HOME      Khutba      முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க உதவிடுவீர் | Tamil Bayan - 139   
 

முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க உதவிடுவீர் | Tamil Bayan - 139

           

முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க உதவிடுவீர் | Tamil Bayan - 139


முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க உதவிடுவீர்

ஜுமுஆ குத்பா தலைப்பு : முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க உதவிடுவீர்

வரிசை : 139

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இஸ்லாமிய சமுதாய மக்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் பயத்தைஅச்சத்தை தனிமையிலும் சபையிலும் உங்களுக்கும் எனக்கும் நினைவுபடுத்தியவனாக, அல்லாஹ்வின் பயத்தை கொண்டு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூரியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்ஹம்துலில்லாஹ்! கண்ணியத்திற்குரிய ரமலான் மாதத்தை அடைந்தோம். நம்மில் பலர், நன்மைகளில் தீவிரம் காட்டினார்கள்; அல்லாஹ்வின் நெருக்கத்தில் தீவிரம் காட்டினார்கள்; பாவமன்னிப்பு தேடுவதில் தீவிரம் காட்டினார்கள்.

அவர்கள், இன்ஷா அல்லாஹ்அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் மன்னிப்பையும் அடைந்துக் கொள்வார்கள்.

யார் அல்லாஹ்வை புறக்கணித்தாரோ, அவனை அல்லாஹ் புறக்கணித்து விடுகிறான்.  யார் அல்லாஹ்வை மறந்து விடுகிறாரோ, அவனை அல்லாஹ்வும் தன் கருணையிலிருந்து மறந்துவிடுகிறான்.

யார் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தாரோ, அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தினாரோ, அல்லாஹ் தனக்கு கொடுத்த நிஃமத்துகளுக்காக, பாக்கியங்களுக்காக நன்றியுள்ளவனாக நடந்து கொண்டாரோ அவரை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நேசிப்பதோடு, கொடுத்த அருளை மேலும் மேலும் அவருக்கு அதிகப்படுத்தி தருகிறான்.

அல்லாஹ் கூறுகிறான் :

وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ

உங்கள் இறைவன் (உங்களை நோக்கி, ‘‘இதற்காக) நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால் (நான் என் அருளை மேலும்) உங்களுக்கு அதிகப்படுத்துவேன். நீங்கள் (என் அருளுக்கு நன்றி செலுத்தாது) மாறுசெய்தால் நிச்சயமாக என் வேதனை மிகக் கொடியதாக இருக்கும் என்று அறிக்கையிட்டதையும் (நபியே!) நீர் (அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (அல்குர்ஆன் 14 : 7)

மேலும், அல்லாஹ் கூறுகிறான் :

وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَحِيمٌ

அல்லாஹ்வின் அரு(ள்க)ளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை உங்களால் எண்ணிட முடியாது. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பெரும் கருணையுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 16 : 18)

கண்ணியத்திற்குரியவர்களே,அல்லாஹ் அந்த அடியானை நேசிக்கிறானோ அந்த அடியான் மீது அவனுடைய அருட்கொடைகளை பொழிகிறான், அந்த அடியான் அல்லாஹ்வை விட்டு புறக்கணிக்காதவரை,அந்த அடியான் அல்லாஹ்வை விட்டு தேவையற்றவனாக ஆகாதவரை அல்லாஹ் அந்த அடியானை கைவிடுவது கிடையாது!

அல்லாஹ் கூறுகிறான் :

وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى (8) وَكَذَّبَ بِالْحُسْنَى (9) فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى

எவன் கஞ்சத்தனம் செய்து (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது, (இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களையும் பொய்யாக்கி வைக்கிறானோ, அவனுக்குக் (கஷ்டத்திற்குரிய) நரகப் பாதையைத்தான் நாம் எளிதாக்கி வைப்போம். (அல்குர்ஆன்92 : 8-10)

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக, அல்லாஹ் கூறிய நல்ல வழிகளில் செலவு செய்யாத தன்மையை, மறுமையை மறுக்கின்ற, மார்க்கத்தை மறுக்கின்ற தன்மையோடு அல்லாஹ் இணைத்து கூறுகின்றான்.

நாம் அனைவரும் தொழுகையில் அதிகமாக ஓதுகின்ற சூராக்களில் ஒன்று, ஆனால் நம்மில் மிகச் சொற்பமானவர்கள்தான் இந்த சூராவை பற்றி சிந்தித்து இருக்கிறோம்.

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ (1) فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ (2) وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ

(நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?  (ஆதரவற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான். அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை. (அல்குர்ஆன் 107 : 3)

(இந்த வசனங்களில் 'தீன்' என்ற வார்த்தையை மார்க்கத்திற்கும் சொல்லலாம்; மறுமைக்கும் சொல்லலாம்.)

எப்படி அல்லாஹ் தொடர்பு படுத்துகிறான் பாருங்கள்! இன்று பலர், இந்த மார்க்கத்தை பல கூறுகளாக பிரித்து வைத்திருக்கிறார்கள். சிலர்,தொழுகை, திக்ரு செய்தல், குர்ஆன் ஓதுதல் என்ற வணக்க வழிப்பாடுகளோடு மட்டும் நிறுத்திக்கொண்டு, சமூக வாழ்க்கையைப் பற்றி, சமூகத்தில் இருக்கின்ற ஏழைகள், அனாதைகள்,  ஆதரவற்றவர்கள், வறியவர்கள், துன்பத்தில் சிக்கியவர்கள், கடன் பட்டவர்கள், பல காரணங்களால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானவர்கள் போன்றவர்கள் பற்றி, சமூகத்தில் ஒரு பெரும் கூட்டத்திற்கு சிந்தனை இருப்பதில்லை.

