொள்ள தூண்டுமோ, எந்த செல்வம் அல்லாஹ்வுடைய கட்டளைகளை உடைக்க தூண்டுமோ, எந்த செல்வம் ஏழைகளை அவமதிக்க தூண்டுமோ, எந்த செல்வம் முஸ்லிம்களுடைய ஜமாஅத்தில் சேருவதை விட்டு தூரமாக்குமோ, எந்த செல்வம் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வதை விட்டு நம்மைத் தடுக்குமோ, அந்த செல்வம் நமக்கு வேண்டாம்.)
யா அல்லாஹ்! அந்த செல்வத்திலிருந்து என்னை பாதுகாத்துக் கொள்!
وَمِنْ فَقْرٍ يُنْسِيَنِي
உன்னை மறக்க வைக்கும் படியான வறுமையில் இருந்து என்னை பாதுகாத்துக் கொள்!
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அல்முஃஜமுல் கபீர் தப்ரானி, எண் : 8884.
சஹாபாக்கள் உடைய செல்வந்தர்கள் அப்படித்தான் இருந்தார்கள் .
ஒருமுறை மதினாவில் பயங்கரமான சப்தம் கேட்கிறது. அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா நடுங்கி விடுகிறார்கள். ஏதாவது ஒரு பெரிய எதிரிகளின் கூட்டம் திடீரென்று மதீனாவின் மீது தாக்குதல் நடத்தி விட்டதா? இவ்வளவு பெரிய ஆராவாரம் கேட்கிறதே? என்று தங்களுடைய அடிமையிடத்தில் கேட்டார்.
அவர் சொல்கிறார்; அன்னையே பயப்பட வேண்டிய செய்தி ஒன்றும் இல்லை. நம் தோழர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வியாபாரக் கூட்டம் 800ஒட்டகைகளில் சிரியா நாட்டில் இருந்து வியாபாரம் செய்துவிட்டு மதினாவிற்கு ஒரே நேரத்தில் நுழைந்துவிட்டார்கள்.
சாதாரண அந்த தெருக்களில் கூடிய அந்த நகரம், 800ஒட்டகைகளில் வியாபாரிகள் ஒரே நேரத்தில் அந்த தெருக்களில் நுழைந்தால், எப்படிப்பட்ட ஒரு ஆரவாரமாக இருந்திருக்கும்.
அன்னை அவர்கள், அப்துர் ரஹ்மானை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறுகிறார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அழைத்த மாத்திரத்தில் வருகிறார்கள்.
அப்போது அன்னை அவர்கள் கேட்கிறார்கள்; அப்துர் ரஹ்மானே! உனக்கு ஒரு செய்தி தெரியுமா? ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உன்னை பற்றி கூறினார்களே, அந்த செய்தி உனக்குத் தெரியுமா ?என்று கேட்கும்போது,
அன்னை அவர்களே! என்ன சொன்னார்கள், என்னை பற்றி? என்று அவர்கள் கேட்கும் போது, அன்னை சொன்னார்கள் :
அப்துர் ரஹ்மானே! நாளை மறுமையில் பிலால், அம்மார் எல்லாம் சொர்க்கத்திற்கு சென்ற பிறகு உன்னுடைய செல்வத்திற்கு கணக்கு கொடுத்து கொடுத்து வைத்தவனாக உன்னுடைய முட்டு கால்களைத் தேய்த்து நீ சொர்க்கத்திற்கு வருவாய்!
ஹலாலான முறையில் சம்பாதித்த செல்வம், அல்லாஹ்வுடைய கடமைகளை பேணி சம்பாதித்த செல்வம், உறவுகளை சேர்த்து சம்பாதித்த செல்வம், ஜகாத் சதகா கொடுத்து சேர்த்த செல்வம்.
இந்த செய்தியை அவர்கள் கூறிய உடன், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் தேம்பித் தேம்பி அழுகிறார்.
அன்னையே! நீங்கள் சாட்சியாக இருங்கள். இந்த 800ஒட்டகங்களையும், இந்த 800ஒட்டகங்கள் சுமந்த அத்தனை திர்கங்களையும் மதினாவில் உள்ள ஏழைகளுக்கு தர்மம் செய்து விட்டேன்.
அல்லாஹ்வின் பாதையில் எவ்வளவு என்ன என்ற கணக்கு கிடையாது. அந்த செல்வந்தர்கள் அப்படி இருந்தார்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவழித்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு கொட்டி கொடுத்தான். செல்வங்களை அவர்களுடைய கால்களில் அல்லாஹ் கொண்டு வந்து சேர்த்தான்.
நூல் : இப்னு ஹிஷாம்.
