HOME      Khutba      மரணப்பிடியில் மனிதன் | Tamil Bayan - 118   
 

மரணப்பிடியில் மனிதன் | Tamil Bayan - 118

           

மரணப்பிடியில் மனிதன் | Tamil Bayan - 118


بسم الله الرحمن الرحيم
 
மரணப்பிடியில் மனிதன்
 
கண்ணியத்திற்குரிய பெரியோர்களே! சகோதரர்களே! அல்லாஹ்வை பயந்துகொள்ளுமாறு, அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுமாறு உங்களுக்கும் எனக்கும் அறிவுரை கூறியவனாக ஆரம்பம்செய்கிறேன். அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா இவ்வுலகத்தில் வாழுகிற நமக்கு ஒருமுடிவை வைத்திருக்கிறான். அதுதான் மரணம்! யாரும் அந்த மரணத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. ஓடி ஒளிய முடியாது. 
 
ஏதாவது விலைகொடுத்து அந்த மரணத்திலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாமா என்றால் நிச்சயமாகமுடியாது. யாராவது ஒரு மருத்துவரை அணுகி அவரிடம் மரணத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு ஏதாவது மருந்து வாங்க முடியுமா என்றால் முடியாது. 
 
அல்லது பெரும் ராணுவங்களைத யார்செய்து வைத்துக் கொண்டு அந்த மரணத்திலிருந்து நம்மை தற்காத்து கொள்ளலாம் என்று முயற்சிசெய்தால், அந்த முயற்சி பலனளிக்குமா? நிச்சயமாகபலனளிக்காது!
 
இப்படி உலகத்திலே, எங்கே ஓடினாலும், எங்கே பறந்தாலும், எவ்வளவு முயற்சிகள் செய்தாலும், எவ்வளவுதான் நம் உடலை ஆரோக்கியமாக, சுகமாக பாதுகாத்துக் கொண்டாலும் சரி, நிச்சயம் ஒரு நாள் மரணம் வந்தே தீரும். இந்த மரணத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன், இந்த உலகத்தில் அவன் படைத்த அனைத்து உயிர்கள் மீதும் விதித்துவிட்டான்.
 
குர்ஆனுடைய பல இடங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன், நமக்கு நினைவூட்டிக் கொண்டே வருகிறான். 
 
பல முறை நாம் இந்த வசனங்களை ஓதியிருப்போம், அறிவுரைகளிலே கேட்டிருப்போம். 
 
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ
 
ஒவ்வொரு உயிரும் மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும். )அல்குர்ஆன் 3:185( 
 
அல்லாஹு தஆலா மிக இலக்கிய நயத்தோடு, மிகவும் சரியாக சொல்கிறான்:
 
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ
 
ஒவ்வொரு உயிரும் மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும்.
 
அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:
 
قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ
 
அல்குர்ஆன் 62:8
 
எந்த மரணத்தைப் பார்த்து நீங்கள் பயந்து ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்.
 
அதுவும் ஓட்டம் என்றால் சாதாரண ஓட்டமல்ல, تَفِرُّوْنَ مِنْهُ விரண்டோடுகிறீர்களோ, தலைதெறிக்க ஓடுகிறீர்களோ, تَفِرّ , فرار என்றால் எப்படி சிங்கத்தை பார்த்த மற்ற பிராணிகள் மான், கழுதை போன்ற பிராணிகள் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தலை தெறிக்க எந்த திசையில் ஓடுகிறோம் என்று தெரியாமல் ஓடுமல்லவா? அந்த ஓட்டத்திற்குதான் அரபியிலே فرار என்று சொல்லப்படும். 
 
அல்லாஹ் சொல்கிறான்: எந்த மரணத்தைப் பார்த்து நீங்கள் விரண்டோடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்
 
فَإِنَّهُ مُلَاقِيكُمْ
 
அல்குர்ஆன் 62:8
 
எப்படி அழகிய வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்துகிறான். நீங்கள் அந்த மரணத்தைத் தேட வேண்டிய அவசியம் இல்லை. 
 
ஒருவர் சந்திக்க வருவார் என்றால் என்ன பொருள்? நாம் எங்கே இருக்கிறோமோ அந்த இடத்தை தேடி வருபவரைதான், சந்திக்கவருபவர். ஒருவரை தேடிசெலவதைத்தான், சந்திக்க செல்வது என்று சொல்லப்படும். அல்லாஹ் சொல்கிறான், நீங்கள் எந்த மரணத்தைப் பார்த்து விரண்டோடுகிறீர்களோ அந்த மரணம் உங்களை சந்திக்கும்
 
فَإِنَّهُ مُلَاقِيكُمْ
 
அல்குர்ஆன் 62:8
 
கண்ணியத்திற்குரியவர்களே! இந்த மரணம் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அல்லாஹு தஆலா அதன் தேதியை, அதன் நேரத்தை, நமக்கு கொடுக்கவில்லை, குறிப்பிடவில்லை. ஏன்? அதைக் குறிப்பிட்டால், மனிதன் அலட்சியத்தில் வீழ்ந்துவிடுவான்.
 
சரி, இன்னும் நமக்கு நாட்கள் இருக்கின்றன, இன்னும் நமக்கு சில ஆண்டுகள் இருக்கின்றன.
 
அப்போது நாம் அல்லாஹ்வை வணங்கிகொள்ளலாம், அப்போது நாம் அல்லாஹ்விடத்திலே மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம், அப்போது நாம் நம் தவறுகளை விட்டு திருந்திக்கொள்ளலாம் என்று மனிதன் அந்த குறிப்பிட்ட நாளின் மீது சார்ந்து விடுவான் என்பதற்காக அல்லாஹ் - மரணத்தை நமக்கு முடிவுசெய்த அவன்- அது நிகழும் தேதியை, அது நமக்கு வரும் தேதியை மறைத்துவிட்டான். 
 
யாரும் சொல்ல முடியாது நாம் எப்போது மரணிப்போம் என்று. இன்னும் நமக்கு மரணம் எந்த அளவு சமீபத்தில் இருக்கிறது என்றால் இந்த மஸ்ஜிதிலிருந்து ஜுமுஆ தொழுகையை முடித்துவிட்டு நாம் சலாமத்தாக வீடு சேர்வோமா? என்பதற்கு நமக்கு ஏதாவது உறுதிமானம் இருக்கிறதா? நிச்சயமாக இல்லை! இந்த நேரத் தொழுகையை நாம் தொழுது முடிப்போமா? அதற்கு ஏதாவது உறுதி இருக்கிறதா? 
 
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பதாக நம் பணியாளரின் சகோதரர், ரமழான் மாதத்தின் இருபத்தி ஏழாவது இரவு, தன் முஹல்லாவிலுல்ல அனைவரையும் பள்ளிக்குஅழைத்துவருகிறார். அது ஒரு கிராமம். அவர்தான் அந்த பள்ளியிலே இமாமாக இருக்கிறார். அனைவரையும் அழைத்து வந்ததற்குப் பிறகு, பள்ளியிலே பாங்கு சொல்லப்பட்டிருக்கிறது. அனைவரையும் ஸஃப்பிலே சரியாக நிறுத்திவைக்கிறார். 
 
இகாமத் சொல்லப்படுகிறது. அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கு கையை உயர்த்தினார். உயர்த்திய கையை தோள் பட்டை வரை கொண்டு போகாமல், நெஞ்சு வரை கையை கொண்டு போய் நெஞ்சைப் பிடிக்கிறார். நெஞ்சிலே கைவைத்தவர் அதே நிலையில் பூமியிலே அமர்ந்து விடுகிறார். பிறகு சாய்கிறார். முன் ஸஃப்பில் இருந்தவர்கள் ஓடோடி சென்று பார்க்கும்போது கண்ணை மூடிகிறார், உயிர் பிரிந்து விடுகிறது. அவருக்கு வயது எத்தனை? முப்பத்தைந்து வயதுதான்!
 
கண்ணியத்திற்குரியவர்களே! இந்த மரணம், இந்த மரணத்திற்காக முடிவு செய்யப்பட்ட வானவர், அவரிடத்திலே அல்லாஹு தஆலா இரக்கத்தைப் படைக்கவில்லை. குழந்தை என்று பார்க்கமாட்டார். கர்ப்பிணி என்று பார்க்கமாட்டார். ஏழை என்று பார்க்கமாட்டார். வயோதிகன் என்று பார்க்கமாட்டார். இவர் பயணத்தில் இருக்கிறாரே, இவரை கவனிப்பதற்கு இங்கு ஆளில்லையே! இவர் மரணித்து விட்டால் இவரை யார் எடுத்துச் செல்வார்கள். 
 
இவர் பறக்கிறாரே, இவர் தண்ணீரிலே (கப்பலில்) மிதக்கிறாரே! இவர் ஒரு தேவைக்காக இந்த ஊருக்கு வந்திருக்கிறாரே, இவருடைய பிள்ளைகள் பச்சிளம் குழந்தைகளாக இருக்கிறார்களே! இவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறாரே, அல்லது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாரே, என்றெல்லாம் அந்த வானவர் பார்க்கமாட்டார்.
 
அப்படி பார்க்கும் தன்மையை அல்லாஹு தஆலா அந்த வானவருக்கு கொடுக்கவில்லை. 
 
قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ
 
அல்குர்ஆன் 32:11
 
அல்லாஹ் சொல்கிறான்: நபியே! நீங்கள் சொல்லுங்கள், உங்களுக்காக முடிவு செய்யப்பட்ட வானவர் உங்களை உயிர் கைப்பற்றுவார்.
 
அல்லாஹுத ஆலா, மலக்குல் மவ்த் என்ற பெரும் வானவரைப் படைத்திருக்கிறான். நம்மில் யாராவது அறிந்திருக்கிறாரா அவர் எப்படியிருப்பார் என்று?
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்விடத்திலே நான்கு வானவர்கள் மிக கண்ணியத்திற்குரியவர்கள். அந்த நான்கு கண்ணியத்திற்குரிய வானவர்களிலே தலைவர் ஒருவர் இருக்கிறார் அவர்தான் ஜிப்ரீல் ஆவார். பிறகு இஸ்ராஃபீல், பிறகு மீகாயீல், பிறகு மலக்குல் மவ்த். ஜிப்ரீல், இஸ்ராஃபீல், மீகாயீல், மலக்குல் மவ்த் ஆகிய நான்குபேரும் மிக சிறப்பான வானவர்கள் ஆவார்கள். 
 
