HOME      Khutba      பெரும் பாவங்கள் (இணைவைத்தல்,பெருமை,முகஸ்துதி) | Tamil Bayan - 121   
 

பெரும் பாவங்கள் (இணைவைத்தல்,பெருமை,முகஸ்துதி) | Tamil Bayan - 121

           

பெரும் பாவங்கள் (இணைவைத்தல்,பெருமை,முகஸ்துதி) | Tamil Bayan - 121


பெரும் பாவங்கள்

ஜுமுஆ குத்பா தலைப்பு : பெரும் பாவங்கள்(இணைவைத்தல், பெருமை, முகஸ்துதி)

வரிசை : 121

இடம் : எஸ்.எம்.ஜெ.பிளாசா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக அல்லாஹ்வின் அச்சத்தை நினைவுபடுத்தியவனாக தொடங்குகிறேன்.

அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் கூறுகிறான் :

إِنْ تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُمْ مُدْخَلًا كَرِيمًا

நீங்கள் எதனை விட்டு தடுக்கப்பட்டுள்ளீர்களோ, அத்தகைய பெரும் பாவங்களை விட்டும் உங்களை தவிர்த்து கொள்வீர்களாயின் உங்களை விட்டும் உங்களது சிறிய குற்றங்களை மன்னித்து கண்ணியமான நினைவிடத்திலும் உங்களை நாம் நுழைவிப்போம். (அல்குர்ஆன் 4:31)

அதாவது,அல்லாஹு தஆலா நமக்கு தடுத்தவற்றில் இரண்டு விதமான பாவங்களை வைத்திருக்கிறான்.

ஒன்று, மிக பயங்கரமான பாவம். மற்றொன்று, சிறிய பாவம் என்று அறியப்படுகிறது.

இவ்விரண்டு வகையான பாவங்களில் ஒரு முஃமீன் பெரும் பாவங்களை விட்டு தன் வாழ்க்கையை பாதுகாத்துக் கொண்டால் அல்லாஹு தஆலா அந்த அடியார் மீது அருள்புரிந்து அவனின் சிறு பாவங்களை மன்னித்து விடுகிறான்.

இதே கருத்தை அல்லாஹ் குர்ஆனின் இன்னொரு இடத்தில் சொல்கிறான். அல்லாஹ்வை பயந்து கொள்கிற நல்லடியார்களின் தன்மைகளை இங்கே குறிப்பிடுகிறான் :

الَّذِينَ يَجْتَنِبُونَ كَبَائِرَ الْإِثْمِ وَالْفَوَاحِشَ إِلَّا اللَّمَمَ إِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنْشَأَكُمْ مِنَ الْأَرْضِ وَإِذْ أَنْتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ فَلَا تُزَكُّوا أَنْفُسَكُمْ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَى

(நன்மை செய்யும்) அவர்கள் (ஏதும் தவறாக ஏற்பட்டுவிடும்) அற்பமான பாவங்களைத் தவிர, மற்ற பெரும்பாவங்களிலிருந்தும், மானக்கேடான விஷயங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள். நிச்சயமாக உமது இறைவன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன். உங்களைப் பூமியிலிருந்து உற்பத்தி செய்த சமயத்தில் (உங்கள் தன்மையை) அவன் நன்கறிவான். நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் கர்ப்பப்பிண்டமாயிருந்த சமயத்திலும் உங்களை அவன் நன்கறிவான். ஆகவே, ‘‘தூய்மையானவர்கள்' என உங்களை நீங்களே தற்புகழ்ச்சி செய்துகொள்ளாதீர்கள். உங்களில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்பவர்கள் யாரென்பதை அவன் நன்கறிவான். (அல்குர்ஆன் 53 : 32)

அந்த நல்லடியார்கள் பெரும் பாவங்களை விட்டு விலகி இருப்பார்கள். மானக்கேடான அசிங்கமான பாவங்கள், விபச்சார சம்பந்தப்பட்ட பாவங்கள். உதாரணத்திற்கு சினிமா சீரியல் கலாச்சாரம் மக்களை நாசப்படுத்தும்.

முஃமீன்கள் இப்பேற்பட்ட மானக்கேடான அசிங்கமான மற்றும் ஜினா சம்பந்தப்பட்ட பாவங்களை விட்டும் விலகி இருப்பார்கள். சில சிறிய சிறிய தவறுகளை தவிர.

திடீரென்று பார்வையால், செவியால், மன ஊசலாட்டத்தில் ஏற்படும் பாவங்கள். இத்தகைய சிறிய பாவங்கள் தங்கள் இயலாமையால் நடந்துவிட்டால் அல்லாஹு தஆலா அவர்களை தன் அருளால் மன்னித்து விடுகிறான்.

நபியே! உன் இறைவன் மன்னிப்பால் மிக விசாலம் உடையவன்.(அல்குர்ஆன் 53 : 32)

அதை அளவிட முடியாது.மதிப்பிட முடியாது.

அல்லாஹுவும் அல்லாஹ்வுடைய தூதர் அவர்களும் பெரும் பாவங்களை விட்டு விலகி கொள்வதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நன்மை எச்சரிக்கிறார்கள்.

அபூபக்ரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் :

«أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الكَبَائِرِ» قُلْنَا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: " الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَكَانَ مُتَّكِئًا فَجَلَسَ فَقَالَ: أَلاَ وَقَوْلُ الزُّورِ، وَشَهَادَةُ الزُّورِ، أَلاَ وَقَوْلُ الزُّورِ، وَشَهَادَةُ الزُّورِ "

பெரும் பாவங்களில் மிகப் பெரிய பாவங்களை பற்றி நான் உங்களுக்கு கற்றுக்கொடுக்கட்டுமா?என்று கேட்கிறார்கள்.

தோழர்கள் சொல்கிறார்கள்; யா ரசூலல்லாஹ்! அவசியம் நீங்கள் எங்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :

பெரும் பாவங்களில் முதலாவதாக, அல்லாஹ்விற்கு சமமாக படைப்புகளை இணையாக ஆக்குதல்.

இரண்டாவது, பெற்றோருக்கு மாறுபாடு செய்தல்.

மூன்றாவதை கூற வரும்போது சார்ந்து அமர்ந்திருந்தவர்கள் நேராக உட்காருகிறார்கள்.

கவனமாக கேளுங்கள். பொய் பேசுதல் பொய் சாட்சி சொல்லுதல், பொய் பேசுதல் பொய் சாட்சி சொல்லுதல் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

தோழர்கள் பயந்து நடுங்கி தங்களுக்குள் சொன்னார்கள்; அல்லாஹ்வின் தூதர் அமைதி ஆக வேண்டுமே என்று.

அறிவிப்பாளர் : அபூபக்ராரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 5976.

அல்லாஹ்விற்கு இணை வைப்பது பற்றியும், பின் பெற்றோருக்கு மாறு செய்வதை பற்றியும் எச்சரித்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால், பொய் சாட்சியை பற்றி எச்சரிக்கும் பொழுது கூடுதல் அழுத்தத்துடன் சொன்னார்கள்.

ஏனென்றால்,தங்களை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு, தன் வாழ்வாதாரங்களை பொய்யின் மீது தொடங்கி வாழ்வதனால் இவர்கள் அல்லாஹ்வை பயப்பட வேண்டாமா!?

இப்பெரும் பாவங்களில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதலாவதாக கருதியது இணை வைத்தல்.

இணை வைத்தல் என்பது, கோவிலுக்கு அல்லது சர்ச்சுக்கு சென்று அங்கிருக்கும் சிலைகளில் வணங்குவது மட்டுமல்ல, இது ஒரு பகுதி.

அல்லாஹ் உடைய தன்மைகளை.திருக்குர்ஆனில் மூன்று வகையாக நாம் பார்க்கிறோம்.

1.             "ருபூபிய்யா" -படைப்பவன்,பரிபாலிப்பவன், ஆட்சி செலுத்துபவன், அதிகாரம் செலுத்துபவன்,இயக்குபவன்,ஆக்குபவன்,அழிப்பவன்.

போன்ற தன்மைகளில் அனைத்தையுமோ அல்லது ஒன்றையோ அல்லாஹ்வைத் தவிர ஒருவருக்கு இருக்கு என்று நம்பினால் அது ஷிர்க் -இணைவைப்பு ஆகும்.

2.             "உழ்ஹிய்யா" -உள்ளத்தாலும் உடலாலும் உறுப்புகளாலும் வழிபடக்கூடிய ஒருவன் அல்லாஹ் ஒருவன் தான்.

தொழுகை, நோன்பு, ஜக்காத், நேர்ச்சை, பிரார்த்தனை, தர்மம், ஆகியவற்றை செய்தும், குனிந்தும் சிரம் பணிந்தும் அல்லாஹ்வுடைய வீட்டை சுற்றி வந்தும் நாம் அல்லாஹு சுப்ஹானஹு தஆலாவை வணங்குகிறோம்.

இந்த வணக்க வழிபாடுகள் அனைத்தையுமோ அல்லது ஏதாவது ஒன்றையோ அல்லாஹ்வைத் தவிர மற்ற எந்த ஒரு படைப்க்கு செய்தாலும் அது இணைவைப்பது ஆகிவிடும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு காட்டிய அழகிய வழியான, நல்லோர்களின் கப்ருக்கு சென்றால், சலாம் சொல்லுங்கள்; உங்களுக்கும் அங்கு இருப்பவர்களுக்கும் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேளுங்கள்.; மறுமையை நினைத்துப் பாருங்கள்! என்பதை மறந்துவிட்டு, அங்கு சென்று நேர்ச்சைகள் செய்கிறார்கள்.

இறந்தவர்களிடம் சென்று தங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.

உங்களை நம்பி வந்தோம், எங்களை கைவிட்டு விடாதீர்கள் என்றும், அங்குள்ள தூண்களை கட்டிப்பிடித்துக் கொண்டு, அங்குள்ள பொருட்களை பரகத் பெற்ற பொருள் என்றும் சாப்பிடுகிறார்கள்.

அதன் மூலம் ஷிஃபா கிடைக்கும் என்றும், தங்குவதை வணக்கம் என்றும் குர்ஆன் ஓதுவதிலும் திக்ரு செய்வதிலும் ஈடுபடுகிறார்கள் .

ஆனால் அல்லாஹ், வணக்க வழிபாடு செய்வதற்காக மஸ்ஜிதை எழுப்ப சொன்னான்.

அல்லாஹ் கூறுகிறான் :

لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ

ஆகவே, (நபியே!) நீர் ஒருக்காலத்திலும் (அங்கு போய்) அதில் நிற்க வேண்டாம். ஆரம்ப தினத்திலேயே (அல்லாஹ்வின்) பயத்தின் மீது (பரிசுத்தமான எண்ணத்துடன்) அமைக்கப்பட்ட மஸ்ஜிதுதான் நீர் நின்று தொழ(வும் தொழவைக்கவும்) மிகத் தகுதியுடையது. (அல்குர்ஆன் 9 : 108)

அங்கே நின்று நீங்கள் இபாதத் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான் .

இன்று, மஸ்ஜிதுகள் பாழடைந்த மஸ்ஜிதுகளாகவும், தொழுகைக்குப்பின் மூடியும் சென்று விடுகிறார்கள் .

கப்ர்களைப் பார்த்தால், விளக்குகள் அலங்காரங்கள் என்று செழிப்புடன் வைத்து மக்களை வரவேற்று கொண்டிருக்கிறார்கள். இது ஷிர்க் உடைய இரண்டாவது வகை.

3.             அடுத்து அல்லாஹ்வுடைய சிஃபத்துகள், அல்லாஹ்வுடைய பண்புகள்.

அல்லாஹ் அறிகிறான்,பார்க்கிறான்,கேட்கிறான்,பிடிக்கிறான்,உதவி செய்கிறான்,இன்னும் அல்லாஹ்விற்கு ஏராளமான அழகிய பண்புகள் இருக்கின்றன.