ஹதீஸின் தொடர் : ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த ஏழைகளிடம் சொன்னார்கள் : தொழுகைக்குப் பின்னால் திக்ரு செய்யுங்கள் என்று, திக்ருகளை கற்றுத்தருகிறார்கள்.
இதை கேள்விப்பட்ட செல்வந்தர்களும் அந்த திக்ருகளை செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள்.
மீண்டும் ஏழைகள் ஓடி வருகிறார்கள். யாரசூலல்லாஹ்! நீங்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்த அந்த அமலை கேள்விப்பட்ட அந்த செல்வந்தர்களும் அதை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது நாங்கள் என்ன செய்வது?
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :
இது அல்லாஹ் அவன் விரும்பியவர்களுக்கு கொடுக்கின்ற சிறப்பு. அவன் யாருக்கு விரும்புகிறானோ இந்தத் சிறப்பை கொடுக்கிறான். (2)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 798.
முதல் ஹதீஸின் தொடர் : அந்த நபித்தோழர்கள் கேட்கிறார். யா ரசூலுல்லாஹ்! ஒரு மாதத்தில் குர்ஆன் ஓதுவது என்பது, இது எல்லோரும் செய்கின்ற அமல். எனக்கு விசேஷமாக சொல்லுங்கள் என்று கூறும்போது,
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லுகின்றார்கள் : ஒரு வாரத்திற்கு ஒரு முறை குர்ஆனை முடிப்பீராக.
அவர் சொல்கின்றார்; யாரசூலல்லாஹ்! இதையும் பலர் செய்கிறார்கள். எனக்கு இன்னும் அதிகமாக கொடுங்கள்.
அப்போது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :
மூன்று நாளைக்கு ஒருமுறை குர்ஆனை ஓதி முடியுங்கள். (1)
அறிவிப்பாளர் : அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1839.
கண்ணீர் விடக் கூடிய நிலையில் நாம் இருக்கிறோம். நம்மில் எத்தனை பேர் பிறந்ததில் இருந்து இதுவரை கூட குர்ஆனை பார்க்காமல் இருக்கிறார்கள்.
குர்ஆனை ஓதுகின்ற பாக்கியத்தை பெறவில்லை என்ற கவலை கூட இல்லாமல் இருக்கிறார்கள்.
எத்தனை பேர் ரமழானில் கூட குர்ஆனை ஓதாமல், வருடத்திற்கு ஒரு முறை கூட அதை முடிக்காமல், அந்த குர்ஆனோடு வெறுத்த ஒரு தொடர்பு இருப்பதை நாம் பார்க்கிறோம்.
அத்தனை பத்திரிக்கைகளையும் படிப்பதற்கு நேரம் இருக்கிறது. அத்தனை அசிங்கங்களையும் பார்த்து தீர்ப்பதற்கு நேரம் இருக்கிறது. ஆனால் அல்லாஹ்வுடைய புத்தகம் படிப்பதற்கு மட்டும் நேரம் இருப்பதில்லை.
அத்தனை கல்விகளையும் கற்றுக்கொள்வதற்கு நேரம் இருக்கிறது,வசதி இருக்கிறது,பொருளாதாரம் இருக்கிறது. அதற்குண்டான முயற்சி எடுப்பார்கள்.
ஆனால், குர்ஆனை கற்றுக் கொள்வதற்கு குர்ஆனை படிப்பதற்கு அதற்குண்டான முயற்சி இல்லை. அதற்குண்டான தேட்டம் இல்லை.
ஏன் மஸ்ஜிதுகள் இல்லையா? அந்த மஸ்ஜிதில் குர்ஆனை கற்றுக் கொடுக்க ஆலிம்கள் இல்லையா?ஹாஃபிஸ்கள் இல்லையா? ஏன் அவர்களிடத்தில் மண்டி போடுவதற்கு அவர்களுக்கு முன்னால் அமர்ந்து கல்வியை படிப்பதற்கு உங்களுடைய பதவி தடுக்கிறதா? அல்லது பொருளாதாரம் தடுக்கிறதா? அல்லது எது உங்களை தடுக்கிறது?
சிந்திக்க வேண்டாமா? அந்த சஹாபி சொல்கிறார்; யா ரசூலுல்லாஹ்! என்னால் இதற்கு மேலும் முடியும்என்று.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் :
இல்லை இப்போதும் மூன்று நாட்களுக்குள் குர்ஆனை முடித்தால் போதும், இன்னும் அதிகம் கேட்காதே என்று சொல்கிறார்கள்.
அறிவிப்பாளர் : அம்ர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1839.