ஒரு சாதாரண வானவர், வானவர்களிலே சாதாரணமானவர், ரொம்பவும் கடைசி தரத்தில்உள்ளவர், அவருடைய ஆற்றல் அவருடைய வல்லமை எப்படி என்றால் நாம் வாழுகிற இந்த பூமியைவிட, நமக்கு ஒளிதருகிற சூரியனைவிட, எத்தனையோ இலட்சம் மடங்கு, ஒரு மடங்கல்ல இருமடங்கல்ல, எத்தனையோ இலட்சம் மடங்கு பெரிய நட்சத்திரத்தை சாதாரணமாக வானத்திலிருந்து பிடுங்கி கையிலே எடுத்துவிடுவார். 
 
தன் ஒரு கரத்திலே, வானத்திலே அல்லாஹ் பதித்திருக்கிற நட்சத்திரத்தை எப்படி நாம் புல்லை பிடுங்குவோமோ, அல்லது ஒரு சிறிய பந்தை எடுப்போமோ, அல்லது ஒரு சிறிய பொருளை, இலேசான கனமற்ற பொருளை சாதாரணமாக எடுப்போமோ அது போன்று வானத்திலிருந்து அந்த நட்சத்திரத்தை அப்படியே பிடுங்கிவிடுவார்.
 
பிடுங்கியது மட்டுமல்ல. அந்த பிடுங்கிய நட்சத்திரத்தை எப்படி நீங்கள் ஒரு பந்தை இலக்கை நோக்கி எறிவீர்களோ, ஒரு சிறிய பொடிக் கல்லை இலக்கை நோக்கி எறிவீர்களோ, அது போன்று அந்த நட்சத்திரத்தை அவர் எறிவார். எரிகின்ற அந்த நட்சத்திரம் பூமியில் விழுந்து விடாமல் இருப்பதற்காக இன்னொரு வானவர் அதைப் பிடித்துக் கொள்வார். 
 
கண்ணியத்துக்குரியவர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த வானவரின் உருவம் எப்படி இருக்கும். அந்த வானவரின் ஆற்றல், அல்லாஹ் அவருக்கு கொடுத்த வல்லமை எப்படி இருக்கும்!
 
இது எந்த வானவர், அல்லாஹ் படைத்த சாதாரணமான வானவருடைய ஆற்றல் இப்படி என்றால், ஜிப்ரீல், மீகாயீல், இஸ்ராஃபீல், மலக்குல் மவ்த் உடைய ஆற்றல், இன்னும் அவர்களுடைய உருவம் எப்படி இருக்கும்!!
 
அல்லாஹு தஆலா ஜிப்ரீலுக்கு ஆறு நூறு இறக்கைகளை கொடுத்திருக்கிறான். அந்த ஆறு நூறு இறக்கைகளை அவர் விரித்தால், அதிலிருந்து ஒரு இறக்கை நமக்கு முன்னால் விரிக்கப்பட்டால், நாம் இந்த பூமியிலே எந்த கோடியில் சென்றாலும் சரி, அதற்குப் பின்னால் உள்ளதைப் நம்மால் பார்க்கமுடியாது.
 
நம் கண் பார்வைக்கு முன்னதாக உதாரணமாக, இப்படி ஒரு பேப்பரைக் கொண்டு வந்து வைக்கப்பட்டால், இந்த பேப்பருடைய தூரம் எவ்வளவு தூரம் இருக்கும்? அதிலிருந்து சற்று விலகிச் சென்றால் பின்னால் உள்ளதை பார்த்து விடலாம். ஆனால், ஜிப்ரீலுடைய இறக்கை விரிக்கப்பட்டால், எவ்வளவு தூரம் நீங்கள் இடது பக்கம் சென்றாலும் சரி, வலது பக்கம் சென்றாலும் சரி, நீங்கள் பின்னால் உள்ளதைப் பார்க்க முடியாது என்றால் அவருடைய உடல், அவருக்கு அல்லாஹ் கொடுத்த அந்த அமைப்பு எவ்வளவு பெரியதாக இருக்கும்!! 
 
கண்ணியத்திற்குரியவர்களே! இஸ்ராஃபீல் என்ற மலக், அந்த வானவர் ஒரு சத்தம் போட்டால், சூரியனும் சந்திரனும் வானத்திலுள்ள அத்தனை நட்சத்திரங்களும் சின்னா பின்னமாகி விடும். பூமியிலுள்ள மலைகள் எல்லாம் பஞ்சாகப் பறந்து விடும் என்றால், அவருடைய சப்தத்திலே இவ்வளவு பெரிய ஆற்றலை அல்லாஹ் படைத்திருக்கிறான் என்றால், அவருடைய உடல், அவருடைய தோற்றம் எவ்வளவு பெரியதாக இருக்கும். 
 
கண்ணியத்திற்குரியவர்களே! இப்படி மலக்குல் மவ்த், நம் உயிரைக் கைப்பற்றுவதற்காக அல்லாஹ் முடிவு செய்த அந்த வானவரைப் பற்றி இப்னு அப்பாஸ் ரழியால்லாஹு அன்ஹு அவர்களும், இமாம் முஜாஹித் (1) ரஹிமஹுல்லாஹ் அவர்களும் சொல்கிறார்கள். நீங்கள் விருந்துக்கு செல்லும்போது தனி ஒருவராக நீங்கள் இருக்க உங்களுக்கு முன்னால் உணவு விரிப்பு வைக்கப்பட்டிருக்கும். அந்த உணவு விரிப்பிலே உங்களுக்குத் தேவையான பானங்கள், உணவுகள், பழங்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கும். 
 
ஒருவருக்காக விரிக்கப்படும் உணவு விரிப்பு அதில் வைக்கப்படுகின்ற உணவின் வகை எவ்வளவு இருக்கும்? கண்ணியத்திற்குரியவர்களே! இப்னு அப்பாஸ் ரழியால்லாஹு அன்ஹு சொல்லுகின்றார்கள், “முழு உலகமும் இந்த உலகத்தில் உள்ள படைப்பினங்கள், உயிரினங்கள் அனைத்தும் மலக்குல் மவ்த் உடைய உருவத்தை பொறுத்தவரை உங்கள் ஒருவருக்கு முன்னால் வைக்கப்படுகிற உணவு விரிப்பைப்போன்றுதான். (தாரீக் இப்னு கசீர்) (2)
 
எப்படி அதிலிருந்து நீங்கள் விரும்பிய உணவுகளை தேர்வு செய்கிறீர்களோ, உங்களுடைய கையால் நீட்டி எடுத்துக் கொள்கிறீர்களோ, தண்ணீர் தேவை என்றால் எடுத்துக் கொள்கிறீர்கள். உணவு தேவை என்றால் எடுத்து வைத்துக் கொள்கிறீர்கள். ஆணம் தேவை என்றால் நீங்கள் ஊற்றிக் கொள்கிறீர்களோ! அது போன்றுதான் இந்த பூமியும் இந்த பூமியிலுள்ள படைப்பும் மலக்குல் மவ்த்தை பொருத்தவரை! 
 
இந்த நொடியிலே, இந்த நொடியின் நொடியிலே, இங்கு ஒருவரை உயிர் வாங்குவதும். நாம் வாழுகிற இந்த இடத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஒருவருடைய உயிரை வாங்குவதும் அவருக்கு சமம்தான்! ஒரு மனிதருடைய உயிரை வாங்குவதும் அவருக்கு சமம்தான், ஆயிரம் மனிதர்களுடைய, கோடிக்கணக்கான உயிரினங்களுடைய உயிரை வாங்குவதும் சமம்தான்! 
 
அவருக்கு எதுவும் சிரமமல்ல. அவருக்கு கீழ் அல்லாஹு தஆலா நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வானவர்களை, பணியாளர்களை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். இந்த வானவர்கள் எல்லாம் அல்லாஹ்வுடைய கட்டளைக்குப் பணிந்தவர்கள். அல்லாஹ் யாருக்கு முடிவு செய்து விடுகிறானோ, அவருடைய உயிரை வாங்கி விடுவார்கள். 
 
ஒவ்வொரு ஆண்டும் ‘லைலத்துல் கத்ர்' உடைய இரவிலே! ரமழானுடைய கடைசிப் பத்தில், ஒற்றை இரவுகளில் ‘லைலத்துல் கத்ர்' உடைய இரவு எப்போது ஏற்படுகிறதோ, அந்த இரவிலே அல்லாஹு தஆலா அந்த ஆண்டு மரணிக்கவேண்டியவர்களுடைய பெயர்களை அல்லாஹ் அவருக்கு அறிவித்துக் கொடுத்துவிடுகிறான். (3)
 
யாருக்கு எந்த இடத்திலே எப்படி எப்படி உயிர் வாங்க வேண்டும் என்பதை அந்த மலக்குல் மவ்த்திற்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்’ உம்முல் கிதாபிலிருந்து, அந்த விதியின் புத்தகத்திலிருந்து அவருக்கு குறிப்பெடுத்து கொடுக்கப்படுகிறது.
 
கண்ணியத்துக்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக வருகிறது, “ஒருவருடைய பெயர், மரணிப்பவர்களிலே எழுதப்பட்டு மலக்குல் மவ்தின் கரத்திலே கொடுக்கப்பட்டு விடுகிறது. அவனோ திருமணம் முடிக்கிறான், அவனோ வியாபாரத்திற்காக பயணம் செய்கிறான். அவனோ பல எண்ணங்களை வைத்துக்கொண்டு வாழ்க்கை வசதிகளைத் தேடிக் கொண்டு இருக்கிறான். அவனோ அந்த ஆண்டு மரணிக்க வேண்டியவர்களின் பட்டியலிலே எழுதப்பட்டு இருக்கிறார்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! ஆகவேதான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், அவர்களுக்கு முன்னால் சென்ற நபிமார்கள், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் வந்த ஸஹாபாக்கள், இமாம்கள், தாபியீன்கள் மரணத்தைக் குறித்து ஏராளமான அறிவுரைகளை நமக்கு சொன்னார்கள்.
 