இந்த பண்புகளில் எந்த ஒரு பண்பும் அல்லாஹ் அல்லாத மற்றொன்றுக்கு உள்ளது என்று நினைத்தால் அது ஷிர்க் ஆகும்.

மேற்கூறப்பட்ட மூன்று வகையான ஷிர்க்குகளும் பெரிய ஷிர்க்குகளில் சேர்கின்றன.

இந்த மூன்று வகையான ஷிர்க்கில் ஒன்று செய்தாலும் அவனுடைய நல்ல அமல்கள் அனைத்தும் வீணாகிவிடும். இவனுடைய ஷிர்க் அழித்துவிடும்.

நாளை மறுமையில் இவனுக்கு சிபாரிசு செய்ய யாரும் இருக்கமாட்டார்கள். மேலும் அவர் நிரந்தர நரகத்தில் தள்ளப்படுவார்.

சிறிய ஷிர்க் இரண்டு வகைப்படும்.

1.             வெளிப்படையாக நமக்குத் தெரிந்தவை.

2.             உள்ளத்தில் மறைந்து இருப்பவை.

உதாரணமாக, அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்வது.

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதைக் கொண்டு அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள்.

தந்தையின் மீது தாயின் மீது உன் பிள்ளையின் மீது என்று சத்தியம் செய்வாயா? என்பார்கள்.

ஒரு முஸ்லீம் அல்லாஹ் அல்லாத வேறு எதன் மீது சத்தியம் செய்தாலும் சரி, அது இணை வைத்தலாகும். சிறிய வகை ஷிர்க்கில் சேரும்.

அதாவது, இவன், தான் எதன் மீது சத்தியம் செய்கிறாரோ அதை அல்லாஹ்விற்கு சமமாக கருதி விட்டால் அதுவும் பெரிய வகை ஷிர்க்கை சேர்ந்துவிடும்.

இன்று, முஸ்லிம் சமூகத்தில் சிலர், தன் பெற்றோர்கள் மீது பிள்ளைகள் மீது சத்தியம் செய்கிறார்கள்

ஒரு கூட்டம் இருக்கின்றது. அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தாங்கள் நம்பி இருக்கின்ற அவுலியா மீது சத்தியம் செய்து சொன்னால்தான் நம்புவார்கள்.

அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்து சொன்னால் அவன் உடனே தண்டிக்கப்பட மாட்டான், விட்டு விடுவான் என்றும், ஆனால் அவுலியாக்கள் மீது பொய் சத்தியம் செய்தால் அவர்கள் உடனே தண்டித்து விடுவார்கள் என்றும் நம்புவார்கள்.

இப்படி இவர்கள் அல்லாஹ்வின் மீது வைத்திருக்கும் கண்ணியத்தை விட அவுலியா மீது வைத்திருக்கும் கண்ணியம் தான் அதிகம்.

அல்லாஹ்வுடைய வல்லமை ஆற்றல் ஆகியவை பற்றி பேசினால் அவர்களுடைய உடல் சிலிர்க்காது, உள்ளம் நடுங்காது, தூங்கிக் கொண்டிருப்பார்கள். ஏதோ ஒரு யோசனையில் இருப்பார்கள்.

அவுலியாவுடைய கிராமத்துகளைப் பற்றிப் பேசினால் ஓஹோ! ஆஹா! என்று துடிக்க ஆரம்பித்து விடுவார்கள். எச்சில் கொட்ட ஆரம்பித்து விடுவார்கள். பரவசமாகி விடுவார்கள்.

இவர்கள் அல்லாஹ்வை மதிக்காதவர்கள். தங்களுடைய அவுலியாக்கள் மீது சத்தியம் செய்தால்தான் நம்புவார்கள்.

இத்தகைய சத்தியங்கள் பெரிய ஷிர்க்குகளில் ஆகிவிடும்.

அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்வது, எது வரை சிறிய ஷிர்க் ஆகும் என்றால், எதன் மீது சத்தியம் செய்கிறானோ அதை அல்லாஹ்விற்கு சமமாக கருதாத வரை. அதனால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும், அல்லாஹ் தண்டித்து விடுவான் என்று பயப்படாத வரை தான் அது சிறிய ஷிர்க் ஆகும்.

இதற்கு மாற்றமாக அல்லாஹ்விற்கு சமமாக சத்தியம் செய்யப்படும் அந்தப் பொருளை நம்பி விட்டால் மதித்து விட்டால் அது பெரிய ஷிர்க் ஆகிவிடும்.

அதுபோல் இன்று மக்கள் பெரும்பாலும் தாயத்துகள் தகடுகள் தொங்க விடுகின்றார்கள்.

இதில் இரண்டு விதமாக இருக்கின்றன.

ஒன்று,அல்லாஹ்வின் பெயர்கள், குர்ஆனுடைய வசனங்கள், ஹதீஸ்கள், துஆக்கள் நேரடியாக எழுதப்பட்டிருக்கும். இப்படி செய்யக்கூடாது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இவற்றை செய்வது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிக்கொடுத்த ஒழுக்கம் அல்ல.

நீங்கள் அல்லாஹ்வுடைய அருளை எதிர்பார்ப்பவர்கள் என்றால் அல்குர்ஆனை ஓதுங்கள், உங்கள் நாவால் துஆ கேளுங்கள் என்றுதான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்தார்கள்.

மாறாக, குர்ஆனுடைய வசனங்களை எழுதி தொங்க விட்டுக் கொள்ளுங்கள், உங்களுக்கு அதன் மூலமாக பரகத் கிடைக்கும் என்று ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லவில்லை. அப்படிப்பட்ட வழிமுறைகளை கற்றுக் கொடுக்கவில்லை.

அவர்களின் கண்ணியமிக்க தோழர்கள் அப்படி செய்யவில்லை. சிறந்த மார்க்க அறிஞர்களும் அப்படி சொல்லவில்லை.

அடுத்து, இதுபோன்ற தாயத்து தகடுகளில் இன்னுமொரு முறை இருக்கின்றது.குர்ஆனுடைய வசனங்களை கட்டம் போட்டு எண்களாக எழுதுவார்கள், அல்லது தங்களுடைய அவுலியாக்களின் பெயர்களை, ஜின்களின், மலக்குமார்களின் பெயர்களை எழுதுவார்கள்.

பெரும்பாலும் மக்களிடத்தில் புழக்கத்திலுள்ள தாயத்துகளை தகடுகளை பார்த்தால் அதில் அல்லாஹ்வுடைய பெயர்களை விட குர்ஆன் வசனங்களை விட ஜின்களும் மலக்குகளும் அல்லது இவர்கள் நம்பி இருக்கின்ற அவுலியாக்களின் பெயர்கள் தான் அதிகமாக இருக்கும்.

இதுபோன்ற தாயத்தும் தகடுகளும் தொங்கவிடுவது பெரிய ஷிர்க்கில் போய் சேர்ந்துவிடும்.

காரணம்,எதை அல்லாஹ் பரக்கத்திற்கு காரணமாக ஆக்க வில்லையோ அவற்றை அல்லாஹ்வுடைய அருளுக்கு பரக்கத்திற்கு காரணமாக நினைப்பது அல்லாஹ்விற்கு இணைவைத்தல் ஆகிவிடும்.

இரண்டாவது, இதுபோன்ற தாயத்துகளில் அல்லாஹ்வுடைய பெயர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன; எழுதப்பட்டு இருக்கின்றன.

ஆனால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்படி சொல்லவில்லை.

இது எனக்கு ஷிஃபா அல்லது பரக்கத் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கும் என்று நினைத்தால் இது சிறிய ஷிர்க்காக ஆகி விடும்.

இரண்டு விஷயங்களையும் தனித்தனியாக தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

ஒன்று, அல்லாஹ் அல்லாத பெயர்களை எழுதப்பட்டிருந்தால், அவர்கள் மலக்காக இருந்தாலும் ஜின்களாக இருந்தாலும் அல்லது வேறு அவுலியாக்களின் பெயர்களாக இருந்தாலும் அது போன்ற தாயத்தும் தகடுகளும் அணிவது பெரிய ஷிர்க்குடன் சேர்ந்துவிடும். அவர்களின் தொழுகை நோன்பு வணக்க வழிபாடு அனைத்தும் பாழாகி விடும்.

எதை அல்லாஹ் காரணமாக ஆக்கவில்லையோ அதை காரணமாக நினைப்பது சிறிய வகை ஷிர்க் ஆகிவிடும்.

அடுத்து கண்ணியத்திற்குரியவர்களே!மறைவான ஷிர்க் உடைய இரண்டாம் வகை.

அதை தான் ஹதீஸ்களில் நாம் முகஸ்துதி என்பதாக அறிகிறோம்.

ஒருவர்,ஒரு வணக்க வழிபாட்டை ஆரம்பிக்கிறார், தொழுகிறார் அல்லது நோன்பு வைக்கிறார் அவர் இந்த வணக்க வழிபாட்டினை ஆரம்பிக்கும் பொழுது அல்லாஹ்வுக்காக என்று ஆரம்பிப்பார்.

ஆனால்,பிறகு அவருடைய எண்ணத்தில் யாராவது ஒருவர் அவரைப் பார்க்கும் பொழுது,ஆஹா!இன்னவர் பார்க்கிறாரே என்று தொழுகையை மேலும் அழகு படுத்துகிறார்.

அல்லது ஒருவரை சந்திக்கும் பொழுது நான் நோன்பாளி என்று சொல்கிறார்.ஆஹா!தான் நோன்பாளி என்று சொன்னதால் மற்றொருவர் தன்னை வணக்கசாளியாக ஒரு பெரிய இறை நேசராக நினைப்பார் என்றெல்லாம் நினைப்பார். இது சிறிய ஷிர்க் ஆகும்.

இதை தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முகஸ்துதி என்கிறார்கள்.

முகஸ்துதி வந்த உடனே அல்லாஹ்விடத்தில் இஸ்திக்ஃபார் -பாவ மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.

யா அல்லாஹ்!என் உள்ளத்தை சுத்தப்படுத்து! என் அமலை தூய்மையாக உனக்கு மட்டும் ஆக்கு! என்று அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்து விட்டால் அல்லாஹ் இந்த பாவத்தை உடனடியாக மன்னித்து விடுகிறான். உள்ளத்தை தூய்மைப்படுத்தி விடுகிறான்.

மாறாக,அந்த எண்ணம் வந்ததுமே அதை தக்க வைத்துக் கொண்டால் வளர்த்துக் கொண்டால் எந்த வணக்க வழிபாட்டில் அந்த முகஸ்துதி என்ற சிறிய ஷிர்க் கலக்கிறதோ அந்த வழிபாட்டை அது அழித்துவிடும்.

ஒரு நாள் முழுக்க நோன்பு வைத்திருப்பான். நோன்பின் முடிவில் ரியா -முகஸ்துதி அவரின் உள்ளத்தில் வருகிறது.பகலெல்லாம் அவர் வைத்த நோன்பு, அந்த சிரமங்கள் மற்றும் நன்மைகளை அந்த முகஸ்துதி அழித்துவிடுகிறது.

மணிக்கணக்காக குர்ஆன் ஓதுகிறார்.யாராவது பார்க்கிறார் என்ற எண்ணம் ஏற்படுகிறது.உடனடியாக அவர் இஸ்திக்பார் செய்து அல்லாஹ்விடத்தில் திரும்பாமல் அந்த எண்ணத்தை தக்க வைத்துக் கொண்டால், அப்போது ஓதிய அந்த குர்ஆனுக்கு அல்லாஹ் நன்மை தர மாட்டான்.

முகஸ்துதி எந்த வணக்க வழிபாட்டில் கலக்கிறதோ அது அந்த வழக்கப்பாட்டை அழித்து விடுகிறது.

அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸும் இந்தப் பெரும் பாவங்களைப் பற்றி நமக்கு கடுமையாக எச்சரிக்கை செய்கின்றன.

