HOME      Khutba      அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் | Tamil Bayan - 124   
 

அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் | Tamil Bayan - 124

           

அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் | Tamil Bayan - 124


அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?

ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?

வரிசை : 124

இடம் : எஸ்.எம்.ஜெ.பிளாசா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 07-05-2010 | 23-05-1431

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரியவர்களே!அல்லாஹு தஆலா அவனுடைய புத்தகம் குர்ஆனில் அவன் நமக்கு அளித்துள்ள வாக்கை பற்றி இப்படிக் கூறுகிறான்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ

நம்பிக்கையாளர்களே!நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால், அவனும் உங்களுக்கு உதவி புரிந்து உங்கள் பாதங்களை உறுதியாக்கி விடுவான். (அல்குர்ஆன் 47 : 7)

அல்லாஹு தஆலா அவனுடைய உதவியை நாம் பெறுவதற்கு (அது வானத்திலிருந்து அல்லாஹ் இறங்குகிற உதவியாக இருந்தாலும் அல்லது அல்லாஹ்வுடைய படைப்புகளை கொண்டு செய்கிற உதவியாக இருந்தாலும் சரி, எந்த விதத்திலும் அல்லாஹ்வுடைய உதவியை பெற வேண்டுமென்றால் அல்லாஹ் நமக்கு கொடுக்கக்கூடிய நிபந்தனை, நாம் அல்லாஹ்விற்கு உதவி செய்வது.

மேலும், அல்லாஹ் கூறுகிறான் :

وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ

ஈமான் கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாகி விட்டது. (அல்குர்ஆன் 30 : 47)

முஃமின்களுக்கு என்று சொன்னால் நாம் புரிந்து வைத்திருக்கின்ற முஃமின்கள் அல்ல. யாரை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் முஃமீன்கள் என்று ஏற்றுக் கொண்டார்களோ, என்னென்ன அடையாளங்கள் உள்ளவர்களை முஃமின்கள் என்று கூறியிருக்கிறார்களோ அவர்கள் தான் முஃமின்கள்.

பெயரைக் கொண்டு ஈமான் வந்துவிடாது. குணங்களில்உள்ளத்தின் ஆழத்தில் பதிந்த நம்பிக்கையில், உடல் உறுப்புகளால் வெளிப்படும் செயல்பாடுகளில் ஈமான் இருக்க வேண்டும்.

இந்த,இரண்டு வசனங்களையும் நாம் நம் வாழ்க்கையில் பொருத்திப் பார்க்கும்போதுஇன்று பலவிதமான குழப்பங்களுக்கும் பலவிதமான இன்னல்களுக்கும் நமக்குத் தெளிவான விடை இருக்கிறது.

இன்று நாமெல்லாம் பல விதத்தில் கவலைப்படுகிறோம்;முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்லாமிற்கு எதிராக சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன,சூழ்ச்சிகள் செய்யப்படுகின்றன, முஸ்லிம்களை வேறறுப்பதற்காக ஒரு கூட்டம் முயற்சி செய்கின்றது,இஸ்லாத்தின் அடையாளங்களை அழிப்பதற்காக ஒரு கூட்டம் முயற்சி செய்கின்றது என்றெல்லாம் நாம் கூறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்,இவர்களை எதிர்ப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில், இவர்களை எதிர்ப்பதற்காக நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று யோசனைகளும் மாநாடுகளும் கூட்டங்களும் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில்,சற்று நாம் நம்மையும் சீர் திருத்தி பார்க்கவேண்டும்.

அல்லாஹ் யாருக்கு உதவி செய்வான் என்று வாக்களிக்கிறானோ அந்த தரத்தில் நாம் இருக்கிறோமா? அல்லாஹ்வுடைய பாதுகாப்பு யாருக்கு உண்டு? என்று அல்லாஹ் கூறி இருக்கின்றானோ அந்த பாதுகாப்புக்கு உரித்தானவர்களாக நாம் இருக்கிறோமா?

அல்லாஹ்வுடைய ஈமானும், ரசூல் உடைய முஹப்பத்தும், இஸ்லாமிய ஷரீஅத்தும் நம்முடைய வாழ்க்கையில் எப்படி இருக்கின்றது?

ஏனென்றால், இந்த உலகத்தில் மக்கள் என்ன சதித் திட்டம் தீட்டினாலும், என்ன சூழ்ச்சிகள் செய்தாலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனைப் பற்றி நமக்கு சொல்கிறான்:

وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ

அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ் சூழ்ச்சி செய்தான். சூழ்ச்சியாளர்களில் அல்லாஹ் மிக சிறந்தவன். (அல்குர்ஆன்3 : 54)

யாருடைய சூழ்ச்சியை எப்படி முறியடிக்க வேண்டும்?யாருடைய சூழ்ச்சிக்கு எப்படி பதில் கொடுக்க வேண்டும்?யாரை அவருடைய சூழ்ச்சியில் சிக்க வைக்க வேண்டும்?என்ற ஞானங்கள் எல்லாம் அல்லாஹ்விடத்தில் முழுமையாக இருக்கிறது.

சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்;இந்த சூழ்ச்சி சதித் திட்டங்கள் எல்லாம் இன்றைய காலத்தில் நமக்கு மட்டும் நடப்பது போன்று.

இந்த நூற்றாண்டில் வாழ்கிற முஃமின்களாக முஸ்லிம்களாக இருக்கிற நமக்கு மட்டும் சதித் திட்டங்கள் தீட்டப் படுவதைப் போன்றுஎண்ணி இருக்கிறார்கள்.

அதற்கு ஏற்பத்தான் இவர்களுடைய தற்காலிகமான தீர்வும் நடவடிக்கைகளும் நடக்கின்றன.

எனவே அங்கு வெற்றியை பார்ப்பதற்கு பதிலாக,வெற்றியை அவர்கள் பெறுவதற்கு பதிலாக தோல்விக்கு மேல் தோல்வியை அவர்கள் அடைவதை நாம் பார்க்கிறோம்.

அல்லாஹு தஆலா நமக்கு இதை சொல்லிக்காட்டவில்லை.

إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا (15) وَأَكِيدُ كَيْدًا (16) فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا

(நபியே!) நிச்சயமாக அவர்கள் (உமக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள்.நானும் (அவர்களுக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்வேன்.ஆகவே, இந்நிராகரிப்பவர்களுக்கு (அது வரை) நீர் அவகாசமளிப்பீராக. (அதிகமல்ல;) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளிப்பீராக.(அல்குர்ஆன்86 : 15-17)

அல்லாஹ் நம்முடைய தூதர் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு சொல்கின்றான்.

நபியே. நிச்சயமாக இவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள். இது இவர்களுடைய பிறவி குணம். இப்லீஸ் உடைய பிறவி குணம்.

சூழ்ச்சி செய்து ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களுடைய மனைவி ஹவ்வாவையும் சொர்க்கத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு முயற்சி செய்து, அந்த சூழ்ச்சியில் அவன் வெற்றிகண்டான்.

அந்த சூழ்ச்சி செய்யும் போது எத்தனை பொய் கூறினான், அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறினான்.

"ஆதமே!அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன். உனக்கு நன்மையை நாடித் தான் இதை நான் உனக்கு உபதேசம் செய்கிறேன். இந்த கனியை இந்த மரத்திலிருந்து நீ புசித்தால் சொர்க்கத்தில் நிரந்தரமாக தங்கிவிடுவாய்,நீங்கள் இருவரும் மலக்குகளாக மாறிவிடுவீர்கள்"என்று அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்து சூழ்ச்சி செய்தான்.

யார் இறை மறுப்பாளர்களாக அல்லாஹ்விற்கு இணை வைப்பவர்களாக இருக்கிறார்களோ இன்னும் யாரெல்லாம் இஸ்லாமை விட்டு வெளியேறி இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாமல் இஸ்லாமுடைய எதிரிகளாக இருக்கிறார்களோ இவர்கள் எல்லாம் இப்லீசை தலைவனாக கொண்டு செயல்படுகின்ற கூட்டங்கள்.

இவர்களுடைய தலைவன் இப்லீஸ் ஆவான்.