காரணம் மனிதன் விரைவாகவும் அதிகமாகவும் மறந்து விடுகிற ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறது என்றால், அது மரணம்தான். அதை விரைவாக மறந்துவிடுவான்! மனிதன் அதிகம் அதை மறந்து இருப்பான்! தன் வீட்டிலே தன் தந்தையோ, பாட்டனோ, தன் தாயோ, தன் பாட்டியோ மரணித்து இருப்பார்கள். அன்றைய பொழுது வரை நினைவில் வைத்திருப்பான். அடுத்த நாள், அடுத்த நாள் மறந்து விடுவான். எப்படி இவனது வாழ்க்கை தொடங்கி விடும் என்றால், ஏதோ அவருக்குத்தான் மரணம் இருந்தது, அவர் மரணித்து விட்டார், தனக்கு மரணமில்லை, தான் மரணிக்க மாட்டேன் என்பதைப் போன்ற இவரது வாழ்க்கை இருக்கும்.
 
தன் கண்ணுக்கு முன்னால் தந்தை மரணிப்பார் அதைப்பார்த்துக் கொண்டிருப்பான். மரணித்த தந்தை குளிப்பாட்டப்படுவார். அதையும் பார்ப்பான். அந்த மரணித்த தந்தைக்கு கஃபன் துணி அணிவிக்கப்படும். அதையும் பார்த்துக்கொண்டு இருப்பான். அந்த மரணித்த தந்தை நான்கு பேருடைய தோளிலே சுமக்கப்படுவார், கப்ரு குழியை நோக்கி அழைத்துச் செல்லப்படுவார்.
 
அங்கே இறக்கி வைக்கப்படுவார். பிறகு அந்த கப்ரு குழியிலே வைக்கப் படுவார். பிறகு மண்ணை அவர் மீது போட்டு மூடப்படும். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருப்பான். தானும் இப்படித்தான் மரணிக்க வேண்டுமே என்று எண்ணிப் பார்க்க மாட்டான். விரைவாக மறந்து விடுவான். அதிகமாக மறந்து விடுவான். தன் கண்ணுக்கு முன்னால் தன் சகோதரன் அல்லது தன் நண்பன் அல்லது தன் வீட்டிலுள்ள ஒருவர் மரணிப்பதைப் பார்ப்பான். ஆனால் படிப்பினைப் பெறமாட்டான்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! ஆகவேதான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஸ்லிம்களாகிய நமக்குச் சொன்னார்கள். மறுமையை நம்புகின்ற நமக்குச் சொன்னார்கள். மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கைதான் உண்மை என்பதை ஏற்றுக்கொண்ட நமக்குச் சொன்னார்கள். நான் உங்களுக்கு இரண்டை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அறிவுரைப் பெறுவதற்கு நான் இரண்டைத் தருகிறேன். ஒன்று பேசாது இன்னொன்று பேசும். 
 
ஒரு பலவீனமான ஹதீஸின் கருத்தாவது: நீங்கள் இந்த உலகத்தின் ஆசையிலிருந்து உங்களைத்தடுத்துக் கொள்வதற்கு, மறுமைக்காக தயாரிப்பதை நீங்கள் அதிகப்படுத்துவதற்கு, அல்லாஹ்வை பயந்த உண்மையான அடியார்களாக நீங்கள் வாழ்வதற்கு, அடியார்களுடைய உரிமைகளை சரியாக நீங்கள் கொடுத்து விடுவதற்கு, நீங்கள் அறிவுரைப்பெறுவதற்கு உங்களுக்கு அறிவுரை செய்வதற்கு இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று பேசும் இன்னொன்று பேசாது! பேசக் கூடியது எது? அல்குர்ஆன்! அல்குர்ஆன்! நீங்கள் அதை ஓதும்போது அல்லாஹ்வின் சட்டங்களை உங்களுக்கு அது நினைவுறுத்துகிறது. அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்கு பயமுறுத்துகிறது!
 
மறுமையை உங்களுக்கு பயமுறுத்துகிறது! சொர்க்கத்தின் மீது உங்களுக்கு ஆசையை ஊட்டுகிறது! நரகத்தைப் பற்றி உங்களுக்கு பயமூட்டுகிறது!
 
இரண்டாவது பேசாது! அது என்ன? அதுதான் மரணம்! அது பேசாது! அது எதுவும் வாய்த்திறக்காது! அதை நீங்கள் பார்த்து படிப்பினை பெற்றுக் கொண்டால் போதுமானது. (4)
 
கண்ணியத்திற்குரியவர்களே! இன்று நம்முடைய நிலைமை, நமக்கு முன்னால் சென்ற நல்லவர்களுடைய நிலைமை, இரண்டையும் எடுத்து பாருங்கள்.
 
இமாம் இப்ராஹிம் நகயி (إبراهيم النخعي) சொல்லுகின்றார்கள்: "எங்கள் பகுதியிலே யாராவது ஒருவருடைய குடும்பத்திலே மரணம் நிகழ்ந்துவிட்டால் பல நாட்களுக்கு அதன் அடையாளங்கள் இருக்கும்.” (ஹில்யத்துல் அவ்லியா) (5)
 
இன்று நம் குடும்பத்திலும் தான் மரணம் ஏற்படுகிறது. அந்த அடையாளத்தை எப்படி தெரிந்து கொள்கிறோம். அங்கே சாமியானா போடப்படும். பிறகு கல்யாண வீட்டைப் போன்று அங்கே பிரியாணி ஆக்கப்படும். மரணித்தவரின் வீட்டிலே என்ன சாப்பாடு சமைக்கப்படுகிறது பாருங்கள்! 
 
மரணத்தை மறக்க வைக்கும்படியான உலகத்தின் ஆசையை ஊட்டும்படியான சுவையான உணவு சமைக்கப்பட்டு, வந்தவர்களுக்கெல்லாம் பரிமாறப்படுகிறது. இது நம்மவர்களுடைய மரணம் நிகழ்ந்த வீட்டின் நிலை! இதே வீட்டிலே, இன்னும் சில மக்கள் வருவார்கள் எதற்காக? இந்த மரணித்தவர் எதை விட்டுச் சென்றிருக்கிறார்? நமக்கு அதிலே என்ன பங்கு கிடைக்கும் என்பதற்காக! 
 
பிள்ளைகளில் சிலர் இருப்பார்கள், தந்தையின் சொத்து என்ன? தந்தையின் பேலன்ஸ் என்ன? தந்தை எதையெல்லாம் எங்கெல்லாம் மறைத்து வைத்திருக்கிறார்? என்பதைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருப்பார்கள்.
 
தந்தை மரணித்து விட்டாலே, அவர் என்ன 'வசியத்' செய்திருக்கிறார், அவர் யாருக்காவது கடன்பட்டு இருக்கிறாரா, அவர் யாருக்காவது கொடுக்க வேண்டுமா, அந்த ஹக்குகளை நான் அவருடைய ஜனாஸாவை எடுப்பதற்கு முன்னால் ஒப்படைத்து விடவேண்டுமே, அதற்கு என்னிடத்திலே என்ன செல்வம் இருக்கிறது என்றெல்லாம் கணக்கு போட மாட்டார்கள். 
 
தந்தை யாருக்காவது கொடுத்திருக்கிறாரா என்பதைப் பற்றி விசாரித்துக்கொண்டு இருப்பார்கள். தந்தைக்கு என்ன சொத்து இருக்கிறது என்பதைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருப்பார்கள். இப்படி சிலர் இருப்பார்கள்.!
 
கண்ணியத்திற்குரியவர்களே! இன்னும் சிலர் தந்தைக்குப் பின்னால் நான்தான் முழு சொத்துக்கும் உரியவன். நான் சொல்வது போன்று தான் நீங்கள் கேட்கவேண்டும் என்று கணக்குப் போடுவார்கள்!
 
இமாம் இப்ராஹிம் அன்னகியி சொல்லுகின்றார்கள்: எங்கள் குடும்பத்திலே மரணம் நிகழ்ந்து விட்டால் அதனுடைய தாக்கத்தை அதனுடைய அந்தப் பாதிப்பை பல நாட்களுக்குத் தெரியலாம் என்று! 
 
அவர்களின் நிலை ஏன் அப்படி இருந்தது?
 
தங்கள் முழு குடும்பத்தையும் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என்று அந்த அளவு அவர்கள் தர்பியா கொடுத்திருக்கிறார்கள். 
 
அதாவது துக்கம், துயரம் என்று சொன்னால் கவலைப்பட்டு விட்டு, ஓய்ந்து உட்கார்வது கிடையாது.
 
 
 
இப்படித்தானே நாமும் மரணிப்போம் என்று மரணத்தை பயந்து நன்மையில் தீவிரம் காட்டுவது. பாவங்களை விட்டு தவ்பா செய்வது, அடியார்களுடைய ஹக்குகளை திரும்பக் கொடுப்பது என்று வணக்க வழிபாடுகளில் தீவிரமாக ஈடுபடுவது, நல்லமல்களில் விரைவது. மரணத்தின் தாக்கத்தை எங்கள் குடும்பத்தில் பார்க்கலாம் என்று இதைத்தான் இப்ராஹீம் நகயி கூறினார்கள்.
 
ஒருவர் மரணித்து விட்டால், ஒருவருக்கு மரணம் ஏற்பட்டு விட்டால், நாங்கள் பயந்து நடுங்குவோம். நாங்கள் என்ன பேசிக்கொள்வோம் என்றால் இவருக்கு ஒரு பயங்கரமான நிகழ்வு நிகழ்ந்துவிட்டது என்று.
 
எப்படி எல்லாம் நல்லவர்கள் சிந்தித்து இருக்கிறார்கள் பாருங்கள்!
 
மரணித்த இவருக்கு பயங்கரமான ஒரு நிகழ்வு நிகழ்ந்துவிட்டது! ஆம், மரணம் அவ்வளவு பயங்கரமானது!
 
அவர்கள் எதைப் பற்றி கவலைப்பட்டார்கள்? எதைப்பற்றி அழுதார்கள்?
 
இவர் இப்போது நம்மை விட்டு பிரிந்து விட்டாரே! ரஹ்மத்துடைய மலக்குகள் இவரை எடுத்துச்சென்று சொர்க்கத்திலே வைத்தார்களா, அல்லது அதாபுடைய மலக்குகள் எடுத்துச்சென்று நரகத்திலே இவரை வைத்தார்களா என்று நமக்குத் தெரியவில்லையே என்ற பயத்திலும் கவலையிலும் துக்கத்திலும் அந்த நல்லவர்கள் இருப்பார்கள். 
 