அவர்களில் பலர், வணக்க வழிபாடுகளில் இருப்பதை பார்க்கிறோம். ஆனால், எந்த வணக்க வழிபாடு, எந்த தொழுகை, எந்த நோன்பு ஒரு மனிதனை ஜக்காத் கொடுப்பதற்கும், அல்லாஹ்வின் பாதையில் தர்மங்கள் செய்வதற்கும் ஏழைகளின் துயரத்தை தன் துயரமாக மதித்து அவர்களுக்காக உழைப்பதையும் தூண்ட வில்லையோ,  அந்த தொழுகையில் நன்மை இல்லை,அந்த வணக்கங்களில் நன்மை இல்லை என்று நமது மார்க்கம், நமது குர்ஆன், நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய ஹதீஸ் கூறுகிறது. அந்த இரண்டையும் இணைத்து சொல்கிறது, பிரிக்க முடியாது என்று சொல்கிறது.

சூரத்துல் ஹாக்கா-வில், இது பற்றி அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் :

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ (25) وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ (26) يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ (27) مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ (28) هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ (29) خُذُوهُ فَغُلُّوهُ (30) ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ (31) ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ (32) إِنَّهُ كَانَ لَا يُؤْمِنُ بِاللَّهِ الْعَظِيمِ (33) وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ(34) فَلَيْسَ لَهُ الْيَوْمَ هَاهُنَا حَمِيمٌ (35) وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ (36) لَا يَأْكُلُهُ إِلَّا الْخَاطِئُونَ

எவனுடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், ‘‘என் ஏடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டாமா? என்று கூறுவான். மேலும், என் கணக்கை இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டுமே!நான் இறந்தபொழுதே என் காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டுமே!. என் பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!என் அரசாட்சியும் அழிந்துவிட்டதே!'' (என்றும் புலம்புவான்).

(பின்னர் நாம்) ‘‘அவனைப் பிடியுங்கள், அவனுக்கு விலங்கிடுங்கள்; அவனை நரகத்தில் தள்ளுங்கள் என்றும், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்'' என்றும் (கூறுவோம்).நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வையே நம்பிக்கை கொள்ளவில்லை. ஏழைகளுக்கு (தானும் உணவளிக்காததுடன், பிறரையும்) உணவளிக்கும்படி அவன் தூண்டவில்லை.‘‘ஆகவே, இன்று அவனுக்கு (இங்கு) ஒரு நண்பனும் இல்லை.(புண்களில் வடியும்) சீழ் சலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவில்லை'' (என்றும் கூறப்படும்).அதைக் குற்றவாளிகளைத் தவிர (மற்றெவரும்) உண்ண மாட்டார்கள். (அல்குர்ஆன் 69 : 25-37)

இதற்கு என்ன காரணம்? இந்த செல்வந்தர்கள், பொருளாதாரத்தில் உயர்நிலை அடைந்தவர்கள், சமூக அந்தஸ்து உடையவர்களுக்கு நாளை மறுமையில் அவர்களுடைய ஏடுகள் அவர்களுடைய இடது கரத்தில் கொடுக்கப்பட்டு இந்த இழிவான நிலையை அடைவதற்கு காரணம் என்ன?

அல்லாஹ் இரண்டு காரணங்களை கூறுகிறான்:

முதல் காரணம், மறுமையில் நம்பிக்கை இல்லை; அல்லாஹ்வின் மீது அவனுக்கு நம்பிக்கை இல்லை. அப்படி அல்லாஹ்வின் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்திருந்தால் அல்லாஹ் கொடுத்த செல்வத்தை, அல்லாஹ் விரும்பிய வழியில் செலவு செய்து இருப்பான்.

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்ற அந்த தன்மையோடு, ஆதரவற்றவர்களுக்கு, ஏழைகளுக்காக உழைப்பதை இணைத்து கூறுகிறான்.

இந்த வசதி படைத்தவர்கள், நரகத்தில் பொசுக்கி எடுக்கப்படுவதற்கு காரணம், அவர்களுக்கு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையில்லை; ஏழைகளின் வாழ்க்கைக்காக அவர்கள் உழைக்கவில்லை. ஏழைகளின் வாழ்வாதாரத்திற்காக அவர்கள் பிறரை ஆர்வமூட்டவில்லை.

அல்லாஹ் ஏழைகளின் ஆதரவை பற்றி எங்கே கூறுகிறானோ அங்கேஈமானோடு சேர்த்து கூறுவான். அந்த விஷயத்தில் அல்லாஹ் தேர்ந்தெடுத்த வாசகம் என்ன தெரியுமா?

உன்னால் முடியவில்லை என்றாலும்,உனக்கு நான் நாவை கொடுத்திருக்கிறேன் அல்லவா? அந்த நாவின் மூலமாவது, நீ ஏழைகளுக்கு என்ன செய்தாய்?

இதில் என்ன செலவு இருக்கப்போகிறது? தனக்குத் தெரிந்தவர்கள் இடத்தில், இந்த ஏழை இப்படி சிரமப்பட்டு கொண்டு இருக்கிறார். அவருக்கு உதவுங்கள்எனலாம். இதைக் கூட சொல்லாதவர்கள் எப்படிப்பட்ட கஞ்சனாக இருப்பார்கள்!

பலர்,எந்த தன்மையில் இருக்கிறார்கள் என்றால், தானும் கொடுக்க மாட்டார்கள்; தன்னை நாடி வருபவர்களுக்கு வழியும் காட்டமாட்டார்கள்.