அல்லாஹ் கூறுகிறான் :

اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُمْ مِنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன் ஆவான். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் செலுத்துகிறான். ஆனால், நிராகரிப்பவர்களுக்கோ அவர்களின் பாதுகாவலர்கள் ஷைத்தான்கள்தான். அவை அவர்களை ஒளியிலிருந்து நீக்கி இருள்களின் பால் செலுத்துகின்றன. அவர்கள் நரகவாசிகள். மேலும், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி விடுவார்கள்.(அல்குர்ஆன்2 : 257)

இவனுடைய வேலை என்ன? வெளிச்சத்திலிருந்து வெளியாக்கி இருள்களில் தள்ளுவது. நேர்வழியில் இருந்து வெளியேற்றி வழிகேட்டிலே தள்ளுவது.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் பூமியில் இறக்கினான். அதற்குப்பின் நபிமார்கள் வந்தார்கள். எல்லா நபிமார்களுக்கும் சதித்திட்டம் தீட்டப்பட்டது, சூழ்ச்சிகள் செய்யப்பட்டன.

பல நபிமார்களின் வரலாறுகளை அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனுடைய புத்தகம் அல்குர்ஆனில் நமக்கு தெளிவு படுத்துகிறான்.

அனைத்து வரலாறையும் அல்லாஹ் நமக்கு சொல்லிக் காட்டுகின்றான்.

எப்படி எல்லாம் நபிமார்கள் சூழ்ச்சி செய்யப்பட்டார்கள். எப்படியெல்லாம் நபிமார்களுக்கு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. அவர்களை கொண்டு ஈமான் கொண்ட மக்கள் எப்படியெல்லாம் சோதனைகளுக்கு ஆளானார்கள்.

அல்லாஹ் நபிக்கு சொல்கின்றான்.

நபியே! இவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள். இவர்கள் சதித் திட்டங்களைத் தீட்டிக் கொண்டே இருப்பார்கள். கவலைப்படாதீர்கள். அதற்காக நீங்கள் பதட்டப்பட வேண்டாம். நாம் உங்களை விட்டு விடுவோமோ என்று தயங்க வேண்டாம். உங்களுடைய பணியை நீங்கள் நிறுத்தாதீர்கள்.

அவர்களுக்கு பதில் சொல்வது, அவர்களுடைய சதித்திட்டங்களை முறியடிப்பது, அவர்களுடைய சூழ்ச்சிகளை அவர்களுக்கு எதிராக ஆக்குவது அல்லாஹ்வின் வேலை.

அல்லாஹ் கூறுகிறான் :

"இது என்னுடைய வேலை நான் அவர்களுக்கு சூழ்ச்சி செய்வேன்". அவர்களுக்கு நீங்கள் அவகாசம் கொடுங்கள். அவர்களை கொஞ்ச காலம் விட்டுவிடுங்கள். (அல்குர்ஆன்86 : 15-17)

கொஞ்சகாலம் விட்டுவிடுங்கள் என்றால், நீங்கள் உங்களுக்கு நான் கொடுத்த பணியை செம்மையாக நிறைவேற்றுங்கள். நான் உங்களுக்கு கொடுத்த கடமைகளை நீங்கள் சரியான முறையில் நிறைவேற்றுங்கள்.

அல்லாஹ்வுடைய கடமைகளை நபியும் நபியுடன் ஈமான் கொண்ட முஃமீன்களும் சரிவர செய்யும்போது வானத்திலிருந்து அல்லாஹ்வுடைய உதவியை பெற்றார்கள்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் எப்படிப்பட்ட சோதனைக்கு ஆளானார்கள்.இவர்களை குறித்து தான் அல்லாஹ் சொல்கின்றான் :

சூரா ஆல இம்ரான் உடைய ஒரு பெரும் பகுதியை ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதற்காக அல்லாஹ் ஒதுக்கி இருக்கிறான்.

கண்ணியத்திற்குரியவர்களே.இன்று குறை நம்மிடத்தில் இருக்கின்றது. குர்ஆனை எடுத்து சிந்திப்பவர்கள், படிப்பவர்கள், ஓதுபவர்கள் அதனுடைய வசனங்களை ஆராய்ச்சி செய்பவர்கள் எங்கே?

குர்ஆனிலிருந்து தங்களுடைய திட்டங்களைத் தீட்டியவர்கள் எங்கே? குர்ஆனிலிருந்து தங்களுடைய ஒழுக்கங்களை தேடுபவர்கள் எங்கே?

அல்லாஹு தஆலா ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உதவி செய்தான். அல்லாஹ்வுடைய உதவி வந்தால் அப்படித்தான் வரும். அது நம்முடைய வெளிரங்கமான புலன்களுக்கு அப்பாற்பட்டது.

கண்ணால் பார்க்க முடியாத வழிகளில், சிந்தித்துப் பார்க்க முடியாத வழிகளில், யோசித்து இருக்க முடியாத வழிகளில் அல்லாஹ் அவனுடைய உதவியை அனுப்புவான்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் எப்படி உதவி செய்தான்? யூதர்கள் எல்லாம் சதித்திட்டம் தீட்டினார்கள். அவர்களை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

வீட்டில் அடைக்கப்பட்டு இருந்தார்கள், வீட்டை முற்றுகையிட்டார்கள், வீட்டுக்குள் வந்துவிட்டார்கள், அவர்களுடைய எண்ணப்படி அவர்களை கொலை செய்து விட்டோம் அவர்களை சிலுவையில் அறைந்து விட்டோம் என்று எண்ணிக் கொண்டார்கள்.

ஆனால் நடந்தது என்ன? அல்லாஹ் சொல்கின்றான் :

إِذْ قَالَ اللَّهُ يَاعِيسَى إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِينَ كَفَرُوا وَجَاعِلُ الَّذِينَ اتَّبَعُوكَ فَوْقَ الَّذِينَ كَفَرُوا إِلَى يَوْمِ الْقِيَامَةِ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأَحْكُمُ بَيْنَكُمْ فِيمَا كُنْتُمْ فِيهِ تَخْتَلِفُونَ

(ஈஸாவை நோக்கி) அல்லாஹ் கூறியதை (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துவீராக.: ‘‘ஈஸாவே நிச்சயமாக நான் உமக்கு (உமது) ஆயுளை முழுமைப்படுத்துவேன். உம்மை நம்மளவில் உயர்த்திக்கொள்வேன். நிராகரிப்பவர்களி(ன் அவதூறி)லிருந்து உங்களைப் பரிசுத்தமாக்கிவைப்பேன். உங்களைப் பின்பற்றுபவர்களை நிராகரிப்பவர்கள் மீது இறுதி நாள்வரை மேலாக்கியும் வைப்பேன்'' (என்று கூறி, ஈஸாவே. அந்நிராகரிப்பவர்களை நோக்கி, நான் கூறியதாக நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வாகிய) என்னிடமே நீங்கள் மீண்டும் வருவீர்கள். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவற்றைப் பற்றி (அந்நேரத்தில்) நான் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்'' (என்றும் கூறினான்.) (அல்குர்ஆன் 3 : 55)

உலகத்தில் எத்தனை திட்டம் தீட்டுபவர்கள் வந்தாலும் அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பாதுகாத்தது போன்று பாதுகாக்க முடியுமா?

வானத்தில் ஒருத்தரை உயர்த்தி சென்று பாதுகாப்பது போன்று அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருக்கு ஆற்றல் இருக்கிறது?

அல்லாஹு ரப்புல் ஆலமீன் யூதர்கள் சதிசெய்து சிலுவையில் அறைய வேண்டும் கொல்லவேண்டும் கேவலப்படுத்த வேண்டும் என்று நாடிய அந்த நபியை அல்லாஹ் பாதுகாத்தான்.

அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பாதுகாத்த அல்லாஹ் கூறுகிறான் :

இப்படித்தான் ஈஸாவுடைய வழியில் ஈஸாவை பின்பற்றுபவர்களை காஃபிர்களிடமிருந்து நாம் பாதுகாப்போம்.இறைமறுப்பாளர்கள் இறை நிராகரிப்பாளர்களிடம் இருந்து நாம் அவர்களை பாதுகாப்போம்.