பெரும்பாவங்கள் உள்ளத்திலும் இருக்கலாம், உடலிலும் இருக்கலாம்.

பெரும்பாலோருக்கு பெரும்பாவங்கள் என்றால் ஒரு சில எண்ணிக்கைகள் மட்டும்தான் தெரியும்.

ஆனால், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் :

பெரும்பாவங்கள் 7-லிருந்து ஆரம்பமாகி 70இன்னும் 700-வரை செல்கின்றது என்று.

உள்ளம் சம்பந்தப்பட்ட பெரும்பாவங்கள் நமது சமுதாயத்தில் பார்க்கின்றோம். இந்தக் கல்புடைய பெரும் பாவங்களில் பலர் அலட்சியம் செய்து விடுகிறார்கள்.

விபச்சாரம்,திருட்டு அல்லது மது அருந்துவதை பெரும் பாவம் என்று கருதுகிற எத்தனையோ நல்ல மக்கள், கல்பில் ஏற்படுகின்ற பெரும் பாவங்களை அலட்சியம் செய்வதை பார்க்கின்றோம்.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :

அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

«إِنَّ اللهَ لَا يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ»

அல்லாஹ் உங்களுடைய உருவங்களை பார்ப்பதில்லை.

(காரணம்,உருவத்தை படைத்தவன் அல்லாஹ். சிலரை கருப்பாக சிலரை சிவப்பாக ஒருவருடைய முகத்தை மிக அழகாக மற்றொருவரை அழகற்றவராக படைத்துள்ளான். அல்லாஹு சுப்ஹானஹு தஆலா உருவங்களை வைத்து அவன் நன்மைகளை அளப்பதில்லை.)

அவன் உங்களுடைய செல்வங்களையும் பார்ப்பதில்லை.அல்லாஹ் உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் மட்டும் தான் பார்க்கிறான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2564.

அல்லாஹ் நம்முடைய உருவ அழகை வைத்து நன்மையையோ கூலியையோ கொடுப்பதில்லை. அது போன்று,தான தர்மங்கள் செய்யப்படாத செல்வங்களை வைத்து கூலி கொடுப்பதில்லை.

மாறாக, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒருவரை நல்லடியார்களில் ஏற்றுக்கொள்கிறான், ஒருவரை தனக்கு நெருக்கமானவர்களில் சேர்த்துக் கொள்கிறான், ஒருவர் மீது அன்பு பாராட்டுகிறான்,நேசம் வைக்கின்றான் என்றால் அல்லாஹ் அங்கு இரண்டை பார்க்கிறான்.

முதலாவது,அவனுடைய உள்ளத்தைப் பார்க்கிறான்.

இரண்டாவது, அவருடைய செயல்பாட்டை பார்க்கிறான்.

யாருடைய உள்ளம் அல்லாஹ் விரும்புகின்ற வகையில் அழகாக ஆகிவிட்டதோ அவருடைய முகத்தில் அல்லாஹ் ஒளியை கொடுக்கின்றான்.

அவர் கருப்பாக இருக்கலாம். அழகற்றவராக இருக்கலாம். ஆனால், அவரை பார்க்கும் பொழுது முஃமின்களுக்கு ஒருவித அச்சம் ஏற்படுகின்றது. அவர் மீது அன்பு ஏற்படுகின்றது. அவருடன் பழக வேண்டும் என்று ஆசை ஏற்படுகிறது.

இது அல்லாஹ் அவரின் உள்ளத்தில் இருக்கும் அழகை வைத்து அவரின் முகத்தில் கொடுக்கும் ஒளி.

இந்த ஒளியை தான் அல்லாஹு ரப்புல் ஆலமீன் சஹாபாக்களுக்கு நிறைவாக கொடுத்திருந்தான்.

சஹாபாக்களின் முகத்திலிருந்து அவர்களின் சுஜூதுடைய ஒளியை பார்க்கலாம் என்று அல்லாஹ் சுபஹானஹு தஆலா சொல்கிறான். (அல்குர்ஆன் 48 : 29)

இந்த ஹதீஸுக்கு விளக்கமாக இமாம் கஜ்ஜாலி ரஹிமஹுல்லாஹ்அவர்கள் சொல்கிறார்கள்.

இன்று பலரை பார்க்கின்றோம்;தங்களின் முகத்தின் அழகுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். பிறர் பார்க்கும்பொழுது எந்த வித குறைபாடும் இருக்கக்கூடாது அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

படைப்புகள் பார்க்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். படைப்புகளின் பார்வை ஒரு முறை பார்த்து அடுத்த முறை மறந்துவிடுவார்கள்.

இந்த படைப்புகளுக்காக தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் எத்தனையோ மக்கள் இவர்கள் சற்று தங்களின் கவனத்தை திருப்ப வேண்டாமா?

அல்லாஹ் இந்த உள்ளத்தை பார்க்கின்றான். அல்லாஹ் படைத்த இந்த கல்பை அழகு படுத்த வேண்டுமே! அலங்கரிக்க வேண்டுமே!

அல்லாஹ்விற்கு விரும்பாத குணங்கள் விரும்பாத தன்மைகள் அல்லாஹ்விற்கு பிடிக்காத எத்தனையோ அசிங்கமான எண்ணங்கள் இந்த உள்ளத்தில் குடிக்கொண்டு இருக்கின்றனவே.

இந்த உள்ளத்தை அவற்றை விட்டு சுத்தப்படுத்தி அல்லாஹ் என் உள்ளத்தை பார்க்கும்பொழுது அவன் என்னை நேசிக்க வேண்டும், அவன் இந்த உள்ளத்தை திருப்தி கொள்ள வேண்டும் என்று ஏன் இந்த மக்கள் முயற்சி செய்யவில்லை.

நாம் அன்றாடம் நம் உடலை குளித்து சுத்தம் செய்துகொண்டிருக்கிறோம். குளிக்காதவர் ஒருவர் அருகில் செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. அவரை விட்டு தூரமாக நிற்கின்றோம். அந்த மனிதனும் தன்னை தானே பார்க்கும் பொழுது ஒரு அருவறுப்பாக பார்பான்.

இந்த உடலை விட கல்புக்குத் தான் மார்க்கம் முக்கியத்துவம் கொடுக்கின்றது. இந்த உடலில் வியர்வை நாற்றம் அடிப்பது போல், பாவங்களின் காரணமாக தீய சிந்தனைகள் காரணமாக அசிங்கமான எண்ணங்களின் காரணமாக இந்த கல்பில் துர்நாற்றம் அடித்துக் கொண்டிருக்கின்றது.

முக அழகு உள்ளவர்களெல்லாம் உள்ளத்தாலும் அழகானவர்கள் என்று சொல்லமுடியாது.

எத்தனையோ பேர் முகத்தால் அழகற்றவர்களாக அசிங்கமானவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களுடைய கல்பால் அழகானவர்களாக அல்லாஹ்வுடைய அன்பை பெறக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

ஆகவே, ஒரு முஸ்லிம் அதிகமாக அவருடைய ‌கல்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இதை தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ் நமக்கு அறிவுறுத்துகிறது.

நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள் :

الحَلاَلُ بَيِّنٌ، وَالحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ

ஹலால் தெளிவானது, ஹராம் தெளிவானது.இவ்விரண்டுக்கும் இடையில் சந்தேகத்துக்குரிய எத்தனையோ காரியங்கள் இருக்கின்றன.

எந்த ஒரு முஸ்லிம் சந்தேகத்திற்குரிய காரியங்களை விட்டு விலகி கொள்கிறாரோ, அவர் தன் மார்க்கத்தை பாதுகாத்துக் கொண்டார், அவர் தன் கண்ணியத்தை ஈமானை பாதுகாத்துக் கொண்டார்.

என்று கூறிய ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த ஹதீஸின் முடிவில் ஒரு அழகான விஷயத்தை சொல்கிறார்கள்.

أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ

இந்த உடம்பில் ஒரு சதை துண்டு இருக்கின்றது. இந்த சதை துண்டு சீராகி விட்டால் உடலெல்லாம் சீராகிவிடும்.இந்த சதை துண்டு பாழடைந்துவிட்டால் முழு உடலும் சீர் கெட்டு விடுகிறது.

அறிந்துகொள்ளுங்கள்! அந்த சதை துண்டு தான் உள்ளமாக இருக்கின்றது.(1)

அறிவிப்பாளர் : நுஃமான் இப்னு பஷீர்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 52.

ஒரு அடியானுடைய செயல்பாடுகள்,அல்லாஹ்வின் கட்டளைக்கு உட்பட்டவையாக இருந்தால்,அவனுடைய உள்ளம் சுத்தமாக இருக்கின்றது. அவனுக்கு அல்லாஹ்வுடைய பயம் இருக்கின்றது என்று பொருள்.

அவன் அல்லாஹ்வை நேசிக்கின்றான். அல்லாஹ்விற்கு எது விருப்பமோ அதை விரும்புகின்றான். அல்லாஹ்விற்கு எது வெறுப்போ அதை அவன் வெறுக்கிறான் என்று பொருள்.

இதனால் அவர், தொழுகையை நேசிக்கிறார்,அமல்களை நேசிக்கிறார்,பாவங்களை வெறுக்கிறார், பொய்யை வெறுக்கிறார்.

இன்னும் அல்லாஹ் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெறுத்த அத்தனை பாவங்களிலும் விலகி இருக்கிறார்.

பொய் பேசுவதில்லை, ஏமாற்றுவதில்லை, குற்றங்கள் புரிவது இல்லை, பிறருக்கு தொந்தரவு செய்வதில்லை. இப்படி பாவங்களை விட்டு தன்னை தடுத்துக்கொண்டே விலகி இருக்கிறார்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய புத்தகம் அல்குர்ஆனில் “கல்புன் சலீம்”-பாதுகாப்பு பெற்ற உள்ளம் என்று சொல்கின்றான்.

இந்த உள்ளம் யாருக்கு கிடைக்குமோ அவர்கள் தான் மறுமையில் வெற்றி பெறுவார்கள்.

இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்களின் நாவின் வழியாக அல்லாஹ் சொல்கிறான்.

يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ (88) إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ

உங்கள் செல்வங்கள் நாளை மறுமையில் உங்களுக்கு பலனளிக்காது. உங்களுடைய பிள்ளைகள் குடும்பம் உங்களுக்கு பலனளிக்காது. மாறாக யார் பாதுகாப்பு பெற்ற உள்ளத்தோடு வருவாரோ அவர்தான் வெற்றி அடைவார். (அல்குர்ஆன் 26 : 89)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்விடத்தில் கெஞ்சுவார்கள்.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ قَلْبًا سَلِيمًا

யா அல்லாஹ்! பாதுகாப்பு பெற்ற ஈடேற்றம் பெற்ற உள்ளத்தை எனக்கு தருவாயாக!(2)

அறிவிப்பாளர் : ஷத்தாத் இப்னு அவ்ஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : நசாயி, எண் : 1304, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

"சலீம்" என்றால் பாவங்களை விட்டு பாதுகாப்பு பெற்ற உள்ளம்.

அந்த உள்ளத்தில் அல்லாஹ் இருப்பான். அல்லாஹ்வுடைய அன்பு இருக்கும்,பயம் இருக்கும்,அல்லது தடுத்த காரியங்களில் விழுந்து அல்லாஹ்விற்கு கோபமாகி விடுவோமோ என்ற பயம் இருக்கும்.

நரகத்தை பற்றிய பயம் இருக்கும். எந்த காரியத்தை செய்தால் நரகம் உண்டு என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்தானோ அதில் நான் விழுந்து விடுவேனோ என்று அல்லாஹ்வை பயந்து கொண்டிருப்பார்.