அந்த தொடர்பை உருவாக்குவதற்கு தான் இந்த ரமலான் மாதம் கொடுக்கப்பட்டது.
அடுத்து, தானதர்மங்கள். அல்லாஹ்வின் பாதையில் நன்மையான காரியங்களில் செலவழிப்பது. ரமலானில் செலவழித்தோம். அல்ஹம்துலில்லாஹ்!
ரமலான் பற்றற்ற வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு ஒரு பாடம். அல்லாஹ் கொடுக்கின்ற ஒரு பயிற்சி கூடம்.
இந்த ரமலானில் தர்மத்தை பழக்கப்பட்டவர்கள், தங்களுடைய கைகளை விரித்து பழக்கப்பட்டவர்கள் கொடுத்து பழக்கப்பட்டவர்கள் ரமலான் முடிந்த உடன் அந்த கைகளை சுருக்கிக் கொள்ள வேண்டாம்.
அந்த கைகளை தங்களுடைய கழுத்துக்கு பின்னால் கட்டிக் கொள்ள வேண்டாம். தங்களுடைய அந்த தர்மங்களை தடுத்துக் கொள்ள வேண்டாம். அல்லாஹ் கொடுக்க காத்துக் கொண்டு இருக்கிறான்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கின்றார்கள்: ஒவ்வொரு நாள் சூரியன் உதிக்கும் போதும் இரண்டு மலக்குகள் துஆ கேட்கிறார்கள்.
ஒருவர் கூறுகிறார் :
للَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا
யா அல்லாஹ்! உன்னுடைய பாதையில் தர்மம் செய்பவருக்கு, செலவு செய்பவர்களுக்கு நீ கொடுத்துக் கொண்டே இரு! என்று கூறுகிறார்.
அவரை துஆ செய்வதற்காக வேண்டியே அல்லாஹ் அவரை பூமிக்கு இறக்குகிறான். அப்படி என்றால் அதை அங்கீகரிப்பதற்காகவே அல்லாஹ் அவரை நியமிக்கிறான் .
இன்னொருவர் துஆ செய்கிறார் :
وَيَقُولُ الْآخَرُ اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا
யா அல்லாஹ்! உன்னுடைய பாதையில் செலவு செய்யாமல் யார் தடுத்துக் கொள்கிறானோ அவனுக்கு நாசத்தை கொடு, அவனுக்கு அழிவைக் கொடு.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1351.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமலான் மாதத்தில் முஸ்லிம்களுக்கு,இந்த உள்ளத்தில் உள்ள கஞ்சத்தனத்திலிருந்து இந்த உள்ளத்தை சுத்தப்படுத்துவதற்கான பயிற்சி கொடுத்தார்களே தவிர,உங்கள் தர்மத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்பதற்காக அல்ல.
சில செல்வந்தர்களை நீங்கள் பார்க்கலாம்;அவர்களிடத்தில் கேட்டுச் சென்றால்,நீங்கள் ரமலானில் வந்திருக்க கூடாதா? என்னுடைய ஜகாத்தை தர்மங்களை எல்லாம் ரமலானில் கொடுத்துவிட்டேன் என்று கூறுவார்.
என்னமோ அடுத்த ஆண்டு ரமலான் வரை இவர் உயிரோடு இருப்பார் என்ற கேரன்டி இவருக்கு அல்லாஹ் கொடுத்து விட்டான் போலும். மலக்குல் மவ்த் இதோட அடுத்த ஆண்டு ரமலானுக்கு தான், நான் வருவேன் என்ற செய்தியை இவருக்கு சொல்லிவிட்டு சென்று விட்டார் போலும்.
அல்லது இவர் சம்பாதித்த செல்வங்கள் எல்லாம் இவருக்கு நிரந்தரமாக இருக்கும் என்றும், ஏதோ அறிவிக்கப்பட்டதை போன்றும் அவர் இருப்பார்.
ரமலானில் எல்லாத்தையும் கொடுத்துவிட்டேன், என்னிடத்தில் கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று சொல்கிறார்கள்.
இரண்டும் மிக மோசமான மாறுபட்ட நிலைப்பாடுகளை இந்த சமுதாயத்தில் நாம் பார்க்கிறோம். அந்த இரண்டு நிலைப்பாடுகளும் அல்லாஹ்வின் கோபத்திற்கு அல்லாஹ்வின் சாபத்திற்கு நபியின் கோபத்திற்கு ஆளானது. அல்லாஹ் பாதுகாப்பானாக!
