அல்குர்ஆன் வெற்றிக்கு வழி | Tamil Bayan - 122
அல்குர்ஆன் வெற்றிக்கு வழி
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்குர்ஆன் வெற்றிக்கு வழி
வரிசை : 122
இடம் : எஸ்.எம்.ஜெ.பிளாஸா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 2-4-2021 | 09-05-1431
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவு படுத்தியவனாக ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ்வின் அச்சம்தான் இந்த மார்க்கத்தின் அடிப்படை ஆகும். அல்லாஹ்வை பயப்படுவது என்றால்,அல்லாஹ் நம் மீது விதித்த கடமைகளை செய்வது, அல்லாஹ் நமக்கு ஆகுமாக்கிய விஷயங்களை மட்டும் செய்வது, அல்லாஹ் தடுத்த அனைத்துக் காரியங்களை விட்டும் விலகிக் கொள்வது. இது தான் தக்வாவாகும்.
இன்றைய முஸ்லிம் சமுதாயமாகிய நாம் பல சோதனைகளையும் பல சவால்களையும் பல எதிர்பார்ப்புகளையும் சந்திக்கின்றோம் என்பது நமக்குத் தெரிந்த ஒன்று தான்.
என்ன மாதிரியான சோதனைகளை சந்திக்கின்றோம் என்றால், இன்று நம் நாட்டுக்குள்ளே அன்னியர்களின் படையெடுப்பு, முஸ்லிம்களுடைய நாடுகள் கைப்பற்றப்படுகின்றன. அங்கே முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.
அங்கே, முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள். முஸ்லிம் வாலிபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். மஸ்ஜித்துகள் அங்கே பாழ்படுத்தப்படுகின்றன. அல்லாஹ்வுடைய வீடுகள் தரைமட்டமாக்கப்படுகின்றன.
மேலும், இஸ்லாமைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் ஒரு தவறான கண்ணோட்டத்தை உலக மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நிராகரிப்பவர்களெல்லாம் ஒரே அணியில் நிற்கிறார்கள்.
முஸ்லிம்கள் மீதும், அவர்களுடைய பொருள்கள், அவர்களுடைய நாடுகள் கைப்பற்றப்படுவது மட்டுமல்ல, மாறாக, இஸ்லாமை பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் ஒரு கோரமான தவறான எண்ணத்தையும், மற்றவர்கள் இஸ்லாம் என்றால் அது பயங்கரமான மார்க்கம், முஸ்லிம்கள் என்றால் அவர்கள் ஒரு பயங்கரமான காட்டுவாசிகள், சண்டை சச்சரவு குழப்பம் இதைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது என்பதைப் போன்ற சூழ்நிலையை உருவாக்குவதற்காக, அத்தனை மீடியாக்களும் ஒரே அணியில் நின்று முயற்சி செய்கின்றன என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம் தான்.
இன்றைய நம்முடையப் பேச்சு, நடக்கக்கூடிய நடந்து கொண்டிருக்கக்கூடிய நிகழ்வுகளைப் பற்றி விமர்சனம் செய்வதல்ல. இந்த நிகழ்வுகளுக்கு என்ன தீர்வு? அதுபற்றி என்ன சிந்திக்கிறோம் என்பதாகும்.
இஸ்லாமியர் மீதும், முஸ்லிம்கள் மீதும் இன்று மாற்றார்கள் துணிவு கொண்டு இருக்கிறார்கள்.
துணிவு என்றால் என்ன? அது அசாதாரணமான துணிவு. இவர்களை என்ன செய்தாலும் சரி, இவர்களை யாரும் கேட்க முடியாது. இவர்களும் கேட்க மாட்டார்கள் என்ற அளவிற்கு அவர்களுடைய துணிவு உள்ளது.
ஒரு முஸ்லிம் அல்லாத எழுத்தாளர் ஒரு பத்திரிக்கையில் எழுதுகிறார், அமெரிக்காவில் அங்கே கடல்களிலும், ஆறுகளிலும் பிடிக்கப்படுகின்ற நண்டுகள் அவற்றை வியாபாரிகள் உரியி முறையில் பாதுகாப்பதில்லை.
உயிர் நண்டுகளை விற்பதற்கென்று வகுக்கப்பட்ட சட்டங்களின்படி அவர்கள் அந்த உயிர் நண்டுகளைப் பாதுகாப்பதில்லை.
உதாரணத்திற்கு, ஒரு பெட்டியில் 20 நண்டுகள் வைக்கப்படவேண்டும் என்றால் 50 நண்டுகளை வைத்து அழுத்துகிறார்கள். அதனால் அந்த நண்டுகள் மூச்சு முட்டி செத்து விடுகின்றன. எனவே அந்த மக்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாக அவர் எழுதுகிறார்.
அமெரிக்காவில் பிடிக்கப்படும் நண்டுகள் மீது செய்யப்படுகின்ற அநியாயங்களுக்கு கூட குரல் கொடுக்கப்படுகின்றன என்று அந்த முஸ்லிமல்லாத எழுத்தாளர் எழுதுகிறார்.
பாலஸ்தீனிலும், ஆப்கானிஸ்தானிலும் எத்தனையோ முஸ்லிம் உயிர்கள் கொல்லப்படுகின்றன. இந்த மனித உயிர்களெல்லாம் அமெரிக்காவின் நண்டுகளை விட மட்டமானவைகளா? என்று யோசித்துப்பாருங்கள். இது மாற்றார்கள் சிந்திக்கின்ற சிந்தனை.
ஒரு முஸ்லிம், குர்ஆனை எடுத்துக்கொண்டவன், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ரசூலாக ஏற்றுக்கொண்டவன், கண்ணியமிக்க கலிஃபாக்கள் வழிமுறையில் வந்தவன், இப்படிப்பட்ட முஸ்லிம்களுடைய சிந்தனைகள் எப்படி இருக்க வேண்டும்?
நாம், இந்தியாவில் பிறந்தவர்களாக இருக்கலாம். சில தலைமுறைகளுக்கு முன்னால் இஸ்லாமை ஏற்றவர்களாக இருக்கலாம்.
ஆனால், நம்முடைய உண்மையான முன்னோர்கள், நபியும், நபியைப் பின்பற்றிய ஸஹாபாக்களும் தான் நம்முடைய உண்மையான முன்னோர்கள். அவர்களிடத்தில் ஈமானிய வீரம் என்ன இருந்ததோ அந்த வீரம் நம்மிடத்தில் இருக்க வேண்டும்.
அவர்களிடத்தில் என்ன ஈமானியப் பிடிப்பு, பற்று, பாசம், மார்க்கத்தின் உறுதி இருந்ததோ அந்த உறுதி நம்மிடத்தில் இருக்க வேண்டும்.
அப்போது தான் நாம் முஸ்லிம்கள், முஃமின்கள். அப்படி இல்லையென்றால் பெயரளவில் இருக்கின்ற இந்த முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வுடைய உதவி வராது.
அல்லாஹ் சத்தியமிட்டுக் கூறுகின்றான் :
وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ
முஃமின்களுக்கு உதவி செய்வதுதான் நம் மீது கடமை, சத்தியமாக நாம் முஃமின்களுக்கு உதவி செய்வோம். (அல்குர்ஆன் 30 : 47)
அப்போது அல்லாஹ்வுடைய உதவி நமக்கு வரவில்லையென்றால், மற்றார்களின் ஆதிக்கம் நம் மீது அத்துமீறி நடக்கிறது என்றால், அங்கு என்ன பொருள்?