கண்ணியத்திற்குரியவர்களே!நபிமார்களுடைய இந்த சரித்திரம் ஈஸா நபி உடைய இந்த சரித்திரம் நமக்கு ஏன் அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்லிக் காட்டுகின்றான்?

இதில் நமக்கு என்ன படிப்பினை இருக்கிறது? சிந்தித்துப் பாருங்கள். கூட்டங்கள் எல்லாம் சுற்றி கொண்டாலும் எத்தனை அழிவு தரும் ஆயுதங்களை அவர்கள் கொண்டுவந்து குவித்தாலும் அல்லாஹ் நாடினால் வானத்தின் கதவுகளை திறப்பான்.

அல்லாஹ் நாடினால் பூமியின் கதவுகளை திறப்பான். அல்லாஹ் நாடினால் ஆகாயத்தின் கதவுகளை திறந்து விடுவான்.

அஹ்ஸாப் போரை சிந்தித்துப் பாருங்கள்.

அல்லாஹ் கூறுகின்றான் :

إِذْ جَاءُوكُمْ مِنْ فَوْقِكُمْ وَمِنْ أَسْفَلَ مِنْكُمْ وَإِذْ زَاغَتِ الْأَبْصَارُ وَبَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ وَتَظُنُّونَ بِاللَّهِ الظُّنُونَا

உங்களுக்கு மேற்புறமிருந்தும், கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்து கொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்கள் திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்கள் உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள். (அல்குர்ஆன் 33 : 10)

அஹ்ஸாப் போர் மிகக்கடுமையான யுத்தம். ஒருபக்கம் யூதர்கள் ஒப்பந்தத்தை முறித்துவிட்டு முஸ்லிம்களை தாக்குவதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப்பக்கம் ஏறக்குறைய 12ஆயிரம் காஃபிர்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

தாக்குதல் நடத்துவதற்காக மேலிருந்தும் கீழிருந்தும் சுற்றுவட்டாரத்தில் உள்ள எல்லா காஃபிர்களும் சூழ்ந்து விட்டார்கள்.

இருப்பதோ 4ஆயிரத்திற்கும் குறைவான முஸ்லிம்கள் தான். பாதுகாப்புக்கு எந்தவிதமான முன் ஏற்பாடும் இல்லை. அகழ் தோன்டியதை தவிர.

ஒரு மாத காலம் முற்றுகை நீடிக்கிறது. இருந்த உணவுகள் குறைந்து கொண்டு வருகின்றன. முஸ்லிம்களுடைய ஆயுதங்களும் குறைந்து கொண்டு வருகின்றன.

எல்லாவிதத்திலும் முஸ்லிம்கள் பலவீனம் அடைந்து வருகிறார்கள். அந்த நேரத்தில் இனி நாம் இத்தனை பேரும், நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உட்பட 4000பேரும் இந்தப் போரில் ஷஹீதாகி விடவேண்டியதுதான்.

காஃபிர்களிடம் கொல்லப்பட்டு விடவேண்டியதுதான் என்ற எண்ணத்திற்கு ஆகிவிட்டார்கள் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

பயங்கரமான சோதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். பயங்கரமான அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்கள். மேலிருந்தும் கீழிருந்தும் எல்லா பக்கத்திலிருந்தும் சிக்கிக் கொண்டார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே!பல நாட்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லுஹருடைய தொழுகையையும் அஸருடைய தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் தொழ முடியாமல் அந்தப் போருடைய சூழல் இருந்தது என்றால், எதிரிகளுடைய தாக்குதல் எப்படி இருக்கும் என சிந்தித்துப் பாருங்கள்.

மகரிப் நேரம் நெருங்கும்போது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓடோடி வருகிறார்கள்.

அல்லாஹ்,இந்த காஃபிர்களுடைய வீடுகளை இவர்களுடைய கப்ருகளை நெருப்பால் நிரப்பட்டும்.இவர்கள் நம்மை தொழ விடாமல் ஆக்கி விட்டார்களே!

என்று அல்லாஹ்வுடைய சாபம் இறங்கும்படி பிரார்த்தனை செய்யும் அளவுக்கு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆளாகி விட்டார்கள் என்றால் அங்கே தாக்குதல் எந்த அளவுக்கு கடுமையாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் கூறுகிறான்:

فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

அல்லாஹ் அவருக்குத் தன் புறத்திலிருந்து மனநிம்மதியை அளித்தான். (மற்ற போர் சமயங்களிலும்) நீங்கள் காணமுடியாத படைகளைக் கொண்டு அவருக்கு உதவி செய்து நிராகரிப்பவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை) தாழ்த்தினான். ஏனென்றால், அல்லாஹ்வின் வார்த்தை (மார்க்கம்)தான் மிக உயர்வானது. இன்னும், அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 9 : 40)

வசனத்தின் கருத்து : நபியே! நமது உதவி வரும். ஆனால், அது எப்படி வேண்டுமானாலும் வரும்.

وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ

நபியே! நம்முடைய பட்டாளத்தை நம்முடைய ராணுவத்தை அனுப்பினோம். உனது இறைவனுடைய ராணுவங்கள் அவனைத் தவிர வேறு யாரும் அறிய முடியாது. (அல்குர்ஆன் 74 : 31)

அல்லாஹ்வுடைய ராணுவம் என்ன? நினைத்தால் சிறு சிறு பறவைகளை கூட அவன் அனுப்பலாம். அவன் நினைத்தால் சிறிய ஈயைக்கூட, காற்றை நினைத்தால், மேகத்தை நினைத்தால், வெயிலை நினைத்தால் கூட அனுப்பலாம்.

அல்லாஹ் காற்றை அனுப்பினான். அந்தக் காற்று பெரிய பெரிய தேக்ஸாகள் பெரிய பெரிய பாத்திரங்கள், அதில் சமையல் செய்யப்பட்டு கொண்டு இருக்கின்றன.

அந்த சமையல் பாத்திரங்களை எல்லாம் மரத்தில் இருந்து கீழே விழுந்த இலைகளை காற்றில் பறக்க வைப்பது போன்று அந்தக் காற்று அந்த பாத்திரங்களை எல்லாம் தூக்கி வீசுகிறது.

கடுமையான பலத்தோடு கூடாரம் இடப்பட்டிருந்த அவர்களுடைய கூடாரங்கள் கம்புகள் எல்லாம் தூக்கி வீசப்படுகின்றன. ஒட்டகங்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடுகின்றன.

அல்லாஹ் அவனுடைய காற்றை அனுப்பினான். நீங்கள் பார்க்காத ராணுவத்தை அவன் இறக்கினான்.

அல்லாஹு அக்பர்! காஃபிர்களுக்கு அவன் வேதனை செய்தான். காஃபிர்களுடைய வார்த்தைகளை அல்லாஹ் கேவலப்படுத்தினான். அல்லாஹ்வுடைய வார்த்தைதான் ஓங்கக் கூடியது. அல்லாஹ்வுடைய வார்த்தைதான் உயர்வானது.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் தன்னுடைய சத்தியத்தை அங்கே நிரூபித்துக் காட்டினான்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்ன ஒரு அடிப்படையில் முஃமின்களுக்கு இந்த அஹ்ஸாப் உடைய யுத்தத்தில் உதவி செய்தான்?

அவர்களுடைய பொறும, அவர்களுடைய நபிக்கு ஒத்துழைத்தது, அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக அர்ப்பணித்து, அல்லாஹ்வுடைய தீனுக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்க அவர்கள் தயாராக இருந்தார்கள்.

வெறும் உயிரை அல்லாஹ்வுடைய தீனுக்காக அர்ப்பணிப்பது மட்டும் அல்ல, அவர்களுடைய வாழ்க்கையில் தீனை அவர்கள் கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை நம்பியிருந்தார்கள். எனவே அல்லாஹ் உதவி செய்வான்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எப்படி உதவி செய்தான்?