இதுதான் "கல்புன் சலீம்" -பாதுகாப்பு பெற்ற உள்ளங்கள்

இன்று, உடலில் ஏதேனும் நோய் வந்து விட்டால் அதற்காக பயப்படுகின்ற மக்கள், இந்த கல்ப் எவ்வளவு மோசமடைந்து விட்டிருக்கின்றது. இதில் அல்லாஹ் விரும்பாத எத்தனை பண்புகள் எத்தனை குணங்கள் குடிகொண்டிருக்கின்றது.

இதை ஏன் நாம் சீர் செய்வதில்லை?

மார்க்க அறிஞர்கள் இந்த கல்பினால் ஏற்படுகின்ற பெரும் பாவங்களை பற்றி குறிப்பிடும்பொழுது, முதலாவதாக பெருமையை சொல்கிறார்கள். கல்பில் ஏற்படுகின்ற ஒரு மிகப்பெரிய பாவம் இந்த பெருமை.

அல்லாஹு தஆலா அவனுடைய குர்ஆனில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெருமையை குறித்து கண்டிக்கிறான்.

إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا

எவன் கர்வம் கொண்டவனாக, பெருமை அடிப்பவனாக இருக்கிறானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 4 : 36)

மேலும், அல்லாஹ் கூறுகிறான் :

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ

(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 31 : 18)

மேலும், அல்லாஹ் கூறுகிறான் :

فَادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَلَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ

(மேலும், இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து என்றென்றுமே அதில் தங்கி விடுங்கள்'' (என்று கூறுவார்கள்). பெருமை அடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மகா கெட்டது.(அல்குர்ஆன் 16 : 29)

இந்த மூன்று வசனங்கள் மட்டும் அல்லாது இன்னும் ஏராளமான வசனங்களில் அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா பெருமையைப் பற்றி கூறுகிறான்.

யார் ஒருவர் தற்பெருமை அகங்காரம் செருக்கு ஆணவத்தோடு இருக்கிறாரோ,பிறரை விட தன்னை உயர்வாக கருதுகிறாரோ,தன் புகழை பற்றி பேசுகிறாரோ,தன் உயர்வை பற்றி பேசுகிறாரோ,மக்கள் தன்னை பெரியவனாக மதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ இத்தகையவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

பகூர் -தன் புகழைப் பற்றி தானே பேசுவது. நான் யார் தெரியுமா? என்னிடம் என்ன இருக்கின்றது தெரியுமா? என்னுடைய சாதனை என்ன தெரியுமா? என்னுடைய பெயர் என்ன தெரியுமா? என்னிடம் எவ்வளவு பொருளாதாரம் இருக்கின்றது தெரியுமா?

என்று தன்னுடைய சாதனை பற்றி அல்லது அல்லாஹ் தனக்கு கொடுத்திருக்கும் நிஃமத்துகளைப் பற்றி அல்லாஹ்வுடன் தன்னை சம்பந்தப்படுத்தி பேசாமல்,இவை அனைத்தும் நான் சம்பாதித்தது,என்னுடைய அறிவு,என்னுடைய திறமை,என்னுடைய கல்வி திறனால் வளர்ந்தது என்று தன்னோடு சேர்த்து பேசுவது.

இதைத்தான் ரப்புல் ஆலமீன் சூரா லுக்மானிலும் சொல்கிறான்.

இவர்களுடைய முடிவு என்ன? நாளை மறுமையில் இவர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்கள்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள் :

«لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ»

யாருடைய உள்ளத்தில் ஒரு அணு அளவு பெருமை இருக்குமோ அவர் சொர்க்கம் செல்லமாட்டான்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களிடத்தில் ஒரு சஹாபி கேட்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே!ஒருவர் தன் ஆடை அழகாக இருக்க வேண்டும் அல்லது தன்னுடைய காலணி அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.இது பெருமையில் சேருமா? என்று.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

«إِنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ، الْكِبْرُ بَطَرُ الْحَقِّ، وَغَمْطُ النَّاسِ»

அல்லாஹ் அழகியவன். அவன் அழகை விரும்புகிறான்.

அழகிய ஆடையையோ காலணியையோ பெருமை என்று பார்க்கவில்லை.

மாறாக,பெருமை என்பது சத்தியத்தை உண்மையை ஏற்க மறுப்பது. அல்லாஹ்வின் குர்ஆனின் சட்டங்களை நபிவழியின் சட்டங்களை உண்மையாக ஆதாரப்பூர்வமாக இருந்தும் அவற்றை ஏற்க மறுப்பது.

மேலும், மக்களை மட்டமாக பார்ப்பது, பிறரை கேவலமாக பார்ப்பது.

கண்ணியத்திற்குரியவர்களே! இன்று நாம் பார்க்கின்றோம்; சத்திய உண்மையை குர்ஆனுடைய வசனங்களை காட்டும் பொழுது நபி வழியை காட்டும் பொழுது அவற்றை ஏற்க மறுக்கின்றார்கள். அதை புறம் தள்ளிவிடுவார்கள்.

சத்தியத்தை மறுக்கின்ற காரணத்தால் இன்று நம் சமுதாயத்தில் பல அழிவுகள் ஏற்பட்டு இருக்கின்றன.

இன்று,மக்கள் ரபியுல் அவ்வல் மாதத்தை மௌலூது மாதம் ரசூலுல்லாஹ் உடைய முழுவதும் மாதம் என்று அறிகிறார்கள்.

இந்த சடங்குகள் எங்கிருந்து வந்தன? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? சஹாபாக்கள் செய்தார்களா?

மக்கள் சொல்வார்கள்;ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு, ரசூலுல்லாஹ்வை புகழ வில்லையா? என்று.

அவர்களிடத்தில் நாம் கேட்கிறோம்;நீங்கள் படிக்கின்ற இந்த புத்தகம் ஹஸ்லான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லது அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆகியோர்களின் கவிதை இதில் தொகுக்கப்பட்டுள்ளதா?

அவர்கள் சொன்ன பொருள்கள் படி ஏற்றப்பட்ட கவிதைகளாவது அதில் இருக்கிறதா?

ஹஸ்லான் இப்னு சாபித், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவர்களிடத்தில் இருக்கின்ற தன்மைகளை வைத்துதான் புகழ்ந்தார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா அவர்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் தஆலா என்ன உயரிய பண்புகளை குணங்களை சிறப்புகளை அழகிய ஒழுக்கங்களை கொடுத்தானோ அதை வைத்துதான் புகழ்ந்தார்கள்.

ஆனால், இன்று ஓதப்படும் இந்த மவ்லிதுகள், முதலில் அதை எழுதியவர் யாரென்று தெரியாது.

அவர் ஒரு யஹூதியாகவோ கிறித்தவராகவோ கூட இருக்கலாம். முஸ்லிம்களின் கொள்கையை கெடுப்பதற்காக இப்படி ஒரு கவிதையை எழுதி இருக்கலாம்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸலவாத்தை வண்க்கமான வழிபாடாக சொன்னார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நாம் கேட்கின்ற துஆக்கள், ஸலவாத்தும் ஸலாமும் வணக்கம் தான்.

ஒரு நாளைக்கு ஃபர்லான வணக்க வழிபாடுகள் போக நூறு முறை ஆயிரம் முறை லட்சம் முறை சொல்லுங்கள், அல்லாஹ் உங்களை நேசிக்கிறான். அவனுடைய அருளையும் அன்பையும் அல்லாஹ் பொழிகிறான்.

இந்த ஸலவாத்துக்கும் இன்று மௌலூது என்னும் பெயரில் மக்கள் படிக்கின்ற புத்தகத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது?

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ்வின் ஸ்தானத்தில் புகழ்வதால் அது ஷிர்க்காக ஆகிவிடும்.

ஒரு கூட்டம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் அமர்ந்து பேசியது.

நீங்கள் எங்களில் மிக மகத்தானவர், நீங்கள் எங்களுடைய தலைவர், எங்களின் தலைவரின் மகன், நீங்கள் மிக கண்ணியத்திற்குரியவர்கள் என்று புகழ்ந்தார்கள்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

«لاَ تُطْرُونِي، كَمَا أَطْرَتْ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا عَبْدُ اللَّهِ، وَرَسُولُهُ»

கிறித்தவர்கள் மர்யமின் மகன் ஈஸாவை வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னைப் புகழ்வதில் வரம்பு மீறாதீர்கள். நீங்கள் என்னைப் பற்றி இப்படி சொல்லுங்கள்; நான் அல்லாஹ்வின் அடிமை! அல்லாஹ்வின் தூதர்! என்று.

அறிவிப்பாளர் : உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3445.

கண்ணியத்திற்குரியவர்களே! ஒரு நபியை நாம் புகழ்வதாக இருந்தால் அவருடைய உண்மையான உயர்வுகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

நாம் அவரை அல்லாஹ்வின் அடிமை அல்லாஹ்வின் தூதர் என்று சொல்வதை விட பெரிய புகழ்ச்சி சிறந்த ஒரு கண்ணியம் நபிக்கு கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்கு அப்படிதான் கூறுகிறார்கள் என்று பார்க்கின்றோம்.

பாவங்களை மன்னிப்பதற்கு நபியிடத்தில் இரட்சிப்பை தேடுகிறார்கள்.

மௌலூத் ஓதுகின்ற சபைகளில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆஜராகிறார்கள் என்று நினைத்து, கடைசியில் எழுந்து நின்று சலாம் சொல்கிறார்கள். எப்படிப்பட்ட ஷிர்க்கான எண்ணங்கள் பாருங்கள்!

இறந்துவிட்ட ஒருவருடைய உயிர் ஒரு சபைக்கு வருகின்றது என்று எண்ணினால் நான்கு மார்க்க இமாம்களின் தீர்ப்பு, அந்த மனிதர் காஃபிராகி விட்டான் என்பது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயர்வைப் பற்றி பேசும் பொழுது, அவர்களுடைய புகழ் பற்றி பேசும் பொழுது, அந்த நல்ல விஷயங்களுக்காக அல்லாஹ் நமக்கு நன்மை தருகிறான்.

ஆனால், அதற்கு மாற்றமாக அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் படியான புகழை அல்லாஹ்வுடைய தன்மைகளை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு சேர்க்கும் படியாக புகழும் போது அல்லாஹ் கோபப்படுகிறான்.

ஒரு மனிதர் நபியிடம் வந்து, மாஷா அல்லாஹ் வ ஷிஃத்த -அல்லாஹ்வும் நீங்களும் நாடிவிட்டால் என் காரியம் நடந்துவிடும் என்றதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சினம் கொண்டு எழுந்தார்கள்.

«جَعَلْتَنِي لِلَّهِ عَدْلًا، مَا شَاءَ اللَّهُ وَحْدَهُ»

என்னை அல்லாஹ்விற்கு நிகராக சமமாகி விட்டாயா?அல்லாஹ் நாடினால் மட்டுமே நடக்கும் என்று சொல்! என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 3247.

மௌலூத் புத்தகத்தில் இன்று பார்க்கின்றோம்; ஆரம்பம் முதல் கடைசி வரை, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நூஹ் நபியின் முதுகில் இருந்ததால் நூஹ் நபிக்கு வெற்றி கிடைத்தது என்று எழுதி இருக்கிறார்கள்.

இப்ராஹீம் நபி அவர்களின் முதுகில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்ததால் இப்ராஹிம் நபி அவர்களுக்கு வெற்றி கிடைத்தது என்று எழுதி இருக்கிறார்கள். அதனால் தான் நெருப்பு குளிர்ச்சியானது என்கிறார்கள்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் ஒளியிலிருந்து பிறந்தவர்கள், அவர்கள் மனிதர் அல்ல, அல்லாஹ்விலிருந்து வந்தவர்கள் என்று எழுதுகிறார்கள்.

இதை ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள முடியுமா? குர்ஆனை நம்புகின்ற ஒரு மனிதர் ஏற்றுக்கொள்ள முடியுமா?