முஃமின்கள் முஃமின்களாக இல்லை. முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இல்லை.
அல்லாஹ் நமக்கு நிபந்தனையிடுகிறான் :
إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ
நீங்கள் அல்லாஹ்விற்கு உதவி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். மேலும், உங்களுடையப் பாதங்களை உறுதிப்படுத்துவான். (அல்குர்ஆன் 47 : 7)
وَأَوْفُوا بِعَهْدِي أُوفِ بِعَهْدِكُمْ
என் வாக்கை நீங்கள் நிறைவேற்றுங்கள், உங்களுக்கு நான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவேன் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 2 : 40)
அப்படியென்றால் அங்கே என்ன பொருள்? முஸ்லிம்கள் அல்லாஹ்விற்கு கொடுத்த ஒப்பந்தத்தில் அவர்கள் குறைவுள்ளவர்களாக, அல்லாஹ்விடத்தில் செய்த ஒப்பந்தத்தை முறித்தவர்களாக இருக்கிறார்கள். அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு அவர்கள் உதவவில்லை. அவர்கள் உண்மையான முஃமின்களாக இல்லை.
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள். (அல்குர்ஆன் 3 : 139)
அப்படியென்றால் என்ன பொருள்? முஃமின்கள் முஃமின்களாக இருக்கும்போது அல்லாஹ் நிச்சயமாக நல்ல முடிவை முஃமின்களுக்கு காட்டுவான்.
முஃமின்கள் மீது ஆட்சி செய்யும் அதிகாரத்தை, முஃமின்களை அடக்கி ஆளும் அதிகாரத்தை ஒரு போதும் அல்லாஹ் காஃபிர்களுக்கு ஆக்கமாட்டான். தோற்றத்தில் அப்படியிருந்தாலும், நிச்சயமாக முஃமின்கள் தான் வெல்லுவார்கள் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை, அல்லாஹ்வுடைய வாக்கு.
كَتَبَ اللَّهُ لَأَغْلِبَنَّ أَنَا وَرُسُلِي إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ
அல்லாஹ் எழுதிவிட்டான், நானும் எனது தூதர்களும் நிச்சயமாக மிகைப்போம் என்று. (அல்குர்ஆன் 58 : 21)
أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ
அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வுடைய படை அல்லாஹ்வுடைய பட்டாளம் தான் மிகைக்கும் என்பதாக. (அல்குர்ஆன்58 : 22)
என்ன சோதனைகள் முஸ்லிம்கள் மீது, எத்தகைய அத்துமீறல்கள் இந்த முஸ்லிம்கள் மீது நடக்கின்றன. முஸ்லிம்களுடைய மாக்கக் கலாச்சாரத்தின் மீது, அவர்களுடைய அடையாளச் சின்னங்களின் மீது.
இன்று,உலக நாடுகளெல்லாம் போர் தொடுக்க ஆரம்பித்து விட்டன. ஒன்று,அவர்களுடைய ஆட்சி அதிகாரங்களைப் பறிப்பதற்காக. இல்லையென்றால் ஆட்சி அதிகாரங்கள் அவர்கள் கையிலிருந்தாலும் சரி, ஆனால்,சட்டமும், கலாச்சாரமும் எங்களுடைய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான் :
وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً
(நம்பிக்கையாளர்களே!) அவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டபடியே நீங்களும் நிராகரிப்பவர்களாகி அவர்களுக்கு சமமாகிவிடுவதை அவர்கள் விரும்புகிறார்கள். (அல்குர்ஆன் 4 : 89)
அல்லாஹ் நபிக்கு சொல்கிறான் :
وَلَنْ تَرْضَى عَنْكَ الْيَهُودُ وَلَا النَّصَارَى حَتَّى تَتَّبِعَ مِلَّتَهُمْ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ
(நபியே!) யூத மற்றும் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மைக் குறித்து அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வின் நேர்வழி(யாகிய இஸ்லாம்)தான் நேரான வழி. (அதையே பின்பற்றுவேன்)'' எனக் கூறிவிடுவீராக. மேலும், உமக்கு (மெய்யான) ஞானம் வந்த பின்னும் அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றினால் அல்லாஹ்விடத்தில் (அதற்காக விசாரணை செய்யப்படும் நாளில்) உம்மை காப்பவனும் இல்லை; உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (அல்குர்ஆன் 2 : 120)
அல்லாஹ் தன் நபிக்கு எச்சாரிக்கை செய்கிறான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யூதர்களைப் பின்பற்றுவார்கள் என்பதை கற்பனை செய்ய முடியுமா? கிறிஸ்துவர்களைப் பின்பற்றுவார்கள் என்பதை யோசித்துப் பார்க்க முடியுமா? அல்லாஹ்வுடைய நபிக்கே இந்த எச்சரிக்கை என்றால்,
முஃமின்களே! உங்களுக்கு இந்த எச்சரிக்கை எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதை நீங்கள் சிந்தித்துக் கொள்ளுங்கள் என்பதற்காகத் தான் நபியை முன்னிலைப்படுத்தி அல்லாஹ் இதை சொல்கிறான்.
இன்று, முஸ்லிம் மக்களில், யார் இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள்? இஸ்லாமிய வாழ்க்கை முறையை யார் பின்பற்றுகிறார்கள்? இஸ்லாம் நம்முடைய வாழ்க்கையில் எங்கே பின்பற்றப்படுகிறது?
அல்லாஹ்வுடைய வேதம் பாதுகாக்கப்படுகிறதா? அல்லாஹ்வுடைய வேத சட்டங்களை எடுத்து நடக்கிறோமா? வேத சட்டங்களை புரிந்து வைத்திருக்கிறோமா? அல்லாஹ்வுடைய வேதத்திற்கும் நமக்கும், நம் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு என்பதை புரிந்து வைத்திருக்கிறோமா?
அல்லாஹ்வுடைய வேதத்திற்கும், நம் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு என்பதை புரிந்து வைத்திருக்கிறோமா? குர்ஆனை இந்த சமுதாயம் விட்டார்கள். குர்ஆனுடைய சட்டங்களையும் புறக்கணித்தார்கள். குர்ஆனை விட்டும் தங்களுடைய வாழ்க்கையை தூரமாக்கிக் கொண்டார்கள்.
அத்தனை முஸீபத்துக்களும், வானத்திலிருந்தும் சரி, பூமியிலிருந்தும் சரி, எதிரிகள் மூலமாகவும் சரி, இந்த முஸ்லிம் உம்மத்தின் மீது தொடுக்கப்படுகிறது. ஒட்டு மொத்தக் காரணம், அல்லாஹ்வுடைய வேதத்தைப் புறக்கணித்த ஒரே காரணம்தான்.
இந்த இந்திய நாட்டில் வாழ்கின்ற நம் முஸ்லிம்கள் எத்தனை பேர் தங்களுடைய பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், இந்த அல்குர்ஆனும் கற்பிக்கின்ற ஒழுக்க முறைகளை கடைபிடிக்கிறார்கள்?
ஹிஜாப் என்ற சட்டத்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் முஃமினான பெண்கள் மீது இந்த ஹிஜாபை மார்க்கமாக, சட்டமாக, கட்டளையாக ஆக்கியுள்ளான்.