ஒன்று, கேட்டு வருபவர்களை, யாசகம் கேட்டு வருபவர்களை கேவலமாக பார்ப்பது, இளக்காரமாக பார்ப்பது, அவர்களை பரிகாசம் செய்வது, அல்லது அவர்களை அவமரியாதை செய்வது, அல்லது அவர்களை விரட்டுவது.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் தன்னுடைய நபிக்கு விசேஷமாக போட்ட கட்டளை.
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ (9) وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
நபியே! அனாதையை அதட்டாதீர்! யாசகம் கேட்டு வருபவரை மிரட்டாதீர், அவர்களை கடுப்பாக பார்க்காதீர். (அல்குர்ஆன் 93 : 9)
அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்தினானே! அவருடைய வாசலில் உங்களை நிறுத்தாமல் உங்களுடைய வாசலில் அவரை நிறுத்தினானே! அந்த அல்லாஹ்விற்கு என்ன நன்றி செலுத்துவீர்கள்?
அல்லாஹ் நாடினால் நிலைமைகளை மாற்றியிருக்கலாம். அல்லாஹ் நாடினால் நடத்தியும் காட்டுவான்.
قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
(நபியே! பிரார்த்தித்து) கூறுவீராக: ‘‘எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகிறாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகிறாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவாய். (அல்குர்ஆன் 3 : 26)
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்:
بِحَسْبِ امْرِئٍ مِنْ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ
தன்னுடைய பலகீனமான முஸ்லிம் சகோதரனை கேவலமாக ஒருவன் பார்த்தால்,அதுவே அவனுடைய தீமைக்கும் நாசத்திற்கும் போதுமானது. (3)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 4650.
இன்று, எத்தனை முஸ்லிம் செல்வந்தர்கள் ஏழைகள் உடைய ஸலாமுக்கு பதில்கூட சொல்ல தயாராக இல்லை.
இவர்கள், இந்த உம்மத்தில் இருக்கும்போது இந்த உம்மத்தில் அல்லாஹ்வின் அருள் மழை பொழியுமா?இந்த உம்மத்தின் மீது அல்லாஹ்வுடைய ரஹ்மத் இறங்குமா?
எந்த சமூகத்தில் ஏழைகள் கண்ணியப்படுத்த படவில்லையோ, எந்த சமூகத்தில் ஏழைகளுக்கு உரிமை கொடுக்க படவில்லையோ, எந்த சமூகத்தில் ஏழைகளுக்கு அவர்களுடைய உரிமைகள் கண்ணியப்படுத்த படவில்லையோ அந்த சமூகத்தின் மீது அல்லாஹ்வின் உதவி இறங்காது. அந்த சமூகத்திற்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்காது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் :
"உனக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்க வேண்டுமா உன் சகோதரனுக்கு உதவி செய்!"
எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட தொகையை அவர்கள் ஒதுக்கி விடுவார்கள் என்று நல்லவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான்.
இன்று, நம்மில் எத்தனை பேர் ஒரு வியாபாரம் செய்து, அதில் லாபம் கிடைத்து விட்டால் அந்த லாபத்தில் இருந்து ஒரு தொகையை வீடு வாங்குவதற்காக, நிலம் வாங்குவதற்காக, வாகனம் வாங்குவதற்காக, மனைவி மக்களின் தேவைகளை வாங்குவதற்காக ஒதுக்குகிறார்கள்.
அல்லாஹ் சொல்கின்றான் : முஃமின்களின் பண்பு குறித்து சொல்கிறான்.
لِلسَّائِلِ وَالْمَحْرُومِ
அதைக் கேட்பவர்களுக்கும் (வெட்கத்தால் கேட்காத) வரியவர்களுக்கும் (கொடுப்பார்கள்). (அல்குர்ஆன் 70 : 25)
அடுத்து, இந்த ரமழான் மாதத்தில் ஹராமானதை பார்க்காமல், அல்லாஹ் ஹராமாக்கிய இந்த விபச்சாரத்திற்கு துணை போகக்கூடிய அத்தனை காரியங்களை விட்டும் நம்முடைய கண்ணை நம்முடைய செவியை நம்முடைய உள்ளத்தை சிந்தனையை பாதுகாத்தது போன்று ரமழானுக்குப் பிறகும் இவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பான வாழ்க்கை நமக்கு அமைந்தது என்றால், நம்முடைய ரமழான், அதனுடைய வணக்க வழிபாடுகள், அதில் நாம் கேட்ட பிரார்த்தனைகள், அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று அர்த்தம்.
யார் ரமழானுக்குப் பிறகு, மீண்டும் அல்லாஹ் தடுத்த காரியங்களில் சென்று விடுகிராறோ, அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை பாழ்படுத்துகிராரோ அவர் உண்மையில் அல்லாஹ்வை வணங்கவில்லை, ரமழானை வணங்கிக் கொண்டு இருந்தார்.