எல்லா நபிமார்களுடைய வரலாற்றின் சுருக்கங்களை இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான் :

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ فَكَذَّبُوا عَبْدَنَا وَقَالُوا مَجْنُونٌ وَازْدُجِرَ (9) فَدَعَا رَبَّهُ أَنِّي مَغْلُوبٌ فَانْتَصِرْ (10) فَفَتَحْنَا أَبْوَابَ السَّمَاءِ بِمَاءٍ مُنْهَمِرٍ (11) وَفَجَّرْنَا الْأَرْضَ عُيُونًا فَالْتَقَى الْمَاءُ عَلَى أَمْرٍ قَدْ قُدِرَ (12) وَحَمَلْنَاهُ عَلَى ذَاتِ أَلْوَاحٍ وَدُسُرٍ (13) تَجْرِي بِأَعْيُنِنَا جَزَاءً لِمَنْ كَانَ كُفِرَ (14) وَلَقَدْ تَرَكْنَاهَا آيَةً فَهَلْ مِنْ مُدَّكِرٍ (15) فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்த நூஹுடைய மக்களும் (அந்த நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் (அதைப் பற்றி எச்சரிக்கை செய்த) நம் (தூதராகிய) அடியாரைப் பொய்யாக்கியதுடன், அவரைப் பைத்தியக்காரனென்று கூறி (அவரை துன்புறுத்துவதாக) மிரட்டிக்கொண்டும் இருந்தார்கள். ஆகவே, அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நான் (இவர்களிடம்) தோற்றுவிட்டேன். நீ எனக்கு உதவி செய்!'' என்று பிரார்த்தனை செய்தார்.

ஆதலால், வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டு, தாரை தாரையாய் மழை கொட்டும்படி நாம் செய்தோம்.மேலும், பூமியின் ஊற்றுக்கண்களையும் (பீறிட்டுப்) பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே, நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத்திற்காக தண்ணீர் ஒன்று சேர்ந்தது.

நாம் அவரை(யும், அவரை நம்பிக்கை கொண்டவர்களையும்) பலகையினாலும், ஆணியினாலும் செய்யப்பட்ட கப்பலின் மீது சுமந்து கொண்டோம்.அது நம் கண்களுக்கு முன்பாகவே (பிரளயத்தில் மிதந்து) சென்றது. (மற்றவர்களோ மூழ்கி மாண்டனர்.) எவரை இவர்கள் (மதிக்காது) நிராகரித்தனரோ, அவருக்காக இவ்வாறு கூலி கொடுக்கப்பட்டது.

நிச்சயமாக நாம் இதை (பிற்காலத்தவருக்கு) ஒரு படிப்பினையாகச் செய்து விட்டோம். (இதைக்கொண்டு) நல்லுணர்ச்சி பெறக்கூடியவர் உண்டா? எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)? (அல்குர்ஆன்54 : 9-16)

கண்ணியத்திற்குரியவர்களே!இப்படித்தான் காஃபிர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை விட்டு மக்களை திசை திருப்புவதற்காக எப்பொழுதும் ஒரு புரோபாகண்டாக்களை அவர்கள் கையிலேயே வைத்திருப்பார்கள்.

முஸ்லிம்கள் என்றால் அவர்கள் தீவிரவாதிகள், முஸ்லிம்கள் என்றால் அவர்கள் காட்டுமிராண்டிகள், முஸ்லிம்கள் என்றால் கொடூரமானவர்கள் என்று இந்த மீடியாக்களும் இந்த காஃபிர்களும் நம்மைப்பற்றி மக்களிடத்தில் சொல்லி இஸ்லாமை விட்டு தூரமாக்க முயற்சி செய்கிறார்கள்.

அதுபோன்று தான் ஒவ்வொரு காலத்திலும் இந்த நபியை குறித்து அந்த நபியுடைய முஃமீன்களை குறித்து அவர்கள் பரிகாசம் செய்தார்கள். அவர்களை இழிவாக பேசினார்கள். அவர்களிலிருந்து மக்களை தூரப் படுத்துவதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்து அதில் எந்த குறைவும் செய்யவில்லை.

இந்த காலத்தில் மீடியாக்கள் வந்துவிட்டன. போஸ்டர்கள் வந்துவிட்டன. பேப்பர்கள் வந்துவிட்டன. இதன் மூலமாக இவர்கள் செய்கிறார்கள். இந்த காலத்தில் இவர்கள் செய்கின்ற அத்தனை பிரச்சாரங்களையும் அவர்கள் அப்போது செய்துவிட்டார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ஹஜ்ஜுடைய காலங்களில் அவர்கள் மக்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்வதற்காக மினாவில் ஒவ்வொரு கூடாரமாக சென்று நிற்பார்கள். அந்த கூடார வாசிகளை பார்த்து அவர்கள் கூறினார்கள் :

யாராவது ஒரு கூட்டம் இங்கே இருக்கிறார்களா? எனக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு. யாராவது ஒரு கூட்டம் இங்கே இருக்கிறார்களா? எனக்கு ஆறுதல் தருவதற்கு. என்னை அவர்களோடு அழைத்து செல்வதற்கு. என் இறைவனின் இந்த இஸ்லாமிய அழைப்பினை நான் அவர்களுக்கு மத்தியில் எடுத்து சொல்வேனே! என்று கூறுவார்கள்.

ஒவ்வொரு கூடாரமாக ஏறி இறங்குவார்கள்.

அபூஜஹல், அபூலஹப் அவர்களுக்குப் பின்னால் வருவார்கள். கற்களை எடுத்துக் கொள்வார்கள்.ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிடரியை நோக்கி அந்த பொடிக் கற்களை எறிவார்கள்.எரிந்து விட்டு அந்த கூடார வாசிகளை பார்த்துச் சொல்வார்கள்.

இவர் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்தான். இருந்தாலும் இப்போது இவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இவர் மதம் மாறிவிட்டார். இவருக்கு ஏதோ செய்வினை கோளாறு இருக்கிறது. இவருக்கு ஏதோ ஜின்களின் கோளாறு இருக்கிறது. அவருக்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது. இவருடைய பேச்சை கேட்காதீர்கள். இவர் உங்களை மயக்கி விடுவார் என்று பிரச்சாரம் செய்வார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன செய்தார்கள்? அபூஜஹல் அபூலஹப் கூறிய இந்த வார்த்தைகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்களா? அபூஜஹல் அபூலஹப் பார்த்து நீங்கள் இப்படி சொல்லாதீர்கள், நான் ஒன்னும் பைத்தியக்காரன் அல்ல, நான் அறிவாளி என்று உங்களுக்கு நிரூபித்து காட்டட்டுமா? என்று அவர்களோடு சண்டை செய்து கொண்டிருந்தார்களா? விவாதம் செய்து கொண்டிருந்தார்களா? அவரோடு தர்க்கம் செய்து கொண்டு இருந்தார்களா?கிடையாது.

அல்லாஹ் கூறிவிட்டான். இப்படித்தான் நபிமார்களை சோதிப்பதற்காக அல்லாஹ் சில வீணர்களை ஏற்படுத்தி இருக்கிறான். இவர்கள் இவர்களுடைய வேலை செய்யட்டும்.நான் என்னுடைய வேலையை செய்கிறேன் என்று அல்லாஹ்வுடைய தூதர் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அழைப்புப் பணியை சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் உதவினான். எப்படி உதவினான்?எல்லா காஃபிர்களும் கடைசி நேரத்தில் ஒன்று சேர்ந்து விட்டார்கள். இனி முஹம்மதை விட்டு வைக்கக் கூடாது,பலவிதமான சதித் திட்டங்கள் தீட்டப்பட்டு எந்த சதித் திட்டமும் நிறைவேறுவதாக தெரியவில்லை.