இந்த ஹிஜாப் என்பது சில முட்டாள்கள் புரிந்து கொள்வது போன்று, இது அரபுகளுடைய ஒரு பழக்கம் அல்ல, அரபுகளுடைய கலாச்சாரமல்ல. மார்க்கத்தின் பெயரால் பேசுவதை கூட நாம் கேள்விப்படுகிறோம். இந்த கருப்பு ஆடை அணிவதை அரபுகளின் கலாச்சாரம் என்பதாக.
ஒன்று, குர்ஆனைப் படிக்க வேண்டும். குர்ஆனுடைய விளக்கவுரையைப் படிக்க வேண்டும். ஹதீஸைப் படிக்க வேண்டும். அதனுடைய விளக்கவுரையைப் படிக்க வேண்டும்.
அப்படி படிக்கவில்லையென்றால் படித்தவர்களிடத்தில் அதனுடைய சட்டங்களைக் கேட்டுத் தெரிய வேண்டும். தனக்குத் தெரிந்ததுதான் மார்க்கம் என்பதாக ஒட்டுமொத்தமாக மார்க்கத்தை குத்தகைக்கு வாங்கிக் கொண்டால் அவர்களுக்கு யார் வழிகாட்ட முடியும்?
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவி உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹாஅவர்கள் சொல்கிறார்கள். தப்ஸிர் இப்னு கஸீரில் இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
எப்பொழுது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சூரத்துந்நூரில் முஃமினான பெண்கள் தங்கள் ஆடை அலங்காரங்களை மறைத்துக் கொள்ளட்டும். தங்களுடைய துப்பட்டாக்களை கொண்டு தங்களைப் போர்த்திக் கொள்ளட்டும் என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கினானோ, அன்ஸாரிப் பெண்கள் தங்களுடையப் போர்வைகளைக் கிழித்துப் போர்த்திக் கொண்டார்கள்.
அதற்குப் பிறகு பல பெண்கள் தங்களுடைய கருப்பு ஆடைகளை தங்கள் மீது போர்த்தித் தங்களை அடையாளம் தெரியாமல் மறைத்துக் கொண்டார்கள் என்று அன்னை உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹாஅவர்கள் பதிவு செய்கிறார்கள்.
சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இதை நமக்கு ஒரு சடங்காக ஆக்கவில்லை. முஸ்லிம் பெண் என்றால் அவள் புர்க்கா போட்டிருக்க வேண்டும் என்ற சடங்குக்காக அல்ல.
இந்த ஹிஜாப் முஸ்லிம் பெண்களின் கற்பிற்கு பாதுகாப்பு. இந்த ஹிஜாப் முஸ்லிம் ஆண்களின் கற்பிற்கு பாதுகாப்பு.
எப்போது ஒரு ஆண் வழி தவறுகிறான் தெரியுமா? எப்போது ஓர் ஆணுடைய தவறான சிந்தனை, தவறான ஆசை தூண்டப்படுகிறது தெரியுமா? எப்போது ஓர் பெண்ணை அலங்கோலமாக பார்க்கிறானோ, அவளுடைய அந்த வீட்டு உடையில் பார்க்கிறானோ, ஒரு கணவன் ஒரு பெண்ணை பார்க்கின்ற ஆடையில் எப்போது ஒரு அந்நியன் அந்தப் பெண்ணை பார்க்கிறானோ அப்போது அவனுக்கு அந்த பெண்ணின் மீது ஆசை வந்தே ஆகும்.
இது இயற்கை. அல்லாஹ் படைத்த அமைப்பு. இதை மாற்ற முடியாது. ஒரு முறைக்கு இரண்டு முறைப் பார்த்தால் அவனுக்கு அந்தப் பெண்ணை அடைய வேண்டும் என்ற ஆசை வந்தே ஆகும்.
எனவே தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு சட்டமாகவே ஆக்கிவிட்டான்.
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
(நபியே!) நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 24 : 30)
ஈமான் கொண்டுவிட்டால் நப்ஸில் ஆசை வராது என்று இருக்குமேயானால் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பான். ஆனால் அல்லாஹ் அப்படிக் கூறவில்லையே.
வசனத்தில் முஸ்லிம் என்று சொல்லவில்லை முஃமின்களுக்குச் சொல்லுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
முஃமின்கள் யார்? யார் அல்லாஹ்வை மறுமையை சொர்க்கத்தை நம்பி இருக்கின்றார்களோ, யாருடைய உள்ளத்தில் முழுமையாக ஈமான் இருக்கிறதோ அவர்களைப் பார்த்துச் சொல்கிறான்.
உன்னுடைய ஈமான் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டுமா? உன்னுடைய உள்ளத்திலிருக்கின்ற ஈமான் அல்லாஹ்வுடைய அருளைக் கொண்டு அதே நிலையில் நீ மரணிக்க வேண்டும் என்றால் உனது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்.
பார்வைகள் தாழ்த்தப்படவில்லை என்றால் அங்கே நிச்சயமாக கற்புகள் சீரழிக்கப்படும். அந்நியப் பெண்களுடைய கற்புகள் சீரழிக்கப்படும். முஸ்லிம் பெண்களுடைய கற்புகள் சீரழிக்கப்படும். சகோதாரிகளுடைய கற்புகள், மகள்களுடைய கற்புகள் சீரழிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆண்களுடைய கற்பும் பாழாகும்.
இந்தப் பார்வைகளை பாதுகாத்தால் தான் அவர்களுடைய கற்பு சுத்தமாக இருக்கும். அவர்களுடைய உள்ளம் சுத்தமாக இருக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான்.
இந்த ஹிஜாப் முஸ்லிம் பெண்களுடைய கண்ணியம், முஸ்லிம் பெண்கள் தங்கள் ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்காக, தங்களுடைய கற்பைப் பாதுகாப்பதற்காக தங்களுடைய சமுதாயத்தின் பாதுகாப்பைக் கருதி அல்லாஹ் ரப்புல் அல்மீன் அவர்கள் மீது விதித்த கடமை.
நம் நாட்டில் இந்த ஹிஜாப் ஒரு பக்கம், முற்றிலும் ஹிஜாபே இல்லாமல் திரிகின்ற பெண்கள், இன்னொரு பக்கம், ஹிஜாபையே அலங்காரமான ஆடைகளாக ஆக்கிக் கொண்டு திரிகின்ற பெண்கள்.
மேலும், அதைவிட மிகவும் மோசமாக, பலவிதமான வேலைப்பாடுகளோடு, அல்லது பார்வைகளை சுண்டி இழுக்கும்படியான கலர்களில், அல்லது மின்னும்படியான பளபளப்பான துணிகளில் ஹிஜாப் அணிகிறார்கள். இது எவ்வளவு கேவலமான ஒரு செயல்.
ஆடை அலங்காரத்தைப் பாதுகாக்க வேண்டும். அந்நிய ஆணின் பார்வை ஒரு முறைக்கு மேல் அடுத்த முறை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொடுத்த ஹிஜாப், அதுவே ஒரு சோதனையாக ஒரு மாடலாக மாறிவிட்டது.
இன்று, உலக நாடுகளெல்லாம் என்ன சொல்கின்றன? முஸ்லிம்கள், பெண்களைக் கொடுமைப் படுத்துகிறார்கள் என்று சொல்லும் போது அதற்கு அடையாளமாக அவர்கள் இந்த ஹிஜாபை தான் சொல்கிறார்கள்.