இந்த உண்மைகள் சத்தியங்கள் அவர்கள் முன்னால் சொல்லப்பட்டால் அவற்றை மறுப்பதை பார்க்க முடியும்.

பெருமை எது தெரியுமா?சத்தியத்தை மறுப்பது.

சத்தியம் உண்மை என்று தெரிந்து விட்டால் உடனே முஸ்லிம்கள் அதற்கு கட்டுப்பட வேண்டும். அல்லாஹ் கூறி விட்டால் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கூற்றிலிருந்து நமக்கு ஆதாரபூர்வமாக இருந்தால் அதை நாம் பின்பற்ற வேண்டும்.

இதல்லாமல், காலம் காலமாக என்னுடைய மூதாதைகள் செய்து வந்தாலும் அதை நான் விட்டு விலகி விடுவேன்.

நான் பின்பற்றுவதற்கும் நேசிப்பதற்கும் வழி நடப்பதற்கும் சிறந்த முன்னோர்கள், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்கு கலீபாக்கள், அவர்களுடைய தோழர்கள், அவர்களை பின்பற்றிய தாபியீன்கள், அவருடைய மாணவர்கள் அந்த சிறப்புக்குரிய இமாம்கள் தான் நம்முடைய உண்மையான முன்னோர்கள்.

யாருடைய வழியிலே சென்று நாம் அல்லாஹ்வின் பொருத்தத்தை தேட வேண்டும் என்று சொன்னால் அந்த சிறப்புக்குரிய முன்னோர்கள் வழியில் தான் நாம் செல்ல வேண்டும் .

அல்லாஹ் சத்தியத்தை ஏற்றுக் கொள்கிற சிறந்த பண்பை நமக்கு தருவானாக! ஆமீன்.

பெரும் பாவங்கள் (பாகம் -2)

ஜுமுஆ குத்பா தலைப்பு : பெரும் பாவங்கள்(இணைவைத்தல், பெருமை, முகஸ்துதி)

வரிசை : 121

இடம் : எஸ்.எம்.ஜெ.பிளாசா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

கடந்த வாரத்தில் பெரும்பாவங்களில் ஒன்றான பெருமையைப் பற்றி பார்த்தோம். பெருமை என்பது, பிறரை கேவலமாகவும் மரியாதை குறைவாகவும் நினைத்து தன்னை உயர்வாக பெரியவனாக கருதுவது,சத்தியத்தை மறுப்பது,அதை ஏற்காமல் இருப்பது. இந்த பெருமை என்பது மிகப்பெரிய நோயாகும்.

மிகக் குறைவானவர்கள் தான் இதனை விட்டு விடுபடமுடியும்.ஏதாவது ஒரு விஷயத்தில் மனிதன் பெருமை கொள்பவனாக மாறிவிடுகிறான்.

செல்வத்தினால் கல்வியினால், தன்னுடைய அழகினால், தன்னுடைய ஆட்சியினால் என்று ஏதாவது ஒரு காரணத்தால் பெருமை கொள்ளலாம்.

இப்படி ஷைத்தான் பெருமையை உள்ளத்தில் போட முயற்சி செய்வான். இதற்கு என்ன காரணம்?

அல்லாஹு தஆலா நாளை மறுமையில் பெரும் பாவங்களை எல்லாம் அவனுடைய அருளால் மன்னித்து விடுவான்.

ஆனால், இந்த பெருமை உடையவர்கள் தவிர, அவர்களின் உள்ளத்தில் உள்ள பெருமையை நரக நெருப்பில் போட்டு சிக்கிய பிறகுதான், அவர்களுக்கு மன்னிப்புக் கொடுத்து அல்லாஹு தஆலா அவர்களை சுவர்க்கத்திற்கு அனுப்புவான்.

அத்தகைய கொடிய பாவம் தான் பெருமை என்னும் பாவம்.

ஷைத்தானை வழிகெடுத்ததற்கான காரணம் இந்தப் பெருமைதான்.

அல்லாஹ் அதுகுறித்து குர்ஆனில் கூறுகிறான் :

إِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِنْ طِينٍ (71) فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ (72) فَسَجَدَ الْمَلَائِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ (73) إِلَّا إِبْلِيسَ اسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ (74) قَالَ يَاإِبْلِيسُ مَا مَنَعَكَ أَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ أَسْتَكْبَرْتَ أَمْ كُنْتَ مِنَ الْعَالِينَ (75) قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ

உமது இறைவன் வானவர்களை நோக்கி, ‘‘நான் மனிதனைக் களிமண்ணால் படைக்கப் போகிறேன்'' என்று கூறிய சமயத்தில், நான் அவரைச் செப்பனிட்டு, அவருக்குள் (நான் படைத்த) என் உயிரிலிருந்து ஊதினால் அவருக்குமுன் நீங்கள் சிரம் பணிந்தவர்களாக விழுந்துவிடுங்கள் என்றும் கூறினான்.'' (அச்சமயம்) வானவர்கள் எல்லோரும் அனைவருமே சிரம் பணிந்தார்கள். இப்லீஸைத் தவிர, அவன் கர்வம்கொண்டு (நம் கட்டளையை) நிராகரிப்பவனாகி விட்டான். அதற்கு இறைவன், ‘‘இப்லீஸே! நானே என் இரு கரங்களால் படைத்தவருக்கு முன் நீ சிரம் பணிய உன்னைத் தடுத்தது எது? நீ உன்னை மிகப் பெரியவனாக மதித்துக் கொண்டாயா? அல்லது நீ, (என் கட்டளைக்குக் கீழ்ப்படியக் கூடாத) உயர்ந்த பதவியுடையவனாகி விட்டாயா?'' என்றான். அதற்கவன், ‘‘அவரைவிட நானே மேலானவன். என்னை நீயே நெருப்பால் படைத்தாய்; அவரை களிமண்ணால் படைத்தாய்'' என்றான். (அல்குர்ஆன் 38 : 71-76)

இதனால் அல்லாஹு தஆலா அவனை மறுமை நாள் வரை என் சாபம் உன்மீது நிலைக்கட்டும் என்று சபித்தான். அவனுடைய கருணையிலிருந்து இப்லீஸை இறக்கிவிட்டான்.

கண்ணியத்திற்குரியவர்களே! இந்த பெருமையை பற்றி நாம் மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

இதை நம் உள்ளத்திலிருந்து நீக்குவதற்கு இமாம் கஜ்ஜாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு அழகிய வழியை சொல்கிறார்கள்.

முதலாவதாக,மனிதன் தன்னைப் பற்றி அறிய வேண்டும். நாம் யார்?நாம் எங்கிருந்து வந்தோம்?நாம் இதற்கு முன்னால் எப்படி இருந்தோம்?எப்படி படைக்கப்பட்டோம்?அடுத்து நம்முடைய மீட்சி எப்படி இருக்கும்?தன்னுடைய இறைவன் யார்?அவனுடைய வல்லமை என்ன?

என்று தன்னையும் தன் இறைவனையும் ஒருவன் அறிந்து கொண்டால், தன்னுடைய அற்பத் தன்மையையும் பலவீனத்தையும் இயலாமையையும் மற்றும் தன்னை படைத்த இறைவன் உடைய உயர்ந்த நிலை அந்த பரிசுத்த தன்மை கண்ணியம் அவனுடைய மகத்துவத்தை ஒரு அடியான் விளங்கிக் கொண்டால் இந்த அடியான் பெருமையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அல்லாஹு தஆலா மனிதர்களை பார்த்து கேட்கிறான் :

قُتِلَ الْإِنْسَانُ مَا أَكْفَرَهُ (17) مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ (18) مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ (19) ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ (20) ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ (21) ثُمَّ إِذَا شَاءَ أَنْشَرَهُ

(பாவம் செய்யும்) மனிதனுக்குக் கேடுதான். அவன் எவ்வளவு நன்றிகெட்டவனாக இருக்கிறான். எதைக்கொண்டு (இறைவன்) அவனைப் படைத்திருக்கிறான் (என்பதை அவன் கவனித்தானா)? ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டுதான் அவன் அவனைப் படைக்கிறான். (அவன் இருக்கின்ற இவ்வாறே, அவனை மனிதனாக அமைத்து) அவனுக்குச் சக்தியைக் கொடுத்தான். பின்னர், அவன் செய்யக்கூடிய (நன்மை தீமைக்குரிய) வழியை அவனுக்கு எளிதாக்கி வைத்தான். பின்னர், அவனை மரணிக்கச் செய்து சமாதியில் புகுத்துகிறான். பின்னர் (அவன் விரும்பியபொழுது உயிர் கொடுத்து) அவனே அவனை உயிர்ப்பிப்பான். (அல்குர்ஆன் 80 : 17-22)

வசனத்தின் கருத்து : அல்லாஹ் இந்த மனிதனை எப்படி படைக்கிறான்?இதனின் ஆரம்பம் என்ன?நம்முடைய முதல் தந்தை ஆதம் நபி அவர்கள் எதிலிருந்து படைக்கப்பட்டார்கள்?

அவர்கள் சாதாரண மண்ணிலிருந்து படைக்கப்பட்டார்கள். அதற்குப் பிறகு மற்றவர்கள் ஒரு அற்ப தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டார்கள்.

அந்த நீர்த்துளி பொதுவாக மனிதர்களால் அருவருப்பு என்று கருதப்பட்ட ஒரு நீர்த்துளி. அது தன்னுடைய ஆடையில் பட்டு விட்டால் தொடமாட்டார்கள். அதை கழுவி அந்த இடத்தை சுத்தம் செய்வார்கள்.

இப்பேற்ப்பட்ட அற்பமான நீர் துளியிலிருந்து மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.

பிறகு இவனுக்கு பலவிதமான சூழ்நிலைகளை அல்லாஹு தஆலா ஏற்படுத்துகிறான். தாயின் வயிற்றில் தங்கி அவளுடைய ரத்தத்தில் அவனுக்கு உணவு அளிக்கப்படுகிறது.

பிறகு தாயின் வயிற்றிலிருந்து வெளியேற்றப் படுகிறான். அதன்பின் இவனுக்கு உணவுகள் சென்றவுடன் அது ரத்தமாக அசுத்தமாக மாறிவிடுகிறது.

இவனுடைய உடலில் இருந்து வெளியேறக் கூடியவை வியர்வையாக இருந்தாலும் அல்லது மற்ற உபரியாக இருந்தாலும் அல்லது மலம் ஜலம் ஆகட்டும் அது அசுத்தமானதாக பிறரால் அருவருப்பாக கருதப்படுகிறது.

மற்றொரு நேரம் வருகிறது. அப்பொழுது எப்படி இவன் உடலுக்குள் உயிர் சேர்க்கப்பட்டதோ அதைபோல் இந்த உடலிலிருந்து உயிர் எடுக்கப்படுகிறது.

இப்போது இவன் ஜனாசாவாக ஆகிவிடுகிறான். ஜனாசாவை யாரும் தங்கள் வீட்டுக்குள் வைத்துக் கொள்ளமாட்டார்கள். அதைப் புதைத்துவிடுவார்கள்.

பிறகு அவன் புழுக்களுக்கும் பூச்சிகளுக்கும் உணவாக மாறி விடுகிறான். பிறகு அந்த உடல் மிருகங்களுக்கு உணவாக மாறிவிடுகிறது.

இது மனிதர்களுடைய உண்மை நிலை. இப்பேர்ப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன் எதை கண்டு பெருமை அடித்துக் கொள்கிறான்? என்ன காரணத்தை சொல்ல முடியும்?

தன்னுடைய படைப்பு எவ்வளவு பலவீனமான படைப்பு! தான் வந்தது, இருப்பது, மறைவது என்று எந்த நிலையை எடுத்துக் கொண்டாலும் தற்பெருமை கொள்வதற்கு எந்தவிதமான காரணமும் இங்கே அவனுக்கு இல்லை.