கடைசியாக ஒரே திட்டம் இருந்ததையெல்லாம் கொட்டி விடுவது என்று.அந்த குறைஷிகளில் உள்ள அத்தனை குடும்பத்திலிருந்தும் ஒரு ஒரு வீரர்களைத் தேர்ந்தெடுத்து 100வீரர்கள் ஒரே நேரத்தில் முஹம்மது அலைஹிஸ்ஸலாம் மீது பாய்ந்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான் ஹாஷிம் கிளையார்கள் பழிக்கு பழி வாங்க முடியாது. யாரையும் சொல்ல முடியாது. நஷ்ட ஈடு கேட்பார்கள்.எல்லோரும் வசூல் செய்து கொடுத்து விடலாம் என்ற முடிவில் அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் மிகப்பெரியவன். இவர்கள் நம்முடைய இந்த சதித்திட்டம் யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்தார்கள். தாருன் நதுவாவில் தனிப்பட்ட முறையில் அவர்கள் ஒன்று கூடுகிறார்கள். அந்த இடத்தில் அவர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே வரமுடியாது.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவன் மிக அறிந்தவன்.

அவனுடைய செவி அவனுடைய பார்வை என்பது, நம்முடைய பார்வைகளும் நம்முடைய செவியும் நம்முடைய அறிவும் எங்கு எட்டாதோ அங்கெல்லாம் எட்டக் கூடியதுதான் அல்லாஹ்வுடைய பார்வை.

அவனுடைய பார்வையை அளவு காண முடியுமா? அவனுடைய சேவையை ஒரு மனிதனால் கற்பனை செய்ய முடியுமா?

அல்லாஹு ரப்புல் ஆலமீன் தன் நபிக்கு அறிவித்தான். நபிக்கு அறிவித்தது மட்டுமல்ல, இந்த ஹிஜ்ரா உடைய அத்தனை திட்டங்களையும் அல்லாஹு ரப்புல் ஆலமீன் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சொல்லி தருகிறான்.

வெளிரங்கத்தில் பார்க்கும்போது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் எடுத்த திட்டங்களை போன்று தெரிகிறது. ஆனால் அவை அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹியின் மூலமாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட திட்டம்.

அதையும் அல்லாஹு ரப்புல் ஆலமீன் எப்படி கொடுக்கிறான்? அல்லாஹ் நாடினால் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை வானத்தில் உயர்த்தியது போன்று, எந்த ஜிப்ரீலை அனுப்பி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை உயர்த்தினானோ, எந்த ஜிப்ரீலை அனுப்பி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மிஃராஜிற்க்கு அழைத்தானோஅந்த ஜிப்ரீலை அனுப்பி அல்லாஹு ரப்புல் ஆலமீன் அபூபக்ர் அவர்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் தூக்கிக்கொண்டுபோய் மதினாவில் விடமுடியும்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் அப்படி செய்யவில்லை. எப்படி செய்கிறான்? இந்த மக்கள் அவர்களுடைய சதித் திட்டங்களை எல்லாம் தீட்டட்டும்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் இந்தத் திட்டம் தீட்டுவதற்கு முன்பே நபியை செல்லும்படி கூறி இருக்கலாம். அல்லது இந்தத் திட்டம் தீட்டப்பட்ட பிறகு இரவு வருவதற்கு முன்னதாகவே நபியை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மதினாவிற்கு அனுப்பியிருக்கலாம்.

அல்லாஹ்வால் எப்படிவேண்டுமானாலும் முடியும். வானத்திலிருந்து நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மழையை இறக்கியது போன்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு இறக்கி இருக்கலாம்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் அப்படி செய்யவில்லை.

இந்த காஃபிர்களை எல்லாம் அத்தனை திட்டங்களையும் தீட்டும்படி வைத்தான். கைகளில் வாள் ஏந்தினார்கள். வீட்டை சுற்றி நின்று கொண்டார்கள். எல்லாம் அங்கே நடந்து கொண்டே இருந்தது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வீட்டிலிருந்து வெளியேறுகிறார்கள்.

சூரா யாஸின் உடைய வசனங்களை ஓதியவர்களாக,

وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ

அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடிவிட்டோம். ஆதலால், அவர்கள் (எதையும்) பார்க்க முடியாது. (அல்குர்ஆன் 36 : 9)

அல்லாஹ், குர்ஆனுடைய வசனத்தில் அத்தனை ஆற்றலை வைத்திருக்கிறான். அத்தகைய கூற்றை அல்லாஹ் வைத்திருக்கிறான்.

யாருடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் மீது ஈமான் இருக்கிறதோ, யார் தீனை  தங்களுடைய வாழ்க்கையாக ஆக்கினார்களோ அவர்கள் அல்லாஹ்வுடைய அந்த வசனத்தை ஓதும்போது நிச்சயமாக அல்லாஹ் அல்குர்ஆனில் அப்படிப்பட்ட தாக்கத்தை வைப்பான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் தோழர் ஒருவரை  கடுமையான ஒரு விஷ ஜந்து உடைய பாலைவனத்தின் தேள் ஒன்று அவரை கொட்டிவிடுகிறது.

சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதுகிறார்கள். அந்த விஷம் அப்படியே இறங்கி விடுகிறது.(1)

அறிவிப்பாளர் : அபூசயீத் அல்குத்ரி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 5736.

இன்று நாம் ஓத முடியுமா? அங்கே ஈமான் இருந்தது. அங்கே குர்ஆன் உள்ளதில் இறங்கி இருந்தது.

காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எதிரிகளுக்கு முன் நிற்கிறார்கள். எதிரிகளுடைய தலைவன் வருகிறான்.

அப்போது அவன் ஒரு நிபந்தனை சொல்கிறான்; நான் உன்னிடத்தில் ஒன்றை கேட்பேன். நீ அதை செய்தால் நான் முஸ்லிமாகி விடுவேன். உன்னுடைய இறைவனால் எல்லாம் முடிகிறது என்று சொல்கிறாய் அல்லவா. இந்த விஷ பாட்டிலை நீ குடித்து விடு. நான் கலிமா சொல்லி விடுகிறேன் என்று சொல்லி, விஷத்தின் ஒரு பெரிய பாட்டிலை காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு முன்னால் கொண்டு வந்து வைக்கிறார்.

(இங்கு அல்லாஹ்வுடைய உதவியை ஸஹாபாக்கள் எப்படிப் பெற்றார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.)

بسمِ اللهِ الذي لا يضرُّ مع اسمِه شيءٌ في الأرضِ ولا في السماءِ وهو السميعُ العليمُ

அல்லாஹ்வுடைய பெயரைக் கூறிவிட்டால் பூமியிலும் வானத்திலும் எதுவும் எந்தத் தீங்கும் செய்யாது.என்று கூறிவிட்டு அந்த விஷ பாட்டிலை முழுமையாக எடுத்து குடித்து முடிக்கிறார்கள்.

எங்கிருந்து வருகிறது அந்த ஈமான்? உள்ளத்தில் குர்ஆன் இறங்கியிருக்கிறது.உள்ளத்தில் அல்லாஹ்வுடைய அன்பு இறங்கியிருக்கிறது.

உள்ளத்தில் மார்க்கம் நிலைத்திருந்தது. அல்லாஹ்வுடைய தீனுக்காக அனைத்தையும் ஏற்க கூடிய மக்களாக அவர்கள் இருந்தார்கள்.

அல்லாஹ் உதவி செய்கிறான்.

சம்பவத்தின் தொடர் : அல்லாஹ் எப்படி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உதவி செய்தான்.

சூழ்ந்து நிற்கிறார்கள். குர்ஆனுடைய வசனத்தை ஓதுகிறார்கள். அல்லாஹ்வுடைய கூற்றை ஓதுகிறார்கள்.

இவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் நான் திரையை ஏற்படுத்தி விட்டேன்.எதையுமே இவர்களால் பார்க்க முடியாது. (அல்குர்ஆன் 36 : 9)

அப்படித்தான் நடந்தது. நூறு காஃபிர்கள் கண் விழிக்க விழிக்க அங்கு பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்போது வெளியேறுவார், அவரை வெட்டி வீழ்த்துவோம் என்று.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியேறி விடுகிறார்கள். எந்த காஃபிர்களாளும் பார்க்க முடியவில்லை.

கீழே உள்ள மண்ணிலிருந்து ஒவ்வொரு காஃபிர் உடைய தலையிலேயும் அந்த மண்ணை வைத்து விட்டு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறப்படுகிறார்கள்.