இதற்கு என்ன காரணம்? நம்முடைய முஸ்லிம் பெண்கள் சிலருடைய மோசமான நிலைபாடுதான். எதற்கெடுத்தாலும் பெண்களை நாம் குறை சொல்வதால் எந்தவித பிரயோஜனமும் கிடையாது.
ஏன் தெரியுமா? இந்தப் பெண்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள்? ஒன்று, அவர்களுக்குத் தந்தை இருப்பார். அல்லது அவர்களுக்குச் சகோதரர் இருப்பார். அவர்களுக்கு கணவரும் இருப்பார்.
ஆண்களிடத்தில் ஏற்பட்ட குறைபாட்டால், ஆண்கள் இந்த பெண்களை நிர்வகிப்பதில் காட்டிய அலட்சியத்தின் காரணமாக உருவானவர்கள் தான் இந்தப் பெண்கள்.
ஒரு பெண் ஹிஜாபில்லாமல் செல்கிறாள், அல்லது அலங்கோலமான ஹிஜாபில் செல்கிறாள், அல்லது ஹிஜாப் இருக்கிறது, ஒரு துப்பட்டா இருக்கிறது, தலைக்குப் போட வேண்டிய துப்பட்டா தோளில் கிடக்கிறது.
ஹிஜாபுடைய ஒழுக்கங்கள் அங்கே பாதுகாக்கப்படுகிறதா? கழுத்துகள் மறைக்கப்பட்டிருக்கிறதா? முடிகள் மறைக்கப்பட்டிருக்கிறதா? கரண்டைக்கால் வரை முழுமையாக மறைக்கப்பட்டிருக்கிறதா? என்றால், எதுவுமே இல்லை.
ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண் இந்த நிலையில் வெளியேறும் போது ஒன்று, அந்தப் பெண் திருமணமானவளாக இருந்தால் கணவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பாள். திருமணமாகவில்லையென்றால் தந்தையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
தந்தை இறந்திருந்தால் தந்தையின் சகோதரர்கள் பொறுப்பாளர்களாக வலியாக இருக்கிறார்கள் என்று மார்க்கம் நிர்ணயிக்கிறது. அவர்களும் இல்லையென்றால் தாயின் சகோதரர்கள் அந்தப் பெண்ணுக்குப் பொறுப்பாளர்கள் என்று மார்க்கம் நிர்ணயிக்கின்றது.
ஒரு பெண் ஹிஜாப் இல்லாமல் செல்கிறாள் என்றால் அதற்கு யார் காரணம்? அவளுடைய பொறுப்பாளர்கள் தான் காரணம், பொறுப்பாளர்கள் என்றால் யார்? ஆண்களாகிய நீங்களும், நானும் தான்.
நம்மிடத்தில் இருக்கின்ற குறைபாடு, நாம் நம்முடையப் பெண்களை நிர்வகிப்பதில் செய்கின்ற அலட்சியம், நாம் நம்முடைய பெண்களை நிர்வகிப்பதில் நாம் காட்டுகின்ற அந்த மோசடி, இது தான் இந்த ஒழுக்கம் சீரழிக்கப்படுவதற்குரிய அடிப்படைக் காரணம்.
சரி, நாம் ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறோம்? நம்மிடத்தில் ஏற்பட்ட இந்த அலட்சியப்போக்குக்கு என்ன காரணம்? மார்க்கத்தோடு நமக்கு தொடர்பில்லை, குர்ஆனோடு நமக்கு தொடர்பில்லை, அல்லாஹ்வுடைய வேதச்சட்டங்களோடு நமக்கு பற்று இல்லை.
குர்ஆனோடு பற்றுள்ள முஃமின்கள் எங்கே? எந்த முஃமின்களுக்கு அல்லாஹ் வெற்றியைக் கொடுப்பான். முஃமின்கள் என்று சொன்னால் அவனுடையத் தொடர்பு குர்ஆனோடு இருக்க வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான்.
நம்முடைய நேரங்கள் எங்கே கழிகின்றன? ஒன்று, ரிஸ்கை தேடுகிறோம் என்ற பெயரில் வியாபாரத்தில் நேரத்தைக் கழித்து விடுகிறோம். அடுத்து, பொழுது போக்குகளில் நேரத்தைக் கழித்து விடுகிறோம்.
வியாபாரத்தில் களைப்படைந்து விட்டோம் என்று மீதம் இருக்கின்ற நேரங்களில் பொழுதுபோக்குவதற்காக நேரங்களைக் கழித்து விடுகிறோம்.
அடுத்து எதற்கு நேரம் கொடுக்கிறோம், வீணான பேச்சுக்கள், வீணான பார்வைகள், தேவையற்ற சிந்தனைகள், தேவையற்ற பார்வைகள், என்று ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது நம்முடைய சமுதாயத்தில் அதிகமான மக்களின் பழக்கவழக்கங்கள் எல்லாம் குர்ஆனை புறக்கணிப்பவர்களாகவே நாம் பார்க்கிறோம்.
குர்ஆனை ஓதத் தெரிந்தவர்கள் யார்? சாரியாக ஓதுபவர்கள் எத்தனை பேர்? ஒவ்வொரு நாளும் குர்ஆனை எடுத்து ஓதக்கூடிய முஃமின்கள் எங்கே?
என்ன ஆகிவிட்டது? குர்ஆன் அதை சும்மா ஒரு தடவைப் படித்தால் போதும், எப்போதாவது ஒரு தடவை எடுத்து ஓதினால் போதும், அதுவும் இன்றைய முஸ்லிம்களில் ஒரு பெரும் கூட்டம் குர்ஆன் என்பது ஒருவர் இறந்துவிட்டால் அவருக்காக ஓதப்பட்டு கத்தம் செய்ய வேண்டியதற்காக அல்லாஹ் இறக்கிய வேதம் இது, என்பது போன்று வைத்திருக்கிறார்கள்.
இன்னொரு கூட்டம், குர்ஆன் என்றால் வியாழன் இரவு ஹஜரத் வருவார், ஒரு யாஸீன் ஓதுவார். அவருக்கு 5, 10 ரூபாவைக் கொடுத்து விட்டால் குர்ஆனுடனான நமது தொடர்பு முடிந்துவிட்டது என்று புரிந்து வைத்திருக்கிறார்கள்.
இன்னொரு கூட்டம், குர்ஆன் என்றால் ஏதாவது பரக்கத் வேண்டும் என்றால் ஏதாவது வசனங்களைத் தேடுவார்கள். ஆலிம்ஷா! பரக்கத் வருவதற்கு ஏதாவது இரு நல்ல ஆயத்தாக இருந்தால் சொல்லுங்கள். அதை எழுதி தகடாக, தாயத்தாக மாட்டிக் கொள்கிறேன்.
கண்ணியத்திற்குரியவர்களே! இதுவா குர்ஆனோடு நம்முடைய தொடர்பு? இப்படியா ஸஹாபாக்கள் குர்ஆனை ஏந்தி இருந்தார்கள்?
உலகத்தில் முஸ்லிம்கள் ஏன் கேவலப்படுத்தப்படுகிறார்கள்?ஏன் முஸ்லிம்களுடைய நாடுகள் சுறையாடப்படுகின்றன?ஏன் முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள்?ஒட்டுமொத்த இந்த சோதனைகளுக்கு எல்லாம் காரணம் ஆட்சி இல்லை என்பது அல்ல,அரசியல் இல்லை என்பது அல்ல,படைபலம், படிப்பு இல்லை என்பது அல்ல.