பயம் எப்படி இருக்க வேண்டும்? இரண்டு வகையான பயம், இரண்டு வகையான கவலை உள்ளது. ஒன்று நாம் பயப்படுவது. நம்மவர்கள் கவலைப்படுவது. அது எப்படி என்றால் இவர் செத்து விட்டாரே! இவர் இறந்து விட்டாரே! என்னை விட்டுச் சென்றுவிட்டாரே! இவர் நம்மை பிரிந்துவிட்டாரே! என்று.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இதுவல்ல துக்கம். இதுவல்ல பயம்.
 
நம்மை பிரிந்த இந்த சகோதரருடைய நிலைமை என்ன? இவருடைய இறுதி தங்குமிடம் எங்கே முடிவு செய்யப்பட்டிருக்கிறது? சொர்க்கவாசிகளில் இவர் முடிவு செய்யப்பட்டு இருக்கிறாரா? அல்லது நரகவாசிகளிலே இவர் முடிவு செய்யப்பட்டிருக்கிறாரா?
 
இதுவல்லவா நாம் பயப்பட வேண்டிய, இன்னும் கவலைப்பட வேண்டிய பயங்கரமான விஷயம்!
 
ஒருவர் இங்கிருந்து கண்ணை மூடி விட்டால், அடுத்து அவருடைய மன்ஸில் – தங்குமிடம் இரண்டில் ஒன்றுதான்.
 
ஒருவருடைய கண் மூடப்பட்டு விட்டால், அடுத்து அவருடைய மன்ஸில் – தங்குமிடம் இரண்டில் ஒன்றுதான். ஒன்று சொர்க்கமாக இருக்கும். இல்லையென்றால் நரகமாக இருக்கும். அல்லாஹ் அதிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டும். 
 
உஸ்மான் ரழியால்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லுகின்றார்கள்: (6)
 
ஆதமுடைய மகனே! நீ பூமியில் பிறந்த நாளிலிருந்து உனக்காக நிர்ணயிக்கப்பட்ட வானவர், உன்னை வந்து பார்த்துக் கொண்டே செல்கிறார். எங்கே இருக்கிறாய்? நம்மை ஒவ்வொரு நாளும் அவர் சந்தித்துக் கொண்டே இருக்கிறார். நீ எங்கே இருக்கிறாய்? என்று.
 
நமது வலது பக்கமுள்ள, இடது பக்கமுள்ள, முன்னாலுள்ள, பின்னால் உள்ள மனிதர்களைத்தான் உனது கண்ணால் நீ பார்க்க முடியும். மலக்குகளை அல்ல. 
 
நீ நினைத்துக் கொள்ளாதே! மலக்குல் மவ்த் உன்னை தவறவிட்டு விட்டார் என்று. உன்னை மிஸ் பண்ணி விட்டார் என்று எண்ணிக் கொள்ளாதே!
 
உனக்காக குறிப்பிடப்பட்ட நேரம் வருவதை அவர் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார். நாம் என்ன நினைக்கிறோம்? ஒரு பயணத்திலே செல்கிறோம். அந்தப் பயணத்திலே ஒரு ஆக்சிடென்ட், ஒரு விபத்து நிகழ்ந்து விடுகிறது. 
 
நம்மோடு வந்தவர்களில் பலர் இறந்து விடுகிறார்கள். அப்போது நாம் அல்லது அந்த விபத்திலே சிக்கியவர் என்ன சொல்கிறார்? நான் தப்பித்துக் கொண்டேன் என்று சொல்கிறார். 
 
அவர் என்ன சொல்கிறார்? நான் தப்பித்துக் கொண்டேன், நான் பிழைத்துக்கொண்டேன், நான் பாதுகாப்பு பெற்றேன் என்று. 
 
அவர் சொல்கிறார், நான் பஸ்ல அந்த ஓரத்துல உட்கார்ந்திருந்தேன் எனவே நான் தப்பித்துக் கொண்டேன். முன்னாடி உட்கார்ந்தவர்கள் எல்லாம் மாட்டிக் கொண்டார்கள். முன் சீட்டில் இருந்தவர்கள் எல்லாம் மாட்டிக் கொண்டார்கள். நான் தப்பித்து விட்டேன். நான் பின்னாடி உட்கார்ந்து இருந்தேன். அல்லது நான் பார்த்துவிட்டேன். ஆகவே, தெரிந்த உடனே நான் எழுந்து விட்டேன். தெரிந்தவுடனே நான் குதித்து விட்டேன். நான் தப்பித்துக் கொண்டேன் என்று.
 
இவ்வாறுதான் மக்கள் பொதுவாக பேசுவார்கள் முன் பக்கம் ஆக்சிடென்ட் நடந்திருந்தால்.
 
பின் பக்கத்திலிருந்து ஆக்சிடென்ட் நடந்திருந்தால், முன்னாடி உட்கார்ந்தவர்கள் என்ன சொல்வார்கள்? நாங்கள் எல்லாம் முன்னாடி அமர்ந்திருந்தோம். நாங்கள் தப்பித்துக் கொண்டோம். நாங்கள் எல்லாம் இந்த ஓரத்திலே உட்கார்ந்து இருந்தோம். நாங்கள் தப்பித்துக் கொண்டோம். பின்னாடி உட்கார்ந்தவர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருந்தார்கள். எனவே அவர்கள் மாட்டிக்கொண்டார்கள். நாங்களெல்லாம் விழித்துக் கொண்டிருந்தோம். எனவே நாங்கள் தப்பித்துக் கொண்டோம்.
 
இவ்வாறு பல காரணங்களை மக்கள் கூறுவார்கள்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இவர்களுடைய இந்த தந்திரங்களா இவர்களை பாதுகாத்தன? இவர்களுடைய இந்த திட்டங்களா இவர்களை பாதுகாத்தன?
 
இல்லை, இல்லவே இல்லை.
 
மாறாக, அல்லாஹ் பாதுகாக்கிறான், அல்லாஹ் பாதுகாக்கிறான்.
 
وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَةً
 
பாதுகாலர்களை அவன் உங்களுக்கு அனுப்பிவைக்கின்றான். அல்குர்ஆன் 6 : 61
 
நம்முடைய அந்த குறிப்பிடப்பட்ட மரண நேரம் வரும் வரை இடையில் ஏற்படுகிற எல்லா விதமான ஆபத்திலிருந்து நம்மை பாதுகாப்பதற்காகவே, வானவர்களின் ஒரு கூட்டத்தை அவர்கள் நம்மோடு இருக்கும்படி அல்லாஹ் நிர்ணயம் செய்து இருக்கிறான்.
 
மக்கள் சொல்லுவார்கள்: மரணத்தின் வாயிலில் நுழைந்து விட்டு தப்பித்துக் கொண்டான் என்றும், மயிரிழையில் தப்பித்துக் கொண்டான் என்றும், ஒரு நூல் அளவில் தப்பித்துக் கொண்டான் என்றும். ஒரு நொடியிலே அவன் மரணத்திலிருந்து மரணத்தை தோற்கடித்து விட்டான் என்றும். 
 
கண்ணியத்திற்குரியவர்களே! அவர்கள் கூறுவது போன்று இல்லை! அல்லாஹ் முடிவு செய்த நேரம் வரவில்லை. ஆகவே மவ்துடைய மலக்குகள் அவனை விட்டு விட்டார்கள். அல்லாஹ் முடிவு செய்த நேரம் வந்துவிட்டால், எந்த தந்திரங்களும் பலிக்காது! எந்த சூழ்ச்சிகளும் பலிக்காது! யாருடைய பரிந்துரையும் உதவாது! எவ்வளவு பெரிய ஆயத்தங்களை, தயாரிப்புகளை செய்து கொண்டாலும் அவை பலனளிக்கா. 
 
கண்ணியத்திற்குரியவர்களே! மரணத்தை மனிதன் மறக்கும் போது, அல்லாஹ் முடிவு செய்த அந்த மரணத்தை மனிதன் மறக்கும் போது, எப்படிப்பட்ட ஆபத்துகளை அவன் சந்திப்பான் தெரியுமா? எப்படிப்பட்ட பெரிய நஷ்டங்களை அவன் சந்திப்பான் என்று தெரியுமா?
 
இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி சொல்கிறார்கள்: மனிதன் மரணத்தை மறந்தால், அதிகமாக உலக ஆசைகளை வளர்த்துக் கொண்டால் நான்கு விஷயங்கள் அவனுக்குள் வந்துவிடும். (7)
 
முதலாவதாக:
 
الأول ترك الطاعة
 
மரணத்தை மனிதன் மறக்கும் போது,வணக்க வழிபாடுகளில் ஆர்வம் கொள்ள மாட்டான். வணக்க வழிபாடுகளின் மீது ஆசை ஏற்படாது. அலட்சியம் செய்வான். அவன் சொல்வான் எனக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன, நான் அமல் செய்வதற்கு இன்னும் நேரம் இருக்கிறது, பிறகு பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு தள்ளிப்போட்டுக் கொண்டே போவான்.
 
والثاني ترك التوبة وتسويفها
 
இரண்டாவதாக, அல்லாஹ்விடத்திலே மன்னிப்பு கேட்பதிலே தாமதம் செய்வான். தான் செய்த பாவங்களை நினைத்து வருந்த மாட்டான்.
 
அவன் சொல்வான்: “நாட்கள் இன்னும் இருக்கின்றன. இப்போதுதானே நான் வாலிபனாக இருக்கிறேன். இன்னும் வயோதிகம் இருக்கிறது. பிறகு நோய்நொடி இருக்கிறது. பிறகு பலவீனம் இருக்கிறது. பிறகு படுத்த படுக்கை இருக்கிறது. அப்போது பாவத்தில் இருந்து மீட்சி பெறுவதையும் பாவமன்னிப்பு கேட்பதையும் பார்த்துக்கொள்ளலாம்.”
 
இவ்வாறு அவன் தன் ஆசையிலே, தன் கற்பனையிலே இருக்கும்போது மரணம் அவனை கவ்விக்கொண்டு சென்றுவிடுகிறது.
 