இவர்களுடைய சிந்தனை என்னவென்றால், நாம் ஏன் அவரை காட்டிக் கொடுக்க வேண்டும். அவருக்கும் நமக்கும் உள்ள உறவு ஏன் இங்கே விரிசல் ஆக்குவதற்கு?

இப்படிப்பட்டவர்கள் தன்னுடைய மதிப்பு, தன்னுடைய மரியாதை, தன்னுடைய செல்வம் என சுயமாக யோசிப்பவர்கள் ஆவார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! இந்த ஆணவத்தையும், இந்த மதிப்பையும், இந்த மரியாதையையும் காலுக்குக் கீழே போட்டு புதையுங்கள். இதன் மூலமாகத்தான் சமுதாயம் நாசமாககிக் கொண்டிருக்கிறது.

அல்லாஹ்வின் மார்க்க விஷயத்தில், அல்லாஹ்வுடைய தீனில், ஏழைகளுக்கு உதவுவதில், அனாதைகளுக்கு உதவுவதில், ஆதரவற்றவர்களை ஆதரிப்பதில் இந்த கண்ணியம், சமூக அந்தஸ்து போன்றவை தடையாக இருந்தால், அல்லாஹ் இந்த சமூக அந்தஸ்தை நாசம் ஆக்குவானாக!

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களுடைய கலிஃபா அபூபக்ர்ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடைய கலிஃபா உமர் ரழியல்லாஹு அன்ஹு போன்றவர்களைவிட இந்த மனித சமுதாயத்தில் கண்ணியத்திற்குரிய ஒருவர் பிறக்க முடியுமா? பிறந்திருக்கிறார்களா?

நமது நபியவர்களின் வரலாற்றை படித்துப் பாருங்கள்.

தொழுகைக்காக தக்பீர் சொல்லப்பட்டுவிட்டது; இகாமத் சொல்லப்பட்டுவிட்டது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃப்களை சரி செய்து "அல்லாஹு அக்பர்" என்று சொல்வதற்கு கையை உயர்த்துகிறார்கள்.

அந்த நேரத்தில் ஒருவர், ஸஃப்களை பிழந்து கொண்டு வருகிறார். நபியின் கரத்தை பற்றுகிறார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு தேவை இருக்கிறது. அந்த தேவையை நீங்கள் நிறைவேற்றித் தரவேண்டும்!" என்கிறார்.

நபியவர்கள் தொழுகையை முடித்துக் கொள்வோம் என அவரிடத்தில் அனுமதி கேட்கிறார்கள். ஆனால், அவர் சொல்கிறார்; "யா ரசூலுல்லாஹ்! எனக்கு இப்போதே அந்த தேவை நிறைவேறி ஆகவேண்டும்" என்கிறார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃப்களையெல்லாம் அப்படியே அமர வைத்து விட்டு, அந்த நபரோடு செல்கிறார்கள். அவருடைய தேவையை முடித்துவிட்டு வருகிறார்கள். பிறகு, தொழுகையை நிறைவேற்றுகிறார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! மதீனாவில் உள்ள அடிமைகள், மதீனாவில் உள்ள அடிமைப் பெண்கள் நபியவர்களிடம் வந்து, 'யா ரசூலுல்லாஹ்! எங்களுக்கு ஒரு வேலை இருக்கிறது; எங்களுடைய எஜமானர் எங்களுக்கு ஒரு வேலையைக் கொடுத்து விட்டார்;அந்த வேலையை முடிக்க நீங்கள் உதவுங்கள்' என்று நபியவர்களை அழைத்துக் கொண்டு செல்வார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த வேலையை முடித்துவிட்டு திரும்புவார்கள். அந்த அடிமை அனுமதி கொடுக்காத வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த அடிமையை விட்டு பிரிய மாட்டார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! இந்த சமூகத்தில் அல்லாஹ்வுடைய சாபம் ஏன் இறங்கிக் கொண்டிருக்கிறது தெரியுமா? இந்த சமூகத்தின் மீது அல்லாஹ்வுடைய கோபம் ஏன் இறங்கிக் கொண்டிருக்கிறது தெரியுமா?

இந்த சமூகத்தில் உள்ள செல்வந்தர்கள் தனி சமூகமாக பிரிந்து விட்டார்கள். இந்த சமூகத்தில் உள்ள ஏழைகளை அனாதைகளாக விட்டுவிட்டார்கள். அவர்களை அனுசரிப்பதோ, அவர்களை ஆதரிப்பததோ, அவர்களை துக்கம் விசாரிப்பதோ, அவர்களை நலம் விசாரிப்பதோ, அவர்களுடைய வறுமையை அவர்களிடத்தில் விசாரிப்பதோ இந்த சமூகத்தில் கிடையாது.

இன்றைக்கு செல்வந்தர் என்பதற்கு அடையாளம் என்ன தெரியுமா? ரமழான் மாதத்தில் அவருடைய வீட்டின் வெளியில் ஏழைகள் வரிசையாக நிற்கவேண்டும்; ஐந்து, பத்து, ஐம்பது என ரூபாக்களை அவர் வீசுவார் அல்லது சில ஆடைகளை அவர்களுக்கு அளிப்பார். 

இதோடு அவருடைய சமூக உறவு, சமூக தொடர்பு, சமூகத்திற்கு செய்கின்ற ஒத்துழைப்பு முடிந்துவிடுகிறது.