இவ்வளவு வசதிகள் எல்லாம் இருக்கக்கூடிய நாடுகளில் தாமே அந்நியர்கள். படையெடுத்து அவர்களை அடக்கி ஆள்கிறார்கள். அல்லது அந்த மன்னர்களையே வைத்துக் கொண்டு ஆட்சி இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
என்ன காரணம்? குர்ஆனோடு இந்த சமுதாயத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.குர்ஆனோடு இந்த சமுதாயம் தனது தொடர்பை துண்டித்துக்கொண்டது.
இன்றைய ஆடல் பாடல் காட்சிகள்,இந்த பொழுதுபோக்குகள்,ஒட்டுமொத்தமாக சமுதாயத்தினுடைய ஆண்கள், பெண்கள், வாலிபர்கள், வயோதிகர்கள் அனைவர்களின் சிந்தனைகளிலும் இந்த உலக ஆசாபாசங்களும், இந்த உலக வாழ்க்கையின் மோகமும், இந்த சிற்றின்பங்களும் நிரப்பப்பட்டு விட்டன.
குர்ஆன் இந்த சமுதாயத்தின் வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக எடுக்கப்பட்டுவிட்டது.
அல்லாஹ் முஃமின்களைப் பார்த்து சொல்கிறான்:
وَالَّذِينَ يُمَسِّكُونَ بِالْكِتَابِ وَأَقَامُوا الصَّلَاةَ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ الْمُصْلِحِينَ
எவர்கள் இவ்வேதத்தை(ச் சிறிதும் மாற்றாது) பலமாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு தொழுகையையும் கடைப்பிடித்து நிறைவேற்றி வருகிறார்களோ அத்தகைய சீர்திருத்தவாதிகளான நல்லவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்குவதில்லை. (அல்குர்ஆன் 7 : 170)
குர்ஆன் நம்முடைய வாழ்க்கையில் பாதுகாக்கப்பட்டால், அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.
احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ
இப்னு அப்பாஸே! நீ அல்லாஹ்வை பாதுகாத்துக் கொள்! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். நீ அல்லாஹ்வை பாதுகாத்துக் கொள். அல்லாஹ்வை உனக்கு முன்னால் பார்ப்பாய். (1)
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 2537.
அல்லாஹ்வை நீ பாதுகாப்பது என்றால் என்ன? அல்லாஹ்வுடைய வேதத்தை பாதுகாப்பது, அல்லாஹ்வுடைய வேதத்தை எவ்வாறு பாதுகாப்பது?
அதை ஓதுவது, அதை அழகிய முறையில் ஓத தெரிந்து கொள்வது, முடிந்த அளவு அதனை மனனம் செய்வது, அதனுடைய மொழியைப் படிப்பது, அதனுடைய கருத்துக்களை ஆழச் சிந்திப்பது, அதனுடைய சட்டங்களை அமல்படுத்துவது, அதனுடைய ஹலாலை ஹலால் என்று ஏற்றுக் கொள்வது, அதில் ஹராமாக்கப்பட்ட அனைத்து விஷயங்களை விட்டு தன்னையும், தனது குடும்பத்தையும், தனது சமுதாயத்தையும் தூரமாக்கிக் கொள்வது, இதுதான் குர் ஆனைப் பாதுகாப்பது என்பதற்கு பொருள்.
குர்ஆனைப் பாதுகாப்பது, அல்லாஹ்வைப் பாதுகாப்பது, அல்லாஹ்வை யார் பாதுகாக்கிறாரோ அல்லாஹ் அவரைப் பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் அவர் வந்துவிடுவார்.
எப்படி அல்லாஹ் பத்ரில் ஸஹாபாக்களுக்கு உதவி செய்தானோ, அதுபோன்ற உதவியை சத்தியமாக இன்றும் அல்லாஹ் செய்யக் காத்துக் கொண்டிருக்கின்றான்.
ஆனால், அந்த முஃமின்களுடைய லஹாபாக்களுடைய ஸிபத்துக்களில், ஈமானில் நாம் வந்துவிட்டால் உதவி கண்டிப்பாக வரும்.
ஸஹாபாக்களின் வரலாறுகளை நாம் பார்க்கிறோம். அவர்கள் போருக்கு செல்லும் சில மணி நேரங்களுக்கு முன்பு கூட, குர்ஆனோடு இருந்தார்கள். குர்ஆனை ஓதிக் கொண்டிருந்தார்கள். அதைப் படித்து சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய சமுதாயத்தில் நீங்கள் கணக்கெடுக்க ஆரம்பித்தால் 100-ல் 80 பேருக்கு நம்முடைய முஸ்லிம்களில் குர்ஆன் ஓதவே தெரியாது. அப்படி அவர்களுக்கு குர்ஆன் ஓதத் தெரிந்தால் அந்த குர்ஆனை அவர் ஓதி பல மாதங்களாக ஆகியிருக்கும். பல வருடங்களாக ஆகி இருக்கும். இதுதான் இந்த சமுதாயத்துடைய நிலைமை.
அல்லாஹ் ரப்புல் ஆலமின் இந்த குர்ஆனோடு நமது தொடர்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்கிறான் தெரியுமா?
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا
அல்லாஹ்வுடைய கயிற்றை நீங்கள் பலமாக பற்றிப்பிடியுங்கள். (அல்குர்ஆன் 3 : 103)
அல்லாஹ்வுடைய கயிறு எது? அல்லாஹ்வுடைய குர்ஆன்தான் அல்லாஹ்வுடைய கயிறு, அது, அல்லாஹ் வானத்திலிருந்து நமக்கு இறக்கிய கயிறு.
அல்லாஹ் சொல்கிறான் :
وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنْتُمْ تُتْلَى عَلَيْكُمْ آيَاتُ اللَّهِ وَفِيكُمْ رَسُولُهُ وَمَنْ يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
நீங்கள் எப்படி (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களாக ஆகிவிட முடியும்? உங்கள் மத்தியில் அல்லாஹ்வுடைய தூதர் இருக்கிறார். அவனுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்றன. ஆகவே, எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தை) பலமாகப் பற்றிக் கொள்கிறாரோ அவர் நிச்சயமாக நேரான பாதையில் செலுத்தப்பட்டுவிட்டார். (அல்குர்ஆன் 3 : 101)
இதிலிருந்து தெரிகிறது, குர்ஆனை நாம் ஓதிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் குஃப்ர் என்பது இந்த சமுதாயத்தில் வராது. வழிகேட்டு சிந்தனைகள் வராது. இந்த சமுதாயத்தின் மீது அந்நியர்களின் படையெடுப்பு வராது. அப்படி வந்தாலும் அல்லாஹ் பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய உதவி வரும்.
அல்லாஹ் முஃமின்களைப் பற்றி சொல்கிறான் :
وَاتَّبَعُوا النُّورَ الَّذِي أُنْزِلَ مَعَهُ أُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ
முஃமின்கள், நபியின் மீது இறக்கப்பட்ட இந்த ஒளியை அவர்கள் பின்பற்றுவார்கள். அவர்கள் தான் வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 7 : 157)
நூர் என்பது அல்லாஹ்வுடைய குர்ஆன். இந்தக் குர்ஆனை பின்பற்றக்கூடியவர்கள்தான் வெற்றியாளர்கள். வெற்றி ஆயுதத்தைக் கொண்டு கிடையாது.