அல்லாஹ்வை பார்க்க வேண்டும். அவன் எப்பேற்ப்பட்டவன்! அவனுடைய கண்ணியம், வல்லமை, பரிசுத்தமான ஆற்றல், அவன் என்றும் உயிரானவன், அவனுக்கு மரணமில்லை, பலவீனம் இல்லை, அசுத்தம் இல்லை, அவன் மிகத் தூய்மையானவன் என்று நாம் அல்லாஹ்வின் வல்லமைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

இப்படி அடியான் தன்னுடைய பலவீனமான நிலையை அறிந்திருக்கும்பொழுது அவன் பெருமை அடிக்க மாட்டான்.

மேலும், இந்த பெருமையை குறித்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்  கூறியிருக்கும் எச்சரிக்கைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எப்பொழுது ஒரு அடியான் அந்த எச்சரிக்கையை அறிந்து கொள்கிறானோ அப்பொழுது அவன் அந்த பாவங்களில் இருந்து விலகுவதற்கு முயற்சி செய்வான்.

ஒரு பாவத்தின் விபரீதமென்ன? அதனால் ஏற்படக்கூடிய பயங்கரமான பின் விளைவுகள் என்ன?

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த பெருமை பற்றி கூறுகிறார்கள் :

«أَلاَ أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ؟ كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُسْتَكْبِرٍ»

நரகத்திற்கு சொந்தக்காரர்கள் யார் என்று நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?

அவர்கள் கடுகடுப்பார்கள்,கடுமையான குணம் உள்ளவர்கள்,முரட்டுத்தனமாக பேசுபவர்கள்,பெருமை அடிப்பவர்கள்.

அதிலும் குறிப்பாக, உடல் தடிப்பானவர்கள். அடுத்து, பொதுவாக பெருமை அடிப்பவர்கள்.

அறிவிப்பாளர் : ஹாரிசா இப்னு வஹப் அல்குசாயி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6071.

சில செல்வந்தர்கள், பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு சாப்பிட்டு கொழுத்து உடல் உள்ளவர்கள்.

ஒன்று, தன்னுடைய உடல் சுபாவத்தால் பிறப்பிலேயே உடல் பருமன் ஆனவர்களை குர்ஆனும் சுன்னாவும் பழிக்கவில்லை. அது அல்லாஹ்வின் ஏற்பாடு.

இன்னும் சிலர், அளவு அதிகமாக வயிறு புடைக்க சாப்பிடுவார்கள். இதன் காரணமாக உடல் பருமனானவர்கள். இப்படிப்பட்டவர்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வெறுக்கிறார்கள்.

எப்போதும் ருசியான வசதியான சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு உடல் பெருத்து அவர்கள் உள்ளத்தில் பெருமை தலைக்கு ஏறி இருக்கும்.

இவர்களை தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; உடல் பெருத்து பெருமை அடிப்பவன் என்று.

அடுத்ததாக, பொதுவாக பெருமை அடிக்கும் எல்லோரும்.

இமாம் அஹ்மத் பதிவு செய்கிறார்கள்.அபூஸயீத் அல்குத்ரி ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்;

«مَنْ تَوَاضَعَ لِلَّهِ دَرَجَةً رَفَعَهُ اللَّهُ دَرَجَةً، حَتَّى يَجْعَلَهُ فِي عِلِّيِّينَ، وَمَنْ تَكَبَّرَ عَلَى اللَّهِ دَرَجَةً، وَضَعَهُ اللَّهُ دَرَجَةً، حَتَّى يَجْعَلَهُ فِي أَسْفَلِ السَّافِلِينَ»

யார் அல்லாஹ்விற்காக வேண்டி பணிகிறானோ அவன் எந்த அளவுக்கு பணிகிறானோ அந்த அளவுக்கு அவனை அல்லாஹ் உயர்த்திக் கொண்டே இருப்பான், இறுதியாக உயர்ந்த மலக்குகளின் ஸ்தானத்தில் அல்லாஹு தஆலா அவனை வைத்து விடுவான்.

யார் ஒருவர் அல்லாஹ்விற்கு முன்னால் பெருமையுடன் நடக்கிறார்களோ அவர் எந்த அளவுக்கு பெருமை அடைகிறாரோ அந்த அளவுக்கு அல்லாஹ் அவனை தாழ்த்திக் கொண்டு செல்வான், இறுதியாக கேவலமானவனாக மட்டமானவனாக அல்லாஹ் அவரை ஆக்கி விடுகிறான்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரிரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 11724.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்:

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்து இமாம் தப்ரானி பதிவு செனய்கிறார்கள்

மேலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் :

«إِيَّاكُمْ وَالْكِبْرَ، فَإِنَّ الْكِبَرَ يَكُونُ فِي الرَّجُلِ وَإِنَّ عَلَيْهِ الْعَبَاءَةَ»

பெருமையை விட்டு நான் உங்களை எச்சரிக்கை செய்கிறேன். பெருமை கொள்ளாதீர்கள்.அது உங்களுக்கு தகுதியானது அல்ல.

ஒருவருடைய ஆடை கிழிந்த கந்தலான ஆடையை உடுத்தி இருப்பார்கள். அந்த நிலையிலும் அவன் பெருமை கொள்கிறானே என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அல்முஃஜமுல் அவ்சத், எண் : 543.

ஒன்று பணத்தோடு பெருமை இருப்பது,பதவியோடு பெருமை இருப்பது.இதுவும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் பழிக்கப்பட்ட கண்டிக்கப்பட்ட ஒரு குற்றமாகும்.

இரண்டாவது ஏழை பெருமை அடிப்பது. இதுவும் கண்டித்த ஒரு பாவம் ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் :

" ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ - قَالَ أَبُو مُعَاوِيَةَ: وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ - وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ: شَيْخٌ زَانٍ، وَمَلِكٌ كَذَّابٌ، وَعَائِلٌ مُسْتَكْبِرٌ "

நாளை மறுமையிலும் மூவரை அல்லாஹ் பார்க்க மாட்டான். அவர்களிடத்தில் பேச மாட்டான்.அவர்களுடைய பாவங்களை விட்டு அவர்களை சுத்தப் படுத்த மாட்டான்.

அதில் ஒருவர், பொய் பேசக் கூடிய அரசன். இரண்டாமவர், விபச்சாரம் செய்கின்ற வயோதிகர்.

(விபச்சாரமே ஒரு வெறுக்கத்தக்க செயலாகும். அசிங்கமான பெரும்பாவமாகும். அதுவும் குறிப்பாக ஒரு வயோதிகன் வயது முதிர்ந்தவர் எப்போது தன்னுடைய ஆசை எல்லாம் தீர்ந்து விட்டதோ, அல்லது தன் உடல் வலிமை எல்லாம் குறைந்து விட்டதோ, அந்த நிலையில் கூட தன் இச்சையை அடக்க முடியாமல் அதனை ஹராமான முறையில் தீர்த்துக் கொள்கிறான்.)

மூன்றாமவர், வறுமையில் இருக்கிறவன். ஆனால் பெருமை கொள்கிறான். கஷ்டத்தில் வறுமையில் சிரமத்தில் இருக்கின்றான்.பெருமை கொள்கிறான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 107.

அடுத்து கண்ணியத்திற்குரியவர்களே! இந்தப் பெரும் பாவத்தில் ஒன்று, العجب-அல் உஜுப்.

அதாவது, பயம் அற்று இருத்தல். அல்லாஹ்வை பயப்படாமல் மமதையோடு, என்ன நடந்துவிடும் பார்க்கலாம், நம்மை மிஞ்சி ஏதாவது நடந்து விடுமா? என்று தன்னை பற்றிய ஒரு அகம்பாவம் மமதையில் மயக்கத்தில் இருப்பது.

ஏறக்குறைய முந்தி சொன்ன அந்தப் பெருமை என்ற பாவத்திற்கு நெருக்கமானது. இருந்தாலும் அதிலிருந்து பல விஷயங்களில் இது வித்தியாசப்படுகிறது.

இதை அரபியில் அல்உஜுப் என்று சொல்வார்கள்.

நல்லவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான் :

وَالَّذِينَ هُمْ مِنْ عَذَابِ رَبِّهِمْ مُشْفِقُونَ

(இவ்வாறிருந்தும்) அவர்கள் தங்கள் இறைவனின் வேதனைக்குப் பயந்து கொண்டே இருப்பார்கள். (அல்குர்ஆன் 70 : 27)

வசனத்தின் கருத்து : நல்லவர்கள், தங்கள் குடும்பத்தில் இருக்கும் பொழுது அல்லாஹ்வை பயந்து கொண்டிருப்பார்கள். அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கும் இந்த அருளை பிடுங்கி விடுவானோ? இந்த கிரமத்திற்கு நான் நன்றி செலுத்த வில்லை என்றால் இந்த அருள் என்னிடம் இருந்து எடுக்கப்படும்.

அல்லாஹ் கொடுத்த இந்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்த வேண்டுமே! நன்றி செலுத்துவதில் ஏற்பட்ட குறையினால் அல்லாஹ் என்னை தண்டித்து விடுவானோ?

யா அல்லாஹ்! என்னிடத்தில் ஏற்படும் குறைகளை எல்லாம் நீ மன்னித்து விடு!

என் குறைகளால் இந்த நிஃமத்களை என்னிடமிருந்து பிடுங்கி என்னை நீ தண்டித்து விடாதே! நாளை மறுமையில் இந்த நிஃமத்களை இழந்து விடும்படி என்னை செய்து விடாதே! என்று அல்லாஹ் பற்றி பொதுவான பயம் அவர்கள் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும்.

இந்த பயம் ஈமானுடைய அடையாளம். இந்த பயம் ஈமானுடைய தன்மை. இதற்கு நேர் மாற்றமாக இருப்பதுதான் அல்உஜுப் என்பது.

அல்லாஹ் பற்றி பயமற்று இருப்பது. தன்னைப் பற்றி எப்பொழுதும் உயர்வாக கருதுவது. தன்னை எல்லோரும் புகழ வேண்டும் என்று ஆசை வைப்பது.

ஒருவர் நம்மைப் பற்றி நல்ல அழகிய முறையில் பேசும் போது மனதில் ஏற்படுகின்ற இந்த தன்மையை அல்உஜுப் என்று சொல்வார்கள்.

ஒரு விதமான புகழ் மயக்கம் என்று சொல்லலாம். தன்னை யாராவது புகழ்வதை பார்த்து ரசிப்பது, எதிர்பார்ப்பது. தன்னுடைய அறிவை பற்றியோ தன்னுடைய ஆட்சியை பற்றியோ தன்னுடைய பேச்சை தன்னுடைய வணக்க வழிபாட்டை பற்றியோ சரி, ஏதாவது ஒரு வகையில் மக்கள் தன்னை பற்றி புகழ்வதை விரும்புவது. அல்லாஹ் பாதுகாப்பானாக!

அபூபக்ரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு சம்பவத்தை சொல்கின்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபையில் ஒருவரைப் பற்றி பேசப்பட்டது. அப்போது சபையிலிருந்த ஒருவர் "அவரா?"அவர் ரொம்ப நல்லவர், மிக உயர்ந்தவர், ரொம்ப பெரிய ஒரு வணக்கசாலி என்றெல்லாம் அவரைப்பற்றி புகழ்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனிடம் சொன்னார்கள்;

«وَيْلَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ، قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ» مِرَارًا، ثُمَّ قَالَ: «مَنْ كَانَ مِنْكُمْ مَادِحًا أَخَاهُ لاَ مَحَالَةَ، فَلْيَقُلْ أَحْسِبُ فُلاَنًا، وَاللَّهُ حَسِيبُهُ، وَلاَ أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا أَحْسِبُهُ كَذَا وَكَذَا، إِنْ كَانَ يَعْلَمُ ذَلِكَ مِنْهُ»

உனக்கு நாசம் ஏற்படட்டும்.உனக்குக் கேடு உண்டாகட்டும். உனக்கு என்ன நேர்ந்தது? உன் சகோதரனின் கழுத்தை நீ துண்டித்து விட்டாய். அதாவது அவனை நீ அழித்து விட்டாய். அவனைப் பற்றி நீ இப்படி எல்லாம் என் சபையில் பேசியது அவனுக்கு தெரிய வந்தால் இதன் மூலமாக அவன் உள்ளத்தில் தன்னை பெரியவனாக அவன் கருதினால் அவனுக்கு ஏற்படக்கூடிய மறுமையின் அழிவு எவ்வளவு பயங்கரமானது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

பிறகு சொன்னார்கள்; நீங்கள் ஒருவரைப் பற்றி புகழத் தான் வேண்டும் என்றால் அவரைப் பற்றி உயர்வாக பேசித்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் நீங்கள் என்ன சொல்ல வேண்டும்?