இதுவா இந்த சமுதாயத்திற்கு காட்டப்பட்ட வழிமுறை? ஏழைகளை தங்களுடைய வீடுகளில், பிச்சை கேட்பவர்களாக, யாசகம் கேட்பவர்களாக அவர்களை வரவழைத்து, நிற்கவைத்து இப்படிப் பிச்சை போடுவதை இந்த சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்தார்கள்?

அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஹிலாஃபத்தில், 'மதினாவில் உள்ள ஏழைகளின் நிலை என்ன? யாருக்கு என்ன தேவை இருக்கிறது?' என்பதைத் தெரிந்து வருவதற்காக கிராமம் கிராமமாக தெருத்தெருவாக தேடுகிறார்கள். 

அந்த நேரத்தில் ஒரு குடிசை வீட்டை பார்க்கிறார்கள். அங்கே கண் தெரியாத ஒரு மூதாட்டியை பார்த்ததற்கு பிறகு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பதற்றம் ஆகிவிட்டது.

"என் அன்பு தாயே! உங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா? உங்களை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்களா? இல்லையென்றால், உங்களுடைய வீடு சுத்தமாக வைக்கப்பட்டிருக்கிறதே! எல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்டு உங்களுடைய தேவைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்கிறதே! எப்படி? என உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்கிறார்கள்.

அதற்கு அந்த மூதாட்டி சொல்கிறார்; "உமரே! யார் என்று எனக்கு தெரியாது. ஒருவர்  வருகிறார்; என்னுடைய அன்றாட தேவைகளை எல்லாம் செய்து கொடுத்துவிட்டு சென்று விடுகிறார்;" என்கிறார் அந்த மூதாட்டி.

உமர் ரழியல்லாஹு அன்ஹுஅடுத்த நாள் ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு, நேரடியாக அங்கே சென்று பார்த்தால், அனைத்தும் அங்கே முழுமையாக சீர் செய்யப்பட்டு இருக்கிறது. 

அடுத்த நாள் மீண்டும் வந்து பார்க்கிறார்கள்; எல்லாம் சீர்செய்து தூய்மையாக இருக்கிறது, பிறகு, அடுத்த நாள் தஹஜ்ஜத் நேரத்தில் சென்று பார்க்கிறார்கள். அங்கே பார்த்தால் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் ஹுசைன் அவர்களுடைய பிரச்சனை; ஒரு பக்கம் ஜகாத் கொடுக்க மறுக்கின்ற காஃபிர்களுடைய பிரச்சனை என எவ்வளவோ குழப்பம். இத்தனை பிரச்சினைகளுக்கும் இடையில், ஒரு கலீஃபா, தன்னுடைய அனைத்து பொறுப்புகளுக்கும் இடையிலும், தஹஜ்ஜத் தொழுகையை தொழுது விட்டு, ஒரு கண் தெரியாத மூதாட்டிக்கு,  நபியவர்களின் காலத்தில் இருந்து உதவி செய்த காரணத்தால்,

தான் இப்போது கலீஃபாவாகி விட்டோம்; பொறுப்புகள் அதிகம் ஆகிவிட்டதுஎன அவரை கைவிடாமல், மறுமையில் தன்னை அல்லாஹ் விசாரிப்பான் என்ற பயத்தில், அவர்களுடைய மதிப்பு, மரியாதை, அந்தஸ்து அனைத்தையும் காலிற்கு கீழே மிதித்து, அந்த மூதாட்டிக்கு பணிவிடை செய்வதை தொடர்ந்தார்கள்.

அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பார்த்த உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், "அல்லாஹ்வின் தூதரின் கலீஃபாவே! இந்த வேலையை நீங்கள் எங்களிடத்தில் ஏவக்கூடாதா? நாங்கள் உங்களுக்கு பணியாளர்கள்" என்று அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கரம்பிடித்து அழும்போது,

அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள், "உமரே! நான் இந்த வேலையை நபியவர்களின் காலத்தில் இருந்து செய்து கொண்டிருக்கிறேன். அல்லாஹ்வின் முகம் நாடி எந்த ஒரு அமலை நான் செய்தேனோ, இந்த பதவியின் காரணமாக நான் அதை விட விரும்பவில்லை" என்கிறார்கள். 

அதற்கு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள், "அபூபக்கரே! உங்களை நாங்கள் ஒருநாளும் நன்மையில் முந்த முடியாது" என்கிறார்கள்

நபியவர்களின் வரலாற்றில், நபியவர்களின் வாயிலாக, சஹாபாக்களின் வாயிலாக, அல்லாஹ்வின் மீதுள்ள பயத்தை, மறுமையின் மீது உள்ள பயத்தை அதிகப்படுத்தும் இப்படி பல நிகழ்வுகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

 ஆனால், அவைகளிலிருந்து படிப்பினை பெற்று, பாடம் கற்று தமது வாழ்க்கையில் அமல்படுத்துவது நம்மில் எத்தனை பேர்?

 கண்ணியத்திற்குரியவர்களை! அடுத்து, உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வாழ்க்கையை பாருங்கள்:

ஒரு அரபுடைய மனைவி, பிரசவ வலியில் வேதனைப்பட்டு கொண்டிருக்கிறார்; யாரும் அங்கே அவருக்கு ஆதரவு இல்லை. அப்போது உமர் ரழியல்லாஹு அன்ஹு அங்கே பார்க்கிறார்கள்.

அந்த நபரிடம் உமர் ரழியல்லாஹு அன்ஹு, 'உமக்கு உதவுவதற்கு யாரும் இல்லையா?' என கேட்கிறார்கள். அதற்கு அவர், தன்னிடம் பேசுவது உமர் ரழியல்லாஹு அன்ஹு என்று தெரியாமல் அவர்களிடம், 'நான் ஒரு அனாதை; நான் ஒரு ஏழை' என பதிலளிக்கிறார்.