காலையில் ஷைத்தான் வருகிறான், "ஓ மக்களே! நீங்கள் யாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?" "நாங்கள் முஹம்மதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்"

"அவர்கள் எப்போதோ சென்றுவிட்டார். உங்கள் தலையில் மண்ணை வைத்து விட்டு சென்று விட்டார், உங்கள் தலையில் மண் இருப்பதை பாருங்கள்." உடனே எல்லாம் தட்டி விடுகிறார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய உதவி அப்படித்தான் வரும்.

அடுத்து ஒரு சோதனை. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை சவ்ர் குகையில் தங்குங்கள் என்று அடுத்த கட்டளை வருகிறது.

குகையிலேயே தங்கி இருக்கிறார்கள். மக்கள் என்ன நினைத்தார்கள்? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மதினா நோக்கி சென்றிருப்பார்கள் என்று.

ஆனால், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எமனுடைய பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள். சவ்ர் மலையின் உச்சியில் தங்கியிருந்தார்கள்.

காஃபிர்கள் மதினாவின் பாதை எல்லாம் சுற்றி சுற்றி கலைத்து விட்டபோது அவர்கள் எமன் பாதையையும் விட்டு வைக்கவில்லை, அங்கேயும் வந்துவிட்டார்கள்.

வந்ததோடு அவர்கள் நிறுத்தவில்லை. மலை உச்சிக்கு சென்று விட்டார்கள். எங்கேயாவது பதுங்கி இருப்பார்களா?அவர்களை போட்டு தள்ளிவிடலாம் என்று தேடுகிறார்கள்.

ஏன் தெரியுமா?முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தலையை கொய்தால் நூறு ஒட்டகங்கள் சன்மானம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

இன்று நூறு ஒட்டகங்கள் என்று முஸ்லிம்களைப் பார்த்து சொல்கிறார்கள். அப்படித்தான் அந்த காலத்திலும் இஸ்லாமை ஒழிப்பதற்காக அல்லாஹ்வுடைய தீனை அழிப்பதற்காக அவர்கள் பரிசுகளை அறிவித்தார்கள்.

அதுபோன்றுதான் இன்றைய மக்களும் செய்கிறார்கள். இன்று, இஸ்லாத்திற்கு எதிராக எவன் எழுதுகிறானோ உடனே இந்த பிரிட்டன் அரசாங்கம் அவனை வரவேற்பதற்காக காத்திருக்கிறது. அவர்களுக்கு சன்மானம் கொடுப்பதற்காக. டாக்டர் பட்டம் வழங்குவதற்காக. அவனுக்கு வாழ்நாளெல்லாம் செலவு செய்வதற்காக. அவனுடைய வாழ்க்கைக்கு பொறுப்பெடுத்து கொள்வதற்காக தயாராக இருக்கிறது.

இஸ்லாமை அழிக்கும் விஷயத்தில் அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். ஆனால் இன்று முஸ்லிம்கள், முஸ்லிம்களின் அரசாங்கங்கள் முஸ்லிம்களின் ஜமாஅத்துகள் இஸ்லாமை பாதுகாப்பதற்காக தீனை பாதுகாப்பதற்காக அல்லாஹ்வுடைய மார்க்கத்தை எடுத்து வைப்பதற்காக என்ன முயற்சிகள் செய்கிறார்கள்?அதற்காக என்ன செலவுகள் செய்கிறார்கள்? என்று சிந்திக்க வேண்டிய சூழ்நிலை.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவர்களை எப்படி பாதுகாத்தான்?எல்லோரும் சூழ்ந்து தேடுகிறார்கள். அபூபக்ர் குகைக்கு அருகில் எதிரிகளின் கால் நடமாட்டங்கள் இருப்பதை பார்க்கிறார்கள்.

குதிரைகள் சப்தங்களை கேட்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவது குனிந்து தன் காலை பார்த்தால் நம்மை பார்த்துக் கொள்வாரே. அந்தக் கட்டம் எப்படிப்பட்ட பதட்டமான நேரம்.பயங்கரமான ஒரு சூழ்நிலை.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலோ அபூபக்ர் இடத்திலோ எந்தவிதமான ஆயுதமும் இல்லை.

குகைக்குள்ளே பதுங்கி இருக்கிறார்கள். உயிருக்கு பயந்து குகைக்குள்ளே பதுங்கி இருக்கிறார்கள். எப்படிப்பட்ட இக்கட்டான நிலை.

அந்த நேரத்திலும் அவர்களுக்கு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை ஆழமாக இருந்தது. தன் தோழருக்கு அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள் :

لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا

கவலைப்படாதே!நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு இருக்கிறான். 9 : 40)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னோடு தன் தோழரையும் சேர்த்துக் கொண்டார்கள்.கூறினார்கள் :

«مَا ظَنُّكَ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا»

அபூபக்ரே! இரண்டு பேருடன் மூன்றாவதாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்.

அறிவிப்பாளர் : அபூபக்ர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 4663.

எப்படிப்பட்ட நிம்மதியை அல்லாஹ் கொடுத்தான்!

கண்ணியத்திற்குரியவர்களே!சோதனை வரும்போது முஃமின்களுக்கு ஈமான் அதிகமாக வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

முனாஃபிக்குகளை பற்றியும் அல்லாஹ் கூறுகிறான்.

முனாஃபிக்குகள் யார்? சோதனை வரும்போது பதறி விடுவார்கள், புலம்புவார்கள், தடுமாறுவார்கள், இஸ்லாமை விட்டு வெளியேற முயற்சி செய்வார்கள்.

இன்று,எத்தனைபேர் எதிரிகளுக்கு பயந்து தங்களுடைய தாடிகளை மழித்துக் கொள்கிறார்கள்.

இன்று,எத்தனை பேர் வெளியில் சென்று தொழுகை நேரம் வந்து தொழுது விட்டால் நம்மை முஸ்லிம் என்று எண்ணி விடுவார்களோ எனவே வீட்டிலேயே போய் மொத்தமாக தொழுது கொள்ளலாம் என்று அந்நியர்களுக்கு முன்னால் தொழுவதற்கு வெட்கப்பட்டு பயந்து தொழாமல் இருக்கிறார்கள்.

இன்று, முஸ்லிம்கள் தங்களுடைய கோலங்களை சிதைத்துக் கொண்டு இருக்கிறார்களே.

இன்று,முஸ்லிம்கள் தங்களை இஸ்லாமியர் முஸ்லிம் என்று அடையாளப் படுத்துவதற்கு அவர்கள் தயங்குவதற்கு என்ன காரணம் ?ஒன்று, இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பு .

அல்லது மற்றவர்களின் மீது உள்ள பயம் .

தன்னை முஸ்லிம் என்று வெளிப்படுத்தினால் வேலை கிடைக்காதோ ..தன்னை முஸ்லிம் என்று வெளிப்படுத்தினால் தனக்கு ஏதாவது ஆபத்து வருமோ..

இந்தக் நிலைகள் இவ்வளவு பலவீனமான இஸ்லாமை வைத்து இருக்கக்கூடிய மக்களுக்கு அல்லாஹ்வின் உதவி வரும் என்று நாம் கற்பனையில் இருக்கிறோமா ?

கண்ணியத்திற்குரியவர்களே . வரலாறு நமக்கு சாட்சியாக இருக்கின்றன. நபிமார்கள் வரலாறுகள் நூஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வரலாற்றை கூறினோம்.

எல்லா சூழ்ச்சிகளும் அங்கே நடந்தது. எல்லா சதித்திட்டங்களும் அங்கே தீட்டப்பட்டன. கடைசியாக அப்படியே நெருக்கடிக்கு ஆளானார்கள்.

அல்லாஹ் கூறினான் :

நபியே!ஒரு கப்பலை செய்யுங்கள் என்று. அப்போது காஃபிர்கள் எல்லாம் நையாண்டி செய்தனர். என்னப்பா நூஹு!இவ்வளவு நாள் வரைக்கும் ஏதோ கொஞ்சம் நஞ்சம் புத்தியாவது இருக்கும்னு நாங்க நினைச்சோம். பாலைவனத்தில் தண்ணீர் இல்லாத இந்த இடத்தில் கப்பலை செய்து கொண்டு இருக்கிறாயே?