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் முஅத்தா போரில் இதை தெளிவாக சொன்னார்கள்.
அந்தப் போரில் மொத்தம் 3000 முஸ்லிம் ஸஹாபாக்கள் தான் இருந்தார்கள். ஆனால், எதிரிகள் ரோமர்கள் 1 லட்சத்திற்கும் அதிமானவர்கள் இருந்தார்கள். 1 லட்சம் எங்கே? 3000 பேர் எங்கே?
மக்களெல்லாம் பயந்தார்கள். நாம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உதவி கேட்டு கடிதம் எழுதுவோமா, தூதுவரை அனுப்புவோமா என்று யோசித்தார்கள்.
அப்போது அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரழியல்லாஹு அன்ஹுஎழுந்தார்கள். மக்களே! நீங்கள் எதை நாடி இங்கே வந்தீர்கள்? நீங்கள் காபிர்களுடைய செல்வத்தை நாடி வந்தீர்களா? அல்லது ஷஹாதத்தை நாடி வந்தீர்களா?
ஷஹாதத்தை நாடி வந்தால், அது உங்கள் கண் முன்னே இருக்கிறது. முன்னேறிச் செல்லுங்கள் என்று சொன்னார்கள்.
அடுத்துக் கேட்டார்கள்; நீங்கள் எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஆயுதங்களைக் கொண்டும், உங்களுடைய எண்ணிக்கைகளைக் கொண்டும் வெற்றி அடைந்து விடலாம் என்ற இறுமாப்பில் இருக்கிறீர்களா?
நிச்சயமாக இல்லை. அல்லாஹ் ஈமானைக் கொண்டுதான் நமக்கு வெற்றியைக் கொடுப்பான். அந்த ஈமான் உங்களிடத்தில் இருக்கும் போது நீங்கள் தயங்குவதற்கு என்ன காரணம்? புறப்படுங்கள் என்று சொன்னார்கள்.
அத்தனை ஸஹாபாக்களும் பின்வாங்காமல் புறப்பட்டார்கள், என்ன தெளிவான உபதேசம் பாருங்கள்.
மிகத்தெளிவான வார்த்தை எண்ணிக்கையைக் கொண்டும் உதவி கிடையாது. தயாரிப்புகள் படை பலத்தைக் கொண்டும் உதவி கிடையாது. உதவி, முஃமின்களிடத்தில் இருக்கின்ற ஈமானைக் கொண்டுதான்.
தஜ்லா நதியில் பாலத்தை உடைத்துவிட்டார்கள். எப்படி கடந்து செல்வது? கடல் போன்ற நதி கடக்க வேண்டும், என்ன செய்வது?. சஃது இப்னு அபிவக்காஸ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அல்லாஹ்விடத்தில் துஆ செய்தார்கள் :
யா அல்லாஹ்! நீ நினைத்தால் பாலம் இல்லாமலும் கடக்க வைக்கலாம். அந்த பாலத்தை நீ நதியின் மீது கட்டி அதன் மூலமாகவும் கடக்க வைக்கலாம்.
பின்பு தனது படைத் தோழர்களைப் பார்த்து சொன்னார்கள்; எல்லோரும் அல்லாஹ்விடம் தவ்பா செய்யுங்கள். இஸ்திஃபார் செய்யுங்கள். பெரும் பாவங்கள் செய்தவர்கள் யாராவது இருந்தால் உடனே தவ்பா செய்யுங்கள்.
பின்பு சொன்னார்கள். யா அலீம், யா ரவூஃப், யா ரஹீம் என்று அல்லாஹ்வுடைய திருநாமங்களை கூறிக்கொண்டே நீங்கள் புறப்படுங்கள் என்பதாக.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன், கடலைப் பிளந்து வழி கொடுத்தான். நபியின் தோழர்களுக்கு எப்படி வழி கொடுத்தான் தெரியுமா?
அந்த நதியின் ஆழத்தை அல்லாஹ் எடுத்து விட்டான். கடலின் ஆழத்தை கீழிருந்து அல்லாஹ் மேல் உயர்த்தி விட்டான். அவர்களின் கெண்டைக் கால் அளவுதான் அந்த நதியின் ஆழம் இருந்தது. அந்த அளவிற்கு அல்லாஹ் அதனை ஆக்கி விட்டான்.
யாருடைய பொருளாவது கீழே விழுந்து விட்டால் அதைக் குனிந்து எடுக்கும் அளவிற்கு அல்லாஹ் அதை மாற்றிவிட்டான்.
உதவி, அல்லாஹ்விடத்தில் இருக்கிறது. பாரசீகர்கள் பார்த்தார்கள். என்ன இவர்கள் பேய்களாக ஜின்களாக இருப்பார்களோ! தண்ணீரின் மீது நடந்து வருகிறார்கள். இவ்வளவு ஆழமான நதியின் மீது இவர்களும், இவர்களது குதிரைகளும் எப்படி நடந்து வருகின்றன? என்று பார்த்து பயந்து ஓடினார்கள்.
இது சாதாரணமாக பேசுவதற்காக மிகைப்படுத்தி எழுதப்பட்ட வரலாறு அல்ல. இஸ்லாத்தில் அப்படிப்பட்ட வரலாறும் கடையாது. எது நடந்ததோ அது எழுதப்பட்டது.
கண்ணியத்திற்குரியவர்களே! குர்ஆன் அவர்களது வாழ்க்கையில் இருந்து, குர்ஆனை அவர்கள் பின்பற்றினார்கள். அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தான்.
குர்ஆன் எதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டது? அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
كِتَابٌ أَنْزَلْنَاهُ إِلَيْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ
(நபியே! இது) வேத நூல். இதை நாமே உம்மீது இறக்கியிருக்கிறோம். (இதன் மூலம்) மனிதர்களை அவர்கள் இறைவனின் கட்டளைப்படி இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் நீர் கொண்டு வருவீராக! (அந்த ஒளியோ) மிக்க புகழுக்குரிய (அல்லாஹ்வாகிய) அனைவரையும் மிகைத்தவனின் நேரான வழியாகும். (அல்குர்ஆன் 14 : 1)
இந்த குர்ஆனை வாழ்வின் பின்பற்றாமல், இந்தக் குர்ஆனை ஓதாமல் நீங்கள் வெற்றி அடைய முடியாது.
இம்மையின் கேவலத்தை விட்டும், மறுமையின் பயங்கரமான கேவலத்திலிருந்தும் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். குர்ஆனை பாதுகாப்பதும், மேலும் அதனுடைய சட்டங்களை பாதுகாப்பது கொண்டுதான் வாழ்க்கையில் நாம் வெற்றியடைய முடியும்.
இந்த யூதர்கள், கிறித்துவர்கள், அவர்கள் முயற்சி இன்று மட்டுமல்ல, அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலிருந்தே முஸ்லிம் பெண்களைக் குறிவைத்து, முஸ்லிம்களின் கலாச்சாரத்தைக் குறிவைத்து அதுவும் குறிப்பாக, இந்த முஸ்லிம்களின் ஹிஜாப் கலாச்சாரத்தைக் குறிவைத்து இருந்து கொண்டே இருக்கிறது இன்று வரை.