கண்ணியத்திற்குரியவர்களே! அதுவும் இப்போது நாம் வாழுகிற இந்த காலகட்டத்திலே, மரணம் என்பது முந்திய காலங்களைவிட நமக்கு மிக சமீபத்திலே இருக்கிறது என்று சொல்லலாம்.
 
முந்திய காலத்தில் வாழ்ந்தவர்கள் மரணிப்பது என்றால், ஒன்று போர் நடக்க வேண்டும், அல்லது பெரிய நோய் நொடி வரவேண்டும், அல்லது வயது முதிர்ந்து தள்ளாத நிலைமையில் இருப்பவராக இருக்க வேண்டும். அப்போது அவர்கள் மரணத்தைப் பார்த்தார்கள், மரணித்தார்கள்.
 
ஆனால், நாம் வாழுகிற இந்தக்காலத்திலே, ஒன்று அன்றாடம் நாம் பத்திரிக்கைகளை திருப்பும்போது நாம் படிக்கிறோம் அல்லவா? ஆக்சிடென்ட், விபத்துகள் வீட்டிலிருந்து ஒரு குழந்தை வெளியேறி அடுத்த தெருவிற்கு என்ன? தன் வீட்டில், தன் வீட்டிற்கு எதிரே உள்ள ஒரு உறவினருடைய வீட்டுக்கு செல்வதற்கு கூட இன்றைய காலத்திலே பாதுகாப்பு இல்லை,கேரன்டி கிடையாது.
 
இன்று நாம் செய்கிற பயணங்கள், அது நாம் செய்கிற கார் பயணமாக இருக்கட்டும், அல்லது டூவீலர் பயணமாக இருக்கட்டும், அல்லது விமானப் பயணமாக இருக்கட்டும்.
 
எத்தனை மக்கள் விமானத்தில் பயணம் செய்கிறார்கள்! கடலுக்குள் சென்ற விமானங்கள் எத்தனை? ஆகாயத்தில் பறக்கும் போதே எறிந்து சாம்பலான விமானங்கள் எத்தனை!
 
பறக்கும்போது மோதி தீப்பிடித்த விமானங்கள் எத்தனை! அதிலிருந்து யாராவது தப்பித்து இருக்கிறார்களா? இப்படி விமானத்தின் விபத்துகளைப் பாருங்கள்! காரில் நடந்த, நடக்கின்ற விபத்துகளைப் பாருங்கள்! அதுபோன்று வாகனிக்கின்ற சாதாரண வாகனங்களில் நடக்கிற விபத்துகளைப் பாருங்கள்!
 
இப்படி, திடீர் திடீரென மரணம்! 
 
இப்போதுதான் என்னை விட்டுப் பிரிந்தார்; இப்போதுதான் என்னை விட்டுக் கிளம்பிச் சென்றார்; போன் வருகிறது வழியிலே அவர் ஆக்சிடெண்டில் இறந்து விட்டார் என்று! 
 
கண்ணியத்துக்குரியவர்களே! நண்பருடைய வியாபார பார்ட்னர், போன் செய்கிறார், “நான் இரவிலே சென்னை வந்து சேருவேன், காலையிலே எனக்கு பயணம், அமெரிக்கா செல்வதற்கு இத்தனை டாலர்கள் எனக்குத் தேவை, மாற்றி வைத்து விடு என்று சொல்லுகிறார்.
 
பிறகு, லைன் அங்கே கட்டாகிறது. ‘ஹலோ, ஹலோ என்று இவர் சத்தம் போடுகிறார். அந்த பக்கத்தில் இருந்து எந்த வித சத்தமும் கேட்கவில்லை. 
 
பிறகு சிறிது நேரத்திலே செய்தி வருகிறது காவல் துறையிடமிருந்து, கடைசி நேரத்திலே இவர் உங்களோடு பேசினாரா? என்று!
 
என்ன ஆனது?
 
டிரைவர், ஓட்டிக் கொண்டு இருக்கிறார். தண்ணீர் குடிப்பதற்காக பாட்டிலை திறந்து தண்ணீரைக் குடிக்கிறார். தண்ணீரைக் குடிக்கும்போது அண்ணாந்தவர், கண் முன்னாடி உள்ள திசையைப் பார்க்க ஒரு நிமிடத்திற்கு தவறிவிடுகிறார். (கார் விபத்துக்குளாகி விடுகிறது. ஓட்டுனர் பலத்த காயத்துடன் தப்பித்தார், பின் சீட்டில் இருந்தவர் அதே இடத்தில் இறந்துவிட்டார்.) 
 
அவ்வளவுதான்!
 
என்ன நடந்தது? எப்படி மரணம்? நாளை என்ன திட்டம்? அமெரிக்கா செல்வதற்கு, அங்கே வியாபாரம் செய்வதற்கு, அங்கே இன்வெஸ்ட்மென்ட் செய்வதற்கு, இங்கே மரணம் அவரை வரவேற்றுக் கொண்டிருக்கிறது.
 
இப்படி எத்தனை மரணத்தின் நிகழ்வுகளை நாம் பார்க்கிறோம். மனிதன் நினைக்கிறான் “நமக்கு வாழ்க்கை இருக்கிறது, நமக்கு வயோதிகம் இருக்கிறது, அப்போது தவ்பா செய்யலாம்” என்று. 
 
கண்ணியத்திற்குரியவர்களே! இன்றைய காலகட்டத்திலே எப்படிப்பட்ட நோய் நொடிகளை யெல்லாம் நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். வயோதிகத்திலே நோய் நொடியிலே படுப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், நம் காலத்திலே எத்தனை வாலிபர்கள் மாரடைப்பிலே இறந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை வாலிபர்கள் கேன்சரிலே இறந்து கொண்டிருக்கிறார்கள்.
 
எத்தனை வாலிபர்கள் அல்லாஹ் ஹராமாக்கிய அந்த பெரும் பாவத்தை செய்த காரணத்தால் அல்லது அதில் சிக்கிக் கொண்ட காரணத்தால் எய்ட்ஸ் நோயால் மரணித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை விதமான நோய்கள்!
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாதுகாப்புத் தேடிய‌ பிரார்த்தனைகளை இன்று நாம் படிக்கவில்லை. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்திலே பாதுகாப்புத் தேடுவார்கள். 
 
அல்லாஹ்வுடைய நபி, அல்லாஹ்வுடைய ரசூல், அல்லாஹ் உடைய ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி பயந்திருக்கிறார்கள்!
 
கண்ணியத்திற்குரியவர்களே! நல்லவர்கள் பயப்படுவார்கள். நல்லவர்கள் பயப்படுவார்கள், அழுவார்கள். பாவிகள் பயப்பட மாட்டார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய துஆ:
 
عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، قَالَ: كَانَ مِنْ دُعَاءِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ» رواه مسلم برقم 2739
 
அல்லாஹ்வே! உனது அருள் என்னை விட்டு நீங்குவதிலிருந்தும், உனது நற்சுகம் என்னை விட்டு மாறுவதிலிருந்தும், உனது திடீர் தண்டனையிலிருந்தும் உனது கோபங்கள் எல்லாவற்றிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
 
 
 
அறிவிப்பாளர்: இப்னு உமர், நூல்: முஸ்லிம், எண்: 2739 
 
 
 
நாம் உஷாராவதற்கு முன்னால், அஸ்தஃபிருல்லாஹ்! என்று ஒரு வார்த்தை சொல்வதற்கு முன்னால். அல்லாஹ்விடத்திலே “யா அல்லாஹ்! என்னை மன்னித்துவிடு!” என்ற ஒரு வார்த்தை, ஒரு பாவமன்னிப்பை முற்படுத்துவதற்கு முன்னால், தாம் அநியாயம் செய்த அடியார்கள் இடத்திலே தொடர்பு கொண்டு “என்னை மன்னித்து விடுங்கள்!” என்ற ஒன்று சொல்வதற்கு முன்னால். அல்லது தான் தவறவிட்ட கடமைகளை எடுத்து நிறைவேற்றுவதற்கு முன்னால்...
 
மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆகேட்பார்கள்: (8)
 
عَنْ أَبِي الْيَسَرِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فَيَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَرَمِ، وَالتَّرَدِّي، وَالْهَدْمِ، وَالْغَمِّ، وَالْحَرِيقِ، وَالْغَرَقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَنْ أُقْتَلَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا رواه النسائي برقم 5532 
 
“யா அல்லாஹ்! எரிந்து சாவதிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்.
 
இங்கு பார்க்கிறோம், கட்டிடங்கள் எரிந்து எத்தனை பேர் சாவுகிறார்கள்.
 
இது விபத்துகள் ஏற்பட்டு நெருப்பில் எரிந்து சாவது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது!
 
“யாஅல்லாஹ்! நெருப்பிலே எரிந்து சாவதிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்.”
 
“யாஅல்லாஹ் மூழ்கிச் சாவதிலிருந்து, தண்ணீரிலே சிக்கி மூழ்கி சாவதிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்!”
 
“யா அல்லாஹ்! கட்டிடம் இடிந்து விழுந்து, அந்த இடிபாடுகளிலே சிக்கி சாவதிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்”
 
பார்க்கிறோமா இல்லையா?
 
நமக்கு முன்னால் ஏற்பட்ட பூகம்பங்களை நாம் மறந்து விட்டோமா?
 
அவுரங்காபாத்திலே ஏற்பட்ட பூகம்பத்தை மறந்துவிட்டோமா? காஷ்மீர் பாகிஸ்தானிலே ஏற்பட்ட பூகம்பத்தை மறந்து விட்டோமா? துருக்கியிலே ஏற்பட்ட பூகம்பத்தை மறந்து விட்டோமா? ஈரானிலே ஏற்பட்ட பூகம்பத்தை மறந்துவிட்டோமா? சமீபத்திலே ஹைதியிலே ஏற்பட்ட பூகம்பத்தை மறந்து விட்டோமா? எத்தனை நூறு பேர்களை அது அள்ளிச் சென்றது!
 
இலட்சக்கணக்கான நபர்களை ஒரே நேரத்தில் இடிபாடுகளிலே சிக்கவைத்து அல்லாஹ் மரணத்தை கொடுத்தானா, இல்லையா? காப்பாற்ற முடிந்ததா? இடிபாடுகளிலே யார் யார் சிக்கி இருக்கிறார்கள்? அந்த இடிபாடுகளுக்குள் என்ன இருக்கும்? எப்படி எல்லாம் அந்த இடிபாடுகள் கோரமாக இருக்கின்றன?
 