"நான் இன்னவரை வரை இப்படி இப்படி கருதுகிறேன். அவரை இன்னின்னவாறு நல்ல முறையில் எண்ணுகிறேன்.அல்லாஹ் அவருக்கு போதுமானவன். அல்லாஹ்விற்கு முன்னால் யாரையும் நான் உயர்வாக பேசமாட்டேன்".

என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர,இதற்குமேல் யாரையும் புகழ்ந்து பேசுவதற்கு இந்த இஸ்லாம் மார்க்கத்தில் அனுமதி இல்லை.

அறிவிப்பாளர் : அபூபக்ராரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2662.

காரணம்,ஒரு மனிதன் தன்னுடைய ஆட்சியினாலோ அல்லது வேறு காரணங்களால் புகழப்படும் போது அவனது உள்ளத்தில் உஜுப் -தன்னை பெரிதாக கருதுவது, உயர்வாக கருதுவது என்று ஆகிவிடுகிறது.

எப்பொழுது மனிதன் புகழ் என்னும் நோய்க்கு ஆளாகி விடுகிறானோ தன்னை உயர்வாக கருதிக்கொண்டு புகழ்ச்சிக்கு ஆசைப்படுகிறானோ அப்போது அவன் மக்களுக்கு ஒரு விளையாட்டு பொருளாகி விடுகிறான்.

அவனிடத்தில் யாராவது ஒரு காரியத்தை சாதிக்க வேண்டுமென்றால் அவர்கள் கையில் எடுத்துக்கொள்ளும் ஆயுதம் என்ன?அவனை உயர்வாகப் பேசி புகழ்ந்து பேசி வேலையை சாதித்துக் கொள்வார்கள்.

இது முனாஃபிக்குகளின் பண்பு. பொதுவாக நயவஞ்சகர்கள் ஒருவரை பற்றி மிக உயர்வாகப் பேசி புகழ்வார்கள். ஒருவர் அளவுக்கு அதிகமாக புகழ்கிறார் என்றால் இவர் அந்த மனிதரிடத்தில் ஏதோ ஒன்று எதிர்பார்க்கிறார் ஏதோ ஒரு குறிக்கோள் இருக்கிறது என்று பொருள்.

ஆகவே அறிஞர்கள் கூறுகிறார்கள்:

من رضي أن يمدح بما ليس فيه فقد أمكن الساخر منه

தன்னிடத்தில் இல்லாததை கொண்டு பிறர் தன்னை புகழ்வதை யார் விரும்புகிறாரோ,இவர் பரிகசிப்பவர்களுக்கு இடம் கொடுத்து விட்டார்.

கடைசியில் இவரது நிலைமை இவரை வானளவு உயர்த்தி புகழ்வார்கள். ஆனால் இவரிடத்தில் அந்த உயர்ந்த தன்மைகள் எதுவும் இருக்காது.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்னால் நடந்த ஒரு சம்பவம்.

«أَخْشَى عَلَيْكَ أَنْ تَقُصَّ فَتَرْتَفِعَ عَلَيْهِمْ فِي نَفْسِكَ، ثُمَّ تَقُصَّ فَتَرْتَفِعَ، حَتَّى يُخَيَّلَ إِلَيْكَ أَنَّكَ فَوْقَهُمْ بِمَنْزِلَةِ الثُّرَيَّا، فَيَضَعَكَ اللَّهُ تَحْتَ أَقْدَامِهِمْ يَوْمَ الْقِيَامَةِ بِقَدْرِ ذَلِكَ»

ஹாரிஸ் இப்னு முஆவியா என்ற ஒரு நல்ல பேச்சாளர். அவரும் அரசவையில் வந்து அவர்களிடத்தில் வந்து தன்னுடைய நிலைமையை பற்றி பேசுகிறார்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களே! நான் பேச வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நான் அறிவுரை வரலாறு எல்லாம் சொல்ல வேண்டும் என்று மக்கள் என்னிடம் எதிர்பார்க்கிறார்கள்.என்னை விரும்புகிறார்கள்.

இந்த நேரத்தில் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய அந்த வார்த்தை இஸ்லாமிய பேச்சாளர்களுக்கு எல்லாம் மிக பயங்கரமான ஒரு எச்சரிக்கை!

நீ அதுபோன்று பேச்சாளராக மாறுவதை நான் பயப்படுகிறேன். மக்கள் உன்னை விரும்புகிறார்கள் என்பதற்காக நீ அவர்களுக்கு முன்னால் பேசுவதை நான் பயப்படுகிறேன். ஏன் தெரியுமா?

நீ மக்களுக்கு முன்னால் பேசுவாய், மக்கள் உன்னை கண்ணியப்படுத்துவார்கள். பிறகும் பேசுவாய் பிறகு மக்கள் உன்னை கண்ணியப்படுத்துவார்கள்.

இப்படியே கூடிக்கொண்டே செல்லும் பொழுது, கடைசியாக நீ இவர்களை விட நான் உயர்ந்தவன் என்று கருதி விடுவாய். தன்னை "சுரையா" என்ற நட்சத்திரத்தைப் போன்று உயர்ந்தவனாக கருதி விடுவாய்.

இந்த நிலை உனக்கு ஏற்பட்டால் நாளை மறுமையில் இந்த மக்கள் எல்லாம் எழுப்பப்படுவார்களே, இந்த துன்யாவில் மக்கள் உன்னை உயர்வாக மதித்தார்கள் நீ உன்னை உயர்வாக கருதி கொண்டிருந்தாய்!

நாளை மறுமையில் இந்த மக்களின் பாதங்களின் அடியில் அல்லாஹ் உன்னை ஆக்கிவிடுவான்.(3)

அறிவிப்பாளர் : ஹாரிஸ் இப்னு முஆவியாரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 111.

கண்ணியத்திற்குரியவர்களே! எந்த இடத்தில் பேச வேண்டுமோ அவசியம் இருக்கிறதோ சத்தியத்தை கூற வேண்டுமோ அந்த இடத்தில் சத்தியத்தைக் கூற வேண்டும்.

அதற்கு மாறாக,மக்கள் விரும்புகின்றார்கள்,மக்களிடத்தில் புகழை தேட வேண்டும் என்பதற்காக மட்டுமே ஒருவர் பேசினால் அவருடைய முடிவு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியது போன்றதுதான்.

கண்ணியத்திற்குரியவர்களே! இந்த பெரும்பாவங்களில் ஒன்று,الريا والسمعة-அதாவது பிறர் தன் வணக்கத்தைப் பற்றி தன் செயல்பாடுகள் பற்றி புகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது.

அல்லாஹ் கூறுகிறான் :

فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا

யார் ஒருவர் அல்லாஹ்வை சந்திக்க வேண்டுமென்று பயப்படுகிறாரோ அவர் நல்ல அமலை செய்யட்டும்.தன் வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு சமமாக யாரையும் ஆக்கிவிட வேண்டாம். (அல்குர்ஆன் 18 : 110)

இந்த வசனத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கடைசியாக சொல்லும் அந்த தடை என்ன?

அல்லாஹ்வை வணங்கும் பொழுது அடியான் அந்த வணக்கத்தில் யாரையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

இதை குறிப்பாக எச்சரிக்கை செய்கின்றான். ஒரு அடியான் வணங்கும் பொழுது யாராவது பார்த்தால், ஆஹா! இவர் நான் வணங்குவதை பார்க்கிறார் என்று மேலும் அந்த வணக்கத்தை சிறப்பாக செய்ய நினைப்பது.

தன்னை உள்ளச்சம் உள்ளவனாக காட்டிக் கொள்ள முயற்சி செய்வது. தன்னை குர்ஆன் ஓதுபவனாக அல்லது நோன்பாளியாக அல்லது ஒரு வணக்கசாலியாக ஆக்கிக் கொள்ள முயற்சிப்பது.

அவர் ஆரம்பிக்கும் பொழுது நல்ல எண்ணத்தில்தான் ஆரம்பித்தார்.ஆனால்,பிறர் பார்க்கும் பொழுது எத்தேச்சயாக மஸ்ஜிதில் தனியாக தொழுது கொண்டிருக்கின்றார், அப்பொழுது ஒருவர் உள்ளே வந்துவிட்டார்.

இந்த அடியான் என்ன செய்ய வேண்டும்?யா அல்லாஹ்! உனக்காக நான் தொழுகிறேன். மற்ற ஊசலாட்டத்தில் இருந்து என்னைப் பாதுகாத்து விடு என்று அவர் தன் எண்ணத்தை திருப்பிக்கொள்ள வேண்டும்.

எப்படி ஆரம்பிக்கும் பொழுது அல்லாஹ்விற்கு என்று ஆரம்பித்தாரோ அதே போல் கடைசி வரை தொடர வேண்டும்.

இதற்கு மாற்றமாக, யாரோ இரண்டு பேர் வந்திருக்கிறார்கள். நம்மை பார்க்கிறார்கள். நாம இன்னும் கொஞ்சம் உள்ளச்சத்தோடு தொழலாம், இன்னும் கொஞ்சம் அழுகிற மாதிரி காட்டலாம், நாம் அல்லாஹ்வை பயந்து கொண்ட மாதிரி காட்டலாம், என்று மனதில் ஊசலாட்டம் தோன்றியதை தக்கவைத்து அதற்கு ஏற்ப தன் செயல்களை அமைத்துக் கொண்டால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

இதுதான் முகஸ்துதி. இது தான் புகழை விரும்புதல்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

«مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ»

யார் புகழுக்காக செய்கிறானோ அல்லாஹ் அவன் அந்த புகழை கேட்கும்படி உலகத்திலேயே செய்வான்.நாளை மறுமையில் அவனை அல்லாஹ் கேவலப்படுத்தி விடுவான்.

யார் மக்கள் தன்னை பார்க்க வேண்டும் என்று செய்கின்றானோ அது போன்று அல்லாஹ் இந்த உலகத்திலேயே காண்பித்து விடுவான்.நாளை மறுமையில் அல்லாஹ் கேவலப்படுத்தி விடுவான்.

அறிவிப்பாளர் : ஜுன்துப் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6499.

அடியான் ஒரு காரியத்தை செய்தால் அல்லாஹ்விற்கு மட்டும் செய்ய வேண்டும். மறுமைக்காக மட்டுமே செய்ய வேண்டும். தர்மமாக இருந்தாலும் அல்லது தொழுகை நோன்பு ஹஜ்ஜு எந்த வணக்கமாக இருந்தாலும் சரி, ஒரு முஸ்லிம் செய்கின்ற செயல் அனைத்து காரியங்களிலும் அல்லாஹ்விற்கு மட்டும் செய்ய வேண்டும்.

அல்லாஹ்விற்காக செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில், ஒரு மனிதர் பிறரை கூட்டிக் கொண்டால், முகஸ்துதி விரும்பினால், பேரையும் புகழையும் விரும்பினால், நாளை மறுமையில் அவன் எந்த விதமான அமல்களின் பயனையும் அடைய மாட்டான்.