இது குறித்து நீங்கள் ஆச்சர்யப்பட தேவை இல்லை. இவர்களும் இந்த யூதர்களின் பிள்ளைகள் தான். கிறிஸ்துவர்களின் வழி தோன்றல்கள் தான்.
இவர்களுடைய மூதாதையர் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வுடைய ரசூலுக்கும் என்ன தொந்தரவு செய்தார்களோ, இந்த இஸ்லாமிய மார்க்கத்திற்கு என்ன சதித்திட்டங்களை தீட்டினார்களோ, அந்த திட்டங்களை அவர்களுடைய வாரிசுகளாகிய இவர்கள் தீட்டுவதில் எந்தவிதமான ஆச்சர்யமும் இல்லை.
ஆச்சர்யம் எது? கவலை எது? கைசேதத்திற்குரிய சதிச்செயல் எது? முஸ்லிம்களாகிய நாம் அவர்களுடைய சதித்திட்டங்களை, அவர்களுடைய தீய முயற்சிகளை அறியாமல், புரியாமல் இருக்கின்றோமே அதுதான்.
மேலும், நம்முடைய ஈமானை, இஸ்லாமை, நம்முடைய கலாச்சாரத்தை பாதுகாக்காமல் இருக்கிறோமே, அல்லாஹ்வின் பக்கம் திரும்பாமல் இருக்கின்றோமே, அதுதான் கவலைக்குரிய செயல்.
அவர்கள் இப்லீஸ்கள். அவர்களுடைய செயல்களை செய்து கொண்டு தான் இருப்பார்கள். முஃமின்களாகிய நாம் நமது ஈமானைப் பாதுகாத்தோமா? ஈமானைப் பரப்பினோமா? இந்த ஈமானுக்காக வேண்டி ஏதாவது முயற்சி, தியாகத்தை செய்து இருக்கிறோமா?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில், ஒரு முஸ்லிம் பெண்மணி, தனது ஒரு தேவைக்காக ஒரு யூதருடைய கடைக்கு செல்கிறாள்.
நகைகள் செய்வது, இரும்புப் பட்டறை வைத்திருப்பது போன்றவை யூதர்களின் தொழில்கள். அந்த பெண்தான் கொடுத்த நகையை வாங்குவதற்காக அங்கே செல்கிறாள்.
அங்கே அந்த யூதன் அந்தப் பெண்மணியிடம் உன் முகத்தை திற, உன்னுடைய பர்தாவைக் கழட்டு என்று சொல்கிறான். அந்த பெண் நான் எனது முகத்தையும் திறக்கமாட்டேன், எனது பர்தாவையும் கழட்டமாட்டேன் என்று கூறுகிறாள்.
அப்படியா பரவாயில்லை. உட்கார், உனது சாமான் தயார் செய்து கொண்டு இருக்கிறேன், தந்து விடுகிறேன் என்று சொல்கிறான்.
இன்னொரு பக்கம், அங்கு கூடி இருந்த யூதர்களில் ஒருவனுக்கு கண்சாடை காட்டி விடுகிறான். அவன் அந்தப் பெண்ணின் ஆடை மேலிருந்து அவள் போட்டிருந்த துப்பட்டாவையும், அவளது பாதாவையும் அவள் அமர்ந்திருந்த நாற்காலியோடு சேர்த்துக் கட்டி விடுகிறான்.
அந்தப் பெண்மணி அவளது தேவையைப் பெற்றுக் கொண்டு எழும்போது அவளுடைய மர்மஸ்தானம் தெரிந்து விடுகிறது. அவளுடைய ஆடை களைந்து விடுகிறது.
அந்த யூதர்கள் எல்லாம் பார்த்துச் சிரிக்கிறார்கள். நையாண்டி செய்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கிருந்த ஒரு முஸ்லிம், அந்த யூதனைக் கொன்று விடுகிறார்கள். இதற்குப் பிறகுதான் பனூ கைனுக்கா என்ற யுத்தம் மதினாவில் நடைபெற்றது.
நூல் : இப்னு ஹிஷாம்.
இது என்ன காட்டுகிறது? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலேயே இந்த யூதர்கள் ஹிஜாபின் மீது அவர்கள் குறிவைத்து போர் தொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த ஹிஜாப் அவர்களைக் குத்திக் கொண்டே இருக்கும்.
காரணம் என்ன? இதன் மூலமாக முஸ்லிம் பெண்கள் கற்போடு இருக்கிறார்கள். பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள். முஸ்லிம் பெண்கள் மட்டுமல்ல, ஹிஜாபு போடப்படுகிற இந்த முஸ்லிம் சமூகத்தின் வாலிபர்களும் கற்போடு இருப்பார்கள்.
ஹிஜாப் என்பது வெளியில் செல்லும் போது அணிகின்ற அந்த ஆடை மட்டுமல்ல, கண்ணுக்கு ஹிஜாப், தன்னுடைய செவிக்கு ஹிஜாப், தன்னுடய உடல், வாய்க்கு ஹிஜாப் இருக்கிறது.
அதுபோன்று, ஒரு பெண் வயதுக்கு வந்து விட்டால், அந்தப் பெண் யாரோடு பேச வேண்டும்? யாரோடு பேசக் கூடாது? என்ற தடையை பெற்றோர்கள் ஏற்படுத்துவதும் ஹிஜாபில் அடக்கம்.
உதாரணமாக, ஒரு முஸ்லிம் மஹல்லா, அடுத்தடுத்த வீடு முஸ்லிம் வீடுகள், அல்லது மேல் வீடும் கீழ் வீடும் முஸ்லிம் வீடுகள். இரண்டு வீட்டிலும் ஒரே நேரத்தில் குழந்தை பிறக்கிறது. ஒரு வீட்டில் ஆண் குழந்தை, ஒரு வீட்டில் பெண் குழந்தை, இருவரும் வளர்ந்து வருகிறார்கள். சின்ன பிள்ளையாக இருந்தபோது ஒன்றாக சேர்ந்து விளையாடுகிறார்கள், ஓடுகிறார்கள், பிறகு ஒன்றாக சேர்ந்து ஸ்கூலுக்கு செல்கிறார்கள்.
இதே நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த சமயத்தில் அந்த முஸ்லிம் பெண்ணும் பருவமடைகிறாள். அந்த முஸ்லிம் ஆணும் பருவமடைகிறான். இப்பொழுது பெற்றோர்களுடைய பொறுப்பு என்ன?
பொதுவாக, இந்த சமூகத்தில் இருக்கின்ற நம்முடைய பெற்றோர்களுடைய நிலைபாடு, சிறு பிள்ளைகளிலிருந்தே இரண்டு பேரும் ஒன்றாக விளையாடி படித்து வளர்ந்தவர்கள் தானே. இவர்கள் பேசிக் கொள்வதில் என்ன தவறு? இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியில் செல்வதில் என்ன தவறு? இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருப்பதில் என்ன தவறு?
சகோதரனாக அதாவது, தனது இரத்த சகோரதனைப் போன்று அந்த ஆணை, அந்த சிறுவனை இவர்கள் மதிக்கிறார்கள்.
இன்னும் அதிகமாகச் சொல்லப்போனால் தந்தையின் சகோதரர், அவருடைய பெண் பிள்ளைகள் நமக்கு பர்தா செய்யப்படவேண்டியவர்கள். தாயின் சகோதரிகள் அவர்களின் பெண் பிள்ளைகள் அவர்களும் பருவம் அடைந்து நாமும் பருவம் அடைந்துவிட்டால் நமக்கு அவர்கள் ஹிஜாப் செய்யப்படவேண்டும்.