கப்பல் செய்ய வேண்டுமென்றால் கடற்கரைக்கு அருகில் செய்ய வேண்டும். பெரிய நதிக்கரைக்கு அருகில் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த நதியில் அந்த கடலில் கப்பலை ஓட வைக்க முடியும்.

கப்பலில் பயணம் செய்ய முடியும். தரையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாயே? இங்கே எங்கே எப்படி ஆறு வரும், இங்கே எப்படி கடல் வரும், இங்கே கப்பல் எப்படி மிதக்கும்?என்றெல்லாம் கேலி செய்து கொண்டு இருந்தார்கள்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் உடைய கட்டளை வந்த போது, வானம் பிளந்தது. வானத்தின் கதவுகளை நாம் திறந்தோம். அடர் மழையைக் கொண்டு பூமியை நாம் உடைத்து விட்டோம். அதனுடைய ஊற்றுகள் எல்லாம் பீரிட்டு வர ஆரம்பித்து விட்டன. மேலிருந்து தண்ணீர் கீழிருந்து தண்ணீர் அல்லாஹ்வுடைய கட்டளையின்படி அல்லாஹ் விதித்த விதியின் படி அந்த தண்ணீர் சந்தித்துக் கொண்டது. (அல்குர்ஆன் 54 : 11,12)

நூஹ் அலைஹி வஸ்ஸலாம் தன்னுடைய மகனை பார்த்து கூறினார்கள் :

وَهِيَ تَجْرِي بِهِمْ فِي مَوْجٍ كَالْجِبَالِ وَنَادَى نُوحٌ ابْنَهُ وَكَانَ فِي مَعْزِلٍ يَابُنَيَّ ارْكَبْ مَعَنَا وَلَا تَكُنْ مَعَ الْكَافِرِينَ (42) قَالَ سَآوِي إِلَى جَبَلٍ يَعْصِمُنِي مِنَ الْمَاءِ قَالَ لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ أَمْرِ اللَّهِ إِلَّا مَنْ رَحِمَ وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِينَ

பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையில் அவர்களைச் சுமந்து செல்ல ஆரம்பித்தது. (அச்சமயம்) நூஹ் தன்னை விட்டு விலகியிருந்த தன் மகனை நோக்கி ‘‘என் மகனே! எங்களுடன் (நம்பிக்கை கொண்டு) நீயும் இதில் ஏறிக்கொள். (எங்களை விட்டு விலகி) நிராகரிப்பவர்களுடன் நீ இருக்க வேண்டாம். (அவ்வாறாயின், நீயும் நீரில் மூழ்கி விடுவாய்)'' என்று (சப்தமிட்டு) அழைத்தார்.

அதற்கவன் ‘‘இந்த வெள்ள(ப் பிரளய)த்திலிருந்து என்னைக் காப்பாற்றக்கூடிய ஒரு மலையின் மேல் நான் சென்று விடுவேன்'' என்று கூறினான். அதற்கவர் ‘‘அல்லாஹ் அருள் புரிந்தாலன்றி அவனுடைய கட்டளையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இன்று ஒருவராலும் முடியாது'' என்று கூறினார். (அச்சமயம்) அவர்களுக்கு இடையில் ஓர் அலை எழும்பி குறுக்கிட்டது; அவனும் மூழ்கியவர்களுடன் மூழ்கிவிட்டான். (அல்குர்ஆன் 11 : 42,43)

அல்லாஹ்வுடைய தண்டனை இந்த பூமியை சூழ்ந்திருக்கிறது.ஒவ்வொரு மாதத்திலும் நாம் அதை பார்க்கிறோம்.சுனாமியின் பெயரால், நிலநடுக்கத்தின் பெயரால், வெப்பம் அதிகரிப்பதால், அல்லது குளிர் அதிகரிப்பதால், அல்லது எரிமலைகள் வெடிப்பதால் அவற்றை நாம் பார்க்கிறோம்.

இன்னும் என்னென்ன ரகசியங்கள் அல்லாஹ்வுடைய வேதனையின் ரகசியங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளிப்படுமோ? என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்.

சென்ற நாட்களில் சென்ற மாதத்தில் சென்ற ஆண்டில் இல்லாத புதிய புதிய அதாபுகளை இன்று நாம் பார்க்கிறோம்.

சமீபத்தில் என்ன நடந்தது? எப்படி எல்லாம் அவர்கள் திட்டம் போட்டு ஆடம்பரத்திலும் உல்லாசத்திலும் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ் மறைத்து வைத்திருந்த அவனுடைய பட்டாளத்திலிருந்து ஒரு பட்டாளத்திற்கு போட்ட ஒரு சிறிய கட்டளை.

ஹதீஸில் வருவதைப் போன்று.அல்லாஹு ரப்புல் ஆலமீன் மேகத்திலிருந்தும் பூமியிலிருந்தும் தண்ணீரை திறப்பதற்கு நூஹ் அலைஹி வஸ்ஸலாம் அவர்களுடைய கூட்டத்தை அழிப்பதற்கு ஒரு சிறிய மாட்டின் காது அளவிற்கு தான் ஒரு துவாரம் போடப்பட்டது.

தண்ணீர் அல்லாஹ்வுடைய கஜானாவில் இருந்து இப்படி நிரம்பிவிட்டது என்றால்  அல்லாஹ்வுடைய மொத்த கஜானாவை திறந்தால் என்னவாகும்?!

அது போன்று தான், அந்த பனி மலைகள் பனிப்பிரதேசத்தில் இருந்த ஒரு சிறிய எரிமலை கொஞ்சம் வெடித்து குழம்பியது.ஒவ்வொரு நாளும் எத்தனை ஆயிரம் கோடிகள் அவர்களுக்கு நஷ்டமாகி இருந்தன.

அவர்களுடைய உல்லாசத்தில் அவர்களுடைய இன்பத்தில் அவர்களுடைய அத்தனை திட்டங்களுக்கு மத்தியிலும் வைத்து அல்லாஹ் அழிக்க சக்தி பெற்றவன்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனுடைய ஆற்றலை காட்டுவதற்கு அவன் சக்தி பெற்றவன்.எப்படி அல்லாஹ் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு காட்டினானோ, எப்படி அல்லாஹ் நபி இப்ராஹிமுக்கு காட்டினானோ அதுபோன்று.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நெருப்பில் போடுவதற்கு குழி தோண்டி நெருப்பு மூட்டினார்கள்.

நெருப்பில் போட்டு அவரை சாம்பலாக்கி விடலாம், அடையாளம் தெரியாமல் அவரை ஆக்கிவிடலாம் என்று நினைத்தார்கள்.

وَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَخْسَرِينَ

அவர்கள் இப்றாஹீமுக்கு தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே நஷ்டமடையும்படிச் செய்து விட்டோம். (அல்குர்ஆன் 21 : 70)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

فَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَسْفَلِينَ

இவ்வாறு அவர்கள், அவருக்குத் தீங்கிழைக்கக்கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே இழிவானவர்களாக ஆக்கி விட்டோம். (அல்குர்ஆன் 37 : 98)

பிறகு, அல்லாஹ் நேரடியாக அந்த நெருப்பிற்கு கட்டளையிட்டான்.

قُلْنَا يَانَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ

 (அவ்வாறே அவர்கள் இப்றாஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி) ‘‘நெருப்பே! நீ இப்றாஹீமுக்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு!'' என்று நாம் கூறினோம். (அல்குர்ஆன் 21 : 69)

எப்படிப்பட்ட உதவி!அல்லாஹ் அவனுடைய உதவியை செய்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறான்.

அல்லாஹ்வுடைய உதவி பெறக்கூடிய மக்கள் அங்கே இருக்க வேண்டும்.  அல்லாஹ்வுடைய உதவி இறங்குவதற்கு தகுதியான மக்கள் அங்கே இருக்க வேண்டும்.

உஹது போரில் அல்லாஹ்வுடைய உதவி சிறிது நேரம் தடைபட்டது. ஹுனைன் போரில் சிறிது நேரம் தடைபட்டது.