பல பேரை நீங்கள் பார்க்கலாம்; தங்களுடைய பெயர் புகழ் எங்கே வருமோ அங்கே மட்டும் தர்மம் செய்வார்கள். பள்ளிவாசல் கட்டிக் கொடுப்பார்கள். ஆனால் நிபந்தனை விடுவார்கள்; தன்னுடைய பெயர் அங்கே பதிக்கப்பட வேண்டும் என்று.

அதைப்போல் நன்கொடை கொடுப்பார்கள் ஆனால் அந்த பொருளில் தன்னுடைய பெயர் எழுதி இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

அல்லாஹ் இவர்களைப் பற்றி சொல்கின்றான் :

مَنْ كَانَ يُرِيدُ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لَا يُبْخَسُونَ (15) أُولَئِكَ الَّذِينَ لَيْسَ لَهُمْ فِي الْآخِرَةِ إِلَّا النَّارُ وَحَبِطَ مَا صَنَعُوا فِيهَا وَبَاطِلٌ مَا كَانُوا يَعْمَلُونَ

எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். எனினும், மறுமையிலோ இவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறொன்று மில்லை; அவர்கள் செய்தவை அனைத்தும் இங்கு அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே. (அல்குர்ஆன் 11 : 16)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வை எவ்வளவு பயந்தவர்கள்! எந்த அளவு அல்லாஹ்வை பரிசுத்த படுத்துவதற்கு கவனமாக இருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ் செய்யும் பொழுது அவர்கள் சொன்ன வார்த்தை.

«اللَّهُمَّ حَجَّةٌ لَا رِيَاءَ فِيهَا، وَلَا سُمْعَةَ»

யா அல்லாஹ்! இந்த ஹஜ்ஜை நான் செய்கிறேன். யாருடைய புகழை நாடியோ அல்லது யாரும் என்னை பார்க்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல. உனக்காகவே நான் இந்த அதை செய்கிறேன்.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 2890.

காரணம் என்ன?அதிகமான முகஸ்துதி ஏற்படுகின்ற வணக்க வழிபாடுகளில் ஒன்று ஹஜ்ஜு.

ஹஜ்ஜுக்கு சென்று வந்தால்,மக்கள் தன்னை புனிதமாகக் கருதுவார்கள், ஹாஜி  என்று அழைப்பார்கள். தன்னிடத்தில் வருவார்கள், தன்னை பெரிதாக பேசுவார்கள், என்றெல்லாம் எண்ணங்கள் ஓடி வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆகவே தான்,அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பாக ஹஜ்ஜு வணக்கத்தைப் ஆரம்பிக்கும் பொழுது,யா அல்லாஹ்! புகழை நாடி செய்யவில்லை. மக்கள் பார்ப்பதற்காக வேண்டி நான் செய்யவில்லை. உனக்காக தூய்மையாக செய்கிறேன் என்று அந்த வணக்கத்தை சொல்லி ஆரம்பித்தார்கள்.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக மிக எச்சரிக்கைக்குரிய மிகவும் பயந்து நடுங்கக் கூடிய ஹதீஸ்.

நாளை மறுமையில் முதலாவதாக மூன்று நபர்கள் அழைத்து அவர்களுக்கு தீர்ப்பு கொடுத்ததற்கு பிறகுதான், அல்லாஹ் மற்றவர்களை அழைத்து தீர்ப்பை கொடுப்பான்.

அந்த மூன்று நபர்களில் ஒருவர்,அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவர்கள். அவர்களுக்கு வாலிபத்தையும் வீரத்தையும் வலிமையையும் கொடுத்தான்.

அல்லாஹு தஆலா அவரை அழைத்து கேட்பான்; இவற்றையெல்லாம் நான் உனக்கு கொடுத்தேனே! நீ என்ன செய்தாய்? என்பதாக.

அந்த அடியான் சொல்வான்; யா அல்லாஹ்! இந்த வலிமையை கொண்டு வீரத்தைக் கொண்டு நான் போர் செய்து கொண்டே இருந்தேன். உன்னுடைய பாதையில் நான் கொல்லப்பட்டேன் என்று.

அல்லாஹ் சொல்வான்; நீ பொய் சொல்கிறாய். உன்னை வீரன் என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நீ உயிரை விட்டாய். அவ்வாறே வீரன் என்று உன்னை சொல்லப்பட்டுவிட்டது என்று முகம் குப்புற இழுக்கப்பட்டு அவன் நரக நெருப்பில் தள்ளப்படுவான்.

இரண்டாவது,குர்ஆனைக் கற்று தேர்ந்த மனிதன். தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுத்தான்.

அல்லாஹ் கூறுவான்; நான் உனக்கு குர்ஆனை கொடுத்தேனே, அதை கற்றுக் கொள்ள வாய்ப்பு கொடுத்தேன். என் மார்க்க ஞானத்தை கொடுத்தேனே. என்ன செய்தாய்? என்பதாக.

அந்த அடியான் சொல்வான்; யா அல்லாஹ்! உன்னுடைய மார்க்க கல்வியை நான் கற்றேன். அதை மக்களுக்கு கற்றுக் கொடுத்தேன். உனக்காக வேண்டியே நான் குர்ஆனை ஓதினேன் என்று.

அல்லாஹு தஆலா சொல்வான்; நீ பொய் கூறுகிறாய். மாறாக, உன்னை "ஆலிம்" என்று சொல்வதற்காகவும் "காரி" என்று சொல்வதற்காகவும் தான் நீ குர்ஆனை ஓதினாய். உன்னை மக்கள் போற்றுவதற்காக தான் நீ மார்க்க கல்வியை படித்தாய். அதை பிரச்சாரம் செய்தாய். அப்படியே சொல்லப்பட்டுவிட்டது.

இனி உனக்கு இங்கே நன்மை இல்லை என்று அல்லாஹ் சொல்லிவிடுவான். பிறகு முகம் குப்புற இழுக்கப்பட்டு நரக நெருப்பில் வீசி எறியப்படுவான்.

மூன்றாவதாக, மனிதனுக்கு அல்லாஹ் தஆலா வசதியை கொடுத்தான். செல்வத்தைக் கொடுத்து அவற்றைப் பற்றி அல்லாஹ் கேட்பான்.

நீ இந்த செல்வத்தில் எனக்காக என்ன செய்தாய்? அதற்கு அம்மனிதன் சொல்வான்; யா அல்லாஹ்! எந்த வழியெல்லாம் நீ என்னை செலவு செய்ய சொன்னாயோ அந்த வழி எல்லாம் நான் செலவு செய்து கொண்டே இருந்தேன் என்று சொல்வான்.

நீ பொய் சொல்கிறாய். உன்னை "கொடை வள்ளல்" என்று சொல்வதற்காக "தர்மகர்த்தா" என்று புகழ்வதற்காக தான் செலவு செய்தாய் என்று அல்லாஹ் தஆலா சொல்லி விடுவான்.

பிறகு அவனையும் முகம் குப்புற நரகத்தில் தூக்கி எறியப்படும். அல்லாஹ் பாதுகாப்பானாக!(4)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1905.

கண்ணித்திற்குரியவர்களே! இப்படி பெரும் பாவங்களை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் எண்ணினார்கள்.

அதிலும் குறிப்பாக கடைசியாகக் கூறிய இந்த பெரும் பாவம் இருக்கிறதே முகஸ்துதி என்பது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போன்று, அது ரொம்பவும் மறைவானது.

ஒரு கருப்பு எறும்பு உடலிலிருந்து வருவது எப்படி அறியமுடியாதோ அதைவிட மறைவானது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.

அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! நம்முடைய ஈமானை நம்முடைய அமல்களை அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " الحَلاَلُ بَيِّنٌ، وَالحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لاَ يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى المُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ: كَرَاعٍ يَرْعَى حَوْلَ الحِمَى، يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ، أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلاَ إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ، أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ " (صحيح -البخاري 52)

குறிப்பு 2)

أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلَاءِ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي صَلَاتِهِ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ، وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ، وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَحُسْنَ عِبَادَتِكَ، وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيمًا، وَلِسَانًا صَادِقًا، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ " (سنن النسائي- 1304) [حكم الألباني] ضعيف

குறிப்பு 3)

حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، حَدَّثَنَا صَفْوَانُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنِ الْحَارِثِ بْنِ مُعَاوِيَةَ الْكِنْدِيِّ، أَنَّهُ رَكِبَ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ يَسْأَلُهُ عَنْ ثَلاثِ خِلالٍ، قَالَ: فَقَدِمَ الْمَدِينَةَ فَسَأَلَهُ عُمَرُ مَا أَقْدَمَكَ؟ [ص:267] قَالَ: لِأَسْأَلَكَ عَنْ ثَلاثِ خِلالٍ، قَالَ: وَمَا هُنَّ؟ قَالَ: رُبَّمَا كُنْتُ أَنَا وَالْمَرْأَةُ فِي بِنَاءٍ ضَيِّقٍ، فَتَحْضُرُ الصَّلاةُ، فَإِنْ صَلَّيْتُ أَنَا وَهِيَ، كَانَتْ بِحِذَائِي، وَإِنْ صَلَّتْ خَلْفِي، خَرَجَتْ مِنَ الْبِنَاءِ، فَقَالَ عُمَرُ: «تَسْتُرُ بَيْنَكَ وَبَيْنَهَا بِثَوْبٍ، ثُمَّ تُصَلِّي بِحِذَائِكَ إِنْ شِئْتَ» ، وَعَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ، فَقَالَ: «نَهَانِي عَنْهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» ، قَالَ: وَعَنِ الْقَصَصِ، فَإِنَّهُمْ أَرَادُونِي عَلَى الْقَصَصِ، فَقَالَ: مَا شِئْتَ، كَأَنَّهُ كَرِهَ أَنْ يَمْنَعَهُ، قَالَ: إِنَّمَا أَرَدْتُ أَنْ أَنْتَهِيَ إِلَى قَوْلِكَ، قَالَ: «أَخْشَى عَلَيْكَ أَنْ تَقُصَّ فَتَرْتَفِعَ عَلَيْهِمْ فِي نَفْسِكَ، ثُمَّ تَقُصَّ فَتَرْتَفِعَ، حَتَّى يُخَيَّلَ إِلَيْكَ أَنَّكَ فَوْقَهُمْ بِمَنْزِلَةِ الثُّرَيَّا، فَيَضَعَكَ اللَّهُ تَحْتَ أَقْدَامِهِمْ يَوْمَ الْقِيَامَةِ بِقَدْرِ ذَلِكَ» (مسند أحمد 111)

குறிப்பு 4)

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنِي يُونُسُ بْنُ يُوسُفَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، قَالَ: تَفَرَّقَ النَّاسُ عَنْ أَبِي هُرَيْرَةَ، فَقَالَ لَهُ نَاتِلُ أَهْلِ الشَّامِ: أَيُّهَا الشَّيْخُ، حَدِّثْنَا حَدِيثًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: نَعَمْ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّ أَوَّلَ النَّاسِ يُقْضَى يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ رَجُلٌ اسْتُشْهِدَ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: قَاتَلْتُ فِيكَ حَتَّى اسْتُشْهِدْتُ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ قَاتَلْتَ لِأَنْ يُقَالَ: جَرِيءٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ، وَعَلَّمَهُ وَقَرَأَ الْقُرْآنَ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: تَعَلَّمْتُ الْعِلْمَ، وَعَلَّمْتُهُ وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ: عَالِمٌ، وَقَرَأْتَ الْقُرْآنَ لِيُقَالَ: هُوَ قَارِئٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ وَسَّعَ اللهُ عَلَيْهِ، وَأَعْطَاهُ مِنْ أَصْنَافِ الْمَالِ كُلِّهِ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ تُحِبُّ أَنْ يُنْفَقَ فِيهَا إِلَّا أَنْفَقْتُ فِيهَا لَكَ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ: هُوَ جَوَادٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ، ثُمَّ أُلْقِيَ فِي النَّارِ "، (صحيح مسلم- 1905)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/