அவர்களை தனிமையில் சந்திப்பதற்கு நமக்கு அனுமதியில்லை. அவர்கள் தனது சகோதரியின் மகனோடு தனிமையில் செல்வதற்கு அனுமதியில்லை. ஆனால், இந்த முஸ்லிம் சமூகத்தில் நடப்பது என்ன?
சமீபத்தில் ஒரு போன்கால் வருகிறது. பக்கத்து பக்கத்து முஸ்லிம் வீடுகள். இங்கே அந்த முஸ்லிம் பையன் வயது 15. பக்கத்து வீட்டிலுள்ள பெண் வயது 13. இருவருக்குமிடையில் நடக்கக் கூடாத செயல் நடந்து விடுகிறது. இது எதைக் காட்டுகிறது?
இது, அந்த பெற்றோர்களின் அலட்சியத்தைக் காட்டுகிறதா, இல்லையா? இவர்கள் இந்த பிள்ளைகளை எப்படி பாதுகாக்க வேண்டுமோ, அப்படிப்பட்ட பாதுகாப்பான முறையில் வளர்க்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
இவ்வளவு பயங்கரமான ஒரு பாவம் நடக்கிறது. இந்தப் பாவத்திற்குண்டான எச்சரிக்கையை, அச்சத்தை அந்தப் பிள்ளைகளுக்குக் கொடுக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.
எந்த ஹிஜாபை பேண வேண்டும் என்று அல்லாஹ் வரையறுத்து நமக்குக் கொடுத்தானோ அந்த ஒழுக்கத்தை இவர்கள் பேணவில்லை என்பதைக் காட்டுகிறது.
ஹிஜாப் என்பது இவ்வளவு விசாலமானது. இன்று, நம்முடைய சமுதாயத்தில் ஏதோ ஒரு நாட்டில் ஹிஜாப் அணியக் கூடாது என்று அவர்கள் சட்டம் போட்டதால் நாம் கவலைப்படுகிறோம்.
ஹிஜாப் அணியக் கூடாது என்று தடை விதிப்பதைப் பார்த்து நாம் எரிச்சல்படுகிறோம். எரிச்சல் படவேண்டியது தான். உண்மையான ஒவ்வொரு முஃமினும் இதற்காக ஒரு பயங்கர வீரத்தைக் காட்ட வேண்டிய அவசியத்தில் தான் இருக்கிறான்.
ஆனால், அதற்கு முன்னால் நாம் நம்முடைய பலவீனம் எங்கே? என்று பார்க்க வேண்டும். இன்று, எத்தனை முஸ்லிம் நாடுகளில் ஹிஜாப் புறக்கணிக்கப்படுகிறது. அங்கே பிரான்ஸில் ஹிஜாப் புறக்கணிக்கப்படுவதற்கு என்ன காரணம்?
முஸ்லிம் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் சமுதாயம் இந்த ஹிஜாபை புறக்கணித்தது.
இன்று, எத்தனை முஸ்லிம்களை இந்தியாவில் நீங்கள் பார்க்கலாம். முஸ்லிம் ஊர்களில் வசிப்பார்கள். அந்த ஊரிலிருந்து வெளியேறும்போது ஹிஜாபோடு ஏறுவார்கள். டிரெய்னில் ஏறிவிட்டால் அல்லது பஸ்ஸில் ஏறிவிட்டால் அந்த ஹிஜாபை கழட்டி பையில் வைத்துக் கொள்வார்கள்.
ஊரெல்லாம் சுற்றிவிட்டு திரும்ப ஹிஜாபை எடுத்து மாட்டிக் கொள்வார்கள். யாரோடு இவர்கள் பாரிகாசம் செய்கிறார்கள்? யாரை இவர்கள் கேவலப்படுத்திக் கொள்கிறார்கள்? இவர்கள் தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த முஸ்லிம் சமூகம், இந்த முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாப்பு. இது, இந்த மார்க்கத்தைப் பாதுகாப்பதில் இருக்கிறது.
இந்த முஸ்லிம் சமுதாயம், பாதுகாக்கப்படவேண்டும் என்று சொன்னால், இந்த சமுதாயம் மார்க்கத்தை எப்படி பாதுகாக்குமோ அந்த அளவுக்குத் தான் அல்லாஹ்வுடைய உதவி, பாதுகாப்பு இதற்கு உண்டு.
இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ் எல்லாவற்றிற்கும் நமக்கு ஒரு தீர்வை கொடுத்து இருக்கிறான்.
ஒரு முஸ்லிம் வீரனாக இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் இஸ்லாமிய அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒரு முஸ்லிம் தெளிவான சிந்தனையோடு இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் தங்கள் எதிரிகள் செய்யக் கூடிய சதித்திட்டங்களைக் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
நமக்கெல்லாம் மிகப்பொரிய எதிரி இந்த யூதர்கள், கிறித்துவர்களை விட பயங்கரமான எதிரி இந்த இப்லீஸ். அப்படிப்பட்ட இப்லீஸுடைய சதித்திட்டங்களை புரிந்தவனாக ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும் என்பது மிக அவசியம்.
அற்ப ஆசைகளுக்கும் மனோ இச்சைகளுக்கும் அடிமையாகி மார்க்கத்தை விட்டு விட்டால், மார்க்கத்தை விட்டு விலகிவிட்டால் அவன் அல்லாஹ்வுடைய பார்வையில் கேவலமடைந்தவனாக ஆகிவிடுவான்.
அல்லாஹ் கேட்கிறான் :
إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர் எவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்விடமே நம்பிக்கையாளர்கள் பொறுப்பை ஒப்படைக்கவும். (அல்குர்ஆன் 3 : 160)
ரசூலுல்லாஹ் அவர்கள் இந்த குர்ஆனோடு எப்போதும் தொடர்பு வைத்து இருந்தார்கள்.
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
நபியே! குர்ஆனை அழகிய முறையில் ஓதி வாருங்கள். (அல்குர்ஆன் 73 : 4)
وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَلَنْ تَجِدَ مِنْ دُونِهِ مُلْتَحَدًا
நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட உமது இறைவனின் வேதத்தை நீர் (தொடர்ந்து) ஓதிக் கொண்டே இருப்பீராக! அவனுடைய கட்டளைகளை எவராலும் மாற்றிவிட முடியாது. அவனைத் தவிர உமக்கு பாதுகாக்கும் எந்த ஓர் இடத்தையும் காணமாட்டீர். (அல்குர்ஆன் 18 : 27)
ஆகவே, அல்குர்ஆனை ஓதுவதற்கும் அதன்படி அமல் செய்வதற்கும் அல்லாஹ் நமக்கு வாய்ப்பளிப்பானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا يُونُسُ حَدَّثَنَا لَيْثٌ عَنْ قَيْسِ بْنِ الْحَجَّاجِ عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ أَنَّهُ حَدَّثَهُ أَنَّهُ رَكِبَ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا غُلَامُ إِنِّي مُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ وَإِذَا سَأَلْتَ فَلْتَسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَنْفَعُوكَ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتْ الْأَقْلَامُ وَجَفَّتْ الصُّحُفُ (مسند أحمد 2537 -)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/