எனவேதான் ரமழான் முடிந்ததற்கு பிறகு, அவர் தனது பழைய பாதையில் திரும்பி விட்டார்.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம் பாவங்களை மன்னித்து, நம்முடைய உள்ளங்களை சுத்தப்படுத்தி ஈமானோடு இஸ்லாமோடு நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பானாக!
அல்லாஹ் கடமையாக்கிய அனைத்து கடமைகளையும் பேணக்கூடிய பெரும் பாக்கியத்தை அல்லாஹ் தந்தருள்வானாக!
தடுக்கப்பட்ட அனைத்து சிறிய பெரிய பாவங்களிலிருந்தும் அல்லாஹ் எங்களையும் உங்களையும் முஸ்லிம் சமுதாயத்தையும் பாதுகாத்துக் கொள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا الْأَوْزَاعِيُّ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا عَبْدَ اللَّهِ أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَصُومُ النَّهَارَ وَتَقُومُ اللَّيْلَ فَقُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ فَلَا تَفْعَلْ صُمْ وَأَفْطِرْ وَقُمْ وَنَمْ فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا وَإِنَّ بِحَسْبِكَ أَنْ تَصُومَ كُلَّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ فَإِنَّ لَكَ بِكُلِّ حَسَنَةٍ عَشْرَ أَمْثَالِهَا فَإِنَّ ذَلِكَ صِيَامُ الدَّهْرِ كُلِّهِ فَشَدَّدْتُ فَشُدِّدَ عَلَيَّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَجِدُ قُوَّةً قَالَ فَصُمْ صِيَامَ نَبِيِّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلَام وَلَا تَزِدْ عَلَيْهِ قُلْتُ وَمَا كَانَ صِيَامُ نَبِيِّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلَام قَالَ نِصْفَ الدَّهْرِ فَكَانَ عَبْدُ اللَّهِ يَقُولُ بَعْدَ مَا كَبِرَ يَا لَيْتَنِي قَبِلْتُ رُخْصَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (صحيح البخاري 1839 -)
குறிப்பு 2)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ قَالَ حَدَّثَنَا مُعْتَمِرٌ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ سُمَيٍّ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَاءَ الْفُقَرَاءُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا ذَهَبَ أَهْلُ الدُّثُورِ مِنْ الْأَمْوَالِ بِالدَّرَجَاتِ الْعُلَا وَالنَّعِيمِ الْمُقِيمِ يُصَلُّونَ كَمَا نُصَلِّي وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَلَهُمْ فَضْلٌ مِنْ أَمْوَالٍ يَحُجُّونَ بِهَا وَيَعْتَمِرُونَ وَيُجَاهِدُونَ وَيَتَصَدَّقُونَ قَالَ أَلَا أُحَدِّثُكُمْ إِنْ أَخَذْتُمْ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ وَلَمْ يُدْرِكْكُمْ أَحَدٌ بَعْدَكُمْ وَكُنْتُمْ خَيْرَ مَنْ أَنْتُمْ بَيْنَ ظَهْرَانَيْهِ إِلَّا مَنْ عَمِلَ مِثْلَهُ تُسَبِّحُونَ وَتَحْمَدُونَ وَتُكَبِّرُونَ خَلْفَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ فَاخْتَلَفْنَا بَيْنَنَا فَقَالَ بَعْضُنَا نُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ وَنَحْمَدُ ثَلَاثًا وَثَلَاثِينَ وَنُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ فَرَجَعْتُ إِلَيْهِ فَقَالَ تَقُولُ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَاللَّهُ أَكْبَرُ حَتَّى يَكُونَ مِنْهُنَّ كُلِّهِنَّ ثَلَاثًا وَثَلَاثِينَ (صحيح البخاري 798 -)
குறிப்பு 3)
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ حَدَّثَنَا دَاوُدُ يَعْنِي ابْنَ قَيْسٍ عَنْ أَبِي سَعِيدٍ مَوْلَى عَامِرِ بْنِ كُرَيْزٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَحَاسَدُوا وَلَا تَنَاجَشُوا وَلَا تَبَاغَضُوا وَلَا تَدَابَرُوا وَلَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لَا يَظْلِمُهُ وَلَا يَخْذُلُهُ وَلَا يَحْقِرُهُ التَّقْوَى هَاهُنَا وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍ بِحَسْبِ امْرِئٍ مِنْ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ دَمُهُ وَمَالُهُ وَعِرْضُهُ (صحيح مسلم 4650 -)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/