அந்த இடிபாடுகளை எல்லாம் சுத்தப்படுத்தி அகற்றுவதற்கே மூன்று ஆண்டுகள் ஆகுமாம்!
 
கண்ணியத்துக்குரியவர்களே! அல்லாஹ் நாடினால் ஓர் கடல் அலை போதுமானது.
 
ஆஸ்திரேலியா பக்கத்தில் உள்ள ஒரு தீவு! அன்று இரவு வரை ஆட்டம், பாட்டம் எல்லாம். காலையில் பார்த்தால் ஒரே ஓர் அலையில் உரே கடலுக்குள் சென்று விட்டது.
 
அல்லாஹ் கூறுகின்றான்: 
 
أَفَأَمِنَ أَهْلُ الْقُرَى أَنْ يَأْتِيَهُمْ بَأْسُنَا بَيَاتًا وَهُمْ نَائِمُونَ
 
அல்குர்ஆன் 7:97
 
என்ன, இந்த ஊரில் உள்ளவர்கள் எல்லாம் ரொம்ப பயமற்று இருக்கிறார்களா? அவர்கள் இரவிலே தூங்கும்போது நமது வேதனை வரும் என்ற பயம் அவர்களுக்கு இல்லையா? 
 
எழுதுகிறார்கள், அறிவியல் ஆய்வாளர்கள்! அந்த ஆஸ்திரேலியாவின் தீவிலே, இரவிலே ஒரே ஒரு கடல் அலை தான் வந்தது. அத்தனை மக்களையும் அள்ளிக் கொண்டுச் சென்று விட்டது. காலையிலே பார்த்தால் செத்த மீன்கள் மிதப்பதுபோன்று மனித பிரேதங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன.
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய ஆட்சி, அல்லாஹ்வுடைய வல்லமை அல்லாஹ்வின் சக்தி அப்படிப்பட்டது. 
 
அல்லாஹ் எப்படி வேண்டுமானாலும் தனது தண்டனையின் சாட்டையை சுழற்றுவான். பூமிக்கு கட்டளையிட்டால், அது குலுங்கி பூமி பிளந்து கொள்ளும்.
 
அல்லாஹ் எரிமலைகளுக்கு கட்டளையிட்டால் அது குமிறி விடும்.
 
அல்லாஹ் கடலுக்கு கட்டளையிட்டால் அது கொந்தளித்து விடும்.
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் காற்றுக்கு கட்டளையிட்டால் அவ்வளவுதான்.
 
அல்லாஹ் வெயிலுக்கு கட்டளையிட்டால் அவ்வளவுதான்.
 
இவை ஒவ்வொன்றும் அல்லாஹ்விடத்திலே ஒரு பெரும்படை, பெரும் ராணுவமாக இருக்கின்றது!
 
மனிதனால் அந்தப் படையை பலவீனப் படுத்த முடியாது, வெல்ல முடியாது. 
 
மனிதன் நினைக்கிறான் மரணம் நமக்குப் பின்னால் இருக்கிறது, தூரமாக இருக்கிறது, எனவே, பிறகு பாவமன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் என்று.
 
ஆனால், எப்போது வானவர் அவனை சுண்டி இழுப்பார் என்று அவனுக்கு தெரியாது. மனைவி தன் கணவன் சாப்பிடுவதற்காக உணவு செய்கிறாள். தோசை சுடுகிறாள். ஒரு தோசையை சாப்பிட்டு விட்டார் கணவன். அடுத்த தோசையை சுட்டு அந்தக் கணவருக்கு கொடுக்கும்போது கணவரை பார்த்தாள். கணவர் உட்கார்ந்திருந்தவர், கீழே படுத்து இருக்கிறார். எழுப்பினால் எழுந்திருக்கவில்லை! தட்டிப் பார்த்தால் எந்த விதமான உணர்வும் இல்லை. நெஞ்சைத் தொட்டுப் பார்த்தால் படபடப்பு இல்லை.
 
என்ன ஆகிவிட்டது? மரணித்து விட்டார்!
 
இப்படி எத்தனை செய்திகளை நாம் கேள்விப்படுகிறோம்.
 
والثالث الحرص على جمع الأموال والاشتغال بالدنيا
 
கண்ணியத்திற்குரியவர்களே! மூன்றாவதாக மரணத்தை மறக்கும் போது மனிதனுக்கு ஏற்படுகிற நிலை, இந்த துன்யா வாழ்க்கையின் மீது மோகம் ஏற்பட்டுவிடும். இந்த துன்யாவிலே செல்வம் எவ்வளவுதான் கிடைத்தாலும், “போதும், நாம் இனி மரணத்திற்கான தயாரிப்புகளிலே ஈடுபடுவோம், இனி இந்த செல்வங்களை அல்லாஹ்வின் பாதையிலே தர்மம் செய்து, நாம் மறுமைக்காக கொஞ்சம் முற்படுத்திக்கொள்வோம்” என்ற ஆசை இருக்காது.
 
எவ்வளவுதான் செல்வம் வந்தாலும் இன்னும் இன்னும் இன்னும் இன்னும் என்ற ஆசை அவனுக்கு வந்துகொண்டே இருக்கும். இதைத்தான் அல்லாஹ் குர்ஆனிலே சொல்கின்றான். இப்படிப்பட்டவர்களுக்கு மரணம் வரும்போது அவன் சொல்வான்:
 
لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ
 
(அல்குர்ஆன் 63:12)
 
என் இறைவா! கொஞ்சம் எனக்கு அவகாசம் கொடு. கொஞ்ச நேரம் கொடு!
 
فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِين
 
(அல்குர்ஆன் 63:12)
 
நான் சேர்த்து வைத்த செல்வத்தைதர்மம் செய்து விடுகிறேன், நல்லவர்களிலே ஆகிவிடுகிறேன், அல்லாஹ் அவகாசம் கொடுபானா?
 
அல்லாஹ்வின் புறத்திலிருந்து முடிவு செய்யப்பட்ட நேரத்திலே மலக்குல் மவ்த் வருவார்.
 
சுலைமான் (அலை) அவர்கள் ஒருமுறை தாவூத் (அலை) ஒரு முறை வீட்டிற்குள் வருகிறார்கள். அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி விட்டால் எல்லா கதவுகளையும் தாளிட்டு விட்டு செல்வார்கள். தன் குடும்பத்தார்களை வெளியேறுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள். உள்ளே வந்து பார்த்தால் ஒருவர் நின்று கொண்டு இருக்கிறார். கேட்கிறார்கள், யார் நீ? எப்படி உள்ளே வந்தாய்? அவர் சொல்கிறார்:
 
أنا الذي لا اخاف الملوك
 
நான் யார் தெரியுமா? அரசர்களைப் பயப்படாதவன் நான்!
 
فأنت إذا ملك الموت
 
அப்படி என்றால் நீர் யார்? மலக்குல் மவ்த் ஆகத்தான் இருக்க முடியும் என்று தாவூத் (அலை) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா, நூல்: அஹ்மது எண்: 9432, அல்பிதாயா வன்னிஹாயா – இமாம் இப்னு கசீர்) (9)
 
மலக்குல் மவ்த் - அவருக்காக வேண்டி கதவுகளை திறக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜன்னல்களை பூட்டிக் கொள்ளுங்கள். கதவுகளை தாழிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் பாதுகாவலர்களை, செக்யூரிட்டிகளை நிறுத்திக்கொள்ளுங்கள். யாரும் அவரை தடுக்க முடியாது! அல்லாஹ் சொல்கிறான்:
 
أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ
 
அல்குர்ஆன் 4:78
 
எவ்வளவுதான் உயர்ந்த பலமான கோட்டைகளுக்குள் நீங்கள் இருந்தாலும் சரி, மரணம் உங்களை பிடித்தே தீரும்!
 
கண்ணியத்திற்குரியவர்களே! இந்த மனிதன் மரணத்தை மறக்கும்போது, இந்த துன்யாவுடைய ஆசை இவனுக்கு அதிகமாகும்போது தனக்குள் பேசிக் கொள்வான், “இப்போதுதான் எனக்கு வாலிபமாக இருக்கிறது; எனக்கு வயோதிகத்திலே செல்வம் தேவைப்படும்; நான் பலவீனம் அடைந்து விட்டால் என்ன செய்வது? அந்த நேரத்திலே நான் எங்கே போய், யார் இடத்திலே உதவி தேடுவேன்? அமல்களை எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். ஆனால் செல்வத்தை இப்போதுதானே சேகரிக்கமுடியும்” என்பதாக துன்யாவுடைய ஆசைகளை தனக்குள்ளே வளர்த்துக் கொள்வான். 
 
எனக்கு வயோதிகத்திலே நோய் வந்து விட்டால், என்னால் சம்பாதிக்க முடியவில்லை என்றால், என் பிள்ளைகள் என்னை கைவிட்டு விட்டால், எனக்கென்று ஒரு நிலையான வருமானம் வேண்டாமா? ஒரு அசையா சொத்து வேண்டாமா? என்னுடைய வயோதிக்காலத்திலே நோய் ஏற்பட்டுவிட்டால் என் மருந்து செலவிற்கு எந்தப் பிள்ளை இடத்திலேயே கேட்பேன்? எனக்கென்று ஓர் உறுதி வேண்டாமா? என்றெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டு, மறுமையை மறந்து இந்த உலக வாழ்க்கையிலே செல்வத்தை சம்பாதிப்பதிலேயே ஈடுபட்டுக் கொண்டிருப்பான்.
 
அடுத்து கண்ணியத்திற்குரியவர்களே! மரணத்தை மறப்பதால் மனிதனுக்கு ஏற்படுகின்ற மிகப்பெரிய நான்காவது சோதனை:
 
والرابع القسوة في القلب والنسيان للآخرة
 
மனிதனுடைய உள்ளம் இருகி விடுகிறது, கடினமாகி விடுகிறது. அல்லாஹ்வுடைய பயம் வருவதில்லை. மறுமையை நினைத்து அவன் அழ மாட்டான். நரகத்தை நினைத்து அவனுக்கு அழுகை வராது. மறுமையின் சோதனைகளை நினைத்து இவனுக்கு அழுகை வராது. அல்லாஹுவைப் பற்றி பேசப்பட்டாலும் மறுமையைப் பற்றிப் பேசப்பட்டாலும் இவனுடைய உள்ளத்திலே நடுக்கம் வராது. மாறாக, பயமற்று இருப்பான்.
 