காரணம் என்ன?இங்கே அல்லாஹ்வுடைய உதவி இறங்கிக் கொண்டிருக்கும்போது முஃமின்களுக்கு மத்தியில் முஸ்லிம்களுக்கு மத்தியில் அந்த நபித் தோழர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சில தவறுகள்.

அந்த தவறுகளில் இருந்து அவர்கள் திருந்தியபோது அல்லாஹ் நிறுத்திய உதவியை மீண்டும் இறக்கினான்.

இன்று சஹாபாக்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?அவர்கள் தங்களுடைய குறைகளை பார்த்தார்கள், தங்களுடைய குறைகளை திருத்திக் கொண்டார்கள்.

தங்களிடத்தில் என்ன பாவம் இருக்கிறது? என்ன குறை இருக்கிறது? அதை முதலில் திருத்துவோம் என்று அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் பக்கம் திரும்பினார்கள். அல்லாஹ்விடத்தில் உதவி தேடினார்கள். எதிரிகளுக்கு முன்னால் நின்றார்கள். அல்லாஹ் உதவி செய்தான்.

இன்று,நாம் என்ன செய்கிறோம்? நான் என்னை திருத்துவதற்கு தயாரில்லை, நான் இப்படித்தான் இருப்பேன், என் சமூகம் இப்படித்தான் இருக்கும், ஆனால், நாங்கள் எதிரிகளுக்கு முன்னால் செல்வோம். முன்னாள் செல்லவில்லை என்றாலும் எங்களுக்கு அல்லாஹ்விடத்திலிருந்து உதவி வரவேண்டும். அல்லாஹ் எங்களை பாதுகாக்க வேண்டும்.

பத்ரில் அல்லாஹ் ஜிப்ரீலையும் மீகாயீலையும் இறக்கியதைப் போன்று உஹதில் இறக்கியது போன்று ஹுனைனில் இறக்கியது போன்று அஹ்ஸாபில் இறக்கியது போன்று எங்களுக்கும் அல்லாஹ்வுடைய உதவி வானத்திலிருந்து இறங்க வேண்டும்.

ஆனால், தன்னை திருத்துவது பற்றி, தன் குடும்பத்தை பற்றி, அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் பக்கம் வருவதை பற்றி, அல்லாஹ்வுடைய கட்டளைக்கு முழுமையாக அடிபணிவது பற்றி, அல்லாஹ் தடுத்த ஹராமான காரியங்களில் இருந்து விடுபடுவது பற்றி, அதைப் பற்றி எல்லாம் நாங்கள் சிந்திக்க மாட்டோம். அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு அக்கறை இல்லை.

கண்ணியத்திற்குரியவர்களே! இவர்கள் இந்த இருமாப்பில் அல்லது இவர்கள் இந்த ஏமாற்றத்தில் இருந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். அல்லாஹ்வுடைய உதவி வராது.

அல்லாஹ்வுடைய உதவி இரண்டு விதத்திலும் வரும். சில நேரத்தில் அல்லாஹ் சோதித்து உயிரையும் வாங்குவான்,அதுவும் வெற்றி.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் உதவி செய்வதற்கு முன்னால், சோதனைகளை அல்லாஹ் அங்கே பார்ப்பான்.

எப்படி அல்லாஹு ரப்புல் ஆலமீன் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கிலாஃபத்தில் அமர வைத்தான் .கிலாஃபத்திற்கு முன்னால் எத்தனை சஹாபாக்கள் ஷஹீதாகி இருக்கிறார்கள்.

எத்தனை சஹாபாக்கள் உடைய உயிர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டு இருக்கின்றன.

ஒவ்வொரு நேரத்திலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதிரிகளை பார்க்கும்பொழுது சொர்க்கத்தின் நற்செய்திகளை சொல்லும்பொழுது எப்படிப்பட்ட ஈமானை சஹாபாக்கள் வெளிப்படுத்தினார்கள்.

பத்ரு போரில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு சஹாபி கேட்கிறார்; யா ரசூலல்லாஹ்! அல்லாஹ் தன் அடியானை பார்த்து எப்பொழுது சிரிக்கிறான்?

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; எந்த விதமான தற்காப்பு ஆயுதங்களும் இல்லாமல், உடலில் கேடயங்கள் அணியாமல், உடலில் இரும்பு கவசங்கள் அணியாமல், வாளை எடுத்துக்கொண்டு அப்படியே எதிரிகளுக்கு உள்புகுந்து எதிரிகளை வெட்டுகிறான், அவனால் இவர்கள் வெட்கப்படுகிறார்கள். அதாவது வெறும் கையோடு உள்ளே நுழைந்து விடுகிறான்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; அப்போது இந்த அடியானை பார்த்து அல்லாஹ் சந்தோஷப்படுகிறான்.

அந்த சஹாபி, தன் மேலுள்ள இரும்புக் கவசத்தை எடுத்து எறிந்து விடுகிறார்கள். தன்னோடு உள்ள வாளோடு எதிரிகளுக்குள் செல்கிறார்கள். ஷஹீத் ஆகிவிடுகிறார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! இந்தத் தியாகங்கள் எப்பொழுது வந்தன?இந்த ஈமானிய மாற்றங்கள் இந்த உணர்வுகள் எப்போது வந்தன?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தர்பியத், அவர்களுடைய ஈமான், அவர்களுடைய அந்த பயிற்சி சஹாபாக்களிதம் அந்த மாற்றத்தை ஏற்படுத்தியது.

சஹாபாக்களின் உள்ளத்தில் உள்ள அந்த தக்வா சொர்க்கத்தின் மீது உள்ள ஆசை அவர்களுக்கு அந்த மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஆனால், இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சுகம் தேடி கொண்டு இருக்கின்ற நாம், அன்றாட வாழ்க்கையில் எந்தவிதமான நஷ்டமும் வந்துவிடக்கூடாது, அன்றாட வாழ்க்கையில் நாம் முழுமையான சுகத்தை அடைந்து கொண்டிருக்க வேண்டும், மார்க்கத்திற்காக எதையும் நான் இழக்கத் தயாரில்லை என்று கூறிக் கொண்டு இருக்கின்ற இந்த சமுதாயத்திற்கு அல்லாஹ் எப்படி உதவி செய்வான்?

நாம், நம்மை இந்த மார்க்கத்தின் பக்கம் திருப்பாத வரை அல்லாஹ்வுடைய உதவியை வாங்க முடியாது.

இதைத்தான் அல்லாஹ் நமக்கு கூறுகிறான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்விற்கு உதவினால் அல்லாஹ் உங்களுக்கு உதவுவான். உங்களுடைய பாதங்களை அல்லாஹ் பலப்படுத்துவான். (அல்குர்ஆன் 47 : 7)

அல்லாஹ்வுடைய உதவியை பெறக்கூடிய நன்மக்களில் அல்லாஹ் நம்மையும் ஆக்கி வைப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي المُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَوْا عَلَى حَيٍّ مِنْ أَحْيَاءِ العَرَبِ فَلَمْ يَقْرُوهُمْ، فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ، إِذْ لُدِغَ سَيِّدُ أُولَئِكَ، فَقَالُوا: هَلْ مَعَكُمْ مِنْ دَوَاءٍ أَوْ رَاقٍ؟ فَقَالُوا: إِنَّكُمْ لَمْ تَقْرُونَا، وَلاَ نَفْعَلُ حَتَّى تَجْعَلُوا لَنَا جُعْلًا، فَجَعَلُوا لَهُمْ قَطِيعًا مِنَ الشَّاءِ، فَجَعَلَ يَقْرَأُ بِأُمِّ القُرْآنِ، وَيَجْمَعُ بُزَاقَهُ وَيَتْفِلُ، فَبَرَأَ فَأَتَوْا بِالشَّاءِ، فَقَالُوا: لاَ نَأْخُذُهُ حَتَّى نَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلُوهُ فَضَحِكَ وَقَالَ: «وَمَا أَدْرَاكَ أَنَّهَا رُقْيَةٌ، خُذُوهَا وَاضْرِبُوا لِي بِسَهْمٍ» (صحيح البخاري- 5736)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/