அவருடைய மனைவி பிரசவ வலியில் துடிப்பதையும், அந்த அரபியர் ஆதரவற்று தவிப்பதையும் பார்த்த உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், உடனே வீட்டிற்கு சென்று தன் மனைவியிடம், 'அன்பு மனைவியே! அல்லாஹ்வின் அருள் காத்துக்கொண்டிருக்கிறது! அதற்கு நீ தயாரா? என்று கேட்கிறார்கள்.

அவர்களுடைய மனைவி உடனே, உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் 'அன்பு கணவரே! கூறுங்கள்' என்றார்கள். உடனே, உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் மனைவியை அவ்விடத்திற்கு அழைத்து சென்றார்கள்.

அந்தப் பிரசவ தேவையை அவர்களுடைய மனைவி மூலம் நிறைவு செய்கிறார்கள். அது மட்டுமல்லாமல், அந்த நபரின் மற்ற பிள்ளைகளுக்கு உமர் ரழியல்லாஹு அன்ஹு  அவர்கள் உணவு சமைக்கிறார்கள்.

அந்த நபருக்கும் ஒன்றும் புரியவில்லை. அல்லாஹ்வுடைய உதவி எங்கிருந்து கிடைக்கிறது என்று புரியவில்லை.

குழந்தை பிறந்தவுடன், உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மனைவியார் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் "அமீருல் முஃமினீனே! உங்கள் தோழருக்கு நற்செய்தி, சொல்லுங்கள்!" என்கிறார்கள். அப்போது தான் அந்த நபருக்கு புரிகிறது, நமக்கு சுமை தூக்கி வந்தவர் 'அமீருல் முஃமினீன் உமர் இப்னுல் கத்தாப்' என்று.

சுப்ஹானல்லாஹ்! இது அல்லவா சமூகம்! ஒரு வறியவர், யார் என்று கூட தெரியாத ஒருவருக்கு உதவி புரிந்து தன்னுடைய மனைவியை அங்கே பணியாளாக அமைத்திருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழைகளை புறக்கணித்தது இல்லை; அனாதைகளை, கைவிடப்பட்டவர்களை புறக்கணித்தது இல்லை; நம்முடைய சமூகத்திலுள்ள செல்வந்தர்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள்!

'உங்களுக்கு அல்லாஹ் ரிஸ்க் கொடுப்பது, உங்களோடு உள்ளவரை அவர்களுக்காக தான்! அவர்களுக்கு இந்த செல்வத்தை நீங்கள் சேர்ப்பிப்பதற்காகவே, இந்த செல்வத்தை அல்லாஹ் உங்களுக்கு கொடுத்திருக்கிறான். நாளை மறுமையில் இந்த செல்வத்தை பற்றி விசாரனை செய்வான்.' என்று நபியவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்!

அன்பிற்குரியவர்களே! இந்த செல்வத்தில், எல்லாம் வல்ல அல்லாஹ் இரண்டு விதமான கடமைகளை வைத்திருக்கிறான்.

ஒன்று, அல்லாஹ் ரப்புல் ஆலமீன், பொருட்களின் கணக்கின்படி, குறிப்பிட்டு நிர்ணயித்த ஜகாத் என்ற கடமையை மறுத்தவர்கள் காஃபிர்.

الَّذِينَ لَا يُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ بِالْآخِرَةِ هُمْ كَافِرُونَ

 'யார் ஜகாத் கொடுக்கவில்லையோ அவர்கள் மறுமையை மறுப்பவர்கள்' என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 41 : 7)

ஆகவேதான், அபூபக்கர் சித்திக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஜகாத் கொடுக்க மறுப்பவர்களுடன் ஜிஹாத் செய்தார்கள்; அவர்களுடைய இரத்தங்களை ஓட்டினார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! இன்று நாம் வாழ்கின்ற நாட்களில், ஜகாத் ஜமாத்தார்களால் வசூல் செய்யப்பட்டு, இந்த உம்மத்தின் ஏழைகளுக்கு பங்கு வைக்கின்ற,அதை உரியவர்களுக்கு சேர்க்கின்ற முறையான திட்டம் இல்லாத காரணத்தால் இன்று இச்சமூகத்தில் நிகழும் அவல நிலை என்னவென்றால், தன்னுடைய அற்பத்தேவைகளுக்காக செல்வந்தர்கள் வீட்டு கதவைத்தட்டி பிச்சை எடுக்கும் நிலையை பார்க்கின்றோம்.

மார்க்க அறிஞர்களின் கருத்து என்ன என்றால்,'நீங்கள் ஜகாத் கொடுப்பதற்கு தகுதியானவர், உங்களுக்கு ஜகாத் கடமையான சொத்து இருக்கிறது என்றால் ஒரு ஏழை உங்கள் சட்டைப் பையில் இருந்து அந்த ஜகாத்தின் அளவை பிடுங்கிக்கொள்ளலாம்' என்று சொல்கிறார்கள்.

ஏனென்றால் அது அவருடைய, அல்லாஹ் அவருக்கு அனுமதித்த, அல்லாஹ் அவருக்கு ஹலால் ஆக்கிய அவருடைய உரிமை என்று மார்க்கம் சொல்கிறது.

ஆனால்,  இன்றைக்கு ஜகாத் செய்வது, ஏதோ நாம் பெரிய சேவையை செய்வது போன்றும், அருட்கொடை செய்வது போன்றும் இன்றைய செல்வந்தர்கள் எண்ணுகிறார்கள். 

ஒருவர் உங்களிடம் இருந்து ஜகாத்தை வாங்குகிறார் என்றால் அவர் உங்கள் மீது இரக்கம் காட்டுகிறார்; அவர் உங்களுக்கு உதவி செய்கிறார்; நீங்கள், உங்களை நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு உங்களுக்கு அவர் உதவி செய்கிறார்.

உங்களுடைய தர்மங்களைச் சொல்லிக் காட்டுவது மூலமாக, தர்மம் வாங்க கூடியவர்களை துன்புறுத்துவது மூலமாக அதாவது, தர்மம் வாங்குபவரை நிர்பந்தத்திற்கு உள்ளாக்கும் அளவிற்கு அவரை கஷ்டப்படுத்தி, உங்கள் தர்மங்களை பாழாக்கிக் கொள்ளாதீர்கள்! என்று அல்லாஹ் கூறுகிறான்

கண்ணியமாக கொடுங்கள்! கொடுத்தவர் யார் என்று தெரியாத அளவிற்கு கொடுங்கள்! என்று அல்லாஹ் கூறுகிறான்.

தர்மத்தை சில நேரங்களில் வெளிப்படையாக கொடுத்தால், பார்ப்பவர்களுக்கு ஆர்வம் வந்து மற்ற செல்வந்தர்களும் கொடுப்பார்கள். ஆனால், அதே தர்மத்தை மறைத்து ஏழைகளுக்கு தேடிச் சென்று நீங்கள் கொடுத்தால் அது தான் உங்களுக்கு சிறந்தது.

சமீப காலங்களில் ஏற்பட்ட சில அசம்பாவித நிகழ்வுகள், சில மோசமான வரலாற்று நிகழ்வுகள் சமூகத்தில் உள்ளவர்களை பல துன்பங்களுக்கு, பல இன்னல்களுக்கு ஆளாக்கி இருப்பதெல்லாம் உங்களுக்கு தெரிந்த ஒன்றுதான். 

சமீப காலத்தில், நம்முடைய சகோதரர்களில் பலர் பலவிதமான பிரச்சனைகளுக்கு ஆளாகி, தங்களுடைய பிள்ளைகள், உறவுகள் என அனைவரையும் பிரிந்து நாம் வாழுகின்ற இந்த நாட்டில், நாம் குடியிருக்கின்ற இந்த மாநிலத்தில் அநியாயமாக,  இரக்கம் காட்டப்படாமல் சிறைகளில் வாடி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த வருத்தத்திற்குரிய ஒன்று!

அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள், "யார் முஸ்லிம்களுடைய பிரச்சனைகளைக் கண்டு கொள்ளாமல், அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறாரோ அவர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர் அல்ல!"

எத்தனை ஆண்டுகளாக எந்தவிதமான விசாரணை இல்லாமல், சுமத்தப்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்படாமல், அதற்கு உண்டான சரியான சாட்சி இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் சில சகோதரர்கள். 

இங்கே என்ன ஒரு உண்மை புரிகிறது என்றால், இவர்கள் இந்த சிறையில் தடுத்து வைத்திருப்பதற்கு காரணம், இவர்கள் முஃமீன்கள் என்பதுதான்; இவர்கள் முஸ்லிம்கள் என்பதுதான். 

இது தொடர்பான குர்ஆன் வசனம்:

وَمَا نَقَمُوامِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ

"மிகைத்தோன், மிக்க புகழுக்குரியவனாகிய அல்லாஹ்வை அவர்கள் விசுவாசித்ததற்காகவே தவிர (வேறு எதற்கும் விசுவாசிகளான) அவர்களை அவர்கள் பழிவாங்கவில்லை" (அல்குர்ஆன் 85 : 8)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகின்ற இந்த வசனம் அப்படியே நமக்கு பொருந்துவதை காண்கிறோம். முந்தைய காலத்தில் துன்புறுத்தப்பட்ட, கொடுமைப்படுத்தப்பட்ட சமூகத்தை அல்லாஹ் கூறுகிறான். அந்த சமூகம் கொடுமைப்படுத்தப்பட்டதற்கு காரணம், அவர்கள் முஸ்லிம்கள்; அல்லாஹ்வை நம்பினார்கள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான்.

இந்த கைதிகள், இவர்களுடைய பிள்ளைகள், மனைவி, தாய், தந்தை ஆதரவற்ற நிலையில், பலவிதமான, விரும்பத்தகாத சொல்வதற்கு பொருத்தமற்றசூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதை இந்த சமூகத்தோடு நெருங்கி பழகியவர்களுக்கு தெரியும்.

அல்லாஹ் தன் திருமறையில், சில நல்லவர்களை புகழும் போது, அந்த நல்லவர்களுடைய நன்மைகளை சொல்லும்போது கூறுகிறான்:

وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا (8) إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا (9) إِنَّا نَخَافُ مِنْ رَبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا

"மேலும் அவன் (அல்லாஹ்) மீது உள்ள அன்பின் காரணமாக ஏழைக்கும், அனாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் அவர்கள்  உணவளிப்பார்கள்". "(உணவை உண்போரிடம்) உங்களுக்கு நாம் உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்தை நாடியே தான்; உங்களிடமிருந்து நாம் யாதொரு பிரதிபலனையோ அல்லது நன்றி செலுத்துவதையோ நாங்கள் நாடவில்லை"(என்றும்) (அந்நாளின் அமலியினால் முகங்கள்) மிக்க கடுக்கடுக்கக்கூடிய, நெருக்கடியான ஒரு நாளை நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகனிடமிருந்து பயப்படுகின்றோம்! " (என்று கூறுவார்கள்) (அல்குர்ஆன் 76 : 8-10)

 இஸ்லாமிய ஆட்சி காலத்தில், முஜாஹிதீன்கள் ஜிஹாத் செய்யும் போது, அங்குள்ள கைதிகள் இங்கு பிடிப்படுவதும், முஸ்லிம்களுடைய கைதிகள் காஃபிர்களிடம் பிடிபடுவதும் வழக்கம்.

போர் என்றால் இவை இரண்டுமே நடக்கும். அந்த நேரத்தில் காஃபிர்களால் பிடிபட்டு சென்றுவிட்ட அந்த முஸ்லிம்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள், எதற்காக கைது செய்யப்பட்டார்கள்?

அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக! எனவே அவர்களுடைய பிள்ளைகள், அவர்களுடைய குடும்பத்தார்களை ஆதரிப்பது இந்த சமூகத்தின் மீது கடமையாக்கப் படுகிறது.

 அன்பானவர்களே! இப்போதுதான் நாம் நமது இஹ்லாஸை திரும்பிப் பார்க்கவேண்டும். இன்று, நாம் ஒரு சிறிய தர்மம் செய்தால் அவை செய்தித்தாளில் வருகிறதா, போஸ்டர்களில் வருகிறதா, நம்மை மற்றவர்கள் பாராட்டுவார்களா என்று எதிர்பார்த்து செய்கிறோம். இது தான்இந்த சமூகத்தின் இழிவான நிலை!

எப்படி தர்மம் செய்ய வேண்டும் தெரியுமா? 'கடுமையான, வெப்ப மிக்க அந்த மறுமை நாளின் தண்டனையை பயந்து நாங்கள் இந்த தர்மத்தை செய்கிறோம்' என்ற தூய்மையான எண்ணத்தோடு தர்மங்களை செய்ய வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, சில கிராமத்து மக்கள் வருகிறார்கள். பசியின் காரணமாக வயிறு எல்லாம் ஒட்டியிருக்கிறது. அவர்களை பார்த்த நபியவர்கள் முகம் சிவந்து விட்டார்கள். மாதுளை பழத்தின் விதைகளை அவர்களுடைய முகத்தில் தூவியது போன்று கோபத்தின் கனல் தெரிய ஆரம்பித்தது. 

மிம்பரில் ஏறினார்கள்.

اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ

"நரகத்தை பயந்து கொள்ளுங்கள், ஒரு பேரீத்தம் பழத்தின் ஒரு பகுதியை தர்மம் செய்தாவது " என்று கூறினார்கள். 

சஹாபாக்கள் எழுந்து செல்கிறார்கள். தங்களுடைய வீடுகளிலிருந்து கொண்டு வருகிறார்கள். அங்கே ஒருவர் பையை கொண்டு வருகிறார்; மூட்டையை ஒருவர் கொண்டு வருகிறார்; பேரீத்தம் பழங்கள், ஒரு கைப்பிடி உணவு என தன்னால் முடிந்த அனைத்தையும் கொண்டு வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சபையில் வைக்கிறார்கள். ஒரு பெரிய குவியல் சேர்ந்துவிட்டது.

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்த வறியவர்களை அழைத்து அவர்களுக்கு பங்கு வைத்து கொடுக்கிறார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! நாளை மறுமையில், இந்த செல்வதற்கு உண்டான கடமையான ஸகாத் அளவை நிர்ணயம் செய்து, உரியவர்களுக்கு கொடுக்கவில்லையென்றால் அல்லாஹ்வுடைய தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.

இந்த ஸகாத் யாருக்கு கொடுப்பது என்று அதற்குரிய சட்டத்தை அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.

ஏழைகள், அனாதைகள், வசதியில்லாதவர்கள், கடன் பட்டவர்கள்,அல்லாஹ்வுடைய பாதையில் மார்க்கத்தை நிலை நிறுத்த இந்த ஸகாத்தை வசூலிப்பதற்காக, இந்த ஸகாத்தை மக்களிடமிருந்து வாங்குவதற்காக உழைக்கக்கூடிய தன்னார்வம் உள்ள ஊழியர்கள் என எத்தனையோ பேர் ஸகாத்திற்கு தேவையுள்ளவராக இருக்கிறார்கள்.

இந்த வசனங்களை நீங்கள் பார்த்தால் அடிமைகளை உரிமையிடுவது என்ற பொறுப்பில்,அந்த விஷயத்தில் இன்று இந்த காஃபிர்கள், இறைமறுப்பாளர்களால் சிறைகளில் அநீதியாக அநியாயமாக எந்தவிதமான விசாரணையும் இல்லாமல், 'இவர்கள் எப்போதாவது விசாரணை செய்வார்கள்; விசாரணை செய்து தீர்ப்பு கூறுவார்கள்' என்ற சிந்தனையில் அநீதியான சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் நமது சகோதரர்கள்.

அவர்கள் நம்முடைய சகோதரர்கள். அல்லாஹ் கூறுகிறான் :

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

 "நிச்சயமாக விசுவாசிகள் (ஒருவர் மற்றவருக்கு) சகோதரர்களே! ஆகவே, (சண்டையிட்டுக் கொள்ளும்) உங்களுடைய இரு சகோதரர்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள்; நீங்கள் அருள் செய்யப்படுவதற்காக அல்லாஹ்வுக்கு பயந்தும் கொள்ளுங்கள்." (அல்குர்ஆன் 49 : 10)

 முஸ்லிம்கள் ஒரு உடலை போன்றவர்கள்; முஸ்லிம்கள் ஒரு கட்டிடத்தை போன்றவர்கள். கட்டிடத்தில் ஒரு கல் இன்னொரு கல்லிற்கு எப்படி உறுதியாக இருக்கிறது? அது போல் தான் நாம்!

கண்ணியத்திற்குரியவர்களே! அநீதியாக கைது செய்யப்பட்டிருக்கும் அவர்களை இந்த துக்க நிலையில் நாம் ஆதரிக்கவில்லையென்றால், அனுசரிக்கவில்லையென்றால், அவர்களுடைய குடும்பத்தாருக்கு உதவவில்லையென்றால்,அல்லது பாதிக்கப்பட்ட.  சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர்களை சிறையிலிருந்து உரிய முறையில் எடுப்பதற்கு நம் பொருளாதாரத்தை செலவு செய்யவில்லையென்றால் நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் என்ன பதில் சொல்லப்போகிறாம்?

ஜகாத் செலவு செய்வதற்கு உண்டான, தகுதியான பல வகையினர் வருவார்கள். வறியவர்கள் என்று அந்த தரத்தில் வருவார்கள்; கஷ்டத்திற்கு உட்பட்டவர்கள், கடனாளிகள், ஆதரவற்றவர்கள் என பல தரப்பில் ஜகாத் கொடுப்பதற்கு முழுமையான தகுதி பெற்றவர்கள் வருவார்கள். 

அதற்கு அப்பாற்பட்டு ஜகாத் இருந்தால்தான் ஒருவரால் உதவி செய்ய முடியும் என்ற எந்த ஒரு அமைப்பையும் இறைவன் இந்த மார்க்கத்தில் ஆக்கவில்லை. ஆனால், அதற்கு மேலும் உபரியான தர்மத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த மார்க்கத்தில் நம் மீது கடமையாக்கி இருக்கிறான்.

 அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:

وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَعْلُومٌ (24) لِلسَّائِلِ وَالْمَحْرُومِ

 "இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் அவர்களுடைய செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு" (யாசித்து) கேட்பவருக்கும் (வெட்கித்துக்) கேட்காதவருக்கும் உண்டு. (அல்குர்ஆன் 70 : 24,25)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தர்மத்தைப் பற்றி கூறுகிறார்கள்; தர்மத்தை பற்றி ஆர்வம் ஊட்டுகிறார்கள்.

அப்போது சஹாபாக்கள் கேட்கிறார்கள், 'யா ரஸூலல்லாஹ்! வசதியுள்ளவர் தர்மம் கொடுப்பார். வசதி இல்லாத ஏழை, எங்களை போன்றவர்கள் எப்படி தர்மம் செய்வது?' என்று கேட்கிறார்கள்.

அதற்கு நபியவர்கள், 'உன்னிடத்தில் வசதி இல்லையா? நீ கஷ்டப்பட்டு, உழைத்து, சம்பாதித்து அந்த சம்பாத்தியத்திலிருந்து நீயும் அனுபவித்து, அதை தர்மமும் கொடு! என்று கூறுகிறார்கள்.

அல்லாஹ், நமக்கு உடல் வலிமையை கொடுத்திருக்கிறான். எனவே, உழைத்து சம்பாதித்து தர்மம் செய்! என்றார்கள். 'யா ரசூலுல்லாஹ்! உழைப்பதற்கு வழியில்லை, உடல் அறிவு தாக்கம் இல்லை என்ன செய்வது? என சஹாபாக்கள் கேட்கிறார்கள்.

அதற்கு நபியவர்கள், 'யாராவது ஒரு தேவையுள்ளவர் வருவார் அல்லவா? அவருடைய தேவையை யாரிடத்தில் சென்றால் நிறைவேறுமோ, அவரை நீ காட்டிக் கொடு!' என்றார்கள்.

 கண்ணியத்திற்குரியவர்களே! 'அல்லாஹ் தன் அடியானுக்கு உதவுகிறான், அந்த அடியான் தன் சகோதரனுக்கு உதவும் வரை'. 'யார் தன்னுடைய சகோதரனின் கஷ்டத்தை, வறுமையை அவர்களுடைய தேவையை இந்த உலகத்தில் நிறைவேற்றுவாரோ, நாளை மறுமையில் அல்லாஹ் அந்த முஃமினுடைய, அந்த முஸ்லிமுடைய கஷ்டத்தை நீக்கி விடுவான்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதற்கேற்ப,  உங்களிடத்தில் விண்ணப்பங்களாக, கோரிக்கையாக வைக்கிறோம். 

இரக்கப்படுவதற்கும், நம்முடைய உதவிக்கரங்கள் தடையில்லாமலும், அளவு இல்லாமலும் நீட்டப்படுவதற்கு தகுதியான இந்த பாதிக்கப்பட்ட சமுதாயத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளை புனித ரமலான் மாதத்தில், கண்ணியமிக்க மாத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீசுகின்ற காற்றை விட கொடை கொடுப்பார்கள் என்று கூறப்பட்ட இந்த மாதத்தில் நம்முடைய தர்மங்களை, கடமையான, உபரியான தர்மங்களை மக்களுக்குக் கொடுத்து, இந்த மக்களை காஃபிர்களுடைய தண்டனையிலிருந்து சிறையில் அநியாயமாக அடைக்க படைக்கப்பட்டிருக்கும் சகோதரர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்! அல்லாஹ் அவர்களை பாதுகாப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/