ஒரு கல் எப்படி இருக்குமோ, அது போன்றுதான் இருக்கும் உள்ளத்திலே எந்த பயமும் வராது.
 
இப்படித்தான் இஸ்ரவேலர்களுடைய உள்ளம் இருந்தது என்று அல்லாஹ் சொல்லுகிறான்.
 
ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً
 
அல்குர்ஆன் 2:74
 
அல்லாஹ் சொல்லுகிறான்: உங்களுடைய உள்ளங்கள் இறுகி விட்டன. பாறையைப் போன்று! அல்லது பாறையை விட கடுமையாக உங்கள் உள்ளம் இறுகி விட்டன!
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீன், இந்த மரணத்தைக் கொண்டு எல்லோருடைய முதுகெலும்பையும் முறித்து விடுகிறான்.எல்லோருடைய ஆசைகளையும் அல்லாஹ் துண்டித்து விடுகிறான். எல்லோருடைய திட்டங்களையும் அல்லாஹ் நிறுத்திவைத்து விடுகிறான்.அல்லாஹ் அடக்கி ஆளுகின்ற அரசன்! அவனை யாரும் மிகைக்க முடியாது. என்பதற்கு மிகப்பெரிய அத்தாட்சி, மரணமாக அல்லாஹ் வைத்திருக்கிறான்.எவ்வளவு பெரிய அறிவாளியாக இருக்கட்டும்.எவ்வளவு பெரிய அரசனாக இருக்கட்டும். எவ்வளவு பெரிய புத்திசாலியாக தந்திரக்காரனாக இருக்கட்டும். அல்லாஹ் விதித்த மரணத்தை அவன் மிகைத்து விட முடியாது. மரணம் அவனை மிகைத்து விடும்! 
 
கண்ணியத்திற்குரியவர்களே! ஒவ்வொரு நாளும் மரணத்தை நினைக்கவேண்டும். நாம் ஓதுகிற ஒவ்வொரு குர்ஆனுடைய வசனம் மரணத்தை நினைவூட்டுகிறது. மறுமையை நினைவூட்டுகிறது.
 
ஒரு பலவீனமான ஹதீஸின் கருத்தாவது: மரணம் முஃமினுடைய அன்பளிப்பாக இருக்கும். (10)
 
ஆகவே, ஒரு முஸ்லிம் மரணத்தை பார்த்து பயப்பட மாட்டான். துக்கப்பட மாட்டான். அதற்காக எப்போதும் தயாரிப்போடு இருப்பான். ஐங்கால கடமைகளை நிறைவேற்றியவனாக, அடியாருடைய ஹக்குகளை கொடுத்தவனாக அவன் மரணத்திற்கு தயாராக இருப்பான். 
 
அவன் பாவம் செய்ய மாட்டான். ஏதாவது அவன் பாவம் செய்து விட்டால், அல்லாஹ் குர்ஆனிலே சொல்லுகிறான் அல்லவா அப்படித்தான் அவன் நடந்து கொள்வான்.
 
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ
 
அல்குர்ஆன் 3:135 
 
முஃமின்கள் யார்? பாவம் செய்ய மாட்டார்கள். அப்படி பாவம் செய்துவிட்டால், தங்களுக்கு அநீதி இழைத்துக் கொண்டால், உடனடியாக அவர்கள் அல்லாஹ்வை நினைத்து விடுவார்கள். மறுமையை நினைத்து விடுவார்கள். நரகத்தை நினைத்து விடுவார்கள். அல்லாஹ்வுக்கு முன்னால் வந்து, “யா அல்லாஹ்! நான் பாவத்தை செய்துவிட்டேன். மன இச்சைக்கு அடிமையாகி இந்த குற்றத்தை செய்துவிட்டேன். என்னை மன்னிப்பாயாக!” என்று அல்லாஹ்விடத்திலே மன்றாடுவார்கள்.
 
இதைச் சொல்லிவிட்டு அல்லாஹ் சொல்லுகிறான்:
 
وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ
 
அல்குர்ஆன் 3:135 
 
என்னுடைய அடியான், என்னிடத்திலே மன்னிப்புக் கேட்கும்போது, நான் நிச்சயம் மன்னிப்பேன்! என்னைத்தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் இருக்கிறார்?
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
 
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ» رواه الترمذي برقم 2307 
 
உங்களுடைய இன்பங்களை உங்களுடைய அபிலாஷிகளை, உங்களுடைய மன இச்சைகளை முறியடிக்கக் கூடிய அந்த மரணத்தை நீங்கள் நினைத்துக்கொண்டேஇருங்கள்!
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா, நூல்: திர்மிதி, எண்: 2307, நூல்: இப்னு மாஜா, எண்: 4258. தரம்: ஸஹீஹ் 
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு முஃமினுக்கு, இந்த மரணத்தை நினைவு கூர்வதை நன்மையின் பக்கம் திருப்பக் கூடியதாக, பாவத்திலிருந்து தடுக்கக் கூடியதாக ஆக்கி இருக்கிறான். சொர்க்கத்தின் மீது ஆசை ஊட்டக் கூடியதாக, நரகத்தின் மீது பயம் ஊட்டக்கூடியதாக ஆக்கி இருக்கிறான். நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை தடுக்கக் கூடியதாக ஆக்கியிருக்கிறான். 
 
ஏதாவது ஒரு பாவத்தின் பக்கம் நம்முடைய இச்சை, நம்முடைய ஆன்மா, அல்லது நம்முடைய நண்பன், நம்முடைய உற்றார் நம்மை தூண்டுகிறார்களா? உடனே நாம் மரணத்தை நினைக்க வேண்டும். இந்தப் பாவத்தில் இருக்கும் போது எனக்கு மரணம் நிகழ்ந்து விட்டால், இந்தப் பாவத்தில் இருக்கும் போது மலக்குல் மவ்த் என்னிடத்திலே வந்துவிட்டால் என்னுடைய நிலைமை என்னவாகும் என்று பயப்படும் போது உடனடியாக நாம் நம்மை அந்தப் பாவத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
 
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை காப்பானாக! நமக்கு அருள் செய்வானாக! நம்முடைய ஈமானை முழுமை படுத்துவாயாக! மறுமையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் “ஜன்னத்துல் பிர்தவ்ஸை” நமது தங்குமிடமாக ஆக்குவானாக!
 
 
 
 
உரையில் கூறப்பட்ட ஹதீஸ்கள் மற்றும் أثر அசர்களின் முழு அறிவிப்பு மற்றும் விளக்கம்:
 
(1) தாபியி முஜாஹித் இப்னு ஜப்ர் அவர்கள் ஹிஜ்ரி 21ல் பிறந்து ஹிஜ்ரி 104ல் இறந்தார்கள். இவர்கள் ஹதீஸ், தஃப்ஸீர், கிராஅத், ஃபிக்ஹ் துறைகளின் மிகப் பெரிய அறிஞராக விளங்கினார்கள்.
 
(2). மலக்குல் மவ்த் – பற்றி இப்னு கசீர் பிதாயா வ நிஹாயாவில் கூறுவது:
 
وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى * قُلْ يَتَوَفَّاكُمْ مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَى رَبِّكُمْ تُرْجَعُونَ) [السجدة: 11] وَلَهُ أَعْوَانٌ يَسْتَخْرِجُونَ رُوحَ الْعَبْدِ مِنْ جُثَّتِهِ
 
وَعَنِ ابْنِ عبَّاس وَمُجَاهِدٍ وَغَيْرِ وَاحِدٍ أَنَّهُمْ قَالُوا إِنَّ الْأَرْضَ بَيْنَ يَدَيْ مَلَكِ الموت مثل الطست بتناول مِنْهَا حَيْثُ يَشَاءُ 
 
(3) லைத்துல் கத்ர் இரவைப் பற்றி வசனமும் அதற்கு இமாம் தபரியின் விளக்கமும்
 
அத்தியாயம் துகான் 44 
 
حم (1) وَالْكِتَابِ الْمُبِينِ (2) إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ (3) فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ (4)
 
حدثنا مجاهد بن موسى، قال: ثنا يزيد، قال: أخبرنا ربيعة بن كلثوم، قال: كنت عند الحسن، فقال له رجل: يا أبا سعيد، ليلة القدر في كلّ رمضان؟ قال: إي والله، إنها لفي كلّ رمضان، وإنها الليلة التي يُفرق فيها كل أمر حكيم، فيها يقضي الله كلّ أجل وأمل ورزق إلى مثلها.
 
(4). இந்த செய்தியை ஹதீஸ் என்று அறிஞர் கஸ்ஸாலி இஹ்யாவிலும் மற்றும் இப்னுல் ஜவ்ஸி பஸ்தானுல் வாயிளீன் என்ற நூலிலும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், இதற்கு சரியான சனது இல்லை என்று மற்ற அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆகவே, இதைப் படிப்பவர்கள் தங்கள் உரையில் இதை கூறவேண்டாம். அதற்கு பதிலாக மவ்த் சம்பந்தமான மற்ற ஸஹீஹான ஹதீஸ்களை கூறவும்.
 
(5). இப்ராஹீம் நகயி ஹிஜ்ரி ல் பிறந்து ஹிஜ்ரி 96 இறந்தார்கள். பெரியா தாபியி, மார்க்க அறிஞர், குர்ஆன், ஹதீஸ், இயல், மார்க்க சட்ட இயல் வல்லுனராக திகழ்ந்தார்கள்.
 
அவர்களின் முழு பெயர்: 
 
إبراهيم بن يزيد بن قيس بن الأسود بن عمرو بن ربيعة بن حارثة بن سعد بن مالك النخعي، الفقيه، الكوفي ولد سنة 47 وتوفي سنة 96 
 
மரணத்தைப் பற்றி அவர்களின் கூற்று: : நூல்: ஹில்யத்துல் அவ்லியா.
 
حدثنا أبو بكر ، ثنا عبد الله ، حدثني أبي ، ثنا وكيع ، عن سفيان ، ح . وأخبرنا عبد الله بن محمد ، ثنا محمد بن شبل ، ثنا أبو بكر بن أبي شيبة ، قالا : ثنا الحسين بن علي ، عن محمد بن سوقة . قال : زعموا أن إبراهيم النخعي كان يقول : كنا إذا حضرنا الجنازة أو سمعنا بميت عرف فينا أياما ، قد عرفنا أنه قد نزل به أمر صيره إلى الجنة أو إلى النار . قال : وإنكم في جنائزكم تتحدثون بأحاديث دنياكم . ذكره صاحب حلية الأولياء وطبفات الأصقياء في كتابه
 
(6) உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்று: நூல்: கன்சுல் உம்மால், எண்: 42790
 
عن مجاهد قال: خطب عثمان بن عفان فقال في خطبته: ابن آدم! أعلم أن ملك الموت الذي وكل بك لم يزل يخلفك ويتخطى إلى غيرك منذ أنت في الدنيا، وكأنه قد تخطى غيرك إليك وقصدك، فخذ حذرك واستعد له، ولا تغفل فإنه لا يغفل عنك، واعلم ابن آدم! إن غفلت عن نفسك ولم تستعد لم تستعد أخرجه علاء الدين علي بن حسام الدين في كنز العمال برقم 42790
 
 
 
(7) அறிஞர் கஸ்ஸாலி (பிறப்பு ஹிஜ்ரி 450, இறப்பு ஹிஜ்ரி 505) அவர்களின் கூற்று இடம் பெறும் நூல்: அல்இஸ்த்திஆத் லில் மவ்த் வஸுஆலில் கப்ர், ஆசிரியர்: சைனுத்தீன் இப்னு அப்துல் அஸீஸ் இறப்பு: 987ه
 
قال الغزالي رحمة الله عليه عليك أن تجتنب طول أملك فإنه إذا طال هاج أربعة أشياء: الأول ترك الطاعة والكسل فيها والثاني ترك التوبة وتسويفها والثالث الحرص على جمع الأموال والاشتغال بالدنيا عن والرابع القسوة في القلب والنسيان للآخرة ذكره زين الدين بن عبد العزيز بن زين الدين ابن علي بن أحمد المعبري المليباري الهندي المتوفى 987هـ في كتابه الاستعداد للموت وسؤال القبر
 
(8) நபி அவர்கள் பாதுகாப்புத் தேடிய மரணங்கள் மற்றும் பல நிலைகள்
 
عَنْ أَبِي الْيَسَرِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو فَيَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَرَمِ، وَالتَّرَدِّي، وَالْهَدْمِ، وَالْغَمِّ، وَالْحَرِيقِ، وَالْغَرَقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَنْ أُقْتَلَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا رواه النسائي برقم 5532 
 
(9) தாவூத் அலைஹிஸ் ஸலாம் பற்றிய சம்பவத்தின் அறிவிப்பு: நூல்: அல்பிதாயா வன்னிஹாயா – இப்னு கசீர்
 
فقال الإمام أحمد في " مسنده " : حدثنا قتيبة ، حدثنا يعقوب بن عبد الرحمن بن محمد ، عن عمرو بن أبي عمرو ، عن المطلب ، عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال : كان داود النبي فيه غيرة شديدة ، وكان إذا خرج أغلقت الأبواب ، فلم يدخل على أهله أحد حتى يرجع ، قال : فخرج ذات يوم وغلقت الدار ، فأقبلت امرأته تطلع إلى الدار ، فإذا رجل قائم وسط الدار ، فقالت لمن في البيت : من أين دخل هذا الرجل والدار مغلقة ؟ والله لتفتضحن بداود . فجاء داود ، فإذا الرجل قائم وسط الدار ، فقال له داود : من أنت ؟ قال : أنا الذي لا أهاب الملوك ولا يمتنع مني شيء ، فقال داود : أنت والله ملك الموت ، فمرحبا بأمر الله . فرمل داود مكانه حيث قبضت روحه ، حتى فرغ من شأنه من البداية والنهاية لابن كثير.
 
(10) மரணம் முஃமினுக்கு அன்பளிப்பு என்ற இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். அதுபற்றி ஷைக் முனஜ்ஜித் அவர்களின் ஆய்வு பின்வருமாறு:
 
السؤال ما صحة هذا الحديث : " تحفة المؤمن الموت" ؟ و ما شرحها ؟
 
نص الجواب الحمد لله أولا :هذا الحديث رواه ابن المبارك في "الزهد" (59) ، والبيهقي في "الشعب" (9418) ، وأبو نعيم في "الحلية" (8/185) ، والحاكم في "المستدرك" (7900) ، والبغوي في "شرح السنة" (5/271) ، وابن بشران في "أماليه" (1482) ، والقضاعي في "مسنده" (150) كلهم من طريق عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:( تُحْفَةُ الْمُؤْمِنِ: الْمَوْتُ ) .وصححه الحاكم ، فرده الذهبي بقوله :" ابن زياد ، هو الأفريقي : ضعيف " .وعبد الرحمن بن زياد هذا ضعفه ابن معين ، وأبو زرعة ، والنسائي ، والترمذي ، والجوزجاني ، ويعقوب بن شيبة ، وقال الإمام أحمد وصالح بن محمد : منكر الحديث . انظر: "تهذيب التهذيب" (6/ 174-175) .
 
ورواه ابن الجوزي في "العلل المتناهية" (2/ 402) من طريق الْقَاسِم بْن بِهْرَام عَنْ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( الْمَوْتُ تُحْفَةُ الْمُؤْمِنِ، وَالدِّرْهَمُ وَالدِّينَارُ رَبِيعُ الْمُنَافِقِ، وَهُمَا رَادَّانِ أَهْلِيَهُمَا إِلَى النَّارِ ) .وقال ابن الجوزي عقبه : " تفرد به القاسم بْن بهرام " .قال الذهبي :"عنده عجائب. وهَّاه ابن حبان وغيره ، قال ابن حبان: لا يجوز الاحتجاج به بحال" انتهى من "ميزان الاعتدال" (3 /369) .فهذا إسناد ضعيف جدا .وينظر : "المطالب العالية" لابن حجر ، رقم (781) وتعليق المحققين عليه .وينظر أيضا : "السلسلة الضعيفة" ، للألباني (6891) .
 
وقد جاء موقوفا على ابن مسعود رضي الله عنه :فرواه ابن أبي شيبة في "المصنف" (7/ 102) ، والطبراني في "الكبير" (8774) ، وأبو داود في "الزهد" (117) ، وأبو نعيم في "الحلية" (1/131) من طريق يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ ، عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ : قَالَ عَبْدُ اللَّهِ بن مسعود رضي الله عنه قال : " ذَهَبَ صَفْوُ الدُّنْيَا ، وَبَقِيَ كَدَرُهَا، فَالْمَوْتُ تُحْفَةٌ لِكُلِّ مُسْلِمٍ " .ويزيد بن أبي زياد ضعيف ، ولا يعرف له سماع من أبي جحيفة رضي الله عنه .انظر : "الميزان" (4 /423) .
 
ورواه ابن بطة في " الإبانة" (1/ 187) من طريق الْمَسْعُودِيّ ، عَنْ زُبَيْدٍ ، عَنْ أَبِي وَائِلٍ ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ : .. فذكره .
 
والمسعودي ، هو عبد الرحمن بن عبد الله بن عتبة بن عبد الله بن مسعود الكوفي ، وهو صدوق ، لكنه اختلط قبل موته ، كما في "التقريب" (ص 344) .فالحديث ضعيف مرفوعا ، ولا بأس به موقوفا بطريقيه .
 
أما معناه : فقال المناوي رحمه الله :" التحفة : ما يتحف به المؤمن من العطية ، مبالغة في بِره وإلطافه .(الموت) : لأن الدنيا محنته وسجنه وبلاؤه؛ إذ لا يزال فيه في عناء من مقاساة نفسه ، ورياضة شهواته ومدافعة شيطانه، والموت إطلاق له من هذا العذاب، وسبب لحياته الأبدية، وسعادته السرمدية، ونيله للدرجات العلية، فهو تحفة في حقه، وهو وإن كان فناء واضمحلالا ظاهرا ، لكنه بالحقيقة ولادة ثانية ، ونقلة من دار الفناء إلى دار البقاء .
 
ولو لم يكن الموت ، لم تكن الجنة ، ولهذا منّ الله علينا بالموت فقال : (خلق الموت والحياة) قدم الموت على الحياة ، تنبيها منه على أنه يتوصل منه إلى الحياة الحقيقية ، وعده علينا من الآلآء في قوله (كل من عليها فان) ، ونبه بقوله (ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين * ثم إنكم بعد ذلك لميتون * ثم إنكم يوم القيامة تبعثون) على أن هذه التغييرات لخلق أحسن ، فنقض هذه البنية لإعادتها على وجه أشرف " انتهى من "فيض القدير" (3/ 233) . فبعد انقضاء أيام المؤمن في الدنيا ، في طاعة الله ، يتحفه ربه بالموت الذي يخلصه من كروبها وابتلاءاتها، ويوصله إلى الحياة الحقيقية في جنات النعيم .ولكن ذلك لا يعني استحباب تمني الموت ، فالحياة للمؤمن زيادة في الطاعة والإيمان والأجر والثواب ، ولكن متى وقع الموت ، فتلك تحفة المؤمن .وقد روى ابن المبارك في "الزهد" (17) ، وأبو نعيم في "الحلية" (1/136) عن ابن مسعود رضي الله عنه قال : " لَيْسَ لِلْمُؤْمِنِ رَاحَةٌ دُونَ لِقَاءِ اللَّهِ عَزَّ وَجَلَّ " .وصححه الألباني في "الضعيفة" (2/ 116) .وينظر للفائدة جواب السؤال رقم : (41703) ، (46592).والله تعالى أعلم)
 
 
 
குறிப்பு: இது 2-4-2010 வெள்ளிக்கிழமை அன்று SMJ PLAZA (CHENNAI) உடைய மஸ்ஜிதில் நிகழ்த்தப்பட்ட ஜுமுஆ குத்பாவின் எழுத்து வடிவமாகும்.
 
 
 
எழுதியவர் : சகோதரி ஃபர்ஸானா.
 
 
 
முதல் மேலாய்வு : ஆலிம் இமாமுத்தீன் ஹசனி
 
 
 
இறுதி மேலாய்வு, சரிபார்ப்பு, திருத்தம் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம் 
